Tuesday, September 19, 2023

தமிழில் நுல்லியத்திலும் (million) பெரிய எண்கள்

 iLangoo pitchandi  என்பவர் ”மில்லியன், பில்லியன், டிரில்லியன் போன்ற சொற்களுக்குச் சமமான தமிழ்ச் சொற்கள்!” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை  அவரின் முகநூல் பக்கத்தில் இட்டிருந்தார். 

-------------------------------------------------------------------

1995ஆம் ஆண்டிலேயே மேற்கூறிய ஆங்கில எண்ணுப் பெயர்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கினேன். எட்டு  ஆண்டுகளுக்கு முன்பு நான் உருவாக்கிய தமிழ் சொற்களை இணையத்தில் கூகுளில் ஒரு நண்பர் சேர்த்திருந்தார்.

மில்லியன் = எண்ணம் 

பில்லியன் = இரட்டம் 

டிரில்லியன் = மூவகம் 

குவாட்ரில்லியன் = நாவகம் 

குவின்டில்லியன் = ஐவகம்

செக்ஸ்டிலியன் =  அறுவகம் 

செப்டில்லியன் = எழுவகம்

ஆக்டிலியன் = எண்மகம்

நானில்லியன் = தொட்டகம் 

டெசில்லியன் = பத்தகம்.

undecillion = பதினொன்றகம் 

duodecillion = பன்னிருவகம் 

இப்படியே தொடரும். தமிழ்த்தொண்டு என்றால் இதுதான்! தமிழ் தமிழ் என்று போலியாகக் கூச்சலிட்டுக் கொண்டு இருக்கும் குட்டி முதலாளித்துவக் கபோதிகள் இச்சொற்களை மக்களிடையே பரப்புவார்களா? ஒருநாளும் செய்ய மாட்டார்கள்! பெ மணியரசன் உயிரோடு இருக்கிறாரா? இருந்து என்ன பயன் என்கிறீர்களா? தமிழ் தேசியம் பேசும் தற்குறி சீமானுக்கு இதெல்லாம் ஏதாவது புரியுமா? செக்ஸ்டிலியன் என்பதற்கு அறுவகம் என்று தமிழாக்கி இருக்கிறேன். செக்ஸ்டிலியன் என்றால் சீமானின் அகராதியில் என்ன பொருள்? தமிழை நான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று என்னால் தலைநிமிர்ந்து சொல்ல முடியும்.எத்தனை பேரால் இப்படிச் சொல்ல முடியும்?

*************************************************

இனி, இராம.கி. யின் மறுமொழி: 

நண்பர் சிலர் மேலேயிருக்கும் இந்த இடது சாரியார் இடுகையின் உடைய சுட்டியையை எனக்குக் காண்பித்திருந்தார். வேறு பொழுதுகள் எனில் இது போன்ற அரைகுறை இட்டிகையை படித்து நகர்ந்திருப்பேன். ஆனால் வசவும் சூளுரையும் பொதிந்த இக்கட்டுரையைப் பார்த்தவுடன், ”விடைதராது நகரக் கூடாது” என்று தோன்றியது. என் விடையை ”வளவில்” இட்டு, அதன் சுட்டியை என் முகநூல் பக்கத்தில் ஒரு தனி இடுகையிலும், அவர் பக்கத்தில் முன்னிகையாகவும் கொடுத்துள்ளேன். கீழே வருவது என் மறுமொழி.

_____________________________________

நண்பரே! யாரோடு கத்திச் சண்டை போடுகிறீர்? - எனப் புரியவில்லை. நான் உம் எதிரி அல்ல. குட்டி முதலாளித்துவக் கபோதி  (கண்போகி> கண்போதி> கம்போதி> கபோதி= குருடன்) எனும் வசவைக் கண்டபின் சும்மாயிருக்கத் தோன்றவில்லை. முதலில் திருக்குறளில் வருவதை நினைவு கொள்க. 

யாகாவார் ஆயினும் நா காக்க. காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.  

ஒரு மார்க்சீயருக்கு இவ்வளவு ஆற்றாமையா? தமிழ்த் தேசியரான திரு. மணியரசனையும், திரு. சீமானையும் நாலாந்தர மொழியில் அவதூறு பேசும் தேவை உமக்கிருப்பின் வேறு இடுகையில் அதைச் செய்துகொள்க. ஒரே இடுகையில் என்னையும் அவரோடு இணைத்துப் பேச முயல்வது ஏனென எனக்குப் புரியவில்லை. உமக்கு முள்ளாய் நானிருந்தேன் போலும். சில நண்பர் உம் இடுகையில் என் பெயரைக் கனிவாய்க் கூறி எனை உசுப்பியதால் உந்தப்பட்டு, இங்கு வந்தேன்.

1995 இலேயே சில எண்ணுப் பெயர்களுக்கான தமிழ்ச் சொற்களை நீர் பரிந்து உரைத்திருந்தால் அதற்கு என் பாராட்டு. அதே பொழுது, எந்தக் காலத்தில் என் பரிந்துரைகளைச் செய்தேன் என உரைத்து உம்மோடு குழாயடிச் சண்டை போடும் தேவை எனக்கில்லை. நீரோ அல்லது நானோ தமிழைத் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றுவது போல் வேயம் (வேசம்) கட்டவும் வேண்டாம். 

இதுவரை நான் பரிந்துரைத்த ஆயிரக்கணக்கான சொற்களை மட்டுமே  எல்லோரும் பயில வேண்டுமென எங்கும் நான் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டேன். எது நிலைக்குமோ அது நிலைக்கட்டும். எது அழியுமோ அது அழியட்டும். தமிழுக்கென உருவான, கொம்பு முளைத்த, மொழி ஆணத்தி (authority or commissar) நானல்லன். சட்டாம்பிள்ளைகளுக்கும் எனக்கும் என்றும் ஒத்துக் கொள்ளாது. எப்போதும் ஏழரை நாட்டுப் பொருத்தமே. உம் பதிவின் மூலம் ஒரு சட்டாம்பிள்ளையாய் உமைக் காட்டிக்கொள்ள முயல்வதால் உமை நான் மறுக்க வேண்டியுள்ளது. இனி உம் முன்னிகைக்கு வருவோம்.  

நீர் பரிந்துரைத்த எண்களை வைத்து ஒரு சில வாக்கியங்களை எழுதிப் பார்க்கலாமா? பொருத்தம், பொருந்தாமை அதில் தெரிந்து விடும். முதலில் மில்லியனுக்கு நீர் பரிந்துரைத்ததை வைத்து ஒரு தொடர் எழுதிப் பார்ப்போம்.. 

--------------------------

முதல் வாக்கியம்: “இவ்விரண்டு எண்களையும் கூட்டினால்  4 எண்ணம் (million) வருமோ?” என்ற எண்ணம் (thought) எனக்கு எழுந்தது”. 

வெவ்வேறு பொருள்கள் கொண்ட ஒரே சொல் 2 முறை வாக்கியத்தில் வரின் குளறுபடியாகிறதே? உம் பரிந்துரையின் பொருந்தாமை புரிகிறதா?  பிறைக் கோட்டுள் ஆங்கிலம் இன்றேல் இவ்வாக்கியம் படிப்போருக்குப் புரியுமா?  

அடுத்தது பில்லியன் பற்றிய கேள்வி: ”இரட்டம்” என்ற சொல் எதைக் குறிக்கிறது ? 2 மில்லியனா? அல்லது  இராட்டிர கூடரின் பெருநிலப் பகுதியா? > அல்லது  ”இரட்டியது” என்று பொருள்படும் இரட்டைக் கிளவியா? 

தமிழில் ”ஒரே மாதிரி முன்பகுதி இருந்து ஈறு மட்டும் மாறுபடும் சொற்கள்” பலவுண்டு. அம் எனும் ஈறுபெற்ற சொற்களும் ஐ  ஈறு பெற்ற அதே வகைச் சொற்களும் பெரும்பாலும் ஒரே பொருளில் அமையலாம். ”இரட்டம்” என்பதன் பொருந்தாமை புரிபடுகிறதா? இனி 3 ஆவதாய் டிரில்லியனைக் காண்போமா? 

மூவகம் என்றால் 3 வீடுகளா? 3 தேசமா? அகமெனில் மில்லியமா? இல்லியமா. இல்லியமெனில் ”ஒன்றும் இலாதது” என்று பொருளாகுமே? அகத்திற்கு ”மில்லியன் எனும் பொருளுண்டா? எந்த ஆவணத்தில் அப்படி வருகிறது?

நாலாவது குவாட்ரில்லியன். நாவகமெனும் பரிந்துரையில், நாவெனில் நாலா? எங்கு சொல்கிறார்? ”நால்வெ”னில் நாலு, நான்கு, நான்மம் என்பனவற்றோடு தொகுதியாகும். அதென்ன நாவு? வாயில் தொங்கும் சதையா? நாவு = 4 என்று, 70 ஆண்டுகளுக்கு முன் 1953 இல் திண்ணைப்பள்ளியில் எமக்குச் சொல்லிக் கொடுக்கவில்லையே? அகத்திற்கான எண்ணிக்கைப் பொருளை எந்தத் தமிழ் நூலில் தேடினும் காணவில்லை, 

அப்புறமெப்படி ஐவகம், அறுவகம், எழுவகம், எண்மகம், தொட்டகம், பத்தகம், பதினொன்றகம், பன்னிருவகம் - என்று தொடர்வது? உங்களின் முதல் 4 சொற்கள் இடுகுறியாகவே தென்படுகின்றன.

இந்த எண்களை தமிழாக்கு முன், இரோப்பிய, அமெரிக்க, இங்கிலாந்தின் பயன்பாட்டு அடிப்படைகளைச் சற்றே அறிந்துகொள்க.  இங்கிலாந்தின் தொடக்கப் பயன்பாட்டில் பில்லியன் = 10^6*10^6 என்றும், அமெரிக்காவிலும் இரோப்பாவிலும் 10^3*10^6 = 10^9 என்றும் பொருளாகும்.இப்போது பலரும் அமெரிக்க முறைக்கு மாறுகிறார், இங்கிலாந்திலும் கூட இப்போது மாறுகிறது. 

கீழ் வருவதை  (https://en.wikipedia.org/wiki/Billion) விக்கிப்பீடியாவிலிருந்து எடுத்து, ஓரிரு பத்திகளை வெட்டி ஒட்டினேன். முழுதும் காண, விக்கிப்பீடியா அணுகுக.  

Billion is a word for a large number, and it has two distinct definitions:

1,000,000,000, i.e. one thousand million, or 10^9 (ten to the ninth power), as defined on the short scale. This is its only current meaning in English.

1,000,000,000,000, i.e. one million million, or 10^12 (ten to the twelfth power), as defined on the long scale. This number, which is one thousand times larger than the short scale billion, is now referred to in English as one trillion. However, this number is the historical meaning in English for the word "billion" (with the exception of the United States), a meaning which was still in official use in British English until some time after World War II.

American English adopted the short scale definition from the French (it enjoyed usage in France at the time, alongside the long-scale definition).The United Kingdom used the long scale billion until 1974, when the government officially switched to the short scale, but since the 1950s the short scale had already been increasingly used in technical writing and journalism. 

இனித் தமிழுக்கு வருவோம். mill இற்கு அயிர/ஆயிர என்பது போக நுல் என்றும் தமிழில் சொல்லலாம். நுல்லில் பிறந்த சொற்கள் பலவுண்டு. நுல் என்பது நுணுகு, நூகு எனப் பல சொற்களுக்கும் வேராக அமையும். மகர நகரப் போலி பற்றி முன்னால் என் கட்டுரைகளில் சொல்லியுள்ளேன்.

10^3*10^3 என்பதில் முதலில் வரும் 10^3 ஐ mill என்றும் பின்னால் வரும் 10^3 ஐ ion என்றும் கொண்டு அமெரிக்க முறையில் million என்பார். million எனும் எண் தொகுதியை நுல்லியம் என்றே தமிழிலும் சொல்லலாம். 

இனி (10^3*10^3)*10^3 ஐயை bill-ion என்றார். 10^9 ஐத் தான் இரு நுல்லியம் என்கிறோம். (ஏற்கனவே நெய்தல் (10^5), இலக்கம் (10^5), குவளை(10^7), கோடி (10^7), ஆம்பல் (10^9), சங்கம் (10^12), தாமரை (10^13), வெள்ளம் (10^14) என்ற எண்கள் சங்க நூல்களில் உண்டு). 

இரு நுல்லியம் என்பதைப் பழகப் பழக ஈ(ர்)- நுல்லியம் எனலாம். அதுபோல் (10^3*10^3*10^3)*10^3 என்பதை trill-ion (மூ- நுல்லியம் எனலாம். பழகப் பழக மூ-நுல்லியம் மூநுல்லியம் ஆகலாம். மொத்தத்தில், நுல்லிய மடங்குகளாய்,

இரு நுல்லியம் (billion) அல்லது ஈநுல்லியம், 
மும்ம நுல்லியம் (trillion) அல்லது மூநுல்லியம். 
நால்ம நுல்லியம் (quadrillion) அல்லது நானுல்லியம், 
ஐம நுல்லியம் (quintillion) அல்லது ஐநுல்லியம், 
அறும நுல்லியம் (sechstiliion) அல்லது அறுநுல்லியம், 
எழும நுல்லியம் (septillion) அல்லது எழுநுல்லியம், 
எண்ம நுல்லியம் (octillion) எண்ணுல்லியம், 
தொண்ம நுல்லியம் (nanillion) அல்லது 
தொண்ணுல்லியம் என்றே பழகலாம். 

பன்மடங்கு நுல்லியத்தை (zillion) பன்நுல்லியம் அல்லது பன்னுல்லியம் என்றே சொல்லலாம்.


Saturday, September 09, 2023

excavators and bulldozers,

 Poclain and JCB are brand names of excavator manufacturers. In India, these brand names have become synonymous with excavators, similar to how people in some countries refer to all photocopying machines as Xerox machines. 

தமிழிலும் அதே தவற்றைச் செய்யவேண்டுமா? பொரிம்புகளுக்கு (brands) பெயரிடுவதைத் தவிருங்கள். சரியாகச் சொன்னால், excavator -உக்குத் தான் தமிழ்ச்சொல் வேண்டும். ”கவ்வெடுப்பி” என்று சொல்வது இதைச் சரியாகக் காட்டும். 

அடுத்தது bulldozer இதை crawler என்றும் சொல்வர். A bulldozer or dozer (also called a crawler) is a large, motorized machine equipped with a metal blade to the front for pushing material: soil, sand, snow, rubble, or rock during construction work. It travels most commonly on continuous tracks, though specialized models riding on large off-road tires. 

bull (n.1) "male of a bovine animal," c. 1200, bule, from Old Norse boli "bull, male of the domestic bovine," perhaps also from an Old English *bula, both from Proto-Germanic *bullon- (source also of Middle Dutch bulle, Dutch bul, German Bulle), perhaps from a Germanic verbal stem meaning "to roar," which survives in some German dialects and perhaps in the first element of boulder (q.v.). The other possibility [Watkins] is that the Germanic word is from PIE root *bhel- (2) "to blow, swell." 

bull என்பதை பாறல், புல்லம், பாண்டில், மூரி, ஏறு, பூணி, இறால், பெற்றம், எருது, சே, விடை, இடபம் போன்றவை தமிழில் ஆண் மாட்டைக் குறிக்கப் பயனுறும்  என்று திவாகர நிகண்டு சொல்லும். நாம் புல்லு, புல்லம் என்ற சொற்களை bull-இற்கு ஈடாய்ப் பயன்படுத்தலாம். 

doze = தாட்டு-தல் = அடித்து வீழ்த்தல். ”தாட்டி விடுவான், தாட்டி” இன்றும் வழக்கில் இருக்கும் சொற்றொடரே.  

எனவே bulldoze (v.) புல்லத் தாட்tடு; bulldozer = புல்லத்தாட்டி 

by 1880, "intimidate by violence," from an earlier noun, bulldose "a severe beating or lashing" (1876), said by contemporary sources to be literally "a dose fit for a bull," a slang word referring to the intimidation beating of black voters (by either blacks or whites) in the chaotic 1876 presidential election. See bull (n.1) + dose (n.). The bull element in it seems to be connected to that in bull-whip and might be directly from that word. The meaning "use a mechanical ground-clearing caterpillar tractor" is from 1942 (see bulldozer); figurative use in this sense is by 1948. 



Wednesday, August 30, 2023

Metro

அண்மையில் metro விற்கு  ஈடாய்த் தமிழில் என்ன சொல்லலாம்? - என்ற கேள்வி இணையத்தில் எழுந்தது. metro என்பது metropolis ஐயும், metropolitan ஐயும் சுருக்கிச் சொல்வதாகும். A metropolis is a large city or conurbation which is a significant economic, political, and cultural area for a country or region, and an important hub for regional or international connections, commerce, and communications. தமிழில் metropolis ஐப் பெருநகர் எனலாம். (மாநகர் என்பது corporation. அதனிலும் பெரியது பெருநகர். தமிழ்நாட்டில் பல்வேறு மாநகரங்களின் நடுவில் பெருஞ்சென்னை மட்டுமே பெருநகராகும்.  

பிரித்தனின் தலைநகரான இலண்டன், பெருநகரான போது Euston பகுதியில் இருந்த பேடிங்க்டன் (Paddington) இருவுள் தட முனையத்தையும் (Railway terminal), அரச குறுக்க (King's cross) இருவுள் தட முனையத்தையும் இணைப்பதற்கு, துரவு மிகுந்த நகர வீதிகளின் அடியில் சுருங்கை வழியில் ஒரு  நிலவடித் தடத்தை ஏற்படுத்தினார். இத் தடத்தை ஏற்படுத்திய குழுமத்தைப் ”பெருநகர் இருவுளி (metropolitan railway) நிறுவனம்” என்று அழைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல சுருங்கைத் தடங்களை இலண்டன் நிலவடி மின் இருவுள் குழுமத்தால் (Underground Electric Railways Company of London) ஏற்படுத்தினார். பின் இருவேறு குழுமங்களும் இணைக்கப்பட்டு ”இலண்டன் பெருநகர் இருவுளி நிறுவனம்” என்று பெயர்கொண்டது. 

இது போல், சென்னை நகரம் வளர வளர, பொதுநிலங்களில், தென்னக இருவுள் (Southern Railway) துறை, தொடரி வழித்தடங்களைக் கூட்டி, 1931 இல் மின்தொடரி வலையைத் தொடங்கியது. இதுதான் இடப்பெயர்ப்பின் முதல் வளர்ச்சி. 

