Sunday, March 27, 2011

மொழிநடை

இந்தக் கட்டுரைச் சில ஆண்டுகளுக்கு முன் மடற்குழுக்களில் தகுதரக் குறியேற்றத்தில் (TSCII encoding) எழுதியது. பழையதைப் புரட்டிச் சீர் செய்து கொண்டிருக்கும் போது அகப்பட்டது. இன்றைக்கும் இது பொருத்தமாய் இருப்பது கண்டு ஒருங்குறிக்கு மாற்றி மீண்டும் உங்கள் வாசிப்பிற்கு அனுப்புகிறேன். நம்மைப் போன்ற பலரின் மொழிநடை சீர்பட வேண்டும். அதற்கு இது தூண்டுகோலாய் இருக்குமானால் மிகவும் மகிழ்வேன்.

அன்புடன்,
இராம.கி.

-------------------------------
"மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தானே? இதை ஏன் தலையிற் தூக்கி வைத்துக் கொண்டு இந்தத் தமிழர்கள் காலம் காலமாய்க் கூத்தாடுகிறார்கள்? இந்தக் கூத்தில் “தமிழ்த்தாய்” என்றொரு படிமத்தைக் கொண்டுவந்து தமிழை ஓர் அம்மன் போல ஆக்கி நெய் விளக்கேற்றி ஆலத்தி காட்டிப் பூசை செய்து...... மொத்தத்தில் தமிழர்கள் வெறி பிடித்து அலைகிறார்கள். இவர்களுக்கு இதே பிழைப்பாய் போய்விட்டது; மொழி என்று வந்தால் உணர்ச்சி வயப் பட்டு, அணங்கு வந்தது போல அரற்றுகிறார்கள். தவிர, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயான (?) வடமொழியை எதிர்த்துப் புலம்புகிறவர்கள் இவர்கள் மட்டுமே! இந்தியன் என்ற உணர்வே இவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது."

"மொழி என்பது மாறிக் கொண்டே இருக்கும் என்று தமிழர்களுக்குத் தெரியாதா? மாற்றத்திற்கு ஏற்பப் பழக வேண்டியதுதானே? எப்படிப் பேசுகிறோமோ, அப்படி நடை பழகினால் என்ன? இதில் என்ன தூய தமிழ், தனித்தமிழ், மண்ணாங் கட்டி? இப்படியெல்லாம் அடம் பிடித்தால், அப்புறம் சங்க காலத்திற்குப் போக வேண்டியதுதான்; சங்க காலத்திற் கூட வடமொழி மிகச் சிறிதாவது கலந்துதானே எழுதினார்கள்? இந்த நிலையில் ஆங்கிலம், வடமொழி கலக்காமல் இன்றைக்குத் தமிழில் எழுத முடியுமா? அப்படி எழுதினால் அது செயற்கையாக இல்லையா? ஆங்கிலத்தின் வாயிலாய் எவ்வளவு செய்திகள் சொல்லப் படுகின்றன? அவை ஒவ்வொன்றிற்கும் சொல் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால், வாழ்நாள் தீர்ந்துவிடாதா? மற்றவர்கள் முன்னே போய்விட மாட்டார்களா?"

மேலே கூறிய வகையிற் பேசுபவர்கள் தமிழருக்குள்ளும், தமிழரல்லாத மற்ற இந்தியருக்குள்ளும் இருக்கிறார்கள். காலத்தின் கோலம் இவர்களை வலிந்தவராக, படித்தவராக, மிடையக்காராக, பொதுக் கருத்தை உருவாக்குவதில் பெரும் தாக்கம் உடையவராக மக்கள் நடுவில் இன்றைக்கு ஆக்கி வைத்திருக்கிறது. இதன் விளைவாகத் தமிழ் பற்றிப் பேசுவதே இற்றைத் தமிழகத்தில் இகழ்வானதாய் எண்ணப்படுகிறது. இதற்குத் தோதாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, இது நாள் வரை தமிழ் பற்றித் தமிழகத்தில் வாய் கிழியப் பேசிவந்தவர்கள் பலரும் (குறிப்பாக அரசியலிற் பங்கு கொள்பவர்கள்), கொள்கைப் பிடிப்பிற் தளர்ந்து போய், வாழ்க்கையின் போக்கால் நொய்ந்து, பணம், சொத்து, பதவி என்று எல்லாவற்றிற்கும் ஆட்பட்டு தற்காத்து தற்கொண்டவை மட்டுமே பேணி நீர்த்துப் போனார்கள். தமிழைப் பற்றிப் பேசுவோர் இன்றைக்கு மிகக் குறைந்து போனார்கள்.

இந்த நிலையில் தான் இக்கட்டுரையில் மொழிநடை பற்றி கொஞ்சம் சிறிதளவு அலச முற்படுகிறேன்.

மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்காக உள்ளதுதான். இதில் யாருக்கும் இரண்டு கருத்துக் கிடையாது. ஆனால் கருத்துப் பரிமாற்றம் எழ வேண்டுமானால் நான் எழுப்பும் ஓசை உங்களுக்குப் புரிய வேண்டும், நீங்கள் எழுப்புவது எனக்குப் புரியவேண்டும் அல்லவா? சரியாகச் சொன்னால், குறிப்பிட்ட ஓசைகளின் படிமங்கள் நம் இருவர் மனங்களின் உள்ளே இருக்க வேண்டும் அல்லவா? இதைப் பற்றி விளங்க ஒரு சில காட்டுகளைப் பார்ப்போம்.

தென்மாவட்டங்களில், குறிப்பாக மதுரைப் பக்கம், சில போதுகளில் நம் மக்கள் குலவையிடுகிறார்கள். இந்தக் குலவைச் சத்தம் ஒரு வாழ்த்துக்கான அறிகுறி, பண்பாட்டின் தொகுதி என்று நமக்கு புரிந்தால் அல்லவா, நாமும் குலவையிடுவோம்? அது தெரியவில்லையெனில் குலவை என்பது ஏதோ ஒரு பொருள் அற்ற கூப்பாடாக அல்லவா தெரியும்?

இதே போல, நம்மிடம் பேசும் போது இன்னொருவரைக் குறித்து "ஆமா, இவுங்க என்னத்தைக் கிழிச்சாங்க?" என்று நண்பர் ஒருவர் சொல்லுகிறார்; இங்கே "எதைச் செய்தார்கள்?" என்றல்லவா அந்த நண்பரும், நாமும் பொருள் கொள்ளுகிறோம். இந்தப் புரிதல் இல்லாத, குறிப்பாகத் தமிழர் அல்லாத ஒருவருக்கு இந்தப் பொருட்பாடு விளங்குமா?

இன்னும் ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். எழுத்தாளர் கி.இராசநாராயணன் பல்வேறு நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு கதை இப்படிப் போகும். தம்பிக்காரன் ஒருவன் ஊர் மணியமாக இருந்தபோது, ஊருக்குள் ஒரு தாய் இறந்த வீட்டில், "உங்களுக்கு மட்டுமா, அவர்கள் தாயாக இருந்தார்கள்? ஊருக்கே தாயாக இருந்தார்கள்" என்று சொன்னதைக் கேட்டு, பிறிதொருநாள் அவனுடைய அண்ணன்காரன் தான் மணியமாக நடந்து கொள்ள வேண்டிய பொழுதில், தங்கள் ஊரில் ஒருவனின் மனைவி இறந்த வீட்டில், "உங்களுக்கு மட்டுமா, அவர்கள் மனைவியாய் இருந்தார்கள்...." என்று சொல்லி அடிவாங்கிக் கட்டிக் கொண்டானாம். "எந்த இடத்தில் எப்படிச் சொல்லுவது? எதைச் சொல்லுவது? எப்படி மொழியைப் பயன்படுத்துவது?" என்று பண்பாட்டைத் தெரிந்தால் அல்லவா, இப்படி அடிவாங்காமல், கிறுக்கன் என்று பெயர் வாங்காமல், இருக்க முடியும்? இடம், பொருள், ஏவல் அறிந்து பேச முடியும்? இதற்கு நல்ல மொழிநடை, பண்பாட்டு மரபுகள் தேவையல்லவா?

நம்மூரில் போய், ஒருவரின் வரவேற்பை "வெதுவெதுப்பாக இருந்தது" என்று சொல்ல முடியுமோ? "இதமாக இருந்தது" என்றல்லவோ சொல்லவேண்டும்? இதற்குத் தமிழ்நடை தெரியத்தானே வேண்டும்?

மொத்தத்தில் சொன்னால், மொழியும், அதன் சொற்களும், இலக்கணமும், நடையும் நம்முடைய நடைமுறையையும், பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. என்னுடைய நடைமுறையும், பண்பாடும், பழக்க வழக்கங்களும் உங்களோடு ஓரளவாவது பொருந்தினால் தானே நான் சொல்லுவது உங்களுக்கும், நீங்கள் சொல்லுவது எனக்கும் புரியும்.

இந்த அடிப்படையைச் சொல்வதற்கும், புரிபடுவதற்கும் தான் இந்தக் காலத்தில் இவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது. நாம் ஓவ்வொருவரும் மழலைப் பருவத்தில் இருந்து நமக்கென்று ஒரு சொல் தொகுதியைச் சேர்த்து வருகிறோம். இது வாழ்வில் நமக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்தது. இந்தச் சொற்றொகுதி வெறும் பத்தோடு இருக்கலாம்; பத்தாயிரமாகவும் இருக்கலாம்; நிரவலாகப் பார்த்தால், இன்றைத் தமிழருக்குத் தெரிந்த சொற்றொகுதி வெறும் மூவாயிரத்தில் இருந்து நாலாயிரம் என்றே மொழியாளர் சொல்லுகிறார்கள்; இது மிகக் குறைவு. குறைந்தது இரண்டு மடங்காக ஏழாயிரத்தில் இருந்து எட்டாயிரமாகத் தெரிந்தால் தான் எந்தச் செய்தியையும் தமிழில் எளிதாகச் சொல்ல முடியும்; கிரியாவின் இக்காலத் தமிழ் அகரமுதலியிலேயே (முதற்பதிப்பில்) பதினாறாயிரம் சொற்கள் தான் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இதுவும் மிகக் குறைவான பதிவீடே!

தமிழ்ச் சொற்கள் நம் வாயில் தடையின்று வரவேண்டி இருக்க. மிகக் குறைந்த அளவே தமிழ்ச் சொற்களை அறிந்திருந்தால், அன்றாட வாழ்வில் நுணுகிய கருத்துக்களை தமிழில் எப்படிச் சொல்லமுடியும்? குண்டுசட்டிக்குள்ளா குதிரை ஓட்ட முடியும்? இதன் விளைவாகத்தான் படித்தவர்கள் ஆங்கிலம் கலந்து பழகுவதும் பண்ணித் தமிழ் பேசுவதும் என இக்காலத்தில் வெளிப்படுகிறது. (அண்மையில் ஒரு பேர் பெற்ற தாளிகையாளர் ஒரு இணைய தளத் தொடக்க விழாவில் பேசினார். அவர் பேசியது முற்றிலும் தமிங்கிலம். கேட்டுக் கொண்டிருந்த பலரும் வியந்து போனோம். இந்தத் தாளிகையாளரை ஆசிரியராகக் கொண்ட தாளிகை தமிங்கிலத்தையே தன் நடைமொழியாகக் கொண்டது வியப்பில்லை தான்.) தப்பு யாரிடம்? நம்மிடமா? மொழியிடமா? இப்படி மெத்தப் படித்தவர் தப்புப் பண்ணப் போக, அதைப் பார்த்துப் படிக்காதவரும் ஆங்கிலம் கலந்த தமிங்கில நடைதான் மதிக்கப் படுகிற நடை என்று ஒரு போலியான நடையைச் சரியென்று கருதி, கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடுவது போலப் பயிலுகிறார்கள். மொத்தத்தில் வாலறுந்த நரியின் கதைதான். எல்லோரும் மடிக்குழைப் பள்ளிக்குப் படையெடுக்கிறார்கள். கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?

பிழையை நம்மிடம் வைத்துக் கொண்டு, நாம் அறிந்த தமிழ்ச் சொற்களின் தொகுதியைக் கூட்டிக் கொள்ளாமல், நம்மைச் சுற்றி இருக்கும் உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்களுக்கும் அதைத் தூண்டாமல், ஆங்கிலம் கலந்து பேசிவிட்டு "பின் தமிழில் அதைச் சொல்லமுடியாது, இதைச் சொல்ல முடியாது" என்று சொல்ல முனைவது, நம் பிழையை மொழியின் மேல் ஏற்றிச் சொல்வது அல்லவா? நம்மில் எத்தனை பேர் தமிழ்-தமிழ் அகரமுதலியை வாங்கி வீட்டில் வைத்திருந்து அவ்வப்போது பயின்று சொல் தொகுதியைக் கூட்டிக் கொள்ளூகிறோம்? ஒவ்வொரு சிறு உரையாடலிலும், தெரியாமல் ஆங்கிலம் பயின்று பின் அதை உணர்ந்து, அடுத்தமுறை தமிழில் அதைப் பழகுகிறோமா? இந்த நடைமுறை ஒன்றும் பல்பெயர்க்கும் புதுச்சொற்கள் அல்ல. எல்லோரும் அறிந்த தமிழ்ச் சொற்களே. வாருங்கள் என்று சொல்ல முடியாமல் come in என்று சொல்லும் தமிழர்கள் எத்தனை? மகிழ்வதற்கு மாறாக enjoy பண்ணுகிறவர்கள் எத்தனை? நன்றி சொல்லத் தயங்கி thanks பண்ணும் தமிழர்கள் எத்தனை? இது சோம்பலா? அறியாமையா? அல்லது வரட்டுத் தனமா? இரண்டு தமிழர் ஒருவரை ஒருவர் காணும் போது செய்யும் உரையாடலில் இன்று 40% தமிழ் இருக்குமானால், இன்னும் ஒருவாரத்தில் 45% தமிழ் இருக்க வேண்டாமா?

தனித்தமிழ் என்பது ஓர் அடையாளம், குறியீடு; அதை நோக்கி நாம் போகிறோம். போகும் வழியில் நல்ல தமிழ் வந்தால் இப்பொழுது போதும். சில பேரால் 95% விழுக்காடு தனித்தமிழ் பேச முடியும்; இன்னொருவரால் 50% விழுக்காடு தான் செய்ய முடியும். இதில் ஒருவர் குறைந்தவர், மற்றவர் தாழ்ந்தவர் என்று எண்ணுவது தவறு. சரியாகப் பார்த்தால், இருவரும் தாங்கள் பேசும் தனித்தமிழ் அளவை இடைவிடாது கூட்ட முயல வேண்டும். அந்த வளர்ச்சி எண்ணம் தான் முகமையானது; எத்தனை விழுக்காடு என்பது ஒரு பொருட்டல்ல. இப்படி வளர்ப்பு முயற்சியே செய்யாமால் வெறுமே வேதம் பேசிக் கொண்டு வெந்நீர் ஊற்றிக் கொண்டு "அது முடியாது, இது முடியாது, தமிழர்க்கு வெறி" என்று மந்திரம் ஓதிக் கொண்டு இருப்பதில் பொருள் என்ன?

மொழியை அம்மன் ஆக்குவது, கூத்தாடுவது என்பதெல்லாம் வெறும் உணர்வு வெளிப்பாடுகள்; அவற்றால் எந்தப் பயனும் கிடையாது தான்; அதே பொழுது பாரத மாதா என்பதும் ஒரு படிமம் தானே? தாய் நாடு, தந்தை நாடு என்பவையும் படிமங்கள் தானே? இந்தப் படிமங்கள் நம் முன்னே வைக்கப் படுகின்றனவே? இப்படி ஒரு வகைப் படிமம் ஏற்றுக் கொள்ளக் கூடியது, இன்னொன்று ஏற்றுக் கொள்ளக் கூடாதது என்பது ஓரப் பார்வை அல்லவா? தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர் என்ற உணர்வை உறுதிப் படுத்துவதற்காகக் கொண்டு வரப் பட்டது. தமிழருள்ளும் மற்ற பிரிவினைகள், குறிப்பாக சாதி, மதம் போன்றவை மேலோங்காது தமிழர் ஓரினம் என்ற படிமத்தை அழுத்துவதற்காக இந்த வாழ்த்துக்கள் எழுந்தன. இந்தியா என்பது பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு நாடு என்பதை மறுப்போர் மட்டுமே, இந்தத் தமிழ்த்தாய் என்ற படிமத்தை மறுக்கிறார்கள். இந்தக் கேள்வியை இங்கு அலசினால் சொல்ல வந்த பொருள் விலகிவிடும் என்பதால் நான் முற்படவில்லை. இப்பொழுது தமிழ் நடை பற்றி மட்டுமே பேச விழைகிறேன்.

முதலில் கலப்பு நடைக்குச் சிலர் அளிக்கும் சப்பைக் கட்டு.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே!"

என்ற தொல்காப்பிய நூற்பாவையே வைத்துக் கலப்பு நடைக்குப் பரிந்து வருபவர் பலரும் உண்டு. இத்தகைய கூற்றும் பொருந்தாக் கூற்றே. இந்த நூற்பா, தமிழில் ஏற்படும் பலுக்கல், சொல், சொற்றொடர், இலக்கணம் போன்ற மாற்றங்களைப் பற்றியதே ஒழிய வரைமுறை இன்றிக் கடன் வாங்குவது பற்றியல்ல.

இந்தக் கலப்பு நடைக்குப் பரிந்து வருபவர் தங்களுடைய ஆங்கில நடையில் இப்படிக் கலந்து எழுதுகிறார்களா? அதை அலுவற் புலனங்களிற் புழங்க முடியுமா? வெறுமே ஆங்கிலம் கடன் வாங்குகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிற இவர்கள் I pannified a visit என்று எங்கேணும் எழுதட்டுமே? மற்றவர்கள் நகை தவிர்த்த முறையில் ஏற்கிறார்களா என்று பார்ப்போம்? பிறகு ஏன் ”visit பண்ணினேன்” என்று எழுதுகிறார்கள். இதைத் தமிழில் ஏற்க வேண்டுமோ? ”வந்திருந்தேன்” என்று சொல்லுவது இளக்காரமா? இந்த visit என்ற சொல்லைத் தவிர்த்துத் தமிழில் பேசினால் விளங்காதா? அந்த ஆங்கிலச் சொல்லைத் தமிழர்களுக்குள் பேசும் போது தவிர்த்தால் என்ன? அதை முடிந்த மட்டும் தவிர்த்துப் பாருங்களேன்; அதற்காக முயலுங்களேன்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது நல்லதற்கும் உண்டும்; பொல்லாததற்கும் உண்டு. ஆங்கிலச் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்கலாம்; அதே போலக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டியும் வரலாம். ஒன்றில் நம்மொழி நிற்கும்; இன்னொன்றில் நம்மொழி சிறிது சிறிதாக மறையும். உகப்பு நம்மிடம் தான்.

அடுத்தது வேற்று மொழி ஒலிகளைப் பற்றியது. "இந்த ஒலிகள் எல்லாம் தமிழில் இல்லை; இவையெல்லாம் வேண்டாமா?" என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகிறார்கள். நாம் தமிங்கிலம் பழகப் போகிறோம் என்றால் இந்த ஒலிகள் எல்லாம் தேவையே? தமிழ் ஆளப் போகிறோம் என்றால் இந்த ஒலிகளை பிறைக்குறிக்குள் ஏதோ ஒரு வகையில் குறிப்பது தவறில்லை. ஆனால் அதற்காகத் தமிழில் புதுக் குறியீடுகள் தேவையில்லை. வெறும் 31 எழுத்துக்களையும் ஒருசில குறியீடுகளையும் வைத்து 95 ஒலிகளை நாம் எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறோம். இந்தக் குறியீடுகளைக் கூட்டிக் கொண்டு போவதில் பொருள் இருக்கும் என்று இதுகாறும் எனக்குத் தோன்றவில்லை. அதே பொழுது இதை முடிந்த முடிவாகவும் நான் சொல்லவில்லை. இந்தக் கேள்வி அவ்வளவு முகன்மையில்லாத ஒன்று என்றே நான் எண்ணுகிறேன். இதைப் பின்னொரு நாளில் பார்ப்போம்.

அடுத்து, நடை பற்றிய உரையாடலில், பேச்சுத்தமிழ் எழுத்துத்தமிழ் என்ற இரண்டு நடை இருப்பதைக் கூறி "பேசுவதுபோல் எழுதினால் என்ன? என்ற கேள்வி நெடுநாளாக இருந்துவருகிறது. பேச்சுத் தமிழ் என்பது இன்றைக்கு எழுத்தில் இருந்து வெகுதொலைவு விலகித்தான் போயிற்று. இப்படிப் பேச்சுத்தமிழுக்கும் எழுத்துத்தமிழுக்கும் இடைவெளி ஏற்பட்டுப் பின் புதிய நடை ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய இலக்கணம் படைப்பதும் வழி வழி வந்ததுதான். அதனால் தான் வள்ளுவனும், இளங்கோவும், கம்பனும், பாரதியும் அவர்கள் காலத்தை ஒட்டி, ஒரு குறியீடு ஆனார்கள். அவர்கள் காலத்தில் மொழி நடையை எளிமைப் படுத்தினார்கள். இப்படி எளிமைப் படுத்திய படிதான் நன்னூல் இலக்கணம் இடைக்காலத்தில் எழுந்தது. இதே போல, மு.வ.வின் இலக்கணப் பொத்தகம் 1960 களில் பெரிதும் பரவியது.

படைப்பாக்கங்களில் முற்றிலும் பேச்சுத் தமிழாகவே எழுதினால் முந்தையத் தமிழோடு அவை தொடர்பற்றுப் போகும். அதே பொழுது முற்றிலும் முந்தையத் தமிழாகவே எழுதினால் படிப்போரோடு நெகிழ்வு விட்டுப் போகும். இதில் சரியான அளவை என்பது நாம் எடுக்கும் வடிவத்தைப் பொறுத்தது. கதை மாந்தர் பேசுவது பேச்சுத் தமிழாகவும், கதையாசிரியன் பேசுவது எழுத்துத் தமிழாகவும் இருப்பது ஓரளவு சரியாக இருக்கலாம். இதுதான் சரி என்று அடையாளம் காட்ட முடிவதில்லை. கூடிய மட்டும் கொச்சைப் பேச்சைத் தவிர்த்து, அதே பொழுது வட்டார வழக்குகளைத் தவிர்க்காமல் எழுத முடியும்; இதற்குப் பயிற்சி வேண்டும்.

அடுத்த கருத்து துல்லியம் பற்றியது. தமிழில் பலரும் நம் நடையில் பூசி மெழுகினாற் போல பொதுச் சொற்களை வைத்து துல்லியம் இல்லாமல் சொல்லி வருகிறோம். சொற்களின் ஆழம், துல்லியம், விதப்பு (specificity) தெரிந்து பயன்படுத்துவது நல்லது. ask, enquire என்ற இரண்டு சொற்களுக்கும் கேட்டல் என்றே இந்தக் காலத்திற் பயன்படுத்துகிறோம். இரண்டும் ஒன்றா? இல்லையே? ஒன்றைக் கேட்டல் என்றும், இன்னொன்றை வினவுதல் என்றும் குறிப்பிட்டுச் சொல்லுவது நம்மில் மிகவும் குறைந்திருக்கிறது. நாம் துல்லியம் பார்க்காவிட்டால், மொழியின் புழக்கம் குறையும்; முடிவில் பண்ணித் தமிழுக்குத் தாவி விடுவோம்.

