Wednesday, May 11, 2022

அளவு-தல், திறப்பி-த்தல். அளப்பி-த்தல்

 பேரா. தெய்வ சுந்தரம் நயினார், மே 8 இல் ”அளவு + சாப்பாடு -> அளவுச் சாப்பாடு ? அளவுசாப்பாடு? அளவு + திட்டம் -> அளவுத்திட்டம் ? அளவுதிட்டம்? அளவு + கோல் -> அளவுக்கோல்? அளவுகோல்? இந்த ஐயம் தொடர்பான இலக்கண விளக்கங்களை அளிப்பதில்  100 - க்குமேற்பட்ட கருத்துக்கள் பகிரப் பட்டுள்ளன. ஆனால் இறுதியான முடிவு  கிடைத்து விட்டதாகத் தெரியவில்லை. அளவுக்கோலா ? அளவுகோலா? “ என்ற வினாவைக் கேட்டிருந்தார்,

இதற்கான விடையை நாம் ”அள்ளுதலில்” தொடங்க வேண்டும். அள்(ளு)-தல் என்பது செறிதல், பொருந்தல் பொருள்களை உணர்த்தும் வினைச்சொல் ஆகும். அல்>அள-த்தல் என்பது பொருத்தல் பொருள் காட்டும் முதல் நீட்சி. இது, தானே பொருந்துவது அல்ல. மாந்தர் பொருத்துவது. அளத்தலின் பெயர்ச்சொல் வடிவம் அளக்கை. என்பதாகும் இத் தொழிற்பெயரை அளக்குதல் என்றும் சொல்லலாம். அளக்குதலின் அடுத்த திரிவு அளவுதல் என்றமையும். ஒவ்வொரு வினைச்சொல்லும்,  அதன்தொடர்பான இன்னொரு வினைச்சொல்லில் இருந்து நுண்ணிய வேறுபாடு காட்டும். பலநேரம் நாமிந்த நுண்வேறுபாடுகளைத் தவறவிடுகிறோம்.  அளவு-தல் என்னும் வினைச்சொல் அள-த்தல் (=பொரு-த்தல்) என்பதையும், அதற்கப்புறம் நடைபெறும் சில அலகு மாற்றங்களையும் சேர்த்துக் குறிக்கும். 

காட்டிற்கு ஒரு தெறுமமானியை (thermometer) எடுத்துக் கொள்க. எங்கு வெம்மையை (tenperature) அளக்கவேண்டுமோ, அங்கு தெறுமமானியை நாம் வைக்கிறோம். தெறுமமானிக்குள் இருக்கும் இதள் (mercury) சூட்டால் பருத்து, தெறுமமானியின் மயிரிழைத் தூம்பில் (capillary tube) நீள்கிறது. நாம் காணும் இந்த நீட்சியை எப்படி வெம்மைக்கு மாற்றுவது? இதில் தான் குழிவரை முகப்பு (calibration map) என்ற செயற்பாடு வருகிறது. அது என்ன குழிவரைப்பு? குண்டுக் கல்களுக்கும் குழிகளுக்கும் வருவோம்.

இயற்கையில் உருளைக் கற்கள் வெவ்வேறு அளவில் காணப்படுகின்றன. இவற்றின் விட்டங்களை ம் எப்படி அறிகிறோம்?  பல்வேறு வரையறுக்கப்பட்ட விட்டக்குழிகளை ஏற்படுத்தி ஏற்கனவே முற்றுமுழுக் கோளமான வெவ்வேறு (மாழை அலது கோலிக்) குண்டுகளைப் பொருத்திப்பார்த்து, மாட்டிக் கொள்ளாது எந்தப் பெரிய குண்டு போகிறதெனப் பார்த்து, ஒவ்வொரு குழிக்கு அருகிலும் குழிவரை விட்டத்தை எழுதிவைப்போம். இது குழிவிட்டத்திற்கும், குண்டுவிட்டத்திற்குமான முகப்பைப் பொறுத்தது இம்முகப்பை ஆங்கிலத்தில் calbration chart என்பார். தமிழில் குழிவரைப்புப் கட்டம் என்போம் இம்முகப்பை வைத்துத்தான். இயலுருளைகளை குழிகளில் பொருத்தி, எந்த விட்டக்குழியில் உருளை எளிதாய்ப் போகிறதோ அதையே இயலுருளை விட்டமாய்ச் சொல்வோம்.  

இதே போல் வெவ்வேறு வெம்மைகளில் தெறுமமானியை வைத்துப் பெறும் நீளங்களுக்கும்  வெம்மைகளுக்குமான முகப்பைச் (map) செய்து வைத்தால், அம் முகப்பின் மூலம், (வெம்மை தெரியாமல்) அளந்த நீளக்கோட்டை முகப்பில் பொருத்தி, இணையான வெம்மையை அறிகிறோம். அள-த்தல் denotes comparison. அளவு-தல் என்பதுதான் measurement. Every measurement involves not just the comparson mut also (sometimes many) maps invoving unit conversions, caibration, standard deviations, linearity etc. தமிழில் சொன்னால், ஒவ்வொரு அளவு-தலிலும் பொருத்தலும், அலகு மாற்ற முகப்புகளும், குழிவரைப்பும். செந்தர வேறாக்கங்களும், இழுனமும் எனப் பல்வேறு கருத்துகள் அடங்கியுள்ளன. இதளி நீளப் பொருத்தல் என்பது அள-த்தலையும்), அள-த்தலோடு, நீளம் - வெம்மைக்கான முகப்பும் சேர்ந்த வினை அளவு-தலையும் குறிக்கும்.  

அளவுதலின் வினைப்பகுதி அளவு. இது பெயர்ச்சொல்லாயும் இயங்கும். வினைப்பகுதியைத் தொடர்ந்து மூன்றுகால வினைகளும் அமையலாம். அளவிய, அளவுகிற, அளவும் என்றும் பெயரெச்சங்கள் அமையலாம். 

”புறத்திணை மருங்கில் பொருந்தின் அல்ல

அகத்திணை மருங்கில் அளவுதல் இலவே” 

என்னும் தொல்காப்பியம் பொருளியல், அகத்திணை 58 ஆம் நூற்பாவில் வரும் அளவுதலுக்கு, “விரவுதல், கலத்தல் என்று சொல்வர். என்னைக் கேட்டால் "measurement" என்ற பொருள் அழகாய்ப் பொருந்தும்.  புறத்திணையில் measurement செய்யலாம். அகத்திணை மருங்கில் measurement என்பது எப்படி முயன்றாலும் கிடையாது.

அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும். 

என்ற தொல் பொருள். கற். 5 அடியிலும் அளவிய என்ற சொல்லிற்கு measured என்று பொருள் சொல்லலாம்.  

அளவின் நீட்சியாய் அளவி என்ற சொல் அதே அளவுப் பொருளில் ”அளவியை யார்க்கும் அறிவரியோன்” என்று திருக்கோவையார் 1:10, இல் பயிலும். ,   

அளவு கருவி, அளவு காரன், அளவு கூடை, அளவு கோல், அளவு சாப்பாடு, அளவு சோறு, அளவு தடி, அளவு நாழி, அளவு படி, அளவு படை, அளவு அடி, அளவு வருக்கம்  அளசு இல், அளவு எண் முதலியன வினைத்தொகைகள்..

அளவுக்கல், அளவுக் கூறுபாடு, அளவுப்பதிவு, என்பன கூட்டுப்பெயர்கள் 

மேலே  .உள்ள கருத்துகளைக் கூறுமுன்,   

------------------------------

செயப்படுபொருள் குன்றிய வினை (in- transitive verb) - செயப்படுபொருள் குன்றா வினை (transitive verb) வகைக்கும் தன்வினை - பிறவினை வகைக்கும் வேறுபாடு உண்டு அல்லவா? இரண்டு வகைப்பாடுகளும் வேறு வேறுதானே. இங்கு திறவு - திறப்பு இரண்டுக்கும் வினையடி "திற" என்பதுமட்டும்தானே. இது செயப்படுபொருள் குன்றாவினை என்றுதானே அழைக்கப்படுகிறது? இதில் தன்வினை - பிறவினை வேறுபாட்டைக் கொண்டுவர இயலுமா? செ.பொ. குன்றாவினை - செ.பொ. குன்றிய வினை என்ற வேறுபாடு தொடரியலை (syntactic function) அடிப்படையாகக் கொண்டது; ஆனால் தன்வினை - பிறவினைப் பகுப்பானது சொல்லியலையும் பொருண்மையியலையும் (morphological and semantic functions) அடிப்படையாகக்கொண்டது. 'உடை' - உடைகிறேன், உடைந்தேன், உடைவேன் (செ.பொ, குன்றிய வினை) உடைக்கிறேன், உடைத்தேன், உடைப்பேன் (செ.பொ. குன்றாவினை) ; நட - நடத்து (தன்வினை - பிறவினை). இதுபோன்று திற, அள என்பவற்றிற்குப் பிறவினை வடிவம் ஏதும் உண்டா?

--------------------------------

என்று பேரா. தெய்வ சுந்தரம் நயினார் கேட்டிருந்தார். என் விடை கீழே/

===============================

திற-விற்கு உண்டு. அப்பரின் ஐந்தாம் திருமுறை 9 ஆம் பதிகம். இதில் 95 ஆம் பாடலில் மறைக்காட்டுக் கோயில் கருவறைக் கதவைத் திறக்க்கும் முகத்தான், ”இக்கதவம் திறப்பிம்மினே” என்று வரும். திறப்பி-த்தல் என்பது பிறவினை தான். இறைவனைக் கொண்டு திறக்கச் செய்வது. அல்லது அங்கிறுந்து முன்குடுமியரைக் கொண்டு திறக்கச் செய்வது என்று இரு விதமாய்ப் பொருள் கொள்ளலாம். எப்படிப் பார்த்தாலும் திறப்பி-த்தல் என்பது பிறவினை தான். இதே பதிகம் 101 ஆம் பாடலையும் படியுங்கள். https://valavu.blogspot.com/2018/09/7.html

--------------------------------

அடுத்து, “ஐயா, மிக்க நன்றி. இதுபோன்று அள என்ற சொல்லுக்கும் உண்டா என்பதுபற்றியும் தாங்கள் கூறினால் பயன் உள்ளதாக இருக்கும்” என்று பேரா, தெவசுந்தரம் கேட்டார். என் விடை:

-------------------------------

கூகுளில் ”அளப்பித்தல்” என்ற சொல்லைத் தேடினால், கீழ்க்கண்ட ஒரு முடிவு தென்பட்டது. இது இலங்கை அரசின் 728 பக்க ஆவணம். கீழே வரும் வாக்கியம் ஆவணத்துள் எந்த இடத்தில் வருகிறதென்று என்னால் சொல்ல முடியவில்லை. இதைக் கண்டுபிடிக்க. ஒரு search engine போட்டுத் தேடவேண்டும். அதற்கான ஏந்து என்னிடமில்லை. எனவே கூகுள் கொடுத்த வாக்கியத்தை அப்படியே தருகிறேன். கீழே கொடுக்கப் பட்டுள்ள வாக்கியத்தில் ”அளப்பித்தல்” என்பது பிறவினையின் வழி எழும் தொழிற் பெயரே!

------------------------------.

காணி நிர்வாகத் திணைக்களம்http://np.gov.lk › pdfPDF

29-Nov-2005 — அனுமதிச்சீட்டின் மேல். காணியை நில. தலைமையதிபதியினால். அளப்பித்தல் வேண்டும்.

728 pages

-------------------------------

என் பரிந்துரை:

அள-த்தல் என்பது தன்வினை.

அளப்பி-த்தல் என்பது இன்னொருவரை வைத்து அளக்கும் செயலைக் குறிப்பதால், பிறவினை.

Thursday, May 05, 2022

காணொலியில் வரும் காண் பெயர்ச்சொல் அல்ல.

 ===================================

//காண் என்பது தமிழில் பெயர்ச்சொல்லாகவும் வரும் ஒரு சொல். தமிழ்ப்பேரகராதி சொல்வது:

_____________

  காண்² kāṇ , < காண்-. n. 1. Sight; காட்சி. காண்பிறந் தமைந்த காதல் (கம்பரா. திருவடிதொழு. 70). 2. Beauty; அழகு. காண்டக . . . முகனமர்ந்து (திரு முரு. 250). — int. Expletive of the 2nd pers. meaning behold; முன்னிலையில்வரும் ஓர் உரை யசை. துவ்வாய்காண் (குறள், 1294).

______________

வீடியோ (video) என்பதற்குக் காட்சியும் ஒலியும் என்னும் பொருளில் காணொலி என்னும் சொல் சாலவும் பொருத்தமான சொல்.//

====================================

என்ற பேரா. இரா. செல்வக்குமாரின் இடுகையை இன்று கண்டேன். :காணொலியை” நான் என்றும் ஏற்றதிலை. இந்த இடுகை, ”காண் எனுஞ் சொல் காட்சியைக் குறிக்கும் பெயர்ச்சொல்” என்பது பற்றியது. அந்தக் கூற்று தவறு. தவறுகளின் தொடர்ச்சியில் காண் = ஒரு பெயர்ச்சொல் என்று நம் அகராதிகளில் விடிந்துள்ளது. நம் அகராதிகளின் மேல் எனக்குள்ள கிடுக்கங்களில் இதுவும் ஒரு சான்று. ”காண்பிறந்தமைந்த காதல் (கம்பரா. திருவடிதொழு. 70)” என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியில் கொடுத்திருப்பதும் பிழையான வரியே. 

http://www.tamilsurangam.in/literatures/kambar/ramayanam/thiruvaditholuthapadalam.html என்ற வலைத்தளத்தில் கொடுத்த  திருவடி தொழுத படலத்தின் படி 52 பாடல்களே தான் முறையான கம்பன் பாடல்களாகும். அதில்

11 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 17 பாட்டுகளும் 

12 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும், 

14 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும்,  

19 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 20 பாட்டுகளும்,  

23 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும், 

35 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 2 பாட்டுகளும், 

47 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 1 பாட்டும் 

49 ஆம் கம்பன் பாட்டுக்கு அப்புறம் 5 பாட்டுகளும் 

மிகையாய் (இடைச்செருகலாய்) உள்ளன என்பது ஆய்ந்தோர் கூற்று. 35 ஆம் பாட்டு கீழே வருமாறு:

'இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்தி,

பொலங் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கிப் போந்தேன்,

அலங்கு தண் சோலை புக்கேன்; அவ்வழி, அணங்கு அ(ன்)னாளை,

கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர்க் கடலில், கண்டேன். 35


இதில் சீதையைக் கண்டுவந்த செய்தியை அனுமன் இராமனுக்குத் தெரிவிக்கிறான். இதற்கடுத்த மிகைப்பாடல் தான் கீழே வருவது.

 

மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த

சேண்பிறந்து அமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக்

காண்பிறந்த மையால், நீயே, கண்அகன் ஞாலம் தன்னுள்,

ஆண்பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே?


இதில் தான் ”காண்” என்ற சொல் வருகிறது.  இதில்தான் குழறுபடி நடந்துள்ளது. சென்னைப் பேரகராதியின் குறிப்பு முற்றிலும் தவறு. மேலே உள்ள மிகைப்பாடலைக் கூர்ந்து படியுங்கள்.  பாட்டைக் கீழ்க்கண்டபடி பிரித்தால் தான் அதன் சோகப் பொருள் வெளிப்படும். 


மாண்பு இறந்து அமைந்த, கற்பின் வாணுதல் நின்பால் வைத்த

சேண் பிறந்து அமைந்த காதல், கண்களின் தெவிட்டி, தீராக்

காண்பு இறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம் தன்னுள்,

ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே


இங்கே ”கற்பின் வானுதல்” என்பது சீதைக்கான ஆகுபெயர். பொருள் காணும்போது “லற்பின் வாணுத;” எனும் தொடரைச் சீதை என்று புரிந்துகொள்க. அவள் அங்கு கண்ணிர் சிந்தச் சோகத்தில் ஆழ்ந்துள்ளாள்.  மிகைப்பாட்டின் பொருள் 

”நீயே, கண்ணகன்ற உலகத்தில் அந்நாளில் ஆளப்பிறந்த செல்வமாய் உண்டான” தீராக் காட்சி இறந்தைமையால் (அழிந்தமையால்)) நின்பால் வைத்த, உயர்நிலையில் பிறந்த காதல் அவள் கண்களில் தெவிட்டி, தன் மாட்சிமை குலைந்து அமைந்த சீதை 

பற்றி அனுமன் சொல்வதாய் பாட்டு அமையும். ”காண் பிறந்தமையால்” என்று பிரிப்பது முறையான சோகப் பொருளைக் கொடுக்காது ”சீதையின் காதற்காலத்தில் கண்ட பழைய காட்சி குலைந்தமையால்/ இறந்தமையால்” என்றால் தான் சோகக் காட்சியின் ஆழம் நமக்குப் புரியும். ”காண்பு  இறந்தமையால்” என்ற புணர்ச்சிப் பிரிப்பே பொருள் ஏரணப்படி சரி. யாரோ ஒரு உரையாசிரியரின் முறையற்ற புணர்ச்சிப் பிரிப்பைக் கொண்டு இந்த மிகைப் பாட்டின் பொருளையும் குலைத்தார். கூடவே தவறான சொல்லாய்க் காண் என்பதையும் பின்வந்தோர் அகராதியில் ஏற்றக் காறணமாயிற்று சென்னைப் பேரகராதியின் சறுக்கல்களில் இதுவும் ஒன்று.

அதைப்பிடித்துக் கொண்டு காணொலி சரி என்பது முறையற்றது    காண் என்பது காட்சி எனும் பொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல்  அல்ல.


Wednesday, May 04, 2022

Fresh

 ”fresh இதை தமிழில் எப்படி சொல்வது?” என்று சொல் எனும் குழுவில் கேட்டார். 

என்னைக் கேட்டால், புது என்னும் பெயரடையைப் பெயராக்கலாம். அது வேண்டாமெனில் புதியது என்பது கன்னடத்தில் பொசது என்றும் தமிழில் புதுசு என்றும் சொல்லப் படுவதை எண்ணிப் பார்க்கலாம். பலரும் புதிதின் கொச்சை வழக்குப் புதுசு என்று எண்ணிக் கொள்கிறார். அப்படியாகத் தேவையில்லை புதிது = new good என்றும் புதுசு = fresh என்றும் நாம் வேறு படுத்தலாம். அதில் குறையில்லை. இதுவும் வேண்டாமெனில் புதல் என்று சொல்லின் பொருளை நீட்டலாம். இப்போதுள்ள பொருள்: புதல் = அரும்பு bud பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை” பதிற்றுப் 66, 16. புல்>புது>புதல். என் பரிந்துரை புது என்பதே.

freshness புதுநை

freshening புதுநித்தது

fresherdom புதியர்கொற்றம்

freshwater புதுநீர்

freshened புத்தாகல்

freshener புத்தாக்கி

freshest புத்தம்புதிது

freshing புத்தாக்கியது

freshman புதியன்

freshmen புதியர்

freshed புதுவானது

freshen புத்தாக்கு

fresher புதுவர்

freshly புதுவாக


refreshening புதுவித்தல்

refreshingly புதுவிப்பாக

refreshment புதுவிமம் 

refreshened புதுவித்தாகல்

refreshing புதுவிப்பு

refresher புதுவிப்பர்

refreshen = புதுவி

refreshed புதுவிக்கப் பட்டது

Tuesday, May 03, 2022

நெருப்பிலே பூத்த நெகிழ்

”நெருப்பிலே பூத்த நெகிழ்” என்ற ஈற்றடிக்கு ஒருகாலத்தில் (ஏப்ரல் 8, 2006) எழுதிய இன்னிசை வெண்பா. அப்பொழுதெலாம் ஈற்றடிக்கு வெண்பாப் புனையும் விளையாட்டு இணையத்தில் நடந்துகொண்டிருந்தது. இப்பொழுது இதுபோல் நடக்கிறதாவென்று தெரியவில்லை. இன்று வேறெதற்கோ இணையத்தில் தேடியபொழுது இலவசக்கொத்தனாரின் வலைப்பதிவில் என் பதிவிருந்தது தெரிந்தது.. நானே இதுபற்றி மறந்துவிட்டேன். என் ஆக்கங்கள் இப்படித்தான் அங்குமிங்கும் சிதறிக் கிடக்கின்றன. பலவற்றை மறந்தும் விட்டேன். இது ஏதோ தன்னேர்ச்சியாய்த் திடிரென்று இன்று கிட்டியது. சரி, ஓரிடத்தில் சேர்த்துவைப்போமே? என்று என் முகநூல் பக்கத்திலும், வலைப்பதிவிலும், மடற்குழுக்களிலும் பதிகிறேன். இப்பாட்டில் அறுபடைவீட்டையும் ஊடே குறித்திருக்கிறேன்.

முருக்கன்; குமரன்; முளைச்சேயோன்; கந்தன்; 

கருப்பன் மருகன்; கடம்பிற் பரமன்;

செருத்தணியான்; செந்தில்; சிலம்பன்; இவனோ

நெருப்பிலே பூத்த நெகிழ்.


இனிப் பாட்டின் விளக்கம்.

முருக்கென்பது பலாசமரம் அல்லது புரசைமரம் எனப்படும். சென்னைப் புரசைவாக்கத்தை நினைவுகொள்ளுங்கள். புரசைவாக்கம் சிவன் கோயிலில் தலமரம் முருக்கமரமே; இது முள்முருக்கென்றும் சொல்லப்படும். Butea monosperma. இம்மரமே flame of the forest ஆகும். தீம்பிழம்பு போல முருக்கமரக்காடு பூக்கள் மலர்ந்த நிலையில் காட்சியளிக்குமாம். சிலர் புரியாமல் மயிற்கொன்றையை / குல்மொஹரை flame of the forest என்று சொல்வார். அது தவறு. மயிற்கொன்றை மொரிசியசிலிருந்து இங்கு இறங்கியது. தமிழ்நாட்டைச் சார்ந்ததில்லை. முருக்கம்பூவே நம்முடையது. புரசைப்பூ = முருக்கம்பூ =செக்கச்செவேலென்று சிவந்த பூ. சிவந்த நிறத்தின் காரணமாகவே முருக்கன்>முருகன் என்ற பெயர் எழுந்தது; அழகு, இளமை எல்லாம் பின்வந்த வழிப்பொருள்கள். முதற் பொருட்கள் அல்ல. பலாசமரம் நிறையவிருந்த இடம் பலாசி; பலாசி யுத்தமென இந்தியவரலாற்றில் படித்திருப்போமே? இராபர்ட் கிளைவிற்கும், வங்காள நவாபிற்கும் நடந்த சண்டை; அது புரசைமரக் காடுகளில் தான் நடந்தது. 

குமரன் = இளையோன்; தந்தைக்கு ஓமெனும் பொருளை உரைத்த கதை இக்காலத்தில் இதைச் சாமிமலையிற் புனைந்துசொல்வார்; ஆனால் ”இப்படைவீடு சரிதானா? திருவேரகமென்பது எது?” என்று திருமுருகாற்றுப் படையின் வழி உணரமுடியவில்லை.

முளைச்சேயோன்; முளை = தண்டாயுதம்; பழனி தண்டாயுதபாணியே இங்கே முளைச்சேயோன்

கந்து = மரத்தூண்; ஒவ்வொரு மரத்தூணிலும் முருகன் இருப்பதாக நம் முன்னோர் எண்ணினர்; அதனாற்றான் தூணிற்படரும் வள்ளிக்கொடியை அவன் மனையாளாய்க் கருதினர்.

கருப்பன் மருகன்: விளக்கம் சொல்லத் தேவையில்லை.

கடம்பிற் பரமன்: திருப்பரங்குன்றம் அக்காலத்தில் கடம்பவனம் என்ற பெயர்பெற்றது. மதுரைக்கும் ஒருகாலத்தில் கடம்பவனத் தொடர்பும், மருதவனத் தொடர்புமுண்டு. (பரிபாடலின் படி மருதையே மதுரையாயிற்று.) பரமன் = பரங்குன்றன் 

செருத்தணியான் = திருத்தணிகையான்

செந்து + இல் = செந்தில் = சிவந்தவன் இருக்கும் வீடு. அந்தவூர் மண்ணும் செக்கச்செவந்து இருக்கும். திருச்செந்தூரிலிருந்து குமரிவரை போனால் சிவந்த மண் நெடுகக் கிடக்கும். எல்லாம் அருமண் மாழைப் பூண்டுகள் (rare earth metal compounds) செய்யும் வேலை

சிலம்பாறும், அருவியும் பாயும் இடம் பழமுதிர்சோலை; அங்கு குடியிருப்பவன் சிலம்பன்.

நெகிழ்: மலர்தலென்பது இதழ்கள் நெகிழ்ந்துவிரிதலே; அவ்வகையில் நெகிழென்பது மலரெனும் பெயராயும் ஓரோவழி அமையும். 

நெருப்பிலே பூத்த நெகிழ் = சிவனுடைய நெற்றிக்கண் நெருப்பில் தோன்றி சரவணப் பொய்கையில் பூத்த மலர். 

அன்புடன்,

இராம.கி.


Tuesday, April 26, 2022

Internet of Things

 ”Internet of Things ஐத்  தமிழில் எப்படி அழைக்கலாம்?” என்று 2016 இல் செல்வமுரளி கேட்டிருந்தார். இன்று அதை மீண்டும் முன்வரித்தார். நானளித்த விடை இதோ

---------------------- 

இதிலுள்ள சிக்கல் thing என்பதற்கு நம்மிடம் தனிச்சொல் இல்லாதது தான். பொருள், உருப்படி என்று ஏதோ இன்னொரு சொல்லைக் கூறி நாம் ஒப்பேற்றுவோம். (பலரும் நான் இப்படிச் சொல்வதை ஏதோ பூச்சாண்டி, காட்டுவதாயும் இல்லாததைச் சொல்கிறேன் என்பதாயும் உரைபரப்பிப் இணைய நண்பரை வெருட்டுவார். அப்படிக் கிடையாது. thing என்பதற்கு உண்மையிலேயே தனிச்சொல் நம்மிடம் இல்லை. 

உங்கள் புரிதலில் அருள்கூர்ந்து நீங்களே ஓர்ந்து பாருங்கள். ஆங்கிலம் வென்றது சொல் துல்லியத்தாலே அன்றி. வேறு எதனாலும் அல்ல. சொல் துல்லியம் கூடக் கூட நம் தமிழும் இற்றை நிலையில் வெல்லும். We need to express each and every thing minutely.) இனி thing இன் வரையறைக்கு வருவோம்.  

thing (n.) Old English þing "meeting, assembly, council, discussion," later "entity, being, matter" (subject of deliberation in an assembly), also "act, deed, event, material object, body, being, creature," from Proto-Germanic *thinga- "assembly" (source also of Old Frisian thing "assembly, council, suit, matter, thing," Middle D நம்utch dinc "court-day, suit, plea, concern, affair, thing," Dutch ding "thing," Old High German ding "public assembly for judgment and business, lawsuit," German Ding "affair, matter, thing," Old Norse þing "public assembly"). The Germanic word is perhaps literally "appointed time," from a PIE *tenk- (1), from root *ten- "stretch," perhaps on notion of "stretch of time for a meeting or assembly."

The sense "meeting, assembly" did not survive Old English. For sense evolution, compare French chose, Spanish cosa "thing," from Latin causa "judicial process, lawsuit, case;" Latin res "affair, thing," also "case at law, cause." Old sense is preserved in second element of hustings and in Icelandic Althing, the nation's general assembly

மேலேயுள்ள வரையறை அடிப்படைக்கு ஏற்ப, சில சினைகளின் (உறுப்புகளின்) சேர்க்கையே thing என்பது விளங்கும். சினைகளின் சேர்க்கை என்பது thing இற்கான முதற்சுருக்கம். சினைகள் என்பதையும் கூடத் தொகுக்கலாம். அப்போது சொல், “சேர்க்கை” என்றாகும். சேர்க்கையைக் கூட சேரை என்று மேலுஞ்சுருக்கி, thing இற்கு இணையாக்கலாம். சேரையைப் பொருணை (material) உள்ளதாய் மட்டுமே பார்க்கவேண்டியது இல்லை. அது கருத்தாகவும் இருக்கலாம். எனவே எங்கெல்லாம் thing வருகிறதோ, அங்கெல்லாம் என் பார்வையில் சேரையைப் பயன் கொள்ளலாம். 

சேரை இணையம் = Internet of things. 

Monday, April 18, 2022

சித்திரை முதல் என்பது மேழவிழு

Vaishakhi>Baisakhi என்று Jammu விலும், Vaisjakhi> Baisakhi என்று Punjab இலும், Vaishaki> Baisakhi என்று Haryana விலும், Vaisoa> Basoa என்று Himachal இலும்,  Vaikoti> Bikhoti என்று Utterakhand இலும், (Pohela) Vaishakhi > (Pohela) Boishaki என்று Bengal இலும், Visu Tring > Buisu Tring என்று Tripura விலும்,  Rongali visu > Rongali bihu என்று Assam இலும், Vishuva Sankanti > Bishuba Sankranti என்று Orissa விலும், Vishu Parvam > Bish Parba என்று Tulu நாட்டிலும், Vishu என்று Kerala கேரளத்திலும் சொல்லப் படுவது தமிழ்நாட்டில் மட்டும் வெறும் மொண்ணையாய்ப் புத்தாண்டு எனப்படுகிறது. இது சரியா? 



மற்ற பகுதிகளில் இது புத்தாண்டு தான். ஆனால் வானியல் பெயரில் அழைக்கப் படுகிறது. நம்மூரில் மட்டும் வானியல் நிகழ்வை வெளிப்படச் சொல்லாது  புத்தாண்டு என்கிறார். நாம் என்ன மாங்காய் மடையர்களா? நமக்கு எதுவும் விளங்காதா?  ஏன் மேழ விழு என்று சொல்ல மாட்டேம் என்கிறோம்? (தைப் புத்தாண்டு என்போர் இவ்வாதுள் வரவேண்டாம், என்னிடம் தையா, சித்திரையா என்று கேட்டால் அறிவியலின் படி இரண்டும் சரி என்பேன். அதே பொழுது , கிட்டத்தட்ட 2022 - 285 = 1737 ஆண்டுகளுக்கு முன் இம்மாற்றம் வேறு காரணங்களால் நடைபெற்று விட்டது என்று உரைக்கக் கடமைப் பட்டுள்ளேன். ஏனென்று எனக்குத் தெரியாது. கிபி.285 க்கு அப்புறம் சித்திரையே புத்தாண்டு எனும் பெரும்பான்மைப் போக்கு தமிழரிடை ஏற்பட்டுவிட்டது, அதை இனிமேல் மீளவும் பேசிப் பலனில்லை,) 

சித்திரை முதலை எப்படிக் குறிக்க வேண்டும் என்ற கேள்விக்கு இனி வருவோம். ஆண்டென்பது ஒரு குறிப்பிட்ட வகை மூங்கில் தளிர் ஆண்டுக்கு ஒரு முறை தாய் மூங்கிலை அண்டி எழுந்ததைக் குறிக்கும். (அண்டு>ஆண்டு), ஆண்டுக்கு ஒருமுறை வழியும்  மழையைக் குறித்து எழுந்தது வழியம்> வழுயம்> வழுசம்> வருஷம்> வருடம் என்ற சொல். இது தமிழ்- சங்கதம்- தமிழ் வழி எழுந்தது. தமிழோடு நிற்க வேண்டின், வழியம் என்பது போதும். சிலர் வருடை - ஆடு. எனவே வருடம் என்பார். எனக்கு வழியமே சிறப்பாய்த் தோன்றுகிறது. விஷுவிற்கும் ஒரு பின்புலம் உண்டு. அதை முறையாக வெளிப்படுத்தாமல் புத்தாண்டு என்பது ஒருவித மொண்ணைப் போக்கு. அப்படிச் சொல்வது நம் அறிவை மறுப்பதும், முன்மையை மறைப்பதும், வழிதவறிக் குழம்ப வைப்பதும் ஆகும்.

உண்மையில் புவியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றினாலும், புவியை, ஞாயிறும் மற்ற கோள்களும் சுற்றுவதாகவே நமக்குத் தோற்றம் அளிக்கும். புவியில் இருந்து ஞாயிறு இல்லாத மற்ற கோள்களைப் பார்த்தால் அவை யெலாம் ஏறத்தாழ ஒரே தளத்தில் புவியைச் சுற்றுவதாகவே தோற்றம் அளிக்கும் இச் சுற்றுத் தளத்தை (plane of revolution) ஏகலோடி - ecliptic- என்றும் சொல்வார். புவியின் நடுக் கோட்டுத் தளத்தை (equatorial plane) ஞால நடுவரை என்பார். இதையே தொலைவிற் தெரியும் வானவரம்பு (horizon) அளவுக்குப் பெரிதுபடுத்தி, வான் நடுவரை (celestial equator) என்று உருவலிப்பார். இவ் வான் நடுவரையை, விசும்பு வலயம்/வட்டம் என்பதும் உண்டு. 

இது தவிர, புவியைச் சுற்றுவதாகத் தோற்றமளிக்கும் ஞாயிற்றின் சுற்றுத் தளம் (ஏகலோடி), புவி நடுக்கோட்டுத் தளத்தை (வான் நடுவரையை) 23.5 பாகையில் விழுந்து வெட்டுவது போற் காட்சியளிக்கும். இந்த 2 தள வெட்டு விழுப்பைத் தான் "விழு" (point of intersection) என்று தமிழில் சொல்ல முற்பட்டார். ஒரு வட்டத்தளம் இன்னொரு வட்டத்தளத்தை 2 இடங்களில் அல்லவா வெட்ட வேண்டும்? அதை யொட்டி 2 விழுக்கள் நமக்குப் புரிபடுகின்றன. ஒன்று மேழ விழு (இந்த விழுவின் பின் மேழ ஓரை காட்சியளிக்கிறது.) மற்றொன்று துலை விழு (துலை ஓரைக் காட்சியளிப்பு). அதாவது ஒரு விழு மேழ இராசி இருக்கும் திசையிலும், மற்றொன்று துலை இராசி இருக்கும் திசையிலும் காட்சி யளித்தன. 

மற்ற எல்லா மொழியாரும் விழு என்பதைத் தான் விஷு என்கிறார். தமிழ் ழகரம் வடக்கே ஆந்திரம் போகையில் டகரம் ஆகும். அதற்குப் பின் மேலும் வடக்கு ஏகுகையில், சில சொற்களில் டகரம் தகரமாயும், சிலவற்றில் டகரம் ரகரமாயும், சிலவற்றில் டகரம்> யகரம்> ஷகரமாயும் திரியும். இங்கு விழு>வியு>விஷு என்று ஆகியிருக்கிறது. மோனியர் வில்லியம்சு சங்கத அகரமுதலியில் விஷுவிற்குச் சொற்பிறப்புச் சொல்லவில்லை. பயன் கொள்ளுதல் மட்டுமே சொல்லப் பெறும். “விள்ளுதல், வெட்டுதல். விள்> விள்ளு> விழு என்ற விளக்கம்” தமிழில் மட்டுமே உண்டு. அடிப்படையில் நாளும், மாதமும், ஆண்டும், தன்னுருட்டும், வலயமும், வானியலும் ஓரிடத்தில் பல நூறு ஆண்டுகள் தங்கியவராலேயே செய்ய முடியும். நாடோடி நிலையில் முடியாது சாயை, நிழலை வைத்துத் தான் இந்த இயலே பிறந்தது. நிழல் விழும் குச்சியும், கூர்த்த பார்வையும், ஓரிட இருப்பும் தான் இவ்வியலைப் பிறப்பித்தன. நிழல் விழும் குச்சியைச்  சங்குக் குச்சி, ஞாலக் குச்சி, விழுவன் குச்சி, நத்தக் குச்சி என்று வெவ்வேறு சொற்களாற் தமிழிற் சுட்டுவார். நத்தக்>ஞத்தக் குச்சியை ஆங்கிலத்தில் gnomon என்பார்,

இப்படியாக விழு எனும் தமிழ்ச்சொல் விஷு என்று சங்கதத்தில் மாறும். நாமோ, முட்டாள் தனமாய், நம் விழுவை மறந்து புத்தாண்டு என்று புதுப் பெயரிட்டு அழைக்கிறோம். நம் முன்னுரிமையைச் சங்கதத்திற்கு விட்டுக் கொடுக்கிறோம். சரி! தமிழ் ஆண்டுப்பிறப்பு மேழவிழுவை ஒட்டி எனில் அது மார்ச்சு 21 ஆம் நாளை ஒட்டியல்லவா வரவேண்டும்? பின் ஏன் ஏப்ரல் 14- இல் சொல்லி வைத்தாற் போல் ஒரே நாளாய் வருகிறது?  இன்னும் கொஞ்சம் ஆழப் போவோம்.

மீள்நினைவு கொள்க. விசும்புவட்டம் என்பது புவியின் தன்னுருட்டோடு (self-rotation) தொடர்புள்ளது; ஏகலோடி = எல்லாக் கோள்களும் சுற்றும் வலயத் தளம். விசும்பு வட்டமும், ஏகலோடியும் ஒன்றையொன்று ஒருக்களிப்பாய் (obliquity) வெட்டிக் கொள்கின்றன. (சிவகங்கை வட்டத்தில் ”ஒருக்களி=த்தல்/  ஒருக்கணி-த்தல்” என்பது ”சாய்ந்து இருத்தல்” பொருளைக் காட்டும். ”ஒருக்களித்துப் படுத்தான்” எனில் ”மல்லாக்கப் படுக்காமல் கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal- சாய்ந்து ஒரு பக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது” என்று பொருளாகும்.) இத்தகைய ஒருக்களிப்பின் காரணமாய், கோடையும் (summer), வாடையும் (winter), இடையே பசந்தமும் (பச்சையாய்ப் பசிய இருப்பது பசந்தம்; spring; இதை ஒலிப்பு மாற்றி ப/வ போலியில் வசந்தம் என்கிறோம்.), கூதிரும் (இலைகள் கூம்பி உதிர்வது கூதிர்; autumn; கூதிருக்கு அப்புறம் நீளும் முன்பனிக் காலத்தில் அடிக்கும் காற்று கூதல்) எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன.

ஆண்டின் ஒவ்வொரு பருவ காலத்திலும், பகலும் இரவும், ஒரே அளவுப் பொழுதாக 12 மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளுகிறது; வாடையில் இரவு நீளுகிறது. ஆனாலும் ஆண்டின் இரண்டே இரண்டு நாட்களில் மட்டும், பகலும் இரவும் (=ஒரே அளவுள்ள) ஒத்த நாட்களாக அமைகின்றன. அந்நாட்களை ஒக்க நாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கிறார். மற்ற நாட்களில் பகலோ, இரவோ, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் அதிக நேரம் வியலுகிறது. (அதாவது பகல் குறைந்து இரவு நீண்டோ, அல்லது பகல் நீண்டு, இரவு குறைந்தோ, இருக்கின்றன). இப்படிப் பகலும் இரவும் ஒன்றே போல ஒக்க இருக்கும் மார்ச்சு 21 - ஆம் நாளைப் பசந்த ஒக்க நாள் (spring equinox) என்றும், செப்டம்பர் 22 - ஆம் நாளைக் கூதிர் ஒக்க நாள் (autumn equinox) என்றும் சொல்வார்.

இதுபோக, நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து சூரியனின் தொலைவை அளந்தால், மேலே கூறிய இரண்டு ஒக்க நாட்களில் மட்டும் நடுவார்ந்த தூரம் (median distance) இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம், புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கூடியோ, குறைந்தோ, வரும். இப்படிக் கூடுதல், குறைச்சல் வரும் போது, வலயத்தின் ஓரிடத்தில் மட்டும் ,இருப்பதிலேயே அதிக தூரமாகவும், வலயத்தின் இன்னொரு இடத்தில், இருப்பதிலேயே குறைந்த தூரமாகவும் அமையும். இருப்பதிலேயே கூடிய தூரமாய் புவியும் சூரியனும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter solstice; முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்; பனிக் காலத்தில் அமைதல் - திசம்பர் 21-ம் நாள்), அண்மைத் தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer solstice; வேனில் = வெய்யிற் காலம் - சூன் 21ம் நாள்) நாம் சொல்கிறோம்.

10 ஆண்டுகளுக்கு முன் பசந்த ஒக்கநாள் என்பது மீன (pisces) ஓரையில் விழுந்தது (=ஏற்பட்டது). கி.பி. 2012 - ல் இருந்து அது அஃகர (aquarius) ஓரையின் தொடக்கத்தில் வந்துவிழும். அப்படி விழும் போது, புதிய உகத்திற்கு நாம் போகிறோம் (உகம் = ஒன்று சேரும் காலம்; உகம்> யுகம்> yuga என்ற வடமொழியில் சொல்வார்.) என்று வரலாற்றாசிரியர் சொல்கிறார். அதேபோல, வரலாற்றின் முன்காலத்திற்கு முற்செலவத்தின் துணைகொண்டு போனால், ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரையின் தொடக்கத்தில் (மேஷ ராசி) இந்த ஒக்க நாள் விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க நாள் இன்று 23/ 24 நாட்கள் முன்னேயே மீனத்தில் மார்ச்சு 21-ல் நிகழ்கிறது. இது போல முற்செலவத்தின் நகர்ச்சியால், கூதிர் ஒக்கநாள், பனி முடங்கல், வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 23/24 நாட்கள் முன்தள்ளிப் போகின்றன. அதாவது அக்டோபர் 15 இல் விழவேண்டிய கூதிர் ஒக்கநாள் செப்டம்பர் 22-லேயே நடக்கிறது. சனவரி 14 இல் நடக்கவேண்டிய பனிமுடங்கல் திசம்பர் 21 -இலும், சூலை 14 இல் நடக்கவேண்டிய வேனில் முடங்கல் சூன் 21 -இலும் நடக்கின்றன.

இந்த முற்செலவம் என்ற இயக்கம் மாந்த வாழ்க்கையில் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் பருவங்களைக் குறிக்கும் எந்தக் குறிப்பையும், முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். மொத்தமாய் ஒரு முழு முற்செலவம் முடிய கிட்டத்தட்ட 25783 ஆண்டுகள் ஏற்படுகின்றன (அளவு கோல்கள் நுணுக நுணுக, இந்த முற்செலவு இயக்கத்தின் நடப்புக் காலமும் துல்லியப் பட்டு வருகிறது). 25783 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், ஒரு ஓரையில் (உகத்தில்) 25783/12 = 2148.58 ஆண்டுகள் என்ற ஒரு பருவ காலம் அமையும். இந்தப் பருவகாலத்தைத் தான்  உகம் (=யுகம்) என்று சொல்கிறார். உகம் உகமாய் மாந்த வாழ்க்கை மாறுகிறது என்பது இப்படித்தான். ஏற்கனவே மீன உகத்தில் இருந்த நாம் 2012 ற்கு அப்புறம் அஃகரை உகத்திற்குள் நுழைந்துவிட்டோம். 

இந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு ”உடன் அயன முறை” (உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method) என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இம்முறையில் தான் காலங்களைக் கணிக்கிறார். மாறாக, முற்செலவம் என்ற அயனத்தை முற்றாகக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத் திருத்தம் (precession correction) கொண்ட நில்லயன முறையே விதப்பாகப் பின்பற்றப்படுகிறது.

நில்லயன முறைப்படி, தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்) என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்வார். நில்லயன முறைப்படி, தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவைச் சூரியன் தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது இக்காலத்தில் உடன் அயன முறையின்படி, வடசெலவு தொடங்குவது திசம்பர் 22 ஆகும். இங்கே கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது.

இன்னொரு விதமாய்ப் பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன் போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக வேண்டும். இந்த அளவை வைத்து, வெறும் முழு நாட்களாய்ப் பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்கள், மணி, நுணுத்தம் என்று கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22 ல் நடக்கும் பனி முடங்கல், 1722 ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும். அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில் நடந்திருக்கும். அந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும் ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின் அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய ஆண்டு கி.பி. 285 ஆகும்.

இந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய நிலையை நினைவு படுத்தி, ”பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் கி.பி.285 இல் ஒன்று சேர்ந்திருந்தன” என்று சொல்வார். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு என்றும் சொல்லுவது வானியல் முறை. மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்வார்.)

மேலவிழு, துலை விழு ஆகியவற்றைச் சொன்னது போலவே, “பொங்கல் நாள்” என்பதும் ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) ”பனிமுடங்கலைச் சுட்டிக் காட்டிய பண்டிகை” என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும். பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும், சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத் தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான் பொங்கல் விழா.

சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு. அதே போல சூரிய மானத்தின் படி, சூரியன் ஓர் ஓரையில் இருந்து இன்னோர் ஓரைக்குப் போவதே மாதப் பிறப்பாகும். சூரிய மானப் பெயர்களான, மேழம் (=மேயம்>மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம், மடங்கல் (=சிகையம்>சிம்ஹம்), கன்னி, துலை(=துலாம்), நளி (விருச்சிகம்), சிலை (தனுசு), சுறவம் (மகரம்), கும்பம், மீனம் என்ற பெயர்களையே மலையாளத்தார் போலத் தமிழரும் புழங்கினால் நன்றாக இருக்கும். [இப்பொழுது சூரியச் சந்திரமானப் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். பழைய கல்வெட்டுக்களில் ஞாயிற்று மாதங்களும் (காட்டாக மகர ஞாயிறு), திங்கள் மாதங்களும் (தைத் திங்கள்) பதிவாக்கப் பட்டிருக்கின்றன.]

மேயம் என்பது மேழம் என்று மீத் திருத்தமும் பெறும். முடிவில் மற்ற தமிழிய மொழிகளில் ழகரம் டகரமாய் ஒலிக்கப் பெறும்போது மேடம் என்றும் விரிவு கொள்ளும்.

சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். சித்திரை முதலை, மேழ விழு என்று சொல்லப் பழகுக, 


Wednesday, April 13, 2022

Matriculation School

தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் matriculation school உக்கான இணைத் தமிழ்ச்சொல் கேட்டிருந்தார். அதில் நண்பர் கார்த்திக் கரன் என்னுடைய  ”மடிக்குழைப் பள்ளி”  என்ற 2003. 2004 பரிந்துரையைக் கொடுத்திருந்தார். அதன் விளக்கம் கீழே:

Skeat இன் பழைய ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில் Matriculate இற்கு இணையாய்க் கீழுள்ளது கொடுக்கப்பட்டிருக்கும். 

to admit to membership, esp. in a college, to register. used a a pp. with the sense of 'enrolled' Latin matriculatus, pp of matriculare, to enroll - a coined word. Latin matricula a register; a dimunitive of matrix (i) a breeding animal (ii) a womb, matrix (iii) a public register, roll, list Literally a parent-stock

18, 19 ஆம் நூ. இங்கிலாந்தில் ஒரு பள்ளியிலோ,கல்லூரியிலோ, இடம் பிடிக்க வேண்டுமெனில் ”இவன் இன்னாருக்குப் பிறந்தவன், இன்னார் வீட்டுச் சிறுவன்/சிறுமி” என்று சொல்லித் தான் பள்ளி, கல்லூரி தரும் ஆவணத்தில் புள்ளிவிவரங்களை ஒரு நீள வரிவையில் குறித்தே இடம் பிடிக்கவேண்டும். நிலவுடைமைக் காலத்திலும், தொடக்ககால முதலாளியத்திலும் ஊரிலுள்ள எல்லோரும் இதுபோன்ற பள்ளிகளில் இடம் பெற்றுவிட முடியாது, அதற்கென்று குடும்பப் பின்புலம் பார்ப்பார்.

19, 20 ஆம் நாற்றாண்டில் இந்தியாவில் ஆங்கில வழிப் பள்ளிகள் ஏற்பட்ட போது ஆங்கிலேயர். இந்திய மேல்தட்டு ஆளும் வருக்கத்தார் ஆகியோர் மட்டுமே இதுபோன்ற matriculation பள்ளிகளில் இடம் பெற முடியும். கோவையில் Stanes High School. திருச்சியில் Campion High School, ஏற்காட்டில் Montford School போன்றவையும், சென்னை, மதுரை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடத்துப் பள்ளிகளிலும் குடும்ப 😊 மடி) விவரம் பார்த்தே பிள்ளைகளை அனுமதித்தார். எல்லோரும் நுழைந்துவிட முடியாது

குடும்ப விவரம் என்பதை இல் என்று சேரலத்தில் சொல்வது போலும், கோத்திரம் என்று பெருமானர் சொல்வது போலும் கொள்க. இங்கிலாந்தில் இன்ன “matrix" (மடி, = குடும்பம்) என்று வெவ்வேறு ஆளும் வருக்கத்தார், பிரபுக்கள் சொல்லியுள்ளார். இந்த matrix வீட்டு பிள்ளை என்பது தான் matriculate என்று பின்னால் ஆயிற்று.. இதைத் தான் matriculate = மடிக்குழை = மடிப்பிள்ளை என்ற பொருளில் நான் சொன்னேன்.

நான் புரிந்து கொண்டவரை வரலாற்றின் படி ”மடிக்குழை” என்பது சரியான சொல். .Matriculation School = மடிக்குழைப் பள்ளி.


Sunday, April 10, 2022

இராசிக்கான தமிழ்ச்சொற்கள்.

இன்று ஒரு நண்பர் இராசிக்கான தமிழ்ச்சொற்களைக் கேட்டார். அவருக்குக் கொடுத்த விடை கீழே உள்ளது.

விண்மீன் கூட்டங்களை ஏதோ ஒரு வகையில் உருவகப் படுத்தித் தொகுதிகளாக்கிய போது அவை 12 தொகுதிகளாகத் தெரிந்தன. அவற்றின் இரைந்து கிடந்த பக்குவம் இரைதி = தொகுதி என்ற சொல்லை  உருவாக்கியது. இரைதி> இரதி> இராதி> இராசி என்று மேலும் ஆனது. 

இராசிகளை ஓரை என்றும் அழைப்பர். ஒல்லுதல் = உடன்படுதல்.  சில குறிப்பிட்ட பொருள்கள் உடன்சேர்ந்து தொகுதியாகும் பொழுது,  ஒன்று. ஒரு , ஓர் என்றும் அழைப்பார். இங்கு சில விண்மீகள் தம்முள் உடன்பட்டு ஒரு தொகுதி போல் காட்சியளிக்கின்றன. எனவே ஓர்>ஓரை என்றும் இரைதியைச் சொல்வர்.    

அடுத்து ஒவ்வொரு இராசியையும் வீடு என்றே பழம் மாந்தன் சொல்ல முற்பட்டான். பகலெல்லாம் பசிக்கு அலைந்து இரவில் இல் தேடி, தான் வருவது போல், இவ் விண்மீன் கூட்டங்களும் இரவில  வீடு தேடி வந்ததாக உருவகித்து அவை இருக்கும் அண்டவெளியை வீடென்றே உரைத்தான். 12 தொகுதிகளும் 12 வீடுகளாகக் கொள்ளப் பெற்றன. 

ஒரு வீடு ஆடாக (மேழம்) த் தெரிந்தது; இன்னொன்று மாடாக (விடை)த் தெரிந்தது; மேலும் ஒன்று நண்டாகத் தெரிந்தது; இன்னும் மற்றொன்று சுறா மீனாகத் தெரிந்தது. இப்படி மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் எனப் 12 இராசிகளுக்கும் பெயர் இட்டார்.  இதையே பாதி வடமொழிப் படுத்தி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுஸ், மகரம், கும்பம், மீனம் என்பார்,  

ஓரைகளின் பெயர்களையே சூரிய மான மாதத்திற்கும் பெயர்களாகச் சொல்லுவது நம்மிடமுள்ள கால காலமான மரபு. சூரிய மான மாதத்தை ஞாயிறு என்ற சொல்லால் அழைத்துச் சோழர் காலக் கல்வெட்டுக்களில் குறித்திருக்கிறார். கடக ஞாயிறு, கும்ப ஞாயிறு என்று அவற்றில் சொற்கள் புழங்கும். சித்திரை, வைகாசி......பங்குனி என்ற பெயர் கொடுத்து அழைக்கும் மாதங்கள் சந்திர மானக் கணக்கில் வருபவை. இவற்றைத் திங்கள் மாதங்கள் என்போம். இரு விதக் கணக்குகளும் சங்ககாலம் தொட்டே நம்மிடம் இருந்து வருகின்றன.

இராசியின் தமிழ்ப் பெயர்கள்: 1 இரைதி 2 ஓரை 3 வீடு. இடம் பார்த்துப் பயன்கொள்க.


Saturday, April 02, 2022

புவியியல் பிரிவுகள் (Geological divisions)

இதில் இயற்பெயர்கள் அப்படியே ஏற்கப் படுகின்றன. மற்ற சொற்களே மொழிபெயர்க்கப் படுகின்றன. (கீழ் வருவதில் era - எழுகை, period = பருவம்.)

late proterozoic era = கடை முன்னுவாழ் எழுகை    (650-541 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) முதல் காழுள்ள எளிமங்கள் (first skeletal elements), முதல் சவையுடல் முகட்டுவாழிகள் (first soft-bodied metazoans), முதல் விலங்குத் துணுக்குகள் (first animal traces)

paleozoic era = பழைவாழ் எழுகை     (541-251.902 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்)

cambrian period = கேம்பிரியப் பருவம்     (541 -485.4 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதல் மீன்கள், முதல் குட்டத்திகள் (first chordates; குட்டம் உள்ள உயிரிகள்) 

Ordovician period = ஆர்டோவிகப் பருவம்      (485.4-443.8 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முகட்டுவாழிக் குடும்பங்களின் திடீர் விரிவு.

Silurian period = சிலூரியப் பருவம்      (443.8 - 419.2 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதன்முதல் நாளங்கொண்ட நிலத் தாவரங்கள்> 

Devonian period = தெவோனியப் பருவம்      (419.2 - 358.9 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதல் நிலநீர் வாழிகள், தாடையுள்ள மீன்கள் பல்வேறு விதப்புகள் ஆதல். 

carboniferous period = கரிப்பேற்றுப் பருவம்      (358. 9 - 298.9 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) முதல் சாரைகள் (reptiles), அளவு மரங்கள் (scale trees_ விதைப் பன்னங்கள் ( seed ferns).

(மேலுள்ளதில் Mississippian period = மிசிசிப்பியப் பருவம், Pennsylvanian period = பென்சில்வேனியப் பருவம் என்பதும் உண்டு

permian period = பெர்மியப் பருவம்      (298.9 -251,902 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) மேய வாழணைப்பு (major extinctions), சாரை வேற்றங்கள் (reptiles diversity) 

mesozoic era = மிடைவாழ் எழுகை      (251.902-66 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்)

triassic period = துதியகப் பருவம்      (251.902-201.36 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்; துதி>த்ருதிய = three. துதி = மூன்றிற்கான இன்னொரு தமிழ்ச் சொல் )

jurassic period = யூராயகப் பருவம்       (201.36-145 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (இயற்பெயர்) முதல் பாலூட்டிகள், முதல் துணுச்சாரைகள்

cretaceous period = சுதையகப் பருவம்       (145-66 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (சுதை = சுண்ணாம்பு) முதல் பறவைகள், துணுச்சாரை வேற்றங்கள்.

cenozoic era = அண்ணுவாழ்  எழுகை      (66.21 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்னில் இருந்து இப்போது வரை) துணுச்சாரை வாழணைப்பு, முதல் பெருமிதைகள் (primates), முதல் பூக்கும் தாவரம்

paleogene period = பழைய கன்னுப் பருவம்      (66-23.03 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) (கன்னுதல் = தோன்றுதல்) பாலூட்டி வேற்றங்கள்

neogene period = புதிய கன்னுப் பருவம்       (23.03-2.58 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்) பாலூட்டி வேற்றங்கள்

quaternary period = சதுரப் பருவம்      (2.58 நுல்லிய ஆண்டுகளுக்கு முன்னிலிருந்து இப்போது வரை) (சதுரம் தமிழே) மாந்தத் தோற்றம்.


Tuesday, March 29, 2022

பட்டடை

கவிக்கோ ஞானச்செல்வன் தன் முகநூல் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தார்

--------------------------  

பட்டறை என்றொரு சொல் உலோகத்தொழில் மரவேலை செய்யும் இடங்களைக்குறிக்கும்

கொல்லுப்பட்டறை-இரும்பை அடித்துக் கொல்லுவது இங்கேகுற்றமன்று.

தட்டார் பட்டறை பொன்னை அடித்துக் கம்பியாக்கித் தட்டித்தட்டி அணிகலன் செய்வர்.

தச்சுப்பட்டறை -மரம்  அறுத்துப்பலகூறுகளாக்கி நிலை,கதவு,நாற்காலி,மேசை எனப் பல ஆக்குவார் இங்கே.

செந்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை.இங்கே தமிழை உடைத்து அறுத்து ஏதும்செய்வாரோ?

மானுட இயல் பயிற்சிப் பட்டறை. என்ன செய்வர் இங்கே? கவிதைப்பட்டறை? ??

கூத்துப் பட்டறை???

WORKSHOP என்ற ஆங்கில சொல்லாட்சியை அப்படியே மொழிபெயர்த்து பயன்படுத்த தமிழ் என்ன பிச்சைக்கார மொழியா?

கூத்துப்பயிற்சிக்களம்,

கவிதைப் பயிற்சிக்களம் என்றாற்போல் ஒன்று கொள்ளலாமே!

---------------------------

அவர் பக்கத்தில் நானளித்த முன்னிகை:

-------------------------- 

பட்டம், பட்டயம் போன்றவற்றை வாங்கலாம், பட்டையைக் கூட நெற்றியிலோ, கழுத்திலோ கட்டிக்கொள்ளலாம்.  ஆனால் பட்டடை என்று சொல்ல மட்டும் தயக்கமா? (அது பட்டறை அல்ல. பட்டடை. பேச்சுவழக்கில் பட்டறையானது)  வியந்து போகிறேன். இது போன்ற சிந்தனைகள் ஏன் நம்மூரில் எழுகின்றன? புரியவில்லை. கொல்லன் பட்டடை என்ன அத்தனை இழிவா?  உவமைக்கு முன்பொருள் ஆகக் கூடாதோ? பட்டடையின் மேலமைந்த ஒப்புமையில், செந்தமிழ்ப் பயிற்சிப் பட்டடை, மானுடவியல் பயிற்சிப் பட்டடை, கவிதைப்பட்டடை, கூத்துப் பட்டடை என்று சொல்வது தவறா? நுட்பியல் ஒப்புமையில் கலைப் பயிற்சியை யாரும் சொல்லக் கூடாதோ? அது தாழ்ச்சி-கீழோர், இது உயர்ச்சி-மேலோரா?

படுதல் = ஆளாதல். ”திரை அசைந்து தூணில் படுகிறது”. படுதலுக்கு இயற்கைச் சூழமைவு போதும். இது அமையாத போதில் சற்று  வலுக்காட்டி (உடல் வலு, அறிவு வலு, முன்னிரண்டும் சேர்ந்த நுட்ப வலு என எதுவாகவோ இருக்கலாம்) மாந்தர் செய்வது பட்டுதலாகும். என்னைக் கேட்டால், ஆளாக்குதல் என்று பொருள் சொல்வேன். பட்டுதல் = தட்டுதல் என்பது முதல் பொருள்.தமிழ் அதோடு நின்றுவிடவில்லை. அதற்கு மேலும் வளர்ந்துள்ளது. மாழையைப் பட்டிப் பட்டம் உருவானது. இளங்கலைப் படிப்பின் முடிவில் தேர்ச்சி பெற்றபிறகு, இளங்கலைப் பட்டம் தருகிறார். முன்னாளில் கையில் மாழைப் பட்டம் கட்டினார். இன்று தாள் பட்டத்தை, மின் பட்டத்தை நம்மிடம் தருகிறார். இதுபோல் இள மின்னியல் பட்டயருக்கும் நடக்கிறது.  அரசருக்குப் பட்டம் சூட்டுகிறார். இவர் இன்னார் என்று பட்டை கட்டுகிறார். எல்லாம் அடையாளச் சிக்கலுக்குத் தான். பட்டம், பட்டயம், பட்டை போன்ற சொற்களை ஒதுக்குவீர்களா? 

”பட்டென்று அடிப்பது, உடைப்பது, நொறுக்குவது” என்று பட்டுதலுக்குக் கரடாய்ப் பொருள் கொள்வது சரியல்ல. கருமான் தொழில் தான் செம்பு, இரும்பின் வழி எழுந்த மாந்த நாகரிகத்தின் அடிப்படை. கருமான் கொழு செய்த பின்னரே பயிர்த்தொழில் இங்கு வளர்ந்தது. வேளாண்மைக்குக் கொடுக்கும் பெருமையைக் கொல்லனுக்கும் கொடுங்கள்.  அவன் யாரூக்கும் இழிவானவன் அல்லன். பட்டடை = பட்டு+அடை என்பதை, வினைத்தொகை என்றும், இருபெயரொட்டு என்றும் இரு விதமாய்ப் புரிந்துகொள்ளலாம். வினைத்தொகைக்குப் போகுமுன்னால், 821 ஆம் குறளைப் பார்த்து விடுவோம். இதில்  

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை 

நேரா நிரந்தவர் நட்பு. 

பட்டடை என்ற சொல்லிற்கு மாறாய்த் தீர்விடம் என்றும் பாடம் இருப்பதாய்ப் பரிமேலழகர் சொல்வார். ஆகப் பட்டு அடை என்பது எறிந்து வரும் அம்பைத் தடுக்கும் அடைகல் என்று பொருள். பட்டு அடையும் கல் = பட்டு அடை கல் என்பதில் கல்லைத் தொகுத்து, அடை என்பதே அடைகல்லுக்கு ஆகுபெயர் ஆனது போலும். செ,சொ,பி. அகரமுதலியில் முதற்பொருள். 

1.அடைகல்  ஆங்கிலத்தில் anvil செம்புக் காலத்தில் இது கருங்கல். மாழையே அல்ல,

2. கொல்லன் களரி. ஆங்கிலத்தில் anvil செம்பு, இரும்புக் காலத்தில் இது இரும்பாகிவிட்டது, இன்று இதை அறியாமல் எந்த sheet metal, smithy, forging, casting work ஐ முதலாண்டுப் பொறியலில் ஒரு மாணவன் செய்துவிடமுடியாது. ஒரு காலத்தில் mechanical engineering இன் ஓவமே (icon) இப் பட்டடைதான். அகர முதலியில் இருந்து ஒரு  படம் எடுத்து இணைத்துள்ளேன்.  இதில் ஒரு பட்டைப் பரப்பும் (A), ஒரு கூம்பும் (B) உண்டு. கீழே வரும் பொருள்களில் A, B என்று குறித்திருப்பதற்கு பட்டடையின் பாகப்பொருள் புரிந்துகொள்க,    

3. ஆணி முதலியன செல்லுதற்கு அடியிருந்து தாங்கும் கருவி (A). 

4. தரையிலிருக்கும் போது நிலத்தில் பதியாதபடி அடியில் வைக்கும் தோணி தாங்கி (A), 

5. தலையணையாக உதவும் மணை (A), 

6. உட்காரும் பலகை (A), 

7. கால்வாய் கடத்தற்கு உதவும் பலகை (A), 

8. தேர்த்தட்டு (A), 

9. அதிர்வேட்டுக்குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை (B), 

10 தொடர்ந்து வெடிக்கும் அதிர்வேட்டு (B), 

11. கவரிலிடும் மண்படை (A), 

இனி இரு பெயரொட்டிற்கு வருவோம். பட்டு = இலை, ஓலை, தழை. கூலம். பட்டம் = பெரிய இலை, ஓலை, தழை. பட்டத்தைச் சங்கதம் பத்ரம் ஆக்கும்.. 

12. குவியல், இலைக் குவியல். 

13. தவசவுறை, ஓலையால் தவசங்களை அடைக்கும் உறை  

14. தவசங்கள் இடுவதற்கு ஓலைகளால் அமைந்த படுக்கை,  

15. குடிவாரம் = ஒப்பந்த உழவருக்குப் பேசிக்கொண்ட மேனி வரைந்து கொடுக்கும் வாரம்.

16. பயிர்த்தொழில் செய்கை, 

17. இறைப்புப் பாசனமுள்ள நன்செய்த் தாக்கு, 

18. ஐந்தாம் சுரமாகிய இளியிசை, ஒன்று இன்னொன்றோடு இணங்குதலை, அதாவது ஒன்றுதலை, தமிழில் இளிதல் வினையால் சொல்லலாம். இளி நரம்பை, கிளை நரம்பு என்று கூடத் தமிழிசையிற் சொல்வதுண்டு. (தென் மாவட்டங்களில் ”இவனுக்கிவன் கிளைகாரன்: என்று சொல்லிச் சுற்றத்தையும், நண்பரையும் ஒருங்கிணைத்தாற் போற் குறிக்கும் சொல்லாட்சி உண்டு.) பட்டும் அடையும் இலைக்கான கிளைகாரச் சொற்கள். எனவே பட்டடை, இளியானது, “வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து”. சில்ம்பு. 3.63. “ஏருடைப் பட்டடை என இசையோர் வகுத்த” = சிலம்பு 7-1.14.   

19. ஒருவகை இசைக்கணம்,   இது எனக்குப் புரியவில்லை.    .

பட்டடைப் படம் 



பட்டடை என்ற கருவி பட்டடை உள்ள அரங்கத்திற்கு ஆகுபெயர் ஆனது. இங்கே theory (தெரிசை) மட்டுமின்றி (practice) புரிசையும் சொல்லிக் கொடுப்பதால், செந்தமிழ்ப் பயிற்சிப் பட்டடை, மானுடவியல் பயிற்சிப் பட்டடை, கவிதைப் பட்டடை, கூத்துப் பட்டடை போன்ற சொற்கள் முற்றிலும் சரியே. பொருத்தமும் கூட.

(workshop என்பதற்குப் பணிமனை என்றது தான் நேரடி மொழிபெயர்ப்பு. பட்டடை அப்படிப் பட்டதல்ல.)

    


Monday, March 21, 2022

அமினக் காடிகள் (amino acids) - 2

10 ஆவது Threonine இது threonic acid ஓடு, தன் கட்டமைப்பில் ஒன்றுபட்டதால் எழுந்த பெயராகும். Threonic acid என்பது threose (C4H8O5) எனும் 4 கரிம முகனச் சக்கரிதையில்       (4 carbon monosaccharide) உருவானது,  

------------------- 

Threose ஐப் பேசுமுன், alcohol, glycol, glycerol, methyl alcohol, ethyl alcohol, vinegar, acetum, acetic acid, acetone போன்ற அடிப்பெயர்கள் பற்றிச் சொல்லவேண்டும். இவற்றிற்கு ஆன முந்தைப் பரிந்துரைகளில் இப்போது மாறுவேன். அக் காலத்தில், அலங்கப் பெயரொழுங்கு (naming order of the organic compounds), செந்தரம் (standard) பற்றிய கவனமின்றி,  alcohol ஐப் பாவாணர்  வெறியமென்றார். அருளியோ அதையும், எரிநறாவையும் பரிந்துரைத்தார். (acetic acid =புளிங்காடி , acetylene =ஓண்வளி, methane =ஈரவளி என்றும் சொன்னார்) அற்றை ஆர்வத்தில் நானும் வெறியத்தை பயனுறுத்தினேன். glycol =களியம், glycerol =களிச்செறியம் என்றும் பரிந்துரைத்தேன். இப்போது  மாற்றம் தேவையென  உணர்கிறேன்.  

களியலை alcohol க்கும் [mid 16th c.: French/medieval Latin (earlier form of alcohol ), from Arabic al-kuḥl ‘the kohl’. In early use the term referred to powders, specifically kohl, and especially those obtained by sublimation; later ‘a distilled or rectified spirit’ (mid 17th century)], கலிக்கலை glycol க்கும். கலிச்செறியலை glycerol க்கும் பொருத்துவது சரியாகலாம். (கலித்தல்  = சுவைத்தல்.) Methyl alcohol ஐ மதுல் களியல் என்றும்,  ethyl alcohol ஐ ஆதைல் களியல் என்றும் சொல்லலாம். (காற்று = ஊதை. காற்றில் ஆது (ether) உள்ளதாகவும் (ஆது> ஆதன்) அதிலிருந்து வாழ்பொருள் பெறலாமென்ற கருத்து 18/19 ஆம் நூ.வில் உண்டு. ”ஆதில் பெற்றது ஆதைல்” என்று கொண்டால் நாம் முன் நகரலாம்..     

அடுத்தது vinegar. Middle English/ Old French இல் vyn egre, based on Latin vinum ‘wine’ + acer ‘sour என்பார். vine ஐ வல்லி என்றும் acer ஐ அஃகர் என்றும் சொல்லலாம். (wine drinking - வல்லிகை துவ்வல்.) புளிஞ்சுவை  vinegar ஐ, வல்லஃகர் எனலாம். Latin word acetum comes from Proto-Indo-European *h₂ḱ-, and later Proto-Italic *akēō (Be sharp-tasting, be sour). Acetum என்பதை அஃகுதம் என்றும், acetic acid ஐ அஃகுதக் காடி என்றும், acetone ஐ அஃகுதன் என்றும் சொல்லலாம்) (என் முந்தைப் பரிந்துரையான acetic acid = சாலியக் காடியை ஒதுக்கவேண்டாம். அது அஃகுதக் காடிக்கு மாற்று ஆகலாம்.) அஃகுதனில் உள்ள அஃகைக் குறைத்துக் பொதுப்பெயரான ketone க்குக் குதனை இணையாக்கலாம்.

-----------------------------

மேற்சொன்ன சக்கரிதையின் இழுனைக்கணை முனையில் (linear chain end) குதனுக்கிற்கு (ketone) மாற்றாய், அல்நீரகைக் (aldehyde) இருக்கும் . இச் சக்கரிதைகளை அல்நீரதைக் (aldose) குடும்பில் சேர்ப்பார். அரதச்சுதை (erythrose; அரத்த>அரத = செந்நிற. சுதை = அமுது, சுவை = சருக்கரைப் பொது ஈறு.)  இதன் எதிரிடமராய் (enantiomer) Threose ஐக் கருதுவர்.  [எதிரிடமர் [Greek ἐνάντιος (enántios) 'opposite' = ஆடிநிழலாகும் ஆடியிசமர். (optical isomer) = திடர் இசமர் (stereo-isomer)]. அரத (erythro) என்பதைத் தலைக்கீழாக்கித் தர+ அ எனக் கொண்டு, வகர உடம்படுமெய் சேர்த்தால் ”தரவச்சுதை”, threose இற்குச் சரி வரும்.  இதன்படி, தரவனக் காடி = threonic acid. தரவனின் = Threonine. 

11 ஆவது Tryptophan. 19 ஆம் நூ. கடைசியில் கணையத்தோடு (pancreas) கலிச் செறியலைத் (glycerol) தேய்த்துப் பெற்றது இந்த அமினக்காடியாகும் .  இதன் சொற்பிறப்பாய்,    tryptic ‘relating to trypsin’ + Greek phainein ‘appear’. from Greek tripsis ‘friction’, from tribein ‘to rub’ என்பார். தேய்த்த உருவன் = தேய்த்துருவன் = tryotophan. 

12 ஆவது Tyrosine இதற்கு முன் cheese ஐப் பார்ப்போம். பாலென்பது  பால்மமும் பால்பொருளும் சேர்ந்த கூழ்மிதவை (suspension). கூழாதல் =coagulation. பாலில் உறைகுத்தி நொதிக்க வைக்கிறோம். தைத்தல் = உறை குத்தல். இதன் சொற் பிறப்பு துல்>துள்>தள்>தய்>தை என்றமையும். தய்>தயில்>தயிர் என்பது சொல் வளர்ச்சி. நொதிப்பின் பின்,  தயிரும் வழிகையும் (whey) பிரியும். பொதுவாய், இவ்விரண்டையும் மீளக் கலந்து சோற்றோடு பிசைந்து உண்ணுகிறோம்  மாறாய், முழு வழிகையையும் தயிரிலிருந்து பிரித்தால், தயிர் மிகவும் கெட்டி யாகும். இதன் உச்சம் கெழு தயிர் = நிறை தயிர் =  cheese. ஆங்கில விளக்கமாய், curd of milk coagulated, separated from the whey, pressed and used as food என்பார். அருளியார், அருங்கலச்சொல் அகரமுதலியில் Cheese = பாலடை என்பார். வேதியலின் படிக் கெழு தயிரும் பாலடையும் வெவ்வேறு வகைப் பொருள்கள். அரூளியாரின் பரிந்துரையை இதில் ஏற்கத் தயங்குவேன்.   

[Old English cyse (West Saxon), cese (Anglian) West Germanic *kasjus, Old Saxon kasi, Old High German chasi, German Käse, Middle Dutch case, Dutch kaas, Latin caseus, Italian cacio, Spanish queso, Irish caise, Welsh caws). Of unknown origin; perhaps from a PIE root *kwat- "to ferment, become sour" (source also of Prakrit chasi "buttermilk;" Old Church Slavonic kvasu "leaven; fermented drink," kyselu "sour," -kyseti "to turn sour;" Czech kysati "to turn sour, rot;" Sanskrit kvathati "boils, seethes;" Gothic hwaþjan "foam"). But de Vaan writes, "no etymology can be found which does not require some poorly-founded assumptions," and suggests a loan-wordஎன்பார்.  கெழுதயிர் என்பதற்குப் பழங் கிரேக்கத்தில் τῡρός (tūrós, “cheese”) என்பார்.  தயிரசின் என்பது   Tyrosine க்குப் பொருந்தும்.   

13 ஆவது  Glutamine, 14 ஆவது Glutamic acid. இரண்டையும் சேர்த்தே காண்போம்.  மாந்தக் குருதியில் பெரிதுமுள்ளது பரி (free) அமினக் காடி Glutamine ஆகும். தசைகளில் உருவாகியதைக் குருதி மற்ற கட்டகங்களுக்குக்  கொண்டு செல்லும்.  19 ஆம் நூ. முடிவில், Glutamine பெயர், glutamic acid ஐயும் amine ஐயும் பிணைத்துச் செய்ததாகும். Glutamic acid என்பது gluten ஐயும் amine ஐயும் சேர்த்து உருவானது. கோதுமை, வரகுழை (barley), கம்பு போன்ற கூலங்களில் கொளுதம் (gluten) எனும் கட்டுமானப் பெருதம் (structural protein) இயல்பாயுண்டு. ”கொளு (glue)” வழி ”கொளுதம் (gluten)” ஏற்பட்டது. தமிழில் 4 பசைச் சொற்களுண்டு.  பள்> பய்> பயின் என்பது ஒன்று. பிள்> பிளி> பியி> பியின்> பிசின் என்பது 2 ஆவது. கொள்ளல் = பற்றல் பொருளில், கொள்> கொளு> கொளுது என்பது 3 ஆவது. கொளுந்து> கொயிந்து> கோந்து என்பது 4 ஆவது  கொளுதமிக் காடி = glutamic acid. கொளுதமின் = glutamine. 

15 ஆவது Asparagine, 16 ஆவது Aspartic acid. இரண்டையும் சேர்த்தே காண்போம்.  19 ஆம் நூ.வில், asparagus தாவர வழி, (இலத்தீனில் asparagus; கிரேக்கத்தில் asparagos) இப்பெயர் பெறப்பட்டது.  asparagus = இளந்தண்டு. பொலிதல் (to swell) பொருளில் கிரேக்கச் சொல்லான spargan இல் கிளைத்தது. பொலிகின் = asparagine. பொலுதக் காடி = Aspartic acid.

17 ஆவது Cysteine 19 ஆம் நூ கடைசியில்,  cystine [Greek kustis ‘bladder’ (because it was first isolated from urinary calculi)] வழி எழுந்தது. bladder = குட்டம். cystine = குட்டக் கல் = குட்டின். குட்டைன் = Cysteine.

18 ஆவது Lysine இது சில்களின் (cells) சுவரை அல்லது படலத்தை (film) அல்லது ஊடகத்தை (membrane) உடைத்துப் பெற்ற காடி. இப்படி உடைப்பதை  இலத்தீன் lusis ‘loosening’, கிரேக்கம் luein ‘loosen’ என்பதிலிருந்து பெறுவார். இளகுதல் = -lysis. இளகின் =lysine.

19 ஆவது Arginine. இது German Arginin, Greek arginoeis ‘bright-shining, white’ ஆகியவற்றிலிருந்து பெற்றது. Argentum = வெள்ளி. வெள்கினின் = Arginine.

20 ஆவது Histidine. 19 ஆம் நூ. கடைசியில், Greek histos ‘web, tissue’ + -ide என்பதில் இருந்து கிளைத்தது tissue = திசு; வட்டு = சுற்றிப் பின்னப்பட்டது. வட்டிதின் = histidine. 

இதுவரை வாழிவேதியல் (Biochemistry), நூக வாழியல் (Microbiology), வாழி நுட்பியல் (Biotechnology), ஈனியல் (genetics) போன்ற துறைகளில் பேசப்படும் அமினக் காடிகளைத் தமிழில் எப்படி அழைப்பது பற்றிப் பேசினேன். இக் காடிகளை ஒன்றோடொன்று பிணைத்துப் பலமராக்கியே (polymerized) பெருதங்கள் (proteins) செய்யப்படுகின்றன. ஒரு பொளிதை (monopeptide), இரு பொளிதை (dipeptide)......பல்பொளிதை (polypeptide) என்று இவை பெருகிக் கொண்டே போகும். [பொளிதை = Peptide (from Greek language πεπτός, peptós "digested"; derived from πέσσειν, péssein "to digest") பொளிதல் = உடைத்தல். செரித்தல், சிறிது ஆக்கல்,] சுவையாரமான பொளிதைகள் பற்றிப் பேசத் தொடங்கினால் மிக விரியும். வேறு கட்டுரையில் பார்ப்போம். 

மேலே சொன்னதை விளங்கிக் கொள்ள முடியாதவர் அருள்கூர்ந்து, ”ஈனியல் - ஒரு தொடக்க விருத்தி (Genetics- A beginner's Guide; B. Guttman, A. Griffiths, D. Suzuki, T. Cullis, One World Publication, Oxford, England)” என்ற நூலைப் படியுங்கள். இப்போது இந்திய வெளியீடும் கூட வந்துவிட்டது. குறைந்த விலை தான்.]  இந்நூலின் 40 ஆம் பக்கத்திலிருந்து ஒரு படத்தைப் படியெடுத்து இணைத்துள்ளேன். உங்கள் புரிதலுக்கு உதவும். 


  


Sunday, March 20, 2022

அமினக் காடிகள் (amino acids) - 1

வாழிவேதியல் (Biochemistry), நூக வாழியல் (Microbiology), வாழிநுட்பியல் (Biotechnology), ஈனியல் (genetics) போன்ற துறைகளைத் தமிழில் சொல்லித்தர வேண்டும் என எண்ணினால், அமினக் காடிப் பெயர்களைத் தமிழில் சொல்ல விழைவது தவிர்க்க முடியாதது. என்னைக் கேட்டால், வெறுமே ஆங்கிலப் பெயர்களை வைத்து ஓட்டுவது சிந்தனையைத் தடுக்கவே செய்யும். எண்ணிப் பார்க்க. 

பொதுவாய், 100 பேர் ஆங்கிலவழி வேதியல் வகுப்பிலிருந்தால், ஓரிருவர் மட்டுமே வேதியல் புரிந்து, பின்னால் ஆய்வுப் பணிக்குச்  செல்வார். இதே படிப்பைத் தமிழில் சொல்லிக் கொடுத்தால், இருவர் 10 பேராக வாய்ப்பு உண்டு. இதன் பிறகும், 90 பேர் ஆய்வினுள் செல்லாது வெறும் படியாற்ற (application) வேலைக்கே போக நேரலாம் தான். ஆயினும் அவருக்குங் கூடத் தமிழில் சொல்லித் தருவது உதவவே செய்யும். ஆங்கிலத்தில் மட்டும் வேதியல் சொல்லித் தருவோமெனில் படியாற்ற வேலையிற் கூடச் சிறப்புறுவது கடினம்

-----------------------

கட்டுரைக்குள் போகுமுன்  Bio என்ற சொல்லாட்சி பற்றிப் பேசவேண்டும். 50, 60 ஆண்டு காலமாய் ”உயிர்” என்றே நம்மூரில் இணைச்சொல் பழகினார். நானும் கூட நெஞ்சு நெருடலோடும், கேள்வியோடும் இச்சொல் பழகினேன். ”உயிரின் வரையறை என்ன? வேதியலோடு உயிர் சேருமா?” என்ற கேள்விகள் இயல்பாய் எழும். 

பொருள்முதல் வாதருக்கு உயிர் என்பது ஓர் இயக்கம், அல்லது மூச்சுக் காற்று. கருத்துமுதல் வாதருக்கோ, அது உடலில் உறையும் ஆவி/ஆன்மா. ஆம். பின்னவர் கருத்தில், இத்ற்குத் தனியிருப்புண்டு, இப்போது ஆழ்ந்து எண்ணுக, உயிர் உள்ள/ போன பொருளுக்கு வேதியலுண்டு. உயிருக்கு உண்டா?  

”உயிருள்ள” என்பதைத் தானே ”வாழ்கிற” என்கிறோம்? அப்புறமென்ன? எந்த நெருடலுமின்றி bio என்பதற்கு”வாழியைப்” பழகலாமே? ஏன் சுற்றி வளைத்து உயிரை வேதியலோடு ஒட்டி ஆகுபெயர் ஆக்குகிறோம்? நெருடவில்லையா? எங்கெலாம் bio வருகிறதோ, அங்கெலாம் ”வாழியைப்” பயிலலாமே? 

-----------------------

அமினக் காடிகளில் முதலில் வருவது Glycine. 19 ஆம் நூ. நடுவில், glukus ‘sweet’ எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து இதை உருவாக்கினார். கல்>கரு என்பதற்கு sweet பொருள் தமிழில் உண்டு. கல்+நல்> கரு+நல் = கன்னல். கரும்பின் இற்றைப் பொருள் இனிப்பு. கற்கண்டு என்பதையும் எண்ணுக. கல்>கலி>கலிக்கு இனிப்புப் பொருள் தருவதில் தவறில்லை.. -ine என்பது அறிவியலில் அமினக் காடியைக் குறிக்கும் ஓர் ஈறு. ஓரிமை (uniformity) கருதி அதையே தமிழிலும் கொள்:ளலாம்.  எனவே Glycine ஐக் கலிக்கின் எனலாம். 

அடுத்தது Alanine. Acetaldehyde ஐயும், அமோனியாவையும் (ammonia- நீர்க்காலகை) நீரக காய்ந்தை என்பதையும் (hydrogen cyanide; cyan= காயநிறம்) வினைக்க வைத்து 1850 இல் Adolph Strecker இதை உருவாக்கினார். செருமனில் இந்த அமினக்காடிக்கான பெயரை aldehyde ஐ வைத்தும், பலுக்கல் எளிமைக்காக-an- இடையொட்டைச்  சேர்த்தும் ஆக்கினார். Aldehyde என்பது alcohol இலிருந்து ஓர் OH குழுவைக் குறைத்துக் கிடைத்ததாகும். தமிழில் OH குழுவை  நீரகை என்றழைப்போம் (நீரகம்= hydrogen. அஃககம்= oxygen. அஃகை= oxide. நீரஃகை>நீரகை = OH) நீரகைக் குழு அல்லாதாகிய வடிவம் அல்நீரகை. இதையே aldehyde-க்கு இணையாய்ப் பயனாக்கலாம். எனவே அலனின் என்ற ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழில் கொள்ளலாம். தவறில்லை. நம் விளக்கமும் அச்சொல்லிற்குப் பொருந்தும். 

3 ஆவது Proline. இது pyrrolidine எனும் சினைப்பெயரால் எழுந்தது. Pyrrolidineக்கு tetrahydropyrrole எனும் இன்னொரு பெயருமுண்டு. அதன் வேதி வாய்ப்பாடு (CH2)4NH. 19ஆம் நூ. நடுவில், அரத்த நிறம் குறிக்கும் purrhos எனும் கிரேக்கச் சொல்லும்,   oleum‘oil’ எனும் இலத்தீன் சொல்லும் சேர்ந்து pyrrole எழுந்தது. எள்* நெய்= எண்ணெய் என்பது oil இன் தமிழ் வடிவம். சுருக்கம் கருதி, எள்>அள் என்பதை oil குறியீடாய்த் தமிழில் பயனுறுத்தலாம். அரத்தத்தின் வேர்ச்சொல் அல்>அர். இரண்டையும் சேர்த்து, அர்+ அள் = அரள். ஆழ்ந்த சிவப்பு நிறத்தைக் குறிக்கலாம். பூ எனும் முன்னொட்டு, முன்சொன்ன ஆழ்சிவப்பைச் சற்றே குறைக்கும். பூவரள்= pyrrole. பூவரளிதின்=  Pyrrolidine. பூரளின் = proline. .

4 ஆவது Valine. இது Valeric acid எனும் பெயரால் உருவானது, அக் காடிப் பெயரோ, Valerian தாவரத்தால் உருவானது. தாவர வேர்ப்பொடியைக் காய்ச்சிப் பெற்ற சாறில் இக்காடி காணப் பட்டதாம். ஆழ் தூக்கத்திற்கும், உடல் வலிமைக்கும் இது உகந்ததென்று கிரேக்க, உரோம நாகரிகங்களில் கருதினார்.  தாவரப் பெயர் valere (to be strong, healthy) எனும் இலத்தீன் வினையில் மரப்பெயர் கிளர்ந்தது,  வல்>வலரியன் தாவரத்தையும், வலரிக் காடி valeric acid ஐயும், வலின் valine அமினக் காடியையும் குறிக்கலாம்.

5 ஆவது Leucine. இது 19 ஆம் நூ. தொடக்கத்தில்  கண்டுபிடிக்கப்பட்டது, இக் காடியை நம் உடம்பு தானே உருவாக்காது, ஆயினும் இது உடலுக்குத் தேவை. பெருதம் (protein) உள்ள கறி (meat), பாற்பொருள் (dairy product), சோயாப்பொருள் (soy product), வியம் (bean) பயறு (legume) ஆகியவற்றில் இக் காடி உண்டென்பார். பொதுவாய் இப் பொருள்கள் வெள்ளையாவதால், கிரேக்கச் சொல்லான ”leukos ‘white’ என்பதிலிருந்து, காடிப்பெயர் உருவானது. வெளுக்கின் என நாம் சொல்லலாம்.

அடுத்து 6 ஆவது isoleucine தமிழில் இசைத்தல்= ஒன்று போலாதல். ”அவரோடு நான் இசைந்தேன்”. வேதியல் (chemistry), பூதியலில் (physics) வரும் isotope ஐ நினைக. அதை இசைத் தாவு என்பார். இசைந்து நிற்கும் தாவு. ( தாழ்வு>தாவு= பள்ளம். உறைவிடம். தாழ்ங்கல்= தாங்கல்= தாமதித்தல்; தாவளம்= தங்குமிடம்.) தமக்குள் நிறை (weight) வேறுபடினும்  அணுக்கள் முறைப் பட்டியலில் (periodic table) ஒரிடம் கொண்டவை. (ஒன்றிற்கொன்று இசைந்த, ஒரே அணுவெண் கொண்ட, அதேபொழுது நிறை வேறுபடும் அணுக்கள் இசைத்தாவுகள் ஆகும்.). அதே கருத்தில் இங்கே இசைவெளுக்கின் என்கிறோம். ஒரே வாய்ப்பாடும். நிறையும் கொண்டு, அமைப்பில் மட்டும் வேறுபடும் வேதிகளை iso முன்னொட்டிட்டு அழைப்பார்.  

7 ஆவது Phenylalanine முதலில்  Phenylக்கான சொல். French phényle, Greek φαίνω (phaino)"shining"இன் வழி பிறந்தது. Phenyl பூண்டுகளை ஒளி தரலுக்குப் பயனான வளிகளில் இருந்து பெற்றார். (1825 இல், இலண்டன் தெருவிளக்குகளில் எரிந்த வளியின் வடிசலில் benzene என்பதை  Michael Faraday, கண்டார்.)  இச்சொல் Greek pheno (I bear light) என்பதில் இருந்து எழுந்தது. ஆழ்ந்து பார்த்தால்,  தமிழில் வெயினல் என்பது Phenyl ஐ குறிக்கும் சொல்லாகலாம்.  வெயில்= ஒளியும். சூடும் சேர்ந்தது. வெயினல் அலனின் என்பது இக்காடிக்குச் சரிவரும்.

8 ஆவது  Methionine. 1920களில் கண்டுபிடிக்கப்பட்டது. ”methyl+ Greek theion ‘sulphur’ என்று சொற்பிறப்பு சொல்வார். முதலில் methyl பார்ப்போம். 19 ஆம் நூ; நடுவில் German Methyl /Methylen, French méthyle/méthylène, Greek methu ‘wine’ + hulē ‘wood’ என்பதில் இது உருவானது. மேலையருக்கு மதுப்பெயர் எங்கு உருவானதென்று தெரியாது.. மத்து> மது என்பது மயக்கம் தரும் சாறு. உல்வை = மரம். இரண்டையும் பொருத்தினால், மதுல் என்பது  methyl ஐக் குறிக்க முடியும்.  அடுத்து Greek θεῖον (theîon, “sulfur”)க்கு வருவோம். கந்தகம் என்ற தமிழ்ச் சொல் .காய்ந்து>காந்து>கந்து என்று கிளைத்தது. காய்தல் = எரிதல், தீய்தல். எனவே தீயகம், கந்தகத்திற்கு மாற்றுப் பெயர். மத்தீயனின் என்பது  Methionine க்குச் சரியாய்ப் பொருந்தும்.

9 ஆவது, Serine. இது silk ஓடு தொடர்புற்றது. வேறு மொழிகளில் OE:sioloc, Greek: σηρικός,sērikós,"silken", Mandarin: sī, Manchurian: sirghe, Mongolian: sirkek என்பார்.  பட்டு மூதாயைப் (Bombyx mori) பட்டுப்பூச்சி என்பார். இதன் புழு, இலைகளைப் பூழ்த்து (துளைத்து)ச் சாப்பிடும். குறித்த வளர்ச்சிக்குப் பின், தன்னைச் சுற்றிக் கூடுகட்டி உருமாறிப் பூழ்த்தி> பூச்சி ஆகும். இப் பட்டுப் புழு/பூச்சி முந்தி, முந்தி, முன் நகர்வதால், மூதாய் ஆயிற்று. (இதுபோல் ஆனால் வேறுபட்ட செந்நிற மூதாயைத் தம்பலப் பூச்சி என்பார்). பட்டுப் புழுவை, மூதாய்ப் புழு, (larva) என்றும். கடுவன்புல்லி (caterpillar. மீச்சிறு பூனையாய்த் தரைபுல்லி நகரும்) என்றும் அழைப்பதுண்டு.   

உருமாற்று வாகைக்குள் (pupal phase) இப்புழு நுழைகையில், உமிழ்சுரப்பியால் ஒரு பெருத இழையை (protein fibre) உமிழ்ந்து தன்னைச் சூழ ஒரு கூடமைத்துப் புழு-> பூச்சி உருமாற்றம் நடைபெறும். வல்லுறும்படி, அசைவற்றுக் கிடக்கும் புழுவிற்குக் கூடே காப்பு ஆகும். பதப்பட்ட கூடுகளை, வெந்நீரிலிட்டு, பூச்சிகளைக் கொன்று, மாந்தர் பயன் கொள்வார். புழுக்களை வளர்த்து கரட்டு silk உருவாக்கும் Sericulture ஐ, 5000 ஆண்டுகளாய்ச் சீனம் செய்து வருகிறது. இந்தியா, கொரியா, நேபாளம், சப்பான், மேற்கு நாடுகள் என இந்நுட்பம் பின்னால் பரவியது. பதப்பட்ட கூட்டைச் செள்ளு/செள்கு என்றும் குறிக்கலாம். (சுள்> செள்> செரு> சேர் = கூடல்) கூட்டு நூல் செள்கு நூலாகும். (பட்டு நூல் என்பது இணைச் சொல்) Serine = செளின்


அறுசுவைகள் - 4

 4 ஆவது சுவைச்சொல் துவர்த்தல். துருத்தல் =(முன்தள்ளல், துருப்பு;> துப்பு-> துப்பல் =உமிழல். துருவுதலும் கூட முன்தள்ளலே. துருவு> துர்வு> துவுர்> துவர். இங்கும் இடமுகட்டு (metathesis) உண்டு. துவர்ப்பை, “மென்றுணர்ந்தது ஏற்பு இல்லாததால், உமிழத் தூண்டும் சுவை” எனலாம். .அட்டுதல் =ஒட்டுதல். அட்டி(ங்)கை = ஒட்டிகை = astringency. அட்டியது பிடிக்காது துப்ப முயல்வோம். இது 2,,3 முறைகூட நடக்கலாம். துவரம், துவர்ப்பின் இன்னொரு வடிவம். astringent (adj.) 1540s, "binding, contracting," from Latin astringentum (nominative astringens), present participle of astringere "to bind fast, tighten, contract," from assimilated form of ad "to" (see ad-) + stringere "draw tight" (see strain (v.))."  நாவல், கொட்டை, கடுக்காய், நெல்லிக் கொட்டை, தான்றிக்காய், பாக்குக்கொட்டை, வாழைக்காய், மாதுளை, நாவல் பழம், மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய்  போன்றவை துவர்ப்புச் சுவை காட்டும்.  [இங்கோர் இடைவிலகல். குவரம் = துவர்ப்பு = astringence என்று சாமிநாத.அகராதி. கொடுப்பது வியப்பு.  மேலும் ஆயவேண்டும்.) 

ஐந்தாவது சுவைச்சொல் காழ்த்தல். குறிப்பிட்ட விதமான உறைத்தலில் (=அழுத்தத் தாக்கலில்) எழுந்தது. வெப்பத்தால், காரத்தால், புளிப்பால் என மூவகை உறைப்புண்டு. 2, 3 பரிமானங்கள் வழிப் பரவியே வெப்பம் தன் தாக்கைக் காட்டும். ஒன்றிற்கொன்று எதிரான காரம், புளிப்போ அப்படி யில்லை. வெப்பம் போலன்றிப் புளிப்பும், காரமும் இலக்குத் தாக்கில் (local attack) இருப்பைக் காட்டும். கார்த்தலுக்கும் புளித்தலுக்கும் நடுவே இடையுலப்புண்டு. காரம் தகிக்கையில் ஒருவித எரியுணர்வு (burning sensation) தென்படும்  ஒரு அலங்கப் (organic) பொருளுள் கரிமம் (carbon), நீரகம் (hydrogen). அஃககம் (oxygen), காலகம் (nitrogen) போல் மாழையல்லாதன (non-metals) மட்டும் இருப்பதில்லை. அலங்க மாழைப் பூண்டுகள் (organometallic compounds) சிலவும் உண்டு.  தாவர, விலங்கு சார்ந்த அலங்கற் பொருள்களை எரிக்கையிக் உள்ளிருக்கும் மாழை, அஃகுதை (oxide) சாம்பலாய் மிஞ்சும். அரபியில் இதை al-kali = the ashes என்பார். களரிய (potassium) மாழையை இதன்வழி தான் கண்டுபிடித்தார்.  

கள்>கழு>கரு>கார் என்றும், கழி>காழ் என்றும் இச்சொல் வளரும். காழ்த்த்து = கார்த்தது. கார்>காரம் என்பது தமிழே. கரு>கரில் என்பதும், காழ்>காய்>காயம் என்பதும், கள்>கரு>கடுகம் என்பதும் காழ்த்தலுக்கான இணைச்சொற்கள். ”கடுகு சிறுத்தாலும் காரம் போகாது” எனும் பழமொழியை ஓர்க. கடுகடுப்பு என்ற இரட்டைச் சொல்லையும் நினைக்க. ஆங்கிலத்தில் caustic taste என்பார். 

1400, "capable of burning or destroying organic tissue, corrosive," from Latin causticus "burning, caustic," from Greek kaustikos "capable of burning; corrosive," from kaustos "combustible; burnt," verbal adjective from kaiein, the Greek word for "to burn" (transitive and intransitive) in all periods, which is of uncertain origin with no certain cognates outside Greek. தமிழைக் கண்டுகொள்ளாத விளைவு. கார்> காய்> காய்த்த> caustic 

ஓர் அறிவியல் சோதனையில், பூனைநாக்கில் சில காரக் கரைசல் துளிகளை வைத்து, அதன் மறுவினைகளை ஆராய்ந்த போது, பூனைநாக்கின் அடியிருந்து எழுந்து அதன் முகத்தசை (facial muscle) வழி மூளைக்குப் போகும் தப்பணக் கட்டு நரம்பில் (chorda tympani nerve) உள்ள நீர் நரம்பு, உப்பு நரம்பு, குயினின் (quinine; இது ஒரு காரதை - காரம் போன்றது - alkaloid) நரம்பு போன்றவை தூண்டுற்றதைக் கண்டறிந்தார். இதே போல் நம் நாக்கிலும் நடக்கிறது, அப்படிக் காணின், காரச்சுவையைப் பல் வேறு நரம்புகளின் கூட்டுணர்வால் மூளை அறிவதைப் புரிந்து கொள்ளலாம். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவையும் காரச்சுவை கொண்டவையே. .உடலிலுள்ள கொழுப்புகளை எரிக்கும் தன்மை காரச் சுவைக்கு உண்டென்று பலரும் நம்புகிறார். 

ஆறாவது சுவைச்சொல் கைப்பு. கள்>கய்<கை>கைப்பு என்று கருமைக் கருத்தின் வழி  செ.சொ.பே. யில் வரும் விளக்கத்தை நான் ஏற்பதில்லை. என் நீண்ட விளக்கம் துளைக்கருத்தில் அமையும். ஒரு மாந்தக் கட்டுடல் துன்புறுகையில், தானே தளர்ந்து, குலைந்து, குழையும். குல் எனும் துளைக் கருத்து வேர், குலைதல்/ குழைதல், குடைதல் (=தளர்தல்/வாடல்), மெலிதல், சோர்தல், நொய்தல்/நோதல் போன்ற சொற்களையும், கலங்கல்/ கயங்கல்/ கயந்தல்/ கைந்தல்/ கசந்தல் சொற்களையும் உருவாக்கும், சிலவற்றைப் பார்ப்போம்.

குல்> குள்> குளு> குளை> குடை> குடைதல் =துளைத்தல்; ”ரொம்பக் குடையுறான்.” குள்> கூள்> கூண்டு = கூடு (=துளையுள்ளது), பதர் (உள்ளீடிலாக் கூலம்) ; குள்> குடு> குடல்> குடலை (இரண்டுமே துளையுள்ளவை); குழு> குழல்; குழை> குழாய் (வேற்றுமொழிச் சொல் அல்ல.); குள்> குடு> குடுவை [களிமண், மாழை, கிளர்த்தி (glass) போன்றவற்றால் ஆனது); குழு> குழ> குழை. (அளவு மீறிய கொதிப்பில் சோறு குழையும். மீக்குழை நீர்ச்சோறு கூழாகும்). நீர் கூடக்கூட, வழலை (soap) குளகுள> கொளகொள ஆகி. உருக்குலையும். நீரில் சருக்கரைக் கட்டி உருக்குலையக் கரையும். குள்> கள்> கள> கர> கரை-தல் = சோர்தல், மெலிதல் “ காசநோயால் கரைந்து போனாள்”; குலை>குலைதல் = மெலிதல்; ”உடம்பு குலைந்தது.” குல்> குள்> குளறு> குழறு> குழறுதல் = நா தளர்தல்;  

அடுத்து, குல்>குழு>கழு>கய> கயக்கம் = வாட்டம், கலக்கம். கய> கயக்கு = சோர்வு, மனக்கலக்கம். கய> கயங்குதல் = சோர்தல். கயவு = மென்மை. கய> கயந்தலை என்பது இன்னும் உறுதி பெறாத, பிறந்து சில வாரங்களே ஆன, குழந்தையின் மென் தலை, கயந்தலை = மனத் துயர். மனத்துயர் கூடிய நிலையில் மனம் கசந்து போகும். கசந்த நிலையில்  நொகையான (negative) எண்ணங்கள் கூடும். கயந்தவர் = கீழோர். ”எது முறை?” என்பது குமுக ஞாயம். கயந்தவரைக் கீழ்மையர் என்பது உலகவழக்கம். கயவர் =கீழ்மக்கள்; கயம் =கீழ்மை, கயம் =தேய்வு, குறைபாடு, கேடு.  

இனிக் கசப்புச் சுவைக்கு வருவோம். கயப் பாக்கு - கசக்கும் பாக்கு (பாக்கு துவர்க்கும் எனினும் சில கசப்பையும் சேர்த்துக் காட்டும்); கயினி = கணவன் இறந்து, மணம் கசந்த பெண் = கைம்பெண்.  கயினி =கசக்குமீன்.  கள்> .கய்> கை. கைத்தல் = கசத்தல், நைந்து வருந்தல், “கைத்தனள் உள்ளம்” கம்பரா. மாய்சன.30; கைக்கிளை = ஒருதலைக் காமம், மருட்பா, காந்தாரப்பண். ஒரு தலைக் காமம், கயந்து>கசந்து கிளைத்தது கைக்கிளை. மருட்பா = பல பா வகை கலந்தடிக்கும் பா. சீர்மையர்க்குக் கசந்த பா. 3 ஆம் சுரமான காந்தாரம், சங்கதம் போன நற்றமிழ்ப்பெயர். காய்ந்த ஆரம்> காய்ந்தாரம்> காந்தாரம். (காய்தல் =கசத்தல். ஆரம் =ஒலி; ஆர்தல்> ஆரித்தல் =ஒலித்தல். ஆர ஆரித்தல் = நிறைந்து ஒலித்தல். யகரம் தொகுத்து, காந்தார மூலம் தெரியாமல் போனது. காய்க்கிளை> கய்க்கிளை> கைக்கிளை என்பதிலும் பொருளுண்டு.சுரத்திற்கு மட்டுமின்றிப் பண்ணுக்கும் காந்தாரம் பெயராகும். 

கைக்குதல், கைக்கை போன்றன கசப்பின் வேறு வடிவங்கள்; கைகம் = நஞ்சு; நைய்ஞ்சு போக்குவதால் நஞ்சு. கைகச் செய்வதால் கைகம். நஞ்சும் கசப்பும் தொடர்புள்ளவை. கைகேசி = கரிசிலாங் கண்ணி (கசப்பானது,); கைச்சல் = கசத்தல்; கைச்ச நாரத்தை = bitter orange; கைத்தகம், கைதகம், கைதல், கைதை = தாழை, கைந்து/குழைந்து போகும் தாள் கொண்டது தாழை ; கைத்தா = காட்டு ஆமணக்கு; கைத்து = abhorence வெறுப்பு; கைத்துப் போதல் = களிம்பேறுதல்;  கைதை = (கசப்புக் காட்டும்) எட்டி. வளர்ந்தோங்கிய நெற்கதிர்கள் காற்றில் குழைந்து ஆடுவதால் வயலும் கைதையாகும்; கைத்தலை = கைம்பெண்; கைப்பங்கொட்டை = எட்டியிலும் 3 மடங்கு கசக்கும் கொட்டை. பிலிப்பைன்சில் வளர்கிறது. எப்படியோ தமிழ் மருத்துவத்தில் வந்துள்ளது; 

கைப்பான் = (கசப்புப்) பாகல்; கைப்பு = ஆடு தின்னாப் பாளை; கைப்புக் கெண்டை = கசப்பு மீன்; கைம்பெண் = வாழ்க்கை கசந்த பெண். வாழ்கை கசந்த ஆணைக் கையாண் எனலாம். கைம்மை = காதலனைப் பிரிந்த தனிமை; கையர் = கீழ்மக்கள்; கையாந்தகரை = கரிசலாங் கண்ணி; கையா நீர் = கரிசலாங் கண்ணிச் சாறு; கைனி = கைம்பெண். கசப்புத் தாவரங்களைக் குறிக்கக் ”காடு, புனம், பேய்” போன்றவை அடைகளாகும். நொச்சி, வேம்பு, நிலவேம்பு, கண்டங்கத்திரி, சீந்தில், பேய்ப்புடல், நாரத்தை, கசப்புக் கொழுமிச்சை (bitter citroen) போன்றவை கசக்கும். 

கசப்பு என்பது நமக்கு மட்டுமின்றி மற்ற தழிழிய மொழிகளிலும் பயில்கிறது. ம.கசப்பு. கய்பு; க.கய், கயி, கய்யி,கய்பு, கய்பெ; தெ.கசு, கை, கயிபெ, கைபெல; இரு. கேசபெ; எரு. கய்ச்சு; கோத.கய்; குட. கய்; கோண். கேசுகே, கைத்தானா; பர். கேபி; மா. க்வசெ; பட. கைமெஙூ; கோண். (அடிலா)கய்யு.. கசப்பிற்கு இணையாய் ஆங்கிலத்தில் bitter (adj.) என்பார். விள்ளும்/வெட்டும்/பிளக்கும் உணர்ச்சி என்பது அதன் பொருளாகும். Old English biter "having a harsh taste, sharp, cutting; angry, full of animosity; cruel," from Proto-Germanic *bitras- (source also of Old Saxon bittar, Old Norse bitr, Dutch bitter, Old High German bittar, German bitter, Gothic baitrs "bitter"), from suffixed form of PIE root *bheid- "to split" (source also of Old English bitan "to bite;" see bite (v.)).” 

ஆக, தித்திப்பு (sweet),  புளிப்பு (acidic), உவர்ப்பு (salty), துவர்ப்பு (astringent), கார்ப்பு (caustic), கைப்பு (bitter) என அறுசுவைகளைப் பார்த்தோம்.

Saturday, March 19, 2022

அறுசுவைகள் - 3

16 ஆம் நூற்றாண்டு வரை ”அறுசுவைகள்” என்ற தலைப்பில் திவாகரம், பிங்கலம், சூடாமணி போன்ற நிகண்டுகள் “தித்தித்தல், புளித்தல், கூர்த்தல் (=உவர்த்தல்), துவர்த்தல், காழ்த்தல், கைத்தல்” என்றே சொல்லின. ”தித்தித்தல், கூர்த்தல்” எனும் விதப்புச் சுவைகள் எப்பொழுது  ”இனித்தல், உவர்த்தலுக்கு” மாறின என்று தெரியவில்லை, இதுபற்றி யாரும் ஆய்ந்தாரா என்றும் தெரிய வில்லை. இம்மாற்றத்தால் ஒரு சில புரிதல்களை இழந்தோமோ? தெரிய வில்லை. காழ்ப்பு>கார்ப்பு, கைப்பு>கய்ப்பு>கசப்பு என்பன பேச்சுத்திரிவு. அறுசுவைச் சொற்களின் சொற்பிறப்பைக் கீழே காண்போம்.

முதலில் வருவது தித்தித்தல். துல்> துன்- பற்றி மேலே சொன்னேன். பழங்களைத் துன்னும் போது முன்னம் பற்களால் இல்லியே (=துளையிட்டே) பழச்சுவை அறிகிறோம். துன்> தின்> திம்> தீம் என்று இச்சொல் திரியும். தீம் முன்னொட்டில் பல்வேறு சொற்கள் அகரமுதலிகளில் உண்டு. துல்> தெல்> தென்> தேன் என்பது தேனின் சொற்பிறப்பு  காட்டும். மலர்களில் தங்கும் (துல்> துள்>) துளிகள்  ஒன்றுசேர்ந்து தெளிவுற்றுத் தேனாகும். வண்டுகள் தேடிச் சேர்க்க்கும் தேன் அடைகளில் தேங்க அங்கிருந்து பெருமளவில் நாம் பெறுவோம். 3 ஆம் வளர்ச்சியில் திம்  இரட்டித்து திம்திம்> திந்திம்> திந்தி> தித்தி- என மகரம் தொலைத்துத் தித்திக்கும். (சங்க இலக்கியத்தில் தித்திப்பு இல்லை. ஆனால், தீம் 198 இடங்களிலும் தேம் 93 இடங்களிலும் பயின்றுள்ளன. எனவே தித்திப்பு பின்னை வழக்குப் போலும்.) திம்திம் என இரட்டிப்பது தமிழில் இயல்பே. ”தம்தம் எனத் தத்தித்தாள்” என்று நாட்டியத்தில் சொல்வதில்லையா? கக்க, சிச்சிறு, பப்பட என இரட்டைவழக்குப் பலவும் இதுபோல் உண்டு. 

”தேம், இழும், இனிமை, மதுரம், அமுது” என்று தித்திப்பிற்குப் பிற சொற்கள் காட்டுவர்,  தீமின் இன்னொரு வெளிப்பாடு தேம். (சுருக்கமாய்ச் சொல்ல வேண்டின், தேம்/தே நல்ல, தெளிவான சொல்.) அடுத்தது இழும், முன்சொன்ன இல்>இழு>இழியோடு தொடர்புற்றது பல்லால் கடிக்கையில் பழச்சாறு தானே இழும். இனிமை எனும் பொதுப்பெயர் தித்திப்பிற்கு எப்போது, ஏன் இறங்கியது? விளங்க வில்லை.   தேனையும் கள்ளையும் மது என்பார். மது> மதுல்> மதுர்> மதுரம் என்பது இயல்வளர்ச்சி. மதுரம் மதுகையாகிச் சிலவிடங்களில் இனிமைப் பொருள் காட்டும். (சங்க இலக்கியத்தில் 31 இடங்களில் மதுகை பயிலும். அதில் இனிமைக் கணக்கு அறியேன். மதுரமோ அங்கு இல்லை.) முல்> முலுமம்> மலுமம்> மருமம்> மம்மம்> அம்மம் என்பது முலையைக் குறிக்கும். அம்மத்தில் பெற்ற பால் அமுது, (இது 3 இடங்களிலும், இதன் நீட்சியான அமிழ்தம்/அமிர்தம் 35 இடங்களிலும் சங்க இலக்கியத்தில் பயிலும்.) 

முல்> முலு> முலை என்பது தமிழிலும்,  முலு> முலுகு> milk என்பது இந்தை யிரோப்பியத்திலும் எழும் சொல்வளர்ச்சி. milk (n.)"opaque white fluid secreted by mammary glands of female mammals, suited to the nourishment of their young," Middle English milk, from Old English meoluc (West Saxon), milc (Anglian), from Proto-Germanic *meluk- "milk" (source also of Old Norse mjolk, Old Frisian melok, Old Saxon miluk, Dutch melk, Old High German miluh, German Milch, Gothic miluks), from *melk- "to milk," from PIE root *melg- "to wipe, to rub off," also "to stroke; to milk," in reference to the hand motion involved in milking an animal. Old Church Slavonic noun meleko (Russian moloko, Czech mleko) is considered to be adopted from Germanic. மேலையர் சொற்பிறப்பு விளக்கம் ”முலையைக்” காட்டாது cognates ஐ மட்டும் சொல்லி, மாட்டுப்பால் கறப்பதை அடையாளம் காட்டும். தமிழிய மொழிகளைக் கண்டுகொள்ளாது போனதின் விளைவு இது..

சரி, இந்தையிரோப்பியனில் தித்திப்பிற்கு என்ன சொல்வார்? sweet (adj.) Old English swete "pleasing to the senses, mind or feelings; having a pleasant disposition," from Proto-Germanic *swotja- (source also of Old Saxon swoti, Old Frisian swet, Swedish söt, Danish sød, Middle Dutch soete, Dutch zoet, Old High German swuozi, German süß), from PIE root *swād- "sweet, pleasant" (Sanskrit svadus "sweet;" Greek hedys "sweet, pleasant, agreeable," hedone "pleasure;" Latin suavis "pleasant" (not especially of taste), suadere "to advise," properly "to make something pleasant to"). Words for "sweet" in Indo-European languages typically are used for other sense as well and in general for "pleasing." இதைத் தமிழில் அடையாளங் காண்பது எளிது, ”சுவைத்து> சுவத்து” என்பது பொருந்தக் கூடியதே.    

2 ஆவது சுவைச்சொல் புளித்தல், புள்>புள்ளு>புள்ளி>புளி என்பது சொற்பிறப்பு. (சங்க இலக்கியத்தில் 29 இடங்களில் புளிச் சொல் பயிலும்.) புளியம்பழச் சுவையால் இது வந்தது. புளிகளைக் கடித்துச் சுவைக்கையில் (ஊசியால் குத்துவது போல்) புள்ளுணர்ச்சி எழும். இற்றைப் புளி (Tamarindus indica) நம்மூரின் இயல் தாவரமல்ல. 14 ஆம் நூ.வில், இசுலாமியரின் எத்தியோப்பிய அடிமைகள் கொணர்ந்தது  (நம்மூர் போல் எத்தியோப்பிய உணவும் புளிச்சுவை காட்டும். மேலையர்க்கும் நமக்கும் ஒப்பீடு செய்ய விழைவோர், தம் இனப்பார்வையால், இதுபோலான ஆப்பிரிக்கப் பண்பாட்டு ஒற்றுமையை ஒதுக்குவார். சங்க இலக்கியமும், தொல்காப்பியமும் சொல்லும் நம்மூர்ப் புளி கோரக்கர் புளி (Garcinia cambogea). இச் சிற்றினப் புளிப்பழம் (குமரி முதல் மாராட்டாம் வரை) மேலைத் தொடர்ச்சி மலையிலும் , மேலைக் கடற்கரையிலும்  (அதன் வடக்கில் இல்லை)   விரவியது.  வட கர்நாடகம், கோவாச் சந்தைகளில் பெரிதும் விற்கப் படும்.. 

தமிழில் அம்/ஆம் = நீர். அம்புள்ளம் = புள்ள நீர். அம்பு(ள்)ளம்> அம்முளம்> அமுளம்> அமுலம்> அமிலம் என்பது தமிழ்ச்சொல்லே. ஆமிலம்> ஆமிரம் என்றும் சொல்வார். புள்ளத்தை  pungent (adj.) என்பார்.  1590s, "sharp and painful, poignant, piercing," originally figurative, of pain or grief, from Latin pungentem (nominative pungens), present participle of pungere "to prick, pierce, sting," figuratively, "to vex, grieve, trouble, afflict" (from suffixed form of PIE root *peuk- "to prick"]. எந்த அம்புளமும் செறிவிற்குத் தக்கப் புளிச்சுவை காட்டும். நம் புளிங்கை pungent இற்குள் புதைந்துள்ளது. acrid = அஃகுத் (கூர்ந்த்) தன்மை. இந்தோயிரோப்பிய ரகர நுழைப்பில் அஃகிது (acid) அஃக்ரிது ஆகும். அஃகுதை = oxide. உறைப்போடு கடுக்கும் காரணத்தால் acid ஐக் காடி என்கிறோம். அம்புளம்/ (அ/ஆ)மி(ல/ர)ம், அஃகிது, காடி என acid க்கு  3 சொற்களுண்டு.  எலுமிச்சை, புளித்த கீரை, இட்டளி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் புளிப்புச் சுவை காட்டும். 

3 ஆவது சுவைச்சொல் கூர்த்தல். குல்>குர -to be sharp. குர்ர்ர்ர்...... என்பது குத்தும் போது எழும் ஒலிக்குறிப்பு.  குர்த்தல் = குத்தல். குர்வுதல், குர்த்தலின் இன்னொரு வடிவம். குர்வு> குவுர் என்பது இடமுகட்டு (metathesis) மாற்றம். வுகரம் முன்வர, ரகரப்புள்ளி பின்னேகும், குவுர் >கூர் = sharp அடுத்த மாற்றம். உப்புளத்தில் செறிவுகூடி, உப்பானது கண்டாகும் போது, அதன் வடிவம் கட்டிக் கூடு (crystal latice) காரணமாய்க் கூர்ப்பாய் இருக்கும். உப்பளத் தொழிலார் காலில் சாக்குத் துணி கட்டியே நடமாடுவர். இல்லெனில் கீழே சிதறிக்கிடக்கும் உப்புக்கற்கள் பாதத்தைக் குத்திககிழிக்கும். கல்லுப்பின் கூர்மை அப்படி.  உப்பு, உவர்ப்பிற்குக் கூர்ப்பு எனும் மாற்றுப்பெயர் உள்ளது வியப்பில்லை.

குர்த்தல் = குத்தல். குர்த்தல்> கூர்த்தல் = உவர்த்தல். குர்த்தல் >குர்ச்சுதல்  =குர்ச்சுத் தொழில் =உப்புத்தொழில். குர்ச்சரம்>கூர்ச்சரம், உப்புத் தொழிலால் பெயர்பெற்ற இடம். உவரைச் சுற்றிக் கூர்ச்சரம் பிறைபோல் விரிந்தது. குர்ச்சு> கர்ச்சு> கச்சு =கூர்ச்சர முதல்நிலத்தின் மாற்று வடிவம். கூர்ச்சரர் =உப்புத் தொழிலார் = உமணர். சோராட்டம் (Sourashtra) உவர்மண் கொண்ட, சூரியத் தகிப்பிடம். (நம் போலவே, கூர்ச்சரரும் கடலுக்குப் பெருநிலம் இழந்தார். நமக்குக் கவாடபுரம். அவர்க்குத் துவாரகை. 2 நகரப் பெயர்களுக்கும் ஒரே பொருள்.) உப்பு விளைப்பில் இன்றும் கூர்ச்சரமே இந்தியாவில் முதலிடம். மறவாதீர். பைந்தமிழத்தில் [பஞ்ச திராவிடத்தில்] கூர்ச்சரமும் ஒன்று. நம் பங்காளிகளில் அவரும் ஒருவரே!  குர் போலவே சுல்> சுள்> சுடு> சுர் என்பது குத்துணர்ச்சி காட்டும். இதைச் ”சுரசுரப்பு” உணர்த்தும் புளித்தல் / குத்தலின் நுண்வேறுபாட்டைப் புரிந்துகொள்க. குத்துணர்வு நெடுநேரம் இராது. குத்தூசி (உப்புக்கட்டி முனை) எடுத்தவுடன் பழை உணர்விற்குப் போய்விடுவோம். புளியுணர்வு அப்படியில்லை,. நெடுக நிலைக்கும். குத்துணர்வு பூதியல் செலுத்தத்தால் (Physical process) பெறுவது, புள்ளுதல் வேதியல் செலுத்தத்தால் (chemical process) பெறுவது.

குள்> குள்வு> குவுர் போலவே, சுள்> சுள்வு> சுவுள் உண்டு. அது சுவள் என்றும் திரியும். சுவள்> சவள்> சவடு> சவர் = குத்தும் உவர்மணல். சவட்டில் (உப்பில்) பெற்ற எளிமம் சவடியம் (Sodium). இதன் தமிழ்வேர் நமக்கே தெரிவதில்லை. அந்தளவு ஆய்வு செய்யாதுள்ளோம்.) சவளம் =குந்தம் lance, pike. சவள்- >சாள்- >சாள்த்து =salt. (சவளறிந்தால் salt இன் தோற்றம் புரிந்துபோஉம். சால்> சாடு> சார்> சார்ப்பு = sharp = கூர்மை. சகரம் தொலைத்து உவள்> உவடு> உவர் ஆகி உவர்ப்பு> ஊர்ப்பு> ஊப்பு> உப்பிற்கு வந்துசேர்வோம். (உப்புச் சொற்பிறப்பில் பாவாணாரிடமிருந்து நான் வேறுபடுவேன்.) உவளின் திரிவான உமணும் உண்டு. (சங்க இலக்கியத்தில் உவர் 16 இடங்களிலும், உமண் 34 இடங்களிலும் பயிலும்.) ”சுவை” பேசுகையில் சவட்டின் தொடர்பாய் வேறு சொற்கள் பேசினேன். மேலே, நீளங் கருதித் தவிர்க்கிறேன். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவை இயல்பு உப்புமையால் உமிழ்நீர் சுரக்க வைக்கும் 


Friday, March 18, 2022

தேமொழியின் உரத்த சிந்தனை

 "எனது உரத்த சிந்தனை” என்ற தலைப்பில், திருவாட்டி, தேமொழி மின்தமிழ் மடற்குழுவில் 15-3-2022 இல் கீழ்வருமாறு தெரிவித்திருந்தார், இந்த ஓசனை பலருக்கும் பயன்படலாம். தமிழ்நாட்டு நூலகங்களிலும், பள்ளிகளிலும் செய்ய முற்படலாம். என் பரிந்துரை.

--------------------------

தமிழ்நாட்டிலும் மாணவர்கள் கல்வி கல்லூரி புத்தகங்களைத் தாண்டி தங்கள் வாசிப்பைப் பரவலாக்க வேண்டும். அது ஒன்றே அறிவார்ந்த சமூகத்திற்கு அடிகோலும். இளம் தலைமுறையினரிடம் புத்தக வாசிப்பைக் கொண்டு செல்வதற்கு எனக்குத் தோன்றிய வழி ஒன்று ....... 

நாம் இளமையில் தொடங்க வேண்டும் தோழர். குறிப்பாகப் பள்ளி நாட்களில். இளமையில் பழக்கம் ஏற்பட்டால் பிறகு அவர்களுக்கு வழக்கமாக ஒட்டிவிடும். பள்ளி நாட்களில் கோடை விடுமுறையில் இங்கு (USA) பொது நூலகத்தில் மாணவர்களுக்குப் படிக்கும் போட்டி வைப்பார்கள். என் பிள்ளைகள் பங்கு பெற்றுள்ளார்கள்.

வயதுக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்குச் சென்று சேர வேண்டிய, அவர்களுக்கு எதிர்காலத்தில் உதவக்கூடிய நூல்கள் பட்டியல் வைத்து ஒவ்வொரு நூலுக்கும் புள்ளிகள் வைத்திருப்பார்கள். அந்தந்த வயதுப் பிரிவினரும் பட்டியலில் உள்ள நூலைப் படித்து, தான் படித்த நூலில் எது பிடித்தது என்பது போன்ற ஒரு சிறு குறிப்பு எழுதிக் கொடுத்தவுடன் அவர்கள் கணக்கில் அந்த நூலுக்கான புள்ளிகள் இணைக்கப்படும். சேமிப்புக் கணக்கு போல. அதிகப் புள்ளிகள் பெறுபவர் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்படுவார்.

கால எல்லை இல்லை, கட்டாயம் இல்லை, நூல் குறித்து என்ன எழுத எவ்வளவு வேண்டும் என்ற விதிகளும் இல்லை, எழுதியதில் சரி தவறு என்பதும் இல்லை. நூலைப் படித்துப் புரிந்து தனக்கே ஒரு கருத்து உருவாக்கிக் கொள்வதும், தனது சொந்தக் கருத்தை எழுத்து வடிவில் விவரிப்பதும் மட்டுமே முக்கியம். படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் எழுதுவதற்கும் நல்ல பயிற்சி. படிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டால் எவராலும் கிடைப்பது எதையும் படிக்காமல் இருக்க முடியாத நிலை வந்து விடும், அவர்களில் பலர் சிந்தித்து தனது சொந்தக் கருத்தையும் எழுதத் தொடங்கிவிட்டால் சிந்திக்கும் எழுதும் ஆற்றல் கொண்டவர் நிறைந்த எதிர்காலமும் உருவாகும். எழுதும் எவரும் நிறைய படிப்பவராகவும் இருப்பார்.

அரசு முதலில் இணையத்தில் கிடைக்கும் விலையற்ற மின்னூல்கள் உதவியுடன், பொதுநூலகம் வழியாக முன்னெடுக்கும் ஒரு முயற்சியாகத் தொடங்கலாம். அல்லது bapasi கூட இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். செம்மையான வாசிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எதிர்காலத்திற்கான மூலதனம்.

நாட்டில்/உலகில் எங்கு இருக்கும் பள்ளி மாணவர்களும் பங்கேற்பது zoom வழிக் கல்வி, கைபேசி வழி வாசிப்பு உள்ள இக்காலத்தில் பெரிய காரியம் அல்ல. நூலாசிரியர்கள், பதிப்பகத்தார் தங்கள் நூல்களில் ஒன்றை மின்னூலாக விலையின்றி இணையத்தில் எவரும் படிக்கும் வண்ணம் பொதுவெளியில் அளித்தும் பங்கு பெறலாம். படிக்க வேண்டிய நூல்கள் பட்டியலில் ஒரு ஆசிரியரின் நூலும் இணைக்கப்படுவதே எழுத்தாளர்களையும் சிறப்பிக்கும். நாட்டுடைமை ஆக்கப்படும் ஆசிரியர் நூல்கள் போன்ற மதிப்பு. ஆனால் ஆசிரியர்கள் முன் வந்து தங்கள் நூல்களை வழங்குவதே நல்லது.







அறுசுவைகள் - 2

இனிச் சுவையின் சொற்பிறப்பிற்கு வருவோம். இதன் மாற்று வடிவாய்ச் ”சுவடு” என்பதுமுண்டு. “அடிமையிற் சுவடறிந்த” (ஈடு.2.6:5). சுவடன் (=சுவைஞன்) என்ற வளர்ச்சியும் அதே ஈட்டில் காட்டப் பெறும். (”சுவடர் பூச்சூடும்போது புழுகிலே தோய்த்துச் சூடுமாப் போலே” (திவ்.திருப்ப. 9 வியா.) ”சுவண்டை” இன்சுவையைக் குறிக்கும். இத்தனை சொற்களுக்கும், சுவைத்தலின் அடிப்படையாய் வேறு வினைச்சொல் அகரமுதலியிற் காட்டப்படவில்லை. ஆக, இச்சொற்கள் அப்பூதியாகவே (abstract) காட்சி தருகின்றன. இவை கடன் சொற்களா எனில். இல்லை. சுவைத்தல் என்பது தமிழில் மட்டுமின்றி, மற்ற தமிழிய மொழிகளிலும் புழங்குகிறது [ம. சுவய்க்குக, க.சவி, தெ:சவிகொனு, து.சம்பி, சவி, கோத.சய்வ், நா.சவத், கொலா.) தமிழில் ஐகாரமும், டுகாரம் சொல்லாக்க ஈறுகள். ஆழ்ந்து ஓர்ந்தால், "சொவச்சொவ / சவச்சவ" எனும் ஒலிக்குறிப்பே இவற்றின் வேராய்த் தோன்றுகிறது.

taste-ற்கு வேர் தெரியாதென ஆங்கில அகராதிகள் பதிந்தாலும், ”நாக்காற் தடவல், மெல்லல், உணரல் போன்றவையே முன்வினை” என்பார். to become soft என்பதை ஓர்ந்தால், கூட்டுவினை என்பது புரியும். சில பொருட்கள் soft உம், சில hard உம் ஆனவை. hard-ற்கு இணை கடினம். (கடித்தல் வினை). ஆனால் soft-ற்கு ”மெல்” என்பது பகரியாகவே உள்ளது. near description; not the real thing. அதனால் தான் விதப்பான வேறு சொல் taste இற்கு இருந்திருக்கும் என்கிறோம். கடிபட்டு, மென்பட்டு, சில்லாகி, தன்மேல் அழுத்தமுள்ள வரை கூனிக் குறுகி, மெலிந்து, வளைந்து, நெளிந்து, குழைந்து நொய்யாகிப் போனதை, பரப்பு வழவழவென்று ஆனதை, இத்தனையும் சேர்ந்து புதுப்பண்பு குறிக்கும் வகையில் சவ்வுதல் > சவைத்தல் > சுவைத்தல் என்ற வினைச் சொல்லும் ”சுவை” என்ற பெயர்ச் சொல்லும் கிளைத்தன. சவைக்கும் போது நா-வினையால் ஏற்படும் ஒலிக் குறிப்பே இவ்வினைச்சொல்லை உருவாக்குகிறது. (அதேபொழுது நூகுளை உணரிகளும், விரையுணர் பெறுதர்களும் சேர்ந்தே சுவையை அறிவதால், மெல் எனும் சொல் ஒரு கால், smell -ஐக் குறிக்கலாம். ஆய்ந்து பார்த்தால், முருகு, மரு என்ற இணைச்சொற்கள் தமிழில் உண்டு.)

soft என்பது வாயில் மெல்லும்போது திண்மம் (solid) சவைத்துப் போவதைக் குறிக்கிறது. ”என்ன இது சவச்சவ என்றிருக்கிறது?” என்கிறோமே? சிலர் வழக்கில் இது சுவையிலா நிலையையும் குறிக்கும். (மொள்ளல் வினை வழி மொழியும், ஒலியிலா மோனமும் எழுவதுபோல் இதைக் கொள்க. மோனம், முனங்குதல் என்ற இன்னொரு வினையும் எழும்பும்.) மெல்லுதல் வினையாற் சவைத்த நிலை (softy state) ஏற்படுகிறது. மெல்லுதல் என்பது சிறிய grinding-process- செயல்முறை; சவை என்பது தட நிலை - state. I prefer to use a state rather than a process here. மெல் என்பது சில இடங்களிற் சவைக்குப் பகரி ஆகலாமே ஒழிய முற்றிலும் அல்ல. சொவ்விய / சவ்விய நிலை, இயற்கையாலோ, மாந்தர் செய்கையாலோ ஏற்படலாம். மெல்லல் என்பது மாந்தச் செய்கை மட்டுமே. இந் நுணுக்கத்தைச் சொல்ல ஒலிக்குறிப்பைத் துணைக்கொண்டால் குடிமுழுகியா போகும்?  :-) (மெல்லை soft இற்கு இணையாக்குவதை நான் தவிர்ப்பேன்.) 

சவ்வியதின் தொழிற்பெயராய், மெல்லைப் பயனாக்குவதாய் மென் மூடு தோலைக் குறிப்பதாய்ச் சவ்வு (membrane) என்ற சொல் எழும். sago வின் சோற்றை, நொய்யான மாவுப் பொருளை, காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் சவ்வரிசி எனப்படும். சவ்வாதல், பிசின் (to be viscid) போலாவதைக் குறிக்கும். சவுக்குச் சவுக்கு எனும் அடுக்குத் தொடர் வளைந்து கொடுக்கும் குறிப்பைக் காட்டும். ”சவ்”வை ஒட்டிய இத்தனை சொற்களும் கடன் சொற்களா? வியப்பாய் இல்லையா? இவற்றின் வேர்கள் என்ன? சவத்தலுக்குத் தொடர்பான சப்புதலும் சப் எனும் ஒலிக்குறிப்பில் எழுந்ததே. இதுவும் தமிழிய மொழிகளில் பல்வேறு விதமாய்ப் புழங்கும். (ம.சப்புக; க.சப்பரிக, சப்படிக, சப்பளிக, தப்படிக; தெ.சப்பரிஞ்சு, சப்பு; து. சப்பரிபுனி; கோத.சப்; துட.செப்; குட.சப்பெ, சபெ; நா.சவ்ல்; பர்.சவ்ல்,சல்; மா.சொப்பு; பட.சப்பு).  சப்புதல் = அதுங்குதல் to be bent, pressed in, to become flat. சுவையில்லாது இருப்பதையும் சப்பென இருப்பதாய்க் குறிப்பதுண்டு.

இன்னொரு வளர்ச்சியாய், வாயில் மெல்லும் வழி சவளல், சவட்டல் சொற்கள் ஏற்பட்டு மிதித்தலைக் குறிக்கும். தென்பாண்டியில் ஒருகால் மிதிவண்டியைச் சவட்டுவண்டி என்றார்.  உறுதியிலாது வளைந்து கொடுப்பவன் சவடன். (”அஞ்சுபூத மடைசிய சவடனை” திருப்புகழ் 5.57). சவடால் = வீண் பகட்டுக் காட்டல். (இதை வேற்று மொழி என்பாருமுண்டு.) சவள் = நீரைச் சவட்டும் துடுப்பு.. சவளல் = வளைதல். சவள்தடி = துவளும் தடி, குந்தம்; சவளமென்பார். சவளக்காரர் = ஈட்டி வீரர். javelin ஐ சவளத்தோடு  பொருத்தினால், நம்மூர்ச் சட்டாம்பிள்ளைகள் நான் ஆங்கில ஒலிப்பைக் காட்டுவதாய்ச் சாடுவர். இவருடைய அறியாமைக்கு நான் அடிபடுவேன். சவளம் = நெளிவு காட்டும் புளியம்பழம். சவளன் = வளைகாலன். வளைந்துநெளி துணிச்சரக்கு ”சவளி”. அறியாமையால் சிலர் இதை ஜவளியாக்குவார். வடமொழியில் இது இல்லை. 

சவளைக்காரர் = நெசவார். சவு-த்தல் = மெலிதல் ( யாழ்.அகராதி) சவட்டி (அடிக்கப்) பயன்படும் வளைகருவி சவுக்காகும். சவண்டிலை = நெளிவு இலை. சவள்> சவண்> சவணம் = மாழைக்கம்பி இழுக்கும் கம்மியக் கருவி. சவலைப் பிள்ளை = ஆண்டுவளர்ச்சி பெற்றும் உடலுறுதி பெறாது, துவளும் பிள்ளை. சவலைக்குள் soft இருப்பதை எளிதாய் உணரலாம். ”சவலை” திருவாசகத்திலும் பயிலும். tender பொருளும் அதற்குண்டு. சவலைக் கதிர் = தவச மணி இல்லாக் கதிர், உள்ளீடிலாக் கதிர்,  தனிச்சொல்லின்றி 2 குறள்பாக்களை இணைப்பது சவலை வெண்பா.  தனிச்சொல்லே நேரிசை வெண்பாவிற்கு உறுதி தரும். .

தொல்காப்பியத்தில் 3 இடங்களிலும், சங்க இலக்கியத்தில் 31  இடங்களில் ”சுவை” பயிலப்பட்டுள்ளது. எனவே அது நாட்பட்ட சொல் தான். சுவைக்கு இணையாய்ச் ”சாரம், இரதம், இனிமை” என்று திவாகரமும், ”தீம், இரதம், இன்சுவை” என்று பிங்கலமும்  சொல்லும் சவடு>சவரு> சவரம்>சாரம் என்பது இயல்பான வளர்ச்சி வாய்க்குள் உணவுத் துண்டித்துச் சவட்டிப் பெறுவது சாரம். அடுத்தது இரதம். உள் எனும் வேர், உராய்தலின் தொடக்கம். கடை வாய்ப் பற்களின் அடியில் கடித்து உராய்ந்து பெறுவது சுவை. உராய்தல் என்பது தன்வினை. .உராய்த்தல் பிறவினை. உராய்த்தலின் திரிவு உரத்தல். உரத்தம்>உரதம் என்பது அதன் பெயர். இனிமைத் தாக்கத்தால் உகர முன்மை  இழந்து இகர முன்மை எழும். உரதம் இரதமாகும். (இரதப் பெயர் கொண்டவள் இரதி. காமனின் காதலி. சுவையானவள் என்று பொருள் கொள்ளும்.). இன்னொரு வழியில் உரயுதல்> உரசுதல் ஆகும். உர(/ரி)ஞ்சுதல் என்றும், உரசுதல்>உருசுதல் என்றும் திரியும். உருசிப்பெற்றது உருசி. சங்கதத்தில் இதைக் கடன் வாங்கி ருசி ஆக்குவார். உராய்தல் எனும் தமிழ் மூலம் தெரியாதோர், சங்கதத்திடமிருந்து தமிழ் கடன் வாங்கியதென்பார். 

அடுத்தது இனிமை.  தித்திப்பின் விதப்பின்றிச் சுவையெனும் பொதுவிற்கும் இணையாய்ப் பயனாகியுள்ளது. தொல்காப்பியத்தில் 2 முறையும், சங்க இலக்கியத்தில் 268 முறையும் பயனாகும். இதில் எத்தனை முறை தித்திப்புப் பொருள், எத்தனை முறை சுவைப்பொது என்ற கணக்கிற்குள் நான் போக வில்லை. ஏனெனில் பொறுமையுடன் செய்யவேண்டும். சொற்பிறப்பிற்குள் வருவோம். மேலே இற்றுதல் பற்றிச் சொன்னேனே? நினைவுள்ளதா?.  இதன் வேர் இல்.. இல்(லு)தல் = குத்தல் to pierce, துளைத்தல் to make a hole, பிளத்தல் to cut into two, கீறல் to divide; பொடித்தல், நுண்ணிதாக்கல். இல்லி- துளை.  கடற் கரையில் இல்லித் துளைத்துப் போவது இல்லிப்பூச்சி.  இல்>ஈல்>ஈர்> ஈர்ந்தை= பொடுகு, பேன்முட்டை.  இல்லிக்குடம்= ஓட்டைக்குடம்,  கல்லில் இல்லியது (=தோண்டியது, துளைத்தது) இல் = மலைக்குகை இல்>ஈல்>ஈ என்றாலும் குகை.  

ஈ= அம்பு. இல்>இள்>ஈள்>ஈட்டு = செலுத்து, குத்து. ஈள்கருவி = ஈட்டி. ஈல்/ஈர்- = பிரி-, பிள-.  ஈர்>ஈ- = பிரி-, பிள-. ஈல்>ஈலி = கைவாள் (sword), சுரிகை (dagger). ஈர்தல் = இரண்டாக்கல். பனை/ தெங்கு/ ஈச்சையின் ஓலைக்காம்பை ஈர்ப்பது ஈர்க்கு. ஈர்ப்பொருள் நிறைந்தது ஈந்து. பேச்சுவழக்கில் ஈச்சு. ஈர்-இரு-இரள்-இரண்டு. ஓரெண்ணை இன்னொன்றால் வகுப்பது ஈல்தல். வகுத்துவரும் எண் = ஈல்வு>ஈர்வு>ஈவு.  ஆறு போகும் வழி இரண்டாகி மீண்டும் கூடின், நடுத்தீவு அரங்கம். *அருத்தது>அறுத்தது = அரங்கம். இன்னொரு சொல் இலங்கை. இல்லியதை (= அறுபட்டதை) இலங்கியது என்பார். (ஈழமும் ஈலில் எழுந்ததே.) ஓய்மாநாட்டு நல்லியக் கோடனின் ஊர் மாவிலங்கை. தென்பெண்ணையில் திண்டிவனம் அருகிலுள்ள ஆற்றுத் தீவு.

ஒருகாலத்திற் கடல்மட்டம் உயர்ந்து, முகனை நிலத்திலிருந்து (main land)ஈல்ந்து (>ஈழ்ந்து) பிரிந்தது Srilanka. ஈழம், இலங்கை இரண்டும் தமிழ்ச்சொற்களே. பழந்தமிழகம் என்பது இற்றைத் தமிழ்நாடு மட்டுமல்ல; இலங்கைத்தீவும் அதன் தெற்கே கடலுள் மூழ்கிய பகுதிகளும் சேர்ந்ததே. இற்றைத் தமிழ்நாடு - ஈழத்திற்கு இடைப்பட்ட கடற்பகுதியும், குமரியின் தெற்கே கடல்கொண்ட பகுதிகளும் எனக் கடலுக்குத் தமிழர் இழந்தது மிகுதி. ஆங்கிலத்தில் isle-ஐ ஈல்>ஈழ் என்றே பலுக்குவார். ”சொல் தோற்றம் தெரியாதி” என்றும் அகர முதலியிற் சொல்வார். island-ஐ  ”நீர்மேல் நிலம்” என்பார். ஈழமெனும் சொல் பார்த்தால் இப்படிச் சுற்றிவளைக்க வேண்டாம்.  இச்சொற்களின் தமிழ்த் தொடக்கம் புரியும். முகனை நிலத்திலிருந்து இன்னொரு நிலம் ஈல்ந்தது என்பதில் ஓர் அறிவியல் உண்மையுண்டு. ஈழமெனும் விதப்பு,, உலகத் தீவுகளைக் குறிக்க, மேலைநாடுகளிற் பொதுமைப் பெயரானதெனில், தமிழன் கடலோடியது எப்போது? தமிழன் தொன்மை எப்போது?

மேலே இல்-தல் எனில் துளைத்தல் என்றேன். துளைத்த பின் குறிப்பிட்ட இடத்தில் உள்ளீடு இருக்காது எனவே இன்மைப் பொருளும் துளைப்பொருளில் இருந்து, எழும்பும். இன்மைப் பொருளில் இருந்து ”இலம்பாடு” போன்ற வறுமைச் சொற்கள் எழும்.. இலகு போல் நொய்மைச் சொற்களும், இலவு போல் மென்மைச் சொற்களும் எழும்.  இல்>இன்னு என்பதும் நொய்மை, மென்மை போன்றவற்றைக் குறிக்கும் இலக்கமும் (=நூறாயிரம்) நொய்மைப் பொருளில் எழுந்ததே. இது தமிழிலிருந்து வடக்கேகிப் பெயர்ச்சொல்லாகி மிகப் பின்னாளில் தமிழுக்கே கடனாகியது. இலக்கத்தின் இணையான நெய்தல், நொய்தல்>நெய்தல் என்று பிறந்தது. நெய்தல் தமிழானால் இலக்கமும் தமிழே. அடுத்து இல்லித்தது இலியும்; பின் இழியும். இழிதல் = இறங்குதல். இது நீர்மம் இறங்குதற்கு விதப்பாய்ப் பயனாகும்.  இன்னியது நொய்யதானது, மென்மையானது என்று பொருளாகிச் சுவையின் பொதுச் சொல்லாகும். (இன்பமும் இனியதும் தொடர்புற்றதோ என நாம் மயங்கலாம். இரண்டும் நுண்ணிதாய் ஒன்றுபடினும் வெவ்வேறு பயன் கொண்டவை. இன்பத்தைப் பேசினால் கட்டுரை நீளும். எனவே தவிர்க்கிறேன்.)  

ஆக, சுவையின் சொற்பிறப்பு மிக ஆழம் கொண்டது. இனி அறுசுவைகளுக்குள் வருவோம். 


Thursday, March 17, 2022

அறுசுவைகள் - 1

"சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு " என்ற நூலில் திரு T.பக்கிரிசாமி (செல்விப் பதிப்பகம், காரைக்குடி) ஓர் ஆழ்கருத்தைச் சொல்லியிருந்தார். "ஆதிமனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவாலுணரும் சொற்கள், கலைச்சொற்கள், பண்புச்சொற்கள் அப்போதில்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) இல்லை." என்பார். இயல்பான பருப்பொருள், இடப்பொருட் சொற்களை அவர் ஐம்புலன் சொற்கள் என்பார். அவர் கருத்தின்படி, "நல்லது, உயர்ந்தது, ஞானம்” போன்ற கருத்து முதற் சொற்கள் ஆதிகாலத்தில் உருவாகி இருக்கமுடியாது, பின்னாலேயே அவை உருவாக முடியும். இன்று வழங்கும் கருத்தியற் சொற்களின் (ideological words) மூலம் ஐம்புலன் சொற்களாய் இருந்திருக்கும் என்பார். . 

அவர் தரும் எடுத்துக்காட்டு: 'மதம்' என்பதாகும்.  இதற்கு religion என்றே பொருள் கொள்கிறோம். ஆதியில் 'மதி -சந்திரன்' எனும் பருப்பொருளிலிருந்தே இது வந்திருக்குமெனச்  சொல் வரலாறு காட்டுவார். இதுபோல், பருப்பொருளறிவுக் கருத்திலிருந்து (ஞோ>நோ) மெய்ப்பொருளறிவு சுட்டும் ”ஞானம்” எழுந்தது. நல்லென்ற கருத்துமுதலும் நெல்லெனும் பருப்பொருளிற் தோன்றியதே. பல்லவர் (பின்னாற் பேரரசுச் சோழ,பாண்டியர்) பார்ப்பனர்க்குக் கொடுத்த ஊர்கள் சதுர்வேத மங்கலங்களென்றும், பார்ப்பனர் அல்லாதார்க்குக் கொடுத்தவை நெல்லூர்> நல்லூர் என்றும் நம்மூரில் ஆயின. சென்னையை அடுத்த சோழங்க நெல்லூர் இப்படியே சோழிங்க நல்லூராயிற்று. (மங்கலம், நல்லூர், நகரம், காமம், ஊர் பற்றி வேறு கட்டுரையில் சொல்வேன்.) நாம் ஆழ்ந்து பார்த்தால், அவரின் பார்வை, சொற்பிறப்பியல் ஆய்வில் நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.

ஐம்புலன் சொற்களிலிருந்து கருத்துமுதற் சொற்கள் எழுவதோடு, இன்னுமோர் கருத்துமுண்டு. எம்மொழியிலும் பொதுமையில் (generic) தொடங்கி விதுமைக்கு (specific) கருத்து வளராது. விதுமையிலிருந்தே பொதுமைக்கு ஏகும். இயல் மொழியில் சொற்சிந்தனை அப்படியே வளரும். மார்க்சிய முரணியக்கச் சிந்தனையும் (Marxian Dialectical thinking) இதையே சொல்லும். இதுபற்றி என் கட்டுரைகளில் சொல்லியுள்ளேன். எ.கா: தமிழர் பால், கொழுப்பிலிருந்தே நெய்ப்பொருளை முதலிற் கண்டார். அறிவுகூடி, நுட்பந் துலங்கி, எள்வித்தில் நெய்யெடுத்தவன், எள்நெய் (=எண்ணெய்) என்றே சொன்னான். பின்னால் கடலை, தேங்காய், ஏன் மண்ணில் கிட்டியவைகளையும் எண்ணெய்ப் பொதுமை கொண்டு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண் எண்ணெய் எனும் விதுமையாய் அழைக்கத் தொடங்கினான்.

மொழியிற் கருத்து/சொல் வளர்ச்சி, இப்படி நீள்சுருளாய் (helical spring), மறுகித் தோன்றி, விதுமையும் பொதுமையுமாய் எவ்வளித்துச் சொற்களை உருவாக்கும். (எழுவுதல் எவ்வுதலாய்த் தொகுந்தது. எகிறுதலென்றும் பொருள் கொள்ளும், evolve= எவ்வளிப்பது. எல்லாவற்றையும் ’வளர்ச்சியாக்கி’ எவ்வுதலை மறக்க வேண்டாம்.) 'நெய்'  ஆவின் நெய்யாய் விதுமையிற் தோன்றியிருக்க வேண்டும். (’நெய்’ வரலாறு அறிந்தேனில்லை.) பின் 'நெய்', பொதுமைக் குறியீடாகி, 'எள்நெய்' விதுமைக் குறியீடாகி, முடிவில் 'எண்ணெய்' பொதுமைக் குறியீடாக மீண்டும் வளர்ந்திருக்கிறது.

------------------------------------------

மேற்சொன்ன புரிதலோடு சுவைக்கு வருவோம். இங்கும் பொதுமைக் கருத்து முதலுக்கு அடிப்படை, ஐம்புலன் சொல்லாகவே உள்ளது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு ஆகிய ஆறு விதப்புக்களை நாவால் உணர்வதாலேயே (இவற்றுள் இடையுலப்பு (overlap) உண்டு) ”சுவை” எழுந்திருக்கும். (நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனும் 8 மெய்ப்பாட்டுச் சொற்களை இங்கு பேசவில்லை. அவை நாகரிகம் வளர்ந்த நிலையில் ஏற்பட்டிருக்கலாம்.) சரி,  சுவையை எப்படி உணர்கிறோம்?  

நாக்கில் 1000 கணக்காய் சிற்சிறு உப்பல்களும் (papillae), அவற்றுள் சுவைத் தளிர்கள் எனும் உணர்கருவிகளும், உணர்கருவிகளுக்குள் மயிர் போல் தோற்றும் நூகுளை (microvillus) உணரிகளும் (sensors) உள்ளன.  தாடை/பற்களின் இயக்கத்தால்,  உணவு கடிபட்டு, மென்பட்டு, அரைபட்டு, வாய்நீரால் குழம்பாகி. நூகுளைகள் தூண்டுற்று, ”எச்சுவை?” என்று தாம் மதித்த செய்ஞையை (signal) மூளைக்கு அனுப்ப,   அங்கு தேங்கிய பதிவுகளோடு ஒப்பிட்டு, ”நாக்குணர்வது இனிப்பா, புளிப்பா, உவர்ப்பா, துவர்ப்பா, கார்ப்பா, கசப்பா?” என மூளை முடிவு செய்கிறது.   

நிரவல் மாந்தனுக்கு 10000 சுவைத்தளிர்கள் உள்ளதாம். ஒவ்வோர் பக்கலும் (fortnight) இவை புதிதாகின்றனவாம்.  முதியோரிடம் தளிர்கள் புதுக்காததால், 5000 அளவிலே சுவைத்தளிர்கள் குறைந்து போவதால், சுவை காண்பதில் தடுமாறலாமாம். புகைபிடிப்போரிடமும் சுவைத்தளிர் குறைவதால், அவரும் தடுமாறலாமாம். சுவை காண்பதில் சுவைத்தளிர்கள் மட்டுமன்றி, உச்சி மூக்கின் விரையுணர் பெறுதருக்கும் (Olfactory receptors) பங்குண்டு. சுவைத் தளிர்களும், விரையுணர்விகளும் சேர்ந்தே மூளைக்குச் செய்தி அனுப்பும். மெல்லும் போது, உணவு சில வேதிகளை வெளியிட, அவை மூக்கில் தாக்க, விரையுணர் பெறுதர்கள் தூண்டப்படுகின்றன. மூக்கும் நாக்கும் சேர்ந்தே உணவு விரைச் சுவையைக் (flavor) கண்டுபிடிக்கின்றன.  தடுமன் பிடித்துச் சளி, மூக்கை அடைத்தால், விரைச்சுவை காண்பது கடினமாகும். ஏனெனில் அப்போது விரையுணர் பெருதர் உள்ள உச்சிமூக்கை வேதிகள் போய்ச் சேராததால், மூளைக்கு விரைச்சுவை சரியாய்த் தெரிவதில்லை. சுவையை ஆய்வதற்கு முன்னால் உணவிற்கான சில பொதுச் சொற்களையும், தின்பன, பருகுவன பற்றிய சொற்களையும் பார்ப்போம். 

”ஆ” வாயொலி அங்காத்தலையும், அவ்>அவ்வு இன் திரிவான ”ஊ” வாய் மூடுவதையும் குறிக்கும். ”ஊ” வளர்ச்சியாய் வாயுள் உணவு ஏகும் வினை குறிக்க ஊ>*ஊள்>உள் என்ற சொல் எழுந்தது. இது வளர்ந்து *ஊள்>ஊண் ஆகியது. இன்னும் வளர்ச்சியில் ஊண்>உண்>உணவு ஆகும். உண்ணுவது, உண்டுமாகும், (உண்டேன்.) உண்டால், ”உண்டி” கிளைக்கும். தொடக்கில் ஊண்/ஊன் இடையே வேறுபாடில்லை. ”ஊண்” என்பது விலங்கு வழி கிடைக்கும் ஊனையே முதலில் குறித்தது. அப்போது மாந்தவுணவு பெரிதும் ஊனே. மரக்கறி அல்ல. நெடுநாட்கள் கழித்து, நாகரிகம் எழுந்தபிறகே, சில மனத்தடைகளால், மாந்தர் மரக்கறி உண்டார். வெவ்வேறு கால மாந்தரின் கவாலக் (கபாலம்) கொண்மையை அளந்து, மாந்த வளர்ச்சியை உன்னித்த மாந்தவியல் அறிஞர் ஊனால் மாந்த மூளையளவு பெருகியது என்பார். *ஊள்+து>ஊட்டு = இன்னொருவருக்கு உட்செலுத்துவது. பெயராகவும் வினையாகவும் பயனுறும். ஊட்டு+இ = ஊட்டி = உண்ணப்படும் உணவு. உண்டும் பெயராகும். உண்டு+இ = உண்டி.  

மேற்கூறியவை போகப் பதம், இரை, அசனம், ஓதனம்,  வல்சி, ஆக்காரம், உறை என்ற சொற்களையும் உணவுப் பொதுப்பெயராக்குவர்  ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். முதலில் வருவது பதம். பல்லில் படுவது பதம். படு>பது>பதம் எனச் சொல்வளர்ச்சி காட்டும். 2 ஆவது, இரை. பல்லால் கடித்து இற்றப் படுவதால் (இறுக்கப் படுவதால்), அது இற்று>இற்றை>இறை>இரை. 3 ஆவது அசனம். பார்ப்பதற்கு வடமொழி போல் தோன்றும். பல்லின் இடையில் உணவுத் துண்டுகளை இட்டுத்  தாடைகளை அசைத்துக் கடிப்பதால் இது அசனமாகும்.  4 ஆவது ஓதனம் இரைபட்ட உணவை தன் சத்தை உவந்து வெளிப்படுத்துவதால் உணவு ஓதனமாயிற்று. உவதல்> ஓதல் = வெளிவரல். உவக்களித்தல்> ஓக்களித்தலை நினைவு கொள்ளுங்கள்.  5 ஆவது வல்சி. வல்லுறுதல் = வல்வினைக்கு ஆளாதல். வல்லுற்றது = வல்யி>வல்சி ஆகும்,  6 ஆவது ஆகாரம். வாயை அங்காத்து (=ஆஃக்/ஆஹ் எனத் திறந்தல்) நிரைப்பது ஆகு + ஆரம் = ஆகாரம். முடிவில் 7 ஆவது சொல் இறை. வாய்க்குள் அடைத்துக் கடித்து இரைபட்டவுடன், தன்சுவைகளை உறுத்திக் காட்டுவதால் உறை, 

உணவுப் பெயர் போலத் துற்றி, திற்றி என்பன தின்னப்படும் திண்மப் பொருளுகான விதப்புப் பெயர்களாகும். துல்>துள் என்பது துளையிடலைக் குறிக்கும் வேர்ச்சொல். துல்>துல்நம்>துன்னம் = துளை. ஊசியால் துளை யிட்டுப் பின் தைக்கிறவர் துன்னகாரர் என்றும் தையலார் என்றும் சொல்லப் படுவார். துன்னகாரர் என்பது முதல் வேலையால் எழுந்த பெயர், தையலார் என்பது இரண்டாம் வேலையால் எழுந்த பெயர். வாயில் முன்னிருக்கும் பற்கள் திண்மத்தில் துளையிடும் வேலை செய்கின்றன. அதனால் துன்னுதல் என்ற சொல் உணவை ஒட்டியும் எழுந்தது பின் அது தின்னுதல் என்று திரியும். துன்னுதல் என்பதைக் கொச்சை வழக்கு என்றும் தின்னுதல் பண்டிதர் வழக்கு என்றும் சில ஆசிரியர் சொல்வர். தவறு. துன்னுதலே சரியான வழக்கு. பொத்தகம்>புத்தகம்  போல் இதுவும் தலைகீழ் புரிதலாய் இன்றிருக்கிறது. துல்>துல்_து = துற்று>துற்றி என்பதும், துற்றி>திற்றி என்பதும் இயல்பான வளர்ச்சிகளாகும். 

அடுத்தது பருகுவன பற்றிய சொற்கள். பானம், துவை பற்றியது. பல் என்பது பன்மைக்கான வேர்ச்சொல். பல்குதல்> பலுகுதல்> பருகுதல் என்பது பல் துளிகளாய்ப் பெருகுதல்  இங்கே வாய்க்குள் நீர்மம் பருகுகிறது/ பெருகுகிறது. அதே பல்குதல்> பகுதல்>பாத்ல் என்பதும் பெருகுதலைக் குறிக்கும்.  பாநம்> பானம் என்பது பருகும் நீர்மம். இதையும் தவறாய் வடமொழி என்பார். ஆழ்ந்து ஓர்ந்தால் அப்படியில்லை.  துள்ளுவது துளிப்பது போல் துள்கவும் செய்யும். துள்கு-> துள்வு-> துவ்வு- துவ்வுதல் என்பது குடிப்பது தான். துவ்வப்படுவது துவ்வை>துவை. 

குடித்தல் என்பது குள்>கொள்ளுதலைக் குறிக்கும். உள்ளுவது போலவே கொள்ளுவதும் வாய்க்குள் செல்வதைக் குறிக்கும். குள்>குடு>குடி என்பது அப்படிப் பிறந்தது. துல்>துரு>தூர் என்பதும் துளி யாதலைக் குறிக்கும். மழைத் துளித் துளியாய்ப் பெய்தால் தூர்கிறது என்கிறோமே?்நினைவு கொள்க. தூரித்தல், துரிங்குதல் என்பன இதன் வழிச் சொற்கள். துரிங்கு- என்ற சொல் நம்மிடம் இல்லை. இந்தோயிரோப்பியனில் உள்ளது. Drink.