Friday, January 31, 2014

Locker = வைப்புழி

அண்மையில் தினமணியின் சிறுவர் மணி படித்துக்கொண்டிருந்தேன். (25/1/2014 வெளிவந்தது. பக்கம் 29) அதில் ஒரு துணுக்குச் செய்தி படித்தேன்.
 
------------------------------------
வங்கிகளில் உள்ள ‘லாக்கர்’களை ‘பெட்டகம்’ என்று சொல்லுகிறோம் இப்பொழுது.
 
ஆனால், சங்க காலத்திலேயே அதற்கு ஒரு நல்ல சொல் வழங்கியிருக்கிறது. அது..... வைப்புழி.
 
வைப்புழி என்றால் பொருள் வைக்கும் இடம் என்று பொருள்.
 
திருக்குறள், நாலடியார் ஆகிய நூல்களில் ‘வைப்புழி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
 
- முக்கிமலை நஞ்சன், எடக்காடு.
 
-------------------------------------
 
இந்த நண்பர் எழுதியதைப் படித்து வியந்தேன்.(நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்? உழி என்றால் இடம்.  வைக்கும் உழி வைப்புழி. (வைப்புப் பணம் = deposit என்று தமிழ்நாட்டிற் சொல்கிறோமே? வைப்பகம் என்றே தமிழீழத்தில் வங்கிகளைச் சொல்வார்கள்.)
 
வைப்புழி என்பது கருத்தாழம் பொருந்திய கூட்டுச்சொல்.  இந்தக் காலத்தில் இதை விடுத்துப் பெட்டகம், சேமப் பெட்டகம் என்று நீட்டி முழக்கிச் சொல்லுகிறோம். வைப்புழியிருக்கச்  சேமப் பெட்டகம் என்பது அருவியிருக்க  நீர்வீழ்ச்சி என்றழைப்பது போற் சுற்றிவளைத்து அமைந்த சொல்லாகும். 
 
 தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட மு.சண்முகம் பிள்ளையின் தமிழ்-தமிழ் அகரமுதலியைப் பார்த்தேன். வைப்புழி என்ற சொல் இந்தப் பொருளில் இருக்கிறது. இன்று எந்த வங்கியாவது பயன்படுத்துகிறதோ? பழஞ் சொற்களைப் புதுக்காமல், இன்னும் புதுப் புதுச்சொற்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தால் எப்படி? அந்தக் குறளையும், நாலடியாரையும் யாராவது தேடியெடுத்துப் போடலாமே? கூடவே இந்தச் சொல்லை மற்ற மடற்குழுக்கள், வலைப்பதிவுகள், முக நூல், கீச்சு எனப் பரப்பலாமே?
 
என்னதொரு சோகம் பாருங்கள்? லாக்கர் என்றே வங்கி செல்லும் பொதுமக்கள் எங்கும் ஆங்கிலத்திற் சொல்கின்றனர். இப்படிச் சொல்வதால் தமிழை விட்டு வெகு தொலைவு விலகி நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.  தமிங்கிலம் வளர்க்கத் தலைப்படுகிறோம். கையிற் செல்வத்தை வைத்து வேறெங்கோ அலைகிறோம்.  நம் வயிரங்களைக் கூழாங்கற்களாய்த் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். 
 
கண்ணிருந்தும் குருடராய் நாட்கழித்தால் எப்படி?
 
அன்புடன்,

இராம.கி.

Sunday, January 26, 2014

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ?

பேரா. அண்ணாமலையின் கட்டுரை மொழியார்வங் கொண்ட எல்லாத் தமிழராலும் படிக்கப் படவேண்டிய ஒன்றாகும்.
 
தமிழ் நம் மாநிலத்தில் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக, வணிக மொழியாக, கல்வி மொழியாக, நாம் எல்லோரும் அன்றாடம் பயன்படுத்தும் மொழியாக  ஆகாவிட்டால் அழிந்துவிடும் என்று என்னைப் போன்றோர் கூறுவதைக் கேட்காவிட்டாலும், மொழியியற் பேராசிரியர் கூறுவதையாவது படித்து உணரலாமே? அவரவர் புலங்களில், பதிவுகளில், மடற்குழுக்களில் இதைப் பற்றிப் பேசலாமே? ஒரு பொதுக்கருத்தை எடுத்துக்கூறி இந்தத் திராவிட ஆட்சியாளர்களின் போக்கை  மாற்றலாமே?
 
இந்த பாழாய்ப் போன ஆங்கிலத்தைக் கட்டிக்கொண்டு எத்தனை நாள் மாரடிப்பது? அந்தக் காலத்துச் சங்கதம் போல் இந்தக் காலத்தில் ஆங்கிலம் ஆகிக் கொண்டிருக்கிறது. நாம் யாரும் உணர மாட்டேம் என்கிறோம். நாமே நம் தலையைக் கொடுத்து அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். தமிழைப் பயன்படுத்துவது குறைந்துகொண்டே போகிறது. தமிங்கிலம் என்னும் கிரியோல் மொழி உருவாகிக் கொண்டிருக்கிறது. நம் இளைஞர்கள் “தமிழ் பேச, எழுதத் தெரியவில்லை” என்று சொல்லத் தலைப்பட்டுவிட்டார். நாமும் ”record dance" பார்த்துக் கைதட்டிக் கொண்டிருக்கிறோம். கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ?  மேடைகளில் கவலுற்று இதுபற்றிப் பேசுவோர் எங்கே என்று தேடவேண்டியிருக்கிறது.
 
படித்த அறிவுய்திகளே இதற்கு முற்றிலும் காரணமாவர். 
 
அன்புடன்,
இராம.கி.

From: E. Annamalai
Sent: Sunday, January 26, 2014 10:05 AM
Subject: [ctamil] Verncaularization


I posted in the list some time ago about the danger of Tamil becoming a vernacular language. The full article (and articles by others on language endangerment) can be seen in the e journal Language Endangerment and Preservation in South Asia, that is available  online.It is downloadable.
 

Tuesday, January 14, 2014

தமிழ்க் கணிமைச் சந்தை

தமிழகத்திற் பொத்தகச் சந்தை விரிவடைந்து வருகிறது என்ற நான் சொன்னதைப் பார்த்து நண்பர் நாக.இளங்கோவன், “கடந்த 10-15 ஆண்டுகளில்
தமிழ்க் கணிமைச் சந்தையில் வளர்ச்சி இருப்பதாகக் கருத முடியவில்லை” என்று கூறி, “தமிழ்க் கணிமைத் துறையில் அறிவாளிகள் இல்லையா? மதிக்கூர்மை இல்லையா? சந்தையைப் பற்றிய சிந்தனை இல்லாத ஒரு துறை வளர்கிறது என்று சொன்னால் எங்கேயோ பிழை இருக்கிறது
என்றே பொருள்” என்றுஞ் சொன்னார். ”பொத்தகச் சந்தையின் வளர்ச்சியைப் பார்த்து தமிழ்க் கணிமைத் துறை பாடம் பெற நிறையவே இருக்கிறது” என்று தன் முன்னிகையில் (comment) முடித்திருந்தார்.

என்னுடைய பின்னூட்டைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
......................................................

தமிழ்க் கணிமைச் சந்தை வளர்கிறது என்பதெல்லாம் நானறிந்தவரை வெறுங் கற்பனையே. எவ்வளவு விற்றிருக்கிறது என்று சொல்லுவதற்குக் கூட ஒரு புள்ளிவிவரங் கிடையாது. ”இந்தப் பூனை வெளியே வந்துவிடுமோ?” என்று ஒவ்வொருவரும் குச்சுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார்.

இது பற்றியெல்லாந் தமிழ் மக்களுக்குங் கவலையிருப்பதாய் நான் நினைக்கவில்லை.. இதற்கான அக்கறை படித்தவருக்குங் கிடையாது. படிக்காதவருக்குங் கிடையாது. தமிழ்நாட்டரசிற்குங் கிடையாது. (சொவ்வறை உருவாக்கியவர் எல்லாம் “வாங்குக” என்று கூவித்தான் அழைக்கிறார். ஆனால் வாங்குவதற்கு ஒரு தேவை (demand) இருக்கவேண்டுமே? யாருக்காவது தமிழில் ஒரு விண்ணப்பம், ஆவணம், பட்டியல் உருவாக்கவேண்டுமென்ற கட்டாயம் இந்த நாட்டில் இருக்கிறதா? அதுதான் எல்லாவற்றையும் “இங்கிலிபீசில்” இருக்கும்படி இன்றியமையாத கட்டாயம் இங்கு உருவாக்கப் பட்டுவிட்டதே? இதைப் பற்றியெல்லாம் பேசினால் “நாம் அரசியல் பேசுகிறோமாம்”. எனவே கண்ணியம் மிகுந்த நுட்பியலாளர்கள் அமைதி காப்பார்கள்.

தேவை பற்றிப் பேசாது, அளிப்பு (supply) பற்றி மட்டுமே இத்தனை காலம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி கணிமைச்சந்தையைக் கூட்டும் முயற்சி முன் நகரும்? தேவையைக் கூட்டுவது பற்றி தமிழ்க் கணிமை வல்லுநர் என்ன பேசியிருக்கிறார், சொல்லுங்கள்? (ஏதோ, கணிமையின் மேற் கரிசனங் கொண்டிருக்கும் பொதுவான நாலுபேர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்  அவ்வளவு தான்.)

இந்த நாட்டிற் தான் தமிழ் மொழி ஆட்சி மொழியாக, நய மன்ற மொழியாக, வணிக மொழியாக, கல்வி மொழியாகப் புழங்கவில்லையே? எல்லோரையும் (இந்த எல்லோர் என்பது தமிழக அளவில் 7.5 ~ 8 கோடி மக்கள், உலக அளவில் இன்னும் 1.5 ~2 கோடி மக்கள்)  விழுந்தடித்து ஆங்கிலப் புழக்கத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்றும்,  ஆங்கிலந்  தெரிந்தோர் ஒரு சாதியென்றும், ஆங்கிலந்  தெரியாதோர் ஒரு சாதியென்றும் ஆக்கி ஒரு கொடூரமான சாதியாட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறாரே? இதைப்பற்றி எந்த அரசியல்வாதி பேசுகிறார்? இன்னின்ன மாற்றங்கள் செய்தால் தமிழ்ப்புழக்கங் கூடும் என்று இணையத்தில் எந்தவொரு மடற்குழுவாவது பேசியிருக்கிறதா? வலைப்பதிவு, முகநூலிற் பேசியிருக்கிறாரா? கல்லூரி மாணவர், ஆசிரியர்? தாளிகைகள், நாளிதழ்கள்? குமுக முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்?  தமிழக அறிவுய்திகள் (intelligentia)? ‘தமில் வால்க’ என்று கூப்பாடு போடுவதற்கு மட்டுமே ஆள், படை சேருகிறது.

ஆனாலும் தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதாய் ஏதேதோ திட்டம் போடுகிறோம். கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்படுகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

2014 பொத்தக வியந்தை


2014 சென்னைப் பொத்தக வியந்தையில் (Book fair) நான் வாங்கிய நூல்களின் பட்டியலைக் (நூலின் பெயர், ஆசிரியர் பெயர், வெளியீட்டின் பெயர், பிறைக்குறிக்குள் வாங்கிய கடைகளின் பெயர்கள்)  கீழே கொடுத்துள்ளேன். இவை என்னுடைய இற்றை விழைவைப் பொறுத்தன. நண்பர்களின் கவனத்திற்கும், பரிந்துரைக்குமாய் இவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.நீங்கள் வாங்கியதையும் இங்கு பரிமாறிக்கொள்ளுங்கள். இந்தப் பரிமாற்றம் எல்லோருக்கும் பயன்படும். 
 
பொத்தக வியந்தையில்  எந்த ஆண்டைக் காட்டிலுங் கூடுதலாய்க் 777 கடைகள் இருக்கின்றன. மக்கள் நெரிசலும் கூடவே இருக்கிறது. பொத்தகங்களின் விலை வாசியும் கன்னாப் பின்னாவென்று கூடியிருக்கிறது. எல்லாக் கடைகளும் ஏறியிறங்க வேண்டுமானால் குறைந்தது 6,7 மணி நேரங்கள் ஆகலாம். (இத்தனைக்கும் முழுதும் ஆங்கிலப் பொத்தகங்கள் மட்டுமே விற்கும்  கடைகளுக்குள் நான் போகவில்லை. ஓரளவு நான் எதிர்பார்த்த கடைகளுக்குள் மட்டுமே போய் வந்தேன்.) 
 