இன்னொன்று வாயால் ஒலித்துப் பலுக்குவது. ஒரு சொல்லைச் சொல்லுகிறோம். அதன் எழுத்துக்களை பிரித்து ஒலிக்க வைத்துக் காட்டுவதைப் பலுக்குவது என்று சொல்லுகிறோம். ஆங்கிலத்தில் spelling என்கிறார்கள். ஒரு சொல்லை உயிர்த்துக் காட்டுவது உயிர்தருவித்தல் >உயிர்தரித்தல் >உயிர்ச்சரித்தல் >உய்ச்சரித்தல்> உச்சரித்தல் என்று ஆகும்; இதைத்தான் ஆங்கிலத்தில் vocalization என்கிறார்கள். இங்கே மாத்திரைகளின் நீளம் கூடக் குறைந்து காட்டப் படுகிறது. இந்த இரண்டுமே இன்றையத் தமிழர்களிடம் மிகக் குறைந்து இருக்கிறது. அதனால் தான் ரகர, றகரத் தகறாறும், லகர, ளகர, ழகரக் குழப்பமும் இருக்கிறது. இகர, எகரக் குழப்பம், உகர, ஒகர மாற்றம் எல்லாமே உயிர்தருவித்தலின் கோளாறு. நூற்றுக்கு 70 பேருக்கு மேல் நம்மிற் தவறாகப் பலுக்குகிறோம். 20% பேராவது உயிர் தருவித்தலிற் குறைப்படுகிறோம். மொழிநடை பண்பட வேண்டுமானால், இதுவும் மாற வேண்டும்.

அடுத்தது உள்ளடக்கம் பற்றியது. தமிழ் என்றாலே பழமை பேசுவதற்கும், இலக்கியம் உரைப்பதற்கும், கவிதை, கதை படைப்பதற்கும் என்று எண்ணிக் கொள்ளுகிறோம். இந்தக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு, நகை எல்லாம் வெறும் வடிவங்கள். இவற்றிற்குள் சொல்ல வரும் செய்திகள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ் சவலைப் பட்டுக் கிடக்கிறது என்கிறோம்; ஆனால் அதைக் கவனிக்க முன் வர மாட்டேன் என்கிறோமே? பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் தமிழில் அவை பற்றிய ஆக்கங்களை படைக்க முன் வரவேண்டும். புதிய உள்ளடக்கங்கள் தமிழுக்குள் வரவேண்டும்; நேற்று எழுந்த செய்தி இன்றைக்குத் தமிழில் வரவேண்டும்; வெறுமே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்ததை மட்டுமே தமிழில் எழுதி என்ன பயன்? இன்றைய உயிரியலில் ஓர் ஆக்கம்? இன்றையப் பொருளியலில் ஓர் ஆக்கம்? இன்றையப் பூதவியலில் ஓர் ஆக்கம்? இன்றைய ஓவியம் பற்றி ஓர் ஆக்கம்? இன்றைய மாந்தவியல் பற்றி ஓர் ஆக்கம்? இன்றையச் சட்டத்துறை பற்றி ஓர் ஆக்கம்? இன்றைய மின்னியல் பற்றி ஓர் ஆக்கம்? உடற்கூறு பற்றி இன்று வந்த ஓர் ஆக்கம்? இவை எல்லாம் மேலே சொன்ன வடிவங்களில் வரட்டுமே? இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நாம் ஆக வேண்டாமா? வெறுமே ஒரு சிலர் மட்டும் தனிச் சால் போட்டுக் கொண்டு கருமமே கண்ணாயினராய் இருப்பது எந்த வகையிற் சாலும்? அவர்களோடு சேர்ந்து என்ன செய்தோம் என்று நாம் எல்லோரும் எண்ண வேண்டாமா? இதைச் செய்தால் தானே நம் நடையும், மற்றவர் நடையும் வளப்படும். தமிழின் மொழிநடையும் இந்தக் காலப் புலனங்களுக்கு நெகிழ்ந்து கொடுக்கும்.

மொழி நடை என்பது நம் கையில். அதை ஆற்றுப் படுத்த வேண்டியது நம் பொறுப்பு.

அன்புடன்,
இராம.கி.

Sunday, February 06, 2011

ஒருங்குறி - சொற்பிறப்பு

பொதுவாக எல்லா நிறுவனங்களிலும், (நிறுவனங்களாய் ஆகிப் போன இயக்கங்களிலும் கூட) அங்கொருவர் இங்கொருவராய் சில சட்டாம் பிள்ளைகள், தம் ஆளுமைகளைக் காட்டிக் கொண்டே யிருப்பார். ஏதோ நிறுவனச் சட்ட ஒழுங்கை இவர் மட்டுமே கட்டிக்காப்பது போல் நடந்து கொள்வார். தமிழ் உரிமையைப் பாதுகாக்கும் இயக்கங்களும் கூட இதில் விலக்கில்லை. பிரம்பு வைத்துக் கொண்டிருக்கும் சட்டாம் பிள்ளைகள் “தாங்கள் சொல்வதும், தம் தலைவன் சொல்வதும் தான் சரி” என அடம் பிடிப்பார். மற்றவரைத் தம் கருத்திற்கு வளைக்க எண்ணிவிட்டால், பிரம்பையோ, புளியம்விளாறையோ எடுக்கவும் தயங்க மாட்டார். 

“ஏலேய், இந்தாப் பாரு, கப்சிப்புன்னு இருக்கோணும், தெரியுமா? பேசச் சொன்னாத் தான் வாயைத் தொறந்து பேசணும், இல்லைன்னா, சூத்தைப் பொத்திக்கிட்டு மூலையிலெ உட்காரணும். கேள்வி கேட்க வந்திட்டான் பாரு, கேள்வி. எங்களுக்குத் தெரியாதோ?” என்று அதிகாரம் பண்ணியே பழக்கப் பட்டவர்.

இவர் போன்ற சட்டாம் பிள்ளைகளை இளமைக் காலத்தில் திண்ணைப் பள்ளியில் படித்தபோது நேரடியாகச் சந்தித்திருக்கிறேன். அக்காலத்தில் எங்கள் கண்டனூரில், “அரசுப் பாடத்திட்ட வழி” சொல்லிக் கொடுக்கும் “சிட்டாள் ஆச்சி நினைவு தொடக்கப் பள்ளி” என்ற தனியார் பள்ளியோடு 2, 3 திண்ணைப் பள்ளிகளும் இருந்தன. நான் எங்கள் அத்தை வீட்டிற்கு அருகில் நாலாம் வீதியில் இருந்த ”புளிய மரத்தடித் திண்ணைப் பள்ளியில்” மூன்றாவது வரை படித்தேன். பிறகு அங்கிருந்து மாறி, “அரசுப் பாடத்திட்டத்” தொடக்கப் பள்ளிக்கு மாறிக் கொண்டேன். அகவை முற்றிய ஓர் ஆசிரியர் தான் திண்ணைப் பள்ளியில் முன்று வகுப்பிற்குஞ் சொல்லிக் கொடுப்பார். அவருக்கு உதவியாக சட்டாம் பிள்ளை இருப்பார். ஆசிரியர் கையிற் பிரம்பு இருக்கிறதோ, இல்லையோ, சட்டாம்பிள்ளை கையிற் பிரம்பு எப்பொழுதும் இருக்கும்.  ஆசிரியர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சுற்றிச் சுழன்று சொல்லிக் கொடுப்பார். அவர் இல்லாத 2 வகுப்புகளை சட்டாம்பிள்ளை பார்த்துக் கொள்வார். பாடஞ் சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், பிள்ளைகளைக் கட்டுக்குள் வைப்பதிற்றான் சட்டாம்பிள்ளை ஈடுபடுவார்.

பொதுவாய்ச் சட்டாம்பிள்ளை என்றாலே அக்காலப் பிள்ளைகளுக்குச் “சிம்ம சொப்பனம்”. ஆனாலும் குசும்புகள், ஏமாற்றுகள், விளையாட்டுகள், எதிர்ப்புகள், கேள்விகள், பின் அடிவாங்கல், தண்டனை பெறல் என எல்லாமும் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் நடக்கும். பெற்றோரும் சட்டாம் பிள்ளை தேவை என்பது போல நடந்து கொள்வார். எனக்கும் சட்டாம்பிள்ளைகளுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். [இப்படி எதிர்த்தே பழக்கப்பட்டதால் தான் ஒரு வேளை இடதுசாரிச் சிந்தனை என்னுள் வளர்ந்ததோ, என்னவோ?] இடைவிடா முரண்பாடுகளால், எப்போதும் சட்டாம் பிள்ளைகளிடமிருந்து நான் பெரிதும் விலகி நிற்பேன். இவரிடம் தெரியாத்தனமாய்ச் சிக்கிக் கொண்டதில்லை. (எல்லாம் இளமையில் பட்ட அறிவு)

இதுபோற் சட்டாம்பிள்ளைகளை, இளமையில் மட்டுமின்றி, அகவை கூடிய போதும் பல நிறுவனங்களில், இயக்கங்களிற் கண்டுள்ளேன். அப்போதெலாம் அவரை விட்டு விலகியே நான் இருந்துள்ளேன். சட்டாம் பிள்ளைகள் எனக்கு என்றுமே நெருங்கியவராய் ஆனதில்லை. சென்ற வாரம் அப்படி ஒரு சட்டாம் பிள்ளையை மீண்டும் காணவேண்டிய நேர்ச்சி ஏற்பட்டது. இளமைக் கால நினைவுகளை அது மீண்டும் கிளறிவிட்டது.

சனவரி 30 ஆம் நாள், நண்பர் இரா.சுகுமாரனின் அழைப்பில் அவர்களுடைய புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நடத்திய “தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில்” கலந்து, திரும்பினேன். அம்மாநாட்டில் என் பங்களிப்பைப் பேச்சாக அன்றி, பரத்தீடாக (presentation) அமைத்திருந்தேன்.

பரத்தீட்டின் ஊடே “உலகின் பல்வேறு மொழிகளை எழுதிக் காட்டும் எழுத்துகளுக்கு எண்களைக் கொடுத்து அவற்றையெலாம் ஒருங்கு சேர்த்து ஒரே ஆவணத்திற் பயன்படுத்த முடியும் என்ற தீர்வு இயல்பாய் எழுந்தது. இம்முறைக்குத் தான் ஒருங்குறி என்று பெயர். Universal code என்பதை உணர்த்தும் வகையிற் சுருக்கி Unicode என்று பெயரிட்டார். தமிழில் இதே பெயரை ”ஒருமிய, ஒருமுகிற, ஒருமும் குறி” என்ற பொருளில் வினைத் தொகையாய்க் கொண்டு  ஒருங்குறி என்று குறிக்கத் தொடங்கினோம். (இது தன்வினையில் எழுவது.) 

ஒருங்குறி என்ற சொல்லின் பிறப்பிலக்கணம் புரியாது ”சீருரு” என்றுசிலர் தமிழிற் சொல்ல முற்படுவது முற்றிலும் பிழை. This is not a uniform code. (அதே போல சிலர் ஒருங்கு குறி என்றுசொல்ல முயல்கிறார். அதுவும் தவறான புரிதலே. இரண்டு குகரங்கள் இதில் புழங்க வேண்டிய தேவையில்லை. ஒருங்குறியில் வரும் ஒரு குகரம் போதும். ஒரு வாக்கியத்திற் சொற்சிக்கனம் போல சொல்லிலும் எழுத்துச் சிக்கனம் தேவை)” என்று சொல்லிப் பாவணரையும் துணைக்கு அழைத்திருந்தேன்.

வேறொன்றுமில்லை, கொஞ்சநாளாகவே, இதை விளக்கிச் சொல்லித் தவறான சொற்களை முளையிலேயே தவிர்க்க வேண்டுமென்ற முனைப்புத் தான். பொதுவாகத் ”தான் பரிந்துரைத்த சொல்லே நிலைக்க வேண்டும்” என்றென்னும் ஆளல்ல நான். எது நாட்படக் குமுகத்தில் நிலைக்கிறதோ, அது நிலைத்துப் போகட்டும் என அமைந்து போகும் ஆள். ஆனால் ஒரு சொல்லை ஏன் பரிந்துரைத்தேன் என்பதை விளங்கச் சொல்லி விட வேண்டும் என எண்ணுவேன்.

நான் பேசி முடித்து மற்றோரும் பேசி முடித்து, நன்றி நவிலலுக்கு முன் அகவை முதிர்ந்த பழம் தமிழாசிரியர் ஒருவர் மேடைக்கு எழுந்து போய், “ஒருங்கு குறி என்பதுதான் சரி. ஒருங்குறி என்பது தவறு. ஒருங்கு குறி என்று நான்தான் மாற்றியமைக்கச் சொன்னேன். ”கணிஞர் கணியோடு தம் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழென்று வந்தால், அதைப் பார்த்துக் கொள்ள நாங்கள் இருக்கிறோம், புதுக் கலைச்சொற்களை நாங்கள் உருவாக்குவோம்” என்ற தொனியில் முன்னே நான்சொன்ன கருத்தை மறுத்து நறுக்கென்று ஒரு குட்டை என்மேல் வைப்பது போல் பேசி நகன்றார். எனக்குச் சட்டாம் பிள்ளைகள் பற்றிய நினைப்புச் சட்டென வந்தது.

”சரி, எனக்கும் அகவை கூடிய பெரியவர், போராளி, இவரை மேடையில் மறுத்துப் பேசி இரண்டுங் கெட்டான் நிலை ஆகிவிடக் கூடாது” என  அமைந்து விட்டேன். ஆயினும் வீட்டிற்குத் திரும்பி வரும்போது என்னுட் சிந்தனை ஓடிக் கொண்டேயிருந்தது. ஒருங்குறி என்ற சொல் பழகு தமிழிற் பரவிக்கொண்டு இருக்கும் இந்நேரத்தில் இப்படிச் சட்டாம்பிள்ளைகள் உள்ளே புகுந்து நாட்டாமை செய்தால் எப்படி? [commissor களைக் கண்டாலே எனக்குச் சுரம் ஏறிப் போகும்.]

ஏற்கனவே பல்லாண்டுகளுக்கு முன் இயல்பியல் (physics) என்ற சொல்லைக் கோவை நுட்பியற் கல்லூரியில் இருந்து நாங்கள் பரிந்துரைத்து, அது "இயற்பியல்" என்று தப்பும்தவறுமாகத் தமிழ்கூறு நல்லுலகெங்கும் பரவி விட்டது. "இயற்பு" என்ற சொல்லே தமிழிலில்லை என யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை என்ற ஏக்கம் என்னுளுண்டு. ஆயினும் இதைச் சரி செய்ய நான் யார் - என்று அதன் போக்கில் விட்டுவிட்டேன். 

இச்சொல்லும் அப்படியே குதறப் பட்டால் என்னாவது? இச்சொல்லின் பிறப்பை மேலுஞ் சரியாக விளக்கிச் சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா? தமிழ்கூறு நல்லுலகம் எதை ஏற்கும் என்பது நம் கையிலில்லை. ஆனால் தவறான புரிதல் உள்ளபோது சரிசெய்வது நம் கடமை என்றெண்ணினேன். அதன் விளைவால் ஒருங்குறியின் சொற்பிறப்பை இப்பதிவில் விளக்குகிறேன்.

ஒல் எனும் வேருக்குக் கூடற்பொருள் உண்டு. கூடும் பொருட்கள் தான் சேரும், கலக்கும், பிணையும், இணையும், பொருந்தும். அதனாற்றான் ஒல்> ஒல்லுதல் என்பது பொருந்தற் பொருளைக் குறிக்கும் வினைச்சொல் ஆயிற்று. ஒல் எனும் வேர் ஒர்>ஒரு என்று திரிந்து ஒருதல் எனும் தன்வினையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் அத் தன்வினைச் சொல்லை இற்றை மொழியிற் காண்பதில்லை. அதன் பிறவினையான ஒருத்தல் என்பது மட்டுமே இற்றை மொழியிற் தங்கி ஒற்றைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. ஒருத்தலில் பிறந்த பெயர்ச்சொற்கள தாம்  ஒருத்து, ஒருத்தன், ஒருத்தி, ஒருத்தர் ஆகியவையாகும். 

அதே போல ”ஒருப்படுதல் = ஒன்றுபடுதல்” என்ற செயப்பாட்டு வினை இற்றை மொழியில் இருப்பதால், ஒருதல் என்ற செய்வினையும் ஒரு காலத்தில் நம் மொழியில் இருந்திருக்க வேண்டும் என நாம் உய்த்தறிகிறோம். ஒருப்படுதல் வினையில் இருந்து ஒருப்படுத்தல் என்ற இன்னொரு வினைச்சொல் பிறக்கும். ஒருப்பாடு என்ற வினையடிப் பெயர்ச்சொல்லும் நமக்கு ”ஒருதல்  தன்வினை ஒரு காலத்தில் இருந்திருக்கக் கூடும்” என்பதை உணர்த்துகிறது. தவிர ஒற்றுமைப் பொருள்படும் ஒருப்பு என்ற பெயர்ச் சொல்லும் ஒருதல் தன்வினை ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்துகிறது. இத்தனை செய்திகள் உண்மையாக வேணுமெனில் கீழ்வரும் சொற்பிறப்புகள் இயல்பாக இருக்கவேண்டும்.

ஒல்> ஒரு> *ஒருதல்
ஒல்> ஒரு> *ஒருதல்> ஒருப்பு
ஒல்> ஒரு> ஒருத்தல்
ஒல்> ஒரு> ஒருத்தல்> ஒருத்து, ஒருத்தன், ஒருத்தி, ஒருத்தர்
ஒல்> ஒரு> ஒருப்படுதல்
ஒல்> ஒரு> ஒருப்படுதல்> ஒருப்பாடு
ஒல்> ஒரு> ஒருப்படுத்தல்> ஒருப்படுத்துதல்

இனி வாழ்தலில் இருந்து ”வாழும் நிலை”, செய்தலில் இருந்து ”செய்யும் வகை” போன்றவை ஏற்படுவது இயற்கையெனில், “ஒருவும் நிலை” என்பதும் ஏற்படத் தான் வேண்டும். இதன் பொருள் ”ஒற்றுமைப் படும் நிலை” தானே? இதிலிருந்து மேலும் ஒரு வினைச்சொல் திரிவு ஏற்பட்டு ஒருமுதல் (வகர மகரத் திரிவு) என்பது பிறக்கும். இத்திரிவு எல்லாச் சொற்களுக்கும் ஏற்படுவதில்லை. ஒரு சில வினைச் சொற்களுக்கே ஏற்படுகின்றன. 

எழுதலில் இருந்து எழும்புதல்/எழுமுதல் என்ற சொற்கள் பிறக்கின்றனவே? அதுபோல இதைக் கொள்ளலாம். ஒருமுதலின் இருப்பை நாம் ஏன் ஏற்கிறோம் என்பதை இன்னொரு வகையிற் பார்க்கலாம். ஒருமுதலின் பிறவினைச் சொல்லான ஒருமித்தல் இருக்கிறதல்லவா? [(ஒருமித்த, ஒருமிக்கிற, ஒருமும்) குறி என்பது பிறவினைச்சொல்லில் அமையும் வினைத்தொகை.] பிறவினைச் சொல் இருந்தால் தன்வினைச் சொல் இருந்திருக்க வேண்டுமே? [அப்படித்தான்  ”ஒருமிய, ஒருமுகிற, ஒருமும் குறி” என்று தன்வினை வழியாக, வினைத் தொகைக் கட்டுமானத்தில் ஒருங்குறி என்ற பெயர் எழுந்தது. கவனியுங்கள். எதிர்காலத்தில் தன்வினை, பிறவினை என்ற இரண்டிற்குமே ஒருமும் என்று அமையும். ] ஒருமுதலிற் பிறந்த பெயர்ச்சொல்லே ஒருமை. ஒருமையை ஏற்பவர் ஒருமுதலை ஏற்காது போவாரோ?

ஒல்> ஒரு> ஒரும்
ஒல்> ஒரு> ஒரும்> ஒருமுதல்
ஒல்> ஒரு> ஒரும்> ஒருமுதல்> ஒருமித்தல்
ஒல்> ஒரு> ஒரும்> ஒருமை

தெள்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

- புறம் 189 திணை பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

ஒருமை என்ற பெயர்ச்சொல்லில் இருந்தும் ஒருமைப்படுதல் என்ற வினைச் சொல் பிறக்கும். பின் ஒருமைப்பாடு என்ற பெயர்ச்சொல் பிறக்கும்.

ஒல்> ஒரு> ஒருமை> ஒருமைப்படுதல்
ஒல்> ஒரு> ஒருமை> ஒருமைப்படுதல்> ஒருமைப்பாடு

ஒருதல் என்ற சொல் ஒருவுதல் என்ற இன்னொரு வினையை உண்டாக்கி ஒருவந்தம் என்ற பெயர்ச்சொல்லையும் ஒற்றுமைப் பொருளிற் காட்டுகிறது.

ஒல்> ஒரு> ஒருவந்தம்

ஒருவுதல் என்பது ஒருகுதல் என்றும் திரிகிறது. அதிலிருந்து ஒருகை என்ற பெயர்ச் சொல்லை அதே ஒற்றுமைப் பொருளில் உருவாக்கியிருக்கிறது.

ஒல்> ஒரு> ஒருகுதல்
ஒல்> ஒரு> ஒருகுதல்> ஒருகை

ஒருகுதலின் பிறவினையாய் ஒருக்குதலும், ஒருக்குதலின் தன்வினையாய் ஒருங்குதலும் உருவாகின்றன.

ஒல்> ஒரு> ஒருகுதல்> ஒருக்குதல்
ஒல்> ஒரு> ஒருங்குதல்

இன்னொரு வளர்ச்சியில் ஒல்> ஒல்+ந்+து> ஒன்று> ஒன்றுதல் என்பதும் ஒற்றுமை என்ற பெயர்ச்சொல்லும் உருவாகும்.

இப்போது சொல்லுங்கள் ஒருங்குதல் மட்டும் தான் வினைச்சொல்லா? ஒருதல், ஒருத்தல், ஒருப்படுதல், ஒருப்படுத்தல், ஒருமுதல், ஒருமித்தல், ஒருவுதல், ஒருகுதல், ஒருக்குதல் போன்ற இத்தனையும் சற்றே மாறுபட்ட அதே பொழுது அடிப்படையில் ஒரே கருத்தை உணர்த்தவில்லையா? இந்த வளர்ச்சியில் ஒரும் குறியை ஒருங்குறி என்று சொன்னால் என்ன குறைந்து போயிற்று? எந்த வகையில் ஒருங்கு குறி என்பது சிறப்புற்றது?

ஒருவுதல்/ஒருகுதல், ஒருங்குதல் என்பது போல் மரு> மருவு> மருகு> மருங்குதல் என்பது தழுவற் பொருளை உணர்த்திச் சொல்திரிவு காட்டும். நெரு> நெருங்கு என்பதும் இதுபோன்ற திரிவு தான். நெரு> நெரி> நெரிசல் என்ற பெயர்ச்சொல் வளர்ச்சியையும் இங்கு நோக்கலாம்.

