----------------------------------------
தொல்காப்பியத்தில் “வடமொழி” என்ற சொல்லுக்கு சங்கதம் (சமஸ்கிருதம்) என்று நிறைய உரையாசிரியர் உரையெழுதிச் சென்றிருக்கிறார். ஆனாலும் சில அறிஞர் (குறிப்பாகக் கார்த்திகேசு சிவத்தம்பி, தெ.பொ.மீ) அது பிராகிருதம் என்றே பொருள் கொள்கின்றனர்.
தொல்காப்பியத்தில் “வடமொழி” என்ற சொல்லுக்கு சங்கதம் (சமஸ்கிருதம்) என்று நிறைய உரையாசிரியர் உரையெழுதிச் சென்றிருக்கிறார். ஆனாலும் சில அறிஞர் (குறிப்பாகக் கார்த்திகேசு சிவத்தம்பி, தெ.பொ.மீ) அது பிராகிருதம் என்றே பொருள் கொள்கின்றனர்.
”..5.2.1 வடமொழி தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட மொழி சமஸ்கிருதம் எனப்படும் வடமொழியாகும். தொல்காப்பியர் வடக்கிலுள்ள மொழியைப் பற்றிப் பொதுவாக வடசொல் எனக் குறிப்பிடுகிறார். அதனால் இச்சொல் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளையும் குறிப்பதாயிருக்க வேண்டும் என்று தெ.பொ.மீ. குறிப்பிடுகிறார்...”
1. உண்மையில் “வடமொழி” என்பது சங்கதம் மட்டும்தானா? அல்லது பாகதம் என்பதையும் சேர்த்தேப் பொருள் கொள்ள வேண்டுமா?
2. ஆம், அப்படி சேர்த்தே பொருள் கொள்ள வேண்டும் என்றால், "கிடைத்த கல்வெட்டுகளின்படி தமிழுக்கும், பாகத்திற்கும் மட்டுமே முற்கால (கி.மு) கல்வெட்டுக்கள் இருக்கின்றன! சங்கத கல்வெட்டோ, மிகவும் பிந்தியது! தொல்காப்பியம் எழுந்த காலம் கி.மு.என்று கொண்டால், அக்காலத்தில் சங்கதத்தில் எழுந்தக் கல்வெட்டுக்கள் இல்லை. அதிகாரப்பூர்வ சங்கதக் கல்வெட்டின் காலம் என்று கி.பி.150ஆம் நூற்றாண்டு என்று சொல்கிறார். எழுத்து இல்லாத மொழிக்கு இலக்கணம் படைக்க முடியுமா?"
குழும அன்பரின் கருத்தையறிய
அவா.
---------------------------------------
---------------------------------------
என்று ”தமிழ்மன்றம்” மடற்குழுவிற் திரு.பானுகுமார் இராசேந்திரன் ஒருமுறை கேட்டிருந்தார். தமிழர் பலருக்கும் இக்கேள்வி எழக் கூடும் என்பதால், என் மறுமொழியை 3 மடற்குழுக்களிலும், என் வலைப்பதிவிலும் சேர்த்தே இடுகிறேன். நண்பர் பானுகுமார் பொறுத்துக் கொள்வாராகுக.
மொழிவளர்ச்சி என்பது சிக்கிலா நூற்கண்டிற்
நீள வலிப்பது போல், எண்ணுதியாய் (quantitative) நிகழ்வதில்லை. கால மாற்றத்தில்
மொழி பேசுவோர் எண்ணிக்கை கூடக்கூட எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியில் மொழி வேறுபாடு கூடுகிறது. ஓரிடத்துப் பேச்சு
அங்கு மட்டுமே விதப்பாகி (specialized), இன்னோரிடத்திற் புரிந்தோ, புரியாமலோ
போகலாம். ஒருசொல் - பல்பொருள் தன்மையும்,
பல்சொல் - ஒருபொருள் தன்மையும் மொழியில் மிகுத்து ஏற்படலாம். இதுவரையில்லாது
விதப்பான, பொருட்பாடுகள் கூட ஏற்படலாம். (நாற்றத்தின் பொருள் இன்று மாற வில்லையா?) மொழித்தொனி கூட, இடத்திற்கிடம் மாறலாம்.
