Thursday, November 01, 2012

சொவ்வறை - 2

வறை பற்றி ஓரளவு அறிந்த நாம், இனி soft-ற்கு இணையான, (ஒலிக்குறிப்பில் எழுந்த) சொவ்வறையின் முதலசை பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்னால், நெடுங்காலமாய் நான் சொல்லிவரும் அடிப்படைப் புரிதலை இங்கு நினைவு கொள்வோம்.
------------------------------------------

"சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு " என்ற நூலில் திரு T.பக்கிரிசாமி (செல்விப் பதிப்பகம், காரைக்குடி) ஓர் ஆழ்கருத்தைச் சொல்லியிருந்தார்.
"ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவாலுணரும் சொற்கள், கலைச் சொற்கள், பண்புச் சொற்கள் ஆதியிலில்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) இல்லை." என்பார். இத்தகைய இயல்பான பருப்பொருள், இடப்பொருட் சொற்களை அவர் ஐம்புலன் சொற்கள் என்பார். அதாவது நல்லது, உயர்ந்தது, ஞானம் போன்ற கருத்துமுதற் சொற்களை மனிதன் ஆதிகாலத்தில் உருவாக்கி இருக்க முடியாது, பின்னால் தான் அவை உருவாகின என்பார். இன்றைக்கு வழங்கும் கருத்தியற் சொற்களின் (idealogical words) மூலம் ஐம்புலன் சொற்களாகவே இருந்திருக்க வேண்டுமென்பார்.

இதற்கு அவர் தரும் எடுத்துக்காட்டு: 'மதம்' என்ற சொல்லாகும். இச்சொல்லுக்கு religion என்றே இப்போது பொருள் கொள்கிறோம். ஆதியில் 'மதி -சந்திரன்' எனும் பருப்பொருளிலிருந்து இச்சொல் வந்திருக்க வேண்டும் என்ற சொல்வரலாறு காட்டிப் புலப்படுத்துவார். இதே போல், பருப்பொருளறிவுக் கருத்திலிருந்து மெய்ப்பொருளறிவு சுட்டும் ஞானம் என்ற சொல்லெழுந்தது. அவர் ஆய்வுமுறை சொற்பிறப்பியலிற் கைக்கொள்ள வேண்டிய ஒன்று. இது பாவாணர் சொல்லாத, அதேபொழுத் பாவாணரிடம் இருந்து வேறுபடும் முறை. 

(நல்லென்ற கருத்துமுதற் சொல்லும் நெல்லெனும் பருப்பொருளிற் தோன்றியதே. தமிழகத்திற் பல்லவர் (பின்னாற் பேரரசுச் சோழ,பாண்டியர்) பார்ப்பனர்க்குக் கொடுத்த ஊர்கள் சதுர்வேத மங்கலங்களென்றும், பார்ப்பனர் அல்லாதார்க்குக் கொடுத்தவை நெல்லூர்>நல்லூர் என்றும் ஆயின. சென்னையை அடுத்த சோழங்க நெல்லூர் இப்படித் தான் சோழிங்க நல்லூர் என்றாயிற்று.)

ஐம்புலன் சொற்களிலிருந்து கருத்துமுதற் சொற்கள் எழுந்த வளர்ச்சியோடு, இன்னொரு கருத்தையும் இங்கே சொல்லவேண்டும். எந்த மொழியிலும் கருத்து வளர்ச்சி என்பது, பொதுமை (generic)-யிற் தொடங்கி விதுமைக்கு (specific) வராது. விதுமையிலிருந்தே பொதுமைக்கு வரும். ஓர் இயல்மொழியில் அப்படித் தான் சொற்சிந்தனை வளரும். மார்க்சிய முரணியக்கச் சிந்தனையும் (Marxian Dialectical thinking) இதையே சொல்கிறது. இதுபற்றி முன்னரே என்னுடைய பல கட்டுரைகளிற் சொல்லி வந்திருக்கிறேன்.

எ.கா: தமிழர் நாகரிகத்தில் நெய்ப் பொருளை முதற் கண்டது பால், கொழுப்பு ஆகியவற்றில் இருந்தே. பின் அறிவு கூடி, நுட்பம் துலங்கி, எள்வித்தில் நெய் எடுத்தவன், எள்நெய் (=எண்ணெய்) என்றே அதையும் சொன்னான். பின் நாளில் கடலை, தேங்காய், ஏன் மண்ணிலிருந்தும் கிட்டியவைகளையும் எண்ணெய்ப் பொதுமை கொண்டு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண் எண்ணெய் எனும் விதுமைச் சொற்களால் அழைக்கத் தொடங்கினான்.

ஒரு மொழியிற் கருத்து/சொல் வளர்ச்சி, இப்படி நீள்சுருளாய் (helical spring), மறுகி மறுகித் தோன்றி, விதுமையும் பொதுமையுமாய் எவ்வளித்துப் பல சொற்களை உருவாக்கும். (எழுவுதல் எவ்வுதலாய்த் தொகுந்தது. இதுவே எகிறுதல் என்றும் பொருள் கொள்ளும், evolve = எவ்வி அளிப்பது. எல்லாவற்றையும் பொதுப் படையாய் ’வளர்ச்சியாக்கி’ எவ்வுதலை மறக்கவேண்டாம்.) 'நெய்'யெனுஞ் சொல் ஆவின் நெய்யாய் விதுமையிற் தோன்றியிருக்க வேண்டும். (’நெய்’ வரலாற்றை நான் இன்னும் அறிந்தேனில்லை.) பின் 'நெய்', பொதுமைக் குறியீடாகி, 'எள்நெய்' எனும் விதுமைக் குறியீடாகி, முடிவில் 'எண்ணெய்' எனும் பொதுமைக் குறியீடாக மீண்டும் வளர்ந்திருக்கிறது.
------------------------------------------

மேலே கொடுத்த புரிதலோடு சொவ்வறையின் முதலசைக்கு வருவோம். ”ஐயையோ, இராம.கி சொல்லி விட்டான்” என்று கைகொட்டிச் சிரித்துச் சொவ்வெனும் ஒலிக்குறிப்பைக் கேலி செய்வது எளிது. அதன் அடிப்படை புரிந்து கொள்வது கடினம். 

இது சுவையோடு ஒட்டியது. இப்பொதுமைக் கருத்துமுதலுக்கு அடிப்படை, முன்சொன்னது போல் ஐம்புலன் சொல்லே. இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு விதப்புக்களை நாவால் உணர்வதாலேயே ”சுவை” எனும் சொல் எழுந்திருக்கும். வாசம், மணம் என்பது முகரும் வழி. (மெய்ப்பாட்டுச் சுவைகளான நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை போன்ற கருத்துமுதற் சொற்கள் நாகரிகம் வளர்ந்த நிலையில் ஏற்பட்டிருக்கலாம்.)

சுவையின் மாற்று வடிவமாய்ச் ”சுவடு” என்ற சொல் தமிழிலுண்டு. [“அடிமையிற் சுவடறிந்த” (ஈடு.2.6:5). சுவடன் (=சுவைஞன்) என்ற வளர்ச்சியும் அதே ஈட்டில் காட்டப் பெறும். (”சுவடர் பூச்சூடும் போது புழுகிலே தோய்த்துச் சூடுமாப் போலே” (திவ்.திருப்ப. 9 வியா.) ”சுவண்டை” இன்சுவையைக் குறிக்கும். 

இத்தனை சொற்களுக்கும், சுவைத்தலுக்கும் முதலாய் வேறு வினைச்சொல் அகரமுதலியிற் காட்டப்படவில்லை. இவை அப்பூதியாகவே (abstract) காட்சி அளிக்கின்றன. இவை கடன் சொற்களா எனில் இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது. சுவைத்தல் என்பது தமிழில் மட்டுமல்ல. மற்ற தமிழிய மொழிகளிலும் புழங்குகிறது சவை> சுவை>சுவைத்தல்; [த. சுவைத்தல், ம. சுவய்க்குக, க. சவி, தெ: சவிகொனு, து.சம்பி, சவி, கோத.சய்வ், நா.சவத், கொலா.சவ்வி (இனிப்பு). 

ஐகாரமும், டு - வும் சொல்லாக்க ஈறுகள். ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால், "சொவச்சொவ / சவச்சவ" என்ற ஒலிக்குறிப்பே இவற்றிற்கு வேராய்த் தோன்றுகிறது.

taste-ற்கு வேர்தெரியாதென்று பல ஆங்கில அகராதிகள் பதிந்தாலும், நாக்கால் தடவல், மெல்லல், உணரல் போன்றவற்றையே முன்வினை என்பார். to become soft என்பதை ஆழ்ந்து ஓர்ந்தால், அது ஒரு தனிவினையல்ல, கூட்டுவினை என்பது புரியும். சில பொருட்கள் soft ஆனவை. சில hard ஆனவை. hard-ற்கு இணையாய் கடினம் என்கிறோம். (கடித்தல் வினையை எண்ணுங்கள்.) ஆனால் soft-ற்கு மெல் என்ற சொல் பகரியாகவே இருக்கிறது. அது ஒரு near description; not the real thing. அதனால் தான் விதப்பான வேறு சொல் இருந்திருக்க வேண்டும் என்கிறோம்.

கடிபட்டு மெல்லாகிச் சில்லாகி, அழுத்தம் நிலவும் வரை கூனிக் குறுகி, மெலிந்து, வளைந்து, நெளிந்து, குழைந்து நொய்யாகிப் போனதை, பரப்பு வழவழ என்று ஆனதை, இத்தனையும் சேர்ந்தாற்போற் அடிப்படையிற் புதிய பண்பைக் குறிக்கும் வகையில் சவ்வுதல் > சவைத்தல் > சுவைத்தல் என்ற வினைச்சொல்லும் சுவை என்ற பெயர்ச்சொல்லும் கிளைத்தன போலும். வாயில் மெல்லும் போது (சவைக்கும் போது) நாவின் வினையால் ஏற்படும் ஒலிக் குறிப்பே இவ்வினைச்சொல்லை உருவாக்குகிறது.

soft என்பது வாயிற் போட்டு மெல்லும் போது கடினத் திண்மம் (solid) சவைத்துப் போவதைக் குறிக்கும். ”என்ன இது சவச்சவ என்றுள்ளது?” என்று சொல்கிறோம் அல்லவா? சிலர் வழக்கில் இது சுவையிலா நிலையைக் குறிக்கும். (மொள்ளல் வினையின் வழி மொழியும் எழுந்து, ஒலியிலா மோனமும் எழுந்தது போல இதைக் கொள்ளுங்கள். மோனம், முனங்குதல் என்ற இன்னொரு வினைச்சொல்லையும் இது எழுப்பும்.) 

மெல்லுதல் வினையாற் சவைத்த நிலை (softy state) ஏற்படுகிறது. மெல்லுதல் என்பது சிறிய grinding - process - செயல்முறை; சவை என்பது தட நிலை - state. I prefer to use a state than a process here. மெல் என்பது சில இடங்களிற் சவைக்குப் பகரியாய் நிற்கலாமே ஒழிய முற்றிலும் அல்ல. (my question is simple. What is the etymology of suvai?) சொவ்விய / சவ்விய நிலை என்பது இயற்கையிலோ, மாந்தர் செய்கையாலோ ஏற்படலாம். மெல்லுதல், மாந்தர் செய்கை மட்டுமே. இந்த நுணுக்கத்தைச் சொல்ல ஒலிக்குறிப்பைத் துணைக்கொண்டால் குடிமுழுகியா போகும்? :-)

சவ்விய நிலையின் தொழிற்பெயராய், மெல் பொருளில், மெல்லிய மூடு தோலைக் குறிக்கும் வகையில் சவ்வு (membrane) எழும். sago வின் சோற்றை, நொய்யான மாவுப் பொருளை, காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் சவ்வரிசி எனப்படும். சவ்வாயிருப்பது பிசின் (to be viscid) போலாவதைக் குறிக்கும். சவுக்குச் சவுக்கெனல் எனும் அடுக்குத் தொடர் வளைந்து கொடுக்கும் குறிப்பைக் காட்டும். சவ்வை ஒட்டிய இத்தனை சொற்களும் கடன் சொற்களா? வியப்பாக இல்லையா? இவற்றின் வேர்கள் தாம் என்ன?

சவத்தலுக்குத் தொடர்பான சப்புதலும் சப் எனும் ஒலிக்குறிப்பில் எழுந்தது தான். இதுவும் தமிழிய மொழிகளில் பல்வேறு விதமாய்ப் புழங்குகிறது (ம.சப்புக; க.சப்பரிக, சப்படிக, சப்பளிக, தப்படிக; தெ.சப்பரிஞ்சு, சப்பு; து. சப்பரிபுனி; கோத.சப்; துட.செப்; குட.சப்பெ, சபெ; நா.சவ்ல்; பர்.சவ்ல்,சல்; மா.சொப்பு; பட.சப்பு; சப்புதல் = அதுங்குதல் to be bent, pressed in, to become flat. சுவையில்லாது உள்ளதையும் சப்பெனக் குறிப்பதுண்டு.

இன்னொரு வளர்ச்சியாய், ”வாயிற் போட்டு மெல்லுதல்” வழி சவள்தல், சவட்டுதல் என்று சொற்கள் ஏற்பட்டு மெல்லுதல், மிதித்தல் போன்றவற்றைக் குறிக்கும். மிதிவண்டியைத் தென்பாண்டியிற் சவட்டு வண்டி எனச் சொல்லி வந்தார். உறுதியில்லாது வளைந்து கொடுப்பானைச் சவடன் என்பார். (”அஞ்சுபூத மடைசிய சவடனை” என்பது திருப்புகழ் 5.57) வீண்பகட்டுக் காட்டுவதைச் சவடால் என்பார்கள். (சவடால் வேற்றுமொழிச் சொல் என்பாரும் உண்டு.) நீரைச் சவட்டும் படகுத் துடுப்பு சவள் எனப்படும். சவளுதல் என்பது வளைதல் என்றும் பொருள் கொள்ளும். சவள் தடி = துவளும் தடி, குந்தம்; இது சவளமென்றுஞ் சொல்லப் பெறும். சவளக்காரர் ஈட்டிபிடிக்கும் போர்வீரர். ஆங்கிலச் சொல்லான javelin என்பதை அடுத்தெழுதி விட்டால் சட்டாம் பிள்ளைகள் ”ஆங்கில ஒலிப்புக் காட்டுகிறான்” என்று சாடிவிடுவர். வங்காள விரிகுடாவில் இவற்றைக் கொட்டுவதுதான் சரியான முடிவு போலும்.

வளைந்து நெளியும் புளியம்பழம் ”சவளம்” எனப்பெறும். வளைந்த காலுள்ளவன் ”சவளன்” எனப் படுவான். வளைந்து நெளியும் துணிச்சரக்கு ”சவளி” எனப்படும். ஊரெல்லாம் சவளிக்கடைகள் இழைகின்றனவே? சவண்டிய காரணத்தால் அது சவளி. 

சில தமிழர் வடமொழிப் பலுக்கைக் கொணர்ந்து ஜவளி என்றாக்கி உள்ளதையும் தொலைப்பார். வடமொழியில் இச்சொல் இல்லை. ”சவளைக்காரர்” என்பது நெல்லை மாவட்டத்தில் நெசவுத்தொழிலரைக் குறிக்கும். மெலிதற் பொருளில் சவு-த்தல் என்ற சொல் யாழ்ப்பாணம் அகராதியிற் குறிக்கப் பெற்றுள்ளது. சவட்டி (அடிக்கப்) பயன்படும் வளைகருவி சவுக்காகும்.

நெளிவுற்ற இலை சவண்டிலை எனப்படும். சவள்> சவண்> சவணம் என்பது மாழைக் கம்பி இழுக்கும் கம்மியக்கருவியைக் குறிக்கும். ஆண்டு வளர்ச்சி பெற்றும் உடலுறுதி பெறாது, துவளும் பிள்ளையைச் சவலைப் பிள்ளை என்பர். 

சவலைக்குள் soft என்ற பொருள் இருப்பதை இப்போது எளிதாய் உணரலாம். சவலை என்ற சொல் திருவாசகத்திலும் பயில்கிறது. tender என்ற பொருளும் அதற்குண்டு. தவசமணி இல்லாக் கதிர், உள்ளீடில்லாக் கதிர் சவலைக்கதிர் எனப்பெறும். தனிச்சொல்லின்றி இரு குறள்வெண்பாக்களை இணைத்துச் சொல்வது சவலை வெண்பா எனப்படும். தனிச்சொல் தான் நேரிசை வெண்பாவிற்கு உறுதி தந்து கட்டுகிறது. இல்லையெனில் அது சவலை தான்.

soft-இன் வரையறை புரியத் திண்ம மாகனவியலுக்குப் (solid mechanics) போக வேண்டும். பொதிகளைத் திண்மம், நீர்மம், வளிமம் என 3 வாகைகளாய்ப் (phases) பிரிப்பர். திண்மத்திற்கு வடிவுண்டு. நீர்மம், வளிமங்களுக்கு வடிவு இல்லை; அவை கொள்கல வடிவையே கொள்ளும். ஒரு கொள்கலத்தில் நீர்மம் பகுதியாய் நிறைந்தால், வெளிப்பரப்பு (external surface) காட்டும். வளிமமோ கொள்கலம் முழுதும் நிறைக்கும். நீர்ம, வளிமங்களைச் சேர்ந்தாற்போல் தொகுத்துப் பூதியலில் (physics) விளவம் (fluid) என்பார் (1960களிற் பாய்மம் என்று குறித்தோம். இப்போது சிக்கல் காணுவதால் விளவம் என்கிறோம். வேறொரு கட்டுரையில் இதை விளக்குவேன்.)

பொதுவாகப் பொதிகளின் (bodies) நகர்ச்சியும் (motion), வளைப்புகளும் (deflections), மொத்தை விசைகளாலும் (bulk forces - காட்டு: புவியீர்ப்பு விசை, அழுத்தம்), பரப்பு விசைகளாலும் (surface forces - காட்டு: கத்திரி விசை - shear force) ஏற்படுகின்றன. விளவங்கள் தொடர் விளவுகளையும் (continous flows), திண்மங்கள் வளைப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. பொதுவாக விசைகளையோ (forces), அவற்றால் ஏற்படும் துறுத்தங்களையோ (stresses), நிறுத்தினால் தொடர் விளவுகள் நின்றுபோகும். மாறாய்த் திண்மங்களை விசைகளுக்கு உட்படுத்தினால் தெறித்து உடையும் வரை வெறும் வளைப்புகளே ஏற்படுகின்றன; விசைகள் நின்றவுடன் வளைப்புகளும் கலைகின்றன.

அழுத்துதல் என்பது to press என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. அதைப் பொதுமைப்படுத்தி, 'துகள்களை நெருங்கவைத்தல்' என்னும் ஆழ் பொருளிற் துறுத்தலெனும் வினை பொறியியலில் ஆளப்படும். இது ஆங்கிலத்தில் to stress என்ற வினைக்கு ஈடானது. துறுத்தலுக்கு மாறாய் தகைத்தல் என்றும் சிலர் ஆளுவர். [தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலச் சொல் அகரமுதலியிலும் 'தகைத்தல்' இருக்கிறது. இருந்தாலும், to tighten என்பதற்கே தகைத்தல் சரியாகும் என்பதாலும், ஐகாரம் பயிலும் தகைப்பைக் காட்டிலும், உகரம் பயிலும் துறுத்து என்ற சொல் பலுக்க எளிது என்பதாலும் நான் துறுத்தலைப் பரிந்துரைக்கிறேன். துறுத்திற்கு மாறாய் தகைப்பு என்பது நிலைத்தாலும், எனக்கு உகப்பே.]

ஒவ்வொருவகை விசை/துறுத்திற்கும் ஒவ்வொரு வகை வளைப்பு ஏற்படும். அவற்றைத் துறுங்குகள் (strains) என்பார்கள். அழுத்தப்பட்ட பொதி அழுங்குவதைப் போலத் துறுத்தப்பட்டது துறுங்கும் (to get strained). 3 விதத் துறுத்தங்களை, மாகனவியல்-mechanics குறிக்கும். அவை திணிசுத் துறுத்தம் - tensile stress, அமுக்கத் துறுத்தம் - compressive stress, கத்திரித் துறுத்தம் = shear stress என்றாகும். அதே போல, நீளவாட்டுத் துறுங்கு (longitudinal strain), குறுக்குச் செகுத்தத் துறுங்கு (cross sectional strain), பருமத் துறுங்கு (bulk strain), கத்திரித் துறுங்கு (shear strain) என்று வெவ்வேறு துறுங்குகளுண்டு.

to stretch என்பதைக் குறிக்கத் துயர்தல்/துயக்குதல் என்ற சொல் பயின்று, நீளுதல்/நீட்டுதல் பொருளைக் கொடுக்கும். (ஏதோவொன்று stretch ஆகி நீண்டு போவதைத் ”துயர்ந்து கொண்டே வருகிறது” என்று சிவகங்கைப் பக்கம் சொல்லுவார்கள். தொடர்ந்து வரும் துன்பம் துயரம் என்றே சொல்லப் பெறும்.) ஒரு நீளத்தின் துயக்கத் திரிவை (change in the stetch) பொதியின் நீளத்தால் வகுத்துக் கிடைக்கும் எண், நீளவாட்டுத் துறுங்கு எனப் படும். இது போல் பருமத் துறுங்கு = பருமத் திரிவு / பொதியின் பருமன் என்றாகும். கத்தரித் துறுங்கு = குறுக்குச் செகுத்தத் திரிவு (change in cross section) / பொதியின் குறுக்குச் செகுத்தம் என்று வரையறை கொள்ளும்.

