Saturday, May 13, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 7

அடுத்தது அகநானூறு 276. இதைப் பாடியவர் பரணர். ஆரிய அரசனான பெருக தத்தனுக்குக் (ப்ரகத்தன்) குறிஞ்சிப் பாட்டால் தமிழ் மரபைக் கற்றுக் கொடுத்த கபிலரோடு, உரையாசிரியர் பலரும், பரணரைச் சேர்த்துக் கூறினும், காலத்தாற் கபிலருக்கு இளையராகவே இவர் தென்படுகிறார். பெருக தத்த மோரியன் காலம் பொ.உ.மு.187-185. இவனை பொ.உ.மு.185 இல் புஷ்ய மித்திர சுங்கன் கொன்று, தானே முடியைச் சூடிக் கொள்வான். சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் (ஏன் சேரருக்குங் கூட) ஆகாத நிலையில் சுங்கனை எதிர்த்து, நெடுஞ்சேரலாதன் வடக்கே படையெடுத்துப் போனான். 

பெரும்பாலும் சேர நாட்டாரான பரணர். மாமூலனார் போல், அரசியற் செய்திகளை பாடல்களிற் பிணைப்பார். இவர் பாடல்களோடு, ஆதன் குடியினரை, குறிப்பாய்க் கடல் பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனைப் பொருத்தினால், முதிய வயதிற் செங்குட்டுவனைப் பரணர் பாடியது புரியும். செங்குட்டுவன் காலம் பொ.உ.மு. 131 - 77. கபிலரின் காலம் ஏறத்தாழ பொ.உ.மு.197-143 என்றும், பரணரின் காலம் பொ.உ.மு.180-123 என்றுங் கொள்கிறோம். செங்குட்டுவன் பட்டமேறிய 8 ஆண்டுகளுள் பரணரின் ஐந்தாம் பத்து பெரும்பாலும் எழுந்தது என முடிவு செய்யலாம். 

இப்பாடலின் திணை மருதம். தலைவியின் தோழியர் கேட்கும் படியாகப் பரத்தை சொன்னது. ஆரியர் களிறுகளுக்கு அளிக்கும் பயிற்சி இப்பாட்டில் உவமையாய்ச் சொல்லப் படுகிறது. இப்பயிற்சி வடமொழி ஆணைகளால் நடந்ததாய்ச் சங்க இலக்கியக் குறிப்புண்டு. அதைக் கொண்டு ’சங்கதச் சிறப்பு’ சொல்வாரும் உண்டு. பொறுமையோடு எண்ணின், இது போற் கூற்றுக்கள் எழா. ஆணை மொழி என்பது இலக்கணம் கூடிய மொழியல்ல. சில ஒலிகள், சொற்கள், செய்கைகள் இவ்வளவுஞ் சேர்ந்ததே ஆணை மொழியாகும். வடமொழி எனில், அது சங்கதமா, பாகதமா? - என்பது கேள்விக்குரியது. இன்றும் தென்கிழக்காசியாவில் யானைப் பயிற்றுவிப்பு உண்டு. அமெரிக்க விலங்குக் காட்சி சாலைகளிலும், வித்தையரங்குகளிலும் (circus) யானைகள் பயிற்றுவிக்கப் படுகின்றன. அவை அந்தந்த நாட்டு மொழியில் தான் நடைபெறுகின்றன. சங்க காலத் தமிழகத்தில் யானைகள் வடமொழியின் மூலம் பயிற்றுவிக்கப் பட்டனவா? - என்பதற்கு வரலாற்றில் காரணமிருக்கலாம். பாட்டைப் படித்து விளக்கம் தேடுவோம்..

நீளிரும் பொய்கை இரைவேட் டெழுந்த

வாளைவெண் போத்து உணீஇய நாரைதன்

அடியறி வுறுத லஞ்சிப் பைப்பயக்

கடியிலம் புகூஉம் கள்வன் போலச்

சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு

ஆவது ஆக இனிநா ணுண்டோ

வருகதில் அம்மவெம் சேரி சேர

அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்

தாரும் தானையும் பற்றி ஆரியர்

பிடிபயின் றுதரூஉம் பெருங்களிறு போலத்

தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்தவன்

மார்புகடி கொள்ளேன் ஆயி னார்வுற்று

இரந்தோர்க் கீயாது ஈட்டியோன் பொருள்போல்

பரந்துவெ ளிப்படா தாகி

வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே.

என்பது பாட்டு. இதன் விளக்கம் கூடுவதற்காக, இதனுள்வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

வாளை வெண்போத்து உணீஇய 

நீள்இரும் பொய்கை எழுந்த இரைவேட்டு நாரை 

தன்அடி அறிவுறுதல் அஞ்சிக்

கடிஇலம் பைப்பயப் புகூஉம் கள்வன் போலச்

சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு

இனி நாண்ஆவது ஆக உண்டோ

எம்சேரி சேர வருகதில் அம்ம 

அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்

தாரும் தானையும் பற்றி 

ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத்

தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து அவன்

மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வுற்று

இரந்தோர்க்கு ஈயாது பொருள்ஈட்டியோன் போல்

பரந்து வெளிப்படாது ஆகி

ஓம்பிய நலனே வருந்துகதில்லயாய் .

இனிச்சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். வாளை வெண்போத்து உணீஇய = வெள்ளிய ஆற்றுவாளைப் (Wallago attu) போத்து உண்பதற்கு; வாளையை ஆற்று வாளை என்றும் அழைப்பர். உற்றுப் பாருங்கள் தமிழ்ப் பெயரே தலைகீழாய் மீனியற் பெயராகிறது. தெற்காசியா/தென்கிழக்காசியாவில் பரவலாக ஆறு, ஏரி, குளங்களில் இவ் வெள்ளை மீன் கிட்டத்தட்ட 1 மீ. நிரவல் நீளத்தோடும், 18-20 கி.கி. எடையோடும் வளர்கிறது. ஆண்மீன் பெண்மீனைவிடப் பெரியது; ”போத்து” ஆணைக் குறிக்கும். கடல் வாளையோடு ஆற்று வாளையைப் பலருங் குழப்புவர்.கடல் வாளை குமரிக் கடற்கரைகளில் பெரிதுங் கிடைக்கும். மருதத் திணை என்பதாலும், நீர்நிலையில் நாரை சாப்பிட முயல்கிறது என்பதாலும் இது நந்நீர் மீனையே இங்கு குறிக்கிறது எனலாம்.  

நீள்இரும் பொய்கை எழுந்த இரைவேட்டு நாரை = நீள்பெருங் குளத்தெழுந்த இரை தேடும் நாரை; ”நீள்பெரும்” பெயரடை செவ்வகக் குளத்தைக் குறிக்கிறது. பொள்ளிச்செய்த குளம் பொய்கை..தன்அடி அறிவுறுதல் அஞ்சி = ”எங்கே தன்னடை (மீன்களுக்கு) அறிவுறுத்தி விடுமோ?” என அஞ்சி; கடிஇலம் பைப்பய புகூஉம் கள்வன் போல = காவலுள்ள இல்லத்துள் மெதுமெதுவாகப் புகும் கள்வனைப் போல; ’பைய’ என்பது இன்று திருச்சிக்குத் தெற்கேதான் புழங்குகிறது. வட தமிழகத்தார்க்கு இச் சொல் புரியாமற் போகலாம். ஆனால் சங்க இலக்கியங்களில் பெரிதும் புழங்கியுள்ளது. சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு = சாய்ந்து ஒதுங்கும் துறைநிறை ஊர்த் தலைவனோடு; ஆற்றோர துறையன் ஆதலின் துறைகேழ் ஊரன். இனி நாண் ஆவது ஆக உண்டோ = இனியும் நாணப் படுவதில் பொருள் உண்டோ? எம் சேரி சேர வருகதில் அம்ம = பெண்களே! எம் (பரத்தைச்)சேரிக்குச் சேர வாருங்கள்; இது ஒருவிதமான வல்லமைப் போட்டிக்கான கூவல்.   

