Thursday, July 09, 2015

பழந்தமிழர் அளவைகள் - 4

வேளாண்மை விரிவில் நீட்டளவைத் தொடர்ச்சியாய்ப் பரப்பளவை பற்றிய கருத்தெழுந்தது. ”சதுரம், செவ்வகம், முக்கோணம், நாற்கோட்டம் (quadrilateral), நாற்பதியம் (trapezium), வட்டம் போன்ற வடிவங்களால் ஆன நிலங்களின் பரப்பை எப்படிக் காண்பது? நிலங்கள் ஒவ்வொன்றும் மேலும் மேலும் பெரிதாகையில் பரப்புகளையெப்படி ஒன்றிற்கு மேல் இன்னொன்றாய் வரிசைப்படுத்துவது?” என்ற அறிவியற் சிந்தனையே பரப்பளவையின் தொடக்கமாகும். Science starts with classification. (பரப்பைக் காணும் வழிகளை வேறொரு கட்டுரையிற் பேசவேண்டும். இக்கட்டுரையில் மேற்சொன்ன கணித வடிவங்களைக் காட்டிலும் பெருக்கல், பழுக்கல், உறழ்தல், lமாறல், குழித்தல் போன்ற கணிதச்சொற்களைப் புரிந்துகொண்டு பரப்பளவைகளைப் பார்க்கப்போகிறோம்.)

ஒரு பக்கத்தை இன்னொரு பக்கத்தாற் பெருக்கிப் பரப்புக் கணக்கிடுவதைச் சதுரம் என்னும் வடிவமே முதலில் எடுத்துக்காட்டியது. சதுரம் ஒரு வடசொல்லென்றே பலரும் எண்ணுகிறார்; உண்மையில் அது தமிழ்ச்சொல்லேயாகும். 4 சம-கரங் கொண்ட சதுரத்தின் சொற்பிறப்பு எளிதானது. தமிழில் எண்ணுச்சொற்கள் 0, 1, 2, 3, 5, 10, 100, 1000 ஐ ஒட்டியெழுந்தன. மற்ற எண்ணுச்சொற்களெல்லாம் இவற்றிலிருந்து பெறப்பட்டவையே. நாலு என்பது ஐந்திற்குறைந்த பொருளில் (ஒருவிரல் மடங்கி) நலிந்த கையைக்குறித்து நலிகை>நாலிகை>நால்கை என்றானது. நலிதலின் இன்னொருசொல் சொதுத்தல் ஆகும்; சொத்தை/சொட்டையென்ற சொல்லையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம். சொடுக்கை/சொதுக்கை = நலிந்த கை, (ஒருவிரல் இங்கும் மடங்கியது. இன்னொருவகையிற் சொத்தாங்கை>சோத்தாங்கை என்றாகும், வலக்கைப் பழக்க ஆதிக்கத்தால் ”குறைந்த கை” என்று பொருள்கொண்டு இடக்கையைக் குறிக்கும்.) கையின் இன்னொரு சொல் கரம்.சொதுகரம்>சதுகரம்>சதுரம் என்று இச்சொல்லெழும்.

அடுத்தது செவ்வகம் என்னும் வடிவமாகும். அஃகமென்ற சொல் முனை, கோணத்தைக் குறிக்கும். எல்லா முனைகளிலும் செவ்வையான கோணங் (right angle) கொண்டது செவ்வஃகம்>செவ்வகம் ஆகும். (பார்க்க: http://valavu.blogspot.in/2010/04/5.html).

[சதுரம், செவ்வகம் ஆகிய சொற்களைத் தவிர நாற்கரமென்ற சொல்லை quadrilateral ஐக் குறிக்கும்படி நம் இளம் அகவையிற் பயின்றோம். உண்மையிற் சதுகரம் என்பதற்கும் நாற்கரம் என்பதற்கும் பெருத்த பொருள்வேறுபாடு கிடையாதென்பதால், தெளிவுகருதி “நாலுகோடுகளால் ஆனது நாற்கோட்டம் (quadrilateral)” என்றபொருளில் இப்பொழுது பயிலத்தொடங்கியுள்ளேன். நாற்பதியம் என்பது நாலு இடங்களில் பதிந்தது என்ற பொருளில் எழுந்த சொல்.]

கூடற்கருத்திலிருந்து தொகுதல், மிகுதல். குவிதல், திரளல், முழுமை, பருமையென்ற கருத்துக்கள் பொருள் வளர்ச்சிபெற்று அததற்கான சொற்கள் பிறக்குமென்று. பாவாணர் சொல்வார். பருத்தலிலிருந்து பரத்தல், பருக்கல் வினைகள் உருவாகி இன்னுஞ் சொற்கள் பிறக்கும். பலம் பெலமாவதுபோல, கட்டுதல் கெட்டுதலாவது போலப் பருக்கல் பெருக்கலாகும். பருக்கல் பலுக்கற்றிரிவில் பழுக்கலுமாகும். (மல்கிப்பழுக்கல் = multiplication). கணக்கதிகாரத்தில் பழுக்கல் என்ற சொல் பெரிதும் ஆளப்படும்.

உல்>உறு>உறழ்>உறழ்தல் என்ற கருத்தும் மிகுதல், அதிகரித்தல், பெருக்குதல் பொருளில் வரும். “இருநான்கு உருபும் உறழ்தர” என்பது நன்னூல் 240 ஆம் நூற்பா. பரப்பின் விரிவில் ஒரு வயலில் உழும்போது அடுத்தடுத்த சாலில் மாறிமாறித் திரும்ப நடந்து விரிவை உணர்வதால், ”மாறல்” என்பதும் பெருக்குஞ் செயலைக் குறித்தது. (கணக்கதிகாரத்தில் பல கணக்குகளில் இச்சொல் பயிலும். ”7-ஐ 6-ஓடு மாறு” என்றால் 42 என கணக்கதிகாரத்தில் விடைதருவர். இன்னொரு சோகத்தை இங்கு சொல்லவேண்டும். இந்தக்காலக் கணக்குப்பயிற்சியில் பெருக்கல் என்பதைத் தவிர மற்ற இணைச் சொற்களைத் தவிர்த்துவிட்டோம். இற்றை இளஞ்சிறாருக்கு அவை தெரியாது. multiply என்ற ஆங்கிலச்சொல் வேண்டுமானால் தெரியும். இப்படி விடாத ஆங்கிலத் தாக்கத்தால் நாம் நம் மரபுகளைத் தவிர்த்து, உறவுகளைத் தொடரமுடியாது, ஏதிலிகளாய் அம்போவென்று நிற்கிறோம்.)

குழுத்தல், குழுமுதலென்பது கூடலிற் தொடங்கி சொற்பொருள் வளர்ச்சியிற் குழித்தலாகும். குழுத்தலின் திரிவான கொழுத்தல் திண்மப் பருமனையும், குழித்தலின் திரிவான கொழித்தல் நீர்மப் பருமனையுங் குறிக்கின்றன. குழித்தல் ஓர் எண்ணை அதே எண்ணாற் பெருக்குவதற்குப் பயனாகிப் பின் எல்லா எண்களையும் பெருக்குதற்காகியது. (சதுரத்திலிருந்து செவ்வகம் போய்ப் பரப்பைக் காணும் சிந்தனை விரிவை இங்கு அறியலாம்.)

இன்னொரு விதமாயும் பெருக்கல் வினை தமிழர்மரபிற் குறிப்பிடப்பட்டது. (7க்கு 6 நாற்பத்திரண்டு; 8 க்கு 9 = 72 என்றும், ஏழாறு நாற்பத்திரண்டு; எண்ணொம்பது எழுபத்திரண்டு என்றும் 1950 களில் இருவேறு விதமாய்த் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் படித்தேன்.) இங்கே ”க்கு” சொற்சுருக்கம் பெருக்கற்குறிக்கு மாற்றாக வந்துள்ளது. இங்குநாம் உரையாடும் முன்னீட்டில் 11FED என்ற குறிப்புள்ளியில் இருக்கும் குறியீட்டிற்கு used especially with numerals for the dative suffix என்ற விளக்கம் மட்டும் பற்றாது. used as a substitute for multiplication mark with a meaning of "into" and "by". என்ற விளக்கமும் சேர்க்கவேண்டும். இந்தக் குறியீட்டிற்கான மாற்றுக்குறிகளை இக்கட்டுரையாசிரியர் பார்த்திருக்கிறார். அவற்றிலெதை எடுத்துக்கொள்வதென்று துறையறிஞர்தான் முடிவுசெய்யவேண்டும்.
.
பழஞ்சோழநாட்டில் குழி(த்த, குழிக்கிற, குழிக்கும்)) நிலமென்பது வினைத்தொகையாகி 1 பெருங்கோற் சதுரம் அல்லது தண்டச் சதுரத்தைக் குறிக்கும். [தமிழர் நிலமெங்கும் இவ்வரையறையிற் குழப்பம் இல்லை. தண்டத்தின் அளவிற்றான் குழப்பமேற்பட்டது. தண்டமென்ற சொல் தமிழ்தான். இதையும் சிலர் வடமொழியென நினைக்கிறார். அப்படிக்கிடையாது.] இச்சொல் குழியென்றே சொல்லப்பட்டுப் பெயராகியது. (ஆரியபட்டா வாய்ப்பாட்டின் படி) 1 தண்டம் 10 ஆ.அடியாகின், 1 தண்டச்சதுரம் 100 சதுர ஆ.அடியாகும். (தென்புல வாய்ப்பாட்டின்படி) 1 தண்டம் 11 ஆ.அடியாகின், 1 தண்டச் சதுரம் = 121 சதுர ஆ.அடி. (மேலையர் வாய்ப்பாட்டின் படி) 1 தண்டம் 12 ஆ.அடி ஆகின், 1 தண்டச் சதுரம் = 144 சதுர ஆ.அடி. (மேலையர் வாய்ப்பாடே வடமேற்குப் படையெடுப்புக்களின் பின் இந்திய வடபுலத்தில் வாய்ப்பாடானது.) கணக்கதிகாரத்தைச் சரியாகப் பயிலாது, குழியெனும் அளவை புரியாது L2/15-078 என்ற முன்னீடு மேலையர் வாய்ப்பாடான 1 தண்டச்சதுரம் = 144 சதுர ஆ.அடிகளைப் பதிவுசெய்கிறது. நம்மூர் அளவைகளை விலக்கி வேறோர் அளவையைத் தமிழின் நிறைப்பு வளாகத்தில் (supplementary block) நாமேன் பதியவேண்டும்? - என்பது என் கேள்வி.

மேலுள்ள தென்புல வாய்ப்பாட்டில் 1 தண்டம் = 16 சாண் என்பதே பெரும்பாற்பழக்கமாகும். இப்பொழுது ஒருங்குறியிற் செந்தரம்பதிய முற்படுவதால், செங்குழி என்றதைச் சொல்வதே சரியான முறை. (செந்தமிழ், செங்கதம்போற் ”செங்குழி” பயிலலாம்.) ஏனெனிற் பழம்நீட்டளவையில் 16 சாண்கோலையே எல்லாப்பொழுதும் பழகவில்லை. சிலபோது, சிலவட்டாரங்களில் 12, 14, 18 சாண்கோல்களைப் பயன்படுத்தினார். (சாணெனும் அளவிற்கு மாறாய்த் தொல்லாவணங்களில் பாதத்தைக் குறிக்கும் அடியையும் பயன்படுத்தினார். அதை “ஆ.அடி”யோடு குழம்பக்கூடாது.) கோயில்கட்டப் பயனுறுத்திய கோலடையாளத்தைச் சிற்பி கோடிட்டுக்காட்டும் பழக்கமும் பல கோயில்களிலுண்டு. கணக்கதிகாரத்தில் 10, 12, 14, 18 சாண் கோல்களின் வழிப்பெற்ற குழிகளை 16 சாண்வழிப் பெற்ற செங்குழியாக மாற்றும் பயிற்சிக் கணக்குகள் பலவுண்டு. எனவே 11FE0 என்ற குறிப்புள்ளிக்கு நேராக TAMIL SIGN CENGKUZHI OR STANDARD KUZHI என்றிருப்பதே சரியானது.

தவிர 121 சதுர அடியை 1 சிறுகுழி என்றும், 12100 சதுர அடியை 1 பெருங்குழி என்றுஞ் சொல்லும் பழக்கம் சோழநாட்டில் இருந்திருக்கிறது. இதன்படி 1பெருங்குழி = 100 சிறுகுழி என்றாகும். இப் பெருங்குழிக்கு எல்லோரும் அறிந்த வேறொரு பெயருமுண்டு. அதைக் கீழே பார்ப்போம்.
.
11FE0 விற்கு விளக்கமெழுதுகையில் தென்புல வாய்ப்பாட்டையே நாம் பதிவுசெய்யவேண்டும். வேண்டுமெனில் மற்ற வாய்ப்பாடுகளை அடுத்துக் குறிப்பிடலாம். 144 சதுர ஆ.அடி என்பது மேலையர் கெஜத்திலிருந்து பெறப்படும் வழியலகாகும். அதையெடுத்து நம்குறியேற்றத்திற் குறிக்கும் தேவையேயில்லை. குழியைக் குறிக்கும் 11FE0 எனும் குறிப்புள்ளிக்கான விவரத்தில் equals 16 square gejam என்பதற்கு மாறாக, equals 1 square thandam என்றெழுதலே சரி. கூடவே 1 thandam = 11 ft = 132 inch, as per standard Tamil practice; however in certain regions and historical time periods, 1 thandam had variouslly been held equivalent to 11 சாண் (82.5 inch), 12 சாண் (99 inch), 14 சாண் (115.5 inch), 18 சாண் (148.5 inch) என்றுமெழுதலாம். 11FE0 குறிப்புள்ளிக் குறியீட்டில் கு-வை எழுதி மேலே பிள்ளையார் சுழி சேர்ப்பதா, அன்றி லகரஞ் சேர்ப்பதா எனவும், ஒழுங்குமுறை செய்யும் துறையறிஞர் கூடிப்பேசவேண்டும். (பலரும் பிள்ளையார்சுழியே சரியென்கிறார்.)