ஒரு திண்மத்தின் பருமத் துறுங்கு, பொதுவாக அழுத்த வேறுபாட்டால் எழுவது. காட்டாக, ஓர் இலவம்பஞ்சுத் தலையணையின் தடிமன் (thickness) 5 அணுங்குழை (inches) என்று வையுங்கள். மேற்பரப்பு 10X10 சதுர அணுங்குழை என்றும் கொள்ளுங்கள். தலையணைப் பருமன் 500 கன அணுங்குழையாகும். அதன்மேல் இன்னொரு பொதியை எடையாக வைக்கிறோம். எடைக்குத் தகுந்தாற் போல் இலவம்பஞ்சின் தடிமன் குறுங்கி, தலையணையின் பருமன் குறைகிறது. [எடைக்குப் பகரியாய் நேரடியழுத்தம் கொடுத்தாலும் பருமக்குறைவை ஏற்படுத்தலாம்.]

பொதுவாக, எந்தத் திண்மப் பொதியும் அழுத்தமிருக்கும் வரை பருமன் குறையும்; அழுத்தம் நிறுத்திவிட்டாற் பழைய பருமனுக்கு வந்துவிடும். [காட்டாக, A பொதி B - யை அழுத்துகிறது; இதை B-யின் நோக்கில், தன்வினையாய், எப்படிச் சொல்லலாம்? A - ஆல் B அழுங்குகிறது. அழுங்குதல் தன் வினை; அழுத்துதல் பிறவினை. ஒரு பொதி அழுங்க, அதன்மேல் அழுத்தம் கூடிக் கொண்டேயிருக்கிறது. அழுங்குவதால் அது அழுக்கு; அழுத்துவதால் அழுத்து. (மாசைக் குறிக்கும் அழுக்குச் சொல் வேறுவகையிற் பிறந்தது.) அழுக்கின் நீட்சியாய் அழுக்கு ஆறுதல் என்ற சொல் to get strained என்ற பொருளிற் பிறக்கும்.. அழுக்காறு என்று திருக்குறளில் வருகிறதே, நினைவிற்கு வருகிறதா? அது strained state - யைத்தான் குறிக்கிறது. தொடர்ச்சியாய் அழுங்கிக் கிடக்கும் நிலை. அழுங்குதல் வினை தற்பொழுது அரிதாகவே பயன்படுகிறது. அதற்குப் பகரியாய் அமுங்குதல் என்று பயன்படுத்துகிறோம். மாசு என்ற பொருட்குழப்பமும் இல்லாது போகிறது.]

”அழுத்தத்திற்குத் தக்க, ஒரு திண்மம் எவ்வளவு அமுங்கும்/அழுங்கும்?” என்ற வினவிற்கு விடையாய் soft எனும் குறிப்பிருக்கிறது. காட்டாக, 500 கன அணுங்குழைப் பருமன் கொண்ட இருவேறு திண்மங்களில், முதற்பொதி 200 கன அணுங்குழையும், இரண்டாம் பொதி 400 கன அணுங்குழையும் குறைவதாய்க் கொள்ளுங்கள். மாகனவியற் புரிதலின்படி, முதற் பொதி இரண்டாம் பொதியைக் காட்டிலும் soft ஆனது என்பார்கள். (இலவம் பஞ்சுத் தலையணை, யூரிதேன் நுரைத் - urethane foam - தலையணையைக் காட்டிலும் soft ஆனது. இரும்பைக் காட்டிலும் ஈயம் soft ஆனது. வயிரத்தைக் காட்டிலும் இரும்பு soft ஆனது. பொத்திகை - plastic - யைக் காட்டிலும், நெகிழி - elastic, soft ஆனது.) softness என்ற சொல் திண்மங்களுக்கே பொருந்தும். யாரும் soft gas, soft liquid என்று சொல்வதில்லை. soft solid என்றால் பொருளுண்டு. [soft water, hard water என்பவை நீரிற் கரைந்திருக்கும் உப்புக்களைப் பொறுத்துச் சொல்லப் படுகின்றன. அவை விதப்பான பயன்பாடுகளாகும்].

மாகனவியலின் படி, soft என்பது பருமன் குறுங்கலைக் குறிக்கிறது என்று பார்த்தோம். குறுங்கல்/குறைதற் பொருளில் அவ்வுதல்> அவ்வியம் என்ற சொல்லைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார், 'திருக்குறள் மெய்ப்பொருளுரையிற்' சொல்லுவார். சங்க இலக்கியத்தில் ஆவணப் படாத 'அவ்வியம்' என்ற சொல் திருக்குறள் 167, 169 பாக்களில் தான் முதலில் ஆவணப்பட்டுள்ளது. பின்னால் "ஔவியம் பேசேல்" என்ற திரிவில் ஆத்திச் சூடியிலும், "ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு" என்ற திரிவில் கொன்றை வேந்தனிலும் சொல்லப் பட்டுள்ளது.

அவ்வியம் என்பதற்குப் பொறாமை (= பொறுக்காத தன்மை) என்றே பலரும் பொருட்பாடு காட்டுவர். (unbearable; காட்டாகப் பரிமேலழகர், பாவாணர்). ஆனால் அழுக்காறு, அழுக்காறாமை, அவ்வியம் என மூன்றிற்கும் ஒரே பொருள் சொல்லுவது சரியல்லவே? மற்ற உரைகாரருக்கு மாறாய்ப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மட்டுமே பொருள் சொல்லுவார். இந்தப் புரிதலோடு, 167 ஆம் குறளைப் பார்த்தால்,

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்

என்பதன் பொருள் புரியும். "மனம் குறுகி அழுக்காறு உள்ளவனை, தன் மூத்தாளுக்குக் காட்டிவிட்டு திருமகள் விலகி விடுவாள்" என்ற பொருள் வரும். திருமகள் / மூத்தாள் என்ற தொன்மத்தை வள்ளுவர் ஏன் சொன்னார் என்ற கருத்தை நான் விளக்குவதைக் காட்டிலும் பெருஞ்சித்திரனார் விளக்குவதே சரியாய் அமையும். எனவே அதைத் தவிர்க்கிறேன். அவர் நூலில் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து 169 ஆம் குறளில் அவ்விய என்ற சொல்லாட்சி வரும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

இதற்கும் பெருஞ்சித்திரனார் “குறுகிய நெஞ்சத்தவனின் ஆக்கமும் செவ்வையானின் கேடும் பலராலும் நினைக்கப் படும்” என்றே பொருள் சொல்லுவார். அவ்வுதலின் ஆதிப் பொருளும் அவ் எனும் ஒலிக் குறிப்புத் தான். 'வடையை அவ்வெனக் கடித்தான்'. அவ்வெனப் பல்லாற் கடிக்கும் குறிப்பு, மீதி வடை குறைந்திருப்பதையும் உணர்த்துமல்லவா? நாளாவட்டத்தில் இந்த ஒலிக் குறிப்பின் பொருட்பாடுகள் பலவாகின. அவற்றுள் முகன்மையானது குறுகுதல், குறுங்குதல், குறைதல், சுருங்குதல், தட்டையாதல், கெடுதல், பள்ளமாதல் போன்றவையாகும்.

அவ்வுதலின் இன்னொரு வெளிப்பாடு அம்முதலாகும். இது அம்மியெனும் அடுப்படிக் கருவியை நமக்குச் சுட்டிக் காட்டும். அம்முதலின் நீட்சி அமுக்குதல் = to press என்றாகும். இதே லத் தொம்முதல்> தும்முதல்> துமுக்குதல்> துவுக்குதல்> துவைத்தல் என்பதும் அடித்து அமுக்குதலைக் குறிக்கும். தேங்காய்த் துவையல் (=துகையல்) என்கிறோமே, அதுவும் ஒரு அவையல் தான். அவல் என்பதும் அவையலில் உருவான பண்டம் தான். அவற் பொரி நினைவிற்கு வருகிறதா? முதலிற் பருமனாய் இருந்தது இப்பொழுது தட்டையாய், சின்னதாய் அவலாய் ஆயிற்று. அவல் பள்ளத்தையும் குறிக்கும். அவ்வையாரின் 187 ஆம் புறநானூற்றுப் பாட்டு “நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ, மிசையா கொன்றோ?.....” நினைவிற்கு வருகிறதா? அவம் என்ற சொல்லும் பள்ளத்தையே குறிக்கும். பல்வேறு அவச் சொற்களை தப்பான புரிதலில், தமிழ் அகரமுதலிகள் வடசொல் என்றே காட்டுகின்றன. ”வடசொல், வடசொல்” என நாம் தொலைத்தவை மிகப்பல.

அவ்வை என்ற சொல்லுக்கு தாய்ப் பொருளையே பலருஞ் சொல்லுவர். மாறாக அவ்வுதலை ஒட்டி உயரம் குறைந்தவள் என்றும் பொருள் சொல்ல முடியும். அவ்வன் = குள்ளன். அவ்வை = குள்ளச்சி. பொதுவாக நாட்டுப் புறங்களில் பெயர் தெரியாதவரை, அவர் உயரம், நிறம், தோற்றம், அல்லது தொழிலை வைத்தே அடையாளம் சொல்வர். நெட்டையன், குள்ளச்சி/கூளைச்சி, கருப்பன், வெள்ளையன், முறுக்கன், மீசைக்காரன் இப்படித்தான் ஒருவருக்கொருவர் முன்றாமவரைச் சொல்வர். சங்க காலப் புலவர் அவ்வை ஒரு வேளை குள்ளமாய் இருந்திருக்கலாம்.

அவ்வுதலுக்கும் சவ்வுதலுக்கும் ஒரு சகரவொலியே வேறுபாடு. எத்தனையோ சொற்கள் சகரம் தவிர்த்தும் அதே பொருளைக் காட்டுகின்றன. காட்டு: சமணர்/அமணர், சந்தி/அந்தி, சாரம்/ஆரம். சாலுதல்/ஆலுதல், சள்ளல்/அள்ளல், சடைதல்/அடைதல், சப்பளம்/அப்பளம், சவை/அவை, சமைதல்/அமைதல், சமயம்/அமயம், சமர்/அமர், இச்சொற்கள் மிகப்பல தேறும். நான் விரிவஞ்சித் தொகுக்கவில்லை.

சவ்வுதலுக்கும், சவச்சவ என்பதற்கும், சுவைக்கும், சுவட்டிற்கும், சப்பு, சவள், சவட்டு போன்ற இன்னும் பல சொற்களுக்கும் பொதுவாய்ச் சொற்பிறப்பு ஏற்பட்டிருக்குமானால் உகரத்திற்கும், அகரத்திற்கும் ஏற்றாற்போல் பொதுவானதாய் அது சொவச்சொவ என்ற ஒகர வேரிற்றான் உருவாக வாய்ப்புண்டு. பொத்தகம் புத்தகமாயிருக்கிறது. கொடுத்தது கல்வெட்டுக்களில் குடுத்தது என்று பயில்கிறது. பேச்சுவழக்கிற் ஒகரம் ஒலிக்குறிப்பாய் எழுவது இயல்பானவொன்று.

எனக்குச் ”சொவ்> சவ்” என்பது சொல்ல எளிதான ஒலிக்குறிப்பு. சுவை, சுவடு, சவச்சவ, சப்பு, சவள், சவட்டு, அவல், அவம், அவை, அவ்வியம் என்ற பல்வேறு சொற்களை இயல்பாய் அது பிறப்பிக்க முடியும். ஒரு முழுமையான தொடர்ச்சியை அதில் காணமுடியும். அப்படித்தான் software க்கு இணையாய் நான் சொவ்வறை பரிந்துரைத்தேன். 

சொவ்வைத் தவிர்த்து மென்னையே புழங்க விரும்புகிறவர் புழங்கிப் போகலாம். எனக்கு அவமொன்றுமில்லை. மென்வறை என்றுஞ் சொல்லலாம். என்ன? தமிழில் soft - ற்குச் சொல்லில்லாது தொடர்ந்து சுற்றி வளைத்துப் பகரியையே நாம் புழங்கிக் கொண்டிருப்போம். தமிழ் தொடர்ந்து குறைப்பட்டிருக்கும். என் தமிழ் நிறைக்க வேண்டுமென நான் விழைகிறேன்.

அன்புடன்,
இராம.கி.





சொவ்வறை -1

சொவ்வறை என்ற சொல் இன்று, நேற்றுப் பிறந்ததில்லை. 10/12 ஆண்டுகளுக்கு முன், ”மென்பொருள், மென்கலன்” போன்ற சொற்களை ஏற்கத் தயங்கி, நீண்ட விளக்கத்தின் பின்னால், அடியேனாற் பரிந்துரைக்கப்பட்டது. ”மென்மம், கணியம்” போன்றவை அப்போது எழுந்திருக்கவில்லை. ”யம்மும், மம்மும் ஒட்டினால் தமிழில் எதுவும் பண்டம்/ ஆக்கம்/ விளை/ பொருள்/ சரக்காகி விடும்” என்ற சூழ்க்குமம் தெரியாத காலமது:-). சொவ்வறையின் பரிந்துரை கேட்டுச் சில சட்டாம்பிள்ளைகள் வீறு கொண்டு, கடைந்த சொற்களால் ’உள்ளுக்குள் துரோகம் செய்யும் இராம.கி” என அருச்சிக்க முற்படுவதும் தெரியாது. ”இப்படிச் சொற்களை அமைக்கும் நெறி, மொழியை புற்றுநோய் போல் மறைந்திருந்து அடியோடு அழுகடிக்கும்” என்று செய்யப்படும்  பேரழிவுக் கணிப்பும் அப்போது தெரியாது :-))))).

அண்மையில் நண்பரொருவர் கூறியதினும் இழிந்து வல்லடியாகக் குடத்தை வரிசையில் இருத்திக் குழாய்ச்சண்டை போட எனக்கும் நேரம் பிடிக்காது. ஒரு வேளை இளந்திமிரில் 40/45 ஆண்டுகளுக்கு முன் செய்திருப்பேனோ, என்னவோ?. இப்பொழுது மூத்த அகவையில், சற்று நாகரிகம் கற்றதாற் புன்சிரித்து நகர்கிறேன். 1000-ங்களுக்கும் மேற்பட்டுப் புதுச்சொற்கள் பரிந்துரைத்த நான், அவை நிலைக்க என்றுமே முயன்றதில்லை. ஆணவம் தொனிக்க அரசியலும் பண்ணியதில்லை. ”பயனர்க்கு எது உகப்போ, அது நிலைக்கும்” என்றே அமைந்துள்ளேன். நிலைத்தவை பல. அழிந்தவை ஒரு சில.

சொவ்வறை என்ற சொல் எழுந்தது தமிழிணையம் மடற்குழுவிலா (ஆம், எல்லோரும் எளிதாய் மறந்துவிட்ட பாலாப் பிள்ளையின் tamil.net), அன்றித் தமிழுலகம் யாகூ மடற்குழுவிலா என்று இப்போது நினைவில்லை, ஏதோ ஒன்றில் எழுதினேன். 2 குழுக்களும் அன்று தகுதரத்தில் (TSCII இல்) இயங்கியன. தமிழுக்கு வந்த போகூழ், அவ்விரு குழுக்களுமே இன்று இல்லாது போயின. (’தமிழுலகம்’ ஒருங்குறி ஆக்கத்தில் இப்போது கூகுளில் இயங்குகிறது.) இக்குழுக்களில் எழுதி இணையத்தில் அழிந்துபோன கட்டுரைகள் ஏராளம். அவை என் கணி நினையங்களிலும் (memory devices) கூட அழிந்துவிட்டன. அங்குமிங்குமாய்த் தேடி எம் நண்பர்கள் பழையதை அனுப்ப, இப்போது ஒன்றொன்றாய்ச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த ஊற்றுக் கட்டுரை மூலமும், குமுகக் கணுக்கத்தின் மூலமும் [ஒரு முரண்நகை தெரியுமோ? கணுக்கம் - connection - என்ற சொல்லைப் படைத்து விளக்கமெலாஞ் சொன்னவர், தான் படைத்த முறையை வசதியாய் மறந்து, இப்போது அடம்பிடிக்கிறார்], என் வலைப்பதிவின் மூலமும், தமிழ்-விக்சனரியிற் பேசப்பட்டதன் மூலமும், சொவ்வறை என்ற சொல் தயக்கத்தோடு சிச்சிறிதாய்ப் பலருக்குந் தெரிய வந்தது.

”இராம.கி. பரிந்துரைத்த சொற்களெலாம் ஆங்கில ஒலிப்புக் கொண்டவை.” என்ற அவதூறை இணைய அரசியல்வாதி ஒருவர் ஓதி, இன்னுஞ் சிலரைத் துணுக்குற வைத்ததால், நான் என்றும் கவன்றதில்லை. ஆங்கிலமும், சங்கதமும் உடன்பிறப்புக்கள் என (மாக்சு முல்லரோ, ஜோன்சோ) யாரோ ஒரு மேனாட்டார் சொன்னாராம். நம்மவரும் இக்கருதுகோளை ஏற்று அதை உண்மையாக்கித் தமிழை நம் ஆய்விலிருந்து விரட்டி அகற்றுவதிற் துணை நிற்கின்றனர். இக் கருதுகோளின்படித் தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும், ”மிளகுத் தண்ணீர், கட்டை மரம்” போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய இணைகளைத் தவிர்த்து வேறு ஒட்டுதல் கிடையாதாம். இப்படிச் சில படித்தவர் செய்தது, மாற்றாருக்கு வசதியாயிற்று. நூற்றுக்கணக்கில் தமிழ்ச்சொற்களை தன்மய ஒப்பீட்டிற் பார்த்து, அவற்றின் முன்னுரிமையைச் சங்கதத்திற்கே கொடுத்து, 50%-க்கும் மேற்பட்ட தமிழ், சொற்கள் கடனுற்றதாய்க் காட்டி, நம் பெருமிதத்தைக் குலைத்தார். ”செம்மொழி” என்பதெலாம் முடிவில் ஒரு பாவனை தான் போலும்.

"எந்த முன்முடிவும் இன்றி தமிழ்வேர்களின் வழி பாருங்கள், தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பியத்திற்கும் இடை ஏதோ உறவு தென்படுகிறது" என்று கரட்டிக் கத்தியும் பலனில்லை; மேலையர் கருதுகோளைச் சிக்கெனப் பிடித்து “எங்கெழுந்து அருளுவது இனியே!” என அமைகிறார். அறிவோட்டம் குறைந்து தொண்டூழியங் கூடி, மூதிகம் மூடி, தமிழரும் உணராதிருக்கிறார். 

”வறை”க்கும் ”ware”-க்கும் உள்ள உறவு புரியாது (புரிவது மட்டுமின்றி, மேலும் அது பற்றி வியக்காது) குளிப்பாட்டிய குழந்தையை குழிதாடியோடு தூக்கியெறிவும் செய்கிறார். மொத்தத்திற் தமிழ்மூலம் காட்டுபவரைப் பித்தர், வெறியரெனக் காட்சிப் பொருளாக்கி, மேனாட்டுக் கருதுகோளைப் பிடித்து ஆடுவாரை ”வல்லார்” என வியக்கும் பம்மாத்து குமுகாயத்தில் தொடர்கிறது. கேட்கத் தான் ஆளில்லை. கடக்க வேண்டிய தொலைவும் அதிகமாகிறது. எவனொருவன் தன் வாழ்விற் பெருமிதம் தொலைத்தானோ, அவன் சொந்தச் சிந்தனை வற்றி அந்தி நாள் அளவும் அடிமையாயிருக்கக் கடவன் ஆகுக.

வறை என்பது சரக்கு. உலர்ந்த பண்டம். (பல தமிழிய மொழிகளுக்குள் இந்தச் சொல் இருக்கிறது. த.சரக்கு, ம.சரக்கு, க.சரகு,சர்கு, தெ.து. சரக்கு) வேடுவச் சேகர (hunter - gatherer) வாழ்க்கையில், தொல்பழங்காலத்தில் இயற்கையில் உலர வைத்துக் கிட்டிய பொருட்களையே (பின்ன்னால் கிட்டாத நாட்களின் பயன்பாட்டிற்காக) பண்டம் மாற்றி விற்றனர். கருவாடு, உப்புக் கண்டம், உலர்ந்த மீன், உலர்ந்த காய், பழங்கள் என வெய்யிலில் வற்றியவை இவற்றில் ஒரு சில. இவற்றையே பின்னால் நாகரிகம் வளர்ந்த நிலையிற் காசுக்கு விற்றார். இப்படி உலர்பொருட்களில் தான் மாந்தரின் முதல் வாணிகம் தொடங்கியது. மாந்தரின் செயற்கை ஆக்கம் பின்னாற் சேர்ந்துகொண்டது.

உணங்குகள் (உலர்ந்த பொருட்கள்)
கருவாடுகள் (கருத்து, உலர்ந்த, ஊன் தசைப் பிண்டங்கள்)
கண்டங்கள் (புலவின் உப்புக் கண்டங்கள்; கண்டுதல் என்பதும் வற்றுவதே; கண்டுமுதல் - களத்தில் காய்வதற்கு முன்னிருக்கும் ஈரமில்லாக் கூலத்தை வேளாண்மையிற் குறிக்கிறது.)
சருகுகள் (உலர் இலைகள், பூக்கள்; சருகிக் கிடந்தது சரக்கு),
சுக்குகள் (காய்ந்த இஞ்சி)
சுண்டுகள் (நீர்வற்றிச் சுண்டியது. சுண்டின் திரிவு சண்டு. ”சண்டும் சருகும்” என்பது தென்றமிழ் நாட்டுச் சொல்லிணை)
சுவறல்கள் (வற்றிக் கிடைத்த பொருள்)
துவட்டல்கள் (நீர் வற்றிய பொருட்கள்)
பண்டங்கள் (பண்டிக் கிடந்த பொருள் பண்டம்; பண்டு = உலர்ந்த பழம்),
பொருக்குகள் (காய்ந்த சோற்றுப் பருக்கைகள்)
வற்றல்கள் (வெய்யிலில் உலர்த்தி வற்றிய காய்கள்.)

எனப் பல்வேறு சொற்கள் தமிழில் உலர்பொருளைச் சுட்டும். இயலிரை கிடைக்காத காலத்தில் இவற்றில் பலவும் மாந்தருக்கு உணவும் ஆயின. நடையும் பயணமும் பண்டமாற்று வழியாகி, பாலை தாண்டும் பழக்கம் பண்டைத் தமிழர்க்கு ஏற்பட்டது. பாலையாகிய மொழிபெயர்த் தேயம் பெரும்பாலும் இற்றை இராயல சீமை தான். (சங்க இலக்கியத்தில் உலவும் இராயல சீமையின் தாக்கத்தை இன்னும் நாம் உணர்ந்தோமில்லை.) 50%க்கும் மேற்பட்ட சங்கப் பாக்கள் பாலைத்திணையையே பேசுகின்றன. பாலைத் திணையில் வணிகம் பிணைந்தது நம்மேல் பூகோளம் விதித்த கட்டுப்பாடு.

இடைக்காலத்திற் சரக்காறு என்று ஆறுவகைச் சரக்குகளைக் குறிப்பார். ஒவ்வொரு பகுதிக்கும், வெவ்வேறு வகைகள் முதன்மையாகின. சில பகுதிகளின் ஆறு சரக்குகளைச் சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி குறித்துள்ளது.

அ. வங்காள நாட்டின் அறுவகைச் சரக்குகள்:

1. இலிங்கம்: cinnabar
2. பச்சைக் கற்பூரம்: crude camphor
3. குங்குமப்பூ: European saffron
4. படிகாரம்: alum
5. சாரம்: sal ammoniac
6. சுக்கு: dried ginger

ஆ. மலையாள நாட்டின் அறுவகைச் சரக்குகள்

1. கொச்சிவீரம்: Cochin corrosive sublimate
2. மிளகு: black pepper
3. திப்பிலி: long pepper
4. ஏலம்: cardamon
5. கிராம்பு: clove
6. சிற்றரத்தை: lesser galangal

இ. கிழக்குக் கடற்கரையில் விளையும் அறுவகைச் சரக்குகள்

1. கல்லுப்பு: inslouble sea salt
2. இந்துப்பு: sindh slat
3. பொட்டிலுப்பு: nitre
4. அப்பளாகாரம்: sub-carbonate of soda
5. பலகறை: cowry
6. கடல்நுரை: sea froth

ஈ. வடமேற்குக் கடற்கரையில் விளையும் அறுவகைச் சரக்குகள்

1. கோதளங்காய்: fruit of common Indian rak
2. கடுக்காய்: gall nut
3. சீயக்காய்: soap pad
4. பொன்னங்காய்: soap-nut
5. தேற்றான்கொட்டை: water clearing nut
6. வலம்புரிக்காய்: Indian sarew tree (right)

உ. உள்ளூரின் (நமது நாட்டின்) அறுவகைச் சரக்குகள்

1. சவுரிப் பழம்: shavari fruit
2. தூதளம் பழம்: fruit of prickly shoonday
3. பிரண்டைப் பழம்: cissus fruit
4. கண்டங்கத்திரிப் பழம்: fruit of prickly birinjal
5. கோவைப் பழம்: red bitter-melon fruit
6. இந்திரகோபப் பூச்சி: leady's fly

மேலேயுள்ளவை நீரின்றியோ, நீர்வற்றியோ, கிடைத்த இயற்பொருட்கள். வறட்டி என்பது வைக்கோலும் உலர்சாணமுங் சேர்ந்த கலவை. வறுவல்- வினையையும் பெயரையும் அது குறிக்கும். வறல், வறழ், வறள், வறை என்பன எல்லாம் வறுத்தலில் பிறந்த சொற்கள். ஈர மண்ணிற் செய்து உலரக் காய வைத்துச் சுட்ட கலமே வறையாகும். அது வெறுங்கலமல்ல. சுட்ட கலம். 

சுடாக் கலம் விலைக்கு வாராது; பயனுக்குமாகாது. ஆங்கிலத்திற் கூட ware என்பது சுட்ட கலத்தையே பெரிதுங் குறித்தது. அதனால் தான் மென்கலன் என்பதைத் தவிர்த்து, ஆழ்ந்த சிந்தனையில் வறையில் முடியும் சொல்லான சொவ்வறையைப் பரிந்துரைத்தேன்.

[கலன், பொருள் என்பவை இங்கு சரி வராது. குறிப்பாகக் கலன், ”இன்னொரு பொருளைக் கொள்ளும்”வினையையே அது குறிக்கும். something to contain about. உண்கலன் = உணவிருக்கும் கலன், உண்ணப் பயன்படும் கலன். மின்கலன் = மின்வேதி இருக்கும் கலன், மின்னாக்கும் கலன். மட்கலன் = மண்ணால் ஆன கலன். செப்புக் கலன் = செம்பால் ஆன கலன். (பல்வேறு மாழைக் கலன்கள் உண்டு.) 

எனவே கலன் என்பது கொள்வினையைக் குறிக்கிறது. ware அப்படியிருக்கத் தேவையில்லை. இன்னொரு சொல்லான மென்பொருளில் வரும் ”பொருள்” good ஆ, material ஆ, substance ஆ? உங்களுக்குத் தெரியுமோ? எனக்குத் தெரியாது. தவிர, 2500 ஆண்டுகளாய் meaning எனும் பொருட்பாட்டையும் “பொருள்” சுமந்து வருகிறது. I don't know why do we have information overload on the word "பொருள்"?]

என்னுடைய ஒரு பதிவின் பின்னூட்டில், திரு. ஆறுமுகத் தமிழன், “வறை என்பது சுட்ட கலம் என்று நீங்கள் சொன்னதைக் கண்ட பிறகு தான்

’ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
         உதிரப்புனலில் உண்டை சேர்த்து
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
         வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே’

என்ற பாட்டில் வருகிற ”வறையோடு” என்ற பதத்தின் பொருள் அடியோடு புரிந்தது” என்று கூறினார்.

வறை என்பது சித்தர் பாடலில் மட்டுமல்ல. ”நெய் கனிந்து வறையார்ப்ப” என்பதால், மதுரைக்காஞ்சி 756 -இல், ”நெய் போட்டு வறுக்கும் செயல்” உணர்த்தப் படுகிறது. வறை முறுகல் = அளவிற்கு மீறிக் கருகியது (”அது வறைமுறுகல் ஆகையிலே பின்பு தவிர்த்தது” ஈடு 6.5.12) வறையல் என்ற சொல் திருவிளையாடற் புராணத்தில் வறையைக் குறித்திருக்கிறது. வறையோடு - பொரிக்கும் சட்டி/கலத்தைக் குறித்தது. தென்பாண்டியிற் சருகச் சட்டி > சருவச் செட்டி என்பது (சருகுதலை நினையுங்கள்) frying pan ஐயே குறிக்கும்.

இங்கெல்லாம் வறையும் ware-உம் வேறுபடுகிறதா? இல்லையே? சரியாய்ப் பொருந்தாத ”கலத்தை” நாம் ஏற்போம், ஆனால் முற்றும் பொருந்தும் வறையை நாம் ஏற்க மாட்டோமா? சரக்கு, கண்டம், சுண்டல், பண்டம், போன்ற சொற்களுக்கு எத்துணை ஏற்புண்டோ, அத்துணை ஏற்பு வறைக்கும் உண்டே? ”மற்றதெலாம் கொண்டு, வறையை மட்டும் கொள்ளோமா?” அதுவென்ன பித்துக்குளித் தனம்? ஒருகண்ணில் வெண்ணெய், இன்னொன்றில் சுண்ணமா? ”ஓகோ.,.பாழாய்ப் போன ஆங்கிலவொலி உள்ளேவந்து தொனிக்கிறதோ?” 

அந்த நாளில் எங்கள் கோவை நுட்பியற் கல்லூரி விடுதியில், புதிதாய்ச் சேர்ந்த நாட்டுப்புற இளைஞன் ஒருவன் வேளாண்மை மரபு பொருந்திய தன் தகப்பனை தன்னோடு படிக்கும் நண்பருக்கு அறிமுகஞ் செய்ய வெட்கி, ஒதுக்கி வைத்த மடமை எனக்குச் சட்டென நினைவிற்கு வருகிறது.

ஒலியொப்பீட்டை மட்டுமே நான் பார்ப்பதாய்ப் பெரிய பரப்புரை செய்யும் மெத்தப் படித்த மேதாவிகளே! தொனியைப் பார்க்காது, ஆழமாகப் போய் உள்ளே இருக்கும் வேர்ப்பொருளைக் காணுங்கள். ”எந்த ஆங்கிலச்சொல் ஊடே தொனிக்கிறது? அதைத் தவிர்க்க வேண்டுமே?” என்று குத்திக் கிளறுவது என் வேலையில்லை. அப்படித் தொனித்தால் தான் என்ன குறை வந்துவிடும்? தமிழன்னை தவித்துப்போவாளா? தடுக்கி விழுவாளா? தமிழ்ப்பொருள் உள்ளிருந்தால் எனக்குப் போதும்.

present- ற்கு இணையாய்ப் ”பரத்துதல்” என்பது தோன்றினால் அது தீண்டத் தகாததோ? "இராம.கி சொன்னானா? போட்டுச் சாத்து” என்ற முனைப்புடன் ”பரத்தீடு” கேட்டுக் கிடுகிப் பரந்த நண்பர், ஒரு பரிமானப் பார்வையில் அதைச் சாடாது, பல்வேறு நாட்டுப்புறங்களையும் சற்று நுணுகி அறியலாமே? 

பரத்தி இடுதல் ஒப்பொலியா? தமிழன் பரத்தி இட்டதே இல்லையா? பரத்தும் வினை நெல்வயல், உப்புவயல்களில் உண்டு. நெற்களத்திற் பரம்புக் கட்டை என்றும், உப்பளத்திற் பரத்துக் கட்டை என்றுஞ் சொல்வார். அதற்குப் பரவுக் கட்டை > பலுவுக் கட்டை > பலுகுக் கட்டை என்ற பெயரும் உண்டு. 

பலுகுக் கட்டையை ஓரோவழி மொழுக்கு மரம் என்பர். [இச்சொற்களை உப்பளத்திலும், களத்து மேட்டிலும் நானே கேட்டிருக்கிறேன். எங்கள் உரச்சாலை யூரியாப் பரற் கோபுரத்தின் - Urea prill tower - அடியில் விளவப் படுகையில் (fluid bed) கட்டிகளை வெளிக்கிட்டிக் குருணைகளைப் (granular particles) பரப்பப் பரத்துக் கட்டையைப் பயன்படுத்தியும் இருக்கிறேன்.]

முகன்மை வாசகங்களை, படங்களை, கருத்துக்களை, விழியங்களை(videos)ப் பரத்திக் காட்டி விளக்குவதைப் பரத்தீடு என்று சொல்லக் கூடாதா? இங்கு தமிழ் முகன்மையா? இல்லை, மாக்சுமுல்லர், ஜோன்சின் தேற்றம்/கருதுகோள் முகன்மையா? 19 ஆம் நூற்றாண்டுத் தேற்றத்தைத் தலைமேற் சுமந்து பணிவோடு காப்பாற்ற, எம் நாட்டு நடைமுறையைத் தவிர்க்க வேண்டுமா? நேரே தொடவேண்டிய மூக்கைச் சுற்றிவளைத்துத் தொடவேண்டுமா? நாம் எங்கே போகிறோம்? எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை.

ஈடு என்ற சொல் இடுதல் வினையடிப் பெயராய் எழும். [விதப்பாக, விண்ணவர் (வைணவர்) வழக்கில், ஈட்டிற்குப் பல்வேறு விளக்கமுண்டு. ஈடு = கவசம் என்பது ஒரு பொருள், இடுதல் = எழுதுதல் என்ற அளவில், நம்பிள்ளை பேசியதை வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதிவைத்ததால், ஈடு என்று மணிப்பவள ‘வியாக்கியானத்தை’ச் சொல்லுவர்; ஈடு = ஒப்பு என்ற பொருளும் அதற்குண்டு; இறைவனோடு ஈடுபடச் செய்வதால் ஈடு என இன்னொரு வகைப் பொருளுமுண்டு.] பரத்தி இடப்பட்டதால் பரத்து ஈடு (=பரத்தீடு) ஆயிற்று.

வறு, வறல், வறள், வறழ் என்ற தொடர்ச்சியில் நூற்றுக் கணக்கான கூட்டுச்சொற்கள் உள்ளன. எல்லாவற்றையும் சேர்த்து ஆங்கில ஒப்பொலி தருவதாய்க் கருதி, வங்காள விரிகுடாவில் நாம் கொட்டி விடலாமா? இப்படித் தான், ஒரு காலத்தில் சங்கத ஒப்பீடு பார்த்து ”இது தமிழில்லை, அது தமிழில்லை” என ஒதுக்கிய மூடத்தனம் எழுந்தது. இக் காலத்தில் ஆங்கில ஒப்பீடு பார்த்து இன்னும் பல தமிழ்ச்சொற்களைத் தவிர்த்து விட்டால், முடிவில் எங்குபோய் நிற்போம்? ”உள்ளதும் போச்சுடா, தொள்ளைக்காதா.”

 ஜியார்ச்சு ஆர்வெலின் ”1984” என்ற புதினத்தில் வரும் good, plus good, double plus good, double plus ungood என்பது போல் வெறும் 2000, 3000 சொற்களை மட்டும் வைத்து முன்னும், பின்னும் ஒட்டுக்களைப் பிதுக்கியொட்டிச் சரஞ்சரமாய் sausage மொழியாக்கி எதிர்காலத் தமிழ்ச் சொற்களை உருவாக்கலாமா? அப்படித் தானே படித்த மக்கள், வழக்குத் தமிழைப் புத்தாக்கஞ் செய்கிறோம்? பின்னொட்டு மரபு சுத்தரவாய் மாறி, சிறிது சிறிதாய்த் தமிழை முன்னொட்டு மொழியாய் ஆக்குகிறோமே? [post-modernism பின்நவீனத்துவமாம்:-)))] கூடிய மட்டும் பெயர்ச்சொற் சரங்களைத் தவிர்த்தால், அல்லது பெரிதுங் குறைத்தால், தமிழ், செருமன் மொழி மாதிரித் தோற்றம் காட்டாது.

தமிழ்நடையின் சிக்கலே படித்தோரின் நினைவிற்கு வரும் சாத்தார (இது தான் சாதாரணம் என்ற சொல்லின் தமிழ் மூலம்.) வழக்குச் சொற்களை மட்டுமே வைத்துப் பூசிமெழுகி, இட்டளி கிண்டிய உப்புமாவைப் போலப் புரட்டி எடுத்து, புது/பழஞ் சொற்றொகுதியைக் கூட்டிக் கொள்ளாது, துல்லியம் பாராது, விதப்பு நோக்காது, பொதுச்சொற்களோடு முன்னும், பின்னும் ஒட்டுப்பெய்து, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது தான். மேலைநாட்டுப் புலவுக்கடைகளில் மாலை மாலையாய் ஊன்சரம் தொங்குவது போலத் தமிழ்க் கலைச்சொற்கள் தமிழ்க் கடைகளிற் இப்பொழுது தொங்கிக் கொண்டிருக்கின்றன:-)))). இவற்றை வாங்கிப் புழங்கத் தான் ஆட்களில்லை.

show, exhibit, display, demonstrate, present என எல்லாவற்றையும் ”காட்டலாக்கி”, “ஷொட்டு”க் கொடுத்து ஒட்டுக்கள் பிசைந்து மழுங்க வேண்டியதன் தேவை என்ன? [example என்பதைக் கூடக் காட்டு என்று இக்காலத்திற் சொல்கிறோம். அப்புறம் எங்கே காட்டலின் பொருளை அகலப்படுத்துவது?] 

இவையிடையே பொருட்பாட்டில் வேறுபாடே கிடையாதா? எல்லாம் ஒரே களிமண்ணா? இடம், பொருள், ஏவல் பாராமோ? இவற்றை வேறுபடுத்த வெவ்வேறு சொற்கள் வேண்டாமா? ஆங்கிலம் அறிவுலகில் வெற்றி பெறுவது நுண்ணிய வேறுபாடு காட்டுவதில் தானே? தமிழ்நடை அதற்கு ஈடு கொடுக்காது எனில், துல்லிய விதப்புக் காட்டாது எனில், அப்புறம் ஏணி வைத்தாலும் குறிக்கோளை எட்டுவோமோ? அடுத்த பகுதியில் தொடர்வோம்.

அதற்குமுன் சொவ்வறையை ஒட்டிய மற்ற வறைச் சொற்களை இங்கு மாதிரிக்குப் பட்டியல் இடுகிறேன். இவற்றையெல்லாம் ஒருங்குபடச் சொல்ல நான் அறிந்த வரையில் மென்பொருள், மென்கலன் போன்ற சொற்கள் வாய்ப்புத் தரா. (ஒரு பக்கம் அறைகலன் - furniture - என்று புதிய, ஆனாற் தவறான, முறையிற் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் மென்கலன் என்றால் பொருந்துமா?) கலைச் சொற்கள் என்பவை துறை சார்ந்து தமிழ்நெறியின் படிச் செய்யவேண்டியவை. இதை மறக்கக் கூடாது. பட்டியலுக்கு வருகிறேன்.

 software = சொவ்வறை, [softness என்பது மென்மையா? கலன்/பொருளோடு சேரும் போது, என்ன பொருளில் மெல்லெனும் பெயரடை (adjective) அமைகிறது? மெல்லுதல் என்பது வினையா? மெலிவு என்பது என்ன? 

thin, nice, smooth, tender, supple, fleecy, spongy, flexible, pliable, malleable, ductile, tractile, extendable, plastic, mellow - இவற்றிடையே அமைந்துள்ள நுணுகிய, அறிவியல் தழுவிய, பொருள் வேறுபாட்டைத் தமிழிற் காட்டவேண்டாமா? தமிழ்ச் சொற்களின் துல்லியம், கூர்மை என்பன எங்கே? soft - இன் அடிப்படை வறையறையை எங்கேனும் பார்த்தோமா? இராம.கி.யின் முதுகை மத்தளம் ஆக்கிச் சாடுமுன், தமிழில் அடிப்படைச் சொற்களை வற்று ஆழப் பார்க்கலாமே? Have we got precision in our choice of words?

இன்னும் mass-க்கும் weight-க்கும் கூட வேறுபாடின்றி, நிறை, எடையைக் குழப்பிக் கொள்கிறோமே? volume பற்றிச் சொல்வதிற் கனத்தின் குழப்பம் - எண்ணிப் பார்த்தோமா? இயற்பு என்ற சொல் தமிழிலுண்டா? கேள்விப் பட்டுள்ளீரா? (இயல்பு உண்டு) physics ற்கு இணையாய் ”இயற்பியல்” புழங்குகிறோமே? Is it not meaningless? ”இயல்பியலை” முதலிற் பரிந்துரைத்த நானே இற்றை ”இயற்பியலைக்” கண்டு வியக்கிறேன். வழக்குத் திரிவு என்பது எண்ணிப் பார்க்க முடியாத நேர்ச்சி போலும். முதற் கோணல் முற்றுங் கோணல். இன்னும் பல சொற்களின் பொருந்தாமையை எடுத்துரைப்பின். விரியும் என்றெண்ணி விடுக்கிறேன். soft-ஐ மட்டும் அடுத்த பகுதியில் நீளச் சொல்கிறேன்.]

hardware = கடுவறை (இது கணி சார்ந்தது மட்டுமல்ல, இரும்புக்கடைச் “சாமான்”களையும் குறிக்கிறது. சாமான் என்ற கடன் சொல்லே எப்படிப் புழக்கத்திற்கு வந்தது? உரிய தமிழ்ச்சொல்லை நாம் பயிலாததால் தானே?) shareware = பகிர்வறை,
firmware = நிறுவறை (கணியாக்கர் நிறுவிய சொவ்வறைகள்)
freeware = பரிவறை, (பரிக்கு விளக்கம் வேண்டில் என் வலைப்பதிவிற்குப் போங்கள்.)
free software = பரிச் சொவ்வறை,
licensed software = உரி(ம)ச் சொவ்வறை
office software = அலுவச் சொவ்வறை
spyware = உளவறை (உளத்தல் = தோண்டியெடுத்தல். உளத்தலின் திரிவு உழத்தல். உழவும் போது நிலத்தில் தோண்டிக் கீறுகிறோம். இங்கே செய்தி, புலனங்களை, நம்மிடமிருந்து உளந்தெடுக்கிறார்.)
anti-spyware = உளவு ஒழிவறை (எதிர் என்ற முன்னொட்டுப் போடாது, ஒழி வினையாய்க் காட்டுவது தமிழ்நடைக்கு உகந்தது.)
open source software = திறவூற்றுச் சொவ்வறை
pirated software = பறியாண்ட சொவ்வறை.
warehouse = வறைக்கூடம்.  (இது சொவ்வறையைப் பற்றி மட்டுமல்ல. எல்லாத் தொழிலங்கள், சேகரங்கள் போன்றவற்றிலிருக்கும்  ஆன சொல் “வறைகள் சேர்ந்து கிடக்கும் கூடம்”. மின்சாரத்திற் சாரம் போனது மாதிரி, தொழில் நுட்பத்தில் தொழிலைப் போக்கி நுட்பியல் ஆக்கியது மாதிரி, அலுவலகம், தொழிலகம் போன்ற சொற்களில் ”க” என்பது மறையவேண்டும்.)
data warehousing software = .தரவு வறைக்கூடச் சொவ்வறை

வறையை வைத்து இப்படிப் பல்வேறு படியாக்கங்களை (applications) எளிதில் ஆளமுடியும். கலனையோ, பொருளையோ வைத்துச் செய்ய முடியாது.

அன்புடன்,
இராம.கி.

Sunday, March 04, 2012

அடுதற் சொற்கள்

அண்மையில் சிங்கை இளங்குமரன் கதிராற்றலால் நடக்கும் சூடுகள் பற்றிச் சில ஆங்கிலச் சொற்களைக் கொடுத்து அவற்றிற்கு இணையாகத் தமிழ்ச் சொற்களைத் தரும்படிக் கேட்டிருந்தார். நண்பர் நாக.இளங்கோவன் அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு அடுப்புகள் பற்றிய சொற்களையும் வரிசைப் படுத்தியிருந்தார்.

நான் இரண்டுநாட்கள் ஊரில் இல்லை. செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் நிதி நல்கையோடு கோவை அரசு கலைக்கலூரியின் தமிழ்த்துறை நடத்திய “இரட்டைக் காப்பியங்களிற் தமிழ்ச்சமுதாயம்” என்ற பயிலரங்கில் ”சிலப்பதிகாரம். காலவியல் நோக்கு” என்ற தலைப்பில் ஒருநாள் பாடம் நடத்துவதற்காகச் சென்றிருந்தேன். அந்தப் பணியை இனிதே முடித்துத் திரும்பி இன்று காலை தான் சென்னைக்கு வந்தேன்.

இங்கு வந்து பார்த்தால் இந்த வேண்டுகோள். நண்பர்கள் வேண்டிக் கேட்கும் போது மறுக்க முடிவதில்லை.

Solar Energy என்பது கதிர் ஆற்றல்; சத்தி என்பது தமிழ்வழிச் சொல் தான். (சத்தோடு தொடர்புடையது.) சக்தி என்பது சத்தியின் வழி வந்த இருபிறப்பிச் சொல். இப்பொழுதெல்லாம் பொதுவழக்கில் ஆற்றலையே பெரும்பாலும் பலர் பயன்படுத்துகிறார்கள். energy, power என்பவை வேறுபடுத்தப் படவேண்டிய சொற்கள். power என்பதற்குப் புயவு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். புயம் என்ற சொல் இதோடு தொடர்புடையது. இதன் சொற்பிறப்பை இன்னொரு நாள் விளக்குகிறேன்.

Solar Lights கதிர் விளக்குகள்

Water heater = வெந்நீர் வேம்பா. வெம்புதல் என்ற வினை சூடாதலைக் குறிக்கும். வெம்புதலிற் பிறந்த பெயர்ச்சொல் வெப்பம் ஆகும். வேம்பா என்ற சொல் தென்பாண்டி நாட்டில் பல நூற்றாண்டுகளாய் வெம்பும்/வெப்பும் தொழிலைக் குறிக்கும் கருவிச் சொல். வெந்நீர் வேம்பா என்பது எங்கள் சிவகங்கைப் பக்கம் அகவை முதிர்ந்தவரிடையே புழங்கும் சொல். அந்தக் காலத்து தேநீர்க் கடைகளில் செம்பால் ஆன வேம்பா இருக்கும் அதிலிருந்து வெந்நீர் பிடித்துத் தேநீர் செய்வார்கள். ஞாவகம் வருகிறதா?

CCTV camera = மூ.சு.தொ.காட்சிப். படக்கருவி (மூடிய சுற்றுத் தொலைக்காட்சிப் படக்கருவி) இப்படிச் சுருக்கெழுத்து ஆங்கிலச் சொற்களைத் தமிழிற் சொல்லுவதற்கு இன்னும் ஒரு செந்தர வழிமுறை தமிழில் உருவாகவில்லை. இப்பொழுதெல்லாம் இந்தச் சுருக்கெழுத்துக் கூட்டில் முதலில் வரும் சொற்களில் முதலெழுத்தை எடுத்துக் கொண்டு, அதன் கடைசியில் வரும் தமிழ்ச்சொல்லை அப்படியே சொல்லுவது சரியாக இருக்குமோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. தமிழ்மொழி ஆங்கிலம் போல் முற்றிலும் முன்னொட்டு பழகும் மொழியல்ல. அதில் முன்னொட்டும் பின்னொட்டும் சேர்ந்தே இடத்திற்குத் தகுந்தாற்போற் புழங்கும். இந்நிலையில் CCTV என்பதை மூடிய சுற்றுத் தொலைக் காட்சி என்று நீளமாய்ச் சொல்லாது மு.சு.தொ.காட்சி என்றால் மொழிமரபும் காக்கப் படுகிறது; புதிய பயனாக்கமும் ஏற்படுகிறது. எனவே இப்படி எழுதுகிறேன்.

Building Security Systems = கட்டடப் பாதுகாப்புக் கட்டகங்கள்; safety, security என்பவை வேறுபடுத்தப் படவேண்டிய சொற்கள். safety என்பதற்கு ஏமம், சேமம் என்றும், security என்பதற்குப் பாதுகாப்பு என்றும் நான் சில காலமாய்ப் பயன்படுத்துகிறேன். systems என்பதற்குப் பல்வேறு சொற்களை முயன்று பார்த்து (அவற்றில் நாக.இளங்கோ பயன்படுத்திய ”சட்டகங்கள்” என்பதும் ஒன்று தான்) இப்பொழுது ”கட்டகங்கள்” என்ற சொல்லே சட்டென்று பொருள் புரிவது போல் இருப்பதால் அதையே இப்பொழுதெல்லாம் இடைவிடாது பயன்படுத்துகிறேன்.

இனி இளங்கோவன் கேட்டிருந்த சொற்கள்:

Heater = சூடூட்டி, சூடாக்கி (மேலே சொன்ன வேம்பா என்ற சொல் விதப்பாகப் பல வட்டாரங்களிற் பழகிப் போனதால் வெந்நீர் வேம்பா என்பதை மேலே ஏற்றுக் கொண்டேன். சூடூட்டி, சூடாக்கி என்பவை பொதுமைச் சொற்கள் அருளியும் பயன்படுத்துகிறார்.
Warmer = கணப்பி; ”கண, கண என்று இருந்தது” என்ற சொல்லாட்சியை இங்கு நினைவு கொள்ளுங்கள்
Boiler = கொதிகலன், கொதிப்பி; கலன் என்று முடிவதா, அன்றிக் கருவியை இகரத்தில் முடிப்பதா என்று உங்கள் உகப்பிற்கே விட்டுவிடுகிறேன்.
Stove = அடுப்பு
Oven = தணலி, = அடுப்புக்கும் மேற்பட்டுத் தணலை (சூட்டின் அளவைக் கூட்டி வைப்பது) வைத்திருப்பதால் இது தணலி.
Broiler/gril =வெதுப்பி. வெதுப்புதல் என்பது baking ற்கு ஈடாகத் தமிழீழத்திலும், இப்பொழுது தமிழ்நாட்டிலும் பரவிவிட்டது. என்னால் என்ன செய்யமுடியும் என்று தோன்றவில்லை. சொல்லாய்வர் அருளி வெதுப்புதலுக்கு மாறாக அடுதல் என்பதையே புழங்குகிறார்.

O.E. bacan "to bake," from P.Gmc. *bakanan (cf. O.N. baka, M.Du. backen, O.H.G. bahhan, Ger. backen), from P.Gmc. *bakan "to bake," from PIE *bheg- "to warm, roast, bake" (cf. Gk. phogein "to roast"), from root *bhe- "to warm" (see bath). Related: Baked (M.E. had baken); baking. The noun meaning "social gathering at which baked food is served" is attested by 1846, Amer.Eng. Baked beans attested by 1803.

roast யைச் சுடுதல் என்றுதான் பேச்சுவழக்கிற் சொல்லுகிறோம். தோசை சுடுதல். ரொட்டி சுடுதல், சப்பாத்தி சுடுதல் என்பதை எண்ணிப் பாருங்கள். எனவே bakery என்பதற்கு அடுமனை சரியென்று தான் தோன்றுகிறது.

Hearth = அனலி இது நெருப்பு தகதக என்று எரிய அனலாய்ச் சுடுவது.
Furnace = உலை

அன்புடன்,
இராம.கி.

Sunday, January 01, 2012

பொத்தக வெளியீடு


என் பொத்தக வெளியீட்டு அழைப்பிதழை உடன் இணைத்துள்ளேன். நண்பர்கள் திரளாக வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, December 21, 2011

சிலம்பின் காலம் - பொத்தக வெளியீட்டு அழைப்பு

அன்புடையீர்,

ஏற்கனவே மடற்குழுக்களிலும், என் வலைப்பதிவிலும் வெளிவந்த ”சிலம்பின் காலம்” என்ற என்னுடைய கட்டுரைத் தொகுதியை ஒரு பொத்தகமாக ஆக்கி, வரும் சனவரி 5 ஆம் தேதி தொடங்கும் பொத்தகக் கண்காட்சியையொட்டித் தமிழினி பதிப்பகத்தார் வெளிக்கொணருகிறார்கள். பொத்தக வெளியீட்டு விழா வரும் சனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலக அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அது பொழுது மற்ற சில எழுத்தாளர்களின் பொத்தகங்களும் தமிழினிப் பதிப்பகத்தால் வெளியிடப் படும் என்று அறிகிறேன்.

என் நூலைப் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் முன்னாள் தலைவர் பேரா. க.நெடுஞ்செழியன் வெளியிட, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் (SRM university) துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ முதற்படியைப் பெற்றுக் கொள்ள இசைந்துள்ளார்கள்.

பதிப்பகத்தார் அனுப்பி வைக்கும் அழைப்பிதழை கூடிய விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். இப்பொழுது நான் தரும் இச்செய்தியை என் முன்னழைப்பாக ஏற்று, வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் திரளாக வந்திருந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 21, 2011

மாணிக்க வாசகர் காலம் - 7

குதிரை நரியான திருவிளையாடல்:

பெருந்துறையிலிருந்து நேர்த்தியுடன் வந்த குதிரைகள் அரசனின் பந்தியிற் (லாயம் என்ற உருதுச்சொல்லை இன்று புழங்கி நம் தமிழ்ச்சொல்லை இழந்தோம்) கட்டப்பட்ட இரவிலும் அடுத்த நாளிலும் நடந்தவை குறிக்கும்  இத் திருவிளையாடல் தன்னுடைய விவரிப்பளவில் மிகவும் சிறியதாகும். மதுரை அடைந்த மாயப்புரவிகள் ஒன்றிற்கொன்று தமக்குள் முகம்பார்த்து கீழே வருவதுபோற் சொல்லிக் கொண்டனவாம்:

“நேற்றுநாம் வந்தவழியெலாம் நம்மை ஓட்டியவருக்குக் கோவம் வந்து, வரும் பாதையில் பெரிதும் அடிபட்டோம்; முடிவில் நம் கால்களைக் கயிறுகளாற் கட்டிப் பந்தியில் நிறுத்திவிட்டார். இப்படியே நின்று கொண்டிருந்தால் குருதி வெளிப்பட்டுப் புண்பட்டுப் போவோம். நமக்கு வேண்டிய நிணமும் இங்கு இல்லை. கொள்ளும் புல்லுமே இவர் நமக்குத் தருவார். போனாற் போனதென விட்டால், இவர் நம்மேல் ஏறி விரட்டவும் பார்ப்பார்; நம் உண்மையுருவை இவரிடங் காட்ட வேண்டியது தான்” என்று சொல்லிக் கொண்டனவாம்.

அதே இரவில் தம்மைக் கட்டிய கடிவாளக் கயிறுகளை பல்லால் மென்று கடித்து அறுத்து, மீண்டும் நரிகளாகி, கடைத்தெருக்கள், வாயில்கள், மடங்கள், மன்றுகள், கடிமனைகள், அங்கணங்கள் (= சாக்கடைச் சந்துகள் என்பதற்கான பழஞ் சொல். இன்றைக்கு drainages என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தக் கூடிய சொல்.) எனப் பலவிடங்களிலும் நுழைந்து ஒன்றுக்கு ஒன்று உறுமி, தமக்குள் சள்ளிட்ட பசியால் இகலித்து, ஊரிலுள்ள பழம் புரவிகள், துள்ளும் மறிக்கூட்டம், யானைக் கன்றுகள், ஆடுகள், கோழிகள், பன்றிகள் ஆகியன கடித்துக்குதறி, யாரேனும் நகரிலெழுந்தால் அவரைச் சுழற்றியடித்து விரட்டி, எங்கும் போகாமல் ஆக்கி, ஊளையிடத் தொடங்கின.

இதையெலாம் பார்த்துத் தவித்த குதிரைப் பந்தியாட்கள், என்ன செய்வது என்றறியாது கலங்கி, பொழுது புலருமுன்னர் அரசனிடம் வந்து,  இரவில் கொள்ளுப்பை நிறையப் புல்லும், கொள்ளும், பயறும், கடலையும், துவரையும் இட்டும், அவற்றை உண்ணாப் புதுக்குதிரைகள் என்ன மாயமோ நரிகளாய் உருமாறி கையில் அகப்படாது ஓடிப்போய் ஊளையிட்டதையும், ஊர் விலங்குகளைக் கடித்துக் குதறியதையும் கூறுகிறார்.

அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”இந்நிலை எப்படி வந்தது? யாருக்கு என்ன தீங்கு நாம் செய்தோம்?” என்று தடுமாறுகிறான். அமைச்சரைக் கூட்டி உசாவுகிறான். தன் அன்றாடச் சடங்குகளை முடித்து வந்த வாதவூரரும் உசாவலிற் கலந்து கொள்கிறார். வாதவூரரைப் பார்த்த அரசன் அவர் மேல் பழி சுமத்துகிறான். வாதவூரர் “நேற்று நீங்கள் கைக்கொள்கையில் எல்லாம் சரியாய் இருந்ததே? என மறுமொழிக்கிறார்.

“நரிகளைக் குதிரைகளாக மாற்றி மீண்டும் அவற்றை நரிகளாகச் செய்து எம்மை ஏமாற்றியது நீயே. இப்படி இந்திர ஞாலம் செய்யும் நீயோ சாதி அந்தணனாகவும் ஆகிப்போனாய். உன்னை என்ன செய்வதென்று தெரியாது நிற்கிறேன்; என் பொன்னை அழித்தார் யார்? நற்குடும்பத்தார்க்கு அஞ்சாது, கொடுமை செய்த குதிரைத் தலைவன் யார்? அவனோடு கூடவந்த சாத்துவர் (=வணிகர்) எங்கே? உன் மேனி முற்றும் வாடும்படி உன்னைத் தண்டிக்க வேண்டும் போலும்” என விதப்பாய் அலறுகிறான். ”நீர் வேதம் ஓதியது இக் காரியம் செய்யவோ? உம்மைச் சிறையில் அடைப்பதைத் தவிர வேறு வழி யில்லை” என்று புலம்பிச் சிறையில் அடைக்கிறான்.

அத்தோடு இச்சிறு திருவிளையாடல் முடிகிறது. அடுத்து மண்சுமந்த திருவிளையாடல் தொடங்குகிறது. அதற்குள் போகு முன் ஒரு கேள்வியை நாம் அலச வேண்டும். ஞானோபதேசம் செய்த திருவிளையாடலும், நரி குதிரையான திருவிளையாடலும், குதிரை நரியான திருவிளையாடலும் ஏன் நடந்தன? மணிவாசகரைப் பெருமைப் படுத்தவா? அதனூடே நரி-குதிரை மாற்றங்கள் ஏன் நடைபெற வேண்டும்? 4 ஆந் தொடரும் மண்சுமந்த திருவிளையாடலில் அரசனையும் சேர்த்து ஊரிலுள்ளோர் எல்லோர்க்கும் அடி விழுகிறது. அது நம்மை யோசிக்க வைக்கிறது. இப்படியோர் நடப்பின் மூலம் நமக்கென்ன உணர்த்தப்படுகிறது? இத் திருவிளையாடல்களுள் ஒரு பொருள் இருக்க வேண்டுமே?

இந் 4 திருவிளையாடல்களோடு தொடர்புள்ள வரகுணனுக்குச் சிவலோகம் காட்டின திருவிளையாடல், விடைக்குறி அம்பெய்த திருவிளையாடல், உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடல், மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல் ஆகியவற்றையும் சேர்த்து ஓர்ந்துபார்த்தால், பாண்டி நாட்டின் பொருள்வள நிலைமை மிகவும் மோசமாய் இருந்திருக்ககுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை அது பஞ்ச காலமோ? தவறான அழுத்தங்கள் கொடுக்கப் பட்டு, மக்கள் மேல் நடக்கும் பெருங்கேடுகளைப் போக்கி, சரவல்களைக் குறைத்து, நன்மை விளைவிக்காத அரசன், பஞ்சத்தைக் கவனிக்காத அரசன், இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்து அதைப் பற்றிக் கொள்வதில் கவனஞ் செலுத்தி, தன் குதிரைப் படையைக் கட்டுவதிலே பெருங்கவனமாய் இருந்துள்ளான். இப்படிப் பஞ்ச காலத்தில் படையெடுப்பை ஒதுக்கி, நாட்டுமக்கள் பசியொழிய அரசன் வழிபார்த்திருக்க வேண்டாமோ?

”நாட்டின் அவலநிலையை அரசனுக்கு உணர்த்தி தவறான போக்கிலிருந்து அவனைத் திருப்ப ஏந்தாக இத்திருவிளையாடல்கள் பயன்பட்டிருக்குமோ?” என்ற ஓர்மை நமக்கு எழுகிறது. ”இதில் மணிவாசகர் ஒரு முகனக்கருவியாய் அமைந்தாரோ?” என்றுஞ் சொல்லத் தோன்றுகிறது. இல்லாவிடில் இத் திருவிளையாடல்களுக்கு பொருளில்லாது போகிறது.

என்றைக்கு இறைவனே சுந்தர பாண்டியராய் வந்து பாண்டிய இளவரசியான அங்கயற்கண் அம்மையை மணந்து, பாண்டி நாட்டுக் கொடி வழி தொடங்கி வைத்தாரோ, அன்றிலிருந்து அரசிற்கு ஏதேனும் நடந்தால்  அவ்வப்போது அவர் இடையூறுவதாகவே திருவிளையாடற் புராணம் சொல்கிறது.

மாணிக்க வாசகரின் காலம் பாண்டிய அரசிற்கு மிகுந்த சோதனை எழுந்த காலம் போலும். அது பெரும்பாலும் பஞ்சகாலமாய் இருந்திருக்க வேண்டும். அடுத்து மண்சுமந்த திருவிளையாடலுக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 14, 2011

மாணிக்க வாசகர் காலம் - 6

நரி குதிரையான திருவிளையாடல்:

”குதிரைகள் வரப்போகின்றன. பாண்டியநாட்டிற்குப் பெருங் குதிரைப்படை உருவாகி, நாடு வலிவுறப்போகிறது” என்றெண்ணித் தானைவேல் வாகை மாறன் ஊரை அலங்கரித்ததற்கு அடுத்த நாள். “ஒரு மத்தன் (=மயக்கம் உள்ளவன்) பேச்சைக் கேட்டு, ஊரை அலங்கரித்த பித்தன் நீயொருவனே இருக்க முடியும்” என்று பேரமைச்சர் ஒருவர் மன்னனிடம் பழி பேசுகின்றார். “பெருந்துறையிலேயே எல்லாச் செல்வத்தையும் அவன் போக்கிவிட்டான், குதிரையாவது வருவதாவதாவது? அவனுக்கு இனியும் இரங்காதே! அவனை வளைத்துப் பிடித்துப் பணத்தைத் திருப்பி வாங்கு! பொன்னை இழக்காதே” என்று தூவம் போடுகிறார். பிரம்படிக்காரர் மூலம் மாணிக்க வாசகரை மன்னன் தண்டிக்கத் தொடங்குகிறான். திருவாதவூரிலேயே அவரைச் சிறையிற் தள்ளுகிறான். வாசகர் மீள அரற்றுகிறார். பெருந்துறையானை எண்ணி எண்ணிக் குழைகிறார். 14 ஆம் பத்தாய்க் குழைத்த பத்தும், பதினைந்தாம் பத்தாய் அருட்பத்தும் எழுகின்றன. இவையிரண்டுமே பெருந்துறையானை முன்னிலைப் படுத்தி வாதவூரில் எழுந்தவை.

இப் பத்துகளைக் கேட்ட பெருந்துறையான் வாளாயிருக்கவில்லை. சிவ கணங்கள் மிழலை நாட்டு நரிகளைக் குதிரையாக்கி அவற்றில் ஏறிக் கொள்கின்றன. இவற்றின் முன்னால் இறைவனும் வெள்ளைப் புரவியில் சேர்ந்து கொள்கிறான். நரிகள் ஒன்றுகூடிய இடமே நரிக்குடியென திருவால வாயுடையார் புராணம் சொல்லுகிறது. (இன்றும் தொண்டிக்கு அருகில் ஒரு நரிக்குடி இருக்கிறது. மணிவாசகரை ”வடுகப் பிள்ளை”யாக்கி கோகழியைக் கர்நாடகத்தில் தேடுவோர் இந் நரிக்குடியைக் கண்டுகொள்ளார் போலும்.) .

இறைவனோடு, சிவகணங்களும் மதுரை நோக்கிப் புறப்படுகின்றன. திருவாத வூரில் சிறைப்பட்ட வாதவூரருக்கு மதுரை நோக்கிக் குதிரைகள் வருவதை மணிச்சிலம்பு ஓசையிட்டு இறைவன் உணர்த்துகிறான். ”வாதவூரினில் வந்து இனிதருளிப், பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்” என்ற திருவாசகம் கீர்த்தி அகவல் 52-53 ஆம் அடிகள் இதை உறுதி செய்கின்றன. குதிரைகள் வரும் நேரத்தை வாதவூரர் எதிர்பார்த்து நிற்கிறார். பின்னாற் குதிரைக் குளம்படி கேட்ட தூதர் வாதவூரரிடம் சொல்லி மன்னரிடம் அனுப்புகிறார். அரசனுக்கும் செய்தி போகிறது. ஆவல் மிகுதியால் அத்தாணி மண்டபத்திற்கு அரசன் வந்து சேருகிறான். அங்கு நிலவும் தந்தத் திகை (tensile stress) கூடிப் போகிறது.

இவ் எதிர்பார்ப்பிற்கு மாறாய் ஓர் உச்சச்சரிவு போற் குதிரைகள் வருவதிற் காலத் தாழ்வு ஏற்படுகிறது. பின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிறது. பிரம்படிக் காரர் கையில் வாதவூரர் ஒப்படைக்கப் படுகிறார். அவர்கள் அடிக்க ஓங்க, மீண்டும் திருவாசகங்கள் பிறக்கின்றன. 16 ஆம் பத்தாய் அடைக்கலப் பத்து பிறக்கிறது. குயிற் பத்து அடுத்து எழுந்ததாய் நம்பியார் திருவிளையாடல் சொல்கிறது. நாம் ஏற்பதற்கில்லை. ஏனெனில் பரிமீது வரும் சிவன் மதுரை சேராதிருக்கையில் அது பற்றிப் பேசும் பாட்டுக்கொண்ட குயிற்பத்து எப்படி யெழும்? ஆக நிகழ்ச்சிகள் நடந்த காலத்திற்கும், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் எழுந்த காலத்திற்கும் இடையிற் பெருத்த இடைவெளி இருந்திருக்க வேண்டும்.

அடைக்கலப் பத்தும் வேறு ஏதோவொரு பத்தும் அங்கெழுந்தன என்று நாம் கொள்ளலாம். அந்நேரத்தில் பகல் மாறி இரவானதோ என்னுமளவிற்குத் குதிரைகளின் கதிப்பில் தூசு கிளம்புகிறது. மண்டபப் போக்கு மாறுகிறது. ஓர் எதிர்பார்ப்பு எல்லோர் மனத்தும் குடிகொள்கிறது. விதவிதமான குதிரைகளைச் செலுத்தி வரும் வீரரைப் பார்க்கிறார். வியக்கிறார். குதிரைகளை, அவற்றின் கதிகளை, நடைகளை, நம்பியார் திருவிளையாடல் வியத்தாரமாய் விவரிக்கிறது.  விரிவு கண்டு நாமும் வியந்து போகிறோம். [குதிரைகள் பற்றி அறிந்தோர் விளங்கிக் கொள்ளலாம். என்னால் முடியவில்லை. எனவே தவிர்க்கிறேன்.]

அடுத்த விவரிப்பு, குதிரையோட்டி வந்த இறைவனைப் பற்றியாகும். இவ் விவரிப்பு காலக்கணிப்பு அலசலுக்கு முகனமானது. ஏனெனில், ”இறைவன் அரபு இசுலாத்துத் தோற்றம் காட்டினார், எனவே மாணிக்க வாசகர் தேவார மூவருக்குப் பிற்பட்டவர்” என்று சிலர் கதை கட்டுவர். திருவாலவாயுடையார் புராணம் நரி குதிரையான திருவிளையாடல் 34 ஆம் பாட்டைக் கூர்ந்து படித்தால் அப்படி நமக்குத் தோன்றவில்லை.

”மன்னியநித் திலமாலை நில வெறிப்ப
மாணிக்கக் குண்டலங்கள் வெயில் விரிப்பத்
துன்னுலகுக்கு ஒருகுதிரை யாளாம் சோதி
சோதிவிடு குப்பாயம் மெய்ப்பால் மின்ன,
முன்னைமறைப் பரியைநெறி ஐந்தும் ஓங்க
முடுகிவலம் இடம்பரிவத் தனம்செய் வித்து
மின்னுண்மணிப் பொலன்கலினக் குசை வலித்து
விளங்குகர வாளம் கை துளங்க வந்தான்”

பாடலைப் புரிய ஏதுவாய், இதன் பொழிப்புரையை இங்கு கொடுக்கிறேன்.

”கழுத்திற் தொங்கும் முத்துமாலை நிலத்தைக் கூசவைக்க,
மாணிக்கக் குண்டலங்கள் வெயிலில் விரிந்திருக்க,
சோதிவிடும் குப்பாயம் அவனுடலில் மின்ன,
பக்கமறைப்போடு பரியின் இரு கண்கள் இருக்க,
ஐந்து வகையான கதிகள் ஓங்கும் வண்ணம்
குதிரையை முடுக்கி வலமிடமாய்ச் சுற்றிவந்து
மின்னும் மணிகள் பொருந்திய பொற்கடிவாளத்தை வலித்து,
விளங்கும் கைக்கத்தி துளங்கிச் சொலிக்கும் வகையில்
துன்னுலகுக்கு இவனொருவனே குதிரையாள் போல வந்தான்.”

மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். வந்த குதிரையாள் அரபுத் தோற்றங் கொண்டதாய்த் தெரிகிறானா? இசுலாத்துத் தோற்றம் இங்கு உங்களுக்குத் தெரிகிறதா?. ”இசுலாம் எழுந்ததன் பின் மாணிக்கவாசகர் கதை எழுந்தது” என்று எப்படியெல்லாம் கதை விடுகிறார்? அவரை நோக்கி இம்”மூலத்தைப் படியுங்கள்” என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. வெள்ளைக் கலிங்கத் (வெள்ளை மேலாடைத்) தோற்றம் காட்டிய 18 ஆம் நூற்றாண்டுப் பரஞ்சோதி முனிவரைப் பிடித்துக் கொண்டு, வலிந்து அதை அரபுத் தோற்றமாக்கினால் எப்படி? இதே வெள்ளைக் கலிங்கத் தோற்றைத் தான் அன்னைப் பத்தில் மணிவாசகரே சொல்கிறாரே? அப்புறம் என்ன?

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்

- அன்னைப் பத்து 7

இங்கே பள்ளிக் குப்பாயம் என்ற சொல்லை வைத்து ”பள்ளி என்பது சமணம், புத்தம் போன்றமைந்த இசுலாம் பள்ளி வாசலைக் குறிக்கும்” என்று விளக்கி, “இது மாற்று மத ஆட்கள் போடும் குப்பாயம்” என்று மொத்தப் பொருள் சொல்லிக் குழப்பச் சிலர் முயல்கிறார். பள்ளிக் குப்பாயம் என்பது வடக்கே இருந்தவர் போடும் நீண்ட அங்கிச் சட்டை. அது யவனர் காலத்திற்கும் முன் வடமேற்கு இந்தியாவில் (இற்றை ஈரான், ஆப்கனித்தான், பாக்கித்தான் போன்ற நாட்டு நிலப்பகுதிகளிலும் ) இருந்தது. எப்போது அங்கு தோன்றியது என்று தெரியவில்லை. தமிழருக்கு அது வடக்கிருந்து அறிமுகமானது என்று மட்டுமே நாம் சொல்ல முடியும்.

மேற்காட்டிய 12 ஆம் நூற்றாண்டுத் திருவிளையாடற் பாட்டும் ”மின்னுகின்ற குப்பாயம். முத்துமாலை, மாணிக்கக் குண்டலங்கள் அணிந்திருந்தார், குதிரையின் கண்கள் பக்கவாட்டில் மறைக்கப் பட்டிருந்தன. மணிகள் பொருந்திய பொற்கடிவாளம், கையில் கத்தி” என்று மட்டுமே சொல்கிறது. ”இது நடுக்கடல் நாடுகளின் குதிரைக்காரர் தோற்றமா?” என்றால் ”ஒரு வேளை இருக்கலாம், இல்லாதும் போகலாம்” என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. எப்படியெலாம் மூலநூலைப் படிக்காது ஆய்வர் சிலர் அவக்கரப்படுகிறார்? படைச் சேவகர், குதிரையாட்கள் குப்பாயம் போடுவது சிலம்பிலேயே சொல்லப் பட்டுள்ளதே? சிலம்புக் குப்பாயம் பள்ளிக் குப்பாயமா? - தெரியாது.

குதிரைத் தொகுதியின் நடுவில் வரும் நாயகனைக் கண்டு ”அவன் சொக்கன் தானோ?” என்று வியக்கிறார். குதிரைகளின் நேர்த்தி கண்டு வியந்து, அரசன் ”குதிரைத் தலைவன் யார்?” என வாதவூரரிடம் கேட்கிறான். “சற்று நேரத்திற் குதிரையில் வருவார்” என்று அவர் சொல்கிறார். அடுத்து இறைவன் குதிரைத் தலைவனாய் வரும் தோற்றம் விவரிக்கப் படுகிறது. குதிரைத் தலைவனைப் பார்த்துத் தன் கரங் கூப்பப் பாண்டியன் முற்படுகிறான். பின் ”குதிரைத் தலைவனை அரசன் வணங்குவதா?” என்ற தயக்கத்தில் தன்னைத் தானே அடக்கிக் கொள்கிறான்.

”மிக்க மந்திரிகாள்! இந்த வெம்பரிச் செட்டி நந்தம்
சொக்கனே போல் எனக்குத் தோன்றிடா நின்றான்; வந்த
கொக்கினைப் பாரீர்! காலம் தாழ்த்ததாயினும் கொணர்ந்த
மிக்க மந்திரியைப் பாரீர்!!” என்று பன்முறை வியந்தான்.

திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 61

இப்படியாகக் குதிரைச்செட்டியையும், மணிவாசகரையும் பற்றி மன்னன் வியக்கிறான். குதிரைத் தலைவன் தான்கொண்டுவந்த குதிரைகள் பற்றி விவரிக்கிறான். என்னென்ன குதிரைகள் நல்லன என்றும் விவரிக்கப் படுகின்றன. முடிவில் குதிரை எண்ணிக்கைகளும் விலைகளும் சொல்லப் படுகின்றன.

இப்பரிமா ஓர் இலக்கம் அவற்றினுள் இக்குழு ஓரொரு மா
முப்பஃதாயிரம் ஓர் பழுதின்றி முதற்றரம் இத்தரமும்
வைப்பதின் நூறு குறைந்தன பின்னிவை ஆயிரம் மற்றிவையும்
அப்படி பெற்ற விலைப்பொன் இலக்கம் அனைத்தும் உணர்ந்து கொளே

திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 74

”இலக்கம் குதிரைகளா?” என்று நாம் வியந்து நிற்கிறோம். அவற்றுள் 30000 முதற்றரக் குதிரைகள். அடுத்ததரக் குதிரைகள் 30000 இல் நூறு குறைந்ததாம். மூன்றாம் தரத்தில் 1000 குறைந்ததாம். நாலாம் தரத்தில் 11100 என நாம் கணக்கிட்டுக் கொள்கிறோம். இக்குதிரைகளுக்குப் பெற்ற விலைப்பொன் இலக்கம். பொன் என்பது என்ன அலகெனத் திருவாலவாயுடையார் புராணம் சொல்ல வில்லை. எனவே குதிரைத் தரங்களின் விலையை நம்மாற் கணக்கிட முடியவில்லை. அடுத்துக் குதிரையின் பெருமைகள் சொல்லப் பெறுகின்றன.

விற்பனையின் கடைநிலைக்கு வருகிறார். அதன்பெயர் கயிறு மாற்றிக் கொள்ளுதல். விற்பவன் வாங்குவோனிடம் “இந்தாப்பா, கயிற்றைப் பிடித்துக் கொள், குதிரையை உன்னிடம் கொடுத்தேன். இனி நன்மை தீமை எல்லாம் உனக்கே. எனக்கு இனிப் பொறுப்பில்லை” என்று கைமாற்றிக் கொள்கிறார்.

”ஆதலால் அறிஞர் முன்னா அறவுறப் பேசிக் கொண்டு
நீதியிற் கைக்கொள் இன்று நின்னது புரவியாக
வீதியிற் கயிறு மாறி விட்டபின் நன்மை தின்மை
ஓதுவ நமது பாரம் அல்ல மேல் உன்ன” என்றான்.

அத்திறம் சொல்ல, ”நல்ல அறிவன் நீ அறைந்தது ஒக்கும்
உத்தம நன்மை தின்மை உன் கை விட்டு என் கை புக்கால்
எத்தையும் அறிதல் வேண்டா; என்னவே முற்றும்” என்னச்
சித்திர மாக்கள் தம்மைத் தென்னவன் கைக்கொடுத்தான்

திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 80-81

”இப்பேறு பட்ட குதிரைகளுக்கு நாம் கொடுத்த விலை போதா. நமக்குக் குதிரைகள் வாய்த்தன” என்றெண்ணி மன்னன் மகிழ்ந்துபோகிறான்.

அய்யமில் லாமல் முன்னின்று ஆவணி மூல நன்னாள்
துய்ய பேருலகுக் கெல்லாம் துளங்கி ராவுத்த ராயன்
மெய்யை மெய்யுடைய மெய்யன் மெய்யடியானை வேண்டிப்
பொய்யிலா மன்னன் காணப் பொய்ப் பரிமாற்றம் செய்தான்

- திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 83

இங்கே மெய்யடியான் என்பது மணிவாசகர். ”மெய்யை மெய்யுடைய மெய்யன்” என்பது இறைவனைக் குறிக்கும். ஆக ராவுத்த ராயனாய் வந்த இறைவனாகிய மெய்யன் மன்னனிடம் பொய்ப் பரிமாற்றம் செய்தான்.

அடுத்த பாடல் நாம் குறித்து வைக்க வேண்டிய பாட்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்பியார், திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவாரூரைப் பற்றி வரும் பதிகத்தில் இருந்து சில வரிகளை எடுத்து அப்படியே தன் பாடலில் ஆள்கிறார்.

மின்னிய உலகுதன்னில் வித்தின்றி நாறு செய்வோன்
நன்னெறி யில்லாப் பொல்லா நரகரைத் தேவு செய்வோன்
மன்னிய நரிகள்தம்மை மறுகெலாம் வாவி யேறித்
தென்னன்முன் குதிரையாகச் செய்பு தோன்றாமல் விட்டான்

- திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 84

இதில் வரும் வரிகள்

“நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங்கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்”

என்ற திருநாவுக்கரசர் தேவார திருவாரூர் பதிகத்தை அப்படியே தன்பாட்டில் நாலில் 3 அருளிச்செயலைக் குறிப்பனவாய் ஒத்துள்ளன. திருநாவுக்கரசர் சொல்லும் ”நரியைக் குதிரை செய்தது” என்பது திருநாவுக்கரசருக்கு முந்திய அருளிச் செயல். இந்த அருளிச் செயல் மாணிக்க வாசகருக்காக நடந்தது என்பது நம்பியார் கூற்று. அப்படியானால், ஏரணத்தின் படி, நம்பியார் காலப் புரிதல் ”மாணிக்கவாசகர் திருநாவுக்கரசருக்கு முன்பு இருந்தார்” என்பது எளிதில் பெறும் அல்லவா? நண்பரே நினைவுகொள்ளுங்கள். ஏரணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். [C claims that foxes are turned into horses due to A. Further C quotes B to be saying the same thing (that foxes are turned into horses). The corroboration is not just for one miracle but three. B lived in 7th century. So A who is referred to here must have lived prior to B] இதைச் சொல்வது 12 ஆம் நூற்றாண்டு நம்பியார். அதாவது, 12 ஆம் நூற்றாண்டில் ஏழாம் நூற்றாண்டிற்கு முந்திய திருநாவுக்கரசருக்கு முன்பே மாணிக்க வாசகர் இருந்ததாக ஒரு புரிதல் உள்ளது.

What a beautiful evidence? I am pleasantly surprised.

இனி இத்திருவிளையாடலின் இறுதிக்கு வருவோம். பந்தியிற் குதிரைகளைக் கட்டுமாறு மன்னன் பணிக்கிறான். குதிரை கொண்டுவந்த தலைவனுக்கு ஒரு பட்டுத் துணி கொடுக்கிறான். தன்னடியாருக்காக, அதைச் செண்டிற் தொங்கும் படி இலாவகமாக வாங்கி, இறைவன் தன்முடியில் புனைந்து கொள்கிறான். அப்படிச் செண்டில் வாங்கியது தன்னை அவமதித்ததாய் அரசன் உணர்ந்து சீற, வாதவூரர் “ அது அவர் தேச வழமை” என்று சொல்லி அமைதிப் படுத்துகிறார்.

பிடித்த பத்து இப்பொழுது எழுந்ததாய் திருவாலவாயுடையார் புராணம் சொல்கிறது. அது ஏற்புடையதில்லை. பல்வேறு பொற்பட்டு வரிசைகளை வாதவூரர்க்குச் செய்து அரசன் அரண்மனை ஏகுகிறான்.நரி குதிரையான திருவிளையாடல் முடிந்தது. அடுத்த திருவிளையாடலுக்குள் போவோம்.

இனித் திருவாசகத்தில் இருந்து நரி குதிரையான திருவிளையாடல் பற்றிய அகச்சான்றுகள் வருமாறு:

குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந்து அருளியும்

- கீர்த்தித் திருவகவல் 27-28

மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்

- கீர்த்தித் திருவகவல் 33-34

அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான்
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்

- கீர்த்தித் திருவகவல் 35-36

ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்

- கீர்த்தித் திருவகவல் 37-41

மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும்

- கீர்த்தித் திருவகவல் 44-45

இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோள்கொண்ட நீற்றனாய்
சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான்
பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதும்காண் அம்மானாய்

- திருவம்மானை 3

பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணம்கொண்டு கோதாட்டி
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றியிப் பாசத்தைப் பற்றநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதும்காண் அம்மானாய்

- திருவம்மானை 20

மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலம் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றேவற் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ

- திருப்பூவல்லி 20

கோல வரைக்குடுமி வந்து குவலயத்து
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலம் திகழும் திருவுத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்பாடி
பூலித்து அகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ

- திருப்பொன்னூசல் 8

வெள்ளைக் கலிங்கத்தர் வெந்திரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்

- அன்னைப் பத்து 7

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்ததன் மேனிப் புகழிற் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்க கன்வரக் கூவாய்

- குயிற் பத்து 7

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும் மகிழ்ந்து

- திருத்தசாங்கம் 6

பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற் போதிரைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவரி யாதென்தன் உள்ளமதே

- திருப்பாண்டிப் பதிகம் 1

சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்து
குதிரை யின்மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
மதுரை யர்மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே

- திருப்பாண்டிப் பதிகம் 2

நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார்
பேரின்ப வெள்ளத்துள் பெய்கழ லேசென்று பேணுமினே

- திருப்பாண்டிப் பதிகம் 3

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன்நன்னாட்
டிறைவன் கிளர்கின்ற காலமிக் காலமெக் காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இருநிலத்தே

- திருப்பாண்டிப் பதிகம் 4

ஈண்டிய மாயா இருகெட எப்பொரு ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ னும்சொல்ல வல்லனல்லன்
வேண்டிய போதே விலக்கில் ஐவாய்தல் விரும்புமின்தான்
பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே

- திருப்பாண்டிப் பதிகம் 6

மாயவ னப்பரி மேற்கொண்டு மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக்கு
ஆய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளேயருளும்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே

- திருப்பாண்டிப் பதிகம் 7

விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந் நீர்கடக்க
பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட பூங்கொடியார்
மரவியன் மேற்கொண்டு தம்மையும் தாமறி யார்மறந்தே

- திருப்பாண்டிப் பதிகம் - 9

இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கி,
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெலாம்
பெருங்குதிரை ஆக்கியவா றன்றேயுன் பேரருளே

- திருவேசறவு 1

வேடுரு வாகி மாகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட விருந்த சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல மர்ந்த பரிமாவேறி ஐயன் பெருந்துறை ஆதியந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறிவார் எம்பிரா னாவாரே

- திருவார்த்தை 4

உள்ள மலமொன்றும் மாய உகுபெருந்தேன்
வெள்ளம் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு

- பண்டாய நான்மறை 2

காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டின் பரிபாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளும் கெடநெஞ்சே வாழ்த்து

- பண்டாய நான்மறை 3

நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்து
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே

- ஆனந்த மாலை 7

அன்புடன்,
இராம.கி.

Friday, September 30, 2011

மாணிக்கவாசகர் காலம் - 5

பதிகங்கள் பிறந்த கதை:

சரி கதைக்கு வருவோம். கானப்பேரை விட்டகன்ற மாணிக்க வாசகர் மொய்யார் பொய்கைத் திருப்பெருந்துறையைச் சேருகிறார். ஆடிக்காற்று அடிக்கிறது. குதிரைக் கலங்கள் துறையில் அணையாதுள்ளன. அவை வந்து சேர நாட்களாகுமென்று காத்து நிற்கிறார். தெய்வப் பணியில் கவனம் செல்கிறது. இற்றை ஆவுடையார் கோயிலுக்கு முன் வேறு சிறிய கோயில் இருந்திருக்க வேண்டும். (மாணிக்கவாசகருக்கு உபதேசங் கொடுத்த ஆதி கைலாய நாதர் கோயிலும் அங்கு தான் உள்ளது. 

திருவாசகப் பகுதிகளை மாணிக்கவாசகர் வரலாற்றோடும், நம்பியார் திருவிளையாடல், கடவுண்மா முனிவரின் திருவாதவூர்ப் புராணம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் போன்ற நூற்செய்திகளை ஏரணத்தோடும் கூடவே பொருத்தினால், குதிரைவாங்கத் திருப்பெருந்துறை வந்த இடத்தில் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டபின், மணிவாசகர் முதலிற் பாடியது சென்னிப் பத்து என்றே தோன்றுகிறது. ”நமச்சிவாய” என்ற அறிவோதலுக்குப் (உபதேசத்தின்) பின் இறைவன் பெயர்களை விதவிதமாய் எடுத்தோதி, அவன் சேவடியின் கீழ் தன் சென்னி மன்னியதையே ஆழ்ந்து இப்பதிகத்திற் பேசுகிறார். ஞானோபதேசம் செய்த திருவிளையாடலில் எழுந்த பதிகங்களை அடுத்தடுத்துப் பார்ப்போம்.

அதற்கடுத்து அச்சோப் பத்து எழுந்ததாய் நம்பியார் சொல்கிறார். [இது தில்லையில் வெளிப்பட்டதாக யாரோ உரையார் சொல்வது பொருத்தமாய்ப் படவில்லை. இறைவன் தனக்குச் ”சிவாய நம” என ஓதியருளியதை ”அச்சோ” என வியந்து அச்சூட்டோடு திருப்பெருந்துறையில் சொல்லாது தில்லை வரைக்கும் காத்திருந்தா மணிவாசகர் தன் உணர்வை வெளிப்படுத்துவார்? இதுபோற் குருவிடம் எட்டெழுத்து மந்திரங் கேட்ட இராமானுசர் கோட்டியூர் கோபுரத்திலேறி ஊருக்கெலாம் உடன் சொல்லாது, ஆறவமர திருவரங்கம் வந்தா மற்றோர்க்கு ஓதினார்?]

இறைவனும் அவன் சீடருமாய் ஆயிரம் பேர் கூடியிருக்க, அச் சிறிய ஊரிற் தன்னை ஆட்கொண்ட அதிசயம் மாணிக்கவாசகரைத் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்துகிறது. மூன்றாம் பத்தாய் அதிசயப் பத்து எழுகிறது. எங்கெலாம் கோகழி என்கிறாரோ அங்கெலாம் குருமணியைச் சேர்த்தோ, இன்னொரு வகையிலோ மாணிக்கவாசகர் இடத்தை அடையாளங் காட்டுகிறார். அதிசயப் பத்து 7 ஆம் பாடலிற்கூட “இடர்க் கடற்கழித் தலைப்படுவேனை” என்று சொல்லித் துன்பக்கடலைச் சொல்கிறார்; தான் கடற்கழி இடத்தில் வந்திருப்பதையுஞ் சொல்கிறார். அப்பாடலை ஆழ்ந்து படிப்போருக்கு இது புரியும். திருவண்டப் பகுதி 66 ஆம் வரிகளில் இருந்து 69 ஆம் வரிவரை,

பரமா நந்தப் பழங்கடல் அதுவே
கருமா முகிலின் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய

என்று படித்தும், அதுவின்றி முன்முடிவாக ”வடுகப் பிள்ளை” என்று கொண்ட காரணத்தால், திருப்பெருந்துறைக்குள் மலையைத் தேடி கருநாடகத்தில் அலைகிறவருக்கு நாமென்ன சொல்லலாம்? ”ஐயா, ”வரை” க்கு மலை மட்டும் பொருளல்ல. நீர்க்கரைப் பொருளும் உண்டு” என்று சொல்லலாம். ”நாட்பட்ட பழங்கடலின் நீர் கருமுகிலில் தோன்றி, திருப்பெருந்துறை நீர்க்கரையில் ஏறி எல்லாத் திசைகளிலும் மின்னொளி காட்டி விரிய” என்று பொருள்பார்த்தால் ”மழை வரப்போகிறது” என்பது சட்டெனப் புரியுமே? கண்ணெதிரிலுள்ள ஆவுடையார் கோயிலை விட்டு வேறெங்கோ தேடின் எப்படி?

நாலாம் பத்தாய் கோயில் திருப்பதிகம் அந்தாதி அமைப்பில் எழும். இதையும் யாரோ ஓர் உரையாசிரியர் தில்லையில் எழுந்ததாய்த் தவறாகக் குறித்தார். இப் பதிகத்தின் ஆறாம் பாடலில்

“நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆயவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண்டு இன்றே”

என்ற வரிகள் “பெருமானே, இன்று உன்னை இங்கு கண்டேன்” என்று தெளிவாக உரைக்கும் போது, எப்படி உரையாசிரியர் வழுவினாரென்று தெரியவில்லை. மாணிக்கவாசகர் என்றைக்குத் தன் குருமணியைக் கண்டாரோ, அன்றே தான் கோயில் திருப்பதிகமும் எழுந்திருக்கிறது. அதில் என்ன ஐயப்பாடு? அருளிச் செயல் யாருக்காக நடந்தது? இப் பதிகம் முழுக்கத் பெருந்துறையிற் பாடப்பட்டதே.

அதைத் தொடர்ந்து புணர்ச்சிப் பத்தும் செத்திலாப் பத்தும் எழுகின்றன. பித்துப் பிடித்தவாறு மணிவாசகர் இறைவனைப்பற்றிப் பாடிக்கொண்டே இருக்கிறார். திருப்பெருந்துறையிலே சின்னாட்கள் தொடர்ந்து தங்குகிறார். தங்கும் இடத்தில் கொண்டுவந்த செல்வம் குறைகிறது. [எப்படிக் குறைகிறது என்ற விவரம் தெளிவாக இல்லை.] ஆடிக்காற்று அடங்கும் போது கலங்கள் துறை பிடிக்கின்றன. குதிரைகள் இறங்குகின்றன. ஆனால் வேறு வழிகளிற் செலவாகிய பணம் குறைந்த காரணத்தால் குதிரைகள் வாங்கப் படவில்லை.

பிரார்த்தனைப் பத்து, (இந்த அந்தாதிப் பதிகத்தின் முதற் பாட்டடியே “கலந்து நின்னடியாரொடு அன்று வாளா களித்திருந்தேன்” என வெளிப்படுகிறது. இறைவன் வாசகரை ஆட்கொண்ட நாளுக்குச் சின்னாட்கள் கழித்துப் பிரார்த்தனைப் பத்து எழுந்திருக்கலாம்.) ஆசைப்பத்து, உயிருண்ணிப் பத்து ஆகியவை தொடர்ந்து வருகின்றன. இதற்குப் பின் திருப்புலம்பலும், வாழாப் பத்தும், எண்ணப்பத்தும் எழுந்ததாக நம்பி திருவிளையாடல் சொல்கிறது.

[இப்போது கிடைக்கும் திருப்புலம்பல் வெறும் 3 - ஏ பாட்டுக்களுடன், அதுவும்  முதற்பாட்டு திருவாரூரனையும், 2 ஆம் பாட்டு பெருந்துறையானையும், 3 ஆம் பாட்டு குற்றாலத்தானையும் குறிப்பதாக முன் கூறினோம். ஒருவேளை நம்பியார் காலம் 12 ஆம் நூற்றாண்டில் இது பெருந்துறைப் பாட்டுக்களைக்  குறித்து, ஆரூருக்கு வேறு பதிகமும், குற்றாலத்திற்கு இன்னொரு பதிகமும் இருந்தன போலும்? இதேபோல் எண்ணப்பத்தும் குறைப்பட்ட பதிகமே. இதில் வெவ்வேறு வகை ஆசிரிய விருந்தங்கள் கலந்து நிற்கின்றன.]

ஆக ஆட்கொள்ளப் பட்டபின் எழுந்த பதிகங்களாய் மொத்தம் பன்னிரண்டு பதிகங்களை அடையாளம் காணலாம்.

[அப்புறம் திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத் தெள்ளேணம், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோள்நோக்கம், திரு வெம்பாவை, திருச்சதகம் ஆகியவை திருப்பெருந்துறையில் எழுந்ததாய் நம்பி திருவிளையாடல் சொல்லும். அது ஏற்கத் தகுந்ததாய் இல்லை. அவை பற்றிய விளக்கத்தை ஒரு சில பத்திகளுக்கு அப்புறம் காணுவம். இனி வரலாற்றின் வழி தொடருவம்.]

இப் 12 பதிகங்களைக் கேட்டவர் அதிசயித்து, ”இவர் பெருத்த சிவனடியார்” என்றெண்ணி வாசகரைச் சூழ்ந்து போற்றுகிறார். பித்தம் தலைக்கேறிய வாசகர் தாம் கொணர்ந்த பொருளை வந்தோர்க்கு பல்வேறு காரணங்களுக்கு எனப் பரிந்து கொடுக்கிறார். சின்னாட்கள் கழிகின்றன. திறையாய்ப் பெற்று நிலவறையில் பாண்டியன் வைத்திருந்த பொருள் கரைந்து போனது. இப்படி நடந்த செய்தி பாண்டியனைச் சேருகிறது. [சிவகங்கைப் பக்கம் பொதினம் - business - நடத்துவோர் 20 ஆம் நூற்றாண்டு வரையிலும் பொதுக்கணக்கு, தனது கணக்கு என்று 2 கணக்கு வைத்திருப்பார். பொதுக் கணக்கு - business entity account தனது கணக்கு - own account. இங்கே குதிரை வாங்கப் பணம் எடுத்தது சொந்த நிலவறையில் இருந்தாகும். அதாவது தனது கணக்கு. அதிற் செல்வம் குறைந்தால் கன்னாப் பின்னாவெனப் பாண்டியனுக்குச் சினம் வரத்தான் செய்யும். :-)))))) சினமுற்ற அரசன் ஓலை விடுக்கிறான்.

”தென்னவர் பரவும் தென்னவன் ஓலை: தென்னவன் பிரம ராயனே காண்க!
பொன்னிறை அறையில் பன்முதல் கொண்டு புரவிகொண்டு அணைவான் பரிவொடும் போனான்
என்னினைந்து இன்னம் வந்திலன் அமைச்சற்கு இப்படிச் செய்யத் தக்கதோ கடிது
மன்னிய ஆடல் புரவி கொண்டு அடைவின் வருவது கருமம்; மற்றது பழுதால்”

அங்குமிங்கும் அலையாது தான் சொல்ல வந்ததைப் பொட்டில் அடித்தாற் போலச் சொல்லும் ஒரு மடல். final warning from the king. இப்படித்தான் நம்பியார் திருவிளையாடல் நமக்குத் தெரிவிக்கிறது. [பாட்டின் தோரணை அரசனின் அகவை மாணிக்கவாசகருக்கும் கூடியதோ என்று எண்ண வைக்கிறது.] மீண்டும் இறைவனிடம் முறைப்பாடு நடக்கிறது. ”பெருந்துறை அந்தணர் முந்நூற்றுவரின் (தில்லை மூவாயிரவர் போல திருப்பெருந்துறை என்பது 300 பேர் கொண்ட சதுர்வேத மங்கலம்.) நிலத்தை முன்னாள் காப்பாற்றிக் கொடுத்த இறைவன் தம்மையும் இக்கட்டிற் காப்பாற்றிக் கொடுக்குமாறு” மாணிக்க வாசகரிடமிருந்து வேண்டுகோள் எழுகிறது. கூடவே “போற்றியென் வாழ்முதலாகிய பொருளே! புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர் கொண்டு” என்று திருப்பள்ளியெழுச்சிப் பதிகம் எழுகிறது.

[இங்கே கவனிக்க வேண்டும். பள்ளியெழுச்சிப் பதிகம் எழுந்தது பெருந் துறையில்; அதனோடு தொடர்புசொல்லி இன்று நாம் ஓதும் திருவெம்பாவை எழுந்தது திருவண்ணாமலையில். ஒரு சில ஆர்வலர் திருப்பாவையையும், திருவெம்பாவையும் ஒப்பீடுசொல்லி மாணிக்கவாசகர் ஆண்டாளுக்குப் பிந்தியவர் என்று சொல்ல முற்படுவார். அச்சிந்தனை எனக்குப் புரிபட வில்லை. அவர் அதைத் தெளிவாக வரையறை செய்து வெளியிடுவாரானால் பின்வினையாற்றலாம்.]

”கனத்த புரவி வந்துசேரும்; கருணையுற வேண்டும்” என்றவோலை இறைவன் அறிவுறுத்தலின் பின் மாணிக்கவாசகரிடமிருந்து பாண்டியனுக்கு ஓலை எழுகிறது. அதனைத் தொடர்ந்து வாசகரும் மதுரை செல்கிறார்.

மதுரை வந்த மாணிக்கவாசகரை மண்டபத்தில் இருத்தி முதலில் மன்னன் என்ன கேள்வி கேட்கிறான் தெரியுமோ? “குதிரை வாங்க எடுத்துப்போன மறங்கடிப் பொருளுக்கு எவ்வளவு வாசி (discount) வாங்கினாய்? [மறங்கடிப் பொருள்= வெற்றி, திறை, தண்டம் முதலியவற்றால் அரசன் தேடிய பொருளை மறநிலைப் பொருளென பிங்கலம் சொல்லும்.] குதிரைகள் எத்துறையில் இருந்து வந்தன? என்னென்ன நாடுகள்? எவ்வளவு குதிரைகள் உயர்தரம்? எவ்வளவு போதுந்தரம்? என்னென்ன நிறங்கள்? எனக்காக வாங்கும்போது நீதி துலங்கிய கணங்களுண்டா? கூசாமற் சொல்?” ஆக ஐயப்படும் பாண்டியனுக்கு “வாசி” தான் பெரிதாகத் தெரிந்திருக்கிறது.

மறங் கடி பொருள் தனக்கு வாசி எவ்வளவு கொண்டீர்?
இறங்கிய துறை, நாடு ஏதேது? எவ்வளவு உயர்பு? போது?
நிறங்கள் தாம் என்ன? எமக்கேற்றானது என்போது நீதி
பிறங்கிலக் கணங்கள் என்னை? பேசிடீர் கூசலன்றி

பார்த்தீர்களா? உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை முற்றிலும் உலகியல் நோக்குற்ற இவனா சிவலோகம் தேடிய வரகுணன்? இல்லவே இல்லை. அந்த வரகுணன் வேறு. இவன் வேறு. இவன் ஒருகால் வரகுணன் மகனாகலாம். முழுக்க முழுக்கத் தன்னாட்டை  வலியின்மையிலிருந்து விடுவித்து, அதை வலிதாக்கி, மாற்று நாடு பிடிக்கத் துடிக்கும் பேராசைக்காரன் இவன். சிவ லோகம் தேடிய வரகுணன் மாணிக்கவாசகருக்குப் பிரம்படிகள் கொடுக்கச் சொல்வானோ?

சுற்றி வளைத்து ஊகிக்கிறோம். மணிவாசகர் அமைச்சர் பொறுப்பிலிருந்தது பெரும்பாலும் வரகுணன் மகனிடம் தான் போலும். இவன்காலத்தும் ஒரு சோழர் படையெடுப்பு நடக்கிறது. அதை விடைக்குறி அம்பெய்த திருவிளையாடலிற் பார்ப்போம்.

குதிரைகள் ”மாராட்டகம் - maharashtram, காம்போசம், ஆரியம், சாம்பிராணி (இரான்)” ஆகிய இடங்களில் இருந்து இறங்கியதாக மாணிக்க வாசகர் சொன்னதாக நம்பியார் திருவிளையாடல் சொல்கிறது. இவ்விடங்கள் 12 ஆம் நூற்றாண்டு விவரிப்பு. மாணிக்கவாசகர் கால விவரிப்பல்ல. இங்கு ஓர் குறிப்புமுண்டு. சாம்பிராணி தவிர, மற்ற எல்லாமே இந்தியத் துணைக்கண்ட இடங்கள் தாம். அதாவது, குதிரைகள் முதலில் வந்திறங்கி மீண்டும் மறு ஏற்றுமதியாகும் நாடுகள். இதன் பொருளென்ன? குதிரை வணிகக் கடைக் கோடியில் தமிழர் இருந்திருக்கிறார். எனவே பெரும்பாலும் இவருக்குக் குதிரைகளின் கடைத்தரம் வந்திறங்கவே வாய்ப்புண்டு. பெரும்பாலும் மேற்குக் கரையினரை விட இவர் குதிரை வணிகத்தில் கட்டளையிடும் உயரத்தில் இருந்திருக்க மாட்டார். Most probably they were at the receiving end (in all senses). அதன் காரணத்தால் குதிரை வாங்குவதில் இவர் கணக்கற்ற பொன் செலவழித்திருக்க வேண்டும்.

குதிரைகள் பற்றிப் பல்வேறாய் விவரித்த மாணிக்க வாசகர் சொக்கன் ஆலயத்திற்குள் புகுந்து மீண்டும் இறைவனை வேண்டுகிறார். “அஞ்சேல்” என்ற இறைவனின் வாக்கு இவருக்கு நம்பிக்கை தருகிறது. வீட்டுக்கு வருகிறார். உறவினர் தாம் கேள்விப் பட்டதைச் சொல்லி மாணிக்கவாசகரை மீண்டும் கலவரப் படுத்துகிறார். ”இறைவனின் உதவியால் நிலைமை சரியாகும்” என அவருக்கு மணிவாசகர் சொல்கிறார். அரசன் மதுரை நகரில் உள்ள குதிரைப்பந்தி, வையாளி (குதிரையும், தேரும் போகும் வியதி>வீதி), சங்க மண்டபம், பண்டசாலை, கொந்த விழலம் (குந்தங்கள் = ஈட்டிகளை வீசியெறியும் இடங்கள்), கல்மாடம், மாமடம், கோபுரங்கள், சொக்கனின் பெரிய கோயில், தோரண வாயில், வீதி ஆகியவற்றை அலங்கரித்து ”மதுரை இந்திரன் எழுப்பிய ஊர்” என்று சொல்லும் வகையிற் சோடிக்கிறார்.

இதோடு ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல் முடிகிறது. இதனோடு தொடர்புடைய பதிகங்கள் மொத்தம் 13. அடுத்து நரி குதிரையான திரு விளையாடல் தொடங்குகிறது.

இறைவன் தன்னை ஆண்டுகொண்டு அருளியதைத் திருவாசகம் எங்கும் மணிவாசகர் அகச்சான்று தருகிறார். அவற்றிற் சில இடங்களை இங்கு தங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன். இந்த அருளிச்செயலை மறுப்பவர் மாணிக்கவாசகர் சொல்வதேயே மறுப்பவர் ஆவார். ஞானோபதேசம் செய்த திருவிளையாடலையே மறுப்பவர் ஆவார். அவரிடம் மாணிக்கவாசகர் எந்த நூற்றாண்டென வாதாடிக் கொண்டிருப்பதில் பயனேயில்லை.
---------------------------------

அந்தணன் ஆகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்

(ஞாலம்>ஜாலம்)
- கீர்த்தித் திருவகவல் 42-43

திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
கருவார் சோதியில் கரந்த கள்ளமும்

- கீர்த்தித் திருவகவல் 54-55

என்நேர் அனையோர் கேட்கவந் தியம்பி
அறைகூவி ஆட்கொண் டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்

- திருவண்டப் பகுதி 147-149

அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையை

- போற்றித் திருவகவல் 75-76

மெய்திரு வேதியன் ஆகி வினைகெட
கைதர வல்ல கடவுள் போற்றி

- போற்றித் திருவகவல் 88-89

என்னையும் ஒருவன் ஆக்கி யிருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி

- போற்றித் திருவகவல் 129-130

மாறி லாதமாக் கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறீ லாப்பதப் பரிசு பெற்றநின்
மெய்மை அன்பருன் மெய்மை மேவினார்
ஈறி லாதநீ எளியை யாகிவந்
தொளிசெய் மானுட மாகம் நோக்கியும்
கீறி காதநெஞ் சுடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே

- திருச்சதகம் 91

செங்கண் நெடுமாலும் சென்றிடத்தும் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெம்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்

- திருவம்மானை 1

இதேபோல திருவம்மானை 2-14 ஆம் பாடல்கள்.

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

- திருக்கோத்தும்பி 11

நான்தனக்கு அன்பின்மை நானுந்தா னுமறிவோம்
தானென்னை ஆட்கொண்ட தெல்லாரும் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ

- திருக்கோத்தும்பி 13

கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ

- திருக்கோத்தும்பி 14

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்தன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கொத்தும்பீ

- திருக்கோத்தும்பி 17

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அரியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ

- திருத்தெள்ளேணம் 1

ஆவா அரியயனிந் திரன்வானோர்க் கரியசிவன்
வாவாவென் றென்னையும்பூ தலத்தேவலித் தாண்டுகொண்டான்
பூவா ரடிச்சுவ டெந்தலைமேற் பொறித்தலுமே
தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ

- திருத்தெள்ளேணம் 7

பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடி யென்தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ

- திருப்பூவல்லி 10

ஆணோ, அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யவாட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவி
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ

- திருப்பொன்னூசல் 5

கொந்தண வும்பொஇற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண நாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தன ராமிவ நென்றிங் கென்னையும் ஆட்கொண் டருளூம்
செந்தழல் போற்றிரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய்

- குயிற்பத்து 10

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறுமெழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி
திருப்பெருந் துறையுறைக் கோயிலுங் காட்டி
அந்தண நாவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே

- திருப்பள்ளியெழுச்சி 8

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க் கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற
முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பா னேஎம் பரமா என்று
பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போ தனைவ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே

-புணர்ச்சிப் பத்து 10

அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகிறேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதமெனக்குப் புராண நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே

- குழைத்தபத்து 10

நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல்லார் எம்பிரானாவாரே

- திருவார்த்தை 7

அன்புடன்,
இராம.கி.

Thursday, September 29, 2011

மாணிக்கவாசகர் காலம் - 4

கதைத் தொடக்கம்:

மாணிக்க வாசகரும் மற்றோரும் தானைவேல் வாகைமாறனைச் சூழ்ந்து திருவோலக்க மண்டபத்தில் இருக்கையில் குதிரைத் துறைக்காரன்  அரச குதிரைகள் “சீதவெம்மை, வாதநோய், ஆதிவெப்பு, கண்டமாலை, கவுசி, மகோதரம், மண்டசாலம், வெஞ்சூலை, அலகுநோய், தண்டைநோய், பிரமேகம், தலைக்கனம்” எனப் பல்வேறு வாதைகளிற் பாதிப்புற்றதைச் சொல்லி, ”மற்ற குதிரைகளும் நோய்வாய்ப்படும் நிலையில் உள்ளதால், புதுக் குதிரைகள் வாங்கியே குதிரைப்படையைக் காப்பாற்ற முடியும்” என்றுஞ் சொல்கிறான்.

ஆக, 4,5 குதிரைகள் அல்ல, கணக்கற்ற குதிரைகள் நோய்வாய்ப் பட்டுள்ளன. ஒரு குதிரைப்படையே இல்லாது போகும் நிலை பாண்டிய நாட்டிற்கு ஏற்படுகிறது. அடுத்த நாட்டின் மேல் (இது பெரும்பாலும் சோழநாடு. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய திருவிளையாடலில் சோழனே பாண்டியனின் மேல் படையெடுத்து வருகிறான்.) படையெடுக்க விழையும் பாண்டியன், நிலையின் கனத்தை உணர்கிறான். தன் சொந்த நிலவறையில் இருந்து வேண்டிய செல்வம் எடுத்துப் போய் “தாவு மா இறங்கும் பட்டினத்தில்” குதிரைகளை வாங்கி வரச் சொல்கிறான்.

அரச கட்டளை கேட்ட மாணிக்க வாசகர் சோழப் பெருந்துறையில் குதிரை வாங்கப் புறப்படுகிறார். அவர் ஏன் சோழநாட்டிற்குப் போகிறார்? - ஆழப் புரிந்துகொள்ள வேண்டிய கேள்வி. சோழநாட்டுப் பெருந்துறை பாண்டித் தொண்டியில் இருந்து வடக்கே 20/25 கி.மீ.தொலைவு கொண்டது. மிழலைக் கூற்றத்தில் (இற்றைப் புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி வட்டம்) உள்ளது.

மிழலைக் கூற்றம் சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே மாறி மாறி வந்த பகுதி. அடிப்படையில் சோழநாடே. (தெள்ளுநீர் வெள்ளாறு பாய் திருமிழலை நாட்டுப் பெருந்துறை” என்று சிவலோக நாயகி பொன்னூசலில் ஒரு தொடர் வரும்.) கோயிற் கல்வெட்டுக்களில் இத்தலம், ”மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம், பிரமதேசம், தனியூர், திருப்பெருந்துறையான பவுத்திர மாணிக்கச் சதுர்வேத மங்கலம்” என்று குறிப்பிடப்படும். புவுத்திரம் என்பதன் மூலம் ”கடலுக்கு அருகிலுள்ளது” என்று விளங்கும்.

பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் எல்லையான வெள்ளாறு, கடலோடு கலக்குமிடத்தில் இன்றிருப்பது மண(ல்)மேற்குடி.  அதற்கும் மேற்கில் ஆற்றொட்டி உள்ளதை மணலூர் என்பார். [இம் மணலூரையும் ஆய வேண்டும். கீழடி மணலூரும் இதுவும் தொடர்புற்றனவோ என்ற ஐயமுண்டு.] ஆற்றோடு நடந்தால் ஆவுடையார் கோயிலுக்கும் - திருப்பெருந்துறைக்கும் - கடலுக்கும் இடைத்தொலைவு ஏறத்தாழ 22/23 கி.மீ.

திருப்பெருந்துறை இயற்கைத் துறையல்ல. மரக்கலங்கள் அங்கு அணைந்து, குதிரைகள் இறங்கவேண்டுமெனில், ஆற்றோடு சேர்ந்த ஆழம் பெரிதிலாக் கடலும் ஆறும் சேரும் செயற்கைக் கழியாய் அது இருக்க வேண்டும். ஆற்று வெள்ளக் காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். [பாண்டியரின் கடல்முகத் தொண்டியில் அன்றி ஆற்றுக் கழிமுகத்திலுள்ள சோழர் பெருந்துறையிற் குதிரைகள் இறங்கியது நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒருவேளை குதிரைகளை இறங்கமுடியா அளவுக்கு கீழைத் தொண்டியின் கடல் அலைகள் சரவல் தந்தனவோ? ஞாவகப்படுத்திக் கொள்க. தொண்டியிற் கழிகள் கிடையா.]

கழியும் துறையும் பொருளில் ஒன்றே. இதுபோற் கோவும் பெருவும் ஒன்றே. ”பெருந்துறையே கோகழி, கோகழியே பெருந்துறை.” கோகழிப் பொருளைப் பெருந்துறையிற் தேடாது கருநாடகத்திலும், திருவாவடுதுறையிலும் தேடுவோர் ஆள்வுடையார் கோயிலுக்கு வந்து,  ஊர் நிலவமைப்பைச் சுற்றிப் பார்த்ததிலை போலும். occam's razor சிந்தனையையும் கேள்வியுற்றது இல்லை போலும். திருவாசகப் பாக்களை அலசுகையில் கோகழி பற்றிப் பேசுவோம்.

மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டென அவக்கரமாய்ச் சொல்வோர், மன்னர்களின் வலிமை, இன்மைகளைப் பார்க்கத் தவறுகிறார். மாணிக்க வாசகர் காலத்துப் பாண்டியன், குலைந்துபோன குதிரைப் படையை மீளக் கட்டமுற்படும் ஒரு வலிகுறைந்த அரசன். அவன்காலச் சோழனும் கூட வலிந்தவன் இல்லை. அப்படியிருப்பின், பாண்டிய முதலமைச்சன் ”ஏதோ தன் சொந்தத் தோட்டத்திற் புகுவது போல்” சோழநாட்டுப் பெருந்துறையுள்  குதிரை வாங்க நுழைந்திருக்க முடியாது. தேங்காயைப் பிடித்து அமுக்கியது போல சோழன் மாணிக்கவாசகரைச் சிறைக்குள் தள்ளியிருப்பான். (நினைவு கொள்க;  பாண்டியனின் குதிரைப்படையை மீளுருவாக்கப் புறப்பட்டவர் மாணிக்க வாசகர். வெறும் 4,5 குதிரை வாங்க வந்தவரல்ல அவர். இப்படையை மீண்டும் கட்ட விடாது தடுக்கவே உருப்படியான சோழன் முனைந்திருப்பான்.)

இன்னொரு விதமாய் எண்ணினால், எல்லைப் பகுதிகளில் அதிகாரமில்லாத சோழ அரசர் ஆண்ட காலம் அது. குதிரை வாங்கப் புறப்பட்ட அடுத்த நாட்டுப் பேரமைச்சன் ஒரு மாதத்திற்கும் மேல் தங்கி சோழநாட்டின் எல்லை மீற முடிந்துள்ளது. நமக்கு வியப்பாகவில்லையா? அப்படியெனில், பாண்டியன், சோழன் இருவருமே வலிகுறைந்த காலம் அதுவோ? எந்த நூற்றாண்டு? 9 ஆம் நூற்றாண்டு விசயாலயன் காலமா? இருக்காதே? தஞ்சை/ பழையாறையில் இருந்து பெருந்துறைக்குச் சோழன் தாவி வரமுடியுமே? தஞ்சையில் இருந்து 90 கி.மீ. கூட இருக்காதே? பெருந்துறையில் பாண்டிய அமைச்சன் குதிரை வாங்க வந்த செய்தி சோழனுக்குத் தெரியாது போனதோ?

மாணிக்க வாசகர் பெருந்துறையில் இருந்த காலம் எத்தனை நாட்களோ தெரியாது; அது 11 மாதங் கூட இருந்திருக்கலாம். பெருந்துறையிலிருந்து மதுரை வரை இப்பகுதிகள் எல்லாம் அக்காலத்தில் பெருங்காடுகளே. கானப்பேர் என அக்காடுகளுக்குப் பெயரிருந்தது அப் பேற்றை, அடர்த்தியை,  நமக்கு உணர்த்தும். சிவகங்கைக் காடுகள் அழிக்கப்பட்டது 19 ஆம்  நூற்றாண்டுக் கிழக்கிந்தியக் கும்பனியின் கர்னல் அக்னியூவால்  தான். அதுவரை உள்ளூர் ஆட்கள் கூட நுழையவொண்ணாப் பெருங்காடாய் அது இருந்தது. சங்க காலத்திலிருந்து அப்படியே. கானப்பேர் கடந்து கோட்டை பிடித்தனாலேயே ஒரு சங்ககாலப் பாண்டியன், ”கானப்பேர் எயிற் கடந்த உக்கிரப் பெருவழுதி” என்று பெயருற்றான். அக்காட்டின் நடுவே எங்கெல்லாம் ஊர்கள் எழுந்தனவோ, அங்கெல்லாங் கோயில்களும் எழுந்தன. திருப்பூவணம், திருக்கானப்பேர், திருப்புத்தூர், திருவாடானை, திருப்புனல்வாயில். எல்லாம் ஒரு பாதைக்கு அருகில் உள்ளவையே. திரு உத்தரகோசமங்கை மட்டும் சற்று தள்ளியிருந்தது.

மாணிக்க வாசகர் மதுரையிலிருந்து திருக் கானப்பேர் வழியாக வந்து  இடைத் தங்கிப் பின் பெருந்துறை செல்கிறார். நம்பியார் திருவிளையாடல் அப்படித் தான் சொல்கிறது. கானப்பேரும் 12 ஆம் நூற்றாண்டில்  கானையம்பதி என்றும் பெயர் பெற்றிருந்தது. காளையார் கோயில் அப்போது கோயிலுக்கு மட்டுமான பெயர். இன்று ஊருக்கும் அதே பெயர். 12 ஆம் நூற்றாண்டிலேயே சுந்தரேசர், சோமேசர், காளையீசர் என்று 3 திருநிலைகள் அங்கு இருந்தன. அவை மூன்றும் எப்பொழுதெழுந்தன? தெரியாது. கானப்பேருக்கு கந்தவனம் என்ற பெயரும் இருந்தது. நம்பியார் புராணம் பதிப்பித்த  உ.வே.சா. ஒரு பொன்னே போலுங் குறிப்புங் கொடுக்கிறார். அதை அப்படியே தருகிறேன்.

----------------------
விக்கிரம சோழன் மகள் சுகந்த கேசியை மணம் புரிந்த வரகுண பாண்டியர், அவளுடைய அழகின் மிகுதியைக் கண்டு அத்தலத்திற் சிவபெருமானுக்கு அர்ப்பணஞ் செய்தனர் என்பதும் அவளுடைய கூந்தலின் நறுமணம் எங்கும் பரவியது பற்றி அத்தலம் சுகந்தவனம் அல்லது கந்தவனம் என்று பெயர் பெற்றது என்பதும் அத் தலபுராண வரலாறுகள்.
----------------------

இத் தலபுராணம் தேடிக் கொண்டுள்ளேன். ஆயினும் உ.வே.சா. மூலம் கிடைத்தது அருஞ்செய்தி. திருக்கோவையாரிற் சொல்லப்படும் வரகுண பாண்டியனின் மாமன் பெயர் விக்கிரம சோழனாகும். ஆக வரகுணன் மேற் படையெடுத்து வந்தது அவனுடைய மைத்துனனே. Typical Tamil behavior. அண்ணன் தம்பி, மாமன் மச்சான் பூசல்கள் நம்மை எவ்வளவு அலைக் கழித்துள்ளன?

நாமறிந்து ஒரு விக்கிரம சோழன் குலோத்துங்கனுக்குப் பின் பொ.உ. 1118-1135 இல் ஆட்சி செய்தான். இவர் சொல்லும் வரகுணனோ 9 ஆம் நூற்றாண்டு (பொ.உ.862/863). கால உறவுகள் கொஞ்சமும் பொருந்தவில்லையே? வேறொரு விக்கிரம சோழன் 9 ஆம் நூற்றாண்டில் இருந்ததாய் வரலாற்றில் தெரிய வில்லையே? நாம் எல்லோரும் சேர்ந்து மாணிக்கவாசகர் காலத்தை 12 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளுவோமா? அன்றி அடம்பிடித்து 9 ஆம் நூற்றாண்டென்று சொன்னால் அக்காலத்தில் இருந்த சோழன் விசயாலயன் ஆயிற்றே? (பொ.உ. 848-881) என் செய்வோம்? விசயலாயனின் கடைசிப் பத்தாண்டுகளில் அவன் மகன் ஆதித்த சோழன் தானே நடைமுறையிற் சோழ அரசனாய் இருந்தான்?

யாரோவொரு பாண்டியன் வரகுணனாகி அவன் காலத்துச் சோழ மாமன் விக்கிரமனாகிய காலம் பின் எது? அதைக் காணாது குத்துமதிப்பில் மாணிக்க வாசகர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றால் எப்படி? வரலாற்றுப் பட்டகைகள் ஒப்புக்குத் தானா? அவற்றின் அடிப்படையில் எம்முடிவுங் கிடையாதா? உண்மையில் உ.வே.சா. கொடுத்த காளையார் கோயிற் புராணச்செய்தி போதுமே, 9 ஆம் நூற். வரகுணன் பொருத்தத்தை சுக்குநூறாய் உடைத்தெரிய?
உடனே சிலர் நாணிக் கொள்வரோ? கோயிற் புராணங்கள் கற்பனை என்று சொல்லி ஒதுக்குவாரோ? தம் கருதுகோளை உண்மை என்று சாதிக்க என்ன வேண்டுமாயினும் சொல்வது சிலருக்கு வரலாற்றியல் அறம் போலும் .:-)))))))

அன்புடன்,
இராம.கி.

Wednesday, September 28, 2011

மாணிக்கவாசகர் காலம் - 3

ஞானோபதேசம் செய்த திருவிளையாடல்:

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் என்பது 27 ஆம் திருவிளையாடலாகும். இப் புராணம் திருவிளையாடல்களைக் கால வரிசைப்படி விவரிக்கவில்லை எனினும், ஒரு குறிப்பிட்ட தொடர்ச்சியைக் குறிக்கும் திருவிளையாடல்களாய் ஒருங்கே தான் வைக்கப் பட்டுள்ளன. மாணிக்க வாசகரைப் பேசும் 4 திருவிளையாடல்களும் (27,28,29,30) இது போன்று ஒருங்கே ஒரு தொகுதியாய் வைக்கப் பட்டுள்ளன.

அதே போல் வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடலும், அவன் மகன் காலத்திய விடைக்குறி அம்பெய்த திருவிளையாடலும், அவன் பேரன்(?) காலத்திய உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடலும், மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடலும் தொடர்ச்சியாக ஒருங்கே வைக்கப் பட்டுள்ளன.

(”என்ன இது? ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் வரகுணனுக்கு மகனா? இது என்ன புதுக் கதை?” என்று படிப்போரில் யாரோ கேட்பது எனக்குப் புரிகிறது. நமக்கு இதுவரை சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாற்றின்படி இரண்டாம் வரகுணனுக்குப் பிள்ளைப் பேறே கிடையாது. அவனுக்குப் பின் அவன் தம்பி வீர நாராயணனும், வரகுணன் தம்பி மகன் இராசசிம்மனும் தான் அடுத்தடுத்துப் பட்டமேறுகிறார் என்று சொல்லிவந்தார். அப்படித்தான் தமிழக வரலாறு பதிவு செய்கிறது. இங்கோ நம்பியார் திருவிளையாடற் புராணம் வரகுணன் மைந்தன் என்பவர் பற்றி வெளிப்படையாகப்  பேசுகிறது.

அப்படியெனில் நம்பியார் திருவிளையாடலில் வரும் வரகுணனும் ஒன்பதாம் நூற்றாண்டில் வரும் இரண்டாம் வரகுணனும் வெவ்வேறு ஆட்கள் என்று தெளிவுற முடியாதா? முன்முடிவின்றி ஆயும் சிந்தனையாளருக்கு இது விளங்க வேண்டுமே?. அதன் விளைவால் 9-ஆம் நூற்றாண்டை ஒதுக்கித் தள்ளி மாணிக்கவாசகர் கதையில் வரும் வரகுணனை அடையாளங் காண வேறு நூற்றாண்டு தேடவேண்டாமா? ஆனால், இது போலும் பட்டகைகளை (facts) எல்லாம் தம் கவனத்திலிருந்து ஒதுக்கி “ஒன்பதாம் நூற்றாண்டை” எப்படியாவது நிறுவவிளையும் ஆய்வாளர் மகப்பேற்றுச் சிக்கலை எப்படிக் கண்டு கொள்வார்? இதைக் கீழே இன்னொரு முறை பார்ப்போம்.)

பின்வந்த 4 திருவிளையாடலையும் ஒருங்கு சொல்வதில் மேலும் ஒரு பொருளுண்டு. வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடற் கதையில் சோழர் படையெடுப்பு நடக்கும். வலிகுறைந்த வரகுண பாண்டியனுக்கு இறைவனே உதவிசெய்வார்.

வரகுணன் என்ற பெயர் 8-9 ஆம் நூற்றாண்டுகளிற்றான் எழும் என்பவர்க்கு ஓர் இடை விலகல். வரம் என்பது பரம் என்பதன் எழுத்துப் போலி. அதன்படி வரகுணன் எனினும் பரகுணன் எனினும் ஒரே பொருள்தான். ”மேலான குணங் கொண்டவன்” வரகுணன் ஆவான். இப்பெயரைத் தலை கீழாக்கிக் குணபரன் - குணங்களில் மேலானவன் - என்பது மகேந்திர பல்லவனுக்குள்ள பெயர். அதாவது இப்பெயர் 8,9 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னும் தமிழில் இயல்பாய் எழும் பெயர்தான். அப்படி முன்னால் மகேந்திரவர்ம பல்லவனுக்கு இருக்குமெனில், அவனுக்கு முந்தைய வேறொரு பாண்டியனுக்கு அப்பெயர் இருந்திருக்கக் கூடாதா?  8,9 ஆம் நூற்றாண்டில் மட்டும் தான் எழ வேண்டுமா?

இன்னொரு குறிப்பையும் பாருங்கள் பிற்காலப் பல்லவனான இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் கால, 731 - 795 என்பர். முதலாம் நந்திவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவரில் ஒருவனாகிறான். காலம்  500-74 க்குள் இருக்கலாம் என்பர். இதைஉறுதி செய்ய, மேலும் ஆய்வு கூடவேண்டும்.

வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடற் கதைக்கு அடுத்த கதையில் சோழருக்குக் கருநாடக அரசனொருவன் உதவிசெய்வது நடக்கும். இக்கதையில் இறைவனின் உதவி வரகுண பாண்டியனின் மைந்தனுக்குப் போகிறது. (பெயர் குறிக்கப்படாத இம் மைந்தனிடத்தில்அவன் நடு அகவையில் மாணிக்கவாசகர் ஒருவேளை முதலமைச்சராய் இருந்தாரோ என நாம் சுற்றிவளைத்து ஊகிக்கலாம். பின்னால் பார்ப்போம். கருநாடக அரசனோடு சேர்ந்துவந்த சோழன் படையெடுப்பு - விடைக்குறி அம்பெய்த திருவிளையாடல் - அதற்கு அப்புறம் ஏற்பட்டிருக்கலாம்.)

மூன்றாம் கதையில் வரகுணனின் பேரன்(?) காலத்திற் பாண்டிநாட்டிற் பசியும் பட்டினியும் பெருகியுள்ளது. ஒருவேளை தகப்பன் காலத்துப் போருக்குப் பின் எழுந்த பஞ்சமோ, வானிலை மாறியதால் ஏற்பட்ட பஞ்சமோ, என்னவோ? பாண்டிநாட்டிற் பஞ்சம் வரலாற்றிற் பலமுறை நடந்துள்ளது. சிலம்புக் காலத்திலேயே பாண்டிநாட்டிற் பஞ்சம் தான். ”பாண்டிநாட்டிற் எப்பொழுதெலாம் பஞ்சம் ஏற்பட்டது” என்பதே எதிர்காலத்தில் யாரேனும் செய்யவேண்டிய ஆய்வுதான். அதேபோல சிலம்பின் மதுரைக் காண்ட நடவடிக்கையைப் பஞ்சகால நீட்சியாய் யாரேனும் பார்த்தாரோ? [சிலம்பின் காலம் என்ற என் கட்டுரையில் அதைத் தொட்டுப் பார்த்துள்ளேன்.]

மூன்றாம் கதையில் எல்லோருக்கும் சோறுபோட்டு உதவிசெய்யும் வேளாளன் ஒருவனின் செல்வமெலாம் கொடையாலேயே கரைந்து போகிறது. அள்ள அள்ளக் குறையாத கோட்டை ஒன்று வேளாளனுக்கு இறைவனாற் தரப் படுகிறது. (இதைத் தான் ”உலவாத” ஒரே சொல்லில் அக் காலத்திற் சொல்லி யிருக்கிறார். நாம் என்னவென்றால் “non-diminishing" என்ற கணிதச் சொல்லுக்குத் தமிழில் இணை தேடிக் கொண்டுள்ளோம். உலவாக் கோட்டை = non-deminishing koottai)

நாலாம் கதையில் இடைவிடாப் பஞ்சத்தைத் தொடர்ந்து பாண்டிய நாடு கருநாடக அரசனுக்குக் கீழ் முற்றிலும் வந்துவிடுகிறது. சமண மதம் அரச மதம் ஆகிறது. இக் கருநாடக அரசன் பெரும்பாலும் களப்பாள அரசனாய் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். (இவர் சளுக்கிய அரசரில்லை; அவருக்கும் முற்பட்டவர் என்றே நாம் ஊகிக்கிறோம்.) எத்தனை காலம் கருநாடக அரசர் பாண்டிநாட்டை ஆண்டார் என்பது நமக்குத் தெரியாது.

[களப்பாளர் கதையை இங்குநாம் பேசுவது நம்மை வேறுபக்கம் கொண்டு போகும். வேறுவாய்ப்பில் அதைச் செய்வேன்.] கருநாட அரசனுக்குப் பின் அரசாளத் தகுதியுடையோர் இல்லாததால் மூர்த்தியார் பட்டத்து யானையால் இடைக்கால அரசராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். மூர்த்தியார் பட்டத்துக்கு வந்தது கலியரசனுக்குப் பின் எத்தனையாம் ஆண்டு என்பதும் நமக்குத் தெரியாது.

மொத்தத்தில் மேற்சொன்ன 4 கதைகளையும் சேர்த்து ஒரு தொகுதியாய் பார்க்கும் போது வரலாற்றுப் போக்கு ஓரளவு  தென்படுகிறது. பார்த்தீர்களா? பேச்சுவாக்கில் நிறையச் செய்திகளைத் தொகுக்க வேண்டும் என்ற கதியில் வேறெங்கோ போய்விட்டோம். மாணிக்க வாசகரின் பெயர், குடும்பப் பெயர் போன்றவற்றில் இனித் தொடங்குவோம்.

11 ஆம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி எழுதிய திருப்பண்ணியர் விருத்தம் 58 ஆம் பாடலால் சிவபாத்தியன் என்ற இயற்பெயர் வாதவூரருக்கு இருந்திருக்குமோ என்று ஒரு சிலர் ஐயுறுவர். அப்பாடல் கீழ்வருமாறு:

வருவாச கத்தினில் முற்றுணர்ந் தோனைவளர் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.

சிவபாத்தியன் என்ற பெயரை, இறைவனால் அறிவோதப் பெற்றதால் (“உபதேசிக்கப் பட்டதால்”) அவன் திருவடிகளுக்கு ஆழ்ந்த, பாத்தியப்பட்ட காரணப் பெயராகவும் நாம் இதைக் கொள்ள முடியும். நானறிந்தவரை மாணிக்க வாசகரின் இயற்பெயர் பற்றிய முடிவிற்கு வருவதற்கு இப்போது கிடைத்துள்ள பட்டகைகள் பற்றாது.

நம்பியார் திருவிளையாடலில் வாதவூரரென்ற ஊர்ப்பெயரே மாணிக்க வாசகருக்குப் பெரிதுஞ் சொல்லப் படுகிறது. அவரது இயற்பெயர் சொல்லப் பட வில்லை. மானமங்கலம்/மானபுரம் என்பவை நம்பி திருவிளையாடலின் படி அவர் குடும்பத்தாருக்கான பட்டப்பெயராகவே பயன்பட்டுள்ளன. அதாவது அவர் முன்னோர் ஊர் மானபுரம் எனும் மானமங்கலமாகும். அவ்வூரிலிருந்து மதுரைக்கருகில் 12 கி.மீ. தொலைவு திருவாதவூருக்கு ஏதோவொரு காலத்தில் அவர் குடிபெயர்ந்திருக்கிறார். மான(வீரன்) மதுரையை அறிந்தவர் மானமங்கலம்/மானபுரம் என்பவை இதன் தொடர்போ என்று ஐயுறுவர்.

மாணிக்க வாசகரை ”வடுகப்பிள்ளை”யாய்க் காட்டுதற்கு அரும்பாடுபட்டுக் கல்வெட்டுகளுள் தேடுவோர் இம் மானமங்கலத்தையும் தேடினால் நன்றாக இருக்கும். [இராமநாதபுரம் மாவட்டக்காரரும் இதைத் தேடலாம்.] திருவாசகம் எங்கணும் தென்பாண்டி நாட்டையே விடாது (ஆழ்ந்து) குறிக்கும் ஆளுடை அடிகள் ஒரு வடுகப் பிள்ளையாக இருப்பாரா என்பதில் எனக்குப் பெரும் ஐயம் உண்டு. பொதுவாகத் தென்பாண்டிக்காரர் அளவிற்குமீறித் தம் ஊரோடு ஒட்டியவர். அதிலும் ஊர்ப்பெருமை பேசுகிறவர். சரியான பாண்டி நாட்டுக் காரரான மாணிக்கவாசகரும் அப்படியே தான் தெரிகிறார். வடுகர் பாண்டிகளாய் மாறி வடுக அடையாளந் தொலைத்தது மிக மிக அரிதாய்க் கேட்ட கதை.

மாணிக்கவாசகர் மொத்தம் 16 ஆண்டுகள் கல்வி கற்றதாக நம்பியார் திருவிளையாடல் சொல்லுகிறது. ஐந்தாறு அகவையில் கற்கத் தொடங்கி யிருந்தால் அவர் கோத்தொழிலுக்கு (bureacracy) வரும்பொழுது அகவை 21/22 ஆகியிருக்கும். 32 ஆம் அகவையில் இறைவனோடு சோதியில் ஒன்றிக் கலந்தார் என ஒரு தனிப்பாட்டு சொல்லும்.

அப்பருக்குஎண் பத்தொன்று அருள்வாத வூரருக்கு
செப்பிய நாலெட்டிற் தெய்வீகம் - இப்புவியில்
சுந்தரர்க்கு மூவாறு தொல்ஞான சம்பந்தர்க்கு
அந்தம் பதினாறு அறி.

வாதவூரருக்கு நடந்த அருளிச்செயல் 31 ஆம் அகவையில் நடந்ததெனில் கிட்டத்தட்ட 9/10 ஆண்டுகள் அவர் அரச கருமத்தில் ஆழ்ந்திருந்தார் என்பது பொருள். மாணிக்க வாசகர் முதலமைச்சர் பொறுப்பிற்கு வர இத்தனை ஆண்டுகள் ஆயின போலும். நம்பியார் திருவிளையாடலை ஆழ்ந்து படிக்கும் போது அவருக்கு வேலை கொடுத்த பாண்டிய அரசன் அவரினும் மூத்தவன் (மிக மூத்தவனாகவும் தெரியவில்லை) என்ற புரிதலே நமக்குக் கிடைக்கிறது.

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தின் படி மாணிக்கவாசகர் அரச கருமம் செய்தது அரிமர்த்தன பாண்டியனிடத்திலாகும். அப்பெயரை நம்பியார் திருவிளையாடல் சொல்வதேயில்லை. அரிமர்த்தனன் என்ற பெயரைக் கேட்டாலே அது அரிகேசரி மாறவர்மன், அரிகேசரி பராங்குச மாறவர்மன் ஆகியோர் பெயரை நினைவு படுத்தும். கேசரி என்பது சடையன் என்ற பொருளில் பாண்டியர் குடிப்பெயரின் வடமொழி ஆக்கம். அரிகேசரி என்பது பல்லவரை வெற்றி கொண்ட பாண்டியரெனப் பொருள்கொள்ளும். (பல்லவர்க்கு அரி = சிங்கம் என்பது கொடி அடையாளம்) அரிகேசரி பராங்குச மாறவர்மனுக்கு முன் பல்லவரைத் தொலைத்தவர் யாருமில்லை.

பல்லவர் என்ற குறிப்பு திருவாசகத்தின் முழுதும் கிடையாது. [இத்தனைக்கும் குயிற்பத்தில்,

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூவாய்

என்று 7ஆம் பாடலில் சீர்ப்புயங்கன் மூவேந்தராகத் தோற்றமுற்று வரக் கூவுவதைப் பற்றிப் பேசுவார், ஆனால் எந்தப் பல்லவனையும் பற்றி இங்கு பேச மாட்டார். இது நமக்கு விந்தையாகத் தெரிகிறது. பல்லவர் காலத்தின் பின் மாணிக்கவாசகர் தோன்றியிருந்தால், ”எந்தவொரு பல்லவனையும் பற்றிப் பேசாத் தோரணை ஏன்?” என நம் மனத்துள் கேள்வி எழுகிறது. பல்லவர் 300, 400 ஆண்டுகள் நம்மை ஆண்டிருக்கின்றனரே?

பல்லவனை அப்பர் பேசியுள்ளார், திருமங்கையாழ்வார் பேசியுள்ளார். மாணிக்க வாசகர் பேசவில்லை. (உடனே குதருக்கமாக சம்பந்தர் பேசினாரா? சுந்தரர் பேசினாரா? - என்ற கேள்வியை எழுப்புவர் உள்ளார்.)  பல்லவர் பற்றிப் பேசாக் காரணத்தால், மாணிக்கவாசகர் பல்லவர் காலத்திற்கு முந்தியவரோ என்றும் தோன்றுகிறது? இத்தனைக்கும் கச்சி ஏகம்பத்து இறைவன்பற்றித் திருவாசகத்திற் பேசுகிறாரே? ஆனால் கச்சிப்பேட்டைத் தலைநகராய்க் கொண்டிருந்த பல்லவர் குடியைப் பேச மாட்டாராமா?. இச்சிந்தனை ஏன் 9 ஆம் நூற்றாண்டு என அறுதி யிடுவோருக்குத் தோன்றாதுள்ளது?

என்னைப் பொறுத்தவரை, குயிற்பத்து 7 ஆம் பாடல் ஒன்றே ”மாணிக்க வாசகர் பல்லவருக்கு முந்தியவர்” என்று ஆணித்தரமாய்ச் சொல்வதில் ”இன்மைவழி” அகச்சான்றாய் அமையும். அரிகேசரியை நினைவு படுத்தும் வகையில் அரிமர்த்தனன். = பல்லவரைத் தொலைத்தவன் என்ற பொருளில் பெயரிடுவது பாட்டனைப் பேரன் திறங்களைக் கொண்டு பெயரிடுவதற்குச் சமம். அரிமர்த்தனன் என் பெயரை நாம் முற்றிலும் ஒதுக்குவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் புராணத்தில் வரும் ஞானோபதேசம் செய்த திருவிளையாடலின் இரண்டாம் பாடலிலேயே மாணிக்கவாசகர் யாரிடம் அமைச்சராய் இருந்தாரோ அப்பாண்டியன் பெயரை நல்ல தமிழில் ”தானைவேல் வாகை மாறன்” என்பார்.

சந்திர குலத்தில் நீடோர் தானைவேல் வாகை மாறன்
அந்தமில் முன்னோர்போல அவனியை அடைவிற் காத்துச்
சுந்தரற்கு அன்புபூண்டு துலங்குமா மதுரை தன்னுள்
மந்திரத் தலைவர் சூழ வளம்பட வாழு நாளில்

என்று அப்பாடல் போகும். முன்சொன்ன, மாணிக்கவாசகர் பற்றிய  4 திருவிளையாடலிலும் மாறனென்ற பட்டப் பெயரே பெரிதும் ஆளப்படும். செழியன் என்ற பெயர் ஓரோவழி தான் உரைக்கப் படும். அக்காலப் பாண்டியர் பெயர் வேலோடு சேர்ந்து வருவது நம்மைச் சற்று ஓர்ந்துபார்க்க வைக்கிறது. [கடுங்கோன் மகனான மாறவர்மன் அவனிசூளாமணியைக் கதிர்வேல் - தென்னன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் சுட்டிக் காட்டுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.]

வேல் என்ற பெயரைக் கொண்ட இன்னொரு பாண்டியனை இங்கு சிலம்பின் வழி நினைவு கொள்ளலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனுக்கு அப்புறம் வந்த தம்பி வெற்றிவேற் செழியன் எனப்படுவான். இதுபோன்ற பெயர்கள் சமயக் காலத்திற்கும், தேவார காலத்திற்கு, முற்பட்டு இருந்துள்ளன. வேல் சேர்ந்த இயற்பெயர் இருந்தது உண்மையானால் மாணிக்க வாசகரை ஒன்பதாம் நூற்றாண்டிற் பொருந்த நினைப்பவர் பெரிதும் தள்ளிப் போனார் என்றே எண்ணவேண்டியுள்ளது. (கொற்கையில் இளவரசுப் பட்டம் கட்டிக் கொள்ளும் பாண்டியர் திருச்செந்தூர் செந்தில்வேலிடம் பற்றுக்கொண்டு வேல் என்ற பெயரை தம் இயற்பெயரோடு சேர்த்துக் கொண்டனரோ என்ற ஊகம் இயற்கையாய் எழுகிறது. ”வேல்” எனப் பெயரிடுவது தென்பாண்டித் தமிழர் இடை இன்றுமுள்ள பழக்கம். பாண்டியர் இயற்பெயரை அலசிப்பார்க்க வேண்டும்.)

திருவாதவூர் என்பது சங்ககாலக் கபிலர் பிறந்தவூர். அங்கிருக்கும் இறைவன் பெயர் வேதநாயகன். (வேத புரீசர் என்றும் இப்போது சொல்லப்படுகிறார்.) மாணிக்கவாசகர் தன் பாடல்களில் பலவிடங்களில் வேதநாயகனை நினைவு கொள்கிறார்.

கதைக்குள் வருவோம்.

அன்புடன்,
இராம.கி.