Wednesday, September 28, 2011

மாணிக்கவாசகர் காலம் - 3

ஞானோபதேசம் செய்த திருவிளையாடல்:

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் என்பது 27 ஆம் திருவிளையாடலாகும். இப் புராணம் திருவிளையாடல்களைக் கால வரிசைப்படி விவரிக்கவில்லை எனினும், ஒரு குறிப்பிட்ட தொடர்ச்சியைக் குறிக்கும் திருவிளையாடல்களாய் ஒருங்கே தான் வைக்கப் பட்டுள்ளன. மாணிக்க வாசகரைப் பேசும் 4 திருவிளையாடல்களும் (27,28,29,30) இது போன்று ஒருங்கே ஒரு தொகுதியாய் வைக்கப் பட்டுள்ளன.

அதே போல் வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடலும், அவன் மகன் காலத்திய விடைக்குறி அம்பெய்த திருவிளையாடலும், அவன் பேரன்(?) காலத்திய உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடலும், மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடலும் தொடர்ச்சியாக ஒருங்கே வைக்கப் பட்டுள்ளன.

(”என்ன இது? ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் வரகுணனுக்கு மகனா? இது என்ன புதுக் கதை?” என்று படிப்போரில் யாரோ கேட்பது எனக்குப் புரிகிறது. நமக்கு இதுவரை சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாற்றின்படி இரண்டாம் வரகுணனுக்குப் பிள்ளைப் பேறே கிடையாது. அவனுக்குப் பின் அவன் தம்பி வீர நாராயணனும், வரகுணன் தம்பி மகன் இராசசிம்மனும் தான் அடுத்தடுத்துப் பட்டமேறுகிறார் என்று சொல்லிவந்தார். அப்படித்தான் தமிழக வரலாறு பதிவு செய்கிறது. இங்கோ நம்பியார் திருவிளையாடற் புராணம் வரகுணன் மைந்தன் என்பவர் பற்றி வெளிப்படையாகப்  பேசுகிறது.

அப்படியெனில் நம்பியார் திருவிளையாடலில் வரும் வரகுணனும் ஒன்பதாம் நூற்றாண்டில் வரும் இரண்டாம் வரகுணனும் வெவ்வேறு ஆட்கள் என்று தெளிவுற முடியாதா? முன்முடிவின்றி ஆயும் சிந்தனையாளருக்கு இது விளங்க வேண்டுமே?. அதன் விளைவால் 9-ஆம் நூற்றாண்டை ஒதுக்கித் தள்ளி மாணிக்கவாசகர் கதையில் வரும் வரகுணனை அடையாளங் காண வேறு நூற்றாண்டு தேடவேண்டாமா? ஆனால், இது போலும் பட்டகைகளை (facts) எல்லாம் தம் கவனத்திலிருந்து ஒதுக்கி “ஒன்பதாம் நூற்றாண்டை” எப்படியாவது நிறுவவிளையும் ஆய்வாளர் மகப்பேற்றுச் சிக்கலை எப்படிக் கண்டு கொள்வார்? இதைக் கீழே இன்னொரு முறை பார்ப்போம்.)

பின்வந்த 4 திருவிளையாடலையும் ஒருங்கு சொல்வதில் மேலும் ஒரு பொருளுண்டு. வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடற் கதையில் சோழர் படையெடுப்பு நடக்கும். வலிகுறைந்த வரகுண பாண்டியனுக்கு இறைவனே உதவிசெய்வார்.

வரகுணன் என்ற பெயர் 8-9 ஆம் நூற்றாண்டுகளிற்றான் எழும் என்பவர்க்கு ஓர் இடை விலகல். வரம் என்பது பரம் என்பதன் எழுத்துப் போலி. அதன்படி வரகுணன் எனினும் பரகுணன் எனினும் ஒரே பொருள்தான். ”மேலான குணங் கொண்டவன்” வரகுணன் ஆவான். இப்பெயரைத் தலை கீழாக்கிக் குணபரன் - குணங்களில் மேலானவன் - என்பது மகேந்திர பல்லவனுக்குள்ள பெயர். அதாவது இப்பெயர் 8,9 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னும் தமிழில் இயல்பாய் எழும் பெயர்தான். அப்படி முன்னால் மகேந்திரவர்ம பல்லவனுக்கு இருக்குமெனில், அவனுக்கு முந்தைய வேறொரு பாண்டியனுக்கு அப்பெயர் இருந்திருக்கக் கூடாதா?  8,9 ஆம் நூற்றாண்டில் மட்டும் தான் எழ வேண்டுமா?

