Showing posts with label சொல்விளக்கம். Show all posts
Showing posts with label சொல்விளக்கம். Show all posts

Wednesday, February 28, 2007

ஓதி - 3

hotr என்ற வேதச் சொல்லிற்கு இணையாக zaotr என்ற சொல் இரானிய நடைமுறையில் அவஸ்தாவில் சொல்லப்படும். சாரத்துஸ்ரா கூட ஒரு zaotr தான் என்று ஆய்வாளர் சொல்கிறார். வட இந்திய ஒலிப்பிற்கும், இரானிய ஒலிப்பிற்கும் இடையே இந்த za என்னும் பலுக்க வேறுபாடு நெடுகவும் உண்டு. 

இங்கே சப்த சிந்து என்பது அங்கே ஹப்த ஹிந்து என்று ஆகும். சோமா என்பது ஹோமா என்று அங்கு ஆகும். சரஸ்வதி என்பது ஹரஹ்வதி என்று ஆகும். அதே பொழுது இந்த za மாற்றம் ஒரு வழிப் பாதையல்ல. வேதத்தில் hotr என்பது அங்கே zaotr என்று ஆகிறது. இங்கே ஹ்ரண்ய என்பது அங்கே ஸ்ரண்ய என்று ஆகும். 

ஈரானில் இருந்த zaotr, அவஸ்தாவின் gatha மொழிகளை யாகத்தின் போது ஓதுவார். நாவலந்தீவில் இருந்த hotr, இருக்கு வேதத்தின் மொழிகளை ஓதுவார். இரண்டு வகை ஓதுதல்களும் தேவதையை அழைத்து, "அதைக் கொடு, இதைக் கொடு" என்று கேட்பவை தான். 

ஓதன் / ஓச்சன் என்பவன் தமிழ் மரபிலும் இருக்கிறான். காளி கோயில் பூசாரியைத் தமிழில் ஓச்சன்/உவச்சன் என்பதும், ஆசார்யன், priest, தெய்வத்தை ஏத்துபவன் என்பனை ஓசன் என்று அகரமுதலிகளில் குறிப்பதையும், ஆச்சார்யனின் மனைவியை ஓசி என்று குறிப்பதையும் இங்கே நினைவு கொள்ளலாம்.

வேள்வி, பூசை என்ற இரண்டு வகையான ஓதுகளிலும் வெறும் அழைப்பு மட்டுமல்ல; கேட்பும் உண்டு. அழைப்பும், கேட்பும் சேர்ந்தது தான் வேத வழியும், ஆகம வழியும். மூட நம்பிக்கையை மறுத்துப் பார்த்தால், அவை ஏதோ வானத்தில் இருந்து இறங்கியவையல்ல. அதே பொழுது, இந்த அழைப்பும் கேட்பும் எல்லாப் பூசைகளுக்கும் பொதுவானது என்று ஓர்ந்து அறிய வேண்டும். கிறித்துவ, இசுலாம் என எல்லா சமய நெறிகளிலும் கூட அழைப்பும் கேட்பும் இருக்கின்றன.

யாகம் என்பது ஒருவழி; வேத நெறிக்கும் ஸோராஸ்த்திரத்திற்கும் அது பொதுவான வழி. நம்மூர் பூசை முறைகள் வேறு வழி. நெருப்பை வைக்காமல் நீரையும், பூவையும் வைத்துச் செய்யும் நம்மூர் வழிபாட்டிலும் பூசை செய்யும் குருக்கள் மந்திரங்களை ஓதுகிறார்; தேவாரம் போன்றவை ஓதுவாரால் ஓதப் படுகின்றன (recited). இறைவனை அழைத்து, "அதைக் கொடு, இதைக் கொடு" என்று நாம் கேட்கிறோம். ஓதுதல் பற்றிய திராவிட வேர்ச்சொல் பர்ரோ-எமெனோவில் 1052ம் சொல்லாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது.

1052 Ta. ōtu (ōti-) to read, recite, utter mantras, repeat prayers, speak, declare; ōtuvi (-pp-, -tt-) to teach the Vedas, instruct; ōtal reciting (as the Veda); ōti learning, learned person; ōttu reciting, uttering (as a mantra), the Veda. Ma. ōtuka to recite, read, say; ōtikka to teach; ōttu reading (chiefly of scriptures), using formulas. Ko. o·d- (o·dy-) to read, pronounce (charms), learn; o·t a charm. To. wi_.Q- (wi_.Qy-) to read; w&idieresisside;t incantation. Ka. ōdu to utter, read, recite, study, say; n. reading, etc.; ōdisu to cause to read, instruct in the śāstras; ōdike, ōduvike reading; ōtu, ōta reading, that has been read or studied, the Veda. Koḍ. o·d (o·di-) to read. Tu. ōduni to read; ōdāvuni to cause to read, teach how to read; ōdige, ōdu reading. DED 886.

மீண்டும் சொல்கிறேன்; எல்லாவித ஓதல்களும் முதலில் அழைப்பதும், பின்னால் வேண்டுதலும் தான். அந்தக் கருத்தில், அழைப்பைக் குறிக்கும் தமிழ் வேர்ச்சொற்களையும், சங்கத வேர்ச்சொற்களையும் பார்போம். ஆ, ஈ, ஏ, ஓ, கூ, கோ என்ற தமிழ் வேர்களைப் போலவே தாது பாடம் காட்டும் kal, kall, kas', kai, ku, ku_, kur, kuj, kun., khu, gr, gaj, gard, guj, ghu, ghu, ghur, ghus., ha_d, has, hikk என்ற சங்கத வேர்களும் அழைப்பை உணர்த்தும். 

இக்காலச் சொற்பிறப்பியல், பகுப்பின் வழி பெற்ற இவ்வளவு வடிவுகளைச் சுட்டிக் காட்டாது. இவற்றில் மிகக் குறைந்த ஒரு சிலவற்றை மட்டுமே அடிவேராகக் காட்டி மற்றவற்றை அவற்றின் வழி வேராகக் காட்டும். [நான் ஒவ்வொரு வேர்வடிவிற்கும் இணையான தமிழ்ச்சொல்லைக் கூடிய வகையில் இனங் காட்ட முடியும். இதே போல சங்கதச் சொற்களையும் எடுத்துக் காட்ட முடியும்] இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த அடிவேர் ku என்பதாகவே வந்து சேரும்.

மேலே உள்ள பட்டியற் சொற்கள் எல்லாமே ஒலிப்பொருளைக் காட்டுவன. கல், கர்/குர் என்னும் பக்க வேர்களும் கூட அதே ஒலிப்பொருளை தரும். ஆங்கிலத்தில் வரும் ekhe, hoot [ME. houten, huten], hail, hem, hiccup, hip, howl, honk, horn என்ற ஓசைச் சொற்களையும், heulen, hupen என்ற செருமானிய ஓசைச் சொற்களையும் இங்கே ஓர்ந்து பார்க்கலாம்.

halloa> hello என்ற தொலைபேசி அழைப்புக் கூட இங்கே எண்ணிப் பார்க்க வேண்டியது தான். ஓகை (= ஆரவாரம்), ஓதம், ஓதை, ஓசை, ஓலம், ஒலி என்ற சொற்கள், ஓங்காரம் என்ற நெட்டோ சை, ஓ என்னும் குழந்தையின் அழுகை எல்லாமே ஒலிக்குறிப்புக்கள் தான். நான்கு கூப்பிட்டுத் தொலைவைக் காவதம் என்றும் ஓசனை என்றும் தமிழில் சொல்லுவதையும் எண்ணிப் பாருங்கள். ஓலிடுதல் என்பதும் கூட ஓசை செய்வது தான்.

இன்னும் சில விதப்பான ஓலச் சொற்களையும் இங்கு சுட்டிக் காட்ட முடியும். நாதசுரம் என்பது ஓலகம் என்றும், நாசுசுரம் இசைப்பவர் ஓலகத்தார் என்றும், ஆரவாரமிகுந்த அரச மண்டபம் ஓலக்க மண்டபம் என்றும், ஓலக்க மண்டபத்தில் சொல்வது ஓலக்க மொழி என்றும் சொல்லப்படும். 

பழைய பயன்பாடுகளை எண்ணிப் பார்த்தால் ஓல்தல் என்ற வினையின் ஆழம் புரியும். இன்னும் போய், தாலாட்டிப் பாடுவதைக் கூட ஓலாட்டுதல் என்ற யாழ்ப்பாண வழக்கும், லாலி என்னும் வடபுல வழக்கும், lullaby என்னும் மேலை நாட்டுவழக்கும் மொழிகடந்த நிலையை உறுதியாக இணர்த்துகின்றன. ஓலத்தின் இன்னொரு பரிமானமாய் ஊளை (howl) என்ற சொல்லும் எழும். ஓசை செய்யும் பனை இலை பனை ஓலையானது.

ஓகாரம் என்பது மொழி கடந்தது என்று புரிந்தால் தான் நான் சொல்ல வருவது புரியும். இல்லையென்றால் hve_க்கு மேலே நகர முடியாது. ஓது என்பதன் நீட்சியாய் மறைமொழிகளை, உயர்ந்த நூற்பகுதிகளை, ஓத்து என்றே தமிழில் சொல்கிறோம். மலையாளத்திலும் இதே சொல் தான் உண்டு. 

நாள் தோறும் ஓதத் தக்கது ஓத்து ஆகும். அது மந்திரம், அறநூல், இலக்கண, இலக்கியம் என எதுவாகவும் இருக்கலாம். வேதமாய் மட்டுமே இருக்கத் தேவையில்லை. "அஞ்செழுத்தும் ஓத்து ஒழிந்து" என்று தேவாரம் 586, 4 பேசும். "ஒத்துடை அந்தணர்க்கு" என்று மணிமேகலை 13.25 பேசும். section or chapter பொருளில் "ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது ஓத்து என மொழிப" என்று தொல்.பொருள்.செய்யுளியல் 480 பேசும். நெறி,கொள்கை என்ற பொருளில் குறள் 134 பேசும்.

முன்னால் சொன்ன வேளகாரரை ஓதுதலின் அடிப்படையில் ஓதாளர் என்றும் பேச்சுவழக்கில் சொல்வார். இந்த ஓதாளர்கள் ஆசான்களாவும் இருக்கிறார்கள். "உலகம் பாதி, ஓதாளர் பாதி" என்பது கொங்கு வழக்கு. (அதாவது படிப்பவர்கள் பாதி, படிப்புச் சொல்லிக் கொடுப்பவர் மீதி என்பது அதன் பொருள்.) ஓத்தின் சாலை என்பது நூல் கற்பிக்கும் இடத்தைக் குறிக்கும். 

"ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று" என்று சிலம்பு 22.28 பேசும். ஓத்துரைப்போர் என்பவர் நூல் ஓதுவோர் ஆவர்; அதாவது one who recites scripture; ஓத்துரைப்போன் என்பவன் ஆசான் என்று பிங்கலம் உரைக்கும்; ஓத்திரி என்பவனும் ஓதுவிப்பவன் என்றே அகரமுதலிகள் கூறும்.

ஓத்திர நெல் என்பது ஓதுவிக்கும் அல்லது ஓதும் தொழிலை தொடர்ந்து செய்பவருக்குத் தரப்படும் நெல். ["ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து" - பதிற்றுப் 7 ம் பத்தின் பதிகம்] ஐங்குறு நூற்றின் பாலைப்பகுதி ஆசிரியர் ஓதல் ஆந்தையார் ஆவார்; ஒதற் தொழில் செய்யும் ஆந்தையார்; இங்கே ஆந்தை என்பது ஒரு தமிழ்க் குடிப்பெயர். தலைவன் கல்வி கற்றற்குத் தலைவியைப் பிரியும் பிரிவு ஓதற்பிரிவு என்றே தமிழ் அகப்பொருள் இலக்கியத்தில் சொல்லப்படும்.

ஓதுதல், ஓதி என்ற சொற்கள் பார்ப்பார்க்கு மட்டுமே உரியவை அல்ல. ஓதல் என்பதற்கு உரத்துப் படித்தல், கல்வி பயிலுதல் என்றே தொல்.பொருள்.25 வழி பெறப்படும். ஓசையூட்டிப் பலமுறை சொல்லுதலையே (reciting) ஓதுதல் என்று பொருள் சொல்லுகிறார்கள். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் - குறள் 834

ஓதுவித்த தக்கணையா - திவ்ய. பெரியாழ் 4.8.1. ஓதி என்பதற்கும் அறிவு, கல்வி, one who recites the veda and sastras என்றும் பொருள்கள் உண்டு. மலையாளத்தில் ஓதல் என்றும், கன்னடத்தில் ஓது என்றும் குடகில் ஓத் என்றும், கோத. ஓத் என்றும், துடவத்தில் வீத் என்றும், துளுவில் ஓதுனி (படி) என்றும், தெலுங்கில் சதுவு என்றும், இது திரிவுறும். 

இருக்கு சொல்லிக் கொடுப்பவன் ஓதி என்றே மலையாளத்தில் சொல்லப் படுவான். ஊது என்ற அடிச் சொல்தான் ஓது என்ற சொல்லிற்கு முந்து எழுந்திருக்க முடியும் என்று பாவாணர் தன் வேர்ச்சொற்கட்டுரைகளில் சொல்வார். ஊதல் = ஆரவாரம்

இன்னொரு விதமாயும் ஓதித்தலைப் புரிந்து கொள்ளலாம். தமிழில் பள்ளி என்பது கன்னடத்தில் ஹள்ளியாகும்; பால் என்பது ஹாலு ஆகும். இது போல பகரம் கெட்டு ஹகரம் சேர்வதும், சில போது ஹகரமும் போய் உயிரொலி மட்டுமே தங்குவதும் பல்வேறு சொற்களில் உண்டு. 

போதித்தல் என்பது ஓதித்தலுக்கு இணையான தமிழ்ச்சொல். போதி என்ற சொல் ஹோதி>ஓதி என்று கன்னடத்தில் ஏற்பட முற்றிலும் வாய்ப்பு உண்டு. பள்ளிக்கூடமே கூட ஓதும் பள்ளி என்று சொல்லப்படுவதும் உண்டு. மந்திர நீர் தெளித்தலை ஓதியிறைத்தல் என்றும், மந்திரித்துத் தேங்காய் உடைத்தலை ஓதியுடைத்தல் என்றும் சொல்வார்.

உங்களுடைய பின்னூட்டில் ஆவாகனம் என்ற சொல்லைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது நெருப்பில் மட்டுமல்ல, நீரிலும் தெய்வம் வந்து  இறக்கும் முறைதான். எனவே வேள்வியில் அழைப்பதை மட்டும் வைத்து சொற்பிறப்பு சொல்ல முடியாது. 

நாம் நினைக்கும் தெய்வத்தை (அதை ஆவி வடிவில் உருக்கொண்டு) ஒரு பொருளில் அல்லது படிமத்தில் எழுந்தருளும் படி மந்திரம் ஓதித் தெய்வத்தை அழைத்தலுக்கு ஆவி ஆகித்தல்> ஆவு ஆகித்தல் = ஆவாகித்தல் என்றே நான் பொருள் கொள்கிறேன். அந்தப் படிமம், அல்லது பொருள் அதற்குப் பின் தெய்வமெனவே புரிந்து கொள்ளப்படுகிறது. நீங்கள் ஒப்புக் கொள்ளாது போகலாம். அது அது அவர்களுக்கு என்று நான் விடுக்கிறேன்.

அவி என்ற சொல்லையும் நான் தமிழ் வழியே தான் புரிந்து கொள்கிறேன். அவிதல் என்பற்கு வெந்து போதல், எரிதல் என்ற பொருள் தமிழிலும் உண்டு. அள்> அழு> அகு என்ற வளர்ச்சி எரிதல் பற்றிய சொல்லிற்கு ஏற்படும். அழல்> அழனம், அழனி என்ற சொல்லை எண்ணிப் பார்த்தால் விளங்கும். 

ஹவனம் என்ற சொல்லிற்கு வேள்வி என்ற பொருளை நீங்கள் குறித்திருந்தீர்கள். அதையும் மேலே சொன்ன அழல் வழியாக, அழனம்> அகனம்> அவனம் என்ற முறையில் நான் புரிந்து கொள்வேன். அழனம் என்பது நெருப்பு, வெம்மை என்ற சொற்களைக் குறிக்கும். அவிப்பு என்பது எரிப்பு என்று பொருள் கொள்ளும். ஹகரம் வடக்கில் சேருவது இயற்கையே. அவனம் வேள்வியைக் குறித்ததில் வியப்பில்லை.

இதை நிறுவுதற்கும் பல்வேறு தொடர்புடைய சொற்களை நான் கூறலாம். அகுதல் என்பது மேலே சொன்னது போல் நெருப்பு இன்னொரு பொருளை அழிப்பதைக் குறிப்பது. அகி> அவி என்று இகரம் சேரும் வினைச்சொல், இன்னொரு பொருள் நெருப்பால் மாறுவதைக் குறிப்பது. 

இந்த வினைச்சொல் மாற்றொழுங்கு அப்படியே தமிழ் மரபு மாறாமல் இருக்கிறது. (கற்றல், கற்பித்தல் என்ற வினைச்சொல் தொகுதியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.) 

அவிதல் என்பது நெய்க்கு மட்டுமல்லாமல், உணவிற்கும் அமைவதைத் தமிழில் பார்க்கலாம். அதாவது அவி என்ற பயன்பாடு தமிழில் பரந்த பொருளைக் கொடுக்கிறது. அவியல், அவிசல், அவிகாயம், அவம் போன்ற சொற்கள் எல்லாம் பரந்த பொருள் கொடுக்கின்றன. 

வேள்வியில் அவிந்து போகும் பொருளுக்கும் அவி என்று ஆளப்பட்டது வியப்பில்லை என்றே நினைக்கிறென். "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்" என்ற கூற்றும் இதை அரண் செய்கிறது. நீங்கள் சுட்டிய "ஹவ்யவாஹன் - அவியை சுமப்பவன், அக்னி" என்பது இருபிறப்பியாய் இருக்கிறது.

இனி வேது பிடித்தல் என்று ஆவி, புகை பிடித்தலைச் சுட்டீர்கள். வெய்தல்> வேதல், எரிதல் என்பது நல்ல தமிழே. "ஹுதம் - வேள்வியில் எரிந்து பொசுங்கியது, ஹுதசேஷம் - வேள்வியில் எரிந்ததன் மிச்சம், ஹுதாசனன் - எரித்துப் பொசுக்கியதை உண்பவன், அக்னி" என்ற மூன்று சொல்லாட்சிகளுக்குமே ஹுது என்பதே அடிப்படை 

அதன் பொருள் எரிதல் என்பதாய் இருக்க முடியுமே ஒழிய அழைத்தல் (hve_) என்பது இருக்க முடியாது. பொகைந்தது (=புகைந்தது), பொசுங்கியது, பொதுங்கியது என்ற வினைச்சொற்கள் எரிதலைத் தொடர்ந்து எழும் வினையைக் குறிக்கும் சொற்கள். பு(=பொ)> ஹு> உ என்ற பலுக்கத் திரிவை உன்னிப் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும். ஊது என்பதும் புகையைக் குறிக்கும் சொல் தான்.

அடுத்து ஹவ என்ற வினைச்சொல்லிற்கு வேட்டல் என்ற பொருளைச் சுட்டி இருந்தீர்கள். தமிழிலும் அவ்வுதலுக்கு வேட்டல் என்ற பொருள் உண்டு. 

வவ்வுதல் என்பது வாயால் பற்றுதலையும் (இன்றைக்கு மாறிக் கையால் என்ற பொருள் கொள்ளப்படுகிறது), கவ்வுதல் என்பது கையாற் பற்றுதலையும் (இன்றைக்கு மாறி வாயால் என்ற பொருள் கொள்ளப்படுகிறது) அவ்வுதல் என்பது மனத்தால் பற்றுதலையும் குறிக்கும் தமிழ் வினைச் சொற்கள். மனத்தால் பற்றுதல் என்பது வேட்டல், விரும்புதல் தான். 

அவ்வுதல் என்ற வினைச்சொல் இன்று பேச்சு வழக்கில் பயிலவில்லை என்றாலும், அவா என்ற பெயர்ச்சொல்லும், அந்தப் பெயரில் இருந்து இன்னொரு வினையாய் கிளைத்த அவாவுதல் என்ற வினையும் இன்று பயில்கின்றன. உங்கள் ஹவாமஹேக்கான இணை புரிகிறதா?

