Sunday, May 05, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 3

சங்ககாலத்தும் இக்காலத்தும் இடையே வேறுபடும் தொடர்ச்செறிவு, சொற்செறிவு, காட்சிச்செறிவு, உரைத்தொடர்ச்சி பற்றிப் பேசினோம். இவைதவிர, ஆட்சிமொழி அதிகாரம், பொருளியற் தேவை, சாதித் தாழ்ச்சி/உயர்ச்சி, குமுக ஒப்புதல், படிய நோக்கு (fashionable view), சமய மாற்றம், மெய்யியற் சிந்தனை, மாற்றாரோடு போர் போன்ற காரணங்களால் வேற்று மொழி கலந்து, தமிழ்நடை வேறுபடலாம். சொந்த மரபுகளை எந்த அளவு பேணுகிறோம் என்பதைப் பொறுத்தே வரலாற்றில் இவ்வேறுபாடுகள் நிலைக்கும் அன்றேல் மறையும்.

[”சொந்தமொழி இனிப் பயன்படாது” என்று இனப் பெருமிதம் குலைத்த பின்னால், கால காலத்திற்கும் இன்னொருவருக்கு அடிமையாக என்ன தடை? பெரும்பாலான அடிமைகளை மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஒன்றித்த அமெரிக்க நாடுகளின் (United States of America) தெற்கு மாநிலங்களுக்குக் கொண்டு சென்ற போது அவர்களின் ”ஒலோவ் (wolof)” மொழியைக் கலப்பாலும் தண்டனையாலும் ஒழித்தே, வெள்ளையர் அடிமைக் குமுகத்தை ஏற்படுத்தினர். 4,5 தலைமுறையில், முசுலீம்களாயும், நாட்டு வழிபாட்டாளருமாயிருந்த கருப்பர் எல்லோரும் ஆங்கிலம் பேசத் தெரிந்த கிறித்துவராயினர். தோட்டக்கூலிகளாய் கரிபியன் தீவுகளுக்கும், மொரிசியசிற்கும், பியூஜிக்கும், தென்னாப்பிரிக்காவிற்கும் போன மக்கள் தமிழைக் காப்பற்ற முடிந்ததா, என்ன? உலகெங்கும் ஆளும் இனம் ஆளப்படும் இனத்தை இப்படித்தான் ஒடுக்குகிறது. ஈழத் தமிழர் சிங்களம் பேசும் புத்தராய் மாற எத்தனை காலமோ ????]

சங்ககாலத் தமிழ்நிலை அறியச் சற்று வரலாற்றுள் போகவேண்டும். வரலாற்றுத் தொடக்கம் பெருமிதம் வாய்த்தது தான். [வரலாற்றுப் பார்வை ஒரு வறட்டுத்தனமாய், ”எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ்” சொல்லிக் கொடுப்பதிற் தொடர்பற்றதாய்ப் பலருக்குத் தெரியலாம். ”பொறுமையோடு படியுங்கள்” என்றே சொல்லமுடியும். மொழியரசியல் புரிய வேண்டுமெனில், வரலாறு தெரியாமல் முடியாது.] இற்றைத் தமிழாய்வின் படி, சங்க காலத்தை ”கி.மு.520 தொடங்கி கி.பி.220 வரை” இருந்ததாகவே கொள்ள வேண்டும். [”கி.மு.300 தொடங்கி கி.பி.300 வரை” யென்று வழமையாய்ச் சங்ககாலப் பருவஞ் சொல்வது ”பொருந்தல்” தொல்லாய்விற்குப் பின் முடியாது. சிந்துப் படவெழுத்தைத் தவிர்ப்பின், தமிழகம், ஈழத்திலிருந்து தமிழியாய் வெளிக் கிளம்பியதே முதலிலெழுந்த இந்திய எழுத்தாகும். இந்தத் தொல்லியற் கண்டுபிடிப்பை மரபார்ந்த இந்திய இலக்கியரும், வரலாற்று ஆசிரியரும், மொழியியல் வல்லுநரும் இன்னும் உள்வாங்கத் தயங்குகிறார். தம் தெரிவுகளில் வலிந்து தொங்கி, ஆய்வுகளைத் தடம்மாற்ற மறுக்கிறார். “ஈயடிச்சான் படியாய்” அசோகன் பிராமி ”ததாஸ்து” என்றே சொல்லுகிறார்.]

சங்க காலத்தில் மூவேந்தர் நாட்டுத் தொகுதியும், நூற்றுவர் கன்னரின் தக்கணமும், கங்கைப்புறத்து மகதமும் சம கால அரசுகளாகும். மூவேந்தர் நாடுகள் தமிழகத்துட் போட்டியிட்டாலும், காரவேலன் கல்வெட்டின் படி “திராமிர சங்காத்தம்” ஒன்றைத் தம்முள் ஏற்படுத்தி, சேரநாடு, சோழநாட்டிற்கு வடக்கே மொழிபெயர் தேயத்தில் நிலைப்படை நிறுத்தி, தம் பொதுநலனைக் காப்பாற்றின. கிமு.230 தொடங்கி கி.பி. 220 வரை, மொழிபெயர் தேயத்தில் நூற்றுவர் கன்னரே (சாதவா கன்னரே) ”படித்தானத்தை”த் தலைநகராக்கி அரசாண்டனர்.(படித்தானம்> படித்தான்> Paithan; படித்துறை என்று பொருள். இற்றை ஔரங்காபாத், அசந்தா, எல்லோரா அருகிலிருந்த கோதாவரிக் கரை நகரம்; தமிழர் வரலாற்றோடு தொடர்புள்ளது). சங்கப் பாடல்களிற் பாதிக்கு மேல் பாலைத்திணையே ஆதலால், பிழைப்பு நாடித் தக்கணம் போனது உண்மைதான். (இராயலசீமையும் அதன் வடக்குமான நூற்றுவர் கன்னர் பகுதி வழியாகத் தான் செல்வந் தேடிப் போயிருக்கிறார்.) இன்றைக்கும் வடக்கே போகிறோமே? தக்கண அரசின் இற்றை எச்சங்கள் தாம் தெலுங்கு, கன்னட, மராட்டிய மொழிகளாகும்.

இதே கால நிலையிலும், சற்று முன்னும், மகதத்தில் வரலாற்றரசர் ஆட்சி கி.மு.522க்கு அருகில் பிம்பிசாரனிற் தொடங்கி, அசாதசத்து, உதயபத்ரன் என்றாகி, அவருக்குப் பின் குழம்பியது. கி.மு.413 தொடங்கி கி.மு.345 வரை சிசுநாகரும், கி.மு.345 தொடங்கி கி.மு.321 வரை நந்தரும், கி.மு.321 தொடங்கி கி.மு.185 வரை மோரியரும், கி.மு.185 தொடங்கி கி.மு. 75 வரை சுங்கரும், கி.மு. 75 தொடங்கி கி.மு. 30 வரை கனகரும் (கண்வர் என்னும் வடமொழிப் பெயர் தமிழர் வாயில் கணவர்> கனவர்> கனகர் ஆயிற்று.) மகதத்தை ஆண்டனர். கி.மு.30 இல் நூற்றுவர் கன்னர் கனகரை வீழ்த்தி, கி.பி.220 வரை மகதம் ஆண்டனர். மகதம் என்பது அக்காலத்தில் "மத்திய தேசம்” என்றுஞ் சொல்லப்பட்டது.

எப்படிப் பார்த்தாலும், ”தமிழகம், தக்கணம், மகதம்” மூன்றும் சங்க காலத்தில் அரச கருமங்களில் ஒன்றையொன்று ஊடுறுவிய அரசுகளாகும். இவ்வூடுகை புரிந்தாற்றான் அக்கால இந்திய வரலாறு விளங்கும். இதில் எவ்வரசைக் குறைத்து மதித்தாலும் வரலாறு புரியாது. தமிழ் மூவேந்தரைப் பின் தள்ளி மற்றவரை மட்டும் பேசுவது துணைக்கண்ட வரலாற்றாசிரியருக்கு வாடிக்கையாகும். தமிழ் நாட்டு வரலாற்றாசிரியரும் இதற்கு ஊதுகுழலானார். எந்தப் பழம் இந்திய வரலாற்று நூலிலும் ”சங்ககாலத் தமிழரசர் அந்தரத்திற் தொங்கியதாகவே குறிப்பார்”. சங்க காலச் சம அரசுகள் எவையென்றும் சொல்லார். இந்திய வரலாற்றிற் தமிழர் நாடு தனித்துங் கிடையாது. தமிழரின்றி தக்காணமும், மகதமும் அரசியல் பொருளியலில் நகரவுமில்லை.

தமிழகத்து அதியர் தலைநகரமாம் தகடூரில் (இற்றைத் தருமபுரி) இருந்து கருநாடக ஐம்பொழில் வழியாகப் படித்தானம் போய், அசந்தா, எல்லோரா வழியாக வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் (Gond country) பகுதியில் கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா (Bhilsa) வந்து, நேர்வடக்கே திரும்பி, தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் கோசாம்பி (Kosam) வந்து, அயோத்தி என்னும் சாகேதம் (Fyzaabaad) வந்து, முடிவில் சாவத்தியிற் சேர்வதே தக்கணப் பாதையாகும். இது தான் தமிழகத்திற்கும், மகதத்திற்கும் இடை தக்கண வழியிருந்த ஊடாட்டப் பாதையாகும். தக்கணப் பாதை போல் உத்தரப் பாதை ஒன்றும் இருந்தது அது “உத்தர தேசம்” என்னும் வடநாட்டையும் மத்திய தேசம் என்னும் நடுநாட்டையும் இணைத்தது.

தக்கணப் பாதை மூலமே தமிழர் வணிகச் சாத்துக்களும், சரக்குப் பரிமாற்றங்களும், செல்வ நகர்ச்சிகளும், மொழி ஊடாட்டங்களும் நடந்தன. குவலாள புரத்துப் (Kolar) பொன்னையும், கொங்கு அருமணிகளையும், சோழத் துவர்களையும் (பவழங்கள்), பாண்டிய நித்திலங்களையும் (நெத்தில்>நெதி>நிதி என்னும் முத்து) மறுத்துத் தக்கணப்பாதையைப் புரிய முடியாது. மதிப்புக் கூடிப் பருமன் சிறுத்த பரிமாற்றப் பண்டங்கள் (exchange goods) இவைதானே? பொருளாதாரங் கட்டும் அரசுகள் இவற்றைத் தவிர்த்துத் தம் கட்டுமானங்களை எழுப்புமா? தமிழ் வணிகமின்றி மகதமும், தக்கணமும் எழுமா? அதே போல செம்பு வடக்கிருந்து தெற்கே நகர்ந்திருக்கிறது. கங்கையாற்றுப் பண்டங்களும், கோதாவரி, கன்னை (கிருட்டிணை) யாறுகளின் விளைப்பும் தமிழகத்திற்கு வந்திருக்கின்றன. குடிலரின் அருத்த சாற்றம் படித்தால், மகதம், தக்கணம், தமிழகம் ஆகியவற்றிற்கு இடைநடந்த பொருளியற் பரிமாற்றங்கள் விளங்கும். சங்க காலத்தின் உவரி மதிப்பு (surplus value) எப்படி எழுந்தது? - என்று வரலாற்றாசிரியர் ஆழ ஆய்ந்தால் ஊடாட்டம் இன்னும் புலப்படும். [சங்க கால வேந்துகளை நிலவுடைமையின் தொடக்க கட்டமாய்ப் பாராது, பர்ட்டன் சுடெய்ன் (Burton Stein) பார்த்தது போலவே இனக்குழு சார்ந்த துண்டக அரசுகளாய் (segmentary state) பார்த்தால் எப்படி விளங்கும்?]

இற்றைத் தூத்துக்குடிக்கருகிற் கொற்கையிற் சங்கு அந்தக்காலம் கிடைத்தது; சங்கு விளையா வங்கத்தில் சங்கறுக்கும் வளைத்தொழில் இன்றும் மீந்து நிற்கிறது. அதே காலத்தில் கொற்கையில் முத்துக் கிடைத்தது; தக்கணம் சார்ந்த ஐதராபாதில் முத்து மாலைகள் இன்றும் நுணுகிச் சிறந்து செய்யப்படுகின்றன. ஆப்கன் lapis lazuli சேரர் நாட்டுக் கொடுமணத்தில் பட்டை தீட்டப்பட்டது. உப்பு விளைப்பு தமிழகத்திலும், கூர்ச்சரத்திலும் இருந்து மகதம் போனதை அர்த்த சாற்றமும், சங்க இலக்கியங்களும் பதிவு செய்கின்றன. தமிழகம், தக்கணம், மகதம் என்ற மூன்றிற்கும் இடையே நடந்த பொருளியல் ஊடாட்டம் இன்னும் சரியாகப் படிக்கப் படவில்லை. மூன்று அரசுகளிலும் பனை விளைந்து, பனையோலைகள் எழுதப் பயன்பட்டன. எழுத்தாவண நுட்பியல் மூவரசுகளிலும் ஒன்றேபோல் இருந்தது.

நம் வேந்தர் வடக்கே படையெடுத்துப் போயினர். ”பகைப்புறத்து மகதர்” வடக்கிருந்து படையெடுத்து வந்தார். தக்கண அரசு தொடக்கத்தில் நம்பக்கம் சாய்ந்து, பின் மகதத்தை முற்றிலுஞ் சூறையாடியது. பல்வேறு சமய நெறிகள் மூன்று அரசுகளுக்கும் நடுவே ஊடாடின. சமயச் சிந்தனையாளர்கள் மூன்று அரசுகளிலும் விரிந்து பரவியிருக்கிறார்கள். ”நாவலோ நாவல்” என்ற அறைகூவல் தக்கணப்பாதையெங்கும் ஒலித்திருக்கிறது. [உலகாய்தம் கற்கப் பள்ளிகளை நாடி அறிவுய்திகள் தெற்கே வந்திருக்கிறார். வேதநெறி இந்திய வடமேற்கிருந்து இங்கு நுழைந்தது. வேத மறுப்பு நெறியான ”அற்றுவிகம்” என்னும் ஆசீவகம் தெற்கே எழுந்ததோ என்று அண்மையாய்வால் ஐயுறுகிறோம். வேத மறுப்புச் சமணங்களான செயினமும், புத்தமும் மகதத்தில் இருந்து இங்கு நுழைந்தன. சாங்கியம், விதப்பியம் (விசேஷியம்), ஓகம், ஞாயம் (நியாயம்) என்ற பல்வேறு இந்திய மெய்யியல்களின் ஊடாட்டம் தெற்கிலும் வடக்கிலும் ஆழ இருந்தது. வெளிநாட்டிருந்து உள்நுழைந்த யவனர், சோனகர் ஊடாட்டமும் தமிழரிடம் இருந்தது.

சங்ககால ஆட்சிமொழியாய் தமிழகத்திற் தென்மொழியே இருந்தது. 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பார்த்தால், முதல் 740/750 ஆண்டுகளில் சங்க கால மூவேந்தரும், குறுநில மன்னரும் தமிழையே போற்றியேயிருந்தார். அதற்காக மாற்று மொழிகளை ஒடுக்கினார் என்ற பொருளில்லை. நம்மூர் வணிகரும், வெளிநாட்டு வணிகரும் நில வழியிலும், கடல் வழியிலும் செய்த ”பண்டமாற்றுக்கள், வணிகம், கொடுக்கல் வாங்கலால்” விளிம்பு நிலையிற் பாகதம் அங்குமிங்கும் ஊடுறுவித்தான் இருந்தது. தமிழர் பாகதம் அறிந்ததும், மகதர் தமிழ் அறிந்து ஊடுறுவியதும் இயல்பான செயல்களே.

