Wednesday, April 11, 2007

தமிழில் அறிவியல்

முன்பு ஒருமுறை நண்பர் மாலனுக்கும், எனக்கும் மடற்குழுக்களில் ஒரு சுவையான உரையாடல் நடந்தது. அதை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். (என் உரையில் இருந்த ஒருசில நடைப் பிழைகளை இப்பொழுது திருத்தியிருக்கிறேன்.) மாறி, மாறி, அவர் கருத்துக்களும், என் மறுமொழியுமாக வரும். படிக்கும் போது புரியும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

மாலன்:

அன்பு நண்பர்களுக்கு,

எனக்கு நெடுநாளாக உள்ள சந்தேகம் ஒன்றை அறிஞர் பெருமக்கள் யாரேனும் தீர்த்து வைக்க முன்வந்தால் நன்றி தெரிவிப்பேன். அந்த சந்தேகம் இதுதான்: அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கு வைக்கப்ப்டும் பெயர்களை தமிழ்ப்படுத்துவது முறையா? முறையல்ல என்று நான் கருதுகிறேன். காரணம்

அ.அவை பெயர்ச் சொற்கள். பெயரை மொழிமாற்றம் செய்வதில்லை. ஏழுமலையை ஆறுமுகம் சந்தித்தார் என்பதை ஆங்கிலத்தில் எழுதும் போது Mr.Sevenhills met Mr. Sixfaces என்று எழுதுவது இல்லை.

----------------------------------------------------------------------------------------
இராம.கி:

அன்பிற்குரிய மாலன்,

பெருவப் பெயர்கள் (proper nouns) மட்டும் தான் மொழிபெயர்ப்பதில்லையே தவிர, மற்றவற்றை மொழிபெயர்ப்பதில் தவறில்லை. நீங்கள் ஏழுமலையையும், ஆறுமுகத்தையும், மொழிபெயர்த்தது தான் தவறு. அதே போல நியூட்டனையும், அய்ன்சுடைனையும் மொழிபெயர்ப்பதும் கூடத் தவறு தான். இந்தத் தவறுகளை நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது விழுக்காடு தமிழர் யாரும் செய்வதில்லை. ஆனால் நம் மொழியின் பலுக்கலுக்கு ஏற்ப, அந்தப் பெயர்களைத் திரிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. வெள்ளைக்காரன் நம் நெடுஞ்செழியனையும், தூத்துக்குடியையும், திருச்சிராப்பள்ளியையும், அப்படித் திரித்துத்தான் புழங்கினான்.

இந்த மொழிபெயர்ப்பிலும், எழுத்துப்பெயர்ப்பிலும், நம் நாட்டுப் பாமரர்கள் கூட புகுந்திருக்கிறார்கள். காட்டாக, போர்த்துகீசியக்காரன் கொண்டு வந்த potato வையும், tomato வையும், chilli -யையும், தங்களுக்குத் தெரிந்த முறையில் உருளைக் கிழங்கு, தக்காளி, மிளகாய், என்று பெயர் மாற்றிக் கொண்டு தான் இருந்தார்கள். அப்படி அவர்கள் செய்ததை இதுவரை "தப்பு" என்று யாரும் சொல்லவில்லை. அது போலச் சேவியர் என்பது சவேரியார் என்று திரித்து ஒலிக்கப் பட்டது. Joseph என்பவர் சோசேப்பு ஆனார். இவையெல்லாம் 16, 17 ம் நூற்றாண்டில் ஒப்புக் கொள்ளப் பட்ட மாற்றங்கள் தான். இப்பொழுது 21ம் நூற்றாண்டில், "தொலைபேசி, தொலைக்காட்சி, என்றால் அது தவறோ? மாறாக, telephone, television என்று சொல்லுவது தான் சரியோ?" என்று குழம்பும் நிலைக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். கேட்டால், இதையெல்லாம் "நாமா கண்டுபிடித்தோம்?" என்று காரணம் காட்டுகிறீர்கள். எங்களுக்கு என்னவோ, telephone பண்ணுவதைக் காட்டிலும் தொலைபேசுவதும், டெலிவிஷன் பார்ப்பதைக் காட்டிலும் தொலைக்காட்சி பார்ப்பதும், சரியென்றே படுகிறது. "இப்படித் தமிழ்ச் சொற்களை ஆளுவதின் மூலம் பொருள் சட்டென்று விளங்கிவிடுகிறது" என்றே எங்களைப் போன்றோர் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

என்ன ஒரு வளர்ச்சி, நம் குமுகாயத்தில் ஏற்பட்டிருக்கிறது, பாருங்கள்? நம்மூரில் தோன்றாதவைக்குக் கூட, நம்மூரிலே புரியும் வகையில், பெயர் வைக்கலாம் என்ற 16ம் நூற்றாண்டு ஒழுங்கு, 21ம் நூற்றாண்டில், இப்படி அய்யம் தோன்றும் அளவுக்கு மாறிவிட்டது என்றால், நாம் எங்கு போகிறோம் என்றே தெரியவில்லை. இது போன்ற பின்னடைவுச் சிந்தனைகள் தமிழனுக்குப் புதியது இல்லை தான். 1960-70 களில் பள்ளியிறுதி வகுப்பைத் தாண்டி, கல்லூரியில் எப்படித் தமிழ் வழிச் சொல்லிக் கொடுப்பது என்று அறிஞர்களும், அரசியல்வாதிகளும் அலசி உரையாடிக் கொண்டிருந்த காலம் போய், இப்போது "மழலையர் பள்ளியில் தமிழ் சொல்லிக் கொடுக்கத்தான் வேண்டுமா?" என்ற மாபெரும் பின்னடைவுக்கு நாம் வந்திருக்கிறோம் அல்லவா? இந்தப் பின்னடைவிற்கு ஒரு 40 ஆண்டை இரண்டு விதமான கழக அரசுகளும் காவு கொடுத்திருக்கின்றன, அல்லவா? இதைத்தான் புரையோடிப் போன புற்று என்று சொல்லுகிறோம்.

பெயர்ச்சொல்லை எல்லாம் தமிழாக்க வேண்டுமா என்ற ஒரு உரையாடலை நீங்கள் தொடுத்திருக்கிறீர்கள்.

தாளிகைத்துறையில் பலகாலம் பணிபுரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு "ஒரு மொழியில் வினைச்சொல் (அது எச்சமாகவும், முற்றாகவும் இருக்கக் கூடும்) என்பது இருக்கும் சொற்களிலே 10, 15 விழுக்காடு தான் இருக்கும், மற்றவையெல்லாம் பெயர்ச்சொற்களே, இடைச்சொல்லும் உரிச்சொல்லும் விழுக்காட்டில் நுணுகியவையே" என்ற செய்திகள் தெரிந்திருக்கும். இந்த நிலையில் எந்த ஒரு மொழியும் வரைமுறை இல்லாமல் பெயர்ச் சொல்லைக் கடன்வாங்கத் தொடங்கினால் அப்புறம் "பண்ணி மொழி"யாக வேண்டியதுதான் என்ற இயல்பையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பெரும்பாலான வணிகத் தாளிகைகளில் (இந்தத் தாளிகைகளில் இலக்கியம் இன்றைக்கு அருகியே இருக்கிறது. அவர்கள் இப்படி வணிகம் செய்வதில் எமக்கு ஒன்றும் பிணக்கு இல்லை; செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் மொழிக்கு இவர்கள் சட்டாம்பிள்ளையாய் ஆகிப் போனார்கள், பாருங்கள்; அதில்தான் கொஞ்சம் நெருடல் ஏற்படுகிறது. இருப்பினும் அதை இங்கு பேசவேண்டாம்.) இப்பொழுது பண்ணி மொழியில்தான் பலரும் எழுதுகிறார்கள். நீங்கள் இப்பொழுது சொல்ல வருவதன் முடிவு: "இந்த இழவைத் தமிழர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டு, அதிகாரபூர்வம் ஆக்கினால் தான் என்ன?" என்பதே.

இந்த முடிவுக்கு வருவதற்கு அறிவியல் முலாம், பகுத்தறிவு போன்றவை தேவையில்லை. வெறும் பெரும்பான்மைத் தனமும், ஒருவகை பாமரத் தனமும் போதும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுமே அறிவியலையும், நுட்பியலையும், பொறியியலையும் ஒட்டி வந்தது தான். அதனால் அவற்றைக் காரணம் காட்டி, "ஆங்கிலச் சொற்களை அப்படியே கையாளுவோம்" என்ற சப்பைக் கட்டு தேவையில்லை. இதுபோன்ற சொற்களை/கருத்துக்களை ஒரு மொழியினர் உருவாக்கியதாலேயே, இன்னொரு மொழியினர், அந்தப் பொருளை உருவாக்கியவர்களின் சொல்லாலேயே அவற்றை அழைக்க வேண்டும் என்று சொத்துரிமைச் சிக்கலாகத் தோற்றம் காட்ட வேண்டியதில்லை.; கூடவே இவையெல்லாம் காப்புரிமை (patent) செய்யப்பட்ட சொற்களும் அல்ல. telephone - யைத் தொலைபேசி என்று சொல்லுவதால், பெருங்கனம் பொருந்திய அமெரிக்கர்கள் கோவம் கொள்ளப் போவதும் இல்லை; தமிழர்கள் ஏதோ தனித்துவிடப் படுவதும் இல்லை. தமிழர்கள், தமிழில் தொலைபேசி என்று சொல்லி, ஆங்கிலத்தில் உரையாடும் போது telephone என்று சொல்லிவிட்டுப் போவார்கள். எப்பொழுதுமே முதல் எட்டுத் (step) தான் சரவல் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்புறம் நடப்பது ஒன்றும் கடினம் அல்ல. தொலையில் பேசுவதற்கு ஆன கருவி தொலைபேசி என்றால், பட்டென்று "என் மனத்துள் இவ்வளவுதானா?" என்ற மருட்டுப் போய்விடுகிறது. பிறகு ஓராயிரம் கேள்விகள் எழுந்து, தொலைபேசி பற்றி, இன்னும் தெரிந்துகொள்ள முற்படுவேன். வெறுமே telephone என்று சொன்னால், மருட்டுத்தனம் எங்கும் நிறைந்து வெறுமே நெட்டுருப் போடும் நிலைக்கே நம் மாணவர்கள் வருவார்கள். வேண்டுமானால் அமெரிக்க முதலாளிகளுக்கு இன்னும் கூட அளவில் ஆங்கிலம் பரட்டத் தெரிந்த நுட்பக் கூலிகளை உருவாக்கலாம்; ஒரு பிரித்தானிய கிழக்கிந்திய கும்பணிக்கு மாறாக ஒரு அமெரிக்க கிழக்கிந்திய கும்பணியை உருவாக்கலாம்.

ஒரு மொழியினர் படைத்த பொருள்களுக்கு, மற்ற மொழியினர் தங்கள் தங்கள் மொழியிலேயே, புதுச்சொற்கள் படைத்துக் கொள்ளுவதற்குக் காட்டாக, இந்தையிரோப்பிய மொழிக் குடும்பத்தில் இருந்து, இங்கே கொடுக்கிறேன். binaculars என்ற ஆங்கிலச்சொல் டச்சு மொழியில் verrekijker என்று தான் புதுச்சொல்லாகப் பயனாக்கப் படும். அவர்கள் binaculars என்று புழங்குவதில்லை. இதே போல அங்கு hospital என்ற சொல் ziekenhuis என்று புழங்கப் பட்டு "நோயாளர் மனை" என்றே பொருள் கொள்ளும் (நாம் இதை மருத்துவ மனை என்று சொல்லிக் கொள்ளலாம்; ஐய்யய்யோ, ஆஸ்பிட்டல் என்று சொல்ல வில்லையே என்று அங்கலாய்க்க வேண்டாம். "பாமரர்கள் ஆஸ்பத்திரி என்று தானே சொல்லுகிறார்கள்?" என்று வருத்தப்படவும் வேண்டாம். பாமரர்களுக்குச் சொல்லிக் கொடுத்ததை நாம் இன்னும் மாற்றவில்லை, அவ்வளவு தான்; அதே பொழுது மருத்துவமனை என்றசொல் பாமரருக்குப் புரியாமல் இல்லை.); mayor என்பவர் burgemeester - நகரத்தலைவர் என்று டச்சு மொழியில் ஆவார். இதே போல செருமானிய மொழியில், தொலைக்காட்சி television என்று ஆகாது, fernsehen என்றே கொள்ளப்படும்; இதே போல மின்குமிழ் என்ற சொல் bulb என்று ஆகாது; knolle என்றே புழங்கப்படும். அதே போல கரிமம் (carbon) என்ற எளிமம் (element), kohlenstoff (காளப் பொருள்) என்றே எழுதப்படும்; அதே போலப் பூக்கோசு என்னும் காய்கறியை cauliflower என்று எழுதாமல் blumenkohl என்றே எழுதுவார்கள். கொண்மையைக் குறிக்கும் charge என்ற ஆங்கிலச் சொல் ladung என்றே செருமானிய மொழியில் குறிக்கப்படும்; இத்தனைக்கும் ஆங்கிலத்துக்கு மிக நெருங்கிய பங்காளி டச்சு மொழியாகும்; அதற்குச் சற்று தள்ளி செருமானிய மொழி அமையும். ஆக, இந்தப் பங்காளி மொழிகளில் கூட ஆங்கில, பிரஞ்சுச் சொற்கள் அப்படியே எல்லாக் காலத்தும் ஏற்கப்படுவதில்லை. பிரஞ்சிலோ இதற்கும் மேல்; பலநேரம் பிரஞ்சுக்காரர்களுக்கு ஆங்கிலம் என்றால் ஒத்து வராது. (கிட்டத்தட்ட எட்டாம் மனையில் சனி போலத்தான்.)

இப்படி ஒரு மொழியில் தன்வயமாகச் சொற்கள் உருவாவது ஏதோ, இன்னொரு மொழியை விலக்க வேண்டும் என்ற வெறியால் அல்ல. தம் மொழியைக் காப்பாற்றிக் கொள்ளுவோம் என்ற இயற்கைச் சேம (safety) வெளிப்பாடே. இன்னொரு வகையிற் சொன்னால் அவர்கள் அந்தப் பொருளைத் தமதாக்கிக் கொள்ளுகிறார்கள். "இதில் என்ன தவறு?" என்று எனக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு மொழியும் வெளிச் சொற்களை ஏற்பதில் வேறுபட்டே நிற்கின்றன. நீங்கள் சொல்லும் முறையைப் பின்பற்றினால் இப்பொழுது இழையும் தமிங்கிலத்திற்கு, அதிகார முழுமையான ஒப்புதல் கொடுத்தது மாதிரி ஆகிவிடும்; முடிவில் தமிங்கில நோய் முற்றிப் போய் ஆங்கிலத்திற்கே நாம் மாறி விடுவோம். அதற்குப் பேசாமல் இந்தக் கால ஆட்சியாளர்களிடம் (எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்) சொல்லி நாளைக்கே ஆட்சிமொழியை ஆங்கிலத்திற்கு மாற்றச் சொல்லி அரசாணை போட்டு விடலாம்; அதன் மூலம் "தமிழைக் குழிதோண்டிப் புதைப்போம்" என்று சூளுரைக்கலாம்.
------------------------------------------------------------------------------
மாலன்:

ஆ. தமிழர்கள் கண்டுபிடித்த பொருட்களுக்கு அவர்கள் தங்கள் மொழியில் தாங்கள் விரும்பிய வண்ணம் பெயர் சூட்டலாம். ஆனால் அவர்களது கண்டுபிடிப்பல்லாதவற்றிற்கும் தமிழர்கள் பயன்படுத்திகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதற்கு வேறு பெயர் இட வேண்டுமா? மற்ற மொழிகளிலும் அப்படித்தான் நடக்கிறதா?

-------------------------------------------------------------------------------
இராம.கி:

மேலே இரு மொழிகளில் இருந்து ஒரு சில காட்டுக்களைக் கொடுத்து இருக்கிறேன்.
------------------------------------------------------------------------------
மாலன்:

நான் மிகச்சிறிய காலம் ஜப்பானில் வசிக்க வேண்டியிருந்தது. அங்கே shock என்பதை ஷாக்கு என்றுதான் சொன்னார்கள்.
Battery என்பதை பாத்தரி என்றும் car என்பதை கார் என்றும்தான் சொன்னார்கள்.

--------------------------------------------------------------------------------
இராம.கி:

சப்பானியரின் இந்தப் பழக்கம் பலருக்கும் தெரிந்ததுதான். நானும் சிறிது காலம் அங்கே இருந்து பயிற்சி எடுத்தவன் தான். எல்லாவற்றிற்கும் சப்பானேயே காட்டிக் கொண்டிருப்பதில் பொருள் இல்லை. "சப்பானிய ஆங்கிலப் பிறழ்ச்சியினால் இன்றைய தலைமுறை முற்றிலும் ஆட்பட்டு, ஆங்கிலக் கலப்பில்லாமல் சப்பானிய மொழியில் உரையாட முடியவில்லை" என்று சில மாதங்களுக்கு முன் திரு சுரேசு குமார், அகத்தியரில் என்று நினைக்கிறேன், ஒரு செய்தியைக் குறிப்பிட்டு இருந்தார். அந்த மடல் எண் எனக்கு நினைவு இல்லை. ஆக "அளவுக்கு விஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்று முன்னோர் அறிந்துதான் சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழர்கள் என்பவர்கள் தனித்தீவு அல்ல தான். இன்றைய உலகமயமாக்கலில் ஒன்றிக் கலக்க வேண்டியவர்கள் எனினும், "நம் மொழியையும் அடையாளத்தையும் தொலைத்துத் தான், இந்த சோதியில் கலக்க வேண்டுமா?" என்பதே பெரிய கேள்வி.
-------------------------------------------------------------------------------
மாலன்:

அமெரிக்கர்கள் மிளகு ரசத்தை இப்போதும், மிளகுத் தண்ணி என்றுதான் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்.

------------------------------------------------------------------------------
இராம.கி:

இங்கு பொரிம்புச் சொற்களுக்கும் (ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியைப் பாருங்கள்; பொரிக்கப் பட்டது பொரிந்து - brand எனப்பட்டது), பொதுமைச் சொற்களுக்கும், நீங்கள் குழம்பிக் கொள்ளுகிறீர்கள். "வோட்கா" என்பது கிட்டத்தட்ட ஒரு பொரிம்புப் பெயர் தான். அது உருசியாவில் தோன்றிய மது வகைக்கான பெயர். அத்தகைய வோட்கா என்ற சொல்லைத் தமிழில் அப்படியே தான் ஆளமுடியும். ஆனால் மது என்பதை liquor என்று ஆள முடியாது. அது போலப் பல்வேறு நாடுகளில் சாப்பிடுவதற்கென (சப்பிடுவது தான் தமிழில் சாப்பாடாயிற்று) சப்புநீர்களைப் (soups) பலவிதமாக உருவாக்குகிறார்கள். அந்தப் பொதுமையான உணவாக்கத்தில், "மிளகுச் சாறு" என்பது நம்மூரைச் சேர்ந்த ஒரு விதுமையான (specific) நீர்ப்பொருள். இதை இந்த வட்டாரப் பெயரிலேயே குறிப்பிட்டு, மற்ற மொழியினரும் தங்கள் மொழியில் அழைப்பது பல இடங்களில் இருக்கும் ஒரு வழக்கம் தான். இங்கே கிட்டத் தட்ட மிளகுச்சாறு (அல்லது மிளகுத்தண்ணீர்) என்பது ஒரு பொரிம்புப் பெயர் போலத்தான்.
------------------------------------------------------------------------------
மாலன்:

அலெக்சாந்தர் பிளமிங் பென்சீலினைக் கண்டுபிடித்தபோது, அதற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று சிலர் வற்புறுத்தினார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்: இந்த மருந்தைக் கொடுத்தது நானல்ல. பென்சிலீனியம் என்ற காளான். எனவே அதன் பெயர்தான் வைக்கப்பட வேண்டும்.

------------------------------------------------------------------------------
இராம.கி:

இங்கும் உங்கள் எடுத்துக் காட்டு எனக்குப் புரிபடவில்லை. "பென்சிலீனியம் என்ற காளானுக்கு எப்படிப் பெயரிட்டார்கள்?" என்று பார்த்திருக்கிறீர்களா? அலெக்சாந்தர் பிளமிங் தற்பெருமை பார்க்காதவராக இருந்திருக்கலாம்; அது அவருடைய சிறந்த குணநலன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்; ஆனால் "bacteria வை பாக்டீரியா என்று எழுதவேண்டும்" என்று சொல்லாதீர்கள். நீங்களே fungus என்ற ஆங்கிலச்சொல்லை தமிழெழுத்தில் எழுதாமல் "காளான்" என்று மொழிபெயர்த்திருக்கிறீர்கள், பாருங்கள்; இந்த மொழிபெயர்ப்பில் எந்த உணர்வு வேலை செய்ததோ, அதுதான் எங்களைப் போன்றோரை எல்லா இடத்தும் வேலை செய்யச் சொல்லுகிறது. நாங்கள் எல்லாவிடத்தும் இந்த மொழிபெயர்ப்பை நறுவிசாகச் செய்ய முற்படுகிறோம். நீங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உங்களுக்குத் தோன்றும் இடங்களில் மட்டும் செய்து கொள்ளுகிறீர்கள்.
-------------------------------------------------------------------------------
மாலன்:

இ.தமிழில் கலைச்சொற்கள் உருவாக்கும் போது சில நேரங்களில் அது செயல்படும்/ இயக்கப்படும் அடிப்படையில் பெயர் வைக்கப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் செயல்படும் முறை மாற, சொற்கள் அர்த்தம் இழந்துவிடுகின்றன. ரயில், புகைவண்டி என்று அழைக்கப்பட்டது. இப்போது புகைவிடும் என்ஜின்கள் அருங்காட்சியகத்திற்குப் போய்விட்டன. சைக்கிள் என்பது துவிச்சக்கர வண்டியாகவும் பின் இருசக்கர வண்டியாகவும் இருந்தது. மூன்று சக்ர சைக்கிளுக்கு என்ன பெயர்?

--------------------------------------------------------------------------------
இராம.கி:

இதெல்லாம் அரதப் பழசான புலனங்கள், மாலன்! இருந்தாலும் நீங்கள் இங்கு எடுத்திருப்பதால், சொல்லுகிறேன். ஒவ்வொரு சொல்லும் ஒரு மொழியில் எழும் போது அந்தந்தக் காலப் பின்புலம் அதனுள் இருக்கத் தான் செய்யும். இந்தக் காலத்தில் cycle தமிழாக்கப் படுமானால், சுருளை என்றே ஏற்பட்டிருக்கும். அப்பொழுது மூன்று சக்கரச் சுருளை என்று இடக்கற் படாமல் சொல்லிவிடலாம். cycle- க்கு மிதிவண்டி என்று எல்லோரும் சொல்லிப் பழகிவிட்டதால் இன்று பலரும் அதை ஏற்றுக் கொள்ளுகிறோம். சுருளை என்று மாற்றாது இருக்கிறோம்.
---------------------------------------------------------------------------------
மாலன்:

மிதி வண்டி என்று வைத்துக் கொள்ளலாம் என்றால் ரிக்ஷாவிற்கு என்ன பெயர்?

---------------------------------------------------------------------------------
இராம.கி:

இழு மிதிவண்டி என்று சொல்லிப் போனால் என்ன? குறைந்தா போகும்?
----------------------------------------------------------------------------------
மாலன்:

டெலிவிஷன் தொலைக்காட்சி. சரி,

---------------------------------------------------------------------------------
இராம.கி:

அதெப்படிச் சரி? உங்கள் வாதத்தின் படி, தொலைக்காட்சி என்பது இங்கு கண்டுபிடிக்கப் படவில்லை. எனவே அதை television என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே இங்கு இருக்கும் சூரியன், கதிரவன் போன்ற 40 சொற்களில் ஏதொன்றையும் புழங்காமல் "சன்" என்றுதான் பெயர் வைத்துக் கொள்ளுவேன் என்று அடம் பிடிக்கிறது பாருங்கள் ஒரு தொலைக்காட்சி, அவர்கள் கூட டெலிவிஷன் என்று சொல்லாமல் தொலைக்காட்சி என்று தான் புழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------
மாலன்:

closed circuit television என்ன?

---------------------------------------------------------------------------------
இராம.கி:

ஏன், சுற்று மூட்டிய தொலைக்காட்சி என்று சொல்வது கடினமாய் இருக்கிறதா, என்ன? அன்பிற்குரிய மாலன். கைலியை மூட்டுதல் என்று புழங்கியிருக்கிறீர்கள் அல்லவா? மூட்டுதல் என்றால் to close என்றுதான் பொருள். கதவை மூடு என்று எப்படிச் சொல்லுகிறோம்? மூடுவது தன்வினை; மூட்டுவது பிறவினை. மூடவைப்பதைத் தான் மூட்டுதல் என்று சொல்லுகிறோம். இங்கு தொலைக் காட்சியைக் கணுக்கி (connect) இருக்கும் சுற்றை (circuit) மூட்டி வைத்திருப்பதால், (மின்) சுற்று மூட்டிய தொலைக்காட்சி என்று ஆனது. இது போன்ற கூட்டுச் சொற்கள் புழங்கப் புழங்கப் பழகிப் போகும்.
-------------------------------------------------------------------------------
மாலன்:

பேருந்து = பஸ். சிற்றுந்து = கார். மினி பஸ் என்ன?

-------------------------------------------------------------------------------
இராம.கி:

சிறிய பேருந்து என்று சொல்லிப் போங்களேன். பொருள் வந்துவிடாதா, என்ன?
-----------------------------------------------------------------------------
மாலன்:

ஸ்கூட்டர் என்ன?

-----------------------------------------------------------------------------
இராம.கி:

துள்ளுந்து என்று சொல்லுங்கள்
----------------------------------------------------------------------------
மாலன்:

ஈ இவற்றையெல்லாம் தமிழ்ப்படுத்தித்தான் ஆகவேண்டும் என்றால் அதில் பாமரர்கள் கருத்தையும் கேட்டு ஏற்றுக் கொள்ள வேண்டாமா?

------------------------------------------------------------------------------
இராம.கி:

இந்த மாதிரி வாக்குவாதம் இரட்டை விளிம்புக் கத்தி மாதிரி. "தமிழாக்கம் செய்யும் போது பாமரர் கருத்தைக் கேட்கவேண்டும்" என்று சனநாயகம் பேசும் நம்மைப் போன்றோர், நாட்டில் நடப்பது எல்லாவற்றிற்கும் பாமரரைக் கேட்கிறோமா, என்ன?
-----------------------------------------------------------------------------
மாலன்:

அவர்கள் புகைவண்டி நிலையத்தை ரயிலடி என்கிறார்கள். தேர் வந்து நிற்குமிடம் தேரடி. ரயில் வந்து நிற்குமிடம் ரயிலடி. நாம் stationஐப் பிடித்துக் கொண்டு "நிலையமாக்கி'' விட்டோ ம்.

-----------------------------------------------------------------------------
இராம.கி:

பாமரர் பேச்சைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதில் நானும் ஆழ்ந்த கவனம் உள்ளவனே. அதை இந்த மடற்குழுவில் பலமுறை எழுதியிருக்கிறேன். அதே பொழுது தேரடி என்பது மட்டுமே தமிழில் உள்ளது அல்ல. சில பகுதிகளில் தேர்முட்டி என்றும், தேர்நிலை என்றும் கூடச் சொல்லப் படும். தேர், நிலை கொள்ளும் இடம் தேர்நிலை. பிறகு "பேருந்து நிற்கும் இடத்தைப் பேருந்து நிலை என்று சொல்லுவதில் என்ன தவறு?" என்று புரியவில்லை. "அம்" என்னும் ஈறு தமிழில் பெரியது என்ற பொருளைக் கொண்டு வருவதால் நிலை இங்கு நிலையமானது, அவ்வளவு தான்.
------------------------------------------------------------------------------
மாலன்:

முன்பெல்லாம் snow என்று முகத்தில் தடவிக்கொள்ள ஒரு க்ரீம் வரும். அதை செட்டி நாட்டு ஆச்சிமார்கள், முக வெண்ணை என்று அழைக்கக் கேட்டிருக்கிறேன்.

----------------------------------------------------------------------------
இராம.கி:

இந்தப் பெயரை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
----------------------------------------------------------------------------
மாலன்:

உருண்டையாக இருக்கும் கிழங்கு உருளைக் கிழங்கு. மிளகைப் போல உறைக்கும் காய் மிளகாய். எளிய மக்கள் கலைச் சொற்களை உருவாக்கிக் கொள்வதில் ஒரு logic இருக்கிறது.

-----------------------------------------------------------------------------
இராம.கி:

இந்த ஏரணம், அளவையை யார் மறுத்தார்கள்?
-----------------------------------------------------------------------------
மாலன்:

அவர்களையும் கலந்தாலோசிக்காவிட்டால் அறிஞர்களின் கலைச்சொல் அகராதியில் மட்டும் தான் இருக்கும்.

-----------------------------------------------------------------------------
இராம.கி:

நண்பரே!, நீங்கள் இப்படிச் சொல்வதை மீநிலை மக்களாட்சி என்று சொல்லுவார்கள். இதை நான் எழுதுவதால் சிலர் கோவம் கொள்ளக் கூடும். பாமரர்களைக் கலந்து ஆலோசிப்பது என்றால், 6 1/2 கோடி மக்களையுமா கலந்து ஆலோசிக்கிறீர்கள்? எந்த மொழியில் பாமரரைக் கலந்து ஆலோசித்து, வாக்குப் போட்டுச் சொற்களை உருவாக்கி யிருக்கிறார்கள்? இன்றைக்கு ஊரெல்லாம் பேருந்து நிலையம் என்று எழுதியிருக்கிறார்கள். இது என்ன வாக்குப் போட்டா வந்தது? நண்பர் மாலன், தவறாக எண்ணாதீர்கள். "நான் ஒரு சொல் பரிந்துரைக்கிறேன்" என்று வைத்துக் கொள்ளுங்கள்; அது, பத்துப்பேர், நூறுபேர், ஆயிரம் பேர் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ளப்பட்டால், நிலைக்கிறது. இப்படி நிலைப்பதற்கு ஆண்டுகள் பல கூட ஆகலாம். திடீரென்று ஒரு நாள் அந்தச் சொல் தூக்கி எறியவும் படலாம். ஏற்பதும் ஏற்காதது மக்களுடையது என்பது நடப்பைச் சொல்லுவது. அது ஏதோ கலந்து ஆலோசிப்பது அல்ல.
------------------------------------------------------------------------------
மாலன்:

பாமரர்களிடம், சைக்கிள் சினிமா எல்லாம் இருக்கும்.

------------------------------------------------------------------------------
இராம.கி:

பாமரர்களிடம் சைக்கிள், சினிமா இருப்பது இதனால் அல்ல, அய்யா, அது படித்தோரைப் பின்பற்றும் பழக்கத்தால் ஏற்பட்டது. படித்தோர் மாறாமல், பாமரர்கள் ஒருநாளும் மாற மாட்டார்கள். மற்ற உரையாட்டுகளில் எல்லாம் பாமரரைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்தக் கருத்துமுதல் வாத உரையாட்டில் மட்டும், பாமரரைத் தூக்கி வைக்கும் போக்கு, எனக்கு வியப்பையே தருகிறது. "படிச்சவங்களே இப்படிச் செய்ஞ்சா, படிக்காத பாமரர் மட்டும் உணர்வு வந்து தமிழைக் காப்பாறுவாரோ?" என்னவொரு விந்தை?
------------------------------------------------------------------------------
மாலன்:

உ இன்றையத் தமிழர்களின் பெரும்பாலான உணவில் தமிழ் இல்லை. சாம்பார் மராத்தியர் கொண்டு வந்தது.

------------------------------------------------------------------------------
இராம.கி:

சாம்பார் என்ற ஒரு குறிப்பிட்ட பக்குவம் தான் மராட்டியர் கொண்டு வந்ததே ஒழிய, குழம்பு என்ற இன்னொரு பக்குவம் இங்கே தமிழகத்தில் இருந்தது தான். கெட்டிக் குழம்பு, குழம்பு, இளங்குழம்பு என்று வகை வகையாகச் செய்வதை அறிய, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களுக்கு வாருங்கள். பல நேரங்களில் விதுமையையும் (specity) பொதுமையையும் (genericity) போட்டுக் குழப்பிக் கொண்டு யோசிக்கக் கூடாது.
------------------------------------------------------------------------------
மாலன்:

ரசம் தமிழா, வடமொழியா?

------------------------------------------------------------------------------
இராம.கி:

அரைத்துப் போட்டுக் கரைத்தது கரைசம்> ஹரைசம்> அரைசம்> அரசம்> ரசம். இந்த அகர முன்னொட்டு இப்பொழுது இல்லாததால், எத்தனையோ தமிழறிஞர்களைக் குழப்பி இருக்கும் ஒரு சொல் இது. நானும் ஒரு காலத்தில் இது வடசொல்லோ என்று மயங்கி இருந்தேன். பிறகு மோனியர் வில்லியம்சு அகரமுதலியைப் பார்த்து, "இதற்கு வடமொழி மூலம் காட்டுவது தவறு" என்று உணர்ந்தேன். பார்ப்பனர் பேசும் பல சொற்களும் தமிழ் தான். அவற்றின் முழு உரு தெரியாமல், "அவை வடமொழியோ?" என்று தவறாகப் புரிந்துகொள்வது நம்மூரில் மிகவும் நடக்கிறது. அப்படிப் பேசுபவர்களும் "அதை வடமொழி" என்று சொல்லிக் கொள்வதில், வெற்றுப் பெருமை கொள்ளுகிறார்கள். கேட்பவர்களும் மருண்டு போய், "அய்யர் சொல்லுவதில் உண்மை இருக்கும்; வேதம் படித்தவர் இல்லையா?" என்று தங்களை ஆற்றுப் படுத்திக் கொள்ளுவார்கள். முடிவில் குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்தது போல்தான் நம்மூரில் நடக்கிறது.

அரைசத்தைச் சாறு எனவும் சொல்வதும் உண்டு. அய்யங்கார் வீடுகளில் சாற்றமுது என்று அழைப்பதை நோக்குங்கள்.
---------------------------------------------------------------------------------
மாலன்:

பிரியாணி முகலாயர்கள் கொண்டு வந்தது.

---------------------------------------------------------------------------------
இராம.கி:

புழுங்குதல்/புழுக்குதல் என்பது boiling என்பதற்கான நேரடி தமிழ் இணைச் சொல். புழுங்கல் அரிசி என்ற சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள். புழுக்கலில் புலவு கலந்து சாப்பிடுவது சங்க இலக்கியத்திலேயே இருக்கிறது. பல காட்டுக்களைத் திரு மதுரபாரதி இங்கு மடற்குழுவில் ஒருமுறை எடுத்துரைத்தார். விதுமையையும் பொதுமையையும் மறுபடி குழப்பிக் கொள்ளக் கூடாது. பிரியாணி என்ற விதுமையாக்கம் முகலாயர் கொண்டு வந்தது. பொதுமைப் பழக்கம் ஏற்கனவே நம்மூரில் இருந்தது தான். புலவு என்ற சொல் மாட்டுக் கறியைத் தான் தமிழில முதன்முதலில் உணர்த்தியது. அதே சொல் மற்ற விலங்குகளின் கறிக்கும் பின்னால் பயன்படுத்தப் பட்டது. புலவோடு தொடர்புள்ளதுதான் புலத்தம் என்னும் blood. ஆங்கில இணையைச் சொன்னால் யார் கேட்கிறார்கள்?
--------------------------------------------------------------------------------
மாலன்:

இட்லி தமிழ்ச் சொல்லா?

-------------------------------------------------------------------------------
இராம.கி:

புலவர் இளங்குமரன் மிகத் தெளிவாக இதைப் பற்றி எழுதியிருக்கிறார். இதன் முதல் தோற்றம் இட்டவி என்பதாகவே அவர் சொல்லுகிறார். இட்டவி பற்றிய கல்வெட்டு திருமலைக் கோவிலில் இருக்கிறது. அதே போல தோயை என்பதே தோசை என்று ஆனது என்றும் இளங்குமரன் விளக்குவார்.
----------------------------------------------------------------------------------
மாலன்:

பழந்தமிழ் இலக்கியங்களில் அரிசி என்ற சொல் எந்தக் காலத்திலிருந்து வழங்கப்பெறுகிறது என்பதை அறிஞர்கள் சொல்ல வேண்டும். சோறு அல்ல, நான் கேட்பது அரிசி.

-----------------------------------------------------------------------------------
இராம.கி:

இதைப் பற்றி நா. கணேசன் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். எனவே இப்பொழுது இதைச் சொல்ல நான் முற்படவில்லை. இந்தச் சொல்லை மட்டுமே விவரித்து எழுத வேண்டுமானால் தனி ஒரு கட்டுரையே எழுத வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
மாலன்:

உணவு விஷயத்தில், உடை விஷயத்தில், காலக் கணக்கில் பிற மொழிகளை, கலாசாரங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அறிவியலில் மட்டும் ஆசாரம் ஏன்?

----------------------------------------------------------------------------------
இராம.கி:

ஏதோ ஏற்றுக் கொள்ளப் பட்டது அல்ல. "எதை ஏற்கலாம், எதை ஏற்கக் கூடாது" என்பதில்தான் வேறுபாடு.
----------------------------------------------------------------------------------
மாலன்:

என்னைக் கேட்டால் அறிவியலால் உருவான பொருட்கள் உலகெங்கும் எப்படி அழைக்கப்படுகிறதோ அப்ப்டியேதான் இங்கும் வழங்கப்பட வேண்டும். அதை உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும் தமிழர்கள் இது நம் அறிவினால் உருவானதல்ல, இது நமக்கு யாரோ இட்ட பிச்சை, கொடை என்ற எண்ணம் சிந்தையில் கிளர்ந்து, நாமும் இது போல உலகிற்கு அளிக்க வேண்டும் என்ற ரோசம் மேலிட்டு, முனைப்புப் பெற வேண்டும். இது தமிழர்களின் அறிவியல் மனோபாவம் வளர உதவும்.

----------------------------------------------------------------------------------
இராம.கி:

இது போன்ற உணர்வு வரும் என்றா நினைக்கிறீர்கள்? எள்ளளவும் நடக்காது. பெருமிதம் சீர்குலைந்து பீடற்றுக் கிடக்கும் அமெரிக்கக் கருப்பர்கள் (அப்படி ஆக்கி வைத்திருக்கிறது அங்கிருக்கின்ற குமுகாயம். பெரும்பாலான அமெரிக்கக் கருப்பர்கள் அடிமையாவதற்கு முன்னால் wolof என்ற மேற்கு ஆப்பிரிக்க மொழியைப் பேசிவந்தவர்கள். இன்று அவர்கள் 400 ஆண்டுகளில் அந்த மொழியையே மறந்து ஆங்கிலச் சோதியில் கலந்து விடவில்லையா? அது போலத் தான் நாமும் ஆவோம்.) போல நம் தோற்றம், மரபு எல்லாம் குலைந்து, இழிவு பட்டுக் கிடப்போம். எதுவுமே தமிழில்லாமல், ஒரு கிரியோல் மொழியை உருவாக்கி தமிழை ஒழிப்பதற்கே இது வழிவக்குக்கும்.
-----------------------------------------------------------------------------------
மாலன்:

ஆங்கிலம் இணையத்தில் பயன்படுத்தப்படுவதைக் கண்டு நாம் வேகம் பெற்றுத் தமிழில் இணையத் தளங்களை அமைக்கவில்லையா?

-----------------------------------------------------------------------------------
இராம.கி:

இதுவும் ஒரு வகையில் பழம்பெருமை பேசுவதுதான். பழம்பெருமை, மரபு ஆகியவை எல்லாமே தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறும் நீங்கள் இப்படி எழுதுவது என்னை வியக்க வைக்கிறது. இங்கு இருக்கின்ற தாளிகைக்காரர்களும், நாளிதற்காரர்களும் ஒன்று சேர்ந்து தளத்திற்கொரு வார்ப்பு (font) வைத்திருக்கும் சொத்து மனப்பான்மையை விடவில்லை; இணையத்தில் தமிழ் வந்துவிட்டதென்று வெற்று வேட்டு முழக்கம் விட்டுக் கொண்டிருக்கிறோம். இணையத்தில் ஒரு தமிழ் இல்லை, ஐயா. ஆயிரம் தமிழ்க் குறியீடுகள் இருக்கின்றன. இதையா வளர்ச்சி என்கிறீர்கள்?
-----------------------------------------------------------------------------------
மாலன்:

தமிழுக்குத் தனி முகவரி கொடுக்கும் யூனிகோட் எழுத்துருக்களை உருவாக்கவில்லையா?

----------------------------------------------------------------------------------
இராம.கி.

இந்த ஒருங்குறியும் சரியென்றா எண்ணுகிறீர்கள்? அதைப் பற்றி எழுதினால் இன்னும் நீளும். இன்றைக்கு இருக்கும் குறியீடுகள் சரவலுக்கு உள்ளானவை என்றே நான் எண்ணுகிறேன். இங்கு இருக்கும் பல நண்பர்கள், வல்லுநர்களைக் கேளுங்கள். இன்றைக்கு இருக்கிற குறியீடுகள் மா.கோ.இரா.வுக்குப் பின் வந்த தமிழை மட்டுமே குறிப்பவை. மேல்நாட்டில் கிறித்துவுக்கு முன், பின் என்று குறிப்பதுபோல் "தமிழ் மொழியும் மா.கோ.இரா.வுக்கு முன், பின் என்று ஆகிவிட்டது" என்று அறிவீர்களோ? இன்றைக்கு இருக்கும் தமிழ்க் கணிமை மா.கோ.இரா.வுக்குப் பின்னுள்ள எழுத்துக்களை மட்டுமே ஆளுகிறது. இங்கே நான் சுட்டிக் காட்டும் சிக்கல் மிகப் பெரியது. இதை யாரும் உணர்ந்தது போல் தெரியவில்லை. இங்கு அலசினால் மிகவும் நீளும். எனவே தவிர்க்கிறேன்.
----------------------------------------------------------------------------------
மாலன்:

அந்த முனைப்பைப் பெற வேண்டுமானல் அறிவியற் சொற்கள் அவை எந்த மொழியில் அமைந்துள்ளதோ அதே மொழிச் சொற்களாகவே வழங்கப்பட்டு நம்மை தினம் உறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

-----------------------------------------------------------------------------------
இராம.கி:

உறுத்தாது; மூளை மழுங்கிப் போகும். எத்தனை நேர்காணல்களைத் தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள்? எவ்வளவு தடவை அனிச்சைச் செயலாக ஆங்கிலம் கலந்து "so, thanks, what I mean, இப்படி எத்தனை எத்தனையைக் கலக்கிறார்கள்?" அதுபோலக் கொஞ்சம் கூட நாணம் இன்றி கலந்து பேச நாம் அதிகாரம் கொடுத்தவர்கள் ஆவோம்.
------------------------------------------------------------------------------------

அன்புடன்,
மாலன்

------------------------------------------------------------------------------------
அன்புடன்,
இராம.கி.

பி.கு:>> நீங்கள் கொடுத்துள்ள நிகரான தமிழ் சொற்களை இலங்கை வாழ்
நம் தமிழர்கள் யதார்த்த வாழ்வின் உரையாடலில் பயன்படுத்துகிறார்களா?

திரு. சத்யா: இலங்கையர்கள் பயன்படுத்துவதில்லை. 'பாவிக்கிறார்கள்' :-)

11 comments:

Anonymous said...

சட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20703292&format=html

Unknown said...

//பழந்தமிழ் இலக்கியங்களில் அரிசி என்ற சொல் எந்தக் காலத்திலிருந்து வழங்கப்பெறுகிறது என்பதை அறிஞர்கள் சொல்ல வேண்டும். சோறு அல்ல, நான் கேட்பது அரிசி//


அரிசி பல்வேறு மொழிகளில் பின்வருமாறு அழைக்கபடுகிறது

பழந்தமிழ் : உர்கி,அக்கி,அரிசி,அரி,

sanskrit :வ்ரிகி

பர்மா :சான்

ஆஸ்டிரியா :பெராஸ்

இரான் :வ்ரிசா,பிரிந்திஸ்,வரிந்திஸ்

ஆப்கன் :விரிசி

கிரேக்க,ரோமன்
மொழிகள் :ஒரிசியான்,

சீனம் : டாவு

மலாய் : பெராஸ்

இவை யாவுக்கும் மூலமான பழந்தமிழ் சொல் விரிக்க்கியா(wrighia) என்று டட்டில் தெரிவிக்கிறார். விரிக்க்கியா அரிசியான வரலாறு இதோ விரிக்கியா-->வ்ரிக்க்கி-->ரிக்க்கி-->அரிக்க்கி-->அரிக்கி-->அர்கி-->அரிசி இதே போல் ஒவ்வொரு மொழியிலும் விரிக்கியா அரிசி(Rice) ஆன கதையை Edwin tuttle விவரிக்கிறார்.இதன் மூலம் பழந்தமிழ் சொல்லான விரிக்கியா என்பதே உலகின் பல்வேறு மொழிகளிலும் அரிசி(rice) என வழங்கப்படுகிறது என்பதை அவர் நிருபணம் செய்கிறார்.

http://holyox.blogspot.com/2006/02/52.html

மாதங்கி said...

1. robot,
robotics,humanoid,
internet server

இவற்றிற்கு பொருத்தமான சொற்களை தயவுசெய்து கூறுங்கள்.

கோவி.கண்ணன் said...

மிகச் சிறப்பான கட்டுரை, பதில்கள் விளக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மாலன் போன்ற நன்கு அறியப்பட்ட ஊடகக்காரர்கள் இவ்வளவு பிற்போக்கான கருத்துக்களை வைத்திருப்பது வியப்பும் கவலையும் அளிக்கிறது. இந்த மனநிலை தான் இவரைப் போன்றவர்கள் பங்கு கொள்ளும் ஊடகங்களிலும் வெளிப்படுகிறது.

உங்கள் விளக்கங்கள் நன்று.

மாதங்கி - robot - தானியங்கி, robotics - தானியங்கியியல், internet server - இணைய வழங்கி.

மாதங்கி said...

மிக்க நன்றி. தங்கள் கட்டுரைகள் என் தமிழை செம்மைப்படுத்த மிகவும் உதவுகின்றன.

தானியங்கி- கச்சிதமாக உள்ளது. நான் இதுநாள் வரை இயந்திரமனிதன், இயந்திரமனிதவியல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

Anonymous said...

அன்பின் இராமகி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பி.கு. தமிழாண்டுகளின் தமிழ்ப்பெயர்கள் என்ன?

Venkat said...

அன்பு இராம.கி - புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் மாலனுக்கும் இடையே நடந்த இந்த மடலாடலின் காலகட்டம் என்ன?

இதைப் பற்றி நாம் பல முறை பலவிடங்களிலும் எழுதியாகிவிட்டது. இருந்தும் இன்னும் இந்தக் கருத்துக்கள் தலையெடுத்துக்கொண்டுதானிருக்கின்றன.

கிட்டத்தட்ட இதே முறையில் எனக்கும் எழுத்தாளர் நண்பர் நாகூர் ரூமிக்கும் இடையே நடந்த ஒரு பரிமாற்றம் இங்கே;

நாகூர் ரூமியில் தமிழோவியக் கட்டுரை : http://www.tamiloviam.com/html/Exclusive50.asp

இதற்கான என் மறுவினை;

அறிவியலில் மொழியின் தேவை - நாகூர் ரூமியை முன்வைத்து - பாகம் -1, பாகம் -2

நாகூர் ரூமியின் பதில்

இராம.கி said...

அன்புள்ள பெயரில்லாதவருக்கு,

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ரவி சிரீனிவாசின் அந்தக் கட்டுரையைப் படிக்கச் சொல்லுகிறீர்களா? படித்திருக்கிறேன்.

அதற்கு மறுமொழி சொல்லச் சொன்னால், இப்போது செய்வதாய் இல்லை. உயர்நீதி மன்றத்தில் இருக்கும் இன்றைய நடைமுறை திரு. ரவிக்குத் தெரியுமா என்று எனக்கு அய்யமாய் இருக்கிறது.

சட்டம் பற்றிய நூல்கள் எழுதுவதற்குத் தேவையான கலைச்சொற்கள் வேரில் பழுத்த பலாவாக ஒரு 40, 50 ஆண்டுகளாக நம்மூரில் இருக்கின்றன. பொத்தகங்களாய், அகரமுதலிகளாய், கலைக்களஞ்சியங்களாய் வெளிவந்திருக்கின்றன. விவரம் அறிந்தவருக்கு அவை தெரியும். திரு. ரவிக்கு அவை தெரியாமல் இருக்கலாம். தவிர உயர்நீதி மன்றத் தமிழ்ப் பயன்பாட்டின் ஊடே, ஆங்கிலமே வரக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. தமிழைப் பயன்படுத்துவதில் ஒரு அலுவத் தொடக்கம் (official beginning) இருக்கட்டும் என்றுதான் பலரும் சொல்லுகிறார்கள்.

என்ன செய்வது? அறியாது இருப்பவரிடம் உரையாடலாம்; மாறாய், தன் கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டு கிடக்கிறதென்று சொல்லுபவரிடம் உரையாட முடியுமோ?

அன்பிற்குரிய செல்வன்,

அரிசி பற்றிய உங்கள் கருத்திற்கு நன்றி. அதைப் பற்றி விவரித்தால், சொல்ல வந்ததின் முகன்மைப் பொருள் விலகிவிடும் என்பதால் தவிர்த்திருந்தேன்.

அன்பிற்குரிய மாதங்கி,

robot, robotics, humanoid, internet server ஆகியவற்றிற்குத் தமிழ்ச்சொல் கேட்டிருந்தீர்கள். திரு.ரவிசங்கர் கூறிய தானியங்கி என்ற சொல் automaton என்பதற்கு இணையானது. எல்லா automaton களும் robot களாய் இருக்கத் தேவையில்லை. robot என்பது automaton என்னும் பொதுமையில் ஒரு விதப்பான பகுதி. நீங்கள் கூறிய சொற்களை நினைவில் வைத்துக் கோண்டு, இன்னொரு முறை இவை பற்றி எழுதுகிறேன். அதுவரையில் தானியங்கி என்ற சொல்லைப் பழகுங்கள். எனக்கும் உடன்பாடு தான்.

பொதுவாக server என்பதற்குச் சேவையர் என்றே நான் பரிந்துரைக்கிறேன்.

அன்பிற்குரிய கோவி. கண்ணன்,

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

அன்பிற்குரிய ரவி சங்கர்,

மாலனுடன் இயல்பான முறையில் உரையாட முடியும். ஆர்வமுடன் செய்யக் கூடியவர். இருந்தாலும் அவர் கருத்துக்களை இந்தப் புலனத்தில் என்னால் ஏற்க முடியாது. இந்த உரையாடலைப் பின்னால் பொத்திமைக்காக (posterity) இங்கு பதிந்து வைத்தேன். அவ்வளவு தான்.

தானியங்கி பற்றிய என் கருத்தைப் பின்னால் விரிவு படுத்தி எழுதுகிறேன்.

அன்பிற்குரிய மணிவண்ணன்,

புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழாண்டுகளின் தமிழ்ப்பெயர்கள் கேட்டிருக்கிறீர்கள்; அது பற்றிய சிந்தனையில் ஒரு தெளிவு எனக்கு ஏற்படவில்லை. ஏற்பட்ட பின்னால், வருகிறேன். இந்தக் கேள்வி பலராலும் கேட்கப்படுகிற, நெடுநாள் விடை தெரியாத ஒன்று.

அன்பிற்குரிய வெங்கட்,

மாலனோடு நடந்த உரையாடல் 2002-2003 என்று நினைக்கிறேன். தமிழ் உலகத்தில் நடந்தது. தேடிப்பார்த்தால் சரியான நாள் அகப்படும். ரூமியோடு நடந்த உரையாடலையும் அடுத்துப் பதிவு செய்திருக்கிறேன். எல்லாம் பொத்திமைக்குத் தான்.

அன்புடன்,
இராம.கி.

செல்வா said...

மாலன் இவ்வளவு பிற்போக்கான எண்ணங்கள் கொண்டவரா!! அவருடைய கேள்விகளைக்கண்டு உண்மையிலேயே நான் வியந்து போனேன். அறிவியலைத் தமிழில் பயில்வது பன்னூறுமடங்கு நம் அறிவையும், புத்தாக்கத் திறனையும் பெருக்கும். அறிவூற வேண்டுமென்றால் தாய்மொழியில்தான் பயில வேண்டும். ஏதோ ஒருசிலர் மட்டுமே எந்த மொழியில் பயின்றாலும் சிறப்பாகப் பயிலும் திறன் பெற்றிருப்பர். மேம்போக்கான செய்திப் பரிமாற்றம் வேறு கற்றனைத்தும் ஊறும் உண்மைக்கல்வி வேறு. மாலன் அவர்களுக்கு நீங்கள் அளித்த மறுமொழிகள் சிறப்பாக இருந்தன. உங்கள் பேருழைப்புக்கு நன்றி இராம.கி. ஒரு நாளும் வீணாகாது. பலரும் பயன் பெறுவர்!

Of men and mice, also some protozoans said...

(Pathirrupathu)I think so
Oonsuvai adisil- biryani
kuyyudai adisil-fried rice

many such words are available in literature