Sunday, April 10, 2022

இராசிக்கான தமிழ்ச்சொற்கள்.

இன்று ஒரு நண்பர் இராசிக்கான தமிழ்ச்சொற்களைக் கேட்டார். அவருக்குக் கொடுத்த விடை கீழே உள்ளது.

விண்மீன் கூட்டங்களை ஏதோ ஒரு வகையில் உருவகப் படுத்தித் தொகுதிகளாக்கிய போது அவை 12 தொகுதிகளாகத் தெரிந்தன. அவற்றின் இரைந்து கிடந்த பக்குவம் இரைதி = தொகுதி என்ற சொல்லை  உருவாக்கியது. இரைதி> இரதி> இராதி> இராசி என்று மேலும் ஆனது. 

இராசிகளை ஓரை என்றும் அழைப்பர். ஒல்லுதல் = உடன்படுதல்.  சில குறிப்பிட்ட பொருள்கள் உடன்சேர்ந்து தொகுதியாகும் பொழுது,  ஒன்று. ஒரு , ஓர் என்றும் அழைப்பார். இங்கு சில விண்மீகள் தம்முள் உடன்பட்டு ஒரு தொகுதி போல் காட்சியளிக்கின்றன. எனவே ஓர்>ஓரை என்றும் இரைதியைச் சொல்வர்.    

அடுத்து ஒவ்வொரு இராசியையும் வீடு என்றே பழம் மாந்தன் சொல்ல முற்பட்டான். பகலெல்லாம் பசிக்கு அலைந்து இரவில் இல் தேடி, தான் வருவது போல், இவ் விண்மீன் கூட்டங்களும் இரவில  வீடு தேடி வந்ததாக உருவகித்து அவை இருக்கும் அண்டவெளியை வீடென்றே உரைத்தான். 12 தொகுதிகளும் 12 வீடுகளாகக் கொள்ளப் பெற்றன. 

ஒரு வீடு ஆடாக (மேழம்) த் தெரிந்தது; இன்னொன்று மாடாக (விடை)த் தெரிந்தது; மேலும் ஒன்று நண்டாகத் தெரிந்தது; இன்னும் மற்றொன்று சுறா மீனாகத் தெரிந்தது. இப்படி மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் எனப் 12 இராசிகளுக்கும் பெயர் இட்டார்.  இதையே பாதி வடமொழிப் படுத்தி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுஸ், மகரம், கும்பம், மீனம் என்பார்,  

ஓரைகளின் பெயர்களையே சூரிய மான மாதத்திற்கும் பெயர்களாகச் சொல்லுவது நம்மிடமுள்ள கால காலமான மரபு. சூரிய மான மாதத்தை ஞாயிறு என்ற சொல்லால் அழைத்துச் சோழர் காலக் கல்வெட்டுக்களில் குறித்திருக்கிறார். கடக ஞாயிறு, கும்ப ஞாயிறு என்று அவற்றில் சொற்கள் புழங்கும். சித்திரை, வைகாசி......பங்குனி என்ற பெயர் கொடுத்து அழைக்கும் மாதங்கள் சந்திர மானக் கணக்கில் வருபவை. இவற்றைத் திங்கள் மாதங்கள் என்போம். இரு விதக் கணக்குகளும் சங்ககாலம் தொட்டே நம்மிடம் இருந்து வருகின்றன.

இராசியின் தமிழ்ப் பெயர்கள்: 1 இரைதி 2 ஓரை 3 வீடு. இடம் பார்த்துப் பயன்கொள்க.


No comments: