Saturday, August 14, 2010

புறநானூறு 2ஆம் பாட்டு - 5

இனி அடுத்த பகுதிக்குப் போவோம்.

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே

இந்த 8 வரிகளுள் வடபுலத்து இனக்குழுக்களின் இடையுள்ள முரணும், வடபுலத்தரசர் ஒருசாரார்க்குச் சார்பாகச் செயற்பட்டதும், இந்தச் செவியுறையிற் குறிப்பாகத் தென்புலத்து அரசனுக்கு உணர்த்தப்பட்டுப் புதுவகை நயன்மை (justice) ஒன்று நிலைநாட்டப் படும். அதன் விளைவாக ஆட்சி நடத்தும் நெறி இங்கு மாறத் தொடங்குகிறது. ஆக, வேத நெறித் தாக்கம் என்பது உதியன் சேரல் காலத்தில் தமிழகத்தில் நன்றாகவே நுழைந்து விட்டது.

இவ்வரிகளைப் புரிவதற்கு இந்தியத் துணைக்கண்டத்துள் நடந்த பல்வேறு மாந்தப் பரவல்களை நினைவுகொள்ள வேண்டும். [கொஞ்சம் பற்றற்ற நிலையில் இச்செய்திகளை அணுகுங்கள். நான் இனச் (race) செய்திகளை எழுதவில்லை. இனக்குழுச் (tribal)செய்திகளைச் சொல்லுகிறேன்.]

கிறித்துவுக்கு முன்னாலிருந்த காலங்களில் இந்தியாவிற்குள் குறைந்தது 4 தடவையாவது வெவ்வேறு மாந்தக் கூட்டங்கள் நுழைந்திருக்கலாம் என்று இற்றை ஈன் அறிவியல் (genetic science) கூறுகிறது. [நான் இற்றைப் புரிதலைச் சொல்கிறேன். நாளைக்கு இன்னும் தரவுகள் கிடைக்கும்போது அறிவியல் முடிவுகள் மாறலாம்.]

இற்றைக்கு 55000/60000 ஆண்டுகளுக்கு முன், முதல் மாந்தப் பரவல் நடந்தது என்று சொல்லுவார்கள். ஆப்பிரிக்காவிற் தொடங்கி எத்தியோப்பியா, சோமாலியா வழியாக அரேபிய ஏமனுக்குள் நுழைந்து பின் அங்கிருந்து துபாய் இணைப்பு வழியாக ஈரானுக்குள் நுழைந்து அப்படியே கடற்கரை வழியாக, மகான் (இற்றை கராச்சிக்கு அருகில் உள்ள சிந்துதேசம்), குசராத், மராட்டியம் என்று மேற்குக் கடற்கரை வழியாக இந்தியாவில் நுழைந்து பின் தெற்கே கன்னடம், கேரளம், தமிழகம் வரை வந்து அங்கிருந்து கிழக்கு கடற்கரை வழியாக நகர்ந்து ஆந்திரம், கலிங்கம், வங்காளதேசம் போய், பர்மா, தாய்லந்துக் கடற்கரைகள் வழியாகத் தென்கிழக்கு ஆசியா, பாப்புவா நீயூ கினி, ஆசுத்திரேலியா வரை இந்தப் பரவல் நடந்து முடிவில் அங்குள்ள பழங்குடிகளாயினர். இவர்களை நெய்தலார் (coastal people) என்று சுருக்கமாய் அழைப்பார்கள்.

நெய்தலார் எச்சம் நம்மூரில் உண்டு. நம் பிரான்மலைக் கள்ளரும் இந்த எச்சத்தைச் சேர்ந்தவர் தான். நெய்தலாரை ஆண் குருமியங்களின் (male chromosome) அடிப்படையில் M180 என ஈனியலிற் சொல்வார். இந்தியாவைப் பொறுத்தவரை நெய்தலாரே முதல்மாந்தக் கூட்டத்தார். M130 என்பது இந்தியாவின் தென் கிழக்குப் பகுதி மாநிலங்களில் (கன்னடம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், ஒரிசா, சத்திசுகார், சார்க்கண்ட், பீகார், வங்கம் போன்ற மாநிலங்களில்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவரிடம் சற்று தூக்கலாய் உள்ளது. [உடனே மொழிக்குடும்பம் வேறு, இனம் என்பது வேறு என்று அச்சடிப்பு முழக்கம் செய்யச் சிலர் முன்வரலாம். ஆனால் விளக்கிச் சொல்ல வேறுவகை எனக்குத் தெரியவில்லை.] M130 என்போர் இந்தியரிடையே கிட்டத்தட்ட 10/15% இருக்கின்றனர். அவர் பெரும்பாலும் திராவிடமொழி பேசுபவராய், பழங்குடிகளாய் இருக்கின்றனர்.

இரண்டாம் பரவல் கிட்டத்தட்ட 30000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இவர்கள் இந்தியா, பாக்கிசுத்தானின் வடமேற்கே இருக்கும் கணவாய்கள் வழியாக நுழைந்து நம்மூர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் விரவியவர். இவரை ஆண்குருமியங்களின் அடிப்படையில் M20 என்று சொல்லுவார். M20 என்பது இந்தியாவெங்கணும் விரவிக்கிடக்கும் ஒரு ஈனாகும். இதை இந்திய ஈன் என ஆணித்தரமாகச் சொல்லலாம். நம்மில் பெரும்பாலோருக்கு இந்த ஈன் இருக்கிறது. இது இல்லாத இந்தியர் மிகவும் அரிதானவர்.

மூன்றாவது பரவல் கிட்டத்தட்ட 9000/10000 ஆண்டுகளுக்கு முன் முற்பட்டது. இவரும் இந்தியா, பாக்கிசுத்தானின் வடமேற்குக் கணவாய்கள் வழியாகத் தான் நுழைந்தனர். இவரை ஆண்குருமியங்களின் அடிப்படையில் M17 என்று சொல்வார். M17 என்பது இந்தியாவில் வடமேற்கு மாநிலங்களிலும், நடு மாநிலங்களிலும், மற்ற பகுதிகளில் உயர்சாதி மக்களிடமும் விரவியுள்ளது. M17 என்பது இந்தோ-இரோப்பிய மொழி பேசுகிறவரோடு தொடர்புடையது என்றும் சொல்லவேண்டும்.

நான்காம் பரவல் வரலாற்றுக்காலத்தில் கிட்டத்தட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முன்நடந்தது. இவருக்கும் M17 காரருக்கும் ஈனளவில் வேறுபாடு உள்ளதாய்ச் சொல்லமுடியாது. சில பண்பாட்டு வேறுபாடுகளே தென்படுகின்றன. [நான்காம் பரவல் தொல்லியல், மாந்தவியலின்படி உணரப்பட்டது. ஈனியல் வழி உறுதி செய்யப் பட்டதில்லை. மற்ற 3 பரவல்களும் ஈனியலால் உறுதி செய்யப் பட்டவை. நான்காம் பரவலுக்கும் மூன்றாம் பரவலுக்கும் வேறுபாடு காண்பது கடினம் என்பதை நினைவு கொள்ளுங்கள்.] முன்றாம், நான்காம் பரவலாளர் இந்தியரில் 8/10% இருக்கின்றனர்.

இந்த நால்வேறு கூட்டத்தார் தம்முள் கலந்து உருவாகிய இனமக்களே இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் மக்களாவர். எவ்வளவோ கலந்து போன பின், ”இவர்தான் அவர்” என்று இந்தியருள் அடையாளங் காணுவது மிகவும் சரவல் எனினும் பாழாய்ப்போன சாதி முறைத் திருமணங்களால் கடந்த 4000 ஆண்டுகளில் ஒரு சில வேறுபாட்டுத் தன்மை அறியக் கூடிய அளவில் வேரூன்றி விட்டது. அதனால் ”இந்த ஈன்களின் பரவல் நாடெங்கணும் எப்படி விரவியுள்ளது?” என்று ஓரளவிற்குச் சொல்ல முடிகிறது.

நாலாம் கூட்டத்தார் இந்தியாவிற்குள் நுழைந்தபோது ஏற்கனவே நுண்கல் நாகரிகத்திலும் (neolithic culture), ஓரளவு பெருங்கற்படை நாகரிகத்திலும் (megalithic culture) இருந்த (M130, M20 ஆகிய இரண்டும் கலந்து கிடந்த) பழங்குடிகள் முல்லை, குறிஞ்சி நிலங்களிலும், மாட மாளிகைகள் கட்டி நிலைத்த நாகரிகத்தில் (M130, M20 நிறையவும் M17 கொஞ்சமுமாய்க் கலந்து கிடந்த) அன்றைய மேற்தட்டு மக்களும் (இவர்தான் மூன்றாம் கூட்டத்தை இன்றைக்குப் பகராளுமை - representation - செய்பவர்) இருந்தனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

நாலாம் கூட்டத்தார் நுழைந்தபோது, மூன்றாம் கூட்டத்தார் இயற்கையூறுகள் காரணமாகத் தம் வாழ்விடங்களை இழந்து இந்தியத் துணைக்கண்டத்தின் மற்ற மருத, நெய்தல் நிலங்களுக்கு நகர்ந்து விட்டார். சிந்து சமவெளி நாகரிகம் அழிந்து போனது. மூன்றாம் கூட்டத்தார் மற்றவிரு கூட்டத்தாருடன் பெரும்பாலும் இணங்கிப் போய்க் கலந்துவிட்டனர்.

அப்படி மூன்றாம் கூட்டத்தார் கலந்ததின் பின் இந்தியாவில் நுழைந்த நாலாம் கூட்டத்தார் முல்லை நாகரிகத்திலேயே ஆழ்ந்திருந்தார். அவரின் வாழிடங்கள் மருதத்திற்கும் முல்லைக்கும் இடைப்பட்டதாய் இருந்ததாகவே, வேத நூல்கள் சொல்லுகின்றன. நகரம், அரண்மனை, பெரும் மாளிகைகள் என்று அவர் மேற்கட்டுமானம் கட்டுவதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகவேண்டிய நிலையில் நாலாம் கூட்டத்தாரின் நகர்ச்சி இந்தியாவின் வடமேற்கிருந்து கங்கைச் சமவெளியை நோக்கி நடைபெற்றது. [அதன் வெளிப்பாடு வேதம், ஆரண்யம், ப்ராமணம், உபநிடதம், புராணம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து கொண்டே போகும். இருக்கு வேதத்திற்கு அப்புறம் அவருக்கு எல்லாமே கங்கைச் சமவெளி நோக்கிய பயணங்கள் தான். அப்போது, ஆற்றுக்கு நெருங்கிய இடங்களைவிட்டால், கங்கைச் சமவெளி பெரிதும் காடாகவே விந்தியமலை வரைக்கும் இருந்தது. இன்னுஞ் சொன்னால் அன்றைக்கு ஆந்திரமும், சத்திசுகரும், பீகாரும், சார்க்கண்டும், மத்தியப் பிரதேசமும், உத்திரப்பிரதேசமும் கூடப் பெரும்பாலும் காடுகள் என்பதை உணரவேண்டும்.

நாலாம் கூட்டம் எனப்படும் ஆரியரும், அதற்கு முன்னிருந்த மூன்று கூட்டத்தாரும் தம்முள் ஓரளவு கலந்தார். ஆனால் சாதிப் பாகுபாடு ஏற்பட்டுப் போன காரணத்தால் இக்கலப்பு முழுமையடையவில்லை. அதனால் மேல் தட்டுக் கூட்டத்தில் நாலாம் கரையினரின் பண்புகள் கூடவும், கீழ்த்தட்டுக் கூட்டத்திலும், பழங்குடிகளிடமும் மற்று 3 கரையினரின் பண்புகள் கூடவும் கலந்து விரவின. புறனடைகள் (exceptions) இரண்டு தட்டுக்களிலும் உண்டு. வடபுலத்துப் பழக்கமாய் 4 வருணம் என்ற நிலைப்பாடு உருவாகி அது கொஞ்சங் கொஞ்சமாய் இந்தியாவெங்கணும் பரவத் தொடங்கியது. கொஞ்சங் கொஞ்சமாய்க் கீழ்த்தட்டு மக்களின் மொழிகள் மேற்தட்டு மக்களின் மொழியான இந்தோ-யிரோப்பியன் மொழிக்கு முன் சரியத் தொடங்கின. மொழிக்குடும்பங்கள் கலக்கத் தொடங்கின. முரண்பாடுகளும் பெருத்து வந்தன. வேதமொழியும் பழந்தமிழும் கலந்து பாகதங்களும், மற்ற திராவிட மொழிகளும் உருவாகின. வேதமொழி, பழந்தமிழ் ஆகிய இரண்டும் இரண்டு எல்லைகளாக, இரண்டுக்கும் நடுவில் பல மொழிகளின் பரம்பல் ஏற்பட்டது. தமிழுக்கு நெருங்கிய மொழிகள் திராவிட மொழிகளாயின. வேதமொழிக்கு நெருங்கிய மொழிகள் பாகதங்களாகின. சங்கதம் என்பது பாகதங்களுக்கு இடையே ஒரு கலவை மொழியாக, செந்தரப் படுத்தப்பட்ட படிப்போர் மொழியாக உருவாகியது. [சங்கதத்திலிருந்து பாகதம் உருவானது என்ற கொள்கையை நான் ஏற்பவனில்லை. எப்படி வழக்குத் தமிழில் இருந்து செந்தமிழ் உருவானதோ, அதுபோலச் செங்கதம் என்பது ஒரு புலவராக்கம். அதற்குமேல் அது ‘சுயம்பு, சிவசூத்திரம், உடுக்கையொலிகள், கிளியொலிகள் blah blah.....’ என்ற தொன்மத்தை நான் ஏற்பதில்லை.]

நூலறிந்த பெருமானரே முதலிற் சங்கதத்தை உருவாக்கினர். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனும் அறுவகைத் தொழில்களைச் செய்யும் வருணத்தோராய் அவர் அறியப்பட்டனர். முதல் வருணத்துப் பெருமானருள் முனிவர் என்ற கூட்டம் ஆரியக் குமுக நலத்திற்கு நல்லது என்று சொல்லி அவ்வப்பொழுது வேள்விகள் நடத்தி வந்தது. அந்த வேள்விகளில் விலங்குகளைப் பலி கொடுப்பது பெருத்து வந்தது. வேள்விச் செய்முறைகளின் அளவு இருக்க இருக்கப் பெரிதானது. அரசன் செய்யும் ஒவ்வொரு வேள்விக்கும் கொட்டிக் கொடுக்கவேண்டிய பொருட்கள் மலையாய்ப் பெருகின. முல்லைநிலத்து நாகரிகத்தில் இருந்து வந்த கீழ்த்தட்டு மக்கள் என்னதென்று செய்யத் தெரியாமல் வேள்விகளைப் பெரிய இடையூறாகக் கருதத் தொடங்கினர். ஒரு மாடு, இரண்டு மாடு பலிகொடுப்பதைப் “போய்த் தொலையட்டும்” என்று பலரும் அமைந்து போகலாம். ஆனால் அது 10, 100 என்று விரிவடையும் போது, பல்வேறு விலங்குகள் என்று அகலும் போது, ஆகுதியாகும் வெண்ணெய், கூலங்கள் இன்ன பிறவும் கூடும் பொழுது, ஊர்கள், ஊர்களையொட்டிய காடுகளில் இது அதிர்ச்சியையும், கலகத்தையும் கொண்டுவரத்தான் செய்யும்.

[இப்பொழுது சத்திசுகர், ஒரிசா, சார்க்கண்ட், வங்கம் போன்ற பகுதிகளில் பழங்குடியினருக்கும் வெளியிலிருந்து வரும் மக்களுக்கும் இடையில் ஏற்படும் தகறாறுகள், உள்நாட்டு வளங்கள் அந்த அந்த மக்களுக்குப் பயன்படாது வெளியாருக்குப் பயன்படுதல் போன்ற பொருளாதாரச் சுரண்டல்களை அன்றைய நாகரிக வழக்கங்களோடு சேர்த்துவைத்து எண்ணிப் பார்த்தால் நான் சொல்லுவதன் பரிமானம் புரியும்.]

புதுக் குடியேற்றத்தாருக்கும், பழங்குடியினருக்கும் இடையே முரண் ஏற்பட்டால் புதுக்குடியேற்றத்தாரின் வேள்விகள் பழங்குடியினரால் சிதைக்கப்படத்தான் செய்யும். அதன் விளைவால் பழங்குடியினர் அரக்கரென்று சொல்லப்படுவார்கள். பழங்குடித் தலைவர் அசுரர் தலைவர் எனப்படுவார். நான்காவது கூட்டத்தார் ஆரியர்/தேவர் என்று ஆவார். ஆரியர்கள்/தேவர்கள் செய்வதெல்லாம் அரசருக்குச் சரியாகவே தெரியும். நிலைமை அப்படி இருந்தது. தங்கள் வேள்விகள் தடுக்கப் படுவதால் தம் இனக் கூட்டத்துத் தலைவனை, தம் அரசனை, இந்த முனிவர்கள் வேண்டத்தான் செய்வார்கள். முனிவருக்கு இணங்கி அரசர்கள், தாங்களோ, தங்கள் படைத்தலைவரை அனுப்பியோ, பழங்குடியினருக்கு எதிராகப் போரிட வைத்து முனிவர்களின் வேள்விகளைக் காப்பாற்றுவார்கள். வேறு என்னத்தை வடபுலத்து அரசர் செய்திருக்க முடியும்? [கி.மு.1500-இல் இருந்து கி.மு.800 வரைக்குங் கூட it was always ”they and us” between the Aryas and the indigeneous ethnic locals in the Bharatvarsha.]

இத்தகைய வேறுபாடு தெற்கே கிடையாது. ஏனென்றால் கி.மு.600 வரைக்குங் கூடத் தெற்கே வேள்விகள் கிடையாது “அவர்களும் நாங்களும்” என்ற சிக்கல் கிடையாது. வெவ்வேறு மாந்தப் பரவல்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட நீண்ட காலக் கலப்பில் ஒருவருக்குள் இன்னொருவராய் ஆகிப் போனார்கள். முல்லை நிலத்துப் பழங்குடிகளுக்கும், மருத நிலத்து மக்களுக்கும் ஒரே வேந்தன் தான். அதன் விளைவால் ஒருவரைக் கொன்று, அவருடை பசுக்களைக் கவர்ந்து இன்னொருவர் வேள்வியில் ஆகுதியாக்குவது என்ற பேச்சிற்கே இடமில்லை. வெட்சிப் போரும், கரந்தைப் போரும் தென்னகக் குடிமக்களுக்குள் இருந்தன தான். ஆனால் அதற்கான வழிமுறைகளும், அதை ஒழுங்கு செய்யும் நெறிமுறைகளும் கூட வெட்சியார், கரந்தையார் இருபாலருக்கும் தெரிந்தன. இந்தப் போர்களைக் கையாளும் முறை தெரிந்திருந்த காரணத்தால் இருவேறு இனக்கூட்டத்து வெறுப்புச் சிக்கல்களை கி.மு.1000/800 களுக்கு அருகில் தென்புலத்து வேந்தர் பார்த்ததில்லை. There was law and order. There was no day-light robbery possible. There were ways and means to solve the issues. வடபுலத்து அரசருக்கோ establishing law and order என்பது முகன்மையான பணியாய் இருந்தது. Wherever new immigration takes place by forcible entry, law and order becomes a major issue.

இப்படி ஒரு காட்சியைத்தான் இராமாயணத்தில் விசுவாமித்திரன் வழியே நாம் அறிகிறோம். அவன் செய்ய நினைக்கும் வேள்வியைத் தாடகையும், அவள் மக்களும் செய்யவிடாது தடுக்கிறார்கள். தாடகை பக்கத்திலிருந்து எத்தனை விலங்குகள், உயிரினங்கள் வேள்விக்காகப் பிடித்து இழுத்துவரப்பட்டு முனிவன் ஆசிரமத்தில் அடைக்கப் பட்டன, கூலங்களைக் கொண்டுதரக் கட்டாயப்படுத்தப் பட்டார்கள் என்ற செய்தியை இராமயணம் நமக்குத் தெரிவிக்கவில்லை. தாங்கள் பாதிக்கப் படாமல், தாடகையும் அவள் மக்களும் விசுவாமித்திரன் வேள்வியைத் தடுக்கவேண்டிய காரணம் என்ன? ”அவர்கள் வேள்விக்கு ஊறுசெய்தார்கள், அவர்கள் கொல்லப்படவேண்டும்” என்று மட்டுமே ஆரியர் பார்வையில் இருந்து செய்தி தெரிவிக்கப் படுகிறது.

தருவணத்துள் யானியற்றும் தகைவேள்விக்கு
இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் செய்யும் அடைகாம வெகுளியெனும்
நிருதர் இடைவிலக்கா வண்ணம்
செருமுகத்துக் காத்தி

என்று (கம்பனில் சொல்லுவது போலத்) தயரதனிடம் கேட்டுப் பெற்று இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரன் கூட்டிவருகிறான். காட்டில் தாடகை வதைப் படலம் நடைபெறுகிறது. அதன் பின்

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்

என்று வேள்விப் படலம் சொல்லுகிறது. தாடகையின் மக்கள் மாரீசனும், சுபாகுவும் கொல்லப் படுகிறார்கள். விசுவாமித்திரன் வேள்வி காக்கப் படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் ”மத்திய தேசத்தில், ஆர்யா வர்த்தத்தில்” திரும்பத் திரும்ப நடக்குமானால், கண்ணினைக் காக்கும் இமை போல வேள்விகள் காக்கப் படுமானால், காடடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமானால், அடம் பண்ணிக் கொண்டிருந்த தாடகை வழியினர் அடங்கிப் போக மாட்டார்களா, என்ன? அப்புறம் விசுவாமித்திரன் போன்ற முனிவர்களின் ஆசிரமங்களிற் கிடக்கும் பெண் புள்ளிமான்கள் அங்குமிங்கும் அலைய வேண்டிய தேவையென்ன? பழங்குடிகள் எட்டிப் பார்க்கமுடியாத அளவிற்கு இமையம், பொதியம் போல் எதற்கும் அசையாத போர்த்தலைவர்கள் வழிநடத்தும் போர்ப்படைகள் வேள்வி நடக்கும் பர்ணசாலையைச் சுற்றி இருக்கும் போது எந்தப் பழங்குடிகள் உள்நுழைவர்? மான்கள் நன்றாகவே அமைதியாகத் தூங்கும். முத்தீ நன்றாகவே ஓம்பப்பட்டு வேள்விகள் இனிதே முடிவடையும்.

இன்னொரு செய்தியும் இங்கு சொல்லவேண்டும். முனிவர்கள் பெரும்பாலும் எந்த அரசனுக்கும் அடிபணியாத காட்டு இடைவெளிகளிலேயே இருந்திருக்கிறார்கள். They were on no-man's land like the pioneers in the American wild west. Just like the american Indians and European immigrants got into a conflict, here also conflict arose.

இத்தனை பின்புலத்திற்குப் பின் மேலேயுள்ள கடைசி 8 வரிகளுக்கு வருவோம். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் தன் நாட்டை விட்டு ஆளில்லா நிலவெளிக்கு (no-man's land) வந்திருக்கிறான். யாரோ ஒரு கூட்டத்தாரைக் காப்பாற்றவேண்டும். அப்படிக் காப்பாற்றும் போது தன் நாட்டில் இல்லாத அதே பொழுது காடுகளில் வதியும் (தன் குடிமக்களைப் போன்ற இன்னொரு) இனக்குழுவோடு போரிடும் நிலைக்கு வந்து சேருகிறான். அவன் மனம் தடுமாறுகிறது. தான் செய்வது சரியா? ”யாரோவொருவருக்கு வாக்குக் கொடுத்ததற்காக, ஒரு பாவமும் செய்யாத வேற்று நாட்டுப் பழங்குடி மக்களோடு போருக்குப் போகிறோமே?” என்று கலங்குகிறான். ”இது சரிதான்” என்று வடபுலத்து நிகழ்வை எடுத்துக் காட்டி நயன்மை சொல்லப் பார்க்கிறார் முரஞ்சியூர் முடிநாகனார். It appears to be a perverted justification. But still we don't know the truth.

"என்ன நடந்தாலும் சரி கறந்த பால் புளித்தாலும், பகலே இருளாய் மாறிபோனாலும், இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் நால்வேத நெறி கூட மாறி போனாலும்,உன்னைச் சுற்றிய வீரர் மனந்திரியாது இமையமலை, பொதியமலை மாதிரி அசையாது உயர்ந்து விளங்கியிருக்கும் நிலையைப் பார்! அத்தகைய வரிசையில் ”எப்படி இளமான்களும் துயிலும் வகையில் ஆசிரம வேள்விகளைக் காக்கும் தொழிலை வடபுலத்தரசர் செய்கிறாரோ?” அது போல எம் அரசே! நடுக்கமிலாது நிற்பாயாக! அரச ஒழுங்கைக் காப்பாற்றுவாயாக!”

இந்த ஐந்து பகுதிகளில் பாட்டின் பொருளைச் சொல்லிவிட்டேன். வடநாட்டுத் தாக்கம் கூடிவரும் பருவத்தில் உதியஞ் சேரல் ஆண்டிருக்கிறான். இனக்குழுக்களின் மோதல் தெற்கிலும் தோன்றத் தொடங்கிவிட்டது. Southern Royalty was also getting into brahminised practices.

அன்புடன்,
இராம.கி.

Friday, August 13, 2010

புறநானூறு 2ஆம் பாட்டு - 4

அடுத்துள்ள 4 வரிகள் பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவை.

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

மேலுள்ளதை ஆழ்ந்து படித்தால் பாண்டவ, கௌரவ பாரதப்போரின் 2 பக்கப் படைக்கும் சேரன் உணவளித்துப் புரந்ததாய் உரைகாரர் சொல்வது நம்ப முடியாததென்று புலப்படும். ஏனெனில் இவ்வரிகள், “ஐவரோடு சினமுற்று தும்பைப் போரில் பொருது களத்து ஒழிந்த நூற்றுவருக்கு பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தது” பற்றிச் சொல்லுகின்றன. [அலங்குளைப் புரவி ஐவர் என்ற கூட்டுச்சொல் இங்கு கருத்தாவைக் குறிக்கவில்லை. ”பொலம்பூந் தும்பை ஈரைம்பதின்மர்” என்பது தான் இங்கு கருத்தா. ”பொருதுகளத்தில் ஒழிதல்” என்பது கருமம் / வினை. அதைப் பின்பற்றும் கருமம்/வினை ”பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தல்” என்றாகும். மீண்டும் பாடல் வரிகளை ஆழ்ந்து படியுங்கள்.]

வரிகளைப் படித்தவுடனேயே ”அறந் தவறிப் பாண்டவர் நிலத்தைப் பற்றிக் கொண்ட கௌரவருக்கா, பெண்ணை இகழ்ந்து, பழி செய்த கௌரவருக்கா, சேரர் பெருஞ்சோற்று மிகுபதம். கொடுத்தார்?” என்ற நயன்மைக் கேள்வி நமக்குள் எழும். ”18 நாள் பாரதப் போர் உண்மையில் நடந்ததா?” என்ற கேள்வி பின்புறம் நிற்க, அப்போர் மோரியருக்கும் முன்பு நடந்திருக்கவே வாய்ப்புண்டு என்ற கால நிலையை வைத்துப் பார்த்தால், ”வானவர் அன்பன்” என மோரியரைப் பின்பற்றித் தன்னை அழைத்துக்கொண்ட சேரலாதன் எப்படிப் பாரதப் போர் காலத்திலிருந்தான்? - என்ற கால முரணும் நமக்குள் கேள்வியாய் எழும். இக் காலமுரணைத் தவிர்க்க வேண்டுமெனில், ”ஒருவேளை கௌரவர் பாண்டவர் என்று இங்கே அடையாளப் படுத்தியதே தவறோ? இது வேறு வரலாற்றுச் செய்தியோ?” என்ற எண்ணமும் எழும். மொத்தத்தில் ஏரணப்படி (logicaly) பார்த்தால் இங்கே மாபாரதக் கதையைத் துணைக்கு அழைத்ததே தவறானது என்ற முடிவுக்கு நாம் வருகிறோம்.

சண்டைக்கு இழுத்து வஞ்சிப் போரிட்டது யாரோ ஒரு ஐந்து பேர். அவருக்கு எதிராய்த் தும்பைப் போரிட்ட 100 பேரும் இப்போரில் இறந்து போனார். தொன்மத்தில் வேண்டுமெனில் நூற்றுவர் என்பார் கௌரவராகலாம்; வரலாற்றில் நூற்றுவர் வேறொருவராய் இருக்க முடியாதா? அவர் யார்? நூற்றுவர் என்பது ஏன் ஒரு சொல்விளையாட்டாய் இருக்கக் கூடாது? ”பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்பதற்குப் பொருளென்ன? - என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி ஒரு விளக்கம் தும்பைப் போரியற்றிய, சேரரையொட்டிய ஓர் அரசமரபினர் பற்றிச் சொல்ல முடியும். கொஞ்சம் பொறுமையாகப் பார்க்கலாம்.

பல்வேறு காரணங்களால் செங்குட்டுவனின் கடைசிக் காலம் கி.மு.75க்கு அருகில் என்றே முடிவு கொள்ளவேண்டியுள்ளது. கனகவிசயர் எனும் கன்வர் மேலும், சுங்கர் மேலும், செங்குட்டுவன் படையெடுத்தது ஏறத்தாழ கி.மு.80 ஆக இருக்கலாம். வேறெந்தக் காலமும் இப் படையெடுப்பிற்குப் பொருந்த வில்லை. ”இளங்கோ பொய் சொல்லவில்லை, வரலாற்றுச் செய்தி மட்டுமே சொன்னார்” என்று கொண்டால், சிலம்புக் கதை நடந்த காலம் பெரும்பாலும் கி.மு.80க்கு அருகில் தான். [விளக்கம் வேண்டுவோர் ”சிலம்பின் காலம்” என்ற என் தொடரைப் படிக்க வேண்டுகிறேன்.

http://valavu.blogspot.com/2010/05/1-2009-presentation.html
http://valavu.blogspot.com/2010/05/2.html
http://valavu.blogspot.com/2010/05/3.html
http://valavu.blogspot.com/2010/05/4.html
http://valavu.blogspot.com/2010/05/5.html
http://valavu.blogspot.com/2010/05/6_14.html
http://valavu.blogspot.com/2010/05/7_15.html
http://valavu.blogspot.com/2010/05/8.html
http://valavu.blogspot.com/2010/05/blog-post_20.html
http://valavu.blogspot.com/2010/05/10.html
http://valavu.blogspot.com/2010/05/11.html
http://valavu.blogspot.com/2010/05/12.html

உளுத்துப் போன கயவாகுக் கதையை வைத்துச் சிலப்பதிகாரத்தைக் கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்கு இழுக்கும்போக்கை அங்கு கேள்விக்கு உள்ளாக்குவேன்.]

பதிற்றுப்பத்தின் பதிகச் செய்திகளால் செங்குட்டுவன் அரசு கட்டிலில் வீற்றிருந்தது 55 ஆண்டுகள் என்றாகிறது. அப்படியானால் அவன் பட்டத்திற்கு வந்தது கி.மு.130 என்றாகும். குட்டுவனுக்கு முன் குடக்கோச் சேரனாய் இருந்தது இவன் தந்தை நெடுஞ்சேரலாதனே (மற்ற உறவினரெல்லாம் சேர நாட்டின் பகுதிகளை ஆளுநர்போல் ஆண்டிருக்கிறார். மைய அரசை ஆண்டது நெடுஞ்சேரலாதனும் அவன் மகன் செங்குட்டுவனுமே.) நெடுஞ் சேரலாதன் ஆண்டது 58 ஆண்டுகள். நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் மகன் செங்குட்டுவனுக்கும் இடையே அரசன் - இளவரசன் என்ற மேற்படுகை ஆண்டுகள் (overlap years) 20 என்று கொண்டால் நெடுஞ்சேரலாதன் குடக்கோ ஆனது கிட்டத்தட்ட கி.மு.168 என்று ஆகும். இனி அவனுக்கும் அவன் தந்தை உதியன் சேரலுக்கும் இடைப்பட்ட மேற்படுகை ஆண்டுகள் 20 என்று கொண்டு, உதியஞ் சேரல் தனியே ஆட்சி செலுத்தியது 25 ஆண்டுகள் (ஒரு நிரவல் ஆட்சிக்காலம் - average ruling period) என்றுகொண்டால் கிட்டத்தட்ட உதியஞ் சேரல் பட்டத்திற்கு வந்தது கி.மு.193 என்றாகும். அதாவது பெரும்பாலும் கி.மு.2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உதியஞ் சேரல் ஆட்சிக்கு வந்திருக்கலாம் என்ற கருதுகோளை நாம் கொள்வோம். [இக் கருது கோள் 5, 10 ஆண்டுகள் இப்பக்கம், அப்பக்கம் போகலாம். இப்போதைக்கு இத் துல்லியம் போதும்.]

அக்காலத்தில் கி.மு..185 ல், மகதத்தில் ஆட்சிபுரிந்தவன் மோரியரின் கடைசி அரசன் பெருக தத்தன் (=ப்ருகத்ரதன்) ஆவான். இவனே, இவன் அமைச்சன் சுங்கன் புஷ்ய மித்திரனால் கொலை செய்யப் படுகிறான். [கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு இம் மகதநாட்டுப் பெருகதத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தவே பாடப்பட்டிருக்கலாம். உரையாசிரியர் இவனை வெறுமே ஆரிய அரசன் என்று சொல்லி வந்துள்ளார்.] சுங்கன் இப்படி அரண்மனைக் கொலைசெய்து அரசுகட்டில் ஏறியதை ஏற்காத சாதவா கன்னர் (இவரே மோரியரின் தண்ட நாயகராய், தக்கணப் பாதையின் வாயில்காப்போராய், படித்தானத்தில் - பயித்தான் paithan - அரசு வீற்றிருந்தவர்) சுங்கரை எதிர்த்துப் போரிட்டு வந்தார். சுங்கருக்கும் சாதவா கன்னருக்கும் இடையே இருந்த போர் ஒரு வஞ்சி - தும்பைப் போர் தான். சுங்கர் செய்தது வஞ்சிப் போர்; சாதவா கன்னர் செய்தது தும்பைப் போர்.

சாதவா கன்னரே நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதிகாரத்தில் அழைக்கப் படுபவர். சாதவா கன்ன எனும் பாகதப் பெயரைப் பலரும் பலவிதமாய் அடையாளங் காணுவர். ”சாதவா கன்ன என்ற பெயர் Indo-Austric மொழிகளில் சாத = குதிரை; கன்ன = மகன் என்று எழுந்ததாகச் சிலர் சொல்வர். ஆனால் சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால், ”நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்ல முடியும். சிலம்பும் அப்படியே மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்கல்/நூறல் எனும் பொருட்பாடுகளைக் குறிக்கும். "அவனைச் சாத்திட்டான்" என இற்றைத் தமிழ் வழக்கிலும் சொல்கிறோம் அல்லவா?

அச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்கல் எனும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற ஆங்கிலச் சொல்லும் கூடப் பொடி என்ற பொருளில் எழுந்தது தான்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான் [வடபால் மொழிகளில் பழகும் சொல்]. ஆகச் சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலரும் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (= சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவுதான். [ஆனாலும் சொல் விளையாட்டில் நூற்றுவர் என்பதை 100 பேர் = ஈரைம்பதின்மர் என்று இடக்கரடக்கலாய்க் கூறமுடியும்.] இன்னும் சிலர் சாதவா கன்னரெனப் படிக்காது சாத வாக(ன்)னர் என்று படிக்கிறார். அப்படிச் சொல்பிரிப்பது தவறென்றே தோன்றுகிறது. சரியான சொல்திரிவு சதம்> சதவர்> சாதவர்> சாதவா= நூற்றுவர் என்றேயாகும்.

கன்னர் என்பது கர்ணி என்றும் திரியும். இங்கே ”காது, கன்னக் குழி” போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்னன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் ”கிருஷ்ணன்” விதப்பாகச் சொல்லப்படுவான். பாகதத்தில் ”கிருஷ்ண” என்பது ”கன்ன” என்றாகும். கன்னன் என்பது சேரன், சோழன், பாண்டியன், போல் ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும். சேர, சோழ, பாண்டியருக்கு இன அடையாளம் (சாரல் பூசியவர் சாரலர்>சேரலர், கோழி = பொன்னிறம்-மஞ்சள்/குங்குமம் பூசியவர் கோழியர்>சோழியர், பாண்டில் பூசியவர் பாண்டியர்) சொல்வது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநர்>கன்னர் என்று ஆகியிருக்க வாய்ப்புண்டு.

கன்னரின் ஆட்சிக்காலம் கி.மு.230 - கி.பி.220 என்று சொல்வார். கன்னரின் முதலரசன் சீமுகன். இவரின் முதற் பேரரசன் சாதகர்ணி I (கி.மு. 180-124) சுங்கரைக் கட்டுப்படுத்தி மாளுவம்/ அவந்தியைப் பிடித்தான். அத்திகும்பா கல்வெட்டும் (கி.மு.172) சாதகர்ணி I ஐப் பற்றிப் பேசுகிறது. முதலாம் சதகர்ணிக்கு அப்புறம் ஒரு பெருவீழ்ச்சி கன்னருக்கு ஏற்பட்டது. சாதகர்ணி I இற்கு முன் தும்பைப் போரில் தோற்று, பலர் இறந்திருக்கலாம்.

சிலம்பைப் படித்தால், சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் நல்ல உறவு நெடுநாட் பட்டு இருந்தது புரிகிறது. 2, 3 தலைமுறைகளாய் உதியன் சேரல் காலத்திருந்தே இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். ”தம் நண்பருக்கு ஆனது தமக்கானது” எனக் கன்னரின் தொடக்கத் தும்பைப்போர்த் தோல்விகளைச் சேரர் நினைத்திருக்கலாம். அத் தும்பைப்போரில் இறந்தவர்க்காகச் சேரர் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்திருக்கலாம். இது வேறெங்கும் பதிவு செய்யப்படாத வரலாற்றுச் செய்தியாய் ஏன் இருக்கக் கூடாது?

இனிப் பெருஞ்சோற்று மிகுபதம் என்பதற்கு வருவோம். பொதுவாகத் தமிழர் வாழ்வில் முன்னோர் வழிபாடு என்றுமுண்டு. ( மற்ற திராவிடர் வாழ்விலும் இருந்திருக்கலாம்.) எடுத்துக் காட்டாக இன்றைக்கும் தென்பாண்டி நாட்டில் சிவகங்கைச் சீமையில் வீட்டில் நல்லது நடக்க வேண்டுமானால் [ஒரு திருமணம் என வையுங்களேன்.] தம் முன்னோரை நினைந்து அவர் ஆசி வேண்டிக் குறிப்பிட்ட விழவிற்கு சில நாட்கள் முன் ”படைப்பு” என்ற ஒன்றைச் செய்வார்கள். இது முன்னோர் வழிபாடு. முன்னவர் ஆணெனில் வீட்டில் அவர் நினைப்பில் வைத்திருக்கும் கோடிவேட்டியையும், துண்டையும் நீர்நிலையில் அமிழ்த்திக் கசக்கிப் பிழிந்து பங்காளிகள் எல்லாம் அதைக் கொண்டு வந்து உலர்த்திப் பின் மடித்து வேட்டியை படையல் செய்யும் இடத்தில் வைத்து அதற்கு மேல் ஒரு துண்டை தலைப்பாகைக் கட்டுபோல் அழகுற ஆக்கி, கூடவே உருத்திராக்க மாலை அணிவித்து அந்த முன்னாள் ஆவி அங்கு குடிவந்தது போலவே செய்வார். இதேபோல இறந்து போன முன்னவர் பெண் (பாட்டி என்று கொள்ளுங்கள்) எனில் கோடிச்சேலையை நீரில் அமிழ்த்திக் கசக்கிப்பிழிந்து பின் உலர்த்தி அவரைப்போல் உருவகம் செய்து தாலி அணிவித்து, முன்னாற் பாட்டி அங்கு எழுந்தருளுவது போலவே செய்து வைப்பார். தாத்தனுக்கோ, பாட்டிக்கோ வேண்டப்பட்ட உணவு வகைகளைப் பண்ணி கூடவே படையற் பண்ணிகாரங்களைச் செய்து முன்னோர் ஆவிக்குப் படையலிட்டு பின்னாற் கூடியிருக்கும் சுற்றத்தார் அனைவருக்கும் பெருஞ்சோறு படைப்பார். படைப்புச் சோற்றைத் தான் பெருஞ்சோறு என்பார்.

முன்னோர் படையல் முறைதான் இன்றுங் கூட சிறுதெய்வக் கோயில்களான ஐயனார் கோயில்களிலும், காளி கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும், கருப்பர் கோயில்களிலும் திருமேனிகளுக்கு முன் செய்யப்படும் வழிபாட்டு முறையாகும். பின்னால் இது ஆகம சமயத்திலும் பரவி பெருமான மயம் ஆக்கப்பட்ட கோயில்களிலும் (Brahminised temples) கூட நடைமுறையானது. நாட்கள் ஆக ஆக ஒவ்வொரு சிறு தெய்வக் கோயிலும் நம் நாட்டில் பெருமானமயம் ஆகிக் கொண்டே வந்தாலும் பெருமானர் அல்லாத (non-brahmin) பழக்க வழக்கங்கள் ஏதோ வகையிற் தொடர்ந்து பின்பற்றப் படுகின்றன. ஆக ஒரு இனக்குழு நடவடிக்கை (tribal practice) கொஞ்சங் கொஞ்சமாய் சமய நடவடிக்கை (religious temple practice) ஆனது. ”ப்ரசாத்” என்று வடமொழியில் மொழிபெயர்த்துச் சொல்கிறாரே அது கூடப் “பெருஞ்சோறு” என்பதன் நேரடிச் சங்கத மொழிபெயர்ப்பே. கோயில்களின் ஆகம நெறிமுறைகளுக்கும் வேத நெறிக்கும் எத்தொடர்புங் கிடையாது. இந்து மதம் என்பது வேத நெறியும், ஆகம நெறியும், இனக்குழுப் பழக்கங்களும் கலந்த ஒரு கலவை நெறி. வேதநெறித் தாக்கம் அதில் சிறு பகுதி. எல்லாவற்றையும் வேதம் வழி பார்ப்பதைப் போல முட்டாள்தனம் கிடையாது. ஆனாலும் பல ஆராய்ச்சியாளர் அம் முட்டுச்சந்திற்குள் போய்விழுகிறார். அரச பாட்டைக்கு வரமாட்டேம் என்கிறார்.

இது போக, முன்னோர் இறந்த, குறிப்பாகத் தந்தை தாயர் இறந்த நாளின் போது (அதாவது அதே நாள்மீன் ஏற்படும் நாளில்) தமிழர் “பிண்டம் மேய பெருஞ்சோறு கொடுப்பதும்” உண்டு. [தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் வஞ்சித் திணை பற்றிய குறிப்பில் 9 ஆம் துறையாக ”பிண்டம் மேயப் பெருஞ்சோற்று நிலை” சொல்லப்பெறும்.] பிண்டம் என்பது எள்ளுச் சோற்றுருண்டை. இதை இக்காலத்தில் பெருமான மயச் சடங்குகள் கூடிப் போன காரணத்தால் ”தர்ப்பணம் செய்தல்” ”திதி கொடுத்தல்” என்று சங்கத வழக்கில் மொழிபெயர்த்துச் சொல்வார். அடிப்படை வழக்கம் தமிழர் வழக்கம் தான். இதைச் செய்வதிற் பூசாரிதான் மாறிவிட்டார். பழம் அறிவருக்குப் (பறையருக்குப்/ பண்டாரத்திற்குப்/ குயவருக்குப்) பகரியாய் இப்போது பார்ப்பனர் வந்துவிட்டார். அதனாலேயே இது பார்ப்பனர் வழக்கம் ஆகிவிடாது. [இன்றுங் கூட பெருஞ்சோற்று விருந்தின் முதல் மரியாதை எங்கள் பக்கம் பறையர் எனும் அறிவருக்குத் தான்.]

இன்னொரு விரிவாகத் தென்பாண்டி நாட்டில் பெரும்பகுதியில் ஆடி அமையுவாவின் (ஆடி அமாவாசையின்) போது நீர்நிலைகளுக்கு அடுத்திருந்து (கடல், ஆறு, ஏரி, குளம் இப்படி அது விரியும்) மூன்று தலைமுறை முன்னவர்க்குப் பிண்டம் மேயப் பெருஞ்சோறு கொடுப்பதுண்டு. ஆடிமாதம் தமிழ்நாடெங்கணும், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் இது நடக்கும். குமரி, நெல்லை மாவட்டங்களில் ஆடி அமையுவாவிற் பிண்டங் கொடுத்துப் பெருஞ்சோறு படைப்பது பெரிதும் உண்டு. பெருஞ்சோறு கொடுப்பதற்கு அரசனாய் இருக்க வேண்டியதில்லை. வசதியிருக்கும் எவனும் இதைச் செய்யலாம். செல்வநிலைக்குத் தகுந்தாற்போல் பெருஞ்சோற்றின் செழுமை மாறும். அவ்வளவு தான்.

“பெருஞ்சோற்று மிகுபதம்” என்பது இரட்டை வழக்கு. பெருஞ்சோறு என்றாலும் மிகுபதம் என்றாலும் ஒரே பொருள் தான்.

இங்கே நூற்றுவர் கன்னரின் முன்னோருக்கு படையலெடுத்து, ”சேரரும் அவரும் ஒரே குலம் போலத் தான்” என்று ஊருக்கே உணர்த்திச் சேரன் நட்பரசோடு சொந்தம் கொண்டாடுகிறான். அவ்வளவுதான். “சேரனே! நூற்றுவர் கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் செய்தாயே? அவன் குலமும், உன் குலமும் ஒன்றென்று பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்று சொல்வோம்?” என்று புலவர் வியக்கிறார்.

நூற்றுவர் கன்னர் மேல் சினந்து படையெடுத்து வஞ்சிப்போர் செய்த அந்த ஐவர் யார் என்று என்னாற் சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் சேரருக்கு வேண்டிய அவந்தியரசராய் இருக்கமுடியாது. பெரும்பாலும் பகையரசரான மகத அரசராகவே இருக்க முடியும்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, August 12, 2010

புறநானூறு 2 ஆம் பாட்டு - 3

முதலில் வருவன கீழுள்ள 8 வரிகள்:
.
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்

மேலுள்ள வரிகளுள் சாங்கியம், உலகாய்தம்/பூதவாதம், அற்றுவிகம் (ஆசீவிகம்) ஆகிய மெய்யியலாளர் சொல்லும் ஐம்பூதத்து இயற்கை விவரிப்பு அடங்கியுள்ளது. இவ்வுலகத்தில் உள்ள பொருட்களும், பொருண்மைகளும் ஐம்பூதத்தால் ஆனவை என்பது நம்பா மதங்களைச் சேர்ந்த மெய்யியலாரின் வாதமாகும். பின் எழுந்த நம்பும் மதங்களான சிவ, விண்ணவ நெறிகளும், ஏன் வேத நெறியும் கூட இந்த ஐம்பூதக் கருத்தை ஏற்றுக் கொண்டு, அதே பொழுது ஐம்பூதத்தைப் படைத்தவன் இறைவன் என்று கற்பித்துக் கொண்டு அமைந்து போயின. வேதநெறிக்கு எதிரெழுந்த புத்த, செயின நெறிகளும் கூட ஒருவகையில் இக்கருத்தை உள்வாங்கின. ஆனால் கி.மு.600 க்கு அருகில் எழுந்த சாங்கியம், உலகாய்தம் / பூதவாதம், அற்றுவிகம் (ஆசீவிகம்) ஆகிய நெறிகளே ஐம்பூதத்து இயற்கை பற்றித் தெளிவாகப் பேசின. [ஓர் இடை விலகலாக வேறொன்றைச் சொல்லவேண்டும். ஏதேனும் மெய்யறிவியல் பற்றிச் செய்திகள் சங்க இலக்கியத்தில் வந்தாலே அதை வேதநெறி வழியாகப் பார்ப்பதும், இல்லையெனில் செயினம் என்பதுமான அச்சடிப்பு வேலை நெடுநாட்களாகத் தமிழாய்வில் நடந்துகொண்டுள்ளது. சங்க இலக்கியத்தில் பொருள்முதல் வாதக் கருத்துக்களும், நம்பா மதங்களான சாங்கியம், உலகாய்தம். பூதவாதம், அற்றுவிகக் கருத்துகளும் அங்கொன்றும் இங்கொன்று மாய் விரவியுள்ளன. அதை ஆய்ந்து முற்காலத் தமிழர் மெய்யியலை அடையாளம் காணத்தான் ஆளில்லை. Not everything is always black and white. There are lots of grades of grey in between. It takes courage to discern them.]

மண்திணிந்த நிலன்; நிலன் ஏந்திய விசும்பு; விசும்பு தடவும் வளி; வளி தலைப்பட்ட தீ; தீ முரணிய நீர் என்று ஒன்றிற்கொன்று தொடர்புறுத்தி ஐம்பூதத்தைச் சொல்வார். [வடநாட்டு உலகாய்தத்தில் ஐம்பூதங்கள் கிடையாது விசும்பு தவிர்த்த 4 பூதங்களே அங்குண்டு. எங்கெலாம் இந்தியக் கொள்கைகளில் 5 பூதங்கள் பேசப்படுமோ, அங்கெலாம் தென்னகத் தாக்கம் இருந்ததாய்ப் பொருள்கொள்ள வேண்டும். ஐம்பூதக்கருத்து ஒரு கதைக் குறியீடாகும் (tell-tale sign). ஐம்பூத இயற்கை சங்க இலக்கியத்தில் பல இடங்களிலும் பேசப்படுவது நம்மை வியக்க வைக்கிறது. ஆயினும் ”தமிழரா? - சொந்த மூளையிலாத விவரங் கெட்டவர்: என்ற வாதம் இடைவிடாது இந்திய அறிவுய்திகளால் - அறிவுஜீவிகளால் - வைக்கப் படுகிறது.] ஐம்பூதத்திற்கு இணையாய் முறையே பகைவரைப் பொறுத்தலும், பகை வெல்லுதற்கான ஆலோசனைகளின் அகற்சியும், உடல், மனங்களின் வலிமையும், வலி வழி பெறப்படும் ஒறுத்தலும், கருணையும் சொல்லப்படுகின்றன. ”இவ் ஐம்பெரும் தகைகளை உடையவனே!” என்று சேரன் இப் பகுதியில் புகழப் படுகிறான்.

அடுத்த பகுதியைப் பார்ப்போம். இது

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின்
வெண் தலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந

என்று அமையும். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் காலத்தில் அவன் நாடு குணகடலில் தொடங்கி குடகடல் வரை விரிந்து பரந்திருந்தது. ”உன் குண கடலில் பிறந்த ஞாயிறு அங்கிருந்து பெயர்ந்து மேற்கே ஏகி வெள்ளிய நுரை பொங்கும் மேற்குக் கடலிற் குளித்துப் புத்துருவம் கொள்ளும் நன்னாட்டின் தலைவனே!” என்று சேரன் மேலும் சிறப்பிக்கப் படுகிறான்.

அதாவது இவன் குறுநிலத் தலைவன் இல்லை. அகண்ட ஆட்சிநிலத்திற்கு உரிய வேந்தன். வடக்கிருந்த எவ்வேந்தனுக்கும் இவன் சளைத்தவன் அல்லன். He can challenge anyone up north. He had two seas on both sides of his kingdom. Now this denotes a few things in terms of trade. நிலத்தொடர்பால் வடக்கே மகதநாட்டின் தக்கணப் பாதையைப் பிடித்து சாவத்தி (இன்றைய அயோத்தி) வரை போய் வடபுலத்து வாணிகத்தை நடத்திக் கொள்ள முடியும். [சிலம்பின் காலம் என்ற என் தொடரை வாசகர் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். தக்கணப் பாதை என்பது தமிழக- வடபுல வாணிகத்திற்கு இன்றியமையாதது. இதன் முகன்மையை நாம் இன்னும் உணரவில்லை.] மேற்குக் கடல் வழி எகிப்து, பாபிலோனியா, எலாமைத்து, பாரசீக நாடுகளின் வாணிகத்திற் கலந்து கொள்ள முடியும். கிழக்குக் கடல்வழி தென்கிழக்காசியா, சீனம் ஆகிய நாடுகளுடன் வணிகஞ் செய்ய முடியும். இப்படி மூவேறு திசைகளில் வணிகஞ் செய்ய வாய்ப்புக் கிடைத்த நாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் ஒரு சிலவே. அப்படியிருந்தவை வளங் கொழித்துச் சிறந்திருந்தன. சேரனின் வணிகச் சிறப்பைச் சொல்ல இந்த மூன்று வரிகள் சிறப்பானவை அல்லவா?

அடுத்த பகுதி:

வான வரம்பனை நீயோ பெரும

என்று ஓரடியால் அமையும். ”வானவரம்பன், இமையவரம்பன்” என்ற சொற்களுக்கு “வானத்தை எல்லையாகக் கொண்டவன், இமையத்தை எல்லையாகக் கொண்டவன்” என்று பல உரையாசிரியர் பொருள் கொள்வார். உண்மையில் எந்நாளும் வானத்தையோ, இமையத்தையோ சேரர் எல்லையாகக் கொண்டவரில்லை. சேரர் இமையம் வரை படையெடுத்துப் போயிருக்கிறார். பாண்டியர், சோழருங்கூட  அதுபோற் செய்திருக்கிறார். அவையெலாம் வஞ்சிப் போர்களே. வடக்கே பல வேந்தரையும், மன்னரையும் தமிழ் வேந்தர் வெற்றி கொண்டுள்ளார் என்பது மட்டுமே உண்மை. வடக்கே எல்லை கொண்டார் என்பது உண்மையல்ல.

“வானத்தை எல்லையாகக் கொண்டவர், இமையத்தை எல்லையாகக் கொண்டவர்” என்பது போன்ற தேவையற்ற உயர்வு நவிற்சி சொல்வது தமிழ் வரலாற்றிற்கு நம்பகமில்லாத் தன்மையையே வரவழைக்கும். மயிலை சீனி வேங்கடசாமி இக்கூட்டுச் சொற்களை ஏற்றதில்லை. அவர் “வானவர் அம்பன், இமையவர் அம்பன்” என்று பிரித்து, ”அம்பனை” ”அன்பனின்” பேச்சுவழக்குத் திரிபாகக் கொண்டு 2 சொற்களுமே ”தேவர் அன்பன்” என்று பொருள் படுவதாய்க் கொள்வார். இது அசோகர் காலத்திற்குப் பின் மோரியக் குடி வழியினர் “தேவனாம்ப்ரிய” என்று தங்களை அழைத்துக் கொண்டது போல் நாம் கொள்ளலாமென அவர் சொல்வார். சிங்கள அரசன் மூத்த சிவன் மகனான தீசனும் அசோகரின் பாதிப்பால் தன்னை தேவனாம்பிய தீசன் என்று அழைத்துக்கொள்வான். ”தேவன அம்பியன்” என்பது ”தேவன் அம்பன்” என்பதோடு தொடர்புறுவதை நோக்கலாம். அன்பன்> அம்பன் என்ற சொல்திரிவு தமிழுக்கும் பாகதத்திற்கும் இடைப்பட்டதாகலாம். நாம் அன்பு என்று அழைப்பது பாகதத்தில் அம்பு ஆகலாம். பொதுவாக பேரரசன் அசோகனின் தாக்கம் அவன் காலத்தின் பின் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் இருந்தது போலும். புத்த, செயின, அற்றுவிக மதங்களின் தாக்கமும் தெற்கே பெரிதாக இருந்திருக்க வேண்டும். வேதநெறி போலவே, இம் 3 மதங்களும் மாந்தநிலைக்கு மேற்பட்டு தேவ நிலை இருப்பதாகவும் அந்நிலைக்குப் போவது ஆதன்களின் (atmans) முயற்சியால் முடியுமென்ற கருத்தையும் கொண்டிருந்தன. ”தேவர்களின் அன்பைப் பெற்றவன்” என்று சொல்லிக் கொள்வதில் அக்கால அரசர் பெருமிதங் கொண்டனர் போலும். “வானவர் அன்பன் நீ தானோ, என் வேந்தே?” என்ற பொருளையே இந்த வரிக்கு ஈடாய் நாம் சொல்ல முடியும்.

அன்புடன்,
இராம.கி.

புறநானூறு 2ஆம் பாட்டு - 2

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின்
வெண் தலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே
--------------------

இப்பாடல் பாடாண் திணை சேர்ந்தது இதன் துறையைச் செவியறிவுறூஉ என்றும் வாழ்த்தியல் என்றும் இலக்கணத்தில் வகைப்படுத்துவார். இது பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய பாடலாகும்.

அது என்ன பாடாண் திணை? - என்று கேட்டால் நாம் புறத் திணைகளின் வகைப்பாட்டிற்குள் போக வேண்டும். ”வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி ஆகிய ஆறு திணைகளுக்கு அப்புறம் வருவது பாடாண் திணை. வேடுவச் சேகர வாழ்க்கைக்கும் (hunter-gatherer life), பயிர்த்தொழில் வாழ்க்கைக்கும் (feudatory life) பொதுவான புறத்திணைப் பாகுபாடுகள் இங்கு பாவிற்குக் களன்கள் ஆகின்றன.

முதலில் வருவது வெட்சி. இது ஓர் இனக்குழுக் கூட்டத்தின் பசுக் கூட்டத்தை இன்னொரு கூட்டத்தார் கவ்விக் கொள்வதும், அதைத் தொலைத்தவர் மீட்டுக் கொள்வதும் பற்றிய களமாகும். கி.பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த புறப்பொருள் வெண்பாமாலை இப்படி மீட்டுவருவதை ஒரே திணைக்குட் பொருத்தாது, ”கரந்தை” எனத் தனிப்பெயர் கொடுத்து அழைக்கும். தொல்காப்பியம் இரண்டையும் ஒன்றாய்ச் சேர்த்துப் பார்க்கும்.

வஞ்சி என்பது மாற்றரசனை அச்சுறுத்திப் போர்செய்தலைக் குறிக்கும். சிலப்பதிகாரத்திற் சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்று அங்குள்ள அரசரை அச்சுறுத்தி நடத்திய போர் வஞ்சிப் போராகும். இது வலிமையை நிலை நிறுத்தும் காரணத்தால் நடக்கும் போராகும். இதன் முடிவு கப்பங் கொள்ளுதலும், அடிபணிதலுமாய் அமையும்.

உழிஞை, மாற்றான் கோட்டையை முற்றுகையிடலும் அதைக் கைப்பற்றலும் ஆகும். முன்னே வெட்சியின் எதிராய் கரந்தையைக் காட்டியது போல உழிஞையின் எதிராய் நொச்சித் தனித்திணையை புறப்பொருள் வெண்பா மாலை காட்டும். தொல்காப்பியரைப் பொறுத்தவரை நொச்சி, தனித்திணை அல்ல. அது உழிஞையின் பகுதியே.

தும்பை, வஞ்சிக்கு எதிரானது. தன் வலிமையைப் பொருளாகக் கருதிவந்த அரசனை எதிர்த்துச்சென்று அவனோடு போரிடுவது. தொல்காப்பியம், புறப் பொருள் வெண்பாமாலை ஆகிய இரண்டுமே தனித்து அடையாளங் காட்டும்.

வாகை என்பது வெறுமே வாளாலும் தோளாலுமன்றி தம் இயல்புகள் ஒட்டிய மற்ற போட்டிகளில் இருவேறு சாரார் பொருதுவதையும் வெற்றிபெறலையும் குறிக்கும்,

காஞ்சி என்பது வாகைக்கு மாறாக, பொருதலை விட்டொழித்து, “இவ்வுலகம் நிலையற்றது, இதில் ஒருவருக்கொருவர் பொருது கொள்ள வேண்டுமா? பொருதாமலேயே நீ நிலைப்பாய்” என நீத்தார் நெறி பற்றிப் பேசுவதாகும்.

பாடாண் என்பது இதுவரை மேலே பேசப்படாத பாடுபொருட்களை, ஆனால் பாடிப் பரவத்தக்க புறத்திணை நிகழ்வுகளைப் பற்றிப் பேசுவதாகும்.

இனிச் செவியறிவுறூஉ என்பது என்ன? இதைச் செவியுறை என்பதுமுண்டு. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் 1371 ஆம் நூற்பாவில் செவியுறையின் வரையறை சொல்லப்பெறும்.

செவியுறை தானே
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே

”பெரியோர் நடுவே சினந்து கொள்ளுவதும், தன்னையே வியந்து கொள்ளும் செருக்கும் இன்றி தாழ்ந்து ஒழுகுதல் கடமை” என்று கேட்போன் உளம் கொள்ளுமாறு சொல்வதைச் செவியுறை என்பார். இவ்வரையறையை ஆழ்ந்து புரிந்துகொள்வது புறநானூற்று 2 ஆம் பாடலைப் புரிந்து கொள்ள வழிவகுக்கும். ”அரசனே! நீ செயற்கரிய செயல்கள் செய்தவன், பகைவர் மேற் சினந்துகொள்ள உரிமையுள்ளவன். ஆனாலும் இந்நேரத்தில் அடங்கி ஆக்கமுடையவனாய் இருத்தல் வேண்டும்” என்று முரஞ்சியூர் முடிநாகனார் சொல்லவருகிறார் - என்ற குறிப்போடு பாடற்பொருளைப் பார்ப்போம். பொருள் புரியத் தக்க, இப் பாட்டை 5 பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறேன்.

1. முதல் 8 வரிகள் “ஐம்பூதத்து இயற்கை போன்றவன் சேரலாதன்” என்று உரைக்கின்றன.
2. அடுத்த 3 வரிகள் “அகன்ற நாட்டிற்கு உரியவன் சேரன்” என்று அவன் ஆட்சியின் அகண்டதன்மையைக் குறிக்கின்றன.
3. அடுத்த ஒருவரி “வானவர் அன்பன்” என்று மோரியருக்குப் பின் சேரர் பெற்ற/அழைக்கப்பட்ட பட்டத்தைக் குறிக்கிறது.
4. அடுத்த 4 வரிகள் தாம் நாவலந்தீவின் பெரும் வீரர் கொடிவழியைச் சேர்ந்தவன் என்று சொந்தங் கொண்டாடும் விதத்தில் முன்னோர் நினைவாக “பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்த” சிறப்பைக் குறிக்கின்றன.
5. கடைசி 8 வரிகளில் தான் அரசனுக்கு உணர்த்தப்பெறும் செவியறிவுறூஉ இருக்கிறது. எந்த நிலையில் இந்தச் செவியுறை எழுகிறது என்று நம்மாற் சொல்லமுடியவில்லை. ஆனால் இமயமும் பொதியமும் போல நடுக்கம் இல்லாதவராய் யார்வந்தாலும் எதிர்நின்று வேள்விகளைக் காக்கக் கூடியவர் போல ஆயத்தநிலையில் இருக்கச்சொல்லும் அறிவுறுத்தல் தெளிவாக நமக்குப் புரிகிறது.

செவியுறை என்பது கிட்டத்தட்ட psychological counselling. ”அரசே! நீ எப்பேர்ப் பட்டவன், அதைச் செய்துள்ளாய், இதைச் செய்துள்ளாய், எல்லாவற்றிற்கும் உகந்தவன் நீ? இருப்பினும் கோவப்படலாமா? செருக்குக் கொள்ளலாமா?  கொஞ்சம் பக்குவமாய்ப் பார்த்துச் செய்யப்பா” என்பது உளவியற் கலந்துரை இல்லாது வேறென்ன?

பாட்டின் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் இன்னும் ஆழமாய்ப் போவோம்.

அன்புடன்,சி
இராம.கி.

புறநானூறு 2ஆம் பாட்டு - 1

ஒரு முறை ctamil மடற்குழுவில் புறநானூற்று 2 ஆம் பாடலை முன்னுறுத்தி, அதில் வடபுலக் கருத்துக்கள் மிகுத்திருப்பதாகவும், அக்கருத்துக்களைத் தமிழர் பெரிதாய்க் கருதிப் பின்பற்றியதாகவும், தமிழருக்குச் சொந்தமான பண்பாட்டுத் துலக்கம் என்பது கிடையாது போலவும், எல்லாமே pan-Indian culture with regional variations என ஒரு சாராரும், ”அப்படியில்லை, ஒன்றிற்கொன்று வளமான கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட இருவேறு தனிப் பண்பாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தன; இரண்டுஞ் சேர்ந்ததே இந்தியப் பண்பாடு” என இன்னொரு சாராரும் தத்தம் கருதுகோள்களின் அடிப்படையில் உரையாடல்களை எழுப்பிக் கொண்டார். [நான் உரையாடல்களை அப்படியே சொல்லுக்குச் சொல்  இங்கு எடுக்கவில்லை.] இதுபோல் உரையாடல்கள் கால காலமாய் நடப்பவை தான்.

பல வெளிநாட்டுத் தமிழறிஞர் இன்னும் ”துபாஷி/பண்டிதர்” சொன்னதை வேத வாக்காய் எடுத்துக்கொண்டு, “வடக்கு மேடு, தெற்கு பள்ளம். மேட்டில் இருந்தே பள்ளத்திற்கு நீரோட்டம்” என்ற பார்வையை எத்தனை நாட்களுக்குக் கொள்வாரோ? - தெரியாது. Tamil culture and practices are derived from the north எனும் புரிதலையும் என்று தான் மாற்றிக் கொள்வாரோ? - தெரியவில்லை. தமிழுக்குச் செம்மொழித் தகுதியை , இந்திய நடுவண் அரசினர் வேறு கொடுத்துத் தொலைத்து விட்டார் :-) அதைக்கண்டும் பலருக்குப் பற்றி எரிகிறது. வேறொன்றுமில்லை.  It is an un-deserved recognition என்ற முணுமுணுப்பும், ”அரசியற் செல்வாக்கால் அடைந்துவிட்டார்” என்ற பொருமலும் ஆங்காங்கே எழுகின்றன.

“அடிப்படையில் வடமொழியும் தென்மொழியும் ஒன்றிற்கொன்று நெடுங் காலம் உறவாடியவையே. இங்கிருந்து அங்கு சில கூறுகளும், அங்கிருந்து இங்கு சில கூறுகளும் ஊடுறுவது இயற்கை” என்ற பார்வையை நடுநெறியர் ஒரு நாளும் மறைத்ததில்லை. மறந்ததுமில்லை. இப்படி ஒரு பக்கச் சார்பாகவே பார்க்கும் பார்வை, 19 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி, 21 ஆம் நூற்றாண்டு வரை மாறாதிருப்பதை எம் போன்றோர் மறுத்துச் சொல்லி வந்தோமே ஒழிய, எல்லாமே தமிழென எக்காளம் இட்டதில்லை. ஆனாலும் எம் கருத்தைத் தனித்தமிழ்த் தீவிரவாதிகள் (pure Tamil extremists), பொதுக்கை வாதிகள் (fascists) என்று சாயம்பூசுவது தொடர்ந்து நடந்துவந்தது. [இப்படிச் சாயம் பூசுவதே வழக்கமாகிப் போன ஒரு மடற்குழுவில் இருந்தே நான் அகன்றிருக்கிறேன்.] மாற்றுக் கருத்தாய் எதை வைத்தாலும் அதை ஒதுக்கித் தள்ளி மேலைத் தமிழறிஞரை ஒருபாற் கோடவைப்பது தொடர்ந்து நடக்கிறது. ”வடக்கே! இதோ என் சாஷ்டாங்க சரணம், நமஸ்காரம்” என்றபடி பலரும் தாசானு தாசராய் ஆகிப் போனது இன்று நேற்று நடப்பதல்ல.

[யாரோ ஒருவர் அழகாய்ச் சொன்னார்: காசுமீரத்தில் நாலு பேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு இந்தியர் இறந்தார்” என்று வரும். இராமேசுரக் கடலில் நாலு பேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு தமிழ் மீனவர் இறந்தார்” என்று வரும், ஏதோ தமிழர் இந்தியர் அல்லாதது போல் சொல்லப் படும். இம்மனப்பான்மை இன்று நேற்று ஏற்பட்டதில்லை. இல்லையெனில் 500க்கும் மேற்பட்ட மீனவர் சுடப்பட்டதற்குப் பொங்காத இந்தியர் மும்பை 2611 என்றால் மட்டும் குதிப்பது ஏன்?]

அரசியலை ஒதுக்கிவைத்து சங்க இலக்கியம் வருவோம்.

கால காலமாக தமிழக வரலாற்றைக் கீழிறக்கித் தள்ளுவதே வேலையாக ஒரு சாரார் இங்கு இருந்துள்ளார். அவருக்கு வேதத்தைத் தூக்கி வைக்கும் பணி உள்ளபோது, ”எல்லாமே சங்கதம்” என முழக்கம் செய்யவேண்டிய நிலை இருக்கும் போது, தெற்கே ஒரு பண்பாடு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுப் பழமையானது என்று சொல்ல எப்படி மனம் வரும்? அதன் காரணமாய் வையாபுரியாரைத் துணைக்கொண்டு சங்க இலக்கியத்தின் காலத்தை தவறாகப் பொருத்துவது இன்றுவரை மாறவேயில்லை;

[வையாபுரியாரின் தற்சார்புக் கருத்துக்களை மறுத்து இவர் எவருமே கேள்வி எழுப்பியதில்லை. வையாபுரியார் முடிவுகளை கமில் சுவலபிலும் மறுத்தது இல்லை. இன்று கமில் சுவலபில்லின் முன்னெடுப்புகளை மற்ற மேலைத் தமிழறிஞரும் மறுப்பதில்லை. ஹெர்மன் டீக்கன் மட்டும் சிலருக்கு இப்போது எதிராளியாகத் தெரிகிறார்.] சங்ககால வாழ்க்கை முறையை Burton Stein வரையறுத்த Segementary State ஆகவே பார்ப்பதும்  மாற வில்லை. [Burton stein கருத்தை நொபுரு கராசிமா மட்டும் வன்மையாக மறுத்தார்; ஆனால் அவர் தன் ஆய்வுக்குட்பட்ட பெருஞ்சோழர் காலத்தோடு இயல்பாய் நிறுத்திக் கொள்வார். நானறியச் சங்ககால மூவேந்தர் அரசுகள் எப்படிப்பட்டவை, அவற்றின் அரசியற் பொருளாதாரம் என்ன? - என ஆய்ந்து பார்க்க யாரும் முன்வந்ததில்லை.]

தமிழ்நாட்டு ஆய்வாளரோ, இதன் ஆழங்காண மறுத்து ”வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள், சங்கரதாசு சுவாமிகளின் நாடகத்திறம், புதுக் கவிதையும் லிமெரிக்கும்” என விளிம்புநிலை ஆய்வுகளிலே கவனஞ் செலுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஆய்வுப்பட்டத் தலைப்புகளைக் கேட்டால் கண்ணீர் வடிக்கவே தோன்றும். ஏதோ 200 ஆய்வுநூற் பக்கங்களை நிறைத்துவிட்டாற் போதும் என்றாற்போல் எத்தனை நாட்கள் சவலைப் பிள்ளையாய், மூளியாய், மூடமாய்த் தமிழாய்வுகள் தமிழ்நாட்டில் நடக்குமோ தெரியவில்லை. இத்தனைக்கும் புதிய தரவுகள் தொல்லியல்வழி வருகின்றன. கல்வெட்டியல் மூலம் எழுகின்றன. நாணயவியல் புது வரலாறு படைக்கிறது. ஆனாலும் தமிழக வரலாற்றைச் சங்க இலக்கியத்தை புத்தொளி கொண்டு மீள் ஆய்வு செய்ய தமிழியலில் யாருமே அணியமாயில்லை. இல்லையெனில் அச்சு அடித்தாற் போல் ”சிலப்பதிகாரம் கி.பி.2 ஆம் நூற்றாண்டின் பின் எழுந்தது” என்று கீறல் விழுந்த இசைத்தட்டுப் போலத் தமிழறிஞரில் 99.9% பேர் இன்னியம் பாடிக் கொண்டு இருப்பாரா?

ஏன் சங்க இலக்கியத்தில் மீளாய்வே நடப்பதில்லை?- என எனக்கும் புரிவதில்லை. இத்தனைக்கும் சங்க இலக்கியத்தில் 50% க்கும் மேலான பாடல்கள் பாலைத்திணையில் உள்ளன. அதில் பெரும்பாலும் மொழிபெயர் தேயம் தாண்டி பாடல் தலைவர் வடக்கே போனதாய்ச் செய்திகள் வரும். அப்படி வடபுலத்தில் எங்கே தான் வணிகம் செய்யப் போனார்? வடுகர் யார்? தமிழரின் பொருளியல் எதன் அடிப்படையில் இயங்கியது? இது வெறும் கொள்ளையடிப்புப் பொருளாதாரமாய் இயங்கியதா? [அப்படியும் சிலர் எண்ணிக் கொள்கிறார்.] இவ்வளவு காசுகள் (உரோம நாட்டுக் காசுகளும் சேர்த்து) கிடைத்துள்ளனவே? மணிகள், முத்துகள் இங்கு கிடைத்துள்ளனவே? இவையெலாம் எங்கே செலாவணியாகின? வடக்கிருந்த மகதத்திற்கும் தமிழகத்திற்கும் இடையாட்டம் கொஞ்சங் கூட இல்லாது போனதா? மகதத்தோடு உறவு கொள்ளாத தமிழகம் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் இருந்துவிட முடியுமா? வம்ப மோரியர் எனில் மோரியருக்கும் முந்தியவராய் சங்க காலத் தமிழர் இருந்திருக்க வேண்டுமே? அப்படியெனில் சங்க இலக்கியக் காலம் குறைந்தது மோரியருக்கும் முன்னால் என்ற ஆய்வு கூட நம்மிடம் இல்லாது போனது எப்படி? ஏன் தீவுக்குள் முடங்கிப் போனவராய் நம்மை நாமே எண்ணிக் கொள்கிறோம்? வடபுலத்தாரும், மேல்நாட்டாரும் நம்மை ஒரு தொங்குசதையாகவே (appendage) பார்க்கிறாரே ஏன்? Are we so worthless? Was every thing here a derived one? Don't we see a conspiracy in it?

மகதப் பேரரசு அளவிற்கு இல்லாவிடினும் அதற்கெதிராய்ச் சூளுரைத்து, தம் பொருளியலையும் அரசியலையும் தனித்து நிலைநாட்டி 3 பயிர்த்தொழில் அரசுகள் (feudatory states) இங்கிருந்தன என்பதையும், கூடவே வேடுவச் சேகர (hunter-gatherer) குமுகாயக்கூறுகளும் இருந்ததையும், அப் பின்புலத்திற் பார்த்தால் தான் சங்க இலக்கியமும் பழந்தமிழ் வரலாறும் புரிபடும் என்று  இந்த வறட்டுவாதிகளுக்குச் (dogmatists) யார் சொல்வது? சங்க இலக்கியத்தின் காலம் கி.மு.600-கி.பி.200 என்று விரித்துணர்வது எப்போது? ”மகத அரசுகள் எப்போதும் தமிழக அரசுகளுக்கு பகையாய், அதேபோது போட்டியரசுகளாய் இருந்தன” என்ற வரலாற்று உண்மையை யார் உணர்த்துவது?

இப்படிக் கேள்விமேற் கேள்விகள் நமக்குள் அடுத்தடுத்து எழுகின்றன. விடை காண்பதற்குத் தான் ஆட்களைக் காணோம். வையாபுரியார் சொன்னது இன்று வரை மேலைத்தமிழறிஞரிடம் அப்படியே அடிபிறழாமல் உள்ளது. நம்முடைய  மாற்றுக் கருத்துக்கள் பொதுக்கையாகவே (fascist) புரிந்துகொள்ளப் படுகின்றன. நாம் என்ன சொல்ல முடியும்? Am I a fascist?

இதற்கிடையில் காவிரியில் எத்தனையோ ஆடிப்பெருக்கும், அமையுவாவும் (அமாவாசையும்) வந்தாயிற்று.

நானறிந்த வகையில் புறநானூற்று 2 ஆம் பாடலுக்கு என் விளக்கத்தை அடுத்த பகுதியிற் தருகிறேன். இதை ஏற்பதும் ஏற்காததும் படிப்போர் உகப்பு.

அன்புடன்,
இராம.கி.

Friday, July 09, 2010

தமிழெழுத்துப் பரம்பல் - 2

முதற்பகுதியிற் சொன்ன எழுத்துப் பரம்பல் இற்றைத் தமிழில் மட்டுமல்லாது. பழந்தமிழிலும் இருந்திருக்கிறது. ஓர் எடுத்துக்காட்டிற்காகச் சங்க இலக்கியத்தில் இருந்து ஒரு பாடலைப் (புறம் 194 - பக்குடுக்கை நன்கணியார் எழுதியது) பார்ப்போம். [ஒவ்வொரு வரியின் முடியிலும் அந்த அடியில் வரும் எழுத்துக்களை எண்ணிப் பக்கத்தில் எழுதியிருக்கிறேன்.]

ஓரி னெய்தல் கறங்க வோரி 12
லீர்ந்தண் முழவின் பாணி ததும்பப் 16
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர் 18
பைத லுண்கண் பணிவார் புறைப்பப் 15
படைத்தோன் மன்றவப் பண்பி லாள 15
னின்னா தம்மவிவ் வுலக 11
மினிய காண்கித னியல்புணர் ந் தோரே 16

மொத்தம் 103

இந்த 103 எழுத்துக்களை வகை வகையாகப் (உயிர், மெய், பல்வேறு உயிர்மெய்கள்) பிரித்துப் பார்த்தால், கீழ்க்கண்டது போல் அமையும்.


இனிப் புள்ளியியல் முறையில் கணக்குப் போட்டால்,

என்றமையும். இதன்படி, வேறுபாட்டுக் கெழு = (0.138639435)^0.5 = 0.372343168
(Coeff. of variation) என்பது கிடைக்கும்,

பக்குடுக்கை நன்கணியார் பாடல் ஆசீவகப் பாடல். அண்மைக்கால ஆய்வின் படி இப்பாடலின் காலம் கிட்டத்தட்ட கி.மு.600 ஐச் சேர்ந்தது. இதற்குப்பின் திருக்குறளின் முதலாம் அதிகாரமான கடவுள் வாழ்த்தின் எழுத்துப் பரம்பலைப் பார்ப்போம். [ஒவ்வோர் குறளிலும் இருக்கும் எழுத்துக்களை குறள் முடிவில் கொடுத்துள்ளேன். முதல் அதிகாரத்தின் மொத்த எழுத்துக்கள் 292.

அகர முதல வெழு த்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு 25
கற்றதனா லாயபய னென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின் 28
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் 27
வேண்டுத ல் வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கி
யாண்டு மிடும்பை யில 29
இருள்சே ரிருவினையுஞ் சேரா யிறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு 32
பொறிவா யி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் 30
தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது 35
அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்த லரிது 31
கோளிற் பொறியிற் குணமிலவே யெண்குணத்தா ன்
தாளை வணங்காத் தலை 28
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார் 27

மொத்தம் 292

இந்த 292 எழுத்துக்களை வகை வகையாகப் பிரித்துப் பார்த்தால், கீழ்க்கண்டது போல் அமையும்.

இதிலும் வேறுபாட்டுக் கெழுவைப் பார்க்கமுடியும்.


வேறுபாட்டுக் கெழு = (0.1135597)^0.5 = 0.336986201 (Coeff. of variation)

மேலே நாம் பார்த்த வேறுபாட்டுக் கெழுக்களை எழுத்துப் பரம்பல் கைச்சாத்து (Signature of letter distribution) என்று கூறமுடியும். இது போன்ற கைச்சாத்துக்களை அசை, சீர், தளை, அடி என்ற வகையிற் காணமுடியும். இற்றை உரைநடைத் தமிழுக்கும் காணமுடியும்

ஆக ஒவ்வொரு ஆக்கத்திற்கும் ஒரு எழுத்துக் கைச்சாத்து இருக்கிறது (மற்ற கைச்சாத்துக்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் நான் பேசவில்லை.) இந்தக் கைச்சாத்து பாட்டின் பாடுபொருள், புலவரின் கற்பனை, யாப்பு, சொல்லவந்த கருத்து, புலவரின் எழுத்துநடை போன்று பலவற்றால் மாறும். எழுத்துக் கைச்சாத்தின் வேறன்மை (variability) சிறு காட்டாக இருக்கும் போது அதிகப்பட்டும், பெரும் காட்டாக அமையும் போது குறைந்துங் காணப்படும். பொதுவாகப் புள்ளியல் வழி கணிக்கப் படும் செய்திகளில், ஏற்றுக் கொள்ளப்படும் தரவுகள் கூடக்கூடத் தான் நம்பகமான கணிப்புக்கள் அமையும். அதாவது வெறுமே ஒரு புறப்பாட்டை வைத்துக் கணக்குப் போட்டால் வரும் புள்ளி விவரத்தைக் காட்டிலும், புறம் நானூறையும் கணிக்கும் புள்ளியியல் முடிவுகளின் நம்பகம் கூடியதாக இருக்கும். எட்டுத்தொகை எல்லாவற்றையும் சேர்த்துக் கணித்தது இன்னும் நம்பக் கூடியதாக அமையும். இன்னும் மேலே போய், சங்க இலக்கியம் முற்றிலுமாய்க் கணித்தது மேலும் நம்பக் கூடியதாய் அமையும். அப்படிக் கணிப்பதன் மூலமாய், ”தமிழ் நடை காலவோட்டத்தில் எப்படி மாறியுள்ள? அல்லது மாறவில்லையா? எவையெவை இடைச்செருகல்கள்? எந்தெந்தப் பாடல்கள் ஒரேவிதமான தோற்றங் காட்டுகின்றன? அறிவியற் பூருவமாய் சங்கப் பாக்களை காலவரிசைப் படுத்தமுடியுமா? - என்றுபல கேள்விகளுக்கு விடைதரும் முகமாய்ப் பல்வேறு கோணங்களில் ஆய்வைச் செலுத்த முடியும். நண்பர்களே! முன்வாருங்கள். தமிழும் கணிமையும் ஒன்று சேரட்டும்.

இந்த எழுத்துப் பரம்பல் பற்றிய குறிப்பை அண்மையில் செம்மொழி மாநாடு/ இணைய மாநாட்டிற்கு வந்தபோது நண்பர்கள் நாக. இளங்கோவன், முத்து. நெடுமாறன், மணிவண்ணன், தெய்வசுந்தரம், பாலசுந்தரராமன்/ஈசுவர் சிரீதரன் ஆகியோரிடம் பகிர்ந்து கொண்டேன். எல்லோருமே ”இக்கருத்தை மேலெடுத்துச் செல்லவேண்டும். தமிழிலக்கியவுலகில் புதுப்பார்வையை இக் கைச்சாத்துக் கணிப்புகள் கொண்டு தரலாம்” என்றே என்னிடம் உரைத்தார். தமிழ்க்கணிமையின் பயன்பாடு புதுப் பார்வைகளைக் கொண்டு தரட்டும்.

இங்கு எழுதியது மற்றோருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக.

அன்புடன்,
இராம.கி.

Thursday, July 08, 2010

தமிழெழுத்துப் பரம்பல் - 1

"எழுத்துச் சீர்குலைப்பாளர் தமிழக அரசியலாரிடம் தங்களுக்கு இருக்கும் அணுக்கத்தைப் பயன்படுத்தி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முடிவில் எழுத்துச் சீர்குலைப்பிற்கு ஆதரவாக ஓர் அரசாணை கொண்டுவர முயல்கிறார்" என்று 10, 11 மாதங்களுக்கு முன் அரசல் புரசலாகச் செய்தி வெளிப்பட்டது. இது தெரிந்தவுடனேயே ”இதை நடக்க விட்டுவிடக் கூடாது, பலரையும் ஒருங்கு சேர்த்து நம்மால் முடிந்தவரை, பரவலாய் எதிர் வாதங்களைத் தொடுக்க வேண்டும், அதேபொழுது எழுத்துக்காப்பு வாதங்கள் ‘அவர் சொன்னார், இவர் சொன்னார்’ என்று வெறும் மேற்கோள் காட்டுவதாய் மட்டுமே அமையக்கூடாது. மாறாக, யாராலும் அளக்கக் கூடிய எண்ணக (measurable and quantitative) முறையில், அடிப்படை ஏரணங்களோடு (with basic logic), அமையவேண்டும்” என்று எங்களிற் சிலர் எண்ணினோம். எண்ணக முறை வாதங்களை எழுப்பும் பொறுப்பைச் சொவ்வறையாளர் (software specialist) திரு. நாக. இளங்கோவன் ஏற்றுக் கொண்டார். ”இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களான 72 எழுத்துக்களை மாற்றுவதால் எத்தனை விழுக்காட்டுத் தமிழ்ச் சொற்கள் தம் உருவை மாற்றிக் கொள்ளும்?” என்று அளவிடும் வகையில் நிரல் எழுத முன்வந்து, அந்தப் பணியைச் சிறப்பாகவே செய்தார். அதன் விளைவாக எழுத்துக் குலைப்புச் செய்கையின் முழுப் பரிமானம் பலருக்கும் புரிந்தது. [நாக.இளங்கோவனின் அலசல் அண்மையில் நடந்த செம்மொழி மாநாட்டில் மொழியியற் புலத்தில் கட்டுரையாகப் படிக்கப் பட்டது.] அதை விளக்குமுன் இவ்விடத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும்.

நாம் பேசும்மொழியிற் பொருள் பொதிந்த அடிக்கூறு சொல்லெனும் அளவை தான். சொற்களைப் புரிவதிற் தடுமாறினால் ஒரு புலனம் பற்றிய பொருட்புரிதல் இல்லாது போகும். சொற்கள் புரிவதற்கு எழுத்துக்கள் வசப் படவேண்டும். வீச்செழுத்துக்களில் இருந்து அச்செழுத்துக்களுக்கு வந்து சேர்ந்த 400 ஆண்டுகளிற் தான் நம்முடைய எழுத்துக்கள் பெரிதும் நிலை பெற்றிருக்கின்றன. There is no more change of shapes. இந்த எழுத்துக்களை இப்போது வலிந்து திருத்துவது என்பது ”பரமபத” விளையாட்டில் பெரிய பாம்பு கடித்து இரண்டாம் கட்டத்திற்குத் திரும்பப் போவது போன்றதாகும். இப்படி எத்தனை முறை இரண்டாம் கட்டத்திற்குப் போவது? மீண்டும் தொடக்கக் கட்டத்தில் இருந்து பொத்தகங்களைத் திரும்ப அச்சடித்து எல்லா வேலைகளையும் திரும்பச் செய்து நம்மைப் பின் தள்ளுவதற்கே இது போன்ற சீர்குலைப்பு வேலைகள் பயன்படும். தமிழிற் செய்வதற்கு எத்தனையோ வேலைகள் உள்ளன. அவற்றைச் செய்யாமல், எழுத்துத் திருத்தம் செய்ய முற்படுவது, வெட்டிவேலையேயாகும். எது உடையவில்லையோ, அதை உடைத்து ஒட்டாதீரென ஆங்கிலத்தில் சொலவடை உண்டு. குழப்பமில்லாத எழுத்தை உடைத்து ஒட்டவைக்க முயல்வதும் அப்படி ஒரு நிலை தான். நம் உடம்பிற்குக் காய்ச்சல் இல்லாத போது காய்ச்சல் மருந்து சாப்பிடுவோமோ?

”எழுத்துக்களைத் திருத்துவதால் ஓர் ஆவணத்தில் எத்தனை சொற்களின் தோற்றம் மாறும்?” என்று கணக்கிடுவது ”எத்தனை இடங்களில் பொருளைப் புரிந்துகொள்ளத் தடுமாறுகிறோம், சோர்வடைகிறோம்” என்று கணித்து உரைப்பதாகும். சொற்பொருள் புரிவதிற் தடுமாறவைக்கும் ஆவணங்களால் நாம் சலிப்படைந்து அவற்றைப் படிக்காமலே போய்விடுவோம். ஒரு பழைய ஆவணத்தைச் சீர்குலைப்பு எழுத்தில் வெளியிட்டுப் படிக்கவைத்தால் எத்தனை இடங்களில் நாம் படிக்க இடர்ப்படுகிறோமோ, அத்தனை முறை “இந்த ஆவணத்தை ஏன் படித்துத் தொலைக்கவேண்டும்?” என்ற எரிச்சல் நம்முள் மேலெழுந்து, அதன் விளைவாய் ஆவணத்தைக் கீழே போட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுவோம். இது மாந்த இயல்பு. எல்லாம் நமக்குள் இருக்கும் பழக்கத் தோய்வே காரணம்.

இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களைத் திருத்துவதால் கிட்டத்தட்ட 80% தமிழ்ச்சொற்கள் தம் தோற்றத்தில் மாறும் என்று திரு. நாக. இளங்கோவன் தம் ஆய்வின் முடிவிற் கண்டறிந்தார். [அதாவது தமிழ்ச்சொற்களில் 80% சொற்கள் இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்கள் பயிலாது எழுவதில்லை.] அதைப் பற்றிய விளக்கத்தை அவர் கட்டுரையிற் காணலாம். அதற்கு முன் இயல்பான தமிழெழுத்துப் பரம்பல் (natural distribution of Tamil letters) பற்றிய செய்திகளை இங்கு பார்ப்போம். மேலே சொல்வது போல் சொல்லைக் கணக்கிற் கொள்ளாமல் வெறுமே எழுத்துப் பரம்பலை மட்டும் பார்ப்பது இன்னொருவகை அலசலாகும் அதை எனக்குத் தெரிந்து கி.பி.2000-த்தில் கல்பாக்கம் சு. சீனிவாசனும், அவருக்கு முன் 1990 களின் பிற்பாதியில் தகுதரக் (TSCII) குறியீட்டினரும் பார்த்திருந்தார். எழுத்துக்கள் அடங்கிய சொற்களாகப் பார்ப்பது (நாக. இளங்கோவன் கொடுத்த புள்ளிவிவரம்) இதனின்று வேறுபட்டது. இரு வகை அலசல்களுக்கும் தமிழிற் தேவைகள் உண்டு. ஒன்று இன்னொன்றிற்கு ஒளிகூட்டும். இக் கட்டுரையில் எழுத்துப் பரம்பலின் வெவ்வேறு பரிமானங்கள் குறித்துப் பார்க்கப் போகிறோம்.

கல்பாக்கம் சு.சீனிவாசன் தமிழிணையம் 2000-த்தில், வேறொரு புலனத்தில், “அஸ்கி மற்றும் யுனிக்கோடு தமிழ்க் குறிமுறைகளின் சார்புச் செயல்திறன் மதிப்பீடு” என்ற கட்டுரையில் தமிழ் உரையில் புழங்கும் எழுத்துக்களின் பரம்பலைக் (TAMIL LETTER DISTRIBUTION) குறித்திருந்தார். அதன்படி

நேர்ச்சிப் பெருவெண்                                                                 %
(frequency of occurance)
அனைத்து உயிரெழுத்துக்கள்                                               7.35
அனைத்து மெய்யெழுத்துக்கள்                                          29.45
அகர உயிர்மெய் எழுத்துக்கள்                                             21.13
இகர, ஈகார உயிர்மெய் எழுத்துக்கள்                               11.47
உகர, ஊகார உயிர்மெய் எழுத்துக்கள்                            12.93
ஆகார, எகர, ஏகார, ஐகார உயிர்மெய் எழுத்துக்கள் 14.97
ஒகர, ஓகார, ஔகார உயிர்மெய் எழுத்துக்கள்               2.69

என்று எழுத்துப் பரம்பல் அமையும். இப்புள்ளிவிவரம் சொற்களைக் கருதாமல் வெறுமே எழுத்துக்களை மட்டும் பார்ப்பதாகும். இந்த விவரத்தில் ஆகாரம் பற்றிய புள்ளிவிவரத்தை அகரத்தோடும், ஐகார, ஔகார பற்றிய புள்ளிவிவரங்களைத் தனித்தும் கொடுத்திருந்தால் அவதானிப்பதற்கு நன்றாக இருந்திருக்கும். ஆனால் திரு. சீனிவாசன் அப்படித் தரவில்லை. இணையத்தில் இருந்து கிட்டத்தட்ட 4 இலக்கம் எழுத்துக்கள் அடங்கிய பல்வேறு ஆவணங்களை தம் ஆய்விற்கெனக் கீழிறக்கி அவற்றை வகை பிரித்து எண்ணிப்பார்த்துக் கணக்குப் போட்டு இந்தப் புள்ளிவிவரத்தை உருவாக்கியிருந்தார். இந்த விவரத்தின் சிறப்பு இற்றைத் தமிழின் எந்த ஆவணத்திலும் நிரவலாய்க் (average) கிடைக்கக் கூடிய தமிழெழுத்துப் பரம்பலைத் தெரிவிப்பதாகும்.

இதே போன்றதொரு புள்ளி விவரத்தை தகுதரக் குறியீட்டை (TSCII) உருவாக்கும் போது முனைவர் கல்யாண சுந்தரமும் ஓர் ஆவணத்தின் வழி வெளியிட்டிருந்தார். (முத்து நெடுமாறனும், மணிவண்ணனும் அந்த ஆவணத்திற் பங்களித்தார் என்றே எண்ணுகிறேன். சரியாக நினைவில்லை.) பத்துப் பதினைந்து ஆண்டுகளிற் பழகிய என் பல்வேறு கணிகளில் ஏதோவொன்றில் அந்த ஆவணத்தின் படி (copy) சிக்கி, என்னால் மேலும் படியெடுத்துத்தர இயலாதிருக்கிறது. அந்த ஆவணம் வரலாற்றுக் காரணமாய்க் காக்கப் படவேண்டிய ஒன்று. உத்தமம் ஆவணக் காப்பகத்தில் திரு. கல்யாணசுந்தரம் அதைச் சேமித்து வைக்கலாம். அவர் அதை மீண்டும் வெளியிட்டால் நல்லது. நானறிந்து தமிழெழுத்துப் பரம்பலை அறிவியல் வழியில் முதன்முதலாய் அளந்து சொல்லிய ஆவணம் அதுவேயாகும். திரு. கல்யாணசுந்தரம் அளித்த புள்ளிவிவரத்திற்கும் சீனிவாசன் அளித்த புள்ளி விவரத்திற்கும் பெரிதாய் வேறுபாடு கிடையாது. வேண்டுமானால், ஒருசில பதின்மப் புள்ளிகள் வேறுபட்டிருக்கலாம்.

இந்தப் பரம்பலில் இருந்து பெறப்படும் ஒரு சில முடிவுகள் நமக்குச் சற்று அதிர்ச்சியையும், வியப்பையும் கொடுக்கக் கூடியவை.

தமிழெழுத்து என்பது அரிச்சுவடி என்னும் எழுத்தசை வகையைச் சேர்ந்தது (alpha-syllabary, அதாவது எழுத்துக்களும் அசைகளும் சேர்ந்தது தமிழ் எழுத்தாகும்) என்று நாமெல்லோரும் அறிவோம். அரிச்சுவடியை அபுகிடா (abugida) வகை என்று ஒரு சில மேல்நாட்டார் அரைகுறைப் புரிதலிற் சொல்வார். அது தவறு. ”அரிச்சுவடியும் அபுகிடாவும் முற்றிலும் வெவ்வேறானவை, அதேபோல அரிச்சுவடியும் அல்வபெட் (alphabet) என்னும் அகரவரிசையும் வெவ்வேறானவை, இன்னுஞ் சொன்னால் அரிச்சுவடியும் மெய்யெழுத்து, அதை உயிர்மெய்யாக்கத் துணைக்குறியீடு என்றியங்கும் அபுசட் (abujad) என்பதும் கூட வெவ்வேறானவை” என்ற கருத்தை அண்மையிற் செம்மொழி மாநாட்டில் பேரா. செல்வக் குமார் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.

அரிச்சுவடி என்ற கலைச்சொல்லை அகரம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிவான அக்கரம்>அக்‌ஷரம் என்ற வடநாட்டுக் கலைச்சொல்லால் திரு. மணிவண்ணன் TACE 16 RFC document இல் கையாளுவார். அரிச்சுவடி என்ற தமிழ்க் கலைச்சொல்லும் அக்ஷரம் என்ற வடநாட்டுக் கலைச்சொல்லும் ஒன்றிற்கொன்று அப்படியே இணையானவை. மேல்நாட்டுக்காரர் புரிந்து கொள்ளுதற்காக அக்ஷரம் என்ற வடநாட்டுக் கலைச்சொல்லைப் பயன் படுத்துவதில் எனக்கொன்றும் மாறுபாடு இல்லை. தமிழில் அரிச்சுவடி என்ற கலைச்சொல்லையே நாம் பயன்படுத்துவோம் [அந்தக் காலத்தில் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னாற் கூட, நாட்டுப் புறங்களில் திண்ணப் பள்ளிக் கூடத்தில் அரிசிப் பரப்பில் எழுதித் தான் தமிழ்ப்பிள்ளைகளின் எழுத்துப் பயிற்சி (அக்க்ஷர அப்பியாசம்) தொடங்கும். அரி(சி)யில் (அரிசி என்பது வெறும் நெல்லரிசியைக் குறிக்கவில்லை. எல்லாக் கூலங்களின் அரிசியைக் குறித்தது.) எழுதத் தொடங்கும் எழுத்து வகை என்பதால் அரிச்சுவடி என்ற பெயர் ஏற்பட்டது.]

அரிச்சுவடி என்பது அடிப்படை எழுத்துக்களையும், அவற்றின் பெருக்கெழுத்துக்களையும் (product characters) உறுப்பாய்க் கொண்டது. அதாவது எழுத்தசை என்பதை ஒரு கொத்து (set) என்றால் உயிரெழுத்து என்பது அதனுள் ஓர் உட்கொத்து (subset). (அதன் எண்ணிக்கை 12) மெய்யெழுத்து என்பது இன்னோர் உட்கொத்து.(அதன் எண்ணிக்கை 18. இதனுள் ஜ்,ஷ்,ஸ்,ஹ் என்ற நாலு கிரந்த எழுத்துச் சேர்த்தால் எண்ணிக்கை 22 ஆகும். அண்மையில் 3,4 ஆண்டுகளுக்குள் முன் ஒருங்குறிக்குள் சேர்த்த இன்னொரு z ஒலிச் சகரம் ( 0bb6 in unicode) ஒரு முட்டாள்தனமான கூத்து. தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் யாருக்குஞ் சொல்லிக் கொடுக்காத, ஒரு சில விதப்பான, விரல்விட்டு எண்ணக் கூடிய, பயனாளர் மட்டுமே பயனாக்கும் எழுத்து அதுவாகும். இதுபோல அதிநுணுக்கச் சிறுபான்மையாளர் பயன்படுத்தும் எழுத்துக்களை எல்லாம் தமிழ் அரிச்சுவடியில் சேர்க்கத் தொடங்கினால், அப்புறம் தமிழெழுத்து என்பது எல்லையில்லாது போய்விடும். One has to put a full stop to these kinds of unwanted additions. க்ஷ் என்பது மெய்க்கூட்டு. மெய்க்கூட்டைத் தவிர்க்கும் தமிழில் அதைக் கணக்கில் சேர்த்ததும் தவறு தான். ஸ்ரீ என்பது ஒற்றைக் கூட்டெழுத்து.)

உயிர், மெய் ஆகிய இரண்டின் பெருக்கமாய் 12*18 = 216 எழுத்துக்களாய் (அல்லது கிரந்தம் சேர்த்தால் 12*22 = 264 எழுத்துக்களாய்) அமையும் உயிர் மெய்கள் இன்னோர் உட்கொத்து. இவை போக நாலாவது உட்கொத்து தொல்காப்பியரின் படி குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய மூன்று உறுப்பினர் அடங்கியதாகும். ஆனால் இற்றைத் தமிழில் இது ஒரே உறுப்பினர் அடங்கிய உட்கொத்தாய் ஆகிவிட்டது. எல்லா உட்கொத்து உறுப்புகளையும் கூட்டிப் பார்த்தால், தமிழெழுத்து வரிசை மொத்தம் 247 எழுத்துக்கள் (கிரந்தம் சேர்த்தால் 12+22+12*22+1 = 300 எழுத்துக்கள்) கொண்டதாகும். இவற்றின் அடிப்படையில் எந்த ஆவணத்திலும், இயல்பாக ஏதேனும் ஓர்

உயிரெழுத்துத் தோன்றுதற்கான பெருதகை (probability) = 12/247 = 0.048583 (கிரந்தம் சேர்த்தால் 0.04.)
இதே போல பெய்யெழுத்துப் பெருதகை                               = 18/247 = 0.0728745 (0.06)
அகர, ஆகார உயிர்மெய்ப் பெருதகை                                    = 36/247 = 0.145749 (0.12)
இகர, ஈகார உயிர்மெய்ப் பெருதகை                                      = 36/247 = 0.145749 (0.12)
உகர, ஊகார உயிர்மெய்ப் பெருதகை                                    = 36/247 = 0.145749 (0.12)
எகர, ஏகார உயிர்மெய்ப் பெருதகை                                        = 36/247 = 0.145749 (0.12)
ஐகார உயிர்மெய்ப் பெர்தகை                                                     = 18/247 = 0.0728745 (0.06)
ஒகர, ஓகார உயிர்மெய்ப் பெருதகை                                        = 36/247 = 0.145749 (0.12)
ஔகார உயிர்மெய்ப் பெருதகை                                                = 18/247 = 0.0728745(0.06)

இப் பெருதகைகளைக் கணக்கிடும் போது ஓரெழுத்தின் நேர்ச்சி (occurrence) இன்னோர் எழுத்தின் நேர்ச்சியைப் பாதிக்காது என்றும் இரண்டும் ஒன்றிற்கொன்று பந்துறாதவை (independant; பந்தம் = dependency) என்றும் நாம் கருதிக் கொள்ளுகிறோம் (hypothesize). ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் அத்தகைய கருத்து தமிழைப் பொறுத்தவரை உண்மையில்லை தான். எழுத்துக்களின் நேர்ச்சி பல சொற்களில் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் பலவிடத்தும் உணரமுடியும். காட்டாக, பங்து என்ற சொல் தமிழில் அமையவே அமையாது. அது பந்து என்றிருக்கலாம், அல்லது பங்கு என்றிருக்கலாம். ’ங்’ஙும், ’து’வும் எங்கும் சேரமுடியாத எழுத்துக்கள். இது போன்ற கட்டியப் பெருதகைகளைக் (conditional probablities) கணக்கிடுவது இன்றைய நிலையிற் கடினம் என்பதால், மேலே சொல்லும் முடிவு ஒருபக்கச் சாய்வாக இருக்கலாம் எனினும் எழுத்துக்களின் நேர்ச்சி ஒன்றிற்கொன்று பந்துறாதவை என்றே இவ்வாய்வில் கருதிக் கொள்கிறோம்.

இனி இத்தேற்றப் பெருதகையையும் (theoretical probability) மேலே சீனிவாசன் 4 இலக்கம் தமிழெழுத்துக்கள் கொண்ட ஆவணங்களை இறக்கிக் கணக்கெடுத்த இயல் நேர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு புதிய செய்தி விளங்கும். இற்றைத் தமிழில் உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும், அகர, ஆகார உயிர்மெய்களும் (ஆகார உயிர்மெய் நேர்ச்சியைச் சீனிவாசன் எகர, ஏகாரத்தோடு சேர்த்து விட்டார், எனவே குத்து மதிப்பாக 7 அல்லது 8 விழுக்காட்டை நாம் அகர உயிர்மெய் நேர்ச்சியோடு சேர்க்கலாம். அதற்குக் காரணம் இருக்கிறது கீழே பார்ப்போம்.) எதிர்பார்க்கப்படும் பெருதகையைக் (expected probability) காட்டிலும் இருமடங்கு அதிகமாக நேர்ச்சியுறுகின்றன. அதேபொழுது இகர, ஈகாரங்களும் உகர, ஊகாரங்களும் கிட்டத்தட்ட நிரவலாக எதிர்பார்த்த பெருதகையை ஒட்டியே நேர்ச்சி கொள்ளுகின்றன. எகர, ஏகார, ஐகார, ஒகர, ஓகார, ஔகாரங்களும் எதிர்பார்க்கப் பட்ட பெருதகைக்கும் மிகக் குறைவாகவே நேர்ச்சி கொள்கின்றன. [உயிரெழுத்து அதிகம் நேர்ச்சி கொள்ளுவது இக்காலப் பழக்கமாய் இருக்கலாம். பெரும்பாலும் புணர்ச்சி பிரித்து எழுதும் இக்காலக் காரணத்தால் உயிரெழுத்துக்கள் இயல் பெருதகையைக் காட்டிலும் அதிகமாகத் தோற்றங் கொள்ளலாம்.]

விவரித்துச் சொன்னால், தமிழ் அரிச்சுவடியில் 247 அசையெழுத்துக்கள் இருந்தாலும் நாம் நடைமுறையில் 12+18+36 = 66 எழுத்துக்களையே மிக அதிகமாகப் பயன்படுத்துகிறோம். இது ஒரு வியப்பான அவதானிப்பு. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு எந்தத் தமிழாவணத்திலும் இந்த 66 எழுத்துக்களே பயன்கொள்ளுகின்றன. Even though Tamil Script is alpha-syllabary, it uses its alphabets and the akara, aakaara syllables more for articulation compared to other syllables. This is remarkable and it perhaps characterizes the Tamil language. தமிழின் இயல்பு இது தான் போலும். இந்த இயல்பை காலந்தோறும் எழுந்த ஆவணங்களின் வழி ஆய்வு செய்வது பல்வேறு ஆய்வு முடிவுகளை நமக்கு உணர்த்தலாம். அதற்காக மற்ற அசைகளைத் தூக்கியெறிந்து விடலாமா என்றால் இல்லை யென்றே சொல்லவேண்டும். ஓர் தமிழிசை விருந்தில் ”ஆ, அ .......என்று ஆலத்தி (ஆலாபனை) மட்டும் சொல்லிப் போக முடியாதே? நம்மை அறியாமல் மூச்சை நிறுத்தி (மூச்சு நிறுத்தும் இடங்கள் எல்லாம் மெய் வந்தே தீரும்) பின் மாற்றும் போது மற்ற அசைகளைச் சொல்லும் கட்டாயத்திற்கு ஆளாகிறோம் அல்லவா?

