Thursday, May 16, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 4

சங்கத் தமிழ்நடை என்பது ஏதோ அந்தரத்திற் குதித்ததல்ல. அப்படியொரு மொழிநடை 2000/2500 ஆண்டுகளுக்கு முன் உருவாக வேண்டுமெனில், நெடுங்காலம் முன்னரே மொழி தோன்றியிருக்க வேண்டும்; இனக்குழு இடையாடலுக்கு ஏந்தாய்ப் புழங்கியிருக்க வேண்டும்; இனக்குழுக்கள் திரண்டு ஓரினமாகுஞ் சூழல் ஏற்பட்டிருக்க வேண்டும்; தனிமாந்த முனைப்பு தொடர்ந்திருக்க வேண்டும்; திணைவளப் பண்ட உருவாக்கம் பெருகியிருக்க வேண்டும்; (மாழை, மணிகள், முத்து, பவளம் போன்ற) பரிமாற்றப் பண்டங்கள் மல்கியிருக்க வேண்டும்; அண்டை அயலோடும், கடல்வழியும், கொடுக்கல் - வாங்கல் கூடியிருக்க வேண்டும்; உவரி மதிப்பு (surplus value) உயர்ந்திருக்க வேண்டும்; பொருளியல் செறிந்திருக்க வேண்டும்.

ஒரு மொழியின் தோற்றத்தை அறிவது மிகவுங் கடினமானது. 60000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தெற்கே, தமிழகப் பரப்பில் (M130) என்னும் தொடக்க கால மாந்தன் இருந்ததாக Y குருமிகள் (Y chromosome) பற்றிய ஆண்கள் ஈனியல் (male genetics) ஆய்வின் வழி (பேரா. பிச்சப்பன், சுபென்சர் வெல்சு போன்றோரின் ஆய்வு) அறிகிறோம். [பெண்கள் ஈனியல் (female genetics) வழியும் இதை அணுகமுடியும். ஆனால் இன்னும் முன்னாற் காலங் காட்டும்.] இதே M130 கூட்டத்தாரின் நகர்ச்சியில் ஒரு பகுதியினராய் ஆத்திரேலியப் பழங்குடியினர் இருந்ததும் இப்பொழுது ஈனியல் ஆய்விற் தெரிகிறது. ஆத்திரேலியப் பழங்குடியினரின் பல சொற்கள் தமிழை ஒத்திருப்பதாயும், பண்பாட்டு நடைமுறைகள் கூடச் சிலவகையில் ஒத்ததாயும் இனவியல் ஆய்வுகள் எழுந்துள்ளன. [ஆத்திரேலியப் பழங்குடி மொழிகளுக்கும், தமிழுக்குமான ஒப்பீட்டாய்வு இன்னும் விரிவாகச் செய்யப்படவில்லை. தமிழக மொழியியற் துறைகள் இதைத் தொடங்கினால் நல்லது.] 30000 ஆண்டுகளுக்கு முன் M20 எனும் இன்னுமொரு கூட்டத்தார் இந்தியாவில் நுழைந்திருக்கிறார். இத்தகைய பழ மாந்தர் நகர்ச்சியில் தமிழ்த்தோற்றம் எப்பொழுதென்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இது தவிர, 60000 ஆண்டுகளிற் கீழைக்கடல்/தென்கடல் பல்வேறு காலகட்டங்களில் இந்திய நிலத்துள் ஊடுறுவியிருக்கிறது; பின் விலகியுஞ் சென்றிருக்கிறது. (கடலாய்வு, பழஞ்சூழலியல் ஆகியவற்றின்படி அணுகினால், சங்க இலக்கியம் நினைவுறுத்தும் கடற்கோள்கள் வெறுங் கற்பனையில்லை. இங்கு நடந்திருக்கக் கூடியவைதான். ”அவை மூன்றா? அதிகமா? எப்பொழுது நடந்தன?” என்ற வினாக்களுக்கு இறுதிவிடை இன்னுந் தெரியாது. அக் கடற்கோட் குறிப்புகளைக் கேலி செய்வதையும், ’வரலாற்றுக் காலத்தில் எங்கோ நடுக்கடல் நாடுகளிலிருந்து தமிழர் இங்கு நுழைந்தார்’ என்று கற்பனைக் கதைகள் பேசுவதையும் ஒதுக்கிக் கொஞ்சம் அறிவியலைக் கைக்கொண்டால் நல்லது.

இந்திய முகனை நிலத்திலிருந்து ஈழம்/இலங்கைப் பகுதி இத்தகைய கடற்கோளாலே பிரிந்தது. (இல்லுதல்>ஈல்தல் = பிரிதல். முகனை நிலத்திலிருந்து ஈல்ந்தது ஈழம். இலங்கை என்பதற்கும் இல்லுதல் வினை தான் அடிப்படை. ஈல்தல் ஈர்தல் என்றுந் திரியும். மேலை மொழிகளில் island, isles என்றெழுதி ஈலன், ஈல் என்றே பலுக்குவர். இற்றைக் காலத்தில் இவற்றை ஐலன், ஐல் என்று சொல்வதுமுண்டு. ஈழம் எனும் விதப்புப்பெயர் இப்படி மேலைநாடுகளிற் பொதுமையாய் விரிந்தது போலும்.)

இற்றைத் தமிழகம், கேரளம், தக்கணம் என்பதோடு ஈழம்/இலங்கையும் M130. M20 என்ற பழமாந்தர் வாழ்விடமாய் இருந்திருக்கிறது. 30000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு இலங்கையிற் கிடைத்திருக்கிறது. இந்தப் பெரிய நிலத்திற்றான் பழைய கற்காலம், புதிய கற்காலம், செம்புக்காலம், பெருங்கற் காலம், இரும்புக் காலம் போன்ற பருவங்களைப் பழந்தமிழர் கழித்திருக்கிறார். சென்னைக்குப் பக்கத்தில் பூண்டி நீர்த்தேக்கத்தின் அருகில், அத்திரப்பாக்கத்தில் பழங்கற்காலச் சின்னங்கள் கிடைத்திருக்கின்றன. [இந்தத் தொடர்ச்சியை ஒழுங்காகப் புரிந்து தமிழர் வரலாறு எழுதுவதிற்றான் ஏராளங் குழறுபடிகள் நடக்கின்றன. “தமிழரா> இருக்காது” என்ற அவநம்பிக்கைகள் பல இடத்தும் இழைகின்றன. சங்க காலத்தைக் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளும் மேலையாய்வாளர் இருக்கிறாரே?]

வரலாற்றுக் காலத்திற்கு வந்தால், இதுவரை கிடைத்த தொல்லியற் சான்றுகளின் படி (குறிப்பாகப் பொருந்தல்),இந்த மொழி கி.மு.490 அளவில் எழுத்திலும் புழங்கியது இப்பொழுது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தையச் சான்றுகள் எதிர்காலத்திற் கிடைக்கலாம். [தமிழ்நாட்டிற் செய்யவேண்டிய தொல்லியல் ஆய்வுகள் ஏராளமிருக்கின்றன. நடந்த ஆய்வுகளிலும் கரிமம் 14 யையோ, அதற்கொத்த வேறொரு முறையையோ, பயன்படுத்தி அகழ்பொருள் அகவை காணும் நுட்பம் அரிதே பயில்கிறது. எல்லாம் “அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று பரியும் முகம் காட்டி பரிதவிக்கும் “ப்ரமாணத்திலேயே” வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதிற் சங்கத முன்மைக்கு முயலும் அத்துவானக் கட்டுகள் வேறு. ”தமிழ் பிராமிக் கல்வெட்டா? கி.மு.200க்கு முன்னால் எந்தக் காலமும் சொல்லாதே” என்று ஓரிரு பெரியவரைக் காட்டி எழுதப்படா, மீறப்படா, விதி கல்வெட்டாளர் நடுவே உலவுகிறதோ, என்னவோ? பொருந்தல் ஆய்வு முடிவு கேட்டு அதிர்ந்தவரே மிகுதி.]

தமிழகத் தொல்லாய்வில் கிடைத்த வரலாற்றுப் பழஞ்செய்தி கொற்கைக்குக் அருகில் ஆதிச்சநல்லூர் பற்றியது தான். அதன் காலமே இன்னும் முடிவு செய்யப்படாதிருக்கிறது. ”கி.மு.1850, கி.மு. 3000, சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தியது” என்றெல்லாம் விதம் விதமாய்ச் சொல்கிறார். புதுக் கற்காலத் தடையங்களும் தருமபுரி மாவட்டத்தில் அண்மையிற் கிடைத்தன. பூம்புகார் கடலாய்வில் 11000 ஆண்டுகளுக்கு முன் இருந்த மாந்தக் கட்டுமானம் தெரியவந்திருக்கிறது. இந்தியக் கடலாய்வு நிறுவனம் மூச்சு விடாது மோனம் காட்டுகிறது. தமிழரும் பேசாதிருந்து, இப்பொழுது தான் தமிழக அரசு ”என்னவோ? ஏதோ?”வென்று விழித்துக் கொண்டு 90 கோடி உருபாக்களை பூம்புகார் ஆய்விற்கென ஒதுக்குகிறது. [இதுபோல ஆதிச்ச நல்லூர் ஆய்வை ஒழுங்காகச் செய்ய தமிழக அரசு ஒரு திட்டம் வகுத்துச் செலவிற்குப் பணம் ஒதுக்குமானால் நல்லது.]

மேலேயுள்ள செய்திகளைச் சொன்னது ஒரு காரணத்தோடு தான். சங்ககால நாகரிகம் எழுவதற்கு அணியமாய், இங்கு தொல்மாந்தனின் இருப்பு இருந்திருக்கிறது. எதுவும் அந்தரத்தில் நடந்துவிடவில்லை. முன்னோனை முட்டாளாக மதித்து நாம் தான் மாற்றோருக்கு அடிமையாக வெற்றிலைபாக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம்.

முதலிரு மாந்தர் நுழைவிற்குப் பின் மூன்றாம் வகை மாந்தர் (M17) இற்றைக்கு 9000 ஆண்டுகள் முன்னும், 3500 ஆண்டுகள் முன்னும் இந்தியத் துணைக்கண்டத்துள் உள்நுழைந்த போது, தமிழ் மொழியுள் மேலும் பல்வகைக் கலப்புக்கள் நடந்திருக்கலாம். [மூன்றாமவர் கலப்பு இந்தியாவில் இன்றளவும் 10/12 விழுக்காடே காட்டுகிறது.] பொதுவாகத் தமிழை உயர்த்துவோர் சொல்வது போல், ”அண்டையரசு மொழிகளின் தாக்கம் தமிழ் மேல் சங்ககாலத்திலும் அதற்கு முன்னுமில்லை, அது கொடுத்தே பழகியது” என்பதும், அன்றிச் சங்கதத்தை உயர்த்துவோர் சொல்வது போல் ”தமிழ் கடன்வாங்கியே பிழைத்தது” என்பதும் ஒன்றிற்கொன்று முரணான, அறிவியல் பொருந்தா நிலைப்பாடுகளாகும். மாந்தர் இனக்குழுக் கலப்பு, தொல்லியல், வரலாறு, பொருளாதாரப் பங்களிப்பு போன்றவற்றைப் பார்த்தால், தமிழும், பாகதமும் கி.மு.520-கி.பி.500 என்ற காலப் பெருவெளியில் ஒன்றிற்கொன்று உறவாடிய மொழிகளாகவே தோற்றுகின்றன. தக்கணப் பாதையின் உறவாடல் மொழிகள் இவையிரண்டுமேயாகும். அதே பொழுது உத்தரப் பாதையின் உறவாடல் மொழிகள் பாகதமும், சங்கதமுமாகும். இந்த 1000 ஆண்டுகளிற் தமிழின் மேல் சங்கதத் தாக்கம் சுற்றி வளைத்தேயிருந்தது.

இனிக் கொஞ்சம் வரலாற்றுக் காலம் பற்றிப் பேசுவோம். நூற்றுவர் கன்னரின் கடைக்காலத்தில் அவரின் தக்காண அரசு சுக்கு நூறாகியது. மேற்கு சத்ரபர், நூற்றுவர் கன்னரின் வடமேற்குப் பகுதியையும், ஆபிரர் என்போர் படித்தானம் சேர்ந்த கன்னரின் மேற்குப் பகுதியையும், வானவாசிச் சூதர் (அவருக்குப் பின் கடம்பர்) வட கருநாடகப் பகுதியையும், ஆந்திர இக்குவாகர் (கி.பி.220-320) கிருட்டிணா - குண்டூர் பகுதியையும், இராயல சீமையைச் சேர்ந்த பல்லவர் (கி.பி.275-600) கன்னரின் தெற்குப் பகுதியையும் பிடித்துக் கொண்டனர். கடம்பருக்குப் பின் கருநாடகத்தில் சளுக்கியர் தலை தூக்கினர்.

இச்சிதறலுக்கு நூறாண்டு கழித்து கி.பி.320 தொடங்கி கி.பி.550 வரை மகதத்தில் குத்தர் (=குப்தர்) அரசாண்டனர். சத்ரப அரசரைப் போல் குத்தரும் சங்கதத்திற்கே முதன்மை அளித்தார். குத்தர் அரசில் வேதநெறி தழைத்தோங்கியது. அரச கருமங்களில் பாகதம் அழிந்து, சங்கதம் குடியேறியது. குத்தர் அரசு விரியச் சங்கதத்தின் எல்லையும் விரிந்தது. குத்தர் கால கட்டமே சங்கதத்தின் உச்ச காலமாகும். [இந்திய வரலாற்றில் ஆர்வங் கொண்டோர் இதை உணரவேண்டும்.] சங்கதம் தூக்கிப் பிடித்த வேத நெறியாளர் சமண நெறிகளுக்கு அணைவான பாகதத்தைத் தூக்கி மிதித்து தம் ஆட்சியை நிலை நிறுத்தினர்.

காளிதாசர், ஆர்யபட்டர், வராக மிகிரர், விட்டுணு சர்மா, வாத்சாயனர் போன்றோர் இலக்கியம், கலை, அறிவியல் என்று பல்வேறு துறைகளைச் சங்கதங் கொண்டு மேம்படுத்தினர். இன்னொரு காப்பியமான வியாச பாரதம் முன்னரே எழுந்திருந்தாலும் குத்தர் அரசின் தொடக்கத்தில் இறுதிவடிவம் பெற்றது. பாரதத்திற்கு முந்தைய காப்பியமான வான்மீகி இராமயணமும் குத்த அரசின் ஆதரவு பெற்று மக்களிடையே பெரிதும் பரவியது. இந்தக் காலத்திற்றான் புகழ்பெற்ற சீனப்பயணியான வாகியான் (Fa hien) இந்தியாவிற்கு வந்தார். மருத்துவம், பண்டுவம் (Surgery) சார்ந்த சுசுருதர் (Susrutha) இக்காலத்திருந்தார். அசந்தா, எல்லோரச் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் பெரும்பாலானவை இக்காலத்தைச் சேர்ந்தவையே.

இதே காலகட்டத்திற்குச் சற்று முன்னர் தான், கன்னருக்குப் பின் தக்கணம் படித்தானத்தில் மிஞ்சிய கள்+ ஆபிரர் = களாபிரர்>களப்பிரர் (கருப்பு ஆபிரர்) என்னும் குடியரசர் கருநாடக வழியே தமிழகம் நுழைந்து மூவேந்தரை வீழ்த்தி முடிசூடினர். கி.பி.220 இல் இருந்து கிட்டத்தட்ட கி.பி.550 வரை இவரே தமிழகத்தை ஆண்டார். ”களப்பிரர் யார்?” என்ற கேள்வியில் தமிழக வரலாற்றாய்வர் இன்னுந் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். நூற்றுவர் கன்னருக்கு அப்புறம் தக்கணத்தில் நடந்த சிதறல்களை ஆய்ந்தால் மட்டுமே நமக்கு உண்மை கிடைக்கும்.

இந்தக் களப்பிரர் தமிழரை வெறுமே கொள்ளையடித்த கூட்டமல்ல. இவர் காலத்தை இருண்ட காலம் என்று சொல்லிக் கொண்டிருப்பதும் ஆய்வில்லாக் குற்றமேயாகும். தமிழகம் பற்றி நன்கு அறிந்த அரச குடியினராகவே இவர் இருந்திருக்க வேண்டும். பல்லவர், சாளுக்கியர், விசயநகரர் போலவே தமிழ்நாட்டை ஆளவந்த குடியினர் இவராகும். இவர் தோற்றம் கருநாடக / மாராட்டப் பகுதிகளில் எழுந்ததுதான். [தமிழக, கருநாடகம், மாராட்டம் மூன்றிற்குள்ளும் நடந்த கொள்வினை, கொடுப்பினையை நம்மவர் நன்கு ஆயமாட்டேம் என்கிறோம்.]

களப்பிரர் புத்தம், செயினம் போன்ற சமண நெறிகளையே தம் அரசில் முன்னிறுத்தினர். தமக்கு முன்னிருந்த நூற்றுவர் கன்னரின் தாக்கத்தால் பாகதத்தையே ஆட்சிமொழியாகத் தூக்கிப் பிடித்திருக்கக் கூடும். தமிழும் புழங்கியிருக்கலாம். ஆய்வு துலங்காததாற் தெளிவாகச் சொல்லமுடியவில்லை. களப்பிரர் பாண்டிநாட்டைப் பிடிக்காத காலத்தில் மாணிக்கவாசகர் புத்தரோடு வாதம் புரிந்தார். அவருக்குப் பின், மதுரையிலும் களப்பிரர் ஆட்சிக்கு வந்தார்.

பின்வந்த பலரிலும் (களப்பிரர் காலந் தொட்டே) பிறநாட்டு அரசுகள் நம்மூரில் ஆட்சி செய்தபோது, பிறமொழிகள் வலிந்த தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின. கிட்டத்தட்ட 1800 ஆண்டு கால பிற மொழித்தாக்கம் என்பது குறைத்து மதிக்கக் கூடியதல்ல. இக்காலத்தில் ஆட்சி மொழி தமிழ் மட்டுமாய் இருந்ததில்லை. அரசு ஆவணங்கள், பண்பாட்டுத் தாக்கம், இலக்கியம், பரிசளிப்பு, கொடை, என்று வேற்று மொழிகள் தமிழகத்திலே பெருமை பெற்றிருக்கின்றன. ஆனாலும் 13/14 ஆம் நூற்றாண்டுவரை பிறமொழி எழுத்துக்களைக் கலந்து எழுதும் நடை இலக்கியத்திற் சிறக்கவில்லை; வடவெழுத்துக்களை ஒருவி எழுதியே இவை தாக்குப் பிடித்திருக்கின்றன. ஆனாற் கல்வெட்டுக்களில் பல்லவர் காலத்திலிருந்து பிறமொழி எழுத்துக்கள் சிறிது சிறிதாக உயர்ந்து வந்திருக்கின்றன.

களப்பிரருக்குப் பின் வந்த பரத்துவாச கூட்டத்தைச் (கோத்திரத்தைச்) சேர்ந்த பல்லவர் தொடக்க காலங்களில் முன்னவரான நூற்றுவர் கன்னரைப் போலப் பாகதத்தைப் போற்றிப் பின் குத்தரை பெருமளவிற் பின்பற்றியதால் சங்கதத்தைத் தூக்கித் தலைமேற் பிடித்தனர். குத்தரின் தாக்கம் பல்லவர் மேற் பெரிதும் இருந்தது. பிற்காலப் பல்லவர் தம் கல்வெட்டுக்களில் மெய்கீர்த்தி பேசப்பட்ட தொடக்கப் பகுதிகளைச் சங்கதத்தில் எழுதி, பொதுமக்களுக்குப் புரியவேண்டிய பத்திகளைத் தமிழிலுமாக எழுதினர். சங்கதம் எழுதுவதற்காகவே கிரந்தம் என்ற எழுத்து முறையைத் தமிழெழுத்திலிருந்து தொடங்கினர். (கிரந்தத் தோற்றம் பற்றிய வரலாற்றாய்வு இன்னுஞ் செய்யப்படாதிருக்கிறது. ’தாத்தன் பெயரனைப் பெற்றான்’ என்பதற்கு மாறாய் ’பெயரனிலிருந்து தாத்தன் எழுந்தான்’ என்ற தலை கீழ்ப் பாடமும் வேதநெறியினராற் பரப்பப்படுகிறது.) தமிழெழுத்தில் கிரந்த எழுத்துக் கலப்பும் சொற்கலப்புஞ் செய்து மணிப்பவள நடைக்குக் கால்கோலினர்.

களப்பிரர் இராயலசீமையைத் தாக்கியதால் பல்லவர் இடம்பெயர்ந்து, தெற்கே நகர்ந்து அங்கிருந்த சோழரைத் துரத்தித் தொண்டை நாட்டிற்கு வந்து தங்கிப் போனார். மகேந்திர பல்லவன் காலம் வரை செயினமே பல்லவர் அரசில் ஓங்கியிருந்தது. அதனால் பாகதம் காஞ்சியிலிருந்தும் கோலோச்சியது. திருநாவுக்கரசர் முயற்சியால் பல்லவன் சிவநெறியிற் சேர்ந்த போது சிவநெறியும், வேதநெறியும் ஒன்றிற்கொன்று உறுதுணையாகி சங்கதத்தைத் தமிழுக்கு ஊன்றுகோலாக்கின. பின்னால் விண்ணவமும் இந்தக் கூட்டணிக்குள் சேர்ந்தது. சிவமும், விண்ணவமும் முன்னால் நிற்க, வேதநெறி பின்னால் உயரத்தில் நிற்க, சமண நெறிகள் கட்டகத் தீர்வாக (systematic solution) தமிழ்நாட்டிற் குத்திக் குலைக்கப்பட்டன.

இதன் விளைவால், தீர்த்தங்கரர் சிலைகளும், புத்தர் சிலைகளும் வயல்வெளிகளில் மண்ணுக்குள்ளும், குளங்களில் நீருக்குள்ளும் அடையத் தொடங்கின. அறப்பெயர்ச் சாத்தன் திருமேனி (முருக்கழிக் குசலர் = மற்கலிக் கோசாலர்) ஐயனாராகிக் தென்னாட்டின் குலக் கோயில்களுக்குள் குடிகொள்ளத் தொடங்கியது. [ஆசீவகம் அடியோடு அமிழ்ந்து உருமாற்றம் பெற்றது. ஐயனார் கோயில்களுக்கும் ஆசீவகத்திற்கும் இருக்கும் உறவை வேறொரு தொடரிற் பார்ப்போம். ஒரேயொரு செய்தி மட்டும் இங்கு சொல்கிறேன். பாண்டி நாட்டில் ஐயனாருக்கும் சிவனுக்கும் உறவு ஏற்றிச் சொல்லப்பட்டது. ஆண்டு தோறும் சிவராத்திரியில் ஐயனார் கோயில்கள் பெரும் விழவு கொள்கின்றன. சிவநெறியோடு ஒட்டுறவு கொண்டிருக்காவிட்டால் ஐயனார் சிலகளும் கூட மகாவீரர், புத்தர் சிலைகள் போல மண்ணுக்குள்ளும், நீருக்குள்ளும் அடைக்கலம் ஆகியிருக்கலாம்.]

தேவதானங்களும் (சிவன் கோயிலுக்குக் கொடுத்த நிலங்கள்), திருவிடையாட்டங்களும் (விண்ணவன் கோயிலுக்குக் கொடுத்தவை), பிரம்மதேயங்களும் (பார்ப்பனருக்குக் கொடுத்தவை) பெருகிப் பள்ளிச் சந்தங்கள் (மூன்று சமண நெறிகளுக்கும் கொடுத்தவை) அருகிப் போயின. இதே காலம் சற்று தள்ளி சம்பந்தர் முயற்சியில் கூன்பாண்டியன், நின்றசீர் நெடுமாறனாய் மாற்றம் பெற்று அரிகேசரி மாறவர்மனானான். “தமிழ் ஞானசம்பந்தர்” தமிழை உயர்த்தியதோடு, சங்கதத்தையும் அருகில் வைப்பதை ஏற்றுக் கொண்டுள்ளார். சமண மதங்கள் அழிய அழியப் பாகதம் தூக்கிக் கடாசப் பட்டது. வடமொழி என்ற பெயரின் பொருள் சிறிது சிறிதாய் தமிழகத்திற் மாறத் தொடங்கிச் சங்கதத்தையே அது குறிக்கத் தொடங்கிற்று. சங்கதத் தாக்கம் உறுதியாகப் பல்லவர் காலத்தின் நடுவிலேயே தமிழிற் தொடங்கியது.

கி.பி.400 வரையாண்ட களப்பிரர் காலத்தில் பாகதத் தாக்கம் சற்று கூடியது. கி.பி.400 இல் இருந்து கி.பி.800 வரையாண்ட பல்லவர் பாகதம், சங்கதம் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து தமிழை அடுத்த மொழியாகவே வைத்திருந்தனர். பல்லவர் காலத்திற்றான் சங்கதம் தமிழகத்தில் வலுத்த நிலை அடைந்தது. அவருக்குப் பின் வந்த பல அரசுகளும் சங்கதம் அந்த 400 ஆண்டுகளிற் பெற்ற முன்னுரிமையைப் பின்னால் மாற்றவேயில்லை.

பல்லவர் காலத்தில் ஒருங்கெழுந்த, தமிழை உயர்த்துவதாய்க் கொடிபிடித்து அரசு கட்டிய கடுங்கோன் வழிப் பாண்டியரும் பல்லவரோடு போட்டியாற் சங்கதத்திற்கு ஓரளவு முன்னுரிமை கொடுத்தேயிருந்தார். பல்லவருக்குப் பின்வந்த பேரரசுச் சோழர் தம் அரச நடவடிக்கைகளிற் தமிழைப் பெரிதும் பயன்படுத்தியும், வேதநெறி பிணைந்த சிவநெறி கடைப்பிடித்ததாற் சங்கதத்திற்குக் கொடுத்த முதன்மையைக் குறைக்கவேயிவில்லை. இதே பழக்கம் பேரரசுச் சோழர் குடியை முற்றிலும் குலைத்த பேரரசுப் பாண்டியர் காலத்திலும் தொடர்ந்தது.

இதன் பின் பங்காளிச் சண்டையால் பேரரசுப் பாண்டியர் அரசு சீரழிய, அதற்கு வாகாய் வடக்கேயிருந்து வந்த முசுலீம் படையெடுப்புக்களால் தமிழகம் தத்தளித்த காலத்தில் பாரசீகம், துருக்கி மொழிகளின் ஊடாட்டம் அங்குமிங்குமாய் எழுந்தது.

மூவேந்தர், களப்பிரர், பல்லவர் என்ற வரிசையில் தமிழ், பாகதம், சங்கத மொழிகளின் பங்களிப்பைப் பார்க்கும் போது, சங்க இலக்கியங்களுக்குள் விழுந்து சங்கத எச்சங்களைத் தேடாது, பாகத எச்சங்களைத் தேடுவது ஒருவேளை பலன் கொடுக்கலாம். சங்க இலக்கியங்களைப் படித்தாலே, (சேர, சோழ, பாண்டிய நாடுகள், ஈழம், மொழிபெயர் தேயம் போன்ற) வெவ்வேறு வட்டாரப் பேச்சுக்கள் எழுத்துத் தமிழோடு விரவி அதனுள் ஓரோ வழி ஊடுறுவிப் பதிவு செய்யப்பட்டதும், சிலவற்றில் பாகதச் சொற்கள் ஊடுறுவிய நடையும், பலவற்றில் பாகதமில்லாத் தனித்த நடையுமாய் தெற்றெனக் காண்பது புலப்படும். சிலம்பில் மிகக் குறுகிய இடங்களும், மணிமேகலையிற் பெருகிய இடங்களும், பாகதம் ஊடுறுவிய நடைக்குச் சான்றுகளாகும்.

பல்லவர் வலிகுன்றிய காலத்தில் அவருக்குத் துணைசெய்வதாய் உள்நுழைந்த பேரரசுச் சோழர், பின்னாற் பாண்டியரோடு போர்புரிந்து சோழர் அரசை மீள உருவாக்கினர். முடிவில் பல்லவரையும் தமக்குக் கீழ் கொண்டு வந்தனர். உறையூர், புகார் போன்றவை சீரழிந்த காரணத்தால் முத்தரையர் நகரான தஞ்சை சோழரின் புதுத் தலைநகராயிற்று; [முத்தரையருக்கும் களப்பிரருக்கும் இருந்த உறவுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.] பழையாறை தங்குமிடம் ஆயிற்று. பல்லவரையே போல்மமாக்கி, ”சங்கத மெய்கீர்த்தி, தமிழ் உள்ளடக்கம்” என்ற கல்வெட்டுப் பழக்கம் சோழர் அரசிலும் தொடர்ந்தது. தமிழரான சோழர், பல்லவரைப் போன்று சங்கத முன்மைக்கு ஏன் இடங் கொடுத்தார்? - என்பது விளங்காத புதிர். கணக்கற்ற கல்வெட்டுக்கள் சங்கதப் பெருமையை முன்னிறுத்தியே எழுந்துள்ளன. வேதநேறி கலந்த சிவநெறி அவர்களை அப்படியாக்கியது போலும்.

சோழனுக்கும் மீறித் தமிழை உயர்த்தி வைத்து எழுதப்பட்டது கம்பன் காவியமாகும். அது அரசவையில் எழுந்த காவியமல்ல. ஒரு குறுநில மன்னன் கூட அல்லாத பெருநிதிக் கிழவனான சடையப்ப வள்ளல் புரந்த காவியம். சோழன் அதன் ஆக்கத்தில் நுழைந்திருந்தால் மெய்கீர்த்தி ஏதேனும் அங்கு தேவைப்பட்டிருக்கும். சோழரின் ஆட்சி முடிவில் குலோத்துங்கன் காலத்தில் பெரியபுராணம் எழுந்தது.

சோழன் மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பின் கி.பி.1216-1238 இல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் முடிசூடினான். பேரரசுச் சோழர் மொழிநடையிற் செய்ததையே பேரரசுப் பாண்டியனுஞ் செய்தான். கல்வெட்டுக்களில் பல்லவர் தொடங்கிய பழக்கம் இடைவிடாது தொடர்ந்தது. சங்கதத்தின் உச்சம் பேரரசுப் பாண்டியர் காலத்தும் குறையவேயில்லை. வேத நெறியும், சிவ நெறியும் பாண்டியரிடத்தும் கைகோத்து அரசோச்சின.

1310 இல் முதலாம் மாறவர்மன் குலசேகரனுக்கு அப்புறம் பாண்டியரின் இரண்டு இளவரசரான வீர பாண்டியனுக்கும், சுந்தர பாண்டியனுக்கும் மோதல் முற்றியது. பங்காளிச் சண்டையில் பாண்டியர் முற்றிலும் அழிந்து, தென்காசிப் பக்கம் ஒடுங்கிப் போயினர். மதுரை நகரம் கம்பண உடையாருக்கும், பின் மாலிக்காபூருக்கும், அதன் தொடர்ச்சியாய் முசுலீம் படையாளருக்கும் இரையாகியது. அதன் முடிவில் விசய நகரத்து அரசியல் மேலாண்மையும், நாயக்கர் ஆட்சியும் ஏற்பட்டன. பாண்டியர் முற்றிலும் அழிந்து போனார்.

இதுநாள் வரை பாகதத்திற்கும், சங்கதத்திற்கும் இடங் கொடுத்து தடுமாறிக் கொண்டிருந்த தமிழகத்தில் அரபி, தெலுங்கு, சங்கதம் என்று வேற்றுமொழிகள் பேரரசுப் பாண்டியருக்குப்புறம் ஆட்சி கொண்டன. தமிழ் முற்றிலும் சீரழிந்தது. இந்தக் காலகட்டத்திற்றான் மணிப்பவள நடை விரவிய நாலாயிரப்பனுவல் விளக்கங்களும், சங்கதம் சிதறிய அருணகிரிநாதரின் திருப்புகழும் எழுந்தன.

இந்தக் காலத்தைத் தொடர்ந்து மேலையரின் குடியேற்றக் காலம் தொடங்கியது. போர்த்துக்கேசியம், டேனிசு, டச்சு, பிரஞ்சு என்று போய், முடிவில் ஆங்கிலேயரின் அதிகாரம் ஆட்சிகொள்ளத் தொடங்கிற்று. மேலை மொழிகளும் அரங்கேறத் தொடங்கின.

அன்புடன்,
இராம.கி.

Sunday, May 05, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 3

சங்ககாலத்தும் இக்காலத்தும் இடையே வேறுபடும் தொடர்ச்செறிவு, சொற்செறிவு, காட்சிச்செறிவு, உரைத்தொடர்ச்சி பற்றிப் பேசினோம். இவைதவிர, ஆட்சிமொழி அதிகாரம், பொருளியற் தேவை, சாதித் தாழ்ச்சி/உயர்ச்சி, குமுக ஒப்புதல், படிய நோக்கு (fashionable view), சமய மாற்றம், மெய்யியற் சிந்தனை, மாற்றாரோடு போர் போன்ற காரணங்களால் வேற்று மொழி கலந்து, தமிழ்நடை வேறுபடலாம். சொந்த மரபுகளை எந்த அளவு பேணுகிறோம் என்பதைப் பொறுத்தே வரலாற்றில் இவ்வேறுபாடுகள் நிலைக்கும் அன்றேல் மறையும்.

[”சொந்தமொழி இனிப் பயன்படாது” என்று இனப் பெருமிதம் குலைத்த பின்னால், கால காலத்திற்கும் இன்னொருவருக்கு அடிமையாக என்ன தடை? பெரும்பாலான அடிமைகளை மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஒன்றித்த அமெரிக்க நாடுகளின் (United States of America) தெற்கு மாநிலங்களுக்குக் கொண்டு சென்ற போது அவர்களின் ”ஒலோவ் (wolof)” மொழியைக் கலப்பாலும் தண்டனையாலும் ஒழித்தே, வெள்ளையர் அடிமைக் குமுகத்தை ஏற்படுத்தினர். 4,5 தலைமுறையில், முசுலீம்களாயும், நாட்டு வழிபாட்டாளருமாயிருந்த கருப்பர் எல்லோரும் ஆங்கிலம் பேசத் தெரிந்த கிறித்துவராயினர். தோட்டக்கூலிகளாய் கரிபியன் தீவுகளுக்கும், மொரிசியசிற்கும், பியூஜிக்கும், தென்னாப்பிரிக்காவிற்கும் போன மக்கள் தமிழைக் காப்பற்ற முடிந்ததா, என்ன? உலகெங்கும் ஆளும் இனம் ஆளப்படும் இனத்தை இப்படித்தான் ஒடுக்குகிறது. ஈழத் தமிழர் சிங்களம் பேசும் புத்தராய் மாற எத்தனை காலமோ ????]

சங்ககாலத் தமிழ்நிலை அறியச் சற்று வரலாற்றுள் போகவேண்டும். வரலாற்றுத் தொடக்கம் பெருமிதம் வாய்த்தது தான். [வரலாற்றுப் பார்வை ஒரு வறட்டுத்தனமாய், ”எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ்” சொல்லிக் கொடுப்பதிற் தொடர்பற்றதாய்ப் பலருக்குத் தெரியலாம். ”பொறுமையோடு படியுங்கள்” என்றே சொல்லமுடியும். மொழியரசியல் புரிய வேண்டுமெனில், வரலாறு தெரியாமல் முடியாது.] இற்றைத் தமிழாய்வின் படி, சங்க காலத்தை ”கி.மு.520 தொடங்கி கி.பி.220 வரை” இருந்ததாகவே கொள்ள வேண்டும். [”கி.மு.300 தொடங்கி கி.பி.300 வரை” யென்று வழமையாய்ச் சங்ககாலப் பருவஞ் சொல்வது ”பொருந்தல்” தொல்லாய்விற்குப் பின் முடியாது. சிந்துப் படவெழுத்தைத் தவிர்ப்பின், தமிழகம், ஈழத்திலிருந்து தமிழியாய் வெளிக் கிளம்பியதே முதலிலெழுந்த இந்திய எழுத்தாகும். இந்தத் தொல்லியற் கண்டுபிடிப்பை மரபார்ந்த இந்திய இலக்கியரும், வரலாற்று ஆசிரியரும், மொழியியல் வல்லுநரும் இன்னும் உள்வாங்கத் தயங்குகிறார். தம் தெரிவுகளில் வலிந்து தொங்கி, ஆய்வுகளைத் தடம்மாற்ற மறுக்கிறார். “ஈயடிச்சான் படியாய்” அசோகன் பிராமி ”ததாஸ்து” என்றே சொல்லுகிறார்.]

சங்க காலத்தில் மூவேந்தர் நாட்டுத் தொகுதியும், நூற்றுவர் கன்னரின் தக்கணமும், கங்கைப்புறத்து மகதமும் சம கால அரசுகளாகும். மூவேந்தர் நாடுகள் தமிழகத்துட் போட்டியிட்டாலும், காரவேலன் கல்வெட்டின் படி “திராமிர சங்காத்தம்” ஒன்றைத் தம்முள் ஏற்படுத்தி, சேரநாடு, சோழநாட்டிற்கு வடக்கே மொழிபெயர் தேயத்தில் நிலைப்படை நிறுத்தி, தம் பொதுநலனைக் காப்பாற்றின. கிமு.230 தொடங்கி கி.பி. 220 வரை, மொழிபெயர் தேயத்தில் நூற்றுவர் கன்னரே (சாதவா கன்னரே) ”படித்தானத்தை”த் தலைநகராக்கி அரசாண்டனர்.(படித்தானம்> படித்தான்> Paithan; படித்துறை என்று பொருள். இற்றை ஔரங்காபாத், அசந்தா, எல்லோரா அருகிலிருந்த கோதாவரிக் கரை நகரம்; தமிழர் வரலாற்றோடு தொடர்புள்ளது). சங்கப் பாடல்களிற் பாதிக்கு மேல் பாலைத்திணையே ஆதலால், பிழைப்பு நாடித் தக்கணம் போனது உண்மைதான். (இராயலசீமையும் அதன் வடக்குமான நூற்றுவர் கன்னர் பகுதி வழியாகத் தான் செல்வந் தேடிப் போயிருக்கிறார்.) இன்றைக்கும் வடக்கே போகிறோமே? தக்கண அரசின் இற்றை எச்சங்கள் தாம் தெலுங்கு, கன்னட, மராட்டிய மொழிகளாகும்.

இதே கால நிலையிலும், சற்று முன்னும், மகதத்தில் வரலாற்றரசர் ஆட்சி கி.மு.522க்கு அருகில் பிம்பிசாரனிற் தொடங்கி, அசாதசத்து, உதயபத்ரன் என்றாகி, அவருக்குப் பின் குழம்பியது. கி.மு.413 தொடங்கி கி.மு.345 வரை சிசுநாகரும், கி.மு.345 தொடங்கி கி.மு.321 வரை நந்தரும், கி.மு.321 தொடங்கி கி.மு.185 வரை மோரியரும், கி.மு.185 தொடங்கி கி.மு. 75 வரை சுங்கரும், கி.மு. 75 தொடங்கி கி.மு. 30 வரை கனகரும் (கண்வர் என்னும் வடமொழிப் பெயர் தமிழர் வாயில் கணவர்> கனவர்> கனகர் ஆயிற்று.) மகதத்தை ஆண்டனர். கி.மு.30 இல் நூற்றுவர் கன்னர் கனகரை வீழ்த்தி, கி.பி.220 வரை மகதம் ஆண்டனர். மகதம் என்பது அக்காலத்தில் "மத்திய தேசம்” என்றுஞ் சொல்லப்பட்டது.

எப்படிப் பார்த்தாலும், ”தமிழகம், தக்கணம், மகதம்” மூன்றும் சங்க காலத்தில் அரச கருமங்களில் ஒன்றையொன்று ஊடுறுவிய அரசுகளாகும். இவ்வூடுகை புரிந்தாற்றான் அக்கால இந்திய வரலாறு விளங்கும். இதில் எவ்வரசைக் குறைத்து மதித்தாலும் வரலாறு புரியாது. தமிழ் மூவேந்தரைப் பின் தள்ளி மற்றவரை மட்டும் பேசுவது துணைக்கண்ட வரலாற்றாசிரியருக்கு வாடிக்கையாகும். தமிழ் நாட்டு வரலாற்றாசிரியரும் இதற்கு ஊதுகுழலானார். எந்தப் பழம் இந்திய வரலாற்று நூலிலும் ”சங்ககாலத் தமிழரசர் அந்தரத்திற் தொங்கியதாகவே குறிப்பார்”. சங்க காலச் சம அரசுகள் எவையென்றும் சொல்லார். இந்திய வரலாற்றிற் தமிழர் நாடு தனித்துங் கிடையாது. தமிழரின்றி தக்காணமும், மகதமும் அரசியல் பொருளியலில் நகரவுமில்லை.

தமிழகத்து அதியர் தலைநகரமாம் தகடூரில் (இற்றைத் தருமபுரி) இருந்து கருநாடக ஐம்பொழில் வழியாகப் படித்தானம் போய், அசந்தா, எல்லோரா வழியாக வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் (Gond country) பகுதியில் கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா (Bhilsa) வந்து, நேர்வடக்கே திரும்பி, தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் கோசாம்பி (Kosam) வந்து, அயோத்தி என்னும் சாகேதம் (Fyzaabaad) வந்து, முடிவில் சாவத்தியிற் சேர்வதே தக்கணப் பாதையாகும். இது தான் தமிழகத்திற்கும், மகதத்திற்கும் இடை தக்கண வழியிருந்த ஊடாட்டப் பாதையாகும். தக்கணப் பாதை போல் உத்தரப் பாதை ஒன்றும் இருந்தது அது “உத்தர தேசம்” என்னும் வடநாட்டையும் மத்திய தேசம் என்னும் நடுநாட்டையும் இணைத்தது.

தக்கணப் பாதை மூலமே தமிழர் வணிகச் சாத்துக்களும், சரக்குப் பரிமாற்றங்களும், செல்வ நகர்ச்சிகளும், மொழி ஊடாட்டங்களும் நடந்தன. குவலாள புரத்துப் (Kolar) பொன்னையும், கொங்கு அருமணிகளையும், சோழத் துவர்களையும் (பவழங்கள்), பாண்டிய நித்திலங்களையும் (நெத்தில்>நெதி>நிதி என்னும் முத்து) மறுத்துத் தக்கணப்பாதையைப் புரிய முடியாது. மதிப்புக் கூடிப் பருமன் சிறுத்த பரிமாற்றப் பண்டங்கள் (exchange goods) இவைதானே? பொருளாதாரங் கட்டும் அரசுகள் இவற்றைத் தவிர்த்துத் தம் கட்டுமானங்களை எழுப்புமா? தமிழ் வணிகமின்றி மகதமும், தக்கணமும் எழுமா? அதே போல செம்பு வடக்கிருந்து தெற்கே நகர்ந்திருக்கிறது. கங்கையாற்றுப் பண்டங்களும், கோதாவரி, கன்னை (கிருட்டிணை) யாறுகளின் விளைப்பும் தமிழகத்திற்கு வந்திருக்கின்றன. குடிலரின் அருத்த சாற்றம் படித்தால், மகதம், தக்கணம், தமிழகம் ஆகியவற்றிற்கு இடைநடந்த பொருளியற் பரிமாற்றங்கள் விளங்கும். சங்க காலத்தின் உவரி மதிப்பு (surplus value) எப்படி எழுந்தது? - என்று வரலாற்றாசிரியர் ஆழ ஆய்ந்தால் ஊடாட்டம் இன்னும் புலப்படும். [சங்க கால வேந்துகளை நிலவுடைமையின் தொடக்க கட்டமாய்ப் பாராது, பர்ட்டன் சுடெய்ன் (Burton Stein) பார்த்தது போலவே இனக்குழு சார்ந்த துண்டக அரசுகளாய் (segmentary state) பார்த்தால் எப்படி விளங்கும்?]

இற்றைத் தூத்துக்குடிக்கருகிற் கொற்கையிற் சங்கு அந்தக்காலம் கிடைத்தது; சங்கு விளையா வங்கத்தில் சங்கறுக்கும் வளைத்தொழில் இன்றும் மீந்து நிற்கிறது. அதே காலத்தில் கொற்கையில் முத்துக் கிடைத்தது; தக்கணம் சார்ந்த ஐதராபாதில் முத்து மாலைகள் இன்றும் நுணுகிச் சிறந்து செய்யப்படுகின்றன. ஆப்கன் lapis lazuli சேரர் நாட்டுக் கொடுமணத்தில் பட்டை தீட்டப்பட்டது. உப்பு விளைப்பு தமிழகத்திலும், கூர்ச்சரத்திலும் இருந்து மகதம் போனதை அர்த்த சாற்றமும், சங்க இலக்கியங்களும் பதிவு செய்கின்றன. தமிழகம், தக்கணம், மகதம் என்ற மூன்றிற்கும் இடையே நடந்த பொருளியல் ஊடாட்டம் இன்னும் சரியாகப் படிக்கப் படவில்லை. மூன்று அரசுகளிலும் பனை விளைந்து, பனையோலைகள் எழுதப் பயன்பட்டன. எழுத்தாவண நுட்பியல் மூவரசுகளிலும் ஒன்றேபோல் இருந்தது.

நம் வேந்தர் வடக்கே படையெடுத்துப் போயினர். ”பகைப்புறத்து மகதர்” வடக்கிருந்து படையெடுத்து வந்தார். தக்கண அரசு தொடக்கத்தில் நம்பக்கம் சாய்ந்து, பின் மகதத்தை முற்றிலுஞ் சூறையாடியது. பல்வேறு சமய நெறிகள் மூன்று அரசுகளுக்கும் நடுவே ஊடாடின. சமயச் சிந்தனையாளர்கள் மூன்று அரசுகளிலும் விரிந்து பரவியிருக்கிறார்கள். ”நாவலோ நாவல்” என்ற அறைகூவல் தக்கணப்பாதையெங்கும் ஒலித்திருக்கிறது. [உலகாய்தம் கற்கப் பள்ளிகளை நாடி அறிவுய்திகள் தெற்கே வந்திருக்கிறார். வேதநெறி இந்திய வடமேற்கிருந்து இங்கு நுழைந்தது. வேத மறுப்பு நெறியான ”அற்றுவிகம்” என்னும் ஆசீவகம் தெற்கே எழுந்ததோ என்று அண்மையாய்வால் ஐயுறுகிறோம். வேத மறுப்புச் சமணங்களான செயினமும், புத்தமும் மகதத்தில் இருந்து இங்கு நுழைந்தன. சாங்கியம், விதப்பியம் (விசேஷியம்), ஓகம், ஞாயம் (நியாயம்) என்ற பல்வேறு இந்திய மெய்யியல்களின் ஊடாட்டம் தெற்கிலும் வடக்கிலும் ஆழ இருந்தது. வெளிநாட்டிருந்து உள்நுழைந்த யவனர், சோனகர் ஊடாட்டமும் தமிழரிடம் இருந்தது.

சங்ககால ஆட்சிமொழியாய் தமிழகத்திற் தென்மொழியே இருந்தது. 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பார்த்தால், முதல் 740/750 ஆண்டுகளில் சங்க கால மூவேந்தரும், குறுநில மன்னரும் தமிழையே போற்றியேயிருந்தார். அதற்காக மாற்று மொழிகளை ஒடுக்கினார் என்ற பொருளில்லை. நம்மூர் வணிகரும், வெளிநாட்டு வணிகரும் நில வழியிலும், கடல் வழியிலும் செய்த ”பண்டமாற்றுக்கள், வணிகம், கொடுக்கல் வாங்கலால்” விளிம்பு நிலையிற் பாகதம் அங்குமிங்கும் ஊடுறுவித்தான் இருந்தது. தமிழர் பாகதம் அறிந்ததும், மகதர் தமிழ் அறிந்து ஊடுறுவியதும் இயல்பான செயல்களே.

இதேபோது, மகதத்தில் பாகதமே ஆட்சிமொழியானது. (மகதத்தில் மோரியருக்கு அடுத்தாண்ட பார்ப்பனச் சுங்கரும், கனகரும் கூட பாகதமே போற்றி வந்தனர்.) அந்தக் காலத்தில் வடமொழி எனிற் பாகதமாகவே புரியப்பட்டது. இப்போது இந்தியவியலார் (Indologists) விடாது ஓதும் சங்கதமல்ல. பாகத முன்மையைக் குறைத்துச் சங்கதம் உயர்த்தும் வேதநெறியாளர் இந்திய வரலாற்றை வேண்டுமெனக் குழப்புகிறார். பாகதமும், தமிழும் ஒன்றையொன்று ஊடியே கி.மு.500 களிலிருந்து கி.பி.500 வரை இந்திய நாகரிகத்தை உருவாக்கின. இக்காலத்திற் பின்னெழுந்த சங்கதத் தாக்கத்தால் இது புரிய விடாது செய்யப்படுகின்றது. ”அகண்ட பாரதம்” பேசும் அறிவாளிகள் பாகத முன்மையைக் குறைத்தே சொல்கிறார்.

கி.மு.500 களிற் சங்கத இருப்பை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அதேபொழுது அது இந்தியாவின் வடமேற்கில் தக்கசீலத்திற்குச் சிறிது கிழக்குவரை பரவிய வட்டார மொழியாகும். இன்று பரப்பப் படுவது போல், படித்தோர் எல்லோரும் இந்தியாவெங்கணும் புழங்கிய அறிவார்ந்த மொழியல்ல. சங்ககாலத்தில் தமிழிற் பாகதம் சற்று தெரியக் காணவும், சங்கதம் நுணுகி மறைந்தும் ஊடுறுவியிருக்கின்றன. இதே போலத் பாகதம், சங்கதத்தில் தமிழும் ஊடுறுவியிருக்கிறது. இவ்வூடுறுவல்களின் ஆய்வு இன்னும் முடியவில்லை. ”கடன்கொடுத்தே பழகியது சங்கதம்” என்று சிலர் புகல்வது சமக்காளத்தில் வடிகட்டிய பொய். சங்கதம் என்றாற் சான்றே தராது முன்னுரைப்பதும், பாகதம் என்றால் மூடி மறைப்பதும், தமிழ் என்றால் சரமாரிக்குக் கேள்வி கேட்பதுமாய் இந்தியவியலார் எத்தனை நாட்களுக்கு ஆய்வு நடத்துவாரோ, தெரியாது.

சங்கத இலக்கணமான பாணினியின் எட்டதிகாரம் (Ashtadyaayi) சிசுநாகர் காலத்திலோ, நந்தர் காலத்திலோ, மகதத்திற்கு வெளியே இற்றை இலாகூருக்கு அருகில் வடதேசத்தில் எழுதப் பட்டது. எட்டதிகாரத்திற் ”சங்கதம்” என்ற பெயர் கூட அந்த மொழிக்குக் கிடையாது. தன்னைச் சுற்றிய மொழியைச் ”சந்தசு” என்றே பாணினி அழைத்திருக்கிறார். ”சங்கதம்” என்ற பெயர் எப்பொழுது அதற்கெழுந்தது?” என்று சரியாய்ச் சொல்ல முடியவில்லை. [பிம்பிசாரன் காலத்திற்குச் சற்று முன்னம் சங்கத மெய்யியற் சிந்தனைகள் ஒரு சில “உபநிடதங்களாய்” எழுந்திருக்கின்றன. மற்ற உபநிடதங்களில் பெரும்பாலனவை ஆசீவகம், செயினம், புத்தம் போன்ற வேதமறுப்பு நெறிகளின் சமகாலத்திலேயே எழுந்திருக்கின்றன.]

பாணினிக்கு விரிவுரை (மகாபாஷ்யம்) எழுதிய உச்செயினியைச் சேர்ந்த பதஞ்சலியின் காலம் சுங்கர் காலமாகும். (செல்டன் போலாக் - Sheldon Pollack - எழுதிய நூலைப் படித்தால் ”சங்கதத்தில் எழுந்த முதற்காப்பியமான வான்மீகி இராமாயணம் சுங்கர் காலத்திற்றான் எழுந்தது போற் தோற்றுகிறது”. ஆனாலும் அக்கால அரசவைகளில் இராமாயணம் சலசலப்பை ஏற்படுத்தியதாய்த் தெரியவில்லை.) கி.பி.150 இல் சத்ரப அரசரில் ஒருவரான உருத்திரதாமன் ஆட்சியிற்றான், உச்செயினிக்கு அருகில் ”மத்திய தேசத்தில்” சங்கதம் ஆட்சி மொழியானது. வெகுநாட்கள் கழித்து இந்தியாவிலெழுந்த சங்கதத் தாக்கம் உயர்ந்தது உச்செயினிக்கு அருகில் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் பாணினிக்கு முந்தியவர் என்றே பல தமிழறிஞர் சொல்கிறார்; ஆனால் இந்தியவியலார் பலருஞ் சட்டை செய்யவில்லை. இப்புலனத்தில் இரு வேறு கருத்தாளர் அவரவர் தொனியிலே பேசுகிறார். இப்பொழுது மேலையரும் இந்தியவியலாரும் சேர்ந்து இன்னொரு புரளி கிளப்புகிறார். தொல்காப்பியம் ஒருவர் செய்ததில்லையாம். ”எழுத்து, சொல், பொருள்” மூன்றும் வெவ்வேறு ஆசிரியரால் வெவ்வேறு காலங்களிற் செய்யப்பட்டதாம். இதற்கு மறுப்பாகத் தமிழறிஞர் யாரும் நூலெழுதியதாகத் தெரியவில்லை. இன்னொரு குழப்பமும் நடக்கிறது. நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து தமிழறிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியத்திற்கு முந்தியது என்பார். மாற்றுக் கருத்தார் சங்க இலக்கியத்திற்குப் பிந்தியதென்பார். வெளிநாட்டு அறிஞர் 5% தமிழறிஞரையே எடுத்துக் காட்டிப் பேசுவார். மொத்தத்தில் இந்தக் கேள்வியில் அடிப்படை முரண்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டே, அரசியற் குசும்பர் பல்வேறு முனைகளில் வேலை செய்கிறார்.

மகதத்திற்கும், தமிழகத்திற்கும் இடையிற் தக்கண அரசில் தமிழ், பாகதம் இரண்டுமே ஆட்சி மொழிகளாய் இருந்தன. அவர் நாணயங்களின் இருபுறமும் தமிழ், பாகத முத்திரைகளே இருந்தன. தக்கண அரசன் ஆலனின் காலத்திலே சங்க நூலைப் போலவே கட்டுமானங் கொண்ட “காதா சத்தசதி (எழுநூற்றுப் பாட்டு)” என்ற அகத்திணைத் தொகுப்புநூல் எழுந்தது. குணாதரின் பெருங்கதையும் (Gunadhya's Brihat Katha) கன்னர் அரசிலேயே எழுந்தது. [எத்தனை பாகத நூல்கள் பிற்காலத்திற் சங்கதத்திற்கு மொழிமாற்றம் பெற்று, மூலந் தொலைக்கப் பட்டன என்று தெரியாது.] “மொழி பெயர் தேயம்” பற்றிக் குறிக்கும் மாமுலனாரின் சங்கப் பாட்டுகள் அற்றைத் தக்கண அரசியல் நிலையை நமக்கு நன்கு உணர்த்தும்.

தமிழை வைத்து கோதாவரிக் கரை, விந்தியமலை வரைக்கும் கூட எளிதில் நகர முடிந்தது போலும். அதற்கப்பால் மகதம் போக பாகதம் (அல்லது பாகதக் கிளைமொழிகளான சூரசேனி, அர்த்த மாகதி, பாலி என ஏதோவொன்று) தெரிவது எளிதாக இருந்திருக்கும். (அர்த்த மாகதி என்ற கிளைமொழி செயினருக்கும், பாலி என்ற கிளைமொழி புத்தருக்கும் நெருக்கமானது. பின்னால் திகம்பரர், சுவேதாம்பரர் என்று வடநாட்டிற் செயினர் பிரிந்த போது சூரசேனி திகம்பரருக்கும், மகாராட்டிரி சுவேதாம்பரருக்கும் உகப்பானது. புத்தர், செயினர் எல்லோருக்கும் பொது வழக்கான பாகதம் சங்கதத் தாக்கத்தால் கொஞ்சங் கொஞ்சமாய்க் குன்றியது. இன்றைக்குப் பாகதம் முற்றுங் குலைந்து கிளைமொழிகளே நிலைத்தன. ”அதே நிலையைத் தமிழ் அடையவேண்டும்” என்பதே அரசியற் குசும்பரின் விழைவாகும். ”எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் வெவ்வேறு மொழிகள்” என்று அரற்றுவது அதற்குத்தான்.)

மூவேந்தரின் நிலைப்படையும் மொழிபெயர் தேயத்தில் இருந்து தமிழ் வணிகரைக் காத்து வந்தது புத்தரும், மகாவீரரும் தமிழைக் கற்றது புத்த நூல்களிலும், செயின நூல்களிலும் பதிவு ஆகிருக்கிறது. பாகதத் தாக்கம் சங்க நூல்களிலும் இருந்திருக்கிறது. [இறைவனைக் குறிக்கும் ”பகவன்” என்ற பாகதச்சொல் நம் குறளிற் பதிவாகியிருக்கிறது.] தமிழுக்கும், பாகதத்திற்கும் பொதுவான சொற்கள் பலவும் இருந்திருக்கின்றன. அவற்றின் வேர் தமிழா, பாகதமா என்பதில் இன்னும் ஆய்வு தேவை. இளைய தமிழறிஞரிற் குறிப்பிட்ட சிலராவது பாகதம், சங்கதம் படிப்பது தேவையானவொன்று. ஆனால் செய்யமாட்டேம் என்கிறார். [இது ஏதோ சங்கதம், பாகதத்தைத் தூக்கிப் பிடிப்பது என்ற பொருளல்ல. தமிழைப் பற்றி ஆய இந்தப் பிறமொழி அறிவு தேவை.] வெறுமே ஆங்கிலம் வைத்து எல்லாவற்றையும் செய்துவிட இளையோர் முயல்கிறார். அது கடினம். [ஆய்வுலகக் குழறுபடிகள் தமிழைப் பெரிதும் பாதிக்கின்றன.]

இது தான் சங்க காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்திற் தமிழின் நிலை. தமிழர் நாட்டில் ஆட்சிமொழியாக, தமிழர் தமக்குள் பண்பாட்டு மொழியாக, உயிர்ப்புள்ள மொழியாக, மாற்றோர் படிக்க முன்வந்த மொழியாக, நாவலந்தீவு வணிகத்திற் பெரிதும் பயன்பட்ட மொழியாக, கல்வி மொழியாக, அறிவர் சிந்தனை நிறைந்த மொழியாக அது இருந்தது. அதே பொழுது தமிழுள் பிறமொழிக் கலப்பு அங்குமிங்கும் நுணுகியது. அந்த நுணுகிலும் பாகதம் சற்று தூக்கி இருந்திருக்கலாம். (தமிழ் - பாகத ஊடாட்டம் பற்றி வேறொரு பொழுதிற் விரிவாய்ப் பேசுவேன்.)

அன்புடன்,
இராம.கி

Thursday, May 02, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 2

அக்கால எழுத்தை அடையாளங் காண ஓலைச்சுவடிகளும், கல்வெட்டுக்களும் நமக்குக் கிடைத்தன / கிடைக்கின்றன. 200 ஆண்டுகளுக்கு முந்திய அச்சுநூல்கள் கூட உலகப் பரண்களிற் சல்லடை போட்டாற் கிடைக்கின்றன. இக்கால எழுத்துக்களோடு சுவடியெழுத்துக்களை ஒப்பிட்டறியத் தன்மயப் புரிதல்கள் போக, புறமயக் கணக்கீடுகளும், அளவீடுகளும் வந்துவிட்டன. நண்பர் நாக.இளங்கோவன் போன்றோர் அறிதியியல் (informatics) உத்திகளைப் பயன்படுத்தி பழம் இலக்கிய ஆவணங்களின் நடை, கைச்சாத்து போன்றவற்றை அலசியெடுக்க விதப்பு நிரலிகளை விளங்க எழுதுகிறார். ஒழுங்கின்மையைக் குறிக்கும் சாணன் உட்திரிப்பு (Shannon's entropy) போன்ற மடை அளவீடுகளால் (bits measurements) தமிழ் நடையைத் துல்லியமாய் அளக்க முடியும். [சாணன் உட்திரிப்பைப் பயன்படுத்தி ஒரு அளவீட்டு எண்ணுதிக் (quantitative numerical) கட்டுரை தமிழில் வந்திருக்கிறதா? :-)))))]

எதிர்காலத்தில் ”சங்க இலக்கியச் சொல்லாடலில் நிரவலாய் எத்துணை விழுக்காடு வடசொல் இருந்தது? வள்ளுவர் நடையிருந்து எந்தளவு நம் நடை விலகியது? சிலப்பதிகாரத்தில் ஏதெல்லாம் இடைச் செருகல்? மாணிக்கவாசகர் நடைக் கைச்சாத்து (style signature) என்ன? கம்பன் வான்மீகிக்கு எத்துணை கடன் பட்டிருந்தான்? பாரதி மறுமலர்ச்சிப் பாவலன் என்று ஏன் சொல்லுகிறோம்? தனித்தமிழ் இயக்கக் காலத்தில் நடைக் கலப்பு எத்தனை? அதற்கப்புறம் நடை எப்படி மாறியது?” - இத்தனை கேள்விகளுக்கும் எண்ணுதியாய் (numerical) விடை காண ஒருவேளை முடியலாம். மொத்தத்தில் எதிர்காலம் ஒளிமிகுந்தேயுள்ளது. ஆனால் எந்த நடைமாற்றமும், தானே நடந்திருக்குமோ? குமுக மாற்றங்கள், அரசியற் பொருளியற் செயற்பாடுகள், சமயப் பொருதல்கள், வேற்று மொழித் தொடர்புகள், ஆட்சிமொழி ஆணைகள், ஆணத்தி நடவடிக்கைகள் என ஏதோ காரணம் பின் இருக்க வேண்டுமே?

முதலிற் சங்க எழுத்தைப் பார்ப்போம். [“வெவ்வேறு மொழிகள்” என்போர் அதையே எடுத்துக்காட்டாக்குகிறார்கள்.] பலராலும் சங்கத் தமிழைப் படிக்க இயலாதாம். அது வேறு தமிழாம்; பழந்தமிழுக்குப் பாடைகட்டிச் சங்கூதி வெகு நாட்களாயிற்றாம். இவர் கணக்கில் இற்றை மொழியின் அகவை 100 கூட ஆகாததாம்; இக்கருத்தைக் கண்டு வியந்து போகிறோம்.

”நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே”

என்ற ஔவையார் கூற்றில் (புறம் 187), ”அவல், ஆடவர்” விளங்கின், இன்றும் இப்பாடல் புரிவது தானே? - என்றாலும் ஏற்கும் பாங்கில் ”வேற்றுமொழி” என வாதிப்போர் இல்லை.

வெறும் 17 ஆண்டுகளுக்கு முந்திய பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கீழ்வரும் நூறாசிரியப் பாட்டுக் (30) கூடத் தான் புறநானூற்றைப் போல் இருக்கிறது.

ஆயுங் காலை நாண் மிகவுடைத்தே!
ஈனாக் கன்றைக் காட்டுநர் கொள்ளும்
ஆ மடிச் சிறுபயன் போல
நாம் அவர்க்கு இளமை நலம் அழிப்பதுவே!

ஆனாலும் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறதே? விளாம்பழம் விண்டு தின்ன விருப்பமா? சற்று வலிந்து ஓட்டை உடைக்கத்தான் வேண்டும். பூப்போலப் பிட்டால் பிய்ந்து வருமா, என்ன?

எழுத்து நடை வைத்துக் காலத்தை முடிவுசெய்வது எனக்கு என்றுமே சரவுகிறது. இக்கால எழுத்தில் ஒருவர் தனித்தமிழ் நடை கொள்வார்; மற்றொருவர் சங்கதச் சொற்களை அங்குமிங்கும். பெய்வார்; மூன்றாமவர் மணிப்பவள நடை பயில்வார்; நாலாமவர் முழுதும் தமிங்கிலம் இசைப்பார். இவற்றை வைத்து இருபத்தோறாம் நூற்றாண்டு நடை இது என்று ஆணித்தரமாய்க் கூற இயலுமோ? [நிரவலாய்ப் பார்த்து ஓரளவு சொல்லலாம். ஆனால் பத்தாண்டு இருபதாண்டுக் கணக்காய் ஆய்வில் நெருக்கிச் சொல்வது கடினமானது.] அலசலைத் தொடருவோம்.

சங்ககால எழுத்து என்பது பனையோலைச் சுவடிகளாற் கிட்டியது. இக்கால நுட்பியல் உதவியின்றி, நிரவலாக, மரபுசார் மருந்து, மூலிகைச் சரக்குகளால் 125/130 ஆண்டுகளே சுவடிகளைப் பாதுகாக்க முடியும். இந்த இடைவெளிக்கு அப்புறம் மீண்டும் மீண்டும் படியெடுத்தே சுவடிகளை முன்னோர் காப்பாற்றியிருக்கிறார். அப்படியெழுந்த ஒவ்வொரு படியையும் புது எடுப்புப் (edition) போன்றே கொள்ள முடியும். எடுப்பிற்கான மாற்றங்கள் அதனுள் என்றுமிருக்கும். 19 ஆம் நூற்றாண்டு முடிவில் அல்லது 20 நூற்றாண்டு தொடக்கத்தில் சங்கப் பழஞ்சுவடிகள் உ.வே.சா.விற்குக் கிட்டும்போது கிட்டத்தட்ட 14/15 ஆவது எடுப்பு வரை நடந்திருக்கலாம். மற்ற இலக்கியங்களுக்கு இன்னும் குறைவாய் ஆகியிருக்கும்.

ஒவ்வொரு படியெடுப்பிலும் எழுத்துப் பிழைகள் (’ஏடுசொல்லி’ உரக்கச் சொல்ல, படியெடுக்கும் ’எழுத்தர்’ ஒன்றாகவா எழுதுவர்? ஊரளவு பிழை உள்ளே இருக்காதா?), எழுத்துரு மாற்றம் (2500 ஆண்டுகளில் தமிழி எழுத்தில் எவ்வளவு மாற்றம்?), நடை மாற்றம் (யாப்பு, சொல்லாட்சி, வாக்கிய மாற்றம், தொடர் மாற்றம், இடைச்சொற் பயன்பாடு, உரிச்சொற் புழக்கம் எனப் பெரிய புலனம்), பொருட்பாடு மாற்றம் (நாற்றம் இன்று நல்ல மணமா?), [கல், மாழை (metal), ஓடு, ஓலை, தாள், அச்சு என] எழுதுபொருள் மாற்றம் (நுட்பியற் தாக்கங்களை இன்னும் ஆய்ந்தோமில்லை) என எல்லாம் நடந்துதான், தமிழிலக்கியங்கள் கிடைத்தன. எழுத்துத் தமிழைப் பேசுவோர், இம்மாற்றங்களை உள்வாங்கித் தான் பேசமுடியும். மாற்றம் ஒன்றே மாறாதது.

கி.மு.500 இன் எழுத்தும், கி.பி.2013 இன் எழுத்தும் அப்படியே ஒன்றல்ல; தொல்காப்பியர் நடையும், சங்க இலக்கிய பாணர்/புலவர் நடைகளும், குறள்/சிலம்பு நடைகளும், தேவாரம், கம்ப ராமாயண நடைகளும், அருணகிரி நடையும், பாரதி/பாரதிதாசன், மறைமலை அடிகளார் நடைகளும், பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடையும் வெவ்வேறு பட்டவை. ஒன்று இன்னொன்றைப் போல இருக்காது. அதில் இலக்கண மாற்றங்கள், அவ்வக்காலக் கொச்சை வழக்குகள், வேற்று மொழி ஊடுறுவல்கள், தற்சம/தற்பவ திரிபுகள், தனித்தமிழ் மீட்டெடுப்புக்கள் என எழுதுவோருக்குத் தக்க விரவிக் கிடக்கும். எல்லாம் கலந்தே தமிழ்மொழி இருந்தது; இருக்கிறது; இருக்கும்.

ஆனாலும், சுவடிகளைப் புரிந்து, தேவையான இடங்களில் முன்னோர் உரையைத் துணையாக்கி, 1920 களில் உ.வே.சா. குறிப்புரையும், 1940 களில் ஔவை.சு.துரைசாமி, வேங்கடசாமி நாட்டார் போன்றோர் விரிவுரையும் எழுதியிருக்கிறார் இவற்றைத் துணையாக் கொண்டு, இக்கால ஆய்வாளர் மேலுஞ் செய்திகளைச் சொல்லுகிறார். இதற்கு என்ன பொருள்? இந்த நடை வேறுபாடு எல்லோரும் அறிந்ததே. அதுவொன்றுங் கடக்க முடியாததல்ல. பொருள் புரியாததல்ல. ”முன்னது வேறு; பின்னது வேறு” என்று எக்கிய நிலையாய் (extreme position) இவற்றைக் கொள்ளக் கூடாது.

[அப்படிப் பார்த்தால் என்னடையும், உங்கள் நடையும் வேறல்லவா? கொஞ்சம் பழகினால் ஒருவருக்கொருவர் புரியாமலா போய்விடும்?] இத்தகை நடை மாற்றம், மொழியாளும் பாங்கு போன்றவற்றால் பெரிய உடைப்பொன்றும் உண்டாகவில்லை. [மாறாக, மொழி நெகிழ்ந்து கொடுத்திருக்கிறது. அவ்வளவு தான். அதேபொழுது, மொழிபயில் மாந்தரும் மொழியியற்கை, சூழலியல், மீறி ”அதைக் கலப்பேன், இதைக் கலப்பேன்” என்று ஆட்டம் போடுவது தவறு. அப்படி ஆட்டம் போட்டால் ”உள்ளதும் போச்சுடா, தொள்ளைக் காதா” என்றாகி விடும்.]

மலையிற் புறப்பட்டு கடலுக்கோடும் நீரோட்டமாய் இம்மாற்றங்களைக் கொள்ளவேண்டும். மலையில் எழுகும் ஓடையும், விழுகும் அருவியும், சிதறும் சிற்றாறும், பெருகும் பேராறும், ஒட்டிக் கிடக்கும் ஏரிகளும், கட்டித் திரண்ட கண்மாய்களும், குத்திக் குழித்த குளங்களும், பிய்த்துப் பாயும் வாய்க்கால்களும், அடையும் ஆற்றுமுகங்களும், கடையுங் கழிகளும், கடலிற் புகுதரும் சங்குமுகங்களும் வெவ்வேறு நீரையா கொள்கின்றன? எல்லாம் தொடராய்ச் செல்லும் நீரோட்டந் தானே?. நீரின் சுவை மாறலாம் என்பதே இவற்றின் மாறுபாடாகும். சுனையாக எழும்பும் தலைக்காவிரியும், கருநாடகப் பாக மண்டலத்தில் அமையும் ஆடு தாண்டும் காவிரியும், புகையினக் கல்லில் விழும் அருவிக் காவிரியும், உறையூருக்கு அருகில் அகண்டோடும் பேராற்றுக் காவிரியும், புகாருக்கு அருகில் கடலை அடையும் காவிரியும் ஒன்றா, வேறா?

