Wednesday, July 08, 2015

பழந்தமிழர் அளவைகள் - 3

முன்னாற் சொன்ன குறுந்தொலை வாய்ப்பாட்டிற்குங் கீழே ஒரு நுண்தொலை வாய்ப்பாடும் உண்டு. அதில் ஒரேயொரு இணையைத் தவிர மற்றவற்றை, நுணுகியதற்கும் நுணுகியதை, வேறொரு பொழுதிற் பார்ப்போம்.

மேலே 1 விரற்கிடையென்பதை இற்றை அளவையில் 11/16 அங்குலத்தொடு ஒப்பிட்டோம். 1 விரற்கிடைக்குச் சமமாக, ”குறுக்குவாட்டில் அடுக்கும் 8 நெல்லரிசிகள்” என்றும், ”நெடுக்குவாட்டில் அடுக்கும்  4 நெல்லரிசிகள்” என்றும் அந்த நுண்தொலை வாய்ப்பாட்டில் ஓரிணை சொல்வர். ”பஞ்சமரபு” வாச்சியமரபில், பிண்டவியலில் வங்கியத்தின் அளவையைச் சொல்லும் 27 ஆம் வெண்பாவில் நெல்லரிசியின் நெடுக்குவாட்டு அளவே எல்லோருக்கும் அவதானமாகும் (observation). (என் முந்தைய நீட்டளவைத் தொடரின் 2-ஆம்பகுதியில் இதைப்பற்றிப் பேசினேன்.) இங்கோ மேற்சொன்ன நீட்டளவை நுண்தொலை வாய்ப்பாட்டில், நெல்லரிசியின் குறுக்கைப் பேசுவதாய்ச் சுற்றிவளைத்து ஊகிக்கிறோம்.

இந்நெல்லரிசியின் குறுக்கு = 11/128 அங்குலம் = 0.0859375 அங்குலம் = 2.182813 mm என்றும், நெடுக்கு 11/64 அங்குலம் = 0.171875 அங்குலம்= 4.365625 mm என்றும் அமையும்.

பஞ்சமரபு காட்டும் இந்நெல்லரிசி மலையில் விளையும் ஒருவகை விதப்புக் குறுவரிசியாகும் (short paddy variety raised in hilly tracts. தோரைக்கதிருங் கூட அளவிற் குறுகியதே.). இதைத் துவர்> துவரை>தோரை என்றும், துவரஞ்சம்பா என்றும் அதன் செந்நிறத்தைக் காரணங்காட்டிச் சொல்வர். (சிவந்த பருப்பை இந்தக் காலத்தில் துவரம்பருப்பு என்கிறோம் அல்லவா?.) தெலுங்கில் இதே நெல்லைத் தோர என்று சொல்வர். ”கோடின் வித்திய குறுங்கதிர்த் தோரை” என்பது மதுரைக்காஞ்சி 287ஆம் அடி. செந்நெல்லரிசிகளான சாலியும், தோரையும் ஒன்றோ, வேறோவெனும் மயக்கம் சங்க இலக்கியம் படிப்போருக்குண்டு. சாலி, தோரை அரிசிகளின் சிவப்பைவிட இன்னும் அடர்ந்தது கவுணியரிசியின் கருஞ்சிவப்பாகும்.

தோரையோடு மூங்கிலரிசியும் (bamboo seed) சாலியும், கவுணியும் தென்கிழக்காசியாவிற் கிடைப்பவை. இந்நாடுகளுக்கு அடிக்கடி போய்வரும் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தார் இவற்றை வாங்கி வந்து தம் வீட்டு விருந்துகளிற் பயன்படுத்துவர். (இப்பொழுது கவுணியரிசி சென்னையிலும் கிடைக்கிறது. ஆனால் தென்கிழக்கு ஆசியாவிற் கிடைப்பதுபோல் அவ்வளவு சுவைபட அமையாது சவச்சவ என்றிருக்கும்.) சேரலத்திலும் கூடச் செந்நெற் புழக்கமுண்டு. செந்நெற்சத்து உடம்பிற்கு நல்லதென்று ஊட்டு விதப்பாளர் (nutrition specialists) கூறுவர். தமிழகத்தில் மட்டுமே தங்கி வேறிடஞ் செல்லோருக்கே செந்நெல்லரிசி என்பது பழக்கமில்லாததாகும். பட்டை தீட்டிய வெள்ளரிசி நம்மை அப்படி ஆட்கொண்டு வேறொன்றை அறியவிடாது செய்கிறது.

