Saturday, April 21, 2007

செகை - 2

செகுத்தலின் பயன்பாடு முன்னாற் சொன்ன சொற்களோடு மட்டும் அமையவில்லை. பார்ப்பனர்கள் தங்களை அடையாளம் சொல்லிக் கொள்ளும் போது, ஒவ்வொருவரும் தாங்கள் எந்தக் கூட்டம் என்பதோடு ( கூட்டம்>கூட்ரம்>கூத்ரம்>கோத்ரம். இங்கே கோத்ரத்தை கோ - பசு என்ற விலங்கின் தொடர்பாகச் சொல்லுவது வலிந்து சொல்லும் பொருள். கோத்ரத்தைக் குறிக்கும் போது ஒரு முனிவரின் பெயர் சொல்லி அவரின் பிறங்கடை என்று சொல்லுவார்கள்), வேதத்தில் எந்தச் சாகையைக் கரதலையாகத் தாங்கள் அறிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். அப்படி வேதப் பிரிவுகளைக் குறிக்கும் சாகை என்ற சொல்லும் கூடச் செகுத்தலில் இருந்து கிளைத்தது தான்.

செகு>சகு>சாகு>சாகை = பிரிவு

(வேதங்களின் வரையறை, பிரிவுகளில் நிலவும் பல சொற்களும் தமிழ் அடிப்படையைத் தான் காட்டுகின்றன. அவற்றை விவரித்துச் சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு, பலரின் உள்ளார்ந்த நம்பிக்கை மருட்டித் தடுக்கிறது. ஆய்வு மனப்பான்மை இல்லாமல் கிளிப்பிள்ளையாய்ச் சொன்னதையே சொல்லிக் கொண்டு பலரும் இருக்கிறார்கள். :-))

செகுத்தல் என்ற வினை வேளாண்மையிலும் கூடப் பயனாகிப் பேச்சுத் தமிழில் வேறு ஒரு சொல்லைக் கொண்டு வந்து காட்டும்.

செகு>சகு>சாகு>சாகுபடி = அறுவடை.

சாகுபடியில் பயன்படும் ஆயுதம் ஆன sickle என்பதைச் செகுளை = அரிவாள் என்று சொல்லலாம்.

இன்னும் மேலே போய், ஒரு குமுகாயத்தில் பல்வேறு பிரிவுகளை உருவாக்கி அவற்றைப் பிறப்பு, பண்பாடு வழி வகைப் படுத்துகிறார்களே, அந்த முட்டாள் தனமும் கூடச் செகுத்தல் வினையிற் பிறந்தது தான்.

செகு>சகு>சகுதி>சாதி = குமுகாயத்தில் மாந்தப் பிரிவு.

குமுகாயத்தைச் செகுத்துப் பிரித்தவைகளே சாதியாகும். இதை ஜாதி என்று ஒரு சிலர் பலுக்குவது என்னவோ ஒரு மாயத் தோற்றத்தை நமக்குக் காட்டும். "சாதித் தோற்றம் தமிழ்க் குமுகாயத்தில் எப்படி ஏற்பட்டது?" என்று விரிவாக எழுதலாம்; ஆனால், "அமைதியாய் நாம் உரையாடுவோமா?" என்பது கேள்விக் குறியே! காலம் கூடிவரும் இன்னொரு சமயத்தில் அதைப் பார்க்கலாம்.

இப்படிப் பொருளை, வெளியைச் செகுப்பது என்று வந்த பிறகு, காலத்தையும் ஒருவர் செகுக்கலாம் தானே? புவியின் தன்னுருட்டுக் (rotation) கால அளவை ஒரு நாள் என்று கொண்டு, அதை அறவட்டாக (arbirary) 24 பகுதியாய்ப் பிரித்தது மேலையர் வழக்கம். அப்படிப் பிரித்ததை இன்று மணி என்கிறோம். (தமிழர் ஒரு நாளை 60 நாழிகையாய்ப் பிரித்தனர்). இந்த மணியை சுமேரியரின் தாக்கத்தில் மேலை நாகரிகம் இன்னும் நுணுகிப் பிரித்தது நுணுத்தம் என்று ஆயிற்று (நுணுத்து>நுநுத்து>முநுத்து>minute; தமிழில் நகரமும் மகரமும் போலியானவை; நுதல்/முதல், நுப்பது/முப்பது, நுடம்/முடம், நெற்றி/மெற்றி போன்ற சொற்களை எண்ணிப் பார்த்தால் புரியும். முநுத்து என்பது metathesis முறையில் நுமுத்து ஆகிப் பின் நுமித்து>நுமிஷ>நிமிஷ என்று வடமொழியில் திரியும். நாம் மீண்டும் கடன் வாங்கி நிமிடம் என்று சொல்லுவோம். பேசாமல் முதற்சொல்லான நுணுத்தத்தையே புழங்கலாம். பொருள் சட்டென விளங்கும். "minute" ஆன செய்திகள் என்னும் போது நுணுக்கமான செய்திகள் என்று புழங்குகிறோம் இல்லையா? அடிப்படைச் சொல் இரண்டு வகைப் பொருளையும் மேலை மொழி போலவே கொண்டுவருவதை ஓர்ந்து பாருங்கள். நம் மொழியின் சிறப்பும், ஆழ்மும் நமக்கே புரியாமல் எவ்வளவு நாள் இருப்போம்? வைரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் கரியென்று சொல்லும் அறியாமை இங்கு தான் இருக்கிறது. :-)).

இந்த நுணுத்தத்தை மேலையர் minute primere என்று தான் சொன்னார்கள். அதாவது இது பெருமிய நுணுத்தம் என்னும் பெரு நுணுத்தம். ஒவ்வொரு பெருநுணுத்தத்தையும் இன்னும் 60 சிறுபங்காய்ப் பிரித்து, ஆகச் சிறுத்த இரண்டாம் நிலைப் பங்கை minute secondae என்று அவர்கள் அழைத்தார்கள். அதாவது செகுத்த நுணுத்தம். செகுத்தது செகுந்தது என்றும் ஆயிற்று. நாளாவட்டில் இரண்டாம் நிலை நுணுத்தம் என்பது உள்ளார்ந்து புரியப்பட்டு, வெறுமே செகுந்து என்பதே நுணுத்தத்தில் 60ல் ஒரு பங்கு ஆயிற்று.

second = செகுந்து
"after first," 1297, from O.Fr. second, from L. secundus "following, next in order," from root of sequi "follow" (see sequel). Replaced native other (q.v.) in this sense because of the ambiguousness of the earlier word. Second-hand is from 1474; second-rate is from 1669, originally of ships (see rate); second sight is from 1616; an etymologically perverse term, since it means in reality the sight of events before, not after, they occur. Second fiddle first attested 1809.

தமிழில் நாழிகை என்னும் காலத்தைச் சிறுபகுதிகளாய்ப் பிரித்ததை வேறொரு இடத்தில் பார்க்கலாம்.

அடுத்தது செயற்பாடுகளில் நடக்கும் பிரித்தல் பற்றிய செய்தியைப் பார்ப்போம். நம்முடைய செயற்பாடுகளில் ஒரு சிலவற்றை எல்லாரோடும் பொதுவாய்க் கலந்து செய்கிறோம்; அதே பொழுது, ஒரு சிலவற்றைப் பிரித்துத் தனியே வைத்து, எல்லோரும் அறியாத வகையால், மறைவாகச் செயலாற்றிக் கொள்ளுகிறோம். பொதுக் கருமங்கள் பொதுவை(common)யாகவும், தனியே வைப்பதைச் செகுத்து வைத்தல் என்ற பொருளில் செகுதை எனவும் சொல்லலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் secret என்கிறார்கள்.

secret: செகுதை, செகுத்து வைத்தல்
1378 (n.), 1399 (adj.), from L. secretus "set apart, withdrawn, hidden," originally pp. of secernere "to set apart," from se- "without, apart," prop. ஓon one's ownஔ (from PIE *sed-, from base *s(w)e-; see idiom) + cernere "separate" (see crisis). The verb meaning "to keep secret" (described in OED as "obsolete") is attested from 1595. Secretive is attested from 1853. Secret agent first recorded 1715; secret service is from 1737; secret weapon is from 1936.

secret என்பதைச் சொல்லத் தமிழில் இன்னும் மூன்று சொற்கள் இருக்கின்றன. ஒன்று கமுக்கம், மற்றொன்று கரவம், மூன்றாவது மந்தணம்.

சம்சாரம் ஒரு மின்சாரம் படத்தில் மனோரமா "கம்முன்னு கிட" என்று சொல்லுவார் பாருங்கள், அந்தக் கம்மென்று இருத்தல் என்பது பலர் அறியப் பேசாதிருத்தல். கமுக்கம் என்ற சொல் கம்முதலில் பிறந்த பெயர்ச்சொல்.

அடுத்த சொல்லான கரவம் என்பது மறைத்தல் பொருளில் வரும் கரத்தல் வினையில் இருந்து கிளைத்த பெயர்ச்சொல். கரவம்>கரகம்>கரஹ்யம்>ஹரஹ்யம்>ரஹ்யம் என்று வடமொழி நோக்கித் திரியும். தமிழகத்தில் இருந்து வடக்கே போகப் போக ககரம் ஹகரமாகிப் பின் அதுவும் மறைவது பல சொற்களில் நடந்திருக்கிறது. முடிவில் ரஹ்யம் ரஹஸ்யம் ஆனது பலுக்க எளிமை கருதியே.

மூன்றாவது சொல்லான மந்தணம் என்பதும் மறைவுப் பொருள் கருதியே.

செகுதையில் இருந்து இன்னொரு சொல்லும் விரியும். நம்முடைய செயற்பாடுகளில் செகுதையானவற்றை நம்பிக்கையானவருக்கு மட்டும் சொல்லி வினையாற்றுவது உலகில் பலருக்கும் உள்ள பழக்கம். இப்படிச் செகுதைகளைக் கையாளுபவர் செகுதையர். ஆங்கிலத்தில் secretary என்று சொல்லுவார்கள். Secretary is one who keeps secrets. செகுதையைக் காப்பாற்ற வேண்டியவர் அதைப் பொதுவையாக்கி விட்டால், அப்புறம் நம் கதி அதோ கதி தான்.

ஒரு ஊரின் நிலங்களைச் செகுத்து "இன்னார் இந்தப் பக்கம் வசிக்கலாம், இதுபோன்ற செயல்களைச் செய்யலாம்" என்று அமைத்து வருவது sector என்னும் செகுத்தியாகும். (பகுத்து வந்த பாத்தியைப் போலச் செகுத்து வந்தது செகுத்தி.)

இனி, "இது இதோடு கலக்கக் கூடாது" என்று தனித்து வைக்கும் செயலை segregate: செகுத்தாக்கல் என்று சொல்லுவார்கள்.

1542, from L. segregatus, pp. of segregare "separate from the flock, isolate, divide," from *se gregare, from se "apart from" (see secret) + grege, ablative of grex "herd, flock." Originally often with ref. to the religious notion of separating the flock of the godly from sinners. Segregation (1555) is from L.L. segregatio, from L. segregatus; in the specific U.S. racial sense it is attested from 1903; segregationist is from the 1920s.

அப்படிச் செகுத்து வைக்குப் பட்ட பகுதியை segment = செகுமம் என்றும் சொல்லலாம்.

அதே போல பலவாறாய்ச் செகுப்பு ஆக்கும் வினையை separate = செகுப்பாக்கு என்று சொல்லலாம். இதன் பெயர்ச்சொல்லைச் separation = செகுப்பம் என்று சொல்லலாம்.

இவற்றின் தொடர்ச்சியாய், இனி sexy dress, sexy dance, types of sex, sex performance போன்றவற்றிற்கான தமிழ்ச் சொற்களைப் பார்க்கலாம்.

sexy dress = செகை ஆடை
sexy dance = செகை ஆட்டம்
types of sex = செகை வகைகள்
sex performance = செகை நடப்பு

அன்புடன்,
இராம.கி.

Friday, April 20, 2007

செகை - 1

பொதுவாய் sex என்ற சொல்லுக்கு இணையாய், இடத்திற்குத் தகுந்தாற் போல், பலரும் காமம், பால் என்ற சொற்களை கையாளுகிறார்கள். இன்னும் சிலர், இதைப் பேசும் போது, சுற்றி வளைத்தே சொல்லப் பழக்கப் பட்டு, சட்டென்று ஆங்கிலத்திற்கு தாவுவதையும் பார்க்கலாம். இருந்தாலும், "sex- ற்கு இணைச்சொல் தமிழில் உண்டோ ?" என்ற சிந்தனை எழுகிறது. நண்பர் இண்டி ராம் இது பற்றி ஒருமுறை கேட்டிருந்தார். முயன்றால் துல்லியமாய், அருவருப்பில்லாமல், இதைத் தமிழில் சொல்ல முடியும்.

கீழே 'தமிழறிவோம்' என்ற பொத்தகத்தில் இருந்து, முனைவர் கு.அரசேந்திரன் எழுதியதை முன் குறிப்பிட்டு, பின் என் குறிப்புகளையும் கொடுத்திருக்கிறேன். இந்தப் பதிவு கண்டு, ஒரு சிலர் புருவத்தை உயர்த்தலாம். "என்ன இது, இதைப் போய் இவர் எழுதுகிறார்?" என்று ஏற்காமலும் போகலாம். குறுகுறுக்காமல் படியுங்கள்.
---------------
செகு - sex

ஆண்பால், பெண்பால் என்பன இலக்கணப் பாடத்தில் முதற்பாடம். இங்குப் 'பால்' என்னும் சொல்லிற்குப் பிரிவு என்பதே பொருள். அதாவது மக்களினத்தில் இவர் ஆண் பிரிவு, இவர் பெண் பிரிவு என்று சொல்ல வரும் போது தான் இந்த ஆண்பால் பெண்பால் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம், பகு-பகுப்பு என்னும் அடிப்படையில் பகு-பகல்-பால் என இச்சொல் பிறந்தது.

பால் என்பதற்குரிய ஆங்கிலச் சொல் sex. sex-male, female என நாம் ஆங்கில வழக்கில் எழுதி வருகிறோம். இந்த sex-சொல்லின் மூலம் ஒரு பழைய தமிழ்ச் சொல்லோடு உறவுடையதாகத் தெரிகிறது.

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று" (259)

என்னும் குறள் எல்லோருக்கும் தெரியும்.

விலங்குகளின் உயிரை அதன் உடலிலிருந்து பிரித்துக் கொல்லக் கூடாது என்பதைத்தான் இங்குச் 'செகுத்தல்' சொல்லால் வள்ளுவர் சொல்லியுள்ளார்.

திருவள்ளுவர் கூறிய செகுத்தல் சொல், சங்க நூல்களில் பல இடங்களில் சொல்லப் பட்டுள்ளது.

இலக்கிய வழக்குகளில் மட்டுமல்லாமல், மிக எளிய பேச்சு வழக்கில் கூட இந்தச் 'செகு'வைக் காணலாம். எண்ணெய் ஆட்டும் 'செக்கு' நாம் அறிந்ததே. அதன் அடிச்சொல்லும் 'செகு' என்பதுதான். எண்ணெயையும், பிண்ணாக்கையையும் செகுப்பது, அதாவது பிரிப்பதே, செக்காகும். உருண்டையாய் விளைந்த கமுகுக் கொட்டையைப் பகுக்கிறோம். அதுதான் பகு-பக்கு-பாக்கு எனப் படுகிறது. இவ்வாறுதான் 'செகு'த்தலை செய்வது 'செக்கு' ஆயிற்று.

ஆணாகப் பெண்ணாகப் பிரிந்திருக்கின்ற மக்களை ஆண்பால், பெண்பால் என்று சொல்கிறோமல்லவா, அதையே இவர் ஆண் செகுப்பு, இவர் பெண் செகுப்பு என்று கூடப் பிரிதொரு தமிழ்ச் சொல்லால் சொல்லலாம். 'பால்' இலக்கணத்தைச் 'செகு இலக்கணம்' என்று சொன்னால் பொருள் ஒன்றே.

'sex' ந்னும் ஆங்கிலச்சொல் 'sexus' என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாக ஆங்கில நூல்கள் கூறுகின்றன. தமிழ்ச் சொல் ஒன்று மேலை உலகிற்குச் செல்லும் போது அடையும் மாற்றங்களில் எளிதான ஒரு மாற்றம் இதுதான். அதாவது தமிழ்ச் சொல்லின் இறுதியில் 'ஸ்' ஒலி சேர்ந்துவிடும். அந்த வகையில் தான் நம்முடைய பழைய துறைமுகங்களான தொண்டி, முசிறி என்பதைத் தொண்டிஸ், முசிறிஸ் எனக் கிரேக்க நூலாசிரியர் எழுதினர். இதே அடிப்படையில் தான் தமிழின் 'செகு' என்னும் சொல் இலத்தீனில் 'sexus' என்றாகியது.

sex (F.,L.) F. sexe L. sexum acc. of sexus, sex perhaps; orig.- 'division' - Skeat
sex - either of the main divisions (male and female) into which living things are placed on the basis of their reproductive functions. (Middle English from Old French sexe or Latin sexus) - C.O.D
---------------
இனிமேல் இராம.கி. யின் இடுகை:

செகுப்பு என்பதைக் காட்டிலும், sex - க்கு ஈடாக [வகு>வகை என்பதைப் போல] செகு>செகை என்றே நான் பரிந்துரைப்பேன். ஏனெனில் இதனோடு தொடர்புடைய sect, section, insect, சாகை, சாதி, second, secret, sector, segregate, segment, sickle, separate என்ற சொற்களுக்கும் ஒரு தொடர் பொருத்தம் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் ஒரே அடிச்சொல்லால் தமிழில் குறிக்க முடியும். காமம், பால் போன்றவை இருந்தாலும், "ஒரு பொருள், பல சொற்கள்" என்பது தமிழுக்கு புதிதல்லவே? செகுதல்/செகுத்தலின் தொடர்ச்சியாக கீழே உள்ள சொற்களைப் பார்க்கலாம்.

சில்லுதல் என்பது உடைப்பது, பிரிப்பது, போன்ற பொருட்பாடுகளைத் தமிழில் குறிக்கும். சில்லில் தோன்றிய சிகர ஓசைச் சொற்களைத் தவிர்த்துவிட்டு, சில்>செல்>செல்கு>செகு என்ற வளர்ச்சிக்குப் பின் விளைந்த சொற்களை மட்டுமே இந்த இடுகையில் பேசுகிறேன்.

செகுதல் என்பது பிரிதலை உணர்த்தும் தன்வினை. செகுத்தல் என்பது அதன் பிறவினை. செகுத்தலில் இருந்து ஏவல் வினையாகவும், பெயர்ச்சொல்லாகவும், நாம் முதலில் பார்க்கும் சொல் செகுத்து என்பதாகும். இது அப்படியே sect என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையாக அமையும். செகுத்தின் நீட்சியாய் வரும் சொல்லான செகுத்தம், ஆங்கிலத்தில் section என்பதைக் குறிக்கும். இன்றையத் தமிழில் department, section, division எனப் பலவற்றிற்கும் பிரிவு என்ற ஒரு சொல்லையே வைத்துக் கொண்டு ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த ஒப்பேற்ற வழக்கத்தால் தான் துல்லியமான அறிவியற் கட்டுரைகளைத் தமிழிற் படைக்க இயலாது இருக்கிறோம். மிக எளிதாக பகுத்தம் (department), செகுத்தம் (section), வகுத்தம் (division) என்று நாம் சொல்ல முடியும்; ஆனாலும் சொல்லத் தயங்கி ஆங்கிலச் சொற்களையே பெரிதும் புழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பாழாய்ப் போன தயக்கம் தான், நம் தமிழ்நடையைச் சரிசெய்ய விடாது தடுத்து, தமிங்கிலம் பரவ வழிவகை செய்கிறது.