குழி(நிலத்து)க்கு அடுத்தது மா(நிலம்) ஆகும். மா(த்த, மாக்கிற, மாக்கும்) நிலம் என்று வினைத்தொகையாகவும் (மாத்தல் = அளத்தல். ஆங்கிலத்தில் metre, metrology என்றும், மட்டுதல், மட்டும், மானம் என்றெல்லாம் தமிழிற் சொல்லுகிறோமே அவையெல்லாம் இந்த மாத்தலோடு தொடர்புடையவை. மாத்தல் என்ற சொல் அறிவியலிற் பயன்படும் அருமையான ஊற்றுச் சொல்.), பெருநிலம் என்று பண்புத்தொகையாகவும் பொருத்தி விளக்கஞ்சொல்வர். வினைத்தொகையே சரியான பொருள் தருவதாய் என் ஒருசாற் கருத்து அமையும். மாநிலம் சுருங்கி மாவெனப் பெயரானது. (மா என்னும் அளவை ஓரெழுத்துக் கொண்டது என்று சிலர் எண்ணிக்கொள்கிறார். உண்மையில் அது புரிதல் நீட்சியேயொழிய, அடிப்படை அளவு மாநிலம் என்பதேயாகும்.) வினைத்தொகையும், பண்புத்தொகையும் எல்லோருக்கும் மறந்தேபோனது. மயமதம் என்ற கோயிற் கட்டிட விளக்கநூலில் 8 தண்டம் 1 கயிறென்று சொல்லுவார். கயிறு, தண்டத்தினும் பெரிய அலகாகும். ஒரு தண்டச்சதுரத்தைப் போல 7744 சதுர ஆ.அடிகள் கொண்ட 1 கயிற்றுச் சதுரத்தை எண்ணிப்பார்க்கலாம். (இக்கால 3 ground-7200 சதுர ஆ.அடிகளுக்கும் இது பெரியது.) இக்கயிற்றை நெடுநல்வாடையின் 76-78 அடிகள்

“நூலறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டு
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர்க் கொப்பமனை வகுத்து”

என்றுசொல்லும். அளவை விவரமறியா உரையாசிரியர்,.”பெருந்தச்சர் நூலை நேரேபிடித்து திசைகளைக் குறித்துக்கொண்டு திக்குகளில் நிற்கும் தெய்வங்களை நோக்கி பெரும்பெயர் கொண்ட மன்னர்க்கு ஏற்ற மனையை வகுத்து” என்று பொருந்தச் சொல்வதாய்ப் பொருளெழுதுவார். அளவைகள் தெரிந்தோர் அப்படிப்பாரார்; நூலறிபுலவர் = மனைநூலறிந்த பெருந்தச்சர். நுண்ணிதின் கயிறிட்டு = நுணுகிக் கயிறளந்து. ”தேஎம்” என்பதை அளபெடையாக்கித் தேயத்தைக் குறிப்பதாய்த் திசைப்பொருள் கொள்ளாது, தேயத்தைப் பக்கம், இடமென்று பொருள்கொண்டால் ”கட்டிடநூலறிந்த பெருந்தச்சர் நுணுகிக் கயிறளந்து பக்கங்கொண்டு, தெய்வத்தைநோக்கிப் பெரும்பெயர்மன்னர்க்கு ஒப்ப (வீட்டு)மனை வகுத்து” என நேரடிப் பொருள்சொல்லலாம். கயிறளந்து பக்கம் கொள்ளுதல் என்பது வீட்டுமனையின் பக்கத்தைக் குறிக்கும்.

சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டுப் பக்கம் 150 ஆண்டுகளுக்குமுன் கூட, பொதுவான வீட்டுமனைகள் 4 ground (80*120 = 9600 சதுர ஆ.அடி) இருக்கும். இவற்றினும் பெரிய செல்வந்தரின் முரட்டு வீட்டுமனைகள் 6 ground (120*120 = 14400 சதுர ஆ.அடி) ~ 2 கயிற்றுச்சதுரம் இருக்கும். நெடுநல்வாடையிற் பேசப்படும் பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனை இரு கயிற்றுச் சதுரமோ. அதற்கும் மேலோ, “பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப” அமைவதில் வியப்பொன்றுமில்லை. கோட்டையின் நடுவில் அரசனின் அரண்மனை இவ்வளவு பெரிதாகவும் அதைச்சுற்றி மற்ற மனைகளும் அரங்குகளும் இருக்கும். அருத்தசாற்றம் விவரிக்கும் மகதமன்னர் அரண்மனையும் இவ்வளவு பெரியதே. இந்த விவரிப்புகள் உண்மையா என்பதை ஏதாவது ஒரு தொல்லாய்வின் மூலம் அறிந்தாற்றான் உண்டு. ஒருவேளை மதுரை சிலைமானுக்கருகில் கீழடியில் காணப்பெறும் தொல்லாய்வு இதை வெளிக்கொணரலாம்.

ground என்றதும் அதே பள்ளப்பொருள்கொண்ட நம்மூர்க் குண்டின் அளவைச் சொல்லத்தோன்றியது. (குண்டும், குழியும் எனும்போது, குண்டு மேடென்று பொருள்கொள்ளும். வெறுமே குண்டெனும் போது பள்ளமென்று பொருள்கொள்ளும்.) குண்டென்பது 3*3 தண்டச் சதுரம் = 33*33 சதுர ஆ.அடி = 1089 சதுர ஆ.அடியெனப் பெருஞ்சோழர் புழக்கத்திலிருந்த அளவையாகும். இங்கே இன்னொரு இணைகோட்டைச் சொல்லவேண்டும். 'ஏர்' (ARE) என்பது ஒரு மெட்ரிக் பரப்பளவு அலகு. ஒரு ஏர் = 100 சதுர மீட்டர் = 1076 சதுர அடி = 32.8 (33) அடி அளவுள்ள சதுரமான மனை. 100 ஏர் கொண்டது ஒரு எக்டேர் = 2.47105 ஏக்கர். 1 ஏக்கர் =  = 43560 சதுர அடி = 208 அடி எட்டரை அங்குலம் சதுரமான புலம்

இக்காலத்து ground -ற்கு நெருங்கிவருவது 20 தண்டச் சதுரம் = 55*44 சதுர ஆ.அடி = 2420 சதுர ஆ.அடியாகும்.

8 தண்டத்தினும் பெரிதாய்ப் 10 தண்டங் குறிக்கும் அலகைப் பரிதேசமென அருத்தசாற்றம் அழைக்கும். (= வெட்டுப்பக்கம் அல்லது வெட்டலகு; பரிதல் வினையை வெட்டற்பொருளோடு பொருத்திச் சூடாமணி நிகண்டு சொல்லும். ஏகதேசமெனும் வடமொழிக் கூட்டுச்சொல்லிற்கு ஒற்றைப்பக்கமென்று பொருள். உத்தேசமென்பதற்கு உட்பக்கமென்று பொருள்.) சதுரம், ஐமுகம், அறுமுகம் போன்ற ஒழுங்கான பல்முக வடிவங்களில் ஒற்றையலகென்ற (unit measure) அளவுண்டு. இவ்வொற்றையலகைத் தான் நாம் பக்கமென்கிறோம். ஒரு நீளக்கோட்டிலும், பரிதேசத்தை அளவுகோலாக்கிப் பரிக்க முடியும். இதற்குச் சரியான தமிழ்ப்பெயரை இன்னும் நானறியேன். ஆனாற் 10 தண்டங்களைப் பக்கமாகக் கொண்ட ஒரு பரிதேசச் சதுரத்தின் பரப்பளவு 100 குழிகளாகி மா(நிலம்) எனப் பெயர் கொள்ளும். (குடிலரின் அருத்த சாற்றம் படிக்கவில்லையெனில், மாவின் சரியான சமன்பாடு நமக்கு விளங்காமலே போய்விடும். வடபுல அளவைகளுக்கும் தென்புல அலவைகளுக்கும் இருக்கும் ஒற்றுமை, வேற்றுமைகளை நாம் தொடர்ந்து கவனிக்கவேண்டும். ஒருங்குறியில் பின்ன, சின்னக் குறியீடுகளிற் தெளிவு ஏற்பட அது வகைசெய்யும்.

(மா(நிலம்) என்பது 1/20 வேலி. மா(நிலம்) = 100 குழிகள் = 10*10 தண்டச்சதுரம் = 110*110 சதுர ஆ.அடிகள் = 12100 சதுர ஆ.அடிகள். 1 மா = 100 குழிகளென்பதைப் பெரும்பான்மையளவாகக் கொள்ளலாம். அதேபொழுது, பல்வேறு வட்டாரங்களில் வேறு பல ஒக்குமைகளும் (equalities) இருந்தன. அவற்றை வல்லுநர் வழி அறிந்து மாற்றுவழக்குகளாய் L2/15-078 இற் பதிவுசெய்யவேண்டும்.

மேலும், ஒருமாவிற்கு எத்தனை குழிகள், குழிவரையறைத் தண்டத்திற்கு எத்தனை சாண்கள் என்பதைப் பொறுத்தும் முடிவுகள் வேறுபடும். (முன்னாற் சொன்ன 1 பெருங்குழி என்பது மா(நிலத்திற்கு) இன்னொரு பெயர் என்று இப்பொழுது புரிந்துகொள்ளலாம்.) ஏற்கனவே 0BAA என்ற குறிப்புள்ளிகொண்ட குறியீடு இதைக் குறிப்பதாக L2/15-078 குறிக்கும். அதில் also denotes the fraction one twentieth = maa என்று மட்டும் விளக்கம் எழுதியிருப்பார். கூடவே it also denotes one-twentieth of a veli marked in 11FE1 என்றும், it also denotes 0ne-fifth of a KunRi etai என்று குறிப்பு  எழுதலாம். அப்பொழுதுதான் அதன்பொருள் முழுமைபெறும்.

அதெப்படி மாவிற்குப் பகர உயிர்மெய்யெழுத்து குறியானது?- என்பது அடுத்தகேள்வி. இதற்கு எளிதானவிடை இளம்பூரணர் உரையிலுண்டு. தொல்காப்பிய எழுத்ததிகாரம் 14 ஆம் நூற்பா மகரவடிவம் குறிப்பதாய் “உட்பெறு புள்ளி உருவாகும்மே” எனப்பேசும். (வடிவங்கள் பற்றித் தொல்காப்பியம் பேசுவது பெரிதுங் குறைச்சல். பேசிய சிலவற்றில் இந்த மகரம் ஒன்று.) ”இது, பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று” என்பார் இளம்பூரணர். “புறத்துப்பெறும் புள்ளியொடு உள்ளாற்பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம் (அஃதின்மை பகரத்திற்கு வடிவாம்.)”. இதன்பொருள் வேறு ஒன்றுமில்லை. பகரத்திற்குள் இக்காலக் colon ஐப் போட்டால் ம் என்றாகுமாம். இம்மகரத்தின் உள்ளேயிருக்கும் புள்ளி நாளாவட்டத்திற் குறுங்கோடாக மாறிக் கி.மு.3-இற் கிடைத்த தமிழியெழுத்தில் பகரவடிவின் ஒரு கையிற் குறுக்கே வருவதாய் மாறும். ஆகத் தமிழிக்கும் முந்திய வடிவத்தை தொல்காப்பியர் இங்கு நமக்கு அடையாளங் காட்டுகிறார். (இதைப் படித்தபிறகும் தொல்காப்பியர் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டென்பாரை ஒருகாலும் கடைத்தேற்ற முடியாது. தொல்காப்பியர்காலம் உறுதியாக கி.மு.400-500க்கும் முற்பட்டதே.)

பெருமியின் மகரம் தமிழி மகரத்தினின்றும் வேறுபட்டாலும் சரியான உறவுகாட்டும். தமிழி, பெருமிக்கும் முந்தியதென்பதை மகரவடிவங் கொண்டே சொல்லிவிட முடியும். (ஆனாலும் சிலர் தமிழியைத் தமிழ்பிராமி என்று சொல்லவே அடம்பிடிப்பர்.) மகரத்திற்கான பழங்குறியீட்டைப் பலரும் மாவிற்குக் ஈடாகப் பயன்படுகையில் ஏதோ காரணத்தால் உட்புள்ளி தவிர்த்திருக்கிறார். எனவே தமிழியின் மகரம் (புள்ளி வளைவான) வளர்ச்சி மாற்றம் பெறும்போதே இன்னொரு பக்கம் மாவெனும் அளவைக்குறியீடு தன் உட்புள்ளியை இழந்திருக்கிறது. இந்த அவதானம் மா எனும் அளவையும் குறியீடும் தொல்காப்பியர் காலத்திலே இருந்ததை உறுதியாய் எண்ண வைக்கிறது.

மாவிற்கு அடுத்த பெரிய அளவை வேலியாகும். 1வேலி = 20 மா = 2000 குழி = 50*40 தண்டச்சதுரம் = 550*440 சதுர ஆ.அடிகள் = 242000 சதுர ஆ.அடிகள். வேலியென்பது வேல்கொண்டு வரம்பு கட்டிய இடத்தைக் குறிக்கும். இன்றுங்கூட கற்றூண்களையும் தடிகளையும், முள்மரங்களையும் நிலவரம்பில் நாம் நடுவதைக் காணலாம். மர வேலூன்றப் பெற்றதால் வேலியானது. ஈரெழுத்துச் சொல்லான வேலிக்குக் குறியீடு தேவையா? - என்பது ஓர்ந்துபார்க்க வேண்டியதாகும். லிகரத்தை எழுதி பிள்ளையார்சுழி சேர்ப்பது சரியா என்று விளங்கவில்லை. இக்குறியீடு எப்படி எழுந்ததென்ற வரலாறும் புரியவில்லை. வேலியை வரையறை செய்தபின் நிலமென்ற குறிப்பு வேலியென்றும் பொருள்கொள்ளப்பட்டது. மா(நிலம்) மா(வேலி) என்றும் ஆயிற்று. [மாவேலி என்றும் சேரலத்தார் தங்கள் மூதாதை அரசனான மாவலியாதனை (மகாபலி - பிருங்கலாதன் என்னும் பிரகலாதனின் பெயரன்) பலுக்கற்றிரிவில் அழைப்பர். மாவலி வேறு; மா(வேலி) வேறு.]

அன்புடன்,
இராம.கி.

Wednesday, July 08, 2015

பழந்தமிழர் அளவைகள் - 3

முன்னாற் சொன்ன குறுந்தொலை வாய்ப்பாட்டிற்குங் கீழே ஒரு நுண்தொலை வாய்ப்பாடும் உண்டு. அதில் ஒரேயொரு இணையைத் தவிர மற்றவற்றை, நுணுகியதற்கும் நுணுகியதை, வேறொரு பொழுதிற் பார்ப்போம்.

