Tuesday, February 12, 2019

Robot - படுவி

அடுத்துவரும் செபுதெம்பர் 20-22, 2019இல் அண்ணா பல்கலைக்கழகத்தில் 18 ஆவது தமிழிணைய மாநாடு நடக்கப்போவதாகவும், அதன் மையக்கருத்தாக Tamil Robotics and Language processing அமையுமென்றும், “தானியங்கிக்கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு” எனும் தமிழாக்கத்தையும் படிக்கநேர்ந்தது. நான் உத்தமத்தை விட்டுவந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது இந்த அறிவிப்பைப் படித்தபோது, சரியான தமிழாக்கத்தை உணர்த்தாதிருக்க முடிய வில்லை. ஆழ்ந்து ஓர்ந்தால், robot- இற்குத் ”தானியங்கிக் கருவி” சரிவராது. automaton- க்குச் சரியாகலாம். நுட்பியலின்படி, இரண்டும் ஒன்றில்லை. ஒரு முறை முகநூல் சொல்லாய்வுக் குழுவில் நண்பர் முத்துநெடுமாறன் bot- இற்கு இணையான தமிழ்ச்சொல் கேட்டதும், கீழுள்ளதை நானெழுதியதும் நினைவிற்கு வந்தது.

அந்த இடுகையைச் சுட்டலாமெனில், உந்தமம் விட்டு வெளிவந்தது போல் சொல்லாய்வுக் குழுவிலிருந்தும் நான் நகர்ந்துவிட்டேன். நான் அங்கிலாத நிலையில் அவ்விடுகையைத் தேடுவது எப்படியென எனக்குத் தெரிய வில்லை. எனவே என் கணியிலிருந்து எடுத்து மீள இடும் கட்டாயம் ஏற்படுகிறது. இம்முறை என் வலைப்பதிவிலிட்டு முகநூற் பக்கத்தில் சுட்டி தருகிறேன். Tamil Robotics and Language processing என்பதைத் ”தமிழ்ப் படுவியியலும் மொழிச் செயலாக்கமும்” என்பதே சரியாகும். மாநாட்டில் தொடர்புள்ளோர் யாரேனும் இதைப் படித்தால் ஒருங்கிணைப்பாளரிடஞ் சொல்லுங்கள். என் பரிந்துரையை ஏற்பதும் ஏற்காததும் அவர் உகப்பு. தமிழ்க்கணிமை இன்றும் எனக்கு நெருக்கமானது. அதில் நடக்கும் தமிழ்த் தொண்டு சிறக்கட்டும்.! 
------------------------------------- 
இய்யெனும் வினையடியில் கிளர்ந்தசொல் இயல்வதாகும். இயல்தல்= to be possible. ”இயல்வது கரவேல்”- ஆத்தி சூடி. to happen என்றும் இச்சொல் பொருள் கொள்ளும். இயைதல்= பொருந்தல். இவையெலாம் இயற்கையோடு பொருந்துஞ் சொற்கள் இவற்றை robotics இல் பயன்படுத்த முடியுமா, தெரிய வில்லை. செய்தலே மாந்தனுக்கானது. செயல்தல்= இயற்கையைச் சேர்த்தோ, மறுத்தோ மாந்தன் செய்வது. செயலில் பல்வேறு கூட்டுவினைகளுண்டு. செய்யும்வினை செய்வினை. இன்னொருவரை செயப்படுத்தும் வினை செயப் பாட்டு வினை. உயர்திணையில் இது இன்னொருவருக்கும், அஃறிணையில் இன்னொன்றுக்கும் ஆகும். மாந்தர்கள் செய்வினையும் செயப்பாட்டு வினையுஞ் செய்வர். robot செய்வது மாந்தர்பார்வையில் செயப்பாட்டு வினையே. தானே சிந்தித்துச்செய்யும் வினை அறிவு robot இற்குக் கிடையாது. என்ன தான் செயற்கையறிவை கூட்டினும், இற்றைநிலையில் செயப்பாட்டு வினை மட்டுமே அது செய்யமுடியும். ஒருவேளை Bicentennial man இல் Robin Williams ஆல் சித்தரிக்கப்பட்ட Andrew போன்ற robot ஆல் எதிர் காலத்தில் முடியலாம்.

செயப்பாட்டு வினையைப் பிறவினையென்றும் புரிந்துகொள்ளலாம். செய் வினையிலிருந்து செயப்பாட்டுவினை ஆக்க, ”படு” என்ற துணை வினையை நாம் பயன்படுத்துகிறோம். ”செய்” வினை கையாலும், வேளாண்மையாலும் எழுந்தது. செய்க்கு மாறாக உழுவென்ற வினையும் உண்டு. இன்றைக்கு இருக்கும் உழைப்பு (உள்>உழு>உழை>உழைப்பு), தொண்டு (தொள்ளுவது தொண்டு, தோண்டு) தொழில் (தொள்>தொழு>தொழில்) போன்ற சொற்கள் எல்லாம் வேளாண்மையில் எழுந்தன. நிலத்தைக்கீறிப் புரட்டுவதில் உழைப்பும், தொண்டும், தொழிலும் அடங்கியுள்ளன. இவற்றோடு தொடர்புள்ள இன்னொரு சொல் அர்>அரி. நுகர்விற்கு முன் நிலத்தின் விளைவை அரித்துப் போடுதல். இதற்கும் மாந்தவுழைப்பு மிகுதி.. அரிதல் அறுதலுமாகும். அண்மைக்காலம் வரை இச்செயல்கள் எல்லாமே மாந்தராலும், மாந்தருக்கு உதவியான கருவிகளாலும் செய்யப்பட்டன. கடந்த 60, 70 காலங்களிற்றான், ஆணைகளைக் கேட்டுச் செயற்படும் robot களின் திறன் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் robot ஐத் தமிழில் எப்படிச்சொல்வதென்ற கேள்வி எழுகிறது. பலரும் ரோபாட் என்றே எழுதுகிறார். எழுத்தாளர் சுஜாதா இயந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். ஆனால் இதைக் காட்டிலும் பொருத்தமான சொல்லைத் தமிழில் ஆக்கமுடியும். அதற்குமுன் தமிழரிடம் பார்வை மாற்றம் ஏற்படவேண்டும். திராவிட மொழிக்குடும்பத்திற்கும் இந்தையிரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் ஏதோவொரு தொடர்புண்டென்று சிச்சிறிதாய்க் குரலெழுகிறது. இதை Nostratic studies இன் பகுதியாய்க் கொள்வர். நம்மூரில் பேரா. கு,அரசேந்திரன், பி. இராமநாதன் போன்றோர் இதை அழுத்திச் சொல்கிறார். மேலையுலகில் Stephan Hillyer Levitt போன்றோரும் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கியுள்ளார். இணையத்தில் 15, 20 ஆண்டுகளாய் நானிதைச் சொல்லிவருகிறேன். (அதனாலேயே என்னைப் பலருஞ் சாடிப் புறக்கணிப்பதுமுண்டு. கேலிசெய்ததுமுண்டு. ஆயினும் தோன்றியதைச் சொல்லத்தானே வேண்டும்? சங்கதமெனும் பெருந்தடையே நம்மை இதுபற்றி உணரவிடாது தடுக்கிறது. ”சங்கதமே மேடு, தமிழ் பள்ளம்” என்பதும், தமிழுக்கும் மேலைமொழிகளுக்கும் இடையே தென்படுந் தொடர்பு சங்கத வழிப் பட்டதே என்ற கருதுகோளுஞ் சேர்ந்து ஒருவித வழிபாட்டுத் தனத்தையும் உருவாக்குகின்றன. இத்தடையை மீறினாலொழிய நான் சொல்வது புரியாது.)