பெரும்பாலான கூலங்களுக்கு நீளம், அகலம், திண்ண(thickness)மென்ற 3 அளவுகளுண்டு. பழந்தோரையின் திண்ணம் தெரியாததால், அகலத்திற்குச் சமமாய்க் கொள்ள, இந்த ஊன்றோடு (assumption) தோரையரிசி வடிவத்தை ஒரு நெட்டை இழிகோளமாய் (prolate ellipsoid) உருவகிக்கலாம். (இந்தக் கட்டுரை படிப்போர் இழிகோளம் என்ற பெயரைக் கண்டு தடுமாறவேண்டாம். தட்டை வட்டமான ellipse என்பதை இழிவட்டமென்று சொல்லலாம். இழிதல்/இளிதல் என்ற வினை ellipse-வடிவ வாயின் இதழ் நீட்சியைக் குறிக்கும். ஒருகாலத்தில் ellipse ஐப் பலரும் நீள்வட்டமென்றார். ஓர்ந்து பார்த்தாற் கூட்டுச்சொற்களுக்குப் பொருள்நீளும் வகையில், ”நீளை” விட ”இழி” (= short; குறைந்த) என்னும் முன்னொட்டு இன்னும் பொருந்தும்.

இதே கருத்தில் ”இழிகோளம்” என்பது ellipsoid ஐச் சுட்டும். ”மூவச்சு இழிகோளம்” என்பது tri-axial ellipsoid-ஐயும், சப்பை இழிகோளம் என்பது oblate ellipsoid-ஐயும், நெட்டை இழிகோளம் என்பது prolate ellipsoid-ஐயும் குறிக்கும். (சரியாகச் சொன்னால் அரிசியை மூவச்சு இழிகோளமாய்த் தான் உருவகிக்கவேண்டும்.) நெட்டை இழிகோளத்திற்கு ஒரு மேவிய (major) அச்சும், சமமான இரு நுணவ (minor) அச்சுகளுமுண்டு. இவ்வுருவகத்தின்படி 1 தோரையரிசியின் பருமன் = [4/3)]*(பை)*[(2.182813/2)^2]*[2.182813/2] Cu.mm. = 5.9178215 Cu.mm ஆகும். [இங்கே பை ~ 22/7 ஆகும்.]

பஞ்சமரபுச் செய்திக்குத் துணையாயும், நெட்டை இழிகோள உருவகத்திற்கு அணைவாயும், குடிலரின் அருத்தசாற்றத்தில், (Kaudilya arthashastra) 2-ஆம் பொத்தகம் 20 ஆம் அதிகாயத்தில் 4ஆம் வரியில் ”அஷ்டௌ யவமத்யா: அங்குலம்” என்றுவரும். (அதித்தல்/அதிகுதல் = கூடிவருதல்; கூடிவருவது அதிகாயம். இதை இன்னொரு வகையில் அதிகாரமென்றுஞ் சொல்கிறோம். இரண்டும் நல்ல தமிழே. வடவர் பலுக்கில் அதிகாயம் அத்யாயமாகும்.)

[அருத்த சாற்றம் என்று சொன்னவுடன் ஒருசிலர் எகிறக் கூடும். தமிழாய்வில் அருத்தசாற்றமா? இந்த இராம.கி.க்கு மறை கழண்டு போயிற்றா? - என்றெல்லாம் எண்ணக்கூடும். அதெல்லாம் ஒன்றும் இல்லை. நம்மிற் சிலர் இரு விதமான எக்கிய - extreme - நிலைபாடுகளைக் கடைப்பிடிக்கிறோம். ஒன்று வடமொழி இலக்கிய இலக்கணங்களைத் தலைமேற் தூக்கிவைத்துக் கொண்டு அவையே முதலென்று மனம் பேதலித்துக் கூத்தாடுவது. அல்லது வடமொழி இலக்கிய இலக்கணங்களைத் தூக்கியடித்து உதைத்து ”நான் சங்க இலக்கியம், தொல்காப்பியம் மட்டுமே பார்ப்பேனாக்கும்” என்று மட்டையடிப்பது. மொழியாய்வில் இப்படியான இரு எக்கிய நிலைகளுமே தவறாகும். (நம் திருக்குறளுக்கும் அருத்தசாற்றத்திற்கும் ஒப்புமை, வேறுபாடு உண்டு தெரியுமோ?)

