வேலிக் கருவைநிழல் வெக்கை மணற்காற்று
வேலை உழந்திருக்கும் உன்னய்யன் கேட்பாரோ ?
ஆலும் மடிதவழ்ந்து அம்மாவின் தாள்மீது
காலிக் குரல்சேர்க்கும் கண்ணமுதே! கண்ணுறங்கு!
அன்னை அயர்ச்சிபெற, ஆச்சி அலக்கொடுக்க,
சின்னவர்கள் மாமன்மார் சேர்ந்துன்னை எதிர்பார்க்க,
உன்பிறப்பை உப்பளத்து நீர்க்கடவில் வார்த்தெடுக்க
என்னைக் குழைவித்த என்னழகே! கண்ணுறங்கு!
உப்பே கதியென்பார், உன்னய்யன் நாள்முழுதும்!
உப்பே இனிவாழ்வு! உண்டபினர் என்னசொல ?
உப்பே உன் தாலாட்டு! உப்பாய் வருநாளில்!
உப்பின் கதையறிவாய்! உந்தன் விதியிதுவோ ?
வெட்டவெளி பார்த்து, வியல்நிலத்தைக் கூன்பார்த்து,
கட்டிக் களிமண்ணைக் கூழாக்கி, நிரவியிட்டு,
சிட்டாள் குலவையிட, செந்தூரான் பேருசொல்லி,
எட்டாளு சேர்ந்து, இணையிணையாத் தாள்மிதிச்சு,
பாத்தி வயலாக்கி, பாய்ச்சுதற்கு நீரிறைவை
போர்த்திப் புகலாக்கி, பொந்தாக மின்னிணைச்சு,
வாய்த்த புரைநீரின் வாகாய் அளச்செறிவை
ஆய்த்துக் கணிச்சு, அறுவடைக்கு நாள்குறிச்சு,
முந்நீர் ஒதுக்கி, முதநிலத்து நீர்பாய்ச்சி,
அந்நீரைத் தேக்கி, அணையணையா வரப்புகட்டி,
தந்நேரில் கதிரும் தகதன்னு காய்ச்சியதால்,
வெந்நீராய் மாற, வெதுவெதுப்புக் கூடிவர,
நீர்த்து நிறைகூட, நெடுக நுரையொழுக,
சேர்த்துச் செறிகூட, சீராய் விதையெழும்ப,
பார்த்துப் படிவமெனப் பலனாய் அளம்வாரப்
பாத்திதனில் நீர்வடிச்சு, பல்வாயிற் கட்டமைச்சு,
செங்கச் செறிவரவே சேராய் அளம் விளைஞ்சு,
வெங்கதிரில் உப்புகையில், வெள்ளென்று மாலவச்சு,
கண்கூசி, இமையிடுங்க, கட்புலனைத் தொலையவச்சு,
தங்கூடை கொள்ளத் தலைநிறைய உப்பேற்றி,
அம்பாரம் சேர்த்து, அதற்குவொரு கூரைகட்டி,
தம்பாரம் கீழிறக்கி தன்னை உருக்கியதால்
சம்பாவும் காசும் தான்பெற்றார் உன்னய்யன்
செம்பாதிச் சூரியனே! செந்தூரா! கண்ணுறங்கு!
நாளும் அளம்பார்த்து நாவும் கரிப்பேற,
கூழும் குறுமீனும் கொண்டவளும் கூடவர
போழும் மணற்காற்றில் போழ்ந்துவிடா உப்பளத்தான்
வாழும் குலவிளக்கே! வடிவழகே! கண்ணுறங்கு!
—————————————————————————————————
மேலே உள்ள பாட்டு தூத்துக்குடிப் பக்கம் உள்ள உப்பளத்தில் வேலை செய்யும்
கூலிப் பெண்ணொருத்தியின் உப்புத் தாலாட்டு
உழத்தல் = to labour
ஆலுதல் = அசைதல்
காலுதல் = கத்துதல்
ஆச்சி = பாட்டி
அலக்கொடுத்தல் = துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல்
நீர்க்கடவு = pump room with well.
முந்நீர் = கடல் நீர்
முதநிலத்து நீர் = தூத்துக்குடியில் நிலத்தடி நீரையே உப்பு விளைக்கப் பயன்படுத்துவார்கள். அதில் உப்புச் செறிவு (salt concentration) கடல் நீரில் உள்ள செறிவைக் காட்டிலும் கூட. இதைப் பயனாக்குவதால் தான் அங்கு உப்பு விளைப்பு ஓரளவாவது ஊதியம் உள்ளதாக இருக்கிறது.
புரைநீர் = borewell water
அளம் = உப்பு
செங்கச் செறி = right concentration
மாலுதல் = மயங்குதல்; உப்பளத்தில் கண்கூசி கண்பார்வை குறையப் பெற்றவர்கள் உண்டு.
2 comments:
நிலத்தடி நீரிலிருந்து உப்பு விளைய வைக்குமளவுக்கு அது உப்பின் அடர்த்தி கூடினது என்றால் குடிக்கவும் குளிக்கவும் உடுப்புத் தோய்ப்பதற்கும் சனங்கள் என்ன செய்கின்றார்கள்? சொந்தக் கைக்காசு சிலவழித்துத் தண்ணீரை வேண்டுகின்றார்களோ? அது கட்டுபடி ஆகுமோ?
ஊரெங்கும் அடர்த்தி கூடிய உப்பு நீர் இல்லை. கடலுக்கு அருகாமையில் தான் அப்படி.
Post a Comment