மற்ற அசையெழுத்துக்கள் என்ன வகையில் தமிழ் மொழியாளுகையில் பயன்படுகின்றன என்று ஆய்ந்து சொல்லவேண்டும். அதற்குப் பல்வேறு காலகட்டங்களில் உருவாகிய இலக்கியங்களின், ஆவணங்களின் பல்வேறு கைச்சாத்துக்களை (signatures) அடையாளங் காணுவது நலம் பயக்கும்.

அன்புடன்,
இராம.கி.

Monday, June 21, 2010

பெருதகை

கைநிறைய நெல் வைத்திருந்தோம்; திடீரென்று ஏதோ தவறி மண்ணிற் சிதறிவிட்டது. தொலைவில் இருக்கும் மற்றோருக்கு நெல்மணிகள் நம்மிடம் இருந்ததை எப்படி அடையாளம் காட்டுவது? சிதறிய நெல்மணிகளுக்கு அருகில் வந்து, அவற்றைச் சேர்த்து, பெருக்கிக்/பெருவிக் காட்டினாற் தான் நெல் இவ்வளவு இருந்தது என்று யாரும் நம்புவார்கள். To prove is to enlarge the relevant things, to concentrate, to bring them up, or to make it big.

நமக்கு ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விட்டது, நிகழ்வு நடக்கும் போது மற்றோர் இல்லை. அதை எப்படிப் பின்னால் மற்றோருக்கு உணர்த்திக் காட்டுவது? குறிப்பிட்ட நிகழ்வு நடந்ததற்கான சான்றுகளைச் சேர்த்துப் பெருவிக் காட்டினாற் தான் அந்த நிகழ்வு நடந்ததென்று மற்றோர் நம்புவார்கள். To prove is to enlarge the relevant things, to concentrate, to bring them up, or to make it big.

இதே போலக் கணிதத்தில் சில விவரங்களைச் சொல்லி, பின் கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்திச் சிலவற்றை நிறுவச் சொன்னால், அதை எப்படிச் செய்கிறோம்? கொடுத்த விவரங்களில் இருந்து கணிதக் கோட்பாடுகளுக்கிணங்க, பல்வேறு சமன்பாடுகளைத் திரட்டி, ஒன்றிலிருந்து இன்னொன்று எழும் என்று ஏரணங் காட்டிப் பெருகிக் சொல்லும் போது தான் ஏதொன்றையும் நம்மால் நிறுவமுடிகிறது. To prove is to enlarge the relevant things, to concentrate, to bring them up or to make it big.

வாழ்க்கையில் நிறுவுதல் (to establish) என்பது பெருகுதல்/பெருவுதலோடு (to prove) தொடர்புற்றது. சேர்க்கச் சேர்க்க அது பெருவும்/செறியும், பெருவும் பொழுது, செறியும் பொழுது தான் நம் நம்பிக்கை கூடுகிறது. உண்மை எதுவென்று புரியத் தொடங்குகிறது. மெலிந்து ஓரியாய்க் கிடந்தால் யார் நம்புவார்கள். slender proof என்று சொல்லிப் போய்விடுவார்கள். பெருவுதலுக்கும் slender -க்குமான முரணைப் பார்த்தீர்களா?

இந்தக் காலத் தமிழில் நிறுவுதல் என்ற ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டே to establish, to prove என்று பலவினைகளுக்கும் பொருத்தி ஒப்பேற்றிவிடுகிறோம். என்னைக் கேட்டால் நடைமுறையில் நிறுவுதல், பெருவுதல்/பருவுதல் என்ற இரு சொற்களையும் இதற்கு இணையாய் வைத்துக் கொள்வது அதிகப் பயனைத் தரும். ஏனென்றால் to prove என்பதோடு proof, provability, probability போன்றவை தொடர்புடையவை. எவ்வளவு முயன்றாலும் நிறுவம், நிறுவுமை போன்றவற்றின் பொருட்பாடுகளை proof, provability போன்றவற்றிற்கு நீட்டுவது கடினம்.

probability என்ற சொல்லிற்கு நிகழ்தகை, நிகழ்தகவு என்ற சொல் புழங்கிப் பார்த்திருக்கிறேன். ”இது நிகழும், நிகழாதுபோகும்; நிகழ்வதற்கு இத்தனை வாய்ப்புக்கள் உள்ளன” என்ற கருத்தை உள்ளடக்கியது ”நிகழ்தகை” என்ற சொல்லாகும். ஆனால் அந்தச் சொல் இன்னும் புழக்கத்தில் வரச் சரவற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சொல்லின் ஊடே ழகரமும், தகரமும் அடுத்தடுத்து வரும்பொழுது புணர்ச்சியின் காரணமாய் அவற்றை ட-கரமாக மாற்றவேண்டும். இருந்தாலும் (நிகடகை என்பது சொல்லுதற்கு எளிதில்லை என்பதாலும்) புணர்ச்சி பழகாது பலரும் நிகழ்தகை என்றே எழுதுகிறார்கள். அதோடு, நிகழ்தகை என்ற சொல் probablity க்கும் to prove க்கும் உள்ள உறவை காட்டாது இருக்கிறது.

If inifinite attempts are made, any probability is almost provable. Probability is potential provability. Provability and probability are related through just a change of v to b. என்னைக் கேட்டால் அடிப்படைப் பொருள் வழுவாமல் தமிழில் இணைச்சொற்களை உருவாக்க முடியும். அவை, .

பெருவுதல்/பருவுதல் = to prove
பெருவு/பருவு = proof
பெருவுமை/பருவுமை = provability
பெருதகை/பருதகை = probability, probable, probabilistic
பெருதகையாக/பருதகையாக = probably

அன்புடன்,
இராம.கி.

Tuesday, June 08, 2010

தமிழி உயிர்மெய்களின் அடவு

தமிழியில் உள்ள இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை மாற்றி அவற்றை கிரந்தக் குறியீட்டோடு நிறுவுவதற்குத் தமிழெழுத்துச் சிதைப்பாளர் இப்போது பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார். அதுவும் செம்மொழி மாநாடு இன்னும் 15 நாட்களில் வரப்போகிறதா? வயிற்றில் நெருப்புக் கட்டியதுபோல் சிலருக்கு இருப்புக் கொள்ளவில்லை ”இருக்கும் நாட்களுள் ஏதேனுங் குழப்பஞ்செய்து தமிழக அரசாணையைப் பெற்றுவிட மாட்டோமா?” என்று குட்டிக்கரணம் போடுகிறார். இன்னுஞ்சிலர் “கொம்புகளின் குதர்க்கம்” என உளறுகிறார். மொத்தத்தில் ”அவர்சொன்னார், இவர்சொன்னார்” என மேலோடக் கூறி, அரசியலாரோடு கூடிக் குலவி, உண்மைத் திராவிட ஆர்வலரையும் ”பெரியார் பெயர் சொல்லி” ஏமாற்றி, எல்லோருக்கும் எல்லாமுமாய் கவடம் பேசிக் கருமமே கண்ணாய்ச் சிதைப்புவேலை செய்கிறார். திராவிடச் சிந்தனையாளர் தெரிந்தோ, தெரியாமலோ, எழுத்துச் ”சீர்திருத்தம்” பேசுவதும் இச்சிதைப்பு வேலைக்கே கொண்டுபோய்ச் சேர்க்கும். எல்லா எழுத்தும் ”கணியில் இரண்டு பொத்தான் அடிப்பு” என வந்தபிறகு இனிமேல் எவ்வெழுத்துச் சீர்திருத்திற்கும் பொருளில்லை என்பது ஆழமாய்ச் சிந்திப்போருக்குப் புரியும்.

தமிழெழுத்துச் சிதைப்பாளர் தமிழுக்குமட்டும் உலைவைக்காது, கூடவே தமிங்கிலம் எனும் குறைப்பிள்ளையையும் பிறப்பித்தெடுக்க எழுத்துநடை போடுகிறார். தமிங்கில மொழியை எழுத்தில் கொண்டுவர 31 அடிப்படை எழுத்துக்கள் பற்றாது; 51 இருந்தாற்றான் எழுதமுடியும். (இணையத்தில் ஏராளமான தமிழ் இளைஞர் தம் அறியாமையிலும், சோம்பலிலும், ஒயிலாய் ஆடுவதாய் எண்ணிக்கொண்டும் உரோமனெழுத்தில் தமிழெழுத முற்படுவது இன்னொரு சோகம். இவருக்கும் 31 எழுத்துக்கள் பற்றா. இவர் முயற்சிகளும் தமிங்கிலத்தில் தான் கொண்டுசேர்க்கும்.) எனவே கிரந்த எழுத்துக்களை நுழைப்பதிலும் சிதைப்பாளர் மிகுவிருப்புக் கொள்கிறார். ஒருபக்கம் தமிழ் எழுத்துக்களைச் சிதைத்து, இன்னொருபக்கம் தமிங்கிலத்திற்குத் தேவையான எழுத்துக்களை நுழைக்க வழி பார்க்கிறார்.

உண்மையில் தமிழை எழுத இற்றைத் தமிழியிலிருக்கும் எழுத்துக்களே போதும். தேவையானால் ஏற்கனவேயுள்ள 5 கிரந்த எழுத்துக்களைக் கொண்டு பிறமொழி ஒலிகளைக் கொண்டுவரலாம். தமிழெழுத்துப் பாதுகாப்பாளரைப் ”பண்டிதர்” எனக் கேலிசெய்து, தமிழ்ப் புலவரை வேண்டாப்பிறவிகள் எனுமாப் போல ஒதுக்கி, ஒரு பண்பாட்டு ஒழிப்பே நடந்துகொண்டிருக்கிறது. வேடிக்கை பார்ப்போரும், சிதைப்பாளர் செய்வது நம் அடிமடியில் கைவைக்கும் செய்கை, கொஞ்சநஞ்சம் உள்ளதை உருவி நம்மை அம்மணமாக்கி இச்சிதைப்பாளர் ஓடப் பார்க்கிறார்” என்பதை அறியாமல் ”இன்னொருவருக்கு வந்தது போல்” வாளா இருக்கிறார்.

நடுவில் நிற்கும் பலருக்கும் ”தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள் எப்படி எழுந்தன? அவற்றின் அடவு (design) எது?” என்ற பின்புலம் தெரியாமல் சிதைப்பாளர் முயற்சிகளுக்கு அரைகுறையாகத் தலையாட்டும் போக்கும் தென்படுகிறது. அறியாதாராய்ப் பொதுமக்கள் உள்ளதே ஏமாற்றின் அடிமானம் ஆகிறது. (பல தமிழசிரியருங்கூட ஏற்கனவே நடந்த திராவிட வழிகாட்டுதலில் மயங்கி எழுத்துச்சிதைப்பைச் சீர்திருத்தமென எண்ணித் தடுமாறுகிறார்.)

இக்கட்டுரையின் குறிக்கோள் 2700 ஆண்டுகளாய் இங்கு மாறாது இருக்கும் தமிழி உயிர்மெய்களின் அடவை விளக்கிச் சொல்வதாகும்.

பழங்கல்வெட்டுக்கள், நடுகற்கள், ஓட்டுச் சில்லுகள் ஆகியவற்றை ஆராய்ந்த தொல்லியலாளர், ”இந்தியத் துணைக்கண்டத்தில் சிந்து சமவெளி காலத்திற்கு அப்புறம் எழுந்த எழுத்துக்களில் ஆகப் பழையவை தமிழ்நாட்டிலும், இலங்கை அநுராதபுரத்திலும் தான் கிடைத்திருக்கின்றன” என்று கொஞ்சங் கொஞ்சமாய் ஏற்றுக் கொள்கிறார். தமிழ் நாட்டில் (கரூருக்கருகில் கொடுமணத்திலும், தேனி மாவட்டத்திலும்) கிடைத்த தமிழிப் பொறிப்புகள் தாம் இதுவரை இந்தியாவிற் கண்ட பொறிப்புக்களில் ஆகப் பழையனவாகும். கி,மு,4/5 ஆம் நூற்றாண்டு என்றே இவற்றின் காலம் சொல்லப்படுகின்றது. இலங்கையில் கிடைத்த பொறிப்பும் தமிழிக்கு இணையாகவே தெரிகிறது.

70, 80 ஆண்டுகளுக்குமுன் இதுபோல் பொறிப்புக்களை ”அசோகன் பெருமி” எனவழைத்தார். இப்பொழுது அசோகன் காலத்திற்கும் முன் கி.மு 4/5 ஆம் நூற்றாண்டுப் பொறிப்புக்களும் கிடைப்பதால் ”அசோகன் பெருமி எனச் சொல்வது பொருளற்றது” என்ற முடிவிற்குப் பெரும்பாலான தொல்லியலார் வந்துவிட்டார். உண்மையாகப் பார்த்தால், இலங்கையிற் கிடைத்தது பாகத மொழியின் பெருமிப் பொறிப்பு என்றும், தமிழகத்திற் கிடைத்தது தமிழிற் கிடைத்த தமிழிப் பொறிப்பு என்பதுமே சரியாகும்..

தமிழர் பலருங்கூடத் ”தமிழி” என்று பெருமிதத்தோடு, முற்கால எழுத்தைச் சொல்ல ஏன் தயங்குகிறாரென்று புரிவதில்லை. அதை ”அசோகன் வழிப்பட்ட பெருமி”, ”தமிழ்ப் பெருமி” என்று “ஊராருக்கு வந்த செய்தியாய்” ஒட்டுதல் இன்றிச் சொல்வது வியப்பாகிறது. இத்தனைக்கும் ”தமிழியில் இருந்து தான் பெருமி கிளைத்திருக்க வேண்டும், பெருமியிலிருந்து தமிழி கிளைத்திருக்க முடியாது” என வாதிக்க நிறையக் காரணங்களுண்டு.  [அக்காரணங்களை எடுத்துரைக்க இக்கட்டுரை களனில்லை. எனவே அவற்றைத் தவிர்க்கிறேன்.] தமிழி எழுத்துப்பொறிப்பு பரவலாக (அரசகட்டளைப் பொறிப்பாக மட்டுமன்றி அன்றாடப் பொதுமக்களும், வினைஞரும், வணிகரும் பயன்படுத்தக் கூடிய அளவுக்குப் பரவலாக) இருந்திருக்கிறது அதாவது, தமிழரிடையே படிப்பறிவு பரவலாய் கி.மு.5/4 ஆம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கலாம்.

இனி உயிர்மெய் அடவுகளைப் பார்ப்போம். முதலில் உயிருக்கும் மெய்க்குமே எழுத்துக்கள் அமைந்தன போலும். (உயிரெழுத்து அடவுகள்  எல்லாம் தனித் தனியே கிளைக்கவில்லை. அவை அ, இ, உ என்ற சுட்டெழுத்து வடிவுகளில் இருந்தே கிளைத்தன. மெய்யெழுத்து அடவுகளும்  க், ட், த், ப், ந், ய்,ர், ல், வ்  எனும் 9 மெய் வடிவுகளிலிருந்தே 18 ஆய்க் கிளைத்ததாய்த் தோற்றும். இவ் விளக்கத்தை வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.)   உயிர்மெய்களுக்கு அடையாளமாய், அடிப்படை மெய்யெழுத்தை ஒரு சதுரமாகக் கருதி, அதில் 2 தீற்றுக்களை (strokes) வெவ்வேறு திசைகளில் அமைப்பார். [இதன் விளக்கம் படம் 1 ஐக் கொண்டு அறிக. வெறுஞ் சதுரம் கொண்டு 2 வரிசைகளும், ககரங் கொண்டு 2 வரிசைகளும் இங்கு அடையாளங் காட்டப்படுகின்றன.]



இங்கு சதுரம், மெய்யெழுத்தையும், சிலபோது அகரமேறிய உயிர்மெய்யையும் குறிக்கிறது. [மெய்க்குப் பகரமாய்  சதுரம் பயன்படுத்துகிறேன்.] அதாவது மெய்யெழுத்திற்கும், அகரமேறிய உயிர் மெய்க்கும் வேறுபாடு தெரியாது குறித்துள்ளார். இதேபோல் ஒரு தீற்று சதுரத்தின் பக்கத்திற் கிளம்பி கிழக்கே நீண்டிருந்தால் அது அகரமேறிய உயிர்மெய்யையோ, ஆகாரம் ஏறிய உயிர்மெய்யையோ குறித்துள்ளது. இருவேறுபட்ட அடையாளங்கள் (அகரம், ஆகாரம்) ஒரே குறியீட்டிற்கு நெடுநாட்கள் இருந்தன. அதாவது க், க, கா என்ற எழுத்துப் பொறிப்புக்களில் (இதுபோல் 18 முப்படை எழுத்துப் பொறிப்புக்களில்) ஏதேனும் 2 பொறிப்புக்கள் ஒன்றுபோலவே காட்சியளித்தன. [அல்லது ஒரே பொறிப்பிற்கு 2 எழுத்தடையாளங்கள் இருந்தன.] 3 எழுத்துகளுக்கும் 3 குழப்பம் இலாப் பொறிப்புக்கள் எழுத்துக்களின் தொடக்கத்திலில்லை.

ஆனாலும், தமிழ்மொழிக்கு மட்டுமே தமிழியைக் கையாண்ட காலத்தில் இச் சிக்கல் பெரிதாகத் தெரியவில்லை. ஏறத்தாழ, (தொல்காப்பியக் காலமான) கி.மு.700 களிலிருந்து கி.பி.100 கள் வரை, சமகாலத்தில் இத்தடுமாற்றம் உணரப்படவில்லை. ஏனெனில் தமிழ் மொழியின் மெய்ம்மயக்கங்கள் தமிழ் பேசுவோர்க்குத் தெரிந்தன. எனவே, எழுத்துக் குறைபாடு புலப்படவில்லை.

தமிழ்ப் பயன்பாட்டில் சில விதப்பான வழக்குகள் உண்டு. ’க’ உயிர்மெய் வந்தால், அதன்முன் ’ங்’ மெய்யெழுத்துத் தான் வரமுடியும், ”ஞ், ந்” மெய்கள் வராது. அதேபோல க - விற்கு முன் ’ங’ உயிர்மெய்யாக வரமுடியாது. இது போல் எழுத்தொழுங்குகள் தமிழ்பேசியோருக்கு நன்றாகவே தெரிந்திருந்தன. அடுத்தடுத்து “கக” தமிழில் வராது, முன்வருவது க் என்றும் பின் வருவது க என்றே அமையும். இதுபோல வெவ்வேறு எழுத்தமைதிகள், எவ்வெழுத்து  சொல்முதலில் வரும், எது சொல்கடையில் வரும், எது உயிர்மெய் அகரம், எது மெய்யெழுத்து என்று சொல்லமைப்பை வைத்தே, பெரும்பாலும் தமிழரால் சொல்ல முடிந்தது. மொத்தத்தில் தமிழி எழுத்து, தமிழை மட்டுமே எழுதப் பயன்பட்ட காலத்தில் தொடக்க எழுத்துக் குறையை உணரவிடாது மொழி அணி செய்து போக்கியது. The Tamizh language effectively camouflaged the inherent defect in the initial Tamizhi script. There was no realization of the problem at the start.

கி.மு.600 க்கப்புறம், கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழகத்திற்கும் மகதத்திற்கும் இடையே பொருளியல், அரசியல், மெய்யியல் எனப் பல்வேறு துறைகளில் உறவாடல்கள் கூடிப்போயின. வடக்கிருந்து வேதநெறியும், செயினமும், புத்தமும், தெற்கிருந்து உலகாய்தம், சாங்கியம், அற்றுவிகம் (ஆசீவகம்) போன்றவையும் ஒன்றோடொன்று உறவாடத் தொடங்கின. மொழிகளும் ஒன்றிற்குள் ஒன்று ஊடுறுவத் தொடங்கின. அதுகாறும் எழுதத் தயங்கிய வடபுலத்தார், தென்புலத்திலிருந்து ஏற்பட்ட தாக்கத்தால் தமிழி எழுத்தைத் தங்களுக்கேற்பப் பயன்படுத்தத் தொடங்கினர். வடபால் மொழிகளான எழுதாக் கிளவிகள் சிறிதுசிறிதாய் எழுதுங்கிளவிகளாய் மாறத்தொடங்கின. தமிழ் கி.மு.700 இல் இருந்தே எழுதுங்கிளவியாய் இருந்தது. பாகதம் கி.மு.400/300 இல் தான் எழுதுங்கிளவியாயிற்று. பாலி அதற்குப்பின்னரே, எழுத்துநிலைக்கு வந்தது. சங்கதம் கி.பி.150 இல்தான் எழுதுங்கிளவியாயிற்று. இற்றைப் புரிதலின் படி இந்தியத் துணைக்கண்டத்தில் முதலில் எழுதத்தொடங்கிய மொழி தமிழே. இக்கணிப்பில் சிந்துசமவெளி மொழியைக் கணக்கிற் சேர்க்க வில்லை. அது இற்றைக் காலத்தும் படித்து அறியப்படாததாகவே உள்ளது.]

தமிழி எழுத்தைப் பாகத மொழிக்கும், பாகதங் கலந்த தமிழ்மொழிக்கும் பயன்படுத்தத் தொடங்கியபோதே, முன்சொன்ன க், க, கா எழுத்துக்களின் பொறிப்புத்தோற்றக் குறை பெரிதாகக் காட்சியளித்தது. தமிழ் போலல்லாது பாகதச்சொற்களுள் எவ்வெழுத்தும் தொடங்கலாம், எதுவும் முடியலாம், தமிழ் போல் மெய்ம்மயக்கங்கள் பாகதத்தில் கிடையா. ஒரு மெய்யெழுத்தின் பின் அதற்கினமான வல்லின உயிர்மெயே பலபோதுகளில் வருமெனும் ஒழுங்கு அம்மொழியிற் கிடையாது. ம் எனும் மெய்க்குப்பின் ”க” உயிர்மெய் வரலாம். தமிழில் வரமுடியாது. இவைபோலச் சொல்லமைப்பினுள் வரும் எழுத்துக் கூட்டமைப்புக்கள் பாகதத்திற்கும் தமிழுக்கும் வேறுபட்டன. எனவே மெய், அகரமேறிய உயிர்மெய், ஆகாரமேறிய உயிர்மெய் ஆகிய மூன்றிடையே தெளிந்த வேறுபாடு காட்டுவது பொறிப்பில் தேவையாயிற்று. இதற்கு எழுந்த தீர்வுகள் மூன்றாகும்.

ஒன்று பட்டிப்புரோலு தீர்வு. இத்தீர்வில் (எந்தத் தீற்றும் சேராத) வெறுஞ் சதுரமே மெய்யெனக் கொள்ளப்பட்டது. சதுரத்திலிருந்து கிளம்பிக் கிழக்கே ஒரு தீற்றுக் கொண்ட சதுரம் அகரமேறிய உயிர்மெய்யானது. அடுத்து, ஆகாரத்தைக் குறிக்க முதல்தீற்றை ஒடித்துக் கீழ்நோக்கிய கோணமாக்கி நீட்டியபடி [உடனுள்ள படம் -2 இல் கண்டபடி] பட்டிப்புரோலுக் கல்வெட்டில் எழுதியிருக்கிறார். [கிழக்கே நீண்ட 2 தீற்றுக்கள் கொண்ட சதுரத்தை ஆகாரம் ஆக்கியிருக்கலாம். ஏனோ, அப்படிச் செய்யவில்லை.] பட்டிப்புரோலு முயற்சி மட்டும் பழந்தமிழகத்தில் ஒருவேளை பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டு இருந்தால், புள்ளிக் கருத்தீடே நம் மெய்யெழுத்துகளுக்கு ஏற்பட்டிருக்காது.



2 ஆம் தீர்வு வடக்கே ஏற்பட்டது. இதன்படி ஒரு சதுரத்தின் கீழ் இன்னொன்று இருந்தால் மேற்சதுரம் மெய்யாகவும் கீழ்ச்சதுரம் உயிர்மெய்யாகவும் படிக்கப் பட்டது. [காண்க. படம் 2.] இரு ககரங்களைக் குறிக்க 2 சதுரங்கள் ஒன்றின் கீழ் இன்னொன்றாய் உள்ளதெனக் கொள்வோம். இரு சதுரக் கட்டைக்கு மேலே கிழக்கில் ஒரு தீற்றிடாவிட்டால் இதை ”க்க” என்றும், ஒரு தீற்றிட்டால் ’க்கா” என்றும் படிக்கவேண்டும். தமிழிலுள்ளதுபோல் மெய்ம்மயக்கம் பாகதத்தில் கிடையாதென்பதால் மேல்வரும் மெய்யோடு வேறெந்த   உயிர்மெய்யும் கீழே சேரலாம். ”க்க” மட்டுமல்லாது “ச்க, ட்க, த்க, ப்க, ம்க.....” என்று பல்வேறு ஒலிக் கூட்டுக்கள் கூடப் பாகதத்தில் பயிலலாம். தமிழில் ஒருசில கூட்டுக்கள் மட்டுமே வரலாம்.

வடக்கேற்பட்ட இந்த 2 ஆம் தீர்வும் சரியான தீர்வுதான். 2000 ஆண்டுகளுக்கும் முன் ஏற்பட்டஇத்தீர்வை ஒழுங்கான முறையிற் புரிந்துகொள்ளாது 1980 களில் ISCII உருவாக்கிய CDAC அறிஞரும், பின் அதிலிருந்து Unicode உருவாக்கிய ஒருங்குறிச் சேர்த்திய (unicode consortium) அறிஞரும் தவறான முறையில் abugida என்கிற ஆகாசக்கோட்டையைக் கட்டிவிட்டார். தொல்லியல், கல்வெட்டியல், எழுத்தியல் பற்றிய பழஞ்செய்திகளைத் தெரியாது எழுப்பிய தேற்றமே இந்த abugida தேற்றமாகும். (இந்த அபுகிடாத் தேற்றை இந்தியத் துணைக்கண்டம் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய எழுத்துக்களுக்கும் நீட்டிவிட்டார்.) எப்படி புவிநடுவம் எனும் தேற்றம் தவறோ ( ஓரளவுக்கு அது ஒழுங்கே கணக்கிடும் எனினும்), அதுபோல அகரமேறிய உயிர்மெய்யே வடபுலத்து மொழிகளுக்கு அடிப்படை என்பதும் தவறானதேற்றமே. எப்படிச் சூரிய நடுவத்தேற்றம் முற்றிலும் சரியோ, அதுபோல் மெய்களே வடபுல மொழிகளுக்கும் அடிப்படை என்பது முற்றிலுஞ்சரி. (அகரமேறிய மெய் அடிப்படை என்று தமிழின் எந்த இலக்கணமும் கூறவில்லை. பாணினியும் அப்படிக்கூறியது போல் தெரிய வில்லை. இது 20 ஆம் நூற்றாண்டுத் திரிவுக் கற்பனை.) இரண்டாம் தீர்வை ஒழுங்காகப் புரிந்துகொள்ளாத ஒருங்குறிச் சேர்த்தியம் மீண்டும் மீண்டும் முட்டுச் சந்திற்றான் போய் நிற்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழை ஒழுங்காய் அறியாது தமிழ்க்கணிமைக்குள் (tamil computing) இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞரும் அபுகிடாக் கூத்தை நம்பித் தமிழைச் சங்கதம் போல் இயக்கிக் கொண்டிருப்பது தான்.

[இங்கே ஓர் இடைவிலகல். வடபுல மொழி எழுத்துக்கள் இப்படி அடுக்குக் கிறுவத் தோற்றத்தைக் (appearance of a stacked orthography) காட்டியதால் அச்சுக் காலத்தில் சிக்கலை ஏற்படுத்தின. சில விதப்பான கூட்டுகளில் ஒன்றின்கீழ் இன்னொன்று என 4.5 மெய்யெழுத்துக் கூட அடியில் ஒரு உயிர்மெய்யோடு வடமொழி ஆவணங்களில் தொங்கும். ஒரு word ஆவணத்தில் முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையே ”இரட்டை வெளிப்பு (double spacing)” விட்டு உருவாக்கவேண்டுமென வையுங்கள். தமிழி போன்ற இழுனை எழுத்தில் (linear script- அதாவது ஓரெழுத்து, அடுத்தெழுத்து என நூல்பிடித்தாற் போல் இழுனையாய்ச் செல்லும் script என்பது, linear script ஆகும்) எந்தச்சிக்கலும் எழாது.

இரு பரிமானத்தில் அங்கங்கே முடிச்சுவிழுந்தாற்போல் எழுத்துக்கள் தொங்கும் (தேவநாகரி போன்ற) அடுக்கெழுத்தில் word ஆவணங்களை செய்வது கூட்டெழுத்துக்களின் காரணத்தால் சிக்கலானது. இதற்காகவே புதிதாய் அரைமெய்களை (half consonants) உருவாக்கினார். காட்டாக “மன்னை எக்ஸ்பிரஸ்” எனத் தென்னக இருவுள்வாய்த் (southern railways) தொடரியின் பெயரைத் தேவகநகரியில் எழுதும்போது  20 ஆண்டுகளுக்குமுன், ன்னை - யைக் குறிக்க, இரு னகரங்கள் ஒன்றின்கீழ் இன்னொன்று தொங்க, இரண்டும் சேர்த்தாற்போல் ஐகாரக்கொம்பை இழுத்துக் காட்டுவார். இதேபடிதான் ”க்ஸ்” என்பது ஒன்றின்கீழ் இன்னொன்றாய்க் காட்டப்படும். இன்றோ ’ன்’ என்பதற்கு ஓர் அரைமெய்யும், ’க்’ இற்கு ஓர் அரைமெய்யும் கொண்டு எல்லாவற்றையும் இழுனை எழுத்தாகவே காட்டி முன்னிருந்த முடிச்சுகளைத் தவிர்ப்பார். இந்தி ஆவணம் தமிழ் ஆவணம் போல் இன்று இழுனையாய் மாறிவிடும். ஆக நகரியின் ஒவ்வொரு மெய்க்கும் ஓர் அரைமெய்யை உருவாகியுள்ளார். இது ஒரு தீர்வெனினும் மூக்கைச் சுற்றிவளைக்கும் தீர்வு என்பதை அறியுங்கள். ஒரு புள்ளி எல்லாவற்றையும் தீர்த்திருக்கும். நான் சொல்வது புரிகிறதா?]

மூன்றாவது தீர்வு தென்புலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட தீர்வு. இதன்படி, இன்னொரு குறியீடாக மாத்திரை குறைக்கும் புள்ளி உருவாக்கப் பட்டது. சதுரத்தின்மேல் புள்ளியிட்டால் அரைமாத்திரை குறைக்கப்பட்டு மெய்யானது. புள்ளியிடா வெறுஞ்சதுரம் அகரமேறிய உயிர்மெய்யானது. கிழக்குப் பக்கம் எழும்பிய, ஒரு தீற்றுக் கொண்ட சதுரம், ஆகாரமேறிய உயிர்மெய்யைக் குறித்தது. மூன்றாவது தீர்வு முற்றுமுழுதாகத் தொல்காப்பியத்திற் சொல்லப் பட்ட தீர்வு. இதுதான் தமிழ்த் தீர்வு. [காண்க. படம் 2.]

இந்த 3 தீர்வுகளும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் எழுந்த தீர்வுகளாய் இருக்க வேண்டும். ஒன்று முந்தியது, இன்னொன்று பின்பட்டது என்று சொன்னால் 3 தீர்வுகள் எழுந்திருக்கா. தீர்வு கண்டுபிடிக்கப் பட்ட சிக்கலுக்கு மீண்டுந் தீர்வு காண எந்தப் பகுத்தறியும் மாந்தனும் முற்படமாட்டான் என்பதால், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 3 தீர்வுகள் சமகாலத்தில் எழுந்திருக்கவேண்டும் என்றே முடிவுசெய்ய வேண்டியுள்ளது.

அடிப்படை அடவில் ஒரு சதுரத்தின் 4 பக்கங்களிலும் ஒன்றோ, இரண்டோ தீற்றுகளைக் சேர்க்கமுடியுமெனில் மொத்தம் 8 அடவுகள் அமையும், இதோடு வெறும் சதுரத்தைச் சேர்க்கும்போது 9 அடவுகள் கிடைக்கும். புள்ளி ஒட்டிய சதுரம் மெய்யென்றும், எதுவுமேயில்லாச் சதுரம் அகரமேறிய உயிர்மெய் எனவும், ஒருதீற்றைக் கிழக்கில்கொண்ட சதுரம் ஆகாரத்தைக் குறித்தது என்றும் சொன்னேன். கிழக்கே 2 தீற்றுக்கள்கொண்ட சதுரம் முன்சொன்னது போல் எதற்குமே பயன்படாது போனது. ஆகார உயிர்மெய்க்காக, சதுரத்தின் கிழக்கிலிருந்து வெளிப்பட்ட தீற்று வட்டெழுத்தானபோது அது காலானது. வடபுல எழுத்துக்களில் இன்றுமது அடிப்படையெழுத்தில் இருந்து பிரியாது ஒட்டிக்கொண்டுள்ளது. தமிழி எழுத்து வட்டெழுத்தாகிப் பின் வீச்செழுத்தாகிப் பின் அச்செழுத்துக்காக அறவட்டாகப் பிரிக்கப்பட்டுக் காலானது.

இனி, மற்ற உயிர்மெய்களுக்குப் போவோம்.

ஒரு தீற்று சதுரத்தின் மேலே கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது இகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் மேற்கிளம்பி வடக்கே நீண்டிருக்குமானால் அது ஈகார உயிர்மெய் ஆனது. சதுரத்தின் மேலிருந்து வடக்குநோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும், வீச்செழுத்தும் எழுந்த வகையாற் திசைமாறிக் கொக்கியாகவும், சுழிக்கொக்கியாகவும் மாறின. ஆனாலும் இன்றுவரை (2700 ஆண்டுகளுக்கு அப்புறமும்) அவை வடக்கு நோக்கிப் புறப்பட்டுப் பின் திரும்பியே உருமாறுகின்றன. (நம் எழுத்துக்களைக் கூர்ந்து கவனியுங்கள்.)

ஒரு தீற்று சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது உகர உயிர்மெய் எனப்பட்டது. இரு தீற்றுக்கள் சதுரத்தின் கீழிருந்து கிளம்பி தெற்கே நீண்டிருக்குமானால் அது ஊகார உயிர்மெய் எனப்பட்டது. சதுரத்தின் கீழிருந்து தெற்குநோக்கிப் புறப்பட்ட தீற்றுக்கள் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் திசைமாறி இன்று சுற்று (கு - வில் வருவது), விழுது (ஙு - வில் வருவது), இருக்கை (நு - வில் வருவது), கூட்டு (கூ-வில் வருவது), சுழிச்சுற்று (பூ -வில் வருவது), இருக்கைக்கால் (நூ -வில் வருவது), கொண்டை (மூ -வில் வருவது) ஆகிய குறிகளாக மாறியிருக்கின்றன. ஆனாலும் இந்த 7 குறிகளும் கீழிருந்துதான் புறப்படுகின்றன. தெற்கிற்பிறந்த தீற்றுக்கள் எனும் குறிப்பு 2700 ஆண்டுகள் ஆனபிறகும் மங்காதிருக்கிறது. [இன்றைக்கு எழுத்துச் சிதைப்பாளர்கள் உகர, ஊகாரத்திற்குக் காட்டும் குறியீடோ, எழுத்தின் பக்க வாட்டில் கிளம்பி கிழக்கேயோ, அன்றேல் திசைதிரும்பித் தெற்கே வந்தாற் போலோ, அமைகின்றன. பழைய உகரங்களின் அடிப்படைத் தீற்றுக்களை, அடிப்படை அடவை, இம்மாற்றத்தால் இவர்கள் காற்றில் பறக்க விடுகிறார். இற்றைய உகர, ஊகார உயிர்மெய்கள் பார்ப்பதற்குத் தான் ஏழு உகர/ஊகாரக் குறியீடுகளாய்த் தெரியும். அடிப்படையில் அவற்றினுள் பழைய அடவுக் கொள்கை இன்னும் காப்பாற்றப் படுகிறது. இது புரியாதவரே உகர, ஊகாரச் சீர்திருத்தம் போவார்.]

ஒரு தீற்று சதுரத்தின் பக்கம்கிளம்பி மேற்கே நீண்டிருக்குமானால் அவை எகர/ஏகார உயிர்மெய்களாகும். எகரம், ஏகாரத்தை வேறுபடுத்த சதுர மேற்பக்கத்திற் புள்ளிக் குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்குப் பக்கத்திற் தீற்றும் இருந்தால் அது எகரம். மேலே புள்ளியில்லாது, மேற்குப் பக்கம் தீற்று இருந்தால் அது ஏகாரம். மேற்குநோக்கிய ஒற்றைத் தீற்று வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் திசைமாறி இன்று கொம்பாகி விட்டது. அது கொம்பாக மாறியது முற்றிலும் இயற்கை வளர்ச்சியே. மேற்கே தீற்று இருந்ததை இன்றுவரை அது நமக்கு எடுத்துரைக்கிறது.

பொதுவாகத் தீற்றுக்கள் நாலுதிசையிலும் எழுந்தன. வெறுமே கிழக்குப் பக்கம் மட்டும் அவை எழவில்லை. இந்த அடிப்படை உண்மைஅறியாத அரைகுறைச் சீரழிப்பாளர் ”கொம்புகளின் குதர்க்கம்” என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார். ”ஆடத்தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம்” - இது பழமொழி. பழந்தமிழ் உயிர்மெய்களின் அடவை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாதவரே ”கொம்புகளின் குதர்க்கம்” என வீண்குதர்க்கம் பேசுகிறார். குதர்க்கம் கொம்புகளிடம் இல்லை.  சிதைப்பாளரிடமே உள்ளது. ஒற்றைக் கொம்புகளுக்கும் வீரமாமுனிவர்க்கும் எத்தொடர்புமில்லை. சிதைப்பாளரிற்சிலர் ஏன் வீரமாமுனிவரைக் குதறுகிறார் என விளங்குவதில்லை. வீரமாமுனிவர் பங்களிப்பைக் கீழே காண்போம்.

இரு தீற்றுக்கள் சதுரத்தின் பக்கத்திலிருந்து கிளம்பி மேற்கே நீண்டிருக்கு மானால்  அது ஐகார உயிர்மெய். இன்றுங் கூட ஐகாரக்கொம்பு இரட்டைக் கொம்பாகவே மலையாளத்தில் எழுதப்படும். வீச்செழுத்தில் இருந்து தமிழ் அச்செழுத்து உருவாக்கியவர் இரட்டைக்கொம்பைப் பிரித்து எழுதாமல் அப்படியே சேர்த்து எழுதியபடி வைத்துக் கொண்டார். இதெல்லாம் ஒரு 350 ஆண்டுப் பழக்கம்.

இப்பொழுது சதுரத்தின் 4 பக்கங்களிலும் 2 தீற்றுக்கள் வரை போட்டுப் பார்த்தாயிற்று. [அதிலும் கிழக்கே 2 தீற்றுக்கள் கொண்ட அடவு கடைசிவரைப் பயன்படாமலே போனது. மொத்தம் 8 அடவுகளில் 7 அடவுகளே தமிழிப் பொறிப்புகளுக்குப் பயன்பட்டன. இனி ஒரு தீற்று ஒருதிசையிலும் இன்னொரு தீற்று இன்னொரு திசையிலுமாக ஆகக் கூடிய அடவுகள் 6 ஆகும்.

கிழக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
கிழக்கு/வடக்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/மேற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
வடக்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்றுக்கள் உள்ள அடவு
மேற்கு/தெற்கு ஆகியவற்றில் நீளும் தீற்ருக்கள் உள்ள அடவு

இந்த 6 அடவுகளில் முதல் அடவையே ஒகர/ஓகார உயிர்மெய் குறிக்கப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கிறார். ஒகரம், ஓகாரத்தை வேறு படுத்தச் சதுரத்தின் மேற்பக்கத்திற் புள்ளிக்குறியீடு பயன்படும். மேற்பக்கத்திற் புள்ளியும் மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஒகரம். மேலே புள்ளியில்லாது, மேற்கு/கிழக்குப் பக்கங்களில் ஒவ்வொரு தீற்றும் இருந்தால் அது ஓகாரம். பின்னால் வட்டெழுத்தும் வீச்செழுத்தும் எழுந்தவகையாற் மேற்குப்பக்கத்துத் தீற்று திசைமாறி இன்று கொம்பாகவும், கிழக்குப்பக்கத் தீற்று திசைமாறிக் காலாகவும் உருப்பெற்றுள்ளன. இந்த உருமாற்றங்களிலும் ஓர் ஒழுங்குள்ளது. கொம்பு வந்தாலே அது மேற்கே யிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், வெறுங்கால் வந்தாலே அது கிழக்கேயிட்ட தீற்றின் மறுவுரு என்பதும், விளங்கும். மேலே எடுத்துரைத்த ஆறு இருபக்க தீற்றுக்கள் உள்ள அடவுகளில் மீந்திருக்கும் ஐந்தும் பயன்படாமலே போயின. வேறேதேனும் புதுக்குறியீடுகள் எதிர்காலத்தில் ஏற்படுமானால் இவ் அடவுகளை எண்ணிப் பார்க்கலாம்.

ஔகாரத்திற்கு என எக்குறியீடும் தொடக்ககாலத்தில் இல்லை. தொடக்கத்  தமிழியில் 11 தீற்றுக் குறிமுறைகளே இருந்திள்ளன. ஔகாரத்திற்கான குறியீடு 8 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறமே எழுந்தது. இன்றதைச் சிறகு என்கிறோம். அந்த இந்தத் தீற்றுக்குறிமுறைகளின் கீழ் வராது . இச்சிறகை மலையாளத்தில் மிகச்சரியாய்ச் சிறிதாய்க் குறிப்பர் தமிழில் இதைப் பெரிது ஆக்கி ளகரத்திற்கும் சிறகிற்கும் வேறுபாடு தெரியாமல் ஆக்குவோம். இதே போல் காலுக்கும் ரகரத்திற்கும் வேறுபாடு காட்டாது எழுதுவோம். முதல் வகைத் தப்பை தமிழக அரசு இன்னும் தன் 2010 அரசாணையில் சுட்டிக்காட்ட வில்லை  ஆனாலு, ரகரத்திற்கும், காலுக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டி யுள்ளது.   .

தமிழி எழுத்துக்களின் அடவு அடிப்படை, 2 தீற்றுக்களும், ஒரு புள்ளியும் தான். புள்ளியும் கூட மெய்யெழுத்தைக் குறிப்பதற்கும், எகர/ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் குறில்/நெடில் வேறுபாடு காட்டவுமே பயன்பட்டுள்ளது. [ஒருவேளை தொடக்ககாலத்தில் இந் குறில் நெடில் வேறுபாடு தமிழில் இல்லையோ, என்னவோ?. இதைப் பற்றிய விளக்கம் நம் எகர/ஏகார, ஒகர/ஓகாரச் சொற்களின் ஒரு பொருள்/வேறொலிப்புச் சிக்கலுக்குள் கொண்டு போகும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.]

முடிவில் ஒன்று சொல்லவேண்டும். கால் (ஆகாரம்), கொக்கி (இகரம்), சுழிக் கொக்கி (ஈகாரம்), சுற்று (கு - வில் வருவது), விழுது (ஙு - வில் வருவது), இருக்கை (நு - வில் வருவது), கூட்டு (கூ-வில் வருவது), சுழிச்சுற்று (பூ -வில் வருவது), இருக்கைக்கால் (நூ -வில் வருவது), கொண்டை  (மூ -வில் வருவது), கொம்பு (ஒகரம்), சிறகு என்ற இந்த 12 குறியீடுகளுக்குமான வளர்ச்சி குறைந்தது 350 ஆண்டுகள் தாம். இவற்றிற்கான பெயர்களை நீங்கள் எந்த இலக்கண நூலிலும் காணமுடியாது 1400/1500களில் இவற்றிர்கு வேறுசில பெயர்கள் இருந்தன. தொல்காப்பிய உரை எழுதிய நச்சினார்க்கினியர்,  கால் என்பதை நாம் சொல்வது போலவே சொல்லியுள்ளார். இப்போது நாம் கொம்பு என்பதை அன்று கோடென்றே அவர் சொல்வார்.  (கோடும் வளைந்தது. கொம்பும் வளைந்தது.) அவருக்குப் பின்வந்தோர் கொக்கியையும், சுழிக் கொக்கியையும் மேல்விலங்கென்றார். மேலே சொன்ன உகர, ஊகாரக் குறியீடுகளின் மொத்தத்தையும் கீழ்விலங்கு என்பார்.  இவையெல்லாம் உயிர்மெய்யைக் குறிக்கும் குறியீடுகள்.

தொல்காப்பியர் காலத்தில் இக்குறியீடுகளை உயிர்மெய்க்குறியீடென்றார். அதுவே சரியான கலைச்சொல். அதையும் இந்த ஒருங்குறிச்சேர்த்தியத்தார் வடவரைப் பின்பற்றி உயிர்க்குறியீடுகள் - vowel mathras - என்பார். அதுவும் ஒரு முரண். நம்மூரில் மாத்திரை என்பது ஒலிக்கும் காலத்தைக் குறிக்கும்.  இவை உயிருக்கான குறியீடுகள் அல்ல. உயிர்மெய்க்கான குறீயிடுகள். வெறும் தீற்றுகளாய் வெவ்வேறு திசைகளில் கிளம்பியவற்றை உயிர்க்குறியீடு என்பது ”மரப்பாச்சி உயிருள்ளது” போல் குறிப்பதாகும். தமிழர்க்கு அது சரி யில்லை. They are vowel-consonant markers and not vowel markers. They do not have independent existence. This is conceptually important. ஓர் அவையில் என் இடம் என்று குறிக்க நான் கைக்குட்டை விட்டுப் போகலாம். ஏனெனில் அது என் உள்ளமை குறிக்கும் கருவி. கருவியையும் ஆளையும் தென்னவர் எப்போதும் குழம்பிக் கொள்ளார். வடபுலத்தில் வேண்டுமெனில் என்வாள் என்னைக் குறிக்கலாம். 

மொத்தத்தில் தொடக்க காலத்து அடவு என்றவகையில், இதில் செய்து பார்த்துத் திருத்திக் கொள்ளும் பாங்கு இருக்கிறது. இன்றுவரை அந்தப் பாங்கு மாறவில்லை. வீரமாமுனிவர் எகர/ ஏகாரங்களிலும், ஒகர/ஓகாரங்களிலும் வரும் புள்ளியைத் தவிர்த்து மேற்கே வரும் கொம்பை ஒற்றைச் சுழியாகவும் இரட்டைச் சுழியாகவும் மாற்றியமைத்தார். அது கொம்புகளில் இருந்து கிளைத்த ஒரு மாற்றம் என்ற அளவில் அடிப்படை அடவைக் குலைக்க வில்லை. இப்பொழுதும் மேற்கே இருந்து கிளைத்த தீற்றை அவை இன்னமும் நினைவூட்டுகின்றன.

இதுநாள் வரை இருக்கும் தமிழி அடவிற்கு மீறிச் சொல்லப்படுகிற எந்த முயற்சியும் 2700 ஆண்டுகள் (தொடக்க நிலை, வட்டெழுத்து நிலை, வீச்செழுத்து நிலை, அச்செழுத்து நிலை என எல்லாவற்றிலும்) தொடர்ந்து வந்த போக்கைக் குலைக்கும் ஒன்றாகும்.

அன்புடன்,
இராம.கி.


Saturday, June 05, 2010

சிலம்பிற்குப் பின்வந்த வரலாற்றுச் செய்திகள் - 2

மருதன் இளநாகனாரின் ஒருசில பாடல்கள் வரலாற்றுச் செய்திகளையும் நமக்குச் சொல்கின்றன. அவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.

1. முதலில் நாம் பார்ப்பவை அகநானூறு 59 ஆம் பாடலின் 3-18 வரிகளாகும்.

- வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தந்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல
புந்தலை மடப்பிடி உணீஇயர், அம் குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
படிஞிமிறு கடியும் களிறே - தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை
இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண்நறுங் கழுநீர்ச் செண்இயற் சிறுபுறம்
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய்நாட்டு
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே

இதில் முதற் செய்தி தொழுனையாற்றில் (யமுனையாற்றில்) ஆயர்பாடி மங்கையரின் சேலைகளைக் கண்ணன் எடுத்து ஒளித்துவைத்து, பலராமன் அப் பக்கம் வரும்பொழுது மரக்கிளையைக் கீழே அழுத்தி மங்கையரின் நக்கனத் தோற்றம் வெளித்தெரியாதவாறு மறைத்தது பற்றியாகும். அதாவது கி.மு.50 இலேயே கண்ணனின் விளையாட்டுக்களைச் சொல்லும் பாகவதச் செய்திகள் மிகுந்த விவரிப்போடு தென்புலத்து மக்களுக்குத் தெரிந்துள்ளன. கண்ணன் பற்றிய செய்திகள் சிலம்பில் தெரிந்ததில் வியப்பில்லை, சங்க இலக்கியத்திலும் கூடக் கி.மு.50 இல் அவை விரிவாகத் தெரிந்திருக்கின்றன.

இதில் இரண்டாம் செய்தி ”அந்துவன் பாடிய சந்து கது எழு நெடுவரை” என்னும் வரியில் அடங்கியுள்ள முகன்மைச் செய்தியாகும். முருகனைப் பற்றி பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்து (=இசை) அப்படியே பரங்குன்றைப் பற்றி எழுகிறதாம் (கதுத்தல், கதுவுதல் = பற்றுதல்). அது என்ன அந்துவன் பாடிய இசை? - என்ற கேள்வி சட்டென நமக்குள் எழுகிறது. இதையறியப் பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்துள் நாம் போகவேண்டும். 

பரிபாடலுக்குள் செவ்வேள் பற்றியும், வையை பற்றியும் நல் அந்துவனாரின் இசைப் பாடல்கள் உள்ளன. அந்த அந்துவனார் எனும் இசைப் புலவர் மருதன் இளநாகனாருக்கு நன்றாகத் தெரிந்தவர் போலும். பரங்குன்றைப் பாடியவருள் இவர் பலராலும் அறியப்பட்டவர் போலும். பரிபாடலில் மொத்தம் 70 பாடல்கள் இருந்தன என்று ஒரு வெண்பா சொல்லும்.

திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று - மருவிளிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்

அதாவது திருமாலுக்கு 8 உம், செவ்வேளுக்கு 31 உம், காடுகிழாளுக்கு (கொற்றவைக்கு) 1 உம், வையைக்கு 26 உம், மதுரைக்கு 4 உம் பாடப்பட்டதாம். 70 மூலப்பாடல்களில் 33 - ஏ முழுதாகவோ (22), சிதைந்தோ (11) இப்போது கிடைக்கப் பெற்றுள்ளன. வெவ்வேறு நூல்களில் பரிபாட்டெனத் திரட்டப்பட்ட, சிதைந்துபோன 11 பாடல்களைப் பரிபாடல் திரட்டென்பார். கிடைத்தவற்றுள் திருமாலுக்கு 7 பாடல்களும், செவ்வேளுக்கு 8 பாடல்களும், வையைக்கு 10 பாடல்களும், மதுரைக்கு 6 பாடல்களும், இன்னதென்று தெரியாது மேலும் 2 பாடல்களும் கிடைத்ததாய் அண்மைத் தொகுப்பாசிரியர் சொல்கிறார். [மேலே கூறிய வெண்பாவோடு பொருத்திப் பார்த்தால், மதுரை பற்றிய பாடல்களிற் கணக்குக் கூடியுள்ளது, மற்றவற்றில் கணக்குக் குறைந்துள்ளது.] கிடைத்த பாடல்களுள் 11 பாலையாழிலும் (பாலையாழ் என்பது தொல்காப்பியக் காலப் பெயர், இது சங்க காலத்தில் அரும்பாலை என்று சொல்லபட்டது. கருநாடக சங்கீதத்தில் சங்கரா பரணம் என்றாகும். எல்லாத் தமிழ்ப் பண்களுக்கும் அராகம் எனும் வடமொழிப்பெயரைத் தானே இப்போது கொடுத்துள்ளார்?). 5 நேர்திறப் பண்ணிலும் ( அக்காலத்தில் வளர் முல்லை, இக்காலத்தில் சிவப்பிரியா), 4 காந்தாரப் பண்ணிலும் (சங்க காலத்தில் செவ்வழிப் பாலை; அண்மைக்காலத்தில் இரு மத்திமத் தோடி) பாடப்பட்டவையாகும். இன்னும் 2 பாடல்களுக்குப் பண்கள் தெரியவில்லை.

இவற்றில் 19 பாடல்களுக்கு எழுதியோர் பெயர்கள் தெரிகின்றன, அவருள் கடுவன் இளவெயினனார் 3 பாடல்களும், நல்லந்துவனார் 3 பாடல்களும், குன்றம்பூதனார் (இது குறும்பூதனார் என்றும் பிழைபட எழுதப் பட்டுள்ளது) 2 பாடல்களும், நல்லழிசியார் - 2 பாடல்களும், நல்வழுதியார் (நல்லெழுதியார் என்றும் பிழைபட  உள்ளது. இவர் ஒரு பாண்டிய மன்னராய் இருந்திருக்கலாம்.) - 2 பாடல்களும், இளம்பெருவழுதி (இவரும் பாண்டிய மன்னர் ஆகலாம்) 1 பாடலும், கரும்பிள்ளைப் பூதனார் - 1 பாடலும், கீரந்தையார் - 1 பாடலும், கேசவனார் - 1 பாடலும், நப்பண்ணனார் - 1 பாடலும், நல்லச்சுதனார் - 1 பாடலும், மையோடக் கோவனார் - 1 பாடலும் எழுதியுள்ளார். [இளம்பெருவழுதி, நல்வழுதியார் என வரும் 2 பாண்டியரும் ஒருவரோ என்ற ஐயமும் எனக்குண்டு.]

இதேபோல 19 பாடல்களுக்குப் பண்ணமைத்தோர் பெயர்கள் தெரிகின்றன. அவருள் மருத்துவன் நல்லச்சுதனார் (சில பாடல்களில் வெறுமே நல்லச்சுதனார் என்றும் குறிக்கப்படுகிறார். ஆய்ந்து பார்த்தால் ஒருவராகவே வாய்ப்புண்டு) - 10 பாடல்களும், நன்னாகனார் (வெறுமே நாகனார் என்ற குறிப்புமுண்டு) - 3 பாடல்களும், பெட்டன் நாகனார் - 2 பாடல்களும், கண்ணாகனார் (கண்ணனாகனார் என்ற பாடமுமுண்டு)- 2 பாடல்களும், பித்தாமத்தர் - 1 பாடலும், கேசவனார் - 1 பாடலும் பண்ணமைத்திருக்கிறார். பொதுவாக எந்தெந்த பாடலாசிரியர், பாணர், சமகாலத்திற் தமக்குள் உறவு கொண்டனர் என்பதை வலைப்பின்னற் தேற்றத்துள் (network theory) வரும் அண்ணக மடக்கை (adjacency matrix) வழி அலசிக் கண்டுபிடிக்க இயலும், அதன்படி (1, 7,14,22) என்ற 4 பாடல்கள் தவிர்த்து மற்ற 18 உம் சம காலத்தவை என்று அலசல் வழி அறிகிறோம். மேற்குறிப்பிட்ட நாலும் இத் தொகுப்பின் போதோ, முந்தியோ பாடப் பட்டிருக்கலாம்; பரிபாடற் தொகுப்பு பெரும்பாலும் சமகாலத்தில் எழுந்திருக்கலாம்.

இனி மருதன் இளநாகனாரின் அகம் 59 ஆம் பாடலுக்கு வருவோம். அந்துவனார் பாடிய செவ்வேள் பாடல் ஒன்றுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது. கிடைக்காது போன பாடல்களில் செவ்வேள் பற்றி அதிகம் பாடல்களை அந்துவனார் பாடினாரோ என்னவோ? இளநாகனாரின் காலம் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலம் என முந்தையப் பகுதியில் குறிப்பிட்டுக் காட்டினேன். அதையொட்டி, இன்னொரு கொடிவழி (பரம்பரை) கடந்திருக்கும் போது (அதாவது கிள்ளிவளவனுக்கு 50 அகவையாகும் போது) மருதன் இளநாகனார் இருந்திருப்பார் என்று கொள்ளலாம். இதன் வழி நல்லந்துவனார் காலமும் குறைந்தது அதே காலமாய் இருந்திருக்க வேண்டும்.

எனவே சிலம்புக் காலத்தில் இருந்து 25 ஆண்டுகள் கழித்து கி.மு.50 இல் பெரும்பாலும் பரிபாடல் தொகுக்கப் பட்டிருக்கலாம். பெரும்பாலும் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி காலத்தில் இது நடந்திருக்கலாம். உரைகாரர் மூலம் அகநானூறும், குறுந்தொகையும் பன்னாடு தந்தான் மாறன் வழுதி காலத்தில் தொகுக்கப் பட்டன என அறிகிறோம். பரிபாடலைத் தொகுப்பித்ததாய் நாம் ஊகிக்கும் மாறன் வழுதியும், அகநானூறு, குறுந்தொகை தொகுத்த மாறன் வழுதியும் ஒரே அரசனாகுமோ என்பது ஆய வேண்டியதாகும்.

2. இனி அகம் 77 இல் 7-12 ஆம் வரிகளைக் காணுவோம்.

கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர, நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர
செஞ்செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின்,

இந்த வரிகள் அந்தக் காலத்தில் நடந்த குடவோலை முறையை நமக்குத் தெரிவிக்கின்றன. பேரரசுச் சோழர், பல்லவர் காலத்துக் குடவோலை முறை பற்றிய உத்தர மேரூர் கல்வெட்டுக்களைப் பற்றிப் பெருமை கொள்ளும் நாம் அதற்கு முந்தைய, கி.மு.50 அளவான குடவோலை முறையை அகம் 77 தெரிவிக்கிறது என்ற செய்தியை வெகு எளிதில் மறந்து விடுகிறோம். நான் அறிந்தவரை ”தென்புலத்தில் தேர்தல்கள் எப்படி நடந்தன?” என்பதைக் குறிக்கும் முற்காலத்து முதன்மையான சான்று இது மட்டுமே. ஆக கி.மு. 50 இல் நமக்குத் தேர்தல் என்பது தெரிந்திருக்கிறது. இனிப் பாடலுக்கு வருவோம்.

பாடல் பாலைத்திணை சேர்ந்தது. வணிகத்தை நாடி அருஞ்சுரங் கடக்க விரும்பிய தலைமகன் போகும்வழியில் தான் காணப்போகும் கழுகுகளின் செயலை எண்ணிப் பார்க்கிறான், காதலியின் முகத்தையும் எண்ணிப் பார்க்கிறான், மனங்கலங்கித் தான்பிரிந்து செல்ல முற்படுவதைக் கை விடுகிறான். பாடலுள்ளே அருஞ்சுக் கொடுமையின் விவரிப்பு அமைகிறது.

அருஞ்சுரத்தின் கொடிய சூடு தாளாது ”மேற்கொண்டு நகரமுடியாது” என இறந்துபோனவர் உடம்பு சுரத்தின் பாதையிற் கிடக்கிறது. எங்கிருந்தோ செந்தலைக் கழுகு (Red-headed Vulture, Sarcogyps calvus) பறந்து ஓடிவருகிறது. உயிரற்றுக் கிடக்கும் உடம்பின் வயிற்றைக் குத்தி உள்ளிருக்கும் குடரை வெளியே இழுத்துப் போடுகிறது.

[இக் கழுகு பற்றிய செய்திகளை முனைவர் க.ரத்னம் எழுதிய “தமிழ்நாட்டுப் பறவைகள்” பொத்தகத்தில் (மெய்யப்பன் தமிழாய்வகம், 2002) இருந்து தருகிறேன். ”இக் கழுகு கரு நிற உடலைக் கொண்டது. இதன் தலை, கழுத்து, தொடை, கால் ஆகியன செந்நிறங் கொண்டவை. உயரமாகப் பறக்கையில் கருத்த உடலின் பின்னணியில் சிவந்த தலையும் வெண்திட்டுக்கள் கொண்ட தொடையும் இறகுகளிற் காணப்படும் வெண்பட்டையும் கொண்டு அடையாளம் காணலாம். தமிழ்நாடு முழுதும் வறள்காடுகளில் மக்கள் வாழ்விடத்தை அடுத்துக் காணலாம். பிற கழுகுகளைப் போல இது பெருங்கூட்டமாய்த் திரள்வதில்லை. செத்த பிணங்களைத் தின்ன பெருங் கூட்டமாய்க் கூடும். மற்றவகைக் கழுகளிடையே இதனையும் ஒன்றிரண்டாகக் காணலாம். இக்கழுகு மற்ற கழுகுகளை விரட்டிவிட்டு முதலில் தன் வயிறு நிறையத் தின்னும் ஆற்றல் வாய்ந்தது. இதனாலேயே இது கழுகரசன் (King Vulture) என அழைக்கப் படுகிறது. வயிறு நிறையத் தின்றபின் பறக்க எழ இயலாது திண்டாடும். சங்க இலக்கியத்தில் ’செஞ்செவி எருவை’ எனவும் பாலைநிலத்தில் பயணம் செய்வோர் வெங்கொடுமையால் மயங்கி விழுந்த பின், இறப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.]

இறந்துபோன உடம்பின் வயிற்றில் இருந்து செந்தலைக்கழுகு (செஞ்செவி எருவை = செக்கச் சிவந்த கழுகு) குடரை உருவுவது எப்படி இருக்கிறதாம் என்பதற்கு மாங்குடி மருதனார் ஓர் உவமை சொல்கிறார். அதில் தான் மேலே சொன்ன குடவோலைச் செய்தி வருகிறது. 

அக்காலத்தில் ஊர் வாரியத்திற்கு நிற்பவரின் பெயரை ஒரு ஓலை நறுக்கில் எழுதி அதைச் சுருளாக்கி ஒரு குடத்தில் இடுவார். முடிவில் குடத்தின் வாயின் மேல் ஒரு துணியை மூடிக்கட்டிச் சுருக்குப்போட்டு, சுருக்குப் போட்ட இடத்தில் களிமண்ணையோ, அல்லது பிசினையோ கொண்டு ஒட்டி, களிமண்/பிசின் மேல் பொறிகொண்டு முத்திரை பொதித்துப் பின் குடத்தைப் பாதுகாத்து ஒரு பொது இடத்திற்குக் (அது வேறு ஊராகக் கூட இருக்கலாம்) கொண்டுவந்து கூடியிருந்தோர் அறியப் பொறியை உடைத்து நீக்கி, சுருக்கைப் பிரித்துத் துணியை விலக்கி, ஒவ்வொரு சுருளாக உள்ளிருந்து எடுத்து நீட்டி ஓலை நறுக்கைப் படித்து ”எத்தனை வாக்குகள் யாருக்குக் கிடைத்தன?” என்று பார்ப்பார்களாம்.

எப்படி வாக்குக் குடத்தில் இருந்து ஒலை நறுக்குச் சுருள்களை ”குண்டு குண்டான அரசு ஆவண மாக்கள் (இடை பெருத்த அரசு அதிகாரிகள்) இழுத்துப் பிரிக்கிறார்களோ அதுபோல, செந்தலைக் கழுகுகள்,  இறந்த விலங்குகளின் வயிற்றிலிருந்து குடலுருவி நீட்டுகின்றனவாம். செந்தலைக் கழுகுகளுக்கு குண்டான அரசு அதிகாரிகள் உவமை. இறந்த உடம்பின் வயிற்றுக்கு வாக்குக் குடங்கள் உவமை. மாந்தக் குடலுக்கு ஒலை நறுக்குச் சுருள் உவமை. அகம் 77 எண்ணி எண்ணி வியக்கக்கூடிய பாட்டாகும். இதில் அடங்கிய வரலாற்றுச் செய்தி கி.மு.50 இல் குடவோலை முறை தமிழக வழக்கில் இருந்தது என்பதே.

அன்புடன்,
இராம.கி.