நம்முடைய குறிக்கோள் தமிழ், தமிழர் மரபை அறிவியல்வழி ஆய்வுசெய்வது தான். அதற்கு வடமொழி இலக்கிய, இலக்கணங்களின் வழி ஆய்வுப் பொறியும், புரிதலும் கிடைக்குமாயின் அதை நாடத்தான் வேண்டும். நாமொன்றும் வடபுலத்திலிருந்து விலகியிருந்த/விலகியிருக்கும் தீவினர் அல்லர். அவர் நம்மை விட்டுப் பிரிந்த உயர்வகுப்பினரும் அல்லர். வெள்ளையைக் கண்டு வெட்கப்படும் முட்டாள் தனத்தை நாம் விட்டொழிக்கவேண்டும். இந்த “யவமத்ய” என்ற அர்த்தசாற்றக் குறிப்பு தமிழ்மரபை வெளிக் காட்டப் பயன்படும் ஒரு செய்தியாகும். இப்படிப் பல செய்திகள் வடமொழி ஆவணங்களிலுண்டு.]

யவ = பார்லி எனப் பெரும்பாலோர் மொழிபெயர்ப்பர். அது முற்றுஞ் சரியல்ல. இரானிலிருந்து ஆப்கனிசுத்தான்வழி ஆரியர் இந்தியா நுழைகையில், இருக்குவேத காலத்தில், பார்லியைக் குறித்துப் பேசியிருக்கலாம். துணைக்கண்டம் நுழைந்தபின் பார்லி கிடைப்பது கடினமாகி, ”யவ” என்ற சொல் மற்ற கூலங்களையும் குறிக்கத்தொடங்கியது இதை மோனியர் வில்லியம்சு அகரமுதலி பதிவுசெய்யும்.

இந்தோனேசிய யாவத்தீவு அங்குள்ள யா மரங்களாலும் (Hard Wickia binata) யக்கர்களாலும் (யா = கருஞ்சிவப்பு; யக்கர்>நக்கர் = கருஞ்சிவப்பர், எனவே கருப்பர். நக்கவரம் = கருப்பர் வதியும் தீவு. நக்கர் என்ற சொல் பற்றிப் பேச இது இடமில்லை. உலகுக்கே நக்கர் என்ற சொல்லைக் கொடுத்ததுபற்றி ஒரு தனிக்கட்டுரையே எழுதவேண்டும்.) பெயர்பெற்றது. யாவா/யாவ/யவ என்ற திரிவுகள் தமிழ், பாகதம் வழியாகச் சங்கதம், மேலைமொழிகளுக்குப் போயின. யாவாத்தீவு, ஜாவாத்தீவென்றுஞ் சொல்வர். யாவாவிற் கிடைத்த செவ்வரிசியைச் சாலியென்பர். சாலியால் அதற்குச் சாலித்தீவு என்ற பெயருமுண்டு. (சேரலத்திலும் சாலியூரெனுங் கடற்கரைத் துறைமுகம் உண்டு. இதை Nelcynda என்று மேலையர் கூறுவர்.)

யாவாவிற் கிடைத்த அரிசியை யாவ என்றே சங்கதத்தில் அழைத்தார். ”யாவ” என்பது அரிசியைக் குறிக்காவிடில் தென்புல, வடபுல அளவைகளுக்கு இடையே ஒருங்கமைப்பு குலைந்துபோகும். சங்க காலத்தில் தமிழகம்-மகதம் இடையே வணிகவுறவுகள் மிகுதி. மகதமும் தமிழகத்தைப்போல் அரிசியுணவு கொண்ட நாடுதான். எனவே ”யாவ” என்பது யாவா அரிசியைக் குறித்ததெனக் கொள்வதே இங்கு சாலவும் பயன்தரும். அதுவென்ன “மத்ய”? - என்பது அடுத்தகேள்வி. யாவ அரிசியின் குறுக்கே, அதன் நடுவிற்றான், மதிக்கத் தக்க நுணவ அச்சு (measurable minor axis) கிடைக்குமென, ”யவமத்ய = தோரை நடுவம்” என்று குடிலர் குறித்திருக்கிறார். எனவே 1 விரற்கிடை = 8 தோரை நடுவம் என்பதே சரியான வாய்ப்பாடு. இதை அருத்தசாற்றம் வழியாகத்தான் அறிகிறோம்.

L2/15-078 முன்னீட்டில் 11FD1 என்ற குறிப்புள்ளியில் நெல்லெனும் குறியீட்டைக் கொடுத்துள்ளார். வாய்ப்பாடுகளில் ஓர் அடிப்படையலகு (Fundamental Unit) அவதானமாகவும் (observation), அதற்கு மேற்பட்டவை வரையறைகளாகவும் (definitions) இருக்கும். நீட்டளவை வாய்ப்பாட்டில் "நெல்" என்பது ஓர் அடிப்படையலகோ, அவதானமோ அல்ல. விரற்கிடையே அடிப்படையாகும். நுண்தொலை வாய்ப்பாட்டிலும் தோரையரிசியின் குறுக்களவு வரையறையாகவே வரும். "தோரை" என்பது இங்கு நெல்லைக் குறிக்கவில்லை. நம் வாய்ப்பாட்டில் அரிசியையே குறிக்கிறது. [”யவமத்ய”எனும் குடிலர் குறிப்பில், இது தொலிபோர்த்திய நெல்லைக்குறித்தால் பொருண்மை ஓரிமை (uniformity in meaning) ஏற்படாது.] ”நெல்லெடை” நிறுத்தளவில், வேறு வரையறைகளுக்குத் துணைபோகும். கணக்கதிகாரம் என்பதை மேலாகப் படித்து, நெல் என்பது நீட்டளவை, முகத்தளவை, நிறுத்தலளவை என எல்லாவற்றையுங் குறிப்பதாய்க் கொண்டு ஒருங்குறியில் இடமொதுக்குவதோ, குறியீடு தருவதோ புரிதற் பிழையாகும். (Nel is not a length unit or a volumetric unit or a weight unit.) ஆழ்ந்து ஓர்ந்து பாருங்கள். நெல்லில் இருக்கும் உமி அறிவியல் பூருவமான, திருப்பித் திருப்பிச் செய்யக் கூடிய அளவீடுகளைப் பெறவிடாது. அரிசியும், உமியும் சேர்ந்த கூட்டுப்பொருளான நெல் எந்த அளவையையுஞ் சரியாய்ச் செய்யவிடாது.  

”நெல்” என்பது வெறும் எண்ணிக்கையாகவும், மணியெனும் பொருளைக் குறிக்கவும் மட்டுமே, இதுநாள் வரை தமிழ்மரபிற் பயன்பட்டது. 360 நெல்களெனில் அது எண்ணிக்கையும், கடுகு, எள்ளு, நெல், அரிசி, பயறு, காணம், மிளகு, துவரை என்று சொல்லுகையில் விதப்பான மணிகளும் பேசப்படுகின்றன. இவை தவிர நெல்லென்பது வேறு அளவைகளுக்குப் பயன்பட்டதில்லை. தோரைக்குறுக்கு என்பது நீட்டளவை அலகாகலாம்; நெல்லெடை என்பது நிறுத்தளவை அலகாகலாம். தோரைக்குறுக்கும், நெல்லெடையும், symbols of weight, length and area என்ற வகைப்பாட்டில் வரவேண்டியவை. முகத்தளவையின் கீழ் நெல்லெனும் தனி அலகு வரவேண்டியதில்லை.

