அடுத்தது இம்மென் கீரனாரின் அகநானூறு 398 ஆம் பாட்டு. இதன் 7 ஆவது வரியில் வரும் ”இம்”மெனுங் குறிப்பே (humming sound) கீரனாருக்கு முன்னொட்டுப் பெயரானது. பெரும்பாலும் பொ.உ. மு. 100 இல் இப்பாட்டு எழுந்திருக்கலாம். இமையம் ஆரியர்க்குச் சொந்தம் என இப்பாட்டு தெளிவாய்ச் சொல்கிறது. இரு வேறு இனத்தார் கலந்து வந்த இந்தக் காலத்திலேயே இமையம் ஆரியர்க்குச் சொந்தம் என்னும் உணர்வு எழுந்தது. இதற்கு முந்தைய காலங்களில் பனிபடு வரையைத் தமிழரும் சேர்த்து உரிமை கொண்டாடுவர். இமையவர் உரிமை சிறிது சிறிதாக மாற்றி உணரப்பட்டது போலும். இப் பாடலின் திணை: குறிஞ்சி. மலையிலிருந்து ஆறு கீழிறங்கி ஓட, தலைவி ஆற்றுக்குச் சொன்னதாய்ப் பாட்டு அமைகிறது. எந்த ஆறென்று நமக்குத் தெரியாது. ”நும்மோன், நின் குன்று கெழு நாடன்” என்ற பதங்களால் தலைவன் குறிஞ்சிநாட்டான் என்பது விளங்குகிறது. . .
இழைநிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்
படர்மலி வருத்தமொடு பலபுலந் தசைஇ
மென்தோள் நெகிழச் சாஅய்க் கொன்றை
ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல்பசந்து
இன்னேம் ஆகிய எம்மிவண் அருளான்
நும்மோன் செய்த கொடுமைக் கிம்மென்று
அலமரல் மழைக்கண் தெண்பனி மல்க
நன்று புறமாறி அகறல் யாழநின்
குன்றுகெழு நாடற்கு என்னெனப் படுமோ
கரைபொரு நீத்தம் உரையெனக் கழறி
நின்னொடு புலத்த லஞ்சி அவர்மலைப்
பன்மலர் போர்த்து நாணுமிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நிற்றந்து செலுத்தி
நயனறத் துறத்தல் வல்லி யோரே
நொதும லாளர் அதுகண் ணோடாது
அழற்சினை வேங்கை நிழல்தவிர்ந் தசைஇ
மாரி புரந்தர நந்தி ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும் எந்தை
பல்பூங் கானத் தல்கி யின்றிவண்
சேந்தனை செலினே சிதைகுவ துண்டோ
குயவரி இரும்போத்துப் பொருதபுண் கூர்ந்து
உயங்குபிடி தழீஇய மதனழி யானை
வாங்கமைக் கழையின் நரலும் அவர்
ஓங்குமலை நாட்டின் வரூஉ வோயே.
என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.
”குயவரி இரும்போத்துப் பொருத புண்கூர்ந்து
உயங்குபிடி தழீஇய மதனழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும்
அவர் ஓங்குமலை நாட்டின் வரூஉவோயே.
கரை பொரு நீத்தம்!
இவண்
எவ்வம் கூரப் படர்மலி வருத்தமொடு
பலபுலந்து அசைஇ,
மென்தோள் நெகிழ,
இழை நிலைநெகிழ்ந்த,
கொன்றை ஊழுறு சாஅய் மலரின் பாழ்பட முற்றிய,
பசலைமேனி நோக்கி நுதல்பசந்து இன்னேம் ஆகிய
எம் அருளான் நும்மோன் செய்த கொடுமைக்கு
இம்மென்று அலமரல்?
நன்று!
மழைக்கண் தெண்பனி மல்க புறமாறி அகறல்!
யாழ!
நின் குன்றுகெழு நாடற்கு என்னெனப் படுமோ?
உரை!”