முடிவில் "ஹும் என்கிற துர்கா தேவியின் ஹுங்கார பீஜாட்சரமும் இதோடு தொடர்புடையது." என்று சொல்லியிருந்தீர்கள். ஓங்காரத்திற்கு முந்தையதாய் ஊங்காரம் தமிழில் சொல்லப்படுவது தான். ஊங்காரம் என்பது கோவத்தின் அறிகுறி, ஓங்காரம் என்பது உயர்ச்சி, மற்றும் காப்பாற்ற வேண்டுதலின் அறிகுறி.

நீங்கள் காட்டிய எல்லாச் சொற்களையும் அழைத்தல் வினை வேரில் இருந்தே இனம் காட்டியிருந்தீர்கள். நான் அப்படி எண்ணுவதில்லை. இவை வெவ்வேறு வேர்களில், அதே பொழுது யாகம் செய்யும் போது ஏற்படும் வினைகளில் இருந்து, எழுந்தவை என்று எண்ணுகிறேன். அவற்றை நான் புரிந்தவாறு மேலே இனம் காட்டியிருக்கிறேன்.

நான் கூறியவற்றை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு. மீறி இதையும் ஒரு "crackpot theory" என்று நீங்கள் சொல்லலாம். எனக்குக் கவலையில்லை. சொற்பிறப்பியலில் இதுதான் சரி என்று முடிந்த முடிவாக யாரும் சொல்வதில்லை. 

சொற்பிறப்புக் காணுவதை ஒரு தொடர்ச்சியாகவே பலரும் பார்க்கிறார். இன்றைக்குச் சரியென்று தோன்றுபவை நாளைக்குப் புதுத் தரவும், ஏரணச் சிக்கலின் மறுபார்வையும், புதிய நடைமுறைகளைக் கொண்டு தரும். 

நான் மோனியர் வில்லியம்சு தருவதை இறுதியானது என்று கொள்வதில்லை; அதே போலத் தமிழில் பாவாணர் சொல்லுவதையே கூட முடிவானது என்று நான் சொல்வதில்லை. நான் சொல்வதையும் மறுத்து இன்னொருவர் இனிச் சொல்லக் கூடும். அது சரியாய் இருந்தால் ஏற்றுக் கொள்வேன்.

எந்த மொழியும் வழிபாட்டுக்குரியது என்று என்னால் ஏற்க முடியாது. சங்கதமும் அதற்கு விலக்கல்ல. என் ஆய்வு தொடர்ந்து கொண்டிருக்கும். உங்கள் வருகைக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, February 27, 2007

ஓதி - 2

hotri என்பதற்கு வேராக, hu (to sacrifice, to eat, to please; deri. huta, hutva_, ho_tum) என்ற தாது பாடத்தின் மூன்றாம் வகை வேர்ச்சொல்லைத் தான் மோனியர் வில்லிம்சு காட்டும். [hve_ (to vie with, to challenge, to call, to ask, to invoke; der. hu_ta, hve_ya, hva_tum, a_hu_ya) என்ற முதல் வகை வேர்ச்சொல்லை மற்ற மேற்கோள்கள் தான் அடையாளம் காட்டும்; மோனியர் வில்லிம்சு காட்டுவதில்லை. நீங்கள் சொன்ன ho என்பது தாது பாடத்தில் இந்தப் பொருள்களில் கிடையாது; இருந்தாலும் அது hve_ என்பதோடு தொடர்பு கொண்டது; எனவே அதுவும் எனது கருத்தில் உள்வாங்கக் கூடியது தான். நான் மேலே கொடுக்கும் வேர்ப்பொருள்கள் பட்டோ ஜி தீக்ஷிதரின் சித்தாந்த கௌமிதியில் இருந்து எடுத்தவை.]

முன்னே சொன்னது போல், தாது பாடம் வேர்ப் பொருளைக் காட்டுவதற்கு மேலே நகராது. இவற்றை எல்லாம் நீட்டி முழக்கி தெள்ளிகை இடுகையில் நான் எழுதியிருக்கலாம் தான். ஆனால், ஹோத்ரி என்பது அந்த இடுகையில் என் முகன்மைச் செய்தியல்ல, அதனால் ஒரு குறுவிளக்கம் மட்டுமே சொல்லி நகர்ந்து விட்டேன்.

அடிப்படையில் hotri என்ற சொல்லிற்கு மேலே சொன்ன ஆகுதி இடுவது (to sacrifice; அல்லது to pour), அழைப்பது (to call) என்று இரண்டாகவும் பொருள் கொள்ளுவார்கள். [ஆனாலும், சொற்பிறப்பிலார்களிடம் இதுவா, அதுவா என்ற வேறுபாடு இன்னும் போகவில்லை.] இவற்றில் எது முதற்பொருள், எது வழிப்பொருள் என்பதை அறிய இன்னும் ஆழம் போகவேண்டும். வேண்டுமானால் கூகுள் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். [காட்டாக "telephone" என்பதில் முதற்பொருள் தொலைவில் இருந்து வரும் ஒலி/பேச்சு என்பதே. வழிப்பொருள் அந்தப் பேச்சுக்கருவிக்கு உள்ள பெயர்.] எது விதப்பான பொருளோ, அதையே முதற் பொருளாகக் கொள்ளுவது மொழியியலில் உள்ள பழக்கம். அந்த வழக்கில், to call என்ற பொருள் முதற் பொருளாயும், to sacrifice/to pour என்பது வழிப்பொருளாயும் அமைய பெருத்த வாய்ப்புண்டு. [இந்தச் சிந்தனை மோனியர் வில்லிம்சிற்கு மாறுபட்டது. மோனியர் வில்லிம்சை விவிலியம் போல் கருதுபவர்க்கு அது முரணாகத் தெரியலாம்.]

இது ஏன் என்பதை உணர, to sacrifice / to pour என்பதை முதலிற் பார்க்க வேண்டும். தீ அணையாது இருக்க நெய் போன்ற ஆகுதிப் பொருட்களை ஓம குண்டத்துள்ளே ஊற்றுவது, சொரிவது, கொட்டுவது, போடுவது, எறிவது, வீசுவது என்றே அந்த வேர்ச்சொல்லுக்குப் பலரும் பொருள் கொள்ளுவார்கள். தமிழில் உகு-த்தல் வினையில் இருந்து ஊ-ற்றல் என்னும் வினை எழும். (நீர் உகுத்தல்; நெய் உகுத்தல்) உகுத்தலின் பகுதியான உகு>ஊ என்பது hu என்ற வடமொழி வேரொடு, தொடர்புடைய ஒரு ஒலியிணை தான். அது வடமொழிக்கு மட்டுமே விதப்பாக உள்ள வேரல்ல. தமிழிலும் உள்ள வேர் தான். இயன்மை என்பது இங்கே இரண்டு மொழிகளுக்கும் பொதுவாய் இருக்கிறது. உகு என்னும் வேர் பர்ரோ எமனோவின் திராவிட சொற்பிறப்பியல் அகரமுதலியில் 562 ஆம் சொல்லாகக் குறிப்பிடப்படும். அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

562 Ta. uku (ukuv-, ukk-) to be shed as feathers or hair, be spilled, gush forth, fall down, die, set; (-pp-, -tt-) to let fall, spill, scatter, cast, shed as leaves or feathers, shed (fear), pour out; ukuvu spilling. Ma. ūkka to spill, shed. Ko. u·c- (u·c-) to be spilt; spill (tr.), pour (water, grain), pour off (water from grain). To. u·c- (u·&cangle;-) to throw away (dirty water); ux- (uk-) to leak, dribble; uf- (ufQ-) to fall down (of flowers or fruit); (uft-) to shake off (water from head, dust, mud), empty (bag of grain), throw (spear), shout (words of song, nöw). Ka. ugu (okk-) to become loose, burst forth, flow, run, trickle; be shed or spilt; let loose, etc.; vomit; ugisu to spill, shed, etc.; ogu, ogisu = ugu, ugisu. Tu. guppuni to pour, shed, spill; (B-K.) ugipu id. Kor. (T.) ogi to pour. Te. ūcu to fall off as hair from sickness; guppu to throw, fling, sprinkle (as something contained in the closed hand), discharge (as an arrow). Pa. uy-, (S) uv- (hair) falls out. Malt. ogoṛe to tumble down, be rolled down; ogoṛtre to roll down. DED(S, N) 480, and from DED 1443.

"hu, உகு என்னும் வேர்ச்சொற்களில் எது முதல்? சங்கதமா? தமிழா?" என்ற குடிமிப் பிடிச் சண்டைக்குள் நான் இறங்குவதில்லை. என்னுடைய முயற்சிகளெல்லாம், ஒரே பொருளில் ஒரே மாதிரி ஒலியமைப்புக் கொண்ட, வரலாற்றில் ஒரே பொழுது இருந்த, இருவேறு மொழி வேர்களின் இணை கண்டால் அவற்றைப் படிப்போருக்கு அடையாளம் காட்டுவது என்றே இது நாள் வரை அமைந்திருக்கின்றன. அப்படிக் காட்டுவது ஒரு ஆய்வுப் பணி என்றே நான் எண்ணி வருகிறேன். நெடுநாட்களாக, நாவலந்தீவின் மரபுகளைச் சங்கதம் வாயிலாகவே காட்டி உயர்ச்சிகொள்ளும் போக்கு இருந்து வந்திருக்கிறது. அப்படி இருக்கத் தேவையில்லை. இன்னொரு செம்மொழியான தமிழிலும் தோற்றங்கள் இருக்கலாம் என்ற சிந்தனையே பலருக்கு மருட்டுவதாய் இருக்கிறது. என்னை, இதற்காகவே சாடுகிறவர்கள் சாடி விட்டுப் போகட்டும். கவலையில்லை. உங்களுடைய "crackpot theory" என்ற வாக்கும் இன்னொரு சாடல், அவ்வளவு தான்.

"இரானியப் பழக்கங்களும், வேதப் பழக்கங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, அதே நேரத்தில் மற்ற இந்தையிரோப்பியர்களோடு பொதுமை இல்லாத பழக்கங்களில் ஒன்றாக, இந்த வேள்விப் பழக்கம் இருக்கிறது" என்று இந்தையிரோப்பியத்தின் அறுதப் பழங்காலத்தை ஆய்வு செய்கிறவர்கள் சொல்லுகிறார்கள். இந்தப் பழக்கங்களில் "எலாமோ-திராவிடத் தாக்கம்" இருக்குமோ என்றும் பலர் அய்யுற்றுக் கொண்டிருக்கிறார்கள். "இந்தப் பழக்கம் ஏன் நாவலந்தீவு சார்ந்த, அதே பொழுது அருகில் உள்ள பகுதிகளையும் சார்ந்தாற் போல், இருக்கக் கூடாது?" என்ற கேள்வியும் பலருக்கு எழுகிறது. தமிழ், மற்றும் தமிழிய மொழிகளின் அன்றைய அகற்சி இன்றையத் தமிழ் நிலப் பரப்போடு மட்டுமே ஒடுங்கியது இல்லை; அவை 3500 ஆண்டுகளுக்கு முன்னால் வடபுலத்தும் கூடப் பரவியிருந்திருக்கலாம் என்ற சிந்தனையும் வலுப்பட்டு வருகிறது. வேள்வி பற்றிய பல அடிப்படைத் தமிழ்ச் சொற்களும், அவற்றின் மற்ற துறைப் பயன்பாடுகளும் இந்த அய்யப் பாட்டைக் கூட்டிக் கொண்டு போகின்றன. ஆனால் சங்கதம் பற்றிய மூட நம்பிக்கையும், "நான் உயர்ச்சியா, நீ உயர்ச்சியா" என்ற விவரங்கெட்ட வறட்டுத்தனமும், பல சங்கத ஆய்வாளர்களை நாவலந்தீவின் இன்னொரு பகுதியான தமிழ்ப் பக்கத்தையும், இது போல முண்டா மொழிப் பக்கத்தையும் (இதைக் காணாது இருப்பதில் தமிழாய்வாளர்களும் சேர்த்தி தான்.) காண விடாது ஒதுக்கி வைக்கவே சொல்லுகின்றன. "ஸ்ர்வம் ஸ்வ்யம்" என்ற சிந்தனை அவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது.

ஊற்றுவது, சொரிவது, கொட்டுவது, போடுவது, எறிவது, வீசுவது என்ற சொற்களெல்லாம் ஓம குண்டத்தில் போடாத (நீர்மம், மற்றும் திண்மப்) பொருள்களுக்கும் பயன்படும் ஒரு வினை தான். அதே பொழுது, இந்த வினைச்சொற்கள் ஓமகுண்டத்திற்கே மட்டுமே உரியவை என்ற விதுமையாகச் சொல்லமுடியாது. வடமொழியிலும் கூட இப்படித் தான். அதனால் தான் வேள்வியைப் பற்றிச் சொல்லும் போது to pour என்பதைக் காட்டிலும், to call என்பதைச் சொல்லும் வேரில் இன்னும் பொருள் ஆழம் இருக்குமோ என்று அய்யுறுகிறோம்.

பல மொழிகளிலும் அழைப்பு என்பது பெரும்பாலும் கூவுதலே. ஆ, ஈ, ஏ, ஓ, கூ, கோ என்ற ஓரெழுத்துச் சுட்டுக்கள் தான் அழைத்தலுக்கு வாகாய், பல மொழிகளில் அமைகின்றன. இவை மொழி கடந்த ஒலிக்குறிப்புக்கள். நாளாவட்டத்தில், இது போன்ற ஒரு ஒலிக்குறிப்பைச் சத்தம் போட்டுச் சொல்லி பின்னால் பெயர்களையும் சேர்த்து நாம் அழைக்கிறோம். கூப்பிடுவதில் தேவதைகளுக்கு ஒருவிதம், மாந்தருக்கு இன்னொரு விதம் என்று யாரும் பார்ப்பதில்லை. எல்லாமே ஒன்றுதான். இங்கே மீண்டும் தமிழ்க் காட்டைத் தருகிறேன். [அய்யய்யோ, இவன் அப்பத்தாவைப் பற்றியே பேசுகிறான். எத்தனை வெள்ளைக்காரரை, எத்தனை சங்கத அறிஞரை இவன் அடையாளம் காட்டுகிறான், சமஸ்கிருதமாய நமக என்று சொல்லுகிறான்? - என்ற ஒரு சிலரின் புலம்பலுக்குச் சிரிப்புத் தான் என் விடை :-).] மற்ற மொழிகளில் இருந்தும் காட்டுக்களைச் சொல்ல முடியும். ஆனால் தேட விழைபவர்கள் தாங்களே தேடிப் பார்க்கட்டுமே? :-)

"அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே, அன்பினில் விளைந்த ஆரமுதே" என்ற ஏகார, ஆகாரமும், "பித்தா, பிறைசூடி, பெம்மானே, அருளாளா" என்ற ஆகார, ஈகார, ஏகாரங்களும், "ஓ, கண்ணா, இங்கே வா" என்ற ஓகாரமும் (ஓவென வையகத்து ஓசைபோய் உயர்ந்ததே - சீவக. 1843), "யோவ், ஓவ்," என்ற கூப்பாடுகளும், கூவுதலும், கோவென்ற அழுகையும் என எல்லாமே அழைப்புக்கள் தான். இந்த மொழிகளுக்கு மீறிய, மாந்தப் பொதுச் சுட்டொலிகளில் இருந்துதான், hve_ போன்ற வேர்ச்சொல்லும் கூட எழும். ஏ என்ற ஒலியோடு ஹகரம் சேர்த்து ஹே என்றும் வடபுலத்தில் கூப்பிடுவார்கள். he_ என்பதற்கும் hve_ என்பதற்கும், hey என்ற பதற்கும் கூடப் பலுக்கலில் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. (மறுபடியும் ஒரு மொழியில் இருந்து இன்னொன்று என உணர்வு பூர்வமாய்ப் புரிந்து கொள்ளாதீர்கள்.) அதே போல ஓ என்பதை ஹோ என்று வடபுலத்தில் கூப்பிடுவார்கள். கூ என்பது கூட பலுக்கத் திரிவில் கோ என்றும் ஹோ என்றும் மாறும்.

வேதம், குறிப்பாக இருக்கு வேதம், யாகங்களின் போது பல் வேறாகத் தேவதைகளை அழைக்கிறது. எல்லா யாகங்களுக்குமே "இதைப் பண்ணிக் கொடு, அதைச் செய்து கொடு" என்ற வேண்டுதல்கள் தான் அடிப்படை. வேள்தல்>வேட்டல் என்ற தமிழ் வினைச்சொல்லையும் கூட இங்கே நினைவு கொள்ளுங்கள்.
வேட்டலின் தமிழ்வேரை பர்ரோ, எமெனோவின் 5544 வது சொல்லாகப் பார்க்கலாம்.

5544 Ta. vēḷ (vētp-, vēṭṭ-) to offer sacrifices, marry; n. marriage; vēḷvi sacrifice, marriage; vēḷvu sacrifice; presents of food from the bridegroom's to the bride's house and vice versa at a wedding; vēṭṭal marriage; vēṭṭāṉ, vēṭṭōṉ husband; vēṭṭāḷ wife; viḷai (-pp-, -tt-) to perform as worship. Ma. vēḷvi, vēr̤vi sacrifice; vēḷkka to marry as brahmans before the holy fire; vēḷi, vēḷvi marriage, bride, wife; vēḷppikka fathers to marry children. Ka. bēḷ to offer into fire or with fire as ghee, animals, etc.; bēḷuve oblation with fire, burnt-offering; bēḷamba destruction of human life in fire. Tu. belcaḍe a devil-dancer, one possessed with Kāḷī. Te. vēlucu to put or throw in a sacrificial fire, offer up a burnt sacrifice; vēl(u)pu god or goddess, deity, divinity, a celestial, demi-god, immortal; vēlpuḍu worship; vēlimi oblation; (inscr.) vēḷpu god. DED(S, N) 4561.

வேள்தலின் ஒரு நடைமுறை, படிமம் இல்லாத வகையில் நெருப்பில் ஆகுதி செய்யும் முறை. வேள்தலின் இன்னொரு நடைமுறை பூவும், நீரும் தெளித்து, படிமத்தின் முன், படையல் செய்யும் வழிமுறை. இதுவும் ஒரு வேள்வி தான்; ஆனால் நெருப்பு இல்லாத வேள்வி; பூசை என்ற பெயரால் இதைச் சொல்லுகிறோம்.

சிவகங்கை வட்டார அய்யனார் கோயில்களில் பூசை செய்பவரை, வேள காரர் என்று தான் சொல்லுவார்கள். இன்னொரு இடத்தில் "வேளாப் பார்ப்பான்" என்று வேள்வி செய்யாத பெருமானரைச் சங்க இலக்கியம் பேசும். ஆகக் குறிக்கோள் ஒன்றுதான்; நடைமுறைகள் தான் வெவ்வேறு. [அய்யனார் கோயில் வழக்குகளை இன்னோர் இடத்தில் பார்க்கலாம். இப்பொழுது பெருமானர் வேள்வியைச் சற்றே கூர்ந்து பார்ப்போம். இந்த வகையில் நம்பூதிகள் சிறப்பானவர்கள். வணக்கத்திற்குரிய ஓதிகள் என்ற பொருளில் அமைந்த நம் ஓதிகள் என்ற அவர்கள் பெயரும் கூட நான் சொல்ல வரும் கருத்தை உறுதி செய்யும். அவர்களுடைய வலைத்தளங்களுக்குப் போனால், வேள்விகள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சிறப்பாக விவரிக்கப் பட்டிருக்கும்.]

பெருமானர் வேள்வியின் தொடக்கம், அதை ஏற்பாடு செய்பவன் வீடு, அல்லது அவனுடைய குருவின் வீட்டில் இருக்கும் அடுப்பில் இருந்து தொடங்குகிறது. அந்த அடுப்பில் இருந்து தான், நெருப்பை யாகத்தில் ஏற்றுகிறார்கள். யாகம் தொடங்கும் போது யாகத்தை ஏற்பாடு செய்பவனும், அவன் மனைவியும், யாகம் செய்யும் 16 ஓதிகளும் அழனியைத் துதிக்கும் இருக்கு வேதத்தின் முதற் சொலவத்தைச் (slogan) சொன்னவாறே யாகக் குண்டத்தைச் சுற்றி வருகிறார்கள்.