1 சுவடு/செவிடு/சவடு = 360 நெல் (இச்சொற்றிரிவிலும் புரிதற்பிழை உள்ளது. அதைக் கீழே பார்ப்போம்.) என்பது எண்ணிக்கையும், தனிநெற் பருமனுஞ் சேர்ந்து பெருக்கிவரும் அவதானமாகும். அது அடிப்படை வரையறையல்ல. இந்த இணையை முகத்தல் அளவையைப் பேசும்போது விளக்குவேன். தவிர, நெல்லென்பது ஈரெழுத்துச் சொல்லாகும். இச்சொற்களுக்கு சுருக்கம் (abbreviation) பயில்வது தமிழ் ஆவண அச்சடிப்பிலும் இணையப் பரிமாற்றத்திலும் எதற்கு உதவுமென்று புரியவில்லை. நெல்லிற்கு ஒரு குறியீடுள்ளதென்று கல்வெட்டறிஞர் கூறி ஏற்றுக்கொள்வது என்னைப் பொறுத்தவரை தேவையில்லை. ஓர்ந்துபார்த்தால் 11FD1 என்ற குறிப்புள்ளி தேவையில்லாதது, இன்னொரு கருத்தை இங்கு சொல்லவேண்டும். 1 நெல் = 8 எள் என்று கணக்கதிகாரம் காட்டுவதால், சிலர் இதுவும் நீட்டளவை என்பர். அதுவுந் தவறு.

குடிலரைக் காட்டி தோரைக் குறுக்கை அடையாளங் காட்டியது போலவே, எள்ளிற்கும் அடையாளங் காட்டலாம். குடிலர் 1 தோரைக்குறுக்கு = 8 பேன்குறுக்கு என்று இன்னொரு சமனைக்காட்டுவார். வடக்கே பேனை வைத்து தோரைக் குறுக்கை வரையறுத்தது போல், தெற்கே எள்குறுக்கை வைத்து தோரைக் குறுக்கினை வரையறுப்பார். தவிர ”இந்த எள்ளின் வகைப்பாடெது? இதன் அடிப்படை அளவைகளென்ன?” என்று பல அறிவியற் கேள்விகள் எழுகின்றன. இவற்றிற்கு மறுமொழிகாணத் தேவையான தரவுகள் தமிழிற் கிடையா. ஓர்ந்துபார்த்தால், 1 நெல் = 8 எள்ளென்பது குறைப்பட்ட வரையறையாகும் (deficient definition). இதை வைத்து ஒரு வாய்ப்பாட்டை எழுப்பமுடியாது. தவிர நெல்லுக்குக் குறிப்புள்ளி கொடுத்தால், அப்புறம் கணக்கதிகாரஞ் சொல்லும் கடுகு, எள்ளு, நெல், அரிசி, பயறு, காணம், மிளகு, துவரை ஆகிய மணிகளுக்கும் குறிப்புள்ளி கொடுக்கிறோமா? இல்லையே? மற்றவைக்கின்றி நெல்லுக்கு மட்டுங் குறியீடு கொடுப்பது ஒருவகை ஓரவஞ்சனையேயாகும். அறிவியற்படி இதை ஒதுக்குவதே முறை. என்னைக் கேட்டால் L2/15-078 முன்னீட்டில் 11FD1 குறிப்புள்ளியைத் தவிர்க்கலாம். (முகத்தளவை விளக்கையில் இன்னுஞ் சொல்வேன்.)

”மேற்கூறிய தோரையரிசி என்னவகை, அளவீடுகளென்ன, இந்த அவதானம் எப்படிக் கிடைத்தது?” என்ற விவரங்கள் நம்மிடமில்லை. (”பொருந்தலிற் கிடைத்த சங்ககால நெல்லின் அளவுகளென்ன?” எனப் பேரா.கா.இராசன் இதுவரை அறிவிக்கவில்லை.) குறிப்பிட்ட பஞ்சமரபு நெல்லரிசியின் நீளம், விட்டத்தின் இருமடங்கென்ற செய்திபார்த்தால் வேளாணறிவின்படி குறுநெல்லரிசியைப் பேசுகிறோம் என்பது பொருள். IR 8, IR 20, IR 50 அரிசிகளினும் இது குறுகித்தெரிகிறது. நீட்டளவை வாய்ப்பாடெழுந்த காலத்திற் மற்ற சம்பாநெல்கள் உருவாகவில்லையோ என்னவோ?. இக்காலப் பாசுமதி, பொன்னி அரிசிகளின் l/b வகுதம் (ratio) 3 க்கும் மேலானது. இற்றையரிசிகள் 2500 ஆண்டுகளாய் ஈனியல் (genetics) வழி தேர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டு, l/b, மணியின் எடை போன்ற அளவீடுகள் இற்றைவகை நெல்களுக்குப் பெருகியுள்ளன. இவற்றைப் பார்க்க பழந்தோரையரிசி பூஞ்சையாகவே (primitive) இருந்திருக்கிறது.

இற்றை நெல்மணிகளுக்கும் நீளம், விட்டமென்று பேசாது, நீளம், அகலம், திண்ணமென்ற (thickness) மூன்றையும் பேசுவார். (http://www.agriculturejournal.org/volume1number1/study-of-mechanical-properties-of-popular-paddy-varieties-of-tamil-nadu-relevant-to-development-of-mini-paddy-thresher/) காட்டாக

ASD 18 என்ற நெல்மணி நீ 8.60 அ. 2.59 தி. 2.13 என்றும்,
ADT 36 என்ற நெல்மணி நீ 7.79, அ. 2.50, தி 2.00 என்றும்,
IR 20 என்ற நெல்மணி   நீ 8.20, அ. 2.70, தி 2.00 என்றுஞ் சொல்வர். இதேமுறையில்
தோரை நெல்மணி  நீ. 4.37, அ.2.18, தி. 2.18 என்றுஞ் சொல்லலாம்.

ஆயிரம் நெல்மணிகளின் எடை ASD 18 க்கு 21.86 gm, ADT 36 க்கு 20.61 gm, IR 20 க்கு 18.97 gm என்றுஞ் சொல்வர். இந்நெல்மணிகளுக்கும், அரிசிகளுக்கும் மெய்த்திணிவும் (true density), மொத்தைத்திணிவும் (bulk density), சரிவுக்கோணமும் (angle of repose), ஆயிரம் நெல்மணி எடையுமெனப் பல்வேறு குறிப்புகளை மேலேயுள்ள கட்டுரைமூலம் தெரிந்துகொள்ளலாம்.

எல்லா நெல்லரிசிகளின் மெய்த்திணிவு பெரும்பாலும் 1.452 g/ml ஆகவும், குட்டை உருள் நெல்மணிகளின் (short cylindrical paddy grains) மெய்த்திணிவு 1.182 g/ml ஆகவும், மற்றவை 1.224 g/ml ஆகவும் சொல்வர். நிரவலாகப் பார்த்தால், நெல்லெடையில் 22% உமி, 78% அரிசியாகும். அரிசியின் மொத்தைத்திணிவு 0.777–0.847 g/ml ஆகவும், நெல்லின் மொத்தைத்திணிவு 0.563–0.642 g/ml ஆகவும், அரிசியின் புரைமை (porosity) 41–46% ஆகவும், நெல்லின் புரைமை 46–54% ஆகவுஞ் சொல்வர், மொத்தைத்திணிவும், புரைமையும், நெல்மணியின் உருவத்தால் (நீ/அ. வீதம் - l/b ratio, மணியின் உருள்மை-cylindericality) மாறுபடும். உருள்மை கூடும்போது, மொத்தைத்திணிவுங் கூடிப் புரைமை குறையும். அரிசியின் நிரவற் சரிவுக்கோணத்தை (Average angle of repose) 37.5° என்றும், நெல்லின் நிரவற் சரிவுக்கோணத்தை 36.5° என்றுஞ் சொல்வர். மேற்கூறிய விவரங்களால், தோரையரிசியின் பருமனை, 1000 நெல்லெடை, மொத்தைத் திணிவு ஆகியவற்றை நாம் மதிப்பிட முடியும்.

