Sunday, February 28, 2010

பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 4

தேர் சென்ற டத்தோ கெராமத் வீதி சற்று பெரியது. குறிப்பாக Times Square க்கு முன்னால், 6 ஒழுங்கையாவது அமையுமளவிற்குப் பெரியது. தேர் வரும் வழியில், 100, 150 அடிக்கு ஒரு தண்ணீர்ப் பந்தல் இருந்ததுபோல் தோன்றியது. Times Square - இலும், அதற்குச் சற்று முன்னிருந்த காமாட்சியம்மன் கோயில் அருகிலும், தண்ணீர்ப் பந்தல்கள் இருந்தன. அவற்றில், நேரத்திற்கேற்ப வருவோர், போவோர் ஏதாவது அருந்தவும், கொறிக்கவும், சாப்பிடவும், கொடுத்துக் கொண்டே இருந்தார். கூடவே தண்ணீர்ப் பந்தல்களிற் காதைப் பிளக்கும் அளவிற்கு ”பற்றிப் பாட்டுகளும்” ஒலித்துக் கொண்டிருந்தன. தண்ணீர்ப் பந்தல்காரரின் சளைக்காத விருந்தோம்பல் என்னைப் பெரிதும் கவர்ந்தது.

இது தவிர, முன்னே சொன்னது போல் தேர்போகும் சாலையின் நடுவே மூட்டை மூட்டையாகவும், பெருத்த குவியல்களாகவும் கிடந்த சிதறு தேங்காய்கள் பன்னூறாயிரங்களைத் தாண்டி இலக்கம், நுல்லியக் (million) கணக்கில் இருக்கும்போற் தோன்றியது. சாலையின் பலவிடங்களில் ஆங்காங்கே கடைபோட்டுப் பல்வினைப் பொருள்களும், DVD களும் விற்றுக் கொண்டிருந்தார். நடந்துவரும் மக்களோ, தங்களின் தேர்ந்த ஆடைகளில் ஒய்யாரமாய்க் குடும்பம் சூழ ஏதோ மகிழ்வுலா (picnic) போவது போல் நடந்துவந்து கொண்டிருந்தார். இவரின் ஊடே, தேரை எதிர்பார்த்துத் தண்ணீர்ப் பந்தல்களுக்கு அருகிற் பற்றியில் ஆழ்ந்த பல்வேறு சீனர், தமிழர், மலாய்க்காரர் எனப் பலரும் காத்துக் கொண்டிருந்தார்.

அங்கிருந்த சூழ்நிலையை ஓரளவாவது விவரிக்க வேண்டுமெனில் ஒரு தென்னமெரிக்கக் காட்சியைத் தான் நான் ஒப்பிட்டுச் சொல்லவேண்டும். நேரடியாகவோ, திரைப்படம் அல்லது தொலைக்காட்சி வழியாகவோ பிரசீலின் (Brazil) ரியோ டி ^செனைரோவின் கொண்டாட்டம் (Rio de Janeiro Carnevale)” பார்த்திருக்கிறீரா? ஏசு உயிர்த்தெழுவதற்கு முன் நடந்த இறப்பு நிகழ்வை நினைந்து தாமும் அவ்வலியை உணருமாப் போல, 40-46 நாள் நோன்பிருக்க முனைவோர், நோன்பிற்கு முன்னால் பசந்தத்தைக் (Lent) கொண்டாடுவதாய் அமையும். 

ஒரேயொரு வேறுபாடு. அந்தக் கொண்டாட்டம் நோன்பிற்கு முன்னால் அமையும். தைப்பூசமோ நோன்பிற்கு அப்புறம் ஒரு சிலர் காவடியெடுக்க, மற்றவர் அவரோடு உடன்சேர்ந்து வருவது என்று அமையும். [உடம்பை விட்டு உயிர் விலகும் நிகழ்வைத் தாரை, தப்பட்டையோடு, குதித்து, பூத்தெறித்து கொண்டாடுவோர் நம்மவர் ஆயிற்றே? நம்முடைய பழஞ் சமயமான ஆசீவகத்தின் கூறுகளான ”கடைசிப் பாட்டு, கடைசியாட்டம்” போன்ற இறப்பை ஒட்டிய கொண்டாட்டச் சடங்குகள் இன்றும் நடைபெறுகின்றன அல்லவா?.]

ரியோ கொண்டாட்டத்தில் பல்வேறு சாம்பாப் பள்ளிகள் கூட்டங் கூட்டமாய் தாளக் கருவிகள் பலவற்றை இசைத்துக் கொண்டு, தங்களுடைய பட்டேரியா (Bateria) இசைக்குழுவுடன் ஆட்டம் போட்டு ஊர்வலமாய் வருவார். அவர் ஆடுவது சாம்பா ஆட்டம் எனப்படும். சாம்பா ஆட்டம் ஆப்பிரிக்காவில் இருந்து, கருப்பின அடிமைகளால் கொண்டு வரப்பட்ட துள்ளாட்டம். பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட நம்மூர் தப்பாட்டம் போலவே அது அமையும். பினாங்குப் பூசத்தில் விதம் விதமான தப்பாட்டங்களும், பறையாட்டங்களும் இசைக் கலைஞரோடு வீறுகொண்டு இயம்புவதைக் கூர்ந்து கவனித்தால், தைப்பூசத் திருவிழாவும், ஓரளவு ரியோ கொண்டாட்டத்தின் சில கோணங்களைக் காட்டத் தொடங்கிவிட்டதென்றே சொல்லவேண்டி உள்ளது.