நண்பர்கள் எந்தத் தயக்கமுமின்றி ஒருங்குறி என்று சொல்லலாம். சட்டாம் பிள்ளைகளின் நாட்டாமையை நாம் பொருட்படுத்த வேண்டாம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, January 04, 2011

கண்ணெழுத்தும் வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 2

"இவ்விரண்டையும் குறிக்க ஏதேனும் பெயர்கள் அக் காலத்தில் இருந்திருக்க வேண்டுமே?" என்று தேடிப் பார்த்தால் கி.மு.முதல் நூற்றாண்டில் உருவானதாய்ச் சொல்லப்படும் “சமவயங்க சுத்த” என்ற செயின நூலுக்கு முன்னால் இதுவரை எந்த எழுத்துக்களின் பெயரும் கிட்டவில்லை. ”சமவயங்க சுத்த”த்தில் 18 எழுத்துப் பெயர்கள் சொல்லப் பட்டிருக்கும். பெருமி (>பம்மி), கரோத்தி (<கரோஷ்டி), யவனாலி, தமிழி (>தாமிளி) போன்ற எழுத்துப் பெயர்களை அதிலிருந்துதான் நாம் அறிந்தோம். கி.பி.500/600 களில் எழுந்த புத்தமத நூலான லலித விஸ்தாரத்தில் 18 எழுத்துக்கள் 64 வகையாய் மேலுங் கூடியிருக்கும். தமிழி என்ற சொல் இந்நூலில் இன்னுந் திரிந்து த்ராவிடி என்று ஆகியிருக்கும்.

தமிழி/த்ராவிடி என்பது நம்மெழுத்திற்கு மற்றோர் கொடுத்த இயல்பான பெயராகும். (தமிழர் எழுத்து.) ”நம்மவரே நம்மெழுத்திற்குக் கொடுத்த பெயர் என்ன? அப்படியொன்று உண்டா?” என்பது அடுத்த கேள்வி. சமவயங்க சுத்த-விற்கும், லலித விஸ்தாரத்திற்கும் இடைப்பட்டு தமிழ் இலக்கியச் சான்றாய் நாம் ஓர்ந்து பார்க்கக் கூடியது சிலப்பதிகாரத்தில் மூன்றிடங்களில் கண்ணெழுத்து பற்றிவரும் குறிப்புகள் மட்டும் தான். அவற்றை ஆழ்ந்து பார்ப்பது நல்லது.

”வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி”

என்று, இந்திரவிழவூர் எடுத்த காதை 111-112 ஆம் வரிகளில் வரும் குறிப்பு கண்ணெழுத்து என்ற பெயரை நமக்கு முதன்முதலில் அறிமுகஞ் செய்யும். இதை, “கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்” என்ற கால்கோட்காதை 136 ஆம் வரியும்,

“தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து
கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன்
மண்ணுடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்தாங்(கு)”

என்ற கால்கோட்காதை 169-171 ஆம் வரிகளும் உறுதிப் படுத்தும். இவற்றைப் படித்த நமக்கு, “அது என்ன கண்ணெழுத்து? பண்டங்களின் பொதிப்பட்டியலைக் (packing list of goods) ஏன் கண்ணெழுத்தில் எழுதவேண்டும்? புள்ளியெழுத்தென்று நாம் புரிந்த தமிழியெழுத்தும் கண்ணெழுத்தும் ஒன்றா? கண்ணெழுத்துப் போக, வேறெழுத்து எழுதுவதற்கு உகந்ததாய் தமிழகத்தில் இருந்ததா? கண் என்றால் என்ன பொருள்? ” என்ற கேள்விகள் இயல்பாக எழும். சிலம்பின் அரும்பதவுரையாசிரியர் கண் என்ற சொல்லிற்கு இடம் என்றே பொருள் சொல்வார். அடியார்க்கு நல்லாரும் அதற்குமேல் பொருள் சொல்லார். பண்டங்களின் பொதிப்பட்டியல் குறித்த விவரணை அங்கே அடுத்து அவர்கள் உரைகளில் வந்துவிடும். மு. இராகவ ஐயங்கார் மட்டும் கண்ணெழுத்து என்பதற்கு “pictorial writing" என்று வேறொரு பொதுப்பொருள் சொல்லுவார். [காண்க. Pre-Pallavan Tamil Index - N.Subrahmanian, page 211, Univ. of Madras, 1990.] ”அது ஏன் படவெழுத்து? அக் காரணம் சரிதானா?” - என்பவை இன்னும் எழும் கேள்விகள்.

தமிழில் இடம் என்பது இல்>இள்>இடு>இடம் என்ற வளர்ச்சியில் உருவாகும். இல்லுதல் என்னும் வினைச்சொல் குத்துதற் பொருளையுணர்த்தும். அதாவது இல்லுதல் என்பது அடிப்படையிற் துளைப்பொருளை உணர்த்தும். (இல்லுதலின் நீட்சிதான் தமிழில் to be என்று பொருள்படும் இருத்தலாகும். இல்>இர்>இரு>இருத்தல்) குல்>குள்>கள்>கண் என்பதும் துளைப்பொருளை உணர்த்தும். புல்>புள்>புள்ளி, புல்>புள்>பொள்>பொட்டு என்பதும் கூடத் துளைப்பொருளை உணர்த்துவன தான்.

நெற்றிக் கண்ணை உணர்த்தும் வகையில் இன்றுங் கூடச் சிவநெறியாளர் நெற்றிப் பொட்டு இடுகிறார் அல்லவா? கலக்க நெய்த துணியில் ஒவ்வொரு முடிச்சு/துளையிலும் நூலாற் பின்னிப் பெண்கள் பின்னல் வேலை செய்கிறார்களே, பார்த்திருக்கிறீர்களா? அதைக் கண்(ணித்)துணி என்பார்கள். இங்கு கண் என்பது புள்ளியையே குறிக்கிறது. தேங்காய்க் குடுமிக்கருகில் மூன்று பள்ளங்கள் இருக்கின்றனவே அவற்றையும் கண்கள் என்றுதானே சொல்லுகிறோம்? தேங்காய்ச் சிரட்டையில் கண்ணுள்ள பகுதி கண்ணஞ் சிரட்டை என்று சொல்லப்படுகிறதே? நிலத்தில் நீரூற்று எழும் புள்ளி, ஊற்றுக்கண் என்று சொல்லப்படுகிறதே? முலைக் காம்பின் நடுத்துளை முலைக்கண் எனப்படுகிறதே? பகடைக் காயின் பக்கங்களில், எண்களைக் குறிக்கப் போட்டிருக்கும் புள்ளிகள், கண்கள் என்றுதானே சொல்லப்படுகின்றன? இடியப்பக் குழலின் துளைகள் அடைந்தால், குழலின் கண் அடைந்து போயிற்று என்கிறோமே? புண்கண், வலைக்கண், சல்லடைக்கண், வித்தின் முளைக்கண் என எங்கெல்லாம் துளை, புள்ளி இருக்கிறதோ அங்கெல்லாம் கண்ணென்று சொல்கிறோம் அல்லவா?

இந்தச் சிந்தனையில் ஓர்ந்து பார்த்தால் கண்ணெழுத்து என்பது பெரும்பாலும் புள்ளியெழுத்தாய் இருக்கவே வாய்ப்புண்டு என்பது புரியும். ”சிலம்பின் காலம்” என்ற என் கட்டுரையில் ”சிலம்புக் காப்பியம் எழுந்தது பெரும்பாலும் கி.மு.80-75 ஆய் இருக்கும்” என்று பல்வேறு ஏரணங்களால் முடிவு செய்திருப்பேன். அதன் சம காலத்தில் முன்சொன்ன வடபுல எழுத்துத் தீர்வும், தென்புல எழுத்துத் தீர்வும், இந்தத் தீர்வுகளுக்கு முந்தைய உயிர்மெய் அகர / தனிமெய்க் குழப்பம் கொண்ட எழுத்தும் இந்தியத் துணைக்கண்டத்தில் ஒருங்கிருந்தன என்ற உண்மையையும் இங்கு கணக்கிற் கொண்டால், புகாரின் ஏற்றுமதிப் பண்டங்கள் குழப்பமில்லாது கண்ணெழுத்து முறையில் (புள்ளியெழுத்து முறையில்) பட்டியலிட்டு இலச்சினைப் பட்டிருக்கலாம் என்பது நமக்கு விளங்கும்.

பண்டங்களின் பொதிப்பட்டியல் என்பது இருவேறு நாடுகள், அரசுகள், ஆட்கள் ஆகியோரிடம் பரிமாறிக் கொல்ளும் பட்டியல் என்பதை ஞாவகப்படுத்திக் கொள்ள வேண்டும். இதிலுள்ள பண்டவிவரம் எக் குழப்பமும் இல்லாது சட்டத்திற்கு உட்பட்டுச் (legally binding), சொல்லப்படவேண்டும். அப்படியானால் குழப்பமிலா எழுத்து முறையில் அது இருப்பது கட்டாயம் ஆனதாகும். மொழிகளும் எழுத்துமுறைகளும் தோன்றிவிட்ட காலத்தில் அது படவெழுத்தாய் இருக்க முடியாது. ஒரு மொழியின் தனித்த எழுத்து முறையாகத் தான் இருக்கமுடியும். இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.முதல் நூற்றாண்டு அளவில் குழப்பமில்லாதன என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எழுத்து முறைகள் இரண்டே இரண்டு தான். ஒன்று வடபுல முறை. இன்னொன்று தென்புல முறை. ஏற்றுக் கொள்ளப்பட்ட இவ்விரண்டில், தென்புல முறை, புள்ளி பழகியதால், கண் என்ற தமிழ்ச்சொல் புள்ளியைக் குறிப்பதால், கண்ணெழுத்து என்பது புள்ளி பழகும் தென்புலத்துத் தமிழி எழுத்தைத்தான் குறிப்பிட்டிருக்கும் என்று ஏரணத்தின் வழி முடிவிற்கு வருகிறோம்.

வேறு எந்த வகையாலும் சிலம்பில் மூன்று இடங்களிற் குறிப்பிடும் கண்ணெழுத்து என்ற சொல்லாட்சியைப் புரிந்து கொள்ளமுடியாது. அந்த மூவிடங்கள் தாம் கி.மு. முதல் நூற்றாண்டில் புள்ளியெழுத்து நம்மூரில் உறுதியாய்ப் புழங்கியதற்கான தமிழாவணச் சான்றுகள். [ஆனால் இதுவரை கிடைத்த தொல்லியற் சான்றுகளில் முதன்முதல் புள்ளி பழகியதாய், கி.பி.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவா கன்னன் வசிட்டிபுத்ரன் புலுமாவியின் முகம் பதித்த முத்திரைக் காசில் இருந்த பெயரில் தான் வசிட்டி என்பதற்கிடையில் புள்ளியிட்டுக் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது.] இனிப் பிற்காலத்திய சிவஞான சித்தியாரில் (அளவை.1.மறை) பகுதியில் “சோமே லிருந்தொரு கோறாவெனிற்...... கண்ணழுத்தங் கோல் கொடுத்தலும்” என்ற வரி, எழுத்தாணி போலிருக்கும் கண்ணெழுத்தங் கோலைக் குறிப்பதாகவே நாம் எண்ண வேண்டியிருக்கிறது.

இனிக் கள்>கண்>கண்ணு>கணக்கு என்னும் வளர்ச்சியில் எழுத்துப் பொருளையுணர்த்தும். (கணக்கு என்ற சொல்லை எண்களோடு தொடர்புறுத்தும் பொருளும் பலகாலம் பயில்வது தான். ஆனால் இரண்டும் இருவேறு வளர்ச்சிகள். இன்றைய வழக்கில், கணக்கு என்ற சொல் எழுத்தோடு தொடர்புறுத்துவதைக் காட்டிலும் எண்ணோடு தொடர்புறுத்துவதாகவே இருக்கிறது.)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

என்ற குறள் 393 இலும், “எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்” என்ற கொன்றை வேந்தன் வரிகளிலும் எண்ணும் எழுத்தும் கண்ணோடு சேர்த்துச் சொல்லப்பெறும் பாங்கைப் பார்த்தால், கண் எனும் பார்வைக் கருவியோடு மட்டும் பொருத்தாது, கண் எனும் புள்ளிப் பொருளோடும் சேர்த்து உரைக்கவொண்ணுமோ? - என்று எண்ண வேண்டியிருக்கிறது.

இனி, நெடுங்கணக்கு, குறுங்கணக்கு என்று சிறார்களின் இளங்கல்வியில் எழுத்துவரிசையை அறிவிக்கும் வழக்கத்தைப் பார்ப்போம். எழுத்தாணியால் எழுதுபொருளில் இழுத்தது, எழுத்தென்பார் பாவாணர். முதலில் எழுந்த தமிழி எழுத்துக்கள் பெரும்பாலும் நேர்கோடுகளாகி, வளைவுகள் குறைந்திருந்தன. பின்னால் ஓலையில் எழுதி வளைவுகள் கூடிய காலத்தில் கணக்கு என்ற சொல்லிற்குத் துளைப்பொருளோடு வளைவுப் பொருளும் வந்து சேர்ந்தது போலும். (இது கி.மு.முதலிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே இது நடந்திருக்க வேண்டும்.)

குன்னிப் போன எழுத்துக்கள், கூனிப் போய், குணகிப் போய் குணங்கிய தோற்றம் காட்டியதால் குணக்கு>கணக்கு என்ற பொருளும் எழுத்திற்குச் சரியென்று கொள்ளப் பெற்றது. நெடுங்கணக்கு, குறுங்கணக்கு என்ற கூட்டுச்சொற்களில் வரும் கணக்கு எழுத்தைக் குறித்தது இந்தப் பொருளிற்தான். கணக்குச் (=எழுத்துச்) சொல்லிக் கொடுத்த ஆசிரியர் கணக்காயரானார். (இன்று கணக்காயர் என்பார் நம் கணக்குகளைச் சரிபார்க்கும் auditor ஆவார்.) கணக்காயர் மகனார் நக்கீரர் என்பவர் வேறு யாரும் இல்லை “திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் மகன் நக்கீரர்” என்பவர் தான். கணக்கன் என்றாலேயே பழந்தமிழில் ஆசிரியப் பொருளுமுண்டு. அரண்மனையின் திருமுகமும் எழுதி, அங்குள்ள எண்மானக் கணக்கையும் பார்ப்பவர் அரண்மனைக் கணக்கரானார். இருபதாம் நூற்றாண்டு முன்பாதி வரை செல்வந்தர் வீட்டுக் கணக்குப் பிள்ளை, வெறுமே செல்வந்தர் வீட்டில் எண்மானம் பார்ப்பவர் மட்டும் அல்லர். அவர் செல்வந்தர் வீட்டின் எல்லா எழுத்து வேலைகளையும் பார்ப்பவர்.

ஆகக் கண்ணெழுத்து (புள்ளியெழுத்து) தொடங்கிய சில காலங்களிலேயே கணக்கெழுத்தாயும் (வளைவெழுத்தாயும்) புரிந்து கொள்ளப்பட்டது. இது சங்க காலத்திற் தொடங்கியது நக்கீரர் தந்தை பேரைப் பார்த்தாலே புரியும். வெறுமே கண்ணெழுத்து என்று புரிந்து கொள்ளப்பட்டது சங்ககாலத்திற்கும் முற்பட்ட காலமாய் இருக்கவேண்டும். சங்க காலம் முடிந்து களப்ரர் காலம் வரை ஓரளவு கண்ணெழுத்தே தொடர்ந்திருக்கிறது. அதில் வளைவுகள் குறைந்து நேர்கோடுகளே மிகுந்து இருந்திருக்கின்றன.

இனி கி.பி. 4, 5 ஆம் நூற்றாண்டுகளில் வளைவுகள் கூடக் கூட, குணக்கு வட்டமாகி, கணக்கெழுத்து வட்டெழுத்தாகியிருக்கிறது. இதற்கான சரியான சான்றாய் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம் பூலாங்குறிச்சிக் கல்வெட்டைச் சொல்லவேண்டும். இது களப்ரர் காலத்தைச் சேர்ந்தது. [களப்ரர் என்பவர் யார்? - என்பது இன்னும் தெளிவான விடை தெரியாத கேள்வி. ஆனால் ஓரளவிற்கு ஊகிக்க முடியும்.]

வட்டெழுத்தின் இயலுமை பற்றிய செய்தியை இங்கு இடைவிலகாய்ப் பார்ப்போம். தமிழ், கிரந்தம், மலையாளம் போன்றவை பெரும்பாலும் கடிகைச் சுற்றில் (clockwise) எழுதுப்படுபவை (தமிழில் ட, ப, ம, ய, ழ ஆகிய ஐந்து வரிசை எழுத்துக்களே எதிர் கடிகைச்சுற்றில் (anti-clockwise) எழுதப் படுகின்றன. கிரந்தத்திலும், அதன் திரிவான மலையாளத்திலும் 9 வரிசை எழுத்துக்கள் மட்டுமே எதிர்கடிகைச்சுற்றில் எழுதப்படுகின்றன.) நம்மூரைச் சேர்ந்த பழைய வட்டெழுத்துக்களும், இற்றைத் தெலுங்கெழுத்துக்களும், கன்னட எழுத்துக்களும் இந்தப் பழக்கத்திற்கு மாறானவை. இவை பெரும்பாலும் எதிர்க்கடிகைச்சுற்றில் எழுதப்படுகின்றன. பொதுவாக எழுத்துவரிகள் இடவலத்திலும், எழுத்துக்கள் கடிகைச் சுற்றிலும் எழுதும் போது உருவாகும் எழுத்துக்கள் நேர்கோடுகளும், கோணங்களும் அதிகமாய்ப் பெற்றிருக்கும். இதற்கு மாறாய் எழுத்துவரிகள் இடவலத்திலும், எழுத்துக்கள் எதிர்க்கடிகைச் சுற்றிலும் எழுதும்போது, எழுத்துக்கள் கூடுதல் வட்ட வடிவம் பெற்றிருக்கும். இது எழுதுவோரில் பெரும்பாலோர்க்கு வலதுகைப் பழக்கம் உள்ளதால் ஏற்படும் நிலையாகும்.[காண்க: பண்டைத் தமிழ் எழுத்துக்கள். தி.நா. சுப்பிரமணியன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 1996, பக்.7]

சாதவா கன்னர் சிதைவிற்குப் பின் நான்கு அரசுகள் தக்கணத்தில் எழுந்தது பற்றி மேலே சுட்டினோம் அல்லவா? அதில் வரும் ஆப்ரர் கதை சற்று நீளமானது. தென் மராட்டியத்திலும் வட கன்னடத்திலும் ஆண்ட ஆப்ரர்கள், அப்ரர் என்றுஞ் சொல்லப் பட்டிருக்கிறார். தக்கணம், தமிழகம் போன்றவற்றில் எழுத்தின் தொடக்க காலத்தில் இருந்த அகர, ஆகாரக் குழப்பத்தில் நெடில்/குறில் மாறிப் பலுக்கப்படுவது இயற்கையே. சாத வாகனருக்குப் பிறகு 67 ஆண்டுகள் 10 ஆப்ரர்கள் படித்தானத்தில் ஆண்டதாய் இந்து சமயப் புராணங்கள் கூறும். நாசிக்கில் எழுந்த கல்வெட்டு ஒன்று சிவதத்தனின் மகனும் மாதரிபுத்த ஈசுவரசேன என்ற பெயர் பெற்றவனுமான அரசனைக் குறிப்பிடும். நாகார்ச்சுன கொண்டாவில் எழுந்த கல்வெட்டொன்று வாசுசேனன் என்ற அரசனின் 30 ஆண்டு கால ஆட்சி பற்றிக் குறிப்பிடும்.

ஆப்ரர்களில் ஒரு பகுதியினர் சேதியரோடு பொருதிக் கலந்த பின்னால், கன்னடப் பகுதி வழியாகத் தமிழகத்தில் நுழைந்திருக்கிறார்கள். இவர் நுழைந்த காலம் பெரும்பாலும் கி.பி. 270 - 290 ஆக இருக்க வேண்டும். பெரும்பாலும் ஆப்ரரின் ஒருபகுதியானவர் தான் கள ஆப்ரர்>களப்ரர், களப்பாளர், கலியரசர் என்றெல்லாம் தமிழாவணங்களிற் பேசப் பட்டவராய் இருக்க வழியுண்டு. (பாண்டியரின் வேள்விக்குடிச் செப்பேட்டில் “அளவரிய ஆதிராஜரை யகல நீக்கி யகலிடத்தைக் களப்ரனென்னும் கலியரைசன் கைக்கொண்டதனை யிறக்கிய பின்” என்று பாண்டியன் கடுங்கோனைப் பற்றிய வரிகள் வரும். களப்ரர் பற்றி வேறொரு கட்டுரையில் விரிவாகப் பேசுவேன். இங்கு பேசினால் சொல்லவந்தது விலகிப் போகும்.)

களப்ரர் என்ற சொல்லை கள் + அப்ரர் என்று பிரித்தால் கருப்பு அப்ரர் என்று பொருள் கொள்ளலாம். கருப்பு என்பது அவர் நிறமா, அன்றிப் பூசிக் கொண்ட இனக்குழு அடையாள நிறமா என்பது இன்னொரு கேள்வி. சாதவா கன்னருக்கு கருப்பு நிறம் இனக்குழு அடையாளமாகியதைச் “சிலம்பின் காலம்” என்ற என் கட்டுரையிற் பேசியிருப்பேன். [சேரருக்கும் சந்தனமும், பாண்டியருக்குச் சாம்பலும், சோழருக்கு மஞ்சள்/குங்குமமும் இனக்குழு அடையாளமாய் இருந்ததை இங்கு எண்னிக் கொள்ளுங்கள்.] களப்ரர் என்ற குழுவினர் சேர, சோழ, பாண்டியரை வீழ்த்திக் கிட்டத்தட்ட முழுத் தமிழகத்தையும் கைப்பற்றி 250, 300 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார், அந்தக் காலத்திற் கிடைத்த ஒரு சில தனிப்பாடல்களும், சங்க காலத்திற்கும், பல்லவர்/பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட கால வெளியும் இச் செய்தியைத் தெரிவிக்கின்றன. இந்த அரசர்களின் குலப்பெயராய் ஆயர்> ஆய்ச்சர்> ஆய்ச்சுதர்> அச்சுதர் என்ற பெயர் விளங்கியதும் நமக்குக் கிடைத்திருக்கிறது. (ஆய்ச்சி = இடைக்குல மடந்தை. ஆய்ச்சன் = இடைக்குல மாந்தன்.)

கி.பி. 220 க்குப் பின் எழுந்த அரசுப் போட்டிகள், குமுகாயக் குழப்பங்கள், பொருளியற் தடுமாற்றங்கள் எல்லாம் தமிழி/பெருமி ஆகிய எழுத்துக்களின் நிலைப்பைக் குலைத்துத் திரிவை உண்டாக்கியிருக்கின்றன. தமிழியில் இருந்து இற்றைக்காலத் தமிழெழுத்தும், வட்டெழுத்தும் உருவாகியிருக்கின்றன. சாதவா கன்னர் காலத்துப் பெருமியில் இருந்து அடுக்குக் கட்டெழுத்தான கிரந்தம் தென்புலத்திலும், நாகரி வடபுலத்திலும் இருவேறு வளர்ச்சியாய்த் தழைத்திருக்கின்றன.

கன்னட தேசம் வழியாக முதலில் கள ஆப்ரரும், பின் இராயல சீமை வழியாகப் பல்லவரும் தமிழகத்துள் நுழைந்து ஆட்சி செய்யாதிருந்தால் கிரந்தம் இங்கு கலந்திருக்காது.

கிரந்தம், நாகரி என்ற சொற்களின் சொற்பிறப்பை இங்கு சொல்லுவது பொருத்தமாய் இருக்கும். முதலிற் கிரந்தத்தைப் பார்ப்போம். கீரப்பட்ட எழுத்தே கிரந்தம் என்றே ஒரு காலத்தில் நான் எண்ணியிருந்தேன். பின்னால் என் ஆய்வு ஆழமானதன் விளைவால், குறிப்பாக எழுத்துமுறைகள் பற்றிய ஆய்வுக்குப் பின்னர், அந்தப் புரிதல் சரியில்லை என்ற கருத்திற்கு வந்தேன். புள்ளியெழுத்து, அடுக்குக் கட்டெழுத்து ஆகிய இருவேறு முறைகளை ஆழப் புரிந்து கொண்ட பிறகு, அடுக்கிக் கட்டப்பட்ட எழுத்தைக் கந்தெழுத்து என்று சொல்லுவதிற் தவறில்லை என்று உணர்ந்தேன். கந்து = கட்டுத் தறி. கோல். தூண், பற்றுக் கோடு, தும்பு. நூல். கந்தழி = பற்றுக்கோடில்லாதது, நெருப்பு. கந்தன் = தூணில் உள்ள இறைவன், முருகன், கந்திற் பாவை = தூணில் உள்ள தெய்வம், கள்>கந்து>கந்தம் = தொகுதி aggregate. கந்துகம் = நூற் பந்து, கந்து களம் = நெல்லும் பதரும் கலந்த களம். கந்தர கோளம் = எல்லாம் கலந்து குழம்பிக் கிடக்கும் கோளம். கந்து வட்டி = முன்னேயே பிடித்துக் கொள்ளப்படும் அதிக வட்டி. இத்தனை சொற்களுக்கும் பொதுவாய்க் கந்துதல் என்ற வினைச்சொல் கட்டுதற் பொருளில் இருந்திருக்க வேண்டும்.

கந்தெழுத்து என்ற சொல்லே வடமொழிப் பழக்கத்தில் ரகரத்தை உள்நுழைத்துக் க்ரந்தெழுத்து என்ற சொற்திரிவை ஆக்கிக் கொண்டது என்ற புரிதலுக்கு முடிவில் வந்தேன். கந்து என்ற சொல்லிற்கு நூல் என்ற பொருளிருப்பதாலும், அந்தக் காலத்து ஓலைச் சுவடிகள் நூலால் கட்டப்பட்டதாலும், நூல் என்ற சொல், சுவடிகளுக்கு ஆகுபெயராய் எழுந்தது. கிரந்தம் என்ற சொல்லும் பொத்தகம், நூல் என்ற பொருளைப் பெற்றது. சொல்லாய்வர் கு. அரசேந்திரனும் அவருடைய ”கல்” என்ற நூற்தொகுதியில் க்ரந்தம் என்ற சொல்லிற்குப் பொத்தகம் என்ற பொருளை நிறுவுவார். நான் புரிந்த வரையில் பொத்தகம் என்ற பொருள் முதற் பொருளல்ல. அது வழிப்பொருளே. கந்தம் = கட்டப்பட்டது என்பதே அதன் அடிப்பொருளாகும்.

அடுத்து நகரி/நாகரி என்ற சொல்லைப் பார்ப்போம். இதை நகரம் (= town) என்ற சொல்லோடு பொருத்தி ”நகரத்தில் எழுந்த எழுத்து” என்று மோனியர் வில்லியம்சு அகரமுதலி சொற்பொருட் காரணம் சொல்லும். அது என்ன நகரத்தில் எழுந்த எழுத்து? பல்வேறு இரிடிகளும், முனிவர்களும், அறிஞர்களும் நகரத்திலா இருந்தார்கள்? அன்றி வணிகர்கள் உருவாக்கிய எழுத்தா என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது. ஆதிகால எழுத்துக்கள் கல்வெட்டுக்களிலேயே இருந்திருக்கின்றன என்ற பட்டறிவைப் பார்க்கும் போது, அவை நாட்டுப் புறத்திலேயே பெரும்பாலும் இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தான் நகரத்தையொட்டி அமைந்தன - என்ற புரிதல் நமக்குக் கிட்டும். நகரத்தைக் காரணங் காட்டிப் பொருள் சொல்லுவதைக் காட்டிலும் நகரி/நாகரி என்பதை வடமொழியினர் கடன் கொண்ட சொல்லாக்கி, தமிழ்மூலம் பார்ப்பது சிறப்பென்று தோன்றுகிறது. [தமிழ்மேல் உள்ள விருப்பினால் நான் இதைச் சொல்லவில்லை. வடமொழிச் சொற்களைக் கடன்வாங்கிய சொல்லாய் ஏனோ பலரும் பார்க்க மாட்டேம் என்கிறார்கள். அது ஏதோ கடனே வாங்காத மொழி போல எண்ணிக் கொண்டு விடுகிறார்கள்.]

எழுத்து வளர்ந்த முறையில் வடபுல அடுக்குக் கட்டுமுறை, தெற்குப் புள்ளிமுறை ஆகிய இரண்டுதான் தெளிவான குழப்பமில்லாத எழுத்து முறைகளாய் அமைந்தன என்று முன்னாற் பார்த்தோம். நகுதல் என்ற தமிழ் வினைச்சொல்லிற்கு ”விளங்குதல், விளங்கத் தோன்றுதல்” என்ற பொருட்பாடுகள் உண்டு. நகுதலின் பெயர்ச்சொல் நகு>நாகு என்றமைந்து விளக்கம், தெளிவு என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். நகரம் என்ற தமிழ்ச்சொல்லிற்கும் கூட ஒளி விளங்கும், பொலிவுள்ள, இடம் (bright place) என்றே பொருள் உண்டு.

தமிழில் அரி என்ற சொல் (அரிச் சுவடி = எழுத்துச் சுவடி என்ற கூட்டுச் சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள்) எழுத்தையே உணர்த்தும். ஒரு காலத்தில் செயினரின் தொடர்பால் தமிழ்நாட்டின் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் “அரி ஓம் நமோத்து சிந்தம்” என்று சொல்லித்தான் பள்ளிப் பாடம் தொடங்குவார்கள். [என் பள்ளிப் பாடமும் அப்படித்தான் தொடங்கியது.] இது போன்ற பண்பாட்டு மிச்சங்களை நினைவு கூர்ந்தால் நாகு+அரி = நாகரி = விளக்க எழுத்து, தெளிவெழுத்து என்ற கருத்துப் புரியும். குழப்பமில்லாத எழுத்தை நாகரி என்று சொல்லுவதிற் தவறென்ன? இதை ஆரியர் என்னும் ‘தேவர்’ வடபுலத்திற் பயன்படுத்திய காரணத்தால் தேவ நாகரி = தேவர்களின் தெளிவெழுத்து என்றாயிற்று (பார்ப்பனரின் ஒரு பகுதியினருக்கும், கோயிலுக்கும் கொடுத்த அறக்கொடைகளைத் தேவ தானம், பிரம தாயம் என்று பல்லவர் காலத்திற் சொன்னதை இங்கு நினைவிற் கொள்ளலாம்.) கன்னடப் பகுதியில் நந்தி நாகரி என்றொரு எழுத்து இருந்தது. (நாகரி என்றாலே போதும்; நாகரி எழுத்து என்பது கூறியது கூறல்.)

வடபுலத்து மொழிகளை எழுத நாகரியும், தமிழ் தவிர்த்த தென்புலத்து மொழிகளை எழுத கிரந்தமும் இந்தியத் துணைக்கண்டத்திற் போல்மங்களாயின. பல்வேறு இந்திய எழுத்துக்களும் இப்படித்தான் எழுந்தன. (தென்கிழக்கு ஆசியா எழுத்துக்களும் பல்லவர் தாக்கத்தால் கிரந்த எழுத்தையே தம் அடிப்படையாய்க் கொண்டன.) காட்டாக, மலையாளத்தார் தங்கள் மொழியில் வடமொழிச் சொற்களை அதிகமாகக் கலந்து மணிப்பவளமாகச் செய்த பின்னர், கிரந்தவெழுத்தைச் சிறிது மாற்றி “ஆர்ய எழுத்து” என்று பெயரிட்டு தங்கள் மொழிக்கு வாய்ப்பாய் அமைத்துக் கொண்டார்கள். துளு மொழியின் எழுத்தும் கிரந்தத்தில் இருந்து உண்டானதே. தெலுங்கு, கன்னட எழுத்துக்களின் தலைக்கட்டை எடுத்துவிட்டுப் பார்த்தால், அவற்றிலும் கிரந்தத்தின் சாயல் உள்ளிருப்பது புரியும். விசயநகர மன்னர்கள் காலத்திலும், அவர்களுக்குப் பின்னால் மராட்டியர் காலத்திலும் தான் நாகரி எழுத்து தக்கணத்தில் உள்நுழைந்து கிரந்தவெழுத்தை கொஞ்சங் கொஞ்சமாய் அகற்றியது.

கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் பெருமியில் இருந்து உருவாகிய கிரந்தம், தமிழியில் இருந்து உருவாகிய இற்றைத் தமிழெழுத்து, பண்டை வட்டெழுத்து ஆகியவற்றிடையே ஒரு தொடர்ச்சி இருந்தது. [இற்றைத் தமிழெழுத்து கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட முழுவுருவம் பெற்றுவிட்டது. கி.பி.11 ஆம் நூற்றாண்டில் இருந்த வடிவங்களுக்கும் இப்பொழுதைய வடிவங்களுக்கும் நம்மால் பெரிய வேறுபாடு காணமுடியாது.] கிரந்தமும், இற்றைத் தமிழெழுத்தும் அரசவை, அரசாணை எழுத்துக்களாய் அமைந்திருந்தன. [கல்வெட்டு, செப்பேடு போன்றவற்றில் வளைவுகளைக் குறைத்து, நேர்கோடுகளை மிகுதியாக அமைக்கமுடியும். பல்லவ கிரந்தத்தின் இரட்டைக் கட்ட நேர்கோட்டழகை இங்கு ஓர்ந்து பார்க்கலாம்.] வட்டெழுத்தோ, மக்கள் பெரிதும் புழங்கும் எழுத்தாய் கி.பி. 970 வரை இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில், மக்கள் பயன்பாட்டில், ஓலை-எழுத்தாணியின் தாக்கத்தில், வட்ட வளைவுகள் கூடிப் போய், வட்ட எழுத்துக்களின் வேறுபாடுகள் காணுவது குறைந்து, வட்டெழுத்துப் புழங்குவதிற் சிக்கலாகிப் போனது.

கிட்டத்தட்ட கி.பி. 1000 க்கு அருகில் வட தமிழ்நாட்டில் வட்டெழுத்து அருகிவிட்டது. அதற்கு அப்புறம் இற்றைப் போற் தோற்றமளிக்கும் தமிழெழுத்துக்கள் தான் எங்கும் காட்சியளித்தன. பல்லவரின் பள்ளங்கோவில் செப்பேடுகள் தான் (சிம்மவர்மன் III கி.பி.540-550) முதன் முதலில் இற்றைத் தமிழெழுத்து வடிவைப் பயன்படுத்தியதற்குச் சான்றாகும். (நமக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் செப்பேட்டுப் படி 7 ஆம் நூற்றாண்டில் மீண்டும் எழுதப்பட்ட படி என்ற கூற்றுமுண்டு.) கி.பி 10 ஆம் நூற்றாண்டில் வந்த பேரரசுச் சோழன் இராசராசனின் பெருமுனைப்பால் வட்டெழுத்தைப் பாண்டிநாட்டுப் புழக்கத்திலிருந்து விலக்கி இற்றைத் தமிழெழுத்தே தமிழகமெங்கும் பெரிதும் புழங்கத் தொடங்கிற்று. கி.பி.12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் வட்டெழுத்து முற்றிலும் மறைந்து போனது. புரியா வட்டம் என்றே கி.பி.1400 களில் பாண்டிநாட்டிற் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். [திருக்குற்றால நாதர் கோயிலில் பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு இந்தச் செய்தியைச் சொல்கிறது.]

இனி வட்டெழுத்தில் எழுதப்பட்ட பூலாங்குறிச்சிக் கல்வெட்டிற்கு வருவோம். இந்தக் கல்வெட்டின் காலம் 192 என்று அதிற் சொல்லப்பட்டிருக்கும். இது அரசரின் ஆட்சிக் காலமாய் ஆக முடியாது. இந்த எண் ஏதோவொரு முற்றையாண்டைக் குறிக்கிறது. ஆப்ரருக்கென்று தொடங்கி, படித்தானத்திற்கு அருகில் வழக்கத்தில் இருந்த முற்றையாண்டான கி.பி.248 யை களப்ரருக்கும் பொருத்தமே என்று கருதி, மேலே சொன்ன 192 -ஓடு கூட்டினால், பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் காலம் கி.பி.440 என்றாகும். இதற்கு 100, 150 ஆண்டுகள் முன்னேயே வட்டெழுத்து தோன்றிவிட்டதற்கான சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடைத்திருக்கின்றன. உண்மையிற் பார்த்தால் அரச்சலூரைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டிலேயே வட்டெழுத்துக் கூறுகள் தொடங்கி விட்டன.

கி.பி. 270-290 களில் தமிழகத்தை ஆட்கொண்ட கள ஆப்ரர் அரசு வழியாக கல்வெட்டுக்கள் மிக அரிதே தான் கிடைத்துள்ளன. கிடைத்திருக்கும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டும் வட்டெழுத்தில் உள்ளது. இந்தக் காலத்துப் பொதுமக்கள், குறுநிலத் தலைவர் ஆகியோரின் நடுகற்களும் வட்டெழுத்துக் கொண்டே எழுதப் பட்டிருக்கின்றன. அதே பொழுது படித்தானத்தில் இருந்த ஆப்ர அரசு வடவெழுத்து முறையே பின்பற்றியிருக்கிறது. பின்னால் தெற்கே கள ஆப்ரர் அரசை முடிவுக்குக் கொண்டுவந்த பல்லவர் வட தமிழகத்தில் கிரந்த எழுத்தையும், இற்றைத் தமிழெழுத்தையும் விழைந்து பயன்படுத்தினார்கள்.

கள ஆப்ரரின் தென்பாற் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்ட இடைக்காலப் பாண்டியர் (கி.பி.550-910) வட்டெழுத்தையே விரும்பிப் பயன்படுத்தினர். (கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் தமிழகமெங்கும் ஒரு மொழி, ஈரெழுத்து (இற்றைத் தமிழெழுத்து, வட்டெழுத்து) என்ற நிலை தொடர்ந்தது. இராசராசச் சோழன், பாண்டியர் அரசைத் தொலைத்து, அதைத் தான் ஆளும் மண்டலமாக ஆக்கிய பின்பே வட்டெழுத்துப் புழக்கம் வலிந்து குறைக்கப்பட்டது. ஒரு மொழி, ஓரெழுத்து என்ற நிலை அதற்கு அப்புறம் தான் வந்து சேர்ந்தது. ஆக, ஆழ்ந்து பார்த்தால், இற்றைத் தமிழெழுத்து தமிழ்நாடெங்கும் பரவியது சோழ அரசாணை கொண்டுவந்த அடிதடி மாற்றமாகும். [அரசாணைகளுக்கு அவ்வளவு வலிமையுண்டு.]

ஆனாலும் வட்டெழுத்தின் மிச்ச சொச்சம் கேரளத்தில் நெடுநாள் இருந்தது. வட்டெழுத்தை தென் கேரளத்தில் ‘மலையாண்ம’ என்றும், ’தெக்கன் மலையாளம்’ என்றும், வட கேரளத்தில் ‘கோலெழுத்து’ என்றும் அழைத்தனர். வட்டெழுத்து 18 ஆம் நூற்றாண்டு வரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேரளத்தில் நிலைத்தது. பெரும் அளவு சங்கதம் புழங்காத நம்பூதியல்லாதோரிடம் வட்டெழுத்து தொடர்ந்து இருந்தது. கேரளத் தொல்லியற் துறையினரிடம் சில ஆயிரம் வட்டெழுத்து ஓலைச்சுவடிகள் இன்னும் படிக்கப் படாமல் இருப்பதாக “சேரநாட்டில் வட்டெழுத்து” என்ற நூலெழுதிய இரா. கிருஷ்ணமூர்த்தி சொல்லுவார். 18 ஆம் நூற்றாண்டு முடிவில் கேரளத்தில், வட்டெழுத்து முற்றிலும் அழிந்தது. அதே பொழுது, திருவாங்கூர் அரசில் 19 ஆம் நூற்றாண்டு சுவாதித் திருநாள் காலம் வரையிலும் அரண்மனைக் கணக்கு (பண்டாரக் களஞ்சியம் - நிதித்துறை) வட்டெழுத்தில் எழுதப்பட்டதாய் ஒரு செய்தியுண்டு.

வட்டெழுத்து மாறிக் கிரந்தவெழுத்தின் அடிப்படையில் மலையாள எழுத்து உருவாகிய செய்தி தமிழராகிய நமக்கு ஒரு முகன்மையான எழுதருகையைத் (எச்சரிக்கையைத்) தரவேண்டும். 14 ஆம் நூற்றாண்டில் தான் கேரளத்தின் பொதுவழக்கில் வட்டெழுத்து மாறி ஆர்ய எழுத்தைப் புழங்கத் தொடங்கினர். [அதற்கு முன் வட்டெழுத்தே புழங்கியது.] தொடக்கத்தில் மலையாள மொழியில் கிரந்த எழுத்துக்கள் வட்டெழுத்துள் வெறுமே கடன் வாங்கப் பட்டன. பின்னால் பேச்சுவழக்கில் பிறமொழி ஒலிகள் கூடிப்போய் கிரந்தத்தில் இருந்து புது எழுத்தே உருவாக்கும் நிலை ஏற்பட்டது. பண்பாட்டுத் தளத்துச் சிக்கல் எழுத்துத் தளத்துள் புகுந்து அடிப்படைக்கே குந்தம் விளைவித்துப் பெருத்த ஊறு விளைவித்தது. தமிழக ஒற்றுமையில் இருந்து கேரளம் முற்றிலும் விலகியது. எழுத்துப் பிறந்தது தனித் தேசிய இனம் பிறக்க வழி செய்தது. தனியெழுத்துப் பிறக்காது இருந்தால் அதுவும் இன்று தமிழ்நாட்டின் ஒருவட்டாரமாய்த் தான் அறியப் பட்டிருக்கும்.

மலையாளத்தில் நடந்தது 21 ஆம் நூற்றாண்டுத் தமிழெழுத்திற்கும் நடக்கலாம். கிரந்த எழுத்துக்களைத் தமிழெழுத்துள் கொண்டு வந்து கேடு செய்வதற்குத் தமிழரில் ஒரு சிலரே முனைப்புடன் வேலைசெய்கிறார்கள். இதை அறியாது, குழம்பி, பொதுக்கை வாதம் பேசிக் கொண்டு நாம் தடுமாறிக் கிடக்கிறோம். தமிழ் ஒருங்குறியில் வரமுறையின்றி கிரந்த எழுத்துக்களை நாம் கடன் வாங்கத் தொடங்கினால் மலையாளம் விருத்து 2.0 (version 2.0) என்ற நிலை உறுதியாக நமக்கு ஏற்படும் என்றே தமிழுணர்வுள்ள பலரும் இன்று எண்ணுகின்றனர். வரலாறு மீண்டும் திரும்பக் கூடாது, தமிழர் பிளவு படக் கூடாது, புதுத் தேசிய இனம் எழக் கூடாது, என்ற அச்சவுணர்வு நமக்குள் இன்றும் எழுகிறது.

நம்முடைய கவனமும், முனைப்புமே நம்மைக் காப்பாற்றும். உணர்வு பூர்வமான, பொதுக்கை வாதஞ் சார்ந்த, வெற்று அரசியற் முழக்கங்கள் எந்தப் பயனுந் தராது. ஒருங்குறி பற்றிய நுட்பியற் புலங்களை நாம் ஆழ்ந்து பயிலவேண்டும். அறிவியல் சார்ந்த, நுட்பியல் சார்ந்த முறைப்பாடுகளை அரசினர், ஒருங்குறி நுட்பியற்குழு போன்றவர்களிடம் முன்வைக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Monday, January 03, 2011

கண்ணெழுத்தும் வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 1

”அறிவின் எதிரி அறியாமையல்ல; அது அறிந்ததாய் எண்ணிக் கொள்ளும் மயக்கம்
- விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங்

”தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்” என்ற தொடரை முடித்து, அடுத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது ”கிரந்தவெழுத்து எப்படி எழுந்தது? அதன் பின்புலம் என்ன? இற்றைத் தமிழெழுத்து வடிவம் எப்பொழுது தோன்றியது? சங்க காலத் தமிழெழுத்தின் பெயரென்ன? அது நம் இலக்கியங்களிற் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? வட்டெழுத்து என்பது என்ன? அது எப்பொழுது புழக்கத்திலிருந்தது? ஏன் மறைந்தது? புள்ளியிட்ட தமிழியெழுத்து, வட்டெழுத்து, கிரந்தவெழுத்து என்ற மூவகை எழுத்துக்களுக்கும் இடையிருந்த ஊடாட்டு என்ன? - என்ற கேள்விகளுக்கு விடை சொல்லாது போனோமோ?” என்று தோன்றியது.

அதேபொழுது, ஒருங்குறி நுட்பியற் குழுவிற்கு முன், வந்த கிரந்த முன்மொழிவுகளை ஆழ்ந்து பயிலாது, வெறும் அரைகுறைப் புரிதலில், பொதுக்கைப் போக்கில் "கிரந்தம் x கிரந்த எதிர்ப்பு" என்று எளிமைப் படுத்தி, “தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என அடம்பிடித்து வறளி பேசுவோர் ஒருசிலர் இருக்கிறாரே? அவருக்கு இது போன்ற எழுத்துப் பின்புலங்களைச் சொல்வது தேவையா? இவருக்குச் சொல்லி என்ன பயன் விளையும்?” - என்று ஓரோவழி சலித்தும் போனேன். தமிழ்க்காப்பில் தாம் மட்டுமே முன்னிற்பதாய் முழங்கும் ஒரு சிலர், ”ஆ., இராம.கி கிரந்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்” என்று முற்றிலும் அவதூறாய்க் கைதூக்கும் நேரத்தில், ”இக் கேள்விகளுக்கு விடையிறுத்து என்னாகப் போகிறது?” என்று தயங்கியும் நின்றேன். அப்புறம், இச் சலிப்பையும், தயக்கத்தையும் தூக்கியெறிந்து, சொல்ல வந்ததைச் சொல்லத்தான் வேண்டுமென முடிவு செய்தேன். புரியாத நாலு பேர் அறியாது தொல்லை கொடுப்பதாலேயே நமக்குத் தெரிந்ததைச் சொல்லாதிருக்க இயலுமோ?

இற்றைத் தொல்லியல் வளர்ச்சியில் சிந்து சமவெளி எழுத்துக்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியப் பொறிப்புகளிலேயே மிகவுந் தொன்மை வாய்ந்தவை, அசோகர் கல்வெட்டிற்கும் முந்தியவை, தமிழகத்திற்றான் கிடைக்கின்றனவாம். கொங்கு மண்டலக் கொடுமணலிற் கிடைத்த பானைப் பொறிப்புகள் கி.மு.4/5 ஆம் நூற்றாண்டுகளுக்குக் கொண்டு செல்லுகின்றனவாம். அவை அசோகருக்கும் முன்னால் குறைந்தது 100 ஆண்டுப் பழமை வாய்ந்தனவாம். இந்தக் கண்டுபிடிப்புகளின் முகன்மை இன்று இந்திய வரலாற்றையே மாற்றிப் போட்டிருக்கிறது. அந்தக் காலத்து தி,,நா. சுப்பிரமணியன், இந்தக் காலத்து கே.வி.இரமேஷ், கா.இராஜன் போன்றோர் தமிழி எழுத்துக்களில் இருந்தே அசோகனின் பெருமி எழுத்துக்கள் எழுந்திருக்கலாம் என்ற ஏரணங் காட்டி மாற்றுச் சிந்தனைக்கு நம்மை நகர்த்துவார்கள். அவர்களின் ஏரணம் இன்னும் ஆய்ந்து உறுதி செய்யப்படவேண்டியவொன்றாகும்.

[ஆனால், தொல்லியலையும், கல்வெட்டு எழுத்துக்களையும், தூக்கிப் போட்டு மிதிக்க முனைவோருக்கும், செஞ்சீனக் ”கலாச்சாரப் புரட்சி” போல் இடதுசாரி எக்கு வாதத்திற் (left wing extremism) தோய்ந்து, பழைய ஆவணங்களைத் தூக்கிக் கடாசுவோருக்கும், ”வரலாறா, வீசை என்ன விலை?” என்பவருக்கும் இந்த எழுத்துத் தோற்றங்கள் விளங்காது.]

இனிக் கட்டுரைக்கு வருவோம். என்னுடைய ”தொல்காப்பியமும் குறியேற்றங்களும்” என்ற தொடரின் 5-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/5.html) பழம் எழுத்துமுறைகள் பற்றி ஒருசில பத்திகளிற் சொல்லியிருப்பேன். மேலும் அத்தொடரின் 6-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/6.html) ஒரு படத்தொகுதியால் விளக்கியிருப்பேன். அவற்றைச் சில திருத்தங்களுடன் இங்கு மீண்டுந் தருகிறேன்.
-----------------------------------

கிடைத்துள்ள தமிழிப் பொறிப்புகளில் ஆறு வகைத் தமிழியை இதுவரை இனங் கண்டிருக்கிறார்கள். ஆறுவிதமான எழுத்து முறைகள் பின் வருமாறு:

1. முதல் முறை என்பது உயிர்மெய்களுக்கு இடையில் ஒரு சில இடங்களில் உயிரையும் மெய்யையும் தனித்து எழுதிக் காட்டிய முறை. இப்படி இருக்கும் கல்வெட்டுக்களில் ஒரே எழுத்து மெய்யாகவும், உயிர்மெய் அகரமாகவும், உயிர்மெய் ஆகாரமாகவும் தோற்றமளிக்கலாம். இடம்பார்த்து அவற்றில் மெய் எது, உயிர்மெய் அகரமெது, உயிர்மெய் ஆகாரமெது என்று கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்த முறையில் மெய், உயிர்மெய் அகரம், உயிர்மெய் ஆகாரம் ஆகியவற்றின் இடையே வேற்றுமை காண்பது சரவலாய் இருக்கிறது. [மேலே வரும் படத்தொகுதியில் முதற் படம் முதல்முறையைக் குறிக்கிறது. சாத்தன் என்ற சொல்லைப் பாருங்கள்.]

2. இரண்டாம் முறையில் (இரண்டாவது படம்) மெய்யெழுத்து புள்ளியில்லாமல் இருக்கும். ஆனால், அகரத்தையும், ஆகாரத்தையும், ஒரே தோற்றம் போல், மெய்யெழுத்தை ஒட்டினாற்
போல் ஒரு சிறு கோடு போட்டுக் காட்டுவார்கள். இந்த முறையில் "கல்" என்பதற்கும் "கால்" என்பதற்கும் வேற்றுமை காணமுடியாது. அதாவது ககரத்திற்கும், காகாரத்திற்கும் வேறுபாடு தெரியாது; அவற்றை இடம் பார்த்துப் பொருள் புரிந்து கொள்ள வேண்டும். [இங்கே சாத்தன் என்ற சொல்லிற் சா-வும் த-வும் படத்தில் ஒரே மாதிரி இருப்பதைப் பாருங்கள்.]

3. மூன்றாம் முறையில் (மூன்றாம் படம்) மெய்யெழுத்திற்கும், அகரமேறிய மெய்க்கும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாகக் காட்டும். [படத்தில் த் என்பதற்கும், த என்பதற்கும் வேறுபாடு இல்லாததைக் கவனியுங்கள்.] மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு தோற்றம் காட்டுவது உயிர்மெய் ஆகாரத்திற்கு மட்டுமே அமையும். தமிழ் போன்ற மொழியில் இப்படி மெய்யெழுத்துக்கும், அகரமேறிய மெய்க்கும் ஒரே எழுத்து அமைந்தது அவ்வளவாகக் குழப்பம் தராது, ஏனென்றால் மெய்ம்மயக்கம் என்ற ஒழுங்கு இந்த மொழியில் இருந்தது. மாணிக்கம் என்ற சொல்லில் வரும் க் என்னும் மெய்யெழுத்துக்குப் புள்ளி இல்லாமல் இருக்கிறதென்று வையுங்கள். இருந்தாலும் நாம் படித்துவிடுவோம். ஏன்? க்க என்ற கூட்டில் முதலில் வருவது மெய் என்றும் அடுத்து வருவது அகரமேறிய மெய் என்றும் நமக்குப் புரிந்துவிடும். இனித் தஙகம் என்ற சொல்லில் வரும் ககரம் அகரமேறிய ககரம் என்றும், அதற்கு முன்னால் வருவது ஙகர மெய் என்றும் புரியும். இதே முறையில் க்க, ங்க, ட்க, ண்க, ம்க, ய்க, ர்க, ல்க, ழ்க, ள்க, ற்க, ன்க என்ற மெய்க்கூட்டுக்களில் பின்னால் வருவது உயிர்மெய் தான், மெய்யல்ல என்பது புரிந்துவிடும்.

இனிச் சக என்று தோற்றம் காட்டுவதில், தமிழ்மொழி என்ற காரணத்தால், அதை ச்க என்று படித்துவிட முடியாது. சக் என்பது சரியா என்றால் அடுத்து மூன்றாவதாய் வரும் உயிர்மெய்
க என இருந்தால் சரி, வேறு உயிர்மெய்யாக இருந்தால் சரியல்ல. இதே போல, மூன்றாம் எழுத்து க என இருந்தால், கக், சக், டக், ணக், தக், நம், பக், மக், யக், ரக், லக், வக், ழக், ளக், றக், னக் என்ற எழுத்துக் கூட்டுக்கள் சரியாகும். மொத்தத்தில் தமிழ்ச்சொற்கள் மட்டுமே பயிலும் போது, வடபுலத்துக் கடன்சொற்கள் புழங்காத போது, மெய்யெழுத்தும் அகரமேறிய மெய்யெழுத்தும் ஒரே போல் தோற்றம் அளித்தாலும், அவ்வளவு சரவல் தமிழுக்குத் தராது. ஆனால் கடன் சொற்கள், குறிப்பாகப் பாகதச் சொற்கள், கூடிவரும் போது, தமிழ் வரிகளைப் படிப்பது கடினமாகிக் கொண்டே வந்தது.

இதுவரை பார்த்த மூன்று முறைகளும் பாகதம் கலந்த தமிழை எழுதுவதிற் குழப்பமான முறைகள். இனி மூன்று தீர்வுகளைப் பார்ப்போம்.

4. பட்டிப்போரலு முறை. (நாலாவது படம்) இந்த முறையில் மெய்யெழுத்து புள்ளியில்லாமல் இருக்கும். அடுத்து, மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு உயிர்மெய் அகரத்தைக் குறிப்பார்கள்; உயிர்மெய் ஆகாரத்தில், மேலே சொன்ன சிறுகோடு, செங்குத்தாக கீழ்நோக்கி வளைந்து, இன்னொரு சிறுகோட்டையும் ஒட்டிக் காட்டும். இந்த முறையில் மெய்யெழுத்து, அகரமேறிய மெய், ஆகாரம் ஏறிய மெய் ஆகிய மூன்றிற்கும் உரிய வேறுபாடு இருக்கும். கல்வெட்டில் ஒரு குழப்பம் இருக்காது; [படத்தில் சா-வும், த் -ம் த- வும் வெவ்வேறாகக் காட்சியளிப்பதைப் பாருங்கள்.] ஆனாலும் இந்த முறை ஏனோ பரவாமல் போய்விட்டது.

5. வடபுலத்துப் பெருமி முறை: (ஐந்தாவது படம்) இந்த முறையில் இரண்டு தகரங்கள் ஒன்றின் கீழ் ஒன்றாய் அமைந்து மேலுள்ள தகரம் மெய்யையும், கீழுள்ள தகரம் உயிர்மெய் அகரத்தையும் குறிப்பதைப் பார்க்கலாம். சா என்ற எழுத்திற் சிறுகோடு வந்து தனித்து நிற்கும்.

6. தொல்காப்பிய எழுத்துமுறை: (ஆறாவது படம்) இந்த நிலையில் தான் ஆறாவது முறை வந்தது. இந்த முறை வந்த போது பாகதச் சொற்கள் தமிழுக்குள் ஓரளவு வந்து கொண்டிருந்திருக்க வேண்டும். இது போன்று பாகதம் நுழைவதால் வரும் குழப்பத்தைத் தவிர்க்க, இந்த ஆறாவது முறையில் மெய்யெழுத்தைக் குறிக்கப் புள்ளியிட்டார்கள்; புள்ளியில்லாத, வேறு குறியீடுகள் தொட்டிருக்காத, எழுத்து அகரமேறிய மெய் என்று ஆயிற்று, அதே போல, மேலே சிறு கோடு கொண்ட எழுத்து ஆகாரம் ஏறிய மெய்யாகக் கொள்ளப் பட்டது. இந்த ஆறாவது முறையைத் தான் தமிழ்ப் புலவோர் அறிமுகப் படுத்தினார்கள். அதைத் தொல்காப்பியர் ஆவணப் படுத்தினார். ஆவணப் படுத்திய முறையை மக்கள் ஏற்பதற்கு நெடுங்காலம் ஆயிற்றுப் போலும்.

மேலே சொன்ன ஆறு முறைகளும் ஒன்றின் பின் ஒன்றாய் எழுந்தவை அல்ல. அவற்றில் ஒருசில சமகாலத்தில் ஒன்றோடு ஒன்று இழைந்து இருந்தன. முடிவில் கொஞ்சம் கொஞ்சமாய் மற்றவை குறைந்து சங்க கால இறுதியில் தான் ஆறாம் முறை நிலைத்தது. இதில் முதல்வகை கி.மு. 1000 யை ஓட்டியது என்றும், இரண்டாவது வகை அதற்கு ஓரிரு நூற்றாண்டுகள் கழிந்தது என்றும். மூன்றாவது நான்காவது, ஐந்தாவது, ஆறாவது வகைகள் கி.மு.400, 500 களைச் சேர்ந்தது என்றும், நெடுங்காலம் புழக்கத்தில் இருந்தன என்றும் தெரிகிறது. கடைசி மூன்றும் தொல்லியல் (archeology) ஆய்வுகளின் படி பார்த்தால் சம காலத்திலேயே இருந்திருக்கலாம் என்றும், தமிழை முன்வைத்துப் பேசும் ஆய்வாளர்கள் சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் தொல்காப்பிய காலம் (கி.மு.700-500) என்பது ஆறாம் வகைத் தமிழியின் காலத்தோடு ஒத்து வருகிறது.
--------------------------------------
மேலே சொன்ன ஆறு முறைகளைப் புரியும் வகையில், ஒருசில கல்வெட்டுக்களைப் படமாகப் பார்ப்போம். முதலிற் நாம் காண்பது மாங்குளம் கல்வெட்டாகும்.

இது பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தது. இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனா, அன்றி வேறு நெடுஞ்செழியனா என்று சொல்ல முடியவில்லை. [ஆனால் உறுதியாகச் சிலம்புக் காலத்து நெடுஞ்செழியனில்லை.] இக்கல்வெட்டின் காலம் கி.மு.2 ஆம் நூற்றாண்டு என்று ஐராவதம் மகாதேவன் கணிப்பார். நடன. காசிநாதன் போன்றோர் இதைக் குறைந்தது கி.மு. 3/4 ஆம் நூற்றாண்டு என்று சொல்லுவர். மேலுள்ள படத்தின் இன்றைய எழுத்துப் பெயர்ப்பு கீழ்வருவது போல் அமையும்.

கணிய் நந்த அஸிரிய்இ
குவ்அன்கே த’ம்ம்ம்
இத்தஅ நெடுஞ்சழியன்
பணஅன் கடல்அன் வழுத்திய்
கொட்டூபித்தஅ பளிஇய்

இந்தக் குறிபெயர்ப்பில், த’ம்மம் என்ற சொல்லில் வரும் த’ எனும் எழுத்து, பெருமியில் வரும் மூன்றாவது த -வைக் குறிக்கும். (கவனித்துப் பாருங்கள், இத்தனை பழைய கல்வெட்டிலேயே பெருமியும், தமிழியும் உடன் கலந்திருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்தில் பாகதமும் தமிழும் அருகருகே புழங்கின போலும். ஸகரம் முதல்வரியில் வருவது கூட இங்கு ஓர்ந்து பார்க்க வேண்டியதே.) இக் கல்வெட்டில் உயிர்மெய் அகரம் சிலபோது மெய்+ உயிர் என்று பிரித்து அடுத்தடுத்து வருவதையும், உயிர்மெய் நெடிலானது, உயிர்மெய் குறில் + உயிர் என்று பிரித்து வந்திருப்பதையுங் காணலாம். இந்தக் கல்வெட்டு மேலே சொன்ன மூன்று தீர்வுகளும் வாராத காலத்தில் எழுந்த முதல் எழுத்து முறையைச் சேர்ந்தது. இது போன்ற கல்வெட்டுக்கள் ஆகப் பழங் காலத்தன என்று கல்வெட்டாய்வாளர் சொல்கிறார்கள்.

அடுத்து இரண்டாவது எழுத்து முறைக்கான சான்றாய்ப் புகழூர்க் கல்வெட்டைச் சொல்லலாம். இது இரும்பொறைச் சேரர் மரபை ஒட்டியது.

இதை மிகவும் பிற்காலத்ததாய் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிற்கு ஐராவதம் மகாதேவன் சொல்லுவார். முன்னாற் சொன்ன ஆசீவகப் பின்புலத்தாலும், மற்ற வரலாற்றுக் காரணங்களாலும் இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பின்பகுதியாய் இருக்கவேண்டும். இதில் உயிர்மெய் அகரமும், ஆகாரமும் இடம் கருதிப் புரிந்து கொள்ளவேண்டிய குழப்பத்தில் இருக்கிறது.

மூன்றாம் எழுத்து முறைக்கான சான்றாய்ச் சம்பைக் கல்வெட்டைக் காணலாம். இது அதியன் நெடுமான் அஞ்சியின் காலத்தது.

இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்று ஐராவதம் மகாதேவன் சொல்வார். மற்ற இலக்கியச் சான்றுகளோடு பொருத்திப் பார்த்தால், கல்வெட்டின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகக் கூட அமையலாம். மேலுள்ள படத்தின் இன்றைய எழுத்துப் பெயர்ப்பு கீழ்வருவது போல் அமையும்.

ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி இத்த பளி

இக் கல்வெட்டைக் கூர்ந்து பார்த்தால் உயிர்மெய் எழுத்தை உடைத்து எழுதும் பழக்கம் அதியமான் நெடுமான் அஞ்சி காலத்தில் அருகிவிட்டதை உணர முடியும். ஆனால் அகரத்திற்கும் ஆகாரத்திற்கும் இடையே தெளிவு இல்லாதிருக்கிறது. வாசகத்தை வைத்தே ”எது உயிர்மெய் அகரம், எது உயிர்மெய் ஆகாரம்?” என்று அடையாளங் காண வேண்டியிருக்கிறது.

பட்டிப் போரலுக் கல்வெட்டு பாகதத்தில் இருக்கும் காரணத்தால், அப்படத்தை இங்கு சேர்க்கவில்லை. அதேபோல, அடுக்குக் கட்டு முறை புழங்கிய அசோகரின் பாகதக் கல்வெட்டையும் இங்கு தரவில்லை. பல்வேறு இணையத் தளங்களிலும் இவற்றைத் தேடிக் காணமுடியும். மூன்றாவது படமாய் ஆனைமலைக் கல்வெட்டின் வாசகத்தைக் காணலாம்.

இவகுன்றதூ உறையுள் பதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரட்ட காயிபன்

இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.2 ஆம் நூற்றாண்டு என்றே ஐராவதம் மகாதேவன் கூறுவார். ”அத்துவாயி” என்ற சொல்லை ”அற்றுவாயி” என்ற செந்தமிழ்ச் சொல்லின் பேச்சுவடிவாய்க் கொண்டால், அரட்ட காயிபன் என்ற பெயர் செயினத் துறவியைக் குறிக்காது ஓர் ஆசீவகத் துறவியைக் குறித்ததோ என்ற ஐயமெழுகிறது. அப்படி அமையுமானால், இக் கல்வெட்டின் காலம் மீளுறுதி செய்யப்படவேண்டும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டு என்பது ஆசீவகத்தையொட்டிப் பார்த்தால் மிகவும் பின் தள்ளியதாய்த் தெரிகிறது. இந்தக் கல்வெட்டிற் தான் முதன் முதலில் புள்ளியைக் கண்டதாய் திரு. ஜெபராஜன், கிவ்ட் சிரோமணி ஆகியோர் உறுதி செய்வர். கல்வெட்டுப் படத்தைப் பார்த்தால், ”அரட்ட” என்ற பெயர்ச்சொல்லின் டகர மெய்க்கு மட்டும் புள்ளியிருப்பது தெரியும். அதே பொழுது, கல்வெட்டின் ஊடே புள்ளியிருக்க வேண்டிய எல்லா இடங்களிலும் புள்ளியைக் காணோம் என்பது நம்மை ஓர்ந்து பார்க்கவைக்கிறது. ஒருவேளை புள்ளி பழகுவதும் பழகாமல் இருப்பதுமாய் இக்காலம் இருந்தது போலும்.

புள்ளி பெரிதும் புழங்கியதாய்க் குடுமியான் மலைக் கல்வெட்டைச் சொல்லலாம்.

இதன் வாசகம், “நாழள் கொற்றந்தய் ப[ளி]ய்” என்றமையும். இதிலும் புள்ளி முற்றிலும் புழங்கியதென்று சொல்லமுடியாது. இதன் காலம் கி.பி.3 ஆம் நூற்றாண்டு என்று ஐராவதம் மகாதேவன் சொல்லுவார்.

புள்ளி முற்றிலும் புழங்கியதாய்த் தேடும் போது ஐராவதத்தின் பரிந்துரைப்படி அது நாலாம் நூற்றாண்டு ஆகிவிடுகிறது. (ஐராவதம் மகாதேவனின் காலக் கணிப்பு பெரும்பாலும் கட்டுப் பெட்டியானது.) அப்படிப் புழங்கிய நேகனூர்ப்பட்டிக் கல்வெட்டின் படத்தைக் கீழே காணலாம்.

அதன் வாசகம்,

பெரும்பொகழ்
சேக்கந்தி தாயியரு
சேக்கந்தண்ணி சே
யிவித்த பள்ளி

என்றமையும். புள்ளிவைத்தெழுதும் பழக்கம் பிற்காலத்தில், 4/5 ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்துக்களிலும் புழங்கியிருக்கிறது.

இந்தக் கல்வெட்டுக்களையெல்லாம் ஒருசேர வைத்துப் பார்க்கும் போது, முன்னாலிருந்த மெய் / அகர உயிர்மெய்ச் சிக்கலுக்கு மூன்று தீர்வுகள் வரலாற்றில் எழுந்தது சரியாக விளங்கும்.

அவற்றில் பட்டிப்போரலு முறை ஏனோ இந்தியத் துணைக்கண்டத்தில் முன்னெடுக்கப் படாமலே போனது. அது நடந்திருந்தால் இந்தியாவெங்கணும் ஒரேவகையெழுத்து ஒருவேளை உருவாகியிருக்கலாம். ஏற்றுக் கொண்ட இருமுறைகளும் எழுத்தொழுங்கில் (orthography) வடபுலம், தென்புலம் என இருவேறாய் ஆகிப்போயின. தென்புலப் புள்ளி முறையின் (dot method) படி, எந்தக் குறுங்கோடும் போடாத எழுத்து அகர உயிர்மெய்யையும், புள்ளி போட்ட எழுத்து மெய்யையும் குறித்தன. வடபுல அடுக்குக் கட்டு முறையின் (stacking method) படி, ஒன்றின் கீழ் இன்னோர் உயிர்மெய்யைப் பொருத்தி மேலது மெய்யாகவும், கீழது உயிர்மெய்யாகவும் கொள்ளப்பட்டது.

வடபுல எழுத்து ஒரு பக்கமும், தென்புல எழுத்து இன்னொரு பக்கமுமாய்ச் சாதவாகனர் (கி.மு.230-கி.பி.220) நாணயங்களில் இருப்பதைப் பார்த்தால் அவர் ஆட்சியில் பாகதமும், தமிழும் அருகருகே ஆட்சி புரிந்திருக்க வேண்டும் என்பதும், 2000 ஆண்டுகளுக்கு முன்னே தமிழின் புழங்கெல்லை ஆந்திரம், கருநாடகம், ஏன் மராட்டியம் வரை கூட மொழிபெயர் தேயத்திற் பரந்திருந்தது என்பது புலப்படும். [சங்கத்தமிழ் இலக்கியத்தில் வரும் ”மொழிபெயர் தேயம்” என்ற சொல்லாட்சியை நாம் சரிவர உணர்ந்தோமில்லை.]

தக்கணத்தின் வடக்கே படித்தானத்தைத் (>ப்ரதிஷ்தான் அதாவது இன்றைய ஔரங்காபாதிற்கு அருகில்) தலைநகராய் நிலைகொண்ட சாதவா கன்னர் அரசு கி.பி. 220 அளவில் முற்றிலுஞ் சிதறியது. (அவ்வரசையும், அதற்குப் பின்வந்த அரசப் புலங்களையும் சரிவரப் புரிந்து கொள்ளாது தமிழர் வரலாற்றை நாம் மீள்கட்டமைக்க முடியாது.) அதன் பின், சாதவா கன்னரின் கீழிருந்த சிற்றரசர், படைத்தலைவர் ஆகியோர், “தடியெடுத்தவர் தண்டல்காரர்” என்ற கூற்றுப்படி, தனித்தனி அரசுகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆப்ரர் என்பார் தமக்கு முன்னிருந்த சாதவா கன்ன அரசின் வடமேற்கையும் [ஆப்ரர் < ஆ புரர் = ஆவைப் புரந்தவர் என்ற சொல்லின் சங்கதத் திரிவு. இவர் ஆயர் = ஆய்ச்சர் = யாதவர் என்பவராவர், கன்னடத்தில் ஆப்ரா என்ற பெயர் இடைச்சியைக் குறிக்கும். வட இந்தியாவெங்கணும் ஆயர் (=ஆப்ரர், Ahir, Abhra) இன்று யாதவர் என்றே அழைக்கப்படுகிறார்.

தக்கணத்து ஆப்ரர் சிவநெறியையும், விண்ணவ நெறியையும், செயின நெறியையும் மாறி மாறிக் கடைப்பிடித்தனர். தமிழரை 300, 350 ஆண்டுகள் ஆண்ட களப்ரருக்கும் இவருக்கும் உள்ள தொடர்பைக் கீழே சில பத்திகள் கழித்துச் சுருக்கமாய்ப் பார்ப்போம்.], இக்குவாகு (>இக்ஷ்வாகு) என்பார் அதே அரசின் வடகிழக்கு ஆந்திரப் பகுதியையும், சேதி மரபினர் சாதவா கன்ன அரசின் (கன்னடத்துத்) தென்மேற்கையும், பல்லவர் இராயல சீமையைச் சேர்ந்த தென் கிழக்கையும் பிடித்துக் கொண்டனர்.

இந்த நால்வருள் எழுந்த அரசியற் போட்டிகளின் முடிவில் நிலைத்து எஞ்சியது ஆப்ரரும், பல்லவரும் மட்டுமே. சேதி மரபினர், தனித்து நிற்க இயலாது பின்னால் கருநாடத்தைச் சேர்ந்த கடம்ப மரபினுள் கலந்து போயினர். (காள ஆப்ரரின் வழிமுறையினர்தான் கி.பி. 9, 10 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த காளச்சூரி மரபினர்.) இக்குவாகு மரபினர் இராயல சீமையைச் சேர்ந்த பல்லவருக்கு முன்னால் நீடித்து நிற்க முடியவில்லை. மிகவும் தென்பாலி முகத்திருந்த தமிழகமும் சாதவா கன்னருக்குப் பின்வந்த அரசியற் சிக்கலிற் தடுமாறியது.

இந்த நாலு குடியினரும் தமிழி(ப் புள்ளி) எழுத்து முறையைக் கடைப்பிடிக்கவில்லை. பெருமி (அடுக்குக் கட்டெழுத்து) முறையையே அவர்கள் பின்பற்றி வந்தனர். அவர்கள் பகுதியிற்றான் பெருமி கொஞ்சங் கொஞ்சமாய்த் திரிந்து கிரந்த எழுத்தாய் மாறிற்று என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது. [சாதவா கன்னருக்கு வடக்கே பெருமி திரிந்து நாகரி போன்ற எழுத்துக்களைத் தோற்றுவித்தது.] கிரந்தம் என்றால் பலரும் பல்லவரையே முகன்மையாய் நினைக்கிறார்கள். அது தவறு. பல்லவர் கிரந்தத்தைத் தோற்றுவித்தவரில்லை. அதைப் பெரிதும் புழங்கியவராகும்.

கிரந்தத்தின் தோற்றம் சாதவா கன்னருக்குப் பின் வந்த ஆப்ரர், இக்குவாகு, சேதி, பல்லவர் என்ற நால்வர் தொடர்புற்ற, பழைய சாதவா கன்னருக்குப் பின்வந்த, அரசியற் புலத்தைச் சாரும். இன்னார் தான் கிரந்தம் தோற்றுவித்தவர் என்று எவரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. கல்வெட்டு, செப்பேடு போன்ற ஆவண ஆய்வுகள் ஆழமானால் ஒருவேளை விடை கிடைக்கலாம்.

இற்றை இந்தியாவில் புள்ளி முறையைக் கையாளும் ஒரே எழுத்து தமிழெழுத்து மட்டுமே. மற்ற எழுத்துக்கள் எல்லாம் அடுக்குக் கட்டு முறையையே பயன்படுத்துகின்றன. அடுக்குக் கட்டு முறையில் இடம்வலமாய் எழுத்துக்களை வரிசைப் படுத்துவதோடு, எங்கு மெய்யை ஒலிக்கவேண்டுமோ அங்கு எழுத்துக்களை மேலிருந்து கீழாய் அடுக்கிக் கட்டி உணர்த்துவர். அதாவது வடபுல ஆவணங்கள் (தமிழல்லாத தென்புல ஆவணங்களும் இதிற் சேர்ந்தவையே) இரு பரிமானப் பரப்புக் (two dimensional extent) கொண்டவை. 2 மெய்களுக்கு மேல், சொல்லிற் சேர்ந்துவராத தமிழ் ஆவணம் மட்டும் அப்படிப்பட்டதல்ல. புள்ளி பழகுவதால் தமிழாவணம் இடம்வலமாய் ஒரு பரிமானப் பரப்பிற் (single dimensional extent) மட்டுமே எழுதப்படுகிறது. எந்தத் தமிழாவணமும் இழுனை எழுத்தொழுங்கு (linear orthography) கொண்டதாகவேயிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Monday, December 13, 2010

பொக்கணி = புஷ்கரணி

www.tamilnet.com என்ற தமிழீழ வலைத்தளத்தில் Know the Etymology என்ற தொடர் வந்து கொண்டிருக்கிறது. அந்தத் தொடரில் இதுவரை 174 இடங்களின் சொற்பிறப்பு இனங்காட்டப் பெற்றிருக்கிறது. ஒரு முறையும் தவறவிடாது இத் தொடரை நான் படிப்பது வழக்கம். இதை யார் எழுதுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பெரிதும் பாராட்ட வேண்டிய பணி அதுவாகும். ஈழம், இலங்கை ஆகியவற்றின் பல்வேறு இடப்பெயர்களை (சிலபோது மாலத்தீவுப் பெயர்களையும் கூட) ஆழமாக ஆய்வு செய்து சொற்பிறப்புக் காட்டும் இந்தப் பணி எண்ணியெண்ணி வியக்க வேண்டியவொன்றாகும். தமிழீழமும், அது இருக்கும் தீவும் எந்த அளவிற்குத் தமிழரோடு தொடர்புற்றது என்று நிறுவுவதற்கு இதுபோன்ற ஆய்வுகள் பயன்படுகின்றன. ”தமிழருக்கு அத்தீவில் இடமில்லை” என்று சிங்களவன் அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் தொல்லியலோடு சொற்பிறப்பியல் ஆய்வும் சேர்ந்து வரலாற்றை நிறுவும் வேலையைச் செய்யவேண்டியிருக்கிறது. [இடைச்சங்க, முதற்சங்க காலப் பழந்தமிழகத்தில் இலங்கைத்தீவு (அன்று அது தீவல்ல, நாக நாடு என்று பெயர்பெற்ற தீவக்குறை.) நம்மோடு தொடர்புற்றே இருந்திருக்கும் என்ற என் கருதுகோள் மேலும் மேலும் உறுதிப் படுகிறது.]

[இப்படி ஒரு தொடரை இற்றை இந்திய ஊர்ப்பெயர்களுக்கு யாரும் செய்து நான் பார்த்ததில்லை. பாவாணருக்கும், இளங்குமரனாருக்கும், இரா.மதிவாணருக்கும், ப.அருளியாருக்கும் பின்னால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் (குறிப்பாக பேரா. கு,அரசேந்திரன்) ஒருசிலர் மட்டுமே தமிழ்நாட்டில் உருப்படியான சொற்பிறப்பு ஆய்வு செய்கிறார்கள். சொன்னால் பலருக்கும் சினம் ஏற்படுகிறது. தமிழை வைத்து மேடையிலும், அரசியலிலும் பிழைப்போர் தொகை இன்று கூடிப்போய், தமிழுக்குப் பணி செய்வோர் தொகை குறைந்தே வருகிறது. நாட்பட நிலைத்து நிற்கும் அளவில், தமிழுக்கு பணி செய்வோர் தொகை அருகிப் போய், ஆ, ஊ என்று அலைபாயும் கூட்டம் மிகுத்து வருகிறது. (தமிழ் செம்மொழியாகிவிட்டது என்று கூத்தாடுவதே பெருமையாகி அதன் தொடர்ச்சியையும், எதிர்கால நிலைப்பையும் பற்றி நம்மில் யார் கவலைப்படுகிறோம், சொல்லுங்கள்?) ஏதொன்றையும் ஆழ்ந்து படிப்பதும், அறிவியல் வரிதியாய் ஆய்வு செய்வதும், எல்லை மொழிகளை அறிந்து, அவற்றைத் தமிழோடு பிணைத்து புதுப் பரிமானங்களைத் தமிழுக்குக் கொணர்வதும், தமிழியலோடு இன்னொரு நுட்பியலைப் பிணைத்து புதுப் பார்வை காட்டுவதும், ஆங்காங்கே முடிவு தெரியாத தமிழ்வரலாற்றுக் கேள்விகளுக்குத் தீர்வு சொல்வதும், அரிதாய் இருக்கிறது.]

அண்மையில் ”கூட்டம் பொக்குண, கற்பொக்குணை” என்ற பெயர்களின் சொற்பிறப்பை http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33209 என்ற 174 ஆம் பதிவில் ஆய்வு செய்திருந்தார்கள். அந்த வலைத்தளம் போய் பழைய பதிவுகளையும் படித்துப் பார்த்தால், நான் சொல்லுவதன் அருமை புரியும்.

இனிப் பொக்கணிக்கு வருகிறேன்.

புல்>புள்>பொள் என்ற வேர் தமிழில் துளைப்பொருளைக் குறிக்கும். பொக்கம், பொக்கணம், பொக்கல், பொக்கு, பொக்குள், பொக்குளம், பொக்கை, பொகுட்டு, பொங்கல், பொச்சம், பொச்சு, பொச்சை, பொட்டல், பொட்டி, பொட்டு, பொட்டை, பொத்தல், பொதும்பு, பொந்தர், பொந்து, பொய், பொய்கை, பொல்/பொல்லு, பொலுகு, பொழி, பொள்ளல், பொள்ளை, பொளிதல், பொற்றுதல், பொன்றுதல் என்று பல்வேறு சொற்களை இந்த வேர் உருவாக்கும். கூட்டுச் சொற்களையும், இரண்டாம் நிலைச் சொற்களையும், அவற்றின் கூட்டுக்களையும் சேர்த்தால் குறைந்தது 1000 சொற்களாவது தேறும். இப்படி எழும் எல்லாச் சொற்களின் உள்ளே துளைப்பொருள் அடியில் நின்று மற்ற வழிப்பொருள்களைக் குறிக்கும். [நான் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் கூறி விளக்கிக் கொண்டிருந்தால் கட்டுரை நீளும் என்று தவிர்க்கிறேன்.]

இவற்றில் ஒன்றுதான் பொக்கணி என்ற சொல்லாகும். அது நிலக்குழிவில் நிறைந்திருக்கும் நீர்நிலையைக் குறிக்கும். இதன் இன்னொரு திரிவாய் சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் புழங்கும் போகணி என்ற சொல் நீரை மொள்ளும் குவளையைக் குறிக்கும். (போகணி என்பது தமிழக அகரமுதலிகளுள் பதிவு செய்யப்படாத ஒரு சொல். பதிவு செய்யப்படாத வட்டாரச் சொற்கள் ஓரிலக்கமாவது தமிழிற் தேறும். அவற்றையெல்லாம் பதிவு செய்ய யார் முன்வருகிறார்கள், சொல்லுங்கள்? வேரிற் பழுத்த பலாவாய் இவையெல்லாம் பறிப்பாரற்றுத் தொங்குகின்றன.)

பொத்தகம்> புத்தகம்> புஸ்தகம் என்ற சொல், மீத்திருத்தம் பெற்று சங்கதத்துள் புகுந்து மீண்டும் தமிழுக்குத் திரிவாய் நுழைந்து பொத்தகம் என்ற தமிழ்ச்சொல்லையே போக்கடித்தது போல, பொக்கணி என்ற சொல் பொக்கணி> புக்கணி> புஷ்கணி> புஷ்க்ரணி என்றாகும். நாம் மீண்டும் அதைத் தமிழ்முறையிற் பலுக்கிக் கொண்டு புட்கரணி என்று சொல்லுவோம். பெருமாள் கோவில் திருக்குளங்கள் இன்று புஷ்கரணி என்றே அழைக்கப் படுகின்றன. அதன்வழி பொக்குணி என்ற தமிழ்ச்சொல் போயே போயிற்று. புஷ்கரணி என்று சொன்னாற்றான் பெருமாள் அருள் கிடைக்கும் என்று கூட மூடநம்பிக்கை எழுந்து விட்டது. [அதோடு மட்டுமல்லாது தாமரைக் குளம் என்று புதுப்பொருள் சொல்லி பூஷ் கரணி என்றெல்லாம் பொருந்தப் புகல்வார் இன்னொரு பக்கம் நம்மை ஏமாற்றவுஞ் செய்கிறார்கள். இது சங்கதச் சொற்பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சிலும் தவறாகப் பதிவு பெற்றிருக்கிறது.]

பொக்கணி, பொக்குணை போன்ற தமிழ்ச்சொற்களுக்குச் சிங்கள இணை காட்டி Know the Etymology ஆசிரியர் தன் கட்டுரையில் இச்சொற்களின் தமிழ்மையை நிறுவுவார். சிங்களத்துள் பல பாலி மொழிச் சொற்கள் புதைந்துள்ளன. பாலி என்பது பாகதத்தின் இன்னொரு வார்ப்பு. பாகதம் சங்கதத்திற்கு முன்னது; வேத மொழிக்குப் பின்னது. பல சங்கதச் சொற்களுக்கு தமிழிணை காண வேண்டுமானால் பாகதம், பாலி அறிவது பயன்தரும். ஒருவகையில் பார்த்தால், தமிழிற் சொல்லாய்வு செய்யும் போது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் அறிவது எவ்வளவு துணை செய்யுமோ, அதே போலச் சிங்களம் அறிவதும் நமக்குப் பயன்தரும்.

அன்புடன்,
இராம.கி.

Friday, December 03, 2010

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 3

"தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்" என்ற என் இருபகுதிக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டில் மலேசியக் கணிஞர் நண்பர் முத்து நெடுமாறன்,

: "Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities. Period." என்று கூறி இருக்கிறீர்கள். இதை விளக்கும் ஆவணங்கள் (sample documents) ஏதாவது கிடைக்குமா? JPGஇல் இருந்தாலும் தாழ்வில்லை

என்று கேட்டிருந்தார். அவருக்கு விடை சொல்லும் முகமாக 3 ஆவணப்படங்களைக் கண்ணி(to scan)யெடுத்து கீழே இந்த இடுகையிற் போட்டிருக்கிறேன். இவை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “பல்லவர் செப்பேடுகள் முப்பது” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்தக் காலப் புரிதலுக்காகச் செப்பேட்டின் மசிப்படியைப் (estampage) படமாக்காது அச்சுப்படியைப் (print copy) படமாக்கியிருக்கிறேன். மசிப்படியைப் பார்த்தாலும் அது அச்சுப்படி போலவே இருப்பதை நுண்ணித்துப் பார்ப்போர் உணரமுடியும்.

முதலாவது கண்ணை (scan - noun), என் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஏற்கனவே சொல்லப்பட்ட முதலாம் பரமேச்வர வர்மனின் கூரம் செப்பேடாகும். [முதலாம் பரமேச்வர வர்மன் இரண்டாம் மகேந்திர வர்மனின் மகன். முதலாம் நரசிம்ம வர்மனின் பேரன். இவன் ஆட்சிக்கு வந்த காலம் கி.பி.668-669.]



கூரம் செப்பேடு ஐந்தாம் ஏட்டின் முன்புறத்தில் கிரந்தவொழுங்கோடு (grantha orthography) எழுதப்பட்ட வடமொழிப் பகுதியின் 49 ஆம் வரியில் வடமொழிச் சொற்களுக்கு நடுவில் ”ஊற்றுக் காட்டுக் கொட்ட” என்றும் ”நீர்வெளூர்” என்ற தமிழ்ச் சொற்கள் தமிழ் எழுத்தொழுங்கோடு (Tamil orthography) எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். [படத்தை ஊன்றிக் கவனியுங்கள்.] அதாவது இது கலப்பு மொழி. ஆனால் கிரந்தவெழுத்து கிரந்த அடுக்குமுறையிலும், தமிழ் தமிழெழுத்திற்கான நீரொழுக்கு முறையிலும் எழுதப்படுகின்றன. [திரு. நா. கணேசன் சொல்வது போல் 7 தமிழ்க் குறியீடுகளை கிரந்த முன்மொழிவிற்குள் சேர்த்தால் இந்த மொழியொழுங்குகள் அப்படியே குதறிக் குலைந்து போகும். ]

இதைத்தான் நான் “:Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities” என்று சொல்லியிருக்கிறேன். (வீரமாமுனிவருக்கும் மிக முற்பட்ட) அந்தக் காலத்தியத் தமிழெழுத்தில், ஒற்றைக் கொம்பு நெடிலைக் குறித்தது என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொண்டால் சொல்லப்படும் கோட்டம்/ஊர்கள் “ஊற்றுக்காட்டுக் கோட்டம்”, “நீர்வேளூர்” ஆகியன என்பது புரிபடும்.

இனிக் கிட்டத்தட்ட இருநூற்றி இருபது ஆண்டுகள் தள்ளிக் கடைசியில் வரும் பல்லவத் தனித்த அரசனான அபராஜிதன் காலத்திற்கு (கி.பி.885-903) வருவோம். இது தொடர்பாக இரண்டாம் கண்ணைப் படத்தைக் காண வேண்டுகிறேன்.



இது தமிழெழுத்து விரவிவந்த வடமொழிப் பகுதியாகும். தமிழகத் தொல்லியற் துறை திருத்தணிகைக்கு அடுத்துள்ள வேளஞ்சேரி என்னுமிடத்தில் 1979 இல் கண்ட பல்லவர் செப்பேட்டில் வடமொழிப் பகுதியின் இரண்டாம் ஏட்டில் இரண்டாம் பக்கத்தில் முதல் வரியில் ”சிற்றாற்றூர” என்ற ஊர்ப்பெயர் சகரம் கிரந்தமாகவும், ரகரம் கிரந்தமாகும் “ற்றாற்றூ” என்ற றகரம் விரவிவரும் சொற்பகுதி தமிழ் எழுத்தொழுங்கிலும் வருவதைக் காணலாம். இங்கும் ஒரே சொல்லில் கிரந்தம் கிரந்தவொழுங்கிலும், தமிழ் தமிழெழுத்து முறையிலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழின் சிறப்பு றகரம் தமிழ்முறையிலேயே எழுதப்பட்டிருப்பதே முற்காலத் தமிழர் தமிழெழுத்து முறையைச் சரியாகக் காத்தார்கள் என்பதற்குக் காட்டாகும்.

இதே போல அதே செப்பேட்டின் மூன்றாம் ஏட்டில் 1, 2 ஆம் வரிகளில் “குன்றவத்தன கோட்டம் தணியல் நாடு என்ற சொற்கள் சுற்றிலும் கிரந்தவெழுத்துக்களுக்கு நடுவில் தமிழெழுத்திலும், 8 ஆம் வரியில் மேலிருஞ்செறு என்று ஊர்ப்பெயர் “மேலிரி” என்ற பகுதி கிரந்தத்திலும் ”ஞ்செறு” என்ற பகுதி தமிழெழுத்திலும் கிரந்தச்செப்பேட்டுப் பகுதியில் வந்திருக்கும். மறுபடியும் கலவை எழுத்துநடை. இதனாலேயே 7 தமிழ்க்குறியீடுகளைக் கிரந்தத்திற் சேர்க்கக் கூடாது என்று கூறுகிறோம்.

மூன்றாவது கண்ணைப் படமாக அதே செப்பேட்டின் நாலாம் ஏடு முதற் பக்கத்துக்கு வருவோம். இது செப்பேட்டின் தமிழ்ப் பகுதியைக் குறிக்கிறது.



இதில் 4 ஆம் வரியில் “நின்றருளின ‘ஸுப்ரஹ்மண்ய’ர்க்கு என்ற சொல்லில் ’ஸுப்ரஹ்மண்ய” என்ற பகுதி கிரந்த முறையிலும், ‘ர்க்கு” என்பது தமிழ் முறையிலும் வருவதைக் கண்டால், [சந்த்ராத்தித்தர் என்ற சொல்லில் “சந்திராதித்த” என்பது கிரந்த முறையிலும், “ர்” என்பது தமிழ் முறையிலும் வருவதைக் கண்டால்,] ”தமிழ் தமிழாக இருந்தது. கிரந்தம் கிரந்தமாய் இருந்தது” என்பது புரியும். திரு. நா. கணேசன் சொல்வது போல் இரண்டையும் முட்டாள் தனமாய்க் கலந்து யாரும் “எழுத்துக் கந்தரகோளம்” பண்ணவில்லை.

நான் எடுத்துக் காட்டிய மூன்று கல்வெட்டுப் படங்கள் சொல்ல வந்த கருத்திற்குத் துணையாகப் போதும் என்று எண்ணுகிறேன். இக் கல்வெட்டுக்களை எல்லாம் ஒழுங்காகக் குறியேற்றம் செய்யவேண்டுமானால்

”தமிழ்-கிரந்தம் என்ற பெருங்கொத்துக் குறியேற்றம் வரவே கூடாது. அதே பொழுது 7 தமிழ்க் குறியீடுகள் சேர்க்காத கிரந்த வட்டம் மட்டும் தனியே SMP இல் குறியேற்றம் பெறுவதிற் தவறில்லை”

என்றே நான் எண்ணுகிறேன்.

மீண்டும் சொல்கிறேன்:

ஆயிரக் கணக்கான தமிழகக் கல்வெட்டுக்கள் இருமொழிக் கல்வெட்டுக்களாகும். அவை ஒழுங்காகக் கணிக்குள் ஏற்றப்பட வேண்டுமானால்

”கிரந்தத்தைத் தனியே வை; தமிழைத் தனியே வை. இரண்டையும் குறியேற்றத்துள் ஒன்றாக்கி உருப்படாமற் செய்யாதே”

என்று தான் அழுத்தமாகக் கூறவேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, November 30, 2010

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 2

கிரந்தம் என்பது ஓர் எழுத்துமுறை, அது தனி மொழியல்ல. முன்பே சொன்னபடி, அது தமிழெழுத்திலிருந்து தான் தொடங்கியது. (இற்றைத் தமிழெழுத்தே கிரந்த எழுத்தில் இருந்து தொடங்கியது என்று சொல்லுவது ஒருசிலரின் தலைகீழ்ப் பாடம். அதன் முறையிலாமையைப் பற்றி நாம் அலசப் போனால் வேறெங்கோ இழுத்துச் செல்லும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.)

பல்லவர் காலத்திற்றான் சங்கதம் எழுத உதவியாய்க் கிரந்தம் பெரிதும் புழங்கியது. நாகரியில், சித்தத்தில் கிடைக்காத பழங்கால ஆவணங்கள் கூடக் கிரந்தத்திலேயே எழுதப் பெற்றிருக்கின்றன. [அதர்வண வேதமே கிரந்தத்திற் தான் முதலிற் கிடைத்தது என்று சொல்லுவார்கள்.] ஒருவகையிற் பார்த்தால் சங்கத மொழி ஆவணங்களுக்கு நாகரி அளவிற்குக் கிரந்தமும் முகன்மையானதே. இது போக இன்னொரு பயன்பாட்டையும் இங்கு சொல்லவேண்டும். தமிழும் வடமொழியும் கலந்த 50000 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் ஈரெழுத்துப் பாணியில் மணிப்பவள நடையில் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. கிரந்தத்தின் இன்றையப் பயன்பாடாக 3 பயன்களைச் சொல்லுகிறார்கள். அதைச் சில பத்திகள் கழித்துக் கீழே பார்ப்போம்.

கணியில் கிரந்த எழுத்துக்களைக் குறியேற்றம் செய்வதையொட்டி அண்மையில் நடந்திருப்பவை இரு வேறு முன்மொழிவுகள். இவற்றில் முதல் முன்மொழிவு ”நீட்டித்த தமிழ்” எனும் தலைப்பில் திரு. ஸ்ரீரமண சர்மா கொடுத்தது. இரண்டாவது முன்மொழிவு கிரந்த எழுத்துக்களைத் தமிழோடு ஒட்டினாற்போல அல்லாது தனியிடத்திற் குறியேற்றம் செய்வதற்காகத் திரு. நா. கணேசன், திரு. ஸ்ரீரமண சர்மா, இந்திய நடுவணரசு என மூவரால் அடுத்தடுத்துக் கொடுக்கப்பட்டது. இவற்றைப் புரிந்து கொள்வதற்குத் தோதாகக் கொத்துத் தேற்றத்தை (set theory) நாடுவோம்.



ஒரு தாளில் ஒன்றோடொன்று குறுக்காய் வெட்டினாற்போல் இரண்டு பெரிய வட்டங்கள் போட்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இவ்விரு வட்டங்களுக்கும் பொதுவாய் ஒரு பொதுவில்லையும், அதன் இருபக்கங்களில் இரு தனிப்பிறைகளும் இருப்பதாக இவ்வமைப்பைப் புரிந்து கொள்ளலாம். ஒரு தனிப்பிறையைத் தமிழ்ப்பிறை என்றும், இன்னொன்றைக் கிரந்தப்பிறை என்றும் சொல்லலாம். இந்திய நடுவண் அரசு ஒருங்குறிச் சேர்த்தியத்திற்குக் (Unicode Consortium) கொடுத்த கிரந்த முன்மொழிவின் அடிப்படையில், பொதுவில்லையில் 41 குறியீடுகளும் தமிழ்ப்பிறைக்குள் 7 குறியீடுகளும் கிரந்தப் பிறைக்குள் 41 குறியீடுகளும் உள்ளன. மூன்று பகுதிகளும் சேர்ந்து மொத்தம் 89 குறியீடுகள் ஆகும்.

இந்த 89 குறியீடுகளை இந்திய நடுவணரசு கொடுத்திருக்கும் முன்மொழிவின் பட்டியல் வழி பார்த்துக் கொள்ளலாம். கிரந்த எழுத்துக்கள் எப்படி இருக்கும், குறியீடுகள் என்னென்ன என்று அறிவதற்காகக் கீழே வரும் படம் கொடுக்கப்படுகிறது.


கிரந்தப் பிறைக்குள் இருக்கும் 41 குறியீடுகளில் 14 குறியீடுகள் வேத ஒலிப்புக்களைக் குறிக்கும் மீக்குறிகளாகும் (diacritics). அவற்றை ஒதுக்கினால், கிரந்தப்பிறையில் உள்ள குறியீடுகள் 27 மட்டுமே. ”மாவோடு மா” என்று ஒப்பிட்டால் கிரந்தப்பிறையில் இருக்கும் குறிகள் 27 என்றே கொள்ளவேண்டும்.

பொதுவில்லையில் ஏற்கனவே தமிழிற் புகுந்து பதுங்கிக் கொண்ட [ஜ், ஸ், ஷ், இன்னொரு வகை z - (U+0BB6) இது என் கணியில் போடவராது, மேலும் ஹ் என்ற] 5 கிரந்த எழுத்துக்களும் அடங்கியுள்ளன. [ஸ்ரீ, க்ஷ் என்னும் கூட்டெழுத்துக்கள் இக்கணக்கெடுப்பில் இல்லை. அவற்றை நடுவணரசின் கிரந்த முன்மொழிவின் படி, பொதுவில்லையில் சேர்க்கவில்லை.]

ஆக,

தமிழ்-கிரந்தப் பொதுவில்லையில் இருக்கும் குறியீடுகள் = 41
தனிக் கிரந்தப்பிறையில் இருக்கும் குறியீடுகள் = 27
தனித் தமிழ்ப்பிறையில் இருக்கும் குறியீடுகள் = 7
கிரந்த வட்டத்தில் இருக்கும் குறியீடுகள் = பொதுவில்லைக் குறியீடுகள் + தனிக் கிரந்தப்பிறைக் குறியீடுகள் = 41+27 = 68
தமிழ் வட்டத்தில் இருக்கும் குறியீடுகள் = பொதுவில்லைக் குறியீடுகள் + தனித் தமிழ்ப்பிறைக் குறியீடுகள் = 41+7 = 48 (இதிற்றான் ஏற்கனவே நுழைந்த 5 கிரந்த எழுத்துக்கள் உள்ளன.)
தமிழ்-கிரந்தம் இரண்டும் சேர்ந்த பெருங்கொத்தில் இருக்கும் குறியீடுகள் (வேதக் குறியீடுகள் தவிர்த்து) = 27+41+7 = 75

இங்கே Superset என்பது கிரந்தம்-தமிழ் ஆகிய இரண்டும் சேர்ந்த பெருங்கொத்து. இப் பெருங்கொத்தை இரு வழிகளில் அடையலாம். முதல் வழியில், கிரந்தத்திற் (68) தொடங்கித் தமிழ்க் குறியீடுகளை (7) சேர்த்தால் மொத்தம் 75 கொண்ட பெருங்கொத்து வந்துசேரும். இரண்டாம் வழியிற் தமிழிற் (48) தொடங்கி கிரந்தத்தைச் (27) சேர்த்தாலும் அதே 75 கொண்ட பெருங்கொத்துத் தான் வந்து சேரும். எந்த வழியில் வந்து சேருகிறது என்பது முகன்மையில்லை. இரண்டுவழியிலும் ஒரே பெருங்கொத்துத் தான் வந்து சேரும் என்பது முகன்மையானது.

இதை விளங்கிக் கொள்ளாமல், “கிரந்த எழுத்துகளில் ஏற்கனவே சில தமிழ் எழுத்துகள் இருக்கின்றன; அவற்றை என்கோடு செய்யும்போது மேலும் ஐந்து எழுத்துகளை என்கோடு செய்வதில் என்ன சிக்கல் ? அடுத்தது, தமிழ் எழுத்துகளைச் சேர்த்து கிரந்தத்தை ஒரு சூப்பர் செட் ஆக உருவாக்க நினைக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே தமிழை ஏன் அப்படியொரு ’சூப்பர் செட் ’ஆக உருவாக்கக்கூடாது ? என்று கேட்டேன். அதற்கு யாரும் திருப்தியான பதிலை அளிக்கவில்லை” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் தமிழ்மன்றம் மடற்குழுவில் கேட்டிருந்தார். இந்தக் குறியீடுகள் பற்றிய முழுவிவரம் புரிந்திருந்தால் இப்படியொரு பூஞ்சையான மேலோட்டக் கேள்வி அவரிடமிருந்து எழுந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.

இன்னொன்றும் இங்கு சொல்லவேண்டும். எந்தச் சங்கத ஆவணம் உருவாக்குவதற்கும் கிரந்த வட்டத்தில் இருக்கும் 68 குறியீடுகள் மட்டுமே முற்றிலும் போதுமானவை. இக்குறியீடுகளை வைத்துத்தான் 1500 ஆண்டுகள் காலமும் ஏராளமான சங்கத ஆவணங்களை உருவாக்கியிருக்கிறார்கள். 75 குறியீடுகள் கொண்ட பெருங்கொத்தை அவர்கள் இதுநாள் வரை நாடியதேயில்லை. [அப்படி நாடியதாக பேரா. கி. நாச்சிமுத்து, நா. கணேசன் போன்று சிலர் சொல்லும் கூற்றுக்கள் ஆழ்ந்து ஆராய்ந்தால் ஆதாரமற்றவை என்பது புலப்படும்.]

அதே பொழுது, 68 குறியீடுகள் கொண்ட கிரந்த வட்டத்தால் தமிழ் ஆவணங்களை எழுதவே முடியாது. 48 குறியீடுகள் கொண்ட தமிழ் வட்டத்தால் மட்டுமே எழுத முடியும்.

இங்கே வட்டங்களுக்குள் இருக்கும் என்று குறிப்பிட்ட எண்ணிக்கைகளையும் மற்ற விவரங்களையும் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொண்டு மேற்கொண்டு கட்டுரைப் படிக்குமாறு வாசகர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இது புரியாமல் கட்டுரையில் வேறெதுவும் புரியாது. நடுவணரசின் முன்மொழிவில் கொடுக்கப்பட்ட கிரந்தக் குறியீட்டுக் கட்டப் படத்தையும் கூர்ந்து பார்ப்பது தேவையானது.

இனி ஒருங்குறிச் சேர்த்தியத்தின் முன் வந்து சேர்ந்திருக்கும் “நீட்டித்த தமிழ்” என்ற முன்மொழிவையும், மூன்று பேர் கொடுத்த கிரந்த முன்மொழிவையும் மேலே சொன்ன வட்டங்களின் வழிப் புரிந்து கொள்வோம்.

1. (48 குறியீடுகள் கொண்ட) தமிழ்வட்டத்தோடு (27 குறியீடுகள் கொண்ட) கிரந்தப்பிறையைச் சேர்த்து (75 அடங்கிய) ஸ்ரீரமண சர்மாவாற் கொடுக்கப் பட்ட “நீட்டித்த தமிழ்” என்ற பெருங்கொத்து முன்மொழிவு. [இதை ”நீட்டித்த தமிழ்” என்றது தவறான பெயர். உண்மையில் இது தமிழ்-கிரந்தம் என்னும் ஈரெழுத்துக் கலவையை, அதாவது நாம் முன்னாற் சுட்டிக் காட்டிய பெருங்கொத்தை, வேண்டுகின்ற முன்மொழிவாகும்.]

2. (68 குறியீடுகள் கொண்ட) கிரந்த வட்டத்தோடு (7 குறியீடுகள் கொண்ட) தமிழ்ப்பிறையையும் சேர்த்து (75 அடங்கிய) நா. கணேசனால் கொடுக்கப்பட்ட பெருங்கொத்து முன்மொழிவு. [இதுவும் ஈரெழுத்துக் கலவை அடங்கிய பெருங்கொத்தை வேண்டும் முன் மொழிவாகும்.]

3. (68 + 4 குறியீடுகள் கொண்ட) கிரந்தவட்டம் மட்டுமே அடங்கிய ஸ்ரீரமண சர்மாவின் கிரந்த முன்மொழிவு. [அதாவது இவர் 7 குறியீடுகள் கொண்ட தமிழ்ப்பிறையில் இருந்து 4 குறியீடுகளை மட்டும் எடுத்துக் கொள்கிறார். இதை பேரா. தெய்வசுந்தரம் என்னிடம் ஆழ்ந்து உணர்த்தியதை இங்கு நான் சொல்ல வேண்டும்.]

4. ஸ்ரீரமண சர்மாவிற்கும் நா. கணேசனுக்கும் இடையே ஏற்பட்ட வேறுபாட்டின் தீர்வாக, இந்திய நடுவணரசால் மீண்டும் (68 குறியீடுகள் கொண்ட) கிரந்த வட்டத்தோடு (7 குறியீடுகள் கொண்ட) தமிழ்ப்பிறையும் சேர்த்துக் கொடுக்கப்பட்ட (ஈரெழுத்துக் கலவையாய், 75 குறியீடுகள் அடங்கிய) பெருங்கொத்து முன்மொழிவு.

இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது 1, 2, 4 ஆகிய முன்மொழிவுகள் தாம். அதன் மூலம் கிரந்தப் பெருங்கொத்துள் எல்லாத் தமிழ்க்குறியீடுகளையும் பொருத்தித் தமிழெழுத்துக்களை ஓர் உட்கொத்தாக்கும் (subset) சூழ்க்குமமும், பெருங்கேடும் அடங்கியிருக்கின்றன.

இந்த நாலு முன்மொழிவுகளில் முதல் முன்மொழிவு (ஸ்ரீரமண சர்மாவின் ”நீட்டித்த தமிழ்”
முன்மொழிவு) தமிழக அரசின் கவனத்திற்கு வருவதற்கு முன்னால், தனி மாந்த மறுப்புகளிலேயே (பலரும் மறுப்பளித்தனர்; நானும் உத்தமம் என்னும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் வழி மறுப்பளித்திருந்தேன்), கூடவே உத்தமம் அளித்த மறுப்பிலேயே, ஒருங்குறி நுட்பியற் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு ஸ்ரீரமண சர்மாவின் முன்மொழிவு மறுக்கப்பட்டு திருப்பியனுப்பப் பட்டது. இம்முன்மொழிவு திருப்பியனுப்பப் பட்டதில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் நுட்பியல் மறுப்பு முகன்மையான காரணம் வகித்தது. அதைச் சற்று விளங்கிக் கொள்ளுவோம்.

ஸ்ரீரமண சர்மா அனுப்பிய ”நீட்டித்த தமிழ்” முன்மொழிவில் நாலு ககரம், நாலு சகரம். நாலு டகரம், நாலு தகரம், நாலு பகரம், சங்கத உயிர் ருகரம், சங்கத உயிர் லுகரம் போன்றவையும் இன்னும் சிலவும் மேற்குறிகள் (superscripts) போட்டுத் தனியிடம் கேட்கப் பட்டன. (ஸ்ரீரமண சர்மாவின் ”நீட்டித்த தமிழ்” முன்மொழிவிற்கான விளக்க ஆவணத்தில் ஒரு ஒப்பீட்டுப் பட்டியல் இருந்தது. அதை மூன்று படங்களாக கீழே வெட்டி ஒட்டியுள்ளேன். அந்தப் படத்துள் வரும் ஆங்கில விளக்கம் திரு.ஸ்ரீரமண சர்மாவே தந்தது.






மேலேயுள்ள மூன்று படங்களிலும் திரு.சர்மா நுழைக்கவிரும்பும் எழுத்துக்கள்/குறியீடுகள் உள்ள கட்டங்கள் சற்று சாம்பல் நிறத்தில் வண்ணம் தீட்டியிருப்பதைக் கவனியுங்கள். இந்த எழுத்துக்கள்/குறியீடுகள் தான் கிரந்தப்பிறைக்கென உள்நுழையும் 27 குறியீடுகள்.

இப்படி ஒருசில எழுத்துக்களுக்கு மேற்குறிகள் போட்டு எழுதுவது ஒன்றும் புதியமுறையல்ல. இதற்கு முன்னரே 40, 50 ஆண்டுகளாய் அச்சில் செய்யப்பட்டது தான். இப்பொழுது BMP இல் இருக்கும் தமிழெழுத்துக் குறியீடுகளையும், எல்லா ஒருங்குறி வார்ப்புக்களிலும் இருக்கும் மேற்குறி வாய்ப்பையும் பயன்படுத்திச் சரம் சரமாய் க1, க2, க3, க4........ரு’, லு’ என்று கணிவழியாகவும் வெளியிட முடியும்.

இம் மேற்குறிகளைக் கணித்திரையில் வெளியிடும் போது, கி2, கீ2, கு2, கூ2, கெ2, கே2, கை2, ஆகிய எழுத்து வரிசைகளில் மேற்குறி ஒழுங்காய் வந்துவிடும். கா2, கொ2, கோ2, கௌ2 ஆகிய நாலு வகை எழுத்து வரிசைகளில் மட்டும் தான் ஒருவகைச் சிக்கல் ஏற்படும். அதாவது, காலுக்கும் ஔகாரக் குறிக்கும் அப்புறம் தான் மேற்குறிகளை மைக்ரொசாவ்ட் கணியில் இடமுடியும். அதேபொழுது ஒருசில நுணுகிய மாற்றங்களுக்கு அப்புறம் ஆப்பிள் கணியில் மேற்குறியை இட்டு அதற்கு அப்புறம் கால் குறியையும், ஔகாரக் குறியையும் இடமுடிகிறது.

இந்தச் செய்து காட்டலின் மூலம் ”இது குறியேற்றம் அளவிற் செய்ய வேண்டிய மாற்றமேயல்ல. இயக்கச் செயலி (operating system) மூலம் நடைபெற வேண்டிய / நடைபெறுத்தக் கூடிய மாற்றம்” என்று மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் தெளிவாக நிறுவித்துக் காட்டினார். ”இப்பொழுது இருக்கும் BMP தமிழ்க் குறியேற்றத்தையும், சாத்தாரமாய் (= சாதாரணமாய்) எந்தக் கணியிலும் இருக்கும் மேற்குறிகளையும் கொண்டு ”நீட்டித்த தமிழில்” ஸ்ரீரமண சர்மா கேட்கும் எல்லாக் குறிகளையும் கணித்திரையிலும், கணியச்சியிலும் (computer printer) கொண்டுவந்து காட்டமுடியும்” என்னும் போது ”நீட்டித்த தமிழ்” என்ற முன்மொழிவே சுத்தரவாகத் தேவையில்லை என்றாகிறது. ஸ்ரீரமண சர்மாவின் ”நீட்டித்த தமிழ்” என்னும் முதல் முன்மொழிவு அதனாலேயே அடிபட்டுப் போகிறது.

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில், இன்னொரு பக்கம் “ஐயய்யோ, ஒருங்குறித் தமிழில் 27 கிரந்த எழுத்துக்களை நுழைக்கிறார்கள்” என்று சில தமிழறிஞர் கூக்குரலிட்டது ஒருவகையில் தவறான புரிதலே. தமிழ் எழுத்துக்கள் இப்பொழுதிருக்கும் ஒருங்குறி அடித்தளப் பட்டியில் (BMP) யாருமே கிரந்தத்தை நுழைக்கவில்லை. தமிழெழுத்து அங்கு அப்படியே தான் இருக்கிறது. இந்த முன்மொழிவு ஏற்கப்பட்டு BMP தமிழ் நீட்டிக்கப் பட்டிருந்தாற்றான் அந்தக் கூக்குரலுக்கு ஓரளவு பொருளுண்டு. [In that case, we would have ended up with Tamil being encoded two times with disastrous consequences. Luckily this hasn't happened. We should never allow that to happen.]

தவிர, BMP இல் இருக்கும் தமிழெழுத்தில் எந்த மாற்றமும்.செய்யாது, மேற்குறி கொண்டு சர நுட்பத்தால் (sequence technique) கிரந்த ஆவணம் உருவாக்கிச் சங்கதம் எழுதினால் (அதாவது ’க3ங்க3’ என்பது போலத் தமிழெழுத்தையும், மேற்குறியையும் கொண்டு யாரேனும் எழுதினால்) நாம் கூக்குரலும் எழுப்பவியலாது. அது முற்றிலும் சட்ட பூருவமான ஒழுங்கான படியாற்றம் (application) தான். BMP இல் இப்பொழுது இருக்கும் தமிழ் எழுத்துக்களை இப்படிப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வதற்கு நமக்கு எவ்வுரிமையும் கிடையாது. உணர்ச்சி வசப்படாமல், ஆழ்ந்து ஓர்ந்து பார்த்து, தமிழார்வலர்கள் அமைதி அடையவேண்டும் என்று மட்டுமே வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆகவே, முத்து நெடுமாறனின் ”செய்து காட்டுகை (demonstration)” மூலம் தெளிவு பெற்ற ஒருங்குறி நுட்பியற் குழு ”ஸ்ரீரமண சர்மாவின் நீட்டித்த தமிழ் என்னும் முதல் முன்மொழிவை இனிமேல் ஏற்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்றே தமிழ்க் கணிஞர்கள் இப்பொழுது எண்ணுகிறார்கள். தவிர, மீண்டும் 2011 பிப்ரவரி 26க்கு முன் இதை வலியுறுத்தியும் அவர்கள் எழுதுவார்கள்.

இனி மேலே சொன்ன 2,3,4 ஆகிய கிரந்த முன்மொழிவுகளுக்கு வருவோம். இதில் தான் தமிழில் இருந்து ஏழு குறியீடுகளை (எகர உயிர், ஒகர உயிர், எகர உயிர்மெய்க்குறியீடு, ஒகர உயிர்மெய்க்குறியீடு, ழகரம், றகரம், னகரம்) கிரந்த முன்மொழிவிற்குள் திரு. நா. கணேசன் சேர்த்திருந்தார். ஸ்ரீரமண சர்மா எகர உயிர், ஒகர உயிர், எகர உயிர்மெய்க்குறியீடு, ஒகர உயிர்மெய்க்குறியீடு ஆகிய 4-யை மட்டும் சேர்த்திருந்தார். ழகரம், றகரம், னகரம் ஆகியவற்றை விட்டுவிட்டார்.]

திரு. நா. கணேசன் 7 தமிழ்க் குறியீடுகளைக் கிரந்தத்துட் சேர்ப்பதற்குக் கூறிய காரணங்கள் எவ்வாதாரமும் இல்லாது பொய்யாகக் கூறப்பட்டவையாகும்.

எங்கோ சென்னையில் இருக்கும் “சம்ஸ்க்ருத க்ரந்த லிபி ஸபா” என்ற பதிப்பகம்/அச்சகம் திவ்யப் ப்ரபந்தத்தை கிரந்த லிபியில் எப்பொழுதோ வெளியிட்டதாகக் கூறி (அதாவது, கிரந்த எழுத்துமுறைக்குள் இவ்வெழுத்துக்கள் இருந்ததாகக் கூறி) வெறுமே கையால் எழுதிய சான்றுகளைக் காட்டித் தன் முன்மொழிவைத் திரு.நா.கணேசன் அனுப்பியிருந்தார். (இங்கே லிபியென்றவுடன் கிரந்த அடுக்குக் கட்டு முறையை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் சொன்ன கையெழுத்து எடுத்துக் காட்டில் அந்தக்காலத் தமிழெழுத்துப் போலும் புள்ளி வைத்த ஒகரக் குறில் இருந்ததாம். இன்னோர் எடுத்துக் காட்டையும் இங்கு புரிவதற்காகச் சொல்ல முடியும். ”வாழ்க்கை” என்ற தமிழ்ச் சொல்லை அடுத்தடுத்து இடம்வலமாய்ப் போட்டிருந்தால் அது தமிழெழுத்து முறை. ”வா”வுக்கு அடுத்தாற் போல் ழ, க, கை போன்றவற்றை ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்குக் கட்டு முறையிற் போட்டிருந்தால் அது கிரந்தப் பதிப்பு முறை.)

நண்பர் நா. கணேசன் தமிழ்ச் சிறப்பு எழுத்துக்களை கிரந்த முறையில் ”சம்ஸ்க்ருத க்ரந்த லிபி ஸபா” பதிப்பித்ததாக எந்த ஆதாரமுமின்றிப் புகலுகிறார். இதுவரை எங்கு தேடிப் பார்த்தும் அப்படி ஒரு ”ஸபா” முகவரியைச் சென்னையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு, திரு. கணேசனும் உருப்படியான ஆதாரங்கள் தரவில்லை. எந்தக் கேள்விக்கும் மடற்குழுக்களில் அவர் இப்போது மறுமொழி சொல்ல மறுக்கிறார். அதே பொழுது, கீறல் விழுந்த இசைத்தட்டுப் போல ”தேவாரம், நாலாயிரப் பனுவல் போன்ற திராவிட நூல்கள் கிரந்த லிபியில் எழுதப்பட்டன” என்று வெற்றாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.

அப்படிக் கிரந்த எழுத்தில் அவை எழுதப்பட்டு இருந்தாலும், எத்தனை ஆவணங்கள் அப்படியெழுந்தன? - என்ற கேள்வி நம்முள் இயற்கையாகவே எழுகிறது. இதுபோன்ற எழுத்திற்கான வரலாற்றில் ஆதாரங்கள் பல இருக்கவேண்டாமா? வெறுமே ஒற்றை ஆதாரத்தை வைத்துக் கொண்டு மேம்போக்கிற் பேசிவிட முடியுமா? எங்கோ சென்னையில் எழுந்த ஒரு பதிப்பு, 10 கோடித் தமிழ் மக்களின் எழுத்து மரபைக் குலைக்கலாமா? ”தமிழ் ஆவணங்கள் கிரந்தத்தில் எழுதப்பட்டதாய்ப் பரவலான புழக்கம் இருந்ததா, இல்லையா” என்று நிறுவ வேண்டாமா? இப்படி ”மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்” என்று சொல்லி தமிழெழுத்து மரபைக் குலைக்கலாமோ? “இது ஓர் அண்டப் புளுகோ? ஏமாற்றோ?” என்ற ஐயம் நமக்கு உறுதியாக எழுகிறது.

பொதுவாக அவருடைய முன்மொழிவு உள்ளிடற்று மொக்கையாகக் காணப்பட்ட காரணத்தால், சங்கதப் பயன்பாட்டுச் சான்றுகளை அவர் சரியான முறையில் விளக்காத நிலையில், ஆழ்ந்து அறிவார்ந்த முறையில் எழுதப்பட்ட ஸ்ரீரமண சர்மாவின் கிரந்த முன்மொழிவு (மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்றாம் முன்மொழிவு), ஒருங்குறி நுட்பியற் குழுவின் கவனத்திற்குப் போயிருக்கிறது.

இன்னொரு வேறுபாடும் கணேசன் (2), சர்மா (3) ஆகியோரின் கிரந்த முன்மொழிவுகளுக்கு உண்டு. கணேசனின் முதல் கிரந்த முன்மொழிவு, தமிழ் இப்பொழுது இருக்கும் அதே அடித்தளத் தட்டில் (BMP) கிரந்தத்திற்கும் இடம் ஒதுக்கும் படி கேட்டிருந்தது. ஸ்ரீரமண சர்மாவோ (3) துணைத் தளத் தட்டில் (SMP) தான் கிரந்தத்திற்கு இடம் கேட்டிருந்தார். (
(பின்னால் கணேசனும் தன் இறுதி முன்மொழிவில் SMP - க்குப் போய்விட்டார்.)
கணேசனின் முதற் கிரந்த முன்மொழிவு சர்மாவின் கிரந்த முன்மொழிவைக் காட்டிலும் தாக்கம் வாய்ந்தது. சர்மாவின் முன்மொழிவு ஒருவகை உள்ளமைத் தனம் (realistic character) கொண்டது. இரண்டு முன்மொழிவுகளையும் படிப்போருக்கு இது இயல்பாகவே விளங்கும். Sriramana's proposal was much more substantive, clear and transparent.

2, 3 ஆகிய இரு முன்மொழிவுகளுக்கும் இடையே இருந்த முரண்பாடுகளைக் கண்டு இவற்றைச் சரிசெய்ய வேண்டி, ஒருங்குறி நுட்பியற் குழு இந்திய நடுவணரசின் உதவியை நாடியது. இவ்வுதவி நாடல் தமிழக அரசின் கவனத்திற்கு வராது போனது. நடுவணரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் இரு கிரந்த முன்மொழிவுகளையும் ஒரு குழுவைக் கொண்டு சரிசெய்து ஒரு பொது கிரந்த முன்மொழிவை (4) உருவாக்கியது. அதுவும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வில்லை.

[கிரந்தம் என்ற எழுத்துமுறை தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்ற அளவில், ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், அதைக் கணிக்குள் குறியேற்றம் செய்வதற்கு முன், ஞாயமாக, நடுவணரசு தமிழக அரசைக் கேட்டிருக்க வேண்டாமா? ஏற்கனவே பரவலான புழக்கத்தில் இருக்கும் தமிழ்க் குறியேற்றத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லாது கிரந்தத்தைக் குறியேற்றம் செய்யவேண்டிய கட்டாயத்தில், இந்திய நடுவணரசு தமிழக அரசின் கருத்தை உறுதியாகக் கேட்டிருக்க வேண்டும். என்ன காரணமோ, தெரியவில்லை, அது கேட்கவில்லை; மொத்தத்தில் நடுவணரசு அதிகாரிகள் இதில் கோட்டை விட்டுவிட்டார்கள்.]

தற்செயலாக செபுதம்பரில் தனிமாந்த முயற்சிகளில் இந்தக் கிரந்த முன்மொழிவுகள் (2,3,4) பற்றி விவரமறிந்த தமிழ் நுட்பியலார் ஒரு சிலர் நாளும் பொழுதும் இல்லாக் காரணத்தால், பொது இடங்களிற் கத்தி முழக்கமிட்டு ”மேலும் காலநேரம் வாங்க வேண்டும்” என்று முயலும்போது தான் ஆசிரியர் வீரமணியை நாடுவது பயன்தரும் என்று தெளிவானது. இதில் பேரா. இ.மறைமலையும், நண்பர் இ.திருவள்ளுவனும் பெரிதும் உதவினார்கள். பாராட்டப் படவேண்டிய முயற்சி. ஐயா வீரமணியின் இடையீட்டால் தமிழக முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு இதைக் கொண்டுவந்து, அற்றை அமைச்சர் ஆ. இராசாவின் கவனத்திற்கும் கொண்டுவந்து நடுவண் அரசும் ஒருங்குறி நுட்பியற் குழுவும் உடனடியாய் எந்த முடிவும் எடுக்காது 2011 பிப்ரவரி 7 வரை தள்ளிப் போடும்படி செய்ய முடிந்தது.

இனிக் கிரந்தம் என்ற எழுத்திற்கு உரியதாகச் சொல்லப்படும் மூன்று பயன்பாடுகளைப் பார்ப்போம்.

1. முதற் கூற்று - கிரந்தத்தைக் குறியேற்றுவதால் பழைய கல்வெட்டுக்கள், செப்பேடுகளைக் கணிமைப் படுத்தி அலச முடியும் - என்பது.

இந்தப் பயன்பாடு உண்மைதான். தமிழர் வரலாற்றைப் பொறுத்தவரை ஞாயமான தேவையும் கூட. காட்டாகப் ”பெருமாள் என்ற சொல் எப்பொழுது எழுந்தது?” என்று ஆயும் போது முன்னோர் ஆதாரங்களை வைத்துக் கொண்டு, கண் வலிக்க ஒவ்வொரு கல்வெட்டாய்ப் படிக்கும் முறையில் இரண்டு வாரங்களில் கி.பி.800 அளவில் முதலாம் ஆதித்த சோழன் கல்வெட்டில் தான் பெருமாள் என்ற சொல் முதலிற் பயன்பட்டிருக்கிறது என்று என்னால் தமிழ்ப்பகுதியை மட்டும் வைத்துக் கண்டுபிடிக்க முடிந்தது. நான் கல்வெட்டுக்களின் கிரந்தப்பகுதியைப் படிக்கவில்லை. இதற்கு மாறாய், இக்கல்வெட்டுக்களைக் கணியேற்றம் செய்திருந்தால் ஒரு கால்மணி நேரத்திற்குள் எந்த ஆண்டில் இச்சொல் எழுந்தது என்று கண்டுபிடித்துச் சொல்லியிருக்க முடியும். இப்படிக் கல்வெட்டுக்களை ஆய்வதற்குத் தமிழெழுத்துக்கள் மட்டுமல்லாது கிரந்தமும் குறியேற்றம் செய்யப்படுவது நன்மை பயக்கும்.

இதே போல ”அப்பர் காலத்தில் இருந்த அரசன் யார்? யார் அவரை சமய மாற்றத்திற்குத் துன்புறுத்தினார்?” என்ற ஆய்ந்தறிய பல்லவ அரசன் மகேந்திர வர்மனின் திருச்சிராப்பள்ளி மலைக் குகைக் கல்வெட்டில் இருந்த ”குணபர” என்ற கிரந்தக் கீற்றே 1950 களில் இருந்த ஆய்வாளர்களுக்குப் பயன்பட்டது. [பார்க்க. மயிலை சீனி வேங்கடசாமியாரின் நூல்கள்.]

இந்தக் காலத்தில் கிரந்த-தமிழ்க் கலவைக் கல்வெட்டுக்களை எல்லாம் கணிக்குள் ஏற்றியிருந்தால் இது போல எத்தனையோ வரலாற்று உண்மைகளை குறைந்த நேரத்தில் நிறுவ முடியும். அதற்கு உதவியாய்க் கிரந்தம் குறியேற்றப் பட்டால் பெரும் வாய்ப்புத் தான்.

ஆனால் இதைச் செய்யக் கிரந்தக் குறியேற்றத்தில் 75 குறியீடுகள் இருக்க வேண்டுமா? 68 குறியீடுகள் இருக்க வேண்டுமா? - என்பது உடனே எழும் கேள்வி. முன்னே சொன்னது போல்
கிரந்தமும், தமிழும் கலந்தே கணக்கற்ற கல்வெட்டுக்கள் எழுந்திருக்கின்றன. முழுக்க முழுக்க சங்கதப் பகுதியிலும் கூட தமிழ்ச்சொல் தமிழெழுத்தால் எழுதப் பட்டிருக்கிறது.

காட்டாகப் பல்லவர்களின் கூரம் செப்பேட்டில் “ஊற்றுக்காட்டுக் கோட்ட”, “நீர்வேளூர்” போன்ற சொற்களும், உதயேந்திரம் செப்பேட்டில் “வெள்ளாட்டூர்”, “கொற்ற” என்ற சொற்களும் வடமொழிப் பகுதியில் தமிழெழுத்திலேயே எழுதப்பட்டுள்ளன. (பார்க்க: தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி -1 ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2002. பக்கம் 108) பாண்டியரின் தளவாய்புரம் செப்பேட்டில் கேஷவன் என்ற சொல் வடமொழிப் பகுதியில் ஷகரம் தவிர்த்து கே, வ, ன் என்ற எழுத்துக்கள் தமிழாகவேயிருக்கின்றன. இதே போல வேள்விக்குடிச் செப்பேட்டில் தமிழ் ஒகரமும் மற்ற கிரந்த எழுத்துக்களும் கலந்து வடமொழிப் பகுதி வருகிறது. (செய்தி நண்பர் மணிவண்ணன் மூலம் அறிந்தது.)

அதாவது இது போன்ற கல்வெட்டுக்கள், செப்பேடுகள் எல்லாம் ஒருவிதமான ஈரெழுத்துக் கலவையிலேயே ஆனால் அந்தந்த எழுத்தொழுங்கோடு (orthography) எழுதப் பட்டுள்ளன. அப்படியானால் பழங் கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும் வரலாற்றிற் கண்டது, கண்டபடியே வெளியிட்டுப் பாதுகாக்க வேண்டுமானால், கிரந்தம் என்பது 68 குறியீடுகளோடு மட்டுமே குறியேற்றப் பட வேண்டும்; இந்த 7 தமிழ்க்குறியீடுகள் கிரந்தக் குறியேற்றத்துள் போகவே கூடாது என்ற முடிவிற்கே நாம் வர வேண்டியிருக்கிறது.

அதற்கு மாறாக, 68+7 குறியிடுகளோடு கிரந்தக் குறியேற்றம் போனால் ”கல்வெட்டில் எது தமிழ், எது கிரந்தம்?” என்று அடையாளம் காண்பதிற் பெருஞ்சரவல் வந்துவிடும். [கணியில் ஏற்றப்படும் ஆவணங்களை அலசுவது பற்றியும், புள்ளிமுறை - அடுக்குமுறை பற்றிய முன்னாற் காட்டிய அலசலையும் இங்கு நினைவு கொள்ளுங்கள். நடுவணரசின் குழுவினர், நா. கணேசன் போன்றோர் இந்தச் சிக்கலை உணராமலோ, அல்லது அவர்களின் உண்மைக் குறிக்கோளைச் சொல்லாது மறைத்தோ, 7 தமிழ்க் குறியீடுகளைக் கிரந்த முன்மொழிவிற்குள் கொண்டுவருகிறார்கள். ஸ்ரீரமணசர்மா போன்றவர்கள் 4 தமிழ்க் குறியீடுகளைக் கிரந்த முன்மொழிவிற்குள் கொண்டுவருகிறார்கள். இதன்மூலம் இருவருமே பெருங்கேடு விளைவிக்கிறார்கள்.)

சுருக்கமாய்ச் சொன்னால், பழம் பதிப்பாளர்கள் எல்லோரும் “கிரந்தத்தைக் கிரந்தமாகக் கையாண்டிருக்கிறார்கள்; தமிழைத் தமிழாகக் கையாண்டிருக்கிறார்கள். ஒன்றின் எழுத்தொழுங்கு இலக்கணம் இன்னொன்றிற்குள் போகவேயில்லை. Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities.” Period.

ஒருசில தமிழார்வலர் , “பழங்காலத்துக் கல்வெட்டுக்களை வரலாற்றுக் காரணமாய்க் காப்பாற்ற வேண்டுமானால், அவற்றை ஒரு jpg file ஆக ஆக்கிக் கொள்ளலாமே? எதற்காகக் கிரந்தத்தைக் குறியேற்றம் செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார்கள். இது குறியேற்றக் கேள்வியை ஆழமாய் அலசாதோர் கூற்று.

நண்பர்களே! நாம் கிரந்தத்தை விரும்புகிறோமா? இல்லையா? - என்பதல்ல கேள்வி. 1500 கால கிரந்த இருப்பில் நம் வரலாறும் அடங்கியிருக்கிறது. உலகில் எங்கெங்கோ இருக்கும் சான்றுகளில் நம் வரலாற்றைத் தேடி நாம் அலையும் போது, அருகே நம்மோடு இருக்கும் சான்றுகளிற் தேட மாட்டேம் என்று சொல்லுவது பித்துக்குளித்தனம் இல்லையோ? [கல்வெட்டுக்களை நம்புகிறோம், நம்பாமற் போகிறோம் - அது வேறு செய்தி; அலசல் செய்ய வழியிருக்க வேண்டுமில்லையா?]

“ஐயய்யோ! அவை கிரந்தம் கலந்து இருக்கின்றனவே?” என்று நாம் வருத்தப்பட்டுப் பயனில்லை. தமிழர் வரலாறு சங்க காலத்தோடு முடிந்து திடீரென்று 20 ஆம் நூற்றாண்டிற்குக் குதித்து வந்துவிடவில்லை. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தக்
கலப்பு ஆவணங்களை நாம் அலச வேண்டியிருக்கிறது.

இந்தக் கலப்பு ஆவணங்களை கண்வலிக்க நொபுரு கராசிமாவும், சுப்பராயலுவும் அவரைப் பின்பற்றியோரும் அலசி அலசி ஆய்ந்துதான் ”பேரரசுச் சோழர் காலம் இப்படியிருந்தது” என்று நமக்கெல்லாம் சொன்னார்கள். அவர்கள் படித்த கல்வெட்டுக்கள் 10 விழுக்காடு கூடத் தேராது. படிக்காத கல்வெட்டுக்கள் இன்னும் 90 விழுக்காட்டிற்கும் மேல் இருக்கின்றன.

தவிர, jpg file யை வைத்துக் கொண்டு நாம் அழகு வேண்டுமானாற் பார்க்கலாம்; நெடுங்காலம் காப்பாற்றலாம். ஆனால் சற்று முன்னால் சொன்னது போல் “பெருமாள், குணபர” போன்ற சொற்களை 10000, 20000 கல்வெட்டுக்களிடையே புகுந்து அலச முடியாது. ஆழமாய் எந்த ஆவண அலசலும், கல்வெட்டு அலசலும், வரலாற்று அலசலும் செய்ய முடியாது.

இன்னும் எதிர்காலத்தில் கண்வலிக்கத் தாளில் இருந்து / jpg கோப்பிலிருந்து படித்துக் கொண்டு இருக்கவேண்டுமென்றால் 1000 கராசிமாக்கள் வந்தாலும் முடியாது. அவற்றைக் கணிமைப்படுத்தி அலச முற்பட்டாற் தான் ஒரு 20 கராசிமாக்களை வைத்து இன்னும் 20 ஆண்டுகளுக்குள்ளாவது 100000 கல்வெட்டுக்களை அலசி, (படியெடுக்கப்படாது எண்ணெயிலும், அழுக்கிலும், வண்ணத்திலும் அழிந்து கொண்டிருக்கும் 200000 கல்வெட்டுக்களையும் மற்ற கோயில்களில் இருந்து படியெடுத்து அலசி) 1500 ஆண்டு வரலாற்றை ஓரளவு ஒழுங்கு செய்யமுடியும். எண்ணற்ற தமிழ் வரலாற்றுக் கேள்விகள் இன்னும் விடைதெரியாமற் கிடக்கின்றன.

Keeping the copies of inscriptions as jpg files is a pretty useless proposition. Encoding the copies of the inscriptions has a much better use.

2. அடுத்து, - கோயிற் குருக்களாக ஆகமம் படிப்பவர்கள், வேத பாடசாலையிற் படிப்பவர்கள், வடமொழி ஆவணங்களைப் படிக்க விழைபவர்கள் ஆகியோருக்குச் சங்கத மொழிபடிக்கும் எழுத்தாகக் கிரந்தம் பயன்படும் - என்னும் கூற்று.

இதுவும் உண்மைதான். கிரந்தம் என்பதன் இன்றையத் தேவை, சங்கதத்தில் உள்ள பழையதைப் படிப்பதற்கும் அது பற்றி அலசுவதற்கு மட்டுமே. ஆங்கிலத்தில் இதை didactics - கற்றுக் கொடுப்பியல் - என்று சொல்லுவார்கள். அதற்குக் கிரந்தம் பயன்படத் தான் செய்கிறது. ஆனால் அப்படிப் படிப்பவர் எல்லோரும் ஏற்கனவே தமிழ் எழுத்தையோ, மற்ற திராவிட எழுத்தையோ உறுதியாக அறிந்திருப்பர். அவர்களுக்குப் பாடமொழியாக தமிழ் அல்லது மற்ற திராவிட மொழிகளேயிருக்கும்.

கிரந்தம் என்பது பழைய நூல்களை, ஆவணங்களைப் படிப்பதற்குப் பயன்படும் ஓர் எழுத்து. சங்கத ஆவணங்களைப் படிப்பதற்கு 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் குறியேற்றம் முற்றிலும் போதும். தேவைப்பட்டால் கிரந்தமும் தமிழெழுத்தும் கலந்த கலவையெழுத்து (முன்னாற் செப்பேடுகளில் வந்தது போல், இப்பொழுது ஒருசிலர் தமிழெழுத்தும் ஆங்கிலவெழுத்தும் கலந்து எழுதுவது போல்) வெளியீடாகப் பாடநூல்கள் இருக்கலாம். இந்தக் காலத்தில் ஆங்கில எழுத்தும், தமிழ் எழுத்தும் கலந்த ஒரு சில பாடநூல்கள், பொது அறிவு நூல்கள், வெளிவருவதில்லையா? இதற்காக 7 தமிழ்க் குறியீடுகளை கிரந்தக் குறியேற்றத்துள் நுழைக்க வேண்டிய தேவை கொஞ்சங் கூட இல்லை.

3. மூன்றாவது கூற்று - எதிர்காலத்தில் கிரந்தத்தின் வழி தமிழ்மொழி ஆவணங்களை எழுத்துப்பெயர்ப்பு/குறிபெயர்ப்புச் (transliteration/transcription) செய்யமுடியும் - என்பதாகும்.

இது ஒரு முட்டாள் தனமான, (இன்னொரு வகையிற் சொன்னால் குசும்புத் தனமான) ஏமாற்றுத் தனமான பயன்பாடு. இற்றைக் காலத்தில் யாருக்கும் கிரந்தம் என்பது அறிவுதேடும் முதலெழுத்து வரிசையல்ல. அவர்களுக்குத் தமிழ் அல்லது வேறு ஏதோவொரு மொழியெழுத்து முதலெழுத்து வரிசையாக இருக்கிறது. அதை வைத்துத் தான் நாட்டின் எந்த நடப்புச் செய்தியையும் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

கிரந்தம் படிப்பது முகனச் (modern) செய்திகளை அறிந்து கொள்வதற்கில்லை. கிரந்தத்தில் புதுச் செய்திகள், கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் வருவதில்லை. பழைய ஆவணங்களைப் படிப்பதற்கும் அதையொட்டி அலசி ஆய்வதற்கு மட்டுமே கிரந்தம் பயன்படுகிறது. அதற்கு 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் குறியேற்றம் போதும். எழுத்துப்பெயர்ப்பு / குறிபெயர்ப்பு என்ற சிலரும் (நடுவணரசின் முன்மொழிவும்) சொல்வது வெற்றகப் பயன்பாடு (vaccuous use) வெறுமே சொலவமாடல் (sloganeering). உண்மையான பயன்பாடல்ல. நடுவணரசு இப்படி ஒரு பயன்பாட்டைச் சொல்வது உண்மை நிலை அறியாது கூறும் கூற்று. Let us state clearly that nobody is trying to revive Grantha as a living script useful among masses.

ஆக மூன்றில் இரண்டே உண்மையான பயன்பாடுகள். எழுத்துப்பெயர்ப்பு/குறிபெயர்ப்பு என்பது ஏற்கத் தகுந்த பயன்பாடல்ல. முதலிரண்டு பயன்பாடுகளுக்காக கிரந்தத்தைக் குறியேற்றுவதில் தவறில்லை. என்னைக் கேட்டால் 7 தமிழ்க் குறியீடுகளைச் சேர்க்காது, 68 குறியீடுகளை மட்டுமே கொண்ட கிரந்தவட்டத்தை ஒருங்குறியில் குறியேற்றம் செய்யலாம்.

”கிரந்தமே ஒருங்குறிக்குள் வரவேண்டாம்” என்று வல்லடியாக ஒருசிலர் சொல்ல முனைவது ”போகாத ஊருக்கு வழி தேடுவது” ஆகும். அதைச் சொல்ல நமக்கு உரிமையும் இல்லை. We can only talk about the impact of Grantha on Tamil Unicode. We can never say that Grantha should not be encoded. There are clear demarcation to what we can say. In other words, we need to have some realistic objective; i.e. to stop the possible impact of grantha in SMP to Tamil in BMP.

இன்னும் நுட்பியல் வேலைகள் பலவும் செய்ய வேண்டியிருக்கின்றன. நுட்பியற் காரணங்களைப் பட்டியலிட்டு தமிழக அரசிற்கும், நடுவண் அரசிற்கும், ஒருங்குறி நுட்பியற் குழுவுக்கும் அறிக்கை அனுப்பவேண்டும். குறைந்தது சனவரிக் கடைசிக்குள் அதைச் செய்யவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. இந்தக் கட்டுரை எழுதி இங்கு வெளியிட்ட பின் படித்துப் பார்த்த ஒருசிலர் இது தங்களுக்குப் புரியவில்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். நான் எங்கு புரியவில்லை என்று சொல்லும்படி கேட்டிருந்தேன். அவர்களிடம் இருந்து பின்னூட்டு வருவதற்குள் ”ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்” என்ற புலநெறிக்குத் தக்க, நான் சொல்ல வந்த கருத்தைப் படமாக்கி அதில் ஆங்கிலத்தில் ஒரு சில குறிப்புச் சொற்களும் சேர்த்து நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் தனிமடலில் அனுப்பியிருந்தார். [தமிழில் இந்தச் சொற்களை மொழிபெயர்த்துப் போடுவது ஒன்றும் பெரிய வேலையில்லை. இருந்தாலும் அவர் அனுப்பியதை அப்படியே வைத்து] அதை இப்பொழுது கட்டுரையின் ஊடே சேர்த்திருக்கிறேன். இது கட்டுரையின் புரிதலை எளிதாக்கும் என்று எண்ணுகிறேன். நண்பர் கண்ணபிரான் இரவிசங்கருக்கு என் நன்றிகள்.

அன்புடன்,
இராம.கி.