Sunday, March 27, 2011

மொழிநடை

இந்தக் கட்டுரைச் சில ஆண்டுகளுக்கு முன் மடற்குழுக்களில் தகுதரக் குறியேற்றத்தில் (TSCII encoding) எழுதியது. பழையதைப் புரட்டிச் சீர் செய்து கொண்டிருக்கும் போது அகப்பட்டது. இன்றைக்கும் இது பொருத்தமாய் இருப்பது கண்டு ஒருங்குறிக்கு மாற்றி மீண்டும் உங்கள் வாசிப்பிற்கு அனுப்புகிறேன். நம்மைப் போன்ற பலரின் மொழிநடை சீர்பட வேண்டும். அதற்கு இது தூண்டுகோலாய் இருக்குமானால் மிகவும் மகிழ்வேன்.

அன்புடன்,
இராம.கி.

-------------------------------
"மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தானே? இதை ஏன் தலையிற் தூக்கி வைத்துக் கொண்டு இந்தத் தமிழர்கள் காலம் காலமாய்க் கூத்தாடுகிறார்கள்? இந்தக் கூத்தில் “தமிழ்த்தாய்” என்றொரு படிமத்தைக் கொண்டுவந்து தமிழை ஓர் அம்மன் போல ஆக்கி நெய் விளக்கேற்றி ஆலத்தி காட்டிப் பூசை செய்து...... மொத்தத்தில் தமிழர்கள் வெறி பிடித்து அலைகிறார்கள். இவர்களுக்கு இதே பிழைப்பாய் போய்விட்டது; மொழி என்று வந்தால் உணர்ச்சி வயப் பட்டு, அணங்கு வந்தது போல அரற்றுகிறார்கள். தவிர, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயான (?) வடமொழியை எதிர்த்துப் புலம்புகிறவர்கள் இவர்கள் மட்டுமே! இந்தியன் என்ற உணர்வே இவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது."

"மொழி என்பது மாறிக் கொண்டே இருக்கும் என்று தமிழர்களுக்குத் தெரியாதா? மாற்றத்திற்கு ஏற்பப் பழக வேண்டியதுதானே? எப்படிப் பேசுகிறோமோ, அப்படி நடை பழகினால் என்ன? இதில் என்ன தூய தமிழ், தனித்தமிழ், மண்ணாங் கட்டி? இப்படியெல்லாம் அடம் பிடித்தால், அப்புறம் சங்க காலத்திற்குப் போக வேண்டியதுதான்; சங்க காலத்திற் கூட வடமொழி மிகச் சிறிதாவது கலந்துதானே எழுதினார்கள்? இந்த நிலையில் ஆங்கிலம், வடமொழி கலக்காமல் இன்றைக்குத் தமிழில் எழுத முடியுமா? அப்படி எழுதினால் அது செயற்கையாக இல்லையா? ஆங்கிலத்தின் வாயிலாய் எவ்வளவு செய்திகள் சொல்லப் படுகின்றன? அவை ஒவ்வொன்றிற்கும் சொல் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால், வாழ்நாள் தீர்ந்துவிடாதா? மற்றவர்கள் முன்னே போய்விட மாட்டார்களா?"

மேலே கூறிய வகையிற் பேசுபவர்கள் தமிழருக்குள்ளும், தமிழரல்லாத மற்ற இந்தியருக்குள்ளும் இருக்கிறார்கள். காலத்தின் கோலம் இவர்களை வலிந்தவராக, படித்தவராக, மிடையக்காராக, பொதுக் கருத்தை உருவாக்குவதில் பெரும் தாக்கம் உடையவராக மக்கள் நடுவில் இன்றைக்கு ஆக்கி வைத்திருக்கிறது. இதன் விளைவாகத் தமிழ் பற்றிப் பேசுவதே இற்றைத் தமிழகத்தில் இகழ்வானதாய் எண்ணப்படுகிறது. இதற்குத் தோதாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, இது நாள் வரை தமிழ் பற்றித் தமிழகத்தில் வாய் கிழியப் பேசிவந்தவர்கள் பலரும் (குறிப்பாக அரசியலிற் பங்கு கொள்பவர்கள்), கொள்கைப் பிடிப்பிற் தளர்ந்து போய், வாழ்க்கையின் போக்கால் நொய்ந்து, பணம், சொத்து, பதவி என்று எல்லாவற்றிற்கும் ஆட்பட்டு தற்காத்து தற்கொண்டவை மட்டுமே பேணி நீர்த்துப் போனார்கள். தமிழைப் பற்றிப் பேசுவோர் இன்றைக்கு மிகக் குறைந்து போனார்கள்.