மேலே 1 விரற்கிடையென்பதை இற்றை அளவையில் 11/16 அங்குலத்தொடு ஒப்பிட்டோம். 1 விரற்கிடைக்குச் சமமாக, ”குறுக்குவாட்டில் அடுக்கும் 8 நெல்லரிசிகள்” என்றும், ”நெடுக்குவாட்டில் அடுக்கும்  4 நெல்லரிசிகள்” என்றும் அந்த நுண்தொலை வாய்ப்பாட்டில் ஓரிணை சொல்வர். ”பஞ்சமரபு” வாச்சியமரபில், பிண்டவியலில் வங்கியத்தின் அளவையைச் சொல்லும் 27 ஆம் வெண்பாவில் நெல்லரிசியின் நெடுக்குவாட்டு அளவே எல்லோருக்கும் அவதானமாகும் (observation). (என் முந்தைய நீட்டளவைத் தொடரின் 2-ஆம்பகுதியில் இதைப்பற்றிப் பேசினேன்.) இங்கோ மேற்சொன்ன நீட்டளவை நுண்தொலை வாய்ப்பாட்டில், நெல்லரிசியின் குறுக்கைப் பேசுவதாய்ச் சுற்றிவளைத்து ஊகிக்கிறோம்.

இந்நெல்லரிசியின் குறுக்கு = 11/128 அங்குலம் = 0.0859375 அங்குலம் = 2.182813 mm என்றும், நெடுக்கு 11/64 அங்குலம் = 0.171875 அங்குலம்= 4.365625 mm என்றும் அமையும்.

பஞ்சமரபு காட்டும் இந்நெல்லரிசி மலையில் விளையும் ஒருவகை விதப்புக் குறுவரிசியாகும் (short paddy variety raised in hilly tracts. தோரைக்கதிருங் கூட அளவிற் குறுகியதே.). இதைத் துவர்> துவரை>தோரை என்றும், துவரஞ்சம்பா என்றும் அதன் செந்நிறத்தைக் காரணங்காட்டிச் சொல்வர். (சிவந்த பருப்பை இந்தக் காலத்தில் துவரம்பருப்பு என்கிறோம் அல்லவா?.) தெலுங்கில் இதே நெல்லைத் தோர என்று சொல்வர். ”கோடின் வித்திய குறுங்கதிர்த் தோரை” என்பது மதுரைக்காஞ்சி 287ஆம் அடி. செந்நெல்லரிசிகளான சாலியும், தோரையும் ஒன்றோ, வேறோவெனும் மயக்கம் சங்க இலக்கியம் படிப்போருக்குண்டு. சாலி, தோரை அரிசிகளின் சிவப்பைவிட இன்னும் அடர்ந்தது கவுணியரிசியின் கருஞ்சிவப்பாகும்.

தோரையோடு மூங்கிலரிசியும் (bamboo seed) சாலியும், கவுணியும் தென்கிழக்காசியாவிற் கிடைப்பவை. இந்நாடுகளுக்கு அடிக்கடி போய்வரும் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தார் இவற்றை வாங்கி வந்து தம் வீட்டு விருந்துகளிற் பயன்படுத்துவர். (இப்பொழுது கவுணியரிசி சென்னையிலும் கிடைக்கிறது. ஆனால் தென்கிழக்கு ஆசியாவிற் கிடைப்பதுபோல் அவ்வளவு சுவைபட அமையாது சவச்சவ என்றிருக்கும்.) சேரலத்திலும் கூடச் செந்நெற் புழக்கமுண்டு. செந்நெற்சத்து உடம்பிற்கு நல்லதென்று ஊட்டு விதப்பாளர் (nutrition specialists) கூறுவர். தமிழகத்தில் மட்டுமே தங்கி வேறிடஞ் செல்லோருக்கே செந்நெல்லரிசி என்பது பழக்கமில்லாததாகும். பட்டை தீட்டிய வெள்ளரிசி நம்மை அப்படி ஆட்கொண்டு வேறொன்றை அறியவிடாது செய்கிறது.

பெரும்பாலான கூலங்களுக்கு நீளம், அகலம், திண்ண(thickness)மென்ற 3 அளவுகளுண்டு. பழந்தோரையின் திண்ணம் தெரியாததால், அகலத்திற்குச் சமமாய்க் கொள்ள, இந்த ஊன்றோடு (assumption) தோரையரிசி வடிவத்தை ஒரு நெட்டை இழிகோளமாய் (prolate ellipsoid) உருவகிக்கலாம். (இந்தக் கட்டுரை படிப்போர் இழிகோளம் என்ற பெயரைக் கண்டு தடுமாறவேண்டாம். தட்டை வட்டமான ellipse என்பதை இழிவட்டமென்று சொல்லலாம். இழிதல்/இளிதல் என்ற வினை ellipse-வடிவ வாயின் இதழ் நீட்சியைக் குறிக்கும். ஒருகாலத்தில் ellipse ஐப் பலரும் நீள்வட்டமென்றார். ஓர்ந்து பார்த்தாற் கூட்டுச்சொற்களுக்குப் பொருள்நீளும் வகையில், ”நீளை” விட ”இழி” (= short; குறைந்த) என்னும் முன்னொட்டு இன்னும் பொருந்தும்.

இதே கருத்தில் ”இழிகோளம்” என்பது ellipsoid ஐச் சுட்டும். ”மூவச்சு இழிகோளம்” என்பது tri-axial ellipsoid-ஐயும், சப்பை இழிகோளம் என்பது oblate ellipsoid-ஐயும், நெட்டை இழிகோளம் என்பது prolate ellipsoid-ஐயும் குறிக்கும். (சரியாகச் சொன்னால் அரிசியை மூவச்சு இழிகோளமாய்த் தான் உருவகிக்கவேண்டும்.) நெட்டை இழிகோளத்திற்கு ஒரு மேவிய (major) அச்சும், சமமான இரு நுணவ (minor) அச்சுகளுமுண்டு. இவ்வுருவகத்தின்படி 1 தோரையரிசியின் பருமன் = [4/3)]*(பை)*[(2.182813/2)^2]*[2.182813/2] Cu.mm. = 5.9178215 Cu.mm ஆகும். [இங்கே பை ~ 22/7 ஆகும்.]

பஞ்சமரபுச் செய்திக்குத் துணையாயும், நெட்டை இழிகோள உருவகத்திற்கு அணைவாயும், குடிலரின் அருத்தசாற்றத்தில், (Kaudilya arthashastra) 2-ஆம் பொத்தகம் 20 ஆம் அதிகாயத்தில் 4ஆம் வரியில் ”அஷ்டௌ யவமத்யா: அங்குலம்” என்றுவரும். (அதித்தல்/அதிகுதல் = கூடிவருதல்; கூடிவருவது அதிகாயம். இதை இன்னொரு வகையில் அதிகாரமென்றுஞ் சொல்கிறோம். இரண்டும் நல்ல தமிழே. வடவர் பலுக்கில் அதிகாயம் அத்யாயமாகும்.)

[அருத்த சாற்றம் என்று சொன்னவுடன் ஒருசிலர் எகிறக் கூடும். தமிழாய்வில் அருத்தசாற்றமா? இந்த இராம.கி.க்கு மறை கழண்டு போயிற்றா? - என்றெல்லாம் எண்ணக்கூடும். அதெல்லாம் ஒன்றும் இல்லை. நம்மிற் சிலர் இரு விதமான எக்கிய - extreme - நிலைபாடுகளைக் கடைப்பிடிக்கிறோம். ஒன்று வடமொழி இலக்கிய இலக்கணங்களைத் தலைமேற் தூக்கிவைத்துக் கொண்டு அவையே முதலென்று மனம் பேதலித்துக் கூத்தாடுவது. அல்லது வடமொழி இலக்கிய இலக்கணங்களைத் தூக்கியடித்து உதைத்து ”நான் சங்க இலக்கியம், தொல்காப்பியம் மட்டுமே பார்ப்பேனாக்கும்” என்று மட்டையடிப்பது. மொழியாய்வில் இப்படியான இரு எக்கிய நிலைகளுமே தவறாகும். (நம் திருக்குறளுக்கும் அருத்தசாற்றத்திற்கும் ஒப்புமை, வேறுபாடு உண்டு தெரியுமோ?)

நம்முடைய குறிக்கோள் தமிழ், தமிழர் மரபை அறிவியல்வழி ஆய்வுசெய்வது தான். அதற்கு வடமொழி இலக்கிய, இலக்கணங்களின் வழி ஆய்வுப் பொறியும், புரிதலும் கிடைக்குமாயின் அதை நாடத்தான் வேண்டும். நாமொன்றும் வடபுலத்திலிருந்து விலகியிருந்த/விலகியிருக்கும் தீவினர் அல்லர். அவர் நம்மை விட்டுப் பிரிந்த உயர்வகுப்பினரும் அல்லர். வெள்ளையைக் கண்டு வெட்கப்படும் முட்டாள் தனத்தை நாம் விட்டொழிக்கவேண்டும். இந்த “யவமத்ய” என்ற அர்த்தசாற்றக் குறிப்பு தமிழ்மரபை வெளிக் காட்டப் பயன்படும் ஒரு செய்தியாகும். இப்படிப் பல செய்திகள் வடமொழி ஆவணங்களிலுண்டு.]

யவ = பார்லி எனப் பெரும்பாலோர் மொழிபெயர்ப்பர். அது முற்றுஞ் சரியல்ல. இரானிலிருந்து ஆப்கனிசுத்தான்வழி ஆரியர் இந்தியா நுழைகையில், இருக்குவேத காலத்தில், பார்லியைக் குறித்துப் பேசியிருக்கலாம். துணைக்கண்டம் நுழைந்தபின் பார்லி கிடைப்பது கடினமாகி, ”யவ” என்ற சொல் மற்ற கூலங்களையும் குறிக்கத்தொடங்கியது இதை மோனியர் வில்லியம்சு அகரமுதலி பதிவுசெய்யும்.

இந்தோனேசிய யாவத்தீவு அங்குள்ள யா மரங்களாலும் (Hard Wickia binata) யக்கர்களாலும் (யா = கருஞ்சிவப்பு; யக்கர்>நக்கர் = கருஞ்சிவப்பர், எனவே கருப்பர். நக்கவரம் = கருப்பர் வதியும் தீவு. நக்கர் என்ற சொல் பற்றிப் பேச இது இடமில்லை. உலகுக்கே நக்கர் என்ற சொல்லைக் கொடுத்ததுபற்றி ஒரு தனிக்கட்டுரையே எழுதவேண்டும்.) பெயர்பெற்றது. யாவா/யாவ/யவ என்ற திரிவுகள் தமிழ், பாகதம் வழியாகச் சங்கதம், மேலைமொழிகளுக்குப் போயின. யாவாத்தீவு, ஜாவாத்தீவென்றுஞ் சொல்வர். யாவாவிற் கிடைத்த செவ்வரிசியைச் சாலியென்பர். சாலியால் அதற்குச் சாலித்தீவு என்ற பெயருமுண்டு. (சேரலத்திலும் சாலியூரெனுங் கடற்கரைத் துறைமுகம் உண்டு. இதை Nelcynda என்று மேலையர் கூறுவர்.)

யாவாவிற் கிடைத்த அரிசியை யாவ என்றே சங்கதத்தில் அழைத்தார். ”யாவ” என்பது அரிசியைக் குறிக்காவிடில் தென்புல, வடபுல அளவைகளுக்கு இடையே ஒருங்கமைப்பு குலைந்துபோகும். சங்க காலத்தில் தமிழகம்-மகதம் இடையே வணிகவுறவுகள் மிகுதி. மகதமும் தமிழகத்தைப்போல் அரிசியுணவு கொண்ட நாடுதான். எனவே ”யாவ” என்பது யாவா அரிசியைக் குறித்ததெனக் கொள்வதே இங்கு சாலவும் பயன்தரும். அதுவென்ன “மத்ய”? - என்பது அடுத்தகேள்வி. யாவ அரிசியின் குறுக்கே, அதன் நடுவிற்றான், மதிக்கத் தக்க நுணவ அச்சு (measurable minor axis) கிடைக்குமென, ”யவமத்ய = தோரை நடுவம்” என்று குடிலர் குறித்திருக்கிறார். எனவே 1 விரற்கிடை = 8 தோரை நடுவம் என்பதே சரியான வாய்ப்பாடு. இதை அருத்தசாற்றம் வழியாகத்தான் அறிகிறோம்.

L2/15-078 முன்னீட்டில் 11FD1 என்ற குறிப்புள்ளியில் நெல்லெனும் குறியீட்டைக் கொடுத்துள்ளார். வாய்ப்பாடுகளில் ஓர் அடிப்படையலகு (Fundamental Unit) அவதானமாகவும் (observation), அதற்கு மேற்பட்டவை வரையறைகளாகவும் (definitions) இருக்கும். நீட்டளவை வாய்ப்பாட்டில் "நெல்" என்பது ஓர் அடிப்படையலகோ, அவதானமோ அல்ல. விரற்கிடையே அடிப்படையாகும். நுண்தொலை வாய்ப்பாட்டிலும் தோரையரிசியின் குறுக்களவு வரையறையாகவே வரும். "தோரை" என்பது இங்கு நெல்லைக் குறிக்கவில்லை. நம் வாய்ப்பாட்டில் அரிசியையே குறிக்கிறது. [”யவமத்ய”எனும் குடிலர் குறிப்பில், இது தொலிபோர்த்திய நெல்லைக்குறித்தால் பொருண்மை ஓரிமை (uniformity in meaning) ஏற்படாது.] ”நெல்லெடை” நிறுத்தளவில், வேறு வரையறைகளுக்குத் துணைபோகும். கணக்கதிகாரம் என்பதை மேலாகப் படித்து, நெல் என்பது நீட்டளவை, முகத்தளவை, நிறுத்தலளவை என எல்லாவற்றையுங் குறிப்பதாய்க் கொண்டு ஒருங்குறியில் இடமொதுக்குவதோ, குறியீடு தருவதோ புரிதற் பிழையாகும். (Nel is not a length unit or a volumetric unit or a weight unit.) ஆழ்ந்து ஓர்ந்து பாருங்கள். நெல்லில் இருக்கும் உமி அறிவியல் பூருவமான, திருப்பித் திருப்பிச் செய்யக் கூடிய அளவீடுகளைப் பெறவிடாது. அரிசியும், உமியும் சேர்ந்த கூட்டுப்பொருளான நெல் எந்த அளவையையுஞ் சரியாய்ச் செய்யவிடாது.  

”நெல்” என்பது வெறும் எண்ணிக்கையாகவும், மணியெனும் பொருளைக் குறிக்கவும் மட்டுமே, இதுநாள் வரை தமிழ்மரபிற் பயன்பட்டது. 360 நெல்களெனில் அது எண்ணிக்கையும், கடுகு, எள்ளு, நெல், அரிசி, பயறு, காணம், மிளகு, துவரை என்று சொல்லுகையில் விதப்பான மணிகளும் பேசப்படுகின்றன. இவை தவிர நெல்லென்பது வேறு அளவைகளுக்குப் பயன்பட்டதில்லை. தோரைக்குறுக்கு என்பது நீட்டளவை அலகாகலாம்; நெல்லெடை என்பது நிறுத்தளவை அலகாகலாம். தோரைக்குறுக்கும், நெல்லெடையும், symbols of weight, length and area என்ற வகைப்பாட்டில் வரவேண்டியவை. முகத்தளவையின் கீழ் நெல்லெனும் தனி அலகு வரவேண்டியதில்லை.

1 சுவடு/செவிடு/சவடு = 360 நெல் (இச்சொற்றிரிவிலும் புரிதற்பிழை உள்ளது. அதைக் கீழே பார்ப்போம்.) என்பது எண்ணிக்கையும், தனிநெற் பருமனுஞ் சேர்ந்து பெருக்கிவரும் அவதானமாகும். அது அடிப்படை வரையறையல்ல. இந்த இணையை முகத்தல் அளவையைப் பேசும்போது விளக்குவேன். தவிர, நெல்லென்பது ஈரெழுத்துச் சொல்லாகும். இச்சொற்களுக்கு சுருக்கம் (abbreviation) பயில்வது தமிழ் ஆவண அச்சடிப்பிலும் இணையப் பரிமாற்றத்திலும் எதற்கு உதவுமென்று புரியவில்லை. நெல்லிற்கு ஒரு குறியீடுள்ளதென்று கல்வெட்டறிஞர் கூறி ஏற்றுக்கொள்வது என்னைப் பொறுத்தவரை தேவையில்லை. ஓர்ந்துபார்த்தால் 11FD1 என்ற குறிப்புள்ளி தேவையில்லாதது, இன்னொரு கருத்தை இங்கு சொல்லவேண்டும். 1 நெல் = 8 எள் என்று கணக்கதிகாரம் காட்டுவதால், சிலர் இதுவும் நீட்டளவை என்பர். அதுவுந் தவறு.

குடிலரைக் காட்டி தோரைக் குறுக்கை அடையாளங் காட்டியது போலவே, எள்ளிற்கும் அடையாளங் காட்டலாம். குடிலர் 1 தோரைக்குறுக்கு = 8 பேன்குறுக்கு என்று இன்னொரு சமனைக்காட்டுவார். வடக்கே பேனை வைத்து தோரைக் குறுக்கை வரையறுத்தது போல், தெற்கே எள்குறுக்கை வைத்து தோரைக் குறுக்கினை வரையறுப்பார். தவிர ”இந்த எள்ளின் வகைப்பாடெது? இதன் அடிப்படை அளவைகளென்ன?” என்று பல அறிவியற் கேள்விகள் எழுகின்றன. இவற்றிற்கு மறுமொழிகாணத் தேவையான தரவுகள் தமிழிற் கிடையா. ஓர்ந்துபார்த்தால், 1 நெல் = 8 எள்ளென்பது குறைப்பட்ட வரையறையாகும் (deficient definition). இதை வைத்து ஒரு வாய்ப்பாட்டை எழுப்பமுடியாது. தவிர நெல்லுக்குக் குறிப்புள்ளி கொடுத்தால், அப்புறம் கணக்கதிகாரஞ் சொல்லும் கடுகு, எள்ளு, நெல், அரிசி, பயறு, காணம், மிளகு, துவரை ஆகிய மணிகளுக்கும் குறிப்புள்ளி கொடுக்கிறோமா? இல்லையே? மற்றவைக்கின்றி நெல்லுக்கு மட்டுங் குறியீடு கொடுப்பது ஒருவகை ஓரவஞ்சனையேயாகும். அறிவியற்படி இதை ஒதுக்குவதே முறை. என்னைக் கேட்டால் L2/15-078 முன்னீட்டில் 11FD1 குறிப்புள்ளியைத் தவிர்க்கலாம். (முகத்தளவை விளக்கையில் இன்னுஞ் சொல்வேன்.)

”மேற்கூறிய தோரையரிசி என்னவகை, அளவீடுகளென்ன, இந்த அவதானம் எப்படிக் கிடைத்தது?” என்ற விவரங்கள் நம்மிடமில்லை. (”பொருந்தலிற் கிடைத்த சங்ககால நெல்லின் அளவுகளென்ன?” எனப் பேரா.கா.இராசன் இதுவரை அறிவிக்கவில்லை.) குறிப்பிட்ட பஞ்சமரபு நெல்லரிசியின் நீளம், விட்டத்தின் இருமடங்கென்ற செய்திபார்த்தால் வேளாணறிவின்படி குறுநெல்லரிசியைப் பேசுகிறோம் என்பது பொருள். IR 8, IR 20, IR 50 அரிசிகளினும் இது குறுகித்தெரிகிறது. நீட்டளவை வாய்ப்பாடெழுந்த காலத்திற் மற்ற சம்பாநெல்கள் உருவாகவில்லையோ என்னவோ?. இக்காலப் பாசுமதி, பொன்னி அரிசிகளின் l/b வகுதம் (ratio) 3 க்கும் மேலானது. இற்றையரிசிகள் 2500 ஆண்டுகளாய் ஈனியல் (genetics) வழி தேர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டு, l/b, மணியின் எடை போன்ற அளவீடுகள் இற்றைவகை நெல்களுக்குப் பெருகியுள்ளன. இவற்றைப் பார்க்க பழந்தோரையரிசி பூஞ்சையாகவே (primitive) இருந்திருக்கிறது.

இற்றை நெல்மணிகளுக்கும் நீளம், விட்டமென்று பேசாது, நீளம், அகலம், திண்ணமென்ற (thickness) மூன்றையும் பேசுவார். (http://www.agriculturejournal.org/volume1number1/study-of-mechanical-properties-of-popular-paddy-varieties-of-tamil-nadu-relevant-to-development-of-mini-paddy-thresher/) காட்டாக

ASD 18 என்ற நெல்மணி நீ 8.60 அ. 2.59 தி. 2.13 என்றும்,
ADT 36 என்ற நெல்மணி நீ 7.79, அ. 2.50, தி 2.00 என்றும்,
IR 20 என்ற நெல்மணி   நீ 8.20, அ. 2.70, தி 2.00 என்றுஞ் சொல்வர். இதேமுறையில்
தோரை நெல்மணி  நீ. 4.37, அ.2.18, தி. 2.18 என்றுஞ் சொல்லலாம்.

ஆயிரம் நெல்மணிகளின் எடை ASD 18 க்கு 21.86 gm, ADT 36 க்கு 20.61 gm, IR 20 க்கு 18.97 gm என்றுஞ் சொல்வர். இந்நெல்மணிகளுக்கும், அரிசிகளுக்கும் மெய்த்திணிவும் (true density), மொத்தைத்திணிவும் (bulk density), சரிவுக்கோணமும் (angle of repose), ஆயிரம் நெல்மணி எடையுமெனப் பல்வேறு குறிப்புகளை மேலேயுள்ள கட்டுரைமூலம் தெரிந்துகொள்ளலாம்.

எல்லா நெல்லரிசிகளின் மெய்த்திணிவு பெரும்பாலும் 1.452 g/ml ஆகவும், குட்டை உருள் நெல்மணிகளின் (short cylindrical paddy grains) மெய்த்திணிவு 1.182 g/ml ஆகவும், மற்றவை 1.224 g/ml ஆகவும் சொல்வர். நிரவலாகப் பார்த்தால், நெல்லெடையில் 22% உமி, 78% அரிசியாகும். அரிசியின் மொத்தைத்திணிவு 0.777–0.847 g/ml ஆகவும், நெல்லின் மொத்தைத்திணிவு 0.563–0.642 g/ml ஆகவும், அரிசியின் புரைமை (porosity) 41–46% ஆகவும், நெல்லின் புரைமை 46–54% ஆகவுஞ் சொல்வர், மொத்தைத்திணிவும், புரைமையும், நெல்மணியின் உருவத்தால் (நீ/அ. வீதம் - l/b ratio, மணியின் உருள்மை-cylindericality) மாறுபடும். உருள்மை கூடும்போது, மொத்தைத்திணிவுங் கூடிப் புரைமை குறையும். அரிசியின் நிரவற் சரிவுக்கோணத்தை (Average angle of repose) 37.5° என்றும், நெல்லின் நிரவற் சரிவுக்கோணத்தை 36.5° என்றுஞ் சொல்வர். மேற்கூறிய விவரங்களால், தோரையரிசியின் பருமனை, 1000 நெல்லெடை, மொத்தைத் திணிவு ஆகியவற்றை நாம் மதிப்பிட முடியும்.

ஏற்கனவே ஒரு தோரையரிசியின் பருமனை நெட்டை இழிகோளமாய் உருவகஞ் செய்து நாம் அளவிட்டதால், இப்பொழுது
1000 பழம் தோரையரிசியின் பருமன் = 5917.8215 Cu.mm. = 5.9178215 ml. என்று காணலாம். இப்பருமனோடு அரிசியின் மெய்த்திணிவைப் பெருக்கினால்,
1000 பழம் தோரையரிசியின் எடை 1.452*5.9178215 = 8.5926768 gm என்று கிடைக்கும். உமியின் எடை எல்லின் எடையில் 22% என்பதால்,  ,
1000 பழம் தோரைநெல்லின் எடை = 8.5926768/(0.78) = 11.016252 gm என்றாகும். (3 இற்றைநெல்களோடு ஒப்பிட்டால், 2500 ஆண்டு விளைச்சலில் பலமடங்கு ஈனியற்தேர்வு நடந்தது புரியும்.)
1000 பழம் தோரைநெல்லின் உமியெடை = 11.016252*0.22 = 2.4235754 gm என்றாகும்.
1000 பழம் தோரைநெல்லின் பருமன் = 11.016252/1.182 = 9.3200102 ml என்றாகும்.
1000 பழம் தோரைநெல் உமியின் பருமன் =  9.3200102 - 5.9178215 = 3.4021887 ml என்று வந்துசேரும். (இதில் உமிக்கும் அரிசிக்கும் இடையிலுள்ள காற்றின் பருமனுஞ் சேரும்.)  .

தோரைநெல் உமியின் மெய்த்திணிவு = 2.4235754/3.4021887 = 0.7123577 gm/ml.

இப்பொழுது ஒரு பெருவிரல் சதுரமும், ஒரு தோரையுயரமுங் கொண்ட பேழையில் [(11/8)/(11/128)]^2 = 256 நெல்களை நெடுக்காய்க் குத்தவைத்து அடைக்கலாம். பேழையுள் 256 குச்சில்கள் (குச்சு = குறுவறை; குறுவறையினுஞ் சிறியது குச்சிலெனும் cell) என்றுகொண்டால் ஒவ்வொன்றிலும் ஒரு தோரைநெல் அடைக்கலாம். இதன்மூலம் தோரைநெல்லின் அடைப்புத்திணிவைக் (tapped density) கணிக்கலாம். ஒரு குச்சிலிலடங்கும் நெற்பருமன் =  5.9178215 Cu.mm என்றும், குச்சிற்பருமன் = 2.182813*2.182813*2.182813 = 10.400389 Cu.mm என்றுமமையும். 1 தோரைநெல்லை ஒற்றைக் குச்சிலில் எளிதே அடைக்கலாமென்பதால், அடைப்புத்திணிவு 11.016252*1000/10.400389 = 1.0592154 gm/ml ஆகும். இதிலிருந்து மொத்தைத்திணிவறிய இன்னொரு விதயம் காணவேண்டும்.

ஒரு கூடையிலிருப்பதைச் சாய்ப்பதிலோ, கூடையில் ஓட்டையிட்டு அரிசியைக் கீழே கொட்டவைப்பதிலோ, நெற்குவியல் சட்டென நகராது தேக்கங்காட்டும். வேதிப்பொறியாளர் அடைப்புத்திணிவிற்கும் மொத்தைத்திணிவிற்குமான வேறுபாட்டை, அடைப்புத்திணிவின் விழுக்காடாக்கி, கார்காட்டுகை (Carr index) என்று சொல்லி, நுண்பொடிகளின் நகர்ச்சி காட்டும் குறிகளை (flowability indicators for fine powders) வெளிப்படுத்துவர். 20-25% க்குமேல் கார்காட்டுகை கொண்ட பொடிகளும் (powders), குருணைகளும் (granules) எளிதில் நகரா. (Materials having Carr Index >20 to 25 % are classified as non-free-flowing). குருணைக்கும் (granule) பெரிதான நெல்மணியின் கார்காட்டுகை 39-46.5%க்குள் இருக்கும். இப்பொருள்கள் “பிடித்துவைத்த பிள்ளையாராய்” குத்துக்கல்லாய் நிற்கும். கார்காட்டுகைக் (Carr index) குறியின் விளிம்புமதிப்பின் (boundary limits) படி, தோரையின் கார்காட்டுகை 39.0% எனில், தோரையின் மொத்தைத் திணிவு = 1.0592154*(1-0..39) = 0.6461214 ஆகவும், 46.5% எனில், மொத்தைத்திணிவு 0.5666802 என்றுமாகும். இக்கால நெற்பண்புகளை பூஞ்சைத் (primitive) தோரைநெல் அப்படியே பெற்றதை இம்மதிப்பீடுகள் உறுதிசெய்கின்றன.  

காரணமின்றி நெல்மணிகளைப் பற்றி விரிவாய் நான் மேலே பேசவில்லை. அதேபொழுது பழந்தமிழன் நெல்லை மட்டுமே கூலமாய்ப் புழங்கியதாய்ப் பொருளில்லை. இற்றைநிலையில் நெல்லையொட்டி பல அறிவியல், நுட்பியற்செய்திகள் நமக்குத்தெரியும். எனவே நம்முடைய நீட்டல், பரப்பு, முகத்தல் வாய்ப்பாடுகளைச் சரிபார்க்க, புரிந்துகொள்ள, ஒத்திசைவைக் கணக்கிட, நீட்சிகளை மதிப்பிட, நெற் செய்திகள் வாய்ப்பாகும். அறிவியலின் வாயிலாகப் பழையதைப் புரிந்துகொள்ள நெல்மணி பயன்படும். அவ்வளவுதான். அதேபொழுது, மற்ற சிறுதானியங்களான தினை, சாமை, வரகு, பனிவரகு, கேப்பை, கம்பு, சோளம், குதிரைவாலி போன்றவையும் பல்வேறு காலங்களில் இங்கு உணவுக்கூலங்களாய் எழுந்திருக்கும் என்று நினைவிற் கொள்ளவேண்டும். தவிரப் பல்வேறு பயறு வகைகளும் தமிழகத்தில் விளைவிக்கப் பட்டிருக்கும். பல்வேறு மணிகளின்வழி தமிழர் பட்டறிவு கூடியதால் நம் அளவைகள் ஏற்பட்டன. ஓரினத்தின் மக்கள் தொகை கூடக்கூட அளவைகளின் முகன்மை பெருகும்.

தமிழ்க்குமுகாயத்தில் வேளாண்மைதான் நம் பரப்பளவைக்கும் முகத்தளவைக்கும் வித்திட்டிருக்கிறது. இந்த L2/15-078 என்ற முன்னீட்டிற்கும் வேளாண்மையே அடிப்படை. அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாது (without acknowledging that) வெறும் வடிவங்களை மட்டும் பார்த்தால் நாம் பெருத்த பிழையே செய்வோம். Encoding is not just looking at glyphs and assigning codepoints. It is also not like user-derived short-hand codes. It is much more than that. It has "understanding" as the base and "standardization" as the goal. We need to know "what is the basis for our measures?" It was agriculture per se.  

அன்புடன்,
இராம.கி.

Tuesday, July 07, 2015

பழந்தமிழர் அளவைகள் - 2

ஒத்திசைவு என்னவென்று ஒருமுடிவு கொள்ளாத பெரும் வல்லுநரெல்லாம் ஆடத்தயங்கும் புலம் தமிழரின் அளவைப் புலமாகும். “இளங்கன்று பயம் அறியாது” என்பதாய் நாலைந்து சீராக்சுப் படிகளை வைத்து, மனம்போல் உகந்து, பட்டியலிட்டு, ”தமிழளவை உலகைத் தான் அளந்துவிட்ட” உரிமை முழக்கத்தோடு L2/15-078 இன் பிழை தொடங்குகிறது. செந்தரமென்பது அப்படிச் செய்யப்படுவதில்லை. அதிற் பலரின் கூட்டுழைப்பு பொதிந்திருக்கவேண்டும். ஒரு பரிமானத்தைச் சேர்ந்த தமிழர் நீட்டளவை புரியாது இரு பரிமானப் பரப்பளவை, முப் பரிமான முகத்தளவை போன்றவைகளுக்குப் போக முடியாது. வடபுலம், தென்புலம் ஆகிய இரண்டிற்கும் பொதுவான குறுந்தொலை வாய்ப்பாடு, இந்திய நிரவல் (average) மாந்தனின் விரல், சாண், முழம் ஆகிய உறுப்பளவுகளையும், முழு ஆள் உயரத்தையும், கோல், கயிறெனும் நில அளவுகளையுங் குறித்தெழுந்தது. Digit, thumb, span, cubit, yard, furlong எனும் ஆங்கில அளவைகளும் கூட இப்படித்தான் மாந்த அளவை, நில அளவைகளிற் தொடங்கின. இரு முறைகளுக்கும் இடையே விதப்பான வேறுபாடுகள் உண்டு. இது தெரியாமல் (L2/12-231, L2/15-078 முன்னீடுகளின் ஆசிரியரையுஞ் சேர்த்துப்) பலருங் குழம்பியிருக்கிறார்.]

பல்வேறு கட்டுக்களை (cases) உராய்ந்து பார்த்து அறிந்துகொண்ட, உள்ளார்ந்த ஒத்திசைவோடு (internal consistency) கூடிய, தமிழர் நீட்டளவை வாய்ப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தலாம்.

குறுந்தொலை வாய்ப்பாடு:

1 விரற்கிடை = 11/16 அங்குலம் அல்லது inch  
2 விரற்கிடை = 1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 1 சாண் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 ஆ.அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 ஆ.அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 ஆ.அடி
2 கோல் = 1 பெருங்கோல் (= தண்டம்) = 11 ஆ.அடி
8 பெருங்கோல் (= தண்டம்) = 1 கயிறு

மேலேயுள்ள வாய்ப்பாட்டில் 1 விரற்கிடையென்பது அடிப்படையலகாகும். (விரற்கிடையைச் சங்கதத்தில் அங்குலி/அங்குலம் என்பர்.) கோலென்பது முகனையலகு. சாணை அடியென்றும் (=பாதம்) அக்காலத்திற் குறித்தார். கல்வெட்டுக்களைப் படிக்கையிற் தமிழர் மரபிற் சாணென்றாலும், அடி என்றாலும் மதிப்பு 8 1/4 அங்குலந்தான். (கொடுமுடியாரின் ஆய்வுப்பட்ட நூலைப் படியுங்கள்.) இக் காலத்தில் இதற்குமாறாக 1 அடி = 12 அங்குலம்/inch என ஆங்கிலரைப் பின்பற்றிச் சொல்கிறோம். தொல்லாவணங்களைப் படிக்கையிற் பலருக்கும் இதிற் குழப்பம் வரும். ஆங்கிலர் அளவைகளைக் கையாள்கையில் வேறு சொற்களைப் புழங்காது பழஞ்சொற்களான அடி, அங்குலத்தையே மாற்றுப் பொருளிற் புழங்கியது இப்படியொரு குழப்பத்தைத் தந்தது. இதைத்தவிர்க்க ஆங்கிலரடியை ஆ.அடியென்றும் ஆங்கில inch ஐ அங்குலம் என்றுங் குறிக்கிறேன். (எனவே நம் விரற்கிடை சங்கதத்தில் அங்குலியாகும்.)

குறுந்தொலை வாய்ப்பாட்டிற்கப்புறம் நெடுந்தொலை வாய்ப்பாட்டைப் பார்ப்போம். இதில் வரும் கூப்பீடு, காதம், யோசனை போன்ற அளவீடுகள் ஒருவர் இன்னொருவரைக் கூப்பிடுகையிற் கேட்கும் ஒலித்தொலைவை வைத்தேயெழுந்தன. இதில் 3 வெவ்வேறு வளர்ச்சிகள் இருந்திருக்கலாமென ஊகிக்கிறோம். கி.மு.1000க்கும் முந்திய முதற்சங்க காலத்திலிருந்த, நெடுந்தொலை வாய்ப்பாடு

500 சிறுகோல்.= 15 5/8 கயிறு = 1 கூப்பீடு = 1375 ஆ.அடி = 0.2604175 மைல் = 0.4190899 கி.மீ (இவ்வாய்ப்பாட்டைத் தமிழிலக்கிய வாயிலாகவும் உன்னிப்பின் வாயிலாகவும் அறிகிறோம்.)
4 கூப்பீடு = 1 காதம் = 5500 ஆ.அடி = 1.044444 மைல் = 1.676261 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 22000 ஆ.அடி = 4.16666 மைல் = 6.7050435 கி.மீ.

என்றும், கி.மு.1000-300 என்ற காலகட்டத்தில் (அதற்கிணையான வடபுலத்துச் சனபதங்கள், மோரியர் ஆட்சிக்காலத்தில்) ஆன இடைச்சங்க காலத்திலும் அதற்குச் சற்று பின்னும்

500 கோல் = 31 1/4 கயிறு = 1 கூப்பீடு = 2750 ஆ.அடி = 0.520835 மைல் = 0.8381798 கி.மீ (இந்த வாய்ப்பாடே வடபுலத்தில் நிலைத்திருக்கலாம், பின்னால் கி.பி.400க்கு அப்புறம் பல்லவர், சோழப் பேரரசில் வடமரபாதிக்கங் கூடிப் பின் தெற்கிற்புகுந்து நிலைபெற்றிருக்கலாம். பல்லவர், சோழர், பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுக்களில் இதையும் இதற்கு அடுத்ததையும் பயின்றிருக்கிறார்.)
4 கூப்பீடு = 1 காதம் = 11000 ஆ.அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 44000 ஆ.அடி = 8.33333 மைல் = 13.4100875 கி.மீ

என்றும், கி.மு.500-கி.பி.200 ஐச் சேர்ந்த கடைச்சங்க காலத்தில்

500 பெருங்கோல் (= தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 ஆ.அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ (கி.பி.200 வரையிலும் இந்த வாய்ப்பாடு பயன்பாட்டில் இருந்து சிச்சிறிதாய் மாறிப் பல்லவராட்சியில் 1 கூப்பீடு = 500 கோல் என்ற வடபுல வாய்ப்பாட்டிற்குத் தமிழகமும் மாறியிருக்கலாம். அதேபொழுது, 1 கூப்பீடு = 500 பெருங்கோல் என்பது முற்றிலும் தமிழகத்தில் வழக்கிழந்ததாய்த் தெரியவில்லை. இரு வேறுபட்ட நடைமுறைகள் தமிழகத்தில் அருகருகே இருந்திருக்கலாம். எவ்வழக்கு பெரும்பாலும் தமிழகத்திலிருந்தது என்பதற்குத் தரவுகளில்லை. யாரும் இதைக் கண்டுபிடித்ததாயும் நான் அறிந்தேனில்லை.)
4 கூப்பீடு = 1 காதம் = 22000 ஆ.அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 ஆ.அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

என்றுமாயின. இந்திய வடமேற்கில் நடந்த படையெடுப்புக்களால் இரானிய, கிரேக்க, இசுலாமிய உறவுகள் கூடியபின், இந்தியநீட்டளவையின் அடிப்படை 1 விரற்கிடை 3/4 அங்குலமென ஆங்கிலர் digit-ற்குச் சமமாகவும், 1 சாண் = 9 அங்குலம், 1 கோல் = 6 ஆ.அடி என்றும் இந்தியவடபுலத்தில் மாறியது. (முதற் கோணல் முற்றுங்கோணல் என்பார். 1 சாண் = 8 1/4 அங்குலம் என்பதற்கு மாறாய் 1 சாண் = 9 அங்குலம் என்று பலரும் இன்றெழுதுகிறார்.) நம் பழைய மரபுகள் தொல்லாய்வருக்கன்றி மற்றோருக்குச் சிறிதும் விளங்காது போயின. இணையமெங்கும் வெட்டியொட்டிச் சீரழியும் பழக்கம் பெருகி, ஏராள வலைத் தளங்கள் மேலையர் நீட்டளவையே இந்தியமுறையென விளம்பும் நிலைக்கு வந்திருக்கின்றன. இது என்னவொரு சோகம் தெரியுமோ? நமக்கு அறச்சீற்றம் வேண்டாமா? மேலையர்க்குக் காவடிதூக்கும் வேலை நமக்கெதற்கு? L2/12-231, L2/15-078 எனும் ஒருங்குறி முன்னீடுகளும் அதையே செய்கின்றன. இந்த முன்னீட்டை ஏற்கத் தயங்க இதுவுமொரு காரணம். இந்தியாவின் நிரவல் (average) மாந்தன் காசுமீர், பஞ்சாபைத் தவிர்த்து, வேறிடங்களில் 6 ஆ.அடி உயரமானவனா ? இந்திய அரசின் புள்ளிவிவரங்களைப் பாருங்கள்.  

ஆங்கிலக் கணக்கிற் பயன்படும் வாய்ப்பாடு

1 Digit = 3/4 inch
2 Digits = 1 Thumb
12 Digits = 6 Thumb = 1 Span = 9 inches
2 Spans = 1 Cubit = 1 1/2 foot
2 Cubit = 1 Yard = 3 foot
220 Yards = 1 Furlong
1760 Yards = 8 Furlongs = 1 Mile = 5280 feet.

என்றே அமையும். இவ்வளவைகள் அப்படியே வியக்கத்தக்க அளவில் நம் பழந்தமிழ் நீட்டளவைகளுக்கு இணைகோடாய்க் [நினைவிருக்கட்டும், இணைகோடுகள்; மதிப்பில் ஒன்றானவையல்ல.] காட்சியளிக்கின்றன. ஆங்கிலரின் digit - உம் நம் விரற்கிடையும் அடிப்படையில் ஒரே பொருளும், தொலைவிற் சற்று வேறுபட்டுங் காட்சியளிக்கின்றன. நம் விரற்கிடை 11/16 அங்குலம், அவருடைய digit 12/16 அங்குலம். இவ்வேறுபாடு மற்ற அளவைகளையும் அந்தந்தப்படி மாற்றுகிறது. [பின்னால் Digit, Thumb போன்ற அளவைகள் ஆங்கிலவாய்ப்பாட்டிற் புழங்காது தவிர்க்கப்பட்டு, inch -ஏ பெரிதும் புழங்கியது. முடிவில் digit, thumb போன்றவை அங்கு மறைந்தேபோயின.] நம் சாண், அவருடைய span க்கு இணையானது, [சாணெனும் அளவு மாறி ஆ.அடி-foot எனும் சொல் நிலைத்துப் பின்னால் 12 inch - க்குச் சமமாய் ஆங்கிலர் கணக்கிலானது பற்றி மேலே சொன்னேன்.] நம் முழம், அவருடைய cubitக்கு அப்படியே இணையானது, [இவ்வளவை ஆங்கிலர் புழக்கத்தில் மறைந்தே போய், ஆ.அடிக்கு அப்புறம் yard - என்பதே பின்னாற் புழக்கத்தில் நிலைத்தது.] நம் சிறுகோல், அவருடைய yard -யைப் போலிருக்கிறது, (நம் சிறுகோலை முகலாயர் ஆட்சியில் வடபுலத்திற் கசமென்று அழைத்தார். பின்னால் மேலையர் இடையூறு இங்கு வந்தபின், இது 36 அங்குலமாய்ப் புரிந்துகொள்ளப் பட்டது. இன்றைக்கு யாருமே 1 கெஜம் = 3 ஆ.அடி = 36 அங்குலம் என்று தான் சொல்வர்.

[yard "measure of length," O.E. gerd (Mercian), gierd (W.Saxon) "rod, stick, measure of length," from W.Gmc. *gazdijo, from P.Gmc. *gazdaz "stick, rod" (cf. O.S. gerda, O.Fris. ierde, Du. gard "rod;" O.H.G. garta, Ger. gerte "switch, twig," O.N. gaddr "spike, sting, nail"), from PIE *gherdh- "staff, pole" (cf. L. hasta "shaft, staff"). In O.E. it was originally a land measure of roughly 5 meters (a length later called rod, pole or perch). Modern measure of "three feet" is attested from 1377 (earlier rough equivalent was the ell of 45 inches, and the verge). In M.E., the word also was a euphemism for "penis" (cf. "Love's Labour's Lost," V.ii.676). Slang meaning "one hundred dollars" first attested 1926, Amer.Eng. Yardstick is 1816. The nautical yard-arm (1553) retains the original sense of "stick." In 19c. British naval custom, it was permissible to begin drinking when the sun was over the yard-arm.] கோலெனும் சொல்லோடு தொடர்புடைய கோடென்ற சொல்லும் தமிழிற் கிளை, கொம்பு, கம்புகளைக் குறிக்கும். இங்கேயுள்ள மேலைச்சொற்களுக்கும் நம் கோட்டிற்கும் உள்ள பொருளிணை வியக்க வைக்கிறது.

