Friday, November 02, 2018

தூங்கெயில் - 5

கோட்டையென்பது கோட்டில் விளையுஞ் சொல். வலிய, உயர்ந்த, வளைந்த சுவர் கொண்ட தனியாள் பரப்பான கோட்டையை அரணென்றுஞ் சொல்வர். (வளைத்துக் கட்டப்பட்டது வட்டாகி, தென்கிழக்கு ஆசியா எங்கணும் இன்று கோயிலை wat என்பர். நம் தமிழுறவு இதனுளிருக்கிறது. வாட்டைப் போன்றே நாம் கோயிலைக் கோட்டம் என்போம்.) உரத்தன்> அரத்தன்> அரத்யன் என வடக்கே திரிந்து, ராத்யன்> ராஜ்ஜன்> ராஜன்> ராசன்> அரசன்> அரயன் என்றாகும். (இச்சொல்லைப் பொறுத்துப் பாவாணரிடமிருந்து நான் கொஞ்சம் வேறுபடுவேன். வடநாட்டுச் சங்கத, பாகத ஊடாட்டம் இதில் கண்டிப்பாய் உள்ளதாகவே நான் உணர்வேன்.) சிலம்பின் 29 ஆம் காதையில் ”உரவோன்” வருவதைக் காணலாம். உரவோனும் உரத்தனும் ஒரே பொருள் கொண்டவை. உரவும், அரணும் வலுவைக் குறிக்கும். ”அரண்” பாதுகாப்பையுங் குறிக்கும். அரள்தல் என்பது ஒருவர் வலுவால் மற்றோர் பெறும் அச்சங் குறித்தது. மாற்றார்க்கு அச்சம், அரசனுக்குக் காப்பு. (தமிழிற் பல சொற்கள் இது போல் தான் ஈரஃகு வாட்களாகும் - double edged swords அஃகு, விளிம்பு, ஓரம், முனை = edge, corner என்ற சொற்களையும் இத்தொடர்பில் கவனியுங்கள்.)

அரணுக்குள் அரசனின் மனை அரண்மனையாகும். கோட்டையை மட்டுமின்றி அதன் சுவரையும் அரண் என்ற சொல் குறித்தது. கோட்டை, கோட்டமுமாகும். மதிலுள்ள கோயில்களும் மக்கள் வழக்கிற் கோட்டமாகும். (இன்றைக்கும் வட சென்னையிற் கந்தகோட்டம் உண்டு.) இலக்கியம் விவரிக்கும் அகப்பா, அரணம், அல், ஆரம், இஞ்சி, உக்கடம், உவளகம், எயில், ஓதை, கடகம், கதவம், காப்பு. கொற்றம், சாலம், சிறை, ஞாயில், நொச்சி, புதவம், புரிசை, பெருகாரம், மாடம், வாயில், வாரி, வேணகை, வேதி, வேலி எனும் கோட்டை உறுப்புக்களை நாம் முழுதும் அறிந்தோமில்லை; குழப்பமுங் கொள்கிறோம்.

பொ.உ.1250 களின்பின் நிலவிய வெளியாட்சியில் தமிழ்த்தொடர்ச்சி குலைந்து, சங்கநூல் படிக்க ஆட்கள் அருகி, உரைகாரர் எழுந்தார். (புரிதல் குறையுங் காலத்தில் தான் புத்துரை என்பது எழும்) தமிழ் மூலங்களுக்குச் சங்கதச் சொற்களும், எடுநூல்களும் (reference) சார்ந்தே விளக்கஞ் சொன்னார். விசயநகரப் பேரரசில் தமிழாட்சி குறைந்தது. (அதன் தாக்கம் இங்கு மட்டும் ஏற்படவில்லை. தென்கிழக்கு ஆசியா நோக்கிய தமிழர் நகர்ச்சியிலும் கூட, மேலையர் வரும் வரை தமிழ் மூலம் விளக்கம் சொல்வது  நின்று போனது. விசயநகர ஆட்சிக்கு அப்புறம் தமிழர் கடலிற் செல்வது அருகிப் போனது. மீண்டும் மேலையர் காலத்திற்றன் இது திரும்பியது.) கோட்டை உறுப்புக்களின் தமிழ்ச்சொற் புழக்கம் குறைந்ததால், ”தூங்கெயில்” என்பது யாருக்குப் புரிந்தது சொல்லுங்கள்?

