Thursday, October 27, 2005

மழையும் நகரும்

ஆறே கிடந்தன்ன அகல்நெடுந் தெருக்கள்
"அன்ன"வை தொலைத்து முழுகவே செய்வோம்;
"அகலை"யும் குறுக்கி ஒடுங்கியே நிற்போம்;
ஆங்கங்கு வண்டிகள் நிறுத்தியே வைப்போம்;
தாறு மாறெனெத் துரவுகள் செய்வோம்;
தத்துப் பித்தென்று முட்டியே வைப்போம்;
தண்ணீர் கழுநீர் கலந்துற விடுவோம்;
தடுமன் சளியொடு மருத்துவர் பார்ப்போம்;
வேறு பாடின்றி இயற்கையைச் சலிப்போம்;
வெய்யிலில் வெந்ததைச் சடுதியில் மறப்போம்;
வீழுமா மழையெனப் பரந்ததை ஒதுக்கி,
விளையுமோ நீர்வளம் என்றெனக் கணிப்போம்;
தேறுதல் ஆறுதல் சேவைகள் நாடித்
தெருவெலாம் நீளுமெம் ஏழையர் வரிப்போம்;
தெரிந்தவர் புரிந்தவர் கொடைகளைத் தேடி
அரசினை, அரசிலாத் தொண்டரைச் சேருவோம்;

வழமை போலவே குழம்பிடும் நகரம்;
வாய்திறச் சாக்கடைக் குழிகளைத் தவிர்த்து
வளைந்து வளைந்து செல்லிடம் புகல்வோம்;
வட்டுகள் பரிசல் சிற்றிடம் பகர்வோம்;
தழும்பத் தழும்பச் சாலையிற் குளங்கள்
தண்டென நடுவில் மேடுறும் வரிகள்;
தாரையாய் வண்டிகள் புகையொடு நகர்வோம்;
தடமோ ஒற்றைதான்; தள்ளிடத் தொண்டர்;
இளையவர் முதியவர் ஆடவர் பெண்டிர்
எழினியைத் தூக்கிக் கால்நனை கொள்ளுவோம்;
எங்கணும் பெயல்நீர் செம்புலம் உணர்வோம்;
எடுக்கும் அடியினிப் பள்ளமா? மேடா?
இழைவது இடையே கொசுவும், உயிரியும்
இயன்றால் இனிப்பல ஊர்வன மிடையும்;
என்னரும் நகரில் மழையென வந்தால்
எத்தனை கரிசனம், உயிர்களுக் கிடையில்?

பத்துநாள் மழைக்கே இத்தனை பாடு;
பையவே புயல்வரும் எனவறி விக்கை;
பகலெலாம் அமைதி; பாசாங்குத் தோற்றம்;
பழக்கமாய் ஆந்திரம் போகுமோ? தெரியோம்;
மொத்தமும் வழித்து முகத்தையும் மறைத்து
மூடிய மேகம் அதன்பொருள் அறிமோ?
மூண்டது தூறல்; முயங்குறு காற்று
மூளுமோ? சூழுமோ? முடங்கியே போமோ?
அத்தனை அறிந்தவர் யாருளர் நாட்டில்?
அலமறும் வான்நிலை ஆய்வரா சொல்லுவார்?
ஆண்டு தோறும் கதையிது ஆகியும்
அசைக்க முடியா பெருநம் பிக்கை!
இத்தனை சரவல் எமக்கிழைத் திருந்தும்
எண்ணுவ தெல்லாம் ஏரிகள் உயரம்!
"என்னாச் சுங்க! புழலேரி இன்று?"
"ஏறிய தைந்தடி! இந்தாண்டு ஓடிரும்"

- முன்னொரு நாள் எழுதிய பா

அன்புடன்,
இராம.கி.

5 comments:

deep said...

நல்ல பா.
//தழும்பத் தழும்பச் சாலையிற் குளங்கள்//
இதில தழும்ப என்பது நீர் (நிறைந்து) முட்டிக்கொண்டிருக்கிற நிலையா?
தளும்புதல் என்றொரு சொல் இல்லையா??

பத்மா அர்விந்த் said...

வெயிலில் வெந்ததை சடுதியில் மறப்போம். வாழ்க்கைக்கு கூட இது உதவும். கஷ்டங்களை மறக்க கற்ரு கொண்டால் துன்பமேது

வானம்பாடி said...

அருமையான பா. :)

Anonymous said...

கல்லூரிக் காலத்தில் படித்த செய்யுள் பலவற்றை நினைவு கூற நேரிட்டது, தங்கள் பா படித்த பிறகு. பல அழகுத் தமிழ் வார்த்தைகள் வலம் வர வார்த்தைகள் நடனமாடி யதார்த்தம் சுட்டியது அருமை அன்பரே! வாழ்த்துக்கள்

இராம.கி said...

அன்பிற்குரிய பிரதீபாதி

தங்கள் பாராட்டிற்கு நன்றி. தழும்புதல் என்ற வினை ஓரோவழி தளும்புதல் என்ற சொல்லிற்கு மாற்றாய் எழுதப் படுவது உண்டு. அதே போல தளும்புதல் என்பது ததும்புதல் என்றும் எழுதப்படும். தளும்புதல் என்ற வினை தடுமாறல், மேலெழும்பி வழிதல் என்ற பொருள்களைக் கொள்ளும். தழுதழுத்தல் என்னும் போது தடுமாறல் என்ற பொருள் வருகிறது இல்லையா? ழகரமும் ளகரம் பல இடத்து ஒன்றிற்கொன்று போலியாய் வரும். தளும்புதல் என்பது சிறந்த சொல்லாட்சி என்று நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்.

அன்பிற்குரிய தேன்துளி,

தங்கள் கருத்திற்கு நன்றி.

அன்பிற்குரிய சுதர்சன், ஜான் பாஸ்கோ,

தங்களின் பாராட்டிற்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.