Wednesday, April 18, 2007

தமிழ்ப்படுத்தலும் பேரா. ரூமியும்

இது 2004 சனவரியில் Raayar Kaapi Klub - இல் எழுதியது. அப்பொழுது "தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும்" என்ற கட்டுரையை திரு நாகூர் ரூமி எழுதியிருந்தார். திண்ணையில் அது வெளிவந்தது என்று நினைக்கிறேன். (இப்பொழுது மீண்டும் சில பளிச்சு - polish - வேலைகள் செய்து சேமிப்பிற்காக இங்கு பதிப்பிக்கிறேன். ரூமியின் கட்டுரையை இந்தப் பதிவிலேயே கீழே கொடுத்திருக்கிறேன்.)

இந்தக் கட்டுரை அந்த மடற் குழுவில் கருத்தாடல் செய்யப் பட்டது. இந்தக் கட்டுரைக்கான எதிர்வினையை, திரு.வெங்கட்ரமணன் அவருடைய வலைப் பதிவில் தெரிவித்திருந்தார். (மாலனோடு நடந்த உரையாடலைத் தெரிவித்த என் முந்தையப் பதிவிற்கு அளித்த பின்னூட்டில், தன்னுடைய பதிவின் சுட்டியை திரு.வெங்கட்ரமணன் தெரிவித்திருக்கிறார்.) இந்தக் கருத்தாடல் நடந்த பொழுதே உடன் எழுத முடியாது வேறு பணிகளில் ஆட்பட்டிருந்ததால், என்னுடைய பின்னூட்டை அப்பொழுதே அளிக்க முடியாது, பின்னால் சுணங்கி அளித்திருந்தேன். மேலோட்டமான முறையில் சரியாக ஆராயாமல் ஒரு கல்லூரிப் பேராசிரியர் இது போன்ற ஒரு கட்டுரையை எழுதியது எனக்கு வருத்தத்தை(யும் சற்றே கோபத்தையும்) வரவழைத்தது. "என் எதிர்வினையில் இருக்கும் சூடான தொனியைப் பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று திரு. ரூமி அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
-----------------------------

"பெற்றோர் யாரென்ற சிக்கல் மொழிக்கு உண்டு" என்று சொல்லி, "இந்த உலகில் இதுவரை பேசப்படுகின்ற எழுதப்படுகின்ற எல்லா மொழிகளுக்கும் பெற்றோர் ஒருவரே என்று மொழி வரலாற்று நூல்கள் கூறுகின்றன. அதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழி என்றும் சொல்லுகிறது. இந்த விஷயத்தை கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்வது மேற்கொண்டு இந்த கட்டுரையில் சொல்ல வருகின்ற விஷயத்தில் தெளிவுபெற உதவும்" என்ற ஒரு மாபெரும் "உண்மையை" பேராசிரியர் ரூமி சொல்லுகிறார்.
-----------------------------
இராம.கி:

இந்த "உண்மையை எங்கே படித்தார், யார் சொன்னார்கள், ஆதாரம் என்ன?" என்பது தான் தெரியவில்லை. "உலக மொழிகள் ஒரே மொழியில் இருந்து கிளைத்திருக்கலாம்" என்பது, 'உண்மையாய் இருக்கலாம்' என்று சொல்லக் கூடிய ஒருவிதமான கருதுகோள் தான். ஆனால் "அது இந்தையிரோப்பிய மொழி" என்று முற்று முழுதாகச் சொல்லுவது, முழுப் பூசணியைச் சோற்றில் மறைப்பது ஆகும். நம்முடைய பேராசிரியர் ரூமி ஆர்வக் கோளாறின் காரணமாய் விவரம் தெரியாமல் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று நம்புவோமாக!

"இந்தையிரோப்பிய முதன்மொழி என்பது கிட்டத்தட்ட 5000-6000 ஆண்டுகளுக்கு முன்னால் கருங்கடலின் பக்கம் எழுந்திருக்கக் கூடும்" என்று பல மொழியியலார்கள் ஆணித்தரமாக இப்பொழுது முன் மொழிகிறார்கள். மாந்த வரலாற்றுக் கணிப்பில் இது மிக மிகக் குறைந்த காலம். அத்தனை காலம் மொழியே இல்லாமல் மாந்தன் இந்த உலகில் இருந்தான் என்பது நம்ப முடியாத செய்தி. (அப்படித்தான் மேலே உள்ள ரூமியின் கூற்றில் பொருள் இருக்கிறது.) "ஓமோ சாப்பியன் சாப்பியன்" என்ற அண்மைக் கால மாந்தன் கிளர்ந்தது 50000-60000 ஆண்டுகள் என்றும், அவன் இந்தியத் துணைக் கண்டத்தில் நுழைந்தது கிட்டத் தட்ட 35000-40000 ஆண்டுகள் என்றும், மாந்தவியலும் (anthropology), அகழாய்வியலும் (archeology), ஈனியலும் (genetics) அடுத்தடுத்து ஒரே முடிவில் ஒப்ப முயன்று கொண்டிருக்கின்றன.

முதல் மொழி என்பது ஆப்பிரிக்கப் புதர்மாந்தர்களின் (bushmen) சொடுக்கு மொழிகளில் (click languages) தோன்றியிருக்கலாம் என்று பல அறிவியலார்கள் இன்று ஊகிக்கிறார்கள். புதர்மாந்தர்களுடைய சொடுக்கு மொழிக் காலம், கிட்டத்தட்ட 50000 ஆண்டுகளுக்கு முன் என்றும் உன்னிப் பார்க்கிறார்கள். "சொடுக்கு மொழிகள் எப்படித் தங்கள் வளர்ச்சியில் இப்படிப் பல்வேறு மொழிக் குடும்பங்கள் ஆகின? எப்படிப் பிரிந்தன? இந்தையிரோப்பிய மொழிக் குடும்பம் இல்லாமல், இன்னும் வேறு எத்தனை மொழிக் குடும்பங்கள் உள்ளன? அவை எங்கு எத்தனை பேர்களால் பேசப் படுகின்றன? எந்தக் காலத்தில் அவை தோன்றின?" என்பதைப் பேராசிரியர் ரூமி வரலாற்று மொழியியல் (historical linguistics) பற்றிய பொத்தகங்களில் படித்துத் தெரிந்து கொள்ளட்டும். இருக்கவே இருக்கிறது, கூகுள் என்னும் தேடுபொறி. "இப்படி விவரம் என்ன?" என்று தெரியாமலேயே, இந்தையிரோப்பியன் மொழியில் மேல் உள்ள கரிசனையில், முழுப் பூசனியை சோற்றில் மறைப்பது பேராசிரியர் ரூமிக்கு அழகல்ல.
--------------------------

அடுத்து, "தமிழ்ப் படுத்துதல் என்பது வேறு, தமிழைப் படுத்துதல் என்பது வேறு. ஆனால் இந்த இரண்டாவதைத் தான் முன்னது என்று பல பிரகஸ்பதிகள் நினைத்துக்கொண்டு காரியத்திலும் கருமமே கண்ணாக இறங்கிவிடுவதால் தான் இவ்வளவும் சொல்லவேண்டியுள்ளது" என்று சொல்லுகிறார்.
--------------------------
இராம.கி:

இந்தக் கருத்தில் நமக்கு எந்தக் குறையும் இருக்க முடியாது. நல்ல மொழிபெயர்ப்பு என்பது யாருமே விரும்பும் ஒன்றுதான். அதற்கு நல்ல தமிழ்ப் பயிற்சியும், மொழிபெயர்க்கப் படும் மொழியில் அறிவும், தமிழ்ப் பண்பாடு, பழக்க வழக்கம் பற்றிய புரிதலும் தேவை.
---------------------------

அடுத்து, "சில ஆண்டுகளுக்கு முன் "The govt. has a big role to play" என்பதை தமிழக அரசின் பொருளாதார பாடப்புத்தகத்தில், "அரசு விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை வைத்துக்கொண்டிருக்கிறது" என்று 'தமிழாக்கி' இருந்ததாக துக்ளக் இதழில் ஒரு செய்தி வந்தது! பண்டித மொழிபெயர்ப்புக்கு ஒரு உதாரணம் தான் இது" என்று சொல்லியிருக்கிறார்.
--------------------------
இராம.கி:

இங்கும் நமக்கு அடிப்படையில், வேறுபாடு இருக்க முடியாது. கொடுத்திருக்கும் மொழிபெயர்ப்பு, ஒரு முட்டாள் தனமான மொழிபெயர்ப்புத் தான். இருந்தாலும் "role என்ற சொல்லை எப்படிச் சொல்வது?" என்று நமக்கு விளங்கவில்லை. "வெறுமே பங்கு என்று சொல்லி, part ஆக்குவது" ஒருவகையான ஒப்பேற்றும் வேலை. இப்படி ஒப்பேற்றிய மொழிபெயர்ப்புக்கள் தமிழில் ஏராளம். நம்மில் பலருக்கு குறை காணத் தெரிகிறது, ஆனால் மாற்றுச் சொல்லத் தெரிவதில்லை. பேராசிரியர் ரூமியாவது சொல்லியிருக்கலாம்.
-------------------------

"தமிழாக்கங்களில் ஏற்படுகின்ற எல்லாக் குழப்பங்களுக்கும் அபத்தங்களுக்கும் இந்த கருத்தாக்கம்தான் அடிப்படைக் காரணமாக உள்ளது" என்று தூய தமிழை இனங் காட்ட முற்படும் திரு.ரூமி "ஒரு மொழியின் தூய்மை என்பது குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் அதன் சொற்களை அடைக்க முயற்சிப்பதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு மலையாளி ஆங்கிலம் பேசும்போது அதில் மலையாள வாசம் கலந்துவிடுவதுபோல, ஒரு தமிழன் ஹிந்தி பேசினால்கூட அதில் தமிழின் மணமிருக்கும். அந்த வாசம்தான் தமிழின் தூய்மை. அதுதான் அதன் தமிழ்மை" என்று அதிரடியாக அடுத்து ஒரு கருத்தை வைக்கிறார்.
--------------------------
இராம.கி:

உலகத்தில் இல்லாத ஒரு விளக்கம் இது. "பாலில் இவ்வளவு பங்கு தண்ணீர், இவ்வளவு பங்கு மாவுப் பொருள், இவ்வளவு பங்கு சருக்கரை... இன்ன பிற இவ்வளவு இருக்க வேண்டும்" என்று அதன் கூட்டுப் பொதிவை, செறிவை (composition, concentration) வரையறுத்து, பால் என்றால் இது என்று சொல்லித் தான் உலகெங்கும் பழக்கம்.

"இந்தச் செறிவுக்கு மேல் தண்ணீர் கூடி விட்டால் அது தண்ணீர்ப் பால் - அல்லது தண்ணீரே கூட" என்று சொல்லுவது திரு. ரூமியின் வரையறைப்படி பால்மை அல்ல போலும். அவருடைய விளக்கப் படி எலுமிச்சைத் தேநீரில் நாலு சொட்டுப் பால் விட்டுக் குடித்தால் அது பால்மையாகி விடும். அந்த மனத்தை அவர் முகர்ந்து கொள்ளுவார். "தமிழன் ஹிந்தி பேசினால்கூட அதில் தமிழின் மணமிருக்கும். அந்த வாசம்தான் தமிழின் தூய்மை" என்பது போன்ற வெற்றான (கவித்துமான என்று சொல்லலாமா?:-)) விளக்கங்களை வைத்துக் கொண்டு ரூமி தமிழைப் படுத்த வருவது நமக்கு வேடிக்கையாக இருக்கிறது. இது போன்ற அலங்காரச் சோடனைச் சொல்லாடலில் பேராசிரியர் ரூமி என்ன சொல்ல வருகிறார்?
----------------------------

அடுத்து இன்னொரு பொன் மொழியை உதிர்க்கிறார் பேராசிரியர் ரூமி. "ஒரு குறிப்பிட்ட மொழி எத்தனை மொழிகளில் இருந்து சொற்களை எடுத்து தன்வயப்படுத்திக் கொள்கிறது -- கடன் வாங்கிக்கொள்கிறது என்று நான் சொல்லவில்லை, கவனிக்கவும் -- என்பதை வைத்து அதன் வளர்ச்சியின் நிலையையும் பக்குவத்தையும் புரிந்துகொள்ளலாம்."
----------------------------
இராம.கி:

தகலாக் என்ற பிலிப்பைனின் தேசிய மொழி (சீனம், மலாய், போர்ச்சுகீசு, ஆங்கிலம், டச்சு, பிரஞ்சு, இன்னும் பல் வேறு தென்கிழக்கு ஆசியமொழிகள் என), ஒரு 20 வெளி மொழிகளின் சொற்களையாவது தன்வயப் படுத்திக் கொண்டிருக்கிறது - கடன் வாங்கிக்கொள்கிறது என்று நான் இங்கு சொல்லவில்லை, கவனிக்கவும் -- இதை வைத்து "தகலாக் மொழி மிக வளர்ச்சி அடைந்து பக்குவப் பட்டிருக்கிறது" என்று கொள்ளலாமா? நமக்குப் புரியவில்லை.

இது என்ன கோணல் தனமான சிந்தனை அல்லது தருக்கம், ஆசிரியருக்கு வருகிறது? 40 மொழிகளில் உள்ள சொற்களைத் தன்வயப் படுத்திக் கொண்ட மொழி, 20 மொழிச் சொற்களைத் தன்வயப் படுத்திக்கொண்ட மொழியை விடப் பக்குவப் பட்டதா, வளர்ச்சி அடைந்ததா, என்ன? திரு.ரூமி தான் எழுதிய கருத்தைத் திருப்பிப் படித்தாரா? மேலாளுமை (overlordship), குடியேற்றம் (colonization), பேரரசு வல்லாண்மை (imperial dictatorship) ஆகியவை பற்றிப் பேராசிரியர் படித்திருப்பாரா?
---------------------------

ரூமி தரும் அடுத்த அதிரடி: "மாறிக்கொண்டே இருக்கும் சமுதாய வாழ்வில் மொழியை மட்டும் தூய்மை என்ற பெயரில் செக்குமாடாக்குவது எந்த வகையில் நியாயம்?"
-------------------------
இராம.கி:

என்னங்க பேச்சு இது? தற்கால வாழ்க்கைக்குக் கற்கால மொழியைப் பயன்படுத்த யாரும் சொல்லலைங்களே? மாறிக் கொண்டே இருக்கும் குமுகாய வாழ்விற்கு ஏற்ப, மொழியின் சொல்வளத்தைக் கூட்டுங்கள், புதிது படையுங்கள், புதுப்பொருள் உருவாக்குங்கள். யார் வேண்டாம் என்றார்கள்? இதில் என்ன செக்கு மாட்டுத் தனம்? மறுபடியும் ஒரு வார்த்தை விளையாட்டா? வெறும் கதை, கவிதை என்று அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருப்பது செக்குமாட்டுத் தனமா, புதிய செய்திகளைத் தமிழில் சொல்ல வருவதும், அதற்கேற்ற சொல்வளத்தை உருவாக்குவதும், செக்கு மாட்டுத் தனமா? யார் செக்கு மாடாய் இங்கு இருக்கிறார்கள்?
-----------------------------

அடுத்தது இதையெல்லாம் என்றைக்கு நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு ஓர் அறுதப் பாடாவதியான, கடைந்தெடுத்த பிற்போக்கு வாதத்தை திரு. ரூமி முன்வைக்கிறார். இப்படி ஒரு வாதத்தைக் கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு பேராசிரியர் சொல்லுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

"நமது இன்றைய வாழ்வு ஒரு ஆரோக்கியமான கலவையாக உள்ளது. இன்றைக்கு 'பேன்ட்' போடாத அல்லது அணியத் தெரியாத தமிழனே இல்லையென்று கூறலாம். நாம் சார்ந்து வாழும் மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி, இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், விமானம், கம்ப்யூட்டர் போன்ற அனைத்தும் தமிழனின் படைப்பா என்ன?"

--------------------------
இராம.கி:

இங்கே திரு. ரூமி என்ன சொல்ல வருகிறார்? இது தமிழன் படைப்பு இல்லாத காரணத்தால், தமிழ்ச் சொல்லால் இவற்றை அழைக்கக் கூடாதா? இவற்றை விளங்க வைக்குமாறு, தமிழில் எழுதக் கூடாதா? மேலே கூறிய பட்டியலில், தன்னை மறந்து, மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி என்று தமிழாக்கச் சொற்களை எழுதியதை திரு. ரூமி கவனிக்கவில்லை போலிருக்கிறது. இவற்றை எல்லாம் தமிழில் சொல்ல முடியுமானால், கணி என்ற சொல்லைச் சொல்ல மட்டும் ஏன் ஒரு தடா அல்லது பொடா? (பாயும் காட்டு வரிவிலங்கைப் பற்றிய சொல்லைத் தமிழில் சொல்லத் தான், "தமிழ்நாட்டில் பொடா" என்று கேள்விப் பட்டிருக்கிறோம். :-)) ஆசிரியர் ரூமி, தான் வேலை பார்க்கும் கல்லூரியில் மாணவருக்குக் தருக்க நூல் (logic) கற்றுக் கொடுப்பதைக் கவனித்திருப்பார் என்று நினைக்கிறேன். "இதெல்லாம் ஆகலாம் என்றால், இதைப்போன்ற மற்றவையும் ஆகலாம்" என்பது தருக்க நூலின் முடிபு. ("ஆகும் என்ன, ஆக வைத்தே வேண்டும்" என்பது ஆர்வலர்களின் முடிபு :-))
------------------------

அடுத்தது ஆசிரியரிடம் இருந்து கொஞ்சம் பேடைப்பேச்சு வீராவேசத்தில், ஒரு கேள்வி எழும்புகிறது. "'பஸ்'ஸை பேருந்து என்றும் 'செக்'கை காசோலை என்றும் கம்ப்யூட்டரை கணிணி என்று கணிப்பொறி என்றும் குழப்பமாக தமிழ்ப்படுத்த வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? எந்த தமிழனாவது, "இன்று நான் பேருந்தில் வந்தேன்" என்று சொல்கிறானா?"
------------------------
இராம.கி:

இங்கே குழப்பம் செய்வது யார்? திரு. ரூமியா, அல்லது இதைத் தமிழ்ப்படுத்தியவர்களா? ஊரெங்கும் "பேருந்து நிலையம்" என்று எழுதியிருக்கிறது; யாராவது புரியவில்லை என்று சொல்கிறார்களா? "பேருந்து என்ற சொல்லை விரிவாகப் புழங்காமல், பஸ் என்று ஏன் சொல்லுகிறார்கள்?" என்ற கேள்விக்கு விடை இதுதான்:

விவரம் கெட்ட மிடையத்தாரும், இனம் புரியாத ஆசிரியர்களும் "ஏதொன்றையும் தமிழில் சொல்லுவது கேவலம், தமிழில் பாடுவது கேவலம், தமிழில் சிந்திப்பது கேவலம்", என்று 6 1/2 கோடி மக்களை கடந்த 25 ஆண்டுகளாய் உருவேற்றி வைத்திருக்கிறார்களே, அந்தத் தாழ்வு மனப்பான்மை தான் பேருந்து என்ற சொல்லைப் பேச்சில் புழங்காதற்கு காரணம்.

வேண்டுமானால், உங்கள் கதைகளில், கதைமாந்தர் கூற்றாக இல்லாமல், ஆசிரியர் கூற்றாய் வரும்பொழுது, பேருந்து என்ற சொல்லைப் பயின்று பாருங்களேன். அதன் பிறகாவது, "ரூமி சொன்னார்" என்று ஊரெல்லாம் இந்தச் சொல் பரவட்டும். இப்படிப் பத்து எழுத்தாளர் எழுதினால், அந்தச் சொல் பரவத் தானே செய்யும்? "பல்கலைக் கழகம், சொற்பொழிவு, துணை வேந்தர்" என்ற சொற்களெல்லாம் இப்படித் தானே பரவின? திரு. ரூமி, ஊரில் தேரிழுக்க நீங்கள் வடம் பிடியுங்களேன். அதை விடுத்து, வெறுமே வக்கணை பேசிக் கொண்டு, வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடந்தால் எப்படி?

செக் என்று சொல்வதைக் காட்டிலும் காசோலை என்னும் போது, "அது காசுக்கான ஓலை, காசு எடுக்கப் பயன்படும் ஓலை" என்று சட்டென்று மக்களுக்குக் காட்டிக் கொடுப்பதால் தான் அந்தச் சொல் பரவியது. "செக் போன்ற சொற்களையே மக்கள் புழங்குகிறார்கள்" என்று நொள்ளை வாதம் காட்டிக் கொண்டிருந்தால், யாருக்கு ஏதிலித்தனம் (in-security) இருக்கிறது? பேராசிரியருக்கா, மக்களுக்கா? இந்தப் போக்கில் பார்த்தால், பொதுவிடத்தில் யாரும் அம்மாவென்று சொல்லுவதைக் காட்டிலும் மேடம் என்று பலரும், விடுகளுக்குள் மம்மி என்று சிலரும் (இது பலரா என்பது தெரியவில்லை.) இப்பொழுது சொல்லுகிறார்களே, அதைக் கூடச் சரியென்று நீங்கள் சொல்லுவீர்கள் போலிருக்கிறது

"கம்ப்யூட்டர் என்று சொன்னால் கலங்காதேப்பா, அது கணி; அதாவது, கணிக்கின்ற, கணக்குப் போடுகின்ற கருவி" என்று சொல்லுவது உங்களுக்குச் சலிப்பைத் தருகிறது போலும்.

எது ஒன்றையும் படித்தவர்களிடம் கண்டு, அவர்கள் தஃசுப் பிஃசென்று தங்களுக்குள்ளே ஆங்கிலத்தில் பேசிக் கொண்டால், "அதைக் கண்டு மருளாதேப்பா, அது இதுதான்" என்று ஆங்கிலம் அறியாதவருக்கு, தமிழ் மட்டுமே அறிந்தவருக்குத் தமிழில் நாங்கள் சொல்லுகிறோம். இதற்கு நீங்கள் பிய்த்துக் கொண்டு வருகிறீர்கள்.

"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்று இந்த படித்தவர்களின் பம்மாத்து பலிக்காமல் செய்யும் படி, ஆர்வம் இருப்போருக்கும் புரிய வைக்கும் முயற்சியே அறிவியலைத் தமிழின் வாயிலாகவே சொல்லும் முயற்சி. இதையெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருந்தால் தயவு செய்து தமிழ் பேசுகிறவர்களிடம் தமிழை விட்டு விட்டு, நீங்கள் முற்றிலும் ஆங்கிலத்திற்குத் தாவி விடலாம். கூடவே தமிழை மூன்று சுற்றுச் சுற்றி, வங்கக் கடலில் நீங்கள் வீசி எறியலாம். அதை விடுத்து, இப்படி அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாத அமெரிக்கக் கறுப்பர் நிலைக்கு, மற்ற தமிழரைத் தள்ள வேண்டாம்.
-------------------------

இப்படி ஒரு அறைகுறை வாதத்தை ஒரு பேராசிரியர் வைப்பாரா என்று சொல்லவைக்கும் அளவுக்கு, திரு. ரூமியின் அடுத்த கூற்று இருக்கிறது. "ரோஜாப்பூ ரோசாப்பூவானதிலிருந்து ரோஜா அதன் அழகையும் நறுமணத்தையும் இழந்து தவிக்கிறது. மகாகவி பாரதிகூட -- இந்த 'மகாகவி'யில் உள்ள 'மகா'கூட தமிழில்லை சரிதானே? -- "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்றுதானே பாடினான்? "சகத்தினை" என்று பாடவில்லையே? ஏன்? 'ஜ'வின் கம்பீரம் 'ச'வில் இல்லை. அதனால்தான். கம்பீரக் கவிஞனான பாரதிக்கு அது புரியும்."
--------------------------
இராம.கி:

உங்களுக்குத் தெரியுமே, தொல்காப்பியன் என்பவன் வடமொழியில் அல்லது இந்தியில் தோல்காப்பியன் என்று ஆகிப் போகிறான். இப்படிச் சொல்வதால் வடமொழியில், தொல்காப்பியனின் வீறு சுருங்கிப் போனதா, என்ன? தூத்துக்குடி என்ற ஊரின் பெயர் ஆங்கிலத்தில் டூட்டுக்கோரின் ஆகிப் போனதால் நாற்றமெடுத்துப் போகிறதோ? அழகிய சிங்கர் என்பவர் அலகிய சிங்கராகவோ, அஸி(zi)கிய சிங்கராகவோ ஆகிப் போனால், அது ஒழுகி ஊற்றுகிறதோ? இதெல்லாம் என்ன வாதம்? அவனவன் மொழிக்குத் தக்க, அவனவன் பெயர் வைத்துக் கொள்ளுகிறான், அல்லது திரித்துக் கொள்ளுகிறான். இதில் என்ன தாழ்வு மனப்பான்மை வந்து நிற்கிறது? ரோஜாவை, ரோசா ஆக்கினால், அழகும், நறுமணமும் போய் விடுகிறதாம். எனக்குப் பெரியார் சொல்லும் காய்கறிப் பெயரைத் தான் இங்கு கூறத் தோன்றுகிறது.

ஆங்கிலேயனும் இன்னும் பல மேலை மொழிக்காரரும் கூட rose என்றுதானே சொல்லுகிறார்கள்? "அழகும் நறுமணமும் வேண்டும், எம் மொழியை அலங்கரிக்க வேண்டும்" என்ற உந்தலில் தம் வழக்கத்தைப் போக்கி roja என்று அவர்கள் சொல்லுவதில்லையே?

சீனக்காரனிடமும், கொரியக்காரனிடமும் போய் க்றிஸ்த் என்று சொல்லச் சொல்லுங்களேன். கிலிஸேது என்பார்கள். அப்படிச் சொல்லுவதற்கு அவர்கள் உள்ளூற வெட்கமே படவில்லை (நம் முகத்திற்காக, வெளியே காட்டும் நாணம் வேறு). அது அவர்களுக்குத் தவறென்றும் படவில்லை. ஏன் ஆங்கிலேயனே கூட, அரமெய்க் மொழியில் இருந்த பெயரை வைத்தா christ என்று சொல்லுகிறான்? அரமெய்க் மொழியில் கிறித்துவின் பேர் எப்படிப் பலுக்கப் பட்டதென்று யாருக்குத் தெரியும்? நான் கிறித்து என்று தமிழில் சொல்வதால், எனக்கு கிறித்துவின் அருளுரை பொருளற்றுப் போகிவிடுமா, என்ன? யேசு என்ற அரமெய்க் பெயரை Jesus என்று மாற்றி ஒலிக்கிறானே, ஆங்கிலத்தான்? அவனுக்கு மாறிப் போகிறாரா, என்ன? ஒரு கவிஞர், எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர், இப்படிப் பொருளற்ற வாதங்களை வைப்பதும், அதற்குப் பாரதியைத் துணைக்கு அழைப்பதும், எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

மொழியியல் படித்துப் பாருங்கள், ரூமி. "மா" என்ற தமிழியற் சொல் "மகா" என்ற வடமொழிச் சொல்லாயிற்று. இந்தச் சொற் பிறப்பை நான் இங்கு விவரித்தால், சொல்லவந்த கருத்தின் திசை மாறிப் போகும். எனவே தவிர்க்கிறேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று உங்களைப் போன்ற பேராசிரியர்கள் இருக்கக் கூடாது. "எதையும் ஏன், எதற்கு?" என்று குடைந்து கொண்டிருந்தால் தான், மாணவர்களுக்கு நீங்கள் அறிவியற் பார்வையைச் சொல்லிக் கொடுக்க முடியும்.

பாரதி "ஜ" பயன்படுத்தி "ச" பயன்படுத்தாதில் பெரிதாய் ஒன்றும் வியப்பு இல்லை. அது அந்தக் கால நடை. அவ்வளவு தான். மறைமலை அடிகளின் இயக்கத்திற்கு முந்திய காலத்தில் மணிப்பவள நடை தமிழில் அதிகமாகவே இருந்தது. பாரதியே தன் கவிதையைக் காட்டிலும், உரைநடையில் அதிக வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தும் மணிப் பவள நடையில் எழுதி இருக்கிறான். அது அவன் நடை; அவ்வளவுதான். இன்றைக்கு அதைக் கொள்வதும் தவிர்ப்பதும், ஓரளவு மாற்றிப் புழங்குவதும் நம் உகப்பு.
----------------------------

அடுத்து ஆங்கிலக் கற்பு பற்றியும், தமிழ் அம்மணம் பற்றியும் பேசுகிறார் ரூமி: "எல்லா மொழியிலிருந்தும் சொற்களை அணைத்துக் கொண்டதால் ஆங்கிலம் கற்பிழந்து விட்டதா என்ன? மாறாக அசுர வளர்ச்சி கண்டுவிட்டது. இனியும் அதன் விஸ்வரூபம் வளரும். ஆனால் நாம் மட்டும் தமிழின் தலையிலடித்து இன்னும் ஏன் வாமனமாகவே -- அம்மணமாகவே என்பதுபோல் இல்லை? -- அதை வைத்திருக்க வேண்டும்?"
---------------------------
இராம.கி:

கடைசியில் பொது வாழ்க்கையில் இருக்கும் பல தமிழர்களைப் போல, உடல், உள்ள உருவகங்களில் கட்டுண்டு, சிக்கிக் கொண்டு, உணர்வுமயப் பட்டு, கற்பு, அம்மணம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார் நம்முடைய ஆங்கிலப் பேராசிரியர் (அப்படித்தான் என்று நினைக்கிறேன். தவறாய் இருந்தால் மன்னியுங்கள்.).

ஆசிரியர் ரூமி 18, 19 ம் நூற்றாண்டு ஆங்கில நடையைப் பார்த்திருப்பார் என்று எண்ணுகிறேன். பிரஞ்சு ஊடுறுவிய நடை அப்பொழுது ஆங்கிலத்தில் பெரிதும் விரவிக் கிடக்கும். 20 நூற்றாண்டு தொடக்கத்தில் "இவ்வளவு பிரஞ்சு கூடாது" என்று அங்கேயும் ஒரு தனி ஆங்கிலப் போக்கு வரத்தான் செய்தது. இதே எழுச்சி, உருசிய மொழியிலும் இருந்தது. வேறு ஒன்றும் இல்லை. "உள்ளதும் போச்சுடா, தொல்லைக்காதா" என்று காப்பாற்றிக் கொள்ளுகிற சேமப் போக்குத்தான் இது போன்ற தனி மொழி இயக்கங்களுக்கு அடிப்படை. "சிறுதுளி பெருவெள்ளம்" என்று வந்து, காட்டாற்றில் அடித்துப் போகக் கூடாதே என்று அணை கட்ட முனைகிறோம். அவ்வளவுதான்.

ஒருமுறை சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் சந்திர போசு தமிழ் உலக மின்மடற் குழுவிற்கு ஒரு செய்தியைத் தெரிவித்திருந்தார். அதை அப்படியே வெட்டி இங்கு ஒட்டித் தருகிறேன்.
-------------------------

பொங்கலன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் எப்.எம். வானொலியிலிருந்து நேயர்களை தொலைபேசியில்
அழைத்து கடி சிரிப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவராஸ்யமான
உரையாடலைக் கேட்டேன்.

" நீங்க என்ன படிக்கிறீங்க விக்னேஷ்"
" நான் பிப்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்"
" என்ன கடி ஜோக் சொல்லப் போறீங்க"
" உயிரில்லாமல் ஆகாயத்தில் பறக்கும் பறவை எது?"
" ம் ம் ம் ஆகாய விமானம்"
" இல்லை. தப்பு "
" தெரியலையே. நீங்களே சொல்லுங்க"
" இது தெரியாதா? ஏரோப்ளேன் "
" அதான நானும் சொன்னேன் "
" பொய் சொல்லாதீங்க. ஆகாய ன்னு என்னமோ சொன்னீங்களே"
" அது தான் ஆகாய விமானம் "
" அது தப்புதான. ஏரோ ப்ளேன் தான் கரெக்ட் "

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்.????
-------------------------------------------------------------------------------
இராம.கி:

"தமிழ் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?" என்பதை இதைப் படித்த பிறகு பேராசிரியர் ரூமி புரிந்திருப்பார் என்று எண்ணுகிறேன். வீட்டின் சில பகுதிகளில் தீப் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது. பேராசிரியரோ, "நெருப்பை அணைக்காமல், நெருப்பு வீட்டிற்கு எவ்வளவு அழகு, ஒளி தருகிறது" என்று சொல்லுகிறார். வீட்டிற்குச் சொந்தக்காரர் இப்படி இருந்தால், அப்புறம் வீடு பொழைச்சாப்புலே தான்.
-----------------------------

அடுத்து ஒரு பழைய தமிழாக்கத்தை மீண்டும் உலவ விடுகிறார், திரு.ரூமி: "Trunk Call என்பதற்கும் Coffee என்பதற்கும் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழாக்கங்கள் என்ன தெரியுமா? முன்னது 'முண்டக்கூவி' பின்னது 'கொட்டைவடி நீர்'! உறங்குவது போலும் சாக்காடு என்று சொல்வார்கள். திட்டுவது போலும் தமிழாக்கம் என்று சொல்லத் தோன்றுகிறது!"
--------------------------
இராம.கி:

இதை வெளியூர் அழைப்பு என்று பலரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். யாரோ தனி ஒருவன் செய்த பிழையைப் பொதுமையாக்கி, தமிழாக்கத்திற்கே இழுக்கு சொன்னால் எப்படி? "ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குவது" என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். நீங்கள் அதில் பெரிய ஆள் போலிருக்கிறது.
---------------------------

அடுத்துச் சொல்கிறார் ரூமி: "படிக்காத பெண்கள்கூட, "என் மகன் கம்ப்யூட்ட சய்ன்ஸ் படிக்கிறான்" என்றோ "டாக்டரைப் பார்க்கப் போனோம்" என்றோதான் சொல்கிறார்கள். "என் மகன் கணினி விஞ்ஞானம் பயில்கிறான்" என்று சொல்வதில்லை. "மருத்துவரைப் பார்க்கச் சென்றோம்" என்று சொல்வதில்லை. எந்த வங்கி ஊழியரும், "நான் வங்கிக்குக் செல்கிறேன்" என்று கூறுவதில்லை. எழுதுவதும் இல்லை."
----------------------------
இராம.கி:

இதுவும் ஒரு தாழ்வு மனப்பான்மைதான்; படித்தவர்களை படிக்காதவர்கள் முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். படித்தவர்கள் சரியாகச் சொன்னால், படிக்காதவர்கள் அது கண்டு மாறுவார்கள். ஆசிரியர் தான் சொல்லுவதைக் கடைப்பிடிக்கா விட்டால் மாணாக்கர் அதை எப்படிக் கடைப் பிடிப்பார்? கல்லூரிப் பேராசிரியருக்கு இந்தக் கடைப்பிடி விளங்கவில்லையா? நீங்கள் முதலில் சரியாகச் சொல்லுங்கள். சுற்றியுள்ள மற்றவரைச் சொல்ல வையுங்கள்; கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் சூழமைவு (environment) மாறும். கையாலாகாத தனமாக, படித்தவர்கள் தங்கள் பொறுப்பின்மையையும், சோம்பலையும், மறைத்துக் கொண்டு ஊரைக் குறை சொல்லுவது, "ஆடத் தெரியாதவளுக்குத் தெருக் கோணல்" என்பதைப் போல் இருக்கிறது.
--------------------------------

சொற்களின் பிணங்கள் என்ற கருத்தை முன்வைத்து திரு. ரூமி சொல்கிறார்: "Software என்பதற்கு இணையான சொல்லை நாம் தரமுடியாது. காரணம், அது நம்முடைய சிந்தனையல்ல. அடுத்தவன் சிந்தனைக்கு நாம் சொல் தரமுயன்றால் அது சொற்களின் பிணங்களைத்தான் தரும். அப்படிப்பட்ட சொற்கள் நம் அன்றாட வாழ்வின் பயன்பாட்டு எல்லைகளுக்கு அந்தப்பக்கம்தான் நின்றுகொண்டிருக்கும்."
---------------------------
இராம.கி:

இதுவும் என்ன சிந்தனை என்று புரியவில்லை. ஒவ்வொரு விதமான சிந்தனை, ஒவ்வொரு மொழியினரிடம் இருக்கிறது. "நீ உன் அப்பாவுக்கு எத்தனையாவது பிள்ளை?" என்பதை ஆங்கிலத்தில் நேரடியாகச் சொல்ல முடியாது. சுற்றி வளைத்துத்தான் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் போது "இந்தத் தமிழ்ச் சொற்றொடரின் பிணம் தான் ஆங்கிலச் சொற்றொடர்" என்றா சொல்ல முடியும்? இதெல்லாம் என்ன பேச்சு? software என்பதற்கு முன் பலரும் இட்ட சொற்களைச் சொல்லி அவற்றின் நிறை குறைகளை இங்கு விவாதிக்க நான் முயலவில்லை. "அதைத் தமிழில் சொல்ல முடியாது என்று ஒரு பேராசிரியர் சொல்லுகிறாரே? இப்படி ஒரு தருக்கம் வைத்தால் அப்புறம் எல்லாவற்றிற்கும் இப்படித்தானே சொல்லுவார்?" - அதுதான் நெஞ்சைக் குத்துகிறது. ஒரு பேராசிரியரே, தோல்வி வாதம் வைத்தால், பின் அந்தக் கல்லூரி எப்படி விளங்கும்? எந்த வகையான மாணவர் அங்கிருந்து எழுவர்?

"Hospital என்ற சொல்லை தமிழ் தனக்கு ஏற்றவாறு 'ஆஸ்பத்திரி' என்று மாற்றிக்கொண்டதைக் குறிப்பிடலாம்" என்று சொல்லிப் பாராட்டுகிற திரு. ரூமி எதனால் பாராட்டுகிறார் என்று புரியவில்லை. மருத்துவமனை என்பதைக் காட்டிலும் ஆஸ்பத்திரி என்ற சொல்லி இவர் என்ன விளங்கிக் கொண்டார்? என்ன அடிமைத்தனம், ஐயா இது? ஆங்கில மருத்துவம் செய்வதால் அதை மருத்துவமனை என்று சொல்லக் கூடாதோ? திரு. ரூமியின் அளவுகோல் தான் என்ன? எல்லாமே தன்வயப் போக்கா (subjective)? இதுவரை தமிழில் புழங்காத, ஆனால் தேவையான ஆங்கிலச் சொல்லை ஏதோ ஒரு விதமாய்த் திரித்துச் சொன்னால், இவர் ஏற்றுக் கொண்டு விடுவாரோ? இவர் என்ன சொல்ல வருகிறார்? "தமிழில் மொழிபெயர்க்காதே, வெறுமே எழுத்துப் பெயர்ப்பு செய், அதுவும் கிரந்த எழுத்துக் கலந்து எழுத்துப் பெயர்ப்பு செய்" என்று சொல்லுகிறாரா? "கிரந்த எழுத்து என்பது அதுவரை எழுதப் படாமல் இருந்த வடமொழியை எழுதுவதற்குத் தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு நீட்டிக்கப் பட்ட (extended) ஒரு எழுத்து" என்று ஆசிரியர் ரூமி அறிவாரோ? "வடமொழிக்காக உருவாக்கப் பட்ட எழுத்தை வைத்துத் தமிழை எழுத வேண்டிய தேவை என்ன?" என்று தெரியவில்லை.
--------------------------

அடுத்து ஒரு அவத்தமான கருத்தை நமக்குத் திரு. ரூமி சொல்கிறார்: "சன்-டிவி என்பதை தமிழ்ப்படுத்தினால் அது அபத்தமான அர்த்தம் தரும். 'சூரியத் தொலைக்காட்சி' என்றால் அது 'சூரியனிலிருந்து ஒளியைப் பெறுகின்ற' (solar) என்ற பொருளைக்கொடுக்கும். 'சூரியன்-தொலைக்காட்சி' என்றாலும் அந்தக் கூட்டுச்சொல் (compound word) சரியாக அமையாது. சன்-டிவி என்பதே சரியாகும். இது மொழியின் பயன்பாட்டைப் புரிந்து கொண்ட பெயர்வைப்பாகும். 'சூரியத்தொலைக்காட்சி' என்று பெயர் வைப்பதும் "ஒரு நல்ல பாம்பு படமெடுப்பதைப் பார்த்தேன்" என்பதை "I saw a good snake taking pictures" என்று மொழிபெயர்ப்பதும் ஒன்றுதான்!"
----------------------------
இராம.கி:

சூரியத் தொலைக்காட்சி என்றால் 'சூரியனிலிருந்து ஒளியைப் பெறுகின்ற' (solar) என்ற பொருளைக் கொடுக்கிறதாம். நான் தமிழ் தான் பேசுகிறேனா, அல்லது மீண்டும் நான் பள்ளிக் கூடத்திற்குப் போக வேண்டுமா என்று புரியவில்லை. என்ன இழவைய்யா, நான் புரிந்து கொள்ளுகிறேன்? பேராசிரியரின் பொழிப்புரை நம் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் போல் இருக்கிறதே?

சூரியத் தொலைக்காட்சி என்பதற்கு மாறாகக் "கிருஷ்ணத் தொலைக்காட்சி என்று இருக்கிறது" என்று பேச்சுக்கு வைத்துக் கொள்ளுவமே? "கருப்பில் இருந்து ஒளிபெறுகின்ற" என்ற பொருள் அங்கு வருமோ? பொதிகைத் தொலைக்காட்சி என்பது "பொதிகை மலையில் இருந்து ஒளி பெறுகிற" என்று பொருள் வருமோ? ஒரு தமிழ்ப் பெயர்ச்சொல்லோடு இன்னொரு தமிழ்ப் பெயர்ச்சொல்லை எப்படித் தான் இணைப்பது? எமக்கு விளங்கவில்லையே? கல்லூரியில் இப்படி எல்லாம் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களா, என்ன?

மதம் மாற்றும் முயற்சிகளை விடச்சொல்லும் திரு. ரூமி, "யாருக்கு மதம் பிடித்திருக்கிறது?" என்றும், "மதம் என்றால் என்ன?" என்று தெரியாதவருக்கு "மதம் என்றால் என்ன?" என்று சொல்லிக் கொடுத்த "பெருங்கிழார் யார்?" என்றும் (இது தாங்க ரூமி, உங்க பிரஹஸ்பதி - வெறுமே சொல்லை உருவேற்றுவதற்கு மாறாய் அதன் பொருளைத் தெரிஞ்சுக்கலாமே!), "அடிமை, ஆதிக்கம் என்றால் என்ன?" என்றும் ஓர்ந்து பார்க்கும் நாள் வரட்டும் என்று வேண்டுவோமாக!

அன்புடன்,
இராம.கி.

திண்ணையில் வெளிவந்த திரு. ரூமியின் ஊற்றுகைக் கட்டுரை:

தமிழ்ப்படுத்துதலும் தமிழ் மனமும் - நாகூர் ரூமி

எல்லா மனிதர்களுக்கும் ஆதாம் ஏவாள்தான் ஆதி பெற்றோர் என்றும் மனுவிலிருந்துதான் மனிதன் தோன்றினால் என்றும் சமயங்கள் கூறுகின்றன. இல்லை குரங்குதான் என்று டார்வினியம் கூறுகிறது. அனுமார் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளலாம். ஆதி வானரங்களுக்குத்தான் ஆதாம் ஏவாள் என்று பெயரோ என்றும் சிலர் ஆராய்ச்சி செய்வதாகத் தகவல். சரி, அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் பெற்றோர் யார் என்ற அதையொத்த பிரச்சனை இன்னொரு விஷயத்திலும் உண்டு. அதுதான் தகவல் பரிமாற்றத்துக்கும் இலக்கிய கலாச்சாரப் பரிவர்த்தனைக்குமாக மனிதன் பயன்படுத்தும் அத்தியாவசிய உபகரணமாக, வடிவமாக, வடிகாலாக இருக்கின்ற மொழி.

இந்த உலகில் இதுவரை பேசப்படுகின்ற எழுதப்படுகின்ற எல்லா மொழிகளுக்கும் பெற்றோர் ஒருவரே என்று மொழி வரலாற்று நூல்கள் கூறுகின்றன. அதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழி என்றும் சொல்லுகிறது. இந்த விஷயத்தை கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்வது மேற்கொண்டு இந்த கட்டுரையில் சொல்லவருகின்ற விஷயத்தில் தெளிவுபெற உதவும்.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஒளி வேகத்தில் சென்று கொண்டிருக்கும் காலகட்டத்தில் அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும் என்ற முனைப்பினாலோ என்னவோ பண்டித சிகாமணிகள் தமிழைத் தூய்மைப் படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு சீரியஸாக சிலபல காரியங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். அதிலுள்ள சில ஆட்சேபணைக்குரிய அம்சங்களைப் பற்றிமட்டும் இங்கு நான் பேசவிரும்புகிறேன்.

முதல் ஆட்சேபணை மொழித்தூய்மை என்ற கருத்து. மொழித்தூய்மை என்பதே ஒரு தவறான கருத்தாக்கம் அல்ல. ஆனால் ஒரு மொழியின் தூய்மையை எது கெடுக்கிறது என்பதைப் பண்டிதர்கள் புரிந்துகொண்டதிலிருந்து நான் வேறுபடுகிறேன். தமிழ்ப்படுத்துதல் என்பது வேறு தமிழைப் படுத்துதல் என்பது வேறு. ஆனால் இந்த இரண்டாவதைத்தான் முன்னது என்று பல பிரகஸ்பதிகள் நினைத்துக்கொண்டு காரியத்திலும் கருமமே கண்ணாக இறங்கிவிடுவதால்தான் இவ்வளவும் சொல்லவேண்டியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் "The govt. has a big role to play" என்பதை தமிழக அரசின் பொருளாதார பாடப்புத்தகத்தில், "அரசு விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை வைத்துக்கொண்டிருக்கிறது" என்று 'தமிழாக்கி' இருந்ததாக துக்ளக் இதழில் ஒரு செய்தி வந்தது ! பண்டித மொழிபெயர்ப்புக்கு ஒரு உதாரணம்தான் இது.

இந்த கருமமே கண்ணாயினார்கள் சாதாரண ஆசாமிகளாக இல்லை. அரசுத்துறைகளிலும், மொழிவளர்ச்சித் துறைகளிலும் பொறுப்புகளில் இருப்பவர்களாகவும் அதிகாரம் சாராத பண்பாட்டு வளர்ச்சித்துறைகளில் பணியாற்றுபவர்களாகவும் அல்லது குறைந்த பட்சம் நாடறியப் புகழ்பெற்றவர்களாகவும் அறிஞர்கள் என்று அறியப்பட்டவர்களாகவும் உள்ளவர்கள். இவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் நினைக்கின்ற நிலையில் இருப்பவர்கள் இவர்கள். என்ன துரதிருஷ்டம் ?!

தூயதமிழ் என்ற ஒரு தவறான கொள்கையை சின்னவீடு மாதிரி இவர்கள் மிகவும் பிரியமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழாக்கங்களில் ஏற்படுகின்ற எல்லாக் குழப்பங்களுக்கும் அபத்தங்களுக்கும் இந்த கருத்தாக்கம்தான் அடிப்படைக் காரணமாக உள்ளது. அப்படியானால் தூய தமிழ் என்று ஒன்று இல்லையா என்று கேட்கலாம். திருக்குறள் தூயதமிழில் இல்லையா என்றும் நினைக்கலாம். ஒரு மொழியின் தூய்மை என்பது குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் அதன் சொற்களை அடைக்க முயற்சிப்பதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு மலையாளி ஆங்கிலம் பேசும்போது அதில் மலையாள வாசம் கலந்துவிடுவதுபோல, ஒரு தமிழன் ஹிந்தி பேசினால்கூட அதில் தமிழின் மணமிருக்கும். அந்த வாசம்தான் தமிழின் தூய்மை. அதுதான் அதன் தமிழ்மை.

ஒரு குறிப்பிட்ட மொழி எத்தனை மொழிகளில் இருந்து சொற்களை எடுத்து தன்வயப்படுத்திக் கொள்கிறது -- கடன் வாங்கிக்கொள்கிறது என்று நான் சொல்லவில்லை, கவனிக்கவும் -- என்பதை வைத்து அதன் வளர்ச்சியின் நிலையையும் பக்குவத்தையும் புரிந்துகொள்ளலாம். எந்த மொழியும் ஆகாயத்திலிருந்து இறங்கிவரவில்லை. (நபிகள் நாயகம் அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் மூலம் இறைச்செய்தி வந்ததாக இஸ்லாம் கூறுகிறது. அதனால் அரபி மொழி வானத்திலிருந்து வரவில்லையா என்று சிலர் கேட்கலாம். அது அப்படியல்ல. இறைச்செய்தி வண்டுகளின் ரீங்காரம் போலவும் மணியோசை போலவும்கூட வந்திருப்பதாக ஹதீஸ் உண்டு. அதாவது ரீங்காரத்திலும் மணியோசையிலும் இருந்து கிடைத்த செய்தி அரபியில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது என்பதே அதன் உட்குறிப்பு. இது மார்க்கங்களின் ரகசியங்களில் ஒன்றாக இருக்கலாம்).

மாறாக, மொழி என்பது ஒரு பண்பாட்டின் குறியீடாக உள்ளது. அது ஒரு சமுதாயப் படைப்பு. சமுதாயம் என்பது பல்வேறுபட்ட பழக்க வழக்கங்களையும், குணாம்சங்களையும், வாழ்முறைகளையும், தனித்துவங்களையும், கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும் கொண்ட மனிதர்களைக் கொண்டது. கற்கால மனிதன்கூட தனித்துவம் கொண்டவன்தான். இல்லையெனில் தற்கால மனிதன் அவனை கற்கால மனிதன் என்று எப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியும்? மாறிக்கொண்டே இருக்கும் சமுதாய வாழ்வில் மொழியை மட்டும் தூய்மை என்ற பெயரில் செக்குமாடாக்குவது எந்த வகையில் நியாயம்?

நமது இன்றைய வாழ்வு ஒரு ஆரோக்கியமான கலவையாக உள்ளது. இன்றைக்கு 'பேன்ட்' போடாத அல்லது அணியத் தெரியாத தமிழனே இல்லையென்று கூறலாம். நாம் சார்ந்து வாழும் மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி, இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், விமானம், கம்ப்யூட்டர் போன்ற அனைத்தும் தமிழனின் படைப்பா என்ன?

இதையெல்லாம் எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக்கொள்கின்ற நாம் மொழியில் மட்டும் ஏன் தூய்மையைக் கோரவேண்டும்? 'பஸ்'ஸை பேருந்து என்றும் 'செக்'கை காசோலை என்றும் கம்ப்யூட்டரை கணிணி என்று கணிப்பொறி என்றும் குழப்பமாக தமிழ்ப்படுத்த வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? எந்த தமிழனாவது, "இன்று நான் பேருந்தில் வந்தேன்" என்று சொல்கிறானா?

ரோஜாப்பூ ரோசாப்பூவானதிலிருந்து ரோஜா அதன் அழகையும் நறுமணத்தையும் இழந்து தவிக்கிறது. மகாகவி பாரதிகூட -- இந்த 'மகாகவி'யில் உள்ள 'மகா'கூட தமிழில்லை சரிதானே? -- "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்றுதானே பாடினான்? "சகத்தினை" என்று பாடவில்லையே? ஏன்? 'ஜ'வின் கம்பீரம் 'ச'வில் இல்லை. அதனால்தான். கம்பீரக் கவிஞனான பாரதிக்கு அது புரியும். அதனால்தான்.

வடமொழி என்றும் ஆங்கிலம் என்றும் இனி புலம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஆங்கிலம் ஒரு இந்தியமொழி. அது தன் அன்னியத்தன்மையை இழந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. ஹிந்தி, தமிழ், அரபிக், உர்து, ஃப்ரென்ச் என்றெல்லாம் வித்தியாசம் பாராட்டாமல் எல்லா மொழியிலிருந்தும் சொற்களை அணைத்துக்கொண்டதால் ஆங்கிலம் கற்பிழந்துவிட்டதா என்ன? மாறாக அசுர வளர்ச்சி கண்டுவிட்டது. இனியும் அதன் விஸ்வரூபம் வளரும். ஆனால் நாம் மட்டும் தமிழின் தலையிலடித்து இன்னும் ஏன் வாமனமாகவே -- அம்மணமாகவே என்பதுபோல் இல்லை? -- அதை வைத்திருக்க வேண்டும்?

தமிழுக்கும் பெருந்தன்மை உண்டு. தனித்துவம் உண்டு. வளர்ச்சி உண்டு. சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனால் தூய்மைவாதிகள்தான் தமிழின் வளர்ச்சியைத் தடுக்கும் சீனப்பெருஞ்சுவர்களாக உள்ளனர். Trunk Call என்பதற்கும் Coffee என்பதற்கும் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழாக்கங்கள் என்ன தெரியுமா? முன்னது 'முண்டக்கூவி' பின்னது 'கொட்டைவடி நீர்'! உறங்குவது போலும் சாக்காடு என்று சொல்வார்கள். திட்டுவது போலும் தமிழாக்கம் என்று சொல்லத் தோன்றுகிறது!

தமிழ் இன்று இரண்டு மொழிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒன்று, பேசப்படும் மொழி. இரண்டு, எழுதப்படுகின்ற, திணிக்கப்படுகின்ற, விளம்பரப்படுத்தப்படுகின்ற மொழி. படிக்காத பெண்கள்கூட, "என் மகன் கம்ப்யூட்ட சய்ன்ஸ் படிக்கிறான்" என்றோ "டாக்டரைப் பார்க்கப் போனோம்" என்றோதான் சொல்கிறார்கள். "என் மகன் கணினி விஞ்ஞானம் பயில்கிறான்" என்று சொல்வதில்லை. "மருத்துவரைப் பார்க்கச் சென்றோம்" என்று சொல்வதில்லை. எந்த வங்கி ஊழியரும், "நான் வங்கிக்குக் செல்கிறேன்" என்று கூறுவதில்லை. எழுதுவதும் இல்லை.

பேங்க், பஸ், காப்பி, டீ, கம்ப்யூட்டர் போன்ற சொற்களை தமிழ் மனம் ஏற்றுக்கொள்கிறது. படித்தவரும் பாமரரும் பயன்படுத்துகின்றனர். அவை ஆங்கில வார்த்தைகள் என்று யாரும் நினைப்பதில்லை. உண்மையில் அவை தமிழ்ச் சொற்கள் என்றே பாமரர் நினைக்கின்றனர்.

எந்த மொழியை மக்கள் அனைவரும் பயன்படுத்த முடியாதோ, அந்த மொழி அல்லது அந்த மொழியின் பகுதி செத்துப் போனதாகும். தமிழைப் பொறுத்தவரை அது செத்துப்போகவில்லை. மாறாக, கொல்லப்படுகிறது.

தமிழாக்கம் செய்கின்றவர்கள் பண்பாட்டையும் பயன்பாட்டையும் மனதில் வைத்து செய்வதில்லை. காஃபியை காஃபியாகவே ஏற்றுக்கொள்வதால் சுவை குறையப்போவதில்லை. சிந்தனைப் பின்புலமின்றி, அன்னியமொழியின் சொற்களை மட்டும் தமிழ்ப்படுத்துவதால் எந்தப்பயனுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக software என்பதை 'சாஃப்ட்வேர்' என்றே எழுதலாம். சொல்லலாம். அதை 'மென்பொருள்' என்று ஏன் சொல்லவேண்டும்? எல்லா ஆங்கில சொற்களுக்கும் இணையான தமிழ்ச்சொற்கள் எங்களிடம் இருக்கின்றன என்ற பெருமைக்காகவா? மென்பொருள் என்பது பஞ்சிலிருந்து மார்புவரை மென்மையான எந்தப் பொருளையும் குறிக்கலாமல்லவா? ஏன் இந்தக் குழப்பமும் விளக்க அகராதியும்? Software என்பதற்கு இணையான சொல்லை நாம் தரமுடியாது. காரணம், அது நம்முடைய சிந்தனையல்ல. அடுத்தவன் சிந்தனைக்கு நாம் சொல் தரமுயன்றால் அது சொற்களின் பிணங்களைத்தான் தரும். அப்படிப்பட்ட சொற்கள் நம் அன்றாட வாழ்வின் பயன்பாட்டு எல்லைகளுக்கு அந்தப்பக்கம்தான் நின்றுகொண்டிருக்கும்.

அப்படியானால் எப்படித்தான் தமிழ்ப்படுத்துவது என்ற கேள்விக்கும் விடைகண்டாக வேண்டும். ஒரு அன்னிய மொழியின் சொல்லை தமிழ்ப்படுத்தும்போது அது தமிழோடு தமிழாகக் கலந்துவிடக்கூடியதாகவும் எந்தவிதமான பொருள் சார்ந்த சந்தேகத்தையும் கிளப்பாததாக இருக்க வேண்டும். Hospital என்ற சொல்லை தமிழ் தனக்கு ஏற்றவாறு 'ஆஸ்பத்திரி' என்று மாற்றிக்கொண்டதைக் குறிப்பிடலாம். அதோடு நமது சிந்தனை வளத்தைச் சுட்டுவதாக அது இருந்தால் கூடுதல் சிறப்பு. அப்படி ஒரு உதாரணத்தை சில ஆண்டுகளாக பார்க்க முடிகிறது.

Rape என்று ஒரு ஆங்கிலச்சொல். அதை இதுகாறும் 'கற்பழிப்பு' என்றே மொழிபெயர்த்து வந்துள்ளோம். ஆனால் சமீபத்தில்தான் 'பாலியல் வன்முறை' என்ற பிரயோகத்தைப் பார்க்க முடிந்தது. சரியான, உண்மையான, நேர்மையான, ஆக்கபூர்வமான தமிழாக்கம் எது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

'கற்பழிப்பு' என்று சொல்லி, கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக வைக்கும் தமிழ் மரபை ஏற்றுக்கொள்ளாத, பெண்ணை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகின்ற இந்த சொல்லுக்கு பதிலாக, ஒரு ஆணால் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியைக் குறிக்கும் வகையிலும், 'ரேப்' என்ற ஒரு செயலில் உள்ள மனிதாபிமானத்துக்கு எதிரான பலாத்காரத்தை எடுத்துரைக்கும் விதத்திலும் இந்த 'பாலியல் வன்முறை' என்ற தமிழாக்கம் அமைந்துள்ளது. உண்மையான பெண்ணியச் சிந்தனையின் வளர்ச்சிக் குறியீடாகவும் இதைப் பார்க்கலாம்.

திமுகவுக்கு சன்-டிவிக்கும் உள்ள உறவை நாமறிவோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தங்களது தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில்தானே பெயர்வைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சன்-டிவி என்பதை தமிழ்ப்படுத்தினால் அது அபத்தமான அர்த்தம் தரும். 'சூரியத் தொலைக்காட்சி' என்றால் அது 'சூரியனிலிருந்து ஒளியைப் பெறுகின்ற' (solar) என்ற பொருளைக்கொடுக்கும். 'சூரியன்-தொலைக்காட்சி' என்றாலும் அந்தக் கூட்டுச்சொல் (compound word) சரியாக அமையாது. சன்-டிவி என்பதே சரியாகும். இது மொழியின் பயன்பாட்டைப் புரிந்து கொண்ட பெயர்வைப்பாகும். 'சூரியத்தொலைக்காட்சி' என்று பெயர் வைப்பதும் "ஒரு நல்ல பாம்பு படமெடுப்பதைப் பார்த்தேன்" என்பதை "I saw a good snake taking pictures" என்று மொழிபெயர்ப்பதும் ஒன்றுதான்!

இனிமேலாவது வேற்றுமொழிச் சொற்களை தமிழுக்கு 'மதம் மாற்றுகின்ற' முயற்சிகளை விட்டுவிட்டு, தமிழுக்கு அவற்றை கலப்புமணம் செய்து வைக்க முயன்றால் உண்மையாக தமிழை வளர்க்க அது நிச்சயம் உதவும். தேம்ஸும் தஜ்லாவும் சரயூவும் கங்கையும் தமிழ்ப்பெருங்கடலில் சங்கமமாவதால் அதன் தூய்மை கெடும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அதன் உண்மையான வளர்ச்சி பற்றி ஆக்கபூர்வமாக சிந்திப்பது நல்லது.

5 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நற்றமிழைத் தாழ்த்தி கட்டுரை எழுதினால் திண்ணையில் கண்டிப்பாக வெளி வருமோ ? :)

போன வாரம் திரு. மாலன், இந்த வாரம் திரு. ரூமி..

கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன முட்டாள்த்தனமான வாதங்கள்.

நாம் நம் பணி தொடர்வோம் !

இராம.கி said...

வாங்க ரவிசங்கர்,

அதற்குள் சலித்துக் கொண்டால் எப்படி?

பொதுவாக இன்றையத் தமிழ் மிடையங்களில் பணியாற்றுபவர்கள், பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்கள், ஆகியோரிடம் இது போன்ற பத்தாம் பசலிக் கருத்துக்கள் ஆழ்ந்து கிடக்கின்றன. இதை எதிர்த்து யாரும் இயக்கம் நடத்துவது இல்லை. தமிழ், தமிங்கிலமாகிக் கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கு இவர்களும் ஒரு காரணியே.

அன்புடன்,
இராம.கி.

நம்பி.பா. said...

தெளிவான வாதங்களை முன்வைத்துள்ளீர்கள்.
பழகுதலில் தானே கற்க முடியும், தெளிய முடியும்.
நீரில் இறங்காமலே நீச்சலடிப்பது தவறென்று சொல்லுவது
போலிருக்கிறது திண்ணையில் வந்துள்ள கட்டுரை!

வெளிநாட்டுக்காரன் தான் முயலுகிறான்,
அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டெடுக்கிறான்,
நாமும் முயலக்கூடாதோ? அவனைத்தான் பின்பற்ற வேண்டுமோ?
சிந்தனையில் பின்பற்றுவோம், அவன் சிந்தனையை அல்ல!

தமிழும் வளரும், தெளிவும் வளரும்!

Anonymous said...

/* பொதுவாக இன்றையத் தமிழ் மிடையங்களில் பணியாற்றுபவர்கள், பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்கள், ஆகியோரிடம் இது போன்ற பத்தாம் பசலிக் கருத்துக்கள் ஆழ்ந்து கிடக்கின்றன. இதை எதிர்த்து யாரும் இயக்கம் நடத்துவது இல்லை. தமிழ், தமிங்கிலமாகிக் கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கு இவர்களும் ஒரு காரணியே.*/


ரூமி தெரிவித்த கருத்துகள், மிக ஆழமாக பரிசீலிக்க வேண்டியவை. தங்களது (விதண்டா)வாதம், மிக மிக மேலோட்டமாக, சுய சார்பு கொண்டதாக, ஒரு உள்நோக்கத்துடன் சொல்லப்பட்டது என்பது தெளிவு.

இப்போது புரிகிறது.இதை எதிர்த்து யாரும் இயக்கம் நடத்துவது இல்லை என்று சொல்லும் போதே தங்கள் உள்நோக்கமும் தெரிகிறது. இவை ஆட்சிக்கு வருவதற்கு, தன்வளம் பெருக்க பயன்படுமேயொழிய நிச்சயம் வேலைக்காகாது.

Anonymous said...

இவர்களை எல்லாம் யார் பேராசிரியராக உயர்த்தி விட்டது? எங்க ஊரு ஆறாம் வகுப்புப் பிள்ளை இவர்களைவிட நல்லாத் தமிழ் கதைக்கும்!

பணம் சம்பாதிக்கப் பதவிக்கு வந்தவர்கள் இருக்கும்வரை தமிழ் இப்படித்தான் சீர்குலையும்.

இதற்குத்தான் நமக்கென்று ஒரு நாடு தேவை, வர்ற கோவத்திற்கு இவங்களை வரிசிசையில் நிற்கவிட்டு ஏ.கே கவணால் சுட்டுப் போட வேணும்போல இருக்கு! மரண பயம்போல் ஒன்றும் சரிவராது.

தமிழ் நாட்டிலை தமிழ்த் தலைவர்கள் என்று பீற்றிக் கொள்பவர்கள் இதுபற்றிக் கவணிக்க மாட்டார்கள். தமிழன் எவ்வளவு மூடனாக இருக்கிறானோ அவ்வளவுக்குத் தாங்கள் பதவியில் இருக்கலாம் என்ற தன்னம்பிக்கை அவர்களிடம் உள்ளது!

கடவுளையும் குறைசொல்ல வேண்டும். எவன் சொந்த இனத்திற்கே குழி தோண்டுறானோ அவனைத்தான் ஆட்சியில் விடுறார்!