Monday, July 15, 2013

”தரவிறக்கம்” பற்றிய சிந்தனை

 ”தரவிறக்கம்” என்ற சொல் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னெழுந்து இப்பொழுது இணையமெங்கும் விரிந்து பரவியிருக்கிறது. download என்னும் ஆங்கிலச்சொல்லிற்கு ஈடாகப் பலரும் இதைப் பயன்படுத்திப் பரிந்துரைக்கவுஞ் செய்கிறோம். down, load என்ற இரு ஆங்கிலச் சொற்களைப் பிணைத்தெழுந்த இந்தக் கூட்டுச்சொல் 1977-80 களில் அறிவியற் புழக்கத்திற்கு வந்ததாம். 

அடிப்படையில் Load என்பது ஒருவர் தலையிலோ, முதுகிலோ, அல்லது ஒரு விலங்கின் முதுகிலோ, வண்டியின் மூலமாகவோ கொண்டு செல்லப் படுவதாகும். (It is one which is laden on somebody's head or the back of an animal or on a vehicle). இந்தச்சொல் எழுந்த பிறப்புவகை 

load (v.)
late 15c., "to place in or on a vehicle," from load (n.). Transitive sense of "to put a load in or on" is from c.1500; of firearms from 1620s. Of a vehicle, "to fill with passengers,"
from 1832. Related: Loaded; loaden (obs.); loading.

load (n.)
"that which is laid upon a person or beast, burden," c.1200, from Old English lad "way, course, carrying," from Proto-Germanic *laitho (cf. Old High German leita, German leite, Old
Norse leið "way, course"); related to Old English lædan "to guide," from PIE *leit- "to go forth" (see lead (v.)). Sense shifted 13c. to supplant words based on lade, to which it is not etymologically connected; original association with "guide" is preserved in lodestone. Meaning "amount customarily loaded at one time" is from c.1300.

Figurative sense of "burden weighing on the mind, heart, or soul" is first attested 1590s. Meaning "amount of work" is from 1946. Colloquial loads "lots, heaps" is attested from c.1600. Phrase take a load off (one's) feet "sit down, relax" is from 1914, American English. Get a load of "take a look at" is American English colloquial, attested from 1929.

lade (v.)
Old English hladan (past tense hlod, past participle gehladen) "to load, heap" (the general Germanic sense), also "to draw water" (a meaning peculiar to English), from Proto-
Germanic *khlad- (cf. Old Norse hlaða, Old Saxon hladan, Middle Dutch and Dutch laden, Old Frisian hlada "to load," Old High German hladen, German laden), from PIE *kla- "to spread out flat" (cf. Lithuanian kloti "to spread," Old Church Slavonic klado "to set, place").

என்று சொல்லப்பெறும். load ற்கு இணையாகக் கனம், சுமை, பளு, பாரம், பொறை போன்ற சொற்களைத் தமிழிற் பயன்படுத்துகிறோம். (சீர், குரு, ஞாட்பு என்ற சொற்கள் கூட இதேபொருளிலுண்டு.) குவித்தலிலிருந்து கூட்டமும், அதிலிருந்து செறிவும், செறிவிலிருந்து பருமையும், பருமையிலிருந்து கனமும் எனப் பொருளமைதி அமைந்து பொருள்முதற் சொற்களும், கனத்திலிருந்து திண்மையும், வலிமையும், அதே போலப் பருமையிலிருந்து பெருமையும் போன்ற கருத்துமுதற் சொற்களும் கிளைக்கும் என்று மொழிஞாயிறு பாவாணர் சொல்லுவார்.

கல்>கன் எனும் வேரிலிருந்து எழுந்தது கனமாகும். ”கல்லைப் போற் கனக்கிறது” என்பது உலகவழக்கு. ”கல்லென்று இருக்கிறான்” என்று கூடத் திண்மையானவரைக் குறிப்பிடுகிறோம். எடுத்தல், நிறுத்தல் என்ற அளவீட்டு முறைகளால் கனத்திற்கு ஈடாக எடை, நிறை என்ற இரண்டாம்வழிப் பெயர்ச்சொற்களும் உடன் வந்துவிடுகின்றன.

சும்>சும்மை என்ற சொல் மிகுதி எனும் பெயர்ச்சொல்லைக் குறிக்கும். சும்மைக்கு முந்திய சும்முதல் என்ற வினைச்சொல் (கும்முதலைப் போல்) மிகுத்தலைக் குறித்திருக்க வேண்டும்.
[மிகுத்தலில் இருந்து கூட்டப்பொருளும் பருத்தற் பொருளும் இயல்பாக ஏற்படும்.] ஆனால் அகரமுதலிகளில் பெயர்ச்சொல் பதிந்திருக்கும் போது, வினைச்சொல் பதிவாக வில்லை. நாம் வியப்புறுகிறோம். சும்மையையொட்டி, சுமை, சுமடு, சும்மாடு, சுமத்தல் என்று பல்வேறு சொற்களும் அகரமுதலிகளிற் பதிவாகியிருக்கின்றன.

பளு என்ற சொல் பல்>பள்>பளு என்ற கூட்டப்பொருளிலும், பருத்தற் பொருளிலும் கிளைத்தது. [பருமன் என்பது எடை/நிறையைக் குறிக்காத நிலையில் பளு என்ற சொல் குறிக்கிறது. (பருமன் is a volumetric term while பளு is a weighty term.) பளுவேற்றுவதும், இறக்குவதும் நாட்டுப்புறத்தில் இயல்பான பேச்சு. பளுக்களை ஏற்றியிறக்கும் தொழிலாளர் ஒருகாலத்தில் இதை இயல்பாகப் புழங்கினர். இன்று, நகர்ப்புறங்களில் ”load” என்ற ஆங்கிலச்சொல்லே ஊடாடித் தமிழ்ச்சொல் குறைந்து கொண்டிருக்கிறது. [தமிழைத்தான் படித்தோர், படிக்காதோர் என்ற நாம் எல்லோரும் அக்கறையில்லாது தொலைத்துக் கொண்டிருக்கிறோமே?]
 
பாரம் என்ற சொல்லும் கூட பருத்தப் பொருளிலிருந்து கிளைத்தது தான். [வண்டியைச் செலுத்தும் போது முன்பாரம், பின்பாரம் என்று சொல்கிறோமில்லையா? ஒருபக்கம் மட்டுமே
வண்டிப்பாரம் கூடினால் அச்சு முறிந்து போகும். அதேபோல முதுகிற் சுமையேற்றிய கழுதையின் மேற்பாரத்தை முதுகின் இருபுறமும் பரத்திப் போட்டாற் தான் நொண்டாது நடக்கும்.] பாரத்தின் வினைச்சொல் பரித்தலாகும்.

பாரத்தையொட்டிய இன்னொரு சொல் பொறை. பொறுத்தது பொறை. பொறுத்தல் தாங்குதலென்று பொருள்படும். பொறுமை என்பது தாங்கும்திறன். பொறுதி என்பதும் பொறுமையைக் குறிக்கும். தமிழில் என்ன உண்டோ, கிட்டத்தட்ட அதே பொருட்பாடுகளில் கனம் பற்றிய ஆங்கிலச் சொல்லும் உண்டு. [இப்படி இணைச்சொற்களை நான் சொல்லுவதாலேயே என்னைப் பழிப்பவர்கள் உண்டு. நான் ஏதோ சொல்லக்கூடாத ஓர் உறவை வெளிக்காட்டி விடுகிறேனாம். தமிழிய மொழிகளுக்கும் இந்தையைரோப்பிய மொழிகளுக்கும் தொடர்பு ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் என்று நான் சொல்வதே பலருக்கும் பிழையாகத் தெரிகிறது. அவ்வப்போது எனக்குத் தரும அடி போட்டுப் போவார்கள். இல்லையென்றாற் பேசாது போவார்கள்.]
பாரத்திற்கு இணை burden. 

burden (n.1)
"a load," Old English byrðen "a load, weight, charge, duty;" also "a child;" from Proto-Germanic *burthinjo- "that which is borne" (cf. Old Norse byrðr, Old Saxon burthinnia, German
bürde, Gothic baurþei), from PIE root *bher- (1) "to bear, to carry; give birth" (see infer). The shift from -th- to -d- took place beginning 12c. (cf. murder). Archaic burthen is occasionally retained for the specific sense of "capacity of a ship." Burden of proof is recorded from 1590s.

load என்ற பொருளில் மேலே சொன்ன கனம், சுமை, பளு, பாரம், பொறை (சீர், குரு, ஞாட்பு) போல இன்னும் வேறு சொற்களிருக்கலாம். [சுமத்தலைப் போல தரித்தல், தாங்குதல் என்ற சொற்களும் இருக்கின்றன. தரித்தலின் பெயர்ச்சொல் அகரமுதலிகளில் தரிப்பு என்றிருக்கிறது. தாங்குதலின் பெயர்ச்சொல் தெரியவில்லை.] 

காட்டுவிலங்காண்டி காலத்திலிருந்து முல்லை வாழ்க்கைக்கு வந்த காலம் வரை தமிழ்மாந்தனுக்குக் கனத்தோடு தொடர்பு இருந்திருக்கவேண்டும். அடிப்படையிற் சுமையேற்றம், இறக்கம் என்ற கருத்தீடு ஏதோ இப்பொழுது எழுந்ததல்ல. முல்லை வாழ்க்கைக்குப் பின் கிழாரியக் காலத்தில் ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குப் போகும்போது கூடவே சுமை தூக்கும் நிலைமை வந்து சேரும். அந்தக் காலத்திற் தொலைவு கூடக் கூடச் சுமைதூக்கிச் செல்வோர் தானேயோ, மற்றோர் துணையோடோ சுமையை இவற்றில் இறக்கி வைத்துப் பின் ஓய்வுற்ற பின் சுமையை ஏற்றி, வந்த வழியைப் பார்ப்பர். [தைப்பூசத்தின் போது பழனிக்குப் பலரும் காவடி தூக்கிப் போகும் நெடும்பயணத்தை இங்கு நினைவு கொள்ளுங்கள்.] download/upload என்பது பெருவழிகளில் இப்படிச் சுமையை இறக்கியேற்றி வைத்தபோது உருவான பழக்கமாகும்.

போகும் பெருவழிகளில் ஆங்காங்கே சுமைதாங்கிகள், சத்திரங்கள், ஊட்டுப் புரைகள் இல்லாது போகா. இரண்டு கல்லைத் தரையில் நாட்டி, அவற்றின் மேல் தலைமாட்டுயரத்திற்கு மூன்றாவது கல்லைப் பட்டையாகப் படுக்கப் போட்டு,  சுமை தாங்கிக் கல்லை ஊர்ப்பக்கம் ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். பெருவழிகளில் இன்றும் இவை தென்படும். ஆனால் கல்லைப் பயன்படுத்துவோர் தான் பெரிதுங் குறைந்து போனார்கள். ’சர் சர்’ரென்று பல்வேறு உந்துகளிலும், வண்டிகளிலும் ஊடு போகின்ற நமக்கு, ”இந்தக் கல் எதற்கு?” என்றே தெரியாமற் போவது இயற்கை. 

ஆனால் உறுதியாகத் தரவு என்ற சொல் மேற்சொன்ன பட்டியலிலில்லை. கணியாளுமை வந்ததின் பின் தான் தரவு என்ற சொல் நுழைந்தது. தரவு என்ற முன்னொட்டு இங்கே வரத்தான் வேண்டுமா, என்ன? download - க்கும் தரவுக்கும் என்ன தொடர்பு? - தெரியவில்லை.  விறகை இறக்குவதும், தரவுகளை இறக்குவதும் கருத்தீட்டில் வெவ்வேறானவையா? அது தாழ்ச்சி, இது உயர்ச்சியா? தரவை அங்கு சொல்லவேண்டிய கட்டாயம் என்ன? (தரித்தலுக்கும் தரவிற்கும் தொடர்பிருப்பதாய்த் தெரியவில்லை.)

ஒரு 50 ஆண்டுகளுக்கு முன், கணி பழகுவோரை நிரலிகளும் தரவுகளும் பயமுறுத்திய காலத்தில், அறையளாவும் IBM கணிப்பொறிக் கட்டகங்களை (computer systems) பொறியாளர் மட்டுமே பயன்படுத்திய போது, புள்ளி விவரங்கள், பட்டியல்கள், வாய்பாடுகள், கணிப்புகள், பட வரைவுகள், கோப்புகள் என்று எல்லாமே தரவுகளாய்ப் பார்க்கப்பட்டன. தரவு நுழைவே (data entry) அன்று பென்னம் பெரிய வேலையாய் இருந்தது. அட்டைத் துளைப்பு எந்திரங்கள் (card punching machines), கத்தையாய்த் தரவட்டை மூட்டைகள், மொத்தையான தரவட்டைப் படிப்பிகள் (data card readers), இருவோரத்திலும் சல்லடை போட்ட தொடர்த்தாள்கள், படிப்பு வழுவே (reading error) வராது பழகும் வித்தார முறைகள், ஒளிகொண்டு எண்மயமாக்கும் மின்னியியல் (electronic) நுட்பங்கள் என எல்லாமே கம்ப சூத்திரமாய் அன்று காட்சியளித்தன. குப்பை போகின் குப்பை தள்ளுமாம் (garbage in, garbage out). நிரலிக்குள் எங்காவது "do loop" இல் கந்தழிக் காலம் (infinite time) சுற்றிக் கொண்டால், பேராசிரியர் கொடுத்த செலவு ஒப்புதல் ஐயோவென்று ஓய்ந்து அனைந்து போகும்.

முன்னே சொன்ன அதே காலத்தில் முதல் 30 ஆண்டுகளில் கணியெனச் சுருங்கக் கேள்விப் பட்டதேயில்லை. சொல்லும்போதே பயமுறுத்திக் கணி மையம் (computer centre) என்றழைப்பார்கள். ஏழெட்டுக் கருவிகள் அங்கு இணைந்தேயிருக்கும். தணியாய் ஒரு கருவியிராது. ஒவ்வொரு கணிப்பைச் செய்யவும் கணி மையத்தில் முன்பதிக்க வேண்டும். ஒரு புதிரியை (problem) முடிக்க 1 நாளும் ஆகலாம்; 9 நாளில் முடியாதும் போகலாம்.

1970 - 72 களில் முது நுட்பியல் படிக்கும் போது Newton - Raphson procedure விரவிய 5 வகைப்புச் சமன்பாடுகளைக் (differential equations) கொண்ட போல்மத்தைத் (model) தீர்க்க ஓடி அலைந்தது எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. சென்னையிலுள்ள இந்திய நுட்பியல் நிறுவனத்திலும் (Indian Institute of Technology), அதற்கு எதிர்த்த சென்னைப் பல்கலைக் கழகத்திலும் (அழகப்பா நுட்பியற் கல்லூரி) நள்ளிரவிற் கணிமையங்களை நிறுத்தி விடுவார்கள். மீண்டும் காலை 5 மணிக்குத் தொடக்கம். இடைநேரத்தில் கணிமையம் பேணும் வேலைகள் (maintenance jobs) நடக்கும். அவ்வப்போது கணியச்சு (computer printer) சிக்க, அதைச் சரிசெய்வதே பெரும்வேலையாகிப் போகும். கணி நினைவகங்கள் (memories) பெரிய நாடாக்கள் கொண்டதாயிருக்கும். இயக்கக் கட்டகச் சொவ்வறை (operating system software) என்பதை எந்தப் பயனாளரும் அப்போது கையாண்டதில்லை. கணி பேணும் 4,5 கணிப்பொறியாளருக்கு மட்டுமே அது தெரியும்.

தரவுகளை (தருவது தரவு; data அதுதானே?) கணிக்குள் இட்டு, உயர்கணிப்புகள் செய்ய எங்களைப் போன்றோர் நீள நிரலிகளை FORTRAN மொழியில் எழுதிய காலம் அது. கலனம் (calculus), பொருத்தியல் (algebra), வடிப்பியல் (geometry), இடப்பியல் (topology), புள்ளியியல் (statistics), மடக்கைக் கணக்கீடுகள் (matrix calculations) பல்மடிகள் (manifolds) போன்ற கணக்கு முறைகளிற் செய்வதற்கே கணிகள் அன்று பயன்பட்டன. இன்றோ நிலைமை தலை கீழ். இப்பொழுது உயர்கணிப்பிற்கு மட்டுமா மிசைக்கணிகள், மடிக்கணிகள், பலகைக்கணிகள் பயன்படுகின்றன? வாழ்க்கையின் எல்லா நடைமுறைகளுக்கும், நமக்குத் தேவையான உள்ளுருமங்களை (தகவல்களென்று சொல்லவேண்டுமோ?) வேண்டும்போது திருப்பிப் பெறுவதற்கும், [இது இல்லெனில் இன்னொன்று என்பதாய்க் கட்டியங்களை conditions) வைத்து] ஒழுங்கு செய்வதற்குமாய்க் கணியின் பயன்பாடு விரிந்துவிட்டது. வெறும் அலைபேசியே கைக்கணியாக மாறிவிட்டது.

இப்பொழுதெல்லாம் ஒரு நாட்டின் வெதணத் தரவுகள் (climatic data), பொருளியற் புள்ளி விவரங்கள் (economic statistics), மக்கள் தொகைப் புள்ளிவிவரங்கள் (population statistics) என நூறாயிரம் தரவுகளை மட்டுமே தேடி யாரும் இணையவழி இறக்குவதில்லை. இலக்கிய மின்பொத்தகங்களை இறக்குகிறார்கள்; இசை, பாட்டு, திரைப்படம் என பல்வேறு விதயங்களைத் தேடி இறக்குகிறார்கள். இணைய வாணிகத்தின் வழி பூதிகப் பொருட்களைக் (physical objects) கூட வாங்குகிறார்கள். மெய்நிகர் வணிகம் கூடக் கணிவழியே நடைபெறுகிறது. ”எல்லாமே தரவு தானே?” என்று சுற்றி வளைத்த பொருத்தப்பாடு கொள்ளலாமெனினும், அத்தகை ஒற்றைப் பரிமானப் பார்வை நம் சிந்தனையை நெருட்டுகிறது. அச்சடித்தது போலக் கடுவறை (hardware), சொவ்வறை (software) என்ற கட்டகத்துள் மாந்த வாழ்வை அடுக்கிச் சொடுக்கி "உலகில் இப்படித்தான் இனிப் பார்க்கவேண்டுமோ?” என்று தடுமாறுகிறோம். எதிர்காலம் என்பது உச்சாணியில் நின்று கட்டளை போடும் பெரியண்ணன் உலகமாகி விடுமா, என்ன? :-)))))))

இவ்வளவு காலம் வரை இவற்றை இப்படியா பார்த்தோம்? இசை வேறு, பாட்டு வேறு, பொத்தகங்கள் வேறு, ஆவணங்கள் வேறு, கோப்புக்கள் வேறு, திரைப்படங்கள் வேறு என்று உணர்ந்தோமே? அவற்றின் பன்மைப் பண்பைத் தொலைத்து எல்லாவற்றையும் ஒருமையாக்கி தரவென்று சொல்லி உச்சி முகர்ந்து என்ன செய்யப்போகிறோம்?

புரியவில்லையெனில் ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன், எண்ணிப் பாருங்கள். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் போய் சொக்கரையும், கயற்கண்ணியையும் வழிபட விழைகிறோம். கோயிலைச் சுற்றிச் சித்திரை வீதிகள். அவற்றின் வெளியே ஆவணிமூல வீதிகள், மாரட்டு வீதிகள், அப்புறம் வெளி வீதிகள். இவற்றிற்கு அப்புறம் வெளியூர்ப் பேருந்துகள் செல்லுகின்றன. பேருந்தில் வந்து எங்கு இறங்கினும் நடந்தே கோயிலை அடையச் சற்று நேரம் பிடிக்கும். இத்தனைக்கும் நாலுபுறமும் நாலு வாசல்கள். மேற்கே தூத்துக்குடியிலிருந்து வரும்போது தெற்கு வாசல் வழியாகக் கோயிலுக்குள் நுழைவது எளிது. உள்ளே ஆடி வீதியில் நடந்து சொக்கர், அம்மன் கோயில் மண்டபங்களை அடையமுடியும். சரி பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்தால், அங்கிருந்து மேலக்கோபுரம் வழியே கோயிலுக்குள் நுழையலாம். இது போல வடக்குக் கோபுரம் சிலருக்கு வாய்ப்பாக இருக்கும். அவரவருக்கு எது தோதோ, அண்மையோ, அப்படித்தான் உள்ளே நுழைகிறோம். மாறாய், ”எல்லோரும் கீழ வாசல் வழியே கோயிலுக்குள் நுழைய வேண்டும்; மற்ற வாசல்களை இனிச் சாத்தி விடுவோம்” என்று கோயில் ஆணையர் கட்டளையிட்டால் நமக்கு எப்படி இருக்கும்? முக்கி முனகிக் கொப்பளிக்க மாட்டோமா? இதே நிலை, தில்லைப் பொன்னம்பலத்திலும் உண்டு. பெரிய கோயில்களில் வாய்ப்புக் கருதி, நாலு வாசல் ஏந்துகளை ஏற்பாடு செய்திருப்பார். [multiple entry is always convenient for large systems; you cannot be one-dimensional there.]

எல்லாவற்றையும் தரவென்று ஒற்றைப் படுத்துவது கணியாளருக்குச் சரியாக இருக்கலாம்; பயனாளரை வெருட்டாதோ?.

அப்படியானால் தரவு என்பது கனம், சுமை, பளு, பாரம், பொறை (சீர், குரு, ஞாட்பு) இல்லை. எல்லாவற்றையும் தரவு என்பது நம் சிந்தனையை ஒருவகையில் மொண்ணையாக்குகிறது. 

பிறகு ஏன் தரவுறக்கம் என்று சொல்லப்பெறுகிறது?

இப்பொழுது ஒரு வலைத்தளத்தில் பல்வேறு கோப்புக்கள், நிரல்கள், அடுகு (audio) விழிய (video), பனுவல்கள் (texts) போன்றவையிருக்கின்றன. அதிலிருந்து இறக்கிக் கொள்ளலாம் (download),  ஏற்றிவிடலாம் (upload) என்று சொன்னால் என்ன குறையப் போகிறது? [இந்தக் கொள்ளுதல், விடுதல் என்பவை காரணத்தோடு சேர்க்கப் படுகின்றன. அவற்றை இங்கு மாற்றிச் சொன்னால் பொருள் மாறிப்போகும்.] இந்தத் தரவைப் பிடித்து ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறோம்? அதையேன் சேர்த்து ஒட்டிக்கொண்டிருக்கிறோம்?
தொழில்நுட்பம் என்பதில் தொழிலை விட்டு நுட்பியல் என்று சொல்லலாம் என்றும், மின்சாரத்தில் சாரத்தை விட்டு மின்னென்றே சொல்லலாம் என்றும் விடாது கூவிக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாய்க் கேட்பவர் மாறுகிறார்கள்.  இப்பொழுது தரவை இந்த இடத்தில் விடச்சொல்லுகிறேன்.

எனக்கு இன்னும் ஒரு மோசமான பட்டறிவு உண்டு. நானுஞ் சேர்த்து நாலைந்து பேராய் கோவை நுட்பியற் கல்லூரியில் இருந்து இயல்பியல் என்ற சொல் 1968/69 களில் உருவாக்கிப் பரப்பினோம். இயல்பாக என்ற சொல் physical என்பதற்கு இணங்க எல்லோராலும் பயன்பட்டதால், இயல்பியல் பொருத்தமாயிருக்கும் என்று நாங்கள் கருதினோம். அது ஊரெல்லாம் பரவியது. ஆனால் எங்கோ திரிந்து, இயற்பியல் என்றாகிப் போனது.  தொய்ந்து போனோம். இயற்பு என்றால் என்ன? - என்று எங்களுக்குப் புரியவில்லை. அகராதி அகராதியாய்த் தேடிக் கொண்டிருக்கிறேன். ஓரிடத்திலும் இல்லை. பொருளே தெரியாது எல்லோருஞ் சொல்லைப் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்திற் தமிழில் நான் பார்த்த முதல் இடுகுறிச்சொல் இயற்பு என்பதாகும்.

இயற்பைப் பார்த்த அன்றிலிருந்து பயந்து போய் இயல்பியலையே நான் புழங்குவதை விட்டேன். பழைய குருடி கதவைத் திறடியானது. பௌதிகத்திற்கு ஓடி வந்து அதிலிருந்து மீண்டும் பூதத்தைத் தேடி இப்பொழுது பூதவியல் என்றே Physics ஐ அழைக்கிறேன்.

இதே உணர்வுதான் இப்பொழுதும் ஏற்படுகிறது.

நண்பர்களே! தரவிறக்கத்திலிருந்து இந்தத் தரவைத் தொலையுங்கள். வெறுமே ”இறக்கிக் கொள்ளுங்கள், ஏற்றிவிடுங்கள்” என்று சொல்லுங்கள். போதும், பொருள் வந்துவிடும். 

அன்புடன்,
இராம.கி.

பி.கு.
இன்னும் பல down சொற்கள் இருக்கின்றன. அவற்றிற்கும் இணையான சொற்களைக் கொடுத்துள்ளேன். உங்கள் பார்வைக்கு.

அன்புடன்,
இராம.கி. 
 ,     
down (adv.)
late Old English shortened form of Old English ofdune "downwards," from dune "from the hill," dative of dun "hill" (see down (n.2)). A sense development peculiar to English.
இறக்கம், இறங்கு

Used as a preposition since c.1500. Sense of "depressed mentally" is attested from c.1600. Slang sense of "aware, wide awake" is attested from 1812. Computer crash sense is from 1965. As a preposition from late 14c.; as an adjective from 1560s. Down-and-out is from 1889, American English, from situation of a beaten prizefighter. Down home (adj.) is 1931, American English; down the hatch as a toast is from 1931; down to the wire is 1901, from horse-racing. Down time is from 1952. Down under "Australia and New Zealand" attested from 1886; Down East "Maine" is from 1825

down-hearted (adj.)
also downhearted, 1774 (downheartedly is attested from 1650s), a figurative image from down (adv.) + hearted.
நெஞ்சிறங்கிய

downbeat
1876 (n.), in reference to downward stroke of a conductor's baton; 1952 (adj.) in figurative sense of "pessimistic," but that is probably via associations of the word down (adv.),
because the beat itself is no more pessimistic than the upbeat is optimistic.
துடிப்பிறக்கம்

downcast (adj.)
c.1600, from past participle of obsolete verb downcast (c.1300), from down (adv.) + cast (v.). Literal at first; figurative sense is 1630s.
பிடிப்பிறங்கிய

downfall (n.)
"ruin, fall from high condition," c.1300, from down (adv.) + fall (v.).
வீழிறக்கம்

downgrade
1858 (n.), 1930 (v.), from down (adv.) + grade.
தரமிறக்கம்

download
1977 (n.), 1980 (v.), from down (adv.) + load (v.). Related: Downloaded; downloading.
இறக்கிக் கொள்ளல்

downplay (v.)
"de-emphasize," 1968, from down (adv.) + play (v.). Related: Downplayed; downplaying.
இறங்கியாடு

downpour (n.)
1811, from down (adv.) + pour.
பொழிவிறக்கம்

downright (adv.)
c.1200, "straight down," from down (adv.) + right (adj.1). Meaning "thoroughly" attested from c.1300. Old English had dunrihte "downwards."
நேரிறக்கம்

downscale (v.)
1945, American English, from down (adv.) + scale (v.). From 1966 as an adjective.
அலகிறக்கு

downside (n.)
1680s, "underside," from down (adv.) + side. Meaning "drawback, negative aspect" is attested by 1995.
சிறகிறக்கம்

downsize (v.)
1986 in reference to companies shedding jobs; earlier (1975) in reference to U.S. automakers building smaller cars and trucks (supposedly a coinage at General Motors), from down
(adv.) + size (v.). Related: Downsized; downsizing.
அளவிறங்கு/அளவிறக்கு

downspout (n.)
1896, from down (adv.) + spout (n.).
பீச்சிறக்கம்

downstairs (adv., adj.)
1590s, from down (adv.) + stairs (see stair).
படியிறக்கம்

downstream (adv., adj.)
1706, from down (prep.) + stream (n.).
ஆற்றுப்பின்னோட்டம்

downtime (n.)
1952, from down (adv.) + time (n.).
காலக்கழிவு

downtown (n.)
1835, from down (adv.) + town. The notion is of suburbs built on heights around a city.
நகரமையம்

downtrodden (adj.)
1560s, "stepped on," from down (adv.) + trodden. Figurative use, "oppressed," is from 1590s.
தாழுற்ற

downturn (n.)
1926 in the economic sense, from down (adv.) + turn (n.).
கீழ்த்திருப்பம்

downward (adv.)
c.1200, from down (adv.) + -ward. Old English had aduneweard in this sense. Downwards, with adverbial genitive, had a parallel in Old English ofduneweardes.
இறங்குமுகம்  

Thursday, May 16, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 4

சங்கத் தமிழ்நடை என்பது ஏதோ அந்தரத்திற் குதித்ததல்ல. அப்படியொரு மொழிநடை 2000/2500 ஆண்டுகளுக்கு முன் உருவாக வேண்டுமெனில், நெடுங்காலம் முன்னரே மொழி தோன்றியிருக்க வேண்டும்; இனக்குழு இடையாடலுக்கு ஏந்தாய்ப் புழங்கியிருக்க வேண்டும்; இனக்குழுக்கள் திரண்டு ஓரினமாகுஞ் சூழல் ஏற்பட்டிருக்க வேண்டும்; தனிமாந்த முனைப்பு தொடர்ந்திருக்க வேண்டும்; திணைவளப் பண்ட உருவாக்கம் பெருகியிருக்க வேண்டும்; (மாழை, மணிகள், முத்து, பவளம் போன்ற) பரிமாற்றப் பண்டங்கள் மல்கியிருக்க வேண்டும்; அண்டை அயலோடும், கடல்வழியும், கொடுக்கல் - வாங்கல் கூடியிருக்க வேண்டும்; உவரி மதிப்பு (surplus value) உயர்ந்திருக்க வேண்டும்; பொருளியல் செறிந்திருக்க வேண்டும்.

ஒரு மொழியின் தோற்றத்தை அறிவது மிகவுங் கடினமானது. 60000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தெற்கே, தமிழகப் பரப்பில் (M130) என்னும் தொடக்க கால மாந்தன் இருந்ததாக Y குருமிகள் (Y chromosome) பற்றிய ஆண்கள் ஈனியல் (male genetics) ஆய்வின் வழி (பேரா. பிச்சப்பன், சுபென்சர் வெல்சு போன்றோரின் ஆய்வு) அறிகிறோம். [பெண்கள் ஈனியல் (female genetics) வழியும் இதை அணுகமுடியும். ஆனால் இன்னும் முன்னாற் காலங் காட்டும்.] இதே M130 கூட்டத்தாரின் நகர்ச்சியில் ஒரு பகுதியினராய் ஆத்திரேலியப் பழங்குடியினர் இருந்ததும் இப்பொழுது ஈனியல் ஆய்விற் தெரிகிறது. ஆத்திரேலியப் பழங்குடியினரின் பல சொற்கள் தமிழை ஒத்திருப்பதாயும், பண்பாட்டு நடைமுறைகள் கூடச் சிலவகையில் ஒத்ததாயும் இனவியல் ஆய்வுகள் எழுந்துள்ளன. [ஆத்திரேலியப் பழங்குடி மொழிகளுக்கும், தமிழுக்குமான ஒப்பீட்டாய்வு இன்னும் விரிவாகச் செய்யப்படவில்லை. தமிழக மொழியியற் துறைகள் இதைத் தொடங்கினால் நல்லது.] 30000 ஆண்டுகளுக்கு முன் M20 எனும் இன்னுமொரு கூட்டத்தார் இந்தியாவில் நுழைந்திருக்கிறார். இத்தகைய பழ மாந்தர் நகர்ச்சியில் தமிழ்த்தோற்றம் எப்பொழுதென்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இது தவிர, 60000 ஆண்டுகளிற் கீழைக்கடல்/தென்கடல் பல்வேறு காலகட்டங்களில் இந்திய நிலத்துள் ஊடுறுவியிருக்கிறது; பின் விலகியுஞ் சென்றிருக்கிறது. (கடலாய்வு, பழஞ்சூழலியல் ஆகியவற்றின்படி அணுகினால், சங்க இலக்கியம் நினைவுறுத்தும் கடற்கோள்கள் வெறுங் கற்பனையில்லை. இங்கு நடந்திருக்கக் கூடியவைதான். ”அவை மூன்றா? அதிகமா? எப்பொழுது நடந்தன?” என்ற வினாக்களுக்கு இறுதிவிடை இன்னுந் தெரியாது. அக் கடற்கோட் குறிப்புகளைக் கேலி செய்வதையும், ’வரலாற்றுக் காலத்தில் எங்கோ நடுக்கடல் நாடுகளிலிருந்து தமிழர் இங்கு நுழைந்தார்’ என்று கற்பனைக் கதைகள் பேசுவதையும் ஒதுக்கிக் கொஞ்சம் அறிவியலைக் கைக்கொண்டால் நல்லது.

இந்திய முகனை நிலத்திலிருந்து ஈழம்/இலங்கைப் பகுதி இத்தகைய கடற்கோளாலே பிரிந்தது. (இல்லுதல்>ஈல்தல் = பிரிதல். முகனை நிலத்திலிருந்து ஈல்ந்தது ஈழம். இலங்கை என்பதற்கும் இல்லுதல் வினை தான் அடிப்படை. ஈல்தல் ஈர்தல் என்றுந் திரியும். மேலை மொழிகளில் island, isles என்றெழுதி ஈலன், ஈல் என்றே பலுக்குவர். இற்றைக் காலத்தில் இவற்றை ஐலன், ஐல் என்று சொல்வதுமுண்டு. ஈழம் எனும் விதப்புப்பெயர் இப்படி மேலைநாடுகளிற் பொதுமையாய் விரிந்தது போலும்.)

இற்றைத் தமிழகம், கேரளம், தக்கணம் என்பதோடு ஈழம்/இலங்கையும் M130. M20 என்ற பழமாந்தர் வாழ்விடமாய் இருந்திருக்கிறது. 30000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு இலங்கையிற் கிடைத்திருக்கிறது. இந்தப் பெரிய நிலத்திற்றான் பழைய கற்காலம், புதிய கற்காலம், செம்புக்காலம், பெருங்கற் காலம், இரும்புக் காலம் போன்ற பருவங்களைப் பழந்தமிழர் கழித்திருக்கிறார். சென்னைக்குப் பக்கத்தில் பூண்டி நீர்த்தேக்கத்தின் அருகில், அத்திரப்பாக்கத்தில் பழங்கற்காலச் சின்னங்கள் கிடைத்திருக்கின்றன. [இந்தத் தொடர்ச்சியை ஒழுங்காகப் புரிந்து தமிழர் வரலாறு எழுதுவதிற்றான் ஏராளங் குழறுபடிகள் நடக்கின்றன. “தமிழரா> இருக்காது” என்ற அவநம்பிக்கைகள் பல இடத்தும் இழைகின்றன. சங்க காலத்தைக் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளும் மேலையாய்வாளர் இருக்கிறாரே?]

வரலாற்றுக் காலத்திற்கு வந்தால், இதுவரை கிடைத்த தொல்லியற் சான்றுகளின் படி (குறிப்பாகப் பொருந்தல்),இந்த மொழி கி.மு.490 அளவில் எழுத்திலும் புழங்கியது இப்பொழுது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தையச் சான்றுகள் எதிர்காலத்திற் கிடைக்கலாம். [தமிழ்நாட்டிற் செய்யவேண்டிய தொல்லியல் ஆய்வுகள் ஏராளமிருக்கின்றன. நடந்த ஆய்வுகளிலும் கரிமம் 14 யையோ, அதற்கொத்த வேறொரு முறையையோ, பயன்படுத்தி அகழ்பொருள் அகவை காணும் நுட்பம் அரிதே பயில்கிறது. எல்லாம் “அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று பரியும் முகம் காட்டி பரிதவிக்கும் “ப்ரமாணத்திலேயே” வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதிற் சங்கத முன்மைக்கு முயலும் அத்துவானக் கட்டுகள் வேறு. ”தமிழ் பிராமிக் கல்வெட்டா? கி.மு.200க்கு முன்னால் எந்தக் காலமும் சொல்லாதே” என்று ஓரிரு பெரியவரைக் காட்டி எழுதப்படா, மீறப்படா, விதி கல்வெட்டாளர் நடுவே உலவுகிறதோ, என்னவோ? பொருந்தல் ஆய்வு முடிவு கேட்டு அதிர்ந்தவரே மிகுதி.]

தமிழகத் தொல்லாய்வில் கிடைத்த வரலாற்றுப் பழஞ்செய்தி கொற்கைக்குக் அருகில் ஆதிச்சநல்லூர் பற்றியது தான். அதன் காலமே இன்னும் முடிவு செய்யப்படாதிருக்கிறது. ”கி.மு.1850, கி.மு. 3000, சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தியது” என்றெல்லாம் விதம் விதமாய்ச் சொல்கிறார். புதுக் கற்காலத் தடையங்களும் தருமபுரி மாவட்டத்தில் அண்மையிற் கிடைத்தன. பூம்புகார் கடலாய்வில் 11000 ஆண்டுகளுக்கு முன் இருந்த மாந்தக் கட்டுமானம் தெரியவந்திருக்கிறது. இந்தியக் கடலாய்வு நிறுவனம் மூச்சு விடாது மோனம் காட்டுகிறது. தமிழரும் பேசாதிருந்து, இப்பொழுது தான் தமிழக அரசு ”என்னவோ? ஏதோ?”வென்று விழித்துக் கொண்டு 90 கோடி உருபாக்களை பூம்புகார் ஆய்விற்கென ஒதுக்குகிறது. [இதுபோல ஆதிச்ச நல்லூர் ஆய்வை ஒழுங்காகச் செய்ய தமிழக அரசு ஒரு திட்டம் வகுத்துச் செலவிற்குப் பணம் ஒதுக்குமானால் நல்லது.]

மேலேயுள்ள செய்திகளைச் சொன்னது ஒரு காரணத்தோடு தான். சங்ககால நாகரிகம் எழுவதற்கு அணியமாய், இங்கு தொல்மாந்தனின் இருப்பு இருந்திருக்கிறது. எதுவும் அந்தரத்தில் நடந்துவிடவில்லை. முன்னோனை முட்டாளாக மதித்து நாம் தான் மாற்றோருக்கு அடிமையாக வெற்றிலைபாக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம்.

முதலிரு மாந்தர் நுழைவிற்குப் பின் மூன்றாம் வகை மாந்தர் (M17) இற்றைக்கு 9000 ஆண்டுகள் முன்னும், 3500 ஆண்டுகள் முன்னும் இந்தியத் துணைக்கண்டத்துள் உள்நுழைந்த போது, தமிழ் மொழியுள் மேலும் பல்வகைக் கலப்புக்கள் நடந்திருக்கலாம். [மூன்றாமவர் கலப்பு இந்தியாவில் இன்றளவும் 10/12 விழுக்காடே காட்டுகிறது.] பொதுவாகத் தமிழை உயர்த்துவோர் சொல்வது போல், ”அண்டையரசு மொழிகளின் தாக்கம் தமிழ் மேல் சங்ககாலத்திலும் அதற்கு முன்னுமில்லை, அது கொடுத்தே பழகியது” என்பதும், அன்றிச் சங்கதத்தை உயர்த்துவோர் சொல்வது போல் ”தமிழ் கடன்வாங்கியே பிழைத்தது” என்பதும் ஒன்றிற்கொன்று முரணான, அறிவியல் பொருந்தா நிலைப்பாடுகளாகும். மாந்தர் இனக்குழுக் கலப்பு, தொல்லியல், வரலாறு, பொருளாதாரப் பங்களிப்பு போன்றவற்றைப் பார்த்தால், தமிழும், பாகதமும் கி.மு.520-கி.பி.500 என்ற காலப் பெருவெளியில் ஒன்றிற்கொன்று உறவாடிய மொழிகளாகவே தோற்றுகின்றன. தக்கணப் பாதையின் உறவாடல் மொழிகள் இவையிரண்டுமேயாகும். அதே பொழுது உத்தரப் பாதையின் உறவாடல் மொழிகள் பாகதமும், சங்கதமுமாகும். இந்த 1000 ஆண்டுகளிற் தமிழின் மேல் சங்கதத் தாக்கம் சுற்றி வளைத்தேயிருந்தது.

இனிக் கொஞ்சம் வரலாற்றுக் காலம் பற்றிப் பேசுவோம். நூற்றுவர் கன்னரின் கடைக்காலத்தில் அவரின் தக்காண அரசு சுக்கு நூறாகியது. மேற்கு சத்ரபர், நூற்றுவர் கன்னரின் வடமேற்குப் பகுதியையும், ஆபிரர் என்போர் படித்தானம் சேர்ந்த கன்னரின் மேற்குப் பகுதியையும், வானவாசிச் சூதர் (அவருக்குப் பின் கடம்பர்) வட கருநாடகப் பகுதியையும், ஆந்திர இக்குவாகர் (கி.பி.220-320) கிருட்டிணா - குண்டூர் பகுதியையும், இராயல சீமையைச் சேர்ந்த பல்லவர் (கி.பி.275-600) கன்னரின் தெற்குப் பகுதியையும் பிடித்துக் கொண்டனர். கடம்பருக்குப் பின் கருநாடகத்தில் சளுக்கியர் தலை தூக்கினர்.

இச்சிதறலுக்கு நூறாண்டு கழித்து கி.பி.320 தொடங்கி கி.பி.550 வரை மகதத்தில் குத்தர் (=குப்தர்) அரசாண்டனர். சத்ரப அரசரைப் போல் குத்தரும் சங்கதத்திற்கே முதன்மை அளித்தார். குத்தர் அரசில் வேதநெறி தழைத்தோங்கியது. அரச கருமங்களில் பாகதம் அழிந்து, சங்கதம் குடியேறியது. குத்தர் அரசு விரியச் சங்கதத்தின் எல்லையும் விரிந்தது. குத்தர் கால கட்டமே சங்கதத்தின் உச்ச காலமாகும். [இந்திய வரலாற்றில் ஆர்வங் கொண்டோர் இதை உணரவேண்டும்.] சங்கதம் தூக்கிப் பிடித்த வேத நெறியாளர் சமண நெறிகளுக்கு அணைவான பாகதத்தைத் தூக்கி மிதித்து தம் ஆட்சியை நிலை நிறுத்தினர்.

காளிதாசர், ஆர்யபட்டர், வராக மிகிரர், விட்டுணு சர்மா, வாத்சாயனர் போன்றோர் இலக்கியம், கலை, அறிவியல் என்று பல்வேறு துறைகளைச் சங்கதங் கொண்டு மேம்படுத்தினர். இன்னொரு காப்பியமான வியாச பாரதம் முன்னரே எழுந்திருந்தாலும் குத்தர் அரசின் தொடக்கத்தில் இறுதிவடிவம் பெற்றது. பாரதத்திற்கு முந்தைய காப்பியமான வான்மீகி இராமயணமும் குத்த அரசின் ஆதரவு பெற்று மக்களிடையே பெரிதும் பரவியது. இந்தக் காலத்திற்றான் புகழ்பெற்ற சீனப்பயணியான வாகியான் (Fa hien) இந்தியாவிற்கு வந்தார். மருத்துவம், பண்டுவம் (Surgery) சார்ந்த சுசுருதர் (Susrutha) இக்காலத்திருந்தார். அசந்தா, எல்லோரச் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் பெரும்பாலானவை இக்காலத்தைச் சேர்ந்தவையே.

இதே காலகட்டத்திற்குச் சற்று முன்னர் தான், கன்னருக்குப் பின் தக்கணம் படித்தானத்தில் மிஞ்சிய கள்+ ஆபிரர் = களாபிரர்>களப்பிரர் (கருப்பு ஆபிரர்) என்னும் குடியரசர் கருநாடக வழியே தமிழகம் நுழைந்து மூவேந்தரை வீழ்த்தி முடிசூடினர். கி.பி.220 இல் இருந்து கிட்டத்தட்ட கி.பி.550 வரை இவரே தமிழகத்தை ஆண்டார். ”களப்பிரர் யார்?” என்ற கேள்வியில் தமிழக வரலாற்றாய்வர் இன்னுந் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். நூற்றுவர் கன்னருக்கு அப்புறம் தக்கணத்தில் நடந்த சிதறல்களை ஆய்ந்தால் மட்டுமே நமக்கு உண்மை கிடைக்கும்.

இந்தக் களப்பிரர் தமிழரை வெறுமே கொள்ளையடித்த கூட்டமல்ல. இவர் காலத்தை இருண்ட காலம் என்று சொல்லிக் கொண்டிருப்பதும் ஆய்வில்லாக் குற்றமேயாகும். தமிழகம் பற்றி நன்கு அறிந்த அரச குடியினராகவே இவர் இருந்திருக்க வேண்டும். பல்லவர், சாளுக்கியர், விசயநகரர் போலவே தமிழ்நாட்டை ஆளவந்த குடியினர் இவராகும். இவர் தோற்றம் கருநாடக / மாராட்டப் பகுதிகளில் எழுந்ததுதான். [தமிழக, கருநாடகம், மாராட்டம் மூன்றிற்குள்ளும் நடந்த கொள்வினை, கொடுப்பினையை நம்மவர் நன்கு ஆயமாட்டேம் என்கிறோம்.]

களப்பிரர் புத்தம், செயினம் போன்ற சமண நெறிகளையே தம் அரசில் முன்னிறுத்தினர். தமக்கு முன்னிருந்த நூற்றுவர் கன்னரின் தாக்கத்தால் பாகதத்தையே ஆட்சிமொழியாகத் தூக்கிப் பிடித்திருக்கக் கூடும். தமிழும் புழங்கியிருக்கலாம். ஆய்வு துலங்காததாற் தெளிவாகச் சொல்லமுடியவில்லை. களப்பிரர் பாண்டிநாட்டைப் பிடிக்காத காலத்தில் மாணிக்கவாசகர் புத்தரோடு வாதம் புரிந்தார். அவருக்குப் பின், மதுரையிலும் களப்பிரர் ஆட்சிக்கு வந்தார்.

பின்வந்த பலரிலும் (களப்பிரர் காலந் தொட்டே) பிறநாட்டு அரசுகள் நம்மூரில் ஆட்சி செய்தபோது, பிறமொழிகள் வலிந்த தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின. கிட்டத்தட்ட 1800 ஆண்டு கால பிற மொழித்தாக்கம் என்பது குறைத்து மதிக்கக் கூடியதல்ல. இக்காலத்தில் ஆட்சி மொழி தமிழ் மட்டுமாய் இருந்ததில்லை. அரசு ஆவணங்கள், பண்பாட்டுத் தாக்கம், இலக்கியம், பரிசளிப்பு, கொடை, என்று வேற்று மொழிகள் தமிழகத்திலே பெருமை பெற்றிருக்கின்றன. ஆனாலும் 13/14 ஆம் நூற்றாண்டுவரை பிறமொழி எழுத்துக்களைக் கலந்து எழுதும் நடை இலக்கியத்திற் சிறக்கவில்லை; வடவெழுத்துக்களை ஒருவி எழுதியே இவை தாக்குப் பிடித்திருக்கின்றன. ஆனாற் கல்வெட்டுக்களில் பல்லவர் காலத்திலிருந்து பிறமொழி எழுத்துக்கள் சிறிது சிறிதாக உயர்ந்து வந்திருக்கின்றன.

களப்பிரருக்குப் பின் வந்த பரத்துவாச கூட்டத்தைச் (கோத்திரத்தைச்) சேர்ந்த பல்லவர் தொடக்க காலங்களில் முன்னவரான நூற்றுவர் கன்னரைப் போலப் பாகதத்தைப் போற்றிப் பின் குத்தரை பெருமளவிற் பின்பற்றியதால் சங்கதத்தைத் தூக்கித் தலைமேற் பிடித்தனர். குத்தரின் தாக்கம் பல்லவர் மேற் பெரிதும் இருந்தது. பிற்காலப் பல்லவர் தம் கல்வெட்டுக்களில் மெய்கீர்த்தி பேசப்பட்ட தொடக்கப் பகுதிகளைச் சங்கதத்தில் எழுதி, பொதுமக்களுக்குப் புரியவேண்டிய பத்திகளைத் தமிழிலுமாக எழுதினர். சங்கதம் எழுதுவதற்காகவே கிரந்தம் என்ற எழுத்து முறையைத் தமிழெழுத்திலிருந்து தொடங்கினர். (கிரந்தத் தோற்றம் பற்றிய வரலாற்றாய்வு இன்னுஞ் செய்யப்படாதிருக்கிறது. ’தாத்தன் பெயரனைப் பெற்றான்’ என்பதற்கு மாறாய் ’பெயரனிலிருந்து தாத்தன் எழுந்தான்’ என்ற தலை கீழ்ப் பாடமும் வேதநெறியினராற் பரப்பப்படுகிறது.) தமிழெழுத்தில் கிரந்த எழுத்துக் கலப்பும் சொற்கலப்புஞ் செய்து மணிப்பவள நடைக்குக் கால்கோலினர்.

களப்பிரர் இராயலசீமையைத் தாக்கியதால் பல்லவர் இடம்பெயர்ந்து, தெற்கே நகர்ந்து அங்கிருந்த சோழரைத் துரத்தித் தொண்டை நாட்டிற்கு வந்து தங்கிப் போனார். மகேந்திர பல்லவன் காலம் வரை செயினமே பல்லவர் அரசில் ஓங்கியிருந்தது. அதனால் பாகதம் காஞ்சியிலிருந்தும் கோலோச்சியது. திருநாவுக்கரசர் முயற்சியால் பல்லவன் சிவநெறியிற் சேர்ந்த போது சிவநெறியும், வேதநெறியும் ஒன்றிற்கொன்று உறுதுணையாகி சங்கதத்தைத் தமிழுக்கு ஊன்றுகோலாக்கின. பின்னால் விண்ணவமும் இந்தக் கூட்டணிக்குள் சேர்ந்தது. சிவமும், விண்ணவமும் முன்னால் நிற்க, வேதநெறி பின்னால் உயரத்தில் நிற்க, சமண நெறிகள் கட்டகத் தீர்வாக (systematic solution) தமிழ்நாட்டிற் குத்திக் குலைக்கப்பட்டன.

இதன் விளைவால், தீர்த்தங்கரர் சிலைகளும், புத்தர் சிலைகளும் வயல்வெளிகளில் மண்ணுக்குள்ளும், குளங்களில் நீருக்குள்ளும் அடையத் தொடங்கின. அறப்பெயர்ச் சாத்தன் திருமேனி (முருக்கழிக் குசலர் = மற்கலிக் கோசாலர்) ஐயனாராகிக் தென்னாட்டின் குலக் கோயில்களுக்குள் குடிகொள்ளத் தொடங்கியது. [ஆசீவகம் அடியோடு அமிழ்ந்து உருமாற்றம் பெற்றது. ஐயனார் கோயில்களுக்கும் ஆசீவகத்திற்கும் இருக்கும் உறவை வேறொரு தொடரிற் பார்ப்போம். ஒரேயொரு செய்தி மட்டும் இங்கு சொல்கிறேன். பாண்டி நாட்டில் ஐயனாருக்கும் சிவனுக்கும் உறவு ஏற்றிச் சொல்லப்பட்டது. ஆண்டு தோறும் சிவராத்திரியில் ஐயனார் கோயில்கள் பெரும் விழவு கொள்கின்றன. சிவநெறியோடு ஒட்டுறவு கொண்டிருக்காவிட்டால் ஐயனார் சிலகளும் கூட மகாவீரர், புத்தர் சிலைகள் போல மண்ணுக்குள்ளும், நீருக்குள்ளும் அடைக்கலம் ஆகியிருக்கலாம்.]

தேவதானங்களும் (சிவன் கோயிலுக்குக் கொடுத்த நிலங்கள்), திருவிடையாட்டங்களும் (விண்ணவன் கோயிலுக்குக் கொடுத்தவை), பிரம்மதேயங்களும் (பார்ப்பனருக்குக் கொடுத்தவை) பெருகிப் பள்ளிச் சந்தங்கள் (மூன்று சமண நெறிகளுக்கும் கொடுத்தவை) அருகிப் போயின. இதே காலம் சற்று தள்ளி சம்பந்தர் முயற்சியில் கூன்பாண்டியன், நின்றசீர் நெடுமாறனாய் மாற்றம் பெற்று அரிகேசரி மாறவர்மனானான். “தமிழ் ஞானசம்பந்தர்” தமிழை உயர்த்தியதோடு, சங்கதத்தையும் அருகில் வைப்பதை ஏற்றுக் கொண்டுள்ளார். சமண மதங்கள் அழிய அழியப் பாகதம் தூக்கிக் கடாசப் பட்டது. வடமொழி என்ற பெயரின் பொருள் சிறிது சிறிதாய் தமிழகத்திற் மாறத் தொடங்கிச் சங்கதத்தையே அது குறிக்கத் தொடங்கிற்று. சங்கதத் தாக்கம் உறுதியாகப் பல்லவர் காலத்தின் நடுவிலேயே தமிழிற் தொடங்கியது.

கி.பி.400 வரையாண்ட களப்பிரர் காலத்தில் பாகதத் தாக்கம் சற்று கூடியது. கி.பி.400 இல் இருந்து கி.பி.800 வரையாண்ட பல்லவர் பாகதம், சங்கதம் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து தமிழை அடுத்த மொழியாகவே வைத்திருந்தனர். பல்லவர் காலத்திற்றான் சங்கதம் தமிழகத்தில் வலுத்த நிலை அடைந்தது. அவருக்குப் பின் வந்த பல அரசுகளும் சங்கதம் அந்த 400 ஆண்டுகளிற் பெற்ற முன்னுரிமையைப் பின்னால் மாற்றவேயில்லை.

பல்லவர் காலத்தில் ஒருங்கெழுந்த, தமிழை உயர்த்துவதாய்க் கொடிபிடித்து அரசு கட்டிய கடுங்கோன் வழிப் பாண்டியரும் பல்லவரோடு போட்டியாற் சங்கதத்திற்கு ஓரளவு முன்னுரிமை கொடுத்தேயிருந்தார். பல்லவருக்குப் பின்வந்த பேரரசுச் சோழர் தம் அரச நடவடிக்கைகளிற் தமிழைப் பெரிதும் பயன்படுத்தியும், வேதநெறி பிணைந்த சிவநெறி கடைப்பிடித்ததாற் சங்கதத்திற்குக் கொடுத்த முதன்மையைக் குறைக்கவேயிவில்லை. இதே பழக்கம் பேரரசுச் சோழர் குடியை முற்றிலும் குலைத்த பேரரசுப் பாண்டியர் காலத்திலும் தொடர்ந்தது.

இதன் பின் பங்காளிச் சண்டையால் பேரரசுப் பாண்டியர் அரசு சீரழிய, அதற்கு வாகாய் வடக்கேயிருந்து வந்த முசுலீம் படையெடுப்புக்களால் தமிழகம் தத்தளித்த காலத்தில் பாரசீகம், துருக்கி மொழிகளின் ஊடாட்டம் அங்குமிங்குமாய் எழுந்தது.

மூவேந்தர், களப்பிரர், பல்லவர் என்ற வரிசையில் தமிழ், பாகதம், சங்கத மொழிகளின் பங்களிப்பைப் பார்க்கும் போது, சங்க இலக்கியங்களுக்குள் விழுந்து சங்கத எச்சங்களைத் தேடாது, பாகத எச்சங்களைத் தேடுவது ஒருவேளை பலன் கொடுக்கலாம். சங்க இலக்கியங்களைப் படித்தாலே, (சேர, சோழ, பாண்டிய நாடுகள், ஈழம், மொழிபெயர் தேயம் போன்ற) வெவ்வேறு வட்டாரப் பேச்சுக்கள் எழுத்துத் தமிழோடு விரவி அதனுள் ஓரோ வழி ஊடுறுவிப் பதிவு செய்யப்பட்டதும், சிலவற்றில் பாகதச் சொற்கள் ஊடுறுவிய நடையும், பலவற்றில் பாகதமில்லாத் தனித்த நடையுமாய் தெற்றெனக் காண்பது புலப்படும். சிலம்பில் மிகக் குறுகிய இடங்களும், மணிமேகலையிற் பெருகிய இடங்களும், பாகதம் ஊடுறுவிய நடைக்குச் சான்றுகளாகும்.

பல்லவர் வலிகுன்றிய காலத்தில் அவருக்குத் துணைசெய்வதாய் உள்நுழைந்த பேரரசுச் சோழர், பின்னாற் பாண்டியரோடு போர்புரிந்து சோழர் அரசை மீள உருவாக்கினர். முடிவில் பல்லவரையும் தமக்குக் கீழ் கொண்டு வந்தனர். உறையூர், புகார் போன்றவை சீரழிந்த காரணத்தால் முத்தரையர் நகரான தஞ்சை சோழரின் புதுத் தலைநகராயிற்று; [முத்தரையருக்கும் களப்பிரருக்கும் இருந்த உறவுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.] பழையாறை தங்குமிடம் ஆயிற்று. பல்லவரையே போல்மமாக்கி, ”சங்கத மெய்கீர்த்தி, தமிழ் உள்ளடக்கம்” என்ற கல்வெட்டுப் பழக்கம் சோழர் அரசிலும் தொடர்ந்தது. தமிழரான சோழர், பல்லவரைப் போன்று சங்கத முன்மைக்கு ஏன் இடங் கொடுத்தார்? - என்பது விளங்காத புதிர். கணக்கற்ற கல்வெட்டுக்கள் சங்கதப் பெருமையை முன்னிறுத்தியே எழுந்துள்ளன. வேதநேறி கலந்த சிவநெறி அவர்களை அப்படியாக்கியது போலும்.

சோழனுக்கும் மீறித் தமிழை உயர்த்தி வைத்து எழுதப்பட்டது கம்பன் காவியமாகும். அது அரசவையில் எழுந்த காவியமல்ல. ஒரு குறுநில மன்னன் கூட அல்லாத பெருநிதிக் கிழவனான சடையப்ப வள்ளல் புரந்த காவியம். சோழன் அதன் ஆக்கத்தில் நுழைந்திருந்தால் மெய்கீர்த்தி ஏதேனும் அங்கு தேவைப்பட்டிருக்கும். சோழரின் ஆட்சி முடிவில் குலோத்துங்கன் காலத்தில் பெரியபுராணம் எழுந்தது.

சோழன் மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பின் கி.பி.1216-1238 இல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் முடிசூடினான். பேரரசுச் சோழர் மொழிநடையிற் செய்ததையே பேரரசுப் பாண்டியனுஞ் செய்தான். கல்வெட்டுக்களில் பல்லவர் தொடங்கிய பழக்கம் இடைவிடாது தொடர்ந்தது. சங்கதத்தின் உச்சம் பேரரசுப் பாண்டியர் காலத்தும் குறையவேயில்லை. வேத நெறியும், சிவ நெறியும் பாண்டியரிடத்தும் கைகோத்து அரசோச்சின.

1310 இல் முதலாம் மாறவர்மன் குலசேகரனுக்கு அப்புறம் பாண்டியரின் இரண்டு இளவரசரான வீர பாண்டியனுக்கும், சுந்தர பாண்டியனுக்கும் மோதல் முற்றியது. பங்காளிச் சண்டையில் பாண்டியர் முற்றிலும் அழிந்து, தென்காசிப் பக்கம் ஒடுங்கிப் போயினர். மதுரை நகரம் கம்பண உடையாருக்கும், பின் மாலிக்காபூருக்கும், அதன் தொடர்ச்சியாய் முசுலீம் படையாளருக்கும் இரையாகியது. அதன் முடிவில் விசய நகரத்து அரசியல் மேலாண்மையும், நாயக்கர் ஆட்சியும் ஏற்பட்டன. பாண்டியர் முற்றிலும் அழிந்து போனார்.

இதுநாள் வரை பாகதத்திற்கும், சங்கதத்திற்கும் இடங் கொடுத்து தடுமாறிக் கொண்டிருந்த தமிழகத்தில் அரபி, தெலுங்கு, சங்கதம் என்று வேற்றுமொழிகள் பேரரசுப் பாண்டியருக்குப்புறம் ஆட்சி கொண்டன. தமிழ் முற்றிலும் சீரழிந்தது. இந்தக் காலகட்டத்திற்றான் மணிப்பவள நடை விரவிய நாலாயிரப்பனுவல் விளக்கங்களும், சங்கதம் சிதறிய அருணகிரிநாதரின் திருப்புகழும் எழுந்தன.

இந்தக் காலத்தைத் தொடர்ந்து மேலையரின் குடியேற்றக் காலம் தொடங்கியது. போர்த்துக்கேசியம், டேனிசு, டச்சு, பிரஞ்சு என்று போய், முடிவில் ஆங்கிலேயரின் அதிகாரம் ஆட்சிகொள்ளத் தொடங்கிற்று. மேலை மொழிகளும் அரங்கேறத் தொடங்கின.

அன்புடன்,
இராம.கி.

Sunday, May 05, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 3

சங்ககாலத்தும் இக்காலத்தும் இடையே வேறுபடும் தொடர்ச்செறிவு, சொற்செறிவு, காட்சிச்செறிவு, உரைத்தொடர்ச்சி பற்றிப் பேசினோம். இவைதவிர, ஆட்சிமொழி அதிகாரம், பொருளியற் தேவை, சாதித் தாழ்ச்சி/உயர்ச்சி, குமுக ஒப்புதல், படிய நோக்கு (fashionable view), சமய மாற்றம், மெய்யியற் சிந்தனை, மாற்றாரோடு போர் போன்ற காரணங்களால் வேற்று மொழி கலந்து, தமிழ்நடை வேறுபடலாம். சொந்த மரபுகளை எந்த அளவு பேணுகிறோம் என்பதைப் பொறுத்தே வரலாற்றில் இவ்வேறுபாடுகள் நிலைக்கும் அன்றேல் மறையும்.

[”சொந்தமொழி இனிப் பயன்படாது” என்று இனப் பெருமிதம் குலைத்த பின்னால், கால காலத்திற்கும் இன்னொருவருக்கு அடிமையாக என்ன தடை? பெரும்பாலான அடிமைகளை மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஒன்றித்த அமெரிக்க நாடுகளின் (United States of America) தெற்கு மாநிலங்களுக்குக் கொண்டு சென்ற போது அவர்களின் ”ஒலோவ் (wolof)” மொழியைக் கலப்பாலும் தண்டனையாலும் ஒழித்தே, வெள்ளையர் அடிமைக் குமுகத்தை ஏற்படுத்தினர். 4,5 தலைமுறையில், முசுலீம்களாயும், நாட்டு வழிபாட்டாளருமாயிருந்த கருப்பர் எல்லோரும் ஆங்கிலம் பேசத் தெரிந்த கிறித்துவராயினர். தோட்டக்கூலிகளாய் கரிபியன் தீவுகளுக்கும், மொரிசியசிற்கும், பியூஜிக்கும், தென்னாப்பிரிக்காவிற்கும் போன மக்கள் தமிழைக் காப்பற்ற முடிந்ததா, என்ன? உலகெங்கும் ஆளும் இனம் ஆளப்படும் இனத்தை இப்படித்தான் ஒடுக்குகிறது. ஈழத் தமிழர் சிங்களம் பேசும் புத்தராய் மாற எத்தனை காலமோ ????]

சங்ககாலத் தமிழ்நிலை அறியச் சற்று வரலாற்றுள் போகவேண்டும். வரலாற்றுத் தொடக்கம் பெருமிதம் வாய்த்தது தான். [வரலாற்றுப் பார்வை ஒரு வறட்டுத்தனமாய், ”எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ்” சொல்லிக் கொடுப்பதிற் தொடர்பற்றதாய்ப் பலருக்குத் தெரியலாம். ”பொறுமையோடு படியுங்கள்” என்றே சொல்லமுடியும். மொழியரசியல் புரிய வேண்டுமெனில், வரலாறு தெரியாமல் முடியாது.] இற்றைத் தமிழாய்வின் படி, சங்க காலத்தை ”கி.மு.520 தொடங்கி கி.பி.220 வரை” இருந்ததாகவே கொள்ள வேண்டும். [”கி.மு.300 தொடங்கி கி.பி.300 வரை” யென்று வழமையாய்ச் சங்ககாலப் பருவஞ் சொல்வது ”பொருந்தல்” தொல்லாய்விற்குப் பின் முடியாது. சிந்துப் படவெழுத்தைத் தவிர்ப்பின், தமிழகம், ஈழத்திலிருந்து தமிழியாய் வெளிக் கிளம்பியதே முதலிலெழுந்த இந்திய எழுத்தாகும். இந்தத் தொல்லியற் கண்டுபிடிப்பை மரபார்ந்த இந்திய இலக்கியரும், வரலாற்று ஆசிரியரும், மொழியியல் வல்லுநரும் இன்னும் உள்வாங்கத் தயங்குகிறார். தம் தெரிவுகளில் வலிந்து தொங்கி, ஆய்வுகளைத் தடம்மாற்ற மறுக்கிறார். “ஈயடிச்சான் படியாய்” அசோகன் பிராமி ”ததாஸ்து” என்றே சொல்லுகிறார்.]

சங்க காலத்தில் மூவேந்தர் நாட்டுத் தொகுதியும், நூற்றுவர் கன்னரின் தக்கணமும், கங்கைப்புறத்து மகதமும் சம கால அரசுகளாகும். மூவேந்தர் நாடுகள் தமிழகத்துட் போட்டியிட்டாலும், காரவேலன் கல்வெட்டின் படி “திராமிர சங்காத்தம்” ஒன்றைத் தம்முள் ஏற்படுத்தி, சேரநாடு, சோழநாட்டிற்கு வடக்கே மொழிபெயர் தேயத்தில் நிலைப்படை நிறுத்தி, தம் பொதுநலனைக் காப்பாற்றின. கிமு.230 தொடங்கி கி.பி. 220 வரை, மொழிபெயர் தேயத்தில் நூற்றுவர் கன்னரே (சாதவா கன்னரே) ”படித்தானத்தை”த் தலைநகராக்கி அரசாண்டனர்.(படித்தானம்> படித்தான்> Paithan; படித்துறை என்று பொருள். இற்றை ஔரங்காபாத், அசந்தா, எல்லோரா அருகிலிருந்த கோதாவரிக் கரை நகரம்; தமிழர் வரலாற்றோடு தொடர்புள்ளது). சங்கப் பாடல்களிற் பாதிக்கு மேல் பாலைத்திணையே ஆதலால், பிழைப்பு நாடித் தக்கணம் போனது உண்மைதான். (இராயலசீமையும் அதன் வடக்குமான நூற்றுவர் கன்னர் பகுதி வழியாகத் தான் செல்வந் தேடிப் போயிருக்கிறார்.) இன்றைக்கும் வடக்கே போகிறோமே? தக்கண அரசின் இற்றை எச்சங்கள் தாம் தெலுங்கு, கன்னட, மராட்டிய மொழிகளாகும்.

இதே கால நிலையிலும், சற்று முன்னும், மகதத்தில் வரலாற்றரசர் ஆட்சி கி.மு.522க்கு அருகில் பிம்பிசாரனிற் தொடங்கி, அசாதசத்து, உதயபத்ரன் என்றாகி, அவருக்குப் பின் குழம்பியது. கி.மு.413 தொடங்கி கி.மு.345 வரை சிசுநாகரும், கி.மு.345 தொடங்கி கி.மு.321 வரை நந்தரும், கி.மு.321 தொடங்கி கி.மு.185 வரை மோரியரும், கி.மு.185 தொடங்கி கி.மு. 75 வரை சுங்கரும், கி.மு. 75 தொடங்கி கி.மு. 30 வரை கனகரும் (கண்வர் என்னும் வடமொழிப் பெயர் தமிழர் வாயில் கணவர்> கனவர்> கனகர் ஆயிற்று.) மகதத்தை ஆண்டனர். கி.மு.30 இல் நூற்றுவர் கன்னர் கனகரை வீழ்த்தி, கி.பி.220 வரை மகதம் ஆண்டனர். மகதம் என்பது அக்காலத்தில் "மத்திய தேசம்” என்றுஞ் சொல்லப்பட்டது.

எப்படிப் பார்த்தாலும், ”தமிழகம், தக்கணம், மகதம்” மூன்றும் சங்க காலத்தில் அரச கருமங்களில் ஒன்றையொன்று ஊடுறுவிய அரசுகளாகும். இவ்வூடுகை புரிந்தாற்றான் அக்கால இந்திய வரலாறு விளங்கும். இதில் எவ்வரசைக் குறைத்து மதித்தாலும் வரலாறு புரியாது. தமிழ் மூவேந்தரைப் பின் தள்ளி மற்றவரை மட்டும் பேசுவது துணைக்கண்ட வரலாற்றாசிரியருக்கு வாடிக்கையாகும். தமிழ் நாட்டு வரலாற்றாசிரியரும் இதற்கு ஊதுகுழலானார். எந்தப் பழம் இந்திய வரலாற்று நூலிலும் ”சங்ககாலத் தமிழரசர் அந்தரத்திற் தொங்கியதாகவே குறிப்பார்”. சங்க காலச் சம அரசுகள் எவையென்றும் சொல்லார். இந்திய வரலாற்றிற் தமிழர் நாடு தனித்துங் கிடையாது. தமிழரின்றி தக்காணமும், மகதமும் அரசியல் பொருளியலில் நகரவுமில்லை.

தமிழகத்து அதியர் தலைநகரமாம் தகடூரில் (இற்றைத் தருமபுரி) இருந்து கருநாடக ஐம்பொழில் வழியாகப் படித்தானம் போய், அசந்தா, எல்லோரா வழியாக வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் (Gond country) பகுதியில் கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா (Bhilsa) வந்து, நேர்வடக்கே திரும்பி, தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் கோசாம்பி (Kosam) வந்து, அயோத்தி என்னும் சாகேதம் (Fyzaabaad) வந்து, முடிவில் சாவத்தியிற் சேர்வதே தக்கணப் பாதையாகும். இது தான் தமிழகத்திற்கும், மகதத்திற்கும் இடை தக்கண வழியிருந்த ஊடாட்டப் பாதையாகும். தக்கணப் பாதை போல் உத்தரப் பாதை ஒன்றும் இருந்தது அது “உத்தர தேசம்” என்னும் வடநாட்டையும் மத்திய தேசம் என்னும் நடுநாட்டையும் இணைத்தது.

தக்கணப் பாதை மூலமே தமிழர் வணிகச் சாத்துக்களும், சரக்குப் பரிமாற்றங்களும், செல்வ நகர்ச்சிகளும், மொழி ஊடாட்டங்களும் நடந்தன. குவலாள புரத்துப் (Kolar) பொன்னையும், கொங்கு அருமணிகளையும், சோழத் துவர்களையும் (பவழங்கள்), பாண்டிய நித்திலங்களையும் (நெத்தில்>நெதி>நிதி என்னும் முத்து) மறுத்துத் தக்கணப்பாதையைப் புரிய முடியாது. மதிப்புக் கூடிப் பருமன் சிறுத்த பரிமாற்றப் பண்டங்கள் (exchange goods) இவைதானே? பொருளாதாரங் கட்டும் அரசுகள் இவற்றைத் தவிர்த்துத் தம் கட்டுமானங்களை எழுப்புமா? தமிழ் வணிகமின்றி மகதமும், தக்கணமும் எழுமா? அதே போல செம்பு வடக்கிருந்து தெற்கே நகர்ந்திருக்கிறது. கங்கையாற்றுப் பண்டங்களும், கோதாவரி, கன்னை (கிருட்டிணை) யாறுகளின் விளைப்பும் தமிழகத்திற்கு வந்திருக்கின்றன. குடிலரின் அருத்த சாற்றம் படித்தால், மகதம், தக்கணம், தமிழகம் ஆகியவற்றிற்கு இடைநடந்த பொருளியற் பரிமாற்றங்கள் விளங்கும். சங்க காலத்தின் உவரி மதிப்பு (surplus value) எப்படி எழுந்தது? - என்று வரலாற்றாசிரியர் ஆழ ஆய்ந்தால் ஊடாட்டம் இன்னும் புலப்படும். [சங்க கால வேந்துகளை நிலவுடைமையின் தொடக்க கட்டமாய்ப் பாராது, பர்ட்டன் சுடெய்ன் (Burton Stein) பார்த்தது போலவே இனக்குழு சார்ந்த துண்டக அரசுகளாய் (segmentary state) பார்த்தால் எப்படி விளங்கும்?]

இற்றைத் தூத்துக்குடிக்கருகிற் கொற்கையிற் சங்கு அந்தக்காலம் கிடைத்தது; சங்கு விளையா வங்கத்தில் சங்கறுக்கும் வளைத்தொழில் இன்றும் மீந்து நிற்கிறது. அதே காலத்தில் கொற்கையில் முத்துக் கிடைத்தது; தக்கணம் சார்ந்த ஐதராபாதில் முத்து மாலைகள் இன்றும் நுணுகிச் சிறந்து செய்யப்படுகின்றன. ஆப்கன் lapis lazuli சேரர் நாட்டுக் கொடுமணத்தில் பட்டை தீட்டப்பட்டது. உப்பு விளைப்பு தமிழகத்திலும், கூர்ச்சரத்திலும் இருந்து மகதம் போனதை அர்த்த சாற்றமும், சங்க இலக்கியங்களும் பதிவு செய்கின்றன. தமிழகம், தக்கணம், மகதம் என்ற மூன்றிற்கும் இடையே நடந்த பொருளியல் ஊடாட்டம் இன்னும் சரியாகப் படிக்கப் படவில்லை. மூன்று அரசுகளிலும் பனை விளைந்து, பனையோலைகள் எழுதப் பயன்பட்டன. எழுத்தாவண நுட்பியல் மூவரசுகளிலும் ஒன்றேபோல் இருந்தது.

நம் வேந்தர் வடக்கே படையெடுத்துப் போயினர். ”பகைப்புறத்து மகதர்” வடக்கிருந்து படையெடுத்து வந்தார். தக்கண அரசு தொடக்கத்தில் நம்பக்கம் சாய்ந்து, பின் மகதத்தை முற்றிலுஞ் சூறையாடியது. பல்வேறு சமய நெறிகள் மூன்று அரசுகளுக்கும் நடுவே ஊடாடின. சமயச் சிந்தனையாளர்கள் மூன்று அரசுகளிலும் விரிந்து பரவியிருக்கிறார்கள். ”நாவலோ நாவல்” என்ற அறைகூவல் தக்கணப்பாதையெங்கும் ஒலித்திருக்கிறது. [உலகாய்தம் கற்கப் பள்ளிகளை நாடி அறிவுய்திகள் தெற்கே வந்திருக்கிறார். வேதநெறி இந்திய வடமேற்கிருந்து இங்கு நுழைந்தது. வேத மறுப்பு நெறியான ”அற்றுவிகம்” என்னும் ஆசீவகம் தெற்கே எழுந்ததோ என்று அண்மையாய்வால் ஐயுறுகிறோம். வேத மறுப்புச் சமணங்களான செயினமும், புத்தமும் மகதத்தில் இருந்து இங்கு நுழைந்தன. சாங்கியம், விதப்பியம் (விசேஷியம்), ஓகம், ஞாயம் (நியாயம்) என்ற பல்வேறு இந்திய மெய்யியல்களின் ஊடாட்டம் தெற்கிலும் வடக்கிலும் ஆழ இருந்தது. வெளிநாட்டிருந்து உள்நுழைந்த யவனர், சோனகர் ஊடாட்டமும் தமிழரிடம் இருந்தது.

சங்ககால ஆட்சிமொழியாய் தமிழகத்திற் தென்மொழியே இருந்தது. 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பார்த்தால், முதல் 740/750 ஆண்டுகளில் சங்க கால மூவேந்தரும், குறுநில மன்னரும் தமிழையே போற்றியேயிருந்தார். அதற்காக மாற்று மொழிகளை ஒடுக்கினார் என்ற பொருளில்லை. நம்மூர் வணிகரும், வெளிநாட்டு வணிகரும் நில வழியிலும், கடல் வழியிலும் செய்த ”பண்டமாற்றுக்கள், வணிகம், கொடுக்கல் வாங்கலால்” விளிம்பு நிலையிற் பாகதம் அங்குமிங்கும் ஊடுறுவித்தான் இருந்தது. தமிழர் பாகதம் அறிந்ததும், மகதர் தமிழ் அறிந்து ஊடுறுவியதும் இயல்பான செயல்களே.

இதேபோது, மகதத்தில் பாகதமே ஆட்சிமொழியானது. (மகதத்தில் மோரியருக்கு அடுத்தாண்ட பார்ப்பனச் சுங்கரும், கனகரும் கூட பாகதமே போற்றி வந்தனர்.) அந்தக் காலத்தில் வடமொழி எனிற் பாகதமாகவே புரியப்பட்டது. இப்போது இந்தியவியலார் (Indologists) விடாது ஓதும் சங்கதமல்ல. பாகத முன்மையைக் குறைத்துச் சங்கதம் உயர்த்தும் வேதநெறியாளர் இந்திய வரலாற்றை வேண்டுமெனக் குழப்புகிறார். பாகதமும், தமிழும் ஒன்றையொன்று ஊடியே கி.மு.500 களிலிருந்து கி.பி.500 வரை இந்திய நாகரிகத்தை உருவாக்கின. இக்காலத்திற் பின்னெழுந்த சங்கதத் தாக்கத்தால் இது புரிய விடாது செய்யப்படுகின்றது. ”அகண்ட பாரதம்” பேசும் அறிவாளிகள் பாகத முன்மையைக் குறைத்தே சொல்கிறார்.

கி.மு.500 களிற் சங்கத இருப்பை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அதேபொழுது அது இந்தியாவின் வடமேற்கில் தக்கசீலத்திற்குச் சிறிது கிழக்குவரை பரவிய வட்டார மொழியாகும். இன்று பரப்பப் படுவது போல், படித்தோர் எல்லோரும் இந்தியாவெங்கணும் புழங்கிய அறிவார்ந்த மொழியல்ல. சங்ககாலத்தில் தமிழிற் பாகதம் சற்று தெரியக் காணவும், சங்கதம் நுணுகி மறைந்தும் ஊடுறுவியிருக்கின்றன. இதே போலத் பாகதம், சங்கதத்தில் தமிழும் ஊடுறுவியிருக்கிறது. இவ்வூடுறுவல்களின் ஆய்வு இன்னும் முடியவில்லை. ”கடன்கொடுத்தே பழகியது சங்கதம்” என்று சிலர் புகல்வது சமக்காளத்தில் வடிகட்டிய பொய். சங்கதம் என்றாற் சான்றே தராது முன்னுரைப்பதும், பாகதம் என்றால் மூடி மறைப்பதும், தமிழ் என்றால் சரமாரிக்குக் கேள்வி கேட்பதுமாய் இந்தியவியலார் எத்தனை நாட்களுக்கு ஆய்வு நடத்துவாரோ, தெரியாது.

சங்கத இலக்கணமான பாணினியின் எட்டதிகாரம் (Ashtadyaayi) சிசுநாகர் காலத்திலோ, நந்தர் காலத்திலோ, மகதத்திற்கு வெளியே இற்றை இலாகூருக்கு அருகில் வடதேசத்தில் எழுதப் பட்டது. எட்டதிகாரத்திற் ”சங்கதம்” என்ற பெயர் கூட அந்த மொழிக்குக் கிடையாது. தன்னைச் சுற்றிய மொழியைச் ”சந்தசு” என்றே பாணினி அழைத்திருக்கிறார். ”சங்கதம்” என்ற பெயர் எப்பொழுது அதற்கெழுந்தது?” என்று சரியாய்ச் சொல்ல முடியவில்லை. [பிம்பிசாரன் காலத்திற்குச் சற்று முன்னம் சங்கத மெய்யியற் சிந்தனைகள் ஒரு சில “உபநிடதங்களாய்” எழுந்திருக்கின்றன. மற்ற உபநிடதங்களில் பெரும்பாலனவை ஆசீவகம், செயினம், புத்தம் போன்ற வேதமறுப்பு நெறிகளின் சமகாலத்திலேயே எழுந்திருக்கின்றன.]

பாணினிக்கு விரிவுரை (மகாபாஷ்யம்) எழுதிய உச்செயினியைச் சேர்ந்த பதஞ்சலியின் காலம் சுங்கர் காலமாகும். (செல்டன் போலாக் - Sheldon Pollack - எழுதிய நூலைப் படித்தால் ”சங்கதத்தில் எழுந்த முதற்காப்பியமான வான்மீகி இராமாயணம் சுங்கர் காலத்திற்றான் எழுந்தது போற் தோற்றுகிறது”. ஆனாலும் அக்கால அரசவைகளில் இராமாயணம் சலசலப்பை ஏற்படுத்தியதாய்த் தெரியவில்லை.) கி.பி.150 இல் சத்ரப அரசரில் ஒருவரான உருத்திரதாமன் ஆட்சியிற்றான், உச்செயினிக்கு அருகில் ”மத்திய தேசத்தில்” சங்கதம் ஆட்சி மொழியானது. வெகுநாட்கள் கழித்து இந்தியாவிலெழுந்த சங்கதத் தாக்கம் உயர்ந்தது உச்செயினிக்கு அருகில் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் பாணினிக்கு முந்தியவர் என்றே பல தமிழறிஞர் சொல்கிறார்; ஆனால் இந்தியவியலார் பலருஞ் சட்டை செய்யவில்லை. இப்புலனத்தில் இரு வேறு கருத்தாளர் அவரவர் தொனியிலே பேசுகிறார். இப்பொழுது மேலையரும் இந்தியவியலாரும் சேர்ந்து இன்னொரு புரளி கிளப்புகிறார். தொல்காப்பியம் ஒருவர் செய்ததில்லையாம். ”எழுத்து, சொல், பொருள்” மூன்றும் வெவ்வேறு ஆசிரியரால் வெவ்வேறு காலங்களிற் செய்யப்பட்டதாம். இதற்கு மறுப்பாகத் தமிழறிஞர் யாரும் நூலெழுதியதாகத் தெரியவில்லை. இன்னொரு குழப்பமும் நடக்கிறது. நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து தமிழறிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியத்திற்கு முந்தியது என்பார். மாற்றுக் கருத்தார் சங்க இலக்கியத்திற்குப் பிந்தியதென்பார். வெளிநாட்டு அறிஞர் 5% தமிழறிஞரையே எடுத்துக் காட்டிப் பேசுவார். மொத்தத்தில் இந்தக் கேள்வியில் அடிப்படை முரண்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டே, அரசியற் குசும்பர் பல்வேறு முனைகளில் வேலை செய்கிறார்.

மகதத்திற்கும், தமிழகத்திற்கும் இடையிற் தக்கண அரசில் தமிழ், பாகதம் இரண்டுமே ஆட்சி மொழிகளாய் இருந்தன. அவர் நாணயங்களின் இருபுறமும் தமிழ், பாகத முத்திரைகளே இருந்தன. தக்கண அரசன் ஆலனின் காலத்திலே சங்க நூலைப் போலவே கட்டுமானங் கொண்ட “காதா சத்தசதி (எழுநூற்றுப் பாட்டு)” என்ற அகத்திணைத் தொகுப்புநூல் எழுந்தது. குணாதரின் பெருங்கதையும் (Gunadhya's Brihat Katha) கன்னர் அரசிலேயே எழுந்தது. [எத்தனை பாகத நூல்கள் பிற்காலத்திற் சங்கதத்திற்கு மொழிமாற்றம் பெற்று, மூலந் தொலைக்கப் பட்டன என்று தெரியாது.] “மொழி பெயர் தேயம்” பற்றிக் குறிக்கும் மாமுலனாரின் சங்கப் பாட்டுகள் அற்றைத் தக்கண அரசியல் நிலையை நமக்கு நன்கு உணர்த்தும்.

தமிழை வைத்து கோதாவரிக் கரை, விந்தியமலை வரைக்கும் கூட எளிதில் நகர முடிந்தது போலும். அதற்கப்பால் மகதம் போக பாகதம் (அல்லது பாகதக் கிளைமொழிகளான சூரசேனி, அர்த்த மாகதி, பாலி என ஏதோவொன்று) தெரிவது எளிதாக இருந்திருக்கும். (அர்த்த மாகதி என்ற கிளைமொழி செயினருக்கும், பாலி என்ற கிளைமொழி புத்தருக்கும் நெருக்கமானது. பின்னால் திகம்பரர், சுவேதாம்பரர் என்று வடநாட்டிற் செயினர் பிரிந்த போது சூரசேனி திகம்பரருக்கும், மகாராட்டிரி சுவேதாம்பரருக்கும் உகப்பானது. புத்தர், செயினர் எல்லோருக்கும் பொது வழக்கான பாகதம் சங்கதத் தாக்கத்தால் கொஞ்சங் கொஞ்சமாய்க் குன்றியது. இன்றைக்குப் பாகதம் முற்றுங் குலைந்து கிளைமொழிகளே நிலைத்தன. ”அதே நிலையைத் தமிழ் அடையவேண்டும்” என்பதே அரசியற் குசும்பரின் விழைவாகும். ”எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் வெவ்வேறு மொழிகள்” என்று அரற்றுவது அதற்குத்தான்.)

மூவேந்தரின் நிலைப்படையும் மொழிபெயர் தேயத்தில் இருந்து தமிழ் வணிகரைக் காத்து வந்தது புத்தரும், மகாவீரரும் தமிழைக் கற்றது புத்த நூல்களிலும், செயின நூல்களிலும் பதிவு ஆகிருக்கிறது. பாகதத் தாக்கம் சங்க நூல்களிலும் இருந்திருக்கிறது. [இறைவனைக் குறிக்கும் ”பகவன்” என்ற பாகதச்சொல் நம் குறளிற் பதிவாகியிருக்கிறது.] தமிழுக்கும், பாகதத்திற்கும் பொதுவான சொற்கள் பலவும் இருந்திருக்கின்றன. அவற்றின் வேர் தமிழா, பாகதமா என்பதில் இன்னும் ஆய்வு தேவை. இளைய தமிழறிஞரிற் குறிப்பிட்ட சிலராவது பாகதம், சங்கதம் படிப்பது தேவையானவொன்று. ஆனால் செய்யமாட்டேம் என்கிறார். [இது ஏதோ சங்கதம், பாகதத்தைத் தூக்கிப் பிடிப்பது என்ற பொருளல்ல. தமிழைப் பற்றி ஆய இந்தப் பிறமொழி அறிவு தேவை.] வெறுமே ஆங்கிலம் வைத்து எல்லாவற்றையும் செய்துவிட இளையோர் முயல்கிறார். அது கடினம். [ஆய்வுலகக் குழறுபடிகள் தமிழைப் பெரிதும் பாதிக்கின்றன.]

இது தான் சங்க காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்திற் தமிழின் நிலை. தமிழர் நாட்டில் ஆட்சிமொழியாக, தமிழர் தமக்குள் பண்பாட்டு மொழியாக, உயிர்ப்புள்ள மொழியாக, மாற்றோர் படிக்க முன்வந்த மொழியாக, நாவலந்தீவு வணிகத்திற் பெரிதும் பயன்பட்ட மொழியாக, கல்வி மொழியாக, அறிவர் சிந்தனை நிறைந்த மொழியாக அது இருந்தது. அதே பொழுது தமிழுள் பிறமொழிக் கலப்பு அங்குமிங்கும் நுணுகியது. அந்த நுணுகிலும் பாகதம் சற்று தூக்கி இருந்திருக்கலாம். (தமிழ் - பாகத ஊடாட்டம் பற்றி வேறொரு பொழுதிற் விரிவாய்ப் பேசுவேன்.)

அன்புடன்,
இராம.கி

Thursday, May 02, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 2

அக்கால எழுத்தை அடையாளங் காண ஓலைச்சுவடிகளும், கல்வெட்டுக்களும் நமக்குக் கிடைத்தன / கிடைக்கின்றன. 200 ஆண்டுகளுக்கு முந்திய அச்சுநூல்கள் கூட உலகப் பரண்களிற் சல்லடை போட்டாற் கிடைக்கின்றன. இக்கால எழுத்துக்களோடு சுவடியெழுத்துக்களை ஒப்பிட்டறியத் தன்மயப் புரிதல்கள் போக, புறமயக் கணக்கீடுகளும், அளவீடுகளும் வந்துவிட்டன. நண்பர் நாக.இளங்கோவன் போன்றோர் அறிதியியல் (informatics) உத்திகளைப் பயன்படுத்தி பழம் இலக்கிய ஆவணங்களின் நடை, கைச்சாத்து போன்றவற்றை அலசியெடுக்க விதப்பு நிரலிகளை விளங்க எழுதுகிறார். ஒழுங்கின்மையைக் குறிக்கும் சாணன் உட்திரிப்பு (Shannon's entropy) போன்ற மடை அளவீடுகளால் (bits measurements) தமிழ் நடையைத் துல்லியமாய் அளக்க முடியும். [சாணன் உட்திரிப்பைப் பயன்படுத்தி ஒரு அளவீட்டு எண்ணுதிக் (quantitative numerical) கட்டுரை தமிழில் வந்திருக்கிறதா? :-)))))]

எதிர்காலத்தில் ”சங்க இலக்கியச் சொல்லாடலில் நிரவலாய் எத்துணை விழுக்காடு வடசொல் இருந்தது? வள்ளுவர் நடையிருந்து எந்தளவு நம் நடை விலகியது? சிலப்பதிகாரத்தில் ஏதெல்லாம் இடைச் செருகல்? மாணிக்கவாசகர் நடைக் கைச்சாத்து (style signature) என்ன? கம்பன் வான்மீகிக்கு எத்துணை கடன் பட்டிருந்தான்? பாரதி மறுமலர்ச்சிப் பாவலன் என்று ஏன் சொல்லுகிறோம்? தனித்தமிழ் இயக்கக் காலத்தில் நடைக் கலப்பு எத்தனை? அதற்கப்புறம் நடை எப்படி மாறியது?” - இத்தனை கேள்விகளுக்கும் எண்ணுதியாய் (numerical) விடை காண ஒருவேளை முடியலாம். மொத்தத்தில் எதிர்காலம் ஒளிமிகுந்தேயுள்ளது. ஆனால் எந்த நடைமாற்றமும், தானே நடந்திருக்குமோ? குமுக மாற்றங்கள், அரசியற் பொருளியற் செயற்பாடுகள், சமயப் பொருதல்கள், வேற்று மொழித் தொடர்புகள், ஆட்சிமொழி ஆணைகள், ஆணத்தி நடவடிக்கைகள் என ஏதோ காரணம் பின் இருக்க வேண்டுமே?

முதலிற் சங்க எழுத்தைப் பார்ப்போம். [“வெவ்வேறு மொழிகள்” என்போர் அதையே எடுத்துக்காட்டாக்குகிறார்கள்.] பலராலும் சங்கத் தமிழைப் படிக்க இயலாதாம். அது வேறு தமிழாம்; பழந்தமிழுக்குப் பாடைகட்டிச் சங்கூதி வெகு நாட்களாயிற்றாம். இவர் கணக்கில் இற்றை மொழியின் அகவை 100 கூட ஆகாததாம்; இக்கருத்தைக் கண்டு வியந்து போகிறோம்.

”நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே”

என்ற ஔவையார் கூற்றில் (புறம் 187), ”அவல், ஆடவர்” விளங்கின், இன்றும் இப்பாடல் புரிவது தானே? - என்றாலும் ஏற்கும் பாங்கில் ”வேற்றுமொழி” என வாதிப்போர் இல்லை.

வெறும் 17 ஆண்டுகளுக்கு முந்திய பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கீழ்வரும் நூறாசிரியப் பாட்டுக் (30) கூடத் தான் புறநானூற்றைப் போல் இருக்கிறது.

ஆயுங் காலை நாண் மிகவுடைத்தே!
ஈனாக் கன்றைக் காட்டுநர் கொள்ளும்
ஆ மடிச் சிறுபயன் போல
நாம் அவர்க்கு இளமை நலம் அழிப்பதுவே!

ஆனாலும் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறதே? விளாம்பழம் விண்டு தின்ன விருப்பமா? சற்று வலிந்து ஓட்டை உடைக்கத்தான் வேண்டும். பூப்போலப் பிட்டால் பிய்ந்து வருமா, என்ன?

எழுத்து நடை வைத்துக் காலத்தை முடிவுசெய்வது எனக்கு என்றுமே சரவுகிறது. இக்கால எழுத்தில் ஒருவர் தனித்தமிழ் நடை கொள்வார்; மற்றொருவர் சங்கதச் சொற்களை அங்குமிங்கும். பெய்வார்; மூன்றாமவர் மணிப்பவள நடை பயில்வார்; நாலாமவர் முழுதும் தமிங்கிலம் இசைப்பார். இவற்றை வைத்து இருபத்தோறாம் நூற்றாண்டு நடை இது என்று ஆணித்தரமாய்க் கூற இயலுமோ? [நிரவலாய்ப் பார்த்து ஓரளவு சொல்லலாம். ஆனால் பத்தாண்டு இருபதாண்டுக் கணக்காய் ஆய்வில் நெருக்கிச் சொல்வது கடினமானது.] அலசலைத் தொடருவோம்.

சங்ககால எழுத்து என்பது பனையோலைச் சுவடிகளாற் கிட்டியது. இக்கால நுட்பியல் உதவியின்றி, நிரவலாக, மரபுசார் மருந்து, மூலிகைச் சரக்குகளால் 125/130 ஆண்டுகளே சுவடிகளைப் பாதுகாக்க முடியும். இந்த இடைவெளிக்கு அப்புறம் மீண்டும் மீண்டும் படியெடுத்தே சுவடிகளை முன்னோர் காப்பாற்றியிருக்கிறார். அப்படியெழுந்த ஒவ்வொரு படியையும் புது எடுப்புப் (edition) போன்றே கொள்ள முடியும். எடுப்பிற்கான மாற்றங்கள் அதனுள் என்றுமிருக்கும். 19 ஆம் நூற்றாண்டு முடிவில் அல்லது 20 நூற்றாண்டு தொடக்கத்தில் சங்கப் பழஞ்சுவடிகள் உ.வே.சா.விற்குக் கிட்டும்போது கிட்டத்தட்ட 14/15 ஆவது எடுப்பு வரை நடந்திருக்கலாம். மற்ற இலக்கியங்களுக்கு இன்னும் குறைவாய் ஆகியிருக்கும்.

ஒவ்வொரு படியெடுப்பிலும் எழுத்துப் பிழைகள் (’ஏடுசொல்லி’ உரக்கச் சொல்ல, படியெடுக்கும் ’எழுத்தர்’ ஒன்றாகவா எழுதுவர்? ஊரளவு பிழை உள்ளே இருக்காதா?), எழுத்துரு மாற்றம் (2500 ஆண்டுகளில் தமிழி எழுத்தில் எவ்வளவு மாற்றம்?), நடை மாற்றம் (யாப்பு, சொல்லாட்சி, வாக்கிய மாற்றம், தொடர் மாற்றம், இடைச்சொற் பயன்பாடு, உரிச்சொற் புழக்கம் எனப் பெரிய புலனம்), பொருட்பாடு மாற்றம் (நாற்றம் இன்று நல்ல மணமா?), [கல், மாழை (metal), ஓடு, ஓலை, தாள், அச்சு என] எழுதுபொருள் மாற்றம் (நுட்பியற் தாக்கங்களை இன்னும் ஆய்ந்தோமில்லை) என எல்லாம் நடந்துதான், தமிழிலக்கியங்கள் கிடைத்தன. எழுத்துத் தமிழைப் பேசுவோர், இம்மாற்றங்களை உள்வாங்கித் தான் பேசமுடியும். மாற்றம் ஒன்றே மாறாதது.

கி.மு.500 இன் எழுத்தும், கி.பி.2013 இன் எழுத்தும் அப்படியே ஒன்றல்ல; தொல்காப்பியர் நடையும், சங்க இலக்கிய பாணர்/புலவர் நடைகளும், குறள்/சிலம்பு நடைகளும், தேவாரம், கம்ப ராமாயண நடைகளும், அருணகிரி நடையும், பாரதி/பாரதிதாசன், மறைமலை அடிகளார் நடைகளும், பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடையும் வெவ்வேறு பட்டவை. ஒன்று இன்னொன்றைப் போல இருக்காது. அதில் இலக்கண மாற்றங்கள், அவ்வக்காலக் கொச்சை வழக்குகள், வேற்று மொழி ஊடுறுவல்கள், தற்சம/தற்பவ திரிபுகள், தனித்தமிழ் மீட்டெடுப்புக்கள் என எழுதுவோருக்குத் தக்க விரவிக் கிடக்கும். எல்லாம் கலந்தே தமிழ்மொழி இருந்தது; இருக்கிறது; இருக்கும்.

ஆனாலும், சுவடிகளைப் புரிந்து, தேவையான இடங்களில் முன்னோர் உரையைத் துணையாக்கி, 1920 களில் உ.வே.சா. குறிப்புரையும், 1940 களில் ஔவை.சு.துரைசாமி, வேங்கடசாமி நாட்டார் போன்றோர் விரிவுரையும் எழுதியிருக்கிறார் இவற்றைத் துணையாக் கொண்டு, இக்கால ஆய்வாளர் மேலுஞ் செய்திகளைச் சொல்லுகிறார். இதற்கு என்ன பொருள்? இந்த நடை வேறுபாடு எல்லோரும் அறிந்ததே. அதுவொன்றுங் கடக்க முடியாததல்ல. பொருள் புரியாததல்ல. ”முன்னது வேறு; பின்னது வேறு” என்று எக்கிய நிலையாய் (extreme position) இவற்றைக் கொள்ளக் கூடாது.

[அப்படிப் பார்த்தால் என்னடையும், உங்கள் நடையும் வேறல்லவா? கொஞ்சம் பழகினால் ஒருவருக்கொருவர் புரியாமலா போய்விடும்?] இத்தகை நடை மாற்றம், மொழியாளும் பாங்கு போன்றவற்றால் பெரிய உடைப்பொன்றும் உண்டாகவில்லை. [மாறாக, மொழி நெகிழ்ந்து கொடுத்திருக்கிறது. அவ்வளவு தான். அதேபொழுது, மொழிபயில் மாந்தரும் மொழியியற்கை, சூழலியல், மீறி ”அதைக் கலப்பேன், இதைக் கலப்பேன்” என்று ஆட்டம் போடுவது தவறு. அப்படி ஆட்டம் போட்டால் ”உள்ளதும் போச்சுடா, தொள்ளைக் காதா” என்றாகி விடும்.]

மலையிற் புறப்பட்டு கடலுக்கோடும் நீரோட்டமாய் இம்மாற்றங்களைக் கொள்ளவேண்டும். மலையில் எழுகும் ஓடையும், விழுகும் அருவியும், சிதறும் சிற்றாறும், பெருகும் பேராறும், ஒட்டிக் கிடக்கும் ஏரிகளும், கட்டித் திரண்ட கண்மாய்களும், குத்திக் குழித்த குளங்களும், பிய்த்துப் பாயும் வாய்க்கால்களும், அடையும் ஆற்றுமுகங்களும், கடையுங் கழிகளும், கடலிற் புகுதரும் சங்குமுகங்களும் வெவ்வேறு நீரையா கொள்கின்றன? எல்லாம் தொடராய்ச் செல்லும் நீரோட்டந் தானே?. நீரின் சுவை மாறலாம் என்பதே இவற்றின் மாறுபாடாகும். சுனையாக எழும்பும் தலைக்காவிரியும், கருநாடகப் பாக மண்டலத்தில் அமையும் ஆடு தாண்டும் காவிரியும், புகையினக் கல்லில் விழும் அருவிக் காவிரியும், உறையூருக்கு அருகில் அகண்டோடும் பேராற்றுக் காவிரியும், புகாருக்கு அருகில் கடலை அடையும் காவிரியும் ஒன்றா, வேறா?

முதலிரு வகையினர் “வேறு வேறு” என்கிறார். மாற்று வகையினர் “எல்லாம் ஒன்றே” என்கிறார்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, May 01, 2013

சங்க காலத் தமிழ்நடையும், இக்காலத் தமிழ்நடையும் - 1

”எழுத்துத் தமிழும், பேச்சுத் தமிழும் ஒன்றல்ல, அவை வெவ்வேறு மொழிகள்” என்று சிலர் அரற்றுவதும், மற்றோர் அதை மறுப்பதுமாய் ctamil@services.cnrs.fr மடற்குழுவில் ஆங்கில உரையாடல் ஒன்று நடந்தது. மறுப்போர் கூற்றுக்கள் தமிழ்மன்றம் மடற்குழுவிலும் தமிழில் வந்தன.

“வெவ்வேறு மொழிகள்” என்போர் இருவகையினராவர். முதல்வகையினர் தமிழ் விழையும் மாணவர்க்கு மொழி கற்பிக்கும் பேராசிரியர். இன்னொருவர் எழுத்துத் தமிழுக்கும் (LT), பேச்சுத் தமிழுக்கும் (ST) இடையே ஒட்டுறவை உடைத்து, ’அகண்ட பாரதக் கருத்தோட்டத்துள்’ தமிழை அடக்கிச் ”சங்கதத்தாக்கு சரிந்ததால், ஆங்கிலத்தாக்கை அணைக்கும்” அரசியல் குசும்பராவர். இரண்டாமவரின் அரசியற் புரியாது, ”தம் பேச்சு எங்கு பயனுறும்?” என்றும் விளங்காது, முதல்வகைப் பேராசிரியர் தடுமாறுகிறார். ”இரு தமிழுக்கும் தோற்ற வேறுபாடிருப்பினும், அவை அடிப்படையில் உறவுள்ளவையே, சீரான நிரலிகளால் இவ்வுறவை நிறுவலாம்” என்போர் முன்சொன்ன இருவரோடு சேரா, மூன்றாங் கருத்தராவர். முதல்வகைப் பேராசிரியரோடு கனிவும், பொறுமை உரையாடலும் தேவை. உள்ளொன்று வைத்துப் புறம்பேசுங் குசும்பரோடு உரையாடுவது வெட்டிவேலை. அதிற் கொஞ்சமும் பொருளில்லை.

இதற்கான ஆங்கிலப் பங்களிப்பை ctamil மடற்குழுவிற் செய்ய வேண்டும். அது ஒரு புறமாக, நொதுமருக்கும் (neutral persons) இவ்வுரையாடல் தெரிய வேண்டி, ஆர்வலர் தமிழ்க் களங்களில் எழுதவேண்டும். தமிழாயும் அறிஞர் இதனால் உந்துற்று தமிழாய்வுக் களங்களில் உரையாட முன்வந்தால் பலருக்கும் நல்லது. (ஆங்கிலம் புழங்கும் களங்களில் ஈழச்சிக்கலை எடுத்துரைத்து இனக்கொலை, இராச பக்சேவை நயமன்றம் இழுத்தல், நாடு விழைத் தேர்தல், தமிழீழம் என்று ஆழ்ந்து பேசினாற் பற்றாது, 10 கோடித் தமிழரைக் கிளர வைப்பதும் நம் போன்றோர் கடமைதான். அதுபோலத் தமிழாய்வுச் செய்திகளை ஆங்கிலக் களங்களில் அடுக்கினால் மட்டும் பற்றாது. தமிழ்க் களங்களிலும் அறிவுறுத்த வேண்டும்.)

பட்டிமன்றம், பாட்டரங்கம், பேச்சரங்கம் என வந்தாலும் வந்தது, தமிழ்ப்பேச்சு நம்மூரிற் களியாட்டாய் ஆனது. உருப்படியான பரிமாற்றம் தமிழில் அரிதே நடக்கிறது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சீராட்டிய பட்டி மன்ற மரபு, பேரா. சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி ஆகியோர் கூத்துக்களால் சிரிப்புத் தோரணங்கள், துணுக்குகள், கேளிக்கைகள் என்றாயிற்று. ஆழமான சான்று தரும் கட்டுரைகள் தமிழிற் அருகி, ”தரமான கட்டுரைகளா? ஆங்கிலம் தாவு” என்ற அவலத்திற்குத் தமிழர் தள்ளப் பட்டிருக்கிறார். வேலைக்காரரோடு பேச மட்டுமே தமிழை வைத்து, அலுவல், தனியார் உரைகளில் தமிழர் ஆங்கில ஒயிலாட்டமே ஆடுகிறார்; தமிழ்க் களங்கள் சவலையாகித் தமிங்கிலமே கோலோச்சுகிறது. கருத்தாடும் தமிழ்க் களங்கள் சிச்சிறிதாய் உருமாறுகின்றன. தமிழ் மடற்குழுக்களிற் பங்களிப்புக் குறைந்து, முகநூலே பெரிதாகிறது. புதிய வேடந்தாங்கல்களுக்குத் தமிழ்ப்பறவைகள் சிறகடிக்கின்றன.

அறிவுய்திகள் (intelligensia) தமிழ்த் தாளிகைகளில் எழுதாது, ஆங்கிலத் தாளிகைகளிலேயே அகல வரைகிறார். தமிழின் இயலுமையை ஆங்கிலத்தில் வாதாடுவது வழமையாகி இணையம் எங்கும் கூடுகிறது. ”இது செய்யத்தான் வேண்டுமோ?” என்ற அடாவடித் தோற்றமுங் காட்டுகிறது. தமிழைக் காட்டிலும் ஆங்கிலப் பொத்தகங்களே தமிழ்நாட்டு விற்பனையிற் ”சக்கை” போடுகின்றன. திரைப்படம், கவிதை, களியாட்டம், அரட்டை, கிசுகிசு என மடற்குழுக்களிலும், வலைப்பதிவுகளிலும், முகநூலிலும், கீச்சுக்களிலும் (twitter) தமிழ் / தமிங்கிலம் பேசுவோர், ”அறிவியல், நுட்பியல், குமுகாயவியல், பொருளியல், மெய்யியல்...” என்று அறிவுப் புலங்களில் ஆங்கிலமே விழைகிறார்.

இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம், களியாட்டங்களுக்குத் தமிழெழுத்துக்களைப் பயன்படுத்துவது கூட தமிழிளைஞரிடம் குறைந்து கொண்டிருக்கிறது. உரோமன் எழுத்தில் தமிங்கிலம் எழுதுவது கூடிக்கொண்டிருக்கிறது. பலரும் “அது சரி” என்று கூட வாதாடுகிறார். “மொழியும், எழுத்தும் வெவ்வேறாம்”- சொல்கிறார். 42 ஆண்டுகாலத் திராவிட ஆட்சியிற் கல்வித்துறையெங்கும் ஊழலைப் பெருக்கி 5000க்கும் மேற்பட்ட ஆங்கில வழி மடிக்குழைப் பள்ளிகளைக் (matriculation schools) கயமையோடு தோற்றுவித்துவிட்டு, அதன் விளைவை, விதியை நாம் சந்திக்க வேண்டுமல்லவா? நட்டது நஞ்செனில், தொட்டது துலங்குமா, என்ன? தமிழரிலிருந்து தமிங்கிலர் என்போர் புற்றீசலாய்ப் புறப்படுகிறார். தமிழ்பேச வெட்கப்படும் தமிழர் ஊரெங்கும் பெருத்துப் போனார்.

இதைக் குறுஞ்செய்தி விற்பன்னரும், மிடையங்களும் (media) ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார். நோக்கியா, சாம்சங், ஏர்டெல், ஏர்செல், வோடபோன் போன்ற நகர்பேசி (mobile phones) விற்பனையாளர் தீவிர வாடிக்கையாக்குகின்றனர். [இப்படி நடப்பதை வாகாக மறைத்துவிட்டு, ”தமிழெழுத்தைச் சீர்திருத்தினால் இளைஞர் தமிழைப் புழங்கத் தொடங்கி விடுவர்” என்று போலித் திராவிட வாதம் பேசி, நாசகார எழுத்துச் சீர்திருத்தர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குறுக்குச் சால் போடுகிறார்.] நம்மைச் சுற்றித் தமிழ்ப் புழக்கம் பெரிதுங் குறைவதை ஆழ உணர்ந்தோமில்லை. மீண்டும் ஒரு மறைமலை அடிகளார் 21 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற் புதிதாய் எழவேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆங்கிலமே பழகும் போக்கில் நானும் அடியனாகக் கூடாதென்று எண்ணுகிறேன். “ஆங்கிலப் பங்களிப்பைக் குறைக்காதீர்” என்றே நண்பர் சொல்லுகிறார். இருந்தாலும் ”தமிழரிடைத் தமிழில் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் ஆங்கில உரையாட்டை/எழுத்தை அண்மைக் காலமாய் பெரிதுங் குறைத்து வருகிறேன்.

-----------------------------------------------

எழுத்து நடைக்கும், பேச்சு நடைக்கும் நடுவே எவ்வளவென்று சொல்ல முடியா இடைவெளி தமிழில் என்றுமேயுண்டு; அவ்வளவு ஏன்? அக்கால, இக்கால எழுத்து நடைகளுக்கிடையும் வேறுபாடுண்டு. எடுத்துக் காட்டாய் மூன்று முகன்மை வேறுபாடுகளைப் பார்ப்போம்.

முதல் வேறுபாடு வாக்கிய/தொடர்ச் செறிவு பற்றியதாகும். சங்கப் பாட்டில் இது நிறைந்திருக்கும். தேர்ந்த திரைப்பட எடுவிப்பாளர் (movie editor) போல 4,5 காட்சிகளை அடுத்தடுத்து வெட்டி ஒட்டிக் குறும்படமாய்ச் சொற்சிக்கனம் சேரத் தொகுத்திருக்கும். பாட்டின் ஆசிரியர் காட்சிக்குத் தேவையான பெயர்ச் சொற்களோடு, வினைச் சொற்களைப் பொருத்தி விவரிப்பாரே ஒழிய (”கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி.கண்ணே உள” என்ற குறளைச் சொல்லிப் பாருங்கள்.), பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ முதலிற் தொடுத்து, உப்பிற்குச் சப்பாணியாய் உம்மென்று அதற்குப் பின்னிழுத்து, ”ஆகு, இடு, இரு, ஏற்று, கிட்டு, கொள், செல், பண்ணு, மாட்டு, விடு” போன்ற பல்வேறு துணை வினைகளை (auxilllary verbs) அளவு கடந்த சரமாய் ஒட்டி, கட்டியத் தொடர்களை (conditional phrases) வெற்றுப் பேச்சாய் அடுக்கார். [எத்தனை துணை வினைகள் இக்காலம் பயில்கிறோம்? - என்ற கணக்கை யாரேனும் எடுத்தால் நலம் பயக்கும்.]

இக்கால மேடைப் பேச்சுக்களை, குறிப்பாக வீதிமுனைகள், ஊர்ப்பொட்டல்கள், அரங்க மேடைகளில் நடைபெறும் திராவிடக் கட்சிகளின் அரசியல் மேடைப் பேச்சுக்களை, நினைவு கூருங்கள். எத்தனை துணைவினைகள் அவற்றில் விடாது இழைகின்றன? ”துணைவினைகள் இல்லாது தமிழிற் பேசமுடியாதோ?” எனும் அளவிற்கு நோயாய்த் தொடர்கின்றன. ”நான் பார்த்துக் கொண்டிருந்த வேளையிலே, பொழுது சாய்ந்து விட்டிருந்த போது, அவன் என்னைக் கடந்து சென்றான்” என்பது இற்றைத்தமிழில் படிக்கக் கூடிய ஒரு வாக்கியமாகும். வேற்றுமொழி நடைகளைப் படித்து, அப்படியே தமிழிற் சொல்ல முற்பட்ட விளைவு இதனுள் தெரிகிறதா? ”கொண்டிருந்த வேளையிலே, சாய்ந்து விட்டிருந்த போது” போன்றவை இங்கு தேவையா? ”பொழுது சாய்ந்தது; பார்த்தேன்; கடந்தான்” என்ற செறிவோடு இதே கருத்தைச் சங்கத்தமிழ் சுருக்கும். ”நான், அவன்” - என்ற சுட்டுப் பெயர்கள், ”வேளை, போது”- என்னும் காலக் குறிப்புக்கள், “கொண்டிருந்த, விட்டிருந்த” - போன்ற துணைவினைகள் எல்லாம் அதில் அரியப்பட்டே காட்சியளிக்கும்.

நசை பெரிதுடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி! அவர் சென்ற ஆறே!

என்ற குறுந்தொகை 37 ஆம் பாட்டையும்,

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

என்ற 1317 ஆம் குறளையும் (இதில் ஆகு - துணைவினை) படித்தால் நான் சொல்லுவது விளங்கும். பொதுவாகச் சங்கத்தமிழ் என்பது சொற்சித்திரமாயும், இற்றைத்தமிழ் என்பது ஒரு காண்டிகை விரிவுரையாயும் இருக்கின்றன. சந்தையிற் கிடைக்கும் எந்த உரையைப் படித்தாலும் இது விளங்கும். 12/13/14 ஆம் நூற்றாண்டு உரையில் ஓரளவும், அண்மைக் காலத்தில் இன்னும் பெரிதாயும் இருக்கும். சாறிலாச் சக்கையாய்ச் சொற்களை விரித்துக் கொட்டுவதே இற்றை நடை போலும். இது நம் பிழையேயொழிய மொழிக் குற்றமல்ல. சுருங்கச் சொல்லும் பாங்கு பெருக வேண்டும்.) [ஒரு செய்தித்தாளில் ஏதேனும் ஒரு பத்தியை எடுத்து, அது எந்தப் புலனமானாலும் சரி, துணை வினைகளை வெட்டிச் சுருக்கிப் பார்த்திருக்கிறீர்களா?]

அளவிற்கு மீறிப் பயனாகும் துணை வினைகள் இற்றைத் தமிழைச் சுற்றி வளைத்த மொழியாக்கிச் செயற்கைத் தன்மையாற் கெடுக்கின்றன. பெரும்பாடு பட்டு இப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும். சங்கத் தமிழுக்கும், இற்றைத் தமிழுக்கும் நான் கண்ட பெருத்த வேறுபாடு அளவுக்கதிகத் துணை வினைப் பழக்கமேயாகும். தமிழ் சொல்லிக் கொடுப்போர் இதனைக் கணக்கிற் கொண்டால் நலமாயிருக்கும். வாக்கியச் செறிவை மாணவருக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுக்க வேண்டும். (என்ன ஆகூழோ, தெரியாது, நன்னடை பயில்விப்பதைத் தமிழாசிரியர் நிறுத்தி மாமாங்கங்கள் ஆகிவிட்டன. சிக்கல் தமிழாசிரியரிடமிருக்கிறது. மொழியிலில்லை. தமிழ்நடையை ஆங்கிலநடையாக்குவதும் அதையே சொல்லிக் கொடுப்பதும் சரியா?)

இரண்டாம் வேறுபாடு சொற்செறிவுக் குறைவாகும். இக்காலத்தில் ஓரசை, ஈரசை, மீறி எப்போதாவது மூவசையிற் புதுச்சொற்களைப் படைத்தால் ஏற்கலாம். தமிழ்ச் சிந்தனையைப் சுற்றி வளைத்த பலக்கிய (complex) வழியாக்கி, வரையறை போல நீள நீளச் சொற்களைப் படைத்தால் எப்படி? [கணி என்றாலே வினையாயும், பெயராயும் அமையமுடியும். கணிப்பொறி என்ற சொல்லிற் பொறி தேவையா, என்ன?] இதனாலும் மொழியின் செயற்கைத் தன்மை கூடுகிறதே? ”ஒரு தமிழ்ப் பேச்சிற் சொல்லாட்சியில் நிரவலாய் எத்தனை அசைகள் உள்ளன?” என்று கணக்கிட்டால், சங்கத் தமிழில் ”2, 2 1/4” என்றாகும். இற்றைத் தமிழில் ”3,4”க்கு வந்து விடும். ஒருபொருட் சொற்களான ”அருவி”யையும் ”நீர்வீழ்ச்சி”யையும் ஒப்பிட்டால், செறிவெங்கே வற்றுகிறது? ”தண்மலரையும்”, ”குளிர்ச்சியான மலர்” எனும் விளக்கத்தையும் ஒப்பிடுங்கள். ”ஆனது” என்ற துணைவினை போட்டு நம்மவர் நீட்டி முழக்குவது தெரிகிறதா? அளவுக்கு மீறி அசைகளைக் கொட்டுவதேன்? (தண்ணீரன்றி வேறெதற்கும் ”தண்” பயன்படுத்துகிறோமா?)

சிலநாட்கள் முன்னர் வெனிசுவேலா அதிபர் இறந்தபோது திண்ணை இணைய இதழில் அவர் சொன்னதாக “நான் மரணிக்க விரும்பவில்லை” என்ற வாசகம் வந்தது. ”மரித்தல்” வினையிற் பெற்ற பெயர்ச்சொல் ”மரணம்” ஆகும். மீண்டும் “மரணி” எனத் தமிழில் அதை வினையாக்குவது வியப்பு நடைமுறை. இதேபோல் வழக்காற்றை 10 ஆண்டுகள் முன் பார்த்தேன். ”கற்பித்தல்” வினை. ”கற்பனை” - பெயர்ச்சொல். மீண்டும் அதைக் “கற்பனி” என்றால் எப்படி? இணையத் தமிழறிஞர் ஒருவர் இதை எழுதினார். சொற்செறிவு எங்கே குறைகிறது?
இற்றைத் தமிழிலா? சங்கத் தமிழிலா?

இருவேறு நடைகளுக்கிடையே மூன்றாம் வகை வேறுபாடுஞ் சொல்லமுடியும். இது காட்சிச் செறிவுக் குறைதலாகும். சங்கத்தமிழ் உவமைகள் நிறைந்தது. ("அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர் கொல் மாலும் என் நெஞ்சு" என்ற குறளை எண்ணிப் பாருங்கள்.) பொருளைக் காட்சிப்புலனாக்கப் பயன்படும் வகையில், ”போல்மங்கள், படிமங்கள், ஒப்பீடுகள்” அதனுள் விரவிக் கிடக்கும். நேரடி உலர் பேச்சில் இத்தனை செறிவைக் கொண்டுவர இயலாது. இற்றைத் தமிழில் நாட்டுப்புறத்தில் மட்டுமே ”உவமைகள், போல்மங்கள், படிமங்கள், ஒப்பீடுகள்” தொடருகின்றன. நகர்ப்புற நடையிற் செந்தரப் பயன்பாடுகள் தவிர்த்து இவை குறைந்தே கிடக்கின்றன.

நம் மரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் நம்மிளையோர் எங்கே படிக்கிறார்? பைன், தேவதாரு, பனிக்கரடி, பண்டா, அமெரிக்கக் கழுகு என்று வெளிநாட்டையே பாடம் படித்தால் தமிழ்நாட்டு இயற்கை இவருக்கு எப்படிப் புலப்படும்? ”உலகமயமாக்கல்” என்ற பலிபீடத்திற் நம் பிள்ளைகளைக் காவு கொடுத்து, சுற்றிலக்குப் பார்வையைத் (localisation)
அடியோடு தொலைக்கிறோமே? பொதுவாக சூழியல் இயற்கையையும், சுற்றுக் காட்சிகளையும் ஆற அவதானிக்கும் பழக்கம் நம் நகர்ப்புறத்திற் பலருக்குங் குறைந்து போனது.

(ஏராளங் காட்டுகளை நான் தரமுடியும். ஆனைச் சாத்தான் என்பது எத்தனை பேருக்கு விளங்கும்? அந்தக் காலக் கோதை நாச்சியாருக்கு விளங்கும். புங்க மரம் ஏதென்று தெரியுமா? குலவையெழுப்பத் தெரியுமா? ”முதுமக்கள் தாழி, பதுக்கை” என்றால் என்ன? கல்லணையைக் கரிகாலன் எப்படியெழுப்பினான்? சளி பிடித்தால் என்ன சாப்பிடலாம்? வேப்பம்பூப் பச்சடி என்றைக்கு வீட்டில் வைக்கவேண்டும்? கீழாநெல்லிச் செடி எதற்குப் பயன்படும்? பாழாய்ப் போன ”அலோப்பதிக்கே” பணத்தைக் கொடுத்து நம்முடைய பழம் மருத்துவங்களைத் தொலைக்கிறோமே?) எல்லாமே ஒரு வேகம். ”தன் கருமங்கள், தன் முனைப்பு, தன் சாதனை” என்றே நம் வாழ்க்கை ஆகிப் போனது. காட்சிச் செறிவு குறைந்து சூழலை அவதானிக்காது போனதை எல்லோரும் அறிந்த குறுந்தொகைப் பாட்டை வைத்தே சொல்லமுடியும்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங் கலந்தனவே

என்ற பாட்டில் செம்புலம் என்பது செம்மண் நிலமா? அன்றிச் செம்மையான சமதள நிலமா? சற்று ஓர்ந்து பார்க்கோமா? அவதானிப்புக் குறைந்து போனதாற்றானே தவறான உரை கால காலத்திற்கும் பல்வேறு உரையாசிரியரால் மீண்டும் மீண்டும் எழுதப் படுகிறது. [செம்மண் புலத்திற் சிரட்டித் திரிந்தவன் நான். இருந்தாலுங் கேட்கிறேன் :-))))] கரிசல் மண்ணிற் பெய்த நீர் கலக்காதோ? அல்லது சுண்ணச் சம தளத்தில் நீர் ஒன்றுசேர்ந்து ஓடாதா? இங்கு எப்படிச் செம்மண் உயர்ந்தது?

ஆக தொடர்ச் செறிவு, சொற் செறிவு, காட்சிச் செறிவு என மூன்று வகையாலும் இற்றைத் தமிழ் வேறுபடுகிறது. இன்னுங் கூர்த்த வேறுபாடுகளை எடுத்துக் காட்டலாம். நீங்களே தாமாக உணர முடியும். ”அது வேறு தமிழ், இது வேறு தமிழா?” என்றால் ”இன்னும் இல்லை; ஒன்றை மாற்றிச் செய்யும் இன்னொரு வேறுபாடு” என்றே சொல்லுவேன். ”பழையதை விடாது படிக்க வைத்தால், புதியது உடையாது நிற்கும்” என்று உறுதி சொல்வேன். வரலாறு புரிந்தோருக்கு நான் சொல்வது புரியும். முன்னோர் ஆக்கங்களைப் படித்தே நம் நடையை ஒழுங்கு செய்கிறோம். முன்னோர் இலக்கியங்கள் தம் நடையைத் தெரிவிப்பதோடு, நம் எதிர்கால நடை விலகாதிருப்பதற்கு வழித்துணையும் ஆகின்றன. [They remain descriptive of styles in earlier centuries and also prescriptive for our future style.] இதனாற்றான் பழையதை மீளப் படித்து, நம் நடையைப் புதுப்பிக்கச் சொல்கிறோம். மரபை நாம் என்றுந் தொலைக்கக் கூடாது.

என்றைக்குச் சங்க இலக்கியங்களுக்குப் படிப்பாளர் தடை போடுகிறோமோ, அன்றே தமிழ் நடையில் உடைப்பு ஏற்படும். அரசியற் குசும்பர் அதற்கே முயல்கிறார். ”2500 ஆண்டுகள் ஆகியும், தமிழர் மரபைத் தொலைக்காதிருந்தால் இவர் தொடர்ச்சி நிலைத்து விடுமே? அப்படித் தொடர விடக்கூடாதே?”.என்ற கொடிய எண்ணத்திற்றான், ”இரண்டும் வெவ்வேறு மொழிகள்” என்று குசும்பர் கூக்குரலிடுகிறார். மொத்தத்தில் தமிழின் அடிநாடி எதோ, அதைக் குலைக்க விரும்புகிறார். ”இருவேறு மொழிகள்” எனில் அவர் நினைப்பது நடந்துவிடும். அரசியற் புரியாத முதல்வகைப் பேராசிரியர் ஆட்டம் புரியாது, தப்புத் தாளம் போடுகிறார்.

அன்புடன்,
இராம.கி.

Friday, February 08, 2013

சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும் - 3

அண்மையில் ”ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும், உலகத் தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனமும் 28/1/2013 - 06/2/2013 இல் இணைந்து நடத்திய தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்கில் 5/2/2013 அன்று பிற்பகல், “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற தலைப்பில் நான் ஓர் உரையாற்றினேன். அதன் எழுத்து வடிவக் கட்டுரை அவர்கள் வெளியிடும் பொத்தகத்திற் பங்கு பெறுகிறது. கட்டுரை மூன்று பகுதிகளாகி ”www.valavu.blogspot.com” என்னும் என் வலைப்பதிவிலும், ஒரு சில மடற்குழுக்களிலும் இடுகைகளாக இப்பொழுது வெளிவருகிறது. இது இறுதியாய் வரும் மூன்றாம் பகுதி. உங்கள் வாசிப்பிற்கு,

அன்புடன்,
இராம.கி.

”கீரிப் பிள்ளையும் பார்ப்பனியும்” :

ஐந்தாம் தந்திர மூலக்கதையில் சமணத் துறவிகளை (சமணம் எனும்போது, இது புத்தமா, செயினமா, ஆசீவகமா, என்று உறுதியாய்த் தெரியாது.) அடித்துக்கொன்ற மணிபத்ரன் கதை சொல்லப் படும். அதைக் கண்டு துணுக்குறாது (சமணத்துறவி என்று பலராலும் ஐயப்படும்) இளங்கோ அத் தந்திரத்தின் முதற் துணைக்கதையைத் (கீரிப் பிள்ளையும் பார்ப்பனியும்) தன்னுடைய காப்பியத்தில் ஓர் எடுகோளாய்க் கொண்டார் என்பது பெரும் வியப்பையே தருகிறது. (இளங்கோ உண்மையில் சமணர் தானா? அவருடைய சமயத்தில் அவருக்கு அக்கறையில்லையா?) அம்மூலக் கதையின் முடிவில் கீழுள்ளது போல் வரும்.

------------------------------------

ஆராயாது, துறவிகளை அடித்துக் கொன்ற நாவிதனைக் கழுவிலேற்ற உத்தரவிட்டனர் நீதிபதிகள். “எதையும் நன்றாக ஆராயாமல், நன்றாகத் தெரிந்து கொள்ளாமல், நன்றாக விசாரிக்காமல், நாவிதன் செய்தது போல யாரும் செய்ய முற்படக் கூடாது. அது ஆபத்தை உண்டாக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே தக்க உதாரணமாகும். ஆகையால், நன்கு ஆராயாமல் கீரிப் பிள்ளையைக் கொன்ற பிராமணனின் மனைவியைப் போல் பிறகு வருந்த நேரிடும்” என்று கூறினர் நீதிபதிகள். ”அது எப்படி” என்று கேட்டான் மணிபத்ரன்

--------------------------------------

இதற்கப்புறம் தாண்டவராயர் பதிப்பில் கீரிப்பிள்ளை கதை உச்செயினியில் நடந்ததாய் வரும். வானவிற்பதிப்போ அப்படி ஒன்றும் விதந்து குறிப்பிடாது, “ஒருவூர்” என்று பொதுவாகவே சொல்லும். நன்றாய் நினைவு கொள்ளுங்கள் படித்தானத்திற்குத் தெற்கே எந்தப் பஞ்ச தந்திரக் கதையும் நடக்கவே யில்லை. எல்லாம் மகதப் பார்வையில் மத்திய தேசம், பழந் தக்கணத்தைக் களங் கொண்டவை. பின், புகாரென்று சிலம்பில் ஏன் மாறி வருகிறது? புரியவில்லை. இப்படிச் சிலம்பில் வருவது உண்மையில் இளங்கோ எழுதியது தானா? அன்றி யாரோவொருவர் நுழைத்த இடைச்செருகலா? - என்ற கேள்வி நம் மனத்தில் உடனே எழுகிறது. இனி வானவிற் பதிப்பின்படி, ஐந்தாந் தந்திர முதற் துணைக்கதைக்கு வருவோம்.

-------------------------------------------------

”அவசரத்தில் நேர்ந்த கொடுமை”

கதைக்குள் கதை

ஓர் ஊரில், தேவ சர்மா என்னும் ஏழைப் பிராமணனும், அவன் மனைவியும் வாழ்ந்து வந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின் பிராமணி ஒரு ஆண் குழந்தையையும், ஒரு கீரிப் பிள்ளையையும் பெற்றாள். அதனால் பிராமணனுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. கணவனும் மனைவியும் குழந்தையைக் கருத்தோடு வளர்த்தனர். கீரிப் பிள்ளையையும் பாசத்தோடு வளர்த்தார்கள் என்றாலும், கொடிய விலங்கு என்பதால், அதனிடம் பிராமணனின் மனைவிக்கு அவ்வளவு நம்பிக்கை உண்டாகவில்லை.

தங்களுடைய பிள்ளை முட்டாளாய் இருந்தாலும், போக்கிரியாய் இருந்தாலும், அழகற்று இருந்தாலும், கெட்ட நடத்தை உடையவனாய் இருந்தாலும் அதனால் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி குறைவது இல்லை.

ஒரு நாள் பிராமணனின் மனைவி, “நாதா, நான் ஆற்றுக்குச் சென்று நீராடி, நீர் கொண்டு வருகிறேன். குழந்தையைக் கீரி ஒன்றும் செய்துவிடாத படி பார்த்துக் கொள்ளும்” என்று கூறி, குழந்தையைப் பத்திரமாகத் தொட்டிலில் போட்டுவிட்டுச் சென்றாள். மனைவி சென்ற சிறிது நேரத்தில் பிராமணனும் பிச்சை எடுக்க ஆசைப்பட்டு வெளியே போய்விட்டான்

குழந்தைக்குக் கீரி காவலாக இருந்தது. அப்போது கருநாகம் ஒன்று ஒரு துவாரத்திலிருந்து வெளிவந்து, குழந்தையின் தொட்டிலுக்கு அடியில் ஊர்ந்து சென்றது. தன்னுடைய இயற்கைச் சத்துருவான பாம்பைக் கண்ணுற்ற கீரி, குழந்தைக்கு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடக் கூடாதே என்று கருதி, பாம்பைக் கடித்துத் துண்டு துண்டாக்கியது. தன்னுடைய வீரச்செயலால் மகிழ்ச்சி அடைந்த கீரிப்பிள்ளை இரத்தம் வழியும் வாயோடு தாயின் வரவை எதிர்நோக்கி வாசலில் காத்திருந்தது.

கீரியின் கோலங் கண்ட பிராமணி தன் அருமைக் குழந்தையைக் கீரி கடித்துக் கொன்றுவிட்டதாகக் கருதி, அவசரப்பட்டு, தண்ணீர்க் குடத்தை அப்படியே கீரியின் மீது போட்டுக் கொன்றுவிட்டாள். பிறகு, வீட்டுக்குள் நுழைந்தாள். குழந்தை அமைதியாகத் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. தொட்டிலுக்கு அடியில் பாம்பு கொல்லப்பட்டு, துண்டு துண்டாகக் கிடந்தது. அதைக்கண்டதும் பிராமணனின் மனைவி கதறி அழுதாள். “குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய கீரியை அநியாயமாக அவசரப்பட்டுக் கொன்றுவிட்டேனே” என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அப்பொழுது பிராமணன் வீட்டுக்கு வந்தான். மனைவியின் அழுகையையும் புலம்பலையும் கண்டு என்னவென்று விசாரித்தான்.

“பேராசைக்கார பிராமணா, உன்னாற்றான் இப்படி நேர்ந்தது. என் சொற்படி கேட்காமல் நீயேன் வீட்டை விட்டு அகன்றாய்? ஆசை வேண்டியது தான். ஆனாற் பேராசை கூடாது. பேராசைக்காரன் தலையில் சக்கரம் சுற்றுகிறது” என்றாள் மனைவி. “எப்படி?” என்றான் பிராமணன். பிராமணி சொல்லத் தொடங்கினாள்

-----------------------------------------------------

”கீரிப்பிள்ளையும் பார்ப்பனியும்” கதைக்குச் சிலப்பதிகாரம் தரும் திருப்பம்:

தேவ சர்மனை எள்ளிய பார்ப்பனி, சக்ரதாரி கதையைத் தொடங்குவாள். சிலம்பிலோ இது வேறு திருகிற் (twist) தடம்மாறிச் செல்லும். இத்திருப்பத்தில், பார்ப்பனி, கணவனோடு இணைந்து செல்லப் பார்க்கிறாளாம். (அரும்பத உரையார் / அடியார்க்கு நல்லார் தரும் விளக்கமும் அப்படித்தான் உள்ளது)

“கீரியைக் கொன்ற கரிசு உன் மேலேறியது; பெரும்பிச்சைக்கு ஆசைப் பட்டதாய் எள்ளினாய்; உன் கையால் வாங்கியுண்ணும் வாழ்வு இனிக் கடவாது. உன்னை விட்டுப் போகிறேன். வடமொழி வாசகம் எழுதிய இந் நல்லேட்டை கடனறி மாந்தர் கையில் கொடுப்பாயாக” என்று சொல்லி மாமறையாளன் (சிலப்பதிகாரக் கூற்றின் படி) வட திசைக்கு ஏகிறான்.

"அபரீக்ஷய ந கர்த்தவ்யம், கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம் பச்சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணீ நகுலம் யதா”

என்பது அரும்பதவுரைகாரர் எடுத்துரைத்த சங்கதச் சொலவமாகும். [34]. அது பஞ்சதந்திர சொலவமென்பது திரு.இரா.நாகசாமியின் ஊகம் மட்டுமே. அதன் பட்டகை (fact) இன்று யாருக்கும் தெரியாது. இன்றைக்கு எடுகோளாய்ச் சொல்லும் விஷ்ணு சர்மனின் பஞ்சதந்திரம் 12 ஆம் நூற்றாண்டு நூலாகும். அரும்பதவுரைகாரரின் காலம் 10/11ஆம் நூற்றாண்டென்று மற்ற ஆய்வாளர் சொல்வர். எப்படிப் பார்த்தாலும் அரும்பத உரைகாரர் 12 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவர் என்றே கொள்ளமுடியும். குறிப்பிட்ட சொலவம் இருந்த மூல நூலை இன்று வரை யாரும் பார்த்ததில்லை. உண்மை எதுவென்று சிலம்பைப் படித்துத் தெரிவதுமில்லை.

வெறுமே அரும்பத உரைகாரரின் கூற்றை வைத்து, ச.வையாபுரிப் பிள்ளை, ”பஞ்ச தந்திரத்திற்குப் பின்னாற் தோன்றியது சிலப்பதிகாரம்” என்று எப்படிச் சொன்னார்?[35] நமக்குக் கொஞ்சமும் புரியவில்லை. இப்படிப் பொ.உ.மு. 1 நூற்றாண்டின் மூலபாடத்தை யாருமே பார்க்காது, வெறும் 12 ஆம் நூற்றாண்டு சங்கத வழிநூலை மட்டுமே பார்த்து, ”வடமொழிப் பஞ்சதந்திரம் முந்தை, தென்மொழிச் சிலம்பு பிந்தை” என்று ச.வையாபுரிப்பிள்ளை முன்னுரிமை தருவது நமக்கு முற்றிலும் வியப்பாகிறது. மேற்கூறிய பாணினி, ஜைமினி, பிங்கல, சுங்க, கன்னர் – வாதத்தைப் பார்த்தால், சிலம்பிற்கு 35-40 ஆண்டுகள் கழித்தே பஞ்ச தந்திர மூல ஆவணம் எழுந்திருக்க வாய்ப்புண்டு. அதேபொழுது, முன்சொன்னது போல், சில தனிக் கதைகள் இந்தியாவெங்கணும் ஏற்கனவே வாய்மொழியிற் பரவி யிருக்கலாம். அது நூற்றுவர் கன்னர் தேசத்திற்கு அருகிருந்த சேர நாட்டு இளங்கோவுக்கும் (அல்லது அடைக்கலக் காதையின் குறிப்பிட்ட வரிகளுக்குச் சொந்தக்காரருக்கும்) தெரிந்திருக்கலாம்.

அடுத்து, பீடிகைத் தெருவில் (market street), பெருங்குடி வாணிகர் மாட வீதிகளில், மனைதோறும் மறுகி, ஏட்டைத் தூக்கிக் காட்டி ”கருமம் கழியும் பலன்கொள்வார் உண்டோ?“வென அருமறையாட்டி விற்கக் கூவுகிறாள். [அவ்வேட்டைப் படித்துப் பொருளறிந்தால் படிப்பவரின் வினைக்கருமம் ஒழியுமாம்.] கோவலன் ஏட்டை வாங்கித் துயர்துடைத்தான் என்று இளங்கோ எழுதியதும் வியப்பாகிறது.

செயினத்தின்படி வினைப்பயன் என்பது ஒரு ”விற்கும் பண்ட”மல்ல. ஆசீவகத்தின்படி, ஒருவர் நியதியை இன்னொருவருக்கு விற்கமுடியாது. புத்த நெறிப் படியும் ஒருவர் செய்கையின் விளைவு அவரையே சாரும். வேதநெறிப் படி மட்டுமே, வேள்வி நடத்தி, ”பாவ, புண்ணியங்களை” இன்னொருவருக்கு நகர்த்த முடியும். எனவே எழுதிக்கொடுப்பது பார்ப்பனனுக்கும், கூவி விற்பது மனைவிக்கும் சரி. ஆனால், கோவலன் போன்ற ஒரு சமணன் அதை வாங்கியதாய் (இளங்கோ போன்ற) வேறொரு சமணன் (!) எழுத முடியுமோ? எழுதியவன் உண்மையிலேயே சமணன் தானா? படிக்கும் போது வேடிக்கை ஆகிறது. இளங்கோ என்பவன் ஏமாற்றுக்காரச் சமணனாய்த் தெரிகிறதே?

கூவலைக் கேட்ட கோவலன் “நீ உற்ற இடர் யாது? இவ்வோலையென்ன?” என்று கேட்க, ”என் கணவன் என்னைக் கைவிட்டான், பொருட்பாடுள்ள இந்த ஓலையைக் கைப்பொருள் கொடுத்து நீவிர் வாங்கி, என் துயர் களைவீர்” என்கிறாள் பார்ப்பனி. “அஞ்சாதே! உன் துயர் களைவேன்; நெஞ்சு படு துயரத்தில் இருந்து நீங்குவாயாக” எனக் கோவலன் சொல்கிறான். வேத அந்தணர் உரைகளின் வழிகாட்டற் படி, அழனியோம்பும் பார்ப்பனியின் துயர்நீங்கத் தானஞ்செய்து, காடேகிய கணவனைக் கூட்டிவந்து, குறையாச் செல்வமும் உறுபொருளும் கொடுத்து நல்வழிப் படுத்திய செல்லாச் செல்வனே” எனக் கோவலனைப் பாராட்டுகிறான் மாடல மறையோன்.

இந்தப் பொருளில் வரும் சிலம்பு வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

“பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனைதொறு மறுகிக்
கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்தவள் தன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ”

சிலம்புத் திருகலின் மேலே நமக்கு எழும் கேள்விகள்:

மேலுள்ளதில், வெறும் ஒன்றரை வரிக் கீரிப்பிள்ளை கதைக்கு அடுத்து, ஏனென்று தெரியாது இருபத்து அரை வரிகள் முற்றிலும் வேறு திருகிற் செல்கின்றனவே? ஏன்? ஒன்றரை வரிக்கு இருபத்து அரை வரிகள் ஒப்புக்குச் சப்பானியா? இனிக் கேள்விகளையும், முன்னிகைகளையும் பார்ப்போம்.

1. முன்சொன்னது போல், பஞ்சதந்திர நூலின்படி, பார்ப்பனி, கணவனை எள்ளியதோடு உச்செயினியில் கதை முடிந்து, அடுத்த கதைக்குப் போகும். அதை அப்படியே ”அலேக்காய்”த் தூக்கி இடம் மாற்றிக் கொண்டு வந்து பூம்புகாரிற் கோவலனோடு இங்கு ஏன் ”இளங்கோ” பொருத்த வேண்டும்? இவ்வரிகள் உண்மையில் இளங்கோ எழுதியவை தானா? அன்றி யாரோ ஒரு வேதநெறி விழைவோர் இடையிற் கொண்டுவந்து செருகியதா?

2. ஓலை வாங்கியோர் தமக்கு இரக்கமிருந்தால் பார்ப்பனிக்குப் பொருளுதவி செய்யத்தான் போகின்றார். பின் “ஏன் கருமக் கழிபலங் கொள்மினோ?” என்று பார்ப்பனி கூவவேண்டும்? வேத நெறி இங்கு அழுத்தியுரைக்கப் படுகிறதா? அதன் தேவையென்ன? இது இடைச்செருகல் அல்லாது வேறென்ன? எப்படி எண்ணிப்பார்த்தாலும் எனக்கு அப்படித்தான் தெரிகிறது.

3. கீரிப் பிள்ளை பற்றிய சிலம்புக் குறிப்பு இளங்கோ எழுதியதெனில், ”வெவ்வேறு வாய்மொழிக் கதைகளின் புலமைத் தொகுப்பான” பஞ்சதந்திரம் எழு முன்னர், நாவலந்தீவில் அது நாட்டுப்புறக் கதையாகப் பரவியிருக்கக் கூடாதா? – என்ற கேள்வியெழுகிறது. அரும்பதவுரைகாரர் கொடுத்த வடமொழி வாசகம் எப்பொழுது யாரால் எழுதப் பட்டது?

4. சிலம்பின் படி, பார்ப்பனி கணவனோடு ஒத்துப் போக முயல்கிறாள்; அதே பொழுது, கோவம் அடங்காத பார்ப்பான், தன்னை எள்ளிய மனைவியை விலக்கி, ”புண்ணிய திசைக்குப்” பயணம் விழைகிறான். கோவக்காரப் பார்ப்பனன் வெறுமே வாயாற் சொல்லிப் போவது தானே? ஏன் ஒரு வடமொழி ஓலையை மனைவிக்கு எழுதிக் கொடுத்தான்? வடமொழி வாசகத்தால் மனைவி பிழைத்துக் கொள்ளட்டும் என்னுங் கரிசனையா? அதைப் படித்துத் தான் யாரும் புகாரிற் பார்ப்பனிக்குத் தானஞ் செய்வரா? படிக்காது துயரங் கேட்ட அளவில் உதவாரா? அவ்வளவு இரக்கங் கெட்ட ஊரா அது?

5. கோவலன் புகாரில் இருந்தபோது ”எந்தக் கால கட்டத்தில் கீரிப்பிள்ளை கதை நடந்ததெ”ன்று சிலம்பு சொல்லவில்லை. மாதவியோடு இருந்த காலம் எனில், ”சிலம்பு விற்க மதுரை போவோம்” என்றோ, ”பாண்டிய மன்னன் ஆராயாது தன்னைக் கொல்வான்” என்றோ, அப்பொழுது கோவலனுக்குத் தெரியாது. பார்ப்பனன் கொடுத்த ஓலைச்செய்தியையும், கோவலன் பார்ப்பனியைப் புரந்ததையும், மதுரைப் புறஞ்சேரியில் மாடல மறையோன் நினைவுறுத்தத் தேவையென்ன? வருமுன் செய்தியை ஆசிரியன் ஓதுகிறானா? யாருக்கு? படிப்பவருக்கா?

6. இன்னொரு உரைகாரராய்த் தன்னை இரா. நாகசாமி எண்ணிக்கொண்டு, ”கோவலன், பாண்டியனென இருவரும் யோசிக்காமற் செய்த செயல்களின் விளைவுகளால்” என்றும் கோவலனைப் பற்றி “he did not act with diligence and acted senselessly”” என்றுந் தன் சொந்த மதிப்பீட்டைத் திணிப்பது வேடிக்கையாகிறது.

7. ”பாண்டியன் தேராது செயப்போகுஞ் செயலை உணர்த்துவது” என்பது வேண்டுமென்றே திரு. நாகசாமி வரிப்பிளந்து சொல்லும் வலிந்த பொருள் ஆகும். தேரா மன்னன் பற்றி மாடலனுக்கு எதுவுமே முன்னாற் தெரியாது.

8. செல்வ ஆணவத்தாலும், அற்றை நிலவுடைமை வழக்கங்களாலும், மாதவி மேல் மையலாலும் புகார்க் காண்டத்திற் தவறிழைக்கும் கோவலன் மதுரையில் எதையுமே ஓராது செய்யான். முன்னால் இழைத்தது முழுதும் நன்றாக ஓர்ந்தே கண்ணகியிடம் பேசி, பீடிகைத் தெருவிற் சிலம்பு விற்கக் கோவலன் வருகிறான். ஊழின் வலிமையால் பொற்கொல்லனால், ஏமாற்றப் பட்டான். அவ்வளவு தான்.

9. ”கணவன் விட்டுப் போனான்; நானுய்யப் பொருளுதவி செய்வீர்” என்று துயரப்பட்ட பார்ப்பனி வெறுமே கேட்க, செல்லாச் செல்வனான கோவலன் உதவலாமே? “கீரிப் பிள்ளை” கதை இங்கு ஏன் வந்தது? அதன் மெய்ப்பொருள் என்ன? ”ஆராயாச் செய்கை” எனில், மாடலன் சொல்லைப் புரிந்து அதனாற் கோவலன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டானா? தான் கண்ட தீக்கனாவை முன்னால் சொல்பவன், அதற்கு மேலும் சிலம்பு விற்கப் பீடிகைத் தெருவிற்குப் போகத் தானே செய்கிறான்?

10.தானம் பெற்று, மனம் மாறி மனைவியோடு வாழப் பார்ப்பனன் எப்படி ஒப்புகிறான்? அப்படி மனம் மாறி வருவான் எனில், அதன் பொருளென்ன? பார்ப்பனன் கொண்டது பொய்க் கோவமா? அன்றிக் கருமக் கழிபலம் என்பது ஓர் ஏமாற்றுத் தனமா?

11.புகாருக்கு அடுத்துள்ள தலைச் செங்கானத்து மாடலன், தனக்குத் தெரிந்த செய்திகளைச் சொல்லிக் கோவலனை முகமன் கொள்கிறான். [இங்கே ஒரு கதை மட்டுமே இக்கட்டுரையிற் பேசுகிறேன். மாடலன் சொல்லும் மொத்த 3 கதைகளும் காப்பியத்தோடு கொஞ்சமும் பொருந்தாமலே அமைகின்றன. ”விருத்த கோபாலன்” எனக் கோவலனை அழைப்பது குறித்தும் என் நூலில் முன்னித்திருக்கிறேன் (commented). அங்கும் வேறொரு திறக்கில் இது இடைச்செருகல் என்று ஐயப்பட்டிருப்பேன்.]

12.ஆழ்ந்து ஓர்ந்தால், “Panca Tantra has played a crucial role in Silappatikāram“ என்று .திரு.இரா.நாகசாமி சொல்வதுபோல், சிலப்பதிகாரத்தில் பஞ்ச தந்திரம் எந்தக் கருவான பங்கையும் வகிக்கவேயில்லை. செயினரின் வினைப் பயனையோ, ஆசீவகரின் ஊழ் பற்றியோ கொஞ்சமும் அடிப்படைப் புரிதல் இன்றி பஞ்ச தந்திரம் படித்த யாரோ ஒருவர் வேதநெறியின் கருமக் கழி பலனைக் கதையோடு பொருத்தித் தன் சொந்தத் திருகலை சிலம்பினுள் இடைச்செருக முயன்றிருக்கிறார். அவ்வளவு தான். ஒரு சமணருக்கு இது கொஞ்சமும் ஏற்க முடியாத திருப்பமாகும்.

அண்மையில் கலிபோர்னியாப் பல்கலைக் கழகப் பேரா.சியார்ச்சு ஆர்ட், “ctamil” மடற்குழுவில் திரு.இரா.நாகசாமியின் கருத்தை மறுத்துத் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்

”I think this is based on a misconception. Written texts in pre-modern South Asia are like the top of an iceberg, with the vast bulk invisible and comprised of oral stories and the like. Well, this is not really a good analogy, as the written texts in India are often (as with the Cilappatikaram, the Ramayana and the Mahabharata) based on oral material. It is possible that Ilanko actually knew a written "text" called the Pancatantra, but it seems to me much more probable that some of the stories that comprise that "text" were circulating in many forms in oral form all over South Asia and that Ilanko is referring to a story that was commonly told at the time by illiterate storytellers. I don't see how it is warranted to conclude that the written Pancatantra is older than the composition of the Cilappatikaram. Unfortunately, all the literature we have from pre-modern India is what was written down -- we are missing 99% of the material, which was in unwritten form. The interplay between written and unwritten literature was dynamic and ongoing, each borrowing from the other, but I don't think we can assume direct borrowing from a literary text unless the actual words are quoted. George”

இனி முதற்தந்திரம் 11 ஆம் துணைக்கதைக்கு (”நன்றி மறந்த தட்டான்”) வருவோம். முழுதும் இங்கு உரைக்காது சுருங்கத் தருகிறேன்.

--------------------------------------------------------------

”நன்றி மறந்த தட்டான்”:

பிருகுகச்சத்திற்கு அருகிலிருந்த ஊரில் யக்ஞ தத்தன் என்ற பார்ப்பனன் இருந்தான். (கவனங் கொள்ளுங்கள். இது நூற்றுவர் கன்னர் ஆளுகைக்குள் இருந்த, மகதத்திற்கு மேலைக் கடற்கரையிற் பயன்பட்ட, நருமதை யாற்றின் சங்கு முகத்திலிருந்த துறைமுகம். இக்காலத்தில் இது பரூச் எனப் படுகிறது.) ஒவ்வொரு நாளும் மனைவியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளான யக்ஞ தத்தன் பொருள் உதவி தேடிச் சின்னாட்கள் பயணித்து ஒரு காட்டுக்குள் நுழைந்தான். அவன் தண்ணீரைத் தேடி அலைந்த போது, ஒரு பெரிய கிணற்றைக் கண்டான். கிணற்றுள் புலி, குரங்கு, பாம்பு, ஒரு மனிதன் ஆகியோர் இருந்தனர்.

புலி தன்னைக் கிணற்றிலிருந்து தூக்கிவிடச் சொல்லிக் கேட்கிறது. முதலிற் தயங்கிய யக்ஞதத்தன், “உயிரிகளைக் காப்பாற்றுவதில் தன்னேர்ச்சி நேரிடுமானால் அதுவும் நன்மைக்கே” என்றெண்ணிப் புலி தீங்கு செய்ய மாட்டேன் என உறுதி கொடுத்ததால், தூக்கி வெளியே விட்டான். அடுத்தடுத்து குரங்கு, பாம்பு ஆகியவற்றையும் இதுபோல் உறுதி வாங்கிக் கொண்டு வெளியே தூக்கி விட்டான். அதன் பின்னர், புலி, குரங்கு, பாம்பு மூன்றுஞ் சேர்ந்து, “கிணற்றுள்ளிருக்கும் மனிதன் சகல பாவங்களையும் செய்யத் துணிந்தவன்; அவன் பேச்சை நம்பி மோசம் நம்பாதே!” என எச்சரித்தன.

புலி, யக்ஞ தத்தனை மலைக்குப் பக்கத்திற் காட்டிலுள்ள தன் குகைக்கு ஒரு முறை வரச் சொல்லித் தன்னால் இயன்ற உதவி செய்வதாகச் சொல்லியது. இதேபோல புலிக்குகைக்குப் பக்கத்திலிருந்த குரங்கும் வேண்டிச் சென்றது. “அவசியம் ஏற்படும் போது எனை நீ நினைத்தால் ஓடிவருவேன்” என்று சொல்லிப் பாம்பும் புறப்பட்டது. கிணற்றிலிருந்த மனிதனும் காப்பாற்றச் சொல்லிக் கத்துகிறான். இரக்கம் மேலிட்டு யக்ஞ தத்தன் அவனை வெளியே விடுகிறான். “நான் ஒரு தட்டான்; பிருகுகச்சத்தில் வசிக்கிறேன். தங்க ஆபரணம் செய்ய வேண்டின், என்னிடம் வா” என்றுகூறி அவனும் புறப்பட்டான்.

பிறகு, எங்கெங்கோ சுற்றிவிட்டு, உணவு கிடைக்காது பிராமணன் வீட்டுக்குத் திரும்புகையில் குரங்கு கூறியது நினைவிற்கு வர, அது வசிக்குமிடத்திற்குப் போனான். சுவை மிகுந்த பழங்களைக் கொடுத்து சாப்பிடச் செய்த குரங்கு, பசி தீர்ந்தவனிடம், “பழங்கள் வேண்டுமெனில் விரும்பியபோது இங்கே வந்து போ” என்று கூறியது. “நண்பன் செய்யவேண்டியதை எனக்குச் செய்தாய்; நன்றி! இப்போது புலியின் இடத்தைக் காட்டு” என்று கேட்டான் பிராமணன். குரங்கு புலிக் குகையைக் காட்டியது. புலி உபசரித்து, தங்க மாலைகளைப் பரிசாகக் கொடுத்து, ”ஓர் அரசகுமாரன் இவையணிந்து குதிரை மீதேறிக் காவலர் சூழ வந்தான். வழி தவறி வந்தவனைக் கொன்று இவற்றை வைத்திருந்தேன். நீ எடுத்து விரும்பிய திசையிற் செல்” லெனக் கூறியது.

மகிழ்ச்சியோடு பெற்று பிராமணன் திரும்பும் பொழுது பிருகு கச்சத் தட்டான் நினைவு வந்தது. அவனிடம் சென்றால், மாலைகளை நல்ல விலைக்கு விற்றுத் தருவான் என நம்பிப் போனான். தட்டான் வரவேற்று உபசரித்து,. “என்ன காரியம் ஆக வேண்டும்?” என்றான். “விற்றுத் தரவேண்டும்” என்றான் பிராமணன். நகைகளைக் கண்ட தட்டான், “இவற்றை அரசகுமாரனுக்கு நானே செய்து கொடுத்தேன். அரச குமாரனை பிராமணன் கொன்று அபகரித்தான் போலும்? அரசனிடம் பிராமணனைக் காட்டிக் கொடுத்தால், வெகுமதி கிடைக்குமே?” என்று கருதினான். “யாரிடமாவது காட்டி, விலை தெரிந்து வரும் வரை இங்கேயிரு” என்று பிராமணனிடம் சொல்லிச் சென்றான்.

நேராகச் சென்று காட்டிய போது, “உன்னிடம் எப்படி வந்தன?” என்று அரசன் கேட்கத் தட்டான் தன் வீட்டிற்குப் பிராமணன் கொணர்ந்ததைக் கூறினான். அது கேட்டு அரசன், “நிச்சயமாக, அரச குமாரனைக் கொன்று, பிராமணன் மாலையை அபகரித்திருக்கிறான்.. அவனைக் கைது செய்து சிறையில் அடைத்து, காலையிற் கழுவில் ஏற்றுங்கள்” எனக் கட்டளையிட்டான். சிறைக்குட் சிக்கிய பிராமணன் தன்னிலை நொந்து, பாம்பை நினைக்க, அது வந்தது. “என்னை விடுவி” என, “அந்தப் புரத்தில் இராணியைக் கடித்து விடுகிறேன். மந்திரம் ஓதினும், விடமுறி தடவினும், விடம் இறங்காது. நீ போய்த் தொட்டால், இராணி உயிர் பெறுவாள். உனக்கு விடுதலையும் வெகுமதியும் கிடைக்கும்.” என்று பாம்பு கூறிப் போயிற்று.

சற்று நேரத்தில் இராணியைப் பாம்பு கடித்தது. பலரும் என்னவோ செய்தும் விடம் இறங்க வில்லை. “விடத்தை இறக்கிக் குணப்படுத்துவோருக்கு வெகுமதி வழங்குவதாய்” அரசன் அறிவிக்க, அது கேட்ட பிராமணன் குணப் படுத்துவதாகச் சொல்ல, காவலர் கட்டுக்களை அவிழ்த்து அரண்மனைக்குக் கூட்டிச் சென்று, அரசனிடம் விதயத்தைத் தெரிவித்தனர். பிராமணன் இராணியைத் தொட, விடமிறங்கியது. இராணி மலர் முகத்தோடு எழ, அரசன் பரிசுகள் வழங்கினான். “இவ் ஆபரணங்கள் உனக்கு எப்படிக் கிடைத்தன?” என்று அரசன் கேட்கப் பிராமணன் நடந்ததைச் சொன்னான். உண்மை அறிந்த அரசன் தட்டானைச் சிறையிலடைக்க உத்தரவிட்டான். பிராமணனுக்குப் பலவூர்கள் வழங்கி, அமைச்சனாக ஆக்கிக் கொண்டான். பிராமணன் தன்னூருக்குச் சென்று குடும்பத்தாரையும், உற்றாரையும் அழைத்து வந்து, பல யாகங்களைச் செய்து, அரச அலுவல்களைச் சீராகப் பார்த்துச் சுகமாகக் காலம் கழித்தான்.

---------------------------------------------------------

இதோடு முதல் தந்திரத் தொடர் நீளும். நம் கேள்விகள், முன்னிகைகளுக்கு வருவோம்.

1. நன்றி மறந்த தட்டானில்” நிகழ்வுகள் சுகமாக முடிகின்றன. சிலம்பிலோ ஒரே சோகம். ஆனாலும் தட்டான் பங்கு ஒரே மாதிரியாகவா இருக்கிறது? சிலம்பிற் பொற்கொல்லன் களவுக் குற்றம் மறைக்க கோவலனைக் காட்டிக் கொடுக்கிறான். பஞ்ச தந்திரத்திலோ, தவறு செய்யாத் தட்டான், வெகுமதி விரும்பித் தன் பேராசையால், யக்ஞ தத்தனை மாட்டி விடுகிறான். இரண்டும் நுணுகிய, ஆனால் உறுதியான வேறுபாடுடையவை. பஞ்ச தந்திரத்தில் பேராசை தலையெடுத்ததால் தட்டான் நன்றி மறக்கிறான்; சிலம்பிற் தப்புச் செய்யும் பொற்கொல்லன் அரச தண்டனையிலிருந்து தப்பிக்க, கோவலனை மாட்டிவிடுகிறான்.

2. சிலம்பில் அரச நியதி வழுவுகிறது. பஞ்ச தந்திரத்தில் அது வழுவ வில்லை. பஞ்ச தந்திரத்தில் யக்ஞ தத்தனிடம் அரச குமாரனின் மாலைகளே  உள்ளன. கோவலனிடமிருந்து காவலர் கொணர்ந்த சிலம்பு அரசியுடையது அல்ல; அது கண்ணகியுடையது. பஞ்சதந்திரத்தில் பின்னால் “என்ன நடந்தது?” என்று கேட்டறிந்து, அரசன் தட்டான் செயலைத் தண்டிக்கிறான். சிலம்பில், ஊழால் எல்லாம் தடுமாறிப் போகின்றன. இரு நூல்களின் குறிக்கோள்களும், அழுத்தங்களும் வெவ்வேறானவை. பஞ்சதந்திரத்தில் தட்டான் நன்றி மறக்கிறான். சிலம்பில் அப்படியொரு தேவையே பொற்கொல்லனுக்கு இல்லை. அவன் தன் களவுக் குற்றம் மறைக்க முயல்கிறான். ஆதாரமின்றி, “நன்றி மறந்த தட்டானைப் படித்தே சிலம்புப் பொற்கொல்லன் படைக்கப் பட்டான்” என்பது, ஞாயமின்றித் திரு இரா. நாகசாமி இளங்கோவை ஒரு கதைத் திருடராய்ப் பழிப்பதாகும். இப்படியொரு பழி இளங்கோவிற்குத் தேவையா?

3. சிலப்பதிகாரம் எழுந்தது பொ.உ.மு.75-80 என்று என்னூலில் நிறுவினேன். பஞ்சதந்திர மூலமெழுந்தது பெரும்பாலும் பொ.உ.மு.40-30 ஆகும். இரா.நாகசாமி செருமனிக் கட்டுரைப் படியும் பஞ்ச தந்திரத்தின் மூலக் காலம் பொ.உ.மு. முதல் நூற்றாண்டே. (தினமலர் பொ.உ. முதல் நூற்றாண்டென்று தவறாகக் குறித்தது.) இந்நிலையில் யார் கதைத் திருடர்? கதையை முன்னே சொன்னவர் யார்? அல்லது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததா?

”பாழ்கிணற்றில் வீழ்ந்த பொற்கொல்லன் ஒருவன், தன்னைக் காப்பாற்றியவனை அரசனிடத்தில் கள்வனெனப் பொய் கூறி தண்டனை பெற்றுத் தந்த கதையை, இளங்கோவடிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, அக்காலத்து வழக்கிலிருந்த நீதிகளையெடுத்து, தனது காப்பியத்தில் வைத்து, இளங்கோவடிகள் தந்தார்.” என்று திரு.இரா.நாகசாமி சொல்வதைக் கொஞ்சமும் ஏற்கவியலாது. ”இளங்கோ ஒரு கதைத்திருடர்” என்று இரா.நாகசாமி இங்கே நேரடியாய்ச் சொல்லாமற் பூசி மெழுகிச் சொல்கிறார். நாம் அதிர்ந்து போகிறோம். இக்கால நய மன்றங்களில் ”கதைத் திருட்டு” பற்றிய எத்தனையோ வழக்குகள் நடைபெறுகின்றன. ”நன்றி மறந்த தட்டானு”க்கும், சிலம்பின் பொற்கொல்லன் கதைக்கும் இடையே உறவு என்பது ஏணி போட்டாலும் காணாது. பொறுமையாய், ஆழமாய்ப் படித்த எவரும் அப்படிச் சொல்லார்.

ஈற்றுவாய்:

சிலம்பிற்குப் பஞ்ச தந்திரம் அடிப்படை என்பது முறையிலாக் கூற்றாகிக் காலக் கணிப்பை ஒதுக்கித் தன்மயக் கருத்தை வலிந்து திணிப்பதாகும். பார்ப்பதற்கு ஒன்று போல் சில காட்சிகள் (தட்டான், பொற்கொல்லன் கதையில்) தோற்றமளித்தாலும், 2 நூல்களின் உள்ளார்ந்த குறிக்கோள்கள் வேறானவை. வடபுலப் பஞ்சதந்திரம் பார்த்து தென்புலச் சிலம்பின் அடிக்கோள்களைத் தேடாது, சிலப்பதிகாரத்துளேயே திரு.இரா.நாகசாமி ஏன் தேடக் கூடாது? காப்பிய முழுமைக்கும் அடியொலியாய் 3 குறிக்கோள்களைப் பால்வகை தெரிந்த பதிகம் தெளிவாய் உணர்த்துகிறதே? [பெரும்பாலும் பின்னாற் சேர்க்கப்பட்ட பதிகம் இளங்கோ எழுதியதில்லை என்றாலும், கற்றுணர்ந்தோர் கொள்ளும் பாயிரமாய் இதை ஏற்கலாம் தானே?]

“அரைசியற் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி கார மென்னும் பெயரால்
நாட்டுது மியாமோர் பாட்டுடைச் செய்யுளென”

என்ற வரிகள் நூற்பொருளைப் பிழிந்து தருபவை.

”ஊழ்வினை உருத்துவந்து ஊட்டு”மென்பது கோவலன் மேற் பொதியும் குமுகப் பார்வையாகும்.

”அரைசியற் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவது” நெடுஞ்செழியனின் அழிவின் மேற்கொள்ளும் நயதிப் பார்வையாகும்.

”உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலென்பது” குமுக நயதிக்குப் போராடி, பாண்டியனைப் பழி கொண்டு, மதுரை தீக்கிரையானது சொல்லி, குமுகத்தார் பரசும் பத்தினிப் பார்வை.

 [பத்தினியென்பாள் தொழத் தக்கவள் என்பதே முதற் பொருளாகும், கற்புக்கு அரசி என்ற இக்கால விதப்பெல்லாம் இரண்டாம் நிலைப் பொருளாகும்.]

கூடவே, ”முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது, அடிகளே நீரே அருளுக” என்ற அழுத்தத்தால், காப்பியத்தின் 3 குறிக்கோள்களுக்கு அடுத்து, இன்னோர் அடிக்கோளாய், மூவேந்தர் நாடுகளை தமிழகக் கூறுகளாக்கி, தமிழர் ஓரிமையை இளங்கோ வலியுறுத்துவது புலப்படும்.

அந்தத் தூண்டலை தமிழுக்குள் பாராது, வடமொழி நூல்களுக்குள் விழுந்து விழுந்து திரு இரா. நாகசாமி போன்றோர் தேடுவது வேண்டா வேலையாகும். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், சிலப்பதிகாரம் என்பது உண்மையிலேயே ஒரு தமிழர் காப்பியம் தான்.

எடுகோள்கள்:

34. “சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும், அடியார்க்குநல்லாருரையும்”, டாக்டர். உ.வே.சா. நூல்நிலையம், பத்தாம் பதிப்பு, 2001. பக்.402-403.
35. http://viruba.com/final.aspx?id=VB0003195