ஏற்கனவே ஒரு தோரையரிசியின் பருமனை நெட்டை இழிகோளமாய் உருவகஞ் செய்து நாம் அளவிட்டதால், இப்பொழுது
1000 பழம் தோரையரிசியின் பருமன் = 5917.8215 Cu.mm. = 5.9178215 ml. என்று காணலாம். இப்பருமனோடு அரிசியின் மெய்த்திணிவைப் பெருக்கினால்,
1000 பழம் தோரையரிசியின் எடை 1.452*5.9178215 = 8.5926768 gm என்று கிடைக்கும். உமியின் எடை எல்லின் எடையில் 22% என்பதால்,  ,
1000 பழம் தோரைநெல்லின் எடை = 8.5926768/(0.78) = 11.016252 gm என்றாகும். (3 இற்றைநெல்களோடு ஒப்பிட்டால், 2500 ஆண்டு விளைச்சலில் பலமடங்கு ஈனியற்தேர்வு நடந்தது புரியும்.)
1000 பழம் தோரைநெல்லின் உமியெடை = 11.016252*0.22 = 2.4235754 gm என்றாகும்.
1000 பழம் தோரைநெல்லின் பருமன் = 11.016252/1.182 = 9.3200102 ml என்றாகும்.
1000 பழம் தோரைநெல் உமியின் பருமன் =  9.3200102 - 5.9178215 = 3.4021887 ml என்று வந்துசேரும். (இதில் உமிக்கும் அரிசிக்கும் இடையிலுள்ள காற்றின் பருமனுஞ் சேரும்.)  .

தோரைநெல் உமியின் மெய்த்திணிவு = 2.4235754/3.4021887 = 0.7123577 gm/ml.

இப்பொழுது ஒரு பெருவிரல் சதுரமும், ஒரு தோரையுயரமுங் கொண்ட பேழையில் [(11/8)/(11/128)]^2 = 256 நெல்களை நெடுக்காய்க் குத்தவைத்து அடைக்கலாம். பேழையுள் 256 குச்சில்கள் (குச்சு = குறுவறை; குறுவறையினுஞ் சிறியது குச்சிலெனும் cell) என்றுகொண்டால் ஒவ்வொன்றிலும் ஒரு தோரைநெல் அடைக்கலாம். இதன்மூலம் தோரைநெல்லின் அடைப்புத்திணிவைக் (tapped density) கணிக்கலாம். ஒரு குச்சிலிலடங்கும் நெற்பருமன் =  5.9178215 Cu.mm என்றும், குச்சிற்பருமன் = 2.182813*2.182813*2.182813 = 10.400389 Cu.mm என்றுமமையும். 1 தோரைநெல்லை ஒற்றைக் குச்சிலில் எளிதே அடைக்கலாமென்பதால், அடைப்புத்திணிவு 11.016252*1000/10.400389 = 1.0592154 gm/ml ஆகும். இதிலிருந்து மொத்தைத்திணிவறிய இன்னொரு விதயம் காணவேண்டும்.

ஒரு கூடையிலிருப்பதைச் சாய்ப்பதிலோ, கூடையில் ஓட்டையிட்டு அரிசியைக் கீழே கொட்டவைப்பதிலோ, நெற்குவியல் சட்டென நகராது தேக்கங்காட்டும். வேதிப்பொறியாளர் அடைப்புத்திணிவிற்கும் மொத்தைத்திணிவிற்குமான வேறுபாட்டை, அடைப்புத்திணிவின் விழுக்காடாக்கி, கார்காட்டுகை (Carr index) என்று சொல்லி, நுண்பொடிகளின் நகர்ச்சி காட்டும் குறிகளை (flowability indicators for fine powders) வெளிப்படுத்துவர். 20-25% க்குமேல் கார்காட்டுகை கொண்ட பொடிகளும் (powders), குருணைகளும் (granules) எளிதில் நகரா. (Materials having Carr Index >20 to 25 % are classified as non-free-flowing). குருணைக்கும் (granule) பெரிதான நெல்மணியின் கார்காட்டுகை 39-46.5%க்குள் இருக்கும். இப்பொருள்கள் “பிடித்துவைத்த பிள்ளையாராய்” குத்துக்கல்லாய் நிற்கும். கார்காட்டுகைக் (Carr index) குறியின் விளிம்புமதிப்பின் (boundary limits) படி, தோரையின் கார்காட்டுகை 39.0% எனில், தோரையின் மொத்தைத் திணிவு = 1.0592154*(1-0..39) = 0.6461214 ஆகவும், 46.5% எனில், மொத்தைத்திணிவு 0.5666802 என்றுமாகும். இக்கால நெற்பண்புகளை பூஞ்சைத் (primitive) தோரைநெல் அப்படியே பெற்றதை இம்மதிப்பீடுகள் உறுதிசெய்கின்றன.  