பொங்கலுக்கு அப்புறம் இன்னும் ஒருமுறை போவதாய் வைத்துள்ளேன். பள்ளிச்சிறுவர்களுக்காக எங்கள் அறக்கட்டளையின் வழி வாங்கும் பொத்தகங்களை அடுத்த முறை போகும் போது தேர வேண்டும். (இந்த ஆண்டு எனக்காகப் புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் வாங்கவில்லை. கொஞ்ச காலம் இவற்றைத் தள்ளி வைத்திருக்கிறேன். எப்பொழுது மாறுமோ, தெரியவில்லை. வாங்கியவை எல்லாமே புதினமல்லாதவற்றைச் சேர்ந்தவை.)
 
படிக்கும் பழக்கம் மக்களிடையே கூடியுள்ளதா என்று ஆராய்ச்சியாளர்கள் தான் சொல்லவேண்டும்.  
 
அன்புடன்,
இராம.கி.
---------------------------------------------------------
 
1. கல்வெட்டுச் சொல்லகராதி, தி.நா. சுப்பிரமணியன், தமிழகத் தொல்லியற் துறை வெளியீடு, (தமிழகத் தொல்லியற் துறை) 
2. கருவூர் அகழாய்வு, கி.ஸ்ரீதரன், து.துளசிராமன், இரா.செல்வராஜ். சீ.வசந்தி தமிழகத் தொல்லியற் துறை வெளியீடு, (தமிழகத் தொல்லியற் துறை)
3. கொடுமணல் அகழாய்வு, ர.பூங்குன்றன், தி.சுப்பிரமணியன், சீ.வசந்தி, வெ.இராமமூர்த்தி, இரா.செல்வராஜ், தமிழகத் தொல்லியற் துறை வெளியீடு, (தமிழகத் தொல்லியற் துறை) 
4. Archaeological excavations of Tamilnadu vol.I, S.Vasanthi, V.Ramamurthi, M.Kalaivanan, S.Sreekumar, தமிழகத் தொல்லியற் துறை வெளியீடு, (தமிழகத் தொல்லியற் துறை) 
5. Archaeological excavations of Tamilnadu vol.II, R.Poonkuntran. K.Sridharan, S.Vasanthi, V.Ramamurthi, தமிழகத் தொல்லியற் துறை வெளியீடு, (தமிழகத் தொல்லியற் துறை) 
6. தென்னிந்திய மருத்துவ வரலாறு, டாக்டர் ரா.நிரஞ்சனாதேவி, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, (NCBH)
7. சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள், ந.இராணி, NCBH வெளியீடு, (NCBH)
8. வீரசோழியம், புத்தமித்திரனார்/கா.ர.கோவிந்தராஜ முதலியார் பதிப்பு, NCBH வெளியீடு, (NCBH)
9. சமணம், ஆர்.பார்த்தசாரதி, NCBH வெளியீடு, (NCBH)
10. சங்க இலக்கியப் பதிப்புரைகள், இரா.ஜானகி, பாரதி புத்தகாலயம் வெளியீடு, (பாரதி புத்தகாலயம்)
11. அறியப்படாத தமிழ் உலகம், பா.இளமாறன், ஐ.சிவகுமார், கோ.கணேஷ், பாரதி புத்தகாலயம் வெளியீடு, (பாரதி புத்தகாலயம்)
12. இந்திய நாத்திகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, பாரதி புத்தகாலயம் வெளியீடு , (பாரதி புத்தகாலயம்)
13. கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், இரா.பஞ்சவர்ணம், தாவரத் தகவல் மையம்வெளியீடு, (panuval.com)
14. தொல்காப்பியத் தாவரங்கள், இரா.பஞ்சவர்ணம், தாவரத் தகவல் மையம், (panuval.com)
15. கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும், மரு.வீ.புகழேந்தி, மரு.ரா.ரமேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு, எதிர் வெளியீடு, (எதிர் வெளியீடு)
16. மணிமேகலை, உ.வே.சா.நூல்நிலையம் வெளியீடு, (தினமலர்)
17. பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும், ஜோசப் இடமருகு, அலைகள் வெளியீட்டகம் வெளியீடு, (அலைகள் வெளியீட்டகம்)
18. நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை, வெள் உவன், தமிழினி வெளியீடு, (தமிழினி)
19. கோவில்-நிலம்-சாதி, பொ.வேல்சாமி, காலச்சுவடு வெளியீடு, (காலச்சுவடு)
20. கண்ணகி தொன்மம், சிலம்பு.நா.செல்வராசு, காலச்சுவடு வெளியீடு, (காலச்சுவடு)
21. கௌதம புத்தர், மயிலை சீனி வேங்கடசாமி , மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு, (மணிவாசகர் பதிப்பகம்)
22. தமிழரின் எழுத்தறிவு, நடன.காசிநாதன், மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, (மணிவாசகர் பதிப்பகம்)
23. கலித்தொகை - பரிபாடல் ஒரு விளிம்புநிலை நோக்கு, ராஜ்கௌதமன், விடியல் பதிப்பகம் வெளியீடு, (விடியல் பதிப்பகம்)
24. கட்டுமரத்திலிருந்து கப்பல் வரை, அ.சற்குணன், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, (பழனியப்பா பிரதர்ஸ்)
25. குமரிநாட்டில் சமணம், சிவ.விவேகானந்தன், காவ்யா வெளியீடு, (காவ்யா)
26. நெல்லைத் துறைமுகங்கள், முத்தலங்குறிச்சி காமராசு, காவ்யா வெளியீடு, (காவ்யா)
27. ஸ்ரீ வைஷ்ணவம், வேணு சீனிவாசன், கிழக்குப் பதிப்பகம் வெளியீடு, (கிழக்குப் பதிப்பகம்)
28. The later Mauryas 232 BC to 180 BC, Hector Alahakoon, Munshiram Manoharlal வெளியீடு, (Munshiram Manoharlal)
29. An analytical study of four Nikaayas, D.K.Barua, Munshiram Manoharlal வெளியீடு, (Munshiram Manoharlal)
30. Buddhist Logic I, Th.Stcherbatsky, Munshiram Manoharlal வெளியீடு, (Munshiram Manoharlal)
31. Buddhist Logic II, Th.Stcherbatsky, Munshiram Manoharlal வெளியீடு, (Munshiram Manoharlal)
32. New dimensions in Tamil Epigraphy, Appasamy Murugaiyan, Cre-A வெளியீடு, (Cre-A)
33. வள்ளுவத்தின் வீழ்ச்சி - II ed, குணா, தமிழக ஆய்வரண் வெளியீடு, (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்)
34. எண்ணியம், குணா, தமிழக ஆய்வரண் வெளியீடு, (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்)
35. நாற்றங்கால், குணா, தமிழக ஆய்வரண் வெளியீடு, (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்)
36. தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துகள், ப.துரைசாமி, இரா.மதிவாணன், சேகர் பதிப்பகம் வெளியீடு, (சேகர் பதிப்பகம்)
37. சிலப்பதிகார ஆராய்ச்சி, வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம் வெளியீடு, (சேகர் பதிப்பகம்)
38. பாணர் இனவரைவியல், பக்தவத்சல பாரதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
39. அறிவியல் நோக்கில் மொழி, செ.சண்முகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
40. உலகச் செம்மொழிகள், கரு.அழ.குணசேகரன், செ.ஜீன் லாறன்ஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
41. Sangam Classics: New Perspectives, A.Pandurangan, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
42. அபிதான சிந்தாமணி, ஆ.சிங்காரவேலு முதலியார், சீதை பதிப்பகம் வெளியீடு, (மீனாட்சி புத்தக நிலையம்)
43. போதி தர்மர், அழகர் நம்பி, சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு, (New Book Lands)
அன்புடன்,
இராம.கி.

Saturday, January 11, 2014

Forum

தாளிகைச்சொற்கள் பற்றிய என் வலைப்பதிவு இடுகையின் பின்னூட்டாக இராசு சரவணன் என்ற ஒரு நண்பர் forum என்பதற்கு மன்றம் என்பதைக் காட்டிலும் வேறு சொற்களுண்டா? என்று கேட்டிருந்தார்.

(முல்>(மல்)>மன்>மன்று>மன்றம் என்று சொல்வளர்ச்சி நீண்டு அவை அல்லது தொகுதிப்பொருளைச் சுட்டும்.  தொகுதி என்பது வெளியில் இருக்கலாம், ஒரு கட்டடத்தின் உள்ளிருக்கலாம்.  பூதிகமாய் இருக்கலாம், பூதிகமல்லாது கருத்துப்புலத்தில் இருக்கலாம்; நேரடியாக இருக்கலாம், மறைமுகமாக இருக்கலாம். இப்படிப் பல்வேறாய்  விரியும். மன்று என்பது தமிழிற் பொதுமையான சொல்; விதப்பான சொல்லன்று. மன்றம் என்பது association, assembly போன்றவற்றிற்கும் வேறிடங்களிற் பயன்படுவதால் அதையே forum என்பதற்கும் பயன்படுத்துவதில் சிக்கல் எழாதா? - என்றெண்ணிச் சொற்துல்லியம் வேண்டிக் கேட்டாரோ, என்னவோ? எப்பொழுதும் சொற்துல்லியம் தேடிப் பார்க்கும் ஆளான எனக்கு, இருப்பதை அள்ளித் தெளித்து பூசி மெழுகும் வேலையில் பெரும்பாலும் இசைவு கிடையாது.)
  
நானும் forum என்பதற்கு மன்றம் என்ற சொல் பல இடங்களிற் புழங்குவதைப் பார்த்திருக்கிறேன். forum hub என்பதை மன்ற மையம் என்றும் எழுதுவார்கள். (இணையத்தில் ஒரு காலம்
பலரும் உலவிக் கொண்டிருந்த இடம் மன்ற மையம் என்பதாகும். நானும் அங்கு பெரிதாகப் பங்களித்திருக்கிறேன். இப்பொழுது வெகு அரிதாகவே அங்குபோய்ப் பார்க்கிறேன். அந்தத் தளம் என்னவாயிற்று என்று பார்க்கவேண்டும்.)
மன்றம் என்னும் பொதுமைச் சொல்லைக் காட்டிலும் விதப்பான இன்னும் மரபுசார்ந்த சொல்லைப் பரிந்துரைக்க முடியும். ஆனால் எத்தனை பேர் அதை எடுத்துக்கொள்வர் என்ற தயக்கமுண்டு.  ஏதோவொரு காரணம் பற்றி ஒரு சொல் பழக்கமாகிவிட்டால் அதைப் பின்னால் மாற்றுவது தமிழ்ச்சூழலிற் கடினமாகிவிடுகிறது. இந்தப் பேச்சு/எழுத்துப் பழக்கமே நமக்குத் தடையாகிப் போகும். [அருவியிருக்க நீர்வீழ்ச்சியை நம்மிற்பலர் இற்றைக்காலத்திற் பயன்படுத்துகிறோமே; நினைவுக்கு வருகிறதா? அருவியை அங்கெல்லாம் எழுத நம்மில் எத்தனை பேர் அணியமாகிறோம்? தமிழ்நடை சிறிது சிறிதாகக் கடினப்பட்டு வருகிறது; சுற்றி வளைத்து ஆகிறது. சங்கத் தமிழின் எளிமையை மறந்து பலக்கிய (coplex) சொற்களையும் சொற்றொடர்களையும் இப்பொழுது நாம் கையாண்டு வருகிறோம்.]
இப்படித்தான் director க்கு இணையாய் இயக்குநர் என்று அள்ளித் தெளித்த கோலமாய் 1967க்கு அப்புறம் பேராயத்தின் ஆட்சியிலிருந்து தி.மு.க. ஆட்சி வந்தபோது எல்லா இடத்திலும் தமிழ்நாட்டிற் குறித்தார்கள். அதே பொழுது operator என்பதற்கும் இயக்குபவர் என்று சொன்னார்கள். இந்த இரட்டைப் பழக்கத்தால், director க்கும் operator க்கும் இடையே புரிதற் குழப்பம் இருந்தது. எண்ணிப் பார்த்தால் இருவரும் ஒன்றா? இதற்கு மாற்றாகச் சொற்துல்லியம் வேண்டி, 1969/70 களில் கோவை நுட்பியற் கல்லூரியில் ”இயக்குநர் என்பதை operator க்கு வைத்துக் கொண்டு  director க்கு நெறியாளர் (நெறியை ஆள்பவர்) என்று சொல்லலாம்” என்று எங்களிற் பலரும் உரைத்தோம். 43 ஆண்டுகள் கழித்து உன்னித்துப் பார்த்தால், நெறியாளர் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தான் இன்னும் புழங்குகிறது. இயக்குநர் என்ற தப்பான வழக்கே director க்கு இணையாகப் பெரும்பான்மை புழங்கிக் கொண்டிருக்கிறது. என்ன சொல்வது? நம்மைச் சுற்றிலும் உள்ள மொழிப் பயன்பாடு விந்தையானது. அது உங்களைக் கேட்டுக்கொண்டோ, என்னைக் கேட்டுக்கொண்டோ நடப்பதல்ல.
[இன்னொன்றும் நினைவிற்கு வருகிறது. இயல்பியல் என்பதை physics க்கு இணையாகச் சொன்னோம். அது எங்கோ தப்பாகி இயற்பியல் என்று மாறுதலடைந்து இன்று பெருவழக்காகிப் போனது. இத்தனைக்கும் இயற்பு என்ற சொல்லே தமிழிற் கிடையாது. (இயல் எனும் பகுதியோடு பு என்ற ஈற்றையொட்டினால் இரண்டு விதச் சொற்கள் எப்படியெழும்பும்? தமிழிலக்கணம் ஒன்றைத்தானே சரியென்று சொல்லும்?) தமிழாய்ந்தோர் யாரும் இப்பயன்பாட்டில் ஏதுங் கேட்காமலிருக்கிறார். பலநேரம் எச்சொல் நிலைக்கும்? எது மறையும்? - என்றுரைக்கவே முடிய வில்லை. என்னளவில் நான் மாறிக் கொள்வதே நல்லதென்று நான் அமைகிறேன். இப்பொழுதெல்லாம் இயல்பியலைப் பயன்படுத்துவதேயில்லை. இயற்பியல் என்பது தவறென்பதால் அதையும் எழுதுவதில்லை. பூதியல் என்று புதுச்சொல் படைத்து physics க்கு இணையாக எழுதுகிறேன். இந்தச் சொல்லாவது சரியான முறையில் ஏற்கப் படுகிறதா என்று பார்ப்போம்.]    
இப்பொழுது நீங்கள் கேட்ட forum இன் சரியான பொருளுக்கு வருகிறேன். John Ayto வின் Bloomsbury Dictionary of Word origins இல்
“Originally Latin forum denoted an 'out-of-doors place' - it was related to foris 'out-of-doors, outside and to fores 'door', a distant cousin of door.It came to be used for any outdoor open space or public space, and in particular for a market place (the most famous of which was the one in Rome, where public assemblies, tribunals, etc were held). Other English words from the same source are foreign, forest, forensic 'of legal proceedings' (from Latin forensis 'of a forum as a place of public discussion')”
என்று குறித்திருப்பார்கள். நம்மூர் நாட்டுப்புற வழக்கிற் பார்த்தால் பெரிய வீடுகளின் உட்புறம் ஒரு திண்ணையும், முற்றமும், அடுப்படியும், அறைகளும், குடும்பத்தினர் வாழிடங்களும் இருக்கும். உட்புறத் திண்ணையை அடைவைத்து அழைக்காது ‘திண்ணை’ என்றுஞ் சொல்லுவர். திண்ணையை ஒட்டினாற் போல் வீட்டுக்கு வெளியே பெருநிலைக் கதவிற்கு (main door) அப்புறம் உள்ள திண்ணையை வெளித்திண்ணை என்பர். வீட்டிற்கு வரும் பொதுவான மாந்தரை வெளித்திண்ணையில் உடகாரவைத்தே பேசிக்கொண்டிருப்பர். பல நாட்டுப்புறங்களில் வெளித்திண்ணைப் பேச்சு பல்வேறு உரையாடலுக்கும் பெயர் போனது. கொஞ்சம் (உறவாலோ, பழக்கத்தாலோ) நெருங்கிய பின் தான் விருந்தாளிகளை பெருங்கதவம் தாண்டி உட்திண்ணைக்கோ, முற்றத்திற்கோ வீட்டுக்காரர் அழைப்பர்.
இந்த வெளித்திண்ணை தான் forum என்பதாகும்.. (உட்திண்ணை அகத்திண்ணையானால்) இதைப் புறத்திண்ணை என்றும் புறவெளி (outside space, hence meeting space) என்றும் சொல்வதிற் பொருளுண்டு. புறவம் என்பது இன்னுஞ் சுருக்கமாயும் பொருத்தமாயும் இருக்கிறது. நம்மூர் மரபிற்கும் அணைத்தாற்போல் அமையும்.
forum = புறவம்
forum hub = புறவத் திண்ணை
democratic forum = சனநாயகப் புறவம்
நாம் வெவ்வேறு புறவங்களிற் பங்குகொள்கிறோம் = we take part in various fora.

அன்புடன்,
இராம.கி.

Thursday, January 09, 2014

தாளிகைச் சொற்கள்

ஒரு தனிமடலில் கேட்டிருந்த தாளிகைச் சொற்களுக்கான பட்டியல்.  இங்கு பலருக்கும் பயன்படட்டும் என்று கொடுத்துள்ளேன். 
 
magazine = தாளிகை
journal = இதழிகை
bullettin = குறிகை
gazette = பட்டிகை
newspaper, daily = நாளிதழ்
weekly = வாரிகை
monthly = மாதிகை
bimonthly = இருதி
periodical = பருதி
diary = நாளிகை
daybook = நாள்நூல்
record =  பதிகை
reporter = நுவலிகை
 
அன்புடன்,

இராம.கி.

Saturday, January 04, 2014

அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 5

தமிழ்கூறும் நல்லுலகில் இற்றைக் குமுகாயம்(society)> குமுகங்கள்(communities) என்பவை தேசிய இனம்(nationality)> இனக்குழுக்கள்(tribes) எனும் பழங்கட்டுமானத்திற் பிறந்தவையாகும். குமுக/குமுகாய நினைவுகூரல்கள் மூதாதைக்கு அமைவதால், இனக்குழுக்கோயில், பெருங்கோயில்களின் நிறுவன உருமானங்களாக (institutional manifestations) நிலைகொள்ளும். அப்படி உள்ளவையே திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகமென நடைபெறும் முருக விழாக்களாகும். அதேபொழுது முன்னோர் படைப்புகள் வேறு மாதிரி. மிஞ்சினால் இவை 7 தலைமுறைக்கு மேல் நீளாது. குலம்(clan)> கரை(giant family that started 7 generations ago)> வளவு (paternally related joint families living around a quadrangle)> குடும்பம்(joint family)> குடும்பு(nuclear family) என்றே சிவகங்கைப்பக்கம் குமுக அலகுகளமைவதால், முன்னோர் படைப்பும் அதே அலகுகளிற் கடைப்பிடிக்கப்படுகிறது.

படைப்பென்பது தனியார் குடும்பில் நடக்கும் நிகழ்ச்சியன்று; தந்தைவழி உறவினர் சேர்ந்து, கூடியாக்கியுண்டு, (பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தல்) முன்னோரை நினைவுகூரும் இது வீட்டுப்படைப்பு, பொதுப்படைப்பென இருவகைப்படும். பொதுப்படைப்பு குலம்/கரை அளவில் நடைபெறுவது. வீட்டுப்படைப்பு வளவு/குடும்ப அளவில் நடைபெறும். படைப்பிற் கலந்து கொள்வோர் முன்னோரிடம் விதப்பாக வேண்டுவதும், வேண்டியது நடந்துமுடிந்தால் செய்வதாக ஏற்றவற்றைச் செய்துமுடிப்பதும் இயல்பானவை. முன்னோரைத் தொழுவது ஒரு தனிப்பட்ட தெய்வத்தைத் (personal god) தொழுவதாகிறது. முச்சந்தி கண்டவிடமெலாம் இற்றைநகர மக்கள் பிள்ளையார் வைத்துக் கும்பிடுகிறார்களே அதுபோல அச்சப் படுவதற்கும், வேண்டுதல் கேட்பதற்குமாய் அணங்கெனும் கருத்தீடு, நாட்டுப்புற மக்களுக்கு வாய்ப்பாக அமைந்தது போலும்.

பொதுவாகப் படைப்பிற்குரிய தந்தைவழி உறவினர் அனைவரையும் கட்டாயங் கலந்துகொளப் பணிப்பர். (அனைவரும் கூடியவரை பணிவர். முன்னோர் ஆசிதரும் நிகழ்வில், அணங்கோடு ‘விவகாரம்’ வைக்கலாமா?) ஆண்கள் வீட்டுப்படைப்பில் மட்டுங் கலந்துகொள்வர். தாய் வீட்டுப்படைப்பிலோ, மாமனார் வீட்டுப்படைப்பிலோ பொதுவாகக் கலந்து கொள்ளார். பெண்கள் புகுந்தவீட்டில் மட்டுமன்றி, பிறந்த வீட்டுப்படைப்பிலும் கலந்துகொள்ள முடியும். பொதுவாக மகன் வழியினர் தான் படைப்பது வழக்கம். அரிதாகப் மகள்வழியினர் வேண்டிக்கொண்டு தாய்வீட்டில் வந்து படைப்பதுமுண்டு.

புதன், வியாழன், வெள்ளி ஏதேனுமொன்றில் படைப்பு நடைபெறும். அன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று அருச்சனைசெய்து வழிபட்டுத் தெளித்தமும் (=தீர்த்தமும்), திருநீறும் பெற்று வருவர். வேளகாரர் வீட்டில் காலையில் விதைநெல் கொடுத்தால், அவர்கள் அதைப்பெற்றுப் படைப்புக் காரருக்குத் திருநீறு கொடுப்பார். அதைக்கொணர்ந்து படைப்புவீட்டிற் திருநீற்று மடலிற் போட்டுவைப்பர். படைப்பின் போது விழுந்து கும்பிட்டு அத்திருநீற்றைப் பூசிக்கொள்வர்.

முன்னோர் நினைவாய், (கோடித் துணியோ, 1,2 ஆண்டு முந்தியதோ) பருத்தியாலான வேட்டி, துண்டு, தலைப்பாகையாகும் உருமாற் துண்டு, சேலை ஆகிய ஆடைகளையும், முன்னோர்
எச்சங்களான உருத்திராக்க மாலை, தூவல் (பேனா), சட்டைப்பொத்தான், கண்ணின்அணியாடி, திறவிக்கொத்து, பொடிப்பேழை, சுருட்டு - வெற்றிலைப் பெட்டிகள் எனச் சிறு விதப்புப் பொருள்களை ஓர் ஓலைப்பேழையுள் (கடகத்துள்) போட்டு வீட்டுச் சாமியறையில் உத்தரத்திற்/வளையத்திற் தொங்கவிட்டிருப்பார். வார வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றும்போது இப்பேழைக்கும் பூப்போட்டு வழிபடுவதுண்டு.

பிற்பகல் 2 மணியளவில் ஆண்கள் மட்டும் உத்தரத்திற் தொங்கும் பேழையைக் கீழிறக்கி, நினைவெச்சங்களைப் பேழைக்குள்ளேயே வைத்துத் துணிகளைமட்டும் தனியேயெடுத்து ஆறு, ஏரி, கண்மாய், ஊருணி (அல்லாக்கால் வீட்டுக்கேணி) நீரில்நனைத்து அலசிப்பிழிந்து பின் தரையிற்படாமற் துணியைக் காயப்போட்டு மடித்தெடுத்துப் பேழைக்குள் சேர்ப்பர். (இத்துணிகளை முன்னோர் விரும்பி அணிவதாய்க் கொள்வர்.) துணிகள் காய்கையில் ஒருதடவை தரையிற் பட்டாலும், மீளத் தூய்மைப்படுத்துவர். காயும் துணிகளைத் தாண்டக்கூடாதென்பதும் ஒரு மரபாகும். இந்தத் தூய்மைப்பணி ஆண்களுக்கு மட்டுமேயுரியது.
அடுத்துப் படைப்பறை முன்னுள்ள முற்றத்தில் மண்பரப்பி மகளிர் விறகடுப்பிற் சமைப்பர். (இதில் ஆண்கள் உதவியுண்டு.) செய்யும்போது சுவை பார்க்காது, எச்சிற் படாது அச்சத்தோடும், ஆழ்ந்த பற்றி(பக்தி)யோடும் செய்வர். வாழைக்காய், பலாக்காய், அவரைக்காய்ப் பொரியலும், புடலங்காய்க் கூட்டும், வெண்டைக்காய், மாங்காய்ப் பச்சடியும், கத்திரி, கருணைக்கிழங்கு, பரங்கிக்காய்க் குழம்பும் என காய்கறிவகைகளைச் செய்வர். (மேலைக்காய்கறிகள் சுற்றரவாகப் பங்குபெறாது. தக்காளி, மிளகாய் மட்டும் விதிவிலக்காகும். அந்தக் காலமானால், புளியும், மிளகும் பகரியாய் இருந்திருக்கும்.) இவற்றோடு கற்கண்டு வடை, உழுந்து வடை, கருப்பட்டிப் பாற்சோறு, பாயசம் வைப்பது உண்டு. கருப்பட்டிப் பாற்சோறு படைப்பிற் கட்டயமாய்க் கொடுக்கப்படும் பெருஞ்சோறாகும் (=ப்ரசாதம்). படைப்பிற்குரிய முன்னோர் கறி விழைவுள்ளவராய் இருந்தால் ஆட்டுக்கறியோ, கோழிக்கறியோ சேர்ந்துகொள்ளும். மீன் வைக்கமாட்டார்.

இரவு 7 மணியளவில் ஆண்கள் படிம அலங்காரஞ்செய்வர். (இதிலும் மகளிர் தொடமாட்டார்.) காய்ந்த வேட்டி, துண்டு, உருமாற் துண்டு, சேலையைக் கொய்து, விசிறிமடிப்பாக்கி, நுனியில் முடிச்சிட்டு பெரியவர் கட்டுவதுபோல் வைப்பார். உருமாற்துண்டை தலைப்பாகையாய்க் கட்டுவர். இவ்வாறன்றித் துணிகளை அடுக்காக ஒன்றின்மேலொன்றாக வைத்தும் படைப்பதுண்டு. முன்சொன்ன விதப்புப் பொருள்களை அருகேவைத்து முன்னோரை நினைவுபடுத்துவர். ஆண்முன்னோருக்கென உருத்திராக்கமாலை, சிவகண்டிமாலை போன்றவற்றைத் தலைப்பாகையைச் சுற்றிப் பொருத்துவர். பெண்முன்னோருக்காக கழுத்திரு, தாலி, மோதிரம், கால்மிஞ்சி போன்ற நகைகளையும் சேலைத் துணிமேல் அணிந்திருப்பதுபோல் வைப்பார். ஆண்முன்னோர் சுருட்டு, புகையிலை விரும்பியிருந்தால், அவற்றிலும் ஒன்றிரண்டு அருகேவைப்பர். இவற்றோடு பால், பழம், சிறுசெம்பில் எண்ணெய், சிகைக்காய் உருண்டை, அரைத்த மஞ்சளுருண்டை ஆகியவற்றையும் வைப்பர். யாருக்குப் படைப்போ, அவர் ஒளிப்படத்தை நடுவில் வைத்து ஊதுவத்தியேற்றி சாம்பாணிப் (சாம்ப்ராணி) புகை கமழவைப்பதுமுண்டு.     

படிம அலங்காரத்தின் எதிரில் ஒன்றோ, மூன்றோ, ஐந்தோ வாழையிலைகளைப் போட்டு அனைத்துக் காய்கறிகளையும், கறிகளையும் பரிமாறிச் [பரிமாறுவதே ஒரு கலை; இலையில் எதை எங்கு வைக்கவேண்டுமென்பதும் ஓர் அழகு அடவு (design) தான் இலைகளில் பாற்சோறு வைப்பது கட்டாயமாகும்.] சோறுபோட்டு, பருப்பு, நெய்யூற்றி, தெளித்தத்தால் நீர்விளாவி நிவத்தி, கற்பூரங்காட்டி வழிபடுவர். கொடிவழி, முத்தோர், பார்த்து வரிசைப்படி ஆண்களும் பின்னாற் பெண்களும் பற்றியுடன் விழுந்து வணங்கி நெற்றியில் திருநீறும், குங்குமமும் இட்டுக்கொள்வர்.
இது நடந்துகொண்டிருக்கும் போதே (ஆணோ, பெண்ணோ) குறிப்பிட்டவரின் மேல் முன்னோர் ஆவி ஏறி (அணங்கி) வரலாம். அணங்காடி மூசுமூசென அழுவதிலோ, வெடவெடவென அசைவதிலோ, குலுங்கிக் குலுங்கி ஆட்டம்போடுவதிலோ இவ்வுணர்வு வெளிப்பாடு முதலில் நடைபெறலாம். கூடியிருப்பவரில் ஒருவரே அணங்கைக் கட்டுப்படுத்தும் பூசாரியாய் மாறுவார். வருவது ஆணணங்கா, பெண்ணணங்கா என்பதைப் பொறுத்து இது அமையும். சிலபோது அணங்கு பேசுவதாய் உரையாடலமையும். பலபோது கூடியிருப்போர் கேள்விகேட்கவும் செய்வர். வீட்டுச் சிக்கல்கள், முன்னோரின் வழிகாட்டுதல்கள், விடைதெரியாத, உகக்க முடியாத, கேள்விகள் எனவெல்லாமே கேட்கப்படும்.

சிலபோது உரையாடல் நீளூம். சிலபோது சுருங்கும். பூசாரியின் திறமையான வழிநடத்தலைப் பொறுத்து உரையாடலும் அணங்காடலும் நிகழும். எழுந்த வேகத்தில் அணங்காடல் சட்டென நின்று மலையேறலாம். மலையேறும்போது சாமியாடி நெற்றியில், பூசாரி திருநீறு பூசுவதும், கூடியிருப்போர் சாமிவந்தோர் காலில் விழுந்து ஆசி பெற்று (முன்னோர் ஆசிகொடுத்ததாகவே எல்லோரும் உணர்வர்.) திருநீறு பூசிக்கொள்வர். நானறிந்து, சாமியாடல் (அணங்காடல்) என்பது 10க்கு 6/7 படைப்புக்களில் நடப்பதாகவே இருக்கிறது. அதேபொழுது சாமியாடலின்றி அமைதியாக நகர்ந்ததையும் கண்டிருக்கிறேன். இதுதான் நடக்கும், இது நடவாது என்று சொல்லமுடியாச் சூழ்நிலையைப் படைப்பு நிகழ்வுகளிற் கண்டிருக்கிறேன்.

[படைப்பு நிகழ்ச்சியை இங்கு விவரித்ததே சாமியாடலைப் (அணங்காடலைப்) பற்றிச் சொல்லத்தான். இது தென்பாண்டி நாட்டில் மிக இயல்பானது. வளவு/குடும்பு அளவிலும், குல,/கரை அளவிலும் இது முற்றிலும் சாத்தாரமாய் நடைபெறுகிறது. இதை எழுதுவதற்கு, என் பட்டறிவு போக ‘நகரத்தார் கலைக்களஞ்சியம் பக்.405-406, மெய்யப்பன் தமிழாய்வகம், வெளியீடும் துணையாக நின்றது. படைப்பு என்பது நகரத்தார் குமுகத்தில் மட்டும் நடைபெறுவதில்லை. கள்ளர் குமுகத்திலும் நடக்கிறது. மற்ற குமுகங்களிலும் இருக்கலாம். ஆனால் அவை இன்னும் பதிவு செய்யப்படவில்லை. நம்மிற் பலரும் நாட்டுப்புற வழக்கங்களை வெளிச்சொல்ல வெட்கப்பட்டு இவற்றைப் பதிவுசெய்யாது போகிறோம். பார்ப்பனமயமான பழக்கவழக்கங்களே வெளியிற் பதிவு செய்யப்படுகின்றன. மேலை ஆய்வாளரும், இந்தியரில் பல ஆய்வாளரும் ”தமிழ்நாட்டு மரபு பார்ப்பன நடைமுறையே” என்று எண்ணிக் கொள்கிறார். இது குமுகம்/ குமுகாயம் என்ற அளவில் ஏற்படும் பெரிய இழப்பாகும்.]

எல்லோரும் படைப்புப் படிமத்தின் கீழ்விழுந்து கும்பிட்டுத் திருநீறு பூசிக்கொண்ட பிறகு, வீட்டுப் பெரியவர்கள் படைப்பு இலைகளிற் சாப்பிட மற்றவர்கள் தனியிலைகளில் சமைத்தவற்றைப் பரிமாறிச் சாப்பிடுவார்கள். அனைவரும் சாப்பிட்ட பிறகு படைத்த பாலும் வழங்கப் பெறும். படைத்துச் சாப்பிட்ட இலைகளை வீதியில் எறிவதில்லை. பழங்காலத்தில் மண்னை வெட்டிப் போட்டு அதிலெறிந்து மூடிவிடுவார்களாம். இப்பொழுது மறுநாள் வெளியே எறிகிறார்கள். படைத்த சாமியறைக் கதவை இரவு சாத்திப்பூட்டிவிட்டால் மறுநாள் காலையிற்றான் திறப்பார்கள். சிலவீடுகளில் மறுநாள் காலையில் நீர்ச்சோற்றுப் படைப்புப் படைப்பார்கள்.

இரவு கொய்துவைத்த துணிகளை மறுபடியும் எடுத்துதறிக் காயப்போட்டு மடித்துப் பேழைக்குள் வைத்துவிடுவார். ஒவ்வொரு படைப்பின் போதும் உறவினர் புதுத்துணிகளை பேழைத் துணிகளோடு சேர்த்துவைத்து வழிபடுவர். பழைய துணிகள் கிழிபட்டிருந்தால் அவற்றை எடுத்துவிடுவார். பேழையிலிருந்து எடுக்கப்படும் துணிகளை யார் வைத்தாரோ, அவர் எடுத்துக் கொள்வது பெருவழக்கம். பேழையைப் பழையபடி முன்னிருந்தது போல வீட்டுக்குள் கட்டி வைத்துவிடுவர்.

படைப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கள் உண்டு. பெண்ணணங்கு பெண்மேல் ஏறி வந்தாலன்றி நேரடி வினையில் (பூசாரியாகப்) பெண்கள் ஈடுபட மாட்டார். பேழைத் துணிகளைத் தூய்மை செய்யும் பணியும், படிம:அலங்காரமும் எப்பொழுதும் ஆண்களின் பொறுப்பேயாகும். பெண்கள் சமையற் பொறுப்பைத் தவிர ஏதொன்றையும் தொடமாட்டார். இது  ஆணாதிக்கக் குமுகாயம் என்று கொண்டாலுஞ் சரி, அல்லது அணங்கு போன்ற இன்னொரு ஆதனைக் கையாளுவதில் பெண்கள் வலுக்குறைந்தவர்கள் என்று உளவியல் பார்த்துக் கொண்டாலுஞ் சரி, காலகாலமாய் இந்தப் பங்களிப்புகள் மாறவில்லை. முன்னோர் படைப்பு என்பது 7 தலைமுறை அளவிற்குத் தான் என்றால் அதற்கு முன், இன்னும் முந்தைய முன்னோருக்கான படைப்பைச் செய்திருப்பார்கள் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது. (7 தலைமுறைக்கு அப்புறம் நினைவுகள் மங்கும் என்பார்கள் அல்லவா?) முடிவாகச் சொன்னால், ”முன்னோர் படைப்பு என்பது எப்பொழுதும் இருந்திருக்கும். எந்த முன்னோன் என்பதிற்றான் இந்தத் தலைமுறை மழுங்கல் இருக்கிறது”.

ஆனால் மூதாதை என்பவன் நினைவில் அச்சாணியாக இருக்கிறான். சேயோன் பற்றிய நினைவு கூரல் குமுகாயத்தில் இன்னும் ஆழமாய் இருக்கிறது. முருகனைப் பற்றிய நினைவு கூரலில் தைப்பூசம் என்பது மிகப் பெரியதாய்க் கொள்ளப் பெறுகிறது. காவடி, பாற்குடம், அணங்காடல், செடிலாடல், பூக்குழி போன்ற தன்வருத்துப் பழக்கங்களை அடுத்த பதிவிற் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.    


 

Friday, January 03, 2014

அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 4

 அணங்கிய என்பதற்கு “மேலேறிய" என்று பொருள்கூறி, எதன்மேல் எது ஏறியதென்று கேட்டோம். இதற்கு விடைசொல்ல மெய்யியற் புரிதல்கள் சிலவற்றைப் பார்க்கவேண்டும்.
 
இந்திய மெய்யியற் சிந்தனைகளில் உலகாய்தம் தவிர்த்து வேதமறுப்புச் சாங்கியம், ஆசீவிகம் (இதை ஆசீவகம் என்றும் திரித்து எழுதுவர். நானும் எழுதியிருக்கிறேன். ஆசீவிகமென்பது ’அற்றுவிக’ மூலத்திற்கு அருகிருக்கும் சொல்லாகும். அற்றுவிகம் பற்றி ஆசீவிகத் தொடரிற் கூறுவேன்.), செயினம், விதப்பியம் (விஷேஷிசம்; விதத்தல்>விதேதித்தல்>விஷேஷித்தலாய்ச் சங்கதத்திற் திரியும். விதமென்ற பெயர்ச்சொல் இன்னும் தமிழ் வழக்கில் இருப்பதை நினைவுகொள்ளுங்கள்.) ஆகியவையும், வேதநெறியும் ’உயிர், மெய்யைத்’ தனித்தனியாகவே பார்க்கும்.  (புத்தநெறி தனி உயிரை ஒருபக்கம் ஏற்று, இன்னொருபக்கம் ஏற்காது அரையுலகாய்தம் பேசும்.) இப்படித் தனித்தனி பார்க்காது, இரண்டையும் பிணைத்து ”உயிர் தனித்தில்லை; மெய்யின் இயக்கமே உயிர்” என்பது உலகாய்த அடிப்படையாகும். ”மெய் அசையாது அடங்கியொடுங்கும் போது, வாழ்க்கை முடிந்தது. எனவே, இக்கணந்தான் நிலையானது. மக்களே! இன்புறுவீர்” என்பது உலகாய்தரின் முகனைச் செய்தியாகும். [உலகாய்தத்தை வலியுறுத்தும் சங்கப்பாடல்களும் இருக்கின்றன. அவற்றை வேறோரிடத்திற் பார்ப்போம். சமயஞ்சாரா வகையில் (secular) சங்கத் தொகையில் எல்லாச் சிந்தனைகளும் விரவியுள்ளன. ”அது வேதமே, அன்றி வேத மறுப்பே, பேசுகிறது” என்பதெல்லாம் ஒருபக்கமாய்க் கோடியமையும் பார்வைகளாகும்.]
 
உயிரையும் மெய்யையும் தனியே பார்த்து, ”நிலையான உயிர் ஒருபிறவியில் நில்லாது. பலபிறவிகளெடுத்து உலகிலுழன்று பின் வீடுபேறடையும்” என்பது மெய்யியலின் அடுத்த புரிதலாகும். இந்தியாவின் பல்வேறு மெய்யியல்களும் விடாதுபேசும் வீடுபேற்றை ”இனிமேற் பிறவாத நிலை, பிறவிவிடுத்த பேறெ”ன்றே பொருள்கொள்வர். வீடுபேறடைவதிலும் இரு நோக்குகளுண்டு. ”இப்பிறவியிற் செய்கருமம் மறுபிறவியிற் பாதிக்காது, இத்தோடு இறுமெ”ன்பது ஒருவிதம். இதை வினைமறுப்புக் கொள்கையென்பர். இதன் குறிப்பிடத்தக்க பேராளி ஆசீவிகமாகும். ”இப்பிறவியிற் செய்த (நல்வினை, தீவினை எனும்) கருமம் மறுபிறவியிற் பாதிக்கும். நல்வினை செய்தால் மறுபிறவி சிறக்கும். தீவினை செய்தால் மறுபிறவி மேலுங் கடினமாகும்; வினையானது பிறவிகள்தோறும் கணக்கிற் கூடிக்குறைந்து விளவிக் (flow) கொள்ளும் இருப்பாகும். வீடுபேற்றின்போது, வினையிருப்பு முற்றிலும் ’பாழ்’ஆகிப் போக வேண்டும்” என்பது இன்னொருவிதம். (பாழைச் சுழி-zero-என்று பொருள்கொள்வர்.) இதை வினைவிளைப்புக் கொள்கையென்பர் வினைவிளைப்புக் கொள்கையை வேதநெறியும், செயினமும் ஏற்கும்.
 
புத்தநெறி முன்னாற் சொன்னதுபோல் வினைக்கொள்கையை ஏற்றும், ஏற்காதும் நடுநிலைபேசும். சாங்கியமும், விதப்பியமும் இக்கேள்வி பற்றிப் பேசாதிருக்கும். இந்தியத் துணைக்கண்டத்திற் சாங்கியம் ஆகப் பழமையான கொள்கையாகும். அதன் தாக்கம் தெற்கிலும் கூட இருந்திருக்கலாம். சாங்கியம், விதப்பியம் தழுவிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளனவா என்றாய வேண்டும். சாங்கியத்திலும் இறையொப்பு (சேச்சுவர சாங்கியம்), இறைமறுப்பு (நீரீச்சுவர சாங்கியம்) என்று இருவேறு கொள்கைகள் உருவாகின. அவைபற்றிய தெளிவில்லாததால், இன்னும் ஆழங்காற்பட்ட முகன ஆய்வுகள் நடைபெறாதுள்ளன.
 
வினைவிளைப்பு, வினைமறுப்புக் கொள்கையில் இருப்புக் கொள்ளும் இந்திய நெறிகளெல்லாமே உயிரென்பதை ஆதனென்றும் (ஆன்மா = athma), ஆன்மா தனித்தியங்கக் கூடுமென்றும்
நம்பின. இந்நெறிகளில் உயிர்த்தலானது மெய்யினுள் உயிரியங்கும் செய்கையைக் குறிக்கும். ஆவித்தல் என்பது உயிர்த்தலுக்கு நிகரானதும், ஆவி உயிருக்கு நிகரானதும் ஆகும். ”ஓர் உடம்பிற்குள் பொதுவாக ஓருயிர் தான் இயங்கும்; சிலபோது ஈருயிர்கள் உட்புகுந்து ஒன்று இன்னொன்றை ஆட்டுவித்து (ஆட்டுவித்து>ஆட்குவித்து>ஆட்குமித்து>ஆக்குமித்து என்றாகி ’ஆக்ரமித்து’ என்று சங்கதத்துள் திரியும்.) ”ஒன்றின்மேல் இன்னொன்றேறி” ஆண்டான் - அடிமையாய் ஆட்சிப் படுத்தலாம்” என்பது இன்றும் இந்தியாவில் நிலவும் பழந்தொன்மமாகும்.
 
ஓர் ஆதன் இன்னோர் ஆதன் மேலேறியாளும் நிலையைத்தான் வினையாகுபெயராய் அணங்கெனும் பழஞ்சொல்லுணர்த்துகிறது. உலகாய்தம் தவிர மற்ற தெரியனங்களில் (தெரிசனங்களில்) இப்புரிதல் இயல்பாகவுண்டு. (எங்கள் பக்கம் அணங்கிற்கு மாறாய்ச் ”சாமி” எனுஞ் சொல்லே ’ஒன்றின் மேலேறும் ஆவிக்கு’ உரியதாய்ச் சொல்லப்படும். எல்லாம் வல்ல தெய்வத்திற்கும், மேலேறும் ஆவிக்கும் ஒரே சொல்லாவெனில், அது வேண்டுமெனப் பேச்சுவழக்கிற் செய்த குழப்பமோவென ஐயுறவைக்கும். இந்தக் காலத்தில் உணர்வு பூருவமாயன்றித் தெய்வத்தைப் பூதிகமாய்க் (physical) கண்டார் யார், சொல்லுங்கள்? பழங்குடிமக்களின் இனக்குழு வாழ்க்கையில் மேலேறிய ஆவி (=ஆதன்=ஆன்மா), போன்ற கருத்தீடுகள் இயல்பாக நம்பப்படுகின்றன. சங்கப்பாடல்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சங்க இலக்கியத்தின் பெரும்பாலான இடங்களில் அணங்கென வருவது இப்பொருளிலேயே அமைகிறது.
 
அணங்கென்பது உயிரிலாப் பொதிகளின் (bodies) மேலும், மரங்களிலும், விலங்குகளிலும், ஆணோ, பெண்ணோ இன்னொரு மாந்தரின் முழு உடம்பிலும், மாந்தவுடம்பின் சினைகளிலும் எனப் பல்வேறு பூதிக இடங்களில் (physical place) உறைவதாகச் சங்க இலக்கியஞ்சொல்லும். மொத்தத்தில் எங்கெல்லாம் தனியுயிர் மேலேற முடியுமோ, அங்கெல்லாம் அணங்குள்ளதாய்ச் சங்க காலப் பாணரும், புலவரும் உருவகஞ் செய்கிறார். முருகன் ஆதி மூதாதையின் மறுபளிப்பெனில் முருகன் கோட்டத்துள் அணங்காடலும், அணங்காடியும் (சாமியாடியும்) இருப்பதில் என்ன வியப்பு? (சாமியாடியை அருளாடி என்றுஞ் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.) ’அணங்குடை முருகன் கோட்டத்து’ என்பது சங்ககாலத்தின் சரியான புரிதற் தான். இன்றும் ஊர்த் தேர்த்திருவிழாவின் போது (பெரும்பாலும் அது செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால், எங்களூர்ப் பக்கம் தேர்த்திருவிழாவை ஊர்ச்செவ்வாய் என்பர்.) குறிப்பிட்ட தெய்வப் புறப்பாட்டின் போது, தேரோடும் வீதியில் மக்கள் முன்னிலையிற் சாமியாடிகள் வரிசைகட்டித் திருநிலைகொண்டு (சந்நதங்கொண்டு) காட்சியளிப்பார். அது மக்களுக்கு அணங்கை உணர்த்துங் காட்சியல்லாது வேறென்ன? சாமியாடி என்பவரே அணங்கின் முகவர் தான்.
 
ஒருகையில் தண்டம், மறுகையில் சூலம், வேல், அரிவாளென ஏதோவொன்றை வைத்து, முகத்தில் அரிவாள் மீசையோடு உடலெங்கும் பல்வேறு மணிமாலைகளைச் சூடி, தலைப்பாகையும், தோள், கைகளிற் கடகங்களும், கால்களிற் தண்டைகளும், இடுப்பில் தார்ப்பாய்ச்சுமாய்க் காட்சியளிக்கும் சாமியாடிகள் ஓரிரு போதுகளிற் அணங்குவந்து சாமியாடுவதுண்டு. அந்நேரத்திற் சாமியாடியை ஆடியடங்கப் பண்ணும் பூசாரி பல்வேறு கேள்விகள் (தனிப்பட்ட கேள்விகளும் ஊர்ப்பொதுக் கேள்விகளும்) கேட்டுக் குறிசொல்லும் பழக்கமும் நாட்டுப்புறங்களிலுண்டு; சாமியாடி கொடுக்கும் திருநீற்றைத் நெற்றியிற் பூசி அடியார் வாழ்த்துப் பெறுவதுமுண்டு. ‘சாமியாடல்’ நின்றடங்கிப் போவதை மலையேறலென்பர். (குன்றுதோறும் குடியிருப்பவன் குமரன் அல்லவா? அவன் மலையேறாது என்னசெய்வான்?) அணங்காடி முடிந்தபின் சில போதுகளிற் குறிப்பிட்ட சாமியாடி சோர்ந்து மயங்கி விழுந்து விடுவார். ’வருத்தமுறல்’ என்னும் அணங்கற் குறிப்பு இப்படிச் சோர்ந்து நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு மயங்கி விழுதலையே குறிக்கிறது.
 
[அவதாரம் என்ற இருபிறப்பிச் சொல் ”தெய்வம்/மாயோன் கீழிறங்கிப் பூவுலகிற் செயற்பட்ட” கதையைக் காட்டும். சேயோனோ (சிவனோ, முருகனோ) ‘அவதாரஞ்’ செய்யார். மாந்தர் மேலேறுந் திருவிளையாடலே செய்வார்.] 
 
மேலே ஆண்சாமியாடியை வண்ணித்ததால், ஆண்கள்மேல் மட்டும் அணங்கெழுவதாகாது. பெண்கள்மேலும் எழலாம், (பெண்ணணங்கு ஆண்களின் மேல் வருவதையும் பார்த்துள்ளேன். ஆனால் ஆணணங்கு பெண் சாமியாடிகள் மேல் வந்து நான் பார்த்ததில்லை.) அப்பொழுது [சினைமுட்டைச் சுழற்சி அடங்கிய பருவங் கடந்த (menopause)] பெண்பூசாரி அருகிலிருப்பார். ஆண்சாமியாடிக்கு நடப்பது பெண்சாமியாடிக்கும் நடக்கலாம். விழாவிற்கு வந்த ஆண்களும் பெண்களும் சாமியாடியின் கீழ்விழுந்து கும்பிட்டு ஆசிபெறுவதுண்டு.அணங்காடல்/சாமியாடல் என்பதை நாட்டுப்புறங்களில் யாரும் அருவருப்போடு பார்த்ததில்லை; ஆனால் அச்சத்தோடும், அளவுமீறி வியந்தும் பார்த்திருக்கிறார். அணங்கிடம் ஆசி வாங்கவும் பார்த்திருக்கிறார். ஓர் அகராதியில் அணங்கிற்குக் கொடுக்கும் ’வருத்தம், அச்சம், நோய், தெய்வம், தெய்வமகள், தெய்வத்தன்மை, அழகு, அழகியபெண், வடிவு, மையல்நோய், ஆசை, வெறியாட்டு, சிவ ஆற்றல், பேய், பேய்மகள், சண்டாளன், ஆளியின் குட்டி’ என்ற அத்தனை பொருள்களும் போதிற்குத் தக்க, மக்களால் உணரப்படும்.
 
[இன்னுமோர் இடைவிலகல் சொல்லவேண்டும். மகளிரென்ற சொல் (பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவையென்னும்) பருவமடைந்த பெண்களை மட்டுந்தான் குறிப்பிடுகிறதோ என்ற ஐயம் எனக்குண்டு. பருவத்திற்கு வாராச் சிறுமிகளையும் (பேதைகளையும்), பருவங்கடந்த பேரிளம்பெண்களையும் மகளிரென்று ஊர்வழக்கிற் சொல்லக்கேட்டதில்லை. அதேபொழுது, வடக்கே “மகிளா” என்ற சொல் பொதுப்படவே ஆளப்படுகிறது. கலந்தொடா மகளிரென்பது பருவமடைந்த பெண்களை மட்டுமே குறிப்பிடுமெனில் பாடலுக்கு விதப்பான பொருட்பாடு கிடைக்கிறது. சங்க இலக்கியத்தின் மற்ற இடங்களில் மகளிர் என்ற சொல்லிற்கு விதப்பான பொருளுள்ளதா என்றாய்ந்து பார்க்கவேண்டும்.]
 
அணங்கிருக்கும் இடங்களெனக் கருதுவனவற்றில் நாட்டுப்புறத்தார் விதப்பான பழக்கங்களையே பின்பற்றுகிறார். “ஊரெல்லையில் சுடுகாட்டிற்கருகிற் புளியமரத்தில் பேயிருக்கும், மாலை 6 மணிக்குத் தனியே போகாதே! சிறுவராயிருந்தாற் பயந்துவிடுவார். உடலுறுதி படைத்த, பயமில்லாத யாரையாவது உடன்கூட்டிப்போ, தேவைப்படின் சாமியாடியைக் கூடவழைத்துப்போ” என்பது மூடநம்பிக்கையாய்த் தெரியலாம். ஆனால் அப்படித்தான் குமுகப் புரிதலிருக்கிறது. நாட்டுப்புறங்களில் ”அதிற் பேயிருக்கும், இதிற் பேயிருக்கும்” என்று விதவிதமாய் நம்புவர். பகுத்தறிவாளர் அதைச்சாடி அந்நம்பிக்கை தவிர்த்தெறியச் சொல்லுவர். இதை உளவியலார் “இருவேறுபட்டு உடைந்த ஆளுமைநிலை” என்று தருக்கப்படுத்துவர். இங்கே தொன்மத்தை ஏற்பதா, பகுத்தறிவை ஏற்பதா என்ற கேள்விக்குள் போகாது, தொன்ம நடைமுறைகள் பற்றி மட்டுமே எழுத முயல்கிறேன். 
 
தென்பாண்டிநாட்டில் முன்னோரை வழிபடும் வகையிற் ’படைப்பெ’ன்று வீட்டு விழாக்களின்முன் செய்வரென்று முன்னாற் சொன்னேன். இத்தகைப் படைப்புக்கள் ஆண்டுக்கொரு முறையோ, வீட்டிற் கல்யாணம், காட்சியென்று நல்ல விழாக்கள் நடப்பதற்கு முந்தியோ முன்னோரைத் தொழுது, ஆசிகளைப் பெற நினைப்பார்கள். சிலபோதுகளில் யாரோவொரு உறவினர் திடீரென்று வேண்டிக் கேட்டுக்கொண்டதன் பெயரிற் கல்யாணம், காட்சி அண்மிக்காத போதுங்கூட இப்படைப்புக்களைச் செய்வதுண்டு. இது போன்றதொரு நிகழ்வு பல்வேறு குமுகத்தார் இடையிலும் நடப்பதைப் பார்த்தோ, கேள்வியோ பட்டிருக்கிறேன். (குறிப்பாக நகரத்தார், கள்ளர் ஆகிய குமுகங்களில் இது நடப்பதுண்டு.)
 
அடுத்த பகுதியில், சிவகங்கைப் பக்கம் நடக்கும் முன்னோர் படைப்புமுறை, அதில் ஆண்களுக்கும், பெண்களுக்குமான பொறுப்புகள், படைப்பு ஆடைகள், படைப்பில் வழிபடுங் கலங்கள், ஆடை-கலங்களைப் புனிதப்படுத்தும் பாங்கு, அணங்காடலென்று அதன் கூறுகளை விவரிக்க முயல்வேன். முருகன் விழாக்களின் முன்நடக்கும் தன்வருத்தச் செயற்பாடுகள், விழாவின் போது கொண்டு செல்லும் காவடி, பாற்குடம், செடிலாட்டு போன்ற முருகன் கோட்டத்துக் கலங்கள், பூக்குழி போன்ற பழக்கங்கள், முருகன் கோட்டத்துட் கலங்களைச் ’செலுத்தலின்’ மூலம் சடங்கு முடிப்பு எனப் பலவற்றைப் பற்றியுஞ் சொல்ல முயல்வேன். இவ்விவரிப்பில், ”அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரின் இகழ்ந்து நின்றவ்வே” என்ற அடிகளுள் அடங்கிய இனக்குழுப் புரிசைகள் விளங்கிப் போகும்.

அன்புடன்,
இராம.கி
 

அடுத்துவரும் பகுதியை எழுதி முடிப்பதற்குப் பொழுது கூடத் தேவைப்படுகிறது. எனவே நாளைக்கே வெளிவராது. என் சுணக்கத்திற்கு மன்னியுங்கள். - இராம.கி.

Thursday, January 02, 2014

அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 3

இற்றை வழக்கில் அணங்கெனும் சொல்லைத் தமிழர் புழங்காததாலும் (12 ஆம் நூற்றாண்டுப் பெரியபுராணம் வரை பதிவாகியது, எப்பொழுது வழக்கிற் குறைந்ததென்று தெரியவில்லை), அகர முதலிகளில் முதற் பொருள் குறிக்காது ”வருத்தம், அச்சம், நோய், தெய்வம், தெய்வமகள், தெய்வத்தன்மை, அழகு, அழகியபெண், வடிவு, மையல்நோய், ஆசை, வெறியாட்டு, சிவ ஆற்றல், பேய், பேய்மகள், சண்டாளன், ஆளியின் குட்டி”யென வழிப்பொருள் கொடுத்துள்ளதாலும், உரையாளர் வழிப்பொருளால் மட்டுமே (குறிப்பாக வருத்துதலெனும் பொருளாலே) விளக்குவதாலும், அணங்கு பற்றிய குழப்பம் நீள்கிறது. அது புனிதப் புயவா (sacred power)? தெய்வச் செயலா? மீமாந்தச் செயலா? அதன் தூண்டலாற்றான் முலை திருகி எறிந்து கண்ணகி மதுரையை எரித்தாளா? - என்ற கேள்விகளெழுகின்றன.    

’தமிழிலக்கியச் சொல்லடைவு’ என்ற தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் ’அணங்க, அணங்கல், அணங்கலின், அணங்கான், அணங்கி, அணங்கிய, அணங்கியோய், அணங்கியோள், அணங்கியோன், அணங்கிற்று, அணங்கின, அணங்கினள், அணங்கு, அணங்குக, அணங்குதல், அணங்கும், அணங்குற்றனை’ என்று 158 சங்கநூற் காட்டுக்களையும் ‘அணத்து, அணந்த, அணந்து, அணர், அணல், அணல, அணலோன், அணவந்து, அணவர, அணவரும், அணவும்’ என்ற 32 காட்டுக்களையும் படித்தால் முதற்பொருள் வெளிப்படும். (அணிதலையொட்டி இன்னும்பல சொற்கள் சங்கநூல்களிற் பயின்றுள்ளன.) இத்தனை சொற்கள் அணங்கையொட்டி எழுமானால் அதற்கோர் எளிய பொருட்பாடு இருக்கவேண்டுமே? வருத்தமெனும் உணர்ச்சிப் பொருள் முதற்பொருளாக முடியாது. அந்த முதற்பொருளை மட்டும் உய்த்தறிய முடியுமானால், ஒவ்வொரு கூற்றுக்கும் அந்த முதற்பொருளிலிருந்து வழிப்பொருள் கொணர்ந்து இடத்திற்கு ஏற்பப் புரிந்துகொள்ள முடியும். சங்க இலக்கியம் எங்கணும் அத்தகை இடங்களையெல்லாம் (158+32 = 190) ஆயக் கடின உழைப்பு தேவை. அதையுஞ் செய்யவேண்டும். 

தவிர, ”அணங்கெ”னும் தலைப்பில் அருமையான தெளிந்த கட்டுரையொன்றை (http://www.letsgrammar.org/Anangku-Rajam.pdf) பேரா. இராசம் படைத்திருக்கிறார். (மேலே சொன்ன 190 இடங்களில் பாதிக்கு மேலானவற்றை அவர் அலசிப் பார்த்திருக்கிறார்.) அவரிடமிருந்து சற்று விலகி என் கருத்தமைகிறது. என் கட்டுரையைப் படிப்போர், (அணங்கு, கலம் தொடா மகளிர் என்ற) அவரின் இரு கட்டுரைகளையும் படிப்பது நல்லது. 

அண் என்பது ’மேல் அல்லது மேற்பக்கத்தைக் (upper part)’ குறிக்கும் வேர்ச்சொல்லாகும். ”சங்க இலக்கியச் சொல்லடைவில்” காட்டப்படும் 190 இடங்களுக்கும் அதுதான் வேர்ச்சொல். பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில், உ>உண்>ஒண்>அண் = மேல், மேல்வாய் என்றுதான் சொல்வார்கள். மலையாளம், கன்னடத்திலும் இச்சொல் வழக்கிலிருக்கிறது. தெலுங்கிற் தேடவேண்டும். ”அண்”ணிற் கிளைத்த சொற்கள் மிகப்பல.  

அண்ணம் = மேல்வாய்ப் புறம், (ம.அண்ணம்; க.அங்கல, அண்ணாலிகெ; தெ. அங்கிலி; து.அண்ண; நா.அங்குல; பட.அங்குல.) 
அண்ணல் = மேலோன், தலைவன், அரசன், கடவுள் (ம்.அண்ணல்; க.அண்ணலெ; தெ.அண்ணு.)
அண்ணன் = மேலோன், மூத்தோன், தமையன் (ம. அண்ணன்; க.,பட.,குட. அண்ண; தெ.,குவி. அன்ன; து.அண்ணெ; கோத. அண்ணன்; இரு.,குரு.,துட. ஒணென்; கொலா. அணுக்; கோண். தன்னால்; கொர.ஆண்; எரு. அண; சப். அண்ணா)
அண்ணி = அண்ணன் மனைவி
அண்ணாத்தல் = தலையெடுத்தல், தலைதூக்குதல் (ம. அண்ணா; க.அண்ணெ; து.அண்ணாவுனி, அணாவு)
அண்ணாந்து பார்த்தல் = தலைதூக்கி மேல்நோக்கிப் பார்த்தால்
அண்பல் = மேல்வாய்ப் பல்
அணத்தல் = மேல்நோக்குதல் “நெற்கொள் நெடுவெதிர்க்கு அணந்த யானை” (குறிஞ்சிப் 35) (து.அணவு, அணாவுனி)  
அணர்தல் = மேனோக்கி எழுதல் .
அணர், அணரி = மேல்வாய்ப் புறம்
அணவுதல் = மேல்நோக்கி எழுதல்
அணிதல் = உடம்பின்மேல் இடுதல் (to put on)
அணிகலன் = உடம்பின்மேல் இடுங்கலன் 

எனச் சிலசொற்களை இங்கு கட்டியிருக்கிறேன். (நெருங்கற் பொருள் சுட்டும் அண்ணுதல் வினை வேறுபட்டது.) 

மேல், மேலுதல், மேலெழுதல் என்ற பொருள்தரும் ’அண்’ எனுஞ் சொல் இன்னொரு மொழிக்குடும்பத்திலும் இருக்கிறது. கால்டுவெல்லிற்கு 138 ஆண்டுகள் முடிந்த பின்னும் ஒப்பீட்டு மொழியியலார் (comparative linguistics) ஒப்பீட்டு மொழியியற் படியேற்றங்களை (applications) வைத்து ”முன்னிலைத் திராவிடச் சொற்றொகுதியை” உருவாக்குவதிற் தடுமாறும் நிலையில், இங்கு செய்யக் கூடாதை செய்ய விழைகிறேன். ’அண்’ணிற்குத் தொடர்பான இந்தையிரோப்பியச் சொற்களைக் கீழே பட்டியலிடுகிறேன். [அதெப்படி திராவிடச் சொற்களுக்கு அருகில் இந்தையிரோப்பியச் சொற்களைப் பட்டியலிடலாம்? இரண்டும் ஒன்றிற்கொன்று நெருங்காத, தீண்டாத குடும்பங்கள் ஆயிற்றே?:-))) எனப் பறைந்து, ஒப்பீட்டு மொழியியல் போற்றும் (பாவாணரை ஏற்காத) சிலர் இராம.கி.யை வசை பாடலாம்].  

E. on, prep - ME, fr. OE, on, an, rel. to OS. an, ON, aa, Du. aan, OHG. ana, MHG. ane, G. an, Goth. ana, 'on, upon', and gogn. with Avestic ana, 'on', Gk, ana, oSlav, na, OPruss, no, na, 'on, upon'.

E. on, n. the on or leg side of the field

Fr. on, adj 

[ஒப்பீட்டு மொழியியலையும், (வேர்ச்சொற்களின் பொருட்பாட்டைப் பார்த்துக் குறைந்த திரிவுகளிற் சொற்பிறப்பை வரையறுக்கும்) பாவாணர் வழிமுறையையும், establishment vs heretic என்று பகையாய்ப் பார்த்து சேவற்போரிடாது, ஒன்றிற்கொன்று துணையாக்கினால் மொழியியலில் எவ்வளவோ உருப்படியாக வேலை செய்யலாம். இரண்டிலும் வளர்ச்சிக்கு வேண்டியன இருக்கின்றன. (இந்த அண் அதற்கொரு தொடக்கம்.) யார் செய்யப்போகிறார்கள் இதை? பாவணரை வைத்து ”இலெமூரியா, அது, இது” என்று வசை பாடுவதையும், புகழ் பாடுவதையும் நிறுத்தி இதைச் செய்யலாம். புரியவேண்டியவருக்குப் புரிந்தாற் சரி. (ஐசக் நீயூட்டனை அவருடைய இதள்வேதியல் (alchemy) பணிக்காக யாராவது திட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா?)]

இனி அணங்கெனும் தமிழ்ச்சொல்லிற்கு வருவோம். அணவுதல் என்னும் வினைச்சொல் வகர, ககரப் போலியில் அணகுதல் என்றுமாகும் (இதுபோன்ற போலிகள் தமிழில் மிகுதியும் உள. தவிரப் போலியாதல் தமிழில் மொழியியல் விதிபோலவே அமைகிறது. தமிழிற் பாவற் காய் பாகற் காயாகும்; நாவற் பழம் நாகற் பழமாகும்; குடவம் குடகமாகும்; குணவம் குணகமாகும்.) அணக்குதல், அணகுதலின் பிறவினையாகும். அணங்குதல், அணக்குதலிலிருந்து பின்னுருவெடுக்கும் (back-formation) முறையிற் திரிந்து மீண்டும் தன்வினையில் இன்னொரு வினையை உருவாக்கும். இம்முறையிற் தமிழிற் பலசொற்கள் உருவாகியிருக்கின்றன.  

*இணத்தல்>இணகுதல்>இணக்குதல்>இணங்குதல், 
உணத்தல்>*உணகுதல்>உணக்குதல்>உணங்குதல், 
குணத்தல்>குணகுதல்>குணக்குதல்>குணங்குதல், 
சுணத்தல்>*சுணகுதல்>சுணக்குதல்>சுணங்குதல், 
நுணுத்தல்>நுணுகுதல்>நுணுக்குதல்>நுணுங்குதல், 
*பிணத்தல்>பிணகுதல்>பிணக்குதல்>பிணங்குதல், 
முணத்தல்>முணகுதல்>*முணக்குதல்>முணங்குதல், 
*வணத்தல்>*வணகுதல்>வணக்குதல்>வணங்குதல், 

என்பவற்றைக் காட்டாகக் காணலாம். அணகுதலின் இறந்தகாலப் பெயரெச்சம் அணங்கிய என்றேயமையும். முடிவாகச் சொன்னால் இதன் பொருள் ’மேலேறிய’ என்பதுதான். அதென்ன, மேலேறியது? எதன் மேல் எது ஏறியது? - என்ற கேள்விக்கு விடையறிய தமிழரின் தொன்மங்களைப் பற்றிய சிந்தனைக்குப் போகவேண்டும்.

அன்புடன்,
இராம.கி. 

Wednesday, January 01, 2014

அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 2

 சரி, அணங்கென்றாலென்ன? முருகன் கோட்டத்து அணங்கெங்கு வந்தது? - இது அடுத்த கேள்வி. இதற்குமுன் சிவன், பெருமாள் கோயில்களில் நிலவும் இனக்குழுப் புரிசைகள் பற்றிச் சொல்லவேண்டும். (என் தொடரைப் படிப்போருக்கு, இந்தப் பகுதி சற்று இடைவிலகல் போலத் தெரியலாம். ஆனாலும் சற்று பொறுமையோடு படியுங்கள். இந்தப் புரிசைகள் பற்றிய சிந்தனையில்லாது அணங்கைத் தெளிவது கடினம்.) சில மாந்தவியலார் கூற்றின்படி “இனக்குழுக் கோயில்கள் சிறுதெய்வக் கோயில்களாம். சிவன், பெருமாள் கோயில்கள் பெருந்தெய்வக் கோயில்களாம். இரண்டிற்குமிடை புரிசைகளிற் தொடர்பே இல்லையாம்”. இதுகேட்டுப் பென்னம்பெரும் வியப்பாகிறது. (வடநாட்டிலல்லாது) தெற்கே பெரிதாய்க் கொண்டாடும் சிவ, விண்ணவ நெறிகள் தமிழரிடை நிலவும் இனக்குழுப் பழக்கங்களிற் தொடங்கியிருக்கலாம் என்பதை ஏற்கப் பலரும் தயங்குகிறார். நாமும் நம்மைப் பறிகொடுத்துச் சுரணையற்றுத் தமிழ்த்தோற்றம் மறந்து கிடக்கிறோம். சைவம், வைணவம் என்று சங்கதமாய்ச் சொன்னாற்றான் இக்காலத்திற் புரிகிறது. தேவார காலத்து இறைவன், இறைவி தமிழ்ப்பெயர்கள் கூடச் சங்கதமாக மாறித்தான் இன்று மக்களால் அறியப்படுகின்றன. நம் கோயில்களிற் தமிழ் அவ்வளவு விலகி நிற்கிறது. 

அதேபோல, முருகனெனுங் தமிழ்க்கடவுள், ”சுப் பிரமண்யனாகவே” இன்று புரிந்துகொள்ளப் படுகிறான். (முருகனின் கருவறைத் திருநிலைகளில் முருகனென்றொ, கந்தனென்றோ பெயர் எழுதுவது பெரிதுமரிது.) இக்கோயில்கள் பார்ப்பனமயமான பிறகு, அங்கு அணங்காடல் என்றெதுவுங் கிடையாது. (இத்தனைக்கும் இக்காலத் தென்பாண்டி நாட்டுச் சாமியாடலும் அக்கால அணங்காடல், வேலனாடலும் அடிப்படையிலொன்றே.) ஊருலாவும் (உற்சவமும்), எழுந்தருளப் பண்ணலும் தேரிழுப்பும், தெப்பமும் மட்டுமே மிஞ்சியுள்ளன. ஊருலாத் திருமேனி புறப்பாடு ஆகுமுன், சூலம்/வேல்/அரிவாளைக் கையிலேந்தி சாமி ”திருநிலை” (சந்நதம்) கொள்ளுஞ் சாமியாடிகள் கோயில்முற்றத்தில் ஆடியருள்வதில்லை. (வேலேந்தியவன் வேலன்.) காளி, ஐயன், கருப்பன், மாடன் போன்ற இனக்குழுக் கோயில் விழாக்களில் சாமியாடுதல் இன்றும் இயல்வழக்கமாய் தொடருகிறது. 

காளி, ஐயன், கருப்பன் போலச் சேயோனும் தொடக்கத்தில் ஊர்காக்குந் தெய்வந்தான். அரன், அரத்தன், சிவன், முருகன் (முள்முருக்கஞ் செம்பூவால் முன்னெழுந்த பெயர் முருகனாகும்; அழகனென்பது பின்வந்த பொருட்பாடு.) என்றடையாளம் காட்டுஞ் சேயோனைத் தந்தை, மகனெனக் குணநலன் பிரித்து முத்தலைச் சூலத்தைத் தந்தைக்கும், ஒருதலை வேலை மகனுக்கும் கொடுத்து அச்சமூட்டிய இனக்குழுக் கருத்தீடுகள் “அன்பே சிவமாய்” இன்றாகிவிட்டன. ”தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!” என்ற போற்றியகவலும் ”வெற்றிவேல் வீரவேல்”, ”அரோகரா” (= சிவசிவ) எனும் போர்முழக்கமும் இனக்குழுக்களின் வழியெழுந்த ஆகப் பழமையான நேரடிப் பரசல்தான்.

வரலாற்றுத் தொடக்கம் ஏதென்றுணராது, இன்று அன்புவழி, பதி-பசு-பாசம், தானம்(=த்யானம்), ஓகம்(யோகம்), தவம், சித்தாந்தமெனச் சிவநெறியினர் மெய்யியல் பேசுலாம். அடிப்படையிற் சிவநெறிக் கொள்கை நாட்கழித்துப் பிறந்ததாகும். மாணிக்கவாசகர் கி.பி.3ஆம் நூற்றாண்டினரென்று நம்புபவன் நான். அதற்கப்புறந்தான் சிவநெறி மெய்யியல் கிளர்ந்திருக்கவேண்டும். 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமூலர் திருமந்திரந்தான் சிவநெறி மெய்யியலின் விவரமான விளக்கமாகும். அதேநேரத்தில் தமிழரின் சிவ வழிபாடு வரலாற்றிற்கும் வெகுகாலம் முன்பே. இனக்குழு நிலையிலேயே உருவானது. கருத்த மாயோன் பற்றியும் இனக்குழுச் செய்திகள் ஏராளமுண்டு. (அவற்றையும் ஒதுக்குகிறோம்.) (சிகப்பு-கருப்பு பற்றி பண்பாட்டுத் தொடர்பு, முப்பட்டைச் சாம்பற்பூச்சு போன்றவை நம்மிடம் மட்டுமில்லை; நம் ஆதிகாலப் பங்காளிகளான ஆத்திரேலியப் பழங்குடிகளிடமுமிருக்கின்றன.)

இடுகாட்டிற் பேய்களோடு தந்தை ஏழுவிதமாய்த் தாண்டவமாட, அழகுமகனோ இன்னோர் இனக்குழுத் தலைவன் சூரனைச் சங்காரம் பண்ணிய தெய்வமாகி நம்மை இன்றும் ஈர்க்கிறான். தந்தைக்கு இலிங்கமென நடுகல்லையும், மகனுக்குக் கந்தெனக் கற்றூணையும் அடையாளங் காட்டுகிறோம். (நம் இனக்குழுத் தோற்றத்தை உணர்த்த, .இலிங்கம் ஒன்றுபோதும்,  இதைச் சிசுன தேவன் என்று வேத நெறியார் நக்கலித்துக் கேலிசெய்ததே ”தோற்றம் வடக்கில்லையென” உணர்த்தும்.) காலத்தொலைவால் சேயோன் ஓர் இனக்குழு மூதாதை. [மேலையரின் ஆதன் (Adam) எனும் ஆதிநாதனும் அவன் உருவகமே.] மூதாதைக்கு அடையாளமாய் ஒவ்வொரு கோயிலிலும் ஒரு காவல் மரத்தைக் கோயில் மரமாக்குகிறோம். அம்மரத்தில் நம் விழைவை ஓலையிலோ, வேறொன்றின் மூலமோ எழுதிக் கட்டி இறைவனிடம் தெரியப்படுத்தி இடையீட்டை எதிர்பார்க்கிறோம். வடக்கே இப்பழக்கம் அரிதாகவேயிருக்கிறது.

பல சிவன் கோயில்களும், அம்மன் கோயில்களும் இன்று பள்ளிப்படைக் கோயில்களாய் இருக்கின்றன. [ஓரிடத்தைப் பள்ளிப் (தோண்டிப்) படுக்கவைத்தது பள்ளிப்படை.] யாரோவொரு ஆண்பெரியார் கல்லறைமேல் இலிங்கம் பதிப்பதையும், ஒரு பெண்பெரியார் கல்லறைமேல் அம்மனின் முழுமூலத்/அரைமூலத் திருமேனி இருப்பதையும் பல கோயில்களிற் பார்க்கலாம். நடுகல்லைக் காவல் காக்க கோரமுக நுழைக்காவலர் (த்வாரபாலகர்) நிற்பதும் இனக்குழு அடையாளங் காட்டுகிறது. (நடுத்தரைக் கடலையொட்டிய மேற்கு நாகரிகங்களின் எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, அக்கேடிய, அசீரியக் கல்லறைக் கோயில்களுக்கும், நம் கோயில்களுக்கும் இடையே கூர்ந்து பார்த்தால் வியத்தகும் ஒப்பீடுகளுண்டு.)

அதுமட்டுமல்ல; நடுகல் முன் படைப்பது போலவே, கோயிற் கொடிமரத்திற்கருகில் அன்றாடப் பூசையில் பலிபீடத்திற் சோற்றுருண்டை படைக்கிறார். பல்வேறு திருமேனிகளுக்கு சோற்றுக் கட்டிகளை நிவத்திக் (= உயர்த்திக்) காட்டுகிறார். (நிவத்தம் நிவேத்யமாகி சங்கதம் தோற்றும்.) ஆனாற் அரத்தமும், நிணமும் விரவிய, ஏற்கனவே பொல்லிய விலங்கை (பொல்லுதல்>  பொள்ளுதல் = குத்துதல்; பொலி>பலி) பலிபீடத்திற் படைத்தகாலம் ஒன்றிருந்திருக்கும். (பின்னாற் காட்டு விலங்காண்டி மரபுகளை வெட்கி மறைக்குமாப் போல அருகதப் பழக்கம் நம்முள் நுழைந்தது போலும். பெரும்பாலான இனக்குழுக் கோயில்களில் இன்றும் கிடாவோ, கோழியோ, பன்றியோ என ஒரு விலங்கே வெட்டிப் பலியிடப்படுகிறது.)

ஒரு மூதாதைக்குச் செய்வது போலவே மாந்தப் பழக்க வழக்கங்கள் சிவன், பெருமாள் கோயில்களிற் செய்யப்படுகின்றன. (கோஇல் என்பது மூதாதை இறைவீட்டை உணர்த்துகிறது.) தென் பாண்டிநாட்டில் முன்னோரை வழிபடும் வகையிற் ’படைப்பெ’ன்று வீட்டு விழாக்களின்முன் செய்வர். இந்தத் தொடரில் முன்னோருக்கான படைப்பு எப்படிச் செய்யப்படும்? ஆண்களுக்கும் - பெண்களுக்கும் அதிலுள்ள பங்களிப்பு என்ன? எதை எவர் செய்யலாம்? எவர் செய்யக் கூடாது? - என்பதையெல்லாம் முழுக்க விவரிப்பதாக இருக்கிறேன். அதிற் கூடியாக்கி உண்ணும் சடங்குகள் இனக்குழுக் கோயிலிற் பழகுவது போலவே இருக்கும். சங்க இலக்கியத்திற் பெருஞ்சோறென்று வருவதும் இதுபோன்றதொரு பழக்கமே. பெருஞ்சோற்றைச் சங்கதமாக்கிப் பெருஞ்சாதம்> பெருசாதம்> ப்ரசாதம் என்று சொல்வர். நாமும் அதன் உள்ளார்ந்த தமிழ்மை புரியாது என்னமோ, ஏதோ சங்கதச் சொல்லென்று வியந்து கொள்வோம்.
  
இன்றைக்கும் முருகன் விழாவையொட்டி (பாண்டியர்) சாம்பலையும், (சோழியர்) குங்குமத்தையும், (சேரர்) சாரலையும் (சந்தனம்) உடலெங்கும் தனித்தோ, சேர்த்தோ பூசி, கார்த்திகை, பூசம்,
உத்திரம், விசாகம் எனப் பல்வேறு நாட்காட்டுகளில் அறுபடை வீடுகளுக்குக் கால்கடுக்க நடந்துசென்று, கோயிலிற் பழகும் காவடிகள், பாற்குடங்கள், வெறியாட்டு, தேரிழுப்பு, செடிலாட்டு [நோற்போர் தோலிற் கொக்கிகளைச் செருகியிழுக்கும் வதம். ரகரம் இடைநுழைக்கும் வடமொழி யுத்தியில் வதம் வ்ரதமென்றாகும்], பூக்குழி (நெருப்பின்மேல் நடத்தல்) என்ற தன்வருத்துப் பழக்கங்கள் பழந்தமிழர் இனக்குழு வாழ்வின் மிச்ச சொச்சங்களாய் இருக்கின்றன. இத்தனையாயிரம் ஆண்டுகள் கழித்தும் இனக்குழு மரபுகளும் தொடர்ச்சிகளும் தமிழர், மலையாளி வாழ்விற் திரண்டு செழித்து விளங்குகின்றன.

{ஓர் இடைவிலகல். பாண்டியர், சோழர், சேரர் என்பவை இனக்குழுப் பெயர்களே என்று ஏற்கனவே என் “சிலம்பின் காலம்” நூலிற் சொல்லியிருக்கிறேன். பாண்டு = சாம்பல் > பாண்டியர் (சாம்பல் பூசியவர். நெற்றியில் இடும் திருநீறு இச்சாம்பல் தான்), கோழியர்>சோழியர்>சோழர் = மஞ்சள்/குங்குமம் பூசியவர். [மஞ்சட்தூள் காடிச்செறிவிற் (acidic pH) பொன்னிறங் காட்டி, சுண்ணநீர் மீச்சிறிது கலந்த களரிச்செறிவில் (alkaline pH) குங்குமநிறங் காட்டும்], சாரல் = சந்தனம்; சாரலர்>சேரலர்>சேரர் (சந்தனம் பூசியவர்). தாங்கள் பூசிய அடையாளங்களாலே தான் இந்த 3 இனக்குழுக்களும் அறியப்பட்டனர். இற்றைத் தமிழரும், மலையாளிகளும் மூன்றையும் தனியாக அணியாது கலந்தே பூசுகிறார். அதாவது, இனக்குழு அடையாளங்கள் இவரிடை முற்றிலும் விரவிப் போயின. இவ்வடையாளங்களுக்கும் சநாதன மதத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. (ஆனாற் பலரும் இருப்பதாயெண்ணுகிறார்.) இவற்றை வடநாட்டில் யாரும் தனிவாழ்வில் விரும்பி அணிவதில்லை. (துறவியர் மட்டும் அங்கு விதிவிலக்காகிறார்.) பொதுமக்களிற் சிலர் அப்படி அணிந்தாலும் அது தென்னாட்டின் தாக்கமாகவேயுள்ளது. சரியாகச் சொன்னால் தமிழர் இனக்குழுப் பழக்கங்கள் இந்தியப் பழஞ்சமயங்களுள் ஊடுறுவிக் கிடக்கின்றன என்பதே உண்மை.}

மதுரைத் திருமலை நாயக்கருடைய அமைச்சர் இராமப்ப ஐயரின் அரசாணையின் பின், பழனிக் கோயிலிற் பண்டாரப்பூசை நின்றே போயிற்று. (போகர் படிமம் மட்டும் இருக்கிறது. காஞ்சிச் சங்கராச்சாரியர் செயேந்திரர் அதனுட்புகுந்து உலோகத்திருமேனி உருவாக்கச் சொல்லி அதற்கே பூசைகளைச் செய்யப்பணித்து, விரும்பாவிளைகள் ஏற்பட, ‘நவபாஷாணத்’ திருமேனிக்கே அடியார் மீளப் போய்விட்டார்.) மற்ற 5 படைவீடுகளிலும் பழனிக்கு முன்பே பண்டாரப் பூசை நின்று, பார்ப்பனப் பூசையே தொடர்கிறது. பல அம்மன் கோயில்களிலும் பார்ப்பனரல்லாக் குருக்கள் மாறிப் பார்ப்பனக் குருக்கள் நடைமுறைக்கு வந்து விட்டார். (சென்னைக்கருகில் பள்ளிப்படையான பெரிய பாளையம் பவானியம்மன் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனப் பூசை கிடையாது. இப்பொழுதோ நடைபெறுகிறது. எல்லாங் காலத்தின் கோலம்.)

அறிவர், குயவர், வள்ளுவர், பண்டாரமெனப் பல்வேறு வகையார் பார்ப்பனமயமாகாக் கோயில்களின் வழிவழிச் சமயக்குருக்களாவர். எங்கள்பக்கத்தில் வாழ்வின் பெரும்பாலான நல்லவை, கெட்டவைகளுக்கு இக்குருக்களையே நாடுவர். பார்ப்பன வழிப் புரிசைகளுக்கு மட்டுமே பார்ப்பனக் குருக்களை அழைப்பர். சிவகங்கைப் பக்கம் பார்ப்பனரல்லாக் குருக்களை வேளகாரர் என்பர். வேள்வைக் -வேட்பைக்- இடைநின்று கடவுளுக்குச் சொல்வார் வேளகாரராவர். வேள்வென்பது தமிழ்ப்பழக்கம். நீரையும், பூவையும் அட்டுவதும், பாக்கள்பாடுவதும் இதில் முகனை. வேள்வி வடக்கிருந்து வந்த பழக்கம். அழனியில் ஆகுதியிடுவதும், சங்கதத்தில் மந்திரம் ஓதுவதும் இதில் முகனை. சிவன் கோயிலில் வேளகாரர் பூசைசெய்தது பல்லவர் காலத்தின் முன் நின்று போனது போலும். வரலாற்றில் எப்பொழுது இது நடந்தது, பார்ப்பனக் குருக்கள் சேயோன், மாயோன் கோயிலுள் எப்போது நுழைந்தாரென அலசவேண்டும்.

[வேளகாரருக்கு இணையாகவே ’வேளும்பார்ப்பார்’ எழுந்தார். வேளாப் பார்ப்பார் இவருக்கு மறுதலை. இன்றும் ஈசன் கோயிலுள்ளும், அம்மன் கோயிலுள்ளும் மூலமேனியைத் தொடும் குருக்களுக்கும், வெளியே சங்கத மந்திரஞ் சொல்லும் குருக்களுக்கும் இடையே பார்ப்பனர் நடைமுறைகளிற் குமுக வேறுபாடு காட்டுவர். முன்னவர் சிவாச்சாரியர் என்றும் பின்னவர் வாத்தியார் என்றும் அழைக்கப்படுவர். சங்கத மந்திரஞ் சொல்லத் தெரியாத சிவாச்சாரியார் அவர்களுள் சற்று குறைவாகவே எண்ணப்படுவார். பார்ப்பனக் குமுகத்தின் உள்ளே நிலவும் கூட்டங்கள் (கோத்திரங்கள்) பற்றிய குமுகவியல் அலசல் இன்னும் நடைபெறவில்லை.]

கூடவே தமிழக, ஈழ நாட்டுப்புறங்களில் இன்றிருக்கும் மரபு மிச்சங்களைச் சங்க நூல் நடைமுறைகளோடு பொருத்திப் பார்க்காது, கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் பின் தமிழ்க் குமுகாயத்தில் வலுவுற்ற வேதநெறி பிணைந்த சிவ, விண்ணெறித் தாக்கங்களோடு மட்டுமே பொருத்தி விளக்கஞ் சொல்வதால் வரலாற்றுக் கட்டுமானப் பிறழ்ச்சியும் ஏற்படுகிறது. பல்லவர் காலத்துப் பற்றி (பக்தி) இயக்கத்திற்கு முன்னும் தமிழர்க்கு வரலாறும், மரபும், வாழ்க்கை முறைகளுமுண்டு. அவற்றின் மிச்ச சொச்சங்கள் இன்றுந் தொடர்கின்றன. இதைமறுத்து, கி.பி.5ஆம் நூற்றாண்டிற்கு அப்புறம் சிலப்பதிகாரம் போன்ற தமிழிலக்கியங்களைப் பொருத்தும் பிழைப்போக்கு உருப்படியான ஆய்விற்குக் கொண்டு செல்லாது. பல மேனாட்டாய்வாளரும், அவருக்குப் பின்புலமான ’துபாஷி’ இடைப்பரட்டுத் தமிழறிஞரும் (துபாஷிகளும் மேனாட்டாய்வாளரும் நாணயத்தின் இருபக்கங்கள் போல அமைகிறார்.) இப்படியோர் கட்டுமானச் சிக்கலிலிருந்து என்றைக்கு வெளிவருவாரோ, தெரியவில்லை. தமிழாய்வும் இந்திய ஆய்வும் இதனாற் பெரிதும் தடுமாறுகின்றன.

இதுதான் சேயோன் கோயிலின் தொடக்கமென ஒன்றைக் காண்பது பெருஞ்சரவலே. இன்னொருமுறை பரவலாக சேயோன், மாயோன் செய்திகளைப் பார்ப்போம். அணங்கை விளக்குவதே இங்கு முகனையாகும். முருகன்கோயில் அணங்கு பற்றிப் புறம் 299 பேசுவதால், மேலே பார்ப்பனரல்லா நடைமுறைகள் பார்ப்பனமயமான சேயோன் கோயில்களில் ஊடுறுவி நிற்பதைப் பேசும் தேவையெழுந்தது. அணங்குபற்றிய தவறான புரிதல் பல மேனாட்டாய்வாளருக்கிருக்கிறது. தமிழரிற் சிலரும் நம் மரபுகளைக் கணக்கிற்கொள்ளாது மேலையர் ’கண்டுபிடிப்புக்களைச்’  சிக்கெனப் பிடித்து ’எங்கெழுந்து அருளுவதினியே’ என்று தொங்குகிறார். அணங்கோடு முருகனைச் சேர்த்துப் பொருள்காண வேண்டுமெனில் ”சேயோன், மாயோன் கோயில்கள் தெற்கில் இனக்குழுக் கோயில்களாகத் தோற்றங் கொண்டன, அதன் மிச்ச சொச்சங்கள் இன்னுமிருக்கின்றன” என்பதையும். வடக்கிலும் தெற்கிலும் உள்ள சமய வேறுபாடுகளை வரலாற்று நெறிப் படியும் உணரவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.