இதன் இரண்டாம் வளர்ச்சியாய், 1995 இல் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை (இப்போது பரங்கிமலை வரை) 19.34 கி.மீ.க்கு ஒரு மேலெழுந்த இருவுள் தடத்தை (Elevated Railway Track) ஏற்படுத்தி, அதன் வழி தொடரிகளை இயக்கினார். இந்த இரண்டாம் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட குழுமத்திற்கு திரள் விரை இடப்பெயர்ப்புக் கட்டகம் (mass rapid transit system) (இடப்பெயர்வு = transit = carrying of people, goods/materials from one place to another) என்று பெயரிட்டார். சுருக்கமாய்த் "MRTS= திவிரைப் பெயர்ப்பு” எனலாம். (சிங்கப்பூரில் metro வை MRT என்றே இன்றும் அழைக்கிறார்.   

இதன் 3ஆம் வளர்ச்சியாய், சென்னைப் பெருநகர் இருவுள் குழுமத்தின்- Chennai Metro Rail Limited (CMRL)- மூலம் (மேழுந்தாற் போலும், சுருங்கையிலும் ஓடும் படி) தடங்கள் அமைத்து தொடரிகளை இயக்கினார். இதுவரை நீலம், பச்சை என 2 தடங்கள் உள்ளன. இன்னும் 3 தடங்களுக்கான கட்டுமான வேலை இப்போது நடக்கிறது. முன் அமைந்த MRTS ஐயும், இப்போதைய CMRL ஐயும் ஒன்றுசேர்த்து CMRL என்றே அழைக்கவுள்ளார். எனவே ”சென்னைப் பெருநகர் இருவுள் குழுமம்” என்ற பெயர் நிலைக்கும். சுருக்கமாய்ப் பெருநகர் இருவுளி என்றோ, திவிரை இருவுளி என்றோ அழைக்கலாம்.   


Wednesday, August 23, 2023

மறதியும் மொழியழிவும்

பொதுவாக மாந்தருக்கு மறதி என்பது ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நம் சொற்குவையை நாமே புழங்காதிருந்தால், நாளா வட்டத்தில் ஒரு சிலவற்றை நாம் மறந்தே போவோம். (இதனாற்றான் சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்றார்.)

நமக்குத் தெரிந்த தமிழ்ச்சொற்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 விழுக்காடு நாம் மறந்தாலும், ஏழு தலைமுறைக்கு (175 ஆண்டுகளில்) அதே மேனி தொடர்ந்தால், அப்புறம் இன்று இருப்பதில் 15% தமிழ்ச் சொற்கள் பயன்படாது ஒழிந்தே போகும்.

அப்புறம் அச்சொற்களுக்கு ஈடாய் வேறு மொழிச்சொற்களையே அற்றைத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பயன்படுத்தத் தொடங்குவார்; முடிவில் நம் மொழி மாறிப் போகும். இப்படித்தான் தமிழியக் கிளைமொழிகள் 1000, 2000 ஆண்டுகளில் கொடுந்தமிழிலிருந்து மற்ற மொழிகளாய்க் கிளைத்தன. முடிவில், மகதம் வரை விரிந்திருந்த தென்மொழி, மாலவன் குன்றத்திற்கும் கீழ் எனக் குறுகிப் போனது.
நம் மொழியைக் காப்பாற்ற வேண்டுமெனில், நம் முன்னோர் நம்மிடம் ஒப்படைத்ததை, 2000 ஆண்டுகள் காப்பாற்றி வந்ததை, நாம் தொலைப்பது அவ்வளவு சரியாகத் தென்படவில்லை.

நம் பெற்றோரின் கண்ணுக்கெதிரே தோட்டத் தொழிலாளராய்ப் போன தமிழர் (அது போலத் தெலுங்கர்) போன இடங்களில், ஓரளவு மக்கள் தொகை இருந்தும், தம் அறியாமைப் போக்கால், தம் மொழியைக் காப்பாற்றாது போனார். விளைவு? தமிழும், தெலுங்கும் அவ்விடங்களில் தொலைந்தே போயின. விளவு? முத்தம்மா, முட்டம்மா ஆகி, தண்டபாணி தெண்டாபணி ஆகி, காளிச்சரண் கல்லிச்சரனாகி, சரவணன் சர்வனாகி மொத்தத்தில் தமிழ் அடையாளமே அங்கு தொலைந்துபோனது. மறவாதீர் நண்பரே! தமிழனுக்குத் தமிழே முகவரி.
உங்களுக்குத் தெரியுமா? ஓலாவ் மொழியைத் தொலைத்த அமெரிக்கக் கருப்பர் (இது மேற்கு ஆப்பிரிக்க மொழி. ஓலாவ் பேசிய பன்னூற்றுவர் கருப்பு அடிமையாக அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்குக் கொண்டுசெல்லப் பட்டார்.) பெருமிதத்தையும் சேர்த்துத் தான் 400 ஆண்டுகளில் தொலைத்தார். இன்று அவர் முகத்தில் பெருமிதத்தைத் தேட வேண்டியுள்ளது.

மாறாக, மொழியைக் காப்பாற்றியதால், சுரினாம், சமைக்கா, மொரிசியசு, பிஜி போன்ற இடங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தி இன்றும் நிலைத்து நிற்கிறது; இந்த இந்திக்காரரே அங்கு அரசியல், பொருளியல், கல்வி இன்னபிற துறைகளில் முன்னணியில் உள்ளார். அவர் முகத்தில் இன்றும் பெருமிதமுள்ளதைக் கூர்ந்து பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நடை, தமிழ்நாட்டிலேயே ஒருமுறை சீரழிந்து மணிப்பவளம் ஆகி, இப்போது மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறோம். மீண்டும் ஒரு முறை தமிழ் அழிய வேண்டாம். நம் வீட்டை நாம் காப்பாற்றாது, இன்னொருவரா காப்பாற்றுவார்? வரலாறறியார் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்.


மேகம்

In meteorology, a cloud is an aerosol consisting of a visible mass of miniature liquid droplets, frozen crystals, or other particles suspended in the atmosphere of a planetary body or similar space. பல்வேறு வகை நீர்மத் துளிகளும், உறைந்துபோன மீச்சிறு கட்டிகளும், அலைபடும் தூசுகளும் நிறைந்து, ஊதும அழுத்தத்திற்குச் (atmospheric pressure) சற்று மேல் அழுத்தம் கொண்டு, கூவளைப் (convex) பேறு கொண்ட கோளப் பொதியைத் தான் aerosol என்பார். இதைத் தமிழில் காற்றுக் கரைவு என்று சொல்லலாம்.  

இக் காற்றுக் கரைவுகள்  புவிப் பரப்பிற்குச் சற்றுமேல் இருக்கும். நாம் வானைப் பார்க்கையில் ஊதுமக் கோளத்தில் காற்றுக் கரைவுகள் நகர்ந்து கொண்டே இருப்பதைக் காணலாம். இவற்றில் நீர் மட்டுமின்றி. மற்ற நீர்மங்களும் இருக்கலாம். கடலின் மேல் இக் கரைவுகள் வரும் போது கடலிலிருந்து வெளிவரும் நீராவி இக் கரைவுளுக்குள் புகுந்து, அவற்றின் நீர்ச்செறிவை கூட்டும். நிலத்தின் மேல் வரும்போது ஏதோவொரு வெதணத்தில் (climate) கரைவுகளில் இருந்து நீர் வெளிவரலாம். இப்படி நீர் வெளிவருவதைத் தான் மழை என்கிறோம். 

நீர்க்கரைவுகள் எப்போதும் நமக்கு மேலேயே தனித்துத் தெரிவதால் மேகம் என்ற பெயரைப் பெற்றன. ”மேகச்” சொற்பிறப்பு விளக்கத்தைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, 7 ஆம் மடலம், 3 ஆம் பாகம், 54 ஆம் பக்கத்தில் காணலாம். நம்மில் பாதிப்பேர் மேகத்தை megam என்று தவறாய் ஒலிப்பதால், மேகம் வடசொல் ஆகிவிடாது. உண்மையில் ஈருயிர்களுக்குள் இடையில் (intervocalical) வரும் ககரத்தை ”ha” என ஒலிக்க வேண்டும். 

சரி, மேகம் என்ற சொல் எப்படி எழுந்தது? 

மீ> மே> மேல் என்பது உள்ளிற்கு எதிரான கருத்தைக் குறிக்கும். ”மேல்” இன்னும் திரிந்து மேல்> மேல்வு> மேவு> மேகு  என்ற சொற்களை உருவாக்கும். (வகரமும் ககரமும் தமிழில் ஒன்றிற்கொன்று போலிகள்). இனி, மேகு+அம் = மேகம் என இன்னொரு சொல்லும் பிறக்கும். மேகம் அடிப்படையில் வெள்ளைத் தோற்றம் காட்டும். வெவ்வேறு அளவில் ஈரம் மேகத்தில் செறியும் போது காற்றுக்கரைவுகள் கொஞ்சங் கொஞ்சமாய் கறுத்து வரும். கருப்புப் பொருளால், மேகம் என்ற பெயர்ச்சொல் எழவில்லை. மேலே இருப்பதால், மேகம் என்ற சொல் எழுந்தது.  

இனி ஈரம் ஏற ஏற மேகம் என்பது கருமேகம் ஆகும். கருமேகத்தை முகில் என்கிறோம்.

Thursday, June 22, 2023

ஆலயம்

 ஆலயம் என்பது நல்ல தமிழ்ச் சொல். ஆல்> ஆலு> ஆலு-தல் = சுற்றுதல். ஆலை = சுற்றி இயங்குவது. சுற்றி வருவது; ஆலத்தி> ஆரத்தி;  திருவிளக்கை இறைப் படிமத்தின் முன்னோ, திருமணத்தில் மாப்பிள்ளை முன்னோ, மேலிருந்து கீழ்வரை வலம் வருவது போல் சுற்றிக் காட்டுவது. திருச்சுற்றுகளைக் (சுற்றுமதில், சுற்றாலை) கொண்ட பெருஙகோயில். temple having prahAra. இக் கோயில்களில் 2,3 சுற்றாலைகள் கூட இருக்கலாம். திருவரங்கம் போன்ற கோயில்களில் 5 சுற்றாலைகள் இருக்கலாம்.

Monier-Williams Sanskrit-English Dictionary கீழே உள்ளவாறு போட்டிருப்பர். இதில் ஆ என்பது முன்னொட்டு. லயம் என்பதற்கு √lī என்பதைத் தாதுவாகக் காட்டுவர் வால்மீகி இராமாயணத்தைத் தொடக்கமாய்க் காட்டுவர். வால்மீகி இராமாயணம் பொது உகத்தில் தான் முழுமையானது. ஆலய என்ற சொல் வேறு எந்த இந்தையிரோப்பிய மொழியிலும் கிடையாது. வேதநெறியாளருக்கு இறையைக் குறிக்கும் எந்தப் படிமமும் கிடையாது. நடு கல் பழக்கமும் வேத நெறியாருக்குக் கிடையாது. அவருக்குச் சுடுகாடு உண்டு. இடுகாடு கிடையாது. வேத நெறி என்பது பூர்வ மீமாம்சத்தில் தொடங்கி உத்தர மீமாம்சையில் நகரும். இதற்கும் இற்றைச் சிவ, விண்ணவ நெறிகளுக்கும். அற்றுவிகம் (ஆசீவிகம்), செயினம், புத்தம் ஆகிய சமண நெறிகளுக்கும் தொடர்பு கிடையாது.  

தமிழியர் பண்பாட்டில் இடு காடும், நடு கல்லும் தொடக்கம். பின்னால் நடுகல் வழிபாடே, கோயில் வழிபாடாய் மாறி வளர்ந்தது. நம்மூரில் பல கோயில்கள் பள்ளிப்படையாய் இருந்து கிளர்ந்தவையே. இந்தியா வந்ததால் வேத நெறியார் இங்குள்ள பழக்கத்தோடு கொஞ்சங் கொஞ்சமாய் ஒன்றுபட்டு மாறி, நம் ஆலயத்தை அவர் கடன்கொண்டார். மோனியர் வில்லியம்சு கொடுத்த விளக்கம் கீழே உள்ளது: ஆலயம் என்ற சொல்லை அவர் கோயிலுக்கு மட்டுமின்றி எல்லாக் கட்டிடங்களுக்கும் பயில்வார். காரியாலய என்று அலுவலகத்தைக் குறிப்பார். நாம் ஆலயம் என்ற சொல்லைக் கோயிலுக்கு மட்டுமே குறிப்போம்.    

1) Alaya (अलय):—[=a-laya] m. (√lī), non-dissolution, permanence, [Rāmāyaṇa iii, 71, 10] ([varia lectio] an-aya)

2) [v.s. ...] mfn. restless, [Śiśupāla-vadha iv, 57.]

3) Ālaya (आलय):—[=ā-laya] a See ā-√lī.

4) [=ā-laya] [from ā-lī] b m. and n. a house, dwelling

5) [v.s. ...] a receptacle, asylum, [Rāmāyaṇa; Yājñavalkya; Kathāsaritsāgara etc.]

6) [v.s. ...] (often ifc. e.g. himālaya, ‘the abode of snow.’)

ஆனாலும் ஆலயம் போல் பல சொற்களுக்கு ஒரு சிலர் ஆதாரமே இன்றி சங்கதத்தை அடையாளம் காட்டுகிறார். 

என்று தான் சங்கத விளக்கத்தை விட்டு தமிழுக்கு நாம் வருவோம்?


Bonfire

சொல் எனும் குழுவில் 19/06/2023 அன்று, திரு. சிதம்பரநாதன் ரெங்கசாமி என்பார் ”Bonfire என்ற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?. சொக்கப்பனை என்று சொல்லலாம், ஆனால் அது பெரும்பாலும், ஆன்மிகம் சார்ந்ததாக உள்ளது.” என்று கேட்டிருந்தார்.  

உடனே, திரு. ரவீந்திரன் வெங்கடாசலம், “வெயில் கொளுத்தும் தமிழ்நாட்டில் bonfire எல்லாம் கிடையாது; அதனால் சொல்லும் இல்லை. சாற்றுத்தீ எனலாம்” என்று எல்லாம் தெரிந்தாற்போல் முன்னிகை கொடுத்தார். இதைப் படித்தவுடன் எனக்குச் சிரிக்கத்தான் தோன்றியது. விடை தெரியாதெனில், பேசாது இருந்திருக்கலாம்”. இப்படி தமிழையும், தமிழரையும் இழித்து முன்னிகை கொடுக்க வேண்டாம். 

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வரை தமிழில் உள்ள எல்லாத் தமிழ்-அகராதிகளிலும், “குளிர்காய்தல்” என்ற சொல் இதைக் குறிக்கும். இன்னும் விளக்கம் தரவேண்டின், “ கொள்ளி, எரி, நெருப்பு, தீ, சொக்கம்” என்று ஏதோ ஒன்றைக் கடைசியில் சேர்த்திருக்கலாம். மொத்தமாய் ”குளிர்காயற் கொளுந்து/கொளுத்து” என்றுகூடச் சொல்லலாம்.

தமிழர் ஐந்திணைகளில் வாழ்வதாய்ச் சொல்கிறோம். ஒவ்வொரு திணையிலும் வெதணம் (climate) மாறும். மருதம், முல்லையில் இருப்பது குறிஞ்சியில் மாறலாம். தமிழகத்தின் மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளன. 3000 அடிக்குமேல் உள்ள ஊர்களில் மக்கள் இன்றும் குடியிருக்கிறார். சங்க காலத்திலும் இதுபோல் இருந்தார். குறிஞ்சி நிலத்தில் துலாம் (ஐப்பசி) வந்தாலே அதிகாலையில் சற்று நடுக்கம் இருக்கும். கூதிர்காலம் எனும் பெரும்பொழுதின் கடைசியில் அதாவது நளி (கார்த்திகை)மாதத்தில் இன்னும் நடுக்கம் கூடும். பெரும்பாலான மரங்களின் இலைகள் குவிந்து கொள்ளும் காலத்தையே கூதிர்காலம் என்பார். 

கூதிருக்கு அடுத்தது முன்பனிக் காலம். இக் காலத்தில் நம்மூரில் 0 பாகை செல்சியசிற்கும் கீழே வெம்மை (temperature) போவதில்லை. ஆனால் 15,20 பாகைக்காவது போகலாம். அதுவும் குளிர்தான். எல்லோராலும் அதைத் தாங்கிவிட முடியாது. அப்போது அதிகாலை நேரத்தில் குப்பை, கூளங்களைச் சேகரித்து எரியூட்டிக் குளிர்காய்வது ஏழைகள் பலருக்கும் உள்ள பழக்கம். குளிர் காய்தல் என்ற சொல் அப்படி நம்மிடை எழுந்தது. 

bonfire என்பது மேலைநாடுகளில் மட்டும் உள்ளதல்ல. நம் கோடைக்கானலிலும், ஒற்றைக் கல் மந்திலும், மூணாற்றிலும், வயநாட்டிலும், நீலமலையிலும் உள்ள பழக்கம் தான். நம்மூராருக்கு ice கூடத் தெரியும். அதற்கும் அவர் ஒரு சொல் வைத்திருந்தார். ஆலங்கட்டி, ஆலி என்பது ice ஐக் குறிக்கும். ஆலியும் ice  உம்  ஒன்று தான். அதிகக் குளிர்நிலைக்கு சில்,சிலீர் என்றும், சிந்து என்றும், சொற்கள் கொண்டிருந்தார். இன்னும் பல குளிர்ச் சொற்கள் நம்மிடம் இருந்தன.            

நம்முடைய எட்டாம் மாதமான நளி (கார்த்திகை) கார் (மழை) திகையும் மாதம். இன்னொரு வகையில் இது (நெருப்பில்) காயும் திகையும் கூட. இதைச் சாரற் காலம் என்றும் சொல்வர். ஐப்பசி (துலை), கார்த்திகை (நளி) குளிர் காயும் காலம்.

சொக்கப்பனை என்பது சொக்குவதற்கான, எரிப்பதற்கான பனையோலை. சொக்குதல் = எரித்தல்.  ”சொக்கப்பனை கொளுத்து” என்பதே கார்த்திகைத் திருவாதிரையில் ஆடும் பண்டிகை. பண்டிகையையும் பொருளையும் குழப்பிக் கொள்ளக் கூடாது..

Saturday, May 13, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 8

அடுத்தது அகநானூறு 386, இதைப் பாடியவரும் பரணரே. இதன் திணையும் மருதமே. மருதம் பாடுவதில் பரணருக்கு ஒரு விழைவு இருந்துள்ளது. இங்கும் நீர்நாய், ஆற்றுவாளை போன்ற குறியீடுகள் வந்து போகின்றன. இவர் காலத்தில் தமிழகம் வந்து போன உத்தேயர் பற்றிய குறிப்பு இலைமறை காயாய் உள்ளது. பாணர், விறலியரின் தொடர்பு தொட்டுக் காட்டப் படுகிறது. பாணரின் தோள், கைவலியும் வெளிப்படுகிறது. 

துறை; தோழி வாயில் மறுத்தது. தலைமகள் தகுதி சொல்லியதுமாம். தலைவனின் பரத்தமை ஒழுக்கங் கண்டு தலைவி ஊடல் கொண்டாள். தேடி வரும் தலைவனிடம் தோழி பரத்தையால் நடந்தது சொல்லி, ”அப் பரத்தை எப்படியெலாம் கள்ளமாய்ப் பேசினாள்? அவள் பேச்சுக் கேட்டு எவ்வளவு வெட்கினேன் தெரியுமா” என்றும், “அவள் இப்படி பேசக் காரணம் யார்? உன் நடத்தை தானே? உடன் மாற்றிக் கொள்” என்ற உட்கருத்தையும் இப் பாடலால் விளங்கிக் கொள்ளலாம். பாடலினூடே ஆரியப் பொருநன் பற்றிய செய்தியும் வருகிறது.

பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து

வாளை நாளிரை தேரும் ஊர

நாணினேன் பெரும யானே பாணன்

மல்லடு மார்பின் வலியுற வருந்தி

எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்

நிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த

திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்

கணையன் நாணி யாங்கு மறையினள்

மெல்ல வந்து நல்ல கூறி

மையீர் ஓதி மடவோய் யானுநின்

சேரி யேனே அயலி லாட்டியேன்

நுங்கை ஆகுவென் நினக்கெனத் தன்கைத்

தொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர

நுதலும் கூந்தலும் நீவி

பகல்வந்து பெயர்ந்த வாணுதல் கண்டே.

என்பது பாட்டு. இதன் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு ”நாணினேன் யானே” என்பதை இரண்டுதரம் திருப்பிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

புலவு நாறு இரும் போத்து வாளை 

பொய்கை நீர்நாய் நாள் இரை தேரும் ஊர

பெரும  

மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்

சேரியேனே அயல் இலாட்டியேன்

நுங்கை ஆகுவென் நினக்கு எனத் தன் கைத்

தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர

நுதலும் கூந்தலும் நீவி

மெல்ல வந்து நல்ல கூறி

பகல் வந்து பெயர்ந்த வாணுதல் மறையினள் கண்டே.

நாணினேன் யானே

பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி

எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்

நிறைத் திரண் முழவுத் தோள் கையகத்து 

ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி 

நற்போர்க் கணையன் நாணியாங்கு 

நாணினேன் யானே

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். புலவு நாறு இரும் போத்து வாளை = தசைநாற்றமுள்ள பெரிய ஆண் ஆற்றுவாளையை; பொய்கை நீர்நாய் = குளத்து நீர்நாய் (Otter); நாள் இரை தேரும் ஊர = நாளிரையாய்த் தேர்ந்து கொள்ளும் ஊரைச் சேர்ந்தவனே! பெரும = பெருமகனே!

”மைஈர் ஓதி மடவோய் = ”கருவகிள் கூந்தலுடைய இளம் பெண்ணே!; யானும் நின் சேரியேனே = நானும் உன் சேரியள் தான்; அயல் இலாட்டியேன் = பக்கத்து வீட்டுக்காரி; நுங்கை ஆகுவென் நினக்கு = உனக்குத் தங்கையாவேன் என; தன் கைத் தொடு = என்று தன் கையால் தொட்டு; மணி மெல் விரல் = மாணிக்கம் பொருந்திய விரலால் (இங்கே மாணிக்க மோதிரமிட்ட விரல் குறிக்கப் படுகிறது); தண்ணெனத் தைவர = தண்ணெனத் தடவி; நுதலும் கூந்தலும் நீவி = என் நெற்றியும், கூந்தலும் நீவி; மெல்ல வந்து நல்ல கூறி = மெதுவாய் வந்து நல்லன கூறி; பகல் வந்து பெயர்ந்த வாணுதல் மறையினள் = பகலில் வந்து பெயர்ந்த (அவ்) வாள்நுதற் கள்ளியைக் கண்டு; நாணினேன் யானே = (“ஒரு வேளை தவறாக ஐயுற்றோமோ?” என) நான் நாணினேன்.  

பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி = பாணனின் மற்போர் நெஞ்சுரங் கண்டு வருந்தி; பெரும்பாணர், சிறுபாணர் என்பார் விறலியாட்டத்தில் முழவடித்துத் (accompanying artists) துணை நிற்பர். முன்னே பேசப்பட்ட பரத்தை ஒரு விறலியாயும் (ஆட்டக்காரி) இருந்தாள் போலும். இவ்வுவமையில் பாணன் விறலிக்குப் பகரியாகிறான். ஓர் இசைக் கச்சேரியோ, நடனக் கச்சேரியோ 3,4 மணிநேரம் நடந்தால், முழவும், பறையும் தொடர்ந்தடிக்க நல்ல வலு வேண்டும். உடல்வலுக் குன்றியவரால் அது முடியாது. பாணர் (இக்கால மேளகாரருங் கூட) நல்ல கட்டுப் பாங்கான உடல்வலுக் கொண்டிருப்பர். அக் காலப் பாணனுக்கு மற்போர் தெரிவதும் வியப்பில்லை. இங்கே கணையன் [கணை = தண்டாயுதம், வளரி, தூண், குறுக்குமரம். அக்காலத்தில் வீட்டின் பெருங்கதவுகளில் தாழ்ப்பாள் போட்டு கணைய மரத்தைக் குறுக்கே செருகி வைப்பர். பின்னாளில் இது இரும்புப்பட்டையாய் மாறியது. செட்டிநாட்டு பெருங்கதவுகளுக்கு இன்றுங் கணையப் பட்டயங்கள் உண்டு. கணையன் = வலியன்; கணைக்கால் இரும்பொறை என்னுமோர் சேர மன்னனும் இருந்தான்.] என்பான் பாணனோடு தான் பொருதற்கு மாறாய் ஆரியப் பொருநனைக் கூலிக்கமர்த்திப் பொருத வைத்தான். 

இத்தொடரின் 3 ஆம் பகுதியில் உத்தேயர் (>யுத்தேயே>யௌதேய) என்ற ஆரிய கணம் (merceneries) பற்றிச் சொன்னேன். அவர் ஆயுத கணமென்றும் சொல்லப் பட்டார். முடியரசு இல்லாது குடியரசாயும் இனக்குழு ஆட்சியும் கொண்டிருந்த இவர் போர் மூலம் பொருள் திரட்டி நாட்டினுள் நகர்ந்து கொண்டிருந்தார். அகண்ட  அரசை அவர் ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே கூட்டங் கூட்டமாய்ச் சில காலம் வாழ்த்து பின்பிரிந்து வேறிடஞ் சென்று விரிந்து கொண்டிருந்தார். அக்கால robber - barons, mercenaries என இவரைச்சொல்லலாம். 

எங்கெலாம் வளமிருந்ததோ, அங்கெலாம் உழிஞை, வஞ்சிப் போர் நடத்துவார். கொள்ளை அடிப்பார்; நகர்ந்து போவார். தென்னாடு நோக்கி இவர் படையெடுத்ததை இவர் நாணயம் தெற்கே கிடைத்ததனாலும், இவருடைய ”கார்த்திகேயன், சுப்ரமண்யன், சண்முகன்” வழிபாடும், நம்மூர்க் குறிஞ்சி முருகன் வழிபாடும் இரண்டறக் கலந்து போனதாலும் அறிகிறோம். இவற்றைப் பின்னிப் பிணைந்து திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் சொல்லுங் கதைகள் பற்பல. (இவ் வழிபாட்டுக் கலப்பு என்பது ஒரு தனியாய்வு. யாராவது செய்ய வேண்டும்.) யாரேனும் பொருள் கொடுத்து ஒரு வேலைக்கு அனுப்பி வைத்தால், (இக்கால அடியாட்கள், சப்பானிய ninja க்கள்  போல) இந்த உத்தேயர் யாரோடும் மற்போர் செய்யவோ, போர்கொள்ளவோ தயங்க மாட்டார். இங்கே ஆரியப் பொருநன் என்பான் ஓர் அடியாள் (mercenary) என்பது மறைபொருள்.. 

எதிர்த்  தலைக் கொண்ட ஆரியப் பொருநன் = எதிரே சண்டையிடும் ஆரியப் பொருநன்; [இங்கே தலைவியின் தோழிக்கு கணையனும், தலைவிக்குக் கணையன் ஏற்பாடு செய்த ஆரியப் பொருநனும் உவமை ஆகிறார். ஒருவேளை தலைவி ஆரியன் போல வெள்நிறங் கொண்டவளோ, என்னவோ?] நிறைத்திரண் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி = திரண்ட, முழவுத் தோளிலும், கையிலும் திறனொழிந்து போய் சரிந்து கிடக்கை நோக்கி; [நல்ல முழவடிக்கக் கூடிய வலுக் கொண்ட தோள் இங்கே ஆரியப் பொருநனுக்கும் அணியாய்ச் சொல்லப்படுகிறது.] நற்போர்க் கணையன் நாணியாங்கு = நற்போர் செய்யக் கூடிய கணையன் நாணியது போல; நாணினேன் யானே = நானும் நாணினேன்.

”நான் பெரிதாய் நினைத்துக் கொண்டிருந்த என் தலைவியை இந்தக் கள்ளி கீழே சாய்த்துவிட்டாள். என் தலைவியின் நிலை கண்டு நான் வெட்கிப் போனேன்” என்பது உட்கருத்து. இனிப் பாட்டின் மொத்தப் பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

“கருவகிள் கூந்தலுடைய இளம்பெண்ணே! 

நானும் உன் சேரியள் தான்; 

பக்கத்து வீட்டுக்காரி; 

உனக்குத் தங்கையாவேன்” 

என்று தன் கையால் தொட்டு, 

மாணிக்கம் பொருந்திய விரலால் 

தண்ணெனத் தடவி, 

என் நெற்றியும், கூந்தலும் நீவி, 

மெதுவாய் வந்து நல்லன கூறி, 

பகலில் வந்து பெயர்ந்த, 

(அவ்) வாள்நுதற் கள்ளியைக் கண்டு, 

“ஒருவேளை தவறாக ஐயுற்றோமோ?” என) 

நான் நாணினேன்.  

பாணனின் மற்போர் 

நெஞ்சுரங் கண்டு வருந்தி,

எதிரே சண்டையிடும் 

ஆரியப் பொருநன் 

திரண்ட, முழவுத்தோளிலும், 

கையிலும் திறனொழிந்து போய், 

சரிந்து கிடக்கை நோக்கி, 

நற்போர் செய்யக்கூடிய கணையன் 

நாணியது போல் 

நானும் நாணினேன்

அன்புடன்,

இராம.கி.


சங்க இலக்கியங்களில் ஆரியர் - 7

அடுத்தது அகநானூறு 276. இதைப் பாடியவர் பரணர். ஆரிய அரசனான பெருக தத்தனுக்குக் (ப்ரகத்தன்) குறிஞ்சிப் பாட்டால் தமிழ் மரபைக் கற்றுக் கொடுத்த கபிலரோடு, உரையாசிரியர் பலரும், பரணரைச் சேர்த்துக் கூறினும், காலத்தாற் கபிலருக்கு இளையராகவே இவர் தென்படுகிறார். பெருக தத்த மோரியன் காலம் பொ.உ.மு.187-185. இவனை பொ.உ.மு.185 இல் புஷ்ய மித்திர சுங்கன் கொன்று, தானே முடியைச் சூடிக் கொள்வான். சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் (ஏன் சேரருக்குங் கூட) ஆகாத நிலையில் சுங்கனை எதிர்த்து, நெடுஞ்சேரலாதன் வடக்கே படையெடுத்துப் போனான். 

பெரும்பாலும் சேர நாட்டாரான பரணர். மாமூலனார் போல், அரசியற் செய்திகளை பாடல்களிற் பிணைப்பார். இவர் பாடல்களோடு, ஆதன் குடியினரை, குறிப்பாய்க் கடல் பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனைப் பொருத்தினால், முதிய வயதிற் செங்குட்டுவனைப் பரணர் பாடியது புரியும். செங்குட்டுவன் காலம் பொ.உ.மு. 131 - 77. கபிலரின் காலம் ஏறத்தாழ பொ.உ.மு.197-143 என்றும், பரணரின் காலம் பொ.உ.மு.180-123 என்றுங் கொள்கிறோம். செங்குட்டுவன் பட்டமேறிய 8 ஆண்டுகளுள் பரணரின் ஐந்தாம் பத்து பெரும்பாலும் எழுந்தது என முடிவு செய்யலாம். 

இப்பாடலின் திணை மருதம். தலைவியின் தோழியர் கேட்கும் படியாகப் பரத்தை சொன்னது. ஆரியர் களிறுகளுக்கு அளிக்கும் பயிற்சி இப்பாட்டில் உவமையாய்ச் சொல்லப் படுகிறது. இப்பயிற்சி வடமொழி ஆணைகளால் நடந்ததாய்ச் சங்க இலக்கியக் குறிப்புண்டு. அதைக் கொண்டு ’சங்கதச் சிறப்பு’ சொல்வாரும் உண்டு. பொறுமையோடு எண்ணின், இது போற் கூற்றுக்கள் எழா. ஆணை மொழி என்பது இலக்கணம் கூடிய மொழியல்ல. சில ஒலிகள், சொற்கள், செய்கைகள் இவ்வளவுஞ் சேர்ந்ததே ஆணை மொழியாகும். வடமொழி எனில், அது சங்கதமா, பாகதமா? - என்பது கேள்விக்குரியது. இன்றும் தென்கிழக்காசியாவில் யானைப் பயிற்றுவிப்பு உண்டு. அமெரிக்க விலங்குக் காட்சி சாலைகளிலும், வித்தையரங்குகளிலும் (circus) யானைகள் பயிற்றுவிக்கப் படுகின்றன. அவை அந்தந்த நாட்டு மொழியில் தான் நடைபெறுகின்றன. சங்க காலத் தமிழகத்தில் யானைகள் வடமொழியின் மூலம் பயிற்றுவிக்கப் பட்டனவா? - என்பதற்கு வரலாற்றில் காரணமிருக்கலாம். பாட்டைப் படித்து விளக்கம் தேடுவோம்..

நீளிரும் பொய்கை இரைவேட் டெழுந்த

வாளைவெண் போத்து உணீஇய நாரைதன்

அடியறி வுறுத லஞ்சிப் பைப்பயக்

கடியிலம் புகூஉம் கள்வன் போலச்

சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு

ஆவது ஆக இனிநா ணுண்டோ

வருகதில் அம்மவெம் சேரி சேர

அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்

தாரும் தானையும் பற்றி ஆரியர்

பிடிபயின் றுதரூஉம் பெருங்களிறு போலத்

தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்தவன்

மார்புகடி கொள்ளேன் ஆயி னார்வுற்று

இரந்தோர்க் கீயாது ஈட்டியோன் பொருள்போல்

பரந்துவெ ளிப்படா தாகி

வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே.

என்பது பாட்டு. இதன் விளக்கம் கூடுவதற்காக, இதனுள்வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

வாளை வெண்போத்து உணீஇய 

நீள்இரும் பொய்கை எழுந்த இரைவேட்டு நாரை 

தன்அடி அறிவுறுதல் அஞ்சிக்

கடிஇலம் பைப்பயப் புகூஉம் கள்வன் போலச்

சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு

இனி நாண்ஆவது ஆக உண்டோ

எம்சேரி சேர வருகதில் அம்ம 

அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்

தாரும் தானையும் பற்றி 

ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத்

தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து அவன்

மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வுற்று

இரந்தோர்க்கு ஈயாது பொருள்ஈட்டியோன் போல்

பரந்து வெளிப்படாது ஆகி

ஓம்பிய நலனே வருந்துகதில்லயாய் .

இனிச்சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். வாளை வெண்போத்து உணீஇய = வெள்ளிய ஆற்றுவாளைப் (Wallago attu) போத்து உண்பதற்கு; வாளையை ஆற்று வாளை என்றும் அழைப்பர். உற்றுப் பாருங்கள் தமிழ்ப் பெயரே தலைகீழாய் மீனியற் பெயராகிறது. தெற்காசியா/தென்கிழக்காசியாவில் பரவலாக ஆறு, ஏரி, குளங்களில் இவ் வெள்ளை மீன் கிட்டத்தட்ட 1 மீ. நிரவல் நீளத்தோடும், 18-20 கி.கி. எடையோடும் வளர்கிறது. ஆண்மீன் பெண்மீனைவிடப் பெரியது; ”போத்து” ஆணைக் குறிக்கும். கடல் வாளையோடு ஆற்று வாளையைப் பலருங் குழப்புவர்.கடல் வாளை குமரிக் கடற்கரைகளில் பெரிதுங் கிடைக்கும். மருதத் திணை என்பதாலும், நீர்நிலையில் நாரை சாப்பிட முயல்கிறது என்பதாலும் இது நந்நீர் மீனையே இங்கு குறிக்கிறது எனலாம்.  

நீள்இரும் பொய்கை எழுந்த இரைவேட்டு நாரை = நீள்பெருங் குளத்தெழுந்த இரை தேடும் நாரை; ”நீள்பெரும்” பெயரடை செவ்வகக் குளத்தைக் குறிக்கிறது. பொள்ளிச்செய்த குளம் பொய்கை..தன்அடி அறிவுறுதல் அஞ்சி = ”எங்கே தன்னடை (மீன்களுக்கு) அறிவுறுத்தி விடுமோ?” என அஞ்சி; கடிஇலம் பைப்பய புகூஉம் கள்வன் போல = காவலுள்ள இல்லத்துள் மெதுமெதுவாகப் புகும் கள்வனைப் போல; ’பைய’ என்பது இன்று திருச்சிக்குத் தெற்கேதான் புழங்குகிறது. வட தமிழகத்தார்க்கு இச் சொல் புரியாமற் போகலாம். ஆனால் சங்க இலக்கியங்களில் பெரிதும் புழங்கியுள்ளது. சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு = சாய்ந்து ஒதுங்கும் துறைநிறை ஊர்த் தலைவனோடு; ஆற்றோர துறையன் ஆதலின் துறைகேழ் ஊரன். இனி நாண் ஆவது ஆக உண்டோ = இனியும் நாணப் படுவதில் பொருள் உண்டோ? எம் சேரி சேர வருகதில் அம்ம = பெண்களே! எம் (பரத்தைச்)சேரிக்குச் சேர வாருங்கள்; இது ஒருவிதமான வல்லமைப் போட்டிக்கான கூவல்.   

அரிவேய் உண்கண் அவன் பெண்டிர் காணத் = செவ்வரி உண்கண் பொருந்திய அவன்வீட்டுப் பெண்கள் காண; இங்கே ஊரன் கிழத்தி மட்டுமின்றி, அவன் வீட்டு அனைத்துப் பெண்களும் பேசப் படுகிறார். தாரும் தானையும் பற்றி = அவன் மாலையையும், ஆடையையும் பற்றி; இன்றும் சேலை முன்’தானை’ பயில்கிறோம். வேட்டியின் ஒரு பக்கமும் தானை தான். ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போல = ஆரியர் பெண்யானையைக் கொண்டு பயிற்றுவிக்கும் ஆண்யானை போல; இங்கே 2 உண்மைகள் பேசப்படுகின்றன. ஒன்று யானையின் உடற்கூறு, யானையின் வாழ்க்கை, யானையைப் பழக்கும் நடைமுறை ஆகியவற்றோடு தொடர்பானது.. இதை முதலிற் பார்ப்போம். இன்னொன்று வரலாற்றின் பாற்பட்டு, வடமொழி வழிப் பயிற்றுவிப்பு பற்றியது. இதை இரண்டாவதாய்ப் பார்ப்போம்.. 

யானைகள் பொதுவாய்க் குடும்பங் குடும்பமாய்த் திரியும் இயல்புடையன. ஆணோ, பெண்ணோ ஓரொரு யானையும் 50, 60 ஆண்டுகள் கூட வாழலாம். யானைக் குடும்பம் பெண்ணையே தலைவியாய்க் கொள்ளும். அகவை முற்றிய ஆண்யானைகள் இதில் அடங்கியே வாழும். அதேபொழுது ஆண்யானைகளுக்குக் குடும்பங்களில் அழுத்தம் இல்லாதில்லை. குறிப்பாக விடலை யானைகள் குடும்பத்தோடு ஒட்டி வாழ்ந்தாலும், 14-15 வயதில் இனப்பெருக்க ஊறுமங்கள் (hormones), குறிப்பாய்த் தடித்திரமம் (testosterone), ஊறுவதால், குடும்பத்திலிருந்து விலகித் தனியாகவோ, வேறு ஆண்யானைகளுடன் சேர்ந்தோ அலையும. அப்போது வேறு குடும்பப் பெண் யானையால் ஈர்க்கப் பட்டு, உடலுறவு கொண்டு, அக்குடும்போடு சேர்ந்து விடலாம். (கிட்டத்தட்ட சேரலத்து மருமக்கள் தாயமுறை போன்றது தான்.) 

தடித்திரம ஊறல் மாந்தரைப் போல் யானைகளுக்கு சீராக அமையாது. பருவம் பொறுத்துக் கூடக் குறைய அமையலாம். எக்கச் சக்கமாய் அளவு கூடிய யானைகளுக்கு மதம் (musth) பிடிக்கிறது. மிதமிஞ்சிய ஊறுமஞ் சுரந்த நிலையே மதமாகும். இதன் விளைவால், நெற்றித் தும்பில் (தும்பு=ஓரம்; temple of the forehead. நெற்றிப் பொட்டென்றுஞ் சொல்வர்.) பொக்குளந் தோன்றி அதுவெடித்துச் சீழ்வடியலாம். இச்சீழைத்தான் மதநீரென்பார். இது வடியும் நேரத்தில் இன்னதென்று அறியாமல் சினங்கூடி, யானை வெய்யழிப்புத் (violent) தோற்றமுங் காட்டும். மதங் கொண்ட யானையை அடக்குவது கடினம். மதத்தை இறக்கி வழிக் கொணர்வது ’கலை,கொடுமையென எல்லாஞ்’ சேர்ந்தது. (இக்காலத்தில் ஊசிகள் போட்டும் மதங் குறைப்பர்.) சில ஆண்யானைகளுக்கு அடிக்கடி மதம் பிடிக்கலாம். சிலவற்றிற்கு எப்போதோ நடக்கலாம். சிலவற்றிற்கு நடக்காமலே போகலாம். எல்லா நேரமும் யானைக் கூட்டங்களில் அவற்றைக் கட்டுள் கொணர்வன பெண் யானைகளே. அதே போல, தனித்துத் திரிந்த விடலை யானைகளைப் பிடித்து வந்து பழக்கும் போதும் பாகர்கள் பெண் யானைளை வைத்தே ஒழுங்கு நடைமுறையைச் சொல்லிக் கொடுப்பார்.           .  

இனி இரண்டாம் கேள்விக்குப் போவோம். இற்றை மக்கள்திரள்/ பைம்புல ஈனியலின் (population genetics) படி, ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட பழங்குடி மாந்தர் 70000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்தார்;  வந்தவரில் ஒரு சாரார் இங்கிருந்து பர்மா போய், பின் ஒவ்வொரு நாடாய்க் கடந்து ஆசுத்திரேலியா போய்ச் சேர்ந்ததாய் அறிவியல் கூறும். நெய்தலார் (coastal people) என்று அழைக்கப்பட்ட இன்னொரு சாரார் இங்கேயே தங்கிக் கடற்கரையை ஒட்டியே பெரும்பாலும் வாழ்ந்தார். வரும்போது இவர் ஏதோவொரு மொழியைக் கொண்டுவந்தார் என்றே அறிவியல் கூறும். அம்மொழி எது என்ற சிக்கலுக்குள் இப்போது போக வேண்டாம். ஆனால் அதிலிருந்து பல்வேறு காலங்களில் கிளைத்தவையே தமிழிய (திராவிட) மொழிகளாகும். பாகதமும் இதிலிருந்து தான் கிளைத்தது, அது வட திராவிடம் தான்  என்று ஒரு  சாராரும், ”இல்லை வேறொரு மாந்தப் பெயர்வில் அது உள் நுழைந்தது” என்று இன்னொரு சாராருஞ் சொல்வர். இன்றுள்ள நிலையில் இந்தப் புதிரையும் விடுவிக்க முடியாது.   

அடுத்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்நெய்தலாரே நாட்டின் உட்பகுதிகளுக்குள் நுழைந்தார். முல்லை வாழ்க்கையும், குறிஞ்சி வாழ்க்கையும் அதன் பின் ஏற்பட்டன. (நம்மிற் பலரும் குறிஞ்சியே முதலென்று எண்ணிக் கொள்கிறோம். அப்படிக் கிடையாது.) இன்னும் காலங் கழிந்து, முல்லை/நெய்தல் ஊடாட்டத்தில், நுட்பியல் மாற்றங்கள் ஏற்பட்டு மருத வாழ்க்கை உருவானது. குறிஞ்சி, முல்லையில் குறுநில மன்னர் தோன்றினார். மருத வாழ்க்கையில் பேரரசரும், வேந்தரும் தோன்றினார். பொ.உ.மு.1000-800 களில் வடக்கே 16 கணபதங்களிருந்து அவையே பொ.உ.மு. 600 களில் 3, 4 வேந்தர்களாய் மாறி, முடிவில் பொ.உ.மு.500-450 களில் மகதமே பேரரசு நிலைக்கு வந்தது. கிட்டத்தட்ட இதே காலத்தில் தமிழகத்தில் இருந்த இனக் குழுக்கள் ஒன்றோடொன்று கலந்து சேர, சோழ, பாண்டியர் எனும் பெரும் இனக்குழுக்கள் வழி மூவேந்தர் அமைந்தார். இக்காலத்தில் தமிழகத்தின் ஊடே குறுநில வேளிர் இருந்தது போலவே வடக்கிலும் மகதத்தைச் சுற்றியும் ஊடேயும் இருந்தார். மகத நாகரிகத்திற்கும், தமிழ நாகரிகத்திற்கும் பல்வேறு ஒப்புமைகளும் போட்டிகளும் இருந்தன. (அவற்றை இங்கு விரிப்பின் பெருகும். என் ”சிலம்பின் காலம்” நூலில் ஓரளவு சொல்லியிருக்கிறேன்.) 

தமிழகத்தைப் பார்க்க, மகதம் பென்னம் பெரிய நிலம். மக்கள் தொகைக் கூடக் கூட கங்கைக் கரையை ஒட்டிய காடுகளை அழித்து அவ்விடங்களில் மருதத்தை ஏற்படுத்தும் தேவை மகதத்தில் எழுந்தது. போர்க் கைதிகளாலும், வரிச் சலுகைகளால் தூண்டப் பெற்ற மக்களாலும் பெருவாரியான மக்கள் நகர்த்தப் பெற்றனர். மரங்களை அழிப்பதும், வெட்டிய மரங்களை அகற்றுவதும் தேவை என்ற போது யானைகளே கதியென்று ஆயிற்று. தவிர, 16 கணபதங்களும் ஒன்றுக்கொன்று பொருதி, சில அழிந்து சில பிணைந்து முடிவில் மகதத்தின் படை விரிந்தது. எந்தக் கோட்டையின் பாதுகாப்பும் மாற்றார் வலுக்காட்டிற்கு (offence) எதிரான, வலுவெதிர்ப்பு (defence) முனைப்புகளே. வலுவெதிர்ப்பைச் (defence) [தொடர்புள்ள மற்ற சொற்கள் சேமம்(safety), பாதுகாப்பு(security), காவல்(police)] சுருக்கமாய் அரணென்றுஞ் சொல்லலாம். armyக்கு அரணமென்றும் ஒரு சொல் பரிந்துரைத்தேன்.] கி.மு.462-446 இல், மகத அரசன் அசாத சத்துவிற்குப் பின்வந்த, உதய பட்டனின் பாடலிபுத்தக் கோட்டையில் 54 வாயில்கள், 570 எயில் மாடங்கள் இருந்தனவாம். அவ்வூர் ஏறத்தாழ 14.5 கி.மீ. நீளம், 2.5 கி.மீ. அகலங் கொண்டதெனில் ஊர் நடுவே எவ்வளவு பெருங்கோட்டை இருந்திருக்கும் என எண்ணிப்பாருக. இவ்வளவு பெரிய கோட்டையைக் காப்பாற்ற எவ்வளவு பெரிய படைவேண்டும்? யானையில்லாது கோட்டைகளை எப்படிக் காப்பாற்றமுடியும்? தகர்க்க முடியும்? 

அலெக்சாந்தர் இந்தியா வந்த நேரத்தில், நந்தரிடம் 9000 யானைகள் இருந்ததாய்ச் சொல்வர். அதே பொழுது, மற்ற அரசரிடம் (தெற்கே இருந்த மூவேந்தரிடமுங் கூட) அவ்வளவு யானைகள் இல்லை. 1000 தேர்ந்தால் அதிகம். பரப்பளவிற் குறைந்த அரசுகளில் யானையிருப்புக் குறைவு. அரசின் பொருளாதாரம், வலுவெதிர்ப்பு போன்றவை வளர, யானைகளை அடக்குவதும், பழக்குவதும், பயன்படுத்துவதும் தேவையாயிற்று. எண்ணிக்கையிற் கூடிய யானைகள் தேவைப்பட்டன. எனவே மகதத்தில் யானைப்பாகர் மிகுத்துப் போனார். அந்நாட்டின் பல மருங்கிலும் யானைப் பயிற்சி மையங்கள் இருந்திருக்கலாம். அருத்த சாற்றம் (Arthasastra) இதை விரிவாகப் பேசும். (சங்க இலக்கியம் புரிய அருத்தசாற்றப் பின்புலம் தேவை.) பின்னால் மகத அரசுகள் சிதைந்த போது யானைப்படைகளுஞ் சுருங்கின.

அக்காலத்தில் யானைகளைப் பழக்க மிகுந்த ஆண்டுகள் பிடித்ததால், போர் முடிந்தவுடன், எதிரி யானைப் படையைத் தம்படையோடு சேர்த்துக் கொள்ளும் விந்தைப் பழக்கமும் இருந்தது. (யானையைப் பிடித்துச் சில ஆண்டுகள் பழக்கி வைக்கும் செலவும், முயற்சியும் குறைந்து போகுமே? சட்டென்று சேர்த்துக் கொள்ளலாமே?) எனவே நாளாவட்டில் நாடெங்கணும் யானைப் பாகர் நடுவில் வடமொழியான ஆணைமொழி பொதுவாகிப்போனது. 

[19 ஆம் நூற்றாண்டு நடைமுறையை நான் சொல்லலாம். இங்கிருந்து சுரினாம், ப்வ்யூஜி போன்ற நாடுகளுக்குப் போன இந்தியக் கூலிகள் தமிழ், தெலுங்கு போன்ற தம் மொழிகளை மறந்தே போனார். பெயரிலும் சில பழக்கங்களிலும் மட்டுமே தமிழிருக்கும். தங்களோடு அங்கு வந்த பீகாரிகளின் மொழியான 19 ஆம் நூற்றாண்டு இந்துசுத்தானியே இவருக்கும் நாளடைவில் பொது மொழியானது. அது நம்மூரின் ”சர்க்கார்” சங்கத இந்திக்கும் வேறு பட்டது. இன்று சென்னையின் பல இடங்களில் குறிப்பாக நான் 4 ஆண்டுகளிருந்த சோழிங்க நல்லூரில், ஞாயிற்றுச் சந்தையின் பொது மொழி இந்தியாயிருக்கிறது. அங்கே பெரிதும் வாங்க வருவது பீகார், சார்க்கண்ட, சட்டிசுக்கர், ஒடிசா மாநிலங்களிருந்து வந்த கட்டிடத் தொழிலாளர். அதே போல் கும்மிடிப்பூண்டியில் இருக்கும் பல் வேறு வடகிழக்கு மாநில மக்களால் அந்தூர்க் கடைவீதியில் இந்தியே பெரிதும் புழங்குகிறது. அதே போல் சென்னை சவுகார் பேட்டையில் இருக்கும் மார்வாரிகளால், இந்தியே பெரிதாகிப் போனது. திராவிடம் பேசும் கட்சிகளே அங்கு இந்தியில் நுவலிகளை (notices) அளிக்கின்றன. எல்லாம் தேவை (demand) - அளிப்புத் (supply) தான். ஆரியர் வடமொழி வழியே சங்க காலத் தமிழகத்தில் யானை பயிற்றுவித்தது ஒரு விலங்கியல், பொருளியல் ஊடாட்டம். அதற்கும் மொழி விதப்பிற்கும் தொடர்பைக் காண்பது பொருள் அற்றது. இனி பாட்டிற்குள் போவோம். 

தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து = என்தோளைத் தறியாக்கி என் கூந்தலால் கட்டிப் போட்டு; அவன் மார்பு கடி கொள்ளேன் ஆயின் = என் மார்பில் அவனைச் சிறை கொள்ளேன் ஆயின்; ஆர்வுற்று இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் = ஆர்வமுற்று இரந்து வருவோர்க்கு ஈயாது ஈட்டியவன் பொருள் போல்; பரந்து வெளிப்படாதாகி = பரந்து வெளிப்படாதாகி, ஓம்பிய நலனே = (இது நாள் வரை) காப்பாற்றிய என்னழகு; வருந்துகதில்லயாய் = வருந்தி அழியட்டும்.  .

இனிப் பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

வெள்ளிய ஆண்வாளை உண்பதற்கு, 

நீள்பெருங் குளத்தெழுந்த இரைதேடும் நாரை, 

”எங்கே தன்னடை (மீன்களுக்கு) 

அறிவுறுத்தி விடுமோ?” என அஞ்சி 

காவலுள்ள இல்லத்துள் மெதுமெதுவாகப் புகும் 

கள்வனைப்போல சாய்ந்தொதுங்கும் 

துறைநிறை ஊரனொடு 

இனியும் நாணப்படுவதில் பொருளுண்டோ? 

பெண்களே! எம் (பரத்தைச்)சேரிக்குச் சேரவாருங்கள்! 

செவ்வரி உண்கண் பொருந்திய அவன் வீட்டுப் பெண்கள் காண 

அவன் மாலையையும், ஆடையையும் பற்றி, 

ஆரியர் பெண்யானையை கொண்டு பயிற்றுவிக்கும் ஆண்யானை போல 

என் தோளைத் தறியாக்கி என்கூந்தலாற் கட்டிப்போட்டு 

என் மார்பில் அவனைச் சிறை கொள்ளேன் ஆயின் 

ஆர்வமுற்று இரந்துவருவோர்க்கு ஈயாது 

பொருளீட்டியான் போல் 

பரந்து வெளிப்படாதாகி 

(இதுநாள்வரை) காப்பாற்றிய என்னழகு 

வருந்தி அழியட்டும். 

அன்புடன்,

இராம.கி.


Thursday, May 11, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 6

அடுத்தது பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்துப் பதிகம். இரண்டாம் பத்தைப் பாடியவர் குமிட்டூர்க் கண்ணனார். பாடப் பட்டவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன். பதிகம் பாடியது யாரென்று தெரியவில்லை. பதிகங்கள் மூலத்தோடு அன்றி உரைச்சுவடிகளில் மட்டும் உள்ளதால், பதிற்றுப் பத்தைத் தொகுத்தவர் இவற்றை இயற்றியிருக்கலாம் என்பர். 

கடைசிப் பத்தின் தலைவனான யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குப் பின்னிருந்த ஆதன்களும், இரும்பொறைகளும் பதிற்றுப் பத்தில் இடம் பெறாததால், கடைசிப் பத்து எழுந்த சில ஆண்டுகளில் (பொ.உ.மு. இறுதிகளில்) தொகுப்பு நடந்திருக்கலாமோ என எண்ணுகிறோம். இப்பதிகம் சிறியதாயினும் நெடுஞ்சேரலாதனின் பெற்றோரில் தொடங்கி, முகன (main) வாழ்க்கை நிகழ்ச்சிகளை கால வரிசையிற் கூறுவதால் என் விளக்கமும் சற்று பெரிதாகிறது. ஊடே மண்ணு மங்கலம், வாள் மங்கலம், நெய்யிடுதல் போன்ற சில விதப்பான மரபுகளையுஞ் சொல்லவேண்டியுள்ளது. 

-------------------------------- 

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி

இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு

வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற 

மகன்

அமைவரல் அருவி இமையவில் பொறித்து

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்

தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து

நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ

அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு

பெருவிறல் மூதூர்த் தந்துபிறர்க் குதவி

அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்.

இமையவரம்ப நெடுஞ்சேரலாதனைக் 

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு. 

அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பலபுகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன், இவை பாட்டின் பதிகம். பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தெண்ணாட்டுள் வருவதனிற் பாகம் கொத்தான் அக்கோ.. இமையவரம்ப நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்    

------------------------------

என்பது பாட்டும் அதன் பின்குறிப்பும் ஆகும். பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

---------------------------

மன்னிய பெரும்புகழ் மறு இல் வாய்மொழி

இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு,

வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்

அமைவரல் அருவி இமையம் வில் பொறித்து,

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇ, 

தகைசால் சிறப்பொடு பேர்இசை மரபின் ஆரியர் வணக்கி,

நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து,

நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ,

அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு,

பெருவிறல் மூதூர்த் தந்து, 

பிறர்க்கு உதவி,

அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்தாள் 

இமையவரம்ப நெடுஞ்சேரலாதனைக் 

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு. 

அவை தாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பலபுகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வலம்படு வியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர் மார்பன், இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில்: உம்பற் காட்டு ஐந்நூறூர் பிரம தாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தெள் நாட்டுள் வருவதனிற் பாகம் கொத்தான் அக்கோ. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்  

-------------------------------------

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். மன்னிய பெரும்புகழ் = நிலைத்த பெரும்புகழும்; மறுஇல் வாய்மொழி = குற்றமிலா வாய்மொழியும்; இன்னிசை முரசின் = இனிது இசைக்கும் முரசுங் கொண்ட; உதியஞ் சேரற்கு = வானவரம்பன் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனுக்கு; இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-143 ஆகும். முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் இவனைப் பாடுவார். அதில் வரும் ஈரைம்பதின்மர் என்பார் நூற்றுவர் கன்னரே (சதகர்ணிகள்) ஆகும். 

பலருஞ் சொல்வது போல் இப்பாட்டில் சொல்லப் படுவது பாரதப் போர் அல்ல. புறம் 2 இன் செய்தியைக் கௌரவ - பாண்டவப் போராய்ச் சித்தரிப்பது தேவையற்ற ”பௌராணிகப்” பார்வை. (இந்தப் பார்வையால் தப்பான புரிதலும் ஏற்படுகிறது.) உதியஞ் சேரல் காலத்திலேயே அசோகனின் ஆட்சிமுறைத் தாக்கம் சேரர் மேல் தொடங்கி விட்டது. கூடவே மோரியருக்கு அடுத்து வந்த சுங்கரின் மேல் சேரருக்குக் கடுப்பிருந்ததும் நாட்பட்ட கதையாகும். 

(ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடை நடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரர் இருந்தார். உதியன் சேரல் காலத்தில் இருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்தது. சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலப்பதிகாரத்தால் விளங்கும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத் தொடரையும் படியுங்கள். 

http://valavu.blogspot.in/2010/08/2-1.htmlம்

http://valavu.blogspot.in/2010/08/2-2.html

http://valavu.blogspot.in/2010/08/2-3.html

http://valavu.blogspot.in/2010/08/2-4.html

http://valavu.blogspot.in/2010/08/2-5.html

வெளியன் வேண்மாள் நல்லினி = வெளியன் வேளின் மகளாகிய நல்லினி; வெளியன் வேள் பெரும்பாலும் பொதினியின் ஆவியர் குலத்தைச் சேர்ந்திருக்கலாம். (இற்றைப் பழனியே பழம் பொதினி. அதன் அடிவாரத்தில் தான் ஆவினன்குடி எனும் ஊர் உள்ளது.) ஆவியர் குடியோடு சேரர் குடிக்குக் கொடிவழி தோறும் மணத் தொடர்பு இருந்துள்ளது. 

உதியனின் மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குடக்கோ நெடுஞ் சேரலாதன் என்பர். இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 166 - 109. அக்காலத் தமிழகத்தில் 16/18 அகவையில் ஆண்மகனுக்குத் திருமணம் நடந்து விடும். 20/25 இல் இளவரசுப் பட்டஞ் சூட்டிவிடுவர். ஆட்சியாண்டுகள், இளவரசுப் பட்டம் கட்டியதிலிருந்தே கணக்கிடப் படும். இல்லாவிடில், ”58 ஆண்டு நெடுஞ்சேரலாதனாட்சி”, ”55 ஆண்டு செங்குட்டுவனாட்சி” என்ற தொடர்களுக்குப் பொருள் இராது. அரசுப் பட்டமளிப்பு யாருக்கும் தனித்து நடந்ததாய் பதிற்றுப்பத்துக் குறிப்புகள் தெரிவிப்பதில்லை.   

நெடுஞ்சேரலாதனுக்கு 2 மனைவியருண்டு. நெடுஞ்சேரலதனின் தாய் நல்லினியின் சோதரன் தான் வேளாவிக் கோமான் (இவன் மன்னன் இல்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன், ஊர்ப் பெரியவன்.) ஆவான். நெடுஞ்சேரலாதன்,  வேளாவிக் கோமானின் முத்த மகள் பதுமன் தேவியை, தன் முதல் மனைவியாய்ப் பெற்றான். அவள் மூலம் இவனுக்குப் பிறந்தவர் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆவர். சேரலாதனின் அடுத்த மனைவி ஞாயிற்றுச் சோழனின் மகளான நற்சோணை. இவளுக்குப் பிறந்தவனான  செங்குட்டுவன் முந்தை இருவருக்கும் இடைப்பட்டவன் ஆவான். 

நெடுஞ் சேரலாதனின் மகனாய்ப் பலருஞ் சொல்லும் இளங்கோவின் இருப்பு சிலம்பின் வரந்தரு காதை 171-183 வரிகளில் மட்டுமே அன்றி வேறெங்கும் தென்படுவதில்லை. அக்காதையை இடைச் செருகல் என நான் ஐயுறுவதால் இளங்கோ என்பவர் செங்குட்டுவனின் தம்பி என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் சிலம்பின் ஆசிரியர். அவ்வளவு தான். அவர் பற்றிய செய்திகள் வேறெங்குமோ, பதிற்றுப் பத்திலோ வரவில்லை. வரந்தரு காதையில் உள்ள பெரும் முரண்களைப் பற்றி  என் ”சிலம்பின் காலம்” நூலில் தெரிவித்துள்ளேன். 

குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்குப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற தம்பியுண்டு. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 156 - 132. இவன் வேந்தன் ஆகாததால், வானவரம்பன் எனும் பட்டத்தைச் சூடான். அடுத்தது களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். இவன் காலம் பொ.உ.மு. 131-107. இவனின் இயற் பெயர் தெரியவில்லை. இவன் பெயரின் முன்னொட்டு ஒருவகை மகுடத்தைக் குறிக்கும். நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இறந்த பின், தன் மூத்தாள் மகனுக்கும், இளையாள் மகனுக்கும் சம காலத்தில் நெடுஞ்சேரலாதனே இளவரசுப் பட்டஞ் சூட்டியிருக்கலாம். நெடுஞ்சேரலாதனுக்குப் பின்  நார்முடிச் சேரல் வானவரம்பன் ஆகி அரசுகட்டில் ஏறினான். இவனுக்கு இன்னொரு பெயரும் இருந்திருக்கலாமென்று ஊகிக்கிறோம்.    

புறம் 62 இல் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வளநாட்டு வேற்பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும் (நெடுஞ்சேரலாதனின் மைத்துனன்; நற்சோணையின் சோதரன்) பொருதுகையில் இருவரும் இறந்து பட்டதாய்க் கழாத்தலையார் சொல்வார். அதே பொழுது புறம் 65 இல் நாக நாட்டுக் கரிகால் வளவன் [பெரும்பாலும் இவன் 2 ஆம் கரிகாலன் ஆகலாம். முதற் கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின் மேல் படையெடுத்ததைச் சிலம்பால் அறிவோம். முதற் கரிகாலனையும், அடுத்தவனையும் பல ஆய்வாளர்  குழம்பித் தடுமாறுவார்.] வெற்றி பெற்றதையும், பெருஞ் சேரலாதன் வடக்கு இருந்ததையும் சொல்வார். எனவே நெடுஞ்சேரலாதன் வேறு, பெருஞ்சேரலாதன் வேறு என்பது புரியும். ஆழ ஆய்ந்தால் புறம் 62 இல் விவரிக்கப் படுபவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று விளங்கும். அப்படியெனில் 65 ஆம் பாட்டில் வரும் பெருஞ்சேரலாதன் யார்? . 

நார்முடிச் சேரல், வாகைப் பெருந்துறையில் நன்னனை வெற்றி கொண்டது பதிற்றுப்பத்தில் பெருஞ் செயலாய்ச் சொல்லப் பெறும். ”வாகைப் பெருந்துறைச் சேரலாதன்” என்று வருங் கூற்றே, ”பெருஞ்சேரலாதன்” பெயருக்கு விளி கொடுத்தது ஆகலாம். அதை வைத்துப் பார்த்தால், கி.மு.131-107 என்ற இடைப் பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதன் என்றும் நடுத்தம்பியைக் குட்டுவச்(=சிறிய) சேரலாதன் என்றும், கடைத் தம்பியை ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச் சேரலே பெருஞ்சேரலாதனாக இருந்திருக்க வாய்ப்புண்டு. இவ்விளக்கத்தோடு புறநானூற்றில் சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடிய 66ஆம் பாட்டைப் பார்க்கலாம். இப்பாட்டில் கரிகால் வளவனின் பெயர் வெளிப்பட வரும். பெருஞ்சேரலாதனைப் பெயர் சொல்லாமற் குறிப்பார்,   

இனிக்  கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவன் என முதலிலும் கங்கைப் பேர்யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன் எனப் பின்னும், பெயர் பெற்றவனைப் பார்ப்போம். இவன் காலம் பொ.உ.மு.131-77 ஆகும். வெல்கெழு குட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறென்று பல காலம் தமிழறிஞர் பிளவு பட்டார். இதில் வேடிக்கை என்ன தெரியுமோ? இவனுடைய இயற்பெயர் என்னவென இன்றும் கூட யாருக்கும் தெரியாது. 

இன்றுங் குட்டுவனைக் குட்டனென மலையாளத்தில் சொல்வார். சிறியவன் என்று பொருள்படும். அகவை, அளவு, முறை இப்படி எத்தனையோ வகையில் குட்டனாகலாம். ஈழப் பெருந்தலைவரான பிறகும், பிரபாகரனைத் ”தம்பி” என அழைத்தவர் மிகுதி. அவர் பெயர் தம்பியா? இல்லையே? விளிப் பெயரே எல்லோருக்கும் பரவலாய்ப் பழகிப் போயிற்று. குட்டுவனும் அப்படித் தான். வெல்கெழு குட்டுவன் = வெல்லுங் குணங் கொண்ட குட்டுவன்;. செங்குட்டுவன் = செந் நிறக் குட்டுவன். அவ்வளவு தான் தமிழரில் இப்படிப் பெயர்கள் அமைவது கொஞ்சமும் வியப்பேயில்லை. இப்படிச் சில பெயர்கள் சட்டென்று பொருந்திக் கொள்ளும். 

செங்குட்டுவன் கங்கைக்கரை போகிய செயல் பதிற்றுப்பத்தின் 4ஆம் பத்தில் வராது  பதிகத்தில் மட்டுமே வரும். கண்ணகிக்குக் கல்லெடுத்தது குட்டுவனின் கடைசிக் காலத்தில் என்றே கொள்ள வேண்டியுள்ளது. குட்டுவன் 55 ஆண்டு காலம் ஆட்சி செய்தான். அவன் விறல் வெளிப்பட வெளிப்பட விதம் விதமாய்ப் பாடியோர்அழைத்திருப்பார். 25 வயதிற் குட்டுவன் இளங்கோ ஆகையில் பரணருக்கு 50 வயதென வையுங்கள். கடல் பிறக்கோட்டிய செயல் அடுத்த சில ஆண்டுகளில் நடந்தால், பரணர் அதைச் சொல்வார். அதன்பின் செங்குட்டுவன் நடு அகவை ஆகையில் முதல் முறை வடக்கே படையெடுத்துப் போனான். (பரணர் உயிரோடிருந்தால் தானே இதைச் சொல்வார்? இயலுமையை எண்ணிப் பாருங்கள்.) இது சேரரின் இரண்டாம் வடபடையெடுப்பு. (முதற்படையெடுப்பு குடக்கோ நெடுஞ்சேரலாதனின் இளமைக் காலத்தில் நடந்தது.)  

வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்

கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது

கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்

எங்கோ மகளை ஆட்டிய அந்நாள் 

ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு

ஒருநீ யாகிய செருவெங் கோலம்

கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்

என்பது சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தின் காட்சிக் காதை 158-164 வரிகளாகும். இது அமைச்சன் வில்லவன் கோதையின் கூற்று. இங்கே கோமகள் என்றது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இரண்டாம் மனைவி நற்சோணையை. அவள் கங்கையில் ஆடியது பெரும்பாலும் வாரணாசியாகலாம். பொதுவாய்ப் பலரும் ஒரு முறையே செங்குட்டுவன் வடக்கே போனதாய் எண்ணிக் கொள்கிறார். கிடையாது. சிலம்பின் படி அவன் இரு முறை போயுள்ளான். முதல் முறையில் பெரும்பாலும் சுங்கன் வஜ்ரமித்ர பாகபத்ரனோடு சண்டையிட்டிருக்கலாம். இரண்டாம் முறை பாகபத்ரனின் மகன் தேவபூதியோடும், அவன் அமைச்சன் விசய கனகனோடும் சண்டை இட்டிருக்கலாம். செங்குட்டுவனின் முதல் படையெடுப்பின் பின்புலம் தேடுவோம். 

சுங்கன் வஜ்ரமித்ர பாகபத்ரன் காலத்தில் (பொ.உ.மு. 119-83) மகதம் ஆட்டங் கொள்ளத் தொடங்கியது. பாடலி புத்தத்திற்கு மாறாய் விதிசாவுக்கு (இதை Beznagar என்பார். இற்றை ம.பி. மாநிலத்தில் உள்ளது. இங்கு தான் அசோகன் முதற்கொண்டு பல்வேறு மகத இளவரசர் ஆட்சி புரிந்துள்ளார்.) தலைநகரும் மாற்றப்பட்டது.  கொஞ்சங் கொஞ்சமாய் மகதம்  சுருங்கியது. 

கலிங்கர், நூற்றுவர் கன்னர், இந்தோ-சித்திய “சக” அரசர் என மகதத்தைக் கவரமுயன்ற பலரோடும் சண்டைகள் தொடங்கின. இக்காலத்தில் தான் பாணினியின் ”அட்ட அத்தியாயிக்கு” பதஞ்சலியார்  மாபாடிய (மகாபாஷ்ய) விரிவுரை எழுதினார். பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சூற்றம் (சந்தசூத்ரம்) சுங்கர் கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம். 

பாகபத்ரனின் ஆட்சி முடிவில் நூற்றுவர் கன்னர் மகதத்தைத் தாமே பிடித்துக் கொள்ள முயன்றார். மகதம் வலி இழந்தது இந்தியா எங்கணும் தெரிந்திருக்கும். இந்நேரத்தில் சேரன் செங்குட்டுவனும் வடக்கே படையெடுத்துப் போகத் துறுதுறுத்தது இயற்கையே. இக்காலத்தில் செங்குட்டுவன் தன் தந்தையின் சார்பாக முதல்முறையாக வடக்கே சென்றுள்ளான். அவன் தாய் கங்கையில் முழுக்காட வந்ததாய்ச் சிலம்பின் காட்சிக்காதை 160-161 வரிகள் தெரிவிக்கும். 

2 ஆம் முறை கங்கைக்கரை போகையில் செங்குட்டுவனுக்கு அகவை 78/80 ஆயிருக்கலாம். மகதக் குழப்பத்திற் தானும் புகுந்து இன்னொரு முறை விளையாட முடியுமென்று சேரனுக்குத் தெரிந்த காரணத்தால் கண்ணகி கதையைத்  தன் அரச முயற்சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறான். செங்குட்டுவன் 2 ஆம் படையெடுப்பு நடக்கும்போது இருந்த சுங்க அரசன் தேவபூதி ஆகலாம். இவன் காலம் பொ.உ.மு. 83-73 (இக் கடைசிச் சுங்கன். அளவு மீறிய காமத்திலும், கேளிக்கையிலும் ஈடுபட்டதால், இவன் முதலமைச்சனான வாசுதேவக் கனகனே பின்னாற் கொன்று விடுவான். விசயன் என்பது வாசு தேவனின் மறு பெயரோ, அன்றி வாசு தேவனின் தந்தையோ எனத் தெரிய வில்லை.).

அதற்கு அப்புறம் கனகரே மகதத்தை ஆட்சி செய்வார். தேவபூதிக்குத் தனுத்ர பூதியென்ற பெயரும் இருக்கலாம். பாகதச் சான்றுகள் கொண்டு இம்முடிவை உறுதிசெய்ய வேண்டும். ”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்ரன் சிவேதன்” என ஆரியவரசர் பெயர்களைச் சிலப்பதிகாரஞ் சொல்லும். ”இவற்றில் எவை இனக்குழுப் பெயர், எவை இயற்பெயர்?” என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ”சிங்கன் தனுத்ரன்” என்பது ”சுங்கன் தனுத்ரனாய் இருக்குமோ?” என்ற ஐயம் கட்டாயம் எழுகிறது. இது சேரரின் 3 ஆம்  படையெடுப்பு. மயிலை சீனி வேங்கடசாமியாரும் சேரர் 3 முறை வடக்கே படையெடுத்ததாய்ச் சொல்வார். 

செங்குட்டுவனுக்குப் பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பட்டமேறினான். 6 ஆம் பத்தின் பதிகம் ”நெடுந்தொலை உள்ள தொண்டகக் காட்டுள் பகைவர் கொண்டுபோன வருடைக் (ஆடு) கூட்டத்தைப் பெருமுயற்சியால் தொண்டித் துறைக்குத் திரும்பக் கொணர்ந்தவன்” என ஆடுகோட்பாட்டிற்குப் பொருள் சொல்லும். பழம்போரில் ஆக்களைக்  கவர்வதை வெட்சியென்றும், மீட்டுவதைக் கரந்தை என்றுஞ் சொல்வர். தொல்காப்பியர் கரந்தையை வெட்சியின் ஒரு பகுதியாகவே சொல்வார். தவிர, இரண்டுஞ் சேர்ந்தது ஆகோட் பூசலாகும். அதேபோல் ஆடுகோட் பூசலுமுண்டு. 

பெரும்பாலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் காலம் பொ.உ.மு. 106-75 ஆகும். செங்குட்டுவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்து வானவரம்பன் எனும் பெயருங் கொள்வான். இவன் வேந்தனானதற்கு இதுவே அடையாளம். இவனுக்கு ஆட்டனத்தி எனும் இன்னொரு பாகமும் உண்டு. ஆடுவதில் பெருந்திறன் பெற்றவன்; செந்நிறத்தால் அத்தியெனும் (=சிவப்பு) விளிப்பெயர் உற்றான். நெடுஞ்சேரலாதன் வள நாட்டிற் பெண்ணெடுத்தான். அவன் மகன் நாக நாட்டில் மணந்து கொண்டான். 

(பெண் கொடுப்பதும், சண்டை போடுவதும் மூவேந்தரிடை தொடர்ந்து நடந்த கூத்துகள்.) பெரும்பாலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனே 2 ஆம் கரிகாலன் மகள் ஆதிமந்தியை மணந்திருக்கலாம். சிலப்பதிகாரம் இவன் அரசவையில் அரங்கு ஏறியிருக்கலாம். இதன் காரணத்தைச் “சிலம்பின் காலம்” நூலில் விளக்கியிருப்பேன். செங்குட்டுவனின் மகன் குட்டுவன் சேரல் (இயற்பெயர் தெரியாது) பற்றிய விவரம் நமக்குத் தெரியவில்லை. 

இப்போது 2ஆம் பத்தின் பதிகத்திற்கு வருவோம். அமைவரல் அருவி = நெஞ்சையள்ளும் அருவியுள்ள; இமையம் வில்பொறித்து =இமையத்தில் விற்சின்னம் பொறித்து; இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க = ஓசுங் கடல்வேலி கொண்ட தமிழகம் விளங்கும்படி; தன்கோல் நிறீஇ = தன் செங்கோலை (அங்கு) நிறுவி; தகைசால் சிறப்பொடு = தகுதிநிறைச் சிறப்பொடு; பேரிசை மரபின் ஆரியர் வணக்கி = பெரும்புகழ் மரபு கொண்ட ஆரியரை அடக்கி; 

ஆரியரென்போர் இங்கு எதிரியாகவே மதிப்புடன் சிறப்பித்துச் சொல்லப் படுகிறார். அவருக்கும் தனி மரபுண்டு என்று ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அப்படி ஆவதாலேயே தமிழர் மரபும், ஆரியர் மரபும் சில வகைகளில் வேறு படலாம் என்பது வெள்ளிடைமலை; இப்படையெடுப்பு நெடுஞ்சேரலாதன் பட்டமேறிய சில ஆண்டுகளுள், பெரும்பாலும் பொ.உ.மு 160 க்கு அருகில் நடந்திருக்கலாம். அப்போது மோரியரரசைத் தொலைத்து புஷ்யமித்திரன் (பொ/உ/மு.165-149) வந்து விட்டான். 

[இங்கே ஒரு போகூழைச் சொல்லித் தான் ஆகவேண்டும். வில்லும், புலியும், கயலும் இமையத்தில் பொறித்ததை இலக்கியத்திற் பலகாலம் நாம் படித்தாலும், அவை எந்த இடங்கள் என்று நமக்குத் தெரியாது. குத்து மதிப்பாய், காசிக்கும், பாட்னாவிற்கும் வடக்கிருக்கலாமென ஊகஞ் செய்கிறோம். சான்றுகளுடன் இவற்றை நிறுவ ஒரு செய்தியும் நமக்கு இதுவரை கிட்டவில்லை. தொல்லோவியர், கல்வெட்டாளர் போன்றோர் வட நில ஆய்வாளருடன் சேர்ந்து தேட வேண்டும். பதிற்றுப் பத்து அரசருக்கு இணையான சுங்கர், கனகர் பற்றிய வட தரவுகள் நமக்கு வேண்டும். சேரலாதனும் செங்குட்டுவனும் வடக்கே போனாரா என்பதை நம் பக்கச் சான்றைக் கொண்டு சொல்வது ஒரு வகை. எதிரிகள் பக்கம் இருந்து காண்பது இன்னொரு வகை. பல்லாசிரியரும் அசோக மோரியனுக்கு அப்புறம் குத்தருக்குத் (குப்தர்) தாவிவிடுவார். கிட்டத்தட்ட 400 ஆண்டு காலம் அங்கும் ஒரு பெரிய வரலாற்று இடைவெளி இருக்கும். தவிர வடபகுதிகளின் மாகத (புத்த), அர்த்த மாகத (செயின) நூல்களைப் பார்க்க வேண்டும். 

நம்மூர் ஆய்வாளர் பாலி, பாகத மொழிகளை அறிவது மிக இன்றியமையாதது. சங்கதம் வைத்தே எல்லாஞ் செய்து விடலாம் என்பது கானல் நீர். சங்ககால வரலாற்றை அறியச் சங்கத நூல்கள் இதுவரை உதவவில்லை. சங்க காலத்தை முன் சொன்னது போல் பொ.உ.மு.600-பொ.உ.150 இல் தேடவேண்டும். பொ.உ.மு.300-பொ,உ. 300 என்பது வரலாற்றாய்வில்  நாம் இதுவரை செய்த பெரும்பிழை. அதை அப்படியே புளியங்கொம்பாய்ப் பிடித்துக் கொண்டு  ”அவர் சொன்னார், இவர் சொன்னார்” என. 20ஆம் நூற்றாண்டு ஆய்வாளர் வழி நூறாண்டு காலம் தவறாய்த் தேடி முட்டுச்சந்துக்குள் வந்து விட்டோம். 

இன்னுந் தள்ளி பொ.உ.500 வரை சிலம்பைத் தள்ளுவது முற்றிலும் வறட்டுத் தனமானது, போகாத ஊருக்கு வழி தேடுவதாகும். Status quo doesn't take us anywhere. பல்லாண்டு ஆய்வின் பின் தான் இதைச் சொல்கிறேன். சங்க கால மகதத்தில் பாகதமே பேராட்சி பெற்றது. சங்கதம் வடமேற்கிருந்து கொஞ்சங் கொஞ்சமாய் எழுந்து படித்தோரிடையே பரவியது. குத்தருக்கு அப்புறமே வடக்கிலும் (பல்லவருக்கு அப்புறமே தெற்கிலும்) சங்கதம் மேலோங்கியது.] 

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து = நயமிலா வன்சொல் பேசும் யவனரைச் சிறைப்படுத்தி; ஆரியரைச் சொன்னவுடன் யவனரைச் சொல்வதால் இது இந்தோ-சித்தியரை/ சத்ரபரை/ சகரை என்று புரிந்துகொள்ள வேண்டும். அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் வந்து வெளிச்சென்ற போது அவர் படையும், ஆளுநரும் இங்கே இருத்தி வைக்கப்பட்டார். பின்னால் இந்த ஆளுநர் தனித்தியங்கும் மன்னராய் மாறி மதிப்புடன் இந்தியாவிற்குள் விரிய நுழைந்தார். 

அவந்தி நாட்டின் உச்செயினி வரை அவர் வந்தார். அவந்தி நாட்டோடு தமிழர்க்கு இருந்த தொடர்பு சிலப்பதிகாரத்தால் வெளிப்படும். முதலாங் கரிகாலன் காலத்தில் (கிட்டத்தட்ட பொ.உ.மு.462) தமிழகத்தோடு நட்பாக இருந்த அவந்தி நாடு பின் காலங்களில் நட்பாகவும் பகையாகவும் ஆட்சியாளருக்குத் தக்க மாறி மாறி இருந்தது. படித்தானம் தொடங்கி மகதம் வரை செல்லும் தக்கணப் பாதைக்கு உச்செயினி மிக அருகில் தான் இருந்தது. இந்தோ - சித்திய யவனரை பொ.உ.மு.160 இல் தெற்கிருந்து வடக்கே போன சேரர் சிறைப்படுத்துவது நடக்கக் கூடியது தான் 

நெய்தலைப் பெய்து = (வாளின்) தலையில் நெய்யிடுஞ் சடங்கு செய்து; கைபின் கொளீஇ = பின் அதைக் கையிற் கொண்டு;

இங்கோர் இடைவிலகல். ”நெய்யிடுதல் ஏதோ கப்பலில் வந்த யவனருக்கு அளித்த தண்டனை என்றே” உரையாசிரியரும், தமிழாசிரியரும் தவறாய்ப் பொருள் சொல்வர். மாறாக ”இது மங்கலமானது; சேரன் பக்கஞ் சொல்வது; யவனர் பக்கமல்ல” என்பதை இன்றும் மிஞ்சிக் கிடக்கும் மரபுகள் சொல்லும். பட்டமேறல் (அரசர், சமய ஆதீனங்கள் பட்டம் ஏறுவது, ஆண்டு தோறும் அதைக் கொண்டாடுவது), நல்ல நாள், பெரிய நாட்களில் வீட்டுப் பெரியவர் தலைவருக்குச் செய்வது, கோயில் குடமுழுக்கிற் செய்வது, இறைப் படிமத்திற்குத் திருமஞ்சனம் ஆட்டுவது எனப் பல்வேறு விழவுகளில் நெய் தலைப்பெய்தல் இன்றும் கூட நடக்கிறது. இவ்வளவு ஏன்? மணம்முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் பிள்ளை வீட்டிற்குச் செல்லுமுன் பெண்வீட்டில் மஞ்சள்நீராட்டின் முன் ஒவ்வொரு பெரியவரும் இவர் தலையில் நெய்யைச் சிறிதேயிட்டுப் மஞ்சளுந் தடவி சிகைக்காயும் பூசி நீராடலாகும். மாப்பிள்ளையும், பெண்ணும் புதுக் குடித்தனம் போகிறாரல்லவா? புது வாழ்க்கைக்கு வாழ்த்துக் கூறி நெய் தலைப்பெய்தல் இன்றும் நடைபெறுகிறது. 

இப் பழக்கம் சீவக சிந்தாமணி கோவிந்தையார் இலம்பகத்திலும் (487 ஆம் பாட்டு) குறிக்கப்படும். 

நாழியுள் இழுது நாகுஆன் கன்றுதின்று ஒழிந்த புல் தோய்த்து

ஊழுதொறு ஆவும் தோழும் போன்றுடன் மூக்க என்று

தாழிருங் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி 

மூழைநீர் சொரிந்து மொய்கொள் ஆயத்தியர் ஆட்டினாரே

நெய்யிடும் இப் பழக்கம் இன்று தீபாவளிப்பண்டிகையின் போதும் தொடர்கிறது. (நான் தீபாவளிப்பண்டிகையின் தோற்றத்துள் போகவில்லை. அதனுள் நடக்கும் ஒரு சடங்கை மட்டுமே சொல்கிறேன்.) தீபாவளியின் தொடக்கமாய்த் தலையில் எண்ணெய் தேய்த்து நீராடும் வழக்கம் மண்ணுமங்கலத்தில் தொடங்கியது.  

ஆங்கிலத்தில் இச் சடங்கை anointing என்பர். unction என்றொரு பெயருமுண்டு. உலகமெங்கும் நெய் தலைப்பெய்தல் வெவ்வேறு நாகரிகங்களில் நடந்துள்ளது. http://biblehub.com/topical/a/anointing.htm என்ற வலைத்தளம் பாருங்கள். விவிலியத்திற்கூட ஆசிகூறித் தலையில் நெய்யிடும் பழக்கமுண்டு. இதைக் குறிக்கும் பலமொழிச் சொற்களிலும் நெய் உள்ளே அடங்கிக் கிடக்கும். தமிழன் நாகரிக முன்னோடி என்றால் நம்ப ஆளில்லாது இருக்கலாம். ஆனால் anointing என்பதற்குள் ”நெய்” என்ற சொல் கட்டாயமுண்டு. [Pun intended] unguent (n.) Look up unguent at Dictionary.com. "ointment," early 15c., from Latin unguentem "ointment," from stem of unguere "to anoint or smear with ointment," from PIE root *ongw- "to salve, anoint" (source also of Sanskrit anakti "anoints, smears," Armenian aucanem "I anoint," Old Prussian anctan "butter," Old High German ancho, German anke "butter," Old Irish imb, Welsh ymenyn "butter")

நெய்யிடல் சேர்ந்த நீராட்டு வழக்கம் மண்ணனம் என்றும்,. மண்ணுமங்கலம் என்றும் பழந்தமிழ் வழக்கிற் சொல்லப்படும். (மண்ணுதல் = நீராடுதல், மூழ்குதல், கழுவுதல், பூசுதல், செய்தல், அலங்கரித்தல், செப்பமிடுதல். மண்ணனம்>மஞ்ஞனம்>மஞ்சனம் என்றும் இது திரியும். மங்கலத்தை திருவென்ற வேறு சொல்லாக்கி இன்று திருமஞ்சனம் என்கிறோம். இந்த விண்ணவச் சொல் மண்ணுமங்கலத்தில் எழுந்தது. பொதுவாய் விண்ணவ, சிவ ஆகமங்களில் உள்ள பல்வேறு பழக்கங்களும் பழங்குடிப் பழக்கங்களாய் ஆகின்றன. சமயங்களுக்கும் இதற்கும் மெய்யியல் வரிதியாய்ப் பெரிதும் உறவைக் காணோம்.) தொல்காப்பியம் பொருளதிகாரம், புறத்திணை இயலில் பாடாண் திணையை விவரிக்கையில் 1037 ஆம் நூற்பாவில் “சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம்” என்று வரும். 

சேரன் பட்டமேறிய போதும் ஓவ்வோராண்டும் இது நடைபெற்றிருக்கும். இங்கே இன்னும் விதந்து வேறொன்று சொல்லப் படுகிறது. ஒரு பெரிய போரில் வெற்றி பெற்று வந்த பின்னால் வாள், வேல், முரசு போன்றவற்றிற்குப் படையல் நடக்கும். அதிலும் இந் நெய்யிடுதற் சடங்கு நடைபெறும். அந்நிகழ்வை பழங்காலத்தில் வாள்மங்கலம் என்பர். இதுவும் மேற்சொன்ன நூற்பாவில், மாணார்ச் சுட்டிய வாள்மங்கலம்” என்று குறிப்பிடப்பெறும். (மாணார் = பகைவர்)     . .

அருவிலை நன்கலம் = அருவிலையுள்ள நல்ல அணிகலன்களை வயிரமொடு = (அதிற் பொருத்திய) வயிரத்தோடு கொண்டு; பெருவிறல் மூதூர்த் தந்து = பெருவல்லமையோடு தலைநகர்க்குத் தந்து; பிறர்க்கு உதவி = பிறருக்கு உதவி; அமையார்த் தேய்த்த = அடங்காதாவரை அழித்த அணங்குடை நோன் தாள் = அணங்குடைய வலியகால் கொண்ட; இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை =  இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை;     

இனிப் பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

நிலைத்த பெரும்புகழும், மறுவிலா வாய்மொழியும், 

இனிதேயிசைக்கும் முரசுங் கொண்ட 

வானவரம்பன் உதியஞ்சேரலாதனுக்கு, 

வெளியன்வேள் மகளாகிய நல்லினி ஈன்ற மகன்

நெஞ்சையள்ளும் அருவியுள்ள இமையத்தில் வில்பொறித்து, 

ஓசுங்கடல்வேலி கொண்ட தமிழகம் விளங்கும்படி தன் செங்கோல் நிறுவி, 

தகுதிநிறைச் சிறப்பொடு பெரும்புகழ் மரபுகொண்ட ஆரியரை அடக்கி, 

நயமிலா வன்சொல்பேசும் யவனரின் பொருளைச் சிறைப்படுத்தி, 

அவ்வெற்றியின் பின், 

(வாளின்) தலையில் நெய்யிடுஞ் சடங்கு செய்து 

பின் வாளைக் கையிற்கொண்டு,, 

அருவிலையுள்ள நல்ல அணிகலன்களை, 

(அதிற்பொருந்திய) வயிரத்தோடு கொண்டு, 

பெருவல்லமையோடு தலைநகர்க்குத் தந்து, 

பிறருக்கு உதவி, 

அடங்காதாவரை அழித்த, 

அணங்குடைய வலியகால் கொண்ட, 

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை;     

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு. 

அன்புடன்,

இராம.கி.


Monday, May 08, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 5

 அடுத்தது பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாட்டு. இதற்குள் போகுமுன் முன்குறிப்புகளைப் பார்ப்போம்.  

ஒரு மொழியின் தொடக்கத்தில் தான்தோன்றியான கருத்துச்சொற்கள் (idea words) எழா. பருப்பொருட் சொற்களே (material words) எழும். பருப்பொருளில் இருந்தே, பகரிக் (rebus) கொள்கையின் படி கருத்துச்சொல் உருவாகும். அவ்வகையில் பன்மையைக் குறிக்கத் தமிழ்ப் பழங்குடி மாந்தன் பல்லையே அடையாளங் காட்டினான். 10 எனுங் எண்ணிக்கைப் பொருள் நெடுங்காலத்திற்குப் பிறகே அமைந்தது. இதன் தொடக்கம் பல் (>பல்த்து>பத்து>பது) என்பதே. இதே போல 3 ஐக் குறிக்க மூக்கையும், 5 ஐக் குறிக்க கையையும் காட்டியே தமிழெண்கள் எழுந்தன. 

1,2, 3, 5, 10 என்ற சொற்களில் இருந்து கூட்டல், கழித்தல், பெருக்கல் முறையில் மற்ற தமிழெண்கள் தோன்றின. [அவற்றை வேறு பொழுதில் பார்க்கலாம்.] பதில்/பதின் என்பவை பத்தோடு சேர்ந்து ஒரு தொகுதியாகும். பதினொன்று, பதினிரண்டு,.. பதினெட்டென்று எண்கள் வரும். கூடவே, பதினிரண்டு பன்னிரண்டென்றும், பதினொன்பது பத்தொன்பதென்றும் பேச்சில் திரியும். பப்பத்துப் பாட்டுகளாய் 10 ”பத்தில்>பதில்” கொண்டது பதிற்றுப் பத்து. பதில்+து = பதிற்று. பற்றிக் (பக்திக்) காலத்திலிருந்து இப்போதுவரைப் பதிகம் என்ற சொல்லையே பதிலுக்கு மாறாய்ப் பயன்படுத்துகிறார். பதில்/பதின் என்பது இப்போது வழக்கற்றுப் போனது.

உ.வே.சா.விற்குக் கிடைத்த பதிற்றுப் பத்தில் ஏடுகள் அரிந்ததால், 1 ஆம் பத்தும், 10 ஆம் பத்தும் கிடைக்க வில்லை (ஆனால் இன்னதென்று சொல்ல முடியா 5 துண்டுகள் மட்டும் கிடைத்தன.) முதலாம் பத்து உதியஞ் சேரலைக் குறித்திருக்கலாம் என்பர். அடுத்த 5 பத்துகள் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க் கன்னி நார்முடிச் சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்ற ஆதன் பரம்பரையினரைக் குற்க்கும்.

மேலும் 3 பத்துகள் இரும்பொறைக் குடியின் செல்வக் கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை ஆகியோரைப் பேசும். முன்சொன்ன துண்டுகளால் பத்தாம்  பத்து பெரும்பாலும் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்கே எனவுஞ் சிலர் ஊகிப்பர். பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் உள்ளே வரும் தொடரை வைத்துத் தனித் தலைப்பு உண்டு. இக் குறிப்பிட்ட பாட்டின் தலைப்பு “*புண் உமிழ் குருதி*. இதைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார். பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். 

குமட்டூர் என்பது பெரும்பாலும் குமிட்டூர் ஆகலாம். 2 ஆம் பதிகத்தின் கீழே ”பாடிப் பெற்ற பரிசில் உம்பற் காட்டு ஐந்நூறூர் பிரம தாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதலிற் பாகங் கொடுத்தான் அக் கோ.” என்ற குறிப்பு வரும். இக்கூற்றை வைத்துக் குமிட்டூரை எளிதாய் அடையாளங் காணலாம். 

பிரமதாயம், பெருமானருக்குத் (brahmins) தரும் இறையிலி நிலம். சங்க காலத்திலேயே வேதநெறி தமிழகத்துள் ஓரளவு பரவிவிட்டதால், இப்படி இறையிலி நிலங்களை கொடுப்பது நடக்கக் கூடியது தான். (அதே பொழுது வேத மறுப்பு நெறிகளும் உலகாய்தமும் இங்கிருந்தன. பெரும தாய நெறியே சங்க காலத்தில் ஒங்கியது என்பது ஒரு பக்கச் சார்பாகும்.) கூடவே பல்லவர் காலம் (பொ.உ.500) தொடங்கிய பின் தான் பெரும தாயங்கள் (>பிரமதாயம்) எழுந்தன என்று வலுத்துச் சொல்வதற்கு இயலாது.   

ஐந்நூறூர் என்பதை 500 ஊர்களெனக் கொள்ள வேண்டாம். வெவ்வேறு தமிழ்ப் பெருமானர் கூட்டங்களில் (கோத்திரங்களில்) எண்ணாயிரம் (அஷ்ட சகஸ்ரம்) என்றொரு கூட்டமுண்டு..(எக்காலத்தில் அது எழுந்தது என்பது தனியாய்வு) இக் கூட்டத்தின் தொடக்கம் திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கலாம் என்பார். எண்ணாயிரம் பெருமானக் குடும்புகளில் இருந்து இந்த எண்ணாயிரம் என்ற வகைப்பாடு எழுந்திருக்கலாம். 

இதேபோல் தில்லையில் 3000 குடும்புகளும், திருப்பெருந்துறையில் 300 பேரும் இருந்தார். இப்பாட்டுக் குறிப்பின் வழி 500 குடும்புகள் கொண்ட சேர நாட்டு ஊரொன்று இதுபோல் பெரும தாயம் ஆனதை அறிகிறோம். (500 பேரும் பெருமானர் என்ற பொருள் கிடையாது.) தானங் கொடுக்கையில் சேரன் தன் நாட்டுக்குள் தானே கொடுப்பான்? வேறு நாட்டிலா கொடுப்பான்? எனவே உம்பற் காடும் குமிட்டூரும் சேர நாட்டினுள் தான் இருக்க வேண்டும். (சுற்றி வளைத்துச் சிற்றன்ன வாசற் கல்வெட்டைத் தவறாகப் படித்த தமிழறிஞர் சிலர் குமிட்டூரை ஓய்மான் நாட்டினுள் கொண்டு திண்டிவனம் பக்கம் தேடுவார். அந்தப் பிழை தமிழ் விக்கிபீடியாவிலும் உண்டு.)

உம்பலெனில் குமிழம் (coomb teak; Gmelina arborea). உம்பற் காடு = குமிழமரக் காடு. Gmelina asiatica என இன்னொரு வகையுமுண்டு. முன்னது பெருங் குமிழ். 2 1/4 அடி விட்டம், 100 அடி உயரம் வளரக் கூடிய மரம். 800 அடிதொடங்கி 3000 அடிவரை உயரமுள்ள குறிஞ்சி நிலத்தில் விரவிக் காணலாம். பின்னது பெரிய முட்செடி. நிலக்குமிழ் என்பார். 

குமிழ்மரத்தின் புறணி மழமழப்பாக, சாம்பல் படர்ந்த வெண்ணிறமாய் இருக்கும். 4 முதல் 8 அங். நீளத்தில் அகன்ற முட்டைவாகில் இதய வடிவில், கீழ்ப்புறம் முசுமுசுப்பாக இலைகளிருக்கும். 1 முதல்; 1.5 அங். வரை நுனியிலும், மஞ்சரிகளிலும் பழுப்புப் படர்ந்த மஞ்சள் நிறமாக மார்ச்சு, ஏப்பிரல் மாதங்களிற் பூக்கும். முட்டைச் சாயலில் 0.5 முதல் 1.0 அங். நீளத்தில் செம்மஞ்சள் நிறத்தோடு மகிழ் வாசனையோடு மழைக்காலங்களிற் காய்க்கும். 

பழங்கள் உருண்டு திரண்டு குமிழாயிருப்பதால் குமிழ் மரமென்று அழைத்தார். இதைக் கும்பலம்>கும்பளம் என்றுஞ் சொல்வார். கும்பலிற் குகரம் விட்டு உம்பலென்றுஞ் சொல்வார். தவிர, ’அம்’மின்றி இகரவீற்றில் கும்பலி>கும்பளி என்றுஞ் சொல்வர். சேரலத்தில் சில போது மூக்கொலி பெற்று கும்மளி> குமளி என்றுஞ் சொல்லப்பட்டது. இற்றை மலையாளத்தில் கும்பில், கும்புலு, குமிலு என்றாகும். 

வடக்கே நகருஞ் சொற்களிற் பெரும்பாலும் ளகரம் டகரமாயும், லகரம் ரகரமாயும் மாறும். கன்னடத்திற் கும்புலு என்பது கும்புடு என்றும், தெலுங்கிற் குமரு, கும்மடி என்றும், ஒடியாவில் குமர், கும்ஹரென்றும், வங்காளத்தில் கும்பர், கம்பர், கமரி என்றும், அசாமீசில் கொமரி என்றும், மேகாலய கரோ மொழியில் கமரி, கம்பரெ என்றும், நேபாலியில் கமாரி என்றும், இந்தியில் கும்பரி, கம்ஹர், கமர என்றும், பஞ்சாபியில் கும்ஹர் என்றும், சங்கதத்தில் கம்பரி என்றும் அழைப்பர். இத்தனையும் தமிழ்வழிச் சொற்கள், இது போக Sanskrit: sindhuparni, sindhuveshanam, stulatvach; Oriya- Bhadraparni; Gujarati- Shewan, Sivan; Hindi- sewan; Kannada- Shivane mara, Kasmiri- shivani; Marathi- shivan, siwan; Sinhala- Demata என்றும் இன்னோர் அடிப்படையில் சொல்வரிசை உண்டு. 

தமிழகக் கேரள எல்லையில் இன்றுள்ள குமிழி>குமிளியே அற்றைக் குமிழூர்>குமிளூர்>குமிட்டூர் என இப்போது புரிந்திருக்கும். மரத் தொழிலர் நடுவே குமிழ மரம் குமிட்டுத் தேக்கு என்றுஞ் சொல்லப் பெறும் குமிழியில் இருந்து 4 கி.மி. தொலைவில் தேக்கடி (தேக்கு+அடி). தேக்கும், வெண் தேக்கும், குமிட்டுத் தேக்கும் அருகருகே விளைவது வியப்பல்ல. 

குமிழூர் அன்றுஞ் சேரலஞ் சேர்ந்தது தான். இவ்வூருக்கு அருகில் தான் இமையவரம்பன் நெடுஞ்சேரல் குமிட்டூர்க் கண்ணனாருக்கு உம்பற் காட்டு ஐநூற்றூரைப் பெருமதாயமாய் அளித்தான். குமிழிக்கு அருகில் தான், குட்ட நாடு. முல்லைப் பெரியாறு; கண்ணகி போய்ச்சேர்ந்த இடம். செங்குட்டுவன் மலைக்காட்சி கண்ட இடம். மங்கலாதேவி கோயில். வஞ்சிக் காண்டம் தொடங்குமிடம். 

சேரலாதன் ஐந்நூறூர் தவிர தன்னாட்டு வருவாயில் ஒரு பாகத்தையும் (எத்தனை என்று தெரியவில்லை) தான் அரசனாய் வாழ்ந்த 38 ஆண்டிற் இப் புலவருக்குக் கொடுத்திருக்கிறான். வருமானத்தில் ஒரு பகுதியை உள்நாட்டானுக்குத் தானே கொடுக்க முடியும்? . 

பாடாண்டிணை. ”பாடு+ ஆள்ந்திணை” என விரிந்து, போற்றக் கூடிய ஆளுமையைப் புகழ்வதாய் அமையும். (எல்லாப் புறத்தினைகளும் ஒரு குறிப்பிட்ட செய்கையை மட்டுமின்றி ஒரு மரத்தையும் சேர்த்துக் குறிப்பர். பாடாண் மரம் பற்றி மூலிகை மருந்தறிவியல் ஆய்வாய் பேரா.இரா.குமாரசுவாமி ஓர் அருங்கட்டுரை படைத்தார். பார்க்க: ”தமிழர் மெய்யியலும், அறிவுமரபும்” பக்.54-75. உலகத்தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டாய்வு நிறுவனம், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி: 8903838356) பாட்டின் துறை: செந்துறை: வேறொரு ஆளுமையோடு ஒப்பிடாது நேர்படச் சொல்வது செந்துறையாகும்.

இசையியலில் தூக்கென்பது தாளத்தைப் பொறுத்து அமையும், யாப்பிலோ இன்ன செய்கைக்கு இன்ன வகைப் பாட்டென வழிகாட்டு உண்டு. ஒருவரை அழைத்துச் சொல்கையில் அகவல் ஓசையோடு ஆசிரியமாய் அமைந்தாற் சிறப்பு என்பர். மாறாக அழைத்துச் சொல்வதைச் செப்பல் ஓசையோடு வெண்பாப் பாடின், மரபின் படி அது சரியல்ல. 

(இக்காலத்தில் யாரும் மரபைக் கண்டுகொள்வது இல்லை. அவரவர்க்குப் பிடித்தபடி ஆசிரியம், விருத்தம், வெண்பா, புதுக் கவிதை எனக் கலந்தடிப்பார். அதே போல இன்ன பொழுதிற்கு இன்ன பண் என்றா பார்க்கிறோம்? அதிலும் கலப்புத் தான்.) அகவல், செப்பல், துள்ளல், தூங்கல் ஆகியவற்றை நேரம், காலம், நிகழ்வு, செய்கை பார்த்து அந்தந்தப் பா பாடுவது செந்தூக்காகும். அழைத்துச் சொல்லும் வகையில் ஆசிரியம் இங்கு வருவதால் இது செந்தூக்கு. 

அடுத்தது, எழுத்துக்கள் வரும் வகை வருநம்> வண்ணம் ஆகும். 20 வகை வண்ணங்கள் உண்டு. இப்பாட்டில் வருவதை ஒழுகுவண்ணம் என்பர். ஓர் ஓடை தடைப்படாது ஓடுவது போல ஒழுகும் வண்ணம். படித்துப் பார்க்கும் போது இதில் எத்தடையும் வராது பாடலமையவேண்டும். 

வரைமருள் புணரி வான்பிசி ருடைய

வளிபாய்ந் தட்ட துளங்கிரும் கமஞ்சூல்

நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி

அணங்குடை அவுண ரேமம் புணர்க்கும்

சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்

கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச்

செவ்வா யெஃகம் விலங்குந ரறுப்ப

அருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்

மணிநிற யிருங்கழி நீர்நிறம் பெயர்ந்து

மனாலக் கலவை போல வரண்கொன்று

முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை

பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்

கடியுடை முழுமுத றுமிய வேஎய்

வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்

நாரரி நறவி னார மார்பின்

போரடு தானைச் சேர லாத

மார்புமலி பைந்தா ரோடையொடு விளங்கும்

வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்

பொலனணி எருத்த மேல்கொண்டு பொலிந்த 

நின்

பலர்புகழ் செல்வ மினிதுகண் டிகுமே

கவிர்ததை சிலம்பிற் றுஞ்சும் கவரி

பரந்திலங் கருவியொடு நரந்தம் கனவும்

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

தென்னங் குமரியொ டாயிடை

மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே.

என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும்

சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்

கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு

வான்பிசிர் உடைய வரைமருள் புணரி 

வளிபாய்ந்து அட்ட துளங்குஇரும் கமஞ்சூல்

நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி

விலங்குநர் செவ்வாய் எஃகம் அறுப்ப,

மனாலக் கலவை போல 

அருநிறம் திறந்த *புண்உமிழ் குருதி*யின்

மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, 

அரண் கொன்று

முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை

பலர்மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்

கடிஉடை முழுமுதல் துமிய ஏஎய் 

வென்று 

எறிமுழங்கு பணைசெய்த வெல்போர்

நார்அரி நறவின் ஆர மார்பின்

போர்அடு தானைச் சேரலாத

பரந்து இலங்கு அருவியொடு 

கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி

நரந்தம் கனவும்

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

தென்னங் குமரியொடு ஆயிடை

மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே.

மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்

வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்

பொலன்அணி எருத்த மேல்கொண்டு பொலிந்தநின்

பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகுமே

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். முதலில் நாம் பார்ப்பது ”அணங்கைப்” பற்றியாகும். நாட்டு மரபுகள் அறியாத் தமிழாய்வாளரும், அவர்வழித் தமிழிலக்கியங் கற்ற மேலையாசிரியரும் இச் சொல்லைத் தவறாகவே புரிந்து கொள்கிறார். 

இணையத்தில் தேடின், பென்னம் பெரிய பேராசிரியர் எல்லாம் இதில் தடுமாறியது புரியும். அணங்கு என்பது ஏதோ ஒரு வகை ஆற்றல் என்றும் இது பெண் முலையில் குடி கொள்ளும் என்றும், அணங்கின் வழி தான் கண்ணகி மதுரையை எரித்தாள் என்றெல்லாஞ் சொல்வார். இது போன்ற விளக்கங்கள் தென்பாண்டி நாட்டின் நாட்டுமரபு தெரிந்தோருக்குச் சற்று  வியப்பாகவே தெரியும். பல்வேறு சங்க இலக்கியக் காட்டுக்களை எடுத்துக் காட்டி இப்புரிதல் பிழையென்று முதலிற் சொன்னவர் முனைவர். வி.எஸ்.இராஜமேயாவார்.. 

அணங்குதல் = மேலேறுதல். வீரம், மகிழ்ச்சி, பயமென்று தான் கொள்ளும் இயல் வெளிப்பாடுகளிற் சட்டென மாறி எக்கிய உணர்ச்சிகளுக்கு (extreme emotions) ஆட்பட்டு இதுவரை காணாதபடி ஒருவர் நடந்து கொண்டால், ”இவருக்கு என்னாச்சு? ஏனிப்படி நடந்துகொள்கிறார்? ஏதேனும் பேய் பிடித்ததா? ஆவி இவருட் புகுந்ததா? சாமி, கீமி வந்துவிட்டதா?” என்று சுற்றியுள்ளோர் சொல்வார் அல்லவா? 

அளவு மீறிய ஆற்றலுடன் கொஞ்சமுங் களைப்புறாது வேலை செய்பவரையுங் கூடச் சாமி வந்தவர் போல் செயற் படுவதாய் எங்கள் நாட்டுப்புறத்திற் சொல்வர். இது போன்ற வெளிப்பாடுகளை (நீண்ட நாள், குறுகிய நேர) மனப் பிறழ்வுகள் என்றும், உடைபட்ட ஆளுமையின் (split personality) வெளிப்பாடு என்றும் சொல்லி, விதப்பு மருத்துவங்களையும், நரம்பியல் மருந்துகளையும் இற்றை உளவியல் நாடச் சொல்லும். 

ஆனால் நாட்டுப்புறப் பழங்குடிப் பார்வையில் இவற்றை அல்மாந்த (அமானுஷ்ய)ச் செயற்பாடுகளாக்கிச் ”சாமியாடியைக் கொண்டு வா; வேப்பிலையால் மந்திரித்து விடு; திருநீறு பூசு; குறி கேள்! படையல் போடு; பூசை நடத்து” என்றே நடவடிக்கை எடுப்பார். சங்க இலக்கிய வேலன் வெறியாட்டு போன்றவையும் இவற்றைச் சேர்ந்தவை தான் (வேலனைத் தான் இன்றைக்குச் சாமியாடி என அழைக்கிறோம். வெறியாட்டம் = சாமியாட்டம்.) மேலே சொன்ன பேய், பிசாசு, ஆவி, சாமி ஆகிய வெவ்வேறு விதப்புகளுக்கான பொதுச் சொல்லே அணங்காகும். மேலேறுதல் என்ற கருத்தீடு இப்போது விளங்குகிறதா? 

அணங்குடை அவுணர் = அணங்குள்ள அவுணர். உரையாசிரியர் பலரும் அவுணரை அசுரராக்கித் தேவாசுரக் கதைகளைச் சொல்வார். அப்படி இருக்கத் தேவையில்லை. நாகர், இயக்கர், அரக்கர் (இதையே இராட்சதர், இராக்கதரென்பார்), பூதர், அசுரர் என்போர் வெவ்வேறு பழங்குடி எதிரிகள். இவரில் எத்தனை பேர் தமிழரின் எதிரிகள்? எத்தனை பேர் தமிழருள் கலந்து போனார்? - என்பதெலாம் ஆய்வு விதயங்கள். வடபுலத் தென்புலக் கதைகளை இக்காலத்திற் கலந்து பேசுகிறோமா?- என்பதும் பெரும் ஆய்வு. எதிரிகளென்று கற்பிக்கப் படுவதன் மிச்ச சொச்சம் தமிழரிடமும் இருக்கலாம். அவுணர் உண்மையில் அசுரரா? அன்றி உவணரெனும் மலைக்குடியாரா?- புரியவில்லை. 

(உவணம் = உயரமான இடம், மலை. வானம் போன்ற பொருளுமுண்டு. உவணர்> ஊணர்> ஔணர்> அவுணர் எனும் திரிவை எண்ணிப் பாருங்கள். வரலாற்றில் மிலேச்சரான ஹூணராய் இவரிருக்க வழி இல்லை. ஏனெனில் அவர் பொ.உ.5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பொதுவாக வெளியாரைக் குறிக்குஞ் சொற்கள் நம்மிடந் திரியலாம். ”கன்வ” எனும் மகதச் சொல் ”கனக” என நம் வாயில் திரிந்ததே? செங்குட்டுவன் தோற்கடித்த கனக விசயன் ஒரு மகத அரசன் ஆகலாம் எனச் ”சிலம்பின் காலத்திற்” சொன்னேன். அம் முகன்மையை நம்மிற் பலரும் உணர வில்லை. அயொனியர் என்பார் நமக்கு யவனரானாரே?) 

ஏமம் புணர்க்கும் = ஏமங் (safety) காக்கும்; சூருடை முழுமுதல் தடிந்த = சூரனின் உயிரிருந்த மாமரத்தை வெட்டி; பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் = பெரும்புகழ் கொண்ட கடுஞ்சின விறல்வேளின் (முருகனின்); களிறு ஊர்ந்தாங்கு = களிறு நகர்ந்தது போல்; வான்பிசிருடைய = வான்தெறிக்கும் துளிகளுடைய; வரை மருள் புணரி = மலையென மருளத்தகும் அலையை; வளி பாய்ந்து அட்ட = காற்றுப் பாய்ந்து சிதைக்க; துளங்கு இரும் கமஞ்சூல் = அசையும் பெருநீரைச் சூலாக்கி; நளி இரும் பரப்பின் = பென்னம் பெரிதாய்ப் பரந்த; மாக்கடல் முன்னி = கருங்கடலில் (சமுத்திரம்) முன்சென்று 

[தம்நாட்டுக் கடல்வணிகம் காப்பாற்றுதற்காகச் சேரர் கடல்வழி சென்று மேற்கே இலக்கத்தீவுக் கடற் கொள்ளையரைத் தாக்கியழித்த செய்தி இங்கே சொல்லப் படுகிறது. பொ.உ.மு.200 களுக்கு முன்னேயே யவனரோடும், உரோமரோடும் தமிழரின் மேற்கு வணிகம் தொடங்கியது. சேரலத்து மிளகும் கொங்கின் மணியும், சூர்ணி முத்தும் எனப் பல பொருட்கள் சேரலத்தில் இருந்து ஏற்றுமதியாகின. மேற்கின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்த கொடி முந்திரிக் (grapes) கள்ளும், தங்கமும், குங்குமப் பூவும் (Crocus sativus), சாம்பாணியும் (சாம்பிராணி) இங்கிறங்கின. 

முசிறி, தொண்டி, நறவில் தொடங்கி வடக்கே பாருகச்சம் (Barukaccha> Baroach) வரை இந்த வணிகம் நடந்தது. மூவேந்தரையும் (குறிப்பாகச் சேரர்), நூற்றுவர் கன்னரையும் (Satakarni) மகதத்தால் அசைக்க முடியவில்லை. சோழரும், பாண்டியரும் கிழக்கு வணிகத்தில் சிறந்திருந்தார். சங்க இலக்கியத்திற் பெரிதும் பேசப்படும் பலவும் அரசியற் பொருளாதாரம் (political economy) தொடர்பானவை. எங்கெல்லாம் பொருளியற் தேவை எழுந்ததோ, அங்கெல்லாம் போரும் உடன்சென்றது. (Wherever economy demanded, war followed). பிற்காலத்தில் பொ.உ.1000க்குப் பின்னால் கிழக்கு வாணிகம் தடைப்பட்ட போது, இராசேந்திர சோழன் சிரீவிசயத்தின் மேற் படையெடுத்துப் போனான்.]  

விலங்குநர் = (இச்செயல்) தடுப்போரை (கடற்கொள்ளையரை); செவ்வாய் எஃகம் = கூர்(sharp)ஓர எஃகு வாளால் (இரும்புக் கால முதல் அடையாளங்களும் பழம் எஃகுப் பொருட்களும் தொல்லாய்வின் மூலம் தென்னகத்திலேயே கிடைத்துள்ளன. எஃகு = steel; எஃகம் = steel sword); அறுப்ப = அறுத்து; மனாலக் கலவை போல = குங்குமப்பூக் கலவை போல்; அருநிறம் = செந்நிறம்; அருநிறம் திறந்த புண்ணுமிழ் குருதியின் = செந்நிறங் கொண்ட புண்ணுமிழ் குருதியால்; மணிநிற இருங்கழி = நீலப் பெருங்கழி, நீர்நிறம் பெயர்ந்து = நீரின் நிறம் மாற, அரண்கொன்று = (எதிர்த்தவரின்) காவலழித்து; முரண்மிகு சிறப்பின் = முரண் மிகு சிறப்பால்; உயர்ந்த ஊக்கலை = உயரூக்கம் கொண்டவனே! 

[இங்கு ஓர் இடைவிலகல். ”மனாலம்” என்பது இங்கே எழுத்துப் பெயர்ப்பாய் Minoan crete ஐயும், மனாலக் கலவை என்பது குங்குமப்பூக் கலவையையும் குறிக்கிறது. கிரீட்டிலிருந்து தான் பொ.உ.மு. 3000 - 1100 இல்  மற்ற நாடுகளுக்கு குங்குமப்பூ ஏற்றுமதி செய்யப்பட்டது. 

பார்க்க: https://en.wikipedia.org/wiki/History_of_saffron. Saffron played a significant role in the Greco-Roman pre-classical period bracketed by the 8th century BC and the 3rd century AD. The first known image of saffron in pre-Greek culture is much older and stems from the Bronze Age. A saffron harvest is shown in the Knossos palace frescoes of Minoan Crete, which depict the flowers being picked by young girls and monkeys. 

One of these fresco sites is located in the "Xeste 3" building at Akrotiri, on the Aegean island of Santorini—the ancient Greeks knew it as "Thera." These frescoes likely date from the 16th[ or 17th century BC` but may have been produced anywhere between 3000–1100 BC. They portray a Minoan goddess supervising the plucking of flowers and the gleaning of stigmas for use in manufacture of what is possibly a therapeutic drug. 

A fresco from the same site also depicts a woman using saffron to treat her bleeding foot. These "Theran" frescoes are the first botanically accurate visual representations of saffron's use as an herbal remedy. This saffron-growing Minoan settlement was ultimately destroyed by a powerful earthquake and subsequent volcanic eruption sometime between 1645 and 1500 BC. The volcanic ash from the destruction entombed and helped preserve these key herbal frescoes.

தவிரக் குரு>குருங்கு என்பது தமிழிற் சிவப்பு நிறங் குறிக்கும் சொல். குருங்குமம்>குங்குமம் என்பதன் வழி, நிறத்தை வைத்து ஓர் இறக்குமதிப் பொருளுக்கு ஆன பெயர் தெரிகிறது. (பருத்தி - ஒரு பிறந்த இடப் பெயர். கொட்டை> cotton - இறங்கிய இடங்களில் ஏற்பட்ட பெயர்.) ”குருங்குமம்” பின்னால் (kurkema Aramaic) இலும், krocos என கிரேக்கத்திலும் என மேலை நாடுகளிற் பரவும். அதே பொழுது azupirana என்ற akkadian சொல்லிலிருந்து Saffron என்ற இற்றை மேலைச்சொல் பிறந்தது. 

குங்குமப்பூ வணிகத்தோடு பதிற்றுப்பத்து வரியையுஞ் சேர்த்து விக்கிப்பீடியாவில் யாரேனுங் குறித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சேரலாதன், செங்குட்டுவனின் பழங் காலமும் (’சிலம்பின்’ காலமும்) மனாலக்கலவை என்ற கூட்டுச் சொல்லால் உறுதிப் படும். எத்தனை இந்திய மொழிகள் அவைகளின் இலக்கியங்களில் ”மனோலத்தைப்” பதிவு செய்தன??? மனாலம் என்ற பெயர் கிரேக்கருக்கும் முந்தைய crete நாகரிகத்தைக் குறிப்பதாகும். காலத்தால் இது பொ.உ.மு.800 க்கும் முந்தையக் குறிப்பு இதுவாகும்.தமிழின் முன்மையை இது கட்டாயம் உணர்த்துகிறது.]   

பலர் மொசிந்து ஓம்பிய = பலரும் மொய்த்துக் காப்பாற்றிய; திரள்பூங்கடம்பின் = திரள்பூங் கடம்பமரத்தின்; கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று = காவலுடைய அடிமரத்தை வெட்ட ஏவி, வென்று; எறிமுழங்கு பணைசெய்த வெல்போர் = (அதன் மூலம்) அடித்து முழக்கும் பறை செய்த வெல்போரினையும்; நாரரி நறவின் ஆர = நார்ச் சீலையால் வடித்த கள்ளையும் பருகும்; மார்பின் = மார்புடைய; போர் அடு தானைச் சேரலாத = போரடுக்கும் தானை கொண்ட சேரலாதனே! (எதிரியின் காவல் மரம் வெட்டி முரசு செய்வதும், எதிரிக் கோட்டை அழித்து, எள் விதைத்துக் கழுதையைக் கொண்டு உழுவதும் அன்றிருந்த மரபுகளாகும். எள் விதைத்து கழுதையால் உழுவதை மூவேந்தர் மட்டுமின்றிக் கலிங்கத்துக் காரவேலனுங் கூடச் செய்தான். மூவேந்த மரபுகள் தென்னகம் முழுக்கப் பரவினவோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.)

பரந்திலங்கு அருவியொடு = பரந்து விளங்கும் அருவியொடு; கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி = முருக்கு நிறை மலையில் துயிலும் கவரிமான்கள், கவிர் (Erythrina suberosa Roxb.), முள் முருக்கு (Erythrina stricta Roxb.), கலியாண முருக்கு (Erythrina variegata L.; also known as Erythrina indica) என்று 3 விதமான முருக்கு மரங்கள் (Indian coral tree) உண்டு. (முருக்கையோடு முருங்கையைக் குழம்பவேண்டாம்.) கலியாண முருக்கு பொ.உ.8/9 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைக்கப்பட்டது. பெரும்பாலும் கவிரும், முள்முருக்கும் நம்மூர் மரங்களாகலாம். ("செம்முகை அவிழ்ந்த முண்முதிர் முருக்கு” என்பது அகம்:99.2) கவிரும் முருக்கும் 1200 அடி தொடங்கி 4000 அடிவரையில் குறிஞ்சி நிலத்தில் வளரும். முருக்கம் பூ ஒருவகையில் முருகனின் நிறங் குறிப்பது.

முருக்கு மரங்களைக் காட்டுத்தீப்பிழம்பு போல் பூக்கும் புரசு மரத்தோடு [Butea monosperma; காட்டுமுருக்கு, வெள்ளைப்புரசு. இதைச் செந்தூரப்பூ மரம் என்றுஞ் சொல்லுவர். ”பதினாறுவயதினிலே” திரைப்படத்தில் வரும் “செந்தூரப்பூவே” பாட்டு. சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் கங்காதீசர் கோயிலின் தலமரம். புரசை வடமொழியில் பலாசு/பலாசம் என்பார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க மரம். சென்னையிலிருந்து தில்லிபோகும் இருவாய்ப்-railway-பாதையில் Ballarshaவை எண்ணிக்கொள்ளுங்கள். இராபர்ட்கிளைவ் வங்காளத்திற் சண்டையிட்டுவென்ற பலாசி யுத்தம் எண்ணிப்பாருங்கள்.] பலரும் குழம்பிக்கொள்வதுண்டு. நானுங் குழம்பியிருக்கிறேன்.  

கவரி = கவரிமான்கள், இவை இமையமலை அடிவாரத்திலும், சற்று உயரக்குன்றுகளிலும் அலைந்துதிரியும் யாக் எருமைகள். இவற்றின் மேனியை மூடினாற்போல் உரோமங்களுண்டு. குளிருக்காக இந்த முடி. இந்த எருமைகள் வெப்பநிலங்களில் வளரா. தென்னகத்தில் இவை கிடையா. இந்தியாவில் இவை இமையமலைப் பகுதியில் மட்டுமேயுள்ளன. 

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் 

உயிர்நீப்பர் மானம்வரின்”  

என்பது குறள். பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாட்டு கவரிமானைக் குறிப்பதால் பாட்டிற் சொல்லப்படும் ஆரியர் வடக்கே இமையத்தின் அடியில் வாழ்பவரே என்ற கருத்து உங்களுக்கு வலுப்படும். (ஆரியர் என்ற சொல்லிற்கு noble என்று பார்ப்பதை வேறிடத்தில் பேசுவோம்.)    

நரந்தம் கனவும் = நரந்தம்புல்லைத் தின்னக் கனவுகாண்கிற, நரந்தம் புல் = நல்ல வாசனையோடு வளரும் புல். எலுமிச்சம் புல் என்றுஞ் சொல்லப்படும். [நரந்தம் என்ற தனிச்சொல் எலுமிச்சைக்கு முதலிற் பயன்பட்டு இங்கு புல்லிற்கு வாசனை கருதி மாறிவந்தது. நார்த்தை, நாரங்கை (>orange) போன்ற சொற்களும் நரந்தத்தோடு தொடர்பானவை] நரந்தம்புல் ஆங்கிலத்தில் Cymbopogan எனப்படும்.புல்லிலிருந்து பெறப்படும் நரந்த (சிட்ரொனெல்லா) எண்ணெய் மணமூட்டும் பொருளாய்ப் பயனாகிறது. Cymbopogan citratus, Cymbopogan flexuosus, Cymbopogan martinii, Cymbopogan nardus எனப் பல்வேறு வகைகள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வளர்கின்றன. இங்கே Cymbopogan flexuosus என்று உத்தரப் பிரதேசத்திலும் வடக்கு பீகாரிலும் விளையும், இவற்றிற்கு வடக்கே இமையமலைடடியில் வளரும் புல் பேசப்படுகிறது. கவரிமான்கள் இந்தப்புல்லைத் தின்னக் கனவு காண்கின்றனவாம்..  

ஆரியர் துவன்றிய = ஆரியர் தோற்றுப்போன; இங்கே வடக்கே இமையமலை அடிவாரம் வரைக்கும்போய் ஆரியரைத் தோற்கடித்தது பேசப்படுகிறது. சிலம்பின் வஞ்சிக்காண்டத்தி;ல் இரண்டாம் படையெடுப்பிற்கான விவரிப்பில் முதற்படையெடுப்பை அசைபோட்டுச் சிலசெய்திகள் சொல்லப்படும். இதுபோன்ற படையெடுப்புக்கள் பொ.உ. 5 ஆம் நூற்றாண்டில் நடக்கவேயில்லை. (காய்தல் உவத்தலின்றி ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால்) சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் வெவ்வேறு செய்திகளும் சிலம்பின் வஞ்சிக்காண்டச் செய்திகளும் உறுதியாக இமையவரம்பன் சேரலாதன் காலத்தில் பொ.ய்.மு.120க்கு முன் நடந்த படையெடுப்பை உறுதிசெய்கின்றன. சங்ககாலத்தை பொ.உ.மு.600 இலிருந்து பொ.உ.150 வரை சொல்வதே சரியென்று விளங்கும். அடுத்தடுத்துப் பல பாடல்கள் இதை உறுதிசெய்கின்றன. தமிழர் வடக்கே போகவே இல்லை என்று சொல்லிச் சங்க காலத்தைக் குறைத்து மதிப்பிடுபவர் நாம் என்ன சொல்லியுங் ஏற்கப் போவதில்லை. அவர் அடம் பிடித்துக் கொண்டேயிருப்பார்.

பேரிசை இமயம் = பெரும்புகழ் இமையமும், தென்னங் குமரியொடு ஆயிடை = தென்குமரியொடும் ஆகிய இடைப்பட்ட இடங்களின்; மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. = செருக்குற்று நிலைத்த மன்னரின் மறம்கெடக் கடந்து; மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும் = மார்பிற்கிடந்த பசியமாலையும் நெற்றிப்பட்டமும் விளங்க; வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் = வலிமிகு பெரும் தந்தத்தால் பழிதீர்த்த யானையின்; பொலன் அணி எருத்த மேல் கொண்டு பொலிந்த = பொன்னணி எருத்தின்மேல் பொலிந்துகொண்டு சென்ற; நின் பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகுமே = பலரும்புகழும் உன் செல்வத்தை இனிதே கண்டோம். 

பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

அணங்குள்ள அவுணரின் ஏமங்காக்கும் 

சூரனின் உயிரிருந்த மாமரத்தை வெட்டி, 

பெரும்புகழ்கொண்ட கடுஞ்சின விறல்வேளின் 

களிறு நகர்ந்ததுபோல், 

வான்தெறிக்கும் துளிகளுடைய

மலையென மருளத்தகும் அலையைக் 

காற்றுப்பாய்ந்து சிதைக்க, 

அசையும் பெருநீரைச் சூலாக்கி, 

பென்னம்பெரிதாய்ப் பரந்த கருங்கடலில் 

முன்சென்று, 

(இச்செயல்) தடுப்போரைக் 

கூரோர எஃகு வாளால் அறுத்து; 

குங்குமப்பூக் கலவைபோல் 

செந்நிறங் கொண்ட புண்ணுமிழ் குருதியால், 

நீலப்பெருங்கழி நீரின் நிறம்மாற, 

(எதிர்த்தவரின்) காவலழித்து, 

முரண்மிகுசிறப்பால்,

உயரூக்கம் கொண்டவனே! 

பலருங்கூடிக் காப்பாற்றிய, 

திரள்பூக்களும் காவலுமுடைய, 

கடம்பின் அடிமரத்தை வெட்ட ஏவி, 

வென்று, (அதன்மூலம்) 

அடித்துமுழக்கும் பறைசெய்த வெல்போரினையும் 

நார்ச்சீலையால் வடித்த கள்ளையும் 

பருகும் மார்புடைய 

போரடுக்கும் தானைகொண்ட சேரலாதனே! 

பரந்துவிளங்கும் அருவியொடு 

முருக்குநிறை மலையில் துயிலும் கவரிமான்கள்  

நரந்தம்புல்லைத் தின்னக் கனவுகாண்கிற,  

ஆரியர் தோற்றுப்போன, 

பெரும்புகழ் இமையமும் 

தென்குமரியொடுமாகிய 

இடைப்பட்ட இடங்களிற் 

செருக்குற்று நிலைத்த மன்னரின் 

மறம்கெடக் கடந்து 

மார்பிற்கிடக்கும் பசியமாலையும் 

நெற்றிப்பட்டமும் விளங்க, 

வலிமிகு பெரும்தந்தத்தால் 

பழிதீர்த்த யானையின் 

பொன்னணி எருத்தின்மேற் 

பொலிந்துகொண்டு சென்ற, 

பலரும்புகழும் உன்செல்வத்தை 

இனிதே கண்டோம்!

அன்புடன்,

இராம.கி.