இன்னொரு குறிப்பையும் பாருங்கள் பிற்காலப் பல்லவனான இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் கால, 731 - 795 என்பர். முதலாம் நந்திவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவரில் ஒருவனாகிறான். காலம்  500-74 க்குள் இருக்கலாம் என்பர். இதைஉறுதி செய்ய, மேலும் ஆய்வு கூடவேண்டும்.

வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடற் கதைக்கு அடுத்த கதையில் சோழருக்குக் கருநாடக அரசனொருவன் உதவிசெய்வது நடக்கும். இக்கதையில் இறைவனின் உதவி வரகுண பாண்டியனின் மைந்தனுக்குப் போகிறது. (பெயர் குறிக்கப்படாத இம் மைந்தனிடத்தில்அவன் நடு அகவையில் மாணிக்கவாசகர் ஒருவேளை முதலமைச்சராய் இருந்தாரோ என நாம் சுற்றிவளைத்து ஊகிக்கலாம். பின்னால் பார்ப்போம். கருநாடக அரசனோடு சேர்ந்துவந்த சோழன் படையெடுப்பு - விடைக்குறி அம்பெய்த திருவிளையாடல் - அதற்கு அப்புறம் ஏற்பட்டிருக்கலாம்.)

மூன்றாம் கதையில் வரகுணனின் பேரன்(?) காலத்திற் பாண்டிநாட்டிற் பசியும் பட்டினியும் பெருகியுள்ளது. ஒருவேளை தகப்பன் காலத்துப் போருக்குப் பின் எழுந்த பஞ்சமோ, வானிலை மாறியதால் ஏற்பட்ட பஞ்சமோ, என்னவோ? பாண்டிநாட்டிற் பஞ்சம் வரலாற்றிற் பலமுறை நடந்துள்ளது. சிலம்புக் காலத்திலேயே பாண்டிநாட்டிற் பஞ்சம் தான். ”பாண்டிநாட்டிற் எப்பொழுதெலாம் பஞ்சம் ஏற்பட்டது” என்பதே எதிர்காலத்தில் யாரேனும் செய்யவேண்டிய ஆய்வுதான். அதேபோல சிலம்பின் மதுரைக் காண்ட நடவடிக்கையைப் பஞ்சகால நீட்சியாய் யாரேனும் பார்த்தாரோ? [சிலம்பின் காலம் என்ற என் கட்டுரையில் அதைத் தொட்டுப் பார்த்துள்ளேன்.]

மூன்றாம் கதையில் எல்லோருக்கும் சோறுபோட்டு உதவிசெய்யும் வேளாளன் ஒருவனின் செல்வமெலாம் கொடையாலேயே கரைந்து போகிறது. அள்ள அள்ளக் குறையாத கோட்டை ஒன்று வேளாளனுக்கு இறைவனாற் தரப் படுகிறது. (இதைத் தான் ”உலவாத” ஒரே சொல்லில் அக் காலத்திற் சொல்லி யிருக்கிறார். நாம் என்னவென்றால் “non-diminishing" என்ற கணிதச் சொல்லுக்குத் தமிழில் இணை தேடிக் கொண்டுள்ளோம். உலவாக் கோட்டை = non-deminishing koottai)

நாலாம் கதையில் இடைவிடாப் பஞ்சத்தைத் தொடர்ந்து பாண்டிய நாடு கருநாடக அரசனுக்குக் கீழ் முற்றிலும் வந்துவிடுகிறது. சமண மதம் அரச மதம் ஆகிறது. இக் கருநாடக அரசன் பெரும்பாலும் களப்பாள அரசனாய் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். (இவர் சளுக்கிய அரசரில்லை; அவருக்கும் முற்பட்டவர் என்றே நாம் ஊகிக்கிறோம்.) எத்தனை காலம் கருநாடக அரசர் பாண்டிநாட்டை ஆண்டார் என்பது நமக்குத் தெரியாது.

[களப்பாளர் கதையை இங்குநாம் பேசுவது நம்மை வேறுபக்கம் கொண்டு போகும். வேறுவாய்ப்பில் அதைச் செய்வேன்.] கருநாட அரசனுக்குப் பின் அரசாளத் தகுதியுடையோர் இல்லாததால் மூர்த்தியார் பட்டத்து யானையால் இடைக்கால அரசராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். மூர்த்தியார் பட்டத்துக்கு வந்தது கலியரசனுக்குப் பின் எத்தனையாம் ஆண்டு என்பதும் நமக்குத் தெரியாது.

மொத்தத்தில் மேற்சொன்ன 4 கதைகளையும் சேர்த்து ஒரு தொகுதியாய் பார்க்கும் போது வரலாற்றுப் போக்கு ஓரளவு  தென்படுகிறது. பார்த்தீர்களா? பேச்சுவாக்கில் நிறையச் செய்திகளைத் தொகுக்க வேண்டும் என்ற கதியில் வேறெங்கோ போய்விட்டோம். மாணிக்க வாசகரின் பெயர், குடும்பப் பெயர் போன்றவற்றில் இனித் தொடங்குவோம்.

11 ஆம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி எழுதிய திருப்பண்ணியர் விருத்தம் 58 ஆம் பாடலால் சிவபாத்தியன் என்ற இயற்பெயர் வாதவூரருக்கு இருந்திருக்குமோ என்று ஒரு சிலர் ஐயுறுவர். அப்பாடல் கீழ்வருமாறு:

வருவாச கத்தினில் முற்றுணர்ந் தோனைவளர் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.

சிவபாத்தியன் என்ற பெயரை, இறைவனால் அறிவோதப் பெற்றதால் (“உபதேசிக்கப் பட்டதால்”) அவன் திருவடிகளுக்கு ஆழ்ந்த, பாத்தியப்பட்ட காரணப் பெயராகவும் நாம் இதைக் கொள்ள முடியும். நானறிந்தவரை மாணிக்க வாசகரின் இயற்பெயர் பற்றிய முடிவிற்கு வருவதற்கு இப்போது கிடைத்துள்ள பட்டகைகள் பற்றாது.

நம்பியார் திருவிளையாடலில் வாதவூரரென்ற ஊர்ப்பெயரே மாணிக்க வாசகருக்குப் பெரிதுஞ் சொல்லப் படுகிறது. அவரது இயற்பெயர் சொல்லப் பட வில்லை. மானமங்கலம்/மானபுரம் என்பவை நம்பி திருவிளையாடலின் படி அவர் குடும்பத்தாருக்கான பட்டப்பெயராகவே பயன்பட்டுள்ளன. அதாவது அவர் முன்னோர் ஊர் மானபுரம் எனும் மானமங்கலமாகும். அவ்வூரிலிருந்து மதுரைக்கருகில் 12 கி.மீ. தொலைவு திருவாதவூருக்கு ஏதோவொரு காலத்தில் அவர் குடிபெயர்ந்திருக்கிறார். மான(வீரன்) மதுரையை அறிந்தவர் மானமங்கலம்/மானபுரம் என்பவை இதன் தொடர்போ என்று ஐயுறுவர்.

மாணிக்க வாசகரை ”வடுகப்பிள்ளை”யாய்க் காட்டுதற்கு அரும்பாடுபட்டுக் கல்வெட்டுகளுள் தேடுவோர் இம் மானமங்கலத்தையும் தேடினால் நன்றாக இருக்கும். [இராமநாதபுரம் மாவட்டக்காரரும் இதைத் தேடலாம்.] திருவாசகம் எங்கணும் தென்பாண்டி நாட்டையே விடாது (ஆழ்ந்து) குறிக்கும் ஆளுடை அடிகள் ஒரு வடுகப் பிள்ளையாக இருப்பாரா என்பதில் எனக்குப் பெரும் ஐயம் உண்டு. பொதுவாகத் தென்பாண்டிக்காரர் அளவிற்குமீறித் தம் ஊரோடு ஒட்டியவர். அதிலும் ஊர்ப்பெருமை பேசுகிறவர். சரியான பாண்டி நாட்டுக் காரரான மாணிக்கவாசகரும் அப்படியே தான் தெரிகிறார். வடுகர் பாண்டிகளாய் மாறி வடுக அடையாளந் தொலைத்தது மிக மிக அரிதாய்க் கேட்ட கதை.

மாணிக்கவாசகர் மொத்தம் 16 ஆண்டுகள் கல்வி கற்றதாக நம்பியார் திருவிளையாடல் சொல்லுகிறது. ஐந்தாறு அகவையில் கற்கத் தொடங்கி யிருந்தால் அவர் கோத்தொழிலுக்கு (bureacracy) வரும்பொழுது அகவை 21/22 ஆகியிருக்கும். 32 ஆம் அகவையில் இறைவனோடு சோதியில் ஒன்றிக் கலந்தார் என ஒரு தனிப்பாட்டு சொல்லும்.

அப்பருக்குஎண் பத்தொன்று அருள்வாத வூரருக்கு
செப்பிய நாலெட்டிற் தெய்வீகம் - இப்புவியில்
சுந்தரர்க்கு மூவாறு தொல்ஞான சம்பந்தர்க்கு
அந்தம் பதினாறு அறி.

வாதவூரருக்கு நடந்த அருளிச்செயல் 31 ஆம் அகவையில் நடந்ததெனில் கிட்டத்தட்ட 9/10 ஆண்டுகள் அவர் அரச கருமத்தில் ஆழ்ந்திருந்தார் என்பது பொருள். மாணிக்க வாசகர் முதலமைச்சர் பொறுப்பிற்கு வர இத்தனை ஆண்டுகள் ஆயின போலும். நம்பியார் திருவிளையாடலை ஆழ்ந்து படிக்கும் போது அவருக்கு வேலை கொடுத்த பாண்டிய அரசன் அவரினும் மூத்தவன் (மிக மூத்தவனாகவும் தெரியவில்லை) என்ற புரிதலே நமக்குக் கிடைக்கிறது.

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தின் படி மாணிக்கவாசகர் அரச கருமம் செய்தது அரிமர்த்தன பாண்டியனிடத்திலாகும். அப்பெயரை நம்பியார் திருவிளையாடல் சொல்வதேயில்லை. அரிமர்த்தனன் என்ற பெயரைக் கேட்டாலே அது அரிகேசரி மாறவர்மன், அரிகேசரி பராங்குச மாறவர்மன் ஆகியோர் பெயரை நினைவு படுத்தும். கேசரி என்பது சடையன் என்ற பொருளில் பாண்டியர் குடிப்பெயரின் வடமொழி ஆக்கம். அரிகேசரி என்பது பல்லவரை வெற்றி கொண்ட பாண்டியரெனப் பொருள்கொள்ளும். (பல்லவர்க்கு அரி = சிங்கம் என்பது கொடி அடையாளம்) அரிகேசரி பராங்குச மாறவர்மனுக்கு முன் பல்லவரைத் தொலைத்தவர் யாருமில்லை.

பல்லவர் என்ற குறிப்பு திருவாசகத்தின் முழுதும் கிடையாது. [இத்தனைக்கும் குயிற்பத்தில்,

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூவாய்

என்று 7ஆம் பாடலில் சீர்ப்புயங்கன் மூவேந்தராகத் தோற்றமுற்று வரக் கூவுவதைப் பற்றிப் பேசுவார், ஆனால் எந்தப் பல்லவனையும் பற்றி இங்கு பேச மாட்டார். இது நமக்கு விந்தையாகத் தெரிகிறது. பல்லவர் காலத்தின் பின் மாணிக்கவாசகர் தோன்றியிருந்தால், ”எந்தவொரு பல்லவனையும் பற்றிப் பேசாத் தோரணை ஏன்?” என நம் மனத்துள் கேள்வி எழுகிறது. பல்லவர் 300, 400 ஆண்டுகள் நம்மை ஆண்டிருக்கின்றனரே?

பல்லவனை அப்பர் பேசியுள்ளார், திருமங்கையாழ்வார் பேசியுள்ளார். மாணிக்க வாசகர் பேசவில்லை. (உடனே குதருக்கமாக சம்பந்தர் பேசினாரா? சுந்தரர் பேசினாரா? - என்ற கேள்வியை எழுப்புவர் உள்ளார்.)  பல்லவர் பற்றிப் பேசாக் காரணத்தால், மாணிக்கவாசகர் பல்லவர் காலத்திற்கு முந்தியவரோ என்றும் தோன்றுகிறது? இத்தனைக்கும் கச்சி ஏகம்பத்து இறைவன்பற்றித் திருவாசகத்திற் பேசுகிறாரே? ஆனால் கச்சிப்பேட்டைத் தலைநகராய்க் கொண்டிருந்த பல்லவர் குடியைப் பேச மாட்டாராமா?. இச்சிந்தனை ஏன் 9 ஆம் நூற்றாண்டு என அறுதி யிடுவோருக்குத் தோன்றாதுள்ளது?

என்னைப் பொறுத்தவரை, குயிற்பத்து 7 ஆம் பாடல் ஒன்றே ”மாணிக்க வாசகர் பல்லவருக்கு முந்தியவர்” என்று ஆணித்தரமாய்ச் சொல்வதில் ”இன்மைவழி” அகச்சான்றாய் அமையும். அரிகேசரியை நினைவு படுத்தும் வகையில் அரிமர்த்தனன். = பல்லவரைத் தொலைத்தவன் என்ற பொருளில் பெயரிடுவது பாட்டனைப் பேரன் திறங்களைக் கொண்டு பெயரிடுவதற்குச் சமம். அரிமர்த்தனன் என் பெயரை நாம் முற்றிலும் ஒதுக்குவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் புராணத்தில் வரும் ஞானோபதேசம் செய்த திருவிளையாடலின் இரண்டாம் பாடலிலேயே மாணிக்கவாசகர் யாரிடம் அமைச்சராய் இருந்தாரோ அப்பாண்டியன் பெயரை நல்ல தமிழில் ”தானைவேல் வாகை மாறன்” என்பார்.

சந்திர குலத்தில் நீடோர் தானைவேல் வாகை மாறன்
அந்தமில் முன்னோர்போல அவனியை அடைவிற் காத்துச்
சுந்தரற்கு அன்புபூண்டு துலங்குமா மதுரை தன்னுள்
மந்திரத் தலைவர் சூழ வளம்பட வாழு நாளில்

என்று அப்பாடல் போகும். முன்சொன்ன, மாணிக்கவாசகர் பற்றிய  4 திருவிளையாடலிலும் மாறனென்ற பட்டப் பெயரே பெரிதும் ஆளப்படும். செழியன் என்ற பெயர் ஓரோவழி தான் உரைக்கப் படும். அக்காலப் பாண்டியர் பெயர் வேலோடு சேர்ந்து வருவது நம்மைச் சற்று ஓர்ந்துபார்க்க வைக்கிறது. [கடுங்கோன் மகனான மாறவர்மன் அவனிசூளாமணியைக் கதிர்வேல் - தென்னன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் சுட்டிக் காட்டுவதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.]

வேல் என்ற பெயரைக் கொண்ட இன்னொரு பாண்டியனை இங்கு சிலம்பின் வழி நினைவு கொள்ளலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனுக்கு அப்புறம் வந்த தம்பி வெற்றிவேற் செழியன் எனப்படுவான். இதுபோன்ற பெயர்கள் சமயக் காலத்திற்கும், தேவார காலத்திற்கு, முற்பட்டு இருந்துள்ளன. வேல் சேர்ந்த இயற்பெயர் இருந்தது உண்மையானால் மாணிக்க வாசகரை ஒன்பதாம் நூற்றாண்டிற் பொருந்த நினைப்பவர் பெரிதும் தள்ளிப் போனார் என்றே எண்ணவேண்டியுள்ளது. (கொற்கையில் இளவரசுப் பட்டம் கட்டிக் கொள்ளும் பாண்டியர் திருச்செந்தூர் செந்தில்வேலிடம் பற்றுக்கொண்டு வேல் என்ற பெயரை தம் இயற்பெயரோடு சேர்த்துக் கொண்டனரோ என்ற ஊகம் இயற்கையாய் எழுகிறது. ”வேல்” எனப் பெயரிடுவது தென்பாண்டித் தமிழர் இடை இன்றுமுள்ள பழக்கம். பாண்டியர் இயற்பெயரை அலசிப்பார்க்க வேண்டும்.)

திருவாதவூர் என்பது சங்ககாலக் கபிலர் பிறந்தவூர். அங்கிருக்கும் இறைவன் பெயர் வேதநாயகன். (வேத புரீசர் என்றும் இப்போது சொல்லப்படுகிறார்.) மாணிக்கவாசகர் தன் பாடல்களில் பலவிடங்களில் வேதநாயகனை நினைவு கொள்கிறார்.

கதைக்குள் வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Anonymous said...

Kuberan is from kunaparan?

Or from, ku + beram? (ku, a prefix usually means 'negative')