[ஒவ்வொரு பெருமானனும் தங்கள் வீட்டில் அணையாத நெருப்பை ஓம்புதற்குக் கடமைப் பட்டவர்கள். ஒவ்வொரு பெருமானனும், அவன் மனைவியும் தங்கள் வீட்டில் ஒரு நாளுக்கு இருமுறையாவது அழனியைத் தூண்டி, அழனியை அழைத்து, மந்திரம் ஓதி, வழிபாடு செய்யவேண்டும். அந்தச் சடங்கிற்கும் அழனியோதல் - agnihotra என்ற பெயர் தான் உண்டு. இன்று மிக மிக அருகியே பெருமானர் பலரும், தங்கள் வீட்டில் நெருப்பை ஓம்பும் கடமையைச் செய்கிறார்கள்.] ஓமம் என்ற சொல் அணையாது காப்பாற்றப்படும் தீயைத் தான் குறிக்கிறது. ஓமுதல், ஓம்புதல் என்ற சொற்கள் இன்றும் கூடக் காப்பாற்றுதல், வளர்த்தல் என்ற பொருளைத் தமிழில் கொடுப்பதை உணரலாம். குடிபுறம் காத்து ஓம்பி - குறள் 549; ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் - பொருநர் ஆற்றுப்படை. 186 கற்றாங்கு எரியோம்பி தேவா. 1.1). ஓமல் என்ற சொல் புகையெழுதலையும், புகையைப் போலவே எழுந்து ஊர் முழுக்கச் சுற்றிவரும் ஊர்ப்பேச்சையும் குறிக்கும். இந்தப் பொருட்பாடுகளும் ஓமம் என்ற சொல்லின் தமிழ்மையை உணர்த்தும். எரிதலை உணர்த்துவது போல நாவில் எரிதல் உணர்வைக் கொண்டுவரும் ஒருவிதமான காரமான மருந்துச்செடியும் கூட ஓமம் (Bishop's weed) என்றே தமிழில் சொல்லப்படும். ஓமநீரம் = ஓமச்சாறு; இன்னொரு பொருளாய், ஓமநீரம் என்பது வேள்வித் தீயில் நெய் முதலியன பெய்கையைக் குறிக்கும். offering an oblation to the gods by pouring ghee etc. into the consecreted fire.

யாகம் செய்யும் 16 ஓதிகளில், hotri என்பவர் யாகத்தின் போது இருக்கு வேத மொழிகளை ஓதுகிறவர். பல அகரமுதலிகளும் hotr என்பதற்கு reciting priest என்றே சொன்னாலும், அவர் இருக்கு வேதம் ஓதுகிறவர் என்பதே முகன்மையான செய்தி. recitation என்பது தமிழில் ஓதுதலே. யாகத்தின் போது செய்யும் ஆகுதிகளை குண்டத்தில் கொட்டுவதோடு, இருக்கு வேதத்தின் முதல் எட்டு மண்டலங்களில் இருந்து இந்த ஹோத்ரி ஓதுகிறார். (ஒன்பதாவது மண்டலம் சோமச் சாறு பற்றியது. அதைப் பேசினால் நான் சொல்ல வந்தது விலகிப் போகும்.] இந்த hotr போக, இன்னும் மூன்று பெரிய ஓதிகள் யாகத்திற்கு என உண்டு. யசுர் வேதச் செய்திகளைக் கூறி யாகத்தின் மானகையைக் (management) கவனிக்கும் Adhvaryu, சாம வேதத்தைப் படிக்கும் Udgatr (அல்லது chanting priest - பதனை என்ற பஜனையைச் செய்பவர்; பதங்களைத் தொடுப்பது பதனை.), இவர்களுக்கு மேலிருந்து மொத்த யாகத்தையும் கவனிக்கும் பெருமானன் அல்லது அதர்வன் ஆகிய மூன்று பேரும் இந்த மூன்று ஓதிகள் ஆவர்.

அன்புடன்,
இராம.கி.

ஓதி - 1

என்னுடைய தெள்ளிகை - 2 இடுகைக்கு கல்வெட்டு ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் பின்னூட்டியிருந்தார். அதன் மறுமொழி இங்கு தனிப்பதிவாகிறது: [சட்டென்று இதை எழுத முடியவில்லை. என்னுடைய அலுவலுக்கு நடுவில், இரவு விழித்திருந்து, கொஞ்சம் சரிபார்த்து, மூன்று நான்கு வரைவுகளுக்குப் பின்னால், இதைப் பதிவிட வேண்டியதாயிற்று. அதற்குள் சில விடலைக் காவிக் குஞ்சுகளுக்குப் பொறுக்க வில்லை போலும்; வழக்கம் போல, சேற்றை அள்ளித் தெளிக்கத் தொடங்கிவிட்டன. மருமகள் என்ன சொல்லப் போகிறாள் என்று மாமியார் காத்திருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்; ஆனாலும் இப்படியா? இவர்களின் லொள்ளு அளவுக்கு மீறுகிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு விடை சொல்ல மட்டுமே, நான் வலைப்பதிவு வைத்திருக்கிறேனா, என்ன? ;-)]
--------------------------
அன்பிற்குரிய திரு. எஸ். இராமச்சந்திரன்,

"நீங்கள் சமஸ்கிருதத்தில் என்ன படித்திருக்கிறீர்கள்? உங்களுக்கு சமஸ்கிருதத்தில் புலமை அவ்வளவாக இல்லை. நீங்கள் அந்த மொழியை ஓரளவு நன்றாகக் கற்றுக் கொண்டால் இத்தகைய முயற்சிகளில் பிழைகள் வருவதைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் கொஞ்சம் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் கூட உங்கள் முயற்சிகளை எள்ளி நகையாட வாய்ப்புள்ளது." என்று எழுதியிருந்தீர்கள்.

உங்களைப்போல் நானும் சங்கதப் பண்டிதன் அல்லன்; பேசத் தெரியாது. ஆனால் சங்கதச் சொல்லறிவு ஓரளவு பெற்றவன். என்னுடைய பிழைகளை, அறிந்தவர் சொன்னால், திருத்திக் கொண்டு தான் வருகிறேன். தோளில் கைபோட்டும், வாயால் பேச வைத்தும், "சங்கதம் தேர்ந்தவனா?" என்று நோடிப் பார்க்கின்ற காலமெல்லாம் மலையேறி விட்டது, அய்யா! என் சங்கத மொழி அறிவை, எந்த அளவு, எங்கிருந்து, எப்படிப் பெற்றேன் என்பதைத் தேர்வெழுதிச் சான்றிதழ் காட்டி நிறுவத் தேவையில்லை.

இப்படித்தான் நண்பர் ஒருவர் "எந்த peer journal-ல் நீ கட்டுரை வெளியிட்டிருக்கிறாய்? தமிழில், இந்தியவியலில் என்ன பொத்தகம் போட்டிருக்கிறாய்?" என்று கேட்பார். நீங்கள் கேட்பதும் அது போலவே இருக்கிறது. துறைக்கு உள்ளே வெளியாள் புகாமல், வரம்பிட்டு, வேலியிட்டுப் புலத்தைக் காக்கும் இந்தியப் பல்கலைச் சட்டாம் பிள்ளைகளுக்கும், புதிய சாதிப் போக்கிற்கும் (பழையதில்லை, உருவகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்), நான் எங்கே விடை சொல்ல முடியும்? :-)

மும் மூன்று புள்ளிகளாய், 3 அடுக்கில் 9 புள்ளிகளை வைத்து, கையெடுக்காமல், 4 நேர்கோடுகளால் சேர்க்கச் சொல்லி மானகை (management) வகுப்புக்களில் ஒரு புதிர் போடுவார்கள்; அதற்கு விடை காணும் போது தான், "மரபுச் சிந்தனை என்பது நம்மை அறியாமலேயே கட்டிப் போடுவதையும், அந்த மரபு வேலியை உடைத்தால் தான் புதுப் பரிமானங்கள் புரியும், புது இயன்மைகள் (possibilities) தெரியும்", என்பதையும் அறிந்தேன். மொழியாய்வும் கூட அப்படித்தான். கிளிப்பிள்ளை போல், எல்லாவற்றிற்கும் "பாணினி சொன்னான், தாது பாடம் சொன்னது" என்பதும், "தொல்காப்பியன் சொன்னான், நச்சினார்க்கினியன் உரை செய்தான்", என்பதும் நெடுந்தொலைவு நம்மை எடுத்துச் செல்லாது என்பது என் புரிதல்.

தெள்ளிகை பற்றிய என் இடுகை இன்னும் முடியாதது. [இடையில், தனித்தமிழ் பற்றி ஒரு தொடர் இடுகை இட வேண்டிய கட்டாயத்தில், எடுத்த வேலை பாதியானது.] அதில் ஹோத்ரிக்கும் ஓதலுக்கும் இணை சொன்னது ஆழ்ந்து ஓர்ந்து சொன்னது தான். இணை என்றதைக் கூர்ந்து கவனியுங்கள்; "இதிலிருந்து அதா, அதிலிருந்து இதா" என்று நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்ல இன்னும் ஆய வேண்டும். (இந்தப் பதிவுலக அரசியலில் "தமிழ் தான் எல்லா மொழிகளுக்கும் அப்பத்தா" என்று நான் சொன்னதாய் ஒருசில பெயரிலார்கள் (வித விதமாய்க் கற்பனைப் பெயர்களில் வருபவர்களும்) வரிப்பிளந்து அருத்தம் பண்ணி எழுதியதைப் படித்துச் சிரித்தேன். பாவம், விளங்காதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய காவி நிகழ்ப்புகளைத் தொடர்ந்து நடத்துவார்கள். :-))

"crackpot theory" என்ற தங்கள் சொற்றொடரைப் படித்தும் கூடச் சிரித்துக் கொண்டேன். எவ்வளவு எளிதில் இதுபோன்ற வாக்கியங்கள் வந்து விடுகின்றன? குறைந்தது, மோனியர்-வில்லியம்சையும், பாணினியையும், தாதுபாடத்தையும், பர்ரோ-எமெனோவையும் கூடப் பாராமலா, இது போன்ற கருதுகோளை முன் வைப்பேன் என்று நினைக்கிறீர்கள்? தங்களைப் போன்ற ஓர் ஆய்வாளருக்கு இது கூடவா தெரியாது? இந்தக் காலத்தில் தான் கூகுள் சொடுக்கியைத் தட்டினால் கணக்கு வழக்கற்று, செய்திகளைக் கொட்டுகிறதே? அப்புறமும் தமிழ் ஆய்வாளர்கள் கிட்டப் பார்வையுடன் இருப்பார்களோ? இதில் என்ன வருத்தம் என்றால், எங்களைப் போன்ற ஆய்வர்களை இன்னமும் 1950, 60 நிலையிலேயே நீங்கள் வைத்துப் பார்க்கிறீர்கள், பாருங்கள், வியப்புத் தான்.

பொதுவாக, சங்கதச் சொற்களைப் பகுத்து, ஒட்டுருபுகளை வெட்டி, இனியும் பக முடியாது என்ற அளவில், அடிப் பகுதிகளைத் தேடினால், அது தாது பாடத்தின் 2200 வேர்களில் தான் வந்து நிற்கும் என்பது சங்கதம் படிக்கும் ஒவ்வொரு மொழியியல் மாணவனுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும்.

சந்த மொழிக்குப் பாணினியின் பங்களிப்பு பெரிது தான்; சந்தமும் சங்கதமும் நெருங்கியவையே. என்ன ஒரு சிக்கல்? பாணினி சொல்லும் முறை இந்த 2200-ஓடு நின்று விடும்; மேற்கொண்டு நகராது. அது அவன் குறையில்லை. இந்தப் பகுப்பாய்வின் விளிம்பு அதுதான். "இந்த 2200ம் திடீரென்று பிறந்தனவா? ஓர் இயல்மொழிக்குள் அப்படிப் பிறக்க முடியாதே? அவற்றின் பொருட்பாடுகள் எப்படி வந்தன? அவற்றுள் உள்ள பொருட்பாட்டு வளர்ச்சி என்ன? முதல் வேர்கள் எவை? வழி வேர்கள் எவை?" போன்ற கேள்விகளுக்கு பாணினியில் விடை கிடைக்காது. தாது பாடத்தோடு நின்று போவதால் சொல் வளர்ச்சி அறிய முடியாது.அங்கே பலுக்கத் திரிவுகள் கணக்கெடுக்கப் படுவதில்லை. (தொல்காப்பியத்திலும் கூட இது செய்யப்படுவதில்லை. பாணினியும், தொல்காப்பியமும் அவ்வம் மொழிகளின் இலக்கணங்கள்.) ஒப்பீட்டு மொழியியல், குறிப்பாக, வரலாற்று மொழியியல், இந்தத் திரிவுகளைக் கணக்கெடுத்துக் கொள்ளும்.

"ஒரு இயல் பேச்சு மொழியில், இந்த 2200 வேர்களும் ஒன்றிற்கொன்று தொடாதவையா? அன்றி வட்டாரப் பலுக்க விதப்பில் (regional pronunciation specificities; தமிழில் மகரத்திற்கு வகரம் போலி என்கிறோமே அது போல, வங்கத்தில் வகர ஒலிப்பைப் பகர ஒலிப்பாக்கிச் சொற்களை மாற்றிப் பலுக்குகிறார்களே அதுபோல) ஒருசில ஒப்புமைகள் இராதா?" என்று ஆழமாய்ப் போய், ஆகக் குறைந்த அடிவேர்களைத் தேடும் ஆய்வை, இந்தக் காலத்தில் ஒரு சிலர் செய்ய முற்படுகிறார்கள்.

அதோடு இந்த 2200 -யையும் மற்ற இந்தையிரோப்பியன் மொழிகளின் வேர்களோடும் இணைத்துப் பார்த்து, "அந்தக் குடும்ப முழுமையிலும் எவ்வளவு பொதுமை (genericity) இருக்கிறது? முது-இந்தையிரோப்பிய வேர்கள் எவ்வெவை? இந்தோ இரானியன் குடும்பத்திற்குள் எவ்வளவு பொதுமை இருக்கிறது? நாவலந்தீவினுள்ளேயே வெளிப்பட்ட விதுமைகள் (specificities) எத்தனை? திராவிடத்தில் இருந்து கடன் வாங்கப்பட்ட வேர்ச் சொற்கள் எத்தனை? முண்டா மொழிக் குடும்பத்தில் இருந்து உருவானவை எத்தனை?" - என்ற கேள்விகளும் இப்பொழுது ஆய்வு செய்யப் படுகின்றன.

இது போன்ற கேள்விகளில் நான் ஆர்வம் உள்ளவன். என் ஆர்வம் சங்கதத்தை நடுவண் வைத்துப் பார்ப்பதல்ல; தமிழை அருகே பொருத்தி வைத்துப் பார்ப்பது. நான் ஒரு நோஸ்ட்ராட்டிக் (Nostratic) சார்புப் பேர்வழி. தமிழியக் குடும்பம், இந்தையிரோப்பியத்திற்குச் சற்று விலகிய, ஆனால் அதோடு தொடர்புள்ள குடும்பம் என்றே எண்ணுபவன். இதெல்லாம் தெரியாத அல்லது புரியாத சங்கத வழிபாட்டு வலைப்பதிவர்களும், சட்டாம் பிள்ளைகளும், சில விடலைப் பிள்ளைகளும், "சங்கதத்தை குறைத்துச் சொன்னேன்" என்று வறட்டுத் தனமாக, முட்டாள் தனமாகப் புரிந்து கொள்ளும் அடிப்படைவாதிகளும், குதித்துக் கொண்டு வருகிறார்கள். என்னவென்று தெரியாமல், இந்த அரசியலுக்குள், நீங்களும் உள்புகுந்து நிற்கிறீர்கள்.

சரி, நான் சொன்ன சொல்லிணைக்கு அடுத்த பகுதியில் விளக்கம் கொடுக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, January 24, 2007

தானமும் கொடையும் - 3

இனித் தானம் என்ற சொல்லின் இலக்கிய ஆட்சிகளைப் பார்ப்போம்.

[அதற்கு முன் ஓர் இடைவிலகல். ஒரு சிலர் தமிழ்ச்சொற்கள் பற்றி ஒரு விந்தையான கண்ணோட்டம் வைத்திருக்கிறார்கள்; குறிப்பிட்ட சொல் அப்படியே தொல்காப்பியத்தில், அல்லது சங்க இலக்கியத்தில் இல்லையா, அப்படியானால் அது வடசொல்லாகத் தான் இருக்கும் என்பது இவர்களின் நிலைப் பாடு. பிற்கால இலக்கியம் அதைக் கையாண்டிருந்தால் கூட, அது ஒரு கடன் சொல் தான் என்று இவர்கள் அழுத்தமாகக் கூறுவார்கள். அதாவது தொல்காப்பியம், சங்க இலக்கியம் என்பவற்றை ஓர் அகர முதலியைப் போல இவர்கள் கருதிக் கொள்ளுகிறார்கள். அவற்றில் இல்லையென்றால் அப்புறம் அந்தக் குறிப்பிட்ட சொல்லின் கதி அதோ கதி தான். இன்னுஞ் சிலர் "என் தந்தை, என் குரு ஆகியோர் கால காலமாய் இந்தச் சொற்களை வடசொல் என்று சொன்னார்கள், எனவே அவை வடசொற்கள் தான்" என்று ஆழ்ந்த நம்பிக்கையின் பேரில் சொல்லுவார்கள். (கருநாடக இசை சாம வேதத்தில் இருந்து எழுந்தது என்று ஒரு சிலர் நம்புவதைப் போன்றது இந்த நம்பிக்கை. "வேதம் என்பது எல்லாம் தெரிந்தது, எல்லாம் வல்லது, எல்லாம் சொல்வது" என்பது போன்ற இந்தக் கூற்றுக்கள் ஒரு வித நம்பிக்கை நிறைந்தவை; அவற்றை அலசி, மோனியர் வில்லியம்சு, பாணினி வழி அசைத்துப் பார்ப்பது இவர்களைப் போன்றோருக்கு ஆகாதது.)

என்னைப் பொறுத்தவரை தமிழ்ச் சொற்களை அப்படிப் பார்ப்பதில்லை. குறிப்பிட்ட சொல்லை ஒட்டிய இணைச் சொற்கள், வேர்ச் சொற்கள், இன்னும் பல்வேறு பட்டுமைகள் (possibilities), குறிப்பாக உள்ளே பொதிந்திருக்கும் வினைச் சொல்லின் வரலாறு, ஆகியவற்றைப் பார்த்தே இந்தச் சொல் தமிழா, தமிழில்லையா, என்று ஓர்ந்து பார்க்கிறேன். பிற்கால இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் வரும் சான்றுகளையும் முடிந்தவரை பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அப்பொழுது தான், ஓரளவாவது உறுதியாகச் சொல்லமுடியும். அதோடு ஏற்கனவே சொன்னவற்றை, மீண்டும் மீண்டும் புதிய தரவுகள் கிடைக்கும் போது மீள்பார்வையும் செய்ய விழைகிறேன். பல நேரம், நம்முடைய முடிவுகள் மீள்பார்வைக்கு வரவேண்டியது ஆகிறது. மொத்தத்தில் இது ஒரு வகை அறிவியற் தேடல்.]

தானம் என்ற சொல், திருக்குறளில் இரண்டு இடத்திலும், சிலம்பில் ஓரிடத்திலும் "கேளாமல் தருவது" என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. அவற்றை இனிப் பார்ப்போம். முதலில் வான்சிறப்பில் வரும் 19 வது குறள்.

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.

என்ற இந்தக் குறளை "வானம் வழங்காது எனின், தானம், தவம் ஆகிய இரண்டும் வியனுலகம் தங்கா" என்று வரிமாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். வானம் என்பது இங்கே வெறும் விண்ணைக் குறிக்கவில்லை; புவியோடு காற்று மண்டலத்தையும் சேர்த்துக் குறிக்கிறது. புவியின் நீர்ப்பரப்பு சூரிய வெப்பத்தால் ஆவியாகிப் பின் மேலே போய்க் குளிர்ந்து முகிலாகி, மீண்டும் பொழிகிற நீர்ச் சுழற்சியில், மழை என்பது ஒரு பெரிய நீர்வரத்து; இந்த நீர்ச்சுழற்சியைப் புரியாத மாந்தன், வானமே மழையை வழங்குவதாய்ப் புரிந்து கொள்ளுகிறான். இது ஒரு குறைப் புரிதல் தான்; இருந்தாலும் (வள்ளுவரையும் சேர்த்த) பழம் மாந்தன் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறான்.

இதைத் தொடர்ந்து, "மழை வருவதற்கும், தானம் தவம் ஆகிய இரண்டிற்கும் என்னய்யா தொடர்பு?" என்ற சிந்தனை நமக்குள் எழுகிறது. தானம் என்பது பிறர் கேளாமல், ஒருவரின் தேவையை அறிந்து, மனம் உவந்து தரப்படுவது என்று பார்த்தோம். எப்பொழுது இப்படிப் பிறர்க்குத் தர மனம் வரும்? ஒருவர் வளமாக இருந்தால் அது போன்ற ஒரு மனம் வரும். உலகில் உள்ள பலருக்கும் எப்பொழுது அந்த மனம் வரும்? உலகில் வளம் இருந்தால் இது போல தானம் செய்ய மனம் வரும். வளம் இல்லையெனில் யாருக்கேனும் இது போன்ற மனம் வருமோ? வராது.

எனவே மழை என்ற ஒன்று இருந்தால் உலகில் வளம் ஏற்படும்; அது இருந்தால், தானம் என்பது உலகில் தங்கும்.

உயர்கணக்கில் தேற்றங்களை (theorems) நிறுவும் போது இருத்துமை கட்டியங்கள், பொந்திகைக் கட்டியங்கள் என்று சொல்வார்களே, அதைப் போல, மழை என்பது தானம், தவம் என்ற இரண்டிற்குமான இருத்துமை, பொந்திகைக் கட்டியமாகும். (They are the necessary and sufficient conditions; "இது இருந்தால் அது நடக்கும்" என்று பேச்சு வழக்கில் சொல்கிறோமே; அங்கே ஒன்றின் இருத்துமை என்பது necessary என்ற பொருளிலே தான் ஆளப்படுகிறது. பொந்துதல் என்பது பொருந்துதல் என்பதின் இடைக்குறை. பொந்தித்தல் என்பது நிறைதல். பொந்திகை என்ற பெயர்ச்சொல் எழுந்து sufficiency என்று பொருள் கொள்ளுவது இப்படித்தான்.) .

தானத்தைப் போலத் தவம் என்பதும் வளம், மழை ஆகியவற்றோடு தொடர்பு கொண்டது. தவம் என்பது வாழ்வுப் பற்றில் இருந்து விலகுவது, நீங்குவது என்ற பொருள் கொள்ளும். தபுத்தல் ( >தவத்தல்) என்ற வினையோடு தொடர்பு கொண்ட தவிர்த்தல் என்ற இன்னொரு வினையை இங்கே நினைவு கொள்ளுங்கள். தவம் என்பது பற்றை அறுத்த நிலை; அதற்கும் மேலே போய், பற்றையே துறப்பது துறவு எனப்படும். அதாவது தவத்தின் நீட்சி துறவு. வளமே இல்லாத நாட்டில், பற்றே ஏற்படாத நிலையில், அப்புறம் எதைத் துறப்பது, சொல்லுங்கள்?

துறவு, தவம் போன்றவற்றிற்குச் சரியான பொருள் வேண்டுமானால், மழை, அப்புறம் வளம், ஆகியவை மாந்தனின் எதிர்பார்ப்பாய் இருக்க வேண்டும். வானம் மழையை வழங்கவில்லை என்றால், உறுதியாய் ஒரு நாட்டின் வளம் குன்றும்; நல்லோர் தவம் இருக்க மாட்டார்கள்; தானம் செய்ய மாட்டர்கள்; "அவையெல்லாம் உலகில் இருந்து விலகிவிடும்" என்கிறார் திருவள்ளுவர். ஒரு நாட்டின் பஞ்ச காலத்தில், காட்டாக இன்றைய ஆப்பிரிக்காவில் சோமாலியாவில், நடப்பதைப் பார்க்கிறோம், அல்லவா? ,

இனி தானம் என்ற சொல் பயிலும் அடுத்த குறள் 295 -யைப் பார்ப்போம். இதில் மனத்தொடு சேர்ந்த வாய்மை நிலையை, தவம், தானம் ஆகிய இரண்டோ டு, வள்ளுவர் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

மனத்தொடு வாய்மை மொழியில் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை

மனத்தோடு உண்மை பேசினால், அது தவம் செய்பவர்களைக் காட்டிலும், தானம் செய்பவர்களைக் காட்டிலும், தலையாயது ஆகும் என்று இங்கு சொல்லுகிறார். மேலும் இதற்கு விளக்கம் தேவையில்லை என்று அடுத்த சொல்லாட்சிக்கு நகர்கிறேன்.

இது சிலம்பில் வஞ்சிக் காண்டத்தில், நீர்ப்படை காதையில், வரி 98-100ல்,

"கண்ணகி தாதை, கடவுளர் கோலத்து,
அள்நலம் பெருந்தவத்து, ஆசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்து அறங் கொள்ளவும் ...

என்று பயிலும். (ஆசீவகம் பற்றி எழுதுவதாகப் பலநாட்கள் முன் சொல்லிவிட்டு இன்னும் அந்த வேலையில் இறங்காது இருக்கிறேன். செய்யவேண்டியது நிறைய இருக்கிறது.) கண்ணகியின் முடிவு அறிந்து, அவள் தந்தை மாநாய்கன் "கடவுளர் கோலத்தில், நலம் கூடிய பெருந்தவம் நிறைந்த ஆசீவகர் முன், புன்ணியம் தரும் தானங்கள் செய்து" அறங் கொண்ட செய்தி இங்கு குறிப்பிடப் படுகிறது.

நாலாவது காட்டு இனியவை நாற்பது 27 ல் வருகிறது.

தானம் கொடுப்பான் தகையாண்மை முன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன் இனிதே
ஊனம் கொண்டு ஆடார் உறுதி உடையவை
கோள்முறையால் கோடல் இனிது.

இதற்குப் பொருள் சொல்ல முற்படவில்லை. வேண்டும் என்பவர்கள் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, வடசொல் வேர் பற்றிய ஒரு கருத்து. தானம் என்ற சொல்லையும், தாதா என்ற வடசொல்லையும் வைத்து, அவற்றின் வட சொல் வேராகப் பாணினியின் தாது பாடத்தில், கீழே வரும் 5 வகையில் தந்திருப்பார்கள். (வடமொழிச்சொற்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படையான வேர்களாக ஒரு பகுப்பாய்வு முறையில் கூறுபடுத்தி 2100 வேர்ச்சொற்களை அதில் காட்டியிருப்பார்கள். அவற்றின் இடையே இருக்கும் ஒத்திசைவு - consistency - பற்றிப் பல கேள்விகள் எழுப்ப முடியும். அதையெல்லாம் செய்தால், சங்கதம் என்னும் கலவை மொழியின் அடித்தளம் சரியாகப் புரிந்து போகும். ஆனால் "போற்றி" பாடிக்கொண்டிருக்கும் பலருக்கும் அது ஒவ்வாததாய் இருக்கும். அதனால், தூற்றத் தொடங்கி விடுவார்கள். அவற்றிற்கு மறுமொழி சொல்லியே, என் பொழுது போய்விடக் கூடும் என்பதால், பாணினியின் தாதுபாடத்தில் இருக்கும் அடிப்படை முரண்களைப் பற்றி பேசுவதை இங்கு முற்றிலுமாய்த் தவிர்க்கிறேன்.)

da_ to give; deri. datta, de_ya, yacchat, dadivas
dad to give; to offer; to present
da_y to give
da_s' to give; to offer an oblation
da_s to give

தானம் என்ற சொல்லிற்கு இன்னும் வேறு இரண்டு முகன்மையான பொருட்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்று தான்றுதல் என்ற வினைச்சொல்லின் வழி வந்தது. தான்றுதல் என்றால் பதித்தல். தானித்தல் / தாணித்தல் என்றாலும் பதித்தல் தான். தான்றுதல்/தாண்டுதல் என்பதைத் தண்டுதல் என்றும் கூடச் சொல்லுவார்கள். (இதுதான் ஆங்கிலத்தில் வரும் to stand என்பதற்கு இணையான சொல்.) எண்களில் வரும் தோய்களை (digits) தானம் என்று குறிப்பிடுவது உண்டு (ஒரு 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் கூட இந்தச் சொல்லாட்சி நம்மூர்களில் கணக்குப் பாடத்தில் உண்டு. என்னுடைய திண்ணைப் பள்ளிக்கூடக் காலங்களில் ஒன்றாம் தானம், பத்தாம் தானம், நூறாம் தானம் என்ற பயன்பாட்டைப் படித்திருக்கிறேன்; பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், இப்பொழுது தமிழர் பலருக்கும், digit என்றால் தான் விளங்குகிறது. தானம் என்ற சொல் இந்தப் பொருளில் போயே போயிந்தி. இன்னும் மேலே போய், இடம் என்ற பொருளில், தானம் என்ற சொல்லைத் தான், முன்னே ஸ் சேர்த்து ஸ்தானம் என்று வடமொழியில் சொல்லுவார்கள். பலருக்கும் இந்துஸ்தானம், ராஜஸ்தானம் என்ற கலப்புச் சொல்லாட்சி தெரிந்திருக்கும். உள்ளே கிடக்கும் தமிழ்வேர் தான் அவர்களுக்குத் தெரியக் காணோம்.

இன்னொரு பயன்பாடு "தான, தன, தந்தன" போன்ற ஒலிக்குறிப்பில் எழும் சொல்லான தானம். இந்த ஒலிக்குறிப்பு, மொழி சாராத பொதுப்படையான ஒன்றாகும். இந்தத் தானம், நமக்கும் ஒன்றுதான், வடபுலத்திற்கும் ஒன்றுதான். பொதுவாக, ஓர் இசைப்பாடலைப் பாடும் போது, அராகம், தானம், தொடுப்பு (பல்லவி), விரிப்பு (சரணங்கள்), முடிப்பு என்ற வரிசையில் அமைப்பார்கள். அராகம் என்பது பண். இது வெறும் சுரக் கோவையாகப் பாடுவது. சுரக் கோவையில் ஆளத்தி (=ஆலத்தி = ஆலாபனம்) செய்து கேட்போருக்கு அந்தப் பண்ணின் விரிவை உணர்த்துவார்கள். அடுத்து அதோடு நிற்காமல், மேலே போய்த் தன்னனாப் போட்டு ஆளத்தி செய்வதும் வாய்ப்பாட்டிசையில் ஒரு பழக்கம். இதற்குத் தான் தானம் பாடுதல் என்ற பெயர் உண்டு. இந்தத் தானத்திற்கு அடுத்துப் பாடலின் தொடுப்பும், விரிப்பும் முடிப்பும் அமையும். பாடலின் மொத்த நீட்சியும் இசைஞனின் விருப்பிற்கு ஏற்ப, அமையலாம்.

தா, தரு என்ற சொற்களுக்குச் சற்று விலகிய நிலையில், தாள் என்னும் அடிப்பொருளில், தாள்தன்>தாதன் = அடியவன், தாள்தி>தாதி = அடியவள் என்ற சொற்களும் தாள்>தள், தாள்>தன், தாம், தான், தத்தம் என்று தன்னை/தம்மை அடிநிலையில் வைத்துச் சொல்லும் பகரப்பெயர் (pronoun) பயன்பாடுகளும் தமிழில் உண்டு. அவற்றையும் இங்கு விளக்கினால் இன்னும் கட்டுரை நீளம் கூடிப் போகும்; எனவே தவிர்க்கிறேன்.

இவ்வளவு விளக்கங்கள் இந்தத் தானம் என்ற சொல்லிற்குப் போதும் என்று நினைக்கிறேன். கட்டுரையை முடிக்குமுன் ஒரு செய்தி. இன்றையத் தமிழ் நடையில், அளித்தல், ஈதல், தருதல், கொடுத்தல் ஆகிய வினைகள் எல்லாம் அவற்றின் நுணுகிய வேறுபாடுகளைத் தொலைத்து ஒன்றிற்குப் பகரியாய் இன்னொன்று என்று நாம் புழங்கும் நிலைக்கு வந்துவிட்டன.

என்னுடைய சொல்லாய்வுக் கட்டுரைகளில் பல இடத்தும் எனக்கு முன்னவர்களான பாவாணரும் மற்றவரும் உள்நிறைந்து நிற்கிறார்கள். அவர்களில் இருந்து பலவிடத்து ஒன்றுபட்டும் சிலவிடத்து வேறுபட்டும் நான் இருக்கிறேன். என்னுடைய முடிபுகளுக்கு நானே பொறுப்பு.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, January 23, 2007

தானமும் கொடையும் - 2

"தானத்தின் வேர்ச்சொல் விளக்கத்திற்கு போகலாமா?" என்று சென்ற பகுதியில் முடித்திருந்தேன். பூங்கா வலையிதழுக்காக "பொங்கலோ பொங்கல்!" என்ற கட்டுரை எழுதியதிலும், சென்னையில் பொத்தகக் காட்சிக்கு போய்ப் பொத்தகங்கள் வாங்கி வருவதிலுமாய் பொழுது போய், நான் சொன்ன அடுத்த பகுதி, மேற்கொண்டு தொடராமலே நின்று போனது. மீண்டும் இழுத்துப் பிடித்து வந்திருக்கிறேன். தொய்வு ஏற்பட்டதற்கு மன்னியுங்கள்.

[தொய்வுறுதல் என்பது to get slackened / to lag என்ற பொருள் கொள்ளும்; "கொஞ்சம் தொய்ஞ்சு போச்சு! இனிமெ இழுத்துப் பிடிச்சுருவோம்" என்பது எங்களூர் பேச்சு வழக்கு; இதற்கு, இன்னொரு வட்டாரச்சொல் delay என்ற பொருளில் உள்ள சுணங்குதல் என்பதாகும்; தா(ழ்)மதம் என்னும் வேறொரு சொல் ஓர் இருபிறப்பி. அதன் உள்ளே இலங்கும் தாழ்தல் என்னும் வினை தமிழ்; தாமதம் என்ற முடிப்பு மட்டும் வடமொழி. கூடிய மட்டும் வெவ்வேறு தமிழ்ச் சொற்களை புழக்கத்தில் கொண்டு வர என் இடுகைகள் மூலமாய் நான் பரிந்துரைக்கிறேன். நாம் அறிந்த தமிழ்ச்சொற் தொகுதிகளைச் சிறிது சிறிதாய்க் கூட்டிக் கொள்ளுவோம்.]

"வாழை மரம் குலை தள்ளியது" என்ற வழக்கைக் கேட்டிருக்கிறீர்களா? இங்கு வாழை மரம், குலை ஈன்றதைத் தான், தள்ளியது என்று சொல்லுகிறோம். வாழைக்குலை மட்டுமல்லாமல், வாழைக்கன்று தாய் வாழைக்குப் பக்கத்தில் மண்ணிலிருந்து எழுந்தால் கூடத் தள்ளியது என்றே நாட்டுப் புறங்களில் சொல்லுவார்கள். தென்னை மரம் பாளை விடுதலைக் கூடப் பாளை தள்ளுதல் என்று சொல்லுவார்கள். இது போல, நெற்கதிர் தோன்றுவதைக் கதிர் தள்ளியது என்பார்கள். இப்படியெல்லாம் பயிலும் தள்ளுதற் சொல் தருதல் என்றே பொருளையே சுட்டும். நம்மை உலகிற்கே தருபவளைக் கூடத் "தள்ளை" என்று பழந்தமிழில் சொல்வார்கள். [தாய் குழந்தையை பிறக்கச் செய்வதோடு (பிரிதல் கருத்தின் நீட்சி பிறத்தல்) நம்மைத் தரவும் செய்கிறவள் தானே தள்ளை? தள்ளை>தய்யை>தாய் என்று கூட இதன் வளர்ச்சியாய் ஒரு சாரார் சொற்பிறப்புக் காட்டுவார்கள். இன்னொருவரோ த(ம்) ஆய் என்று பிரித்து இனம் காட்டுவார்கள். நான் இன்னும் தாய் பற்றிய சொற்பிறப்பில் தெளியாமல் இருக்கிறேன்.] இதே சொல்லை, மலையாளத்தில் தள்ள என்றும், தெலுங்கில் தல்லி என்றும் சொல்லுவார்கள். (தெலுங்கு நடிகை விசயசாந்தி தெலிங்கானா மாநிலம் உருவாக வேண்டி நடத்தும் கட்சியைத் தல்லி தெலிங்கானா என்று சொல்லுகிறார்கள்.)

தள்ளுதற் சொல்லைப் போன்றே, இரு திணைக்கும் பொதுவாக ஈனுதற் சொல்லும் ஆளப்படும். ஈன்றாள் என்பவள் தாய்; வாழை குலை ஈன்றது. ஈன் என்ற சொல்லை வைத்து ஈனியல் (genetics) என்ற புதுச் சொல்லை உருவாக்குவார்கள். ஈன் = gene; ஈனுதல் = தருதல்.

துள் என்னும் வேரில் இருந்து, தள் என்னும் சொல்லடி பெறப்படும். துள்ளுவது என்பது முன்னே வருவது. ஒரு நீர்ப்பரப்பில் துள்ளி வருவது என்பது நீரின் அசைவால் தெறித்து ஒரு சிறு கூறு மேலே எழுவது ஆகும். அந்தத் தெறிப்பைத் துளி என்று கூறுகிறோம். துளிப்பு என்பது துளிதுளியாய் ஏற்படுகின்ற நிலை. மேலை மொழிகளில் drop என்ற இணைச்சொல்லை ஒட்டிப் பல சொற்கள் அமையும். நம்முடைய துளிப்புக்கும் அவர்களின் drop ற்கும் உள்ள தொடர்பைக் கவனித்தீர்களா?

நாம் குதிப்பது கூடத் துள்ளுவது என்றே சொல்லப் படும். "ஒரேயடியாகத் துள்ளாதே!". துள்ளுதலில் இருந்து துளும்புதலும், தளும்புதலும் எனப் பல்வேறு வினை நீட்சிகள் ஏற்படும். எல்லாமே ஓர் அசைவாக, நீர்ப்பரப்பு முன்னே வருவதைக் குறிக்கும். துள் என்னும் வேரில் பிறந்த சொற்கள் பலவும் இப்படி முன் வருவதைச் சீராகக் காட்டும்.

துள்>துருதல்>துருத்தல் என்ற வளர்ச்சியில் இருக்கும் "முன்வருதல்" பொருளைப் புரிந்து கொண்டால், தள்ளுதல் என்ற சொல்லின் போக்கும் கூட நமக்குப் புரிந்து போகும். துருத்தி என்பது ஆறு, ஏரி, கடலோரம் ஆகிய நீர்நிலைகளை ஒட்டி, முன்னே வந்திருக்கும் ஒரு நிலப்பகுதி. சோழநாட்டில், திருப்பூந்துருத்தி என்ற ஊர், கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில், காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில், ஆற்றுத் துருத்தியில் உள்ள ஊராகும். இதே போல மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலத்திற்கும் திருத்துருத்தி என்ற பெயர் உண்டு. இந்த ஊர்க் கோயிலின் வடபுறத்தில் காவிரியாறு ஓடுகிறது. இப்படி நீருக்குள் துருத்திக் கொண்டிருப்பது துருத்தி. (அண்மையில் pier என்பதற்கு இணையான ஒரு சொல்லை நண்பர் சுந்தரவடிவேல் கேட்டிருந்தார்; துருத்தி என்றே அதற்கு இணைச் சொல் தரமுடியும்.)

உலைத் துருத்தி (foundry blow pipe bag), ஊது துருத்தி (Scottish blow pipe) போன்ற பயன்பாடுகளையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம். "பாரேன், அந்தப் பெண் எவ்வளவு துருதுருப்பாய் இருக்கிறது" என்னும் போது துருதுருப்பு என்ற சொல்லால், ஒருவர் முன்வரப் பார்க்கும் போக்கைக் குறிக்கிறோம். இன்னும் போய், ஒரு படை அல்லது ஊர் அல்லது நாடு ஆகியவற்றின் முன்னால் வந்து நிற்கும் தலைவனைக் கூடத் துரை என்றே சொல்லுகிறோம். (கண்டவன் எல்லாம் துரை ஆகி விடமுடியாது. மற்றவரில் இருந்து துருத்தி, எழுந்து, முன் வந்தவன் துரை ஆவான்.) இது போலத் துரவிக் கொண்டு (முன்தள்ளிக் கொண்டு) போவது துரத்தல். அப்படித் துரவுவது/துரத்துவது driving; துரவி drive; துரவர் driver; துரவியதால் கடப்பது தூரம். பலரும் முன் தள்ளுவதால் சாலையில் ஏற்படும் முட்டுப் போக்கு நிலை துரப்பு (traffic). இப்படித் துரவில் இருந்து பல சொற்கள் கிளைக்கும். (அவற்றையெல்லாம் சொன்னால், இந்தக் கட்டுரை இன்னும் விரிந்து போகும் என்பதால் நிறுத்திக் கொண்டு, அடுத்த செய்திக்கு நகர்கிறேன்.)

துருத்தி என்ற சொல்லில் இடைக்குறை ஏற்பட்டுத் துத்தி>தத்தி என்று ஆகி நாயனத்திற்கு பின்னால் ஒலிக்கும் ஒத்துக் கருவியைக் குறிக்கும். (உண்மையில் ஒத்து என்பவர் ஓர் இசையின் பின்னால் இருப்பவரல்ல; அவர்தான் அந்த இசைக்கே அடிப்படையானவர்; ஆதாரமானவர். அவருடைய அடிச் சுரத்தின் மேல் தான், நாயனக்காரர் பண் எழுப்பி இசைக்கிறார். ஆகத் துத்தி என்பவர் முன்வந்து நிற்கும் ஓர் ஆயக்கால் - reference - போன்றவர். நம் ஊர்ப்பக்கங்களில், ஊருலாத் திருமேனியைத் - உற்சவரைத் - தூக்கிச் செல்லும் போது வாகனத்திற்கு அடியில் போடும் கட்டைக்கு ஆயக்கால் என்னும் பெயருண்டு. அந்த ஆயக்காலின் மேலே தான் ஊருலவரின் திருமேனி நிற்கிறது. reference என்பதும் அப்படித்தான். ஆயக்கால்களின் மேல்தான் ஒரு கட்டுரையில் நாம் சொல்லும் கருத்துக்கள் நிற்கின்றன.)

இதே போலத் துருத்தம் என்ற சொல், இடை குறைந்து, துத்தம் என்று ஆகிக் குரல் என்னும் முதல் ஓசைக்கு (சட்சத்திற்கு) அடுத்து, சற்றே முன் வந்து நிற்கும் இரண்டாம் சுரத்தைக் காட்டும் (துத்தம் என்னும் இந்தத் தமிழிசைச் சுரம் வ்ரிஷபம்< விஷபம்< விடபம்< விடைவம் என்று இன்றைக்குக் கருநாடக இசையில் சொல்லப் படுகிறது. விடைத்து இருப்பதை, முன்வந்து பெருத்து இருப்பதாகவே நாம் கொள்ளுகிறோம். "என்ன ஆச்சு, பெரிசு விடைச்சுக்கிணு இருக்கு? கோவமோ?" பொதுவாய் விடைத்து இருக்கும் ஒரு விலங்கு, விடை என்னும் வ்ரிஷபம் ஆகும்.)

இதே போல, முன் வந்தாற்போல் காட்சியளிக்கும் ஊதுகொம்பைத் துத்தரி என்றும், இன்னொரு வகை ஊதுகொம்பைத் துந்துபி என்றும் சொல்லுவார்கள். சில பழங்கோயில்களில் துந்துபி விழாக் காலங்களில் ஒலிக்கும். வரலாற்றுத் திரைப்படங்களில் இதைப் பார்த்திருப்பீர்கள்.

இன்னொரு விதமாய், விண்ணவர்கள் தங்கள் நெற்றியின் முன்னே இட்டுக் கொள்ளும் திருமண்ணுக்கும் கூடத் துத்தி என்ற பெயருண்டு. (இந்தக் காலத்தில் நாமம் என்றே சொல்லிப் பழகியவர்களுக்கு துத்தி என்று சொல்லுவது புரியாது.)

உடம்பில் துந்திக் கொண்டு (முன் தள்ளிக் கொண்டு) இருக்கும் வயிற்றுக்குக் கூடத் துந்தி>தொந்தி என்ற சொல்லாட்சி உண்டு. தொந்திக் கணபதியைத் தெரியாதார் யார்? துந்தியின் நடுவில் இருக்கும் கொப்பூழுக்கும் கூட தலைக் குறைவாய் த் என்னும் ஓசையை ஒழித்து, உந்து>உந்தி என்ற சொல் உருவாகும். உந்துதல் என்ற ஆழமான வினைச் சொல்லுக்கும் கூட முன்தள்ளுதல் என்ற பொருள் உண்டு. பேருந்து, சீருந்து, மகிழுந்து, சரக்குந்து, துள்ளுந்து இப்படிப் பல்வேறு சொற்களும் கிளைத்தது இந்த உந்தென்னும் வினையில் இருந்து தான்.

இனி, யானையின் முன் தள்ளிய கை துதிக் கை. (அதையே வேறுவிதமாய், மூன்று தோலும், இரண்டு துளையுமான தோற்றத்தால், துயிக்கை என்றும் சொல்லுவது உண்டு. துய்>துயி = துளை; துயி என்பது வடமொழிப் பலுக்கில் வழக்கம் போல் ரகரம் நுழைந்து, துய்ரி>த்ரி என்று ஆகும் (மோனியர் வில்லிம்சு இதற்கு வேர்ச்சொல் தரவில்லை. வடமொழியைப் பற்றி நம்மவர் கொண்டுள்ள பல்வேறு நம்பிக்கைகளும் இப்படித்தான் இருக்கின்றன. ஏரணம் - logic - பார்த்து ஆழம் போனால், அடிப்படை மாறிப் போய் விடுகிறது). மூன்று என்ற தமிழ்ச் சொல்லும் கூட மூ என்னும் மூக்கு வேரில் இருந்துதான் கிளைத்தது. மூக்கைக் (மூன்று தோல்; இரு துளை) குறுக்காய்ப் படம் போட்டால் மூன்று என்ற எண்ணும் சொல்லும் வந்துவிடும்; எண்களின் சொற்பிறப்புக்களை இன்னொரு வேளையில் பார்க்கலாம்.)

முன் வந்து நின்று, இறைவனைப் பரவுவது (to pray) துதிப்பது ஆகும். (துதிப்பது என்பது, பூதிகமாய்ப் - physical - பார்த்து, ஒரு வரிசையில் முன்வந்து நிற்பது அல்ல. பலரும் கூடியிருக்கும் போது, அவர்களின் சார்பாய் முன்வந்து பாடுவது; இறைவனின் பெயர்களைச் சொல்லி வேண்டுவது) துதித்தலின் பெயர்ச்சொல் துதித்தம். அது திரிந்து துயித்தம்>தொயித்தம்>தோத்தம்>தோத்ரம் என்று வடமொழியில் போய்ச்சேரும். அதை மீண்டும் கடன் வாங்கி, நம் மூலமே தெரியாது, தோத்திரம் என்று தமிழில் சொல்லுவோம். (அது என்னவோ தெரியவில்லை, பத்தொன்பதாம் நூற்றாண்டு மணிப்பவளத் தமிழ் இன்றைக்கும் கிறித்துவ தேவாலயங்களில் ஆழமாக நிலை கொண்டு இருப்பதால், அங்கு "தோத்திரம், தோத்திரிக்கிறோம்" என்ற கரடு முரடான சொல்லாட்சி மிகுதியாகவே இருக்கிறது; நல்ல தமிழில் "தேவனே! உம்மைத் துதிக்கிறோம் அய்யா!" என்று எல்லா இடத்தும் சொல்ல அவர்கள் ஏனோ தயங்குகிறார்கள். மறைமலை அடிகளாருக்கு அப்புறம் நாமெல்லாம் பழகிய இந்தக் காலத் தமிழில், விவிலிய நூலை யாராவது நடை பெயர்த்தால் நன்றாக இருக்கும். செய்வார்களோ?)

துல்>துள் என்னும் வேர் தல்>தள் எனத் திரிந்து மேலும் நீண்டு, தரு>தார்>தா>த எனப் பலவாறாய்த் திரியும். இந்தத் திரிவுகளில் பல்வேறு தமிழ்ச் சொற்கள் கிளைத்துள்ளன. [இதே போல வள் என்னும் வேர் கூட வரு>வார்>வா>வ என்று திரியும். எந்த வளைவும் நெருங்கியதைக் குறிக்கும். வருதலும் நெருங்குதலே. வள் என்னும் வேர் தமிழுக்குக் கொடுத்த சொற்கள் மிகப் பல. மூன்றாவது காட்டாய் கள்>கரு>கார்>கா>க என்ற திரிவும் ஓசை எழுப்புதலைக் குறிக்கும். கர் என்று ஓசையிடுவது காருதல், கத்தல் போன்ற சொற்களை உருவாக்கும்.]

தள்ளி வந்த வாழைக் குலையைத் தார்/தாறு என்று அழைக்கிறோம். கமுகுத் தாரும் இதே போல சொல்லப்படும். கடலில் கிடைக்கும் அரும் பண்டத்தைத் தார் என்னும் திரிபின் அடியாகப் பிறந்த தாரம் என்ற சொல் குறிக்கும். (புறநானூறு 30ஆம் பாட்டில் வரும் கடற் பல் தாரம் = கடற் பஃறாரம் என்ற சொல்லாட்சியைக் கவனியுங்கள்.) முன்வந்து தயக்கமில்லாமல் தருவது தார ஆளம்; அதாவது தாராளம். தவத்தின் நீட்சியான தபுதார நிலை பற்றியும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

தார் என்னும் அடியோடு அம் என்னும் ஈற்றைச் சேர்த்து, முற்றிலும் பெரிதாய், ஓங்கி முன்வந்த சுர நிலையை, ஏழு சுரங்களில் இருக்கும் உச்ச சுரத்தைக் குறிக்கும். அதை நிஷாதம் என்று கருநாடக இசையில் குறிப்பார்கள். ஆகத் தமிழில் இரண்டு சுரங்களின் பெயர்கள் (துத்தம், தாரம்) இப்படித்தான் துரு, தரு>தார் என்பதில் கிளைத்தன.


தருநன் என்ற சொல்லும் தருமன் என்ற சொல்லும் தருபவன் என்ற பொருளையே குறிக்கும். அதே போல, தருமம் என்ற சொல் தருகின்ற செயலைக் குறிக்கும். இதையும் முட்டாள் தனமாய், dharumam என்று பலுக்கி அது வடமொழியோ என்று ஐயுற்றுத் தடுமாறுகிறோம்.

இனித் தருவின் இன்னொரு திரிவாய் இருக்கும் தா என்ற வினை வேரில் இருந்து கிளைத்த சொல் தான் தானம் என்பதாகும். (தானம் என்ற சொல்லைப் போலவே ஈறு கொள்ளும் கானம், ஞானம், மானம் என்ற வேறு சொற்களை எண்ணிப் பார்த்தால் தானம் என்ற சொல்லின் தமிழ் இயலுமை புரியும்.)

தரு/தா என்ற சொல்லடியில் இருந்து இரு வேறு சொற்கள் இவை போன்று கிளைத்தாலும், தானம் என்ற சொல் கேளாமல் தருவது என்ற பொருளையும், தருமம் என்ற சொல் கேட்டுத் தருவது என்ற பொருளையும் கொள்ளும். தான தருமம் என்ற கூட்டுச் சொல்லைப் பழகுவதே, இந்த இரண்டு விதப் பொருள்களையும் சட்டென்று ஒரே பொழுதிற் சுட்டிக் காட்டும். [இரண்டிற்கும் ஒரே பொருள் இருக்குமாயின் இது போன்ற ஒரு கூட்டுச்சொல் ஏற்பட்டே இருக்காது.]

தள்ளியதன் விளைவால் ஏற்படும் கூலக் கதிர்களையும் கூடத் தானம் என்றே தமிழில் குறிக்கிறோம். (இந்தகைய தமிழ்த் தானத்தை வழக்கம் போல் யகரம் நுழைத்து வடமொழிப் பலுக்காக்கிப் பலரும் தான்யம் என்பார்கள். நாமும் அது எப்படி வந்தது என்று தெரியாமல் திருதிருவென்று விழிப்போம்.) தானம் என்பது நாம் கேளாமல், கூலக் கதிர்கள் தானாகவே தந்தது. cereal என்பதற்கு தானம், கூலம் போன்ற சொற்களை இன்றைக்கு ஆளுகிறோம். முல்லைத் திணையில் மிகச் சிறிதாய்த் தொடங்கிய வேளாண் தொழில், பின்னால் மருதத் திணையில் மேலும் பெருகிச் சிறந்தது. அப்படிச் சிறந்த பின், தானங்களைச் சேர்த்துத் தேக்கி வைத்து வறட்சிக் காலத்தில் பண்டமாற்றுச் செய்ய முடியும் என்ற காரணத்தால், செல்வத்தைச் சேர்த்து வைப்பதற்கு இணையாய்த் தானம் என்ற சொல்லும் கருதப்பட்டது. முடிவில் தானம் என்பது திரிந்து தனத்தையும் (=செல்வத்தையும்) கூடக் குறித்தது. பின்னால் மற்ற செல்வங்களுக்கும் தனம் என்ற சொல்லே பெயராகியது. இனி, அரசின் தனத்தை ஆளுகிறவன் தன அதிகாரி என்று சொல்லப்பட்டான். கோயிலுக்குக் கொடுத்த தானத்தை ஆள்பவர் (அதிகாரி) தானக்காரர், தானத்தார் என்று சொல்லப்பட்டார். தானங்களை வரவு வைத்துக் கோயிலில் கணக்குப் பார்ப்பவர் தானக் கணக்கர் (donation accountant) என்று அழைக்கப்பட்டார்.

தானம் என்ற சொல்லின் இலக்கிய ஆட்சிகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


அன்புடன்,
இராம.கி.

Friday, January 12, 2007

தானமும் கொடையும் - 1

"தானமும் கொடையும் ஒன்றா?" என்று நண்பர் கோவி.கண்ணண், சொல் ஒரு சொல் பதிவில் கேட்டிருந்தார். கேட்டதோடு அதுபற்றிக் கருத்துச் சொல்லும் படி, அங்கு அவர் அளித்த பின்னூட்டில் என்னை அழைத்திருந்தார். பாலை - தொடர்ச்சி என்ற என் பதிவை முடிக்க முயன்று கொண்டிருந்ததற்கு இடையில் இந்த அழைப்பு வந்தது. சரி, மறுக்க வேண்டாம், தெரிந்ததைச் சொல்லுவோம், என்ற எண்ணியதால் இந்த முயற்சி. சொல்லும் செய்தியைப் பின்னூட்டில் அங்கே தந்தால் நீண்டுவிடும் என்று கருதி, இங்கே தனிப் பதிவாக இடுகிறேன். நண்பர்கள் பொறுத்துக் கொள்வார்களாகுக.

தமிழ்ச் சொற்களைப் பற்றித் தொல்காப்பியர் பேசும் போது, "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்று தெளிவாகச் சொல்லுவார். தொல்காப்பியத்தின் படி, தமிழில் இடுகுறிச் சொற்கள் என்பன கிடையாது (ஆனால் நன்னூலாரோ அந்தக் கருத்தில் மாறுபட்டு இடுகுறிச் சொற்கள் தமிழில் உண்டென்பார்); நான் தொல்காப்பியர் வழி தமிழ்ச் சொற்களைப் பார்க்க முயல்பவன்; எனக்கு எல்லாத் தமிழ்ச் சொற்களுமே பொருண்மை உள்ளவைதான். "இந்தப் பொருண்மை என்பது சொற்களைச் சட்டென்று விழித்துப் பார்த்தால், தோன்றாது; கொஞ்சம் ஆழமாய்த் தேடிப் பார்க்கவேண்டும்" என்ற கருத்தில், தொல்காப்பியர் இன்னொரு இடத்தில், "மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா" என்றும் சொல்லுவார்.

ஆகப் பொருண்மை என்பது தேடாமல் கிடைக்காது. பொதுவாகச் சொற்களுக்குச் சொன்மை, பொருண்மை என்ற ஈர் இயல்புகள் உண்டு. "பார்த்தான்" என்ற சொல்லில் பார், த், ஆன் என்ற மூன்று கூறுகள் இருக்கின்றன, அல்லவா? ஆன் என்ற ஈற்றின் வழியாய் பேசுபவர் "படர்க்கை இடத்தில் இருக்கும் ஓர் ஆண்" என்ற குறிப்பும், த் என்ற இடைநிலை வழியாய், "வினை நடந்தது இறந்த காலம்" என்ற குறிப்பும் சொன்மையின் வெளிப்பாடுகளாய் அமையும். இனிப் பார் என்ற பகுதியின் வழியாய், கண்ணால் அறிந்ததைச் சுட்டுவது பொருண்மையின் வெளிப்பாடு ஆகும். இந்தப் புரிதலோடு, தானச் சொற்களுக்குத் தொல்காப்பியர் வழி நாம் பொருள் தேடலாம்.

கதிர், சுடர் என்று இருவர் இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே நடைபெறும் ஒரு பரிமாற்ற வினையில் இடம் பற்றிய குறிப்பைத் தமிழில் எப்படி விவரிப்பது என்பது தான் இங்கு முன்னிற்கும் கேள்வி.

பொதுவாக, வினை ஈற்றின் வழியே அறியும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடங்கள் போக, உயர்ச்சி, ஒப்பு, தாழ்ச்சி என இன்னும் ஒரு மூன்று இடங்களை, தம் பகுதியின் வழியாக, ஒரு சில வினைச் சொற்கள் காட்டும். இதற்கு எடுத்துக் காட்டாய், சொல்லதிகாரம் எச்சவியலில் 444 ஆம் நூற்பாவில் ஈ, தா, கொடு என்று மூன்று கிளவிகளைப் பற்றித் தொல்காப்பியர்

ஈ,தா, கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய

என்று பேசுவார். [கிளவி என்ற சொல் இன்று நம்மிடையே புழங்குவதில்லை. அதற்கு இணையாகச் சொல், மொழி என்பவற்றை இன்றையத் தமிழில் பயிலுகிறோம். கிளத்தல் = சொல்லுதல், பேசுதல், மொழிதல்.] முன்று காட்சிகளையும் விரிவாகப் பார்ப்போம்.

முதல் காட்சி:

இங்கே கதிருக்கு மிகுந்த பசி; அவர் கையில் காசில்லாதவர்; தாழ்வுற்ற நிலையில் உள்ளவர். சுடரோ செல்வம் மிகுந்தவர்; உயர்ந்தவர்; சுடரிடம் சோறு அதிகமாக இருக்கிறது. இதைச் சுடரிடம் இருந்து இரந்து (இரத்தல் = கேட்டுப் பெறுதல்) பெறும் போது, கதிர் எப்படிக் கேட்பார்? [இந்தத் தாழ்ச்சி என்பதைச் சரியாக நாம் புரிந்து கொள்ளவேண்டும். இது அகவை, அறிவு, பண்பு, செல்வம், உதவி, நன்றிக்கடன், தொண்டு, ஆளுரிமை ஆகிய ஏதோ ஒன்றால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், பிறவிக்குல வேற்றுமை என்பது இதில் கிடையாது.]

"சோறு எனக்கு ஈ" (இங்கே பறவைப் பொருளை ஒதுக்கி ஈ என்பதை வினைச்சொல்லாய்ப் பார்க்க வேண்டும். ஈ என்ற வினை இன்று அரிதாகவே பயன்படுகிறது. பெரும்பாலும் வழு அமைதியாய் வேறு சொற்களேயே தமிழர் பயன்படுத்துகிறார்கள். ஈகை என்பது ஈதலில் இருந்து கிளைத்த பெயர்ச்சொல். "பாரி முல்லைக்குத் தேரை ஈந்தான்; அவனுடைய ஈகைக் குணம் இன்றும் போற்றுதற்கு உரியது" என்ற சொல்லாட்சிகளைப் பாருங்கள்.) இந்த ஈதல் என்ற வினை இழிந்தோருக்கு உரியது என்ற பொருளில் தொல்காப்பியச் சொல்லதிகாரம் 445 - ஆம் நூற்பா "ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே" என்று கூறுகிறது. [இழிந்தது என்ற சொல்லை நாம் இன்றையப் பொருள் கொண்டு பார்க்கக் கூடாது. இழிந்தது என்பது ஏதோ ஒன்றால் கீழே இறங்கிய நிலை; அவ்வளவு தான்.]

[ஒரு சிறு இடைவிலகல். இடுவது என்பது ஈகைப் பொருளில் வராது. இடுவது என்பது to place; to issue. கொஞ்சம் நீட்டி, அத்தகைய பொருளைக் கொடுப்பது சரியான பயன்பாடு அல்ல.]

இனி அடுத்த காட்சி:

இதில் கதிரும் சுடரும் ஒருவருக்கொருவர் ஒப்பானவர்கள்; நண்பர்கள் என்று கூட வைத்துக் கொள்ளலாம். சுடரைப் பார்க்கக் கதிர் வருகிறார்; அப்படி வரும் போது, எழுதுகின்ற தூவலைக் (pen) கொண்டு வர மறந்து போன கதிர், சுடரின் தூவலை, ஏதோ ஒன்றை எழுதுவதற்காக, இரந்து பெற விழைகிறார்; கதிர் இப்பொழுது எப்படிக் கேட்பார்?

"தூவலை எனக்குத் தா" இதைச் சொல்லுகிற தொல்காப்பியச் சொல்லதிகாரம் 446 - ஆம் நூற்பா "தாவென் கிளவி ஒப்போன் கூற்றே" என்று கூறுகிறது. (இங்கே தா விற்கு இருக்கும் மற்ற பொருள்களை ஒதுக்கிப் பார்க்க வேண்டும். தா என்ற வினைச்சொல் பெரிதும் புழக்கத்தில் இன்று இருக்கிறது. தரு/தா என்பதில் இருந்து கிளைத்த தருகை, தருவு>தரவு, தருவம்>தருமம், தானம் போன்ற சொற்கள் எல்லாம் பெயர்ச் சொற்கள். தரவு என்பதை இன்று பொருள் நீட்டி data என்பதற்குக் கூடப் பயன்படுத்துகிறோம். அதுவும் ஒருவகையில் சரிதான்.

data:
1646, pl. of datum, from L. datum "(thing) given," neuter pp. of dare "to give" (see date (1)). Meaning "transmittable and storable computer information" first recorded 1946. Data processing is from 1954. Database formed 1962, from data + base. தரு = to give (இந்த ஆங்கில வரையறைக் கவனித்தால் கூடத் தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இருக்கும் உறவு புரியும். இது போன்ற பல சொற்களுக்கான உறவுகளை நானும் தான் சுட்டிக் காட்டிக் கொண்டே போகிறேன். ஆனால், முன்கருத்தில் தேங்கிப் போன பலரும் தங்கள் நம்பிக்கைகளில் இருந்து வெளியே வரமாட்டேம் என்கிறார்கள்; வடமொழி பற்றிய பழமை வாதங்களில் ஊறிப் போன அவர்கள், தங்களுடைய தேற்றங்களைத் தூக்கிப் போடத் துணிவில்லாமல், நைந்து போன கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.)

தருவம் என்பது தருமம் ஆவது தமிழ்முறைப் பலுக்கலில் மிகவும் எளிது. தருமம் என்ற சொல் தூய தமிழ் தான். இந்தக் காலத்தில் நம்மில் ஒரு சாரார், அதைத் தவறாக dharumam என்று ஒலிப்பதனாலேயே அது வடமொழியாகி விடாது. பேசினார் என்பதைக் கூடத்தான் இவர்கள் "பேஷினார்" என்று தவறாகச் சொல்லுகிறார்கள். அதனால் அது வடமொழி ஆகிவிடுமா? பலுக்கல் குழப்பத்தால் நூற்றுக் கணக்கான தமிழ்ச் சொற்களை வட சொற்கள் என்று ஐயுறுவது நம்மில் சிலருக்கு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

தானம் என்ற சொல் தமிழா என்பதை மேலும் சில கருத்துக்களைச் சொல்லிக் கீழே பேசுகிறேன். (இதையுமே ஒரு சாரர் dhaanam என்று பலுக்குவார்கள்) அதற்கிடையில் தானத்திற்கும் donation க்கும் உள்ள தொடர்பை இங்கு புரிந்து கொள்ளுங்கள்.

donation:
c.1425, from M.Fr. donation, from L. donationem (nom. donatio), from donare "give as a gift," from donum "gift," from PIE *donum "gift" (cf. Skt. danam "offering, present," O.C.S. dani "tribute," Lith. duonis "gift," O.Ir. dan "gift, endowment, talent"), from base *do-/*de- "to give." Donate (v.) is an 1845 back-formation, chiefly Amer.Eng. )

இனி மூன்றாவது காட்சி:

இதில் சுடரைக் காட்டிலும் கதிர் உயர்ந்தவர்; காட்டாக, கதிர் என்ற அப்பா சுடர் என்ற தன் மகனைப் பார்த்து ஏதோ ஒன்றை எழுதிக் கொடுக்கச் சொல்லும் போது, எப்படிக் கேட்பார்? "தம்பி, இந்த மடலை எழுதிக் கொடு" "கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே" என்பது தொல்காப்பியச் சொல்லதிகாரம் 447 - ஆம் நூற்பா. [இங்கே கொடு விற்கு இருக்கும் மற்ற பொருள்களை ஒதுக்கிப் பார்க்க வேண்டும். கொடுவில் பிறந்த பெயர்ச்சொல் கொடை. நம்மைக் காட்டிலும் உயர்ந்தவருக்குத் தான் கொடுக்க முடியும். ஒரு புலவன், ஓவியன், ஆட்டத்தி (actress) என நம்மிலும் உயர்ந்த கலைஞருக்கு, ஏன் இறைவனுக்குக் கூட, கொடுப்பது கொடை. நம்மில் குறைந்தவருக்குச் செய்வது தொல்காப்பியர் கருத்துப்படி, ஈகை, கொடை அல்ல.]

இந்த மூன்றையும் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் முன்று வகையான இரப்போர்க்கு உள்ளதாகச் சொல்வார். இல்லென இரப்போர்க்கு உரியது ஈகை; இடன் இன்றி இரப்போர்க்கு உரியது தரவு. தொலைவாகி இரப்போர்க்கு உரியது கொடை.

சரி சுடர் என்பவர் ஈந்தார், தந்தார், கொடுத்தார். கதிர் என்பவர் என்ன ஆவார் என்பது அடுத்த கேள்வி. அவர் ஈதலுக்கு எதிராய்ப் பெறுவார், தருதலுக்கு எதிராய் பெறவோ, வாங்கவோ செய்வார். கொடுத்தலுக்கு எதிராய் வாங்குவார். கொடுத்தல் / வாங்குதல் என்ற இரு சொற்களிலுமே வளைவுப் பொருள் உண்டு. வளைந்த கையில் தானே கொடுக்கிறோம்? வளைந்த கையில் தானே வாங்குகிறோம்?

இது போக அளித்தல், வழங்கல், உதவல் என்பவை சுடரின் வினைக்கு உள்ள மற்ற சொற்கள். கிட்டுதல், கிடைத்தல் என்பது கதிருக்கு உள்ள மற்ற சொற்கள்.

மேலே உயர்ச்சி, ஒப்பு, தாழ்ச்சி என்ற மூன்று இடங்களை வைத்து மூன்று விதமான வினைச்சொற்களைக் கையாண்டது பற்றிப் பேசிய தொல்காப்பியர், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களில் எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லதிகாரம் கிளவியாக்கத்தில் நூற்பா 28, 29, 30 ஆகியவற்றில் சொல்லுகிறார்.

28. செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூ விடத்தும் உரிய என்ப.

செலவு, வரவு, தரவு, கொடை என்ற நான்கு சொற்களையும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடத்திலும் பயனாக்கலாம் என்று சொல்வார்கள்; ஆனால்

29. அவற்றுள்,
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த

தரு சொல், வரு சொல் ஆகிய இரண்டையும் தன்மை, முன்னிலை ஆகிய இரண்டில் மட்டுமே சொல்ல வேண்டும். காட்டாக, "எனக்குத் தந்தான்; நினக்குத் தந்தான்" அல்லது ''என்னிடம் வந்தான்; நின்னிடம் வந்தான்" என்று வருவதே சரி. "அவனுக்குத் தந்தான்" அல்லது "அவனிடம் வந்தான்" என்று சொல்லுவது தொல்காப்பியர் காலத்துத் தமிழின் படி சரியில்லையாம். வேறு எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை 30-ஆம் நூற்பா விளக்குகிறது.

30. ஏனை இரண்டும் ஏனை இடத்த.

செலவுச் சொல், கொடைச் சொல் ஆகிய இரண்டும் படர்க்கை இடத்தில் வரும். காட்டாக, "அவனுக்குக் கொடுத்தான்" என்று சொல்லலாம். இது போல "அவனிடம் சென்றான்" என்று சொல்லலாம். இது போக ஒரு புறனடையையும் சொல்லுகிறார்.

448. கொடுவென் கிளவி படர்க்கை யாயினும்
தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பின்
தன்னிடத்து இயலும் என்மனார் புலவர்.

அதாவது, கொடு என்பதைப் படர்க்கையில் தான் சொல்ல வேண்டும் என்றாலும், சிலபோது தன்னைப் பிறன் போலக் கூறும்போது தன்னிலையில் சொல்லலாம்; காட்டாக ஒரு பாட்டன் இருக்கிறார்; தன் பேர்த்தியிடம் விளையாடிக் கொண்டிருக்கிறார். பேர்த்தி ஒரு பொம்மையைத் தர மாட்டேன் என்கிறாள். தாத்தா இப்படிச் சொல்லலாம்: "என் கண்ணுல்லெ, இந்தத் தாத்தாவுக்குக் கொடுக்க மாட்டியோ?"

இனித் தானம் என்ற சொல்லிற்குப் போகும் முன்னால், இன்னொரு இடை விலகல்; செலவு, வரவு, தரவு, கொடை என்ற சொற்கள் கணக்கியலிலும் பயன்படக் கூடியவை.

செலவு = expenditure
வரவு = income
தரவு = debit
கொடை = credit

தானத்தின் வேர்ச்சொல் விளக்கத்திற்கு அடுத்த பகுதி போகலாமா?

அன்புடன்,
இராம.கி.

Friday, July 28, 2006

அளவுச் சொற்கள் - 3

minimum பற்றிச் சொல்வதற்கு முன்னால் இந்தப் பதிவில் வேறு பத்துச் சொற்களைத் தருகிறேன். இன்னும் பட்டியலில் பல சொற்கள் இருக்கின்றன.

இருபத்தாறாவது அளவுச் சொல்லான meagre என்பதைப் பார்ப்போம். குறைந்து இருப்பதை ஆங்கிலத்தில் இப்படிச் சொல்கிறார்கள். தமிழில் "அவன் நொய்ந்து போய்க் கிடக்கிறான்" என்னும் போது "குறைப்பட்டுக் கிடக்கிறான்" என்றே பொருள் கொள்ளுகிறோம். நொய்தலின் பெயர்ச்சொல் நோய். நொடித்துப் போதல், நொகுத்துப் போதல் என எல்லாமே குறைப்பட்டுப் போவது தான். குறைப்படுதல் என்பது தகுதியிலும் (quality) நடக்கலாம்; எண்ணுதியிலும் (quantity) நடக்கலாம். நொகை எண்கள் என்று negative எண்களைச் சொல்லுகிறோம். அதே போல எண்ணில் குறைப்பட்டுக் கொஞ்சமாய் இருத்தலை சற்றே திரித்து நூகை என்று சொல்லலாம். நூகிக் கிடத்தல் என்பதும் நொய்ந்து கிடப்பதே. meagre = நூகை. "இவ்வளவு நூகையாக பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?"

இருபத்து ஏழாவது சொல் mean என்பது. இதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நாப்பண் என்றே கூறும். நடுவண் என்பதைப் போன்று உள்ள சொல் நாப்பண். நடுவிற்கும் நடுவானது நாப்பண். ஒரு முறை நண்பர் மதுரபாரதி இதை மடற்குழுவில் பழைய காட்டுக்களை எடுத்துக் காட்டி அருமையாக விளக்கியிருந்தார். நாப்பண் என்பதை நாவண் என்றும் சொல்லலாம். mean = நாவண். "இன்றைய ஒரு நாட்பொழுதின் நாவண் வெம்மை (temperature) என்ன?" என்ற கேள்வி கேட்கக் கூடியது தான்.

இருபத்தி எட்டாவது சொல் median. ஏற்கனவே கூறிய படி, நடுவம் என்ற சொல்லே இதைக் குறிக்கும். இதே பொருளில் பெயரடையாக (adjective) வரும் பொழுது medial என்பதை நடுவல் என்று குறிக்கலாம்.

இருபத்தி ஒன்பதாவது சொல் medium. பலரும் இதை ஊடகம் என்றே மொழிபெயர்க்கிறார்கள். சில காலம் முன்புவரை நானும் அப்படிப் புழங்கி இருந்தாலும், இப்பொழுதெல்லாம் அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பெரும்பாலான இடங்களில் மிடையம் என்ற சொல்லையே நான் இப்பொழுது புழங்குகிறேன். ஏனென்றால் ஊடுதல் (to go in between or to osmose) என்ற வினை, ஒன்றின் ஊடே செல்லுதல் என்றே பொருள் கொள்ளும். இது வேதிப் பொறியியல் (chemical engineering), மற்றும் பூதி வேதியலில் (physical chemistry) osmosis என்ற செலுத்தத்திற்குச் (process) சரியாகப் பொருந்தி வரும். நுணுகிய துளைகள் இருக்கும் ஒரு படலத்தின் (film) வழியே சில மூலக்கூறுகள் (molecules) ஊடுவது உண்டு. அந்தச் செயல் ஊடுகை (osmosis) என்று இந்த இயல்களில் சொல்லப் படும். அந்த ஊடுகைக்குத் துணை போவது ஊடகம் (osmotic membrane) என்னும் மெம்புனை(membrane)யாகும். அந்த ஊடுகைக்கு எதிராக, அதாவது கரைபொருளுக்கு (solute) மாறாகக் கரைமத்தையே (solvent) ஊட வைக்கும் செலுத்தத்தை எதிர் ஊடுகை (reverse osmosis) என்று சொல்லுவார்கள். medium என்பதற்கு ஈடாக, மிடையம் என்று நான் சொல்லுவதற்குக் காரணம் மிடைத்தல் என்பது மேற்பட்டுத் தெரிதல். மிடையும் மேடும் ஒருபொருட்சொற்கள் தான். மேட்டில் இருந்து எழுந்தது மேடை என்னும் சொல். ஒரு குமுகாயத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளை மேற்படுத்திக் காட்டுவது, மிடைத்துக் காட்டுவது மிடையம். இங்கே இவர்கள் வெறுமே விளக்குப் போட்டு நமக்குக் காட்டுகிறார்கள். "பொதுவாக மிடையக்காரர்கள் நிகழ்வுகளின் ஊடே சென்று செலுத்தம் செய்வது உகந்தது அல்ல" என்றே பலரும் சொல்லுகிறார்கள். தவிர அகநானூற்றின் ஒரு பகுதிக்குப் பெயரான மணிமிடைப் பவளம் என்ற சொல்லையும் இங்கே ஓர்ந்து பார்க்கலாம். மணிகளுக்கு இடையே கிடக்கும் பவளம் என்று அதற்குப் பொருள். மிடையம் என்பது குமுகயாத்தின் இடையே கிடக்கும் ஒரு நிறுவனம் தான். இப்படி இதைப் பற்றி நான் எழுதிக் கொண்டே போகலாம். எனக்கென்னவோ மிடையம் என்ற சொல் media-விற்குச் சரியான பொருள் தருவதாகவே படுகிறது. ஆனால், எந்தச் சொல் நிலைக்கும் என்று முன்கூட்டிச் சொல்ல நான் யார்? என்னால் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.

முப்பதாவது சொல் mega; முன்பே சொன்னது போல் மீ என்னும் ஓரெழுத்து ஒருமொழி மிகுந்த நிலையை, மிகப் பெரிதான நிலையைக் குறிக்கும் சொல்; அதன் இன்னொரு சொல்லாட்சியே இந்த மீகிய என்ற பயன்பாடு.

முப்பத்தொன்று micro; தமிழிற் பல இடங்களில் மகரமும், நகரமும் போலி என்று அறிவோம். இந்தப் போலிப் பயனக்கத்தால், முதல் என்பது நுதலாகும்; முப்பது நுப்பதாகும்; முடங்குவது நுடங்குவதாகும். இதே வகையில் எண்ணிப் பார்த்தால் நூகிய என்ற சொல் மூகிய என்று மாறி மிக நுண்ணிய பொருளைக் குறிப்பது புரியும். இப்பொழுது தமிழில் திரிந்த சொல்லைப் பயனாக்காமல், நூகிய என்பதையே ஆளலாம்.

முப்பத்திரண்டாவது சொல் middle; இதற்கான இணைச்சொல் நடு; நான் கூடுதல் விளக்கம் தர வேண்டியதில்லை.

முப்பத்தி மூன்றாவது சொல் mild; மெல்லியது mild ஆகும். இந்தச் சொல், தகுதி (quality) நோக்கியே முதலில் எழுந்தது; நாளாவட்டத்தில் எண்ணுதிக்கும் (quantity) பயன்படுத்துகிறார்கள். வாயில் போட்டு மெல்லுகிறோமே அந்தச் செயலால் தான், ஆதி மாந்தருக்கு, கடினமான பொருள் மெல்லியதானது. பின்னால் அரைத்தல் என்ற சொல்லும் மெல்லுதலுக்குப் பகரி(substitute)யாய் எழுந்தது. அப்படி மெல்லுகிற காரணத்தால் ஒரு சுவையும் அவருக்குப் புலப்படுகிறது. கூடவே ஒரு மணமும் எழுகிறது. ஆங்கிலத்திலும் மேலை மொழிகளிலும் மணத்தைக் குறிக்கும் சொல்லான smell என்பது கூட இந்த மெல்லும் செயலால் எழுந்த சொல் தான். இந்தையிரோப்பிய மொழிகளுக்கும், தமிழிய மொழிகளுக்கும் உள்ள உறவில் இந்தச் சொல்லையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முப்பத்தி நான்கு milli; முன்னால் சொன்ன முறையில் இது நுல்லி என்று தமிழில் வரும். நுல்லில் பிறந்த சொற்கள் பலவுண்டு. நுல் என்பது நுணுகு, நூகு எனப் பல சொற்களுக்கும் வேராக அமையும். மகர நகரப் போலி பற்றி முன்னால் சொல்லியிருக்கிறேன். million என்னும் எண் தொகுதியை நுல்லியம் என்றே தமிழில் சொல்லலாம். இந்தக் காலத்தில் கோடி இலக்கம் என்று சொல்லுவதற்கு மாறாக நுல்லியம் என்று உலக வழக்கில் பழகுவதே முறை என்று சொல்லுவோரும் உண்டு. நுல்லியத்தின் மடங்குகளைக் குறிக்க, இரும நுல்லியம் (billion), மும்ம நுல்லியம் (trillion). நால்ம நுல்லியம் (quadrillion), ஐம நுல்லியம் (quintillion), அறும நுல்லியம் (sechstiliion), எழும நுல்லியம் (septillion), எண்ம நுல்லியம் (octillion), தொண்ம நுல்லியம் (nanillion) என்றே பழகலாம். பன்மடங்கு நுல்லியத்தை (zillion) பன்ம நுல்லியம் என்றே சொல்லலாம்.

முப்பத்தி ஐந்து mine. இதன் இணைச்சொல் நுணங்கு என்று ஆகும். நோண்டு என்றும் இன்னொரு வளர்ச்சி உண்டு. நுல்லுவது என்பது இன்னொரு வகையில் துளைப்பது என்ற பொருளைக் கொடுக்கும். துல்>துள்>துளை; துல்>துள்>தோள்>தோண்டு என்று ஆவது போல் நுல்>நுள்>நோள்>நோண்டு என்று ஆகும். நோண்டிவரும் சுரங்கம் mine என்படுகிறது. சுரங்கம் என்பது கூட சுரிக்கின்ற (தோண்டுகின்ற) செயலால் பிறந்த சொல் தான். நுணங்கின் பெரியது நுணங்கம். ஆங்கிலத்தில் mine என்ற சொல் ஒப்புமை அடிப்படையில் அளவுச் சொல்லாக ஆகிறது. A minefull of wealth. ஒரு நுணங்கம் அளவுக்குச் செல்வம் அவனிடம் கொட்டிக் கிடந்தது.

இந்தப் பதிவில் சொல்லிய அளவுச் சொற்களின் தொகுதி கீழ்வருமாறு:

meagre = நூகை
mean = நாவண்
median = நடுவம், medial = நடுவல்
medium = மிடையம்
mega = மீ, மீகிய
micro = நூகிய
middle = நடு
mild = மெல்லிய
milli = நுல்லி
mine = நுணங்கு, நோண்டு,

பதிவில் கூறிய மற்ற சொற்கள் வருமாறு:

negative = நொகை
temperature = வெம்மை
adjective = பெயரடை
to osmose = ஊடுதல்
chemical engineering = வேதிப் பொறியியல்
physical chemistry = பூதி வேதியல்
process = செலுத்தம்
film = படலம்
membrane = மெம்புனை
molecules = மூலக்கூறுகள்
mine = நுணங்கம் (=சுரங்கம்)
osmosis = ஊடுகை
osmotic membrane = ஊடகம்
solute = கரைபொருள், கரையம்
solvent = கரைமம்
substitute = பகரி
reverse osmosis = எதிர் ஊடுகை
million = நுல்லியம்
billion = இரும நுல்லியம்
trillion) = மும்ம நுல்லியம்
quadrillion = நால்ம நுல்லியம்
quintillion = ஐம நுல்லியம்
sechstiliion = அறும நுல்லியம்
septillion = எழும நுல்லியம்
octillion = எண்ம நுல்லியம்
nanillion = தொண்ம நுல்லியம்
zillion = பன்ம நுல்லியம்

அன்புடன்,
இராம.கி.

Friday, July 14, 2006

அளவுச் சொற்கள் - 2

முன்னால் இட்ட பதிவில் பதினேழு அளவுச் சொற்கள் வரை பார்த்திருந்தோம். (கூடவே மற்ற தொடர்புள்ள சொற்களையும் பார்த்தோம்.)இனி macro என்னும் பதினெட்டாவது அளவுச் சொல்லிற்குப் போவோம். இந்தச் சொல், பின்னூட்டின் வழியாக நண்பர் ஒருவர் முன்னர் கேட்ட சொல். இது பல இடங்களில் முன்னொட்டாகவும் புழங்குகிறது. macroscopic என்ற சொல்லாட்சி நினைவிற்கு வருகிறதா? macro என்பதற்கு இணையாக மாக, மாகிய ஆகியவற்றைச் சொல்லலாம். முன்னரே சொன்னது போல் மாத்தல் என்ற வினை, தமிழில் அளத்தலைக் குறிக்கும் வினைச்சொல். தவிர, மா என்ற ஓரெழுத்தொரு மொழி "பெரியது" என்ற பொருளையும் குறிக்கும். "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்ற பழைய திரைப்பாடல் வரி நினைவிற்கு வருகிறதா? அதில் வரும் மா என்ற முன்னொட்டு "பெரிய" என்ற பொருளைக் கொடுக்கிறது. அளத்தலில் இருந்து நீட்சி பெற்ற கருத்துத் தான் பெரிது படுத்தல் என்பதும்.

மதித்தல் என்ற வினைகூட இந்த மாத்தலில் இருந்து பிறந்தது தான். macro size என்பது பெரிது படுத்தப்பட்ட அளவு. மாத்தல் என்ற பிறவினைக்கு இணையான தன்வினை மாதல்; மகுதல் > மாதல் >மாகுதல் சொல்லைப் பலுக்கும் எளிமைக்காக குகரம் நம்மிடையே இயல்பாய் உள்நுழையும். பகுதல் என்ற பிரிப்பு வினை பாதல் என்றும் பின் நெடிலாக உருமாறிப் பாகுதல் என்றும் வருவதைப் போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி என்பது பொதுவாக நெகிழ்வானது; அது திண்ணியதாய் (திண்மம் = solid) இருந்து விட்டால் அப்புறம் வளர்ச்சியில்லை. அங்கும் இங்குமாய் அது நீளும் போதும், திரியும் போதும், புதிய பயன்பாடுகள், புழக்கங்கள், பொருட்பாடுகள் அதற்கு வந்து சேருகின்றன. மிகுந்து ஊற்றுவதை மகுந்து ஊற்றுவதாக எங்கள் சிவகங்கை வட்டாரத்தில் சொல்லுவார்கள். மக ஈசன் மகேசன் (= பெரிய ஈசன்) என வடமொழிப் புணர்ச்சியில் வரும். அதை இன்னும் கொஞ்சம் நீட்டி மாகேசன் என்றும் சிலர் சொல்லுவார்கள். மக்கள் என்ற சொல்லை நீட்டி மாக்கள் என்று திரித்து இன்னொரு வகையினரைக் குறிப்பார்கள் அல்லவா? மக்களைக் காட்டிலும் மாக்கள் கொஞ்சம் உடலால் சற்று பெரியவர்கள். மா என்ற ஈறு விலங்கைக் குறிக்கும். விலங்கைப் போன்று வலிமை கூடி இருப்பவர்கள் (ஆனாலும் அவர் மாந்தர் தான்) மாக்கள்.

மாகுதல் என்ற வினை அடிப்படையில் மாதல் போன்ற பொருள் கொண்ட வினைதான். மொழி நீட்சியில் அதைப் புழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன். மாக, மாகிய என்னும் பெயரடைகளைச் சொல்லும் போது மாகுதல் என்ற வினை வாகாய் அமையும்.

macro meter = மாக மாத்திரி அல்லது மாகிய மாத்திரி. இது "பெரிய மாத்திரி" என்ற பொருளைக் கொள்ளும். மீட்டர் என்ற மேலைச்சொல் கூட அளவுதல் வினையின் வழி செந்தர (standard) அளவுகோலான மாத்திரியைக் குறிக்கும். மாத்திரி என்ற அடிப்படைச் சொல்லோடு "மாக" என்பது மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு முன்னொட்டுக்கள் சேரும். அந்த முன்னொட்டுக்களை எல்லாம் இந்தப் பதிவுத் தொடரில் பார்ப்போம். மாக என்ற சொல்லிற்குள் ரகரம் உள்நுழைந்து மாக்ர என்று ஆவது இந்தையிரோப்பியப் பழக்கம்.

இந்தையிரோப்பியம் முதலா, தமிழியம் முதலா என்ற ஆட்டத்திற்குள் நான் வர விரும்புவதில்லை. ஏனென்றால் உணர்ச்சி வயப்பட்டு பலரும் தடம் மாறிப் போகிறார்கள். எது முதல் என்ற ஆட்டத்தில் பல வடமொழியாளர்கள் முன்னே போய், நம்மைக் காயடித்தது ஒரு காலம்; நாமும் அதே ஆட்டத்திற்குள் நுழைந்து, ஆற்றலை வீணாக்கி, உணர்ச்சி வயப் பட்டு, இந்த ஒப்புமைகளை மறந்து தொலைக்க வேண்டாம். இப்போதைக்கு மாக, மாகிய என்பது macro என்பதற்கு இணையான சொற்கள் என்பதோடு அமைவோம். பொதுவாய், இயற் சொற்களின் பலுக்க விதப்பில் ரகர, யகர, வகர ஒலிகள் நுழையும் சொற்திரிவு முறைகளைப் புரிந்தால் தான், இந்தையிரோப்பியம், தமிழியம் ஆகிய மொழிக் குடும்பங்களுக்கு இடையே உள்ள இணைச் சொற்களை நாம் இனங் காண முடியும். (பலரும் என் மேல் கோவம் கொள்ளுவதே இந்த இணைப்பை இனங் காட்டுவதால் தான். இந்த இனங் காட்டுதலில் சங்கதத்தின் பெருவுதி - priority - குறைந்து போவது சிலருக்குப் பிடிப்பதில்லை.)

பத்தொன்பதாவது, magnitude என்பது. தமிழில் எண்மானம், பிடிமானம், அவமானம், தன்மானம் எனப் பல்வேறு மானச் சொற்கள் உண்டு. அதில் வரும் மானம் எதைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்கள்? எல்லாமே அளவு என்பதைக் குறிக்கிறது. எண்மானம் என்பது எண்ணின் அளவு. பிடிமானம் என்பது பிடிப்பின் அளவு. கொஞ்சமாவது பிடிமானம் இருக்க வேண்டும் என்று சொல்லும் போது அந்தக் கொஞ்சம் என்ற கருத்து உள்ளூற அளவுக் கருத்தை உணர்த்துகிறது இல்லையா? அவமானம் என்பது முற்றிலும் தமிழே; வடமொழியல்ல. அவத்தின் மானம் அவமானம். அவம் என்பது கீழ் நிலைமை. "அவலா கொன்றோ, மிசையா கொன்றோ" என்ற புறநானூற்று வரியில் அவல் என்பது கீழ்நிலை இடத்தைக் குறிக்கிறது. அவலில் இருக்கும் நிலை அவம். (பல இடங்களில் லகரமும், மகரமும் தமிழில் போலி.) தன்னைப் பற்றிய அளவு தன்மானம். "தான் இப்படியானவன்; இதைத் தாங்க மாட்டாதவன்" என்னும் போதும் அளவுகோல் வந்து விடுகிறது. இங்கே சொன்ன எல்லாமே magnitude என்பவைதான். மானம் என்ற சொல் இதைத் தான் குறிக்கிறது. மா என்ற சொல்லிற்கே ஒரு வேலியில் 20ல் ஒரு பங்கு = 1/20 என்ற பொருளும் உண்டு. அளவிடுகின்ற செயலை மானித்தல் என்று தமிழில் சொல்லுவோம்.

இருபதாவது சொல் magnify என்பதாகும். இங்கே வெறும் அளவு மட்டும் இல்லாமல், பெரியாதாக்கும் பொருளும் இருக்கிறது. மானப் படுத்து என்றால் பெரியதாக்கு என்ற பொருள் சட்டென்று தோன்றாமல் போகலாம். எனவே இதைப் மாகப் படுத்து என்று சொல்லுவது இணையாய் இருக்கும்.

இருபத்தொன்றாவது சொல் major; இது பெரும்பாலும் பெயரடையாக வருகின்ற சொல். மேவுதல் என்ற வினை உயர்ந்து கிடத்தல் என்ற பொருளைக் கொடுக்கும். பெயரடையில் மேவு, மேவிய என்றும், தனிப்பெயராக வரும்போது மேவர் என்றும் சொல்லலாம். இதைப் போலியாய்த் திரித்து மேயர் என்றும் சொல்லலாம்; அதோடு அதை major என்பதின் ஆங்கிலத் திரிவான mayor என்பதற்குப் பொருத்தமாய் வைத்துக் கொள்ளலாம். Army major யை "அரண மேவர்" என்று சொல்லலாம். அரணம் தான் வடமொழி வழக்கில் இராணுவம் என்று திரிந்திருக்கிறது. நாட்டு அரணைக் காப்பாற்றும் பெரும்படை அரணம் என்று சொல்லப்படும். அரத்தம், இரத்தம் ஆனது போல் அரங்கனை, ரெங்கனென்று சொல்லுவதைப் போல், பல ஒலிப்பு மாற்றங்களை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

இருபத்திரண்டாவது சொல் majority; மேவுதலில் இருந்து இதை மேவுதி என்று சொல்லலாம். மேதகை, மேன்மை என்னும் போது உயர்ச்சி என்ற பொருளே வந்து இங்கே எண்ணளவில் கூடி இருக்கும் தன்மை புலப்படாமல் போகலாம்.

இருபத்தி மூன்றாவது many; இதைப் பல என்றே வழக்குத் தமிழில் பயில்கிறோம். கூடவே நனி என்ற பழைய சொல்லைப் புழக்கத்தில் கொண்டுவந்து, சொல்லின் இணை தன்மையை ஆழ்ந்து உணரலாம். தவிர, நனி என்பதைப் பயிலாமல் போனால் பின்னால் பலருக்கும் அது புரியாமல் போகலாம்.

இருபத்தி நாலாவது சொல் mass; இது மிகவும் சரவற் படுத்துகிற சொல். தமிழில் இன்னும் நிறை என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். நிறை என்பது நிறுத்தல் என்ற வினையில் இருந்து பெறப்பட்ட பெயர்ச் சொல்லானால் அது எடையைத்தான் குறிக்கும். (எடுத்தது எடை; நிறுத்தது நிறை. இரண்டுமே weight என்பதைக் குறிக்கும் சொற்கள்.) இன்னொரு விதத்தில் நிறைந்தது என்ற வினையில் வருகின்ற நிறை என்னும் பெயர்ச்சொல் filling என்ற பொருட்பாட்டைத் தான் குறிக்கும். இதில் பெறப்படும் கருத்து volume என்னும் முப்பரிமானம்.

volume என்பதைக் கீழே அடுத்த பகுதியில் பார்ப்போம். volume என்பதற்கும், mass என்பதற்கும், weight என்பதற்கும் வேறுபாடு காட்டிய பின் தான் அறிவியற் சிந்தனை பெரிதும் வளர்ந்தது. தமிழில் இன்னும் சரியாக இதை உணர்த்திக் காட்டாது இருக்கிறோம். இந்தப் பொருள் கனமாக இருந்தது என்னும் போது அது weight ஆக இருந்தது என்று தான் பொருள். அதே பொழுது இதற்கு முரணாக, ஒரு பொருளின் கன அளவு என்றால் அதன் volume யைக் குறிப்பிடுகிறோம். இந்தக் குழப்ப முரண் நெடுநாளாய் நம்மிடம் இருக்கிறது. தவிர, mass என்பதை எப்படிக் குறிப்பது என்றும் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறோம்.

உலகம் என்பது பொருட்களால் ஆனது; இந்தப் பொருட்கள் வெளி(space)யில் இருக்கின்றன. விரிந்து கிடக்கும் வெளியில் ஒரு பொருள் அடைந்து கிடக்கும் இடம் அதன் volume. வெளி என்பது கிட்டத்தட்ட ஒரு கலன் போன்றது. அந்தக் கலனின் அளவைக் குறிக்கும் சொல் volume ஆகும். ஆனால் mass என்பது கலனுள் நிறைந்திருக்கும் பொருள். ஒரு கலனுக்குள் வெவ்வேறு பொருட்களை அடைக்கலாம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு mass யைக் காட்டலாம். mass என்பதன் தன்மையைப் (massyness) பொருண்மை என்று தமிழில் குறிப்பார்கள். பொருள் இருக்கும் தன்மை பொருண்மை. இது உண்மையில் density என்பதோடு தொடர்பு உள்ளது. ஆனால் பொருண்மையும் அடர்த்தி என்பதும் வெவ்வேறு என்றும் ஒரு சிலர் தெளிவில்லாமல் சொல்லுவார்கள். (density என்பதையே பின்வரும் பகுதிகளில் பார்ப்போம்.)

உண்மையில் mass என்பதைக் குறிக்கத் தமிழில் தனிச்சொல் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. அடிப்படைச் சொற்களை அதன் ஆளுமை, அகலம் பார்க்காமல் மேலோட்டமாய் நாம் புழங்கிக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் எனக்கு நெடுங்காலம் உண்டு. mass என்பதைப் பொருள் என்று சொன்னால் அங்கே துல்லியம் வரவில்லை. ஏனெனில் பொருள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு இன்னும் பல பொருட்பாடுகள் உண்டு. பொருண்மை என்றால் அது massyness ஐக் குறிக்கிறது. உண்மையில் An object has a mass என்னும் வரியைத் தமிழில் எப்படிச் சொல்லுவோம்?

"அங்கே பார், மொது மொது என்று மொத்தையாய் இருக்கிறான்; அவள் மொது மொது (>மத மத) என்று வளர்ந்திருக்கிறாள்; மொதப்பான (>மதர்ப்பான) உடம்பு; " - என்ற இந்த ஆட்சிகளில் எல்லாம் mass என்ற பொருட்பாடு உள்ளே இருக்கிறது. இந்தச் சொல்லாட்சிகளுக்குத் தொடர்பாய், மொதுகை (அல்லது மதுகை) என்ற சொல்லை mass என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை. massive என்பதை மொதப்பு (>மதர்ப்பு), மொதுகையாய் (அல்லது மதுகையாய்) என்று சொல்லலாம். density, volume போன்றவற்றைப் பின்னால் கீழே சொல்லுகிறேன்.

இருபத்தைந்தாவது சொல் maximum; மிகுந்து கிடப்பதின் நெடில்வழக்கு மீது கிடத்தல். மீ என்னும் ஓரெழுத்தொரு மொழியைப் பயன்படுத்தி மீகுமம் என்ற சொல்லைப் பயிலலாம்.

இந்தப் பகுதியில் பரிந்துரைத்த அளவுச் சொற்கள் வருமாறு:

macro = மாக, மாகிய
magnitude = மாகனம், (மானம் என்பது தனித்து வரும் போது சரிவராது; ஆனால் கூட்டுச் சொற்களில் சரிவரும்.)
magnify = மாகப் படுத்து
major = மேவு, மேவிய, மேவர்
majority = மேவுதி
many = பல, நனி
mass = மொதுகை, மதுகை
maximum = மீகுமம்

இவை போகப் பயின்ற மற்ற சொற்கள் வருமாறு:

solid = திண்மம்
macro meter = மாக மாத்திரி, மாகிய மாத்திரி
standard = செந்தரம்
priority = பெருவுதி
army = அரணம் (=இராணுவம்)
mayor = மேயர்
massyness = பொருண்மை
space = வெளி
weight = நிறை, எடை
filling = நிறைத்தல்

maximum என்பதற்கு எதிரான minimum என்ற சொல்லை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

அளவுச் சொற்கள் - 1

என்னுடைய வலைப்பதிவில் முன்பு ஒரு நண்பர் கொடுத்த பின்னூட்டில் "micro, macro, mega போன்றவற்றை தமிழில் எப்படி விதப்பாகச் (specific) சொல்லுவது?" என்று கேட்டிருந்தார்.
-----------------------------------------------------------
அவர் கேட்டிருந்த சொற்கள் எல்லாம் அளவுக் கருத்து பற்றிய முன்னொட்டுச் சொற்கள். அளவுச் சொற்களைக் கையாளும் போது நம்முடைய பேச்சில் தகுதி (quality), எண்ணுதி (quantity) என்ற இரண்டிலுமாய்த் துல்லியம் காண வேண்டும். ஆங்கிலத்தில் அளவு பற்றிய பல்வேறு முன்னொட்டுச் சொற்களை அடுக்கி, இடத்திற்குத் தகுந்தவாறு, பயன்படுத்துவதில் கவனம் எடுத்துக் கொள்ளும் நாம், தமிழ் என்று வரும் போது மட்டும், பொதுமையான சில அளவுச் சொற்களைத் தெரிந்து கொண்டு, விதப்பானவற்றை அறிய மாட்டேம் என்கிறோம். அளவு பற்றிய எல்லாவற்றிற்கும் நமக்குத் தெரிந்த ஓரிரு சொற்களை மட்டுமே வைத்து ஏதோ ஒரு வகையில் ஒப்பேற்றி விடுகிறோம். பொதுவாக நம்முடைய மொழியைக் கையாளுவதில் நமக்கு ஓர் அலட்சியம் இருக்கிறது, நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொல் தொகுதியை கூட்டிக் கொள்ளாதே இருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். (இதை மிகுத்துச் சொன்னால் பலருக்கும் என்மேல் கோவம் வரக்கூடும்.) இதற்கு ஓர் எடுத்துக் காட்டு தருகிறேன். ஒருபொழுது திண்ணை வலையிதழில் ஒரு நேர்காணல் உரையாடலில் பங்காளர் ஒருவரின் (மிகப் பெயர் பெற்ற, அண்மையில் மறைந்த ஓர் எழுத்தாளர்) வாசகம் படித்தேன்.

"நான் என்ன நினைக்கிறேன்னா - வாட் ஈஸ் செந்தமிழ் வாட் ஈஸ் சாதாரண தமிழ்னு க்ளியரா distinguish பண்ணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் classical tamil people-னுதான் சொல்ல முடியும்."

இதைப் படித்த எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்நாளைய இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் ஏன் இந்த அளவு தமிங்கிலம் பயில்கிறார்கள்? இதில் என்ன தமிழில் சொல்ல முடியாத பெரிய கலைச்சொல் பொதிந்து கிடக்கிறது?

"நான் என்ன நினைக்கிறேன்னா, எது செந்தமிழ், எது சாதாரணத் தமிழ்னு தெளிவா அடையாளம் காணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் செந்தமிழ்க்காரர்கள்ன்னு தான் சொல்ல முடியும்"

என்று கூட ஒரு தமிழறிந்த கூட்டத்தில் சொல்ல முடியாத அளவுக்குத் தமிங்கிலம் இவர்களுக்குப் பழகிப் போகும் என்றால், அப்புறம் இன்றையத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசி இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பேசாமல் குமரியில் மூன்று தடவை சுற்றிவந்து இந்தத் தமிழ் என்னும் மொழியைத் தூக்கி எறிந்துவிடலாமே? அதைவிடுத்து ஏன் இப்படிச் சல்லியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்?

பொதுவாக இந்தப் பழக்கம் ஒரு நோய் போலவே நம்மில் மிகுதியானவரைப் பீடித்திருக்கிறது. தமிங்கிலம் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்து என்றைக்கு அதற்கு முடிவு கட்டுவோம்?
---------------------------------------------------------------
நண்பர் கேட்ட சொற்களோடு இன்னும் சில தொடர்புள்ளவற்றைச் சேர்த்து இங்கே கொடுத்திருக்கிறேன். பதிவை ஐந்து பகுதிகளாக்கி அனுப்புகிறேன்.

அளவு என்ற பெயர்ச்சொல் அள்ளுதல் என்ற வினைச்சொல்லில் இருந்து எழுந்தது. அள்ளுதல் என்பது முதலில் நெருங்குதலைக் குறித்துப் பின் சேர்த்தல் அல்லது கூட்டுதல் என்ற பொருளைக் குறிக்கும். அள்ளுதலில் இருந்து அள்+து>அட்டு>அட்டுதலும், அட்டு>அடு>அடுதலும் ஆகிய வினைகள் பிறக்கும். அட்டுதல் என்பது சேர்த்தல் என்ற பிறவினையையும், அடுதல் என்பது சேர்தல் என்ற தன்வினையையும் குறிக்கும். அடுதல் என்ற தன்வினையில் இருந்து அடுவித்தல் என்ற இன்னொரு பிறவினையும் பிறக்கும். அட்டுதலும் அடுவித்தலும் ஒரே பொருள் கொண்டவை தான். கூட்டுதல், சேர்த்தல் என்றே இவை பொருள்படும். அடுவித்தல் என்ற சொல், பலுக்கச் சோம்பலில் அதுவித்தல்>அதியித்தல்>அதித்தல் என்றும் திரியும். to add = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல். please add 2 and 3; 2 யையும் 3 யையும் கூட்டு. addition = கூட்டல், அடுவம், அதியம்; additive = கூடுதலான, அதிவான

கூட்டுதல் என்ற பொருளில் உள்ள தொகுதியில் நான் எடுத்துக் கொள்ளும் முதற் சொல் ample; இதற்கு இணையாய் அமலை என்று தமிழில் சொல்லலாம். "அவனும், நானும், எல்லோரும்" என்று ஓர் உம்மைச் சேர்த்துச் சொல்லுகிறோம் இல்லையா? அந்த உம் என்னும் இடைச்சொல் கூட்டப் பொருளைச் சுட்டிக் காட்டும். உம்முதல் என்பது சேருதலே. உம்முதல்>அம்முதல் என்று திரியும். அம்முதல்>அம்புதல்>அப்புதல் என்பதும் ஒன்றின் மேல் ஒன்றை சேர்த்துக் கொண்டு வருவதைக் காட்டும். அம்முதலில் இருந்து பிறந்த சொல் அமலை. இது செறிவுப் பொருளைக் காட்டும். இது தவிர மிகுதி என்ற பொருளையும் திவாகரம் காட்டும். மெல்லின இணை, மெல்-வல் இணையாகத் திரிந்து, பிறகு வல்லின இணையாக மாறுவது தமிழிய மொழிகளில் உள்ள பழக்கம் தான். அம்மா என்று இயலொலி அம்பா என்று ஆகி பின் அதன் பொருள் நீண்டு இன்னொரு பெற்றோரைக் குறிக்கும் வகையில் அப்பா என்று திரியும். அதே போல "வந்நு" என்னும் வினைச்சொல் "வந்து" என்று திரியும். பண்ணுதல் என்னும் வினையில் இருந்து பண்டம் என்ற பெயர்ச்சொல் பிறக்கும். இவையெல்லாம் இந்த மெல்லிணை>மெல்வல்>வல்லிணைத் திரிவுகளுக்கு எடுத்துக் காட்டுக்கள். அமலைக்கும் ample க்கும் உள்ள இணை இப்பொழுது புரிகிறதா?

அடுத்த சொல் average; இதற்கு இணையாய் நிரவை/நிரவல் என்பதைச் சொல்லலாம். ஒரு படியில் அரிசியை முகந்து அளக்கிறோம். படியின் முகவாயில் அரிசி குவியலாய்க் கிடக்கிறது. அதை கையால் சரி செய்து தட்டையாக்கிப் போடுவதை நிரவுதல் என்று சொல்லுகிறோம். கொள்கலனில் ஏற்ற இறக்கமாய் கிடக்கும் கூலப் பொருளை ஒரே மட்டமாய் ஆக்குவதும் நிரவல் தான். இதைத்தான் ஆங்கிலத்தில் average என்கிறார்கள். average = நிரவை, நிரவல்

மூன்றாவது சொல் big = பெரிய; இதற்கு விளக்கம் தேவையில்லை

நான்காவது சொல் brief; இதற்கு இணையாய்த் தமிழில் பொருவிய என்பதைச் சொல்லலாம். "சொல்லுவதைப் பொருவினாற்போல் சொல்" என்றால் "whatever you say, say it briefly" என்று பொருள். இங்கே சுருக்கம் என்று சொன்னால் அது short or summary என்ற பொருள் கொள்ளும். வெள்ளரிக்காய் வாங்கும் போது சந்தையில் பிஞ்சாய்ப் பார்த்து வாங்கிவரச் சொல்லி வீட்டில் சொல்கிறார்கள் இல்லையா? இது போன்ற பிஞ்சுகளை பொருக்கை என்று தென்பாண்டி நாட்டில் சொல்வார்கள். பிஞ்சும் பொருக்கும் என்பது அங்கு மரபுத் தொடர். பொருவுதல் என்பது இப்படிப் பிஞ்சாய் ஆகுதல் என்று பொருள் படும். ஆங்கிலத்தில் brief என்ற சொல் இப்படிச் சின்னதைக் குறிக்க எழுந்தது. brief = பொருவிய

ஐந்தாவது சொல் broad; இதற்கு இணையாய் பரத்திய, பரவிய, அகண்ட என்பதைச் சொல்லலாம். குறுகிய என்பதற்கு எதிரானது பரவுதல், பரத்துதல். பரந்த காவிரி, அகண்ட காவிரி என்னும் போது அதன் பரந்தமை (broadness) பற்றியே சொல்லுகிறோம். அதாவது வெறும் நீளப் பரிமானத்தைக் காட்டிலும் இரண்டாவது பரிமானமான அகற்சி இங்கே பேசப்படுகிறது.

ஆறாவது சொல் bulky; இதற்கு இணையாய் பருக்கான என்பதைச் சொல்லலாம். உப்பென்று பருத்துக் கிடப்பது bulky. பருக்கிக் கிடப்பதற்கு வலிமை பெற்றது என்ற பொருள் கிடையாது. அண்டவெளியில் முப்பரிமானம் பரவிப் பருத்துக் கிடக்கிறது. மேலே சொன்ன பரவிய என்பதற்கும் பருக்கிய என்பதற்கும் உள்ள பரிமான வேறுபாடு நாம் ஊன்றிக் கவனித்தால் மட்டுமே புலப்படும். பரவிய என்பது இரு பரிமானச் சொல். பருக்கிய என்பது முப் பரிமானச் சொல்.

ஏழாவது சொல் capacity; இதற்கு இணையாய் கொண்மை என்பதைச் சொல்லலாம். "இந்த ஏனம் அல்லது கலம் எவ்வளவு கொள்ளும்?" என்று கேட்கிறோம் இல்லையா? கொள்ளுமை என்பது, கொண்மை என்று மெல்லின ஓசை இடைவரத் திரியும். கலத்திற்கு உள்ள இந்தத் தன்மையை இன்று எல்லாக் கட்டகங்களிலும் (systems) சேர்த்துச் சொல்லுகிறார்கள். ஏனத்தின் கொண்மை (capacity of a vessel), இறைப்பியின் கொண்மை (capacity of a pump), மின் நகர்த்தியின் கொண்மை (capacity of an electric motor), மாந்தனின் வலிதாங்கும் கொண்மை (a man's capacity to withstand pain) இப்படி இது விதவிதமாய் விரியும்.

எட்டாவது சொல் central; இதற்கு இணையாய் நடுவண் என்பதைச் சொல்லலாம்; பெயர்ச்சொல்லாய் வரும் போது நடுவம் என்றும் பெயரடை அல்லது முன்னொட்டாக வரும் போது, நடுவண் என்றும் வரும். central government = நடுவண் அரசு. மத்திய என்று பலரும் புழங்கும் சொல், உண்மையில் நட்ட என்னும் தமிழ்ச்சொல்லை வடமொழிப் பலுக்கில் கூறும் ஒரு திரிவு தான். மூலம் தெரியாமல், பலரும் இதன் தோற்றம் வடமொழி என்று தடுமாறுவது உண்டு. தமிழில் நகரமும் மகரமும் போலிகள்; முப்பது என்பதை நுப்பது என்றும் முடங்கும் என்பதை நுடங்கும் என்றும் பலுக்குவதை உணர்ந்தால் இது புலப்படும். அடுத்து, டகர ஒலி, தகர ஒலியாகப் பலுக்கப் படுவது வடக்கே போகப் போக நடக்கும். முடிவில் சொல்லின் உள்ளே யகரம் நுழைவதும் வடமொழிக்கு உள்ள பழக்கம் தான். ஆக நட்ட>நத்த>மத்த>மத்ய>மத்திய என்ற வழிமுறையில் சொற்திரிவு அமையும். மத்திய என்பதன் மேலோட்ட வடமொழித் தோற்றத்தில் அதன் தமிழ் மூலம் உணர முடியாமல் தடுமாறுகிறோம்.

ஒன்பதாவது சொல் dimension; இதற்கு இணையாய்ப் பரிமானம் என்பதைச் சொல்லலாம்; எந்த ஒரு பொருளும், தான் இருக்கும் வெளியில் விரிந்து நிற்கிறது. விரிந்து நிற்பது வியல்ந்து நிற்பது என்றும் சொல்லப் பெறும். பரிப்பு என்பதும் வியல்ந்து நிற்பதே. பரிதல் என்பது வளைந்து நிற்பதையும் குறிக்கும். "செஞ்ஞாயிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்" என்ற புறநானூற்று வரிகளை இங்கு எண்ணிப் பார்க்கலாம். இதில் பரிப்பு என்பது வளைந்த வட்டத்தைக் குறிக்கிறது. மானம் என்பது மதித்தல், அளவிடுதல் என்பதன் பெயர்ச்சொல். மா என்பது அதன் வேர்ச்சொல். மாத்தல் என்பதில் இருந்து பிறந்தது மானம். இயற்கையில் நாம் கண்ணால் காணும் வெளி, பரிமானம் தழுவியது. அதாவது அதைப் பரித்து (வளைத்து) நாம் அளக்கிறோம். இயற்கையில் கிடக்கும் பொருள்களை இடுவிப்பாக (idealistic) உருவகஞ் செய்து ஒன்று, இரண்டு, மூன்று என்ற பரிமானங்களாய் கணக்கின் ஒருபகுதியான வடிவியல் (geometry) குறிக்கும். கோடு என்பது ஒற்றைப் பரிமானம்; பரப்பு என்பது இரட்டைப் பரிமானம்; நாம் காணும் முப்பரிமானப் பொருள்களைப் பற்றி நான் விவரிக்க வேண்டியதில்லை. நம் எல்லோருக்கும் அது தெரியும். இன்னும் கூடிய பரிமானங்களை, இந்தக் கால வகைப்பு இடவியலும் (differential topology), வகைப்பு வடிவியலும் (differential geometry) கையாளுகின்றன. ஐன்சுடீனின் உறவாட்டுக் கொள்கையில் (theory of relativity) இடம், காலம் என்று இணைந்த வகையில் நாற் பரிமானம் பேசப்படும்; இன்னும் மேலே போய் நனி பரிமானப் பல்மடி (many dimensional manifold) பற்றியும் இன்றையக் கணிதவியலில் பேசுவார்கள்.

பத்தாவது சொல் enormous; இதற்கு இணையாய் எண்ணிறந்த என்பதைச் சொல்லலாம். எண்ண முடியாத அளவுக்கு, எண்ணிச் சலித்த நிலைக்கு, எண்ணிறந்த என்று சொல்லுவார்கள். இதற்கும் மேல் அளக்கவே முடியாத ஒரு நிலை infinitity ஆகும். இது தமிழில் வரம்பிலி என்று சொல்லப்படும். இந்த வரம்பிலியை எண்ணிலி, ஈறிலி, கந்திலி என்றெல்லாம் சொல்லுவது உண்டு. கந்து என்பது பற்றுக் கோடு; அதுவும் ஓர் ஈற்றைத் தான் குறிக்கும். அந்தக் கந்தே இல்லாத நிலை கந்திலி.

பதினோறாவது சொல் expanse; இதற்கு இணையாக விரிந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய என்பதற்கும் விரிந்த என்பதற்கும் பரிமானம் தவிர மிகுந்த வேறுபாடு கிடையாது; விரிவு என்பது எல்லாப் பரிமானங்களிலும் நடக்கக் கூடியது. ஆனால் பரவிய என்பதைப் பெரிதும் இரு பரிமானத்திற்கு மட்டுமே பயனாக்குவது நல்லது.

பன்னிரண்டாவது சொல் extent; இதற்கு இணையாகப் பரந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய, விரிந்த என்ற சொற்களில் இருந்து சற்றே நுணுகிய வேறுபாடு கொண்டது. பொதுவாகப் பரந்த என்ற சொல் இருபரிமானத்திற்கு இயல்பாகவும், ஓரோவழி ஒற்றைப் பரிமானத்திற்கும் சொல்லலாம். முப்பரிமானம் சார்ந்த நிகழ்வுகளுக்கும், பொருள்களுக்கும், மிகக் குறைந்த அளவிலேயே இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம். அது என்னவோ தெரியவில்லை, பரவிய, விரிந்த, பரந்த என்ற மூன்று சொற்களும் தமிழில் ஒன்றுக்கு மாறாக இன்னொன்று என்று மயங்கியே பலராலும் புழங்கப் படுகின்றன. இனி வருங்காலப் புழக்கத்தில் எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. என்னைக் கேட்டால் இதற்கு இது என்று ஒரு சமன்பாட்டை இனிமேலாவது கொண்டுவரலாம்.

பதிமூன்றாவது சொல் flow; இதற்கு இணையாகப் பெருக்குதல், பெருவுதல் என்ற சொற்களைச் சொல்லலாம். விளவுதல் என்ற சொல்லும் ஓரோவழி சொல்லப்படுவது உண்டு. (பாய்தல், ஓடுதல் என்பவை நேரடிப் பொருள் தரும் சொற்கள் அல்ல. அவை துல்லியம் அல்லாத, கிட்டத்தட்டச் சரிபண்ணும் சொற்கள். நானும் இப்படிச் சரிபண்ணிக் கொண்டு இருந்திருக்கிறேன்.) பெருவுதல்/பெருகுதல் என்பது தன்விணை; பெருக்குதல் என்பது பிறவினை. ஆடிப் பெருக்கு என்றால் ஆடி மாதம் ஏற்படும் flow. ஆறுகளையே கூடப் பெருநை>பெருணை>பெண்ணை என்று தான் தமிழிய மொழிகள் கூறிவந்தன. வடக்கே பெருகியுது வடபெருநை>வடபெருணை>வடபெண்ணை. அதற்கடுத்து சற்று தெற்கே கருநிறத்தில் பெருகியது கருந பெருநை>கருந பெருணை>கன்ன பெண்ணை; கருந பெண்ணையை வடமொழிப் படுத்தி கிருஷ்ண பெண்ணை என்று ஆக்கிப் பின் பெண்ணையைத் தவிர்த்து கிருஷ்ணா என்பார்கள். இன்னும் தெற்கே தென்பெருநை>தென்பெருணை>தென்பெண்ணை என்ற ஆறு உண்டு. ஆகத் தெற்கே தாம்பர பெருநை>தாமிர பெருணி>தாம்பிரவருணி என்ற ஆற்றைத் தெரியாதார் கிடையாது; இந்திய ஆறுகளின் பெயர்கள் பலவற்றையும் ஆழ்ந்து பார்த்து, அவற்றின் உள்ளார்ந்த தமிழ்மூலத்தை அறியும் போது நமக்குப் பெரிதும் வியப்பு ஏற்படுகிறது. இந்தியப் பழமையில் தமிழரின் பங்களிப்பு பெரிதும் இருக்கிறது. அதை ஒருமுறை மடற்குழுக்களில் செய்தேன். இன்னும் ஒருமுறை வேறொரு வாய்ப்பில் திரும்ப அலச வேண்டும். நீரோட்டம் என்பது பெருக்கைக் குறிக்கக் கொஞ்சம் சுற்றி வளைத்த சொல்.

பதிநான்காவது சொல் huge; இதற்கு இணையாக ஊகை என்பதைச் சொல்லலாம். உகர ஒலியின் குறில், நெடிற் பலுக்கில் ஏகப்பட்ட உயர்ச்சிச் சொற்கள் எழுந்துள்ளன. உகரம் ஒகரமாகியும், ஓங்கி உள்ள பொருட்களை நமக்கு உணர்த்தும். ஊகி நிற்பது என்னும் போது கண்முன்னே உயர்ந்து பெருகி நிற்கும் உருவம் புலப்படும். ஊங்கு என்றாலும் மிகுதி என்ற பொருள் தமிழில் உண்டு; அதே போல ஓகம் என்ற சொல்லும் பெருகி நிற்பதைக் குறிக்கும்.

பதினைந்தாவது சொல் immense; இதற்கு இணையாக மொந்தை என்பதைச் சொல்லலாம். மொத்தம் என்னும் போது கூட்டப் பொருள்தானே வருகிறது? மொந்துதல் என்பது தன்வினை. மொத்துதல் என்பது பிறவினை.

பதினாறாவது சொல் large; இதற்கு இணையாய் அகலை என்பதைச் சொல்லலாம். அகலம் என்ற சொல்லில் ஈற்றை மாற்றி வருவது அகலை. அகல்ந்தது என்பது வினைச்சொல்.

பதினேழாவது little; இதற்கு இணையான சின்ன என்ற சொல்லைப் பற்றி நான் மிகுதியாகச் சொல்லவேண்டியது இல்லை.

இதுவரை சொன்ன 17 அளவுச் சொற்களைத் தொகுத்துச் சொன்னால்,

ample = அமலை
average = நிரவை, நிரவல்
big = பெரிய
brief = பொருவிய
broad = பரத்திய, பரவிய, அகண்ட
bulky = பருக்கான
capacity = கொண்மை
central = நடுவண்
dimension = பரிமானம்
enormous = எண்ணிறந்த
expanse = விரிந்த
extent = பரந்த
flow = பெருக்குதல், பெருவுதல், விளவுதல்
huge = ஊகை
immense = மொந்தை, மொத்தை
large = அகலை
little = சின்ன

அதோடு கட்டுரையில் வந்த மற்ற சொற்களையும் பட்டியலிட்டால், கீழுள்ளது கிடைக்கும்.

quality = தகுதி
quantity = எண்ணுதி
to add = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல்.
addition = கூட்டல், அடுவம், அதியம்
additive = கூடுதலான, அதிவான
broadness = பரந்தமை
system = கட்டகம்
pump = இறைப்பி
electric motor = மின் நகர்த்தி, மின்னோடி
idealistic = இடுவிப்பு
geometry = வடிவியல்
differential topology = வகைப்பு இடவியல்
differential geometry = வகைப்பு வடிவியல்
theory of relativity = உறவாட்டுக் கொள்கை
manifold = பல்மடி
infinitity = வரம்பிலி, எண்ணிலி, ஈறிலி, கந்திலி

இனி மகரத்தில் தொடங்கும் அளவுச் சொற்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.