இந்த நிலையில் தான் இக்கட்டுரையில் மொழிநடை பற்றி கொஞ்சம் சிறிதளவு அலச முற்படுகிறேன்.

மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்காக உள்ளதுதான். இதில் யாருக்கும் இரண்டு கருத்துக் கிடையாது. ஆனால் கருத்துப் பரிமாற்றம் எழ வேண்டுமானால் நான் எழுப்பும் ஓசை உங்களுக்குப் புரிய வேண்டும், நீங்கள் எழுப்புவது எனக்குப் புரியவேண்டும் அல்லவா? சரியாகச் சொன்னால், குறிப்பிட்ட ஓசைகளின் படிமங்கள் நம் இருவர் மனங்களின் உள்ளே இருக்க வேண்டும் அல்லவா? இதைப் பற்றி விளங்க ஒரு சில காட்டுகளைப் பார்ப்போம்.

தென்மாவட்டங்களில், குறிப்பாக மதுரைப் பக்கம், சில போதுகளில் நம் மக்கள் குலவையிடுகிறார்கள். இந்தக் குலவைச் சத்தம் ஒரு வாழ்த்துக்கான அறிகுறி, பண்பாட்டின் தொகுதி என்று நமக்கு புரிந்தால் அல்லவா, நாமும் குலவையிடுவோம்? அது தெரியவில்லையெனில் குலவை என்பது ஏதோ ஒரு பொருள் அற்ற கூப்பாடாக அல்லவா தெரியும்?

இதே போல, நம்மிடம் பேசும் போது இன்னொருவரைக் குறித்து "ஆமா, இவுங்க என்னத்தைக் கிழிச்சாங்க?" என்று நண்பர் ஒருவர் சொல்லுகிறார்; இங்கே "எதைச் செய்தார்கள்?" என்றல்லவா அந்த நண்பரும், நாமும் பொருள் கொள்ளுகிறோம். இந்தப் புரிதல் இல்லாத, குறிப்பாகத் தமிழர் அல்லாத ஒருவருக்கு இந்தப் பொருட்பாடு விளங்குமா?

இன்னும் ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். எழுத்தாளர் கி.இராசநாராயணன் பல்வேறு நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு கதை இப்படிப் போகும். தம்பிக்காரன் ஒருவன் ஊர் மணியமாக இருந்தபோது, ஊருக்குள் ஒரு தாய் இறந்த வீட்டில், "உங்களுக்கு மட்டுமா, அவர்கள் தாயாக இருந்தார்கள்? ஊருக்கே தாயாக இருந்தார்கள்" என்று சொன்னதைக் கேட்டு, பிறிதொருநாள் அவனுடைய அண்ணன்காரன் தான் மணியமாக நடந்து கொள்ள வேண்டிய பொழுதில், தங்கள் ஊரில் ஒருவனின் மனைவி இறந்த வீட்டில், "உங்களுக்கு மட்டுமா, அவர்கள் மனைவியாய் இருந்தார்கள்...." என்று சொல்லி அடிவாங்கிக் கட்டிக் கொண்டானாம். "எந்த இடத்தில் எப்படிச் சொல்லுவது? எதைச் சொல்லுவது? எப்படி மொழியைப் பயன்படுத்துவது?" என்று பண்பாட்டைத் தெரிந்தால் அல்லவா, இப்படி அடிவாங்காமல், கிறுக்கன் என்று பெயர் வாங்காமல், இருக்க முடியும்? இடம், பொருள், ஏவல் அறிந்து பேச முடியும்? இதற்கு நல்ல மொழிநடை, பண்பாட்டு மரபுகள் தேவையல்லவா?