எனக் கழறி
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலைப்
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நின் செலுத்தித் தந்து
நயன் அறத் துறத்தல் வல்லியோரே
நொதுமலாளர் அது கண்ணோடாது
அழற் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ
மாரி புரந்தர நந்தி ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும் எந்தை
பல் பூங்கானத்து அல்கி இன்றிவண்
சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ
இனி ஒரு சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். நீள்வது நீ(ள்)த்தம்> நீட்டம். ஆற்றைக் குறிக்கும் இச்சொல்லை இற்றைக் காலத்தில் நீரோட்டம் என்பார். குயம் = அரிவாள். குயவரி = அரிவாள் போல் வளைந்த வரி. இரும்போத்து = பெரிய ஆண்புலி (இருங் கடல் = பெருங் கடல்). பொருதல் = சண்டையிடல். [பொருதிற்கு sport எனும் இன்னொரு பொருளும் உண்டு. போர் செய்யாக் காலங்களில் போர்ச் செயலுக்குப் பகரி (substitute) ஆகவே sport எனும் கருத்தீடு எழுந்தது. மற்போர், வாட்போர் என ஒவ்வொன்றிலும் இருவர் பொருதுவார். பொருதல் வினையே போரெனும் பெயர்ச் சொல்லை உருவாக்கியது. sport வல்லடி/violence இல்லாத பொருதல். sport-ற்கு இணையான ”பொருதும்” தமிழில் பெயர்ச்சொல் தான். http://valavu.blogspot.in/2008/06/blog-post.html.].
கூர்தல்/கூரல் = சேரல்; உயங்குதல் = வருந்தல்; மதனழிதல் = உன்மத்தம்/வெறி அடங்கல்; வாங்கு = வளைவு.
நரல் = ஓசை. [நரல்பவன் நரன் =.மாந்தன் இதுவும் தமிழ்ச்சொல் தான். சங்கதமல்ல. நரல்ந்து ஏகும் ஆறு நருமதை.] ”வாங்கமைக் கழையில் நரல்” என்ற சொற்றொடரைப் புரிய மூங்கிற் காடுகளுள் போகவேண்டும்.
புரை(உட்துளை)யோடுள்ள இயற்கழை நெட்டங் குத்தலாய் இருக்கும். இதிற் பிளவுறாவிடில் காற்றுப்புக வழியில்லை. வளைந்த மூங்கிலில் ஓரிரு இடங்கள் பிளந்தாலோ, அன்றிக் கழையின் சுற்றுப் பரப்பில் துளை ஏற்பட்டோலோ, ஒரு பக்கம் காற்று நுழைந்து இன்னொரு பக்கம் மூங்கில் தடைகளின் நடுவே இழுமெனும் ஓசை வெளிப்படும். இயற்கையில் இவ்வாறு நடப்பதைப் பார்த்தே செயற்கையாய்ப் புல்லாங்குழலிற் செய்கிறோம்.
”ஆண்புலியின் அடியாற் புண்பட்ட பெண் யானை வலி தாழாது முனகிக் கிடக்க, உடன் வந்த ஆண்யானை தன்வலியால் புலியைத் துரத்திவிட, ஆண்யானையின் உன்மத்தம் (இன்னதென்று சொல்ல முடியா ஆங்காரம்) பொருதினூடே அழிந்து போக, பிடியைத் தழுவி ஊமென ஆண்யானை ஓலம் இடுகிறது. பெண்ணின் துன்பத்திற்கு இரங்கும் ஆண்கள் உள்ளதாம் குறிஞ்சி நாடு. அப்படியானால் எனக்கு என்ன நடக்கிறது?” - என்கிறாள் தலைவி.
எவ்வம் = துன்பம்; படர்மலி வருத்தம்= உடம்பிற் படர்ந்து விரவும் வருத்தம்; பல புலந்து அசைஇ = பலவற்றை வேண்டாமென வெறுத்து இயங்கி; மென்தோள் நெகிழ = (தலைவனையே நினைந்து சரியாய் உண்ணாது) மென்தோள் மெலிய, இழை = கையிற் கட்டுங் காப்பு; நிலை நெகிழ்தல் - பொதுவாக மணிக்கட்டிற்கு மேலிருக்கும் காப்பு, கைமெலிகையில், மணிக்கட்டில் நில்லாது (நிலை என்ற சொல் புரிகிறதா?) நெகிழ்ந்து கொள்ளும்.
கொன்றை ஊழுறு சாஅய் மலரின் = கொன்றையின் முதிர்வுற்ற, மெலிந்த மலரைப் போல்; பாழ்பட முற்றிய பசலை மேனி = உடம்பின் கொழுமை (health) பாழ்பட, முற்றிப் போன பசலை நிறங்கொண்ட மேனி. தலைவனைக் காணாது நின்றவள் பசலைமேனி கொண்டாள். நுதல் = நெற்றி
[நம்மிற் பலரும் பசலை நிறத்தைத் தவறாகவே பொருள் கொள்கிறோம். ஏதோ பசிய நிறமென்று நினைப்போரும் மிகுதி. உரையாசிரியர் தாக்கம் அவ்வளவு இருக்கிறது. ஆங்கிலத்தில் pale என்கிறோமே, அது தான் பயலை>பசலை ஆகும். இரு மொழிச்சொற்களும் தொடர்பானவை தாம். Paleness is an unusual lightness of skin color when compared with normal hue. It is caused by reduced blood flow or a decreased number of red blood cells.
ஆணோ, பெண்ணோ ஒழுங்காய்ச் சாப்பிடாமல், ஒன்றைப்பற்றி ஓயாது நினைத்து ஏங்குகையில், சத்துக் குறைவாலோ, மனக் கலக்கத்தாலோ அவரின் அரத்தவோட்டம் குறையலாம். அப்பொழுது அவருடைய மெய் வெளிறும்; பசலும். குறுகிய நேரமோ, நீண்ட நேரமோ இது நிலை கொள்ளலாம். anemic என்பதும் வெளிறலோடு தொடர்புடையது.]
யாழ = அசைச்சொல், இங்கே கூட்டுக்காரியே, நட்புக்காரியே என்று பொருள் கொள்ளலாம். யாழுதல் = கூட்டுச் சேருதல் என்ற பொருளுமுண்டு.
புலத்தல் = பிணங்குதல்; மிக ஒடுங்கி - பாட்டில் வரும் ஆறு இன்னும் சமவெளிக்குப் போகவில்லை. அதனாலும் இவ்விடத்தை முல்லை நிலம் என்கிறோம்.
தலைக் காவிரியை அடுத்து ஓரிரு கி.மீட்டர்கள் தள்ளிவந்தால் பாகமண்டல எனும் ஊர் வரும். அழகான ஊர். அங்கே ஒரு பகவதி கோயிலும் உண்டு. கோயிலுக்கு அருகில் காவிரி ஆறு மிக ஒடுங்கி நகரும். இதை ஆடு தாண்டுங் காவிரி என்பர். இது போன்ற இடங்கள் முல்லையில் தான் பெரிதுமுண்டு. மிகவொடுங்கி என்பது இடக் குறிப்பு.
நயன் என்ற சொல் தான் முந்தைச் சொல். நேர்மை, சரி, ஞாயம் என்ற பொருள் கொண்ட அடிச் சொல். நயம்> நாயம், ஞாயம். இது ந்யாயமென்றும் வடமொழித் திரிவு காணும். மீண்டும் கடன் வாங்கி நியாயம் என்போம். நயத்தின் திரிவான நயதியே இன்று நீதியென வழங்குகிறது. நயமன்றம் = நீதிமன்றம். நயவர் = justice. judge. நொதுமல் = neutral. நொதுமல் எனும் அழகுச் சொல்லை விட்டு நடுநிலை என்று சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டுள்ளோம். ஏராளமான நற் சொற்களைப் புழங்காது தமிங்கிலம் நோக்கித் தாவிக் கொண்டுள்ளோம். கண் நோடுதல் = பார்வை செலுத்தல்
அழற் சினை = நெருப்புப் போலும் கொழுந்துத் தளிர்; இங்கே வேங்கை மரங்கள் ஆற்றின் கரையில் உள்ளன. ஆறு ஆங்காங்கு விலகி வளைகிறது. அது வேங்கை நிழலைத் தவிர்ப்பதாய்த் தலைவி கற்பனை செய்கிறாள். மாரி புரந்தரு நந்தி = மழை புரந்துதரும் வெள்ளம் பெருகி; நுந்துதல்> நந்துதல் = தூண்டுதல், பெருகுதல்; இங்கே அருகிலுள்ள ஆறா, அன்றி. இமைய மலையின் வேறு ஆறுகளா என்பது பொருள் கொள்ளும் முறை சார்ந்தது. இரண்டுமே சரி.
