வறை பற்றி ஓரளவு அறிந்த நாம், soft-ற்கு இணையான, (ஒலிக்குறிப்பிலெழுந்த) சொவ்வறையின் முதலசை பற்றிப் பார்ப்போம். அதற்குமுன், நெடுங்காலம் நான் சொல்லிவந்த அடிப்படைப் புரிதலை நினைவு கொள்வோம்.
------------------------------------------
"சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு " என்ற நூலில் திரு T.பக்கிரிசாமி (செல்விப் பதிப்பகம், காரைக்குடி) ஓர் ஆழ்கருத்தைச் சொல்லியிருந்தார்.
"ஆதிமனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவாலுணரும் சொற்கள், கலைச் சொற்கள், பண்புச் சொற்கள் ஆதியிலில்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) இல்லை." என்பார். இத்தகைய இயல்பான பருப்பொருள், இடப்பொருட் சொற்களை அவர் ஐம்புலன் சொற்கள் என்பார். அதாவது நல்லது, உயர்ந்தது, ஞானம் போன்ற கருத்துமுதற் சொற்களை மனிதன் ஆதிகாலத்தில் உருவாக்கி இருக்கமுடியாது, பின்னால் அவை உருவாகின, என்பார். இன்றைக்கு வழங்கும் கருத்தியற் சொற்களின் (idealogical words) மூலம் ஐம்புலன் சொற்களாய் இருந்திருக்க வேண்டுமென்பார்.
இதற்கு அவர் தரும் எடுத்துக்காட்டு: 'மதம்' என்ற சொல்லாகும். இச்சொல்லுக்கு religion என்றே பொருள்கொள்ளுகிறோம். ஆனால் ஆதியில் 'மதி -சந்திரன்' எனும் பருப்பொருளிலிருந்து வந்திருக்க வேண்டும் என்ற சொல்வரலாறு காட்டிப் புலப்படுத்துவார். இதேபோல், பருப்பொருளறிவுக் கருத்திலிருந்து மெய்ப்பொருளறிவு சுட்டும் ஞானம் என்ற சொல்லெழுந்தது. அவர் ஆய்வுமுறை சொற்பிறப்பியலிற் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.
(நல்லென்ற கருத்துமுதற்சொல்லும் நெல்லெனும் பருப்பொருளிற் தோன்றியதே. தமிழகத்திற் பல்லவர் (பின்னாற் பேரரசுச் சோழ,பாண்டியர்) பார்ப்பனர்க்குக் கொடுத்த ஊர்கள் சதுர்வேத மங்கலங்களென்றும், பார்ப்பனர் அல்லாதார்க்குக் கொடுத்தவை நெல்லூர்>நல்லூர் என்றும் ஆயின. சென்னையை அடுத்த சோழங்க நெல்லூர் இப்படித்தான் சோழிங்க நல்லூராயிற்று.)
ஐம்புலன் சொற்களிலிருந்து கருத்துமுதற் சொற்கள் எழுந்த வளர்ச்சியோடு, இன்னொரு கருத்தையும் இங்கே சொல்லவேண்டும். எந்த மொழியிலும் கருத்து வளர்ச்சி, பொதுமை (generic)-யிற் தொடங்கி விதுமைக்கு (specific) வராது. விதுமையிலிருந்தே பொதுமைக்கு வரும். ஓர் இயல்மொழியில் அப்படித்தான் சொற்சிந்தனை வளரும். மார்க்சிய முரணியக்கச் சிந்தனையும் (Marxian Dialectical thinking) இதையே சொல்லுகிறது. இது பற்றி முன்னரே என் கட்டுரைகளிற் சொல்லி வந்திருக்கிறேன்.
எ.கா: தமிழர் நாகரிகத்தில் நெய்யெனும் பொருளை முதலிற் கண்டது பால், கொழுப்பிலிருந்தே. பின் அறிவு கூடி, நுட்பம் துலங்கி, எள்வித்தில் நெய்யெடுத்தவன், அதையும் எள்நெய் (=எண்ணெய்) என்று சொல்லத் தலைப்பட்டான். பின்னாளில் கடலை, தேங்காய், ஏன் மண்ணிலிருந்தும் கிட்டியவுடன் அவைகளையும் எண்ணெய்ப் பொதுமை கொண்டு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண் எண்ணெய் எனும் விதுமைச் சொற்களால் அழைக்கத் தொடங்கினான்.