அரிவேய் உண்கண் அவன் பெண்டிர் காணத் = செவ்வரி உண்கண் பொருந்திய அவன்வீட்டுப் பெண்கள் காண; இங்கே ஊரன் கிழத்தி மட்டுமின்றி, அவன் வீட்டு அனைத்துப் பெண்களும் பேசப் படுகிறார். தாரும் தானையும் பற்றி = அவன் மாலையையும், ஆடையையும் பற்றி; இன்றும் சேலை முன்’தானை’ பயில்கிறோம். வேட்டியின் ஒரு பக்கமும் தானை தான். ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போல = ஆரியர் பெண்யானையைக் கொண்டு பயிற்றுவிக்கும் ஆண்யானை போல; இங்கே 2 உண்மைகள் பேசப்படுகின்றன. ஒன்று யானையின் உடற்கூறு, யானையின் வாழ்க்கை, யானையைப் பழக்கும் நடைமுறை ஆகியவற்றோடு தொடர்பானது.. இதை முதலிற் பார்ப்போம். இன்னொன்று வரலாற்றின் பாற்பட்டு, வடமொழி வழிப் பயிற்றுவிப்பு பற்றியது. இதை இரண்டாவதாய்ப் பார்ப்போம்.. 

யானைகள் பொதுவாய்க் குடும்பங் குடும்பமாய்த் திரியும் இயல்புடையன. ஆணோ, பெண்ணோ ஓரொரு யானையும் 50, 60 ஆண்டுகள் கூட வாழலாம். யானைக் குடும்பம் பெண்ணையே தலைவியாய்க் கொள்ளும். அகவை முற்றிய ஆண்யானைகள் இதில் அடங்கியே வாழும். அதேபொழுது ஆண்யானைகளுக்குக் குடும்பங்களில் அழுத்தம் இல்லாதில்லை. குறிப்பாக விடலை யானைகள் குடும்பத்தோடு ஒட்டி வாழ்ந்தாலும், 14-15 வயதில் இனப்பெருக்க ஊறுமங்கள் (hormones), குறிப்பாய்த் தடித்திரமம் (testosterone), ஊறுவதால், குடும்பத்திலிருந்து விலகித் தனியாகவோ, வேறு ஆண்யானைகளுடன் சேர்ந்தோ அலையும. அப்போது வேறு குடும்பப் பெண் யானையால் ஈர்க்கப் பட்டு, உடலுறவு கொண்டு, அக்குடும்போடு சேர்ந்து விடலாம். (கிட்டத்தட்ட சேரலத்து மருமக்கள் தாயமுறை போன்றது தான்.) 

தடித்திரம ஊறல் மாந்தரைப் போல் யானைகளுக்கு சீராக அமையாது. பருவம் பொறுத்துக் கூடக் குறைய அமையலாம். எக்கச் சக்கமாய் அளவு கூடிய யானைகளுக்கு மதம் (musth) பிடிக்கிறது. மிதமிஞ்சிய ஊறுமஞ் சுரந்த நிலையே மதமாகும். இதன் விளைவால், நெற்றித் தும்பில் (தும்பு=ஓரம்; temple of the forehead. நெற்றிப் பொட்டென்றுஞ் சொல்வர்.) பொக்குளந் தோன்றி அதுவெடித்துச் சீழ்வடியலாம். இச்சீழைத்தான் மதநீரென்பார். இது வடியும் நேரத்தில் இன்னதென்று அறியாமல் சினங்கூடி, யானை வெய்யழிப்புத் (violent) தோற்றமுங் காட்டும். மதங் கொண்ட யானையை அடக்குவது கடினம். மதத்தை இறக்கி வழிக் கொணர்வது ’கலை,கொடுமையென எல்லாஞ்’ சேர்ந்தது. (இக்காலத்தில் ஊசிகள் போட்டும் மதங் குறைப்பர்.) சில ஆண்யானைகளுக்கு அடிக்கடி மதம் பிடிக்கலாம். சிலவற்றிற்கு எப்போதோ நடக்கலாம். சிலவற்றிற்கு நடக்காமலே போகலாம். எல்லா நேரமும் யானைக் கூட்டங்களில் அவற்றைக் கட்டுள் கொணர்வன பெண் யானைகளே. அதே போல, தனித்துத் திரிந்த விடலை யானைகளைப் பிடித்து வந்து பழக்கும் போதும் பாகர்கள் பெண் யானைளை வைத்தே ஒழுங்கு நடைமுறையைச் சொல்லிக் கொடுப்பார்.           .  

இனி இரண்டாம் கேள்விக்குப் போவோம். இற்றை மக்கள்திரள்/ பைம்புல ஈனியலின் (population genetics) படி, ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட பழங்குடி மாந்தர் 70000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்தார்;  வந்தவரில் ஒரு சாரார் இங்கிருந்து பர்மா போய், பின் ஒவ்வொரு நாடாய்க் கடந்து ஆசுத்திரேலியா போய்ச் சேர்ந்ததாய் அறிவியல் கூறும். நெய்தலார் (coastal people) என்று அழைக்கப்பட்ட இன்னொரு சாரார் இங்கேயே தங்கிக் கடற்கரையை ஒட்டியே பெரும்பாலும் வாழ்ந்தார். வரும்போது இவர் ஏதோவொரு மொழியைக் கொண்டுவந்தார் என்றே அறிவியல் கூறும். அம்மொழி எது என்ற சிக்கலுக்குள் இப்போது போக வேண்டாம். ஆனால் அதிலிருந்து பல்வேறு காலங்களில் கிளைத்தவையே தமிழிய (திராவிட) மொழிகளாகும். பாகதமும் இதிலிருந்து தான் கிளைத்தது, அது வட திராவிடம் தான்  என்று ஒரு  சாராரும், ”இல்லை வேறொரு மாந்தப் பெயர்வில் அது உள் நுழைந்தது” என்று இன்னொரு சாராருஞ் சொல்வர். இன்றுள்ள நிலையில் இந்தப் புதிரையும் விடுவிக்க முடியாது.   

அடுத்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்நெய்தலாரே நாட்டின் உட்பகுதிகளுக்குள் நுழைந்தார். முல்லை வாழ்க்கையும், குறிஞ்சி வாழ்க்கையும் அதன் பின் ஏற்பட்டன. (நம்மிற் பலரும் குறிஞ்சியே முதலென்று எண்ணிக் கொள்கிறோம். அப்படிக் கிடையாது.) இன்னும் காலங் கழிந்து, முல்லை/நெய்தல் ஊடாட்டத்தில், நுட்பியல் மாற்றங்கள் ஏற்பட்டு மருத வாழ்க்கை உருவானது. குறிஞ்சி, முல்லையில் குறுநில மன்னர் தோன்றினார். மருத வாழ்க்கையில் பேரரசரும், வேந்தரும் தோன்றினார். பொ.உ.மு.1000-800 களில் வடக்கே 16 கணபதங்களிருந்து அவையே பொ.உ.மு. 600 களில் 3, 4 வேந்தர்களாய் மாறி, முடிவில் பொ.உ.மு.500-450 களில் மகதமே பேரரசு நிலைக்கு வந்தது. கிட்டத்தட்ட இதே காலத்தில் தமிழகத்தில் இருந்த இனக் குழுக்கள் ஒன்றோடொன்று கலந்து சேர, சோழ, பாண்டியர் எனும் பெரும் இனக்குழுக்கள் வழி மூவேந்தர் அமைந்தார். இக்காலத்தில் தமிழகத்தின் ஊடே குறுநில வேளிர் இருந்தது போலவே வடக்கிலும் மகதத்தைச் சுற்றியும் ஊடேயும் இருந்தார். மகத நாகரிகத்திற்கும், தமிழ நாகரிகத்திற்கும் பல்வேறு ஒப்புமைகளும் போட்டிகளும் இருந்தன. (அவற்றை இங்கு விரிப்பின் பெருகும். என் ”சிலம்பின் காலம்” நூலில் ஓரளவு சொல்லியிருக்கிறேன்.) 

