Tuesday, October 25, 2005

மின்தாளிகைகள் - மடற்குழுக்கள் - வலைவாசல்கள்

இணையம் பற்றிய புரிதல் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஏற்பட்ட புதிதில், மின் தாளிகைகள் (e-zines) என்பவை இங்கே தொடங்கப் பெற்றன. அச்சு இதழ்களைப் போன்றே சில போல்மங்களை (models) உருவாக்கி, அவற்றுள் கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, கருத்து, பின்னூட்டு ஆகியவற்றைக் கொண்டு வந்து, மின்னுருவில் எங்கோ ஒரு நினைவகத்தில் (memory) குடியிருத்தி வைப்பதே மின்னிதழ்களின் நடைமுறையாய் இருந்தது. அச்சிதழ்கள் இவற்றிற்கு முன்மாதிரியாய் இருந்த காரணத்தால், அந்தக் கட்டமைப்பிற்குள் தம்மை அறியாமல் ஈடுபட்டு, பல நேரம், மின்னுலகின் இயலுமைகள் (possibilities) மற்றும் அதன் விளிம்புகள் (limits) முதலியவை மின்னிதழ்களில் தொடப் படவே இல்லை. படிப்போரும், பழக்கத்தின் காரணமாய், எந்தப் புதிய எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த நினைவகங்களோடு இணையவழி கணுக்கம் (connection)ஏற்படுத்திக் கொண்டு மின்னிதழ்களைப் படித்தோம். நாம் பின்னூட்டுக் கொடுக்கும் போதும் கூட அவை ஒரே நினைவகத்திற்குப் போயின. மின்னிதழ்கள் என்பவை இந்த வகையில் முதற்படி.

மின்னிதழ்களின் உள்ளடக்க நிர்வாகம் (content monagement) என்பது கிட்டத் தட்ட அச்சிதழ்களைப் போலவே இருந்தது. (நான் இங்கே பண வருமானம் பற்றிச் சொல்லவில்லை. வாசகர்கள்/எழுதுபவர்கள் ஆகிய இருவருக்கிடையே இருந்த நடப்பு முறையைச் சொல்லுகிறேன்.) இந்த மின்னிதழ்களை நிர்வகிப்போர் என ஒருவரோ சிலரோ இருந்து பல்வேறு ஒருங்கிணைப்பு வேலைகளைப் பார்த்தார்கள். ஆங்கிலத்தில் சொல்லுவது போல் மின்னிதழுக்கும் ஓர் எடுவையர் (editor) தேவைப்பட்டார். (தமிழில் நெடுங்காலம் இந்த editor என்ற சொல்லை "தாளிகை ஆசிரியர்" என்று சொன்னார்கள். ஆசிரியர் என்ற சொல்லாட்சியின் மூலம் அவர் ஏதோ நமக்கு ஆசான் போலத் தோற்றம் அளிப்பதைத் தவிர்த்திருக்கலாம். அவர் ஆசான் அல்ல. உண்மையில் editor என்பவர் நாம் அனுப்பும் ஆக்கங்களை தாளிகையின் கொள்கை முறைக்கு இணங்கத் திருத்தங்கள் செய்து அதைக் கொஞ்சம் எடுப்பாக முன் வந்து இருப்பது போல் ஆக்கி, அங்குமிங்கும் அலங்காரம் செய்து வெளியிடுவார்; இப்படி எடுப்பாக்கும் செயலைத் தமிழில் எடுவித்தல் என்று சொல்லலாம். எடுத்தல் என்பது தன்வினை; எடுவித்தல் என்பது பிறவினை. ஒன்றை உயர வரும்படி, தெரியும் படி செய்வது எடுவித்தல் என்று ஆகும். தென்பாண்டி நாட்டில் சிவகங்கை வட்டாரத்தில் எடுப்பு என்ற பெயர்ச்சொல் இந்தப் பொருளில் பெரிதும் வழக்கில் உள்ளது. "என்ன மானி, எப்படி? எடுப்பாய் இருக்கிறேனா?" எடுவிக்கும் செயலைச் செய்பவர் எடுவையர். editor என்பதின் நேர் இணையாய் எடுவையர் என்பதைப் பயனாக்கலாம். editor பற்றிய சொற்பிறப்பியலை முன்னாளில் மடற்குழுக்களில் எழுதினேன்.)

ஒவ்வொரு எடுவையரும் தனக்கென ஓர் எடுவைக் குழு (editorial team) வைத்திருக்கக் கூடும். எடுவை நிலைக்கென ஒரு கொள்கையும், நிலைப்பாடும், கடைப்பிடியும் (editorial policy, standpoint and practice)உண்டு. இந்திந்த ஆக்கங்கள் இந்த இதழில் வரலாம்; இன்னின்னவை இதில் வரக்கூடாது என்று வைத்திருப்பார்கள். பூதியல் (physics) தாளிகையில் அரசியல் வராது; குமுகாயத் தாளிகையில் (social science magazine) அணு வேதியல் (atomic chemistry) பற்றி வராது. அதே போல பேசும்படம் என்ற திரைப்படத் தாளிகையில் வருவது கல்கியில் வராது. ஏன், தினத்தந்தியில் வருவது தினமணியில் வராது. இப்படி ஒவ்வொரு தாளிகைக்கும் இருக்கும் எடுவைக் கொள்கையை விவரித்துக் கூறலாம். ஆனால் படிக்கின்ற உங்களுக்கு அதன் விதப்புத் தன்மை (specific character) பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. இப்படி ஓர் எடுவைக் கொள்கையை வைத்திருப்பது ஒவ்வொரு தாளிகைக்கும் உள்ள இயல்பு. அது ஒன்றும் வல்லாண்மை (dictatorship) அல்ல. வல்லாண்மை என்பது ஒருவிதமான நிகழ்ப்பை (agenda) மனத்தில் வைத்துக் கொண்டு செய்யும் முற்றாளுமை (totalitarianism). பழைய சோவியத் ஒன்றியத்தில் (Soviet Union) பிராவ்தா என்ற தாளிகை காட்டியது வல்லாண்மைப் போக்கு. இங்கே நீக்குப் போக்கு என்பதற்கு இடம் கிடையாது. பொதுவாக, எடுவைக் கொள்கை என்பது வேறு; மிடைய வல்லாண்மை (media dictatorship) என்பது வேறு; நாம் இவை இரண்டையும் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டு குழம்பிக் கொள்ளக் கூடாது. எடுவைக் கொள்கைக்கு மீறிய ஆக்கங்கள் வெளியீட்டிற்கு வராமல் விலக்கப் படுகின்றன என்பதாலேயே ஒரு தாளிகை வல்லாண்மைப் போக்கு உள்ளது என்ற பொருள் கொள்ள முடியாது.

பின்னாளில் மடற்குழுக்கள் (e-mail lists) வந்தன. கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, கருத்து போன்றவை இங்கே மடல் வடிவத்தின் மூலமாக வந்தன. இந்த மின் மடல்களை வாசகர்கள் இரண்டு முறையில் படிக்க முடிந்தது. ஒரு முறையில் எங்கோ இருக்கும் நினைவகத்தைக் கணுக்கிப் (by connecting) படித்தோம்; இன்னொரு முறையில் எல்லா மடல்களையும் நம் கணி/நினைவகத்திற்குள் கீழிறக்கிப் (download) படித்தோம். இங்கும் ஒரு நிர்வாகி அல்லது ஒரு குழு இருந்தார்கள். இவர்களுக்கு மட்டுறுத்தர்கள் (moderators) என்று பெயர். (நானும் பலமுறை சொல்லிவிட்டேன். மட்டுறுத்தர் என்றாலே போதும்; அதை மட்டுறுத்துநர் என்று நீட்டிச் சொல்ல வேண்டியதில்லை.) மடல்களின் பரிமாற்றத்தில் நடைபெறும் உரையாட்டில் அவ்வப்போது இது தான் விளிம்பு (அல்லது மட்டு); இது மட்டும் பேசலாம்; இதற்கு மேல் ஒருவரை ஒருவர் குத்துவதாய் உரையாடிக் கொள்ளக் கூடாது என்று இந்த நிருவாகிகள் உரையாட்டின் எல்லையை, மட்டை உறுத்தினார்கள். இங்கும் ஒரு மடற்குழுக் கொள்கை இருந்தது. இந்தந்தது பற்றி இந்த மடற்குழுவில் பேசலாம்; இவை இங்கு பேசக் கூடாதவை என்று வைத்திருந்தார்கள்; மட்டு மீறியதாய் தனிமாந்த வசை பாடும் நேரத்தில் ஒரு சில உறுப்பினர்களை விலக்கியும் கூட வைத்தார்கள்.

எல்லை மீறிய, மட்டுறுத்தமே இல்லாத ஒரு குழு, தாய்க்குழு, இருந்தது. நானும் கூட அதில் உறுப்பினனாய் இருந்திருக்கிறேன். அந்தக் குழு குலைந்த வகை இன்றைக்கும் மனத்திற்கு வருத்தம் தருகிறது. அதற்கப்புறம் எழுந்த பல தமிழ் மடற்குழுக்களும் மட்டுறுத்தலின் இன்றியமையாமையைக் கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் தொடங்கினார்கள். பொதுவாக எல்லையற்ற சனநாயகம் என்பதும், பொறுப்புக்கள் உணராத விட்ட விடுதலையும், முடிவில் வெறிச்சோடும் சலிப்பையே கொண்டு வருகின்றன. வெறுமே இரண்டு மூன்று முன்னிலையாளர்கள் மட்டும் உரையாடிக் கொண்டும், மற்றவர்கள் அமைதியாய்ப் படித்துக் கொண்டும் இருப்பதாய் அது முடிந்துவிடும். விதிகளே இல்லாத கால்பந்தாட்டம் இருக்க முடியுமோ? கூடியமட்டும் குறைந்த விதிகள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு ஆட்டத்திற்கும் சில விதிகள் வேண்டும் அல்லவா?

பின்னால் வலைப்பதிவுகள் வந்தன. இங்கே கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு போன்றவையோடு கூடவே பல்மிடையப் பங்களிப்புக்களும் (multi-media contributions) எழுந்தன. ஆனால் இவையெல்லாம் ஒரே நினைவகத்தில், அல்லது ஒரு நாலைந்து நினைவகங்களில், அதே பொழுது தனித்தனி முகவரிகளில்/தளங்களில் இருந்தன. இந்தத் தனித் தனித் தளங்களில் இருப்பவற்றைப் பார்த்து எங்கு எவை இருக்கின்றன என்று திரட்டித் தரும்வகையில் திரட்டிகளும் (aggregators), அந்த திரட்டிகள் தரும் சுருக்கத்தைப் படிக்கும் வகையில் வலைவாசல்களும் (webportals) எழுந்தன. இந்த வலைவாசல்களில் நாம் போகும் போது அங்கு திரட்டி வைத்திருப்பதை ஒரு அச்சிதழின் முன்பக்கப் பட்டியலுக்கு இணையாகச் சொல்லலாம். அச்சிதழில் ஒரு ஆக்கம் இத்தனாம் பக்கத்தில் இருக்கும் என்று அந்தப் பட்டியல் சொல்லும். இங்கு அந்த ஆக்கம் எந்த வலைதளத்தில் இருக்கும் என்று சொல்லுவதோடு, அந்தத் தளத்திற்கே நம்மை இட்டியும் செல்லுகிறது.

சரி, வலைவாசல்களுக்கு என்று தனி எடுவைக் கொள்கை அல்லது நிருவாகக் கொள்கை இருக்கிறதா என்றால் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதை வல்லாண்மை என்று பார்ப்பது கொஞ்சம் எகிறிய பார்வை (extreme view). எப்படி அச்சிதழ்களுக்கு என ஓர் எடுவைக் கொள்கை இருக்கிறதோ, அதே போல வலைவசலுக்கும் எடுவைக் கொள்கை இருக்கும் என்ற அடிப்படையை நாம் மறக்கக் கூடாது. Chemical abstracts என்று வேதி அப்பூதிகள் உண்டு. இதில் பூதியல் அப்பூதிகளைச் (physical abstracts) சேர்க்க மாட்டார்கள்; அதே போல ஒரு துறைக் குறிப்புகளில் இன்னொரு துறை இருக்காது. வலைவாசல்கள் என்பவை எல்லார்க்கும் எல்லாமாய்க் காட்சியளிக்கும் அகரமுதலி (dictionary), கலைக்களஞ்சியம் (lexicons) போன்றவை அல்ல. இவற்றில் தான் ஏதொன்றையும் ஒதுக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால் இங்கும் கூட பல்வேறு காரணங்களுக்காய் ஒதுக்கல்கள் ஏற்படுவது உண்டு.

மதம் பற்றிய வாக்குவாதங்கள் திரட்டப் படவேண்டியதல்ல என்பது ஒரு திரட்டி நிருவாகிகளின் நிலைப்பாடாக இருக்கலாம். இந்த நிலைப்பாட்டை அந்த வலைவாசலின் எந்தக் கால நிலையிலும் அவர்கள் எடுக்கலாம். இதைத் திடீரென்றும் செயற்படுத்தலாம். அதே போல இன்னபிற முடிவுகளை அவர்கள் நிருவாகம் கருதி எடுக்கலாம். அதை ஏற்பதும் எற்காததும் நம் உகப்பு. அந்த முடிவுகளை ஏற்றால் அந்தத் திரட்டியைத் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்; இல்லையென்றால் இன்னொரு திரட்டியை நாடிப் போகிறோம். நான் பூதி வேதியல் (physical chemistry) பற்றிய செய்தி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் வேதி அப்பூதி (Chemical abstracts)யையும், வேதிப் பூதியல் (Chemical physics) பற்றிய செய்தி அறிய வேண்டுமென்றால் பூதி அப்பூதி(Physical abstracts)யையும் தேடிப் போகிறேன். இதே முறை தமிழில் இருக்கும் திரட்டிகளுக்கும் பொருந்துவது தான்.

தமிழில் பல்வேறு திரட்டிகள் எழவேண்டும். அதற்கு நுட்பியலாளர்கள் முயல வேண்டும். தமிழ்மணம் என்பது இந்த முயற்சிகளின் தொடக்கம். அவ்வளவுதான். வலைப்பதிவுகளின் சிக்கல் தமிழ்மணத்தின் சிக்கல் அல்ல. தமிழில் வலைப்பதிவு என்பது எழுநூற்றுச் சொச்சம். இவற்றின் ஆளுமை தமிழ்மணத்தால் கட்டுப் படவே இல்லை. அதே பொழுது, தமிழ்மணத்தின் ஆளுமை என்பது வேறு. அதுவும் இந்த எழுநூற்றுச் சொச்சம் பதிவுகளின் ஆளுமையால் கட்டுப் படாது. தமிழ் வலைப்பதிவுகளும் தமிழ்மணம் என்ற வலைவாசலும் ஒன்றிற்கொன்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டு படிப்போருக்கு மொத்த உருவம் காட்டுகின்றன. இன்னின்ன விதிகளுக்குள் இருந்தால் உங்களிடம் இருந்து சுருக்கம் எடுத்து உங்கள் தளங்களுக்குத் தொடுப்புக் கொடுப்போம் என்று தமிழ்மணம் சொல்லுகிறது. அதற்கு இணைந்தே வலைப் பதிவர்களாகிய நாம் ஒப்புதல் தெரிவித்து இந்தத் திரட்டும் செயலுக்கு உட்படுகிறோம். இதில் நம்முடையது திரட்டப் படவில்லையென்றால் நாம் நிருவாகிகளைக் கேட்டுக் கொள்ளலாம்; அல்லது நம் பதிவை மாற்றிக் கொண்டு அவர்களுடைய விதிமுறைக்கு உட்பட்டு வரலாம்; இல்லையெனில் வேறு திரட்டிக்குப் போகலாம். இதில் வல்லாண்மை எங்கே வந்தது?

கால் பந்தாட்டம் ஆட வந்த இடத்தில், கைப்பந்தாட்டம் ஆடுவேன் என்று அடம் பிடித்து ஆடுகளம் அமைத்துக் கொடுத்தவரை வல்லாளர் என்று சொல்லுவது எப்படிச் சரி என்று புரியவில்லை.

நமக்கும் பொறுப்பு இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

7 comments:

b said...

அன்பின் மூத்த சகோதரத்திற்கு,

ஒன்றே சொன்னீர்கள். அதனையும் நன்றாய்ச் சொன்னீர்கள். அதனையும் அழுந்தச் சொன்னீர்கள். எல்லாவற்றிற்கும் குற்றம் குறை காண முயல்பவர்கள் சிந்திக்க வேண்டும். ஆனால் அவர்கள் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்து எச்சரிக்கை வழங்கி இருந்தால் ஒருவேளை மாறியிருக்க வாய்ப்புண்டு என எண்ணுகிறேன்.

erode soms said...

நன்கு சொன்னீர்கள்.
இலக்கணம் இல்லா எதுவும் நீண்டுநிலைப்பதில்லை.கேப்டன் இல்லாத கப்பலின் நிலைஎன்னவாகும்.
எறும்புக்கூட்டத்திலும் தேனிக்கூட்டத்திலும் கட்டுப்பாடுகள் உள்ளனவே!வீடென்றால் பூட்டும் சேர்த்துத்தானே!அன்புடன் சோமு

Anonymous said...

Sabaash, sariyaana karutthu..

Vaa.Manikandan said...

அடேயப்பா! தமிழை அடுத்த தலைமுறைக்கு தர உங்களை மாதிரி நிறையப் பேர் தேவை அய்யா!

Anonymous said...

//தாளிகை//

இது (this) கொஞ்சொ (a little bit) ஓவரு.

இராம.கி said...

அன்புள்ள மூர்த்தி,

உங்கள் பின்னூட்டிற்கு நன்றி. உங்கள் கருத்துப் புரிகிறது. ஆனால், இது தமிழ்மணம் நிருவாகிகள் எடுக்கவேண்டிய வழிமுறை. இதைச் செய்யலாம், அதைச் செய்யலாம் என்று நாம் சொல்லுவது பரிந்துரை மட்டுமே.

அன்பிற்குரிய சித்தன்,

தங்கள் பின்னூட்டிற்கு நன்றி. கட்டுப்பாடுகள் இல்லாமல் எந்தக் குமுகமும் கட்ட முடியாது என்று இயற்கையில் நாம் பார்த்துத் தெரிந்து கொள்ளுகிறோம். தெறுமத் தினவியல் 2ம் விதி (second law of thermodynamics) அதைத்தான் உணர்த்துகிறது. மாந்த இடையூறு இல்லாதிருந்தால் அண்டத்தின் ஒழுங்கின்மை (entropy) கூடிக் கொண்டுதான் போகும். அதே பொழுது ஒழுங்கு இல்லாமல் எந்த ஒரு கட்டகத்தை (system) உருவாக்க முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்பிற்குரிய அமீது அப்துல்லா,

தங்கள் பின்னூட்டிற்கு நன்றி

அன்பிற்குரிய மணிகண்டன்,

உங்கள் பின்னூட்டிற்கும் கனிவிற்கும் நன்றி. நம் எல்லோராலும் முடியும். கவனம் வேண்டும் அவ்வளவுதான்.

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

//தாளிகை//
இது (this) கொஞ்சொ (a little bit) ஓவரு

என்று எழுதியதிலேயே உங்களுடைய நக்கலை விளங்கிக் கொண்டேன். தொனியைப் பார்த்தால், பெரும்பாலும் முன்னே எங்கேயோ இணையத்தில் சந்தித்திருக்கிறோம் என்றே ஐயுறுகிறேன்.

இருந்தாலும் உங்களுக்குத் தாளிகை என்ற சொல் தெரியாததாலேயே அது மிகுதி என்று நீங்கள் சொல்லுவது தவறாகத் தெரியவில்லையா? எல்லாம் தெரியும் என்ற தன்வயப் பார்வையோடு இன்னொருவரை நக்கல் செய்வது நம்மை எதையும் கற்கவிடாது, நண்பரே! மஞ்சள் கண்ணாடி போட்டுப் பார்த்தால் உலகம் மஞ்சளாகத்தான் தெரியும்.

உங்களுக்கு பத்திரிகை என்ற சொல்லின் பிறப்புக் கூடத் தெரிந்திருக்குமா என்று அறியேன். தாளிகையும், பத்திரிகையும் எந்தவகையில் உறவுள்ளவை, நம்முடைய குமுக மரபுகள் எத்துணை ஆழமாக அந்தச் சொற்களுக்குள் பொருந்தியிருக்கின்றன, ஒன்றிற்கொன்று எப்படி வேறுபாடு காட்டுகின்றன என்று கூடத் தெரிந்திருக்காது என்றே எண்ணுகிறேன். அதையெல்லாம் இங்கு சொல்ல வேண்டும் என்று தோன்றுவதை வெகுவாக முயன்று நிறுத்திக் கொள்ளுகிறேன். தாகம் இருப்பவருக்கு அல்லவா தண்ணீர் கொடுக்கவேண்டும்?

உங்கள் வருகைக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

Kittu,
Accidentally I entered your 'valavu'site. The word 'valavu'arrested my attention and dragged me to your site.

Your write up has taught me so many new Tamil words. You are doing a great service to our adorable 'Mother Tamil'. It will strengthen our cherished Mother to serve the presentday needs of the present generation.

Your attachment to 'Pure Tamil Movement'and sufficient knowledge in science and technology have enabled you to act efficiently in
this field.

As I know you personally since your school days, it is not a surprise to me.

You are an able son of our noble Mother.

palakaruppiah@yahoo.co.in