Sunday, March 04, 2012

அடுதற் சொற்கள்

அண்மையில் சிங்கை இளங்குமரன் கதிராற்றலால் நடக்கும் சூடுகள் பற்றிச் சில ஆங்கிலச் சொற்களைக் கொடுத்து அவற்றிற்கு இணையாகத் தமிழ்ச் சொற்களைத் தரும்படிக் கேட்டிருந்தார். நண்பர் நாக.இளங்கோவன் அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு அடுப்புகள் பற்றிய சொற்களையும் வரிசைப் படுத்தியிருந்தார்.

நான் இரண்டுநாட்கள் ஊரில் இல்லை. செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் நிதி நல்கையோடு கோவை அரசு கலைக்கலூரியின் தமிழ்த்துறை நடத்திய “இரட்டைக் காப்பியங்களிற் தமிழ்ச்சமுதாயம்” என்ற பயிலரங்கில் ”சிலப்பதிகாரம். காலவியல் நோக்கு” என்ற தலைப்பில் ஒருநாள் பாடம் நடத்துவதற்காகச் சென்றிருந்தேன். அந்தப் பணியை இனிதே முடித்துத் திரும்பி இன்று காலை தான் சென்னைக்கு வந்தேன்.

இங்கு வந்து பார்த்தால் இந்த வேண்டுகோள். நண்பர்கள் வேண்டிக் கேட்கும் போது மறுக்க முடிவதில்லை.

Solar Energy என்பது கதிர் ஆற்றல்; சத்தி என்பது தமிழ்வழிச் சொல் தான். (சத்தோடு தொடர்புடையது.) சக்தி என்பது சத்தியின் வழி வந்த இருபிறப்பிச் சொல். இப்பொழுதெல்லாம் பொதுவழக்கில் ஆற்றலையே பெரும்பாலும் பலர் பயன்படுத்துகிறார்கள். energy, power என்பவை வேறுபடுத்தப் படவேண்டிய சொற்கள். power என்பதற்குப் புயவு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். புயம் என்ற சொல் இதோடு தொடர்புடையது. இதன் சொற்பிறப்பை இன்னொரு நாள் விளக்குகிறேன்.

Solar Lights கதிர் விளக்குகள்

Water heater = வெந்நீர் வேம்பா. வெம்புதல் என்ற வினை சூடாதலைக் குறிக்கும். வெம்புதலிற் பிறந்த பெயர்ச்சொல் வெப்பம் ஆகும். வேம்பா என்ற சொல் தென்பாண்டி நாட்டில் பல நூற்றாண்டுகளாய் வெம்பும்/வெப்பும் தொழிலைக் குறிக்கும் கருவிச் சொல். வெந்நீர் வேம்பா என்பது எங்கள் சிவகங்கைப் பக்கம் அகவை முதிர்ந்தவரிடையே புழங்கும் சொல். அந்தக் காலத்து தேநீர்க் கடைகளில் செம்பால் ஆன வேம்பா இருக்கும் அதிலிருந்து வெந்நீர் பிடித்துத் தேநீர் செய்வார்கள். ஞாவகம் வருகிறதா?

CCTV camera = மூ.சு.தொ.காட்சிப். படக்கருவி (மூடிய சுற்றுத் தொலைக்காட்சிப் படக்கருவி) இப்படிச் சுருக்கெழுத்து ஆங்கிலச் சொற்களைத் தமிழிற் சொல்லுவதற்கு இன்னும் ஒரு செந்தர வழிமுறை தமிழில் உருவாகவில்லை. இப்பொழுதெல்லாம் இந்தச் சுருக்கெழுத்துக் கூட்டில் முதலில் வரும் சொற்களில் முதலெழுத்தை எடுத்துக் கொண்டு, அதன் கடைசியில் வரும் தமிழ்ச்சொல்லை அப்படியே சொல்லுவது சரியாக இருக்குமோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. தமிழ்மொழி ஆங்கிலம் போல் முற்றிலும் முன்னொட்டு பழகும் மொழியல்ல. அதில் முன்னொட்டும் பின்னொட்டும் சேர்ந்தே இடத்திற்குத் தகுந்தாற்போற் புழங்கும். இந்நிலையில் CCTV என்பதை மூடிய சுற்றுத் தொலைக் காட்சி என்று நீளமாய்ச் சொல்லாது மு.சு.தொ.காட்சி என்றால் மொழிமரபும் காக்கப் படுகிறது; புதிய பயனாக்கமும் ஏற்படுகிறது. எனவே இப்படி எழுதுகிறேன்.

Building Security Systems = கட்டடப் பாதுகாப்புக் கட்டகங்கள்; safety, security என்பவை வேறுபடுத்தப் படவேண்டிய சொற்கள். safety என்பதற்கு ஏமம், சேமம் என்றும், security என்பதற்குப் பாதுகாப்பு என்றும் நான் சில காலமாய்ப் பயன்படுத்துகிறேன். systems என்பதற்குப் பல்வேறு சொற்களை முயன்று பார்த்து (அவற்றில் நாக.இளங்கோ பயன்படுத்திய ”சட்டகங்கள்” என்பதும் ஒன்று தான்) இப்பொழுது ”கட்டகங்கள்” என்ற சொல்லே சட்டென்று பொருள் புரிவது போல் இருப்பதால் அதையே இப்பொழுதெல்லாம் இடைவிடாது பயன்படுத்துகிறேன்.