காலை 10.30 மணிக்கு தேர் சிவன் கோயிலுக்கு அருகில் தேர் வந்துசேரும் என்று சொன்னது 12 ஆகியும் வரவில்லை; அந்த அளவிற்குத் தேர் மெதுவாக ஊர்ந்தது போலும். வெய்யில் சுள்ளென்று அடித்து ஏறிக் கொண்டிருந்தது. இந்தச் சூட்டில் காவடிக் காரர் நடக்காமல் இருக்கும் வகையில், பினாங்கு நகராட்சியினர் சாலையில் நீரைத் தொடர்ந்து தெளித்துக் கொண்டிருந்தனர். சிவன் கோயிலின் உள்ளே இருந்த பந்தலில் நானும், என் மனைவியும் இரண்டு சாப்பாட்டுத் தட்டுகளைப் பெற்றுக் கொண்டு எங்கள் பசியைத் தணித்துக் கொண்டோம். நான் வருவோர், போவோரைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

அருகில் யாரோ சற்றுப் பலக்கவே, தனக்குத் தெரிந்தவரைப் பார்த்து விசாரித்துக் கொள்கிறார்கள். ”ஆ.....அண்ணே, எப்படியிருக்கிங்க, பார்த்து ரொம்ப நாளாச்சது, கேயெல்லுலெ இன்னுங் கூட அதிகக் கூட்டமா இருக்கும், இல்லையா?” தெரிந்தவரைப் பார்த்து முகமன் சொல்லிக் கொள்வது நடந்து கொண்டேயிருக்கிறது. நம்மூரைப் போலில்லாமல் அருச்சனைத் தட்டுகளில் சற்றே செல்வ நிலையைக் காட்டுமாப் போலத் தேங்காய்கள், விதவிதமான பழங்கள், பட்டுத் துணி, ஊதுபத்தி, சூடம், வெற்றிலை என வகைவகையாய் நிறைந்திருந்தன. இளஞ்சிறார் Times Square க்கு முன்னிருந்த செயற்கை நீரூற்றுகளின் ஊடே புகுந்து தண்ணீரில் திளைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஆட்டமும், பாட்டமும், கூத்தும், ஓடிப் பிடித்தலும் நடந்து கொண்டிருந்தன.

நாங்கள் Times Square கட்டிடத்துக்குள் உள்லே புகுந்து மூடிக்கிடந்த கடைகளை கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். மீண்டும் கட்டிடத்தின் முகப்பிற்கு வந்தால் மக்களின் செறிவு கூடிக்கொண்டே வந்தது. தேரைப் பார்க்குமாப் போல் இருந்த இடங்களில் எல்லாம் நெரிசல் கூடிக் கொண்டிருந்தது. ஆடி அசைந்து பிற்பகல் 1.30 மணியளவில் தொலைவில் KOMTAR கட்டிடத்துக்கு அருகில் தேர்க் கூம்பு தெரிந்தது. அடுத்த அரை மணியளவில் தேர் காமாட்சியம்மன் கோயிலை நெருங்கிற்று. சிதறுகாய்க் காரர் சுறுசுறுப்பானார். ஓவ்வொர் தேங்காய்க் குவியலுக்கு அருகிலும் குவியலுக்குத் தகுந்தாற்போல் ஆட்கள் கூடிச் சாலையில் சிதறுகாய்களை உடைக்கத் தொடங்கினார்.

சிவன் கோயிலுக்கு எதிரில் இருந்த குவியற் தேங்காய்களின் எண்ணிக்கை 10000 தாண்டியிருக்கும். ஒரு சீனர் ஊதுவத்திக் கொத்திகளை ஏற்றி மூன்று தடவை மேலும் கீழுமாய் ஆலத்திபோல் சுற்றியெடுத்து, அடுத்து நண்பர்களைக் கொண்டு உடைத்தார். இதுபோல மலாய்க்காரர், தமிழர். எல்லோருக்கும் தண்டாயுதபாணி வேண்டப்பட்ட தெய்வம் போலும். சிதறுகாய்களின் தெறிப்பாலே தான் பூசத் திருவிழாவைச் சிதறுகாய்த் திருவிழா என்று சொன்னேன்.

