Monday, October 13, 2014

புதிய பாலை






இது 2002 ஆம் ஆண்டு செப்தம்பர் 9 அன்று திண்ணை வலையிதழில் வெளிவந்தது. அன்றைக்குச் சவுதி அரேபியா ரியாதில் வாழ்ந்தேன். அதன் தாக்கம் இந்தப்பாட்டு. இதசேமிக்கவேண்டும் என்பதற்காக இங்கு மீண்டும் பங்களிக்கிறேன். உங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.


முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்த்ப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்
                                      - சிலப்பதிகாரம் 11: 60-7

என்றான் இளங்கோ தமிழப் பாலையை

இது

அன்றைய நிலையில் அவன்செய் வரையறை;
இன்றைக் கிருந்துநான் எண்ணிப் பார்க்கிறேன்:

முல்லையும் மருதமும் முறைமையில் திரிந்து....
சரளையும் மேடும் மணலொடு புணர்ந்து
வேலிக் கருவை கோரைப் புல்லோடுப்
போலிகை நிலமாய் புறத்தினிற் காட்டி
பன்னெடுங் காலம் பானையில்## வினைத்து
கன்னெயும்* வளியும் கலந்தே உருக்கி
பொன்னையும் பொலிவையும் நெய்யொடு பீற்றி
கூடத் தெறிப்பின் மாடகோ புரங்கள்
ஆடல் தோற்றம் அழகு வண்ணங்கள்
தேடி வாராதோ அரபுப் பாலையில் ?

பின் துயர் எங்கே நடுக்கி உறுத்தும் ?

எண்பதில் நாற்பது ஆயிரம் மாத்திரி#
எவனுக்குத் தெரியும் நகரப் பரப்பு ?
ஊருக்கு வெளியே பாலைவனமாம் ?
உள்ளே இருந்தால் யாருக்குத் தெரியும் ?
கோடையில் மட்டும் பதனித்து** விட்டால்
நாடவர் யார்தான் வாழ மறுப்பார் ?

யாரங்கே காசை அள்ளித் தெளியுங்கள்!
பாரெங்கும் செழிப்பைப் பார்த்துக் கொணருங்கள்!

பின் துயர் எங்கே நடுக்கி உறுத்தும் ?

பளிங்கும் ஆடியும் பளிக்கும் கருங்கலும்
விளங்கும் ஒளியும், வியன்நகர் மனைகளும்;
பறக்கும் சாலையும், திரக்கும், நேரியும்
வழிதுறை எல்லாம் மகிழுந்துச் சாரையும்;
(சாலையில் நடப்பது இந்தியன் மட்டுமே!
வேலைக்கு வந்தவன் வேறென்ன செய்வான் ?)

வேலிக் கருவையின் வாழ்வைப் பாருங்கள்.
ஆறுகிடந்தன்ன அகல்நெடுந் தெருக்களில்
இந்த மரமே இருமருங் கிருக்கும்
நடுவரி முழுதும் பேரீந்தின் ஆட்சி

உலகில் உள்ள பொதினர்கள்$ எல்லாம்
கலக்க வருவார்; கல்நெய் அல்லவா ?
ஏழரை மில்லியன்@ யார்தரு வார்இனி ?

மணலும் கல்லும் மணல்சார் இடமும்
புதுத் திணை என்றால் புலவர்கொள் ளீரோ ? '

உரக்கச் சொன்னேன்:

'பின் துயர் எங்கே நடுக்கி உறுத்தும் ?
உலகைப் புரப்பதே பாலை வனந்தான்! '

வானொலி சொன்னது:

'கல்நெய் இன்றேல் பாலையென் னாகும் ? '

விடை தெரியாமல் முகம் கவித்தேன் நான்.

## புவி என்ற பானை
* கல்+நெய் = கன்னெய் = petrol here denoting petroleum
#ஆயிரம் மாத்திரி = கிலோ மீட்டர் (here it denotes the size of Riyadh)
** பதனித்தல் = air-conditioning
$ பொதினம் = business; பொதினர் = businessman
@ seven and half million barrels per day = the present production of Oil in Saudi Arabia

***
poo@giasmd01.vsnl.net.in