காரணமின்றி நெல்மணிகளைப் பற்றி விரிவாய் நான் மேலே பேசவில்லை. அதேபொழுது பழந்தமிழன் நெல்லை மட்டுமே கூலமாய்ப் புழங்கியதாய்ப் பொருளில்லை. இற்றைநிலையில் நெல்லையொட்டி பல அறிவியல், நுட்பியற்செய்திகள் நமக்குத்தெரியும். எனவே நம்முடைய நீட்டல், பரப்பு, முகத்தல் வாய்ப்பாடுகளைச் சரிபார்க்க, புரிந்துகொள்ள, ஒத்திசைவைக் கணக்கிட, நீட்சிகளை மதிப்பிட, நெற் செய்திகள் வாய்ப்பாகும். அறிவியலின் வாயிலாகப் பழையதைப் புரிந்துகொள்ள நெல்மணி பயன்படும். அவ்வளவுதான். அதேபொழுது, மற்ற சிறுதானியங்களான தினை, சாமை, வரகு, பனிவரகு, கேப்பை, கம்பு, சோளம், குதிரைவாலி போன்றவையும் பல்வேறு காலங்களில் இங்கு உணவுக்கூலங்களாய் எழுந்திருக்கும் என்று நினைவிற் கொள்ளவேண்டும். தவிரப் பல்வேறு பயறு வகைகளும் தமிழகத்தில் விளைவிக்கப் பட்டிருக்கும். பல்வேறு மணிகளின்வழி தமிழர் பட்டறிவு கூடியதால் நம் அளவைகள் ஏற்பட்டன. ஓரினத்தின் மக்கள் தொகை கூடக்கூட அளவைகளின் முகன்மை பெருகும்.

தமிழ்க்குமுகாயத்தில் வேளாண்மைதான் நம் பரப்பளவைக்கும் முகத்தளவைக்கும் வித்திட்டிருக்கிறது. இந்த L2/15-078 என்ற முன்னீட்டிற்கும் வேளாண்மையே அடிப்படை. அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாது (without acknowledging that) வெறும் வடிவங்களை மட்டும் பார்த்தால் நாம் பெருத்த பிழையே செய்வோம். Encoding is not just looking at glyphs and assigning codepoints. It is also not like user-derived short-hand codes. It is much more than that. It has "understanding" as the base and "standardization" as the goal. We need to know "what is the basis for our measures?" It was agriculture per se.  

அன்புடன்,
இராம.கி.

3 comments:

Anonymous said...

மிக்க நன்றி ஐயா.

முருகேசன் said...

அய்யா, எனது பெயர் முருகேசன், வழக்குரைஞராக கோயம்புத்தூரில் இருக்கின்றேன். Affidavit என்னும் சொல்லுக்கு தாங்கள் கொடுத்த விளக்கத்தைப் படித்தேன். படியுரை என்னும் மொழியாக்கம் மிகவும் சிறந்ததாக உள்ளது. மேலும் பல சட்டச் சொற்களுக்கு சரியான மொழியாக்கம் செய்யலாம் என நானும் இன்னும் சில வழக்குரைஞர்களும் ஈடுபாடு கொண்டுள்ளோம். அதற்காக தங்களது உதவியையும் நாடி, தங்களை தொடர்புகொள்ள விழைகின்றோம். தங்களது E mail முகவரியோ அல்லது, தொலைபேசி எண்ணோ தருமாறு அன்புடன் வேண்டுகிறோம். எனது தொலைபேசி எண். 9578758182. எங்களது E mail முகவரி vaadaikaatru@gmail.com. அருள் கூர்ந்து தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

Pari said...

Aanai ittu uruthiyaga uraithal ,'aanai urai ' or aanai uruthiurai. I submit to aya thiru ramki.