சாலையைக் கழுவியது போல் இளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த இடத்தில் சிறுகாய் உடைப்பது முடிந்தவுடன், அடுத்த பத்தடியில் இன்னும் சிதறுகாய் உடைப்பு. முதற் பத்தடியைத் துப்புரவாக்க, இரண்டு பெரிய குவியேற்றிகள் (shovel loaders) முன்னே வந்து, தேங்காய்ச் சிரட்டைகளைக் குவியலாக்கி அப்படியே சாலையின் ஓரத்தில் தள்ளின. பெருகிவந்த இளநீர் சாலைப்பரப்பு எங்கும் பரவிக் கழுவினாற்போல் ஆகியது. பின்னாற் துப்புரவுத் தொழிலாளர்கள் சாலையைக் கூட்டித் தேர் நகரும்படியும், ஆட்கள் நடக்கும் படியும் செய்தனர். அவருடைய மட்டைத்தூறு சாலையை மெழுவும் செய்தது. எல்லாம் ஒரு 4,5 நுணுத்தங்களுக்குள் (minutes) முடிந்தன. இப்படிச் சிதறுகாய் உடைப்பதும், இளநீராற் சாலையைக் கழுவுவதும், சிரட்டைகளை அகற்றுவதும்  பத்தடிக்கு ஒரு தடவை நடந்தன. தேர் அவ்வளவு மெதுவாக நகர்ந்ததில் வியப்பேயில்லை.

ஏற்கனவே வந்து சிவன்கோயிலில் இளைப்பாறி உணவருந்திய காவடிக்காரர் ஒன்றரை மணியளவில் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டார். எங்கு பார்த்தாலும் “அரோகரா”வும் விதவிதமாக வேல்களை விளிக்கும் கூப்பாடுகளும் பெருகின. 

2 மணியளவில் தேர் சிவன் கோயில் அருகே வந்து சேர்ந்தது. அருச்சனைகளும், தீவ ஆரதனைகளும் முடிந்து அங்கிருந்து அடுத்த அரைமணியில் தேர் புறப்பட்டது. தேர் தண்ணீர்மலை அடிவாரம் போய்ச்சேர இரவாகிவிடும் என்றார். நாங்கள் எதிர்த்திசையில் நடந்து தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்து, களைப்பாறிச் சற்றே கண்ணயர்ந்தோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, February 16, 2010

தமிழில் கிரந்தம்

தமிழில் கிரந்தம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிப் பலமுறை சொல்லியிருந்தாலும், திருப்பித் திருப்பிச் சொல்வதில் சலிப்பு ஏற்பட்டாலும், இதைச் சொல்ல வேண்டியுள்ளது. என் செய்வது? தூங்குவது போல் பாசாங்கு செய்வோரைச் சங்கூதித் தான் எழுப்ப வேண்டும். மென்மையாகச் சொல்லி எழுப்ப முடியாது.

1. சங்கதம் போன்ற மொழிகளில் நகரி எழுத்தை ஆளும் போது அங்கு ஓரெழுத்து ஓரொலியாகும். Sound of a Nagari character = function of (Shape of the character). This is one to one correspondence. ஒன்றிற்கு ஒன்று எனும் பொருத்தம் கொண்டது. தமிழ் போன்ற மொழிகளில் தமிழி எழுத்தை ஆளும்போது, இங்கு ஓரெழுத்துப் பல்லொலியாகும். அந்த எழுத்து நாம் பேசும் மொழியில் (சொல்லில்) வரும் இடத்தையும், அண்மையில் வரும் மற்ற ஒலிகளையும் பொறுத்து குறிப்பிட்ட எழுத்தின் ஒலி மாறும். Sound of a Tamizi character = function of (Shape of the character, the place of occurrence in a word, nearby sounds). This is one to many correspondence. ஒன்றிற்குப் பல என்னும் பொருத்தம் கொண்டது. இது பார்ப்பதற்குக் கடினம் போல் தோற்றினாலும், பழக்கத்தில் எக் குழப்பமும் இல்லாது குறைந்த எழுத்துகளில் பல்லொலிகளை எழுப்பவைக்கும் முறையாகும்.

நகரி/சங்கதம் போன்ற கட்டகங்களின் (systems) அடிப்படை, தமிழி/தமிழ் போன்ற கட்டகங்களின் அடிப்படையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கிரந்த எழுத்து வேண்டுவோர் நகரி/சங்கதக் கட்டகத்தைத் தமிழி/தமிழ் கட்டகத்துள் புகுத்த நினைக்கிறார். இது நாம் புழங்கும் வட்டத்தைச் சதுரமாக்கும் முயற்சி. அடிப்படைக் கட்டக வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் இப்படி முயன்று கொண்டிருந்தால் பை எனும் பகா அளவைக் காணவே முடியாது. அறிவியல் தெரிந்தவர் இதைச் செய்ய முயலமாட்டார். இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழிய மொழிகள் முதலில் (இன்றும் பலவகையிலும்) தமிழி/தமிழ் அடிப்படையையே கொண்டிருந்தன. இந்தியாவிற்குள் வாழ்வுதேடி வந்தோர் அவற்றை வலிந்து மாற்றி எல்லா மொழிகளையும் சங்கதப் (சங்கடப்) படுத்திக் கொண்டிருந்தார். அதில் தப்பியது தமிழ் மட்டுமே. அதையும் மாற்றிக் குலைப்பதே கிரந்தம் வேண்டுவோரின் குறிக்கோளாகும். குலைப்பவர் வெறியரா? குலையாது காப்பவர் வெறியரா?

2. கிரந்தம் தவிர்த்து எழுதினால், இவரின் முதல் தாக்குதல் “பொருள் மாறிப் போய்விடும்” என்பதாகும். ”இல்லை ஐயா, பொருள் சிறிதும் குறையாமற் சொல்லத் தமிழ்ச்சொல் உள்ளது” என்றால், ”அது பழஞ்சொல், பண்டிதத் தமிழ்” என நொள்ளை சொல்வார். மற்ற மொழிகளில் புதுச்சொற்கள் உருவாகும் நடைமுறையைக் கண்டுகொள்ளவே மாட்டார். தமிழில் மட்டும் குறை கண்டு கொண்டே இருப்பார். தமிழ் புதுமையாவதை இவர் விரும்பார். மாறாகக் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம்” என்று களியாட்டப் புலங்களில் மட்டுமே தமிழ் நின்று, கற்படிமம் (fossil) ஆவதையே விரும்புகிறார். மற்றதற்கெல்லாம் ஆங்கிலம் கலந்து கலப்பின மொழி (bastard language) உருவாவதையே வேண்டி நிற்கிறார். இவரி விழைவு தமிங்கிலம் தான். தமிழ் அல்ல.

3. இவரின் 2 ஆம் தாக்குதல் “கிரந்தம் தவிர்த்தால் ஒலிப்பு மாறிவிடும்” என்பதாகும். ஏதோ உலகமெங்கும் உள்ளோர் ஒலிப்பு மாறாது பிறமொழிச் சொற்களை ஒலிப்பதாகவும், தமிழர் மட்டுமே தவறு செய்வதாகவும் இவர் அங்கலாய்ப்பார். ஒரு பத்து நாட்களுக்கு முன் கோலாலம்பூர், சிங்கை, பினாங் போய்வந்தேன். கோலாலம்பூரில் ஒரு மீயங்காடியை (Hyper market) Pasar besar என்று மலாய் மொழியில் எழுதியிருந்தார். நம்மூர்க்காரர் மூலம்தான் பசார் என்ற சொல்லையே அவர் அறிந்திருக்கிறார் அச் சகரமே அதை இனங் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அதுவும் தென்பாண்டி ஒலிப்பை அப்படியே காட்டி விடுகிறது.

பசாரின் மூலம் ஓர் அரபிச் சொல்; சங்க காலத்தில் இறக்குமதியானது. பந்தர் என்ற சந்தை/அங்காடி ஊரே, சேரலத்தில் முசிறிக்கு அருகில் இருந்திருக்கிறது பந்தர் என்ற சொல் பாரசீகத்தும் பரவியது. இன்றும் ஒரு பெரிய துறைமுகம் ஈரானில் பந்தர் அப்பாசு என்று இருக்கிறது. பந்தர்> பந்தார்> பஞ்சார்> பசார் என்ற திரிவில் அது பசார் ஆனது. வடக்கே பஞ்சார் என்பது பஜார் ஆனது. நாம் பசார் என்று அந்தப் பிறமொழிச் சொல்லை எழுதினால் அதை நக்கலடிக்கும், நையாண்டியடிக்கும் பெருகபதியர் (ப்ரஹஸ்பதிகள்) மலாய்க்காரரிடம் போய்ச் சொல்வது தானே? ”அதைப் பசார் என எழுதாதீர், பஜார் என எழுதுக” என்று முறையிடவேண்டியது தானே? இத்தனைக்கும் மலாய் மொழியில் ஜகரம் இருக்கிறது. ஆனாலும் மலாய்க்காரர் சற்றும் கவலைப்[படாமல், வெட்கப்படாமல் பசார் என்று எழுதுகிறார்.

Besar என்பது நம்முடைய பெரியது என்பதோடு தொடர்பு கொண்டது. [அந்தச் சொற்பிறப்பை இங்கு நான் விளக்கவில்லை.] இந்த இடுக்கைக்குத் தேவையானதோடு நிறுத்திக் கொள்வோம். ஒவ்வொரு மொழியினரும் வேற்று மொழிச் சொற்களைத் தம் இயல்பிற்கெனத் திருத்திக் கொண்டே தான் வந்திருக்கிறார். புழங்குகிறார். அது ஒன்றும் தவறே அல்ல. தாழ்வு மனப்பான்மை கொண்டவருக்கு மட்டுமே அது தவறாய்த் தெரியும். பெருமிதங் கொண்டோருக்குத் தெரியாது. [பெருமிதங் கொண்ட ஆப்பிரிக்கக் கருப்பருக்குத் தம் கருப்பு வண்ணம் தவறாகத் தோன்றவில்லை. பெருமிதம் குலைந்து 400 ஆண்டு அடிமையாகிப் போய்ப் பின் உயிர்த்தெழுந்த அமெரிக்கக் கருப்பருக்கு மட்டுமே தம் கருப்பை மறைப்பதற்கு வெள்ளை, பூஞ்சை என்ற வண்ணங்கள் வண்டி வண்டியாகத் தேவைப் படுகின்றன. அவை கொண்டு அழுத்தி அழுத்தித் தேய்க்கிறார். தோலின் கருப்பு நிறம் தான் போகமாட்டேன் என்கிறது.]

4. இவரின் மூன்றாம் தாக்குதல் “இயற்பெயரில் எப்படிக் கிரந்தம் தவிர்ப்பது? மாற்றார் நம்மைப் பார்த்துச் சிரிப்பாரே?” ”மற்றவன் இப்படி நினைக்கிறானா?” என்று இவர் எண்ணுவதே இல்லை. மற்றவருக்குப் பெருமிதம் இருக்கிறது, எனவே அவர் கவலையே படாமல் தொல்காப்பியனைத் தோல்காப்பியன் ஆக்குகிறார், அழகப்பனை அலகப்பன் ஆக்குகிறார், ஆறுமுகத்தை ஆருமுகம் ஆக்குகிறார். 

நமக்கோ நம்முள் கிடக்கும் அடிமையூற்று இன்னும் அடங்கவில்லை. கூனிக் குறுகி ”பழுப்பு பதவிசில்” (Brown sahib) ஒளிரப் பார்க்கிறோம். [Here Tamils and dogs are not allowed] என்ற வாசகம் எப்போதுமே நம் மனத்தில் தொங்கிக் கொண்டே இருக்கிறது. நம்முடைய கருப்பு/பழுப்பு மெய்யில் வெண்பொடி/ பூஞ்சைப் பொடி பூசி நம் நிறத்தை அழித்துக் கொள்ளத் துடிக்கிறோம்.] 

[அதே பொழுது, வளரும் நாடான மலேசியாவிலோ, மகாதீர் முகமது எனும் மாந்தர் மலாய்க்காரருக்கு பெருமிதப் பாடத்தை விடாது கற்றுக் கொடுத்திருக்கிறார்.மலாயர் தமக்கு இருப்பதைக் கொண்டு பெருமைப் படுகிறார். புதுப் பெருமைகளை உருவாக்குகிறார்.] நமக்கும் பெருமிதத்திற்கும் இன்றுங்கூட காத தொலைவு இருக்கிறது. வெட்கித் தலைகுனிந்து கொண்டே இருக்கிறோம். பூச்சுக்களைத் தேடியலைகிறோம்.

5. இவர்களின் நாலாம் தாக்குதல் “கிரந்தம் தவிர்த்தால் அறிவியல் எப்படிக் கற்பது? நாம் தனிமைப் படுவோமே?” என்பதாகும். ”மண்ணாங்கட்டி” என்றே சொல்லத் தோன்றுகிறது. இப்பொழுது மட்டும் தமிழர் தனிமைப் படாமல் இருக்கிறோமா என்ன? அதுதான் சென்ற ஆண்டு பார்த்தோமே? ஒரு நூறாயிரத்தைக் கொன்றதற்கு இந்த உலகம் கவலைப்பட்டதா, என்ன? தனித்துத் தானே கிடந்தோம்? தமிழர் அழிந்தால் (உயிருடனோ, அன்றி மனத்தாலோ அழிந்தால்) நல்லது என்று தானே இப் பாழாய்ப்போன உலகம் நினைக்கிறது?

அறிவியலை அப்படியே ஒப்பிக்கும் கிளிப்பிள்ளையா நாம்? கிளிப் பிள்ளையாக வேண்டுமானால் கிரந்தம் வைத்துக் கொள்ளுங்கள். புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழ் பழகுங்கள், பிற சொற்களை கிரந்தம் தவிர்த்து எழுதப் பழகுங்கள். வேண்டுமானால் ஒரு சில இடங்களில் உங்கள் சோம்பேறித்தனம் கருதி ஓரோவழி பழகிக் கொள்ளுங்கள். குடி முழுகாது. ஆனால் அதை வேதவாக்கு என்று கொள்ளாதீர். அடிமைப் புத்தியை விட்டொழியுங்கள், தமிழன் என்ற பெருமிதம் கொள்ளுங்கள். கிரந்தம் இல்லாமலும் தமிழில் அறிவியல் ஓடோடி வரும்.

என்னால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால் ”அடிமையாய் இருப்பதே சுகம்” என்று வீண்வாதம் செய்யும் பேதையரை மட்டும் பொறுத்துக் கொள்ளமுடியாது. சரியாகத் தான் பாரதி சொன்னான்.

“சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
இந்த வசையெனக் கெய்திடலாமோ?”

பேதையரைக் காணும் வேதனையுடன்,
இராம.கி.

Tuesday, February 09, 2010

பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 3

மறுநாள் காலை வெள்ளென எழுந்து, அணியமாகி, 6-15 மணிக்கெல்லாம் கோயில் வீட்டருகில் வந்துவிட்டோம். அருகிருந்த தேக்கடைக்காரர் வந்தவர்க்கெல்லாம் பரியாகத் தே வழங்கிக் கொண்டிருந்தார். புலர்ந்தும் புலராத அந்த அதிகாலையிலும் கோயில் வீட்டில் கூட்டம் முட்டிக் கொண்டு நின்றது.

[”கிழக்கு மலேசியாவுக்கும் மேற்கு மலேசியாவிற்கும் என இரண்டு காலப் பகுந்தங்கள் (time zones) இல்லாது, ஒரே நேரம் தான் இருக்க வேண்டும்” என்ற நோக்கில் மலேசிய அரசு செந்தர நேரத்தைத் தள்ளி வைத்திருக்கிறது. மெய்யாலும் பார்த்தால், சென்னைக்கும், பினாங்குக்கும் கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் தான் மாறுபட வேண்டும். ஆனாலும் மலேசிய அரசாணைப் படி 2.30 மணி நேர வேறுபாடு இன்றுள்ளது. எனவே காலை 7க்கு மேல் தான் இந்தப் பருவத்தில் பினாங்கில் பொழுது விடியும். அது போல் மாலை 7 க்கு மேல் தான் பொழுது சாயும்.]

அந்தா, இந்தாவென்று காவடிக்காரர் காவடியை எடுத்துக் கொண்டு முதல் மாடியில் இருந்து இறங்கி வர, அடுத்து இன்னும் அரைமணி நேரம் ஆயிற்று. ஊருலவரைத் தூக்கிவந்து தேரில் ஏற்றிக் கட்டி தேரை நகர்த்த இன்னும் அரைமணி நேரம் ஆயிற்று. பல்வேறு தீவங்களும், முடிவில் ஐங்காற் தீவமும் காட்டித் தேர் நகரும் போது 7.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. தேர் அசையத் தொடங்கியவுடன், கூட்டமும் நகரத் தொடங்கியது.

”தேர், தேர்” என்று நான் இங்கு சொன்னாலும், இது நம்மூர்த் தேர்கள் போலப் பெரியதல்ல. இது ஒரு “ரதம்” தான்; ஆனால் வெள்ளியால் ஆனது. இதை இழுத்துச் செல்ல இரண்டு முரட்டுக் காளைகளைப் பூட்டியிருந்தார். [குறிப்பிட்ட தொலைவுக்கு அப்புறம் காளைகளை மாற்றிக் கொள்கிறார்.] இந்தத் தேர் 116/117 ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூர்த் தண்டாயுதபாணிக் கோயிலுக்கெனத் தமிழ்நாட்டுக் காரைக்குடியில் செய்யப் பெற்றுக் கப்பலில்.ஏற்றி அனுப்பப் பட்டதாம். ஏதோ ஒரு குழப்பத்தில் சிங்கப்பூருக்குப் போய்ச் சேராமல், பினாங்கிலேயே இத்தேர் இறக்கப் பட்டுவிட்டதாம். பிறகு சிங்கப்பூர் கோயில் நிருவாகத்தாரும், பினாங்குக் கோயில் நிருவாகத்தாரும், ஓர் உடன்படிக்கைக்கு வந்து பினாங்கிலேயே தேரை நிலைத்துக் கொண்டார்களாம். வேறொரு தேர் மீண்டும் சிங்கப்பூருக்கு எனச் செய்யப் பட்டு, இன்றும் அங்கிருக்கிறது. [இதைத்தான் ஊழ் என்று சொல்வாரோ?]

ஊருலவருக்கு முன் நிவத்திக் காண்பித்த தீவத்தைப் பார்த்து (நிவத்தல் = உயர்த்தல்; இது போல நிவதம்>நிவேதம்>நிவேத்யம்>நைவேத்யம் = உயர்த்திக் காண்பிக்கும் படையல். இச்சொல்லைச் சங்கதம் என்பது தவறு. இது நல்ல தமிழ்ச்சொல்.)

ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே!
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே!
குன்றுருவ வேல்தாங்கி நின்றமுகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே!
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும்
ஆதிஅரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே!

என வேண்டிக் கொண்டு, அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம். [”ஆறுமுகம் ஆன பொருள்” என்பது இடம், வலம், முன், பின், மேல், கீழ் என்ற ஆறு திசைக் குறியீட்டால் உணர்த்தப்படும் முப்பரிமான உலகத்தைப் பரிபாலிப்பவன் முருகன் என்று பொருள்.].

தேர் அங்கிருந்து புறப்பட்டு பினாங்கு வீதியும் (Jalan Pinang) ஆயுதக் கிடங்கு வீதியும் (Jalan Magazine) சேரும் முனையில் உள்ள KOMTAR க்குப் போய் [பினாங்கில் இருக்கும் மிகப் பெரிய நீளுருளை (cylindrical)வடிவான, சற்றுப் பழைய அங்காடி/அலுவற் கட்டிடம். பெருந்தொலைவில் இருந்து சியார்ச்சு டவுனை அடையாளங் காட்டக் கூடியது. அதன் அடியில் உள்ளூர்ப் பேருந்துகள் வந்து போகின்றன.], 

பின் அங்கிருந்து சற்று மேற்கே தத்தோ கெராமத் வீதியில் (Jalan Dato Keramat) இருக்கும் நகரச் சிவன்கோயிலுக்கு நண்பகல் வந்துசேரும் என்று பலரும் சொன்னார். தேர் போகும் சாலை வழியின் தொலைவு 6 . 7 கி.மீ இருப்பதாலும், ஆங்காங்கே பற்றாளர் வேண்டுகோளுக்கு இணங்க ஒவ்வொரு தண்ணீர்ப் பந்தல், கோயில், சீனக்கோயில் என நின்று நின்று அருச்சனைகள், சிதறு காய்களைகளை ஏற்றுக் கொண்டு மெதுவாய் நண்பகலுக்குத் தான் தேர் சிவன் கோயிலைச் சேரும் என்பதாலும், குறுக்கு வழியிற் போனால் 2 கி.மீ. இல் நகரச் சிவன் கோயிலுக்குப் போய்விடலாம் என்றும் சொன்னதாலும், ”சரி, அப்படியே போவோம்” என்று சோழியத் தெரு வழியே நடக்கத் தொடங்கினோம்.