(தமிழீழம், தென்பாண்டி, வடதமிழகத் தொனிகள் வெவ்வேறானவை. இத்தகை மொழி கேட்ட ஓரிரு
நுணுத்தங்களிற் (minutes) பேசுவோர் ஊற்று யாருக்கும்
புரிந்து விடும்.) இப்படி வேறுபடுவதைத் தான் ”இயல்மொழிக் கிளைப்பு, முரணியக்க
மொழிவளர்ச்சி (dialectic language development)” என்று சொல்கிறோம்.
வடவேங்கடம் தென்குமரிக்கிடையில், ஒரேமாதிரி புரியவேண்டிய மொழி ஏதோ காரணங் கருதிப் பிரிய, ”நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ், வடார்க்காட்டுத் தமிழ் (சென்னைத் தமிழ், வடார்க்காட்டுத் தமிழின் இன்னொரு வகை), யாழ்ப்பாணத் தமிழ்” என வட்டார அடிப்படையிற் கிளைகளுக்குப் பெயரிடத் தொடங்குகிறோம். கிளைமொழிகள் ஏற்படுவது, அடிப்படையில் இயல்பு வளர்ச்சியே. பின்னால் இக் கிளைமொழிகள் வட்டாரங்களுக்கிடையுள்ள போக்குவரத்துக் குறைவால், கால இடைவெளியால், நுட்பியல் பரிமாற்றங்கள் வளராததால், வெவ்வேறு பொருளியல் வணிக ஆட்சித் தாக்கங்களால், வேண்டி விழையும் அரசியல் குமுக நடைமுறைகளால், தனி மொழிகளாய் மாறத் தலைப்படுகின்றன.
2000/3000 ஆண்டு கால வரலாற்றிற் தமிழுக்கும் அப்படி நடந்துள்ளது. வேங்கடத்திற்கப்பால் அருவத் தமிழும், மங்களூரை அண்ணிய கொங்கணத் தமிழும், வட கொங்கின் கங்கர் தமிழும், குடநாட்டுச் சேரலத் தமிழும் முறையே தெலுங்கு, துளு, கன்னடம், மலையாளம் என வெவ்வேறு கால கட்டங்களிற் திரிந்து, எழுத்தும், சொல்லும், பொருளும் வேறுபட்டு பங்காளி மொழிகளாயின. இவை நம் குடும்ப மொழிகளே, ஆனாற் பங்காளிகள். மொழித் தொடர்ச்சி, விதப்பு, நுணுக்கம் போன்றவற்றில் நமக்கெவ்வளவு உண்டோ, அதே உரிமை இவருக்குமுண்டு.
இவ்விடங்களிற் புழங்கிய தமிழ், வேறுமொழிகளாய் மாறியதை இன்னோர் ஆய்வர் வலிந்துமறுத்து, முந்துதிராவிடம் (proto Dravidian) என்றோ, தொடக்கத் திராவிடம் (early Dravidian) என்றோ மாற்றுப்பெயரிற் குறிக்கலாம். நான் அப்படிச் செய்யேன். நெருப்பை அழல் என்பதால் வாய் வேகாது. அதைச் சங்கதப்படுத்தி அழனி>அக்னி (இருக்கு வேதத்திற் புழங்குகிறது.) என்று சொல்லவேண்டியதில்லை. முந்து/தொடக்கத் திராவிடம் என்பது கிட்டத்தட்ட 95/98 % தமிழ் தான். திராவிடம் என்பதைத் தயங்காமற் தமிழியம் என்பவன் நான். கல்விச்சாலை அரசியலை (academic politics) நீக்குப்போக்கோடு காப்பாற்ற ’முந்து திராவிடம்’ எனச்சிலர் சொல்வதைப் புரிந்துகொள்கிறேன்.
கி.மு.200 களிற் தொடங்கிய, இன்றை மராட்டிய ஔரங்காபாதிற்கு அருகில் கோதாவரி யாற்றங்கரையிலிருந்த படித்தானத்திலிருந்து ஆண்ட நூற்றுவர் கன்னர் அரசில் நாணயம் தமிழ், பாகதம் என்ற 2 மொழிகளிலும் அச்சடிக்கப் பட்டிருந்தது. அதுவொன்றே தமிழின் ஆட்சியெல்லை 2200 ஆண்டுகளுக்கு முன் விந்தியம் வரை இருந்ததை விளக்கும். விந்திய மலையையே விண்டு மலை என்று வெங்காளுர் குணா விளக்கம் சொல்வார். சுவையாரமான சரியான விளக்கம். இன்னொரு நாள் சொல்கிறேன். (தமிழின் ஆட்சியெல்லை மூவேந்தர் ஆட்சியெல்லையை விடப் பெரியது. இன்றுங் கூடத் தமிழின் ஆட்சியெல்லை, தமிழ்நாட்டைவிடப் பெரியது.) தவிரச் சங்க இலக்கியத்தில், குறிப்பாக மாமூலனார் பாடலில் வரும் ’மொழிபெயர் தேயம்’ என்ற தொடர் மூலம், தமிழும், இன்னொரு மொழியும் - அது பாகதம் என்று நாணயவியல், கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். - நூற்றுவர் கன்னர் ஆட்சியில் ஒரே நேரத்தில் ஆட்சி மொழிகளாய்த் துலங்கியது விளங்குகிறது. அப்புறம் என்ன ’முந்து திராவிடம்’ ? யாரை ஏமாற்ற? கொஞ்சமும் தடுமாற்றமின்றி, நாம் ’பழந்தமிழ்’ என்கலாமே?
இந்திய வரலாற்றில் வடபுல/தென்புல நாகரிக, பண்பாட்டு ஊடாட்டங்களை அறிய வேண்டுமெனில் நூற்றுவர்கன்னர் ஆட்சியைப் பல கோணங்களில் ஆய வேண்டும். தாய்வழி உறவு கொண்ட அவர் (கி.மு.230 - கி.பி.220), பாகதத்தைக் கொண்டாடியுள்ளார். [நம் அகநானூறு போலவே அங்கும் ’அகம் எழுநூறு’ என்ற தொகுப்புநூல் எழுந்தது. அகம் என்பது கஹ என்றும், எழுநூறு என்பது ‘சத்தசை’ என்றும் பாகதத்திற் கூறப்படும்.) தமிழரிடையே பரவிய பெருங்கதை கன்னரின் அரசவையிற்றான் எழுந்தது. (பெருங்கதை உச்செயினியை ஒட்டிய உதயணன் கதையை விவரிக்கிறது.) கன்னர் கல்வெட்டுகளைப் பார்த்தால் வேதநெறியைப் போற்றிய அதே நேரத்தில் வேதமறுப்பு நெறிகளையும் அவர் புரந்தது புலப்படும். தமிழரைப் போலவே சமயப்பொறை அங்கும் மிகுந்திருக்கிறது. வடக்கே மகதம் போகும் வணிகச் சாத்துகள் படித்தானம் (இற்றை அவுரங்காபாதிற்கு அருகிலுள்ள பைத்தான்) வழியாகவே சென்றுள்ளன. தவிர, அவ்வரசின் மேற்குத் துறைமுகங்கள் மேலை நாட்டு வணிகத்திற்குக் கால்கோலியுள்ளன. இன்னும் பல ஒற்றுமைகள் தென்படுகின்றன.
நூற்றுவர் கன்னர் ஆட்சியில் தென்கிழக்கு திசையிற் பாகதமும், அருவத் தமிழும் ஊடாடிப்பிறந்த மொழியே தெலுங்காகும். நம் பழந்தமிழருக்கு அது வடுகு. பாகதர்க்கு அது தெலுகு/ தெனுகு; [தெல்திசையைத் தெற்கு, தென் திசை என்கிறோமல்லவா? இதைத் தக்கணமென்றுஞ் சொல்வதுண்டு. தெலுங்கெனுஞ் சொல்லைத் ’திரிகலிங்கின்’ திரிவாகக் கொள்வது ஆதாரம் இலாக் கூற்று.] இந்த வடுகு/தெலுகுப் பெயர் விளையாட்டே நமக்கு ஒரு மொழியுண்மையைத் தெரிவிக்கிறது.
நூற்றுவர் கன்னர் தொடர்பாலும், பின்னர் வந்த சளுக்கியர் தொடர்பாலும், கன்னடமும் ஒரு காலத்தில் ’வடுகெ’னப்பட்டது. படகர் என்பார் தமிழ்ப் பலுக்கின் படி வடகரே. சிலம்பிற் பயிலும் “கொடுங்கருநாடர்” என்ற சொல்லே ”கொடுகித் திரிந்த மொழிபேசும் கருநாடர்” என்பதைத் தான் குறிக்கிறது. [”எதிலிருந்து கொடுகியது?” என்ற கேள்வியைச் சேர்த்துக்கேட்டுப் பாருங்கள்; பழங்கன்னடத் தொடக்கம் தமிழில் என்பது புரியும். சிலம்பின் காலத்தில் தமிழ் அங்கு கொடுகித் திரியத் தொடங்கிவிட்டது. ஆனால் அது வட்டார மொழி நிலை. (சிலம்பைப் படிக்காதவர் செம்மொழி விருது கொடுக்க முனைந்தார்.) கேள்விகேட்கத் தாம் நம்மிற் பலருந் தயங்குகிறோம்.]
வேங்கடம் என்பது சங்ககால முடிவுக்காலத்தில் ஒரு மலை மட்டுமல்ல. இன்று இராயல சீமை எனப்படும் வெம்மைநிலப் பகுதியையும் சேர்த்தே குறித்தது. வெய்யில் கொளுத்தும் வேம்+கடமும் வேங்கடமானது; (சங்க காலத் தொடக்கத்தில் வேங்கடம் என்பது விண்டு>விண்டிய>விந்திய மலை. அதை வேறு கட்டுரையில் சொல்வேன்). சங்ககால இறுதியில் வேங்கடந் தாண்டுவது இராயல சீமையைத் தாண்டுவது என்றே பொருள்படும். அக்காலத்தில் கடற் பக்க ஆந்திரப் பகுதி பெருங்காடாய் இருந்தது. (அக்காட்டின் ஊடே சாலை அமைத்து வடக்கேபோனது பிற்காலப் பேரரசுச் சோழர் காலத்தில் ஏற்பட்டது ஆகும்.) சங்க காலத்தில் வடக்கே போகும் சாத்துக்கள் எல்லாம் இராயல சீமையின் பாலைப் பகுதி கடந்து கர்நாடக வழி படித்தானம் (>பைத்தான்) போய், தக்கணப்பாதை வழியாக மகதம் போயின. சங்க இலக்கியத்தில் நூற்றிற்குப் பாதிப் பாட்டுக்கள் பாலைப் பாட்டுக்கள் தானே? (தக்கண, உத்தரப் பாதைகளைப் புரிந்துகொள்ளாது இந்தியாவின் தொன்மை வரலாறு புரியாது. தமிழாய்வும் விளங்காது. நம்மூர்த் தமிழறிஞர் இதை என்று உணர்வாரோ தெரியாது.) அன்று பாலையைத் தாண்டி மகதம் போகாது, அன்றேற் கடல்வழி மேற்கு நாடுகளுடனும், தென்கிழக்கு நாடுகளுடனும் வணிகஞ் செய்யாது,தமிழர் பொருள் சம்பாதிப்பது எப்படி?
விந்தியத்திற்குத் தெற்கிருந்த தமிழ்மொழி எப்படிப் பல்வேறு மொழிகளாய்த் திரிந்ததோ, அது போல பாகதமும் பல மொழிகளாய்த் திரிந்தது. (கத்துவது, ஒலிப்பது கதம். ”என்ன கதைக்குறே?” என்று ஈழத்தில் கேட்பார்இல்லையா? கதைத்தல் = பேசுதல்; பா கதம் = பரவலான பேச்சு. இதைப் பெருகதம் - prakrit - என்றுஞ் சொல்லலாம். தமிழ் என்று இன்று தனித்துச் சொல்லுவதில் எத்தனை அருகதை இருக்கிறதோ, அதே போலப் பாகதம் என்பது தனித்தே நிற்கக் கூடிய மொழி. அதை மறைத்துச் சங்கதத்திலிருந்து பாகதம் பிறந்ததென்பது பெயரனிலிருந்து தாத்தன் பிறந்தான் என்று சொல்லுவதையொக்கும். செந்தமிழிலிருந்து தமிழ் வந்தது என்று சொல்லுவது எவ்வளவு தவறோ அதே தவறு செங்கதத்திலிருந்து பாகதம் வந்தது என்பதாகும்.)
1. பாஷை,(பேச்சென்பதே பாஷையானது. இக்காலத்தில் பேச்சு வேறு, பாஷை வேறென்று சிலர் புரிந்துகொள்ளுகிறார். இரண்டும் வெவ்வேறு பலுக்கல்கள்; அவ்வளவு தான். பாஷை என்பது கி.மு.1500 - 1200 களைச் சேர்ந்த வேத மொழியை அடிப்படையாகக் கொண்டு, சுற்றியிருந்த வழக்கு மொழிகளின் பங்களிப்போடு, இற்றைக்கால இலாகூரைச் சுற்றி இந்தியாவிலும், பாகித்தானிலும் உள்ள இடத்தில் இருந்த பேச்சாகும். இதன் செய்யுள் மொழி சந்தஸ் என்று சொல்லப்பட்டது. பாணினி இந்த சந்தஸ்/பாஷா மொழிக்குத் தான் கி.மு.4 ஆம் நூற்றாண்டில் இலக்கணம் எழுதினான்.),
2. மகாராட்டி (இது படித்தானத்தை மையமாகக் கொண்டு கவித்துவம் நிறைந்ததாய்க் கையாளப்பட்ட மொழி, பாகத இலக்கியங்களில் கவிதை மொழியாக மகாராட்டியையே பெரிதும் பயன் படுத்தியிருக்கிறார்),
3. மாகதி (இற்றைத் தென் பீகாரில் 2000 ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தை யொட்டி மகத அரசிற் பரவலாகப் பேசப்பட்ட கிளை மொழி, தமிழ், தமிழர் என்பது போல் மாகதி, மாகதர் என்றாகும். பிம்பிசாரன் தொடங்கி நந்தர், மோரியர், சுங்கர், கனகர் போன்றோர் பெரிதும் புரந்த மொழி. தொடக்க கால புத்தத்தின் பேச்சு மொழியும் இதுவே. புத்தத்தின் எழுத்து மொழியான பாலி இதிலிருந்தே பள்ளிகளின் செம்மொழியாகக் கிளைத்தது. இன்று வரை தேரவாதபுத்தம் பாலிமொழியை இலக்கிய மொழியாய்ப் பயனுறுத்துகிறது. கி.பி.500 களில் எழுந்த மகாயான புத்தம் சங்கதங்கலந்த பாலியைப் பயன்படுத்தியது),
4. அர்த்த மாகதி (பாதி மாகதி என்று பொருள் கொண்டது. மகதத்தின் வடக்கே வச்சிரத்தில் பெரிதும் புழங்கிய மொழி. இதையே மகாவீரர் பேசினார். தொடக்க கால செயினத்தின் பரவலான மொழி இதுவே. திகம்பர செயினம் இன்றும் பல்வேறு வகையில் அர்த்த மாகதியைக் காப்பாற்றி வருகிறது. அதே பொழுது சுவேதாம்பர செயினம் சங்கதம் கலந்த அர்த்த மாகதியை ஏற்றுக் கொண்டுவிட்டது.),
5. அங்க மொழி (இற்றை வங்கத்தின் முந்தையக் கட்டம்.)
6. மைதிலி (இன்றும் பீகாரில் இது பரவலான பேச்சு மொழி. மிதிலைப் பக்கது மொழி. பல எழுத்தாவணங்கள் இம்மொழியில் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இற்றை இந்தித் தாக்கத்தால் இவ்வெளிப்பாடு நடைபெறாதுள்ளது. இந்த ஆவணங்கள் வெளிவரவேண்டும்.),
7. சூரசேனி (வட மதுரையைச் சுற்றிவளர்ந்த பேச்சு மொழி. இற்றை இந்தி மொழி என்பது சூரசேனியின் அடியில் வளர்ந்த காரிபோலியின் திரிந்த வடிவமே. சூரசேனி>காரிபோலி>இந்தி. இந்திமொழி இந்திய அரசின் முற்றாளுமையில் இன்று பெரிதும் பரவிக்கொண்டுள்ளது. பாகதத்தின் பழைய கிளை மொழிகள் கொஞ்சங் கொஞ்சமாய் அழிந்துகொண்டுள்ளன.),
8. கூர்ச்சரி (இற்றை குசராத்தியின் முந்தை வடிவம்)
என்று ஆங்காங்கு வடபுலத்தில் திரிந்தது. (ஒரு காலத்தில் இவை கிளை மொழிகளைக் குறித்துப் பின் காலவோட்டத்திற் தனி மொழிகளாகின.) இன்னும் பல்வேறு மொழிகள் (பஞ்சாபி, காசுமிரி, இராசத்தானி, ஹர்யான்வி போன்றவை) இவற்றிலிருந்து பிறந்துள்ளன.
பல்வேறு கிளை மொழிகளைக் கலந்து பாணினிக்கு அப்புறம் கி.மு.300 களில் வடமேற்கிருந்த பாஷாவை (சந்தஸ்) அடிப்படையாக்கிப் படிப்பாளிகள் ஒரு கலப்பு மொழியைப் (சம் கதத்தை = கலப்புப் பேச்சை) உருவாக்கினர். சங்கதத்திற்கு எழுத்துரு கொடுத்தது கி.பி.150 களிற்றான். பாகத எழுத்தை (பெருமி எழுத்தை brahmi script) அப்படியே எடுத்துக் கொண்டார். வெவ்வேறு அரசுகளில் வெவ்வேறு எழுத்து முறைகள் பயன்பட்டன. சங்கதம் என்ற பெயரைக் கூடப் பாணினி பகர மாட்டான். அவன் பாஷா, சந்தஸ் என்றே, தான் பயிலும் மொழி பற்றிச் சொல்லியுள்ளான். பின்னால் குப்த அரசின் ஆட்சி மொழியாக மாறிச் சங்கதம், செங்கதம் என்றும் (செம்மையான பேச்சாகவும்) மாறியது. சங்கதம்>செங்கதம் தெற்கே வந்து பல்லவர் ஆட்சியில் பாகதத்தை வெளியேற்றி ஆட்சியில் அமர்ந்தது. சாத வாகனருக்குக் கீழ் அதிகாரிகளாயிருந்த பல்லவர் இராயல சீமையிலிருந்து வந்து புது அரசாட்சியை ஏற்படுத்தினர். தெற்கே பல்லவர் ஆட்சிக்குச் சற்று முன்னர் தமிழெழுத்திலிருந்து கிரந்தம் உருவாக்கி சங்கதம் எழுதினார்.
குப்த அரசு பெற்ற சிறப்பின் காரணமாய், அதன் அகண்ட வளர்ச்சியால், வெவ்வேறு வட்டாரங்களிலிருந்த இலக்கியங்கள் சங்கதத்திற்குப் பெயர்க்கப் பட்டன. பல மொழிபெயர்ப்பு நூல்கள் சங்கதத்திலுள்ளன. (பெயர் பெற்ற பஞ்சதந்திரமும் ஒரு மொழிபெயர்ப்பு நூலே. பெருங்கதை சங்கதத்தில் மொழிபெயர்க்கப் பட்டது.) இன்று எல்லாவற்றிற்கும் சங்கதமே ஊற்றென உரைபரப்புகிறார். வெற்றிபெற்றோர் வரலாறெழுதுவது போல் அவற்றைக் கொள்ளவேண்டியுள்ளது. குப்தர் அவையில் காளிதாசன் முதற்கொண்டு பல்வேறு புலவரும் இலக்கியம் படைத்தனர். சங்கதத்தின் உச்ச கட்டம் குப்தர் ஆட்சியிலேயே ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாய் மற்ற வட்டாரமொழிகளை விழுங்கத் தொடங்கி சங்கதம் எங்கும் பரவத் தொடங்கியது. வடமொழி என்ற சொல் குப்தர்காலத்திற் சங்கதத்தையே குறித்தது.
ஆனாற் சங்க காலத்திற் அது பெரும்பாலும் பாகதத்தையும், படித்தோர் வழி சிறுபான்மை பாஷா/சந்தஸையும் குறித்தது அது இடத்தை வைத்துப் பெயர் இட்ட பழக்கம். அக்காலத்திற் தென்மொழி என்பது தமிழ். ஏனெனில் மற்ற தெற்கத்தி மொழிகள் கிளைமொழிகளாய் இருந்தன. இன்று தென்மொழி என்று பொதுப்படத் தமிழைச் சொல்வது சரியாயிருக்குமா?
வடபுலத்திருந்து வெகுதொலைவில் உள்ள நமக்கு ”வடக்கே இருந்த/இருக்கும் மொழி” எனும்போது இடத்தைவைத்துப் பெயரிட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதன் வரலாற்றுப் பொருள் காலத்திற்கு ஏற்ப மாறுபட்டது. காலந்தவிர்த்து தனித்தாற்போல் இச்சொல்லிற்குப் பொருள்கூற முடியாது.
பல்லவர் தாக்கத்தின் பின் பாகதமென்ற புரிதல் தமிழகத்திற் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்துபோனது. பின்னால் ஏற்பட்ட கருத்து மாற்றத்தைச் சங்க காலத்திற்குக் கொண்டுபோய் வலிந்து பொருள் சொல்வது தவறு.
அன்புடன்,
இராம.கி.
இராம.கி.
3 comments:
பா-பாட(ல்)- பாஷ., பாஷை. பாடலுக்கு பொருள் இயம்புவது பாஷ்யம்., தமிழில் பாயிரம். பா கதை - பா கதம். பலி-பாலி=வேள்வி. மகம்=வேள்வி. மகத நாடு=வேள் புலம். மகதம் என்பது வேள்புலத்தின் வடவெல்லை. பலி யில் ஓதப்பட்டதால் அம்மொழி பாலிமொழி எப்பட்டது எனலாம்.
மா கதை-மா கதம்- மாகதி.ஆக இம்மொழியின் பெயரும் தமிழாகவே இருக்கிறது.
மா கதை-மா கதம்- மாகதி.ஆக இம்மொழியின் பெயரும் தமிழாகவே இருக்கிறது.
Post a Comment