இதேபோது, மகதத்தில் பாகதமே ஆட்சிமொழியானது. (மகதத்தில் மோரியருக்கு அடுத்தாண்ட பார்ப்பனச் சுங்கரும், கனகரும் கூட பாகதமே போற்றி வந்தனர்.) அந்தக் காலத்தில் வடமொழி எனிற் பாகதமாகவே புரியப்பட்டது. இப்போது இந்தியவியலார் (Indologists) விடாது ஓதும் சங்கதமல்ல. பாகத முன்மையைக் குறைத்துச் சங்கதம் உயர்த்தும் வேதநெறியாளர் இந்திய வரலாற்றை வேண்டுமெனக் குழப்புகிறார். பாகதமும், தமிழும் ஒன்றையொன்று ஊடியே கி.மு.500 களிலிருந்து கி.பி.500 வரை இந்திய நாகரிகத்தை உருவாக்கின. இக்காலத்திற் பின்னெழுந்த சங்கதத் தாக்கத்தால் இது புரிய விடாது செய்யப்படுகின்றது. ”அகண்ட பாரதம்” பேசும் அறிவாளிகள் பாகத முன்மையைக் குறைத்தே சொல்கிறார்.

கி.மு.500 களிற் சங்கத இருப்பை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அதேபொழுது அது இந்தியாவின் வடமேற்கில் தக்கசீலத்திற்குச் சிறிது கிழக்குவரை பரவிய வட்டார மொழியாகும். இன்று பரப்பப் படுவது போல், படித்தோர் எல்லோரும் இந்தியாவெங்கணும் புழங்கிய அறிவார்ந்த மொழியல்ல. சங்ககாலத்தில் தமிழிற் பாகதம் சற்று தெரியக் காணவும், சங்கதம் நுணுகி மறைந்தும் ஊடுறுவியிருக்கின்றன. இதே போலத் பாகதம், சங்கதத்தில் தமிழும் ஊடுறுவியிருக்கிறது. இவ்வூடுறுவல்களின் ஆய்வு இன்னும் முடியவில்லை. ”கடன்கொடுத்தே பழகியது சங்கதம்” என்று சிலர் புகல்வது சமக்காளத்தில் வடிகட்டிய பொய். சங்கதம் என்றாற் சான்றே தராது முன்னுரைப்பதும், பாகதம் என்றால் மூடி மறைப்பதும், தமிழ் என்றால் சரமாரிக்குக் கேள்வி கேட்பதுமாய் இந்தியவியலார் எத்தனை நாட்களுக்கு ஆய்வு நடத்துவாரோ, தெரியாது.

சங்கத இலக்கணமான பாணினியின் எட்டதிகாரம் (Ashtadyaayi) சிசுநாகர் காலத்திலோ, நந்தர் காலத்திலோ, மகதத்திற்கு வெளியே இற்றை இலாகூருக்கு அருகில் வடதேசத்தில் எழுதப் பட்டது. எட்டதிகாரத்திற் ”சங்கதம்” என்ற பெயர் கூட அந்த மொழிக்குக் கிடையாது. தன்னைச் சுற்றிய மொழியைச் ”சந்தசு” என்றே பாணினி அழைத்திருக்கிறார். ”சங்கதம்” என்ற பெயர் எப்பொழுது அதற்கெழுந்தது?” என்று சரியாய்ச் சொல்ல முடியவில்லை. [பிம்பிசாரன் காலத்திற்குச் சற்று முன்னம் சங்கத மெய்யியற் சிந்தனைகள் ஒரு சில “உபநிடதங்களாய்” எழுந்திருக்கின்றன. மற்ற உபநிடதங்களில் பெரும்பாலனவை ஆசீவகம், செயினம், புத்தம் போன்ற வேதமறுப்பு நெறிகளின் சமகாலத்திலேயே எழுந்திருக்கின்றன.]