படித்தோர் மொழியாய்ச் சங்கதம் ஆயினபின் தமிழ் என்பது தாழாது போமோ? (இன்றோ படித்தோர் மொழி ஆங்கிலம். இதன் தாக்கத்தை இன்னும் 100 ஆண்டுகளில் உணர்வோமா? தமிழின் எதிர்காலம் என்ன?) மதில், அரணெனச் சில சொற்களாற் பேர்பண்ணி, உப்பிற்குச் சப்பாணி ஆடுகிறோம். பல்துறையறிஞர் பலரும் சங்க இலக்கியத்தை ஆய்வதில்லை. பல தமிழறிஞரும் கூட உரைகாரர் சொல்லை அப்படியே மேடையிற் பரட்டும் கிளிப்பணி மட்டுமே போதும் என்கிறார். (Are they just conservators, record-keepers and not researchers?) அகரமுதலிகளில், 2-ஆம் நிலைப் பொருளை மட்டுமே பதிகிறார். விளக்கமறியச் சங்கதம், ஆங்கிலத்திற்கே நாம் போகவேண்டியுள்ளது. இதற்கு மாறாய்க் ”கோட்டையும் அதன் உறுப்புக்களும்- சங்க இலக்கியப் பார்வை” என்றோர் தமிழாய்வு நூல் என்றைக்கு எழும்? சொல்லுங்கள். 

கோட்டையை அணுகையில் முதலில் அமைவது மிளைக்காடு. அதனுட் புகுந்த பின், முதலைகள் புரண்டசையும் அகழி. கோட்டைக்குத் தக்க, இதன் அகலமும் ஆழமும் வேறுபடும். அருத்த சாற்றம் ஒரு கோட்டைக்கு 3 அகழிகளைச் சுட்டும். அகழ்ந்த மண்ணைக் குமித்து மேடாக்கிய கோட்டை மேட்டிற் (இதை rampart என்பர்; இம்மேட்டைக் குறிக்க அலங்கமென்ற சொல்லும் தமிழில் உண்டு. அல் = மதில். அல்+அங்கம் = மதிலிருக்குமிடம். இன்றுந் தஞ்சாவூர்க் கோட்டை மேட்டை இப்பெயரால் அழைப்பர்.) கோட்டைச் சுவரைக் கட்டி, முட்செடி, நச்சுக் கொடிகளை அம்மேட்டில் வித்தி, மாற்றாரை அணுகவிடாது செய்வர். செம்பாறாங்கல், கருங்கல் என அடுக்கிச். சேறு, (சங்கு, சிப்பி, கிளிஞ்சல்களாற் செய்த) சுண்ணப்பொடி, முட்டையோடு, கடுக்காய்த் தூள், வெல்லம் பிரிவதால் தேங்கும் கருப்பஞ் சாறு (molasses), இயற்கைப் பிசின் போன்ற பல்வேறு பொதிகள் (bodies) கலந்த சாந்தைப் பூசிக் கோட்டைச் சுவரைக் கட்டுவர். (இதே செம்பாறாங்கல், இதே சாந்தை நான் கம்போடியாவில் பார்த்தேன். அசந்து போனேன். நண்பர்களே! கம்போடியாவைக் கட்டாயம் போய்ப் பாருங்கள். நம்மூர்த் தொடர்பு அங்கு எக்கச்சக்கமாய் உள்ளது. ஆனால் அதை ஒழுங்காய் விளக்கிச் சொல்ல நம்மிடம் ஆட்கள் இல்லை. தமிழை அம்போவென ஒதுக்கி மீள மீளச் சங்கத வழி தான் பலரும் விளக்குகிறார். தென்கிழக்கு ஆசியாவில் உள்ளது தமிழின் தாக்கமே. அத் தமிழ் அடிப்படை மேல் சங்கதம் குந்திக் கொண்டது; குந்தியது வென்றது.:-()

இக்கோட்டைகளின் உறுதி அறியும்படி, மேற்சொன்ன சாந்தின் பொதிவு (composition), செய்மானம் (procedure) போன்றவற்றை இற்றை அறிவியல் கொண்டு சோதித்துப் பதியாது, மரபுசார் நுட்பங்களைத் தொடர்ந்து தொலைத்த வண்ணம் நாமுள்ளோம். [இந்நுட்பங்களை வைத்து நம்மூர் வெதணத்திற்குத் (climate) தக்கக் குறைச்செலவில் ஏராளம் வீடுகளைக் கட்ட இயலுமே?] இச் சாந்தால் மதிற்சுவர் கட்ட, ஈரம் இய்ந்து (<இழுந்து = உள்வாங்கி) இறுகி, இ(ய்)ஞ்சியாகும். [வளைந்த மதிற்சுவரைக் (கொடு+இஞ்சி=) கொடிஞ்சி என்றும் அழைப்பர். பழந்தேர்களில் தலைவன் நிற்கும் பெருந் தேர்த்தட்டையும், பாகன் நிற்கும் சிறு தேர்த்தட்டையுஞ் சுற்றி மதில்போற் கட்டப்படும் மரச் சுவரையும் கொடிஞ்சியென்றே அழைப்பர்.] நீரின்றி இய்ந்திறுகிய இஞ்சி வேருக்கும் இதே இய்யுங் கருத்துத் தான்.

கோட்டைப் பரப்பும், மதிலும், வாயில்களும், உருளைத் (cylinderical) துருக்குகளும் (turrets), (துருக்குகளின் மேல் அமையும்) எயில் மாடங்களும், கோபுரங்களும் சேர்ந்தது கோட்டையாகும். துருக்குகள் வட்டமாயன்றிச் சதுர, செவ்வகக் குறுக்குத் தோற்றமுங் கொள்ளலாம். புவியில் வெளிவந்து புறத்தெற்றும் (to project) துருக்கும் (=துருத்தும்) கூண்டைத் துருக்கென்பார். (சொற்பிறப்புத் தெரியாது இதைச் சங்கதமென்பார் நம்மூரில் உண்டு. புறத்தெற்றும் துருக்குகள் கொண்ட வேதியற் திணைக்களத்தைக் - chemical plant - கட்டும் போது புறத்தெற்று - project - என்று அழைக்கக் கூடாதோ?) துருக்கின் மேல் குவித்து மூடின், குல்> குல்வு> குவ்வு> குவு> கூ என முன்னொட்டாகி, புரமெனும் கட்டடச் சொல்லோடு கூபுரம்>கோபுரமெனும் புதுச்சொல்லெழும். கூ, கூம்பு, கூடம் ஆகியவை சங்ககாலச் சொற்களாகும். கோபுரம் சங்க காலத்தின் பின்னால் எழுந்தது. கோபுரத்திற்கும் அரசருக்குந் தொடர்பில்லை. (இருப்பதாய் நானும் ஒரு கால் நினைத்தேன். கோபுரம்- விமான வேறுபாடு தெரியாதோர் நம்மில் பலருண்டு. கோயிற் கட்டுமானம் பற்றியறியப் பார்க்க:

http://valavu.blogspot.in/2013/10/blog-post.html)

கோபுர/விமானங்கள் (3,5,7,9,11,13 என எண்ணிக்கையிலான) இடைமாடத் தொகுதியோடும், தலைமாடத்தோடும் ஆனவை. (சங்கதத் தாக்கத்தில் தாவதியர்/ஸ்தாபதியர் தலைமாடத்தைச் சிகரமென்பர். (கோயில்கள் எலாம் நம்முடையன. கோயில் கட்டப் பயனாகும் சிற்பநூல்கள் எல்லாம் சங்கதத்தில் என்று காலஞ்சென்ற பேரா.தமிழண்ணல் மனம் வருந்திச் சொல்வார்.) தமிழர்/திராவிடர் கட்டுமானங்களில் இடைமாடத் தொகுதி சதுர, செவ்வகக் கூம்புகளின் கூர்ப்பு வெட்டிய கூடமாகும் (frustum of a square or rectangle pyramid). (மாட மாளிகை, கூட கோபுரம் - பலரறிந்த சொல்வழக்காறு. கூம்பு/கூடத்தின் அடிப்பரப்பு வட்டம், சதுரம், செவ்வகமாகலாம்.). இக்கூடமும் hall-கூடமும் வெவ்வேறானவை. வடவர் கோபுரங்களில் கூடம் வேறாகக் காட்சியளிக்கும். விமான/கோபுரத் தலைமாடம் அரைக் கோளம்  (hemispherical) ஆகவோ, அன்றிக் காற்கோளத்தோடு அரையுருளை சேர்ந்தோ (1/4 of sphere+half-cylinder. இதற்கு யானைமாடமென்று பெயர்.) அமையலாம். தலைமாடத்திற் கலசங்களைப் பொருத்தி, கோட்டைக் கொடிகள் அவற்றோடு சேர்த்துக் கட்டப்படும். யானை மாடம் போலவே, கருவறைகளில் கனச்செவ்வகத்தோடு, அரையுருளை சேர்ந்ததை கயப்புட்ட> கஜப்ருஷ்ட வடிவென்று சங்கதத்தில் ஒலிப்பர். நம்மூர் கட்டிட அடவுச் சிந்தனையில் யானையொப்பீடுகள் இப்படிப் பெரிதுமிருந்தன. யானையோடு சேர்ந்து வளர்ந்தவர்க்கு வேறெப்படித் தோன்றும்?
       
அம்பு/ஈட்டி எறிவதற்குத் தோதாய்த் துருக்குச் சுவரின் பல மட்டங்களில் துளைகள் உண்டு. கோட்டையின் வாய்+இல் (gate house) வாயிலாகும். கோட்டைக்குப் பல வாயில்கள் இருக்கலாம். பாதுகாப்பைப் பொறுத்து ஒவ்வொன்றும் கோட்டை வலுவைக் குறைக்கும். உள்ளிருக்கும் மக்களுக்கோ புழங்கும் வாய்ப்புக்களைக் கூட்டும். வாயிலை gate ஆய்ப் புரிந்து கொள்வோரே மிகுதி. வாயிலிற் கதவுண்டு. கடந்து செல்வது கடவு>கதவு = gate ஆகும் (இன்னொரு பக்கம் அதுவொரு அடைப்பு.) வாயிலைக் gate house ஆகப் புரிந்து கொள்வதே சரி. [தமிழிய, இந்தையிரோப்பிய மொழிகளுக்கிடை ஆயிரக் கணக்கில் இணைச்சொற்கள் உண்டு. இவற்றை ஆங்காங்கு என் கட்டுரைகளிற் சொல்வதே எனக்குப் பொல்லாப்பு ஆகிறது. ஆங்கில ஓசையில் சொல்படைப்பதாய் அவதூறு வேறு. வில்லியஞ்சோன்சு, மாக்சுமுல்லர், மோனியர் வில்லியம்சு தாசருக்கு முன் ஏழைசொல் அம்பலம் ஏறுமோ?] வாயிற் கதவிற்குள் சிறு புதவும் இருக்கலாம். புகுவது புதவு. gate within a gate. புகல்=port. passport=புகற்கடவு. இது தவிர முகன வாயிலுக்கு முன்னுள்ள தூக்குப் பாலத்திற்கும் அப்பால் பாலத் தொடக்கில் முக மாளிகையின் வாயிற் புகு வழியை அடைப்பதாய் மேலிருந்து கீழிறக்கும் வண்ணம் ஈட்டிகளாற் செய்த சட்டக் கதவுண்டு (portcullis). 

அன்புடன்,
இராம.கி.

No comments: