Sunday, October 13, 2024

stratamolite = தட்டமக் கல்

 இந்தச் சொல் stratum எனும் ஆங்கிலச்சொல்லோடு தொடர்புற்றது. இதற்கு "horizontal layer," 1590s, from Modern Latin special use of Latin stratum "thing spread out, coverlet, bedspread, horse-blanket; pavement," noun uses of neuter of stratus "prostrate, prone," past participle of sternere "to spread out, lay down, stretch out," from nasalized form of PIE root *stere- "to spread” என்று ஆங்கிலச் சொற்பிறப்பியலில் விளக்கஞ் சொல்வர். 

stratum என்பதோடு ”தட்டம்” தொடர்புள்ளது. தட்டிற் பெரியது தட்டம். சில மண்ணடுக்குகளும், கல்லடுக்குகளும் தட்டுத் தட்டாய்த் தோற்றங் காணும். அத்தோற்றம் வெவ்வேறு வகையில் ஏற்படலாம். இங்கே இது செந்நீலப் பட்டுயிரியால் (cayanobacteria) ஏற்படுகிறது. இதை வெறும் உயிர்வேதியற் சொல்லாய்ப் பாராது பொதுவாய்க் காண்பது நல்லது. 

தட்டத்தின்  மேல் சில இயல்திரிவு விதிகளைப் பொருத்திப் பார்த்தால், தமிழியம், இந்தையிரோப்பியம் ஆகிய இருவேறு மொழிக்குடும்பங்களின் ஊடே இருக்கும் இணைப்புப் புரியும். ”தட்டத்தில்” முதலில் வரும் தகரத்துள் ரகரவொலி நுழைத்தால், ’த’ என்பது ‘த்ர’ என்றாகும். ’த்ர’ நெடிலாகின், ’த்ரா’ ஆகும். முடிவில் ஸகர ஒலியை முன்னே சேர்த்தால், தட்டம்> த்ரட்டம்> த்ராட்டம்> ஸ்த்ராட்டம் = stratum என்றாகும். இதே விதிகள் எல்லாத் தமிழ்ச் சொற்களிலும் கையாளப் படுவதாய் நான் சொல்லவில்லை. மேலும்,”ஒரு மொழியின் திரிவாக இன்னொன்று அமைந்தது” என்றுஞ் சொல்லவில்லை. ”ஒரு மொழிக்குடும்பச் சொல்லுக்கும் இன்னொரு மொழிக்குடும்பச் சொல்லுக்கும் இடையில் வரும் இணைப்பைக் கண்டுபிடிக்க இதுபோன்ற விதிகள் பயனாகும்” என்று மட்டுமே சொல்கிறேன். 

பல்வேறு இந்தையிரோப்பியச் சொற்களையும், அதே பொருள் கொண்ட தமிழ்ச் சொற்களையும் ஒப்பிட்டுச் சில விதிகளைப் பட்டியலிட்டு வைத்துள்ளேன். அவற்றில் எது இங்கு பொருந்துமெனப் பார்க்கிறேன். உள்ளிருக்கும் தமிழ்ச் சொல்லை பெரும்பாலும் அடையாளங் காண முடிகிறது. சிக்கல் தருஞ் சொற்களைத் தனியாக வைத்து வேறு புதிய வகைப்பாடு இருக்கிறதா என்றுங் கற்றுக் கொள்கிறேன். இத்தகைய “செய்து பார்த்துச் சரி செய்யும்” முறையை நான் பயன்படுத்துவது கண்டே, அதை ஏற்காதவர் “நான் ஏதோ ஆங்கில ஒலிப்பில் சொற்கள் படைப்பதாய்” முரண் கொள்கிறார். 

வரலாற்று மொழியியலில் (historical linguistics) நான் செய்வது ஓர் அடிப்படை வேலை. ஒரு மொழிக் குடும்பத்திற்கும், இன்னொரு மொழிக் குடும்பத்திற்கும் இடையே சீரிய ஒழுங்குகள் இருக்கின்றனவா என்று அவதானிக்கிறோம். ஓர் அறிவியலாளன் என்பவன் இதைத்தான் செய்யமுடியும். நானும் அப்படித் தான் அணுகுகிறேன். இந்தையிரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் தமிழிய மொழிக் குடும்பத்திற்கும் உறவிருப்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். stratamo- என்பதிலும் இது இருக்கிறது. ஆயினும் என் மேற் பழி சொல்வது தொடர்கிறது. என்றிதற்கு விடிவு வருமோ? தெரியவில்லை. இனி இச் சொல்லுக்கு வருவோம்.   

stratum = தட்டம் என்றால், strata = தட்டங்கள் என்றும், stratify = தட்டாக்கு என்றுமாகும். stratum என்பதை முன்னொட்டாக மாற்றுகையில் strati-, strato-, stratamo- என்று 3 விதமாய் ஆங்கிலம் பயன் கொள்ளும். நாமும், தட்டய, தட்டக, தட்டம என்று 3 வகையில் நுணுகிய வேறுபாட்டைக் கொண்டு வரலாம். stratigraphy = தட்டய வரைவியல் அல்லது தட்டயக் கிறுவியல்; stratification = தட்டயவாக்கம் என்றும், stratocracy = தட்டக ஆட்சி, strato-cumulus = தட்டகக் குமியல், stratography = தட்டக வரைவியல் அல்லது தட்டகக் கிறுவியல், stratosphere = தட்டகக் கோளம், stratovolcano = தட்டக எரிமலை- என்றுஞ் சொல்லலாம். முடிவாக stratamo- = தட்டம- என்பதோடு கூட்டுச் சொல்லாக்க lite என்ற சொல்லைச் சேர்ப்பார். இது lithos என்ற கிரேக்கச் சொல்லின் இன்னொரு வடிவம் இதன் பொருள் கல் என்பதே. எனவே stratamolite என்பதைத் தட்டமக் கல் என்றே சொல்லலாம்.

அன்புடன்,

இராம.கி.