தமிழகத்தைப் பார்க்க, மகதம் பென்னம் பெரிய நிலம். மக்கள் தொகைக் கூடக் கூட கங்கைக் கரையை ஒட்டிய காடுகளை அழித்து அவ்விடங்களில் மருதத்தை ஏற்படுத்தும் தேவை மகதத்தில் எழுந்தது. போர்க் கைதிகளாலும், வரிச் சலுகைகளால் தூண்டப் பெற்ற மக்களாலும் பெருவாரியான மக்கள் நகர்த்தப் பெற்றனர். மரங்களை அழிப்பதும், வெட்டிய மரங்களை அகற்றுவதும் தேவை என்ற போது யானைகளே கதியென்று ஆயிற்று. தவிர, 16 கணபதங்களும் ஒன்றுக்கொன்று பொருதி, சில அழிந்து சில பிணைந்து முடிவில் மகதத்தின் படை விரிந்தது. எந்தக் கோட்டையின் பாதுகாப்பும் மாற்றார் வலுக்காட்டிற்கு (offence) எதிரான, வலுவெதிர்ப்பு (defence) முனைப்புகளே. வலுவெதிர்ப்பைச் (defence) [தொடர்புள்ள மற்ற சொற்கள் சேமம்(safety), பாதுகாப்பு(security), காவல்(police)] சுருக்கமாய் அரணென்றுஞ் சொல்லலாம். armyக்கு அரணமென்றும் ஒரு சொல் பரிந்துரைத்தேன்.] கி.மு.462-446 இல், மகத அரசன் அசாத சத்துவிற்குப் பின்வந்த, உதய பட்டனின் பாடலிபுத்தக் கோட்டையில் 54 வாயில்கள், 570 எயில் மாடங்கள் இருந்தனவாம். அவ்வூர் ஏறத்தாழ 14.5 கி.மீ. நீளம், 2.5 கி.மீ. அகலங் கொண்டதெனில் ஊர் நடுவே எவ்வளவு பெருங்கோட்டை இருந்திருக்கும் என எண்ணிப்பாருக. இவ்வளவு பெரிய கோட்டையைக் காப்பாற்ற எவ்வளவு பெரிய படைவேண்டும்? யானையில்லாது கோட்டைகளை எப்படிக் காப்பாற்றமுடியும்? தகர்க்க முடியும்? 

அலெக்சாந்தர் இந்தியா வந்த நேரத்தில், நந்தரிடம் 9000 யானைகள் இருந்ததாய்ச் சொல்வர். அதே பொழுது, மற்ற அரசரிடம் (தெற்கே இருந்த மூவேந்தரிடமுங் கூட) அவ்வளவு யானைகள் இல்லை. 1000 தேர்ந்தால் அதிகம். பரப்பளவிற் குறைந்த அரசுகளில் யானையிருப்புக் குறைவு. அரசின் பொருளாதாரம், வலுவெதிர்ப்பு போன்றவை வளர, யானைகளை அடக்குவதும், பழக்குவதும், பயன்படுத்துவதும் தேவையாயிற்று. எண்ணிக்கையிற் கூடிய யானைகள் தேவைப்பட்டன. எனவே மகதத்தில் யானைப்பாகர் மிகுத்துப் போனார். அந்நாட்டின் பல மருங்கிலும் யானைப் பயிற்சி மையங்கள் இருந்திருக்கலாம். அருத்த சாற்றம் (Arthasastra) இதை விரிவாகப் பேசும். (சங்க இலக்கியம் புரிய அருத்தசாற்றப் பின்புலம் தேவை.) பின்னால் மகத அரசுகள் சிதைந்த போது யானைப்படைகளுஞ் சுருங்கின.

அக்காலத்தில் யானைகளைப் பழக்க மிகுந்த ஆண்டுகள் பிடித்ததால், போர் முடிந்தவுடன், எதிரி யானைப் படையைத் தம்படையோடு சேர்த்துக் கொள்ளும் விந்தைப் பழக்கமும் இருந்தது. (யானையைப் பிடித்துச் சில ஆண்டுகள் பழக்கி வைக்கும் செலவும், முயற்சியும் குறைந்து போகுமே? சட்டென்று சேர்த்துக் கொள்ளலாமே?) எனவே நாளாவட்டில் நாடெங்கணும் யானைப் பாகர் நடுவில் வடமொழியான ஆணைமொழி பொதுவாகிப்போனது. 