செகுத்தல் என்ற வினைச்சொல்லோடு, இடை, பகு(>பா) என்ற முன்னொட்டுக்களைச் சேர்த்தால், இன்னும் சில சொற்களை உருவாக்க முடியும். ஒரு பொருளின் இடையில் (ஊடே) போய்ச் செகுப்பது இடைச்செகுத்தல் (to disect) என்றாகும்.

ஒரு பண்டுவர் (surgeon) உடலுறுப்பை இடைச்செகுத்துக் கட்டியை அறுத்துப் பின் பண்டுவம் செய்கிறார்.

இன்னொரு விதத்தில் பகுதி பகுதியாய்ச் (பகுதி>பாதி) செகுப்பது பாச்செகுதல் (to bisect) என்றாகும்.

ஒரு முக்கோணத்தின் அடிச்சிறகை (base side) பாச்செகுத்து அதன் மூலம் முக்கோணத்தை இரண்டாக்குகிறோம்.

உட்புகுந்து துருவிச் செகுத்தலை உட்செகுத்தல் (to insect) என்றே சொல்லலாம். ஏதோ ஒரு பொருளில் தோண்டிக் கொண்டு, உட்செகுத்துப் போகும் உயிரியை உட்செகுவி (= insect) என்றே ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். நாமோ, இந்த உட்செகுதல் (= பிரித்துக் கொண்டு உட்செல்லுதல்) என்னும் பொருளில் இருந்து, சற்றே மாறுபட்டு வரும் இன்னொரு வினையான பூளுதல் (= பிளத்தல்) வினையை வைத்து, பூள்ந்து போகும் insect -யை பூ(ள்)ச்சி என்றே தமிழில் சொல்லுகிறோம். பூளுதலில் இருந்து இன்னொரு பெயர்ச்சொல்லையும் பெறலாம்; ஆனால், அதை இடக்கர் அடக்குதலாய், நாகரிகம் கருதி, பொது அவையில் சொல்ல இயலாது.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 18, 2007

தமிழ்ப்படுத்தலும் பேரா. ரூமியும்

இது 2004 சனவரியில் Raayar Kaapi Klub - இல் எழுதியது. அப்பொழுது "தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும்" என்ற கட்டுரையை திரு நாகூர் ரூமி எழுதியிருந்தார். திண்ணையில் அது வெளிவந்தது என்று நினைக்கிறேன். (இப்பொழுது மீண்டும் சில பளிச்சு - polish - வேலைகள் செய்து சேமிப்பிற்காக இங்கு பதிப்பிக்கிறேன். ரூமியின் கட்டுரையை இந்தப் பதிவிலேயே கீழே கொடுத்திருக்கிறேன்.)

இந்தக் கட்டுரை அந்த மடற் குழுவில் கருத்தாடல் செய்யப் பட்டது. இந்தக் கட்டுரைக்கான எதிர்வினையை, திரு.வெங்கட்ரமணன் அவருடைய வலைப் பதிவில் தெரிவித்திருந்தார். (மாலனோடு நடந்த உரையாடலைத் தெரிவித்த என் முந்தையப் பதிவிற்கு அளித்த பின்னூட்டில், தன்னுடைய பதிவின் சுட்டியை திரு.வெங்கட்ரமணன் தெரிவித்திருக்கிறார்.) இந்தக் கருத்தாடல் நடந்த பொழுதே உடன் எழுத முடியாது வேறு பணிகளில் ஆட்பட்டிருந்ததால், என்னுடைய பின்னூட்டை அப்பொழுதே அளிக்க முடியாது, பின்னால் சுணங்கி அளித்திருந்தேன். மேலோட்டமான முறையில் சரியாக ஆராயாமல் ஒரு கல்லூரிப் பேராசிரியர் இது போன்ற ஒரு கட்டுரையை எழுதியது எனக்கு வருத்தத்தை(யும் சற்றே கோபத்தையும்) வரவழைத்தது. "என் எதிர்வினையில் இருக்கும் சூடான தொனியைப் பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று திரு. ரூமி அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
-----------------------------

"பெற்றோர் யாரென்ற சிக்கல் மொழிக்கு உண்டு" என்று சொல்லி, "இந்த உலகில் இதுவரை பேசப்படுகின்ற எழுதப்படுகின்ற எல்லா மொழிகளுக்கும் பெற்றோர் ஒருவரே என்று மொழி வரலாற்று நூல்கள் கூறுகின்றன. அதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழி என்றும் சொல்லுகிறது. இந்த விஷயத்தை கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்வது மேற்கொண்டு இந்த கட்டுரையில் சொல்ல வருகின்ற விஷயத்தில் தெளிவுபெற உதவும்" என்ற ஒரு மாபெரும் "உண்மையை" பேராசிரியர் ரூமி சொல்லுகிறார்.
-----------------------------
இராம.கி:

இந்த "உண்மையை எங்கே படித்தார், யார் சொன்னார்கள், ஆதாரம் என்ன?" என்பது தான் தெரியவில்லை. "உலக மொழிகள் ஒரே மொழியில் இருந்து கிளைத்திருக்கலாம்" என்பது, 'உண்மையாய் இருக்கலாம்' என்று சொல்லக் கூடிய ஒருவிதமான கருதுகோள் தான். ஆனால் "அது இந்தையிரோப்பிய மொழி" என்று முற்று முழுதாகச் சொல்லுவது, முழுப் பூசணியைச் சோற்றில் மறைப்பது ஆகும். நம்முடைய பேராசிரியர் ரூமி ஆர்வக் கோளாறின் காரணமாய் விவரம் தெரியாமல் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று நம்புவோமாக!

"இந்தையிரோப்பிய முதன்மொழி என்பது கிட்டத்தட்ட 5000-6000 ஆண்டுகளுக்கு முன்னால் கருங்கடலின் பக்கம் எழுந்திருக்கக் கூடும்" என்று பல மொழியியலார்கள் ஆணித்தரமாக இப்பொழுது முன் மொழிகிறார்கள். மாந்த வரலாற்றுக் கணிப்பில் இது மிக மிகக் குறைந்த காலம். அத்தனை காலம் மொழியே இல்லாமல் மாந்தன் இந்த உலகில் இருந்தான் என்பது நம்ப முடியாத செய்தி. (அப்படித்தான் மேலே உள்ள ரூமியின் கூற்றில் பொருள் இருக்கிறது.) "ஓமோ சாப்பியன் சாப்பியன்" என்ற அண்மைக் கால மாந்தன் கிளர்ந்தது 50000-60000 ஆண்டுகள் என்றும், அவன் இந்தியத் துணைக் கண்டத்தில் நுழைந்தது கிட்டத் தட்ட 35000-40000 ஆண்டுகள் என்றும், மாந்தவியலும் (anthropology), அகழாய்வியலும் (archeology), ஈனியலும் (genetics) அடுத்தடுத்து ஒரே முடிவில் ஒப்ப முயன்று கொண்டிருக்கின்றன.

முதல் மொழி என்பது ஆப்பிரிக்கப் புதர்மாந்தர்களின் (bushmen) சொடுக்கு மொழிகளில் (click languages) தோன்றியிருக்கலாம் என்று பல அறிவியலார்கள் இன்று ஊகிக்கிறார்கள். புதர்மாந்தர்களுடைய சொடுக்கு மொழிக் காலம், கிட்டத்தட்ட 50000 ஆண்டுகளுக்கு முன் என்றும் உன்னிப் பார்க்கிறார்கள். "சொடுக்கு மொழிகள் எப்படித் தங்கள் வளர்ச்சியில் இப்படிப் பல்வேறு மொழிக் குடும்பங்கள் ஆகின? எப்படிப் பிரிந்தன? இந்தையிரோப்பிய மொழிக் குடும்பம் இல்லாமல், இன்னும் வேறு எத்தனை மொழிக் குடும்பங்கள் உள்ளன? அவை எங்கு எத்தனை பேர்களால் பேசப் படுகின்றன? எந்தக் காலத்தில் அவை தோன்றின?" என்பதைப் பேராசிரியர் ரூமி வரலாற்று மொழியியல் (historical linguistics) பற்றிய பொத்தகங்களில் படித்துத் தெரிந்து கொள்ளட்டும். இருக்கவே இருக்கிறது, கூகுள் என்னும் தேடுபொறி. "இப்படி விவரம் என்ன?" என்று தெரியாமலேயே, இந்தையிரோப்பியன் மொழியில் மேல் உள்ள கரிசனையில், முழுப் பூசனியை சோற்றில் மறைப்பது பேராசிரியர் ரூமிக்கு அழகல்ல.
--------------------------

அடுத்து, "தமிழ்ப் படுத்துதல் என்பது வேறு, தமிழைப் படுத்துதல் என்பது வேறு. ஆனால் இந்த இரண்டாவதைத் தான் முன்னது என்று பல பிரகஸ்பதிகள் நினைத்துக்கொண்டு காரியத்திலும் கருமமே கண்ணாக இறங்கிவிடுவதால் தான் இவ்வளவும் சொல்லவேண்டியுள்ளது" என்று சொல்லுகிறார்.
--------------------------
இராம.கி:

இந்தக் கருத்தில் நமக்கு எந்தக் குறையும் இருக்க முடியாது. நல்ல மொழிபெயர்ப்பு என்பது யாருமே விரும்பும் ஒன்றுதான். அதற்கு நல்ல தமிழ்ப் பயிற்சியும், மொழிபெயர்க்கப் படும் மொழியில் அறிவும், தமிழ்ப் பண்பாடு, பழக்க வழக்கம் பற்றிய புரிதலும் தேவை.
---------------------------

அடுத்து, "சில ஆண்டுகளுக்கு முன் "The govt. has a big role to play" என்பதை தமிழக அரசின் பொருளாதார பாடப்புத்தகத்தில், "அரசு விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை வைத்துக்கொண்டிருக்கிறது" என்று 'தமிழாக்கி' இருந்ததாக துக்ளக் இதழில் ஒரு செய்தி வந்தது! பண்டித மொழிபெயர்ப்புக்கு ஒரு உதாரணம் தான் இது" என்று சொல்லியிருக்கிறார்.
--------------------------
இராம.கி:

இங்கும் நமக்கு அடிப்படையில், வேறுபாடு இருக்க முடியாது. கொடுத்திருக்கும் மொழிபெயர்ப்பு, ஒரு முட்டாள் தனமான மொழிபெயர்ப்புத் தான். இருந்தாலும் "role என்ற சொல்லை எப்படிச் சொல்வது?" என்று நமக்கு விளங்கவில்லை. "வெறுமே பங்கு என்று சொல்லி, part ஆக்குவது" ஒருவகையான ஒப்பேற்றும் வேலை. இப்படி ஒப்பேற்றிய மொழிபெயர்ப்புக்கள் தமிழில் ஏராளம். நம்மில் பலருக்கு குறை காணத் தெரிகிறது, ஆனால் மாற்றுச் சொல்லத் தெரிவதில்லை. பேராசிரியர் ரூமியாவது சொல்லியிருக்கலாம்.
-------------------------

"தமிழாக்கங்களில் ஏற்படுகின்ற எல்லாக் குழப்பங்களுக்கும் அபத்தங்களுக்கும் இந்த கருத்தாக்கம்தான் அடிப்படைக் காரணமாக உள்ளது" என்று தூய தமிழை இனங் காட்ட முற்படும் திரு.ரூமி "ஒரு மொழியின் தூய்மை என்பது குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் அதன் சொற்களை அடைக்க முயற்சிப்பதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு மலையாளி ஆங்கிலம் பேசும்போது அதில் மலையாள வாசம் கலந்துவிடுவதுபோல, ஒரு தமிழன் ஹிந்தி பேசினால்கூட அதில் தமிழின் மணமிருக்கும். அந்த வாசம்தான் தமிழின் தூய்மை. அதுதான் அதன் தமிழ்மை" என்று அதிரடியாக அடுத்து ஒரு கருத்தை வைக்கிறார்.
--------------------------
இராம.கி:

உலகத்தில் இல்லாத ஒரு விளக்கம் இது. "பாலில் இவ்வளவு பங்கு தண்ணீர், இவ்வளவு பங்கு மாவுப் பொருள், இவ்வளவு பங்கு சருக்கரை... இன்ன பிற இவ்வளவு இருக்க வேண்டும்" என்று அதன் கூட்டுப் பொதிவை, செறிவை (composition, concentration) வரையறுத்து, பால் என்றால் இது என்று சொல்லித் தான் உலகெங்கும் பழக்கம்.

"இந்தச் செறிவுக்கு மேல் தண்ணீர் கூடி விட்டால் அது தண்ணீர்ப் பால் - அல்லது தண்ணீரே கூட" என்று சொல்லுவது திரு. ரூமியின் வரையறைப்படி பால்மை அல்ல போலும். அவருடைய விளக்கப் படி எலுமிச்சைத் தேநீரில் நாலு சொட்டுப் பால் விட்டுக் குடித்தால் அது பால்மையாகி விடும். அந்த மனத்தை அவர் முகர்ந்து கொள்ளுவார். "தமிழன் ஹிந்தி பேசினால்கூட அதில் தமிழின் மணமிருக்கும். அந்த வாசம்தான் தமிழின் தூய்மை" என்பது போன்ற வெற்றான (கவித்துமான என்று சொல்லலாமா?:-)) விளக்கங்களை வைத்துக் கொண்டு ரூமி தமிழைப் படுத்த வருவது நமக்கு வேடிக்கையாக இருக்கிறது. இது போன்ற அலங்காரச் சோடனைச் சொல்லாடலில் பேராசிரியர் ரூமி என்ன சொல்ல வருகிறார்?
----------------------------

அடுத்து இன்னொரு பொன் மொழியை உதிர்க்கிறார் பேராசிரியர் ரூமி. "ஒரு குறிப்பிட்ட மொழி எத்தனை மொழிகளில் இருந்து சொற்களை எடுத்து தன்வயப்படுத்திக் கொள்கிறது -- கடன் வாங்கிக்கொள்கிறது என்று நான் சொல்லவில்லை, கவனிக்கவும் -- என்பதை வைத்து அதன் வளர்ச்சியின் நிலையையும் பக்குவத்தையும் புரிந்துகொள்ளலாம்."
----------------------------
இராம.கி:

தகலாக் என்ற பிலிப்பைனின் தேசிய மொழி (சீனம், மலாய், போர்ச்சுகீசு, ஆங்கிலம், டச்சு, பிரஞ்சு, இன்னும் பல் வேறு தென்கிழக்கு ஆசியமொழிகள் என), ஒரு 20 வெளி மொழிகளின் சொற்களையாவது தன்வயப் படுத்திக் கொண்டிருக்கிறது - கடன் வாங்கிக்கொள்கிறது என்று நான் இங்கு சொல்லவில்லை, கவனிக்கவும் -- இதை வைத்து "தகலாக் மொழி மிக வளர்ச்சி அடைந்து பக்குவப் பட்டிருக்கிறது" என்று கொள்ளலாமா? நமக்குப் புரியவில்லை.

இது என்ன கோணல் தனமான சிந்தனை அல்லது தருக்கம், ஆசிரியருக்கு வருகிறது? 40 மொழிகளில் உள்ள சொற்களைத் தன்வயப் படுத்திக் கொண்ட மொழி, 20 மொழிச் சொற்களைத் தன்வயப் படுத்திக்கொண்ட மொழியை விடப் பக்குவப் பட்டதா, வளர்ச்சி அடைந்ததா, என்ன? திரு.ரூமி தான் எழுதிய கருத்தைத் திருப்பிப் படித்தாரா? மேலாளுமை (overlordship), குடியேற்றம் (colonization), பேரரசு வல்லாண்மை (imperial dictatorship) ஆகியவை பற்றிப் பேராசிரியர் படித்திருப்பாரா?
---------------------------

ரூமி தரும் அடுத்த அதிரடி: "மாறிக்கொண்டே இருக்கும் சமுதாய வாழ்வில் மொழியை மட்டும் தூய்மை என்ற பெயரில் செக்குமாடாக்குவது எந்த வகையில் நியாயம்?"
-------------------------
இராம.கி:

என்னங்க பேச்சு இது? தற்கால வாழ்க்கைக்குக் கற்கால மொழியைப் பயன்படுத்த யாரும் சொல்லலைங்களே? மாறிக் கொண்டே இருக்கும் குமுகாய வாழ்விற்கு ஏற்ப, மொழியின் சொல்வளத்தைக் கூட்டுங்கள், புதிது படையுங்கள், புதுப்பொருள் உருவாக்குங்கள். யார் வேண்டாம் என்றார்கள்? இதில் என்ன செக்கு மாட்டுத் தனம்? மறுபடியும் ஒரு வார்த்தை விளையாட்டா? வெறும் கதை, கவிதை என்று அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருப்பது செக்குமாட்டுத் தனமா, புதிய செய்திகளைத் தமிழில் சொல்ல வருவதும், அதற்கேற்ற சொல்வளத்தை உருவாக்குவதும், செக்கு மாட்டுத் தனமா? யார் செக்கு மாடாய் இங்கு இருக்கிறார்கள்?
-----------------------------

அடுத்தது இதையெல்லாம் என்றைக்கு நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு ஓர் அறுதப் பாடாவதியான, கடைந்தெடுத்த பிற்போக்கு வாதத்தை திரு. ரூமி முன்வைக்கிறார். இப்படி ஒரு வாதத்தைக் கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு பேராசிரியர் சொல்லுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

"நமது இன்றைய வாழ்வு ஒரு ஆரோக்கியமான கலவையாக உள்ளது. இன்றைக்கு 'பேன்ட்' போடாத அல்லது அணியத் தெரியாத தமிழனே இல்லையென்று கூறலாம். நாம் சார்ந்து வாழும் மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி, இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், விமானம், கம்ப்யூட்டர் போன்ற அனைத்தும் தமிழனின் படைப்பா என்ன?"

--------------------------
இராம.கி:

இங்கே திரு. ரூமி என்ன சொல்ல வருகிறார்? இது தமிழன் படைப்பு இல்லாத காரணத்தால், தமிழ்ச் சொல்லால் இவற்றை அழைக்கக் கூடாதா? இவற்றை விளங்க வைக்குமாறு, தமிழில் எழுதக் கூடாதா? மேலே கூறிய பட்டியலில், தன்னை மறந்து, மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி என்று தமிழாக்கச் சொற்களை எழுதியதை திரு. ரூமி கவனிக்கவில்லை போலிருக்கிறது. இவற்றை எல்லாம் தமிழில் சொல்ல முடியுமானால், கணி என்ற சொல்லைச் சொல்ல மட்டும் ஏன் ஒரு தடா அல்லது பொடா? (பாயும் காட்டு வரிவிலங்கைப் பற்றிய சொல்லைத் தமிழில் சொல்லத் தான், "தமிழ்நாட்டில் பொடா" என்று கேள்விப் பட்டிருக்கிறோம். :-)) ஆசிரியர் ரூமி, தான் வேலை பார்க்கும் கல்லூரியில் மாணவருக்குக் தருக்க நூல் (logic) கற்றுக் கொடுப்பதைக் கவனித்திருப்பார் என்று நினைக்கிறேன். "இதெல்லாம் ஆகலாம் என்றால், இதைப்போன்ற மற்றவையும் ஆகலாம்" என்பது தருக்க நூலின் முடிபு. ("ஆகும் என்ன, ஆக வைத்தே வேண்டும்" என்பது ஆர்வலர்களின் முடிபு :-))
------------------------

அடுத்தது ஆசிரியரிடம் இருந்து கொஞ்சம் பேடைப்பேச்சு வீராவேசத்தில், ஒரு கேள்வி எழும்புகிறது. "'பஸ்'ஸை பேருந்து என்றும் 'செக்'கை காசோலை என்றும் கம்ப்யூட்டரை கணிணி என்று கணிப்பொறி என்றும் குழப்பமாக தமிழ்ப்படுத்த வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? எந்த தமிழனாவது, "இன்று நான் பேருந்தில் வந்தேன்" என்று சொல்கிறானா?"
------------------------
இராம.கி:

இங்கே குழப்பம் செய்வது யார்? திரு. ரூமியா, அல்லது இதைத் தமிழ்ப்படுத்தியவர்களா? ஊரெங்கும் "பேருந்து நிலையம்" என்று எழுதியிருக்கிறது; யாராவது புரியவில்லை என்று சொல்கிறார்களா? "பேருந்து என்ற சொல்லை விரிவாகப் புழங்காமல், பஸ் என்று ஏன் சொல்லுகிறார்கள்?" என்ற கேள்விக்கு விடை இதுதான்:

விவரம் கெட்ட மிடையத்தாரும், இனம் புரியாத ஆசிரியர்களும் "ஏதொன்றையும் தமிழில் சொல்லுவது கேவலம், தமிழில் பாடுவது கேவலம், தமிழில் சிந்திப்பது கேவலம்", என்று 6 1/2 கோடி மக்களை கடந்த 25 ஆண்டுகளாய் உருவேற்றி வைத்திருக்கிறார்களே, அந்தத் தாழ்வு மனப்பான்மை தான் பேருந்து என்ற சொல்லைப் பேச்சில் புழங்காதற்கு காரணம்.

வேண்டுமானால், உங்கள் கதைகளில், கதைமாந்தர் கூற்றாக இல்லாமல், ஆசிரியர் கூற்றாய் வரும்பொழுது, பேருந்து என்ற சொல்லைப் பயின்று பாருங்களேன். அதன் பிறகாவது, "ரூமி சொன்னார்" என்று ஊரெல்லாம் இந்தச் சொல் பரவட்டும். இப்படிப் பத்து எழுத்தாளர் எழுதினால், அந்தச் சொல் பரவத் தானே செய்யும்? "பல்கலைக் கழகம், சொற்பொழிவு, துணை வேந்தர்" என்ற சொற்களெல்லாம் இப்படித் தானே பரவின? திரு. ரூமி, ஊரில் தேரிழுக்க நீங்கள் வடம் பிடியுங்களேன். அதை விடுத்து, வெறுமே வக்கணை பேசிக் கொண்டு, வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடந்தால் எப்படி?

செக் என்று சொல்வதைக் காட்டிலும் காசோலை என்னும் போது, "அது காசுக்கான ஓலை, காசு எடுக்கப் பயன்படும் ஓலை" என்று சட்டென்று மக்களுக்குக் காட்டிக் கொடுப்பதால் தான் அந்தச் சொல் பரவியது. "செக் போன்ற சொற்களையே மக்கள் புழங்குகிறார்கள்" என்று நொள்ளை வாதம் காட்டிக் கொண்டிருந்தால், யாருக்கு ஏதிலித்தனம் (in-security) இருக்கிறது? பேராசிரியருக்கா, மக்களுக்கா? இந்தப் போக்கில் பார்த்தால், பொதுவிடத்தில் யாரும் அம்மாவென்று சொல்லுவதைக் காட்டிலும் மேடம் என்று பலரும், விடுகளுக்குள் மம்மி என்று சிலரும் (இது பலரா என்பது தெரியவில்லை.) இப்பொழுது சொல்லுகிறார்களே, அதைக் கூடச் சரியென்று நீங்கள் சொல்லுவீர்கள் போலிருக்கிறது

"கம்ப்யூட்டர் என்று சொன்னால் கலங்காதேப்பா, அது கணி; அதாவது, கணிக்கின்ற, கணக்குப் போடுகின்ற கருவி" என்று சொல்லுவது உங்களுக்குச் சலிப்பைத் தருகிறது போலும்.

எது ஒன்றையும் படித்தவர்களிடம் கண்டு, அவர்கள் தஃசுப் பிஃசென்று தங்களுக்குள்ளே ஆங்கிலத்தில் பேசிக் கொண்டால், "அதைக் கண்டு மருளாதேப்பா, அது இதுதான்" என்று ஆங்கிலம் அறியாதவருக்கு, தமிழ் மட்டுமே அறிந்தவருக்குத் தமிழில் நாங்கள் சொல்லுகிறோம். இதற்கு நீங்கள் பிய்த்துக் கொண்டு வருகிறீர்கள்.

"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்று இந்த படித்தவர்களின் பம்மாத்து பலிக்காமல் செய்யும் படி, ஆர்வம் இருப்போருக்கும் புரிய வைக்கும் முயற்சியே அறிவியலைத் தமிழின் வாயிலாகவே சொல்லும் முயற்சி. இதையெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருந்தால் தயவு செய்து தமிழ் பேசுகிறவர்களிடம் தமிழை விட்டு விட்டு, நீங்கள் முற்றிலும் ஆங்கிலத்திற்குத் தாவி விடலாம். கூடவே தமிழை மூன்று சுற்றுச் சுற்றி, வங்கக் கடலில் நீங்கள் வீசி எறியலாம். அதை விடுத்து, இப்படி அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாத அமெரிக்கக் கறுப்பர் நிலைக்கு, மற்ற தமிழரைத் தள்ள வேண்டாம்.
-------------------------

இப்படி ஒரு அறைகுறை வாதத்தை ஒரு பேராசிரியர் வைப்பாரா என்று சொல்லவைக்கும் அளவுக்கு, திரு. ரூமியின் அடுத்த கூற்று இருக்கிறது. "ரோஜாப்பூ ரோசாப்பூவானதிலிருந்து ரோஜா அதன் அழகையும் நறுமணத்தையும் இழந்து தவிக்கிறது. மகாகவி பாரதிகூட -- இந்த 'மகாகவி'யில் உள்ள 'மகா'கூட தமிழில்லை சரிதானே? -- "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்றுதானே பாடினான்? "சகத்தினை" என்று பாடவில்லையே? ஏன்? 'ஜ'வின் கம்பீரம் 'ச'வில் இல்லை. அதனால்தான். கம்பீரக் கவிஞனான பாரதிக்கு அது புரியும்."
--------------------------
இராம.கி:

உங்களுக்குத் தெரியுமே, தொல்காப்பியன் என்பவன் வடமொழியில் அல்லது இந்தியில் தோல்காப்பியன் என்று ஆகிப் போகிறான். இப்படிச் சொல்வதால் வடமொழியில், தொல்காப்பியனின் வீறு சுருங்கிப் போனதா, என்ன? தூத்துக்குடி என்ற ஊரின் பெயர் ஆங்கிலத்தில் டூட்டுக்கோரின் ஆகிப் போனதால் நாற்றமெடுத்துப் போகிறதோ? அழகிய சிங்கர் என்பவர் அலகிய சிங்கராகவோ, அஸி(zi)கிய சிங்கராகவோ ஆகிப் போனால், அது ஒழுகி ஊற்றுகிறதோ? இதெல்லாம் என்ன வாதம்? அவனவன் மொழிக்குத் தக்க, அவனவன் பெயர் வைத்துக் கொள்ளுகிறான், அல்லது திரித்துக் கொள்ளுகிறான். இதில் என்ன தாழ்வு மனப்பான்மை வந்து நிற்கிறது? ரோஜாவை, ரோசா ஆக்கினால், அழகும், நறுமணமும் போய் விடுகிறதாம். எனக்குப் பெரியார் சொல்லும் காய்கறிப் பெயரைத் தான் இங்கு கூறத் தோன்றுகிறது.

ஆங்கிலேயனும் இன்னும் பல மேலை மொழிக்காரரும் கூட rose என்றுதானே சொல்லுகிறார்கள்? "அழகும் நறுமணமும் வேண்டும், எம் மொழியை அலங்கரிக்க வேண்டும்" என்ற உந்தலில் தம் வழக்கத்தைப் போக்கி roja என்று அவர்கள் சொல்லுவதில்லையே?

சீனக்காரனிடமும், கொரியக்காரனிடமும் போய் க்றிஸ்த் என்று சொல்லச் சொல்லுங்களேன். கிலிஸேது என்பார்கள். அப்படிச் சொல்லுவதற்கு அவர்கள் உள்ளூற வெட்கமே படவில்லை (நம் முகத்திற்காக, வெளியே காட்டும் நாணம் வேறு). அது அவர்களுக்குத் தவறென்றும் படவில்லை. ஏன் ஆங்கிலேயனே கூட, அரமெய்க் மொழியில் இருந்த பெயரை வைத்தா christ என்று சொல்லுகிறான்? அரமெய்க் மொழியில் கிறித்துவின் பேர் எப்படிப் பலுக்கப் பட்டதென்று யாருக்குத் தெரியும்? நான் கிறித்து என்று தமிழில் சொல்வதால், எனக்கு கிறித்துவின் அருளுரை பொருளற்றுப் போகிவிடுமா, என்ன? யேசு என்ற அரமெய்க் பெயரை Jesus என்று மாற்றி ஒலிக்கிறானே, ஆங்கிலத்தான்? அவனுக்கு மாறிப் போகிறாரா, என்ன? ஒரு கவிஞர், எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர், இப்படிப் பொருளற்ற வாதங்களை வைப்பதும், அதற்குப் பாரதியைத் துணைக்கு அழைப்பதும், எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

மொழியியல் படித்துப் பாருங்கள், ரூமி. "மா" என்ற தமிழியற் சொல் "மகா" என்ற வடமொழிச் சொல்லாயிற்று. இந்தச் சொற் பிறப்பை நான் இங்கு விவரித்தால், சொல்லவந்த கருத்தின் திசை மாறிப் போகும். எனவே தவிர்க்கிறேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று உங்களைப் போன்ற பேராசிரியர்கள் இருக்கக் கூடாது. "எதையும் ஏன், எதற்கு?" என்று குடைந்து கொண்டிருந்தால் தான், மாணவர்களுக்கு நீங்கள் அறிவியற் பார்வையைச் சொல்லிக் கொடுக்க முடியும்.

பாரதி "ஜ" பயன்படுத்தி "ச" பயன்படுத்தாதில் பெரிதாய் ஒன்றும் வியப்பு இல்லை. அது அந்தக் கால நடை. அவ்வளவு தான். மறைமலை அடிகளின் இயக்கத்திற்கு முந்திய காலத்தில் மணிப்பவள நடை தமிழில் அதிகமாகவே இருந்தது. பாரதியே தன் கவிதையைக் காட்டிலும், உரைநடையில் அதிக வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தும் மணிப் பவள நடையில் எழுதி இருக்கிறான். அது அவன் நடை; அவ்வளவுதான். இன்றைக்கு அதைக் கொள்வதும் தவிர்ப்பதும், ஓரளவு மாற்றிப் புழங்குவதும் நம் உகப்பு.
----------------------------

அடுத்து ஆங்கிலக் கற்பு பற்றியும், தமிழ் அம்மணம் பற்றியும் பேசுகிறார் ரூமி: "எல்லா மொழியிலிருந்தும் சொற்களை அணைத்துக் கொண்டதால் ஆங்கிலம் கற்பிழந்து விட்டதா என்ன? மாறாக அசுர வளர்ச்சி கண்டுவிட்டது. இனியும் அதன் விஸ்வரூபம் வளரும். ஆனால் நாம் மட்டும் தமிழின் தலையிலடித்து இன்னும் ஏன் வாமனமாகவே -- அம்மணமாகவே என்பதுபோல் இல்லை? -- அதை வைத்திருக்க வேண்டும்?"
---------------------------
இராம.கி:

கடைசியில் பொது வாழ்க்கையில் இருக்கும் பல தமிழர்களைப் போல, உடல், உள்ள உருவகங்களில் கட்டுண்டு, சிக்கிக் கொண்டு, உணர்வுமயப் பட்டு, கற்பு, அம்மணம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார் நம்முடைய ஆங்கிலப் பேராசிரியர் (அப்படித்தான் என்று நினைக்கிறேன். தவறாய் இருந்தால் மன்னியுங்கள்.).

ஆசிரியர் ரூமி 18, 19 ம் நூற்றாண்டு ஆங்கில நடையைப் பார்த்திருப்பார் என்று எண்ணுகிறேன். பிரஞ்சு ஊடுறுவிய நடை அப்பொழுது ஆங்கிலத்தில் பெரிதும் விரவிக் கிடக்கும். 20 நூற்றாண்டு தொடக்கத்தில் "இவ்வளவு பிரஞ்சு கூடாது" என்று அங்கேயும் ஒரு தனி ஆங்கிலப் போக்கு வரத்தான் செய்தது. இதே எழுச்சி, உருசிய மொழியிலும் இருந்தது. வேறு ஒன்றும் இல்லை. "உள்ளதும் போச்சுடா, தொல்லைக்காதா" என்று காப்பாற்றிக் கொள்ளுகிற சேமப் போக்குத்தான் இது போன்ற தனி மொழி இயக்கங்களுக்கு அடிப்படை. "சிறுதுளி பெருவெள்ளம்" என்று வந்து, காட்டாற்றில் அடித்துப் போகக் கூடாதே என்று அணை கட்ட முனைகிறோம். அவ்வளவுதான்.

ஒருமுறை சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் சந்திர போசு தமிழ் உலக மின்மடற் குழுவிற்கு ஒரு செய்தியைத் தெரிவித்திருந்தார். அதை அப்படியே வெட்டி இங்கு ஒட்டித் தருகிறேன்.
-------------------------

பொங்கலன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் எப்.எம். வானொலியிலிருந்து நேயர்களை தொலைபேசியில்
அழைத்து கடி சிரிப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவராஸ்யமான
உரையாடலைக் கேட்டேன்.

" நீங்க என்ன படிக்கிறீங்க விக்னேஷ்"
" நான் பிப்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்"
" என்ன கடி ஜோக் சொல்லப் போறீங்க"
" உயிரில்லாமல் ஆகாயத்தில் பறக்கும் பறவை எது?"
" ம் ம் ம் ஆகாய விமானம்"
" இல்லை. தப்பு "
" தெரியலையே. நீங்களே சொல்லுங்க"
" இது தெரியாதா? ஏரோப்ளேன் "
" அதான நானும் சொன்னேன் "
" பொய் சொல்லாதீங்க. ஆகாய ன்னு என்னமோ சொன்னீங்களே"
" அது தான் ஆகாய விமானம் "
" அது தப்புதான. ஏரோ ப்ளேன் தான் கரெக்ட் "

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்.????
-------------------------------------------------------------------------------
இராம.கி:

"தமிழ் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?" என்பதை இதைப் படித்த பிறகு பேராசிரியர் ரூமி புரிந்திருப்பார் என்று எண்ணுகிறேன். வீட்டின் சில பகுதிகளில் தீப் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது. பேராசிரியரோ, "நெருப்பை அணைக்காமல், நெருப்பு வீட்டிற்கு எவ்வளவு அழகு, ஒளி தருகிறது" என்று சொல்லுகிறார். வீட்டிற்குச் சொந்தக்காரர் இப்படி இருந்தால், அப்புறம் வீடு பொழைச்சாப்புலே தான்.
-----------------------------

அடுத்து ஒரு பழைய தமிழாக்கத்தை மீண்டும் உலவ விடுகிறார், திரு.ரூமி: "Trunk Call என்பதற்கும் Coffee என்பதற்கும் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழாக்கங்கள் என்ன தெரியுமா? முன்னது 'முண்டக்கூவி' பின்னது 'கொட்டைவடி நீர்'! உறங்குவது போலும் சாக்காடு என்று சொல்வார்கள். திட்டுவது போலும் தமிழாக்கம் என்று சொல்லத் தோன்றுகிறது!"
--------------------------
இராம.கி:

இதை வெளியூர் அழைப்பு என்று பலரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். யாரோ தனி ஒருவன் செய்த பிழையைப் பொதுமையாக்கி, தமிழாக்கத்திற்கே இழுக்கு சொன்னால் எப்படி? "ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குவது" என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். நீங்கள் அதில் பெரிய ஆள் போலிருக்கிறது.
---------------------------

அடுத்துச் சொல்கிறார் ரூமி: "படிக்காத பெண்கள்கூட, "என் மகன் கம்ப்யூட்ட சய்ன்ஸ் படிக்கிறான்" என்றோ "டாக்டரைப் பார்க்கப் போனோம்" என்றோதான் சொல்கிறார்கள். "என் மகன் கணினி விஞ்ஞானம் பயில்கிறான்" என்று சொல்வதில்லை. "மருத்துவரைப் பார்க்கச் சென்றோம்" என்று சொல்வதில்லை. எந்த வங்கி ஊழியரும், "நான் வங்கிக்குக் செல்கிறேன்" என்று கூறுவதில்லை. எழுதுவதும் இல்லை."
----------------------------
இராம.கி:

இதுவும் ஒரு தாழ்வு மனப்பான்மைதான்; படித்தவர்களை படிக்காதவர்கள் முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். படித்தவர்கள் சரியாகச் சொன்னால், படிக்காதவர்கள் அது கண்டு மாறுவார்கள். ஆசிரியர் தான் சொல்லுவதைக் கடைப்பிடிக்கா விட்டால் மாணாக்கர் அதை எப்படிக் கடைப் பிடிப்பார்? கல்லூரிப் பேராசிரியருக்கு இந்தக் கடைப்பிடி விளங்கவில்லையா? நீங்கள் முதலில் சரியாகச் சொல்லுங்கள். சுற்றியுள்ள மற்றவரைச் சொல்ல வையுங்கள்; கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் சூழமைவு (environment) மாறும். கையாலாகாத தனமாக, படித்தவர்கள் தங்கள் பொறுப்பின்மையையும், சோம்பலையும், மறைத்துக் கொண்டு ஊரைக் குறை சொல்லுவது, "ஆடத் தெரியாதவளுக்குத் தெருக் கோணல்" என்பதைப் போல் இருக்கிறது.
--------------------------------

சொற்களின் பிணங்கள் என்ற கருத்தை முன்வைத்து திரு. ரூமி சொல்கிறார்: "Software என்பதற்கு இணையான சொல்லை நாம் தரமுடியாது. காரணம், அது நம்முடைய சிந்தனையல்ல. அடுத்தவன் சிந்தனைக்கு நாம் சொல் தரமுயன்றால் அது சொற்களின் பிணங்களைத்தான் தரும். அப்படிப்பட்ட சொற்கள் நம் அன்றாட வாழ்வின் பயன்பாட்டு எல்லைகளுக்கு அந்தப்பக்கம்தான் நின்றுகொண்டிருக்கும்."
---------------------------
இராம.கி:

இதுவும் என்ன சிந்தனை என்று புரியவில்லை. ஒவ்வொரு விதமான சிந்தனை, ஒவ்வொரு மொழியினரிடம் இருக்கிறது. "நீ உன் அப்பாவுக்கு எத்தனையாவது பிள்ளை?" என்பதை ஆங்கிலத்தில் நேரடியாகச் சொல்ல முடியாது. சுற்றி வளைத்துத்தான் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் போது "இந்தத் தமிழ்ச் சொற்றொடரின் பிணம் தான் ஆங்கிலச் சொற்றொடர்" என்றா சொல்ல முடியும்? இதெல்லாம் என்ன பேச்சு? software என்பதற்கு முன் பலரும் இட்ட சொற்களைச் சொல்லி அவற்றின் நிறை குறைகளை இங்கு விவாதிக்க நான் முயலவில்லை. "அதைத் தமிழில் சொல்ல முடியாது என்று ஒரு பேராசிரியர் சொல்லுகிறாரே? இப்படி ஒரு தருக்கம் வைத்தால் அப்புறம் எல்லாவற்றிற்கும் இப்படித்தானே சொல்லுவார்?" - அதுதான் நெஞ்சைக் குத்துகிறது. ஒரு பேராசிரியரே, தோல்வி வாதம் வைத்தால், பின் அந்தக் கல்லூரி எப்படி விளங்கும்? எந்த வகையான மாணவர் அங்கிருந்து எழுவர்?

"Hospital என்ற சொல்லை தமிழ் தனக்கு ஏற்றவாறு 'ஆஸ்பத்திரி' என்று மாற்றிக்கொண்டதைக் குறிப்பிடலாம்" என்று சொல்லிப் பாராட்டுகிற திரு. ரூமி எதனால் பாராட்டுகிறார் என்று புரியவில்லை. மருத்துவமனை என்பதைக் காட்டிலும் ஆஸ்பத்திரி என்ற சொல்லி இவர் என்ன விளங்கிக் கொண்டார்? என்ன அடிமைத்தனம், ஐயா இது? ஆங்கில மருத்துவம் செய்வதால் அதை மருத்துவமனை என்று சொல்லக் கூடாதோ? திரு. ரூமியின் அளவுகோல் தான் என்ன? எல்லாமே தன்வயப் போக்கா (subjective)? இதுவரை தமிழில் புழங்காத, ஆனால் தேவையான ஆங்கிலச் சொல்லை ஏதோ ஒரு விதமாய்த் திரித்துச் சொன்னால், இவர் ஏற்றுக் கொண்டு விடுவாரோ? இவர் என்ன சொல்ல வருகிறார்? "தமிழில் மொழிபெயர்க்காதே, வெறுமே எழுத்துப் பெயர்ப்பு செய், அதுவும் கிரந்த எழுத்துக் கலந்து எழுத்துப் பெயர்ப்பு செய்" என்று சொல்லுகிறாரா? "கிரந்த எழுத்து என்பது அதுவரை எழுதப் படாமல் இருந்த வடமொழியை எழுதுவதற்குத் தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு நீட்டிக்கப் பட்ட (extended) ஒரு எழுத்து" என்று ஆசிரியர் ரூமி அறிவாரோ? "வடமொழிக்காக உருவாக்கப் பட்ட எழுத்தை வைத்துத் தமிழை எழுத வேண்டிய தேவை என்ன?" என்று தெரியவில்லை.
--------------------------

அடுத்து ஒரு அவத்தமான கருத்தை நமக்குத் திரு. ரூமி சொல்கிறார்: "சன்-டிவி என்பதை தமிழ்ப்படுத்தினால் அது அபத்தமான அர்த்தம் தரும். 'சூரியத் தொலைக்காட்சி' என்றால் அது 'சூரியனிலிருந்து ஒளியைப் பெறுகின்ற' (solar) என்ற பொருளைக்கொடுக்கும். 'சூரியன்-தொலைக்காட்சி' என்றாலும் அந்தக் கூட்டுச்சொல் (compound word) சரியாக அமையாது. சன்-டிவி என்பதே சரியாகும். இது மொழியின் பயன்பாட்டைப் புரிந்து கொண்ட பெயர்வைப்பாகும். 'சூரியத்தொலைக்காட்சி' என்று பெயர் வைப்பதும் "ஒரு நல்ல பாம்பு படமெடுப்பதைப் பார்த்தேன்" என்பதை "I saw a good snake taking pictures" என்று மொழிபெயர்ப்பதும் ஒன்றுதான்!"
----------------------------
இராம.கி:

சூரியத் தொலைக்காட்சி என்றால் 'சூரியனிலிருந்து ஒளியைப் பெறுகின்ற' (solar) என்ற பொருளைக் கொடுக்கிறதாம். நான் தமிழ் தான் பேசுகிறேனா, அல்லது மீண்டும் நான் பள்ளிக் கூடத்திற்குப் போக வேண்டுமா என்று புரியவில்லை. என்ன இழவைய்யா, நான் புரிந்து கொள்ளுகிறேன்? பேராசிரியரின் பொழிப்புரை நம் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் போல் இருக்கிறதே?

சூரியத் தொலைக்காட்சி என்பதற்கு மாறாகக் "கிருஷ்ணத் தொலைக்காட்சி என்று இருக்கிறது" என்று பேச்சுக்கு வைத்துக் கொள்ளுவமே? "கருப்பில் இருந்து ஒளிபெறுகின்ற" என்ற பொருள் அங்கு வருமோ? பொதிகைத் தொலைக்காட்சி என்பது "பொதிகை மலையில் இருந்து ஒளி பெறுகிற" என்று பொருள் வருமோ? ஒரு தமிழ்ப் பெயர்ச்சொல்லோடு இன்னொரு தமிழ்ப் பெயர்ச்சொல்லை எப்படித் தான் இணைப்பது? எமக்கு விளங்கவில்லையே? கல்லூரியில் இப்படி எல்லாம் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களா, என்ன?

மதம் மாற்றும் முயற்சிகளை விடச்சொல்லும் திரு. ரூமி, "யாருக்கு மதம் பிடித்திருக்கிறது?" என்றும், "மதம் என்றால் என்ன?" என்று தெரியாதவருக்கு "மதம் என்றால் என்ன?" என்று சொல்லிக் கொடுத்த "பெருங்கிழார் யார்?" என்றும் (இது தாங்க ரூமி, உங்க பிரஹஸ்பதி - வெறுமே சொல்லை உருவேற்றுவதற்கு மாறாய் அதன் பொருளைத் தெரிஞ்சுக்கலாமே!), "அடிமை, ஆதிக்கம் என்றால் என்ன?" என்றும் ஓர்ந்து பார்க்கும் நாள் வரட்டும் என்று வேண்டுவோமாக!

அன்புடன்,
இராம.கி.

திண்ணையில் வெளிவந்த திரு. ரூமியின் ஊற்றுகைக் கட்டுரை:

தமிழ்ப்படுத்துதலும் தமிழ் மனமும் - நாகூர் ரூமி

எல்லா மனிதர்களுக்கும் ஆதாம் ஏவாள்தான் ஆதி பெற்றோர் என்றும் மனுவிலிருந்துதான் மனிதன் தோன்றினால் என்றும் சமயங்கள் கூறுகின்றன. இல்லை குரங்குதான் என்று டார்வினியம் கூறுகிறது. அனுமார் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளலாம். ஆதி வானரங்களுக்குத்தான் ஆதாம் ஏவாள் என்று பெயரோ என்றும் சிலர் ஆராய்ச்சி செய்வதாகத் தகவல். சரி, அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் பெற்றோர் யார் என்ற அதையொத்த பிரச்சனை இன்னொரு விஷயத்திலும் உண்டு. அதுதான் தகவல் பரிமாற்றத்துக்கும் இலக்கிய கலாச்சாரப் பரிவர்த்தனைக்குமாக மனிதன் பயன்படுத்தும் அத்தியாவசிய உபகரணமாக, வடிவமாக, வடிகாலாக இருக்கின்ற மொழி.

இந்த உலகில் இதுவரை பேசப்படுகின்ற எழுதப்படுகின்ற எல்லா மொழிகளுக்கும் பெற்றோர் ஒருவரே என்று மொழி வரலாற்று நூல்கள் கூறுகின்றன. அதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழி என்றும் சொல்லுகிறது. இந்த விஷயத்தை கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்வது மேற்கொண்டு இந்த கட்டுரையில் சொல்லவருகின்ற விஷயத்தில் தெளிவுபெற உதவும்.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஒளி வேகத்தில் சென்று கொண்டிருக்கும் காலகட்டத்தில் அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும் என்ற முனைப்பினாலோ என்னவோ பண்டித சிகாமணிகள் தமிழைத் தூய்மைப் படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு சீரியஸாக சிலபல காரியங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். அதிலுள்ள சில ஆட்சேபணைக்குரிய அம்சங்களைப் பற்றிமட்டும் இங்கு நான் பேசவிரும்புகிறேன்.

முதல் ஆட்சேபணை மொழித்தூய்மை என்ற கருத்து. மொழித்தூய்மை என்பதே ஒரு தவறான கருத்தாக்கம் அல்ல. ஆனால் ஒரு மொழியின் தூய்மையை எது கெடுக்கிறது என்பதைப் பண்டிதர்கள் புரிந்துகொண்டதிலிருந்து நான் வேறுபடுகிறேன். தமிழ்ப்படுத்துதல் என்பது வேறு தமிழைப் படுத்துதல் என்பது வேறு. ஆனால் இந்த இரண்டாவதைத்தான் முன்னது என்று பல பிரகஸ்பதிகள் நினைத்துக்கொண்டு காரியத்திலும் கருமமே கண்ணாக இறங்கிவிடுவதால்தான் இவ்வளவும் சொல்லவேண்டியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் "The govt. has a big role to play" என்பதை தமிழக அரசின் பொருளாதார பாடப்புத்தகத்தில், "அரசு விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை வைத்துக்கொண்டிருக்கிறது" என்று 'தமிழாக்கி' இருந்ததாக துக்ளக் இதழில் ஒரு செய்தி வந்தது ! பண்டித மொழிபெயர்ப்புக்கு ஒரு உதாரணம்தான் இது.

இந்த கருமமே கண்ணாயினார்கள் சாதாரண ஆசாமிகளாக இல்லை. அரசுத்துறைகளிலும், மொழிவளர்ச்சித் துறைகளிலும் பொறுப்புகளில் இருப்பவர்களாகவும் அதிகாரம் சாராத பண்பாட்டு வளர்ச்சித்துறைகளில் பணியாற்றுபவர்களாகவும் அல்லது குறைந்த பட்சம் நாடறியப் புகழ்பெற்றவர்களாகவும் அறிஞர்கள் என்று அறியப்பட்டவர்களாகவும் உள்ளவர்கள். இவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் நினைக்கின்ற நிலையில் இருப்பவர்கள் இவர்கள். என்ன துரதிருஷ்டம் ?!

தூயதமிழ் என்ற ஒரு தவறான கொள்கையை சின்னவீடு மாதிரி இவர்கள் மிகவும் பிரியமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழாக்கங்களில் ஏற்படுகின்ற எல்லாக் குழப்பங்களுக்கும் அபத்தங்களுக்கும் இந்த கருத்தாக்கம்தான் அடிப்படைக் காரணமாக உள்ளது. அப்படியானால் தூய தமிழ் என்று ஒன்று இல்லையா என்று கேட்கலாம். திருக்குறள் தூயதமிழில் இல்லையா என்றும் நினைக்கலாம். ஒரு மொழியின் தூய்மை என்பது குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் அதன் சொற்களை அடைக்க முயற்சிப்பதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு மலையாளி ஆங்கிலம் பேசும்போது அதில் மலையாள வாசம் கலந்துவிடுவதுபோல, ஒரு தமிழன் ஹிந்தி பேசினால்கூட அதில் தமிழின் மணமிருக்கும். அந்த வாசம்தான் தமிழின் தூய்மை. அதுதான் அதன் தமிழ்மை.

ஒரு குறிப்பிட்ட மொழி எத்தனை மொழிகளில் இருந்து சொற்களை எடுத்து தன்வயப்படுத்திக் கொள்கிறது -- கடன் வாங்கிக்கொள்கிறது என்று நான் சொல்லவில்லை, கவனிக்கவும் -- என்பதை வைத்து அதன் வளர்ச்சியின் நிலையையும் பக்குவத்தையும் புரிந்துகொள்ளலாம். எந்த மொழியும் ஆகாயத்திலிருந்து இறங்கிவரவில்லை. (நபிகள் நாயகம் அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் மூலம் இறைச்செய்தி வந்ததாக இஸ்லாம் கூறுகிறது. அதனால் அரபி மொழி வானத்திலிருந்து வரவில்லையா என்று சிலர் கேட்கலாம். அது அப்படியல்ல. இறைச்செய்தி வண்டுகளின் ரீங்காரம் போலவும் மணியோசை போலவும்கூட வந்திருப்பதாக ஹதீஸ் உண்டு. அதாவது ரீங்காரத்திலும் மணியோசையிலும் இருந்து கிடைத்த செய்தி அரபியில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது என்பதே அதன் உட்குறிப்பு. இது மார்க்கங்களின் ரகசியங்களில் ஒன்றாக இருக்கலாம்).

மாறாக, மொழி என்பது ஒரு பண்பாட்டின் குறியீடாக உள்ளது. அது ஒரு சமுதாயப் படைப்பு. சமுதாயம் என்பது பல்வேறுபட்ட பழக்க வழக்கங்களையும், குணாம்சங்களையும், வாழ்முறைகளையும், தனித்துவங்களையும், கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும் கொண்ட மனிதர்களைக் கொண்டது. கற்கால மனிதன்கூட தனித்துவம் கொண்டவன்தான். இல்லையெனில் தற்கால மனிதன் அவனை கற்கால மனிதன் என்று எப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியும்? மாறிக்கொண்டே இருக்கும் சமுதாய வாழ்வில் மொழியை மட்டும் தூய்மை என்ற பெயரில் செக்குமாடாக்குவது எந்த வகையில் நியாயம்?

நமது இன்றைய வாழ்வு ஒரு ஆரோக்கியமான கலவையாக உள்ளது. இன்றைக்கு 'பேன்ட்' போடாத அல்லது அணியத் தெரியாத தமிழனே இல்லையென்று கூறலாம். நாம் சார்ந்து வாழும் மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி, இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், விமானம், கம்ப்யூட்டர் போன்ற அனைத்தும் தமிழனின் படைப்பா என்ன?

இதையெல்லாம் எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக்கொள்கின்ற நாம் மொழியில் மட்டும் ஏன் தூய்மையைக் கோரவேண்டும்? 'பஸ்'ஸை பேருந்து என்றும் 'செக்'கை காசோலை என்றும் கம்ப்யூட்டரை கணிணி என்று கணிப்பொறி என்றும் குழப்பமாக தமிழ்ப்படுத்த வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? எந்த தமிழனாவது, "இன்று நான் பேருந்தில் வந்தேன்" என்று சொல்கிறானா?

ரோஜாப்பூ ரோசாப்பூவானதிலிருந்து ரோஜா அதன் அழகையும் நறுமணத்தையும் இழந்து தவிக்கிறது. மகாகவி பாரதிகூட -- இந்த 'மகாகவி'யில் உள்ள 'மகா'கூட தமிழில்லை சரிதானே? -- "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்றுதானே பாடினான்? "சகத்தினை" என்று பாடவில்லையே? ஏன்? 'ஜ'வின் கம்பீரம் 'ச'வில் இல்லை. அதனால்தான். கம்பீரக் கவிஞனான பாரதிக்கு அது புரியும். அதனால்தான்.

வடமொழி என்றும் ஆங்கிலம் என்றும் இனி புலம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஆங்கிலம் ஒரு இந்தியமொழி. அது தன் அன்னியத்தன்மையை இழந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. ஹிந்தி, தமிழ், அரபிக், உர்து, ஃப்ரென்ச் என்றெல்லாம் வித்தியாசம் பாராட்டாமல் எல்லா மொழியிலிருந்தும் சொற்களை அணைத்துக்கொண்டதால் ஆங்கிலம் கற்பிழந்துவிட்டதா என்ன? மாறாக அசுர வளர்ச்சி கண்டுவிட்டது. இனியும் அதன் விஸ்வரூபம் வளரும். ஆனால் நாம் மட்டும் தமிழின் தலையிலடித்து இன்னும் ஏன் வாமனமாகவே -- அம்மணமாகவே என்பதுபோல் இல்லை? -- அதை வைத்திருக்க வேண்டும்?

தமிழுக்கும் பெருந்தன்மை உண்டு. தனித்துவம் உண்டு. வளர்ச்சி உண்டு. சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனால் தூய்மைவாதிகள்தான் தமிழின் வளர்ச்சியைத் தடுக்கும் சீனப்பெருஞ்சுவர்களாக உள்ளனர். Trunk Call என்பதற்கும் Coffee என்பதற்கும் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழாக்கங்கள் என்ன தெரியுமா? முன்னது 'முண்டக்கூவி' பின்னது 'கொட்டைவடி நீர்'! உறங்குவது போலும் சாக்காடு என்று சொல்வார்கள். திட்டுவது போலும் தமிழாக்கம் என்று சொல்லத் தோன்றுகிறது!

தமிழ் இன்று இரண்டு மொழிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒன்று, பேசப்படும் மொழி. இரண்டு, எழுதப்படுகின்ற, திணிக்கப்படுகின்ற, விளம்பரப்படுத்தப்படுகின்ற மொழி. படிக்காத பெண்கள்கூட, "என் மகன் கம்ப்யூட்ட சய்ன்ஸ் படிக்கிறான்" என்றோ "டாக்டரைப் பார்க்கப் போனோம்" என்றோதான் சொல்கிறார்கள். "என் மகன் கணினி விஞ்ஞானம் பயில்கிறான்" என்று சொல்வதில்லை. "மருத்துவரைப் பார்க்கச் சென்றோம்" என்று சொல்வதில்லை. எந்த வங்கி ஊழியரும், "நான் வங்கிக்குக் செல்கிறேன்" என்று கூறுவதில்லை. எழுதுவதும் இல்லை.

பேங்க், பஸ், காப்பி, டீ, கம்ப்யூட்டர் போன்ற சொற்களை தமிழ் மனம் ஏற்றுக்கொள்கிறது. படித்தவரும் பாமரரும் பயன்படுத்துகின்றனர். அவை ஆங்கில வார்த்தைகள் என்று யாரும் நினைப்பதில்லை. உண்மையில் அவை தமிழ்ச் சொற்கள் என்றே பாமரர் நினைக்கின்றனர்.

எந்த மொழியை மக்கள் அனைவரும் பயன்படுத்த முடியாதோ, அந்த மொழி அல்லது அந்த மொழியின் பகுதி செத்துப் போனதாகும். தமிழைப் பொறுத்தவரை அது செத்துப்போகவில்லை. மாறாக, கொல்லப்படுகிறது.

தமிழாக்கம் செய்கின்றவர்கள் பண்பாட்டையும் பயன்பாட்டையும் மனதில் வைத்து செய்வதில்லை. காஃபியை காஃபியாகவே ஏற்றுக்கொள்வதால் சுவை குறையப்போவதில்லை. சிந்தனைப் பின்புலமின்றி, அன்னியமொழியின் சொற்களை மட்டும் தமிழ்ப்படுத்துவதால் எந்தப்பயனுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக software என்பதை 'சாஃப்ட்வேர்' என்றே எழுதலாம். சொல்லலாம். அதை 'மென்பொருள்' என்று ஏன் சொல்லவேண்டும்? எல்லா ஆங்கில சொற்களுக்கும் இணையான தமிழ்ச்சொற்கள் எங்களிடம் இருக்கின்றன என்ற பெருமைக்காகவா? மென்பொருள் என்பது பஞ்சிலிருந்து மார்புவரை மென்மையான எந்தப் பொருளையும் குறிக்கலாமல்லவா? ஏன் இந்தக் குழப்பமும் விளக்க அகராதியும்? Software என்பதற்கு இணையான சொல்லை நாம் தரமுடியாது. காரணம், அது நம்முடைய சிந்தனையல்ல. அடுத்தவன் சிந்தனைக்கு நாம் சொல் தரமுயன்றால் அது சொற்களின் பிணங்களைத்தான் தரும். அப்படிப்பட்ட சொற்கள் நம் அன்றாட வாழ்வின் பயன்பாட்டு எல்லைகளுக்கு அந்தப்பக்கம்தான் நின்றுகொண்டிருக்கும்.

அப்படியானால் எப்படித்தான் தமிழ்ப்படுத்துவது என்ற கேள்விக்கும் விடைகண்டாக வேண்டும். ஒரு அன்னிய மொழியின் சொல்லை தமிழ்ப்படுத்தும்போது அது தமிழோடு தமிழாகக் கலந்துவிடக்கூடியதாகவும் எந்தவிதமான பொருள் சார்ந்த சந்தேகத்தையும் கிளப்பாததாக இருக்க வேண்டும். Hospital என்ற சொல்லை தமிழ் தனக்கு ஏற்றவாறு 'ஆஸ்பத்திரி' என்று மாற்றிக்கொண்டதைக் குறிப்பிடலாம். அதோடு நமது சிந்தனை வளத்தைச் சுட்டுவதாக அது இருந்தால் கூடுதல் சிறப்பு. அப்படி ஒரு உதாரணத்தை சில ஆண்டுகளாக பார்க்க முடிகிறது.

Rape என்று ஒரு ஆங்கிலச்சொல். அதை இதுகாறும் 'கற்பழிப்பு' என்றே மொழிபெயர்த்து வந்துள்ளோம். ஆனால் சமீபத்தில்தான் 'பாலியல் வன்முறை' என்ற பிரயோகத்தைப் பார்க்க முடிந்தது. சரியான, உண்மையான, நேர்மையான, ஆக்கபூர்வமான தமிழாக்கம் எது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

'கற்பழிப்பு' என்று சொல்லி, கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக வைக்கும் தமிழ் மரபை ஏற்றுக்கொள்ளாத, பெண்ணை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகின்ற இந்த சொல்லுக்கு பதிலாக, ஒரு ஆணால் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியைக் குறிக்கும் வகையிலும், 'ரேப்' என்ற ஒரு செயலில் உள்ள மனிதாபிமானத்துக்கு எதிரான பலாத்காரத்தை எடுத்துரைக்கும் விதத்திலும் இந்த 'பாலியல் வன்முறை' என்ற தமிழாக்கம் அமைந்துள்ளது. உண்மையான பெண்ணியச் சிந்தனையின் வளர்ச்சிக் குறியீடாகவும் இதைப் பார்க்கலாம்.

திமுகவுக்கு சன்-டிவிக்கும் உள்ள உறவை நாமறிவோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தங்களது தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில்தானே பெயர்வைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சன்-டிவி என்பதை தமிழ்ப்படுத்தினால் அது அபத்தமான அர்த்தம் தரும். 'சூரியத் தொலைக்காட்சி' என்றால் அது 'சூரியனிலிருந்து ஒளியைப் பெறுகின்ற' (solar) என்ற பொருளைக்கொடுக்கும். 'சூரியன்-தொலைக்காட்சி' என்றாலும் அந்தக் கூட்டுச்சொல் (compound word) சரியாக அமையாது. சன்-டிவி என்பதே சரியாகும். இது மொழியின் பயன்பாட்டைப் புரிந்து கொண்ட பெயர்வைப்பாகும். 'சூரியத்தொலைக்காட்சி' என்று பெயர் வைப்பதும் "ஒரு நல்ல பாம்பு படமெடுப்பதைப் பார்த்தேன்" என்பதை "I saw a good snake taking pictures" என்று மொழிபெயர்ப்பதும் ஒன்றுதான்!

இனிமேலாவது வேற்றுமொழிச் சொற்களை தமிழுக்கு 'மதம் மாற்றுகின்ற' முயற்சிகளை விட்டுவிட்டு, தமிழுக்கு அவற்றை கலப்புமணம் செய்து வைக்க முயன்றால் உண்மையாக தமிழை வளர்க்க அது நிச்சயம் உதவும். தேம்ஸும் தஜ்லாவும் சரயூவும் கங்கையும் தமிழ்ப்பெருங்கடலில் சங்கமமாவதால் அதன் தூய்மை கெடும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அதன் உண்மையான வளர்ச்சி பற்றி ஆக்கபூர்வமாக சிந்திப்பது நல்லது.

Wednesday, April 11, 2007

தமிழில் அறிவியல்

முன்பு ஒருமுறை நண்பர் மாலனுக்கும், எனக்கும் மடற்குழுக்களில் ஒரு சுவையான உரையாடல் நடந்தது. அதை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். (என் உரையில் இருந்த ஒருசில நடைப் பிழைகளை இப்பொழுது திருத்தியிருக்கிறேன்.) மாறி, மாறி, அவர் கருத்துக்களும், என் மறுமொழியுமாக வரும். படிக்கும் போது புரியும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

மாலன்:

அன்பு நண்பர்களுக்கு,

எனக்கு நெடுநாளாக உள்ள சந்தேகம் ஒன்றை அறிஞர் பெருமக்கள் யாரேனும் தீர்த்து வைக்க முன்வந்தால் நன்றி தெரிவிப்பேன். அந்த சந்தேகம் இதுதான்: அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கு வைக்கப்ப்டும் பெயர்களை தமிழ்ப்படுத்துவது முறையா? முறையல்ல என்று நான் கருதுகிறேன். காரணம்

அ.அவை பெயர்ச் சொற்கள். பெயரை மொழிமாற்றம் செய்வதில்லை. ஏழுமலையை ஆறுமுகம் சந்தித்தார் என்பதை ஆங்கிலத்தில் எழுதும் போது Mr.Sevenhills met Mr. Sixfaces என்று எழுதுவது இல்லை.

----------------------------------------------------------------------------------------
இராம.கி:

அன்பிற்குரிய மாலன்,

பெருவப் பெயர்கள் (proper nouns) மட்டும் தான் மொழிபெயர்ப்பதில்லையே தவிர, மற்றவற்றை மொழிபெயர்ப்பதில் தவறில்லை. நீங்கள் ஏழுமலையையும், ஆறுமுகத்தையும், மொழிபெயர்த்தது தான் தவறு. அதே போல நியூட்டனையும், அய்ன்சுடைனையும் மொழிபெயர்ப்பதும் கூடத் தவறு தான். இந்தத் தவறுகளை நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது விழுக்காடு தமிழர் யாரும் செய்வதில்லை. ஆனால் நம் மொழியின் பலுக்கலுக்கு ஏற்ப, அந்தப் பெயர்களைத் திரிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. வெள்ளைக்காரன் நம் நெடுஞ்செழியனையும், தூத்துக்குடியையும், திருச்சிராப்பள்ளியையும், அப்படித் திரித்துத்தான் புழங்கினான்.

இந்த மொழிபெயர்ப்பிலும், எழுத்துப்பெயர்ப்பிலும், நம் நாட்டுப் பாமரர்கள் கூட புகுந்திருக்கிறார்கள். காட்டாக, போர்த்துகீசியக்காரன் கொண்டு வந்த potato வையும், tomato வையும், chilli -யையும், தங்களுக்குத் தெரிந்த முறையில் உருளைக் கிழங்கு, தக்காளி, மிளகாய், என்று பெயர் மாற்றிக் கொண்டு தான் இருந்தார்கள். அப்படி அவர்கள் செய்ததை இதுவரை "தப்பு" என்று யாரும் சொல்லவில்லை. அது போலச் சேவியர் என்பது சவேரியார் என்று திரித்து ஒலிக்கப் பட்டது. Joseph என்பவர் சோசேப்பு ஆனார். இவையெல்லாம் 16, 17 ம் நூற்றாண்டில் ஒப்புக் கொள்ளப் பட்ட மாற்றங்கள் தான். இப்பொழுது 21ம் நூற்றாண்டில், "தொலைபேசி, தொலைக்காட்சி, என்றால் அது தவறோ? மாறாக, telephone, television என்று சொல்லுவது தான் சரியோ?" என்று குழம்பும் நிலைக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். கேட்டால், இதையெல்லாம் "நாமா கண்டுபிடித்தோம்?" என்று காரணம் காட்டுகிறீர்கள். எங்களுக்கு என்னவோ, telephone பண்ணுவதைக் காட்டிலும் தொலைபேசுவதும், டெலிவிஷன் பார்ப்பதைக் காட்டிலும் தொலைக்காட்சி பார்ப்பதும், சரியென்றே படுகிறது. "இப்படித் தமிழ்ச் சொற்களை ஆளுவதின் மூலம் பொருள் சட்டென்று விளங்கிவிடுகிறது" என்றே எங்களைப் போன்றோர் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

என்ன ஒரு வளர்ச்சி, நம் குமுகாயத்தில் ஏற்பட்டிருக்கிறது, பாருங்கள்? நம்மூரில் தோன்றாதவைக்குக் கூட, நம்மூரிலே புரியும் வகையில், பெயர் வைக்கலாம் என்ற 16ம் நூற்றாண்டு ஒழுங்கு, 21ம் நூற்றாண்டில், இப்படி அய்யம் தோன்றும் அளவுக்கு மாறிவிட்டது என்றால், நாம் எங்கு போகிறோம் என்றே தெரியவில்லை. இது போன்ற பின்னடைவுச் சிந்தனைகள் தமிழனுக்குப் புதியது இல்லை தான். 1960-70 களில் பள்ளியிறுதி வகுப்பைத் தாண்டி, கல்லூரியில் எப்படித் தமிழ் வழிச் சொல்லிக் கொடுப்பது என்று அறிஞர்களும், அரசியல்வாதிகளும் அலசி உரையாடிக் கொண்டிருந்த காலம் போய், இப்போது "மழலையர் பள்ளியில் தமிழ் சொல்லிக் கொடுக்கத்தான் வேண்டுமா?" என்ற மாபெரும் பின்னடைவுக்கு நாம் வந்திருக்கிறோம் அல்லவா? இந்தப் பின்னடைவிற்கு ஒரு 40 ஆண்டை இரண்டு விதமான கழக அரசுகளும் காவு கொடுத்திருக்கின்றன, அல்லவா? இதைத்தான் புரையோடிப் போன புற்று என்று சொல்லுகிறோம்.

பெயர்ச்சொல்லை எல்லாம் தமிழாக்க வேண்டுமா என்ற ஒரு உரையாடலை நீங்கள் தொடுத்திருக்கிறீர்கள்.

தாளிகைத்துறையில் பலகாலம் பணிபுரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு "ஒரு மொழியில் வினைச்சொல் (அது எச்சமாகவும், முற்றாகவும் இருக்கக் கூடும்) என்பது இருக்கும் சொற்களிலே 10, 15 விழுக்காடு தான் இருக்கும், மற்றவையெல்லாம் பெயர்ச்சொற்களே, இடைச்சொல்லும் உரிச்சொல்லும் விழுக்காட்டில் நுணுகியவையே" என்ற செய்திகள் தெரிந்திருக்கும். இந்த நிலையில் எந்த ஒரு மொழியும் வரைமுறை இல்லாமல் பெயர்ச் சொல்லைக் கடன்வாங்கத் தொடங்கினால் அப்புறம் "பண்ணி மொழி"யாக வேண்டியதுதான் என்ற இயல்பையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பெரும்பாலான வணிகத் தாளிகைகளில் (இந்தத் தாளிகைகளில் இலக்கியம் இன்றைக்கு அருகியே இருக்கிறது. அவர்கள் இப்படி வணிகம் செய்வதில் எமக்கு ஒன்றும் பிணக்கு இல்லை; செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் மொழிக்கு இவர்கள் சட்டாம்பிள்ளையாய் ஆகிப் போனார்கள், பாருங்கள்; அதில்தான் கொஞ்சம் நெருடல் ஏற்படுகிறது. இருப்பினும் அதை இங்கு பேசவேண்டாம்.) இப்பொழுது பண்ணி மொழியில்தான் பலரும் எழுதுகிறார்கள். நீங்கள் இப்பொழுது சொல்ல வருவதன் முடிவு: "இந்த இழவைத் தமிழர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டு, அதிகாரபூர்வம் ஆக்கினால் தான் என்ன?" என்பதே.

இந்த முடிவுக்கு வருவதற்கு அறிவியல் முலாம், பகுத்தறிவு போன்றவை தேவையில்லை. வெறும் பெரும்பான்மைத் தனமும், ஒருவகை பாமரத் தனமும் போதும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுமே அறிவியலையும், நுட்பியலையும், பொறியியலையும் ஒட்டி வந்தது தான். அதனால் அவற்றைக் காரணம் காட்டி, "ஆங்கிலச் சொற்களை அப்படியே கையாளுவோம்" என்ற சப்பைக் கட்டு தேவையில்லை. இதுபோன்ற சொற்களை/கருத்துக்களை ஒரு மொழியினர் உருவாக்கியதாலேயே, இன்னொரு மொழியினர், அந்தப் பொருளை உருவாக்கியவர்களின் சொல்லாலேயே அவற்றை அழைக்க வேண்டும் என்று சொத்துரிமைச் சிக்கலாகத் தோற்றம் காட்ட வேண்டியதில்லை.; கூடவே இவையெல்லாம் காப்புரிமை (patent) செய்யப்பட்ட சொற்களும் அல்ல. telephone - யைத் தொலைபேசி என்று சொல்லுவதால், பெருங்கனம் பொருந்திய அமெரிக்கர்கள் கோவம் கொள்ளப் போவதும் இல்லை; தமிழர்கள் ஏதோ தனித்துவிடப் படுவதும் இல்லை. தமிழர்கள், தமிழில் தொலைபேசி என்று சொல்லி, ஆங்கிலத்தில் உரையாடும் போது telephone என்று சொல்லிவிட்டுப் போவார்கள். எப்பொழுதுமே முதல் எட்டுத் (step) தான் சரவல் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்புறம் நடப்பது ஒன்றும் கடினம் அல்ல. தொலையில் பேசுவதற்கு ஆன கருவி தொலைபேசி என்றால், பட்டென்று "என் மனத்துள் இவ்வளவுதானா?" என்ற மருட்டுப் போய்விடுகிறது. பிறகு ஓராயிரம் கேள்விகள் எழுந்து, தொலைபேசி பற்றி, இன்னும் தெரிந்துகொள்ள முற்படுவேன். வெறுமே telephone என்று சொன்னால், மருட்டுத்தனம் எங்கும் நிறைந்து வெறுமே நெட்டுருப் போடும் நிலைக்கே நம் மாணவர்கள் வருவார்கள். வேண்டுமானால் அமெரிக்க முதலாளிகளுக்கு இன்னும் கூட அளவில் ஆங்கிலம் பரட்டத் தெரிந்த நுட்பக் கூலிகளை உருவாக்கலாம்; ஒரு பிரித்தானிய கிழக்கிந்திய கும்பணிக்கு மாறாக ஒரு அமெரிக்க கிழக்கிந்திய கும்பணியை உருவாக்கலாம்.

ஒரு மொழியினர் படைத்த பொருள்களுக்கு, மற்ற மொழியினர் தங்கள் தங்கள் மொழியிலேயே, புதுச்சொற்கள் படைத்துக் கொள்ளுவதற்குக் காட்டாக, இந்தையிரோப்பிய மொழிக் குடும்பத்தில் இருந்து, இங்கே கொடுக்கிறேன். binaculars என்ற ஆங்கிலச்சொல் டச்சு மொழியில் verrekijker என்று தான் புதுச்சொல்லாகப் பயனாக்கப் படும். அவர்கள் binaculars என்று புழங்குவதில்லை. இதே போல அங்கு hospital என்ற சொல் ziekenhuis என்று புழங்கப் பட்டு "நோயாளர் மனை" என்றே பொருள் கொள்ளும் (நாம் இதை மருத்துவ மனை என்று சொல்லிக் கொள்ளலாம்; ஐய்யய்யோ, ஆஸ்பிட்டல் என்று சொல்ல வில்லையே என்று அங்கலாய்க்க வேண்டாம். "பாமரர்கள் ஆஸ்பத்திரி என்று தானே சொல்லுகிறார்கள்?" என்று வருத்தப்படவும் வேண்டாம். பாமரர்களுக்குச் சொல்லிக் கொடுத்ததை நாம் இன்னும் மாற்றவில்லை, அவ்வளவு தான்; அதே பொழுது மருத்துவமனை என்றசொல் பாமரருக்குப் புரியாமல் இல்லை.); mayor என்பவர் burgemeester - நகரத்தலைவர் என்று டச்சு மொழியில் ஆவார். இதே போல செருமானிய மொழியில், தொலைக்காட்சி television என்று ஆகாது, fernsehen என்றே கொள்ளப்படும்; இதே போல மின்குமிழ் என்ற சொல் bulb என்று ஆகாது; knolle என்றே புழங்கப்படும். அதே போல கரிமம் (carbon) என்ற எளிமம் (element), kohlenstoff (காளப் பொருள்) என்றே எழுதப்படும்; அதே போலப் பூக்கோசு என்னும் காய்கறியை cauliflower என்று எழுதாமல் blumenkohl என்றே எழுதுவார்கள். கொண்மையைக் குறிக்கும் charge என்ற ஆங்கிலச் சொல் ladung என்றே செருமானிய மொழியில் குறிக்கப்படும்; இத்தனைக்கும் ஆங்கிலத்துக்கு மிக நெருங்கிய பங்காளி டச்சு மொழியாகும்; அதற்குச் சற்று தள்ளி செருமானிய மொழி அமையும். ஆக, இந்தப் பங்காளி மொழிகளில் கூட ஆங்கில, பிரஞ்சுச் சொற்கள் அப்படியே எல்லாக் காலத்தும் ஏற்கப்படுவதில்லை. பிரஞ்சிலோ இதற்கும் மேல்; பலநேரம் பிரஞ்சுக்காரர்களுக்கு ஆங்கிலம் என்றால் ஒத்து வராது. (கிட்டத்தட்ட எட்டாம் மனையில் சனி போலத்தான்.)

இப்படி ஒரு மொழியில் தன்வயமாகச் சொற்கள் உருவாவது ஏதோ, இன்னொரு மொழியை விலக்க வேண்டும் என்ற வெறியால் அல்ல. தம் மொழியைக் காப்பாற்றிக் கொள்ளுவோம் என்ற இயற்கைச் சேம (safety) வெளிப்பாடே. இன்னொரு வகையிற் சொன்னால் அவர்கள் அந்தப் பொருளைத் தமதாக்கிக் கொள்ளுகிறார்கள். "இதில் என்ன தவறு?" என்று எனக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு மொழியும் வெளிச் சொற்களை ஏற்பதில் வேறுபட்டே நிற்கின்றன. நீங்கள் சொல்லும் முறையைப் பின்பற்றினால் இப்பொழுது இழையும் தமிங்கிலத்திற்கு, அதிகார முழுமையான ஒப்புதல் கொடுத்தது மாதிரி ஆகிவிடும்; முடிவில் தமிங்கில நோய் முற்றிப் போய் ஆங்கிலத்திற்கே நாம் மாறி விடுவோம். அதற்குப் பேசாமல் இந்தக் கால ஆட்சியாளர்களிடம் (எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்) சொல்லி நாளைக்கே ஆட்சிமொழியை ஆங்கிலத்திற்கு மாற்றச் சொல்லி அரசாணை போட்டு விடலாம்; அதன் மூலம் "தமிழைக் குழிதோண்டிப் புதைப்போம்" என்று சூளுரைக்கலாம்.
------------------------------------------------------------------------------
மாலன்:

ஆ. தமிழர்கள் கண்டுபிடித்த பொருட்களுக்கு அவர்கள் தங்கள் மொழியில் தாங்கள் விரும்பிய வண்ணம் பெயர் சூட்டலாம். ஆனால் அவர்களது கண்டுபிடிப்பல்லாதவற்றிற்கும் தமிழர்கள் பயன்படுத்திகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதற்கு வேறு பெயர் இட வேண்டுமா? மற்ற மொழிகளிலும் அப்படித்தான் நடக்கிறதா?

-------------------------------------------------------------------------------
இராம.கி:

மேலே இரு மொழிகளில் இருந்து ஒரு சில காட்டுக்களைக் கொடுத்து இருக்கிறேன்.
------------------------------------------------------------------------------
மாலன்:

நான் மிகச்சிறிய காலம் ஜப்பானில் வசிக்க வேண்டியிருந்தது. அங்கே shock என்பதை ஷாக்கு என்றுதான் சொன்னார்கள்.
Battery என்பதை பாத்தரி என்றும் car என்பதை கார் என்றும்தான் சொன்னார்கள்.

--------------------------------------------------------------------------------
இராம.கி:

சப்பானியரின் இந்தப் பழக்கம் பலருக்கும் தெரிந்ததுதான். நானும் சிறிது காலம் அங்கே இருந்து பயிற்சி எடுத்தவன் தான். எல்லாவற்றிற்கும் சப்பானேயே காட்டிக் கொண்டிருப்பதில் பொருள் இல்லை. "சப்பானிய ஆங்கிலப் பிறழ்ச்சியினால் இன்றைய தலைமுறை முற்றிலும் ஆட்பட்டு, ஆங்கிலக் கலப்பில்லாமல் சப்பானிய மொழியில் உரையாட முடியவில்லை" என்று சில மாதங்களுக்கு முன் திரு சுரேசு குமார், அகத்தியரில் என்று நினைக்கிறேன், ஒரு செய்தியைக் குறிப்பிட்டு இருந்தார். அந்த மடல் எண் எனக்கு நினைவு இல்லை. ஆக "அளவுக்கு விஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்று முன்னோர் அறிந்துதான் சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழர்கள் என்பவர்கள் தனித்தீவு அல்ல தான். இன்றைய உலகமயமாக்கலில் ஒன்றிக் கலக்க வேண்டியவர்கள் எனினும், "நம் மொழியையும் அடையாளத்தையும் தொலைத்துத் தான், இந்த சோதியில் கலக்க வேண்டுமா?" என்பதே பெரிய கேள்வி.
-------------------------------------------------------------------------------
மாலன்:

அமெரிக்கர்கள் மிளகு ரசத்தை இப்போதும், மிளகுத் தண்ணி என்றுதான் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்.

------------------------------------------------------------------------------
இராம.கி:

இங்கு பொரிம்புச் சொற்களுக்கும் (ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியைப் பாருங்கள்; பொரிக்கப் பட்டது பொரிந்து - brand எனப்பட்டது), பொதுமைச் சொற்களுக்கும், நீங்கள் குழம்பிக் கொள்ளுகிறீர்கள். "வோட்கா" என்பது கிட்டத்தட்ட ஒரு பொரிம்புப் பெயர் தான். அது உருசியாவில் தோன்றிய மது வகைக்கான பெயர். அத்தகைய வோட்கா என்ற சொல்லைத் தமிழில் அப்படியே தான் ஆளமுடியும். ஆனால் மது என்பதை liquor என்று ஆள முடியாது. அது போலப் பல்வேறு நாடுகளில் சாப்பிடுவதற்கென (சப்பிடுவது தான் தமிழில் சாப்பாடாயிற்று) சப்புநீர்களைப் (soups) பலவிதமாக உருவாக்குகிறார்கள். அந்தப் பொதுமையான உணவாக்கத்தில், "மிளகுச் சாறு" என்பது நம்மூரைச் சேர்ந்த ஒரு விதுமையான (specific) நீர்ப்பொருள். இதை இந்த வட்டாரப் பெயரிலேயே குறிப்பிட்டு, மற்ற மொழியினரும் தங்கள் மொழியில் அழைப்பது பல இடங்களில் இருக்கும் ஒரு வழக்கம் தான். இங்கே கிட்டத் தட்ட மிளகுச்சாறு (அல்லது மிளகுத்தண்ணீர்) என்பது ஒரு பொரிம்புப் பெயர் போலத்தான்.
------------------------------------------------------------------------------
மாலன்:

அலெக்சாந்தர் பிளமிங் பென்சீலினைக் கண்டுபிடித்தபோது, அதற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று சிலர் வற்புறுத்தினார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்: இந்த மருந்தைக் கொடுத்தது நானல்ல. பென்சிலீனியம் என்ற காளான். எனவே அதன் பெயர்தான் வைக்கப்பட வேண்டும்.

------------------------------------------------------------------------------
இராம.கி:

இங்கும் உங்கள் எடுத்துக் காட்டு எனக்குப் புரிபடவில்லை. "பென்சிலீனியம் என்ற காளானுக்கு எப்படிப் பெயரிட்டார்கள்?" என்று பார்த்திருக்கிறீர்களா? அலெக்சாந்தர் பிளமிங் தற்பெருமை பார்க்காதவராக இருந்திருக்கலாம்; அது அவருடைய சிறந்த குணநலன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்; ஆனால் "bacteria வை பாக்டீரியா என்று எழுதவேண்டும்" என்று சொல்லாதீர்கள். நீங்களே fungus என்ற ஆங்கிலச்சொல்லை தமிழெழுத்தில் எழுதாமல் "காளான்" என்று மொழிபெயர்த்திருக்கிறீர்கள், பாருங்கள்; இந்த மொழிபெயர்ப்பில் எந்த உணர்வு வேலை செய்ததோ, அதுதான் எங்களைப் போன்றோரை எல்லா இடத்தும் வேலை செய்யச் சொல்லுகிறது. நாங்கள் எல்லாவிடத்தும் இந்த மொழிபெயர்ப்பை நறுவிசாகச் செய்ய முற்படுகிறோம். நீங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உங்களுக்குத் தோன்றும் இடங்களில் மட்டும் செய்து கொள்ளுகிறீர்கள்.
-------------------------------------------------------------------------------
மாலன்:

இ.தமிழில் கலைச்சொற்கள் உருவாக்கும் போது சில நேரங்களில் அது செயல்படும்/ இயக்கப்படும் அடிப்படையில் பெயர் வைக்கப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் செயல்படும் முறை மாற, சொற்கள் அர்த்தம் இழந்துவிடுகின்றன. ரயில், புகைவண்டி என்று அழைக்கப்பட்டது. இப்போது புகைவிடும் என்ஜின்கள் அருங்காட்சியகத்திற்குப் போய்விட்டன. சைக்கிள் என்பது துவிச்சக்கர வண்டியாகவும் பின் இருசக்கர வண்டியாகவும் இருந்தது. மூன்று சக்ர சைக்கிளுக்கு என்ன பெயர்?

--------------------------------------------------------------------------------
இராம.கி:

இதெல்லாம் அரதப் பழசான புலனங்கள், மாலன்! இருந்தாலும் நீங்கள் இங்கு எடுத்திருப்பதால், சொல்லுகிறேன். ஒவ்வொரு சொல்லும் ஒரு மொழியில் எழும் போது அந்தந்தக் காலப் பின்புலம் அதனுள் இருக்கத் தான் செய்யும். இந்தக் காலத்தில் cycle தமிழாக்கப் படுமானால், சுருளை என்றே ஏற்பட்டிருக்கும். அப்பொழுது மூன்று சக்கரச் சுருளை என்று இடக்கற் படாமல் சொல்லிவிடலாம். cycle- க்கு மிதிவண்டி என்று எல்லோரும் சொல்லிப் பழகிவிட்டதால் இன்று பலரும் அதை ஏற்றுக் கொள்ளுகிறோம். சுருளை என்று மாற்றாது இருக்கிறோம்.
---------------------------------------------------------------------------------
மாலன்:

மிதி வண்டி என்று வைத்துக் கொள்ளலாம் என்றால் ரிக்ஷாவிற்கு என்ன பெயர்?

---------------------------------------------------------------------------------
இராம.கி:

இழு மிதிவண்டி என்று சொல்லிப் போனால் என்ன? குறைந்தா போகும்?
----------------------------------------------------------------------------------
மாலன்:

டெலிவிஷன் தொலைக்காட்சி. சரி,

---------------------------------------------------------------------------------
இராம.கி:

அதெப்படிச் சரி? உங்கள் வாதத்தின் படி, தொலைக்காட்சி என்பது இங்கு கண்டுபிடிக்கப் படவில்லை. எனவே அதை television என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே இங்கு இருக்கும் சூரியன், கதிரவன் போன்ற 40 சொற்களில் ஏதொன்றையும் புழங்காமல் "சன்" என்றுதான் பெயர் வைத்துக் கொள்ளுவேன் என்று அடம் பிடிக்கிறது பாருங்கள் ஒரு தொலைக்காட்சி, அவர்கள் கூட டெலிவிஷன் என்று சொல்லாமல் தொலைக்காட்சி என்று தான் புழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------
மாலன்:

closed circuit television என்ன?

---------------------------------------------------------------------------------
இராம.கி:

ஏன், சுற்று மூட்டிய தொலைக்காட்சி என்று சொல்வது கடினமாய் இருக்கிறதா, என்ன? அன்பிற்குரிய மாலன். கைலியை மூட்டுதல் என்று புழங்கியிருக்கிறீர்கள் அல்லவா? மூட்டுதல் என்றால் to close என்றுதான் பொருள். கதவை மூடு என்று எப்படிச் சொல்லுகிறோம்? மூடுவது தன்வினை; மூட்டுவது பிறவினை. மூடவைப்பதைத் தான் மூட்டுதல் என்று சொல்லுகிறோம். இங்கு தொலைக் காட்சியைக் கணுக்கி (connect) இருக்கும் சுற்றை (circuit) மூட்டி வைத்திருப்பதால், (மின்) சுற்று மூட்டிய தொலைக்காட்சி என்று ஆனது. இது போன்ற கூட்டுச் சொற்கள் புழங்கப் புழங்கப் பழகிப் போகும்.
-------------------------------------------------------------------------------
மாலன்:

பேருந்து = பஸ். சிற்றுந்து = கார். மினி பஸ் என்ன?

-------------------------------------------------------------------------------
இராம.கி:

சிறிய பேருந்து என்று சொல்லிப் போங்களேன். பொருள் வந்துவிடாதா, என்ன?
-----------------------------------------------------------------------------
மாலன்:

ஸ்கூட்டர் என்ன?

-----------------------------------------------------------------------------
இராம.கி:

துள்ளுந்து என்று சொல்லுங்கள்
----------------------------------------------------------------------------
மாலன்:

ஈ இவற்றையெல்லாம் தமிழ்ப்படுத்தித்தான் ஆகவேண்டும் என்றால் அதில் பாமரர்கள் கருத்தையும் கேட்டு ஏற்றுக் கொள்ள வேண்டாமா?

------------------------------------------------------------------------------
இராம.கி:

இந்த மாதிரி வாக்குவாதம் இரட்டை விளிம்புக் கத்தி மாதிரி. "தமிழாக்கம் செய்யும் போது பாமரர் கருத்தைக் கேட்கவேண்டும்" என்று சனநாயகம் பேசும் நம்மைப் போன்றோர், நாட்டில் நடப்பது எல்லாவற்றிற்கும் பாமரரைக் கேட்கிறோமா, என்ன?
-----------------------------------------------------------------------------
மாலன்:

அவர்கள் புகைவண்டி நிலையத்தை ரயிலடி என்கிறார்கள். தேர் வந்து நிற்குமிடம் தேரடி. ரயில் வந்து நிற்குமிடம் ரயிலடி. நாம் stationஐப் பிடித்துக் கொண்டு "நிலையமாக்கி'' விட்டோ ம்.

-----------------------------------------------------------------------------
இராம.கி:

பாமரர் பேச்சைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதில் நானும் ஆழ்ந்த கவனம் உள்ளவனே. அதை இந்த மடற்குழுவில் பலமுறை எழுதியிருக்கிறேன். அதே பொழுது தேரடி என்பது மட்டுமே தமிழில் உள்ளது அல்ல. சில பகுதிகளில் தேர்முட்டி என்றும், தேர்நிலை என்றும் கூடச் சொல்லப் படும். தேர், நிலை கொள்ளும் இடம் தேர்நிலை. பிறகு "பேருந்து நிற்கும் இடத்தைப் பேருந்து நிலை என்று சொல்லுவதில் என்ன தவறு?" என்று புரியவில்லை. "அம்" என்னும் ஈறு தமிழில் பெரியது என்ற பொருளைக் கொண்டு வருவதால் நிலை இங்கு நிலையமானது, அவ்வளவு தான்.
------------------------------------------------------------------------------
மாலன்:

முன்பெல்லாம் snow என்று முகத்தில் தடவிக்கொள்ள ஒரு க்ரீம் வரும். அதை செட்டி நாட்டு ஆச்சிமார்கள், முக வெண்ணை என்று அழைக்கக் கேட்டிருக்கிறேன்.

----------------------------------------------------------------------------
இராம.கி:

இந்தப் பெயரை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
----------------------------------------------------------------------------
மாலன்:

உருண்டையாக இருக்கும் கிழங்கு உருளைக் கிழங்கு. மிளகைப் போல உறைக்கும் காய் மிளகாய். எளிய மக்கள் கலைச் சொற்களை உருவாக்கிக் கொள்வதில் ஒரு logic இருக்கிறது.

-----------------------------------------------------------------------------
இராம.கி:

இந்த ஏரணம், அளவையை யார் மறுத்தார்கள்?
-----------------------------------------------------------------------------
மாலன்:

அவர்களையும் கலந்தாலோசிக்காவிட்டால் அறிஞர்களின் கலைச்சொல் அகராதியில் மட்டும் தான் இருக்கும்.

-----------------------------------------------------------------------------
இராம.கி:

நண்பரே!, நீங்கள் இப்படிச் சொல்வதை மீநிலை மக்களாட்சி என்று சொல்லுவார்கள். இதை நான் எழுதுவதால் சிலர் கோவம் கொள்ளக் கூடும். பாமரர்களைக் கலந்து ஆலோசிப்பது என்றால், 6 1/2 கோடி மக்களையுமா கலந்து ஆலோசிக்கிறீர்கள்? எந்த மொழியில் பாமரரைக் கலந்து ஆலோசித்து, வாக்குப் போட்டுச் சொற்களை உருவாக்கி யிருக்கிறார்கள்? இன்றைக்கு ஊரெல்லாம் பேருந்து நிலையம் என்று எழுதியிருக்கிறார்கள். இது என்ன வாக்குப் போட்டா வந்தது? நண்பர் மாலன், தவறாக எண்ணாதீர்கள். "நான் ஒரு சொல் பரிந்துரைக்கிறேன்" என்று வைத்துக் கொள்ளுங்கள்; அது, பத்துப்பேர், நூறுபேர், ஆயிரம் பேர் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ளப்பட்டால், நிலைக்கிறது. இப்படி நிலைப்பதற்கு ஆண்டுகள் பல கூட ஆகலாம். திடீரென்று ஒரு நாள் அந்தச் சொல் தூக்கி எறியவும் படலாம். ஏற்பதும் ஏற்காதது மக்களுடையது என்பது நடப்பைச் சொல்லுவது. அது ஏதோ கலந்து ஆலோசிப்பது அல்ல.
------------------------------------------------------------------------------
மாலன்:

பாமரர்களிடம், சைக்கிள் சினிமா எல்லாம் இருக்கும்.

------------------------------------------------------------------------------
இராம.கி:

பாமரர்களிடம் சைக்கிள், சினிமா இருப்பது இதனால் அல்ல, அய்யா, அது படித்தோரைப் பின்பற்றும் பழக்கத்தால் ஏற்பட்டது. படித்தோர் மாறாமல், பாமரர்கள் ஒருநாளும் மாற மாட்டார்கள். மற்ற உரையாட்டுகளில் எல்லாம் பாமரரைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்தக் கருத்துமுதல் வாத உரையாட்டில் மட்டும், பாமரரைத் தூக்கி வைக்கும் போக்கு, எனக்கு வியப்பையே தருகிறது. "படிச்சவங்களே இப்படிச் செய்ஞ்சா, படிக்காத பாமரர் மட்டும் உணர்வு வந்து தமிழைக் காப்பாறுவாரோ?" என்னவொரு விந்தை?
------------------------------------------------------------------------------
மாலன்:

உ இன்றையத் தமிழர்களின் பெரும்பாலான உணவில் தமிழ் இல்லை. சாம்பார் மராத்தியர் கொண்டு வந்தது.

------------------------------------------------------------------------------
இராம.கி:

சாம்பார் என்ற ஒரு குறிப்பிட்ட பக்குவம் தான் மராட்டியர் கொண்டு வந்ததே ஒழிய, குழம்பு என்ற இன்னொரு பக்குவம் இங்கே தமிழகத்தில் இருந்தது தான். கெட்டிக் குழம்பு, குழம்பு, இளங்குழம்பு என்று வகை வகையாகச் செய்வதை அறிய, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களுக்கு வாருங்கள். பல நேரங்களில் விதுமையையும் (specity) பொதுமையையும் (genericity) போட்டுக் குழப்பிக் கொண்டு யோசிக்கக் கூடாது.
------------------------------------------------------------------------------
மாலன்:

ரசம் தமிழா, வடமொழியா?

------------------------------------------------------------------------------
இராம.கி:

அரைத்துப் போட்டுக் கரைத்தது கரைசம்> ஹரைசம்> அரைசம்> அரசம்> ரசம். இந்த அகர முன்னொட்டு இப்பொழுது இல்லாததால், எத்தனையோ தமிழறிஞர்களைக் குழப்பி இருக்கும் ஒரு சொல் இது. நானும் ஒரு காலத்தில் இது வடசொல்லோ என்று மயங்கி இருந்தேன். பிறகு மோனியர் வில்லியம்சு அகரமுதலியைப் பார்த்து, "இதற்கு வடமொழி மூலம் காட்டுவது தவறு" என்று உணர்ந்தேன். பார்ப்பனர் பேசும் பல சொற்களும் தமிழ் தான். அவற்றின் முழு உரு தெரியாமல், "அவை வடமொழியோ?" என்று தவறாகப் புரிந்துகொள்வது நம்மூரில் மிகவும் நடக்கிறது. அப்படிப் பேசுபவர்களும் "அதை வடமொழி" என்று சொல்லிக் கொள்வதில், வெற்றுப் பெருமை கொள்ளுகிறார்கள். கேட்பவர்களும் மருண்டு போய், "அய்யர் சொல்லுவதில் உண்மை இருக்கும்; வேதம் படித்தவர் இல்லையா?" என்று தங்களை ஆற்றுப் படுத்திக் கொள்ளுவார்கள். முடிவில் குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்தது போல்தான் நம்மூரில் நடக்கிறது.

அரைசத்தைச் சாறு எனவும் சொல்வதும் உண்டு. அய்யங்கார் வீடுகளில் சாற்றமுது என்று அழைப்பதை நோக்குங்கள்.
---------------------------------------------------------------------------------
மாலன்:

பிரியாணி முகலாயர்கள் கொண்டு வந்தது.

---------------------------------------------------------------------------------
இராம.கி:

புழுங்குதல்/புழுக்குதல் என்பது boiling என்பதற்கான நேரடி தமிழ் இணைச் சொல். புழுங்கல் அரிசி என்ற சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள். புழுக்கலில் புலவு கலந்து சாப்பிடுவது சங்க இலக்கியத்திலேயே இருக்கிறது. பல காட்டுக்களைத் திரு மதுரபாரதி இங்கு மடற்குழுவில் ஒருமுறை எடுத்துரைத்தார். விதுமையையும் பொதுமையையும் மறுபடி குழப்பிக் கொள்ளக் கூடாது. பிரியாணி என்ற விதுமையாக்கம் முகலாயர் கொண்டு வந்தது. பொதுமைப் பழக்கம் ஏற்கனவே நம்மூரில் இருந்தது தான். புலவு என்ற சொல் மாட்டுக் கறியைத் தான் தமிழில முதன்முதலில் உணர்த்தியது. அதே சொல் மற்ற விலங்குகளின் கறிக்கும் பின்னால் பயன்படுத்தப் பட்டது. புலவோடு தொடர்புள்ளதுதான் புலத்தம் என்னும் blood. ஆங்கில இணையைச் சொன்னால் யார் கேட்கிறார்கள்?
--------------------------------------------------------------------------------
மாலன்:

இட்லி தமிழ்ச் சொல்லா?

-------------------------------------------------------------------------------
இராம.கி:

புலவர் இளங்குமரன் மிகத் தெளிவாக இதைப் பற்றி எழுதியிருக்கிறார். இதன் முதல் தோற்றம் இட்டவி என்பதாகவே அவர் சொல்லுகிறார். இட்டவி பற்றிய கல்வெட்டு திருமலைக் கோவிலில் இருக்கிறது. அதே போல தோயை என்பதே தோசை என்று ஆனது என்றும் இளங்குமரன் விளக்குவார்.
----------------------------------------------------------------------------------
மாலன்:

பழந்தமிழ் இலக்கியங்களில் அரிசி என்ற சொல் எந்தக் காலத்திலிருந்து வழங்கப்பெறுகிறது என்பதை அறிஞர்கள் சொல்ல வேண்டும். சோறு அல்ல, நான் கேட்பது அரிசி.

-----------------------------------------------------------------------------------
இராம.கி:

இதைப் பற்றி நா. கணேசன் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். எனவே இப்பொழுது இதைச் சொல்ல நான் முற்படவில்லை. இந்தச் சொல்லை மட்டுமே விவரித்து எழுத வேண்டுமானால் தனி ஒரு கட்டுரையே எழுத வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
மாலன்:

உணவு விஷயத்தில், உடை விஷயத்தில், காலக் கணக்கில் பிற மொழிகளை, கலாசாரங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அறிவியலில் மட்டும் ஆசாரம் ஏன்?

----------------------------------------------------------------------------------
இராம.கி:

ஏதோ ஏற்றுக் கொள்ளப் பட்டது அல்ல. "எதை ஏற்கலாம், எதை ஏற்கக் கூடாது" என்பதில்தான் வேறுபாடு.
----------------------------------------------------------------------------------
மாலன்:

என்னைக் கேட்டால் அறிவியலால் உருவான பொருட்கள் உலகெங்கும் எப்படி அழைக்கப்படுகிறதோ அப்ப்டியேதான் இங்கும் வழங்கப்பட வேண்டும். அதை உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும் தமிழர்கள் இது நம் அறிவினால் உருவானதல்ல, இது நமக்கு யாரோ இட்ட பிச்சை, கொடை என்ற எண்ணம் சிந்தையில் கிளர்ந்து, நாமும் இது போல உலகிற்கு அளிக்க வேண்டும் என்ற ரோசம் மேலிட்டு, முனைப்புப் பெற வேண்டும். இது தமிழர்களின் அறிவியல் மனோபாவம் வளர உதவும்.

----------------------------------------------------------------------------------
இராம.கி:

இது போன்ற உணர்வு வரும் என்றா நினைக்கிறீர்கள்? எள்ளளவும் நடக்காது. பெருமிதம் சீர்குலைந்து பீடற்றுக் கிடக்கும் அமெரிக்கக் கருப்பர்கள் (அப்படி ஆக்கி வைத்திருக்கிறது அங்கிருக்கின்ற குமுகாயம். பெரும்பாலான அமெரிக்கக் கருப்பர்கள் அடிமையாவதற்கு முன்னால் wolof என்ற மேற்கு ஆப்பிரிக்க மொழியைப் பேசிவந்தவர்கள். இன்று அவர்கள் 400 ஆண்டுகளில் அந்த மொழியையே மறந்து ஆங்கிலச் சோதியில் கலந்து விடவில்லையா? அது போலத் தான் நாமும் ஆவோம்.) போல நம் தோற்றம், மரபு எல்லாம் குலைந்து, இழிவு பட்டுக் கிடப்போம். எதுவுமே தமிழில்லாமல், ஒரு கிரியோல் மொழியை உருவாக்கி தமிழை ஒழிப்பதற்கே இது வழிவக்குக்கும்.
-----------------------------------------------------------------------------------
மாலன்:

ஆங்கிலம் இணையத்தில் பயன்படுத்தப்படுவதைக் கண்டு நாம் வேகம் பெற்றுத் தமிழில் இணையத் தளங்களை அமைக்கவில்லையா?

-----------------------------------------------------------------------------------
இராம.கி:

இதுவும் ஒரு வகையில் பழம்பெருமை பேசுவதுதான். பழம்பெருமை, மரபு ஆகியவை எல்லாமே தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறும் நீங்கள் இப்படி எழுதுவது என்னை வியக்க வைக்கிறது. இங்கு இருக்கின்ற தாளிகைக்காரர்களும், நாளிதற்காரர்களும் ஒன்று சேர்ந்து தளத்திற்கொரு வார்ப்பு (font) வைத்திருக்கும் சொத்து மனப்பான்மையை விடவில்லை; இணையத்தில் தமிழ் வந்துவிட்டதென்று வெற்று வேட்டு முழக்கம் விட்டுக் கொண்டிருக்கிறோம். இணையத்தில் ஒரு தமிழ் இல்லை, ஐயா. ஆயிரம் தமிழ்க் குறியீடுகள் இருக்கின்றன. இதையா வளர்ச்சி என்கிறீர்கள்?
-----------------------------------------------------------------------------------
மாலன்:

தமிழுக்குத் தனி முகவரி கொடுக்கும் யூனிகோட் எழுத்துருக்களை உருவாக்கவில்லையா?

----------------------------------------------------------------------------------
இராம.கி.

இந்த ஒருங்குறியும் சரியென்றா எண்ணுகிறீர்கள்? அதைப் பற்றி எழுதினால் இன்னும் நீளும். இன்றைக்கு இருக்கும் குறியீடுகள் சரவலுக்கு உள்ளானவை என்றே நான் எண்ணுகிறேன். இங்கு இருக்கும் பல நண்பர்கள், வல்லுநர்களைக் கேளுங்கள். இன்றைக்கு இருக்கிற குறியீடுகள் மா.கோ.இரா.வுக்குப் பின் வந்த தமிழை மட்டுமே குறிப்பவை. மேல்நாட்டில் கிறித்துவுக்கு முன், பின் என்று குறிப்பதுபோல் "தமிழ் மொழியும் மா.கோ.இரா.வுக்கு முன், பின் என்று ஆகிவிட்டது" என்று அறிவீர்களோ? இன்றைக்கு இருக்கும் தமிழ்க் கணிமை மா.கோ.இரா.வுக்குப் பின்னுள்ள எழுத்துக்களை மட்டுமே ஆளுகிறது. இங்கே நான் சுட்டிக் காட்டும் சிக்கல் மிகப் பெரியது. இதை யாரும் உணர்ந்தது போல் தெரியவில்லை. இங்கு அலசினால் மிகவும் நீளும். எனவே தவிர்க்கிறேன்.
----------------------------------------------------------------------------------
மாலன்:

அந்த முனைப்பைப் பெற வேண்டுமானல் அறிவியற் சொற்கள் அவை எந்த மொழியில் அமைந்துள்ளதோ அதே மொழிச் சொற்களாகவே வழங்கப்பட்டு நம்மை தினம் உறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

-----------------------------------------------------------------------------------
இராம.கி:

உறுத்தாது; மூளை மழுங்கிப் போகும். எத்தனை நேர்காணல்களைத் தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள்? எவ்வளவு தடவை அனிச்சைச் செயலாக ஆங்கிலம் கலந்து "so, thanks, what I mean, இப்படி எத்தனை எத்தனையைக் கலக்கிறார்கள்?" அதுபோலக் கொஞ்சம் கூட நாணம் இன்றி கலந்து பேச நாம் அதிகாரம் கொடுத்தவர்கள் ஆவோம்.
------------------------------------------------------------------------------------

அன்புடன்,
மாலன்

------------------------------------------------------------------------------------
அன்புடன்,
இராம.கி.

பி.கு:>> நீங்கள் கொடுத்துள்ள நிகரான தமிழ் சொற்களை இலங்கை வாழ்
நம் தமிழர்கள் யதார்த்த வாழ்வின் உரையாடலில் பயன்படுத்துகிறார்களா?

திரு. சத்யா: இலங்கையர்கள் பயன்படுத்துவதில்லை. 'பாவிக்கிறார்கள்' :-)

Sunday, April 08, 2007

தெள்ளிகை - 3

உருப்படியான வேலையைச் செய்துகொண்டு இருந்த போது, இடைவிலகலாய் தனித்தமிழ் பற்றிய ஒரு தொடர் கட்டுரையையும், ஓதி (hotri) பற்றிய விளக்கத்தையும், இன்னும் சில கட்டுரைகளையும் என் வலைப்பதிவில் எழுதியதில், இந்தத் தொடர் தடையுற்றது. இப்பொழுது, மீண்டும் தொடர்கிறேன். அன்பர்கள் தொய்வைப் பொறுப்பீர்களாகுக.

அடுத்து நாம் பார்க்கும் சொற்கள் study, student ஆகியவையாகும். இவைக்கான விளக்கம் இங்கு நீண்டு போவதற்கு மன்னியுங்கள். ஆங்கிலச் சொற்பிறப்பில் study என்பதை

c.1125, from O.Fr. estudier "to study" (Fr. ளூtude), from M.L. studiare, from L. studium "study, application," originally "eagerness," from studere "to be diligent" ("to be pressing forward"), from PIE *(s)teu- "to push, stick, knock, beat" (see steep (adj.)). The noun meaning "application of the mind to the acquisition of knowledge" is recorded from c.1300. Sense of "room furnished with books" is from 1303. Study hall is attested from 1891, originally a large common room in a college. Studious is attested from c.1382.

என்று குறிப்பார்கள். இந்தக் குறிப்பில், PIE *(s)teu- "to push, stick, knock, beat" என்ற கருத்தையும், studere "to be diligent" ("to be pressing forward") என்பதையும், கவனித்துப் பார்க்க வேண்டும். "எந்தவொரு பட்டகையையும் (fact), விடாது சொல்லி, நம் நினைவகத்திற்குள் பதிய முற்படுவதைத் தான் study என்கிறோம். If we have studied something, then we should have understood the same and hence we won't forget" என்று புரிந்து கொள்ளுகிறோம் இல்லையா? study என்னும் செயலில் ஒரு மூளைத் திணிப்பு தென்படுகிறது, இல்லையா? தமிழில் நெருக்குதல், திணித்தல் என்ற கருத்துக்களைத் தேடிப் பார்த்தால், நமக்கு விளங்கிவிடும்.

அதே பொழுது, மேலே PIE - வழியாய்ப் பெறும் வேர்ச்சொற் கருத்து, திண்ணைப் பள்ளிக்கூடங்களையும் சட்டாம்பிள்ளைகளையும் கூட நம் நினைவிற்குக் கொண்டு வரும். சட்ட அம்பிகள் தான் நம்மூரில் சட்டாம்பிகள் ஆனார்கள். (அம்பி என்பது நம்பி என்ற சொல்லோடு தொடர்புற்றது) அந்தக் காலத்தில், பெரும்பான்மைக் கல்வி ஆசான்கள், பெருமானராய்த் தான் தமிழகத்தில் இருந்தார். (கலை ஆசான்கள், பெரும்பாலும் பெருமானர் அல்லராய்த் தான் இருந்தனர்.) அதனால், பெருமான்களின் பதின்ம வயதுப் பெயரான அம்பி என்ற சொல் இங்கே சட்டாம்பிக்குள் உள்நின்றது. சட்டம் எனும் கோலை வைத்தே, திண்ணைப் பள்ளிகளில் ஒழுங்குமுறை உணர்த்தப் பெற்றது. ஊர்களில் பொது மரத்தடித் திண்ணைகளிலும், வீட்டுத் திண்ணைகளிலும் தான் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப் பட்டன. ஆலமரம், புளியமரம், அரசமரம் எனத் திண்ணைப் பள்ளிகளில், சட்டமும், கோலும், விளாறும் சட்டென்று ஓடி வந்துவிடுவது இயல்புதானே?

திண்ணைக் கூடங்கள், பள்ளிக் கூடங்களாய், பெரிதும் நம்மூரில் உணரப்பெற்றது ஆசீவகம், செயினம், புத்தம் ஆகிய நெறிகள் பரவிய பின்னால் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். படிப்பு என்ற கருத்தீடு கூட இந்த மூன்று நெறிகளாலேயே நம்மூரில் ஊக்கம் பெற்றன.

(சற்று இடைவிலகலாய் இந்த மூன்று நெறிகளின் பெயர்த் தோற்றங்களைத் தமிழ் வழியே பார்ப்போம். ஆசீவகம், செயினம், புத்தம் ஆகிய மூன்று நெறிகளையும் சமணம் என்ற பொதுச்சொல்லால் தமிழில் குறிப்பார்கள்.

"முன்பிறப்பில் செய்த கருமம் இப்பிறப்பில் ஒருவரைப் பாதிக்கும்" என்ற கருத்தை முற்றிலும் மறுக்கும் நெறி ஆசீவகமாகும். இதன் பல கருத்துக்கள் தமிழ் இலக்கியங்களில் இருந்தே பெறப்படுகின்றன. ஆசீவகப் பாடல்கள் என புறநானூற்றிலேயே நாலைந்து இருக்கின்றன. இதன் தோற்றம் தென்னகம் தானோ என்ற ஐயப்பாடு கூட ஆய்வாளரிடம் உண்டு.  

தமிழர் வழக்கில், "செய்(த)வினை" என்பது முன்பிறப்பில் செய்த கருமத்தைக் குறிக்கும் சொல்; செய்வினை என்பதைச் செய்விகம் என்றும் தமிழில் குறிக்கலாம். ஆசீவிகம் என்னும் பெயர் விளக்கத்தை 2 முறைகளில் புரிந்து கொள்ளலாம். இங்கே ஒரு விளக்கம் மட்டும் சொல்கிறேன். இன்னொரு விளக்கத்தை வேறு கட்டுரையில் பார்க்கலாம். 

செய்தல்>செய்வித்தல் என்று பிறவினையாய் செய்விகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். செய்விகத்தின் மறுப்பு வடபுலத்தில் அல்>ஆ எனும் முன்னொட்டுச் சேர்த்து ஆசெய்விகம் என்று ஆகும். அதாவது ஊழ்வினையை மறுத்து, ஊழை வலியுறுத்தும் நெறி ஆசெய்விகம் ஆகும். இது மேலும் திரிந்து ஆசீவிகம் (>ajivika) என்று ஆவது முற்றிலும் இயல்பான ஒன்றே.

செயினம் என்பது, வடபுல நெறி தான். செயித்தல் கருத்தின் வெளிப்பாடாகச் செயினம் அமையும். செயித்தலின் அடிப்படை செகுத்தல் என்ற வினை. ("அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்று உயிர் செகுத்து உண்ணாமை நன்று" என்னும் போது உயிர் அழித்தல் என்ற கருத்து புலப்படும்.) செகுத்தல் என்பது அழித்தல்; மேலை மொழிகளிலும் to sect என்பது பிரித்தல், அழித்தல் தொழிலைக் குறிக்கும். அழித்தலின் மறு பக்கம் வெற்றிபெறுதல். செகுக்கப் பட்டவன் அழிகிறான். செகுத்தவன் வெற்றி பெறுகிறான். அடுத்தடுத்து இடைவிடாது, மீண்டும் மீண்டும் ஆன்மா பிறக்கும் தொடர்நிலையை ஒறுத்துச் செகுக்கக் கூடிய வழியைச் சொல்வது செயின நெறியாகும்; இப்படி, செகுனம்> செகினம்> செயினம் என்ற வளர்ச்சியில், வெற்றிநிலையைக் குறிக்கும் கருத்து பெறப்படும். செயித்தது எனும் வினைச்சொல் ஜெயித்தது என்று வடபுலத்தில் பலுக்கப் படும்.

புத்தம் என்ற வடபுலத்து நெறியிலும், உள்ளார்ந்த வேர்ச்சொல் தமிழ்த் தோற்றமே காட்டுகிறது. புத்தம் என்பது ஆன்றவிந்து அடங்கிய அறிவு நிலையைக் குறிப்பிடும் சொல். புல் என்னும் வேர்ச்சொல்லில் இருந்து புலர்தல் / புலவுதல் என்று தெளிவு ஏற்படும் நிலையைச் சொல்லுகிறோம் அல்லவா? புலத்தல் என்பது அறிவுறுத்தல். புலவன் என்பவன் அறிவார்ந்தவன். பு(ல)த்தன் என்னும் சொல் பலுக்க எளிமையில் புத்தன் ஆவது இயற்கையே. புத்தன் என்னும் சொல்லையும் பலுக்கச் சுருக்கத்தில் புதன் என்று வடமொழி வழங்கும். அறிவுள்ளவன் புதன் எனப்படுகிறான். புத்த நெறி என்பதை இந்திய மெய்யியலார் நடுப்பட்ட நெறி என்று சொல்வார். அது ஆசீவகத்திற்கும், செயினத்திற்கும் இடைப்பட்ட நெறி. அதேபொழுது, மகாயானத்திற்கு முன், வேத நெறியோடு சமதானம் கொள்ளாத நெறி. மகாயானம் ஏற்பட்ட பின்னால், வேத நெறியிடம் விட்டுக் கொடுத்து, அதன் விளைவாலேயே, நம்மூரில் நீர்த்துப் போனது.

ஆசீவகம், செயினம், புத்தம் ஆகிய 3 நெறிகளுக்கும் பொதுவாய், சம்மணம் கொட்டித் தவத்தில் ஆழ்ந்து உறையும் துறவு நிலை இருந்ததால், இந்நெறிகள் பொதுப்பெயரில் சமணம் என்று அழைக்கப்படும். துறவு நிலை என்பது இந்த 3 நெறிகளிலும் பெரிதாய்ச் சொல்லப் படும். கொட்டுதல் வினை கூட்டுதல்  வினையிலிருந்து திரிந்து பிறந்தது. கால்களைக் கூட்டித்தான் நாம் சம்மணம் செய்கிறோம். தவம் செய்கின்றவர், பெரும்பாலும் சம்மணம் கொட்டியே, சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். அதனால் அவர் சம்மணர்>சமணர் ஆனார்.)

பெருமானம் சார்ந்த வேத நெறியானது, ஓதுதல் என்பதை எல்லோருக்கும் பொதுவாய்ச் சொல்லாமல், ஒரு சிலருக்கு மட்டுமே குமுகத்தில் பொருந்துவதாய், தனியே ஒதுக்கி வைத்தது; மற்றவர்க்கு அது என்றும் எட்டாக் கனியாகவே ஒரு காலத்தில் இருந்தது. (அந்த ஒதுக்கலில் ஓரளவு புறனடைகள் இருந்திருக்கலாம்.) அதோடு, பெருமானக் கல்வியும்கூடக் கேள்வி நிலையிலேயே, வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்தது. வேதக் கல்வி முறையில் "ஆசான் என்பவர் ஒரு மந்திரத்தை, ஒரு சொற்றம் (>சூக்தம்) அல்லது சொலவத்தை (slogan), ஒரு பாடலை, ஓதுவார்; பையன்கள் அதைக் கேட்டு, மனப்பாடம் பண்ணி அப்படியே திரும்ப ஒப்பிப்பார். பின்னால் அதற்கு விளக்கம் சொல்வார். அதனாலேயே, ஓத்து (lecture; வேதக் கல்வி), கல்வி, கேள்வி என்ற சொற்கள் முதலில் எழுந்தன. (ஓதுதல் = ஒல்லுதல், ஒலித்து உரைத்தல், கல்லுதல் = ஓசையெழுப்பிச் சொல்லுதல்; கேள்தல் = ஓசையைக் காதுவழி அறிதல்.)

வேதக் கல்வி முறையில் எழுதுதல் என்பது முகன்மையானது அல்ல; எழுதுதல் எனும் முறை, மிகுந்த நாட்களுக்கு அப்புறமே, வேத பாடசாலைகளில் எழுந்தது. அதே பொழுது, "எழுத்து இல்லாமல் படிப்பு கிடையாது" என்ற அளவிலும், "பட்டதை வாசிப்பது படிப்பு" என்ற புரிதலிலும், படிப்பைப் பற்றிய சிந்தனை, தென்னகம் சார்ந்து எழுந்திருக்கவே பெரும்பாலும் வாய்ப்புண்டு. (தமிழி/பெருமி எழுத்து தென்னகத்திலே தான் முதலில் எழுந்திருக்கக் கூடும் என்று இன்றைய ஆய்வுகள் உறுதிப் படுத்துவதால், எழுத்து/படிப்பின் தொடக்கம் வடக்கே எழுந்திருக்க வாய்ப்புகள் குறைவு என்றே நாம் உணர்கிறோம்.)

வேத நெறியைத் தொடர்ச்சியாய்க் கேள்வி கேட்ட, மேலே கூறிய மூன்று சமண நெறிகளும், மகதத்திலும், தமிழகத்திலும் பரவியிருக்கா விட்டால், படிப்பின் தேவை குமுகாயம் எங்கும் பரவியிருக்காது என்றே சொல்லலாம். ஏதொன்றையும் கேள்வி கேட்கும் படி, மக்களை அறிவுறுத்திய பூதவியல் (materialism), சார்ங்கியம் (Saankyam), விதப்பியம் (Visheism) போன்ற பகுத்தறிவு நெறிகளும் (அதாவது, நம்பா மதங்களும்), அறியொணா நெறிகளான (agnostic religions) சமண நெறிகளும், என்றும் படிப்பிற்கு அணியமாகவே இருந்திருக்கின்றன. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றையும் அவை சொல்லிக் கொடுக்கத் தயங்கவே இல்லை. பின்னால், தென்னக இனக்குழு நெறிகளான (tribal religions) சிவ நெறியும், விண்ணவ நெறியும் (இவற்றோடு ஆசீவகமும் தெற்கே முதலில் எழுந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு) கூட இந்த 3 சமண நெறிகளின் கூறுகளைச் சில மாற்றங்களுடன் தம்வயப்படுத்தின. எனவே அவற்றிலும் எழுத்து, படிப்பு, போன்ற சிந்தனை மரபு உண்டு.

முன்னரே சமயம் பற்றிய என் கட்டுரையில் சொல்லியவாறு, பள்ளி என்ற சொல்லை இன்றும் நாம் பயிலுவது சமண சமயங்களின் தொடர்பால் தான். திண்ணைப் பள்ளிக் கூட மரபுகள், மேலை நாடுகளிலும் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. பெரும்பாலான மேலையர் பள்ளிச்சொற்கள் அவர்களின் திண்ணைப் பள்ளிக்கூட மரபில் இருந்து தான் கிளைத்திருக்கின்றன. காட்டாக, இரோப்பாவில் இருக்கும் gymnasium, athenium போன்ற சொற்களை இங்கு நினைவில் கொள்ளலாம். சமணப் பள்ளிக்கூடம் என்ற சொல்லைப் போலவே, குமுன+ஓதியம் = குமுனோதியம்>குமுனோசியம்>குமுனாசியம் (gymnasium) என்ற பலுக்கலில், கிரேக்க குமுகாயத்தில் பள்ளிக்கூடங்கள் அழைக்கப் பட்டதைப் பார்த்தால், மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் நெடுகவும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். (கும்முதல் = கூடுதல்; குமுனம் = கூடம்; கும்மனம்> கும்மணம்> சம்மணம் என்ற சொல் வளர்ச்சியின் உள்ளார்ந்த பொருட்பாடு இங்கு உணரப்பட வேண்டும். சமண நெறிக்கும் இரோப்பாவிற்கும் நாமிங்கு முடிச்சுப் போடவில்லை. ஆன்றடங்கிய அறவோர் கூடிச் சொல்லிக் கொடுக்கும் இடம் குமுனோதியம் என்று புரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்.) இந்தக் காலத்தில் நம் மரபுகளை உதறி, இரோப்பியர் மரபுகளைக் கடன் வாங்கி, அல்லது சிதைந்து இப்போது நம்மிடம் இருப்பதையே வைத்து ஒப்பேற்றி, மேலைச் சொற்களையே புழங்கி மாய்வது நல்ல பழக்கம் அல்ல. நம்முடைய மரபுகளைத் தேடிப் புதுப்பிக்க வேண்டியது தேவையானது.

சரி, study என்பதை நம்மூர் மரபின் படி, எப்படிப் புரிந்து கொள்ளுவது? இதுநாள் வரை, study என்பதைப் படிப்பு என்றே தமிழில் சொல்லுகிறோம். அன்றாடப் பேச்சு வழக்கில் "அப்படிச் செய்; இப்படிச் செய்; எப்படிச் செய்வது?" என்று சொல்லுகிறோமே, அதில் வரும் படி என்ற சொல்லைப் பற்றி எப்பொழுதாவது ஆழ்ந்து ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களோ? படுதல் என்பது வீழ்தல். படுதல் என்ற வினைச்சொல்லை வைத்து பேச்சு நடையில் பட்டுவ வாக்குகளை (passive voice) உருவாக்கிறோம். இதைச் செயப்பாட்டு வினை என்று இலக்கணத்தில் சொல்வார். "பானை வனையப் பட்டது, அந்தச் செய்தி கோவமாய்ப் பேசப் பட்டது, இந்த வினை இன்ன விதமாய்ச் செய்யப் பட்டது" என்பவையெல்லாம் பட்டுவ வாக்குகள். கூடியமட்டும், பட்டுவ வாக்கைத் தவிர்த்து, ஆற்றுவ வாக்காய்ப் (active voice; செயலை ஆற்றும் வாக்கு ஆற்றுவ வாக்கு) பேசுவதே நல்ல தமிழ்நடையாகும். ஏற்கனவே ஏற்பட்ட தடத்தில், தன்வினையாய் அமைவது படிதல்; பிறவினையாய் அமைவது  படிவி)த்தல் ஆகும். (பாதை, பாதம், பதிதல் போன்ற பல சொற்களை இங்கு ஆழ்ந்து நினைவு கொள்ளுங்கள்.) [முனைவர். கு. அரசேந்திரன் தன்னுடைய "தமிழறிவோம்" நூலில் (யாழினி அரசேந்திரன், 6, பெருஞ்சித்திரனார் தெரு, சிடலப்பாக்கம், சென்னை -64, தொ.பே. 2223 0882), பக்கம் 9-ல், படிப்பு என்ற சொல்லின் விளக்கத்தைத் தெளிவாக உரைப்பார்.]

முன்னே தெள்ளிகை 2-ல் சொன்ன விளம்புதற் கருத்து, இப்பொழுது வேறு உருவத்தில் படித்தல் என்ற சொல்லிற்குள் வருகிறதல்லவா? படுதல்>பட்டித்தல்>ப(ட்)டி>படி என்பது சொல் வளர்ச்சி. படிப்பு என்பது பொதுவாக இன்னொருவர் போட்ட தடத்தில் நாம் போவதையேக் குறிக்கும். பழைமை குறிக்கும் பண்டு என்ற சொல்லும் கூட, முன்னே போட்ட தடத்தைக் குறிப்பது தான். பண்டிதர் என்ற சொல்லும் கூட அவ்வழி வந்தது தான். (பண்டிதர் என்பதை வட சொல் என்று பிறழப் புரிந்து கொள்கிறோம்.) பெரிதும் படித்தவர் பண்டிதர். அவருடைய படிப்பு பண்டிதம். பண்டித அறிவைக் கடன் வாங்கி பாண்டித்யம் என்று வடமொழி திரித்துக் கொள்ளும்.

ஆக, படிதல் என்பது ஒன்றின் மேல் பாவுதல், அமைதல், நிறைதல், நெருங்குதல் என்றே பொருள் கொள்ளலாம். ஆற்றில் அமையும் படித்துறையில் கூட நாம் படுகிறோம்; படித்துறை என்ற சொல் ஒரு இரட்டைக் கிளவி போலவே பொருள் கொடுக்கிறது. நாம் ஆற்றை நெருங்க, படி வழி செய்கிறது; அதே போல கரை அல்லது படியை, ஆறு நெருங்கி வருகிறது. "துற்றுதல், துருதல், துறுதல்" என வரும் வினைச்சொற்கள் எல்லாமே நெருங்குதல் பொருட்பாட்டைக் குறிக்கின்றன. ஆறு துறுந்த இடம், துறை. இன்னும் ஆழ்ந்து பார்த்தால், துறை என்பது ஆற்றை நெருங்க மட்டும் செய்யவில்லை; ஆற்றிற்குள் முன்வந்தும், நிற்கிறது. துருத்தி என்ற சொல் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?

"அந்தப் பெண்ணைப் பார்த்தீர்களா, எவ்வளவு துறுதுறுப்பு" என்று சொல்லுகிறோம், இல்லையா? துடிப்பு, துடுக்கு, துடி, துருதுருப்பு, துறுதுறுப்பு என எல்லாமே ஒரு சுறுசுறுப்பை நமக்கு உணர்த்தும். துடிப்பான ஒரு பையன், விரைவாக, பரபரப்பாக, அறிவுக் கூர்மையோடு, ஏதொன்றையும் முன்வந்து செய்ய முற்படுவான்; அமைதியின்றி இருப்பான். "ஏன் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள், வாருங்கள், முன்னே நகர்வோம்" என்று மற்றவரை முடுக்கி விடும்  பரபரப்பைத் தான், துறுதுறுப்பைத் தான், eagerness என்று ஆங்கிலத்தில் சொல்கிறார். studere "to be diligent" ("to be pressing forward") என்று மேலே சொன்னதை ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள்; நான் சொல்லவரும் தொடர்பு உங்களுக்குப் புலப்பட்டு விடும்.

துல் என்னும் வேரின் அடியாக துற்றல், துத்தல், துருதல், துறுதல், துருத்தல், துறுத்தல், துடித்தல் என்ற சொற்கள் பிறக்கும். எல்லாவற்றிற்குள்ளும் இந்த eagerness என்ற கருத்து நிற்கும். நெருக்கல், pressing together என்பதைத் துத்தகை என்று தமிழில் சொல்லுவார்கள். நெசவு தறியில் பாவுநூலுக்குக் (warp) குறுக்காய் ஊடுநூல் (weft) போகிறது பாருங்கள்; அந்த ஊடுநூல் அடுக்குகளை ஒன்றோடு ஒன்றாய் நெருக்குவதற்கு உதவும் கம்பை துத்துக்கோல் (rod used by weavers to press the weft compactly) என்று சொல்கிறார். "தலையணைக்குள் பஞ்சைப் போட்டு து(று)த்தினால் தான் உள்ளே போகும்" என்று சொல்லும் போது திணித்தற் பொருள் சட்டென வருகிறது. துதைதல் வினைச் சொல்லுக்குச் செறிதல் (to be crowded, thick, close, intense) என்றே பொருளுண்டு. துதைத்தல் என்பது நெருக்குதல் to press together என்ற பொருள் கொள்ளும். துதை என்ற பெயர்ச்சொல்லுக்கே கூட நெருக்கம் என்ற பொருள் உண்டு.

"தோடமை முழவின் துதை குரலாக" அகநா. 82, என்ற வரியில் நெருங்கிய ஓசை என்ற பொருளில் வரும் "துதை குரல்" என்ற சொல்லாட்சியைப் பாருங்கள். கேரளத்தில், திருச்சிவபேரூர் ஆடிப்பூரத்தில் தொகுதியாக ஒலிக்கும் செண்டை மேளத்தின் துதைகுரல் கேட்டிருக்கிறீர்களா? நம்மை அப்படியே ஈர்த்துவிடும். "துப்பனே, தூயாய் தூயவெண்ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத்து" என்று திருவாசகம் அருட்பத்து - 6 - ஆம் பாட்டிலும், "தோள்திரு முண்டம் துதைந்து இலங்க - புயமும் நெற்றியும் ஒருங்குசேர்ந்து இலங்க" என்று திருவாசகம் திருப்பொற்சுண்ணம் - 8 - ஆம் பாட்டிலும், "சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்து அருளியும்" - என்று திருவாசகம் கீர்த்தித் திரு அகவல் - 99 - ஆம் வரியிலும், துதைதல் என்பது படிதல் (to be steeped) என்ற பொருளில் ஆளப் படுவதைப் பார்த்தால் துதைதல்/படிதல், துதைத்தல்/ படிவித்தல் என்ற பொருளில் ஆளப்படுவதைச் சரியாக உணரலாம்.

துத்துதலின் வேறு திரிபான துற்றுதல் என்ற சொல்லும் கூட, நெருங்குதல், to come near, advance closely, lie close என்ற பொருளில் "மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற" - தேவாரம் 83.1 என்ற வரியிலும், "காளை சீறிற் துற்று இவன் உளனோ என்பார்" சீவக. 1110 வரியிலும், மேற்கொண்டு நடத்தல் undertake என்ற பொருளில் "அரிது துற்றவையாற் பெரும" அகநா. 10 போன்றவற்றிலும் ஆளப்படும். துற்றுதல் "துத்து" என்று மலையாளத்திலும், "துத்த" என்று தெலுங்கிலும் ஆளப்படும்.

துற்றுதலின் பொருள் நீட்சியாய், திணித்தல் பொருளில் (to cram as food into the mouth), துறுத்தல் என்ற சொல்லாட்சி "வாயிலே சீரைத் துறுத்து" என்று நாலாயிரப் பனுவலின் உரை நூலான ஈடு 9,9,1- ல் வந்து நிற்கும். இந்தப் பொருளில், ம. துறு, க. துறுகு, தெ. துறுகு என்ற மற்ற மொழிப் பயன்பாடுகளும் உண்டு.

தவிரத் துறு என்ற சொல்லை நெருக்கம் (thickness, closeness, crowdedness) என்ற பொருளில் திவாகரம் சுட்டும்.துறுபடை என்பது நெருங்கிய போர்ப்படை (squadron, as in close array) என்ற பொருளைக் குறிக்கும். துறுமல் / துறுவல் என்ற சொற்களுக்கு நெருக்கம், திரட்சி என்ற பொருட்பாடுகளும், துறுமுதல் என்ற வினைக்கு நெருங்குதல், திரட்டுதல் என்ற பொருட்பாடுகளும் உண்டு. துறை என்ற சொல்லிற்கு, இடம், வழி, பகுதி, கடல் துறை, கடல், ஆறு, வண்ணான் துறை, நீர்த்துறை, அவை கூடுமிடம், நூல், section, ஒழுங்கு, பாவினம், பாட்டுவகை, வரலாறு என்ற பொருட்பாடுகளும் உண்டு. இன்றைக்கும் study ஆங்கிஅச்சொல்லோடு தொடர்பு கொண்டு நாம் ஆளுகின்ற ஒரே சொல் இந்தத் துறை மட்டும் தான். துறுக்கின்ற இடம் துறை. துறுதலின் வேறாட்டமாய் (variation) தூர்தல் என்ற சொல் நெருங்குதல் to come to close quarters பொருளில் "இருவரும் ஒதுங்கியும், தூர்ந்தும் பொருதலின்" தொல். பொருள். 68, உரை, பக் 219 - இல் பயிலும்.

இறைவனுக்கு நெருங்கி வந்து அவனை நினைந்து அடுத்தடுத்து அவன் பெயர்களைச் சொல்லிக் கொண்டிருப்பதைத் துதி என்பார்கள். துதி என்பது துத்துவதின் பெயர்ச்சொல். துத்தம் என்றாலும் துதி தான். துத்தம்> தோத்தம்> தோத்ரம் என்று அது வடபுலத்தில் திரியும். (தோத்ரம் ஸ்தோத்ரம் ஆகி, இன்று கிறித்தவர்களால் பெரிதும் புழங்கப் பட்டு ஸ்தோத்தரிக்கப் படுகிறது.) இதே போல ஒரு பட்டகையைத் துத்திக் கொண்டு நினைவகத்தில் அடைப்பதைத் தான் study என்கிறார், இல்லையா? நம்மூரில் இப் பயன்பாடு இறைப்பெயரை நினைந்து நினைந்து திரும்பச் சொல்லுவதில் மட்டுமே விதப்பாக இருக்கிறது. (அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே! - இப்படி நினைந்து நினைந்து துத்துகிறோம் / துதிக்கிறோம். நாம் மறப்பதே இல்லை.) மேலைநாட்டில் துத்துதல் என்ற வினை பொதுப்பட இருக்கிறது. நம்மூரில் பொதுப்படப் பயிலுவதற்குப் படித்தல் என்பதே பயன்படுகிறது.

to study = படித்தல் (விதப்பான முறையில், இறைவன் பெயரை நினைந்து நினைந்து சொல்லும் துத்துதல்)
student = படிக்கிறவன். (மாணவன் என்ற சொல் முன்னே சொன்னது போல் சின்னவன் என்ற பொருளையே தரும்.)

அன்புடன்,
இராம.கி.