Wednesday, April 29, 2020

மிதிவண்டி கலைச்சொற்கள்

இது http://vasanthanin.blogspot.com/2005/05/1.html என்ற ஈழத்து நண்பர் வசந்தனின்  வலைப்பதிவில் உள்ளது. 2005 இல் மிதிவண்டியின் பாகங்கள் பற்றி இதிற் சொல்லியுள்ளேன்.  என் கணியிலோ, வலைப்பதிவிலோ அப்போது இதைச் சேமிக்காது விட்டேன். இதுபோல் நான் சேமிக்காத, என் ஆக்கங்கள் இணையத்தில் கிடைத்தால். அவை கண்ணில் படும்போது இப்போதெல்லாம் சேமிக்க முற்படுகிறேன். அந்த வகையில் இப்போது இது என் வலைப்பதிவிற் இது சேருகிறது.  அக்காலத்தில் செயலலிதா  அம்மையாரின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது.  இந்த என் முன்னிகையை யாரோ ஒருவர் பார்த்து மிதிவண்டியின் பாகங்களைப் பற்றி நான் குறித்ததை அப்படியே எடுத்து,  தான் சேகரித்த வேறு சொற்களோடு  சேர்த்து,

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

என்ற விக்கிப்பீடியா வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆனால் என் பெயரை அங்கே அவர் குறிப்பிடப்பிடவே இல்லை. ஒருவேளை என் பெயர் தரப்படாததால் தான், தமிழ் விக்கிப்பீடியாவினர் சேர்த்தாரோ, என்னவோ? ஏனெனில் பொதுவாய் நான் பரிந்துரைக்கும் சொற்களைத் தமிழ் விக்கிப் பீடியாவில் பார்ப்பது மிக அரிது. பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்.

இனி வசந்தன் வலைப்பதிவில் நான் கொடுத்த முன்னிகை:
-------------------------------

இராம.கி said ... (04 May, 2005 17:14) :
பந்தை ஆடாமல் பந்தாளியை ஆடுவது எங்களூரில் பெரும்பாலோருக்கு உள்ள வழக்கம். அரசியலில் பெரும்பாலும் அது நடைபெறும். அண்மையில் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் மருத்துவர் இராமதாசும், தொல்.திருமாவளவனும், மு.சேதுராமனும், பழ.நெடுமாறனும் இன்னும் பலரும் சில செய்திகளைச் சொல்லிவருகிறார்கள். அந்தச் செய்திகளுக்கு மறுமொழியோ, அல்லது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவோ செயற்படாமல் பந்தாளியை ஆடுவது தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் பா.ம.க. தலைவர் கொ.க.மணி தமிழ் பாதுகாப்பு இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கியவுடனே, அதற்கு மறுமொழி சொல்லாமல், "நீ உன் பெயரை G.K.மணி என்று ஏன் வைத்துக் கொண்டு இருக்கிறாய்? உனக்கு சைக்கிளின் பாகங்களுக்கான தமிழ்ப்பெயர் தெரியுமா?" என்று முதல்வர் கேட்க, அத்தனை ஆளும் கட்சி உறுப்பினர்களும் (இன்னும் சில எதிர்க்கட்சியினரும் அவருடன் சேர்ந்து கொண்டு) கொல் என்று சிரிக்க, "தமிழை என்ன நீங்கள் பாதுகாக்கப் போகிறீர்கள்? ஆங்கிலச் சொல் எல்லாம் தான் தமிழாகி விட்டதே?" என்று முத்தாய்ப்பு வேறு. இந்த மனப்பாங்கில் "நாங்கள் தான் அறிவியல் தமிழ் கொண்டுவந்தோம்" என்ற முழக்கமும் இருக்கிறது.

இந்த பேரவை நிகழ்வைச் சாடி, அண்மையில் அ.வியனரசு என்பவர், தமிழ்ச் சான்றோர் பேரவையின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர், ஜூ.விகடனில் பேசியிருக்கிறார். கூடவே அவர் மிதிவண்டியின் சில சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கொடுத்திருந்தார். இதைப் போன்ற மிதிவண்டிச் சொற்களின் இன்னும் பெரிய பட்டியலை ஏதோ ஒரு தமிழ்ச் சிற்றிதழில் இரண்டு மூன்று ஆண்டுகள் முன்பு படித்திருந்தேன். அப்போது குறித்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். இப்பொழுது வியனரசு கொடுத்ததை வைத்து, சில திருத்தங்கள் செய்து, மேலும் சில சொற்களைச் சேர்த்து இங்கு தந்துள்ளேன். எம் கடன் பணி செய்து கிடப்பதே.

seat, saddle = குந்துகை, இருக்கை
handle bar = கைப்பிடிப் பாளை (தென்னம் பாளை என்பதில் வரும் பாளை என்பது bar என்பதையே குறிக்கிறது.)
wheel = வளை/வளவி (கையில் போடுவதும் வளவி தான்.)
mud guard = மட் காப்பு (மண்+காப்பு)
stand = தண்டை (தண்டு கொள்ளுதல் என்பது இருத்தலும் நிலைத்தலும் ஆகும்.)
carrier = தூக்கி
pedal = மிதி
spoke = போழ்க்கு (போழுதல் என்பது கூர்மையாகக் குத்துதல். போழ்க்குகள் இங்கே சக்கர விளிம்பில் இருந்து நடுவத்தை நோக்கிப் போவது போழ்க்குவதாய் இருக்கிறது.)
wheel rod = வளை/வளவி உரல் (எல்லாவற்றிற்கும் தண்டு எனவே சொல்லிக் கொண்டிராமல் உரல் என்ற சொல் இங்கே பயனாகிறது. கம்பு, தண்டு, தடி, உரல் எனப் பலவற்றையும் வேறுபாடு விளங்கிப் பயன்படுத்த வேண்டும்.)
bell = மணி
rim = விளிம்பு
tube = தூம்பு
tyre = தோலி (வியப்பாக இருக்கும்; தோலில் இருந்த கிளைத்த தோலி என்பது பழத்திற்கு மட்டுமல்லாமல் எல்லாவிதமான மேல் உறைகளுக்கும் பயன்படக் கூடிய சொல் தான்)
chain = கணை (கண்ணி கண்ணியாய் கோத்துக் கணைத்தது கணை)
break = தடை
forks = பிரிகை
sprocket = பற்சகடு
gears = பல்லிணை
pump = இறைப்பி
dynamo = துனைமி ("கதழ்வும் துனைவும் விரைவுப் பொருள" என்பது தொல்காப்பியம். இந்தச் சொல் ப.அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியில் இருக்கிறது. அருமையான சொல்.)
reflector = மறுபளிப்பி
caliper = இடுக்கி
shoe = கவை
cable = கொப்புழை (மரத்தில் கிளை, கொப்பு என்று உறுப்புகள் பிரிவதை நினைவு கொள்ளுங்கள். உழை என்ற ஈறு கொப்பின் சிறியதைக் குறிப்பது.)
frame = வரம்பை, (வரம்பு கட்டியே ஏதொன்றையும் உருவாக்குகிறோம். வரம்பு என்பது எல்லை மட்டுமல்ல.
lever = எழுவை, நெம்புகோல்

மேலே உள்ள சொற்களுக்கு இன்னும் விளக்கம் கொடுக்கலாம். விரிவு கருதி விடுக்கிறேன்.
------------------------
நான் பா.ம.க. ஆளில்லை என்று சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இல்லையென்றால் என்னையும் பந்தாடப் பலர் வந்து நிற்பார்கள்.
-----------------
அன்புடன்,
இராம.கி.

2 comments:

Unknown said...

Duathlon tamil meaning

தமிழில் இணையான சொல் மற்றும் அர்த்தம்

Sundar.P said...

மிகவும் சிறப்பு ஐயா