[19 ஆம் நூற்றாண்டு நடைமுறையை நான் சொல்லலாம். இங்கிருந்து சுரினாம், ப்வ்யூஜி போன்ற நாடுகளுக்குப் போன இந்தியக் கூலிகள் தமிழ், தெலுங்கு போன்ற தம் மொழிகளை மறந்தே போனார். பெயரிலும் சில பழக்கங்களிலும் மட்டுமே தமிழிருக்கும். தங்களோடு அங்கு வந்த பீகாரிகளின் மொழியான 19 ஆம் நூற்றாண்டு இந்துசுத்தானியே இவருக்கும் நாளடைவில் பொது மொழியானது. அது நம்மூரின் ”சர்க்கார்” சங்கத இந்திக்கும் வேறு பட்டது. இன்று சென்னையின் பல இடங்களில் குறிப்பாக நான் 4 ஆண்டுகளிருந்த சோழிங்க நல்லூரில், ஞாயிற்றுச் சந்தையின் பொது மொழி இந்தியாயிருக்கிறது. அங்கே பெரிதும் வாங்க வருவது பீகார், சார்க்கண்ட, சட்டிசுக்கர், ஒடிசா மாநிலங்களிருந்து வந்த கட்டிடத் தொழிலாளர். அதே போல் கும்மிடிப்பூண்டியில் இருக்கும் பல் வேறு வடகிழக்கு மாநில மக்களால் அந்தூர்க் கடைவீதியில் இந்தியே பெரிதும் புழங்குகிறது. அதே போல் சென்னை சவுகார் பேட்டையில் இருக்கும் மார்வாரிகளால், இந்தியே பெரிதாகிப் போனது. திராவிடம் பேசும் கட்சிகளே அங்கு இந்தியில் நுவலிகளை (notices) அளிக்கின்றன. எல்லாம் தேவை (demand) - அளிப்புத் (supply) தான். ஆரியர் வடமொழி வழியே சங்க காலத் தமிழகத்தில் யானை பயிற்றுவித்தது ஒரு விலங்கியல், பொருளியல் ஊடாட்டம். அதற்கும் மொழி விதப்பிற்கும் தொடர்பைக் காண்பது பொருள் அற்றது. இனி பாட்டிற்குள் போவோம். 

தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து = என்தோளைத் தறியாக்கி என் கூந்தலால் கட்டிப் போட்டு; அவன் மார்பு கடி கொள்ளேன் ஆயின் = என் மார்பில் அவனைச் சிறை கொள்ளேன் ஆயின்; ஆர்வுற்று இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் = ஆர்வமுற்று இரந்து வருவோர்க்கு ஈயாது ஈட்டியவன் பொருள் போல்; பரந்து வெளிப்படாதாகி = பரந்து வெளிப்படாதாகி, ஓம்பிய நலனே = (இது நாள் வரை) காப்பாற்றிய என்னழகு; வருந்துகதில்லயாய் = வருந்தி அழியட்டும்.  .

இனிப் பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

வெள்ளிய ஆண்வாளை உண்பதற்கு, 

நீள்பெருங் குளத்தெழுந்த இரைதேடும் நாரை, 

”எங்கே தன்னடை (மீன்களுக்கு) 

அறிவுறுத்தி விடுமோ?” என அஞ்சி 

காவலுள்ள இல்லத்துள் மெதுமெதுவாகப் புகும் 

கள்வனைப்போல சாய்ந்தொதுங்கும் 

துறைநிறை ஊரனொடு 

இனியும் நாணப்படுவதில் பொருளுண்டோ? 

பெண்களே! எம் (பரத்தைச்)சேரிக்குச் சேரவாருங்கள்! 

செவ்வரி உண்கண் பொருந்திய அவன் வீட்டுப் பெண்கள் காண 

அவன் மாலையையும், ஆடையையும் பற்றி, 

ஆரியர் பெண்யானையை கொண்டு பயிற்றுவிக்கும் ஆண்யானை போல 

என் தோளைத் தறியாக்கி என்கூந்தலாற் கட்டிப்போட்டு 

என் மார்பில் அவனைச் சிறை கொள்ளேன் ஆயின் 

ஆர்வமுற்று இரந்துவருவோர்க்கு ஈயாது 

பொருளீட்டியான் போல் 

பரந்து வெளிப்படாதாகி 

(இதுநாள்வரை) காப்பாற்றிய என்னழகு 

வருந்தி அழியட்டும். 

அன்புடன்,

இராம.கி.


No comments: