Friday, April 20, 2007

செகை - 1

பொதுவாய் sex என்ற சொல்லுக்கு இணையாய், இடத்திற்குத் தகுந்தாற் போல், பலரும் காமம், பால் என்ற சொற்களை கையாளுகிறார்கள். இன்னும் சிலர், இதைப் பேசும் போது, சுற்றி வளைத்தே சொல்லப் பழக்கப் பட்டு, சட்டென்று ஆங்கிலத்திற்கு தாவுவதையும் பார்க்கலாம். இருந்தாலும், "sex- ற்கு இணைச்சொல் தமிழில் உண்டோ ?" என்ற சிந்தனை எழுகிறது. நண்பர் இண்டி ராம் இது பற்றி ஒருமுறை கேட்டிருந்தார். முயன்றால் துல்லியமாய், அருவருப்பில்லாமல், இதைத் தமிழில் சொல்ல முடியும்.

கீழே 'தமிழறிவோம்' என்ற பொத்தகத்தில் இருந்து, முனைவர் கு.அரசேந்திரன் எழுதியதை முன் குறிப்பிட்டு, பின் என் குறிப்புகளையும் கொடுத்திருக்கிறேன். இந்தப் பதிவு கண்டு, ஒரு சிலர் புருவத்தை உயர்த்தலாம். "என்ன இது, இதைப் போய் இவர் எழுதுகிறார்?" என்று ஏற்காமலும் போகலாம். குறுகுறுக்காமல் படியுங்கள்.
---------------
செகு - sex

ஆண்பால், பெண்பால் என்பன இலக்கணப் பாடத்தில் முதற்பாடம். இங்குப் 'பால்' என்னும் சொல்லிற்குப் பிரிவு என்பதே பொருள். அதாவது மக்களினத்தில் இவர் ஆண் பிரிவு, இவர் பெண் பிரிவு என்று சொல்ல வரும் போது தான் இந்த ஆண்பால் பெண்பால் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம், பகு-பகுப்பு என்னும் அடிப்படையில் பகு-பகல்-பால் என இச்சொல் பிறந்தது.

பால் என்பதற்குரிய ஆங்கிலச் சொல் sex. sex-male, female என நாம் ஆங்கில வழக்கில் எழுதி வருகிறோம். இந்த sex-சொல்லின் மூலம் ஒரு பழைய தமிழ்ச் சொல்லோடு உறவுடையதாகத் தெரிகிறது.

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று" (259)

என்னும் குறள் எல்லோருக்கும் தெரியும்.

விலங்குகளின் உயிரை அதன் உடலிலிருந்து பிரித்துக் கொல்லக் கூடாது என்பதைத்தான் இங்குச் 'செகுத்தல்' சொல்லால் வள்ளுவர் சொல்லியுள்ளார்.

திருவள்ளுவர் கூறிய செகுத்தல் சொல், சங்க நூல்களில் பல இடங்களில் சொல்லப் பட்டுள்ளது.

இலக்கிய வழக்குகளில் மட்டுமல்லாமல், மிக எளிய பேச்சு வழக்கில் கூட இந்தச் 'செகு'வைக் காணலாம். எண்ணெய் ஆட்டும் 'செக்கு' நாம் அறிந்ததே. அதன் அடிச்சொல்லும் 'செகு' என்பதுதான். எண்ணெயையும், பிண்ணாக்கையையும் செகுப்பது, அதாவது பிரிப்பதே, செக்காகும். உருண்டையாய் விளைந்த கமுகுக் கொட்டையைப் பகுக்கிறோம். அதுதான் பகு-பக்கு-பாக்கு எனப் படுகிறது. இவ்வாறுதான் 'செகு'த்தலை செய்வது 'செக்கு' ஆயிற்று.

ஆணாகப் பெண்ணாகப் பிரிந்திருக்கின்ற மக்களை ஆண்பால், பெண்பால் என்று சொல்கிறோமல்லவா, அதையே இவர் ஆண் செகுப்பு, இவர் பெண் செகுப்பு என்று கூடப் பிரிதொரு தமிழ்ச் சொல்லால் சொல்லலாம். 'பால்' இலக்கணத்தைச் 'செகு இலக்கணம்' என்று சொன்னால் பொருள் ஒன்றே.

'sex' ந்னும் ஆங்கிலச்சொல் 'sexus' என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாக ஆங்கில நூல்கள் கூறுகின்றன. தமிழ்ச் சொல் ஒன்று மேலை உலகிற்குச் செல்லும் போது அடையும் மாற்றங்களில் எளிதான ஒரு மாற்றம் இதுதான். அதாவது தமிழ்ச் சொல்லின் இறுதியில் 'ஸ்' ஒலி சேர்ந்துவிடும். அந்த வகையில் தான் நம்முடைய பழைய துறைமுகங்களான தொண்டி, முசிறி என்பதைத் தொண்டிஸ், முசிறிஸ் எனக் கிரேக்க நூலாசிரியர் எழுதினர். இதே அடிப்படையில் தான் தமிழின் 'செகு' என்னும் சொல் இலத்தீனில் 'sexus' என்றாகியது.

sex (F.,L.) F. sexe L. sexum acc. of sexus, sex perhaps; orig.- 'division' - Skeat
sex - either of the main divisions (male and female) into which living things are placed on the basis of their reproductive functions. (Middle English from Old French sexe or Latin sexus) - C.O.D
---------------
இனிமேல் இராம.கி. யின் இடுகை:

செகுப்பு என்பதைக் காட்டிலும், sex - க்கு ஈடாக [வகு>வகை என்பதைப் போல] செகு>செகை என்றே நான் பரிந்துரைப்பேன். ஏனெனில் இதனோடு தொடர்புடைய sect, section, insect, சாகை, சாதி, second, secret, sector, segregate, segment, sickle, separate என்ற சொற்களுக்கும் ஒரு தொடர் பொருத்தம் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் ஒரே அடிச்சொல்லால் தமிழில் குறிக்க முடியும். காமம், பால் போன்றவை இருந்தாலும், "ஒரு பொருள், பல சொற்கள்" என்பது தமிழுக்கு புதிதல்லவே? செகுதல்/செகுத்தலின் தொடர்ச்சியாக கீழே உள்ள சொற்களைப் பார்க்கலாம்.

சில்லுதல் என்பது உடைப்பது, பிரிப்பது, போன்ற பொருட்பாடுகளைத் தமிழில் குறிக்கும். சில்லில் தோன்றிய சிகர ஓசைச் சொற்களைத் தவிர்த்துவிட்டு, சில்>செல்>செல்கு>செகு என்ற வளர்ச்சிக்குப் பின் விளைந்த சொற்களை மட்டுமே இந்த இடுகையில் பேசுகிறேன்.

செகுதல் என்பது பிரிதலை உணர்த்தும் தன்வினை. செகுத்தல் என்பது அதன் பிறவினை. செகுத்தலில் இருந்து ஏவல் வினையாகவும், பெயர்ச்சொல்லாகவும், நாம் முதலில் பார்க்கும் சொல் செகுத்து என்பதாகும். இது அப்படியே sect என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையாக அமையும். செகுத்தின் நீட்சியாய் வரும் சொல்லான செகுத்தம், ஆங்கிலத்தில் section என்பதைக் குறிக்கும். இன்றையத் தமிழில் department, section, division எனப் பலவற்றிற்கும் பிரிவு என்ற ஒரு சொல்லையே வைத்துக் கொண்டு ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த ஒப்பேற்ற வழக்கத்தால் தான் துல்லியமான அறிவியற் கட்டுரைகளைத் தமிழிற் படைக்க இயலாது இருக்கிறோம். மிக எளிதாக பகுத்தம் (department), செகுத்தம் (section), வகுத்தம் (division) என்று நாம் சொல்ல முடியும்; ஆனாலும் சொல்லத் தயங்கி ஆங்கிலச் சொற்களையே பெரிதும் புழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பாழாய்ப் போன தயக்கம் தான், நம் தமிழ்நடையைச் சரிசெய்ய விடாது தடுத்து, தமிங்கிலம் பரவ வழிவகை செய்கிறது.

செகுத்தல் என்ற வினைச்சொல்லோடு, இடை, பகு(>பா) என்ற முன்னொட்டுக்களைச் சேர்த்தால், இன்னும் சில சொற்களை உருவாக்க முடியும். ஒரு பொருளின் இடையில் (ஊடே) போய்ச் செகுப்பது இடைச்செகுத்தல் (to disect) என்றாகும்.

ஒரு பண்டுவர் (surgeon) உடலுறுப்பை இடைச்செகுத்துக் கட்டியை அறுத்துப் பின் பண்டுவம் செய்கிறார்.

இன்னொரு விதத்தில் பகுதி பகுதியாய்ச் (பகுதி>பாதி) செகுப்பது பாச்செகுதல் (to bisect) என்றாகும்.

ஒரு முக்கோணத்தின் அடிச்சிறகை (base side) பாச்செகுத்து அதன் மூலம் முக்கோணத்தை இரண்டாக்குகிறோம்.

உட்புகுந்து துருவிச் செகுத்தலை உட்செகுத்தல் (to insect) என்றே சொல்லலாம். ஏதோ ஒரு பொருளில் தோண்டிக் கொண்டு, உட்செகுத்துப் போகும் உயிரியை உட்செகுவி (= insect) என்றே ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். நாமோ, இந்த உட்செகுதல் (= பிரித்துக் கொண்டு உட்செல்லுதல்) என்னும் பொருளில் இருந்து, சற்றே மாறுபட்டு வரும் இன்னொரு வினையான பூளுதல் (= பிளத்தல்) வினையை வைத்து, பூள்ந்து போகும் insect -யை பூ(ள்)ச்சி என்றே தமிழில் சொல்லுகிறோம். பூளுதலில் இருந்து இன்னொரு பெயர்ச்சொல்லையும் பெறலாம்; ஆனால், அதை இடக்கர் அடக்குதலாய், நாகரிகம் கருதி, பொது அவையில் சொல்ல இயலாது.

அன்புடன்,
இராம.கி.

17 comments:

Anonymous said...

ஐயா, இலங்கையில் "department" என்னும் சொல்லை "தினைக்களம்" என்று குறிப்பிடுகின்றோம். இது தமிழ் சொல்லா?

Anonymous said...

bisection, in geometry, dividing something into two equal parts.

பாச்செகுதல் இந்த அர்த்தத்தை தரவில்லையே?

Anonymous said...

இந்தப் போடு போடுறீகளே அண்ணே! இடக்கரை முழுக்க அடக்காமல் கோடி காட்டியதும் நல்லதுதான்.
ஆறுமுகத்தமிழன்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

செகு, sex, section தொடர்பு வியப்பளிக்கிறது. இது போல் பல வேர்ச்சொற்களைத் தொடர்ந்து அடையாளம் காட்டுவதற்கு நன்றி. பூச்சி என்பது ஆக்கப்பட்ட கலைச்சொல்லா? இது மரபு வழியாக மக்களால் சொல்லப்படும் சொல் என்றல்லவா நினைக்கிறேன். இது மரபுச் சொல் என்றால் ஆங்கிலச் சொல்லான insect என்பதுடன் பொருத்திப் பொருள் பார்ப்பது எப்படி பொருந்தும்.

பகுத்தம், செகுத்தம், வகுத்தம் ஆகிய சொற்கள் நன்று. நன்றி

Anonymous said...

ஐயா முருங்கை தமிழ் சொல்லா அல்லது சிங்கள சொல்லா?

Anonymous said...

Department துறை, Division பிரிவு,
சொற்கள் புழக்கத்தில் உள்ளன.தமிழில் incest என்பதற்கு விலக்கப்பட்ட உறவு,தவிர்க்கப்படவேண்டிய உறவு அல்லது விலக்கப்படவேண்டிய உறவு என்றும் சொல்ல முடியும். உங்களைப் போன்றவர்கள் புதுப்புதுச் சொற்களை
உருவாக்கி குழப்பத்தினை அதிகரிக்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது. கலைச்சொல்லாக்கம்
என்ற பெயரில் ஒவ்வொருவரும் தத்தம் விருப்பம்,தெரிவு, தமிழறிவு கொண்டு பலச் சொற்களை
உருவாக்கிவருவதால் புழக்கத்தில் உள்ள சொற்களை அறிந்தோருக்கும் கூட குழப்பமே மிஞ்சுகிறது. உதாரணமாக நீங்கள் கையாளும் பல சொற்கள் உங்களுக்கு புரியும், பிறருக்கு ?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

anonymous - departmental store, grocery store இரண்டுக்கும் எப்படி வேறுபாடு காட்டுவது என்று சொல்வீர்களா? உயிரியல் பகுப்பு முறையில் division, section, என்று பலவும் வருகிறது. எல்லாவற்றுக்கும் பொத்தாம பொதுவான ஒரு சொல் வைத்து ஒப்பேற்றுவதால் ஒரு துளியும் துல்லியமான அறிவியல் கருத்துக்களைத் தமிழில் சொல்ல முடியாது. இராம. கி அவர்களின் அணுகுமுறையில் சில வேளை தவறு இருக்கலாம். அதற்காக முயற்சியையும் நோக்கத்தையும் அதற்கான தேவையையும் குறை சொல்ல முடியாது. பலரும் பல கலைச்சொற்களை உருவாக்கலாம். ஆனால், மக்களுக்கு ஏற்புடைய சொற்கள் தாம் நிலைக்கும். எதையும் எவராலும் திணித்து விட முடியாது என்பதால் இது போன்ற முயற்சிகள் எப்போதும் பாராட்டுதலுக்கு உரியவையே. இராம. கி அவர்களின் பரிந்துரைகள் பயன்பாட்டுக்கு வராவிட்டால் கூட இவர் சொல்லும் வேர்ச் சொல் விளக்கங்களால் பல தெரியாத விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. வேறு பிரச்சினைகளுக்கு நல்ல விடைகளைத் தருகிறது. இந்த வலைப்பதிவின் முக்கிய வெற்றியாகும்.

incest என்பதற்கு அவர் விளக்கம் சொல்லவே இல்லை. insect (பூச்சி) என்பதைத் தான் விளக்க முற்பட்டிருக்கிறார்.

incestக்கு நீங்கள் கூறியுள்ளவை அனைத்தும் வழக்கில் இருந்தாலும், அவை யாவும் குறையுடைய மொழியாக்கங்களே. ஒரு செய்கையைக் குறித்த பெரும்பான்மை judgmentஐத் தெரிவிப்பதாகவே இச்சொற்கள் அமைந்திருக்கின்றன.

குலவுசனப்பிரியன் said...

anonymous -
//bisection, in geometry, dividing something into two equal parts.

பாச்செகுதல் இந்த அர்த்தத்தை தரவில்லையே?//

கீழே கண்டபடி பாதியாகப் பிரித்தல் என்பதற்கு, இரண்டு சமபங்காக பிரிப்பது என்று தானே பொருள்.
//(பகுதி>பாதி) செகுப்பது பாச்செகுதல் (to bisect) என்றாகும்.//

Anonymous said...

departmental store, grocery store
Mr.Ravisankar
departmental store-palporuzh angadi
grocery store-Maligai kadai/angadi
You seem to live in a different age
and different world.You are fit to be a fellow traveller of Mr.Ira.Maki.
உயிரியல் பகுப்பு முறையில் division, section, என்று பலவும் வருகிறது.
Your knowledge of tamil is amazing :(.divison here means
pirithal or piLvaupaduthal.
Have you ever read any tamil
book on science.Have you ever
read Kalai Kathir.

Anonymous said...

Divisional office - kotta aluvalagam
cell division.He division means
a different thing.No science book in tamil will use the word
kotta in this context.
There are words
in tamil to differentiate between contexts.If you dont know that blame yourself.

Anonymous said...

bisection, in geometry, dividing something into two equal parts.

பாச்செகுதல் இந்த அர்த்தத்தை தரவில்லையே?
It will not.But if some people
lack commonsense what can you
and I do about it.

இராம.கி said...

முதலில் பின்னூட்டிய பெயரில்லாதவருக்கு,

இலங்கையில் தினைக்களம்/திணைக்களம் என்ற சொல் department - ற்கு இணையாய் நெடுங்காலம் புழங்கி வருவதை நான் அறிவேன். அது நல்ல தமிழ்ச் சொல்லே. அது புதலியல் (botany) வழியே எழுந்த சொல் என நினைக்கிறேன். ஒவ்வொரு நிலத் தினையும் (செடி, கொடி, மரங்கள் போன்றவை) வெவ்வேறு வகையான களத்தில் எழுவதால், ஒப்பிட்டு எழுந்த சொல் இது. புது விதச் சிந்தனை எழும்போது மேலையரின் சிந்தனையை விட்டு நம் சிந்தனை நோக்கில் சில சொல்லாக்கங்கள் எழும். தமிழகத்தில் பெரிதும் புழங்கும் துறை என்ற சொல்லும் கூடத் தினைக்களம் போன்றது தான். இது ஆறு, கடல் போன்ற நீரோட்டங்களுக்கு அருகில் துருத்திக் கொண்டு இருக்கும் நிலப் பகுதிகளை ஒப்பீடாக வைத்து எழுந்தது. துருதல்/துறுதல் என்றால் நெருங்குதல்.

தினைக்களம், துறை போன்ற சொற்கள், blog என்பதற்கு வலைப்பூ என்று பெயரிட்டார்களே, அதைப் போன்று கொஞ்சம் "கவித்துவ" மானவை. director என்பதற்கு இயக்குநர் என்று எழுபதுகளில் பெயரிட்டதும் கூட இது போன்றது தான். departmental store என்பதைப் பல்பொருள் அங்காடி என்று 90-களில் பெயரிட்டதும் கூட அலங்காரமாய் ஒப்பீட்டு உணர்வில் சொன்ன சொல்லாக்கம் தான். இதுபோன்ற "கவித்துவச்" சொல்லாக்கங்கள், ஒருபக்கமாய்ச் சாய்ந்த போதுகளில், முற்றிலும் சரியாக நமக்குத் தோற்றம் அளித்து, பெரிதும் கவர்ந்து இழுக்கும். நானும் இது போன்ற சொல்லாக்கங்களில் சில காலம் ஈடுபட்டு அமிழ்ந்திருக்கிறேன். பின்னால் வேறு ஓர் இடத்தில், இன்னொரு வகையில் ஆளும் போது தான் இச் சொற்கள் அங்கு இடிப்பதை உணர்கிறோம். சில விதப்பான இடங்களில் சரியாகத் தோன்றும் சொற்கள், பொதுமையான முறையில் கையாள முடிவதில்லை.

தமிழ் - ஆங்கிலம் என்ற இருவேறு சிந்தனைகளில் எழும் பல இணைச்சொற்கள் எல்லா இடங்களிலும் ஒன்று போல பொதுமையாய்க் கையாள முடியுமா என்று கேட்டால், பொதுமைப் பட மறுமொழிக்க முடியாது. சில இணைச்சொற்களில் நாம் ஒன்று போலக் கையாள முடியும் [காட்டாக atom - அணு என்ற சொற்கள். "இனிமேலும் துமிக்க முடியாதது" என்ற சிந்தனையில் வருவது அல்துமம் (atom) என்று மேலையர் சொல். அதே பொருளுக்கு "மிகவும் அணுக்கிய - அதாவது நுணுக்கிய, சுருங்கிய - பொருள் என்ற சிந்தனையில் எழுவது அணு என்ற நம் சொல்; atom, அணு என்பன வெவ்வேறு சிந்தனையில் பிறந்திருந்தாலும், அனைத்து இடங்களிலும் நம்மால் ஒன்று போலக் கையாள முடிகிறது. அப்படிக் கையாள முடிவது தான் அணு என்ற சொல்லாக்கத்தின் வெற்றி.].

இதற்கு மாறாய்ச் சில இணைச்சொற்களில் ஒன்று போலக் கையாள முடியாது. அப்படி ஒன்று போலக் கையாள முடியாத சொல்லாக்கங்கள், நம்மை நெடுக வழி நடத்திச் செல்லாமல், இருவுள்(rail) பாதையில் சிலபோது நாம் காணும் முட்டுப் பாதைகள் (shunted lines) போலக் கொஞ்ச தூரமே கூட்டிச் சென்று அம்போ என்று விட்டுவிடும். இன்னொரு வகையில் சொன்னால், மொழியில் வினைச்சொல், பெயர்ச்சொல், வினையடை, பெயரடை போன்று வெவ்வேறு கூறுகளில் ஆளும் போது இத்தகைய சொற்கள் நம்மைக் கவிழ்த்துவிடுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். முடிவில் இவற்றை ஏகப்பட்ட துணைவினைகள் போட்டுத்தான் நாம் சுற்றிவளைத்துச் சொல்லவேண்டும். இந்தக் காலத் தமிழ்நடையின் கடுநடைக்கு இந்த துணைவினைப் பயன்பாடும் பெரிதும் காரணம் ஆகும். இவை போன்ற சொல்லாக்கங்கள் இன்றையத் தமிழில் நிரம்பவே இருக்கின்றன.

துறை என்பது department என்பதைக் காட்டிலும், பல்கலைக் கழகங்களில் சொல்லும், discipline என்பதற்குச் சரியாக இருக்கும். department என்ற ஆங்கிலச் சொல் நிர்வாகத்திலும், ஓர் ஒருங்கத்தின் (organization) பகுதியாகவும், பொதுமையாய்ப் பயன்படக் கூடிய சொல். அதை அரசு அலுவம், தனியார் அலுவம், பல்கலைக் கழகம், அங்காடிக் கடைகள் எனப் பல்வேறு இடங்களில் ஒன்றுபோல் பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக் குறியே! அரசில் ஒரு சில வகைப்பாடுகளில் அப்படிச் செய்யலாம்; பல இடங்களில் வராது. காட்டாகப் பொதுப்பணித் துறைக்குள்ளேயே (public works department) கூடப் பல்வேறு department கள் இருக்கின்றன. அவற்றை உட்துறை என்பது எல்லாவிடத்தும் சரிவராது. பலநேரம் ministry என்று ஆங்கிலத்தில் இருக்கும்; தமிழில் துறை என்று எழுதியிருப்பார்கள். பொதுப்பணித்துறையே ஒரு எடுத்துக் காட்டு. அதை ஆள்பவர் பொதுப்பணி அமைச்சர்; ஆனால் தமிழில் துறை என்பார்கள்; துறை அமைச்சர் என்பார்கள்; எல்லாவற்றையும் ஒன்று போல் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் தமிழில் துல்லியம் என்பது அரசாளுமையில் இல்லாது போகும். A ministry and a department are not one and the same. Persons knowledgeable in government administration are intensely aware of that. எது அமைச்சகம், எது துறை என்பது ஆட்சிக்கு ஆட்சி, காலத்திற்குக் காலம், மாறும்; நான் அறிந்தவரை (என் வேலைப் பொறுப்பு காரணமாய் அரசு அலுவங்களில் பல்வேறாய்ப் போய் வந்திருக்கிறேன்.) தமிழ்நாட்டுச் செகுதையகத்தில் (Tamilnadu secretariate) ஓர் ஒழுங்கு முறையைப் பார்க்க முடிவதில்லை. மேலோட்ட முறையில் தான் இந்தச் சொல்லாக்கங்கள் நடக்கின்றன.

சரி தனியார் துறை என்று நாளிதழ்களில் எழுதுகிறார்களே, அங்கு department என்றா பொருள் கொள்ளப் படுகிறது? இல்லையே? sector என்றல்லவா பொருள் கொள்ளுகிறார்கள்? பல்கலைக் கழகத்திலும் துறை என்ற சொல் நிர்வாகம் மட்டுமில்லாமல், discipline என்பதையும் அல்லவா குறிக்கிறது? இரண்டும் ஒன்றல்லவே? சரி, துறை அங்காடி என்று departmental store யைக் குறிக்க முடியுமா? யாரும் அப்படி எழுதக் காணோம். பல்விடத்தும் பல்பொருள் அங்காடி, இல்லையென்றால் "சூப்பர் மார்க்கெட்".

ஓர்ந்து பார்த்தால், department என்பது வெவ்வேறு புலனங்களில் வெவ்வேறு வகையில் ஆளப்படுகிறது என்று புரியும்; ஆனாலும் அந்தப் புலனங்கள் எல்லாவிடத்தும் பகுத்தல் என்ற சிந்தனைக் கருத்து இருப்பதைக் கூர்ந்து அவதானிக்கலாம். எனவே இந்தப் பரந்து பட்ட சிந்தனையை உணர்த்துமாப் போல department க்கு இணையாய் ஒரு சொல் பொதுமையாய் ஆளப்பட வேண்டும்; மாறாக "இந்தப் புலனத்தில் இது, இன்னொன்றில் வேறொன்று" என்று 3, 4 கருத்துச் சிந்தனைகள் ஓடுமானால் "தமிழ் நடை வளராது, சவலைப் பிள்ளையாக இருந்து போகும்" என்று ஆழ்ந்து புரிந்த பின்னால் தான், என் பரிந்துரை எழுந்தது.

மொத்தத்தில் ஒரு மலட்டுத் தன்மை இருப்பதைக் களைய வேண்டும் என்ற உந்துதலில் இது போன்ற கட்டுரைகளை எழுதுகிறேன். இவற்றை ஏற்பதும், ஏற்காததும் படிப்பவரின் உகப்பு. நான் பரிந்துரைக்கும் சொற்கள் பின்னால் நிலைக்கலாம், நிலைக்காதும் போகலாம், அதைப் பற்றி நான் கவலுறுவது இல்லை.

தினைக்களம் என்ற சொல் மானுறுத்தத் தொழிலில் (manufacture) வரும் plant (காட்டாக வேதி மானுறுத்தத்தில் - chemical manufacture)மென்ற சொல்லிற்கு ஈடாகப் பயன்படும்; நான் அப்படித்தான் பயன்படுத்துகிறேன். இலங்கையர் உருவாக்கிய எந்தச் சொல்லையும் நான் தூக்கி எரிந்ததில்லை. அதன் ஆழம் பார்த்து, முடிந்தால் வேறு இடத்தில், விதப்பாகப் பயன்படுத்தியிருக்கிறேன். காட்டாகத் துவக்கு, பாவித்தல், அவதானித்தல் என்ற சொற்கள், அவற்றைத் தமிழகப் புழக்கத்திலும் கொண்டுவருகிறார்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

இரண்டாவது பெயரில்லாதவருக்கு,

"பாச்செகுதல் என்ற சொல் bisection, in geometry, dividing something into two equal parts என்ற
அருத்தத்தை தரவில்லையே?" என்று கேட்டிருந்தீர்கள். ஆழம் பாருங்கள்; அருத்தம் புரியும்.

பகுதல் என்பது to part என்ற பொருள் கொள்ளும் என்று மேலே இடுகையில் சொல்லியிருக்கிறேன். பகு என்னும் சொல்லடி பா எனத் திரிவது தமிழில் இயற்கையானது. பகுதி என்பது பாதி என்று பலுக்கப் படுவதையும் சொன்னேன். பகுதி/பாதி என்பது முதலில் இரண்டில் ஒரு பங்கு என்று குறித்துப் பின்னால் அதற்கும் சிறிய பொதுமையான பங்கு நிலையைக் குறித்தது. பங்கு என்ற சொல் கூட பகுதல் வினையின் தொடர்பாய் எழுந்தது தான். பகு / பா என்ற அசை முன்னொட்டாகவும் பல வினைகளில் பயனுறுகிறது. பகுதியாகச் செகுவது / பாதியாகச் செகுவது பாச்செகுதல் என்று ஆகும்.

பாச்செகுதல் என்ற வினைச்சொல்லைப் பரிந்துரைத்ததைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் முன்னொட்டுக்கள் பற்றித் தெரியவேண்டும். தமிழ்மொழி என்பது பெரும்பாலும் பின்னொட்டுக்களைப் பயனக்கும் மொழி தான் என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாய் மேலையர் மொழி போல முன்னொட்டுப் பாவிப்பது நாளடைவில் நம்மிடையே கூடிவருகிறது. இதன் தொடக்கம் தொல்காப்பியத்திலேயே கூட இருந்திருக்கிறது.

இங்கே பா என்ற முன்னொட்டைப் பற்றிச் சொல்லுகிறேன். தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணை இயல் 58 ஆம் நூற்பா, வெட்சித் திணையில் வரும் துறைகளைப் பற்றிப் பேசும் போது (இங்கே துறை என்ற சொல் department என்றா பொருள் கொள்ளுகிறது? அல்லவே? வெவ்வேறு discipline / வகை என்றல்லவா பேசப்படுகிறது?)

படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி
புடை கெடப் போகிய செலவே புடைகெட
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்திறை முற்றிய
ஊர்கொலை யாகோள் பூசன் மாற்றே
நோயின்று உய்த்தல் நுவலுழித் தோற்றம்
தந்துநிறை பாதீடு உண்டாட்டுக் கொடை என
வந்த ஈரேழ் வகையிற்று ஆகும்.

முழு நூற்பாவையும் இங்கே விளக்காமல் பாதீடு என்ற சொல்லை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன். எதிரி நாட்டுக் காரன் நம்முடைய ஆநிரைகளைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான்; நம் அரசன் ஆநிரைகளை மீட்கும் போரில் ஈடுபடுவதற்குப் பெயர் வெட்சிப் போர். இதில் வென்று ஆநிரை மீட்டுக் கொண்டு வந்தபோது, நம் ஆநிரைகள் போக அவர்கள் ஊர் ஆநிரைகளை போரில் கவர்ந்து வந்திருப்பான் அல்லவா? நம்மூர் ஆநிரைகளை அவரவர்களுக்குத் திருப்பிக் கொடுத்தலுக்குப் பெயர் தந்துநிறைத் துறை என்று பெயர். (மேலே நூற்பாவில் 7வது வரியைப் படியுங்கள்.)

அடுத்து மாற்று நாட்டு ஆநிரைகளை நம்மூர்க்காரருக்கு ஏதோ ஒரு நெறிமுறையில் பங்கு பிரித்துக் கொடுப்பதற்குப் பெயர் பாதீடு. இந்தச் சொல்லை நச்சினார்க்கினியர் எப்படி வந்தது என்று விளக்குவார். `ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்று ஆதலிற் பாதீடாயிற்று' என்று அவர் உரைப்பார். பகுத்து இடுதல் பகுத்திடுதல், பாத்திடுதல், பாதிடுதல் என்ற ஆயிற்று. பாதிடுதலின் பெயர்ச்சொல்லாய் பாதீடு என்று எழுந்தது. இங்கு பா /பாது என்பது முன்னொட்டாய் வேலை செய்வதை கூர்ந்து கவனிக்கலாம்.

இந்தப் பாத்தீடு என்ற சொல் 1935 வரைக்கும் கூடப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இலங்கையில் 1935ல் வெளியான கதிரை மலைப் பள்ளு என்ற நூலின் முகவுரையில், வரும் ஒரு விளக்கத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

"இனி நாடகம், என்ற வகையில், நெற்பயிர் விளைத்தற் பொருட்டுக் கடவுட் பராய் மழை பெய்வித்து, வெள்ளத்துக்கு வரம்பு கட்டி, உழுது, வித்திடுதல் முதல், பொலிதூற்றி, நெல்லளவு கண்டு, பாத்தீடு செய்யும் வரையும் உள்ள எல்லாக் கிருஷிகத் தொழில்களையும் பள்ளன், மூத்தபள்ளி, இளையபள்ளி என்ற மூன்று நடர்களையும் பண்ணைத் தலைவன் என்னும் விதுஷகனையும் கொண்டு நடித்துக் காண்பித்தலின் பள்ளு அல்லது உழத்திப்பாட்டு நாடகங்களுக்கு ஒரு சமஷ்டியாகும்."

என்று சொல்லும். அறுவடைக்குப் பின் நெல்லை அளந்து, பின் அதை பகுந்து, "இன்னாருக்கு இவ்வளவு" என்று இடுவதற்குப் பாத்தீடு என்று பெயர். ஆகப் பாத்தீடு என்ற சொல் ஒன்றும் எங்கிருந்தோ பறித்துக் கொண்டு வந்த சொல் அல்ல! நாட்டார் வழக்கில் உள்ள சொல் தான். படித்த நம்மைப் போன்றோர் தான், நாட்டுப் புற வழக்கை உதறித் தள்ளி ஆங்கிலமே கதியென்று கிடந்து இருக்கும் சொல்லாக்க முறைகளை ஆயாமல் இருக்கிறோம். அப்படி ஆய்ந்தால் தமிழை மேலும் உயர் நிலைக்கு நம்மால் கொண்டு போக இயலும். இனி வள்ளுவனுக்கு வருவோமோ? 44 - ஆம் குறளில்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

என்று சொல்லி "தவறான வழியிலே பொருளீட்டுவதற்கு அச்சம் கொண்டு, அப்பொருளையும் பகுத்து உண்டு வாழ்பவனுக்கு வாழ்க்கையில் எக்குறையும் வராது" என்று சொல்லி பகுத்து உண்ணுதல்>பாத்து உண்ணுதல்>பாத்துண்ணுதல் என்ற வினையை உணர்த்திப் பின் அதன் பெயர்ச்சொல்லான பாத்தூண் என்பதை இங்கே வள்ளுவன் காட்டுகிறான். இதே போல 227 -ஆம் குறளில்,

பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

என்று சொல்லி, "யாரொருவன் பசியென்று வந்தவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து அவர்கள் பசியை ஆற்றுவதை வழக்கமாய்க் கொண்டவனோ, அவனைப் பசித் துன்பம் தீண்டக்கூட முடியாது" என்று தீர்மானமாய் உரைக்கிறான்.

பாத்தூண் என்பது வள்ளுவனால் மட்டும் ஆளப் படவில்லை; சீத்தலைச் சாத்தனால் மணிமேகலையின் பதிகத்தில் 63-64 வரிகளில் மணிமேகலையின் அல்காக் கலனில் (அல்காத கலன் - குறையாத கலன் - அக்ஷய பாத்திரம்) ஆதிரை பிச்சை போட்ட செய்தியைக் குறிப்பால் உணர்த்தும் போது இந்தப் பாத்தூண் என்ற சொல் வரும். பகுதி பகுதியாய் ஒவ்வொருவரும் உண்ணும் வகையில் மணிமேகலை எடுத்துக் கொடுக்கிறாள், அல்லவா? அதனால் பாத்தூண் என்பது இங்கு சரியான சொல்லாட்சியே!

பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்

- மணிமேகலை பதிகம் 63-64

இனி முதுமொழிக் காஞ்சியின் எளிய பத்தில் வரும் 9 வது வரி.

79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது

"பொதுவாக மற்றவருக்கு உதவி செய்யுமாப் போல் பாரத்தைச் சுமக்கு விழைந்தோருக்குப் பகுத்து உண்பது எளிது" என்கிறார் முது மொழிக் காஞ்சியார்.

இது போல பாத்தருதல் என்ற இன்னொரு சொல்லாக்கம் அப்பர் பாடலில் வரும். சட்டென்று அந்த வரியைத் தேடி இங்கு கொடுக்க முடியவில்லை. கூகுளில் தேடினால் கிடைக்கும்.

பாத்திடுதல், பாத்துண்ணல், பாத்தருதல் என்ற சொற்களைப் போலத் தான் பாச்செகுதல் என்ற சொல்லாக்கத்தை நான் பரிந்துரைத்தேன். பகுத்துப் பிரித்தல் = பாச்செகுதல்; அதைப் பகுச்செகுதல் என்று சொன்னால், பலுக்குவதற்குக் கடினமாகுமோ என்ற துணுக்கினால் பாச்செகுதல் என்று ஆக்கியிருந்தேன். பல்வேறு திரிபுகளையும் பொருத்திப் பார்த்தபின் தான் இப்படி ஒரு முன்னொட்டு முடிவிற்கு வந்தேன்.

இந்த முன்னிகையை முடிக்குமுன் இன்னொன்று சொல்ல வேண்டும். பகு என்னும் சொல்லடி பா என்று திரிவதோடு அல்லாமல், பயு, பய்ய, பைய என்று கூடத் திரிந்திருக்கிறது. நான் அந்தத் திரிபை இங்கு முன்பு காண்பித்திருந்தால், "ஆங்கிலத்திற்கு ஒப்பச் சொல்லாக்கம் செய்கிறவன்" என்ற பொல்லாப் பழி மேலும் எனக்குக் கூடியிருக்கும். :-).

ஆனாலும், ஒரு தென்பாண்டிக் காரனுக்கு பையப் பைய என்ற சொல்லாட்சி தெரியாமலா போகும்? பையப் பைய என்றால் கொஞ்சம் கொஞ்சமாக என்று பொருள். ஒரு பொருளைப் பகுக்கப் பகுக்க அது கொஞ்சமாய்க் காட்சியளிக்கும். கொஞ்ச தூரம், கொஞ்ச தூரமாய் நடப்பதைப் "பையப் பைய்ய நடந்து வர்றீங்களே" என்பார்கள் எங்கள் பக்கத்தார். காலத்தையும் கூடப் பகுக்கலாம் தானே? "பையவே கொடுங்கள்" என்றால் கால அளவில் மெல்லவே கொடுங்கள் என்று பொருள்.

பகுதலில் மட்டும் இது போன்ற கொஞ்சக் கருத்து வரவில்லை. செகுதலின் முற்சொல்லான சில்லுதல்>சில்தல்>சிற்றல்>சிற்றுதல் என்பதில் இருந்தும் கூடச் சிறிது என்ற சொல் வந்திருப்பதை எண்ணினால் நான் "பைய" என்று சொல்ல வருவதின் பொருள் புலப்படும்.

நண்பரே, உங்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் சொல்லுகிறேன். மொழியில் ஆழம் போக வேண்டும். அப்பொழுது தான் நம் மொழியின் இயலுமை தெரியும். நம் மரபிற்கேற்பப் புதிய சொல்லாக்கங்களை உருவாக்க முடியும். நான் ஒன்றும் கன்னாப் பின்னா என்று பொதுப் புலன் (common sense) இல்லாமல் சொற்களைப் பரிந்துரைக்கவில்லை. இவற்றைப் பயன்படுத்துவதும், பயன்படுத்தாதும் உங்கள் விருப்பம்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய ஆறுமுகம்,

வருகைக்கும், கோடி காட்டியது பற்றிச் சொல்லியதற்கும் நன்றி

அன்பிற்குரிய ரவிசங்கர்,

பூச்சி ஆக்கப் பட்ட சொல் அல்ல. அது மரபுச் சொல். அதன் சொற்பிறப்பைக் காட்டினேன், அவ்வளவு தான்.

மூன்றாவது பெயரில்லாதவரே,

முருங்கை தமிழ்ச்சொல் தான். சிங்களத்தில் அதே சொல் வருவது பற்றி கு.அரசேந்திரன் ஒருமுறை சொல்லியிருக்கிறார். உசாத்துணை (reference) சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

ஐயா, பாதீடு என்னும் சொல் இன்று "budget" குறிக்க இலங்கையில் பயன்படுகிறது.

Anonymous said...

ஐயா, சென்னை பல்கலைக்களக அகராதியில் "முருங்கை" சிங்கள சொல் என போடப்பட்டுள்ளது, அதான் கேட்டேன்.

இளங்குமரன் said...

ரியாத் தமிழ்ச்சங்கக் குழுமத்தின் உதவியால் ஒரு அருமையான தகவல் களஞ்சியத்தின் அறிமுகம் கிடைத்தது. நன்றி ரியாத் தமிழ்ச் சங்கக் குழுமத்திற்கு.

ஐயா இராம.கி அவரக்ளுக்கு வணக்கம். முகமிலிகளின் புலம்பலைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
நன்றி.