நம் கூப்பீடு, தென்புல வாய்ப்பாட்டின் படி, ஆங்கிலரின் mile -க்கு ஒப்பானது. வடபுல வாய்ப்பாட்டின்படி கிட்டத்தட்ட 1/2 மைலுக்கொப்பானது. [mile என்னும் ஆங்கிலச்சொல்லின் சொற்பிறப்பை இங்கு ஓர்ந்துபார்க்கலாம். O.E. mil, from W.Gmc. *milja, from L. mila "thousands," pl. of mille "a thousand" (neuter plural was mistaken in Gmc. as fem. sing.). Ancient Roman mile was 1,000 double paces (one step with each foot), for about 4,860 feet, but there were many local variants and a modern statute mile is about 400 feet longer. In Germany, Holland, and Scandinavia in the Middle Ages, the L. word was applied arbitrarily to the ancient Gmc. rasta, a measure of from 3.25 to 6 English miles. Mile-a-minute (adj.) is attested from 1957; milestone is from 1746.]

மேலேயுள்ள விரற்கிடை, சாண், முழம், சிறுகோல், கூப்பீடு என்ற ஐந்தும் digit, span, cubit, yard, mile என்பவையோடு, ஒன்றிற்கொன்று கருத்தளவில் இணை ஆனவை. அதேபொழுது விரற்கிடை, digit என்பவை 1/16 inch அளவு வேறு பட்டதால், மற்றவையும் அதற்கிணங்க மதிப்பளவில் மாறிப்போயின. மேலையர் வாய்ப்பாடும், இந்திய வாய்ப்பாடுகளும், அடிப்படையில் ஓராள் உயரத்தில் வேறுபடும். ஆங்கிலருக்கு இது 6 ஆ.அடி; நமக்கோ 5 1/2 ஆ.அடி. (ஆங்கில அளவைகள் அமெரிக்க ஒன்றித்த நாடுகளிலும், இன்னும் சில நாடுகளிலும் மட்டுமே இன்று புழங்குகின்றன. இந்தியாவைச் சேர்த்த உலகின் பெரும்பாலான நாடுகள் மீட்டரைப்பயிலும் பிரெஞ்சு மெட்ரிக்முறைக்கு மாறிவிட்டன. எனவே இந்தியாவின் இற்றைநிலையில் ஆ.அடியும் 3 ஆங்கல அடிக் கெஜமுங்கூட வரலாற்றலகுகளே.) 6 ஆ.அடிப் பழக்கம் கிரேக்க, உரோமரைப் பின்தொடர்ந்து ஏற்பட்டது. கிரேக்க, உரோமர் எகிப்தியரையோ, அல்லது சுமேரிய, பாபிலோனியரையோ பின்பற்றியிருக்கலாம். இது ஆய்வுசெய்யவேண்டிய புலனம். இத்தகைய இணைகளிருப்பதைப் பார்த்தால், கூப்பீடு, காதம், யோசனை போன்றவற்றிலேற்பட்ட தொலைவுவேறுபாடு நம்மூரிற் பின்னாலெழுந்ததோவென எண்ணவேண்டியுள்ளது,

இவ்விடத்தில் ஓர் இடைவிலகுச் செய்தியைச் சொல்லவேண்டும். புவியின் சுற்றளவை அன்றே துல்லியமாய்க் கணித்துப் புகழ்பெற்ற இந்தியக்கணிதர் ஆரியபட்டா, மரபுசார்ந்த இந்திய வாய்ப்பாடுகளில் இருந்தும் வேறுபட்டு, ஓராளுயரத்தை 5 ஆ.அடியாக்கி, அதை நரனென்று சொல்லி [நரலுகிறவன் (= ஓசையிடுகிறவன்) நரன்], விரற்கிடை, முழம், கோல், யோசனை என்னும் அளவைகளைத் தன் நூலான ஆர்யபட்டியத்தில் வேறுவகையிற் குறிப்பார். ஓராளுயரத்தில் வேறுபடும் ஆரியபட்டாவின் வாய்ப்பாடு, வெளிப்பார்வைக்கு இந்திய வடபுல வாய்ப்பாடு போலவே தோற்றமளிக்கும்.. ஆரியபட்டியத்தின் காலம் கி.பி.499 என்றே பலருஞ்சொல்வார். இந்தப் பொழுதிற்றான் தமிழகஞ் சேர்த்த இந்தியாவெங்கணும் வடபுலவாய்ப்பாடு வழக்கூன்றியது. குறிப்பாகப் பல்லவராட்சி நம்மூரில் இதை வழக்கிற் கொணர்ந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் தென்புல வாய்ப்பாடு நம்மூர்ப்புழக்கத்திற் குறைந்துபோயிற்று.

ஆரியபட்டாவின் குறுந்தொலை  வாய்ப்பாடு

1 விரற்கிடை = 10/16 அங்குலம்
24 விரற்கிடை = 1 முழம் = 1.1/4 ஆ.அடி
4 முழம் = 1 கோல் (நரன்) = 5 ஆ.அடி

ஆரியபட்டாவின் நெடுந்தொலை வாய்ப்பாடு :

8000 கோல் = 1 யோசனை = 40000 ஆ.அடி = 7.5757568 மைல் = 12.191665 கி.மீ

என்றுமாகும்.. ஆக மூன்றுவித வாய்ப்பாடுகளை இந்திய நடைமுறை சந்தித்திருக்கிறது. அவை யாவன:

ஆரியபட்டாவின் வாய்ப்பாடு: 1 விரற்கிடை = 10/16 அங்குலம்; 1 கோல் = 5 ஆ.அடி,
இந்திய வாய்ப்பாடு:         1 விரற்கிடை = 11/16 அங்குலம்; 1 கோல் = 5 1/2 ஆ.அடி,
ஆங்கிலர் வாய்ப்பாடு:       1 விரற்கிடை = 12/16 அங்குலம்; 1 கோல் = 6 ஆ.அடி

இவற்றில் எதுசரி, எதுசரியில்லை என்பது பேச்சில்லை. எல்லாமே சரியான, விதப்பான பார்வைகள்தான். ”எது நமக்கு ஏந்து? எது நம் வழக்கு? என்ன குறிக்கோளில் நாம் குறியேற்றஞ் செய்கிறோம்?” என்பவை முகனையாகும். ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கான பின்ன, சின்ன முன்னீட்டில், நீட்டளவைக்காக நம்மூரைச்சேர்ந்த விரற்கிடை, சாண், முழம், சிறுகோல், கூப்பீடு, காதம், யோசனை போன்றவற்றைப் பதிவுசெய்யாது வேற்றாரின் கெஜத்தைக் கொண்டுபோய் L2/15-078 இற் பதிவது எம்போன்றோருக்கு வேடிக்கையாகிறது. நமக்கிது தேவையா? ”ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே” என்ற சொலவடை உங்களுக்கு நினைவிற்கு வரவில்லையா? நம்வீட்டு மா மரத்தைப் பேணாது ஊரார் மரத்தைப் பேணமுற்படுவதில் நமக்கென்ன அக்கறை? தமிழ்க் குறியேற்றத்தில் தானே நாம் கவனஞ் செலுத்தவேண்டும்? என்ன சொல்கிறீர்கள்?

கெஜமென்று அலகு ஒரு தமிழாவணத்தில் வந்தால், அது அச்சிற் தேவையாகில், அதை ஆவணத்தின் அடியிற் குறிப்பிட்டோ, தனியே (ஒருங்குறிச் சேர்த்தியம் ஒப்புத்தராத) எழுத்துருவைச் செய்து Private User Area (PUA) வில் வைத்தோ, இதைச் செய்யமுடியாதா? (இணையவழிப் பரிமாற்றத்திற்கு இம்முறை உதவாமற்போகலாம்.) அன்றி Y என்ற ஆங்கிலக்குறியீடு இருக்கக்கூடாதா? கெஜத்தை இங்கேகொணர்வதால் நமக்கென்ன பயன்? தவிர மேலையரின் yardக்கும் (கெஜ என்பது yard இன் பாரசீக, உருதுவழி மொழிபெயர்ப்பு; வேறொன்றுமில்லை.) நம்முடைய சிறுகோலுக்கும் இடையுள்ள வேறுபாட்டை மேலே காட்டினேன். தொன்மை பேணல் என்பது இம்முன்னீட்டின் குறிக்கோளெனில் கெஜம் பேணுவதைக் காட்டிலும் சிறுகோலைப் பேணுவது முகன்மையன்றோ? கெஜத்தைக் கையாளவே வேண்டாமென நான் சொல்லவில்லை. கெஜத்தைக் கையாள மாற்றுவழிகள் உள்ளன என்றும், அதற்கென 11FDF எனும் தனிக்குறிப்புள்ளி தேவையில்லையென்றுஞ் சொல்கிறேன்.. .

வெறும் பொத்தக அறிவை மட்டுமே வைத்துப் பாதிக்கிணறு தாண்டி, ஒருங்குறிச்சேர்த்தியத்திற்குக் கொடுத்த L2/15-078 எனும் இம்முன்னீட்டில் தவிர்க்க/மாற்ற/மறுக்க வேண்டிய குறியீடுகள் பலவுள்ளன. எங்களைப் போன்றோருக்குக் காதுகுத்தி நெடுநாட்களாகிவிட்டன. ”ஒருங்குறி, ஒருங்குறி” என்று சொல்லி இந்த முன்னீட்டின் ஆதரவாளர் எம்மைப் பயமுறுத்தாது இத்தகைய அந்தரச் சிக்கல்களை எப்படிக் கையாள்வதென ஓர்வது நல்லது. பல்வேறு குறியீடுகள் பற்றி அடுத்துத் தொடர்வேன்.

அன்புடன்,
இராம.கி.

Monday, July 06, 2015

பழந்தமிழர் அளவைகள் - 1

ஒருங்குறியிற் தமிழளவைகள், பின்னங்கள், சுருக்கங்கள் பற்றிய குறியீடுகளை அரங்கேற்றவேண்டி 2012 இல், ஒருங்குறிச்சேர்த்தியத்திற்கு முனைவர் சிரீரமணசர்மா என்பார் முன்னீடளித்தார் (L2/12-231). தனிவட்டத்திற் சுற்றிவந்து தற்செயலாக 2014 இல் தமிழார்வலர் கவனத்திற்குள்ளான அது சில மாற்றங்களின்பின் இற்றைப்பட்டு (L2/15-078) ஐந்தாம்நிலை ஒப்புகைச் செலுத்தத்திற்காக (approval process; பார்க்க http://unicode.org/alloc/ISOStages.html) ஒருங்குறிச் சேர்த்திய உறுப்பினர்களின் வாக்குகளை நாடி (ballotting) அனைத்துநாட்டுத் தரப்பாட்டு ஒருங்கியத்தில் (International Standard Organization) காத்து நிற்கிறது. முன்னீட்டு வரைவு மாற்றங்களுக்கான (Proposed Draft Amendment - PDAM) இவ்வாக்கெடுப்பில் 2015 சூலை 20-இற்குள் ஒருங்குறிச்சேர்த்திய உறுப்பினரான தமிழக அரசு தன்கருத்தைச் சொல்லி அதை வைத்துக்கொண்டு இந்திய அரசு வாக்களிக்கவேண்டும்.

(ஒருங்குறி முன்னீடுகள் இப்படிச் சிவனேயென்று தனியாய்ச்சுற்றுவதோ, பெரும்பான்மைத் தமிழர் அதைக் கிஞ்சித்துங் கண்டுகொள்ளாதிருப்பதோ, 10 கோடித் தமிழ்மக்களின் தலைவிதியை எங்கோ எவரோ சற்றும் தொடர்பேயின்றி நிருணயிப்பதோ, இங்கு வழமையானதே. 44 ஆண்டுகள் இருகட்சிப் பங்காளிப் பிணக்குகளிற் சிக்கித் தமிழர் பந்தாடப்பட்டதால், உருப்படியான தமிழ்விதயங்களை நாம்தான் கவனிக்கவேயில்லையே?. தமிழர் தூங்கும்நேரத்தில் அவரைத் தாங்கியுள்ள இவ்வுலகம் அசையாது இருக்குமா, என்ன? “உள்ளூர்ச் சண்டையில் தமிழர் அடித்துச் சாவட்டும்; அதற்குள் தமிழுக்கு இந்திய அரசின் CDAC துணையோடு ஒருங்குறியில் தேவநாகரிச் சட்டகத்தால் அங்குமிங்கும் நகரமுடியாதபடிக் கட்டங் கட்டுவோம்; தமிழரை நமக்குள் செரித்துக்காட்டுவோம்” என்று 1980களின் முடிவிலிருந்தே சிலர் முயல்வதும், இச்சிக்கல்கள் பற்றி சில நூறு தமிழார்வலரே கவலுறுவதும் நடக்கிறது. இப்பொழுது ஏற்பட்டிருப்பது சிக்கல்களில் இன்னொன்று. இச்சிக்கல்கள் புரியாத் தமிழறிஞர் பலராவர். கணி, இணையம் போன்ற நுட்பியல் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள முயலாது, மேடைப்பேச்சிலும், பட்டிமன்றங்களிலும் கவியரங்குகளிலுமே காலத்தைக் கழித்துத் தமிழின் புகழ்பாடிக் கொண்டிருப்போருக்கு இது புரியாது தான்.)

மேற்சொன்ன முன்னீட்டிற் பிழைகண்ட ஆர்வலர், ”அருள்கூர்ந்து இப்பிழைகளைப் பதிவுசெய்யாதீர். ஒருங்குறிச் சேர்த்தியத்தின் நிலையுறுதிப் பொள்ளிகையாற் (stability policy.) பின்னாலிவற்றை மாற்ற இயலாது போகலாம். இது நுட்பியலாரே முடிவு செய்து ஏற்றுக்கொள்ளும் விதயமல்ல. அருள் கூர்ந்து துறைவல்லுநரோடு பேசுங்கள்” என தமிழிணையக் கல்விக்கழகத்திற்கு அறிவுறுத்தினார். ஆனால் இம்முன்னீட்டின் பின்னிருந்தோரோ, அலுவலணுக்கம் தந்த மதர்ப்பினால் துறையறிஞரோடு உரையாடாது, ”இப்படி மறுபார்வை விழைவோர் ஒருங்குறிச் சேர்த்திய நடைமுறைகளை அறியாத் தற்குறிகள்” எனத்தூற்றி, முன்னீட்டைச்சுற்றிப் பெருங்கற்சுவரெழுப்பினார் (stonewall). முன்னீட்டை வழிநடத்தும் நுட்பியலாரே இப்படி உள்ளார்ந்த நுண்ணரசியலோடு ஆடியதால், ஓராண்டாய் ஏதேதோ முயன்றும், முடிவிலொன்றும் நடவாநிலையில், தமிழக அரசதிகாரிகளையும் அரசியலாரையும் அணுகவேண்டியதாயிற்று.

[ஒருங்குறியையொட்டித் தமிழிணையக் கல்விக்கழகம் (த.இ.க.க.) இதுவரை நடந்துகொண்ட தோரணை எம்போன்றோருக்கு ஏமாற்றத்தையே அளித்தது. அது அரசாங்கத்தின் சார்பானதா? அன்றி ஒரு சில கணிஞரின் விதப்பு நிகழ்ப்பிற்கு (specific agenda) வழிசெய்கிறதா? - என்று சொல்லமுடியாது இருந்தோம். த.இ.க.க.விடம் உருப்படியான நோக்கமுமில்லை (vision); சரியான ஆக்கமுமில்லை (mission); தமிழுக்கான அடிப்படைத் திட்டமுமில்லை. நிதி வலுவுமில்லை. ”எங்கவீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்”.என்றே இதுவரை அது நடந்துகொண்டது. அண்மையிற் த.இ.க.க.வின் நெறியாண்மையில் (directorship) ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதியவைகள் நடக்கும்போல் தெரிகிறது. இம்மாற்றத்தை வரவேற்போம். த.இ.க.க.வோடு இனிச்சேர்ந்து செயலாற்றமுடியுமாவென்று பார்க்கவேண்டும்.] L2/15-078 எனும் முன்னீட்டைத் தடுத்துநிறுத்திச் சுணக்குவதற்குள் பாலத்திற்கடியில் ஆற்றுநீர் வெள்ளமாய் ஓடியது. (இக்கட்டுரை படிப்போர் இணையத்திற் கிடைக்கும் அம்முன்னீட்டையும் பாருங்கள்.

http://www.unicode.org/L2/L2012/12231-tamil-fractions-symbols-proposal.pdf
http://www.unicode.org/L2/L2013/13047-tamil-frac-rev.pdf
http://std.dkuug.dk/JTC1/SC2/WG2/docs/n4462.pdf
http://www.unicode.org/L2/L2014/14048-srilanka-comments.pdf
http://www.unicode.org/L2/L2015/15078-tamil.pdf

இதுபோக சிரீரமணசர்மா மலையாளத்திற்கும், கிரந்தத்திற்கும் பின்னக் குறியீடுகள் பற்றி முன்னீடு கொடுத்திருக்கிறார். இவற்றிற்கும், தமிழுக்கும் தொடர்புள்ளது. தமிழுக்கு ஒப்புதல் கொடுக்கு முன் இவற்றையும் படிக்க வேண்டும். அந்தந்த எழுத்து வரிசையின் விதப்புமை (specificity) பார்க்காது எல்லாம் ஒன்றுபோற் கருதக்கூடாது.

http://www.unicode.org/L2/L2013/13076-malayalam-fractions.pdf
http://www.unicode.org/L2/L2014/14218-grantha-tamil-numeral.pdf
http://www.unicode.org/L2/L2015/15085-grantha-fractions.pdf

இக்கட்டுரையைப் படிக்கும்போது இவையெல்லாவற்றையும் படிப்பது ஏந்தாக இருக்கும்.) தமிழின் தொல்லாவணங்களைக் காக்க, பின்னங்களையும் சின்னங்களையும் ஒருங்குறியிற் பதிவுசெய்ய வேண்டுமென்பதில் எமக்கு எந்த மாறுபாடுமில்லை. ஆனாற் தமிழ்மரபின்படி,

1. பின்னங்கள், சின்னங்களுக்கான கிறுவங்களின் (graphemes) அடிக்கூறுகள் என்ன (parts of typography)? இவற்றின் வரையறைகளென்ன? இந்தக் கருத்துக்களும், வடிவங்களும் (காட்டாக, ”முந்திரி”) ஒன்றிற்கொன்று பொருந்தியவையா?

2. தமிழெழுத்து அடிக்கூறுகளை இன்னும் நாம் செந்தரப்படுத்தவில்லை. தமிழ் வார்ப்புகளின்/எழுத்துருக்களின் சிக்கல்களுக்கு அதுவே காரணம். தமிழெழுத்து அடிக்கூற்றியலின் (typography of Tamil letters) ஒரு கேள்வி:. பல தமிழெழுத்துக்களைச் சிறு கோட்டிற்தொடங்கி மூக்கொன்றைப் போட்டுப் பின் வளைக்கிறோமே, அம்மூக்கின் முகன்மை நமக்குத் தெரியுமா? அதுதான் தமிழெழுத்தின் அடையாளமா?] அக்கூறுகளின் பொருட்பாடுகளென்ன? எதை வைத்து “ஒரு குறியீட்டின் அடையாளம் இது”வெனும் முடிவிற்கு வருகிறார்? (காட்டு: எண் 3 ம் தமிழ் 3 - உம்)

3. இக்கிறுவங்களின் வரலாறுகளென்ன? கால நடப்புகளும் (occurrence over time), வட்டார வேறுபாடுகளும் (regional variations) நமக்குக் கிடைத்தனவா? அவற்றின் தொகுதியெங்கே? (அங்குமிங்கும் இதுவரை தொகுத்தனவெல்லாம் இரண்டாம் வழித் தொகுதிகளே. நம்மூர் ஆய்வுலகில் இதுவொரு சிக்கல். இரண்டாம்வழி ஆய்வூன்றுகளை மூலமாய்க் காட்டி ஏமாற்றுவது ஏராளம் நடக்கிறது. 1848, 1859, 1862, 1878, 1880, 1906, 1928, 1938, 1950, 1958, 1968 எனப் பல்வேறு வெளியீடுகளைக் காட்டுவதாலேயே இவை சான்றுபெற்றதாய் ஆகிவிடா. இவற்றைத் துறையறிஞர் பார்த்தாரா? - தெரியாது. அகர எழுத்து, மகர எழுத்துப் போன்றவை எப்படி வந்தனவென்பதற்கு 2500 ஆண்டுச் சான்றுகளுண்டு. ”அரைக்காலின் வடிவம்” எப்படி வந்தென்று ஆணித்தரமாய்ச் சொல்லமுடியுமா?

4. இவற்றின் பட்டகைகள் (facts), அரங்கு (range) பற்றி ஓரிரு பொத்தக, பதிவுச்சான்றுகள் போதுமா? முன்நடந்த ஆய்வுகளென்ன? பதிவுகளெங்கே? அவை இம்முன்னீட்டிற் பதிவுசெய்யப் பட்டனவா?

5. இவற்றின் மாற்றுக்கீற்றுக்கள் (allographs) யாவை? எல்லாவற்றையும் பார்த்தாயிற்றா? துறையறிஞர் கருத்தென்ன?

6. அடிக்கூறுகள் ஒழுங்காய்ப் புலப்படா வண்ணம், மாற்றுக்கீற்றுகள் குழம்பிக்கிடக்கின்றனவே? ஒன்று இன்னொன்றைப்போல் மாறிக்கிடக்கிறதே? (காட்டாக ஒரு வடிவத்தைக்காட்டி அது நாலுமாவா? அரைமாவா? - எப்படி உறுதியாய்ச் சொல்வது? அரைமாவும் அரைவீசமும் எப்படி வேறுபடுகின்றன? காலும் அரையும் கூட்டிவரும் முக்கால் வடிவும், காலும் அரையும் பெருக்கி வரும் அரைக்கால் வடிவும் எப்படி வடிவக்கூறுகளால் மாறுபட்டன? முக்குறுணிக்கும் மும்மாவிற்கும் ஒரே வடிவமிருந்தும் இருவேறு குறிப்புள்ளிகள் கொடுத்திருக்கிறாரே, அது எப்படி?) 55 குறியீடுகளிற் படியெடுப்புப் பிழைகளே (copy error) நடந்ததில்லையா? இவற்றிலொரு ஒழுங்குவேண்டாமா? இப்பிழைகளைக் களைந்திருக்கிறோமா?

7. இக்கிறுவங்களில் எவற்றிற்குத் தனிக்குறியேற்றம் தேவை? எவற்றிற்குத் தேவையில்லை? தள்ளியவை ஆவணங்களில் வந்தால் எப்படிக் கையாளலாம்? அதற்கான பொள்ளிகை (policy) என்ன?

8. இக்கிறுவங்களில் எவற்றை வார்ப்புப் பகரத்தால் அல்லது எழுந்துருப் பகரத்தாற் (font substitution) கையாளலாம்? எவற்றை அப்படிக் கையாளமுடியாது? கையாளக்கூடாது?

9. மாற்றுக்கீற்றுகளிலொன்றை எப்படிக் குறியேற்றத்திற் தேர்வு செய்கிறோம்? அத்தேர்விற்கான அறிவியல் வழிமுறைகளுண்டா? இக்கீற்றுக்களுக்கான பருவெண் அலசல்கள் (frequency analyses) எங்கேணும் நடந்தனவா? அன்றி இவையெல்லாம் முன்னீட்டாளரின் அகவயத் தெரிவுகளா (subjective selection)? தேர்வுப் பொள்ளிகை எது? விதிவிலக்கை எப்படிக் கையாளுவோம்?

10. சிரீரமண சர்மா தமிழுக்கு மட்டுமன்றி பங்காளி எழுத்துமுறைகளான மலையாளம், கிரந்தத்திலும் பின்ன, சின்னக் குறியீட்டிற்கான முன்னீடுகள் கொடுத்திருக்கிறார். தமிழ்க்குறியீடுகளின் இயலுமை, ஒப்புமை, தொடர்பைப் பற்றி அவற்றிலும் பேசுகிறார். (பின்ன, சின்னம் பற்றிய) அவருடைய எல்லா முன்னீடுகளையும் ஒருங்கே படித்துப் புரிந்து அடையாளங்கண்டு நாம் பரிந்துரைசெய்ய வேண்டாமா? வெறுமே தமிழ்முன்னீட்டை மட்டும் படித்துக் கருத்துச்சொல்வது ஆய்வில் ஒருபக்கப் பார்வையாகாதா? இது சரியான நெறிமுறையா? அல்லது தமிழில் இக்குறியீடுகளை ஏற்றிவிட்டால், மற்றமொழிக் குறியேற்றங்களைச் செய்வது எளிதெனும் தந்திரவுத்தியா?

11. இன்னும் நிறையப் பின்ன, சின்னக் குறியீடுகள் தமிழிலிருப்பதாகப் பலருஞ் சொல்கிறாரே, எப்படிக் கையாள்வது?. காலவோட்டத்தில் நுணும வெளிப்பாடு (minmum occurrence over time) பார்க்க வேண்டாமா? தனியார் குழூஉக்குறிகள் பொதிந்த ஆவணங்களில் நுணுகி வெளிப்படுஞ் சின்னங்களையெல்லாம் வரைமுறையின்றித் தமிழர்க்குப் பொதுவென்று குறியேற்றப்போனால், அதற்கு வரம்பேது?

12. ஒவ்வொருமுறையும் யாரோவொரு தனியார் தமிழெழுத்தைத் தாக்கும்படி ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு முன்னீடு கொடுப்பதும், அதைச் சுற்றிவளைத்து மறுபார்வையர் கேள்வியுற்று எதிர்வினை ஆற்றுவதும், முடிவில் இரு சாராரும் கண்ணாமூச்சி விளையாடுவதும் என 4, 5 ஆண்டுகளாய் அடுத்தடுத்துக் குறியேற்றச் சிக்கல்கள் எழுகின்றனவே? ஏனிப்படி? இதைத் தமிழரின் ஒற்றுமைக்குறைச்சல் என்றெண்ணாது ”இவ்வேலைகளைச் செய்வதற்கு அமைப்பு வரிதியான உள்ளூர் முனைப்புகள் நம்மிடம் எவையிருக்கின்றன? அதற்கான விதிமுறைகள் என்ன? - என்று பார்க்க வேண்டாமா?

என்ற அடிப்படைக்கேள்விகள் எழுகின்றன. இம்முன்னீட்டை உடனிருந்து ஒழுங்குசெய்தவரோ, பின்ன, சின்னங்கள் பற்றிய நுட்பியற்புரிதலை எவரும் உணரவிடாவளவிற்குச் செயற்பட்டார்; முன்னீட்டிற் கொடுத்த 55 குறியீடுகளை விருப்புவெறுப்பன்றி மறுபார்வை செய்யவிடாவளவிற்குத் தடைசெய்தார். பார்ப்பனர்/பார்ப்பனரெதிர்ப்பு எனவிளம்பிச் சிக்கலைத் திருப்பிவிடவும் முயன்றார். மாற்றுக்கருத்தை அணைத்து, இடையாட்டங்களைப் ஒழுங்குசெய்து நகரவிடாவளவிற்கு வேலைசெய்தார்: எழுத்துப்பெயர்ப்பெனும் (transliteration) விளிம்புவளைக்குள்ளே முன்னீட்டைச் சிக்கவைத்து அதைப் பற்றியே பலரையும் பேசவைத்து, ”அதுமட்டுமே சிக்கல்” என ஒருங்குறிச்சேர்த்தியத்தை நம்பவைத்தார்; உள்ளடக்கம் (content) பற்றி யாரையும் பேசவிடாமற் திசைதிருப்பி, ”ஒருங்குறி என்பது கம்பசூத்திரம்; நாங்களதிற் கொம்பன்கள்; முன்னிடுபவரோ ஒருங்குறியிற் பெருங் கில்லாடி; எனவே நாட்டுப்புறங்களாகிய நீவீர் வாய்மூடிச் சொன்னவிடத்திற் கையெழுத்திடுங்கள்” என முன்முடிவுகளோடு அரட்டி அதிகாரம் பண்ணினார்; ஆங்கிலேயத் துரைமாரும் துரைசானியரும் இவரிடம் பாடங்கேட்கவேண்டும் போலும். அப்படியொரு ஆணவம், அவக்கரம், கரவு எம்மிடங் காட்டப்பட்டது, நெடுங்காலம் நம்பி உடன்பழகியவரே இப்படி நடந்துகொண்டதால் எமக்கு வருத்தமே மிஞ்சியது. So power corrupts.

”அச்சடிப்பு ஈடேற்றமே (printed salvation) போதும்” என்றெண்ணி, 19ஆம் நூற்றாண்டிலோ, 20ஆம் நூற்றாண்டிலோ எழுந்த பொத்தகங்களின் சீராக்சுப் (Xerox) படிகளை வைத்துக்கொண்டு, ஒரு முன்னீட்டாளர் விண்ணப்பிக்கிறார். உருப்படியான எந்தப் பயனாளரிடம் கருத்துக்கேளாது, தமக்குத் தெரிந்தோரிடம் 10 தலையாட்டி மின்னஞ்சல்கள் பெற்று, தொடர்பேயில்லா 2,3 மின்மடற்குழுக்களிற் பேசியதாய்க்காட்டி, அக்குழுக்களின் அமைதியை ”ஆமாஞ்சாமி” யாக்கி, தமிழிணையக் கல்விக்கழகத்திடம் நன்னடத்தைச் சான்றைப் பெற்றுவிட்டால், எக்கீற்றத்தையும் தமிழுக்கேற்றும் ஒருங்குறிச் சேர்த்திய நடைமுறையை நினைத்தால் நமக்குத் திகைப்பாகத்தான் உள்ளது.

கிட்டத்தட்ட (இலண்டனிலிருந்த) அந்தக்காலக் கிழக்கிந்தியக் கும்பணிபோல் ஒருங்குறித் துரைத்தனத்தார் ”எதிர்காலத்திற் தமிழாவணங்களை எழுதும் முறையில் எதையுஞ்செய்யலாம்”, என்ற இயலுமை (possibility) நோக்கினால், பயமாகவுமுள்ளது. (இப்படித்தான் துபாசிகள், சமீன்தார்கள், குறுமன்னர்கள் துணையோடு இந்நாடு ஒருகாலத்தில் அடிமைப்பட்டது.) ஒருங்குறிச் சேர்த்திய மேலதிகாரியோடு பேசிப்பார்த்தால், “தமிழர் extreme view கொண்டவரோ” என்றவர் சொல்லுமளவிற்கு இல்லாததும் பொல்லாததுமாய் ஒருபக்கப் பரப்புரை நடந்திருப்பது விளங்குகிறது. ஆக உள்ளூரில் தம் அதிகாரஞ் செல்லும்படிச் சட்டாம்பிள்ளைகளின் ”சண்டப்ரசண்டம்” பெரிதாகவே நடந்துள்ளது. நம் பயத்தை இங்கிலிப்பீசில் (:-)) சொன்னாற்றான் சிலருக்கு விளங்கும்போற்தெரிவதால் அதையும் செய்துவிடுவோம்.

Font-making for generating a language document was originally local with individual and small group initiatives in foundries; (அதனாற்றான் fonts ஐ வார்ப்பென்று ஒருகாலத்திற் தமிழிலழைத்தோம். இக்காலத்தில் ”எழுத்துரு” என்ற சொல்லெழுந்து வரலாற்றை மறைத்து அழகுகாட்டி மயக்குகிறது. என்னைக்கேட்டால் வரலாற்றுப் பொதிவிற்காக ”வார்ப்பே” பழகலாமென்பேன்.) it moved to big national cities culminating with large printers; then it moved to electronic form with the entry of international ”E and IT” corporates; printers ended up as peripheral players. now it is global with encoding acceptance by a standard organization constituted by E and IT companies, font-making by corporates and document generation by the same peripheral printers. Local initiatives are completely taken away in this process. Global initiatives appear to favour one local initiative against the other thus forsaking neutrality in the said matter. Times are changing.

The whole Unicode encoding acceptance process is frought with real dangers. Any Tom, Dick and Harry anywhere in the world can quote an old printed book, (wherever and for whatever purpose it was published) and on that pretext, can point to a specific character and say that it was used by all Tamils thus generalising an insignificant group practice into a predominant one for the entire Tamils. His proposal, if nobody is following entirely, would go unchallenged. (Following up Unicode matters is absolutely a whole-time job involving patience, time and expenditure, and not a part-time passion. Only committed organizations or agenda-concious pestering individuals can do that.) As long as the wiilling authorities approve, with or without the language community's concurrence, all these proposals will definitely lead to changes in the way we would write most of the language documents in future.

We have seen it happening through a character ஶ (codepoint 0BB6) in the last 3,4 years. This is a character not taught in the basic Tamil syllabus anywhere in the Tamil-speaking world even today, but a whole series of consonant and vowel-consonants ஶ் ஶ ஶா ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ and ஶௌ is flourishing in internet. Many argue for its intensive use. In front of our eyes, writing in Tamil is changing. (It is no longer சங்கரன் but ஶங்கரன் now.) All because "UC approved the character in its charts; so use it". (Having approved 0BB6, the combined letter ஸ்ரீ is still supported in the look-up table for some strange reasons. What is the code-point for that, I wonder. Perhaps they imply ”ஊருக்குத் தாண்டி உபதேசம்; உனக்கும் எனக்கும் இல்லெடி.”)

"ஒருங்குறியால் வருங்கேட்டை எங்கே எனக்குக்காட்டுங்கள்?" என்று ஒருங்குறிக்கு “வக்காலத்து” வாங்கிச் சூளுரைக்கும் நுட்பியல் நண்பரொருவர் அறைகூவல் விடுத்துக்கொண்டேயிருப்பார். என்ன செய்வது? மஞ்சளாடி போட்டுப்பார்த்தால் உலகம் மஞ்சளாகத்தான் தெரியும். யார் என்ன கண்ணாடி போட்டிருக்கிறார் என்பதிற்றான் சிக்கல். பட்டறிவின்படி பார்த்தால் மேலே தந்ததை ஒரு பானை சோற்றிற்கு ஒரு வாய்ப்பதமாய்க் கொள்ளலாம். I can quote changed habits that happened after incorporation into Unicode Charts. UC approval can be deadly or bonanza to a languge's survival. It can alter the course once for all. Only fools or naive would close their eyes and say that Tamil writing hasn't changed due to Unicode. We are alarmed by the urge to fill gaps in Tamil Unicode with proposals coming in to alter the basics of Tamil Script and establish/ enable a new script for Thamingilam. Superscript for all southern languages is apparently round the corner.  

To us, the Unicode encoding acceptance process consists of a poor and improper evidence submission followed by arbitrary approval and acceptance procedures. Imagine 5 blind men describing an elephant differently by each touching one part that they have access to. It is all the more scary, since we are now arguing not with governments but with an organization promoted by commercial interest. With these procedures, It is quite natural for personnel politics to creep into the approval process, since there are no transparencies. In the approval procedure, there will be gang-up of contasting parties, emotional reactions from the wronged ones and cunning behaviour by the defendants etc. The very process has built-in shortcomings.

அந்தக்காலங்களிற் கல்வெட்டுக்களில் ஏமாற்றுப்புரிதலுண்டு; செப்பேடுகளிற் போலியுண்டு. ஓலைச்சுவடிகளிற் பாடபேதம், இடைச்செருகல், படியெடுப்புப் பிழைகள் எனப்பலவுண்டு; ஒவ்வொன்றையும் கண்ணில் விளக்கெண்ணெய் இட்டு மீளப்படித்து ஒத்திசைவுபார்த்து, ”இதுசரி, அதுசரியில்லை” என்றாய்ந்து வல்லுநர் சொல்லித்தான் நமக்கெதுவும் விளங்குகிறது. இவற்றைச் சரிவர ஆராய்ந்தோரையும் விரல்விட்டெண்ணலாம். (முனைவர் கொடுமுடி ச.சண்முகனின் “பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்” ஆய்வுநூல்களைப் படிக்காவிடின் எனக்கும் அளவைகள் புரிந்திராது.) அப்படியோராய்வு தமிழ்ப் பின்னங்கள், சின்னங்களுக்கு இதுவரை நடந்ததா? (மதுரைப்பல்கலையில் நடந்ததென்று கேள்விப்பட்டு நண்பர் இர.வா. அண்மையிற் செய்திசொன்னார்.) நெஞ்சத்திற் கைவைத்துச் சொல்லுங்கள். Do we all know the facts? அப்புறமெப்படி விழுந்தடித்துப் பின்ன, சின்னங்களுக்குக் குறியேற்றஞ் செய்யப்போனார்? எந்தத் தொடரி (train) இப்பொழுது கிளம்புகிறது? (தமிழெழுத்தாய்வு 100 ஆண்டுகளாய் நடந்துள்ளது. ”எது, எங்கிருந்து, எப்படி?” என ஓரளவு நமக்குத்தெரியும். பின்னங்கள், சின்னங்கள் பற்றி அந்தளவு பலருக்குந் தெரியாது. எல்லாந் தெரிந்ததாய்க் காட்டும் பெருகுபதிகள் இதிற்சேரார்.)

தமிழ் ஒருங்குறியேற்றமென்பது கணிஞருக்கு மட்டுமே பட்டாப்போட்டுக் கொடுத்ததா, என்ன? ”எம் இராசகுருக்களை மட்டுமே வைத்துக்கொள்வேம், மற்றோரை அழையோம்” என்றாலெப்படி? ”அவர் தனித்தமிழர்; இவர் இன்னார்; அவர் கேள்விக்கணையர்; இவர் அரசியற்பேணி; எனவே இவரை எல்லாஞ் சேர்க்கமாட்டேம்” என்றொதுக்கித் தாமே அரசியல் பண்ணினால் எப்படி? கூட்டுமுயற்சியில் கல்வெட்டியலார், தொல்லியலார், வரலாற்றாய்வாளர், பழங்கணக்குத்தெரிந்தோர், சொல்லாய்வர், தமிழறிஞர், கணிஞர் எனப் பலரைக் கலந்தாலோசிக்க வேண்டாமா? பொத்தகங்களிற் கிடக்கும் தனியார் குழூஉக்குறிகளையெல்லாம் ஒருங்குறியில் ஏற்றுவதெனில் (இர.வா.சொன்னார்: அவரறிந்து 400க்கு அருகில் இவை வருமாம்), நாலுபேர் நடுவிற் துண்டின்கீழ்ப் பரிமாறிக்கொள்ளும் மாட்டுத் தாவணிக் குறிகளை மட்டும் ஏன் விட்டுவைக்கவேண்டும்? அவற்றையும் பத்துக்கோடித் தமிழருக்கு பொதுவானதென்று சொல்லி ஒருங்குறியில் ஏற்றிவிடலாமே?

அண்மையில் தமிழ்ப் பின்ன, சின்னக் குறியேற்றத்தில் நடந்த குழறுபடிகளைக் கண்டு பதறிப்போய், "நமக்குத்தெரிந்த தமிழர் அளவைகளை பொதுமன்றங்களில் எல்லோர்க்குந் தெரிய எடுத்துரைப்போம், இணையத்தில் ஒருபக்கம் இது பதிவாகட்டும். தேவைப்படுகையில், சேர்த்தியங்களும், கணிஞர்களும் தேடும் பாழாய்ப்போன அச்சடிப்பு ஈடேற்றத்திற்காகவாவது ஒருநாள் பயன்படும்" என்ற நினைப்பில் இங்கெழுதத் தொடங்குகிறேன். 6 ஆண்டுகள்முன் 2009 இல் 10 பகுதிகள் கொண்ட ”பழந்தமிழர் நீட்டளவை” என்னுந் தொடரை எழுதினேன். இன்னும் முடியாத அத்தொடரில் நீட்டளவைகளிற் பயனுறுஞ் சுருக்கங்களையும், குறியீடுகளையும் பேசாதிருந்தேன். இனிமேலும் சுணக்காது வேறொரு தருணத்தில் அவற்றைப் பேசவேண்டும்.

http://valavu.blogspot.in/2009/06/1.html
http://valavu.blogspot.in/2009/06/2.html
http://valavu.blogspot.in/2009/06/3.html
http://valavu.blogspot.in/2009/07/4.html
http://valavu.blogspot.in/2009/07/5.html
http://valavu.blogspot.in/2009/07/6.html
http://valavu.blogspot.in/2009/07/7.html
http://valavu.blogspot.in/2009/07/8.html
http://valavu.blogspot.in/2009/08/9.html
http://valavu.blogspot.in/2009/10/10.html

இத்தொடரில் நீட்டளவைத் தொடரின் கருத்துச்சுருக்கத்தையும், வேளாண் பின்புலத்தையும், பரப்பளவை பற்றிய ஓரிரு குறிப்புகளையும் தொட்டுக் காட்டிய பின்னே முகத்தளவை, பின்னங்கள், மற்ற குறியீடுகள் பற்றி முற்றுமுழுதாகவன்றி, ஓரளவு பேசுவேன். ஆனால் தொடர்முடிய நிரம்ப நாட்களாகலாம். ஏனெனில், என் அலைச்சல் கூடி, சிந்தனைத் தொடர்ச்சியின் வேகங் குறைந்துநிற்கிறது. ஏதொன்றையும் எழுதுவதில் இப்பொழுதெல்லாம் நாட்களாகின்றன.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. அரசியலாரையும், அரசதிகாரிகளையும் தொடர்பு கொண்டதில் இந்த முன்னீட்டைப் பற்றிய ஒரு மீள்பார்வை தேவையென்ற நல்லவிளைவு ஏற்பட்டது. த.இ.க.விடமிருந்து ஒரு பகுதியை நகர்த்திச் சென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியற்றுறையிடம் பொறுப்பைக் கொடுத்து, தமிழ்நாட்டில் இருக்கும் துறையறிஞர்களை (கிட்டத்த 25 பேரில் 21 பேருக்கருகில் வந்தார்கள். 4 பேர் ஏந்துக்குறைவுகள்/ முன்னால் ஏற்றுக்கொண்ட வேலைகளின் நெருக்கு காரணமாய்க் கலந்துகொள்ளமுடியவில்லை.) அழைத்து “இந்த 55 குறியீடுகளை. ஆய்வுசெய்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்று அரசு கேட்டுக்கொண்டது. அவர்கள் இந்தக் குறியீடுகளில் கிட்டத்த 17 குறியீடுகளை விலக்கச் சொன்னார்கள், 20 குறியீடுகளின் வடிவங்களையோ, விளக்கங்களையோ மாற்றச் சொன்னார்கள், 18 குறியீடுகளை ஏற்றுக்கொண்டார்கள். ஆக 67% குறியீடுகளில் மாற்றம் தேவை என்ற முடிவேற்பட்டது.

ஓராண்டு காலம் முறையிட்டதற்கு இவ்வளவு நாட்கழித்து மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. த.இ.க.வும் மாறிவருகிறது. நல்லதே நடக்கட்டும்.