ஒரு மொழியிற் கருத்து/சொல் வளர்ச்சி, இப்படி நீள்சுருளாய் (helical spring), மறுகி மறுகித் தோன்றி, விதுமையும் பொதுமையுமாய் எவ்வளித்துப் பல சொற்களை உருவாக்கும். (எழுவுதல் எவ்வுதலாய்த் தொகுந்தது. இது எகிறுதல் என்றும் பொருள்கொள்ளும், evolve = எவ்வி அளிப்பது. எல்லாவற்றையும் பொதுப்படையாய் ’வளர்ச்சியாக்கி’ எவ்வுதலை மறக்கவேண்டாம்.) 'நெய்'யெனுஞ் சொல் ஆவின் நெய்யாய் விதுமையிற் தோன்றியிருக்க வேண்டும். (’நெய்’ வரலாற்றை நான் இன்னும் அறிந்தேனில்லை.) பின் 'நெய்', பொதுமைக் குறியீடாகி, 'எள்நெய்' எனும் விதுமைக் குறியீடாகி, முடிவில் 'எண்ணெய்' எனும் பொதுமைக் குறியீடாக மீண்டும் வளர்ந்திருக்கிறது.

மேலே கொடுத்த புரிதலோடு சொவ்வறையின் முதலசைக்கு வருவோம். ”ஐயையோ, இராம.கி சொல்லிவிட்டான்” என்று கைகொட்டிச் சிரித்துச் சொவ்வெனும் ஒலிக்குறிப்பைக் கேலி செய்வது எளிது. அதன் அடிப்படை புரிந்துகொள்வது கடினம். இது சுவையோடு ஒட்டியது. இப்பொதுமைக் கருத்துமுதலுக்கு அடிப்படை, முன்சொன்னது போல் ஐம்புலன் சொல்லாகவே இருக்கமுடியும். இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு விதப்புக்களை நாவாலுணருவதாலேயே ”சுவை”யெனும் சொல் எழுந்திருக்கும். வாசம், மணம் என்பது முகரும் வழி. (மெய்ப்பாட்டுச் சுவைகளான நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை போன்ற கருத்துமுதற் சொற்கள் நாகரிகம் வளர்ந்த நிலையில் ஏற்பட்டிருக்கலாம்.)
சுவையின் மாற்று வடிவமாய்ச் ”சுவடு” என்ற சொல் தமிழிலுண்டு. [“அடிமையிற் சுவடறிந்த” (ஈடு.2.6:5). சுவடன் (=சுவைஞன்) என்ற வளர்ச்சியும் அதே ஈட்டில் காட்டப் பெறும். (”சுவடர் பூச்சூடும் போது புழுகிலே தோய்த்துச் சூடுமாப் போலே” (திவ்.திருப்ப. 9 வியா.) ”சுவண்டை” இன்சுவையைக் குறிக்கும். இத்தனை சொற்களுக்கும், சுவைத்தலுக்கும் முதலாய் வேறு வினைச்சொல் அகரமுதலியிற் காட்டப்படவில்லை. இவை அப்பூதியாகவே (abstract) காட்சியளிக்கின்றன. இவை கடன் சொற்களாவென்றால் இல்லையென்றே சொல்லவேண்டியிருக்கிறது. சுவைத்தல் தமிழில் மட்டுமல்ல. மற்ற தமிழிய மொழிகளிலும் புழங்குகிறது சவை> சுவை>சுவைத்தல்; [த.சுவைத்தல், ம.சுவய்க்குக, க.சவி, தெ:சவிகொனு, து.சம்பி, சவி, கோத.சய்வ், நா.சவத், கொலா.சவ்வி (இனிப்பு). ஐகாரமும், டு - வும் சொல்லாக்க ஈறுகள். ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால், "சொவச்சொவ / சவச்சவ" என்ற ஒலிக்குறிப்பே இவற்றிற்கு வேராய்த் தோன்றுகிறது.
taste-ற்கு வேர்தெரியாதென்று ஆங்கில அகராதிகள் பதிந்தாலும், நாக்காற் தடவல், மெல்லல், உணரல் போன்றவற்றையே முன்வினை என்பார்கள். to become soft என்பதை ஆழ்ந்து ஓர்ந்தால், அது தனிவினையல்ல, கூட்டுவினை என்பது புரியும். சில பொருட்கள் soft ஆனவை. சில hard ஆனவை. hard-ற்கு இணையாய் கடினமென்கிறோம். (கடித்தல் வினையை எண்ணுங்கள்.) ஆனால் soft-ற்கு மெல், பகரியாகவே இருக்கிறது. அது ஒரு near description; not the real thing. அதனாற்றான் விதப்பான வேறுசொல் இருந்திருக்க வேண்டும் என்கிறோம்.
கடிபட்டு மெல்லாகிச் சில்லாகி, அழுத்தம் நிலவும்வரை கூனிக் குறுகி, மெலிந்து, வளைந்து, நெளிந்து, குழைந்து நொய்யாகிப் போனதை, பரப்பு வழவழ என்று ஆனதை, இத்தனையும் சேர்ந்தாற்போற் அடிப்படையிற் புதிய பண்பைக் குறிக்கும் வகையில் சவ்வுதல் > சவைத்தல் > சுவைத்தல் என்ற வினைச்சொல்லும் சுவை என்ற பெயர்ச்சொல்லும் கிளைத்தன போலும். வாயில் மெல்லும் போது (சவைக்கும் போது) நாவின் வினையால் ஏற்படும் ஒலிக்குறிப்பே இவ்வினைச்சொல்லை உருவாக்குகிறது.
soft என்பது வாயிற்போட்டு மெல்லும்போது கடினத் திண்மம் (solid) சவைத்துப் போவதைக் குறிக்கிறது. ”என்ன இது சவச்சவ என்றிருக்கிறது?” என்று சொல்லுகிறோமல்லவா? சிலர் வழக்கில் இது சுவையிலா நிலையையும் குறிக்கும். (மொள்ளுதல் வினையின் வழி மொழியும் எழுந்து, ஒலியிலா மோனமும் எழுந்தது போல இதைக் கொள்ளுங்கள். மோனம், முனங்குதல் என்ற இன்னொரு வினைச்சொல்லையும் எழுப்பும்.) மெல்லுதல் வினையாற் சவைத்த நிலை (softy state) ஏற்படுகிறது. மெல்லுதல் என்பது சிறிய grinding - process - செயல்முறை; சவை என்பது தட நிலை - state. I prefer to use a state than a process here. மெல் என்பது சில இடங்களிற் சவைக்குப் பகரியாய் நிற்கலாமேயொழிய முற்றிலும் அல்ல. (my question is simple. What is the etymology of suvai?) சொவ்விய / சவ்விய நிலை என்பது இயற்கையிலோ, மாந்தர் செய்கையாலோ ஏற்படலாம். மெல்லுதல், மாந்தர் செய்கை மட்டுமே. இந்த நுணுக்கத்தைச் சொல்ல ஒலிக்குறிப்பைத் துணைக்கொண்டால் குடிமுழுகியா போகும்? :-)
சவ்விய நிலையின் தொழிற்பெயராய், மெல் எனும் பொருளில், மெல்லிய மூடுதோலைக் குறிக்கும் வகையில் சவ்வு (membrane) என்றசொல் எழும். sago வின் சோற்றை, நொய்யான மாவுப் பொருளை, காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் சவ்வரிசி எனப்படும். சவ்வாயிருத்தல் என்பது பிசின் (to be viscid) போலாவதைக் குறிக்கும். சவுக்குச் சவுக்கெனல் என்னும் அடுக்குத் தொடர் வளைந்துகொடுக்கும் குறிப்பைக் காட்டும். சவ் என்பதை ஒட்டிய இத்தனை சொற்களும் கடன் சொற்களா? வியப்பாக இல்லையா? இவற்றின் வேர்கள் என்ன?
சவத்தலுக்குத் தொடர்பான சப்புதலும் சப் எனும் ஒலிக்குறிப்பிலெழுந்தது தான். இதுவும் தமிழிய மொழிகளில் பல்வேறு விதமாய்ப் புழங்குகிறது (ம.சப்புக; க.சப்பரிக, சப்படிக, சப்பளிக, தப்படிக; தெ.சப்பரிஞ்சு, சப்பு; து. சப்பரிபுனி; கோத.சப்; துட.செப்; குட.சப்பெ, சபெ; நா.சவ்ல்; பர்.சவ்ல்,சல்; மா.சொப்பு; பட.சப்பு; சப்புதல் = அதுங்குதல் to be bent, pressed in, to become flat. சுவையில்லாதிருப்பதையும் சப்பென்று இருப்பதாய்க் குறிப்பிடுவதுண்டு.
இன்னொரு வளர்ச்சியாய், ”வாயிற் போட்டு மெல்லுதல்” வழி சவள்தல், சவட்டுதல் என்று சொற்கள் ஏற்பட்டு மெல்லுதல், மிதித்தல் போன்றவற்றைக் குறிக்கும். மிதி வண்டியை தென்பாண்டியிற் சவட்டு வண்டி என்று ஒருகாலத்திற் சொல்லிவந்தார்கள். உறுதியில்லாமல் வளைந்து கொடுப்பவனை சவடன் என்பார்கள். (”அஞ்சுபூத மடைசிய சவடனை” என்பது திருப்புகழ் 5.57) வீண்பகட்டுக் காட்டுவதைச் சவடால் என்பார்கள். (சவடால் வேற்றுமொழிச்சொல் என்பாருமுண்டு.) நீரைச் சவட்டும் படகுத் துடுப்பு சவள் எனப்படும். சவளுதல் என்பது வளைதல் என்றும் பொருள் கொள்ளும். சவள் தடி = துவளும் தடி, குந்தம்; இது சவளமென்றுஞ் சொல்லப்பெறும். சவளக்காரர் ஈட்டிபிடிக்கும் போர்வீரர். ஆங்கிலச்சொல்லான javelin என்பதை அடுத்தெழுதிவிட்டால் சட்டாம்பிள்ளைகள் ”ஆங்கில ஒலிப்புக் காட்டுகிறான்” என்று சாடிவிடுவர். வங்காள விரிகுடாவில் இவற்றைக் கொட்டுவதுதான் சரியான முடிவு போலும்.
வளைந்து நெளியும் புளியம்பழம் ”சவளம்” எனப்பெறும். வளைந்த காலுள்ளவன் ”சவளன்” எனப்படுவான். வளைந்து நெளியும் துணிச்சரக்கு ”சவளி” எனப்படும். ஊரெல்லாம் சவளிக்கடைகள் இழைகின்றனவே? சவண்டிய காரணத்தால் அது சவளி. சில தமிழர் வடமொழிப் பலுக்கைக் கொணர்ந்து ஜவளி என்றாக்கி உள்ளதையும் தொலைப்பார். வடமொழியில் இச்சொல்லில்லை. ”சவளைக்காரர்” என்பது நெல்லை மாவட்டத்தில் நெசவுத்தொழிலரைக் குறிக்கும். மெலிதற்பொருளில் சவு-த்தல் என்ற சொல் யாழ்ப்பாணம் அகராதியிற் குறிக்கப் பெற்றுள்ளது. சவட்டி (அடிக்கப்) பயன்படும் வளைகருவி சவுக்காகும்.
நெளிவுற்ற இலை சவண்டிலை எனப்படும். சவள்> சவண்> சவணம் என்று மாழைக்கம்பி இழுக்கும் கம்மியக்கருவி பற்றிய சொல்லெழும். ஆண்டு வளர்ச்சி பெற்றும் உடலுறுதி பெறாது, துவளும் பிள்ளையைச் சவலைப் பிள்ளையென்பர். சவலைக்குள் soft என்ற பொருள் இருப்பதை எளிதாய் உணரலாம். சவலை என்ற சொல் திருவாசகத்திலும் பயில்கிறது. tender என்ற பொருளும் அதற்குண்டு. தவசமணி இல்லாக் கதிர், உள்ளீடில்லாக் கதிர் சவலைக்கதிர் எனப்பெறும். தனிச்சொல்லின்றி இரு குறள்வெண்பாக்களை இணைத்துச் சொல்வது சவலை வெண்பா எனப்படும். தனிச்சொல் தான் நேரிசை வெண்பாவிற்கு உறுதி தந்து கட்டுகிறது. இல்லையெனில் அது சவலை தான்.
soft-இன் வரையறை புரியத் திண்ம மாகனவியலுக்குப் (solid mechanics) போக வேண்டும். பொதிகளைத் திண்மம், நீர்மம், வளிமம் என 3 வாகைகளாய்ப் (phases) பிரிப்பர். திண்மத்திற்கு வடிவுண்டு. நீர்மம், வளிமத்திற்கு வடிவில்லை; அவை கொள்கல வடிவையே கொள்ளும். ஒரு கொள்கலத்தில் நீர்மம் பகுதியாய் நிறைந்தால், வெளிப்பரப்பு (external surface) காட்டும். வளிமமோ கொள்கலம் முழுதும் நிறைக்கும். நீர்ம, வளிமங்களைச் சேர்ந்தாற்போற் தொகுத்துப் பூதியலில் (physics) விளவம் (fluid) என்பார்கள் (1960களிற் பாய்மம் என்று குறித்தோம். இப்பொழுது சிக்கல் காணுவதால் விளவம் என்கிறோம். வேறொரு கட்டுரையில் இதை விளக்குவேன்.)
பொதுவாகப் பொதிகளின் (bodies) நகர்ச்சியும் (motion), வளைப்புகளும் (deflections), மொத்தை விசைகளாலும் (bulk forces - காட்டு: புவியீர்ப்பு விசை, அழுத்தம்), பரப்பு விசைகளாலும் (surface forces - காட்டு: கத்திரி விசை - shear force) ஏற்படுகின்றன. விளவங்கள் தொடர் விளவுகளையும் (continous flows), திண்மங்கள் வளைப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. பொதுவாக விசைகளையோ (forces), அவற்றால் ஏற்படும் துறுத்தங்களையோ (stresses), நிறுத்தினால் தொடர் விளவுகள் நின்றுபோகும். மாறாய்த் திண்மங்களை விசைகளுக்கு உட்படுத்தினால் தெறித்து உடையும் வரை வெறும் வளைப்புகளே ஏற்படுகின்றன; விசைகள் நின்றவுடன் வளைப்புகளும் கலைகின்றன.
அழுத்துதல் என்பது to press என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. அதைப் பொதுமைப்படுத்தி, 'துகள்களை நெருங்கவைத்தல்' என்னும் ஆழ் பொருளிற் துறுத்தலெனும் வினை பொறியியலில் ஆளப்படும். இது ஆங்கிலத்தில் to stress என்ற வினைக்கு ஈடானது. துறுத்தலுக்கு மாறாய் தகைத்தல் என்றும் சிலர் ஆளுவர். [தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலச் சொல் அகரமுதலியிலும் 'தகைத்தல்' இருக்கிறது. இருந்தாலும், to tighten என்பதற்கே தகைத்தல் சரியாகும் என்பதாலும், ஐகாரம் பயிலும் தகைப்பைக் காட்டிலும், உகரம் பயிலும் துறுத்து பலுக்க எளிது என்பதாலும் நான் துறுத்தலைப் பரிந்துரைக்கிறேன். துறுத்திற்கு மாறாய் தகைப்பு நிலைத்தாலும், எனக்கு உகப்பே.]
ஒவ்வொருவகை விசை/துறுத்திற்கும் ஒவ்வொரு வகை வளைப்பு ஏற்படும். அவற்றைத் துறுங்குகள் (strains) என்பார்கள். அழுத்தப்பட்ட பொதி அழுங்குவதைப் போலத் துறுத்தப்பட்டது துறுங்கும் (to get strained). 3 விதத் துறுத்தங்களை, மாகனவியல்-mechanics குறிக்கும். அவை திணிசுத் துறுத்தம் - tensile stress, அமுக்கத் துறுத்தம் - compressive stress, கத்திரித் துறுத்தம் = shear stress என்றாகும். அதே போல, நீளவாட்டுத் துறுங்கு (longitudinal strain), குறுக்குச் செகுத்தத் துறுங்கு (cross sectional strain), பருமத் துறுங்கு (bulk strain), கத்திரித் துறுங்கு (shear strain) என்று வெவ்வேறு துறுங்குகளுண்டு.
to stretch என்பதைக் குறிக்கத் துயர்தல்/துயக்குதல் என்ற சொல் பயின்று, நீளுதல்/நீட்டுதல் பொருளைக் கொடுக்கும். (ஏதோவொன்று stretch ஆகி நீண்டு போவதைத் ”துயர்ந்து கொண்டே வருகிறது” என்று சிவகங்கைப் பக்கம் சொல்லுவார்கள். தொடர்ந்து வரும் துன்பம் துயரம் என்றே சொல்லப் பெறும்.) ஒரு நீளத்தின் துயக்கத் திரிவை (change in the stetch) பொதியின் நீளத்தால் வகுத்துக் கிடைக்கும் எண், நீளவாட்டுத் துறுங்கு எனப் படும். இது போல் பருமத் துறுங்கு = பருமத் திரிவு / பொதியின் பருமன் என்றாகும். கத்தரித் துறுங்கு = குறுக்குச் செகுத்தத் திரிவு (change in cross section) / பொதியின் குறுக்குச் செகுத்தம் என்று வரையறை கொள்ளும்.
ஒரு திண்மத்தின் பருமத் துறுங்கு, பொதுவாக அழுத்த வேறுபாட்டால் எழுவது. காட்டாக, ஓர் இலவம்பஞ்சுத் தலையணையின் தடிமன் (thickness) 5 அணுங்குழை (inches) என்று வையுங்கள். மேற்பரப்பு 10X10 சதுர அணுங்குழை என்றும் கொள்ளுங்கள். தலையணைப் பருமன் 500 கன அணுங்குழையாகும். அதன்மேல் இன்னொரு பொதியை எடையாக வைக்கிறோம். எடைக்குத் தகுந்தாற் போல் இலவம்பஞ்சின் தடிமன் குறுங்கி, தலையணையின் பருமன் குறைகிறது. [எடைக்குப் பகரியாய் நேரடியழுத்தம் கொடுத்தாலும் பருமக்குறைவை ஏற்படுத்தலாம்.]
பொதுவாக, எந்தத் திண்மப் பொதியும் அழுத்தமிருக்கும் வரை பருமன் குறையும்; அழுத்தம் நிறுத்திவிட்டாற் பழைய பருமனுக்கு வந்துவிடும். [காட்டாக, A பொதி B - யை அழுத்துகிறது; இதை B-யின் நோக்கில், தன்வினையாய், எப்படிச் சொல்லலாம்? A - ஆல் B அழுங்குகிறது. அழுங்குதல் தன் வினை; அழுத்துதல் பிறவினை. ஒரு பொதி அழுங்க, அதன்மேல் அழுத்தம் கூடிக் கொண்டேயிருக்கிறது. அழுங்குவதால் அது அழுக்கு; அழுத்துவதால் அழுத்து. (மாசைக் குறிக்கும் அழுக்குச் சொல் வேறுவகையிற் பிறந்தது.) அழுக்கின் நீட்சியாய் அழுக்கு ஆறுதல் என்ற சொல் to get strained என்ற பொருளிற் பிறக்கும்.. அழுக்காறு என்று திருக்குறளில் வருகிறதே, நினைவிற்கு வருகிறதா? அது strained state - யைத்தான் குறிக்கிறது. தொடர்ச்சியாய் அழுங்கிக் கிடக்கும் நிலை. அழுங்குதல் வினை தற்பொழுது அரிதாகவே பயன்படுகிறது. அதற்குப் பகரியாய் அமுங்குதல் என்று பயன்படுத்துகிறோம். மாசு என்ற பொருட்குழப்பமும் இல்லாது போகிறது.]
”அழுத்தத்திற்குத் தக்க, ஒரு திண்மம் எவ்வளவு அமுங்கும்/அழுங்கும்?” என்ற வினவிற்கு விடையாய் soft எனும் குறிப்பிருக்கிறது. காட்டாக, 500 கன அணுங்குழைப் பருமன் கொண்ட இருவேறு திண்மங்களில், முதற்பொதி 200 கன அணுங்குழையும், இரண்டாம் பொதி 400 கன அணுங்குழையும் குறைவதாய்க் கொள்ளுங்கள். மாகனவியற் புரிதலின்படி, முதற் பொதி இரண்டாம் பொதியைக் காட்டிலும் soft ஆனது என்பார்கள். (இலவம் பஞ்சுத் தலையணை, யூரிதேன் நுரைத் - urethane foam - தலையணையைக் காட்டிலும் soft ஆனது. இரும்பைக் காட்டிலும் ஈயம் soft ஆனது. வயிரத்தைக் காட்டிலும் இரும்பு soft ஆனது. பொத்திகை - plastic - யைக் காட்டிலும், நெகிழி - elastic, soft ஆனது.) softness என்ற சொல் திண்மங்களுக்கே பொருந்தும். யாரும் soft gas, soft liquid என்று சொல்வதில்லை. soft solid என்றாற் பொருளுண்டு. [soft water, hard water என்பவை நீரிற் கரைந்திருக்கும் உப்புக்களைப் பொறுத்துச் சொல்லப்படுகின்றன. அவை விதப்பான பயன்பாடாகும்].
மாகனவியலின் படி, soft என்பது பருமன் குறுங்கலைக் குறிக்கிறது என்று பார்த்தோம். குறுங்கல்/குறைதற் பொருளில் அவ்வுதல்> அவ்வியம் என்ற சொல்லைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார், 'திருக்குறள் மெய்ப்பொருளுரையிற்' சொல்லுவார். சங்க இலக்கியத்தில் ஆவணப் படாத 'அவ்வியம்' என்ற சொல் திருக்குறள் 167, 169 பாக்களிற்றான் முதலில் ஆவணப்பட்டிருக்கிறது. பின்னால் "ஔவியம் பேசேல்" என்ற திரிவில் ஆத்திச்சூடியிலும், "ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு" என்ற திரிவில் கொன்றை வேந்தனிலும் சொல்லப் பட்டிருக்கிறது.
அவ்வியம் என்பதற்குப் பொறாமை (= பொறுக்காத தன்மை) என்றே பலரும் பொருட்பாடு காட்டுவர். (unbearable; காட்டாகப் பரிமேலழகர், பாவாணர்). ஆனால் அழுக்காறு, அழுக்காறாமை, அவ்வியம் என மூன்றிற்கும் ஒரே பொருள் சொல்லுவது சரியல்லவே? மற்ற உரைகாரருக்கு மாறாய்ப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மட்டுமே பொருள் சொல்லுவார். இந்தப் புரிதலோடு, 167 ஆம் குறளைப் பார்த்தால்,
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்
என்பதன் பொருள் புரியும். "மனம் குறுகி அழுக்காறு உள்ளவனை, தன் மூத்தாளுக்குக் காட்டிவிட்டு திருமகள் விலகி விடுவாள்" என்ற பொருள் வரும். திருமகள் / மூத்தாள் என்ற தொன்மத்தை வள்ளுவர் ஏன் சொன்னார் என்ற கருத்தை நான் விளக்குவதைக் காட்டிலும் பெருஞ்சித்திரனார் விளக்குவதே சரியாய் அமையும். எனவே அதைத் தவிர்க்கிறேன். அவர் நூலில் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து 169 ஆம் குறளில் அவ்விய என்ற சொல்லாட்சி வரும்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
இதற்கும் பெருஞ்சித்திரனார் “குறுகிய நெஞ்சத்தவனின் ஆக்கமும் செவ்வையானின் கேடும் பலராலும் நினைக்கப் படும்” என்றே பொருள் சொல்லுவார். அவ்வுதலின் ஆதிப் பொருளும் அவ் எனும் ஒலிக் குறிப்புத் தான். 'வடையை அவ்வெனக் கடித்தான்'. அவ்வெனப் பல்லாற் கடிக்கும் குறிப்பு, மீதி வடை குறைந்திருப்பதையும் உணர்த்துமல்லவா? நாளாவட்டத்தில் இவ்வொலிக்குறிப்பின் பொருட்பாடுகள் பலவாகின. அவற்றுள் முகன்மையானது குறுகுதல், குறுங்குதல், குறைதல், சுருங்குதல், தட்டையாதல், கெடுதல், பள்ளமாதல் போன்றவையாகும்.
அவ்வுதலின் இன்னொரு வெளிப்பாடு அம்முதலாகும். இது அம்மியெனும் அடுப்படிக் கருவியை நமக்குக் காட்டும். அம்முதலின் நீட்சி அமுக்குதல் = to press என்றாகும். இதே போலத் தொம்முதல்> தும்முதல்> துமுக்குதல்> துவுக்குதல்> துவைத்தல் என்பதும் அடித்து அமுக்குதலைக் குறிக்கும். தேங்காய்த் துவையல் (=துகையல்)என்கிறோமே, அதுவும் ஒரு அவையல் தான். அவல் என்பதும் அவையலில் உருவான பண்டம் தான். அவற் பொரி நினைவிற்கு வருகிறதா? முதலிற் பருமனாய் இருந்தது இப்பொழுது தட்டையாய், சின்னதாய் அவலாய் ஆயிற்று. அவல் பள்ளத்தையும் குறிக்கும். அவ்வையாரின் 187 ஆம் புறநானூற்றுப் பாட்டு “நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ, மிசையா கொன்றோ?.....” நினைவிற்கு வருகிறதா? அவம் என்ற சொல்லும் பள்ளத்தையே குறிக்கும். பல்வேறு அவச் சொற்களை தப்பான புரிதலில், தமிழ் அகரமுதலிகள் வடசொல் எனக் காட்டுகின்றன. ”வடசொல், வடசொல்” என நாம் தொலைத்தவை மிகப்பல.
அவ்வை என்ற சொல்லுக்கு தாய்ப் பொருளையே பலருஞ் சொல்லுவர். மாறாக அவ்வுதலை ஒட்டி உயரம் குறைந்தவள் என்றும் பொருள் சொல்ல முடியும். அவ்வன் = குள்ளன். அவ்வை = குள்ளச்சி. பொதுவாக நாட்டுப் புறங்களில் பெயர் தெரியாதவரை, அவர் உயரம், நிறம், தோற்றம், அல்லது தொழிலை வைத்தே அடையாளம் சொல்லுவர். நெட்டையன், குள்ளச்சி/கூளைச்சி, கருப்பன், வெள்ளையன், முறுக்கன், மீசைக்காரன் இப்படித்தான் ஒருவருக்கொருவர் முன்றாமவரைச் சொல்லுவர். சங்க காலப் புலவர் அவ்வை ஒருவேளை குள்ளமாய் இருந்திருக்கலாம்.
அவ்வுதலுக்கும் சவ்வுதலுக்கும் ஒரு சகரவொலியே வேறுபாடு. எத்தனையோ சொற்கள் சகரம் தவிர்த்தும் அதே பொருளைக் காட்டுகின்றன. காட்டு: சமணர்/அமணர், சந்தி/அந்தி, சாரம்/ஆரம். சாலுதல்/ஆலுதல், சள்ளல்/அள்ளல், சடைதல்/அடைதல், சப்பளம்/அப்பளம், சவை/அவை, சமைதல்/அமைதல், சமயம்/அமயம், சமர்/அமர், இச்சொற்கள் மிகப்பல தேறும். நான் விரிவஞ்சித் தொகுக்கவில்லை.
சவ்வுதலுக்கும், சவச்சவ என்பதற்கும், சுவைக்கும், சுவட்டிற்கும், சப்பு, சவள், சவட்டு போன்ற இன்னும் பல சொற்களுக்கும் பொதுவாய்ச் சொற்பிறப்பு ஏற்பட்டிருக்குமானால் உகரத்திற்கும், அகரத்திற்கும் ஏற்றாற்போல் பொதுவானதாய் அது சொவச்சொவ என்ற ஒகர வேரிற்றான் உருவாக வாய்ப்புண்டு. பொத்தகம் புத்தகமாயிருக்கிறது. கொடுத்தது கல்வெட்டுக்களில் குடுத்தது என்று பயில்கிறது. பேச்சுவழக்கிற் ஒகரம் ஒலிக்குறிப்பாய் எழுவது இயல்பானவொன்று.
எனக்குச் ”சொவ்> சவ்” என்பது சொல்ல எளிதான ஒலிக்குறிப்பு. சுவை, சுவடு, சவச்சவ, சப்பு, சவள், சவட்டு, அவல், அவம், அவை, அவ்வியம் என்ற பல்வேறு சொற்களை இயல்பாய் அது பிறப்பிக்க முடியும். ஒரு முழுமையான தொடர்ச்சியைக் காணமுடியும். அப்படித்தான் software க்கு இணையாய் நான் சொவ்வறை பரிந்துரைத்தேன். சொவ்வைத் தவிர்த்து மென்னையே புழங்கவிரும்புகிறவர் புழங்கிப் போகலாம். எனக்கு அவமொன்றுமில்லை. மென்வறை என்றுஞ் சொல்லலாம். என்ன? தமிழில் soft - ற்குச் சொல்லில்லாது தொடர்ந்து சுற்றிவளைத்துப் பகரியைப் புழங்கிக் கொண்டிருப்போம். தமிழ் தொடர்ந்து குறைப்பட்டே இருக்கும். என் தமிழ் நிறைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
அன்புடன்,
இராம.கி.