பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்ததர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரின் இகழ்ந்து நின்றவ்வே.
என்ற புறநானூற்று 299 ஆம் பாடலைச் சங்கப் புலமைகொண்ட பேரா.இராசம், CTamil குழுவிற் கொடுத்து, அதன் முகன இடைப்பரட்டு (modern interpretation) தன்னை நெடுங்காலங் குழப்பித் துணுக்குற வைப்பதாகவும், பழந்தமிழ்ப் பாக்களைப் பழகியோர் குமுக-மாந்தவியல் அனுமானங்களை விட்டு மொழியியல்நோக்கில் விளக்குமாறும் வேண்டினார். பின் தன்னுடைய http://mytamil-rasikai.blogspot.com/2013/12/new-perspective-on-purananuru-299.html என்ற வலைப்பதிவு இடுகையின் மூலம் கலம்தொடா மகளிரை, மாதவிலக்குற்ற மகளிரென்று பொருள் கூறும் மரபு உரையாசிரியரையும், முகன இடைப்பரட்டரையும் (modern interpreters) மறுத்துப் புதுச்சிந்தனையை எடுத்துரைத்தார்.
[CTamil குழுவென்பது சங்கத்தமிழ் ஆய்விற்காக ஆங்கிலமொழியில் நடத்தப்படும் பன்னாட்டு மடற்குழுவாகும். இதில் உலகெங்கும் இந்தியவியற் சார்புள்ள (அதேபொழுது தமிழாய்வில் விழைவுள்ள) வெளி நாட்டறிஞரே பெரிதும் எழுதுகிறார். மிக அரிதாய்த் தமிழக, ஈழப் பங்களிப்பு அதிலிருக்கிறது. சந்தடிசாக்கில் தமிழாய்வைவிடத் தற்பேணும் நிகழ்ப்பையே (agenda) குறிக்கோளாக்கி ஓரிரு தமிழ்க்கேடரும் அங்கெழுதுகிறார். அதனாற் பலபோதுகளிற் கருத்தாடல் கோடிச் சமன்முடிவு எட்டாதுபோகிறது. இதை மாற்றும்வகையில் தமிழக, ஈழத் தமிழறிஞர் கணிசமாய் அங்கு சேர்ந்துரையாடி நிலை இடித்துரைத்துக் குறைபோக்கவேண்டும். ’தமிழ், தமிழெ’ன மேடைதோறும் முழங்கும் தமிழறிஞர் எத்தனைகாலம் தமிழரிடை மட்டும் உணர்வோடு இயங்குவரோ, தெரியவில்லை. பன்னாட்டு ஆய்வுக்களங்களில் அறிஞர்நடுவே அறிவியல்வழி இயங்குந் தேவையிருக்கிறதே? “மாடு வந்தது, கட்டினாற் கட்டு, கட்டாவிடிற் போ”வெனும் விட்டேற்றிப் போக்கு ”தமிழ்வளர்ச்சிக்கு நல்லதா?”வென ஓர்ந்து பார்க்கவும் வேண்டும் ].
இக்கட்டுரை தமிழிலிருப்பது ஆங்கிலத்திலெழுதும் தமிழாய்வோருக்கு வேகத்தடையாகலாம். ”ஆய்வுக் கட்டுரையா? - ஆங்கிலமே அதற்குமொழி”யென ஒத்துப்பாடுவதில் ஒருப்படாதவன் நான். ஆங்கிலத்திற் தமிழாய்வெழுதுவோர் சற்று முயன்றால் கட்டுரையைப் படித்துத் தமிழிலும் எழுதி வளப்படுத்த முடியும். ஆழ முயன்றால் தமிழும் அறிவியல் மொழி தான். பொதுவாக மொழியெழுச்சி, வரலாறு, சொல்லாக்கம், சொல்லாய்வு, தமிழ்க்கணிமை, இலக்கியம், குமுக-மாந்தவியல், மெய்யியலாய்வென வெவ்வேறு கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதுவதைக் காட்டிலும், தமிழில் விரிவாயெழுதவே விழைகிறேன். என் வளவு வலைப்பதிவும் தமிழிற்றான் இருக்கிறது. கலந்தொடா மகளிர் பற்றிய இராசம் அம்மா சிந்தனையிலிருந்து சற்று வேறுபடும் என்கருத்தை இங்கு பதிகிறேன். சங்ககாலப் பின்புலமான இனக்குழுப் பார்வை (tribal point of view) பற்றியும், அணங்காடல் மிடைந்த இனக்குழுச் சமயப் பழக்கங்கள் பற்றியும் எங்காவது சொல்லத்தானே வேண்டும்? அதனால் மொழியியல்-இலக்கிய ஆய்வோடு சிறிது குமுக-மாந்தவியற் கருத்துக்களும் இப்பதிவினுள் வந்துவிட்டன.
திரு.அரவிந்த் சுவாமிநாதன் என்பார் முகநூலில் (https://www.facebook.com/arvindswam) இரு ஓலைப்படிகளைக் கொடுத்துக் கலந்தொடா மகளிர் பற்றிய தன் தனிக்கருத்தையும், இராசம் அம்மாவோடு தான் உடன்படுவதையும் உரைத்தார். பாட்டின் பாட வேறுபாடுகளைப் பார்க்க இத்தகை ஓலைப்படிகள் பெரிதுமுதவும். ஆய்வாளர் பலரும் இதுபோன்ற ஓலைப்படிகளைப் பாராது உ.வே.சாமிநாதர், சீ.வை.தாமோதரர், சௌரிப்பெருமாள் அரங்கர் போன்ற எடுவிப்பாளரின் (editors) அச்சுப்பதிப்பையே மூலமாய்க் கொள்கிறார். அது முழு ஆய்விற் கொண்டு சேர்க்காது. சுவடிக் காப்பில்லாது, கரையானிலும் காலச் சிதைவிலும் மூலச்சுவடிகள் இன்றழியும் நிலையில், இப் படிகளை (வைத்திருக்கும் முகனை நூலகங்கள்) அவற்றை மாகப்படுத்தி (magnify) jpg படங்களாக இணையத்திற் பதிவது பெரிதும் பயன்தரும். இதற்கான செலவைத் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை நூலகங்களுக்கு நிதியாக நல்கலாம். சங்க இலக்கியச் சுவடிகளின் இற்றை அவலநிலையை தமிழக அரசும், தமிழறிஞர் பலரும், உணராதது கவலை தருகிறது.
பாடலின் முதல் 5 வரிகளில் ஈரிடங்கள் தவிர்த்து மற்றவற்றிற்கு முரணின்றி உரையாளர் வழிப் பொருள் சொல்வது அப்படியொன்றுங் கடினமில்லை. ஈரிடங்களில் முதலானது பருத்திவேலி பற்றியது. பருத்தியை வேலியாய் நான் எங்குமே கண்டதில்லை; ஒருவேளை அது பருத்த வேலியோ? அகரம் இகரமாகி ஏட்டுப்பிழையானதோ? சீறூருக்குப் ”பருத்த” முரண்தொடையோ? - என்ற ஐயங்களுண்டு. (முன்னாற் கூறிய ஓலைப்படிகளின் வழி) பாட வேறுபாடுகள் பார்க்கவேண்டும். இன்னோரிடம் ஓய்நடைப் புரவி பற்றியது. இதற்கு உரைகூறும் தளர்ச்சிப் பொருள் பொருந்த வில்லையோ? - எனத் தோற்றுகிறது. ’ஓய்’க்குச் சங்க இலக்கியத்தில் நற்.43-3, 290-3, பதி.60-7, பரி.9-27, கலி.7-1, குறுந்.383-4, அக.91-6, 111-8, புற.299-2 என்ற தொடுப்புக்கள் உண்டு. நற்.43-3 யையும், புற.299-2 யையும் தவிர்த்து வேறிடங்களிற் தளரற் பொருள் சரியாகலாம். ஆனால் நற்.43-3யில் வரும் ”ஓய்பசிச் செந்நாய்”க்கு ”ஓய்ந்த பசிகொண்ட செந்நாய்” என்பதை விட, ”விரட்டி ஓய்க்கும் பசி கொண்ட செந்நாய்” என்பதே சரியாயமையும். அதேபோல புறம். 299-இன் “ஓய்நடைப் புரவிக்கும்” விரட்டி நடக்கும் பொருள்தான் சரியாகும்.
ஒரு மாட்டை, மாட்டுவண்டியை, மாட்டுமந்தையை, விலங்குச்செறிவை விரட்டிப் போகும்போது, "ஊய்"என்ற வீளைக்கூச்சல் எழுப்புகிறோமே? அங்கு முன்னிலைச் சுட்டொலியே முதலிடம் பெறுகிறது. அச்செயலால், ஊய்த்தலெனும் பிறவினைக்குச் ’செலுத்தல், விரட்டல்’ என்ற பொருட்பாடுகள் எழுகின்றன. ஊய்த்து விரட்டி, முடிவில் மெய்தளர்ந்தும் போகிறோம். விரட்டல் வினையைத் தொடர்ந்து தளரற் பொருள் இயல்பாயெழும். (excessive effort leads to severe energy expenditure and then exhaution.) ஒரு செயலைத் தொடர்ந்து ஊய்த்த காரணத்தால் ஓய்ந்து, தளர்ந்து, ஓய்வென்றாகும். ஒருவர் வாழ்வில் ஓய்ந்துபோனால், "அவருக்கு ஓய்ஞ்சுபோச்சு; ஆளு கதை அவ்வளவுதான்" என்கிறோம். கீழேயுள்ள சொற்றொகுதிகளைப் படியுங்கள்.
உய்த்தல் = முன் தள்ளல், செலுத்துதல்
ஊய்த்தல்>உகைத்தல்>அகைத்தல் = செலுத்துதல், நடத்துதல், விரட்டுதல்
உய்தல்>ஒய்தல் = செலுத்தல்
ஒய்த்தல்>*ஓய்த்தல்>ஓய்ச்சல்>ஆய்ச்சல் = வேகம், விரட்டிச் செல்லுதல்
ஒய்>ஒய்யென = விரைவாக (சிவகங்கைப் பக்கம் பேச்சு வழக்கில் “மாட்டை ஓய்த்து/ஓய்ச்சு விடுறா” - என்று மாட்டை விரட்டி ஓட்டுவதைச் சொல்லுவோம்.)
ஓய்தல் = தளர்தல், முடிதல், முற்றுந் தேய்தல், முன்னிலை சுருங்கல், இளைப்பாறுதல், அழிதல்
ஓய்தல்>ஆய்தல்>அயர்தல்= தளர்தல்
ஆயம் = வருத்தம்
ஆயாதம்>ஆயாசம் = களைப்பு
மேலுள்ள சொற்றொகுதியைப் பார்த்தால், ஓய்நடைக்குத் தளர்நடையை விட, விரட்டு நடையை முதற்பொருளாய்ச் சொல்வது சரியாகும் எனப்புரியும். (மொழிவளர்ச்சி அப்படித்தானாகிறது. சொற் பயன்பாட்டிற் பொருள் முரண் எழுவது நடக்கக்கூடியதே. நல்மணத்திற் தொடங்கிய நாற்றம் கெடுமணத்தில் முடிந்ததே? We may end up in a contradictory meaning as usage develops over the years.) [உய்தல் பற்றி மேலுமறிய ’உறவுகள்’ என்ற என் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். http://valavu.blogspot.in/2005/04/blog-post_18.html]
ஆனாற் புறம்.299 இல், “அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரின் இகழ்ந்து நின்றவ்வே” என்ற கடையிரு வரிகளுக்கு, உரையாசிரியர் பலருங் கொடுக்கும் பொருள் உறுதியாய்ச் சிக்கலாகிறது. காட்டாக ஔவை.சு.துரைசாமியாரின் உரையைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
“வருத்துதலையுடைய முருகன் கோயிலில் புழங்குங் கலங்களைத் தொடுதற்கில்லாமல் விலக்குடையராகிய மகளிரைப் போல, போர்க்கஞ்சிப் பின்னிட்டு நின்றொழிந்தன” என்று ஔவை சு துரைசாமியார் சொல்வார். ”முருகன் மகளிரை வருத்துவனென்ற கொள்கையால், ‘அணங்குடை முருகனெ’ன்றார். பூப்புக்காலம் கூட்டத்துக்காகாது என்பதுபற்றி, பூப்புற்ற மகளிர் மனைகளிற் கலந்தொடாது விலகியிருந்து தாம் பூப்புற்றமை தெரிவிப்பது தமிழர் மரபு. பூப்புத்தோன்று மகளிர்க்கு அதன்வரவு முன்கூட்டி அறிய வாராமையின், அதன்வரவைத் தாம் விலகிநின்று நாணிக் காட்டும் இயல்பு பற்றி, “கலந்தொடா மளிரின் இகழ்ந்துநின்றவ்வே”யென்றார். ....... பூப்புத் தோன்றக் கண்ட மகளிர், அணங்குடை முருகன் கோட்டத்தை அணுகற்கஞ்சி நீங்குவது போலக் குதிரைகளும் படை கண்டு அஞ்சிப் பின்னிட்டுப் பெயர்ந்தன என்றாவாறாயிற்று” என்பது ஔவை.சு.து.வின் அதிக விளக்கமாகும்.
மற்ற உரைகளும் இதேபோக்கிற் செல்கின்றன. பேரா.ஃஆர்ட்டின் ஆங்கிலப்பெயர்ப்பும் இதே வழியிலிருக்கிறது. ’கலந்தொடா மகளிரை’ இணையமெங்கும் இடைப்பரட்டும் நா.கணேசன் கூற்றும் இப்படியே இழைகிறது. பொன்முடியார் வரிகளுக்கிடை பிளந்து, ’மாதவிலக்கு, தீட்டு’ எனத் தற்குறிப்பேற்றம் சொல்வது முறையா? (இது எந்த அளவிற்கெனில், புறம்299-க்கு மாத விலக்குப் பாட்டென்றே நா.கணேசன் தலைப்புக் கொடுக்கிறார்.) ”வெள்ளைக் காகம் தெள்ளு வானத்திற் துள்ளிப் பறக்கிறது,” என்றொருவர் அரற்றினாற் சிரிக்காதென்ன செய்வது? [மாத விலக்கு என்பது அடிப்படையிற் சுமையேறிய ஆணாதிக்கச் சொல். ஆண், பெண் இருவரிடை சமநிலை பேசும் இக்காலத்தில் இன்னுஞ் சமனான, சுமையிலாத, மாதக்கிடப்பு (monthly lie-down) என்ற சொல்லைப் பயன்படுத்தல் நல்லது. “குருதி வெளியேறி மெய்சோர்ந்து பெண் கிடக்கும் நிலையை ’வெளியே கிடக்கிறாள்’ என்றே எங்கள் பக்கம் பேச்சுவழக்கிற் சொல்வர்.
வெளியே நிற்கிறாள் என விவரித்து ஒரு சொல்லும் கேட்டதில்லை. கலந்தொடா மகளிரின் இகழ்ந்து ’நின்றவ்வே’ - என நிற்றலை அழுத்தி ஒரு மரபார்ந்த புலவர் எப்படிச் சொல்வார்?]இந்தப் பாவிற் கலந்தொடா மகளிர், தண்ணடை மன்னர் தாருடைப் புரவிக்கு உவமையாகிறார். அப்படியாயின்,
1. சீறூர் மன்னனின் (உழுந்துச்சக்கை உண்டு விரட்டி நடக்கும்) ஓய்நடைப் புரவி யாரைக் குறிக்கிறது? ஆண்களையா, அன்றி வேறொருவகைப் பெண்களையா?
2. கலந்தொடுதல் எது? (கலத்திற்குச் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகர முதலி 7 வகைப் பொருட்பாடுகளைத் தரும்.)
3. அது கொள்கலனா? அணிகலனா? கருவியா? அல்லது இவையெல்லாங் குறிக்கும் பொதுமைச் சொல்லா? [பல மேலையாய்வாளரும், அவரைப் பின்பற்றுவாரும், கொள்கலனாகவே (vessels) கொள்கிறார். பேரா. இராசமும் கொள்கலனென்றே கொள்கிறார். அதேபொழுது கல்லுதலுக்குத் தோண்டல் மட்டுமே பொருளல்ல.]
4. கலந்தொடும் மகளிர், கலந்தொடா மகளிர் என இருவகையுண்டா?
5. காலங் காலமாய் உரையாளர் காட்டும் ’மாதவிலக்குப் பார்வை’ சரிதானா? அன்றி வலிந்து திணிக்கும் ஓரப் பார்வையா?
6. இகழ்ந்து நின்றவ்வே - என்பதற்குப் பொருளென்ன? (இகழ்தலுக்குப் பின்வாங்குதல் என்றே எல்லா உரையாளரும் பொருள்கொள்கிறார். இது இன்றில்லாப் பொருளாகும். பாடவேறுபாடு கூறி, ”இகழ்ந்து” என்பது ”இகந்து” ஆகுமோ? - என அரவிந்த் சுவாமிநாதன் சொல்வார். இகத்தலுக்குத் தாண்டுதல், கடத்தல், போதல், நீங்குதல், நடத்தல், புறப்படுதல், விட்டுவிடுதல், பிரிதல், பொறுத்தல் போன்ற பொருட்பாடுகளுண்டு.)
இப்படிக் கேள்விகளெழுகின்றன. மாதக்கிடப்பென்பது பெண்ணின் சினைமுட்டைச் சுழற்சியை ஒட்டியது. பருவப் பெண்ணொருத்தி தன் மெய்வேதியல் (body chemistry) பொறுத்துத் திங்கள் தோறும் வெளிக்கிடக்கிறாள். நாளை கிடப்பென்பதில் தனிமாந்தருக்கு நுட்பியற்தெளிவு கிடையாது. ஆனாற் குற்றுமதிப்பாக வெளிக்கிடப்பு எப்போதென ஒவ்வொரு பெண்ணுக்குந் தெரியும், அல்லது கிடந்தபிறகு, மறுவினை செய்யமுடியும். ”கலந்தொடாப்” பெயரடை மகளிருக்கு வருவதால், கோட்டத்துள் நுழையுமுன் மாதக்கிடப்பு ஏற்பட்டுவிட்டது என்றல்லவா பொருளாகும்? மாதக்கிடப்பு ஏற்பட்டபின் கோட்டத்துள் நுழையுந் தேவை மகளிருக்கேன் வருகிறது? குமுகமரபை மீறிக் கோட்டத்துள் மகளிர் வாராரே? கோட்டம் போர்க்களத்திற்கு உவமையெனில், போர்க்களம் வாராப் புரவி பின்னொதுங்கி இகழ்ந்து நின்றால் என்ன? இகழாது நின்றாலென்ன?.
இன்னொரு வகையிற் ’கோட்டத்து இகழ்ந்து நின்றவ்வே’ படித்தால், மாதக்கிடப்பு ஏற்படாமற்றான் கோட்டத்துள் நுழைய முற்படுகிறாரோ? - என்று தோன்றுகிறது. அப்படி நுழையும்போது கலந்தொட்டிருப்பாரே? மாதக்கிடப்பிற் கலந்தொடுவதும் கோட்டத்துள் நுழையமுற்படுவதும் முரண்செயல்களாயிற்றே? ஒன்று நடப்பின் இன்னொன்று நடவாதே? கோட்டத்துக் கலந்தொடா- எனுஞ் சொற்புணர்ச்சியை ஆழ்ந்து நோக்கின், இருசெயல்களும் ஒரே நேரத்தில் நடப்பதாய் ஆகின்றனவே? இது எப்படிச் சாலும்? Can two contradictory actions occur simultaneously?
தவிர, நண்பர் ஹரிக்கிருஷ்ணன் ஒரு தனிமடற் சுற்றில் மகளிரெனும் பன்மைக் குறிப்பைச் சுட்டி, ”ஒரே நேரத்தில் பலர் வெளிக்கிடப்பது அரிதினும் அரிது, பொருந்தா இயலுமையைப் புலவர் குறிப்பரோ?” என்றுஞ் சொன்னார். பேரா. இராசம், ”வெளியே கிடக்கும் மகளிர் குருதிப் போக்கோடு நின்று கொண்டிருக்க மாட்டார்” என்றார்.
பாட்டின் அடிகளை சொற்புணர்ச்சி ஒழுங்கோடும் தருக்கத்தோடும் பொருத்தினால், மாதவிலக்குப் பார்வையைத் தவிர்ப்பதே இங்கு சரியாகும். உரையிற் சொல்லும் மாதவிலக்குச் செய்தி, விடாது கருப்பாய் (obsession ஆக) நம்மைப் போட்டுக்குழப்புகிறது. மூலவரைக் காட்டிலும் உரையாசிரியர் உய்க்கும் பெருமாளாய்த் தெரிகிறார் போலும். அடுத்த கேள்விக்குப் போவோம்.
அன்புடன்,
இராம.கி.