முதலிரு வகையினர் “வேறு வேறு” என்கிறார். மாற்று வகையினர் “எல்லாம் ஒன்றே” என்கிறார்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, May 01, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 1

”எழுத்துத் தமிழும், பேச்சுத் தமிழும் ஒன்றல்ல, அவை வெவ்வேறு மொழிகள்” என்று சிலர் அரற்றுவதும், மற்றோர் அதை மறுப்பதுமாய் ctamil@services.cnrs.fr மடற்குழுவில் ஆங்கில உரையாடல் ஒன்று நடந்தது. மறுப்போர் கூற்றுக்கள் தமிழ்மன்றம் மடற்குழுவிலும் தமிழில் வந்தன.

“வெவ்வேறு மொழிகள்” என்போர் இருவகையினராவர். முதல்வகையினர் தமிழ் விழையும் மாணவர்க்கு மொழி கற்பிக்கும் பேராசிரியர். இன்னொருவர் எழுத்துத் தமிழுக்கும் (LT), பேச்சுத் தமிழுக்கும் (ST) இடையே ஒட்டுறவை உடைத்து, ’அகண்ட பாரதக் கருத்தோட்டத்துள்’ தமிழை அடக்கிச் ”சங்கதத்தாக்கு சரிந்ததால், ஆங்கிலத்தாக்கை அணைக்கும்” அரசியல் குசும்பராவர். இரண்டாமவரின் அரசியற் புரியாது, ”தம் பேச்சு எங்கு பயனுறும்?” என்றும் விளங்காது, முதல்வகைப் பேராசிரியர் தடுமாறுகிறார். ”இரு தமிழுக்கும் தோற்ற வேறுபாடிருப்பினும், அவை அடிப்படையில் உறவுள்ளவையே, சீரான நிரலிகளால் இவ்வுறவை நிறுவலாம்” என்போர் முன்சொன்ன இருவரோடு சேரா, மூன்றாங் கருத்தராவர். முதல்வகைப் பேராசிரியரோடு கனிவும், பொறுமை உரையாடலும் தேவை. உள்ளொன்று வைத்துப் புறம்பேசுங் குசும்பரோடு உரையாடுவது வெட்டிவேலை. அதிற் கொஞ்சமும் பொருளில்லை.

இதற்கான ஆங்கிலப் பங்களிப்பை ctamil மடற்குழுவிற் செய்ய வேண்டும். அது ஒரு புறமாக, நொதுமருக்கும் (neutral persons) இவ்வுரையாடல் தெரிய வேண்டி, ஆர்வலர் தமிழ்க் களங்களில் எழுதவேண்டும். தமிழாயும் அறிஞர் இதனால் உந்துற்று தமிழாய்வுக் களங்களில் உரையாட முன்வந்தால் பலருக்கும் நல்லது. (ஆங்கிலம் புழங்கும் களங்களில் ஈழச்சிக்கலை எடுத்துரைத்து இனக்கொலை, இராச பக்சேவை நயமன்றம் இழுத்தல், நாடு விழைத் தேர்தல், தமிழீழம் என்று ஆழ்ந்து பேசினாற் பற்றாது, 10 கோடித் தமிழரைக் கிளர வைப்பதும் நம் போன்றோர் கடமைதான். அதுபோலத் தமிழாய்வுச் செய்திகளை ஆங்கிலக் களங்களில் அடுக்கினால் மட்டும் பற்றாது. தமிழ்க் களங்களிலும் அறிவுறுத்த வேண்டும்.)

பட்டிமன்றம், பாட்டரங்கம், பேச்சரங்கம் என வந்தாலும் வந்தது, தமிழ்ப்பேச்சு நம்மூரிற் களியாட்டாய் ஆனது. உருப்படியான பரிமாற்றம் தமிழில் அரிதே நடக்கிறது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சீராட்டிய பட்டி மன்ற மரபு, பேரா. சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி ஆகியோர் கூத்துக்களால் சிரிப்புத் தோரணங்கள், துணுக்குகள், கேளிக்கைகள் என்றாயிற்று. ஆழமான சான்று தரும் கட்டுரைகள் தமிழிற் அருகி, ”தரமான கட்டுரைகளா? ஆங்கிலம் தாவு” என்ற அவலத்திற்குத் தமிழர் தள்ளப் பட்டிருக்கிறார். வேலைக்காரரோடு பேச மட்டுமே தமிழை வைத்து, அலுவல், தனியார் உரைகளில் தமிழர் ஆங்கில ஒயிலாட்டமே ஆடுகிறார்; தமிழ்க் களங்கள் சவலையாகித் தமிங்கிலமே கோலோச்சுகிறது. கருத்தாடும் தமிழ்க் களங்கள் சிச்சிறிதாய் உருமாறுகின்றன. தமிழ் மடற்குழுக்களிற் பங்களிப்புக் குறைந்து, முகநூலே பெரிதாகிறது. புதிய வேடந்தாங்கல்களுக்குத் தமிழ்ப்பறவைகள் சிறகடிக்கின்றன.

அறிவுய்திகள் (intelligensia) தமிழ்த் தாளிகைகளில் எழுதாது, ஆங்கிலத் தாளிகைகளிலேயே அகல வரைகிறார். தமிழின் இயலுமையை ஆங்கிலத்தில் வாதாடுவது வழமையாகி இணையம் எங்கும் கூடுகிறது. ”இது செய்யத்தான் வேண்டுமோ?” என்ற அடாவடித் தோற்றமுங் காட்டுகிறது. தமிழைக் காட்டிலும் ஆங்கிலப் பொத்தகங்களே தமிழ்நாட்டு விற்பனையிற் ”சக்கை” போடுகின்றன. திரைப்படம், கவிதை, களியாட்டம், அரட்டை, கிசுகிசு என மடற்குழுக்களிலும், வலைப்பதிவுகளிலும், முகநூலிலும், கீச்சுக்களிலும் (twitter) தமிழ் / தமிங்கிலம் பேசுவோர், ”அறிவியல், நுட்பியல், குமுகாயவியல், பொருளியல், மெய்யியல்...” என்று அறிவுப் புலங்களில் ஆங்கிலமே விழைகிறார்.

இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம், களியாட்டங்களுக்குத் தமிழெழுத்துக்களைப் பயன்படுத்துவது கூட தமிழிளைஞரிடம் குறைந்து கொண்டிருக்கிறது. உரோமன் எழுத்தில் தமிங்கிலம் எழுதுவது கூடிக்கொண்டிருக்கிறது. பலரும் “அது சரி” என்று கூட வாதாடுகிறார். “மொழியும், எழுத்தும் வெவ்வேறாம்”- சொல்கிறார். 42 ஆண்டுகாலத் திராவிட ஆட்சியிற் கல்வித்துறையெங்கும் ஊழலைப் பெருக்கி 5000க்கும் மேற்பட்ட ஆங்கில வழி மடிக்குழைப் பள்ளிகளைக் (matriculation schools) கயமையோடு தோற்றுவித்துவிட்டு, அதன் விளைவை, விதியை நாம் சந்திக்க வேண்டுமல்லவா? நட்டது நஞ்செனில், தொட்டது துலங்குமா, என்ன? தமிழரிலிருந்து தமிங்கிலர் என்போர் புற்றீசலாய்ப் புறப்படுகிறார். தமிழ்பேச வெட்கப்படும் தமிழர் ஊரெங்கும் பெருத்துப் போனார்.

இதைக் குறுஞ்செய்தி விற்பன்னரும், மிடையங்களும் (media) ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார். நோக்கியா, சாம்சங், ஏர்டெல், ஏர்செல், வோடபோன் போன்ற நகர்பேசி (mobile phones) விற்பனையாளர் தீவிர வாடிக்கையாக்குகின்றனர். [இப்படி நடப்பதை வாகாக மறைத்துவிட்டு, ”தமிழெழுத்தைச் சீர்திருத்தினால் இளைஞர் தமிழைப் புழங்கத் தொடங்கி விடுவர்” என்று போலித் திராவிட வாதம் பேசி, நாசகார எழுத்துச் சீர்திருத்தர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குறுக்குச் சால் போடுகிறார்.] நம்மைச் சுற்றித் தமிழ்ப் புழக்கம் பெரிதுங் குறைவதை ஆழ உணர்ந்தோமில்லை. மீண்டும் ஒரு மறைமலை அடிகளார் 21 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற் புதிதாய் எழவேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆங்கிலமே பழகும் போக்கில் நானும் அடியனாகக் கூடாதென்று எண்ணுகிறேன். “ஆங்கிலப் பங்களிப்பைக் குறைக்காதீர்” என்றே நண்பர் சொல்லுகிறார். இருந்தாலும் ”தமிழரிடைத் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் ஆங்கில உரையாட்டை/எழுத்தை அண்மைக் காலமாய் பெரிதுங் குறைத்து வருகிறேன்.

-----------------------------------------------

எழுத்து நடைக்கும், பேச்சு நடைக்கும் நடுவே எவ்வளவென்று சொல்ல முடியா இடைவெளி தமிழில் என்றுமேயுண்டு; அவ்வளவு ஏன்? அக்கால, இக்கால எழுத்து நடைகளுக்கிடையும் வேறுபாடுண்டு. எடுத்துக் காட்டாய் மூன்று முகன்மை வேறுபாடுகளைப் பார்ப்போம்.

முதல் வேறுபாடு வாக்கிய/தொடர்ச் செறிவு பற்றியதாகும். சங்கப் பாட்டில் இது நிறைந்திருக்கும். தேர்ந்த திரைப்பட எடுவிப்பாளர் (movie editor) போல 4,5 காட்சிகளை அடுத்தடுத்து வெட்டி ஒட்டிக் குறும்படமாய்ச் சொற்சிக்கனம் சேரத் தொகுத்திருக்கும். பாட்டின் ஆசிரியர் காட்சிக்குத் தேவையான பெயர்ச் சொற்களோடு, வினைச் சொற்களைப் பொருத்தி விவரிப்பாரே ஒழிய (”கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி.கண்ணே உள” என்ற குறளைச் சொல்லிப் பாருங்கள்.), பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ முதலிற் தொடுத்து, உப்பிற்குச் சப்பாணியாய் உம்மென்று அதற்குப் பின்னிழுத்து, ”ஆகு, இடு, இரு, ஏற்று, கிட்டு, கொள், செல், பண்ணு, மாட்டு, விடு” போன்ற பல்வேறு துணை வினைகளை (auxilllary verbs) அளவு கடந்த சரமாய் ஒட்டி, கட்டியத் தொடர்களை (conditional phrases) வெற்றுப் பேச்சாய் அடுக்கார். [எத்தனை துணை வினைகள் இக்காலம் பயில்கிறோம்? - என்ற கணக்கை யாரேனும் எடுத்தால் நலம் பயக்கும்.]

இக்கால மேடைப் பேச்சுக்களை, குறிப்பாக வீதிமுனைகள், ஊர்ப்பொட்டல்கள், அரங்க மேடைகளில் நடைபெறும் திராவிடக் கட்சிகளின் அரசியல் மேடைப் பேச்சுக்களை, நினைவு கூருங்கள். எத்தனை துணைவினைகள் அவற்றில் விடாது இழைகின்றன? ”துணைவினைகள் இல்லாது தமிழிற் பேசமுடியாதோ?” எனும் அளவிற்கு நோயாய்த் தொடர்கின்றன. ”நான் பார்த்துக் கொண்டிருந்த வேளையிலே, பொழுது சாய்ந்து விட்டிருந்த போது, அவன் என்னைக் கடந்து சென்றான்” என்பது இற்றைத்தமிழில் படிக்கக் கூடிய ஒரு வாக்கியமாகும். வேற்றுமொழி நடைகளைப் படித்து, அப்படியே தமிழிற் சொல்ல முற்பட்ட விளைவு இதனுள் தெரிகிறதா? ”கொண்டிருந்த வேளையிலே, சாய்ந்து விட்டிருந்த போது” போன்றவை இங்கு தேவையா? ”பொழுது சாய்ந்தது; பார்த்தேன்; கடந்தான்” என்ற செறிவோடு இதே கருத்தைச் சங்கத்தமிழ் சுருக்கும். ”நான், அவன்” - என்ற சுட்டுப் பெயர்கள், ”வேளை, போது”- என்னும் காலக் குறிப்புக்கள், “கொண்டிருந்த, விட்டிருந்த” - போன்ற துணைவினைகள் எல்லாம் அதில் அரியப்பட்டே காட்சியளிக்கும்.

நசை பெரிதுடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி! அவர் சென்ற ஆறே!

என்ற குறுந்தொகை 37 ஆம் பாட்டையும்,

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

என்ற 1317 ஆம் குறளையும் (இதில் ஆகு - துணைவினை) படித்தால் நான் சொல்லுவது விளங்கும். பொதுவாகச் சங்கத்தமிழ் என்பது சொற்சித்திரமாயும், இற்றைத்தமிழ் என்பது ஒரு காண்டிகை விரிவுரையாயும் இருக்கின்றன. சந்தையிற் கிடைக்கும் எந்த உரையைப் படித்தாலும் இது விளங்கும். 12/13/14 ஆம் நூற்றாண்டு உரையில் ஓரளவும், அண்மைக் காலத்தில் இன்னும் பெரிதாயும் இருக்கும். சாறிலாச் சக்கையாய்ச் சொற்களை விரித்துக் கொட்டுவதே இற்றை நடை போலும். இது நம் பிழையேயொழிய மொழிக் குற்றமல்ல. சுருங்கச் சொல்லும் பாங்கு பெருக வேண்டும்.) [ஒரு செய்தித்தாளில் ஏதேனும் ஒரு பத்தியை எடுத்து, அது எந்தப் புலனமானாலும் சரி, துணை வினைகளை வெட்டிச் சுருக்கிப் பார்த்திருக்கிறீர்களா?]

அளவிற்கு மீறிப் பயனாகும் துணை வினைகள் இற்றைத் தமிழைச் சுற்றி வளைத்த மொழியாக்கிச் செயற்கைத் தன்மையாற் கெடுக்கின்றன. பெரும்பாடு பட்டு இப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும். சங்கத் தமிழுக்கும், இற்றைத் தமிழுக்கும் நான் கண்ட பெருத்த வேறுபாடு அளவுக்கதிகத் துணை வினைப் பழக்கமேயாகும். தமிழ் சொல்லிக் கொடுப்போர் இதனைக் கணக்கிற் கொண்டால் நலமாயிருக்கும். வாக்கியச் செறிவை மாணவருக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுக்க வேண்டும். (என்ன ஆகூழோ, தெரியாது, நன்னடை பயில்விப்பதைத் தமிழாசிரியர் நிறுத்தி மாமாங்கங்கள் ஆகிவிட்டன. சிக்கல் தமிழாசிரியரிடமிருக்கிறது. மொழியிலில்லை. தமிழ்நடையை ஆங்கிலநடையாக்குவதும் அதையே சொல்லிக் கொடுப்பதும் சரியா?)

இரண்டாம் வேறுபாடு சொற்செறிவுக் குறைவாகும். இக்காலத்தில் ஓரசை, ஈரசை, மீறி எப்போதாவது மூவசையிற் புதுச்சொற்களைப் படைத்தால் ஏற்கலாம். தமிழ்ச் சிந்தனையைப் சுற்றி வளைத்த பலக்கிய (complex) வழியாக்கி, வரையறை போல நீள நீளச் சொற்களைப் படைத்தால் எப்படி? [கணி என்றாலே வினையாயும், பெயராயும் அமையமுடியும். கணிப்பொறி என்ற சொல்லிற் பொறி தேவையா, என்ன?] இதனாலும் மொழியின் செயற்கைத் தன்மை கூடுகிறதே? ”ஒரு தமிழ்ப் பேச்சிற் சொல்லாட்சியில் நிரவலாய் எத்தனை அசைகள் உள்ளன?” என்று கணக்கிட்டால், சங்கத் தமிழில் ”2, 2 1/4” என்றாகும். இற்றைத் தமிழில் ”3,4”க்கு வந்து விடும். ஒருபொருட் சொற்களான ”அருவி”யையும் ”நீர்வீழ்ச்சி”யையும் ஒப்பிட்டால், செறிவெங்கே வற்றுகிறது? ”தண்மலரையும்”, ”குளிர்ச்சியான மலர்” எனும் விளக்கத்தையும் ஒப்பிடுங்கள். ”ஆனது” என்ற துணைவினை போட்டு நம்மவர் நீட்டி முழக்குவது தெரிகிறதா? அளவுக்கு மீறி அசைகளைக் கொட்டுவதேன்? (தண்ணீரன்றி வேறெதற்கும் ”தண்” பயன்படுத்துகிறோமா?)

சிலநாட்கள் முன்னர் வெனிசுவேலா அதிபர் இறந்தபோது திண்ணை இணைய இதழில் அவர் சொன்னதாக “நான் மரணிக்க விரும்பவில்லை” என்ற வாசகம் வந்தது. ”மரித்தல்” வினையிற் பெற்ற பெயர்ச்சொல் ”மரணம்” ஆகும். மீண்டும் “மரணி” எனத் தமிழில் அதை வினையாக்குவது வியப்பு நடைமுறை. இதேபோல் வழக்காற்றை 10 ஆண்டுகள் முன் பார்த்தேன். ”கற்பித்தல்” வினை. ”கற்பனை” - பெயர்ச்சொல். மீண்டும் அதைக் “கற்பனி” என்றால் எப்படி? இணையத் தமிழறிஞர் ஒருவர் இதை எழுதினார். சொற்செறிவு எங்கே குறைகிறது?
இற்றைத் தமிழிலா? சங்கத் தமிழிலா?

இருவேறு நடைகளுக்கிடையே மூன்றாம் வகை வேறுபாடுஞ் சொல்லமுடியும். இது காட்சிச் செறிவுக் குறைதலாகும். சங்கத்தமிழ் உவமைகள் நிறைந்தது. ("அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர் கொல் மாலும் என் நெஞ்சு" என்ற குறளை எண்ணிப் பாருங்கள்.) பொருளைக் காட்சிப்புலனாக்கப் பயன்படும் வகையில், ”போல்மங்கள், படிமங்கள், ஒப்பீடுகள்” அதனுள் விரவிக் கிடக்கும். நேரடி உலர் பேச்சில் இத்தனை செறிவைக் கொண்டுவர இயலாது. இற்றைத் தமிழில் நாட்டுப்புறத்தில் மட்டுமே ”உவமைகள், போல்மங்கள், படிமங்கள், ஒப்பீடுகள்” தொடருகின்றன. நகர்ப்புற நடையிற் செந்தரப் பயன்பாடுகள் தவிர்த்து இவை குறைந்தே கிடக்கின்றன.

நம் மரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் நம்மிளையோர் எங்கே படிக்கிறார்? பைன், தேவதாரு, பனிக்கரடி, பண்டா, அமெரிக்கக் கழுகு என்று வெளிநாட்டையே பாடம் படித்தால் தமிழ்நாட்டு இயற்கை இவருக்கு எப்படிப் புலப்படும்? ”உலகமயமாக்கல்” என்ற பலிபீடத்திற் நம் பிள்ளைகளைக் காவு கொடுத்து, சுற்றிலக்குப் பார்வையைத் (localisation)
அடியோடு தொலைக்கிறோமே? பொதுவாக சூழியல் இயற்கையையும், சுற்றுக் காட்சிகளையும் ஆற அவதானிக்கும் பழக்கம் நம் நகர்ப்புறத்திற் பலருக்குங் குறைந்து போனது.

(ஏராளங் காட்டுகளை நான் தரமுடியும். ஆனைச் சாத்தான் என்பது எத்தனை பேருக்கு விளங்கும்? அந்தக் காலக் கோதை நாச்சியாருக்கு விளங்கும். புங்க மரம் ஏதென்று தெரியுமா? குலவையெழுப்பத் தெரியுமா? ”முதுமக்கள் தாழி, பதுக்கை” என்றால் என்ன? கல்லணையைக் கரிகாலன் எப்படியெழுப்பினான்? சளி பிடித்தால் என்ன சாப்பிடலாம்? வேப்பம்பூப் பச்சடி என்றைக்கு வீட்டில் வைக்கவேண்டும்? கீழாநெல்லிச் செடி எதற்குப் பயன்படும்? பாழாய்ப் போன ”அலோப்பதிக்கே” பணத்தைக் கொடுத்து நம்முடைய பழம் மருத்துவங்களைத் தொலைக்கிறோமே?) எல்லாமே ஒரு வேகம். ”தன் கருமங்கள், தன் முனைப்பு, தன் சாதனை” என்றே நம் வாழ்க்கை ஆகிப் போனது. காட்சிச் செறிவு குறைந்து சூழலை அவதானிக்காது போனதை எல்லோரும் அறிந்த குறுந்தொகைப் பாட்டை வைத்தே சொல்லமுடியும்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங் கலந்தனவே

என்ற பாட்டில் செம்புலம் என்பது செம்மண் நிலமா? அன்றிச் செம்மையான சமதள நிலமா? சற்று ஓர்ந்து பார்க்கோமா? அவதானிப்புக் குறைந்து போனதாற்றானே தவறான உரை கால காலத்திற்கும் பல்வேறு உரையாசிரியரால் மீண்டும் மீண்டும் எழுதப் படுகிறது. [செம்மண் புலத்திற் சிரட்டித் திரிந்தவன் நான். இருந்தாலுங் கேட்கிறேன் :-))))] கரிசல் மண்ணிற் பெய்த நீர் கலக்காதோ? அல்லது சுண்ணச் சம தளத்தில் நீர் ஒன்றுசேர்ந்து ஓடாதா? இங்கு எப்படிச் செம்மண் உயர்ந்தது?

ஆக தொடர்ச் செறிவு, சொற் செறிவு, காட்சிச் செறிவு என மூன்று வகையாலும் இற்றைத் தமிழ் வேறுபடுகிறது. இன்னுங் கூர்த்த வேறுபாடுகளை எடுத்துக் காட்டலாம். நீங்களே தாமாக உணர முடியும். ”அது வேறு தமிழ், இது வேறு தமிழா?” என்றால் ”இன்னும் இல்லை; ஒன்றை மாற்றிச் செய்யும் இன்னொரு வேறுபாடு” என்றே சொல்லுவேன். ”பழையதை விடாது படிக்க வைத்தால், புதியது உடையாது நிற்கும்” என்று உறுதி சொல்வேன். வரலாறு புரிந்தோருக்கு நான் சொல்வது புரியும். முன்னோர் ஆக்கங்களைப் படித்தே நம் நடையை ஒழுங்கு செய்கிறோம். முன்னோர் இலக்கியங்கள் தம் நடையைத் தெரிவிப்பதோடு, நம் எதிர்கால நடை விலகாதிருப்பதற்கு வழித்துணையும் ஆகின்றன. [They remain descriptive of styles in earlier centuries and also prescriptive for our future style.] இதனாற்றான் பழையதை மீளப் படித்து, நம் நடையைப் புதுப்பிக்கச் சொல்கிறோம். மரபை நாம் என்றுந் தொலைக்கக் கூடாது.

என்றைக்குச் சங்க இலக்கியங்களுக்குப் படிப்பாளர் தடை போடுகிறோமோ, அன்றே தமிழ் நடையில் உடைப்பு ஏற்படும். அரசியற் குசும்பர் அதற்கே முயல்கிறார். ”2500 ஆண்டுகள் ஆகியும், தமிழர் மரபைத் தொலைக்காதிருந்தால் இவர் தொடர்ச்சி நிலைத்து விடுமே? அப்படித் தொடர விடக்கூடாதே?”.என்ற கொடிய எண்ணத்திற்றான், ”இரண்டும் வெவ்வேறு மொழிகள்” என்று குசும்பர் கூக்குரலிடுகிறார். மொத்தத்தில் தமிழின் அடிநாடி எதோ, அதைக் குலைக்க விரும்புகிறார். ”இருவேறு மொழிகள்” எனில் அவர் நினைப்பது நடந்துவிடும். அரசியற் புரியாத முதல்வகைப் பேராசிரியர் ஆட்டம் புரியாது, தப்புத் தாளம் போடுகிறார்.

அன்புடன்,
இராம.கி.