இனி இளங்கோவன் கேட்டிருந்த சொற்கள்:

Heater = சூடூட்டி, சூடாக்கி (மேலே சொன்ன வேம்பா என்ற சொல் விதப்பாகப் பல வட்டாரங்களிற் பழகிப் போனதால் வெந்நீர் வேம்பா என்பதை மேலே ஏற்றுக் கொண்டேன். சூடூட்டி, சூடாக்கி என்பவை பொதுமைச் சொற்கள் அருளியும் பயன்படுத்துகிறார்.
Warmer = கணப்பி; ”கண, கண என்று இருந்தது” என்ற சொல்லாட்சியை இங்கு நினைவு கொள்ளுங்கள்
Boiler = கொதிகலன், கொதிப்பி; கலன் என்று முடிவதா, அன்றிக் கருவியை இகரத்தில் முடிப்பதா என்று உங்கள் உகப்பிற்கே விட்டுவிடுகிறேன்.
Stove = அடுப்பு
Oven = தணலி, = அடுப்புக்கும் மேற்பட்டுத் தணலை (சூட்டின் அளவைக் கூட்டி வைப்பது) வைத்திருப்பதால் இது தணலி.
Broiler/gril =வெதுப்பி. வெதுப்புதல் என்பது baking ற்கு ஈடாகத் தமிழீழத்திலும், இப்பொழுது தமிழ்நாட்டிலும் பரவிவிட்டது. என்னால் என்ன செய்யமுடியும் என்று தோன்றவில்லை. சொல்லாய்வர் அருளி வெதுப்புதலுக்கு மாறாக அடுதல் என்பதையே புழங்குகிறார்.

O.E. bacan "to bake," from P.Gmc. *bakanan (cf. O.N. baka, M.Du. backen, O.H.G. bahhan, Ger. backen), from P.Gmc. *bakan "to bake," from PIE *bheg- "to warm, roast, bake" (cf. Gk. phogein "to roast"), from root *bhe- "to warm" (see bath). Related: Baked (M.E. had baken); baking. The noun meaning "social gathering at which baked food is served" is attested by 1846, Amer.Eng. Baked beans attested by 1803.

roast யைச் சுடுதல் என்றுதான் பேச்சுவழக்கிற் சொல்லுகிறோம். தோசை சுடுதல். ரொட்டி சுடுதல், சப்பாத்தி சுடுதல் என்பதை எண்ணிப் பாருங்கள். எனவே bakery என்பதற்கு அடுமனை சரியென்று தான் தோன்றுகிறது.

Hearth = அனலி இது நெருப்பு தகதக என்று எரிய அனலாய்ச் சுடுவது.
Furnace = உலை

அன்புடன்,
இராம.கி.

9 comments:

Anonymous said...

இடுகை கண்டு மகிழ்ச்சி. கதிர் என்பது solarக்கு நிகராக வருவது சரியானது என்றாலும், ஏலவே கதிர்வீச்சு, கதிரியக்கம் என radiation, radioactiveக்குப் பகரியாகக் கதிர் என்ற சொல் ஆளப்படுகிறதே, குழப்பம் ஏற்படாதா? மேலும் சத்தின் விரிவு காண ஆவலாக உள்ளேன்.

பிரதாப்

Anonymous said...

Sir, can you suggest a word for defence?

--இ.பு.ஞானப்பிரகாசன். said...

தனிப்பெருமதிப்பிற்குரிய ஐயா!

வணக்கம்! இந்தச் சொற்களையும் மேலும் தாங்கள் இங்கு வழங்கும் மற்ற பல அருந்தமிழ்க் கலைச்சொற்களையும் 'விக்சனரி'யிலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய அகரமுதலியான 'அகராதி'யிலும் பதிவேற்ற விரும்புகிறேன். செய்யட்டுமா?

இராம.கி said...

அன்பிற்குரிய ஞானப்பிரகாசன்,

செய்யுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

அன்பின் இராம கீ, பிர என்னும் தொடங்கும் அணித்து சம்ஸ்கிருத சொற்களும் பெரிய என்னும் தமிழ் சொல்லில் இருந்து தொடங்குவதாய் மா சோ விக்டர் அவர்கள் தன சொல் ஆராய்ச்சி நூலில் கூறுகிறார்,
இது குறித்து தங்களின் விளக்கம் என்ன, இந்த விடயம் தனி பதிவாக இருக்கிறதா?

Raj said...

மாத்திரை என்ற தமிழ்ச் சொல்லில் இருந்துதான் meter என்ற ஆங்கிலச் சொல் வந்தது என்று நான் அறிந்தேன். உங்களின் கருத்து. அதனை பற்றி ஒரு பதிவை செய்தால் நன்றாக இருக்கும்.

Mohan Balki - YoZenMind Counseling Psychologist, Chennai, India. said...

அதென்ன இராம கி...உங்கள் உருவம் பிற விவரம் ஏதும் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை? அதிகம் தெரிந்தவராய் இருக்கலாமோ! எனினும் உங்களை நம் இருவருக்கும் விழைவும் வாய்ப்பும் இருக்கும் போது சந்திக்க விரும்புவதில் பிழை இல்லை! தமிழில் நான் ஏதேனும் கேட்கலாம்-நீங்களும் சொல்லலாம். உங்கள் எழுத்து நடை மிக்க அழகு! உள இயல் பற்றி கூட உங்களுக்கு விருப்பம் இருந்தால் கேட்கலாமும் கூட! என் கைபேசி: 9840042904

சிவஹரி said...

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_1097.html

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_1097.html) சென்று பார்க்கவும்...

நன்றி...