நம்மூரில் போய், ஒருவரின் வரவேற்பை "வெதுவெதுப்பாக இருந்தது" என்று சொல்ல முடியுமோ? "இதமாக இருந்தது" என்றல்லவோ சொல்லவேண்டும்? இதற்குத் தமிழ்நடை தெரியத்தானே வேண்டும்?

மொத்தத்தில் சொன்னால், மொழியும், அதன் சொற்களும், இலக்கணமும், நடையும் நம்முடைய நடைமுறையையும், பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. என்னுடைய நடைமுறையும், பண்பாடும், பழக்க வழக்கங்களும் உங்களோடு ஓரளவாவது பொருந்தினால் தானே நான் சொல்லுவது உங்களுக்கும், நீங்கள் சொல்லுவது எனக்கும் புரியும்.

இந்த அடிப்படையைச் சொல்வதற்கும், புரிபடுவதற்கும் தான் இந்தக் காலத்தில் இவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது. நாம் ஓவ்வொருவரும் மழலைப் பருவத்தில் இருந்து நமக்கென்று ஒரு சொல் தொகுதியைச் சேர்த்து வருகிறோம். இது வாழ்வில் நமக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்தது. இந்தச் சொற்றொகுதி வெறும் பத்தோடு இருக்கலாம்; பத்தாயிரமாகவும் இருக்கலாம்; நிரவலாகப் பார்த்தால், இன்றைத் தமிழருக்குத் தெரிந்த சொற்றொகுதி வெறும் மூவாயிரத்தில் இருந்து நாலாயிரம் என்றே மொழியாளர் சொல்லுகிறார்கள்; இது மிகக் குறைவு. குறைந்தது இரண்டு மடங்காக ஏழாயிரத்தில் இருந்து எட்டாயிரமாகத் தெரிந்தால் தான் எந்தச் செய்தியையும் தமிழில் எளிதாகச் சொல்ல முடியும்; கிரியாவின் இக்காலத் தமிழ் அகரமுதலியிலேயே (முதற்பதிப்பில்) பதினாறாயிரம் சொற்கள் தான் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இதுவும் மிகக் குறைவான பதிவீடே!

தமிழ்ச் சொற்கள் நம் வாயில் தடையின்று வரவேண்டி இருக்க. மிகக் குறைந்த அளவே தமிழ்ச் சொற்களை அறிந்திருந்தால், அன்றாட வாழ்வில் நுணுகிய கருத்துக்களை தமிழில் எப்படிச் சொல்லமுடியும்? குண்டுசட்டிக்குள்ளா குதிரை ஓட்ட முடியும்? இதன் விளைவாகத்தான் படித்தவர்கள் ஆங்கிலம் கலந்து பழகுவதும் பண்ணித் தமிழ் பேசுவதும் என இக்காலத்தில் வெளிப்படுகிறது. (அண்மையில் ஒரு பேர் பெற்ற தாளிகையாளர் ஒரு இணைய தளத் தொடக்க விழாவில் பேசினார். அவர் பேசியது முற்றிலும் தமிங்கிலம். கேட்டுக் கொண்டிருந்த பலரும் வியந்து போனோம். இந்தத் தாளிகையாளரை ஆசிரியராகக் கொண்ட தாளிகை தமிங்கிலத்தையே தன் நடைமொழியாகக் கொண்டது வியப்பில்லை தான்.) தப்பு யாரிடம்? நம்மிடமா? மொழியிடமா? இப்படி மெத்தப் படித்தவர் தப்புப் பண்ணப் போக, அதைப் பார்த்துப் படிக்காதவரும் ஆங்கிலம் கலந்த தமிங்கில நடைதான் மதிக்கப் படுகிற நடை என்று ஒரு போலியான நடையைச் சரியென்று கருதி, கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடுவது போலப் பயிலுகிறார்கள். மொத்தத்தில் வாலறுந்த நரியின் கதைதான். எல்லோரும் மடிக்குழைப் பள்ளிக்குப் படையெடுக்கிறார்கள். கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?

பிழையை நம்மிடம் வைத்துக் கொண்டு, நாம் அறிந்த தமிழ்ச் சொற்களின் தொகுதியைக் கூட்டிக் கொள்ளாமல், நம்மைச் சுற்றி இருக்கும் உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்களுக்கும் அதைத் தூண்டாமல், ஆங்கிலம் கலந்து பேசிவிட்டு "பின் தமிழில் அதைச் சொல்லமுடியாது, இதைச் சொல்ல முடியாது" என்று சொல்ல முனைவது, நம் பிழையை மொழியின் மேல் ஏற்றிச் சொல்வது அல்லவா? நம்மில் எத்தனை பேர் தமிழ்-தமிழ் அகரமுதலியை வாங்கி வீட்டில் வைத்திருந்து அவ்வப்போது பயின்று சொல் தொகுதியைக் கூட்டிக் கொள்ளூகிறோம்? ஒவ்வொரு சிறு உரையாடலிலும், தெரியாமல் ஆங்கிலம் பயின்று பின் அதை உணர்ந்து, அடுத்தமுறை தமிழில் அதைப் பழகுகிறோமா? இந்த நடைமுறை ஒன்றும் பல்பெயர்க்கும் புதுச்சொற்கள் அல்ல. எல்லோரும் அறிந்த தமிழ்ச் சொற்களே. வாருங்கள் என்று சொல்ல முடியாமல் come in என்று சொல்லும் தமிழர்கள் எத்தனை? மகிழ்வதற்கு மாறாக enjoy பண்ணுகிறவர்கள் எத்தனை? நன்றி சொல்லத் தயங்கி thanks பண்ணும் தமிழர்கள் எத்தனை? இது சோம்பலா? அறியாமையா? அல்லது வரட்டுத் தனமா? இரண்டு தமிழர் ஒருவரை ஒருவர் காணும் போது செய்யும் உரையாடலில் இன்று 40% தமிழ் இருக்குமானால், இன்னும் ஒருவாரத்தில் 45% தமிழ் இருக்க வேண்டாமா?

தனித்தமிழ் என்பது ஓர் அடையாளம், குறியீடு; அதை நோக்கி நாம் போகிறோம். போகும் வழியில் நல்ல தமிழ் வந்தால் இப்பொழுது போதும். சில பேரால் 95% விழுக்காடு தனித்தமிழ் பேச முடியும்; இன்னொருவரால் 50% விழுக்காடு தான் செய்ய முடியும். இதில் ஒருவர் குறைந்தவர், மற்றவர் தாழ்ந்தவர் என்று எண்ணுவது தவறு. சரியாகப் பார்த்தால், இருவரும் தாங்கள் பேசும் தனித்தமிழ் அளவை இடைவிடாது கூட்ட முயல வேண்டும். அந்த வளர்ச்சி எண்ணம் தான் முகமையானது; எத்தனை விழுக்காடு என்பது ஒரு பொருட்டல்ல. இப்படி வளர்ப்பு முயற்சியே செய்யாமால் வெறுமே வேதம் பேசிக் கொண்டு வெந்நீர் ஊற்றிக் கொண்டு "அது முடியாது, இது முடியாது, தமிழர்க்கு வெறி" என்று மந்திரம் ஓதிக் கொண்டு இருப்பதில் பொருள் என்ன?

மொழியை அம்மன் ஆக்குவது, கூத்தாடுவது என்பதெல்லாம் வெறும் உணர்வு வெளிப்பாடுகள்; அவற்றால் எந்தப் பயனும் கிடையாது தான்; அதே பொழுது பாரத மாதா என்பதும் ஒரு படிமம் தானே? தாய் நாடு, தந்தை நாடு என்பவையும் படிமங்கள் தானே? இந்தப் படிமங்கள் நம் முன்னே வைக்கப் படுகின்றனவே? இப்படி ஒரு வகைப் படிமம் ஏற்றுக் கொள்ளக் கூடியது, இன்னொன்று ஏற்றுக் கொள்ளக் கூடாதது என்பது ஓரப் பார்வை அல்லவா? தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர் என்ற உணர்வை உறுதிப் படுத்துவதற்காகக் கொண்டு வரப் பட்டது. தமிழருள்ளும் மற்ற பிரிவினைகள், குறிப்பாக சாதி, மதம் போன்றவை மேலோங்காது தமிழர் ஓரினம் என்ற படிமத்தை அழுத்துவதற்காக இந்த வாழ்த்துக்கள் எழுந்தன. இந்தியா என்பது பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு நாடு என்பதை மறுப்போர் மட்டுமே, இந்தத் தமிழ்த்தாய் என்ற படிமத்தை மறுக்கிறார்கள். இந்தக் கேள்வியை இங்கு அலசினால் சொல்ல வந்த பொருள் விலகிவிடும் என்பதால் நான் முற்படவில்லை. இப்பொழுது தமிழ் நடை பற்றி மட்டுமே பேச விழைகிறேன்.

முதலில் கலப்பு நடைக்குச் சிலர் அளிக்கும் சப்பைக் கட்டு.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே!"

என்ற தொல்காப்பிய நூற்பாவையே வைத்துக் கலப்பு நடைக்குப் பரிந்து வருபவர் பலரும் உண்டு. இத்தகைய கூற்றும் பொருந்தாக் கூற்றே. இந்த நூற்பா, தமிழில் ஏற்படும் பலுக்கல், சொல், சொற்றொடர், இலக்கணம் போன்ற மாற்றங்களைப் பற்றியதே ஒழிய வரைமுறை இன்றிக் கடன் வாங்குவது பற்றியல்ல.

இந்தக் கலப்பு நடைக்குப் பரிந்து வருபவர் தங்களுடைய ஆங்கில நடையில் இப்படிக் கலந்து எழுதுகிறார்களா? அதை அலுவற் புலனங்களிற் புழங்க முடியுமா? வெறுமே ஆங்கிலம் கடன் வாங்குகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிற இவர்கள் I pannified a visit என்று எங்கேணும் எழுதட்டுமே? மற்றவர்கள் நகை தவிர்த்த முறையில் ஏற்கிறார்களா என்று பார்ப்போம்? பிறகு ஏன் ”visit பண்ணினேன்” என்று எழுதுகிறார்கள். இதைத் தமிழில் ஏற்க வேண்டுமோ? ”வந்திருந்தேன்” என்று சொல்லுவது இளக்காரமா? இந்த visit என்ற சொல்லைத் தவிர்த்துத் தமிழில் பேசினால் விளங்காதா? அந்த ஆங்கிலச் சொல்லைத் தமிழர்களுக்குள் பேசும் போது தவிர்த்தால் என்ன? அதை முடிந்த மட்டும் தவிர்த்துப் பாருங்களேன்; அதற்காக முயலுங்களேன்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது நல்லதற்கும் உண்டும்; பொல்லாததற்கும் உண்டு. ஆங்கிலச் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்கலாம்; அதே போலக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டியும் வரலாம். ஒன்றில் நம்மொழி நிற்கும்; இன்னொன்றில் நம்மொழி சிறிது சிறிதாக மறையும். உகப்பு நம்மிடம் தான்.

அடுத்தது வேற்று மொழி ஒலிகளைப் பற்றியது. "இந்த ஒலிகள் எல்லாம் தமிழில் இல்லை; இவையெல்லாம் வேண்டாமா?" என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகிறார்கள். நாம் தமிங்கிலம் பழகப் போகிறோம் என்றால் இந்த ஒலிகள் எல்லாம் தேவையே? தமிழ் ஆளப் போகிறோம் என்றால் இந்த ஒலிகளை பிறைக்குறிக்குள் ஏதோ ஒரு வகையில் குறிப்பது தவறில்லை. ஆனால் அதற்காகத் தமிழில் புதுக் குறியீடுகள் தேவையில்லை. வெறும் 31 எழுத்துக்களையும் ஒருசில குறியீடுகளையும் வைத்து 95 ஒலிகளை நாம் எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறோம். இந்தக் குறியீடுகளைக் கூட்டிக் கொண்டு போவதில் பொருள் இருக்கும் என்று இதுகாறும் எனக்குத் தோன்றவில்லை. அதே பொழுது இதை முடிந்த முடிவாகவும் நான் சொல்லவில்லை. இந்தக் கேள்வி அவ்வளவு முகன்மையில்லாத ஒன்று என்றே நான் எண்ணுகிறேன். இதைப் பின்னொரு நாளில் பார்ப்போம்.

அடுத்து, நடை பற்றிய உரையாடலில், பேச்சுத்தமிழ் எழுத்துத்தமிழ் என்ற இரண்டு நடை இருப்பதைக் கூறி "பேசுவதுபோல் எழுதினால் என்ன? என்ற கேள்வி நெடுநாளாக இருந்துவருகிறது. பேச்சுத் தமிழ் என்பது இன்றைக்கு எழுத்தில் இருந்து வெகுதொலைவு விலகித்தான் போயிற்று. இப்படிப் பேச்சுத்தமிழுக்கும் எழுத்துத்தமிழுக்கும் இடைவெளி ஏற்பட்டுப் பின் புதிய நடை ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய இலக்கணம் படைப்பதும் வழி வழி வந்ததுதான். அதனால் தான் வள்ளுவனும், இளங்கோவும், கம்பனும், பாரதியும் அவர்கள் காலத்தை ஒட்டி, ஒரு குறியீடு ஆனார்கள். அவர்கள் காலத்தில் மொழி நடையை எளிமைப் படுத்தினார்கள். இப்படி எளிமைப் படுத்திய படிதான் நன்னூல் இலக்கணம் இடைக்காலத்தில் எழுந்தது. இதே போல, மு.வ.வின் இலக்கணப் பொத்தகம் 1960 களில் பெரிதும் பரவியது.

படைப்பாக்கங்களில் முற்றிலும் பேச்சுத் தமிழாகவே எழுதினால் முந்தையத் தமிழோடு அவை தொடர்பற்றுப் போகும். அதே பொழுது முற்றிலும் முந்தையத் தமிழாகவே எழுதினால் படிப்போரோடு நெகிழ்வு விட்டுப் போகும். இதில் சரியான அளவை என்பது நாம் எடுக்கும் வடிவத்தைப் பொறுத்தது. கதை மாந்தர் பேசுவது பேச்சுத் தமிழாகவும், கதையாசிரியன் பேசுவது எழுத்துத் தமிழாகவும் இருப்பது ஓரளவு சரியாக இருக்கலாம். இதுதான் சரி என்று அடையாளம் காட்ட முடிவதில்லை. கூடிய மட்டும் கொச்சைப் பேச்சைத் தவிர்த்து, அதே பொழுது வட்டார வழக்குகளைத் தவிர்க்காமல் எழுத முடியும்; இதற்குப் பயிற்சி வேண்டும்.

அடுத்த கருத்து துல்லியம் பற்றியது. தமிழில் பலரும் நம் நடையில் பூசி மெழுகினாற் போல பொதுச் சொற்களை வைத்து துல்லியம் இல்லாமல் சொல்லி வருகிறோம். சொற்களின் ஆழம், துல்லியம், விதப்பு (specificity) தெரிந்து பயன்படுத்துவது நல்லது. ask, enquire என்ற இரண்டு சொற்களுக்கும் கேட்டல் என்றே இந்தக் காலத்திற் பயன்படுத்துகிறோம். இரண்டும் ஒன்றா? இல்லையே? ஒன்றைக் கேட்டல் என்றும், இன்னொன்றை வினவுதல் என்றும் குறிப்பிட்டுச் சொல்லுவது நம்மில் மிகவும் குறைந்திருக்கிறது. நாம் துல்லியம் பார்க்காவிட்டால், மொழியின் புழக்கம் குறையும்; முடிவில் பண்ணித் தமிழுக்குத் தாவி விடுவோம்.

இன்னொன்று வாயால் ஒலித்துப் பலுக்குவது. ஒரு சொல்லைச் சொல்லுகிறோம். அதன் எழுத்துக்களை பிரித்து ஒலிக்க வைத்துக் காட்டுவதைப் பலுக்குவது என்று சொல்லுகிறோம். ஆங்கிலத்தில் spelling என்கிறார்கள். ஒரு சொல்லை உயிர்த்துக் காட்டுவது உயிர்தருவித்தல் >உயிர்தரித்தல் >உயிர்ச்சரித்தல் >உய்ச்சரித்தல்> உச்சரித்தல் என்று ஆகும்; இதைத்தான் ஆங்கிலத்தில் vocalization என்கிறார்கள். இங்கே மாத்திரைகளின் நீளம் கூடக் குறைந்து காட்டப் படுகிறது. இந்த இரண்டுமே இன்றையத் தமிழர்களிடம் மிகக் குறைந்து இருக்கிறது. அதனால் தான் ரகர, றகரத் தகறாறும், லகர, ளகர, ழகரக் குழப்பமும் இருக்கிறது. இகர, எகரக் குழப்பம், உகர, ஒகர மாற்றம் எல்லாமே உயிர்தருவித்தலின் கோளாறு. நூற்றுக்கு 70 பேருக்கு மேல் நம்மிற் தவறாகப் பலுக்குகிறோம். 20% பேராவது உயிர் தருவித்தலிற் குறைப்படுகிறோம். மொழிநடை பண்பட வேண்டுமானால், இதுவும் மாற வேண்டும்.

அடுத்தது உள்ளடக்கம் பற்றியது. தமிழ் என்றாலே பழமை பேசுவதற்கும், இலக்கியம் உரைப்பதற்கும், கவிதை, கதை படைப்பதற்கும் என்று எண்ணிக் கொள்ளுகிறோம். இந்தக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, நகை எல்லாம் வெறும் வடிவங்கள். இவற்றிற்குள் சொல்ல வரும் செய்திகள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ் சவலைப் பட்டுக் கிடக்கிறது என்கிறோம்; ஆனால் அதைக் கவனிக்க முன் வர மாட்டேன் என்கிறோமே? பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் தமிழில் அவை பற்றிய ஆக்கங்களை படைக்க முன் வரவேண்டும். புதிய உள்ளடக்கங்கள் தமிழுக்குள் வரவேண்டும்; நேற்று எழுந்த செய்தி இன்றைக்குத் தமிழில் வரவேண்டும்; வெறுமே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்ததை மட்டுமே தமிழில் எழுதி என்ன பயன்? இன்றைய உயிரியலில் ஓர் ஆக்கம்? இன்றையப் பொருளியலில் ஓர் ஆக்கம்? இன்றையப் பூதவியலில் ஓர் ஆக்கம்? இன்றைய ஓவியம் பற்றி ஓர் ஆக்கம்? இன்றைய மாந்தவியல் பற்றி ஓர் ஆக்கம்? இன்றையச் சட்டத்துறை பற்றி ஓர் ஆக்கம்? இன்றைய மின்னியல் பற்றி ஓர் ஆக்கம்? உடற்கூறு பற்றி இன்று வந்த ஓர் ஆக்கம்? இவை எல்லாம் மேலே சொன்ன வடிவங்களில் வரட்டுமே? இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நாம் ஆக வேண்டாமா? வெறுமே ஒரு சிலர் மட்டும் தனிச் சால் போட்டுக் கொண்டு கருமமே கண்ணாயினராய் இருப்பது எந்த வகையிற் சாலும்? அவர்களோடு சேர்ந்து என்ன செய்தோம் என்று நாம் எல்லோரும் எண்ண வேண்டாமா? இதைச் செய்தால் தானே நம் நடையும், மற்றவர் நடையும் வளப்படும். தமிழின் மொழிநடையும் இந்தக் காலப் புலனங்களுக்கு நெகிழ்ந்து கொடுக்கும்.

மொழி நடை என்பது நம் கையில். அதை ஆற்றுப் படுத்த வேண்டியது நம் பொறுப்பு.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

அபுல் கலாம் ஆசாத் said...

முதன்முறை மடலாற் குழுமங்களில் படித்தபோது உண்டான தாக்கம் இப்போதும் உண்டாகிறது. நன்றி அய்யா.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

எவ்வளவு ஆழமான, விரிவான ஆராய்ச்சி!!! ஆனால் ஐயா, தாளிகை, மடிக்குழைப் பள்ளி ஆகியவற்றுக்குப் பொருள் என்ன? அன்பு கூர்ந்து விளக்குங்களேன்!

அடுத்து இன்றைய மொழிநடை பற்றி என்னுடைய ஓரிரு கருத்துகளையும் இங்கே தங்களிடம் கூற விழைகிறேன். தாங்கள் இசைவளிப்பீர்கள் என்னும் நம்பிக்கையுடன். இப்பொழுது பண்ணித் தமிழ் நடை கூட இல்லை. நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. இன்றைய நாகரிக இளைஞர்களும் நங்கைகளும் பேசும்பொழுது ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கும் முன்னும் பின்னும் ஓர் ஆங்கிலச் சொல்லை வைத்துப் பேசுகிறார்கள். ஒருவேளை இதைத்தான் தமிழ்ப் பாதுகாப்பு என நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ! அது மட்டுமில்லை ஐயா, இன்றைய சிறுவர் சிறுமியரைப் பார்த்தீர்களா! அவர்களுக்குக் கிழமைகள், தாம் சாப்பிடும் காய்கறிகள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றுக்குக் கூடத் தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை. ஆம்! நாகரிகத்துக்காக ஆங்கிலம் கலந்து பேசத் தொடங்கியது போய் இப்பொழுது அடுத்த தலைமுறை தமிழே தெரியாத தலைமுறையாக வளரத் தொடங்கி விட்டது. இவை எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால் ஐயா, இன்றைய நாகரிகமான இளைஞர்கள் தலையாட்டும்பொழுது கூட, 'ஆம்''சரி' ஆகிய இரண்டுக்குமே ஒரே மாதிரியாக, மேலிருந்து கீழாகத்தான் ஆட்டுகிறார்கள்! ஆங்கிலேயர்கள்தான் 'Yes' 'Ok' ஆகிய இரண்டுக்கும் ஒரே மாதிரியாகத் தலையாட்டுவார்கள். அதே பழக்கத்தைத் தாமும் கடைப்பிடிக்கிறார்கள் இன்றைய தமிழ் இளைஞர்களும் நங்கைகளும். ஆங்கில மோகம் தமிழர்களின் மொழிநடை வரை மட்டுமில்லை, உடல்மொழி வரை, அதாவது நாடி நரம்பு வரம்பு ஊறி விட்டது என்பதன் அடையாளம் இது! என்ன ஐயா நான் சொல்வது? சரிதானே?

Indian said...

அய்யா,

இத்தளத்தில் தாங்கள் பரிந்துரைக்கும் சொற்களை தமிழ்ச் சொல்லாக்கம் என்ற பதிவில் தொகுத்து வருகிறேன். இது வரைக்கும் ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களைத் (2006-ஆம் ஆண்டு வரையிலான பதிவுகள் வாயிலாக) தொகுத்துள்ளேன்.

அன்புடன்,

Indian

இராம.கி said...

அன்பிற்குரிய இந்தியன்,

உங்கள் பணி போற்றத்தக்கது. தொடர்ந்து செய்வதற்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

தமிழநம்பி said...

உண்மையைச் சொல்லத் தயங்கும் கோழைகளுக்கு நடுவில் துணிந்து சரியான உண்மைகளைக் கூறியிருக்கிறீர்கள். //மொழியை அம்மன் ஆக்குவது, கூத்தாடுவது என்பதெல்லாம் வெறும் உணர்வு வெளிப்பாடுகள்; அவற்றால் எந்தப் பயனும் கிடையாது தான்; அதே பொழுது பாரத மாதா என்பதும் ஒரு படிமம் தானே? தாய் நாடு, தந்தை நாடு என்பவையும் படிமங்கள் தானே? இந்தப் படிமங்கள் நம் முன்னே வைக்கப் படுகின்றனவே? இப்படி ஒரு வகைப் படிமம் ஏற்றுக் கொள்ளக் கூடியது, இன்னொன்று ஏற்றுக் கொள்ளக் கூடாதது என்பது ஓரப் பார்வை அல்லவா?// ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'தமிழ்த்தாயா, எங்கிருக்கிறாள்?' என்று கேட்டவரிடம், பாரதத்தாயின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருக்கிறாள் என்று விடையிறுத்ததாகப் படித்தது நினைவுக்கு வருகிறது.