Thursday, April 29, 2021

Oxygen

இதை அப்படியே ஆங்கிலம் தவிர்த்த இரோப்பிய மொழிகளில் யாரும் எழுதுவதில்லை. அந்தந்த மொழிகளின் சொற்களே (காட்டாக செருமானிய மொழியில் Sauerstoff என்றே அழைப்பர். ) இன்றும் கூட பல மொழிகளில் தனித்தனியாய் வெவ்வேறு சொற்களாய் ஆளப் படுகின்றன. அவற்றின் குறியீடு மட்டும் தான் உலகெங்கும் பொதுமையாய் O என்று புழங்கப்படும். தெரியாமல் தான் கேட்கிறேன். நாம் மட்டும் ஏன் oxygen என்ற ஆங்கிலச் சொல்லைக் கடன் வாங்கவேண்டும்? இப்படி எல்லாவற்றையும் அறிவியற் சொல்லென்று கடன் வாங்கிக் கொண்டிருந்தால் அறிவியற்றமிழ் என்பது நம்மூரில் கிட்டத் தட்ட மணிப்பவளத் தமிழ் என்பதாய் ஆகிவிடுமே?. முடிவில் சுற்றிச் சுற்றி நாம் தமிங்கிலத்திற்கே வந்து சேர்வோம். மணிப்பவளம் வேண்டாம் என்றுதானே 100 ஆண்டு காலம் நம் முந்தைத் தமிழறிஞர் போராடியுள்ளார்? நம் போன்ற நுட்பியலாளரும், அறிவியலாளரும் அதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?
தமிழில் 1930 களுக்கு முன் பிராணவாயு என்ற புழக்கம் இருந்து, பின் 1940 களில் உயிரகமென, உயிர்வளியென மாறியது. கூட்டுச்சொற்கள் உருவாக்குவதில் ”உயிரகம்” என்ற ஆளுகையால் சிக்கல் ஏற்பட்டதால், தீயகம் என்று 1960/70களில் சிலபேர் (குறிப்பாகக் கோவை நுட்பியல் கல்லூரி - Coimbatore Institute of Technology) மாற்றினோம். அதிலும் சில சிக்கல்கள் வருவதைப் பின்னால் உணர்ந்து அஃககம் என்றே இப்பொழுதெலாம் பயன் படுத்துகிறேன்.
oxygen (n.) gaseous chemical element, 1790, from French oxygène, coined in 1777 by French chemist Antoine-Laurent Lavoisier (1743-1794), from Greek oxys "sharp, acid" (from PIE root *ak- "be sharp, rise (out) to a point, pierce") + French -gène "something that produces" (from Greek -genes "formation, creation;" see -gen).
oxys "sharp, acid" (from PIE root *ak- "be sharp, rise (out) to a point, pierce") என்பதைத் தமிழில் அஃகு என்று சொல்வோம், (நம் அகரமுதலிகளில் தேடிப் பாருங்கள். கிடைக்கும். இது இராம.கி.யின் புனைவு அல்ல.) அகம் என்பது ”குறிப்பிட்ட பண்பு (குணம்) கொண்டிருக்கும் மாழையல்லாத எளிமத்திற்குப் (non-metallic element) பொதுவாய் இடும் பெயரீறு. மாழை எளிமங்களின் பெயரீறு இயம் எனப்படும்.
இந்த வகையில் Oxide = அஃகுதை. Oxygen = அஃககம். இது போன்ற புதுச் சொற்களின் பொருத்தத்தைப் புதிய பயன்பாட்டிற் பார்த்து சிக்கல்களைக் கண்டுணர்ந்தே சரிசெய்ய முடியும். சொல்லாக்கம் என்பது ஏதோ யுரேகா போல் சட்டென மூளையில் உதித்துக் கொட்டி விடுவதில்லை. அது மாகையும் (magic) அல்ல. அதற்கும் ”செய்து பார்த்துச் சரி செய்யும் காலம் (trial and error period)” தேவை. அதுவும் ஒரு செலுத்தம் (process) தான்.
தனிமங்கள் எல்லாவற்றிற்கும் 1969 இல் ஒரு பட்டியலைப் பரிந்துரைத்தேன். கோவை நுட்பியல் கள்லூரியின் முத்தமிழ் மன்றம் ஆண்டு தோறும் வெளியிட்ட ”தொழில்நுட்பம்” மலரில் 1969 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையாய் அது வெளிவந்தது. அதன் மூலம் அலங்கா வேதியலில் (inorganic chemistry) பெரும்பாலானவற்றை நல்ல தமிழில் பொருள்படச் சொல்லமுடியும். இறையருள் இருந்தால், அதை மீளவும் ஆய்ந்து மறுபதிப்புச் செய்ய எண்ணியுள்ளேன்.
அன்புடன்,
இராம.கி.
Like
Comment
Share