ஆங்கிலத்தில் வரும் labour, labourer என்பவை தமிழின் உழைப்பு, உழைப்போர் என்பவற்றோடு தொடர்புடையனவாய்த் தோற்றுகின்றன. அதேபோற் செருமனில் வரும் Arbeit ”அரிபடு” தலோடு தொடர்புடையதாய்த் தோற்றுகிறது. ஆங்கிலத்தில் வரும் robot என்ற சொல் சுலாவிக் (slavic) மொழிகளின் வழி செருமானிய arbeit சொல்லோடு தொடர்புடையது.             .     

robot (n.) 1923, from English translation of 1920 play "R.U.R." ("Rossum's Universal Robots"), by Karel Capek (1890-1938), from Czech robotnik "forced worker," from robota "forced labor, compulsory service, drudgery," from robotiti "to work, drudge," from an Old Czech source akin to Old Church Slavonic rabota "servitude," from rabu "slave," from Old Slavic *orbu-, from PIE *orbh- "pass from one status to another" (see orphan). The Slavic word thus is a cousin to German Arbeit "work" (Old High German arabeit). According to Rawson the word was popularized by Karel Capek's play, "but was coined by his brother Josef (the two often collaborated), who used it initially in a short story."

உழுபடுதல், தொழுபடுதல், அரிபடுதல், செயற்படுதல் என எல்லாமும் செயற்பாட்டுத் தோற்றங்கொண்டவை. மேலேயுள்ள robot இல் ro என்பது ஒரு பக்கமெனில், bot என்பது இன்னொருபக்கம். robot இன் முகன்மை ஒரு பக்கம் பட்டு இன்னொருபக்கம் அரி, உழு, தொழு என்று செய்வதிலுள்ளது. படுதல் வினையே robot ஐ நம்மோடு அழுந்த இணைக்கிறது. எனவே மாந்தப் பார்வையில் உழு, தொழு, அரி போன்றவற்றைப் பொதுமைப்படுத்தி ஆணைப் படுவி என்றழைக்கலாம் இன்னுஞ் சுருக்கமாய்ப் படுவிகள் (bots) என்றே அழைக்கலாம். படுவிகள் உருவாவதற்கு முந்தைய காலகட்ட நிலையில்

நாம் உழுகிறோம். நிலம் உழுபடுகிறது.
நாம் தொள்ளுகிறோம். நிலம் தொழுபடுகிறது.
நாம் அரிகிறோம். கதிர் அரிபடுகிறது.
நாம் செய்கிறோம். கருவி செயற்படுகிறது.

படுவிகள் உருவானபின், அவற்றைப் பயனுறுத்திய நிலையில்

நாம் ஆணையிடுகிறோம் படுவி உழுகிறது நிலம் உழுபடுகிறது
நாம் ஆணையிடுகிறோம் படுவி தொள்ளுகிறது நிலம் தொழுபடுகிறது
நாம் ஆணையிடுகிறோம். படுவி அரிகிறது. கதிர் அரிபடுகிறது
நாம் ஆணையிடுகிறோம் படுவி செய்கிறது கருவி செயற்படுகிறது

படுவி, ஒன்றாக மட்டும் இருக்கத்தேவையில்லை. அவை சேரிய படுவிகளும் (series of bots) ஆகலாம் படுவி1 உயர்செயற்கை அறிவுள்ளதாகவும், படுவி 2 அடுத்த செயற்கை அறிவுள்ளதாகவும் ...........................படுவி n செயற்கையறிவு இல்லாததாகவும் ஆகலாம். ஒவ்வொரு படுவிக்கும் பூதியவுரு (physical shpe) இருக்கத் தேவையில்லை. முதல் படுவி உயர்நிலை நிரலாய்க் (high level programme) கூட இருக்கலாம், அடுத்தது தாழ்நிலை நிரலும் (low level programme), சினைகளுங் (physical parts) கொண்ட பூதியகருவி (physical equipment) யாகலாம்.

bot இற்கும் robot இற்கும் என் பரிந்துரை படுவி.

அன்புடன்,
இராம.கி. 
 .

No comments: