Sunday, August 18, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 1.

மணிப்பவள நடையைத் தவிர்க்கச்சொல்லி ”வாட்சப்”பில் பரிந்துரைத்ததாய், வடசொற்களுக்கு ஈடான சில தமிழ்ச் சொற்களை நண்பர் நாஞ்சில் பீற்றர் தன் முகநூல் பக்கத்தில் இட்டார். அதை என் முகநூல் பக்கத்தில் முன்வரித்தேன். அப் பட்டியலில் வரும் ”சூரியன், வாயு, ஆகாயம், சவம், சடம், புத்தி, குரு, ஞானம், சித்திரம், நடனம், தருமம், மா>மகா ஆகியவை தமிழ்தான். இவற்றைச் சங்கதமென்று பலரும் நினைத்துவிடுகிறார். ஆழவும் ஆய்ந்தால் இவை தமிழ் என அறியலாம்.” என்றுஞ் சொன்னேன். இதைப் படித்த நண்பர் ஞானப் பிரகாசன் அவற்றின் தமிழ்மையை விளக்கச் சொல்லிக் கேட்டார். சொந்த வேலையில் சில காலம் ஊர் சுற்றியதால் உடனே அவருக்கு விளக்க முடிய வில்லை. இப்போது முற்படுகிறேன். முதலில் சூரியனைப் பார்ப்போம்.

புவிக்கு வெளியிருந்து சூரிய விண்மீன் வெளிச்சம் தருகிறது; அதன் வெய்யில் சுடுகிறது, உறைக்கிறது, குத்துகிறது. பல விதங்களில் சூரியத் தாக்கை இப்படி உணர்கிறோம். கேட்பதற்கு வேறுபட்டாலும், இவ்வினைகள் குத்தலில்  தொடங்குவனவே. தோலின் தொடுவுணர்ச்சியால் சூட்டை உணர்கிறோம். உடம்பின் மேல் கூர்ம்பொருள் படுகையில், தொடுபுலனால் முதலில் குற்றல்> குத்தலையும். பின் உறைப்பையும், சூட்டையும், முடிவில் விழிப்புலனால் வெளிச்சத்தையும் அறிகிறோம். குற்றலின் வேர்ச்சொல் குல். இதே போல் சுல் வேருமுண்டு. நேரடியாய் அது பயக்காவிடினும், அதன் திரிவால் பல சொல் வளர்ச்சிகள் உண்டு. ”கொன்றையும் பொன்னும்” எனும் என் தொடர் 4 ஆம் பகுதியில் விளக்கியுள்ளேன். சுல்லின் அடுத்த நிலையான சுள்ளும் தமிழில் பற்பல சொற்களை உருவாக்கியுள்ளது.

”சுள்ளெனக் குத்தினான்” என்று தமிழில் pricking செய்கை குறிக்கப்படும். அடிப்படையில் சுள் என்பதும் ஓர் ஒலிக்குறிப்பே. ஒலிக்குறிப்புகள் மொழிகளின் யெல்லைகளைக் கடந்தவை. இவை எம்மொழிக்குச் சொந்தம் என அறுதியிட்டுக் கூறமுடியாது. ஒரு வேர்ச்சொல்லிலிருந்து மற்ற சொற்கள் எழும்போதுதான் மொழிச்சிறப்பு புரியும். முதலில் (ஊசிபோற் கூர்ங்கருவி) குத்தலாய், பின் உறைப்பதாய், பின் (நம் உடம்பின் நீர்) காய்வதாய், வறள்வதாய், முடிவில் எல்லாமுஞ் சேர்ந்து சுடுவதாய் உணர்வோம். கீழே நான் காட்டும் சொற்கள் இவற்றில் எதை வேண்டுமெனினும் குறிக்கும், ஒன்றிற்கு மேலும் பொருட் பாடுகளை இச்சொற்கள் குறிக்கலாம். குத்தல், உறைத்தல், காய்தல், வறள்தல், சுடுதல், எரிதல், வெள்ளுதல், சிவத்தல் என எல்லாமும் இவற்றோடு தொடர்புள்ளவை.

சுல்> சுல்லி= அடுப்பு, மடைப்பள்ளி. சுல்லு= வெள்நிற மாழை, வெள்ளி. சுல்லம்> சுல்வம் என்பது  இந்தையிரோப்பியச் சொல். சுல்லல்= குத்தல்; சூலுதல்= தோண்டுதல்; சூல்= குத்துங் கருவி, தோண்டுங் கருவி, கொற்றவையின் கைக்கருவி; சூலம்= சூலின் நீட்சி. முத்தலைக் கோல். பழங்குடிகளின் கொலைக்கருவி. சிவனின் ஆயுதம். சூலக் குழி= பிணக் கற்குழி சூலக் குறடு= சூட்டுக்கோல் சூலம்= சூலை= குத்தலும் குடைச்சலும் கொடுக்கும் சூலைநோய். சூலை= குத்தல்; சூல்த்தன்> சூ(ல்)த்தன்> சூத்ரன்= சூலத்தைக் கையில் வைத்த மாந்தன். பின்னால் சூத்ர வருணத்தாரைக் குறிக்கும். 

இதுபோல் கத்தி வைத்தோர் கத்தியர் என்ப்பட்டார். பின்னால் கத்தியர்> கத்ரியர்> க்ஷத்ரியர் என்று வட இந்தியாவில் திரியும்; இன்னொரு வகையில் வில் வைத்திருந்தோர் வில்> விற்றை> வித்தை> விச்சை> விச்சையர்> விசையர்> வைசியர்= வணிகர் என்று அறியப் பட்டார். குடிப் பெருமானர் ப்ராமணர் ஆனார். பெருமானர், கத்தியர், விசையர், சூலத்தர் என்பவை பழங்குடி வாழ்க்கையில் இயல்பான கருவித்தொழில் பெயர்கள். இவற்றை வருணமாக்கியது ஆரியர் வழிப் புரிதல்.
 
இனி வேறு சொற்களைப் பார்ப்போம். சுள்ளுச் சுள்ளு, இரட்டைக் கிளவியாகி குத்தல், உறைத்தலைக் குறிக்கும் சுள், சுளீரெனத் தனித்தும் நிற்கும்; சுரீர் என்றும் திரியும். சுள்ளெனக் கடிக்கும் எறும்பு சுள்ளெறும்பு ஆகும். சுள்ளெனக் குத்தும் எறும்பும் கொசுவும் சுள்ளான் எனப்பட்டன. சுள், உறைப்பெனும் பண்புப் பெயரையுங் குறிக்கும். சுள்= கருவாடு. சுள்ளக்கம் = வேர்க்குரு, சினம்; சுள்ளம்  மலையாளத்திலும் உண்டு. சுள்ளப்பு= உறைப்பு சுள்ளை, சூளை, காளவாயைக் குறிக்கும். சுளிதல்> சுளித்தல்= சினத்தல்; சுளுந்து> சுழுந்து= தீப்பந்தம்; சூள்= தீப்பந்தம். சூளுரை= தீப்பந்தம் பிடித்து ஓங்கியுரைத்தல். நாளா வட்டத்தில், கருத்தை ஓங்கியுரைப்பதற்கும் பெயரானது.  சுள்ளி= விறகுக் குச்சி; சுள்ளிடுதல்= உறைத்தல்; சுள்ளிவிறகு= காய்ந்தவிறகு. சுள்ளு= வெப்பம், உறைப்பு. நரம்பு பிரண்டு,  பிசகிப் போகையில் சுள்ளென வலிப்பதால் ”சுளுக்கல்” பிறந்தது.

சுள்+கு= சுட்கு>சுக்கு= வறள் மஞ்சள்; சுக்கல்= வறளல். சுள்ளு>சுளு= வெப்பம். ளகரம்/ழகரம் டகரமாவது தமிழிய மொழிகளில் உள்ள பழக்கம். காட்டாய், சோழமண்டலம் ஆந்திரத்தில் சோடமண்டல என்றாகும். இன்னும்வடக்கில், சோரமண்டலாகும். ஆங்கிலத்தார் coramandal என்பார். இம்முறையில் சுளுவது சுடுவதாகும். சுட்டது, சுடப்ப.ட்டது என்றசொற்களை உருவாக்கும். சுடல்= வெப்பத்துள் இடல், வறளவைத்தல். இது சூடென்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். இந்தையிரோப்பிய heat இதோடு தொடர்புற்றது. இந்தை யிரோப்பியன் சொற்கள் பலவற்றை இங்குசொல்லலாம். நம்பத்தான் பலர் தயங்குகிறார். சூடு/நெருப்பு உறைக்கும். உடம்பு உறும்/உறைபடும். சூடு>சூடன் = கருப்பூரம்  சுடல்= காய்தல். சுடர்= ஒளி. சுடலை= சுடுகை, சுடுகாடு. சுட்கான்>சுக்கான்; சுள்>சுண்>சுண்ணம்> சுண்ணாம்பு= இயல் சங்கைச் [ca(OH)2]ச் சூடேற்றிப் பெறுவது  quick lime எனப்படும் CaO. 

சூட்டின் வளர்ச்சி சூர்.  சுல்>சுள்>சுர்>சுரண்டு= குத்தித் தோண்டுவது. சுர்>சுரணை= குத்துணர்ச்சி. சுரத்தும் இதே. சுர்>சுரம்= வெப்பநிலம் / பாதை. குறிப்பாய் இராயலசீமை. சங்க இலக்கியப் பாடல்களில் பாதி பாலைத் திணையே. வெப்பமிலாத் தென்னகம் உண்டோ? சுரங்கொண்டவர் சுரன்>சூரன். சுள்>சுர்>சூர்= கடுப்பு, கொடுமை, நோய், சூர்>சூரன்>சூரியன்.  சூரன்= கதிரவன், நெருப்பு; சூரி= ஞாயிறு; சூரசூதன்= கதிரவனின் தேரோட்டியாகிய அருணன்; சூரிக் கத்தி கூர்ங்கத்தி. சூர்+அன்= சூரைக் கொண்டவன். சூர்+இயன் = சூர் பொருந்தியவன். இயல்தல்= பொருந்தல். இன்னொரு வகையில் வடமொழியில் அவரியல்பின் படி சூரன், சூர்யனாகும் அது திரிந்து சூரியனென்று தமிழில் எழுதப்படும். ஒருவகை நேரடித்தமிழில் எழுவது. இன்னொன்று ”சூரன்” வடமொழிக்குப் போய் மீளவருவது. இரண்டின் முடிவும் ஒன்றுதான். ”ஒரு கண்ணால் மட்டுமே பார்ப்பேன், இன்னொரு கண்ணால் பாரேன்” என்பவரை நாமென்ன செய்ய? சூரியன் வடமொழியென்போர், நான்கூறிய பல சொற்களையும் என்னசெய்யச் சொல்கிறார்? தூக்கி எறிந்து விடுவோமா? இவையெலாம் தமிழெனில் சூரியனும் தமிழ்தான்.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

இ.பு.ஞானப்பிரகாசன் said...

ஆகா!... ஆகா!!... ஆகா!!!... சூரியன் எனும் சொல்லின் தமிழ்மையை விளக்கத் தொடங்கி எத்தனை சொற்களை அருவியாய்ப் பொழிந்து விட்டீர்கள் ஐயா! அற்புதம்! அற்புதம்!! சுள்ளெனும் ஒரு வேர்ச்சொல்லில்தான் எத்தனை எத்தனை தமிழ்ச் சொற்கள்! அதுவும் அத்தனையும் வெப்பத்தையும் அதன் விளைவான குத்துதலையும் சுட்டுகின்றன! தமிழின் வேர்ச்சொல் வளம்தான் எப்பேர்ப்பட்டது. இப்பேர்ப்பட்ட கட்டுரையில் சிறியேனான என்னையும் குறிப்பிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா!

கதிற் கோ said...

அருமை

அருண் said...

அருமையான தகவல்