அண்மையில் இலங்கநாதன் குகநாதன், 'பலகாரம்' தமிழ்ச் சொல்லா ? என்று முகநூலில் கேட்டிருந்தார். அவருக்கு அளித்த விடை எல்லோருக்கும் பயன்படும் என்று இங்கு பதிகிறேன்.
ஆர்தலுக்கு உண்ணுதல் என்னும் பொருளுண்டு. ”அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு” என்பது புறம் 34 இல் 14 ஆம் அடி. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.. எனவே, ஆரம் என்பது உண்ணக் கூடிய பொருளைக் குறிக்கும்.
இனி ஆகுதல் என்பதற்குச் சமைதல் to be cooked என்ற பொருளும் உண்டு.
ஆர்-தல், ஆகு-தல், ஆர்வு, ஆர்பதன், ஆர்பதம், ஆர்த்தல், ஆர்த்துதல் என்ற 7 சொற்களையும் செ.சொ. அகரமுதலியின் முதன் மடலம் இரண்டாம் பகுதியில் காண்க.
ஆக்கப் பொறுத்த நமக்கு ஆரப் பொறுக்க முடியாதோ? - என்பது ஒரு சொலவடை.
ஆகு+ஆரம் = ஆகாரம் = சமைத்த, சமைக்கிற, சமைக்கும் உணவு. இலக்கணப் படி ஆகாரம் என்பது வினைத்தொகை வழி பெறப்படும் சொல். நாம் சாப்பிடும் போது ஆகும் ஆரத்தையும் ஆகாத (சமைக்காத) ஆரத்தையும் சேர்த்தே சாப்பிடுகிறோம். இங்கே ஆகாரம் என்பது cooked food ஐக் குறிப்பிடும்.
பல் + ஆகாரம் = பலாகாரம். இது பேச்சுவழக்கில் பலகாரம் என்றும் சொல்லப்படும்.
என் பார்வையில் பலகாரம் தமிழ்ச்சொல்லே. வடபால் மொழிகளில் இதன் சொற்பிறப்பைச் சரியாக விளக்கமுடியாது.
பண்ணிய ஆரம் = பண்ணியாரம்> பணியாரம் என்பதும் பலகாரத்தின் ஒரு கூறே.