ஆரியர் பொன்படு நெடுவரை = ஆரியருடைய பொன் போலும் பனி விழும் நெடிய மலைத்தொடர். இங்கே இமைய மலையின் அடிவாரக் காடுகள் உருவகஞ் செய்யப் படுகின்றன. அவை ஆரியருக்குச் சொந்தம் என்பதும் வெளிப் படுகிறது. நெடுவரையின் மூலம் தந்தையின் பூங்கானத்திற்குத் த்லைவி உயர்ச்சி நவில்கிறாள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே? இமையத்தை இவள் அருகுசென்று பார்த்தவள் இல்லை. சொற்பேச்சு, படிப்பு போன்றவற்றால் வருங் கற்பிதம் இங்கு வெளிப்படுகிறது. முல்லை நிலப் பெண்ணென இதனாலுஞ் சொல்கிறோம்.
பாட்டின் மொத்தப் பொருள்:
”அரிவாள் வரியுடைய ஆண்புலியோடு பொருதிப் புண்பட்டுத் துன்புறும் பெண்யானையைத் தழுவி, அதே பொருதில் உன்மத்தம் அழிந்த ஆண் யானை வளைந்த கழை வழி எழும் நரலைப் போல், ஊமென்று அழுது ஓசையிடும் மலை நாட்டின் ஊடு வரும் ஆறே! கரை பொருந்தும் நீட்டமே!
இங்கே, துன்பஞ் சேர, மெய் எங்கணும் படர்ந்து விரவும் வருத்தமொடு, பலவும் வேண்டாமென வெறுத்து இயங்கி, மென்தோள் மெலிய, கையணிக் காப்பு நெகிழ, கொன்றையின் முதிர்வுற்ற, மெலிந்த மலர் போல் உடம்பின் கொழுமை பாழ்பட, முற்றிய பசலை நிறங் கொண்ட மேனியும் நெற்றியும் கொண்டு இப்படியாகிய எமக்கு அருளாது நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று வருந்துகிறாயோ?
(ஓயாது கசியும்) கண்ணீர் மல்க, புறம் மாறி அகலாதே! என் நட்புக்காரியே! உன் குன்று நிறை நாடனுக்கு இது என்னவென்று படும்? சொல்! உன்னோடு பிணங்குவேன் என்று அவர் மலையிற் கிடைக்கும் பல்வேறு மலர்களைப் போர்த்துக் கொண்டு, நாணுற்று, மிக ஒடுங்கிக் கழியும் நின்னைச் செலுத்தித் தந்தவர், நயந் துறந்த வல்லாளரே. நடுநிலையாளர் அப்படிப் பார்வை செலுத்த மாட்டார். மழை புரந்துதரப் பெருகிவரும் நீருடைய ஆரியரின் பொன்படு நெடுவரை போல் அமைந்த எந்தையின் பல்பூங் கானத்தில், நெருப்புப் போன்ற கொழுந்துடைய வேங்கை நிழலைத் தவிர்த்த படி அசைந்து, இன்று இங்கு தேங்கி, நீ தங்கிச் சென்றால், கெடுவது ஏதுமுண்டோ?”
என்று கழறினாள் தலைவி.
இப்பாட்டில் வெளிப்படுவது ஆரியர் பற்றி பொதுமக்கள் கொண்ட நொதுமற் கருத்து. ”பொன்படு நெடுவரை” என்பது ஒரு பெரிய சித்திரம். ஏதாவது பெரியதைச் சொல்ல வேண்டுமானால் இதைச் சொல்லி விடலாம்.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment