Friday, August 22, 2008

மெய் புதுவித்தல் (body refreshing)

அண்மையில் மெய்யைப் புதுவிக்கும் (body refreshing) துறையை ஒட்டிய massage, shower, spa என்ற சொற்களுக்கு இணையான பரிந்துரைகளை திரு. சத்திய நாராயணன் விக்சனரி மடற்குழுவில் கேட்டிருந்தார். அவற்றைத் தருவதற்கு முன்னால், ஒரு கவன ஈர்ப்பு.

பொதுவாக, மொழியாக்கத்தில் இணையான தமிழ்ச்சொல்லைத் தேடும் போது குறிப்பிட்ட கருத்தின் உள்ளே துலங்கும் வினைச்சொல்லை அடையாளங் கண்டு, அதன்பின் பெயர்ச் சொல்லிற்கு வடிவங் காணுவது ஓர் ஒழுங்கான முறையாகும். தமிழில் வேர்> வினை> பெயர்> மீண்டும் வினை> மீண்டும் பெயர்> இப்படியாகச் சிந்தனை விரிந்து கொண்டே போய் எழுகைச் சுற்றாய்ச் சொற்கள் (helical circuit) பிறக்கும். அதே பொழுது, இந்தச் சுற்றுக்கள் எல்லையற்றுப் போகாது; பெரும்பாலும், இரண்டு மூன்று சுற்றுக்களுக்கு அப்பால் உண்டாகும் சொல்லின் அசைநீளம் கூடிவிடுவதால் அவ்வப்பொழுது அசைகளின் எழுத்துத் திரிவும், எழுத்துக் குறைப்பும் நடக்கும். மறந்து விடாதீர்கள். தமிழ்ச் சொற்களின் மீநீளம் மூன்றசையே; மிகமிக அரிதாக நாலசை ஏற்படும். நிரவலான சொல்லின் நீளம் இரண்டிலிருந்து மூன்றசை தான்.

இனிக் கேட்டிருக்கும் சொற்களுக்கு வருவோம்.

massaging என்பது, சித்த மருத்துவம் (அதன் வழிப்பட்ட ஆயுர் வேதம்), வருமக் கலை, களரிப் பயிற்சி போன்றவற்றைக் கற்கும் போது சொல்லித் தரப்படும் ஒரு கலையாகும். இந்த அறிவு இன்றைக்கும் நம்மூரில் குமரி மாவட்டம், தென் திருவிதாங்கூர் போன்ற மண்டலங்களில் மீந்து இருக்கிறது. இதை மல்லுப் பிடித்து விடுதல் என்று பேச்சுவழக்கில் சொல்லுவார்கள். மற்ற மாவட்டங்களில் தசையைப் பிடித்துவிடுதல் என்றே சொல்லுகிறார்கள். தசை என்பது பொக்குள்>தொப்புள்>தொப்புழ் என்பதைப் போல சதையின் metathesis ஆகும்.

முல் எனும் பொருந்தற் கருத்து அடிவேரில் இருந்து, மல் என்னும் கிளைவேர் பிறக்கும். மல்தல் = பெருகுதல், திரள்தல், பொதுவாகத் திரண்ட சதையை மல் என்று குறித்தார்கள். இன்னும் விதப்பாக குறிப்பிட்டுச் சொல்லும் படி, பருத்துத் திரண்ட மார்புச் சதை, மல் என்று அழைக்கப் பட்டது. திரண்ட சதை கொண்டவன் மல்லன் என்று அறியப் பட்டான். மல்லன்>மள்ளன் என்றும் திரியும்.. மல்லம் = மற்போர், வலிமை., வளம். மல்லகச் சாலை = மல்வித்தைச் சாலை. மல்லரங்கம் = மற்போர்ச் சாலை. மல்லாத்தல் = முதுகு கீழாக, மார்பு மேலாக, ஆக்கிப் போடுதல். அதாவது மல்லை உயர்த்தி வைத்தல், மல்லுக் கட்டுதல். = மற்போர். மல்லுப் பிடித்தல் என்பது மல்லுக் கட்டுதலையும் குறிக்கும்.

மல்லில் இருந்தே மலிதல், மாழை (metal), மந்தை, மருவுதல், மருகன், மருவுகை (marriage), மருந்து, மார்பு, மரபு போன்ற பல்வேறு சொற்களும் எழுந்தன. [பாவாணரின் வேர்ச்சொற் கட்டுரைகளில் முல் என்னும் பொருந்தற் கருத்து வேரைப் படித்தால், கணக்கற்ற சொற்களின் தோற்றம் விளங்கும். இந்தக் கட்டுரைக்கு அடிப்படை பாவாணரே.)

முல்+து = முத்து. சிப்பியில் திரண்ட சுண்ணப் பொருள், முத்தம் = வாயிதழ், வாயிதழோடோ, கன்னத்தோடோ குவிந்த, திரண்டு, பொருந்தும் செயல்; முத்தித்தல், முத்துதல் என்பது முத்தச் செயலைக் குறிக்கும் வினைச்சொல்லாகும். முத்தை என்னும் இன்னொரு முடிப்பும் திரட்சியையே குறிக்கும். குறுமுத்தம் பழம் என்பது தென்பாண்டியில் உள்ள ஒரு பழம்; மற்ற மாவட்டத்தினர் இதை மிதுக்கம் பழம் என்பார்கள்.

மொலு>மொது; மொதுமொதுவெனல் என்பதும் திரட்சியைக் குறிக்கும். மொதுமொதுவென்று மக்கள் குவிந்தார்கள். மொத்துதல் = உரக்க அல்லது வலுக்க அடித்தல்.

மொத்தம் = பொருட்கள், எண்கள், கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுதி. மொத்தன் = தடித்தவன்.

மொத்திகை>மத்திகை = குதிரையை அடிக்கும் சாட்டை. ஒகரச்சொல் அகரச்சொல்லாய் மாறுவது தமிழில் உள்ள பழக்கம் தான். கொம்பு>கம்பு, ஒட்டு>அட்டு, தொண்டையார் பேட்டை>தண்டையார் பேட்டை போன்றவற்றைக் கூர்ந்து பாருங்கள்.

மொத்தளம்>மத்தளம் =இருபக்கமும் அடிக்கும் பெரிய மதங்கம் (= ம்ருதங்கம்) மத்தளம், மதங்கம் இரண்டும் தமிழே.

மொத்தையான பயிறு மொச்சைப் பயிறு (மொத்தை>மொச்சை),
மொத்தை>மோத்தை = செம்மறியாட்டுக் கடா,
மொத்து>மொந்து>மொந்தன் = பெரு வாழை.
மொந்தை = பருத்தது, சோற்றுருண்டை.

மொத்து>மத்து. கீழே குண்டும், மேலே தடியுமாய், தயிர் கடையப் பயன்படும் ஒரு கருவி. பருப்புக் கீரையைக் கடையவும் இது பயன்படும். இந்தக் கருவியின் அடி மொத்தையாய் இருப்பதால் இது மத்து என அழைக்கப் பட்டது.

இந்தப் பெயர்ச்சொல்லில் இருந்து மத்தித்தல் என்ற இன்னொரு வினை பிறக்கும். மத்தித்தல் = மத்தை வைத்துக் கடைதல். பொதுவாகக் கடைதல் என்பது ஒருமுறை கடிகைச் சுற்றில் (clockwise direction) திருகி, பின் நிறுத்தி, எதிர்க் கடிகைச்சுற்றில் திருகி, இப்படியாக மாறி மாறிச் சுற்றுதலாகும். இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவில் மத்தின் தண்டை வைத்து திருக்கை முறையில் (application of torque) தான் நாம் தயிர் கடைகிறோம். கூர்ம அவதாரத்தில் மந்தர மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைந்ததாக ஒரு தொன்மம் உண்டல்லவா? அதையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

மத்தித்தல் என்ற பிறவினைச்சொல் மத்தித்தல்>மதித்தல் என்ற படி, அதே கடைதல் பொருளை உணர்த்திச் சுருங்கும். இப்படி மத்திக்கப் பட்ட பொருள் குழையும் அல்லவா? எனவே பொருள் நீட்சி பெற்று மதிதல் என்ற தன்வினை உருவாகிக் குழைதல் என்னும் பொருளைச் சுட்டும். மதிதல்>மதியல் என்பதன் திரிவாய் மதியல்>மசியல் என்று ஆகிக் குழைந்த வியஞ்சனத்தைக் (= வேகவைத்த காய்கறியைக்) குறிக்கும். மசி, மசகு போன்ற சொற்கள் இதிலிருந்து இன்னும் விரியும்.

இனி massage என்பதற்கு வருவோம். தொடையின் சதையை, மத்துக் கடைவது போல, ஒருமுறை கடிகைச் சுற்றில் திருகி, இன்னொரு முறை எதிர்க்கடிகைச் சுற்றில் திருகுவதும், ஆகிச் சதையை நெகிழ்த்துவதே massage ஆகும். எனவே ஒப்புமை கருதி மத்தித்தல்>மத்திகை என்னும் சொல் massage என்பதற்கு இணையாகும். தமிழ் அகரமுதலிகளில், மத்தித்தல் என்ற வினைக்குக் கடைதல், அடித்தல், தேய்த்தல், மருந்து கலத்தல் என்ற பொருட்பாடுகளைக் காட்டுவார்கள். இந்தச் செயல்கள் அனைத்தும் massage - -இல் நடைபெறுகின்றன அல்லவா? மத்தாக ஆக்கிக் கடைந்தாற்போல், மாறுபட்ட திசைகளில் சதைத் திரளைப் பிடித்துத் திருகி நெகிழவைத்து, தேவைப்பட்டால் சதைத் திரட்சியைத் தேய்த்தும், அடித்தும், மேலும் மருத்துக்கலவை கொண்ட எண்ணெய்ப் பிழியைச் சூடுபறக்கத் தேய்த்து விட்டும் செய்வது தானே massaging?.

மத்தித்தல் = to massage
மத்திகை = massage (noun)
மத்திகையாளர் = person who carries out the massage

இனி shower என்ற சொல்லிற்கு வருவோம். தூறுதல் என்பது துளித் துளியாய் நீர் வீழும் நிலை. (துள்>தூறு; தெறித்தல், சிதறுதல், தூவுதல் போன்ற சொற்கள் எல்லாம் இதே பொருள் கொண்ட வினைச் சொற்கள் தாம்.) துளிகள் இணைந்து சாரி சாரியாய் (வரிசையாய்) அமைவது சாரல். சால் என்பதும் வரிசையே. சார்தல் = சேர்தல், திரளுதல், சாரிகள் இணைந்து ஒரு தொடர்க் கம்பியாய் வெள்ளப் பெருக்கு (volumetric flow) கூடி அமைவது பெய்தல்/பொழிதல் வினை. காற்றோடு சேர்ந்து மழை பெய்தல் என்பது அடித்து ஊற்றுதல் என்று சொல்லப் படும். மழை கொட்டுகிறது என்பதும் இதே பொருள் தான். வெள்ளமாய்க் கொட்டுகிறது என்று சொல்கிறோம் இல்லையா?

இத்தனை சொற்களில், நடுத்தரமாய்ச் சொல்லக் கூடிய வினைச்சொல் சாரல் என்பதே. ”குற்றாலத்தில் சாரல் தொடங்கிவிட்டது”; ”சாரல் அடிக்கிறது, சாளரத்தை மூடு” என்ற உரையாட்டுக்கள் எல்லாம், தூறலும் இல்லாமல், பெய்தலும் இல்லாமல, நடுநிலையான பெருக்கையே குறிக்கின்றன. என்னைக் கேட்டால், shower என்பதற்குச் சாரல் என்பதையே பரிந்துரைப்பேன்.

shower = சாரல் (அவன் நீர்ச் சாரலில் குளித்தான். அது மழைச் சாரலாய் இருந்தால் என்ன, வீட்டுக் குளியலறையில் உள்ள தூம்பு வழிச் சாரலாய் இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.

showerhead = சாரல் கொண்டை.

அடுத்தது spa. இது சுனைநீர் நிறைந்த குளம். உள்ளிருந்து சுனைநீர் ஊற்றெடுத்துப் பெருகும் இடம். இந்த நீர் வெதுவெதுப்பாகவும், மருந்து/மூலிகை கல்ந்ததாகவோ, மண்ணூறல் (mineral) கலந்ததாகவோ இருக்கலாம். இது போன்ற குளத்தை இலஞ்சி என்று பழந்தமிழில் கூறுவார்கள். அதையே பொருத்தமாய் இங்கு கூறலாம்.

spa = இலஞ்சி

அன்புடன்,
இராம.கி.