பாணினிக்கு விரிவுரை (மகாபாஷ்யம்) எழுதிய உச்செயினியைச் சேர்ந்த பதஞ்சலியின் காலம் சுங்கர் காலமாகும். (செல்டன் போலாக் - Sheldon Pollack - எழுதிய நூலைப் படித்தால் ”சங்கதத்தில் எழுந்த முதற்காப்பியமான வான்மீகி இராமாயணம் சுங்கர் காலத்திற்றான் எழுந்தது போற் தோற்றுகிறது”. ஆனாலும் அக்கால அரசவைகளில் இராமாயணம் சலசலப்பை ஏற்படுத்தியதாய்த் தெரியவில்லை.) கி.பி.150 இல் சத்ரப அரசரில் ஒருவரான உருத்திரதாமன் ஆட்சியிற்றான், உச்செயினிக்கு அருகில் ”மத்திய தேசத்தில்” சங்கதம் ஆட்சி மொழியானது. வெகுநாட்கள் கழித்து இந்தியாவிலெழுந்த சங்கதத் தாக்கம் உயர்ந்தது உச்செயினிக்கு அருகில் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் பாணினிக்கு முந்தியவர் என்றே பல தமிழறிஞர் சொல்கிறார்; ஆனால் இந்தியவியலார் பலருஞ் சட்டை செய்யவில்லை. இப்புலனத்தில் இரு வேறு கருத்தாளர் அவரவர் தொனியிலே பேசுகிறார். இப்பொழுது மேலையரும் இந்தியவியலாரும் சேர்ந்து இன்னொரு புரளி கிளப்புகிறார். தொல்காப்பியம் ஒருவர் செய்ததில்லையாம். ”எழுத்து, சொல், பொருள்” மூன்றும் வெவ்வேறு ஆசிரியரால் வெவ்வேறு காலங்களிற் செய்யப்பட்டதாம். இதற்கு மறுப்பாகத் தமிழறிஞர் யாரும் நூலெழுதியதாகத் தெரியவில்லை. இன்னொரு குழப்பமும் நடக்கிறது. நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து தமிழறிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியத்திற்கு முந்தியது என்பார். மாற்றுக் கருத்தார் சங்க இலக்கியத்திற்குப் பிந்தியதென்பார். வெளிநாட்டு அறிஞர் 5% தமிழறிஞரையே எடுத்துக் காட்டிப் பேசுவார். மொத்தத்தில் இந்தக் கேள்வியில் அடிப்படை முரண்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டே, அரசியற் குசும்பர் பல்வேறு முனைகளில் வேலை செய்கிறார்.

மகதத்திற்கும், தமிழகத்திற்கும் இடையிற் தக்கண அரசில் தமிழ், பாகதம் இரண்டுமே ஆட்சி மொழிகளாய் இருந்தன. அவர் நாணயங்களின் இருபுறமும் தமிழ், பாகத முத்திரைகளே இருந்தன. தக்கண அரசன் ஆலனின் காலத்திலே சங்க நூலைப் போலவே கட்டுமானங் கொண்ட “காதா சத்தசதி (எழுநூற்றுப் பாட்டு)” என்ற அகத்திணைத் தொகுப்புநூல் எழுந்தது. குணாதரின் பெருங்கதையும் (Gunadhya's Brihat Katha) கன்னர் அரசிலேயே எழுந்தது. [எத்தனை பாகத நூல்கள் பிற்காலத்திற் சங்கதத்திற்கு மொழிமாற்றம் பெற்று, மூலந் தொலைக்கப் பட்டன என்று தெரியாது.] “மொழி பெயர் தேயம்” பற்றிக் குறிக்கும் மாமுலனாரின் சங்கப் பாட்டுகள் அற்றைத் தக்கண அரசியல் நிலையை நமக்கு நன்கு உணர்த்தும்.

தமிழை வைத்து கோதாவரிக் கரை, விந்தியமலை வரைக்கும் கூட எளிதில் நகர முடிந்தது போலும். அதற்கப்பால் மகதம் போக பாகதம் (அல்லது பாகதக் கிளைமொழிகளான சூரசேனி, அர்த்த மாகதி, பாலி என ஏதோவொன்று) தெரிவது எளிதாக இருந்திருக்கும். (அர்த்த மாகதி என்ற கிளைமொழி செயினருக்கும், பாலி என்ற கிளைமொழி புத்தருக்கும் நெருக்கமானது. பின்னால் திகம்பரர், சுவேதாம்பரர் என்று வடநாட்டிற் செயினர் பிரிந்த போது சூரசேனி திகம்பரருக்கும், மகாராட்டிரி சுவேதாம்பரருக்கும் உகப்பானது. புத்தர், செயினர் எல்லோருக்கும் பொது வழக்கான பாகதம் சங்கதத் தாக்கத்தால் கொஞ்சங் கொஞ்சமாய்க் குன்றியது. இன்றைக்குப் பாகதம் முற்றுங் குலைந்து கிளைமொழிகளே நிலைத்தன. ”அதே நிலையைத் தமிழ் அடையவேண்டும்” என்பதே அரசியற் குசும்பரின் விழைவாகும். ”எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் வெவ்வேறு மொழிகள்” என்று அரற்றுவது அதற்குத்தான்.)

மூவேந்தரின் நிலைப்படையும் மொழிபெயர் தேயத்தில் இருந்து தமிழ் வணிகரைக் காத்து வந்தது புத்தரும், மகாவீரரும் தமிழைக் கற்றது புத்த நூல்களிலும், செயின நூல்களிலும் பதிவு ஆகிருக்கிறது. பாகதத் தாக்கம் சங்க நூல்களிலும் இருந்திருக்கிறது. [இறைவனைக் குறிக்கும் ”பகவன்” என்ற பாகதச்சொல் நம் குறளிற் பதிவாகியிருக்கிறது.] தமிழுக்கும், பாகதத்திற்கும் பொதுவான சொற்கள் பலவும் இருந்திருக்கின்றன. அவற்றின் வேர் தமிழா, பாகதமா என்பதில் இன்னும் ஆய்வு தேவை. இளைய தமிழறிஞரிற் குறிப்பிட்ட சிலராவது பாகதம், சங்கதம் படிப்பது தேவையானவொன்று. ஆனால் செய்யமாட்டேம் என்கிறார். [இது ஏதோ சங்கதம், பாகதத்தைத் தூக்கிப் பிடிப்பது என்ற பொருளல்ல. தமிழைப் பற்றி ஆய இந்தப் பிறமொழி அறிவு தேவை.] வெறுமே ஆங்கிலம் வைத்து எல்லாவற்றையும் செய்துவிட இளையோர் முயல்கிறார். அது கடினம். [ஆய்வுலகக் குழறுபடிகள் தமிழைப் பெரிதும் பாதிக்கின்றன.]

இது தான் சங்க காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்திற் தமிழின் நிலை. தமிழர் நாட்டில் ஆட்சிமொழியாக, தமிழர் தமக்குள் பண்பாட்டு மொழியாக, உயிர்ப்புள்ள மொழியாக, மாற்றோர் படிக்க முன்வந்த மொழியாக, நாவலந்தீவு வணிகத்திற் பெரிதும் பயன்பட்ட மொழியாக, கல்வி மொழியாக, அறிவர் சிந்தனை நிறைந்த மொழியாக அது இருந்தது. அதே பொழுது தமிழுள் பிறமொழிக் கலப்பு அங்குமிங்கும் நுணுகியது. அந்த நுணுகிலும் பாகதம் சற்று தூக்கி இருந்திருக்கலாம். (தமிழ் - பாகத ஊடாட்டம் பற்றி வேறொரு பொழுதிற் விரிவாய்ப் பேசுவேன்.)

அன்புடன்,
இராம.கி

3 comments:

Anonymous said...

உங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

உங்கள் தொண்டு வளர ஏதேனும் பொருளுதவி செய்ய வேண்டுமென்றால் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும்? நன்றி.

சத்தியப் பிரியன் said...

பிராகிருதமும் தமிழும் பண்டமாற்றுக் காரணங்களால் ஊடுருவின என்று சொல்கிறீர்கள். அப்படியிருப்பின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மொழி வழக்குகளில் தமிழ்மொழியின் சாயல், இங்கு பிராகிருதமொழியின் ஊடுருவல் தமிழ்மொழியில் மிகுந்து காணப்படுவது போல மிகுந்து காணப்படுகிறதா?