Friday, June 21, 2024

பாவாணரும், குமரிக்கண்டமும்

 பாவணரை நான் பெரிதும் மதித்தவன். அவரை என் மொழியியல் வழிகாட்டியாய்க் கொண்டவன். இருந்தாலும் அவரை வழிபாடு செய்பவன் அல்லன். அவர் தவறிய இடங்கள் மிகப்பல. அவற்றில் ஒன்று இந்தக் குமரிக்கணடம். இன்னொன்று ”தமிழ் உலக முதன்மொழி” என்றது.


அவர் காலத்தில் இருந்த கடல்கிறுவியல் (oceanography) செய்திகளை, குறிப்பாக 1940 க்கு அப்புறம் வந்த செய்திகளை, அவர் அறியவில்லை. அப்போது கடல் ஆழம் பற்றிய விவரங்கள் யாருக்குமே தெரியாது. அவை 1950 களில் தான் வெளிப்பட்டன. மேலே கொடுக்கப்பட்ட படம், 1950 க்கு அப்புறமும், அதற்கு மேலும் நுண்மைப்பட்ட கடலியல் செய்திகளைக் கொண்டு உருவானது. எப்படிப் பார்த்தாலும், (அதை ஓரிடுகையில் சொல்லமுடியாது. ஒரு நூலே எழுத வேண்டும். குமரிக்கண்டம் பேசுகிறவர் எந்த அறிவியல் ஆதாரமும் தராமலேயே, வெறும் இலக்கியக் கூற்றையும், வழிபாட்டின் வழி தான் சார்ந்த அரசியல் கூற்றுக்களையுமே சொல்கிறார்.) Oceanography பற்றி அவர் எதுவுமே சொல்வதில்லை. அறிவியல் செய்திகளை ஒன்றுசேர்த்து ஆய்ந்தால் இற்றைக் குமரி முனைக்குக் கீழே ஒரு கண்டம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. வேறு கருத்து உள்ளவராய் நீங்கள் இருந்தால் ஆதாரம் கொடுங்கள், அவர், இவர் என்று பெரிய, பெரிய ஆளுமைகளின் பெயரைச் சொல்லாதீர்கள். Quoting names is not a scientific method.

எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்தவரில்லை. அது கடவுளுக்கு மட்டுமே முடியும். ஓர் அறிஞர் சொன்னவற்றில் எது சரி என்று அறிவியல்  அலசிப் பார்க்கிறது. எதை ஏற்றுக் கொள்ள முடியுமோ, அதை ஏற்கிறது. அல்லாதவற்றை அது ஒதுக்குகிறது. அதற்காக குறிப்பிட்ட அறிஞர் செய்தவற்றின் புகழ் குறையாது.

உலகப்புகழ் பெற்ற ஐசக் நியுட்டனின் விதிகளை நம்பி உலகம் 150/200 ஆண்டுகள் நகர்ந்தது. பின்னால் ஐன்சுடைன் வந்து பூதியலின் (physics) அடிப்படையையே மாற்றினார். ஆனாலும் நியூட்டனின் மாகனவியலுக்கு (Newtonian mechanics) இன்றும் அரங்குண்டு. நியூட்டன் தேற்றுகள் (theories), நம் வேகம் ஒளி வேகத்திற்கு அருகில் வந்தால் மட்டுமே குழறுபடி ஆகின்றன. மற்றபடி அவர் விதிகள் குறைவேகத்தில் நன்றாகவே வேலை செய்கின்றன. எனவே தான், நியூட்டனை இன்றும் மதித்துப் பள்ளிகளில் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்.

அதுபோல் பாவாணரின் மொழிக்கொள்கை Nostratic என்பது வரை சரியாக உள்ளது. அதற்கு மேல் கட்டாயம் சிக்கல் தருகிறது. நான் பட்டறிவால் இதைச் சொல்கிறேன். அவர் மேலை மொழிகளையே பெரிதும் பார்த்தார். ஆப்பிரிக்க, அமெரிக்க, தென்கிழக்கு ஆசிய, சைபீரிய, ஆர்க்குடிக் மொழிகள் தொடர்பான செய்திகள் அவர் காலத்தில் அவருக்குக் கிடைக்கவில்லை. இன்று கிடைக்கின்றன.இன்று கிடைத்த எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், ”தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று” என்று மட்டுமே சொல்லமுடியும். முதன்மொழி என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. இன்னும் பல தரவுகள் வேண்டும். இன்னும் பல ஆண்டுகள் ஆய்வும் செய்யவேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா? உலகப் புகழ்பெற்ற நியூட்டன் பூதியலில் மட்டுமின்றி மறைமுகமாய் தாழ் உலோகத்தை (low metal) இதள் (mercury) கொண்டு பொன்னாய் மாற்ற விழையும் "இரசாயனம் / இதள்வழிச் செலுத்தம் (Alchemistry) என்ற துறையிலும் 16 ஆண்டு காலம் பணிசெய்துள்ளார். ஆனால் அந்தக் குறிப்புகளை எங்கும் வெளியிடாமல், தானே சேர்த்து வந்தார். இன்று அவர் பூதியலார் என்று அறியப்படுகிரார். வேதியலார் என்று யாராவது சொல்கிறோமா? ஒருவர் வெற்றி பெற்ற புலத்தை வைத்தே பின்னாளில் அறியப் படுவார்.

பாவாணர் மொழியாளர், அதே பொழுது வரலாற்று, முந்தை வரலாற்று ஆசிரியர், கடலாய்வாளர் இல்லை, இதைப் புரிந்து கொள்ளுங்கள். அவருக்கு அறியாத இந்தத் துறை பற்றி அவர் சொல்வது எடுபடாது. பாவாணரை எல்லோரும் போற்றுவோம். ஆனால் அவர் எல்லாம் அறிந்தவர் என்று கொள்ளாதீர்கள். அவர் கடவுளில்லை. பாவாணரும் கிடுக்கி (criticize) அலசப் (analyse) பட வேண்டியவரே. அவரை மதித்துக் கொண்டே தான் இப்படிச் சொல்கிறேன். நாளைக்கு நான் சொன்னவற்றைத் தூக்கியெறியவும் யாரொவொரு இளைஞன் முன்வருவான். இதை மறவாதீர்கள்

அவருடைய மொழியியல் வழிமுறையை நானும் பின்பற்றுகிறேன். தமிழ் உலக முதன்மொழி என்று சொல்ல இன்னும் பெருந்தரவுகள் எட்டவில்லை. Nostratic பெருங்குடும்பத்தில் தமிழியம் என்பது ஒரு முகன்மையான குடும்பம் என்றுசொல்லக் கட்டாயம் தரவுகள் நம்மிடம் உள்ளன. நெஞ்சை நிமிர்த்தி நாம் சொல்லலாம். மற்றவைகளுக்குக் நாம் காத்திருக்கவேண்டும்.


Friday, June 07, 2024

ஒரு சில்லின் (cell) வாழ்க்கை.

 ஒரு சில்லின் சினைகளுக்குள் முறையான ஒருங்கம் (organization) அமைந்து,

செல்லுக்குத் தேவையானவற்றை உள்ளீர்த்துச் செரித்து, தேவையில்லாதவற்றை வெளிப்பொழியும் செரிப்பொழிவு (metabolism) சில்லிற்குள் தொடர்ந்து நடைபெற்று,
எவ்வளவு தான் வெளிச்சூழல் மாறினும், சில்லுக்குள் ஒரே சூழல் அமையும்படி சில்லின் உள்நிலைப்பைக் (homeostasis) அமைத்துக் கொண்டு,
காலத்திற்கேற்ற, வளர்ச்சி (growth) காட்டி,
,
கொடிவழிப் புதுக்கத்தை (reproduction) விடாது நடத்தி,
வெளிச்சூழலுக்கேற்ப எதிர்விளைவும் (response) காட்டி,
எவ்வெழுச்சியை (evolution) விடாது தொடர்ந்து நடைபெற வைத்து,இருக்குமானால்,
அந்தச் சில் வாழ்கிறதென்று பொருளாகும்