அப்போது எங்களுக்கு முன் போய்க்கொண்டிருந்த உள்ளூர்க்காரர் ஒருவர் எங்களோடு நடந்த வண்ணம் முகமன் விசாரித்து ”எங்கு போகிறீர்கள்” என்று கேட்டார். நாங்கள் “ஊரைப் பார்த்துக் கொண்டே குறுக்கு வழியிற் சிவன் கோயிலுக்கு நடந்து போகிறோம்” என்று சொல்ல, அவர் “நான் அந்தப் பக்கத்திற்குத் தான் சீருந்தில் செல்கிறேன். உங்களுக்கு மறுப்பில்லை என்றால் என்னோடு வரலாம், போகும் வழியில் இறக்கிவிட்டுப் போகிறேன்” என்றார். தேரை விட்டு 400, 500 அடிகள் கூட நடந்திருக்க மாட்டோம்; சீருந்தில் ஏறிக் கொள்ளும் வாய்ப்பு வந்தது.

அந்தத் தமிழ் நண்பர் மலேசிய நாவாய்ப்படையில் (Navy) நாயகமாய் (Captain) இருப்பவர். பினாங்கில் இருந்து 3 மணிப் பயணத்தில் இருப்பதாய்ச் சொன்னார். பினாங்கு சொந்த ஊரென்றும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பூசத்திற்குப் பினாங்கு வந்துவிடுவேன் என்றும் சொன்னார். கலிங்க நாயகம் பள்ளிவாசல் (Masjid Kapitan Keling) தொடங்கிச் சோழியத் தெரு (Lebuh Chulia), பினாங்கு வீதி (Jalan Penang), பர்மா வீதி (Jalan Burma), மக்கெலிசுடர் ஒழுங்கை (Lorong Maclister - Maclister Alley/Lane), மக்கெலிசுடர் வீதி (Jalan Maclister), புது ஒழுங்கை (Lorong Baru) வழியாகச் சீருந்தில் போகும் போது, பினாங்கு பற்றிய சில கூடுதல் விவரங்களையும், வெள்ளித்தேர் பற்றியும் சொன்னார். கெலிங் என்பது தமிழரைக் குறிக்கும் சொல்; கலிங்கரை அல்ல, யாரோ ஒரு சிறந்த தமிழர் நாயகம் நிறுவிய பள்ளி வாசலாம் அது. தமிழ் முசுலீம்கள் வந்து தொழுமிடம் என்றும் சொன்னார். வெளியே பார்க்க அழகுற அமைந்திருந்தது.

அமெரிக்க அவாயில் இருக்கும் “Pearl Harbour" மேல் சப்பானியர் குண்டு போட்ட 4/5 நாள்களில் பினாங்கின் மேலும் குண்டுபோட்டதாகவும், அப்போது அருகிருக்கும் பல கட்டுமானங்கள் இடிந்துபோக, இந்தத் தேர் இருந்த கொட்டகையும், தேரும் அழியாது காப்பற்றப் பட்டது பற்றி அவருடைய தந்தையார் சொன்ன கதையை எங்களுக்குச் சொல்லி ”அவ்வளவு சிறப்பு வாய்ந்த தேர் இது” என்று சொல்லி பினாங்கு மக்கள் இந்த விழாவோடு உணர்வு பூர்வமாய் நெருங்குவதைச் சொன்னார். வியந்து கொண்டோம். சிவன் கோயிலுக்கருகில் எங்களை இறக்கிவிட்டார்.

அச் சிவன் கோயிலுக்கு எதிரே ”Times Square" என்ற பெயரில் ஒரு பெரிய ”உள்ளமைத் திட்டைப் புறத்தெற்று (Real Estate project)” உருவாகிக் கொண்டிருக்கிறது. நிழலங்காடியும் (mall), அதன் மேல் தங்கும் தளவீடுகளும் (condominium) எனப் பெரிய கட்டிடம் ஒன்று அங்கு உருவாகி அடுத்தாற்போல் இரண்டோ, மூன்றோ வானுயர் கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. .

சிவன் கோயிலுக்குள்ளும், அதற்கு முன்னால் அருகிலுள்ள காமாட்சியம்மன் கோயிலுள்ளும் போய் வழிபாடு செய்துகொண்டு, பின் ”Times Square" இல் இருந்த நிழலங்காடிக்கு வந்து அக் கட்டிடத்தின் பெருநிழலில் ஒதுங்கினாற் போல் நின்று கொண்டோம். அப்புறம் பார்த்தது என்னை மிகவும் கவர்ந்தது.

அன்புடன்,
இராம.கி.

Monday, February 08, 2010

பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 2

விடுதிக்கு வந்து சேர்ந்த அரைமணி நேரத்திற்குள் மெய்யாற்றிப் புதுப்பித்துக் கொண்டு, விக்டோரியாத் தெருவில் (Lebuh Victoria) இருந்து சோழியத் தெருவிற்குச் (Lebuh Chulia) சிறிது நடந்து வந்து, திரும்பி பினாங்குத் தெருவின் தென்முனைக்கு வந்துவிட்டோம். சோழியத் தெருவும் பினாங்குத் தெருவும் சேர்ந்து குறுக்குவெட்டும் சந்திப்பில் இருந்து நாலைந்து கட்டிடங்கள் தள்ளி வெள்ளித்தேர் புறப்படும் கோயில் வீடு இருந்தது. கோயில் வீட்டிற்கு அடுத்தாற் போல் விருந்தினர் உணவுகொள்வதற்கான கிட்டங்கி இருந்தது.

மாலை 7.15 அளவில் ஈரொழுங்கையால் (two lane) அமைந்த பினாங்குத் தெருவின் நெடுகிலும், சோழியத் தெரு சந்திப்பிற்கு அருகிலும், அடைந்து கிடக்கும் பெருங்கூட்டம். ஆங்காங்கு கூடியிருந்தோருக்குச் சாப்பிட ஏதேதோ பரியாகத் (free) தரும் தொண்டர்கள். அடுத்த நாள் காலையிற் புறப்படும் வகையில், அலங்காரம் செய்த தேர் கோயில்வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தது. கோயில் வீடு என்பது ஓர் இரண்டு மாடிக் கட்டிடம். இரண்டாம் மாடியில் தண்டாயுதபாணியின் திருமுன்னிலை (சந்நிதி) இருக்கிறது. கிட்டத்தட்ட 72 காவடிகள் முதல் மாடியில் வைக்கப் பட்டிருந்தன.

காவடிப் பூசை என்பது  மாலை 6-15 க்குத் தொடங்கி ஒரு மணி நேரம் நடந்திருக்கிறது. பினாங்குத் தெருவெங்கும், டி.எம்.எசும், பெங்களூர் இரமணியம்மாளும் இன்னும் பல்வேறு இசைஞர்களும், ஒலியுருவத்தில் செவியை நிறைத்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும் பழைய பாட்டுக்கள். இப்பொழுதெல்லாம் அத்தகைய பாட்டுக்களை யாரும் பாடுவதில்லை. எல்லா இடத்திலும் குத்துப் பாட்டுக்களும், மேலையிசைப் பாட்டுக்களுமாய் ஆகி விட்டன. பழைய சந்தப் பாட்டுக்களும், பற்றிப் (பக்திப்) பாடல்களும் அரிதாகவே இப்போது கேட்கின்றன.

என் மனையாளின் ஒன்றுவிட்ட அண்ணன் இந்தியாவில் இருந்து வந்து இங்கு காவடியெடுப்பதாய் நேர்ந்து கொண்டிருந்தவர்; இரண்ம் ஆண்டு காவடி எடுக்கிறார். அங்கு நாங்கள் போனபோது சட்டென்று கூட்டத்தில் எங்களை அடையாளம் கண்டு, அருகில் வந்து அணைத்துக் கொண்டார். அவரிடம் காவடி ஏற்பாடுகள் பற்றி அறிந்தபிறகு, வரிசையில் நின்று கோயில் வீட்டின் மேலே பூசை முடிந்து திருநீறு கொடுப்பதைப் பெற்றுக் கொள்வதற்கு முற்பட்டோம். 

குறுகிய கதவும் மாடிப்படியுமாய். இருந்தாலும் ஏற ஒரு வரிசையும், இறங்க ஒரு வரிசையுமாய் விழையாரத்தார் (volunteers) ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். மேலே வரிசையாக அடுக்கிவைக்கப் பட்டிருந்த மயிற்பீலிக் காவடிகளைப் பார்த்துவிட்டு, அங்கிருந்த முருகனடியாரிடம் திருநீறும், படையற் சோறும் பெற்றுக் கொண்டு, மேலே இரண்டாம் மாடிக்குப் போய் தண்டாயுதபாணியின் ஊருலவத் (உற்சவத்) திருமேனியைக் கண்டு வணங்கி வந்தோம். 

சீனர்கள், தமிழர்கள் என்று பலரும் அங்கு அர்ச்சனைக்குத் தேங்காய், பழத் தட்டுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். கீழே வந்தால், அங்குமிங்குமாய்த் தெரிந்தவரின் முகங்கள் மிகப் பல. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, அவ வழி இன்னும் மற்றவரை அறிமுகம் செய்து கொண்டு சிறிது நேரம் போனது.

இந்த ஆண்டு ஏர் இந்தியா எக்சுபிரசும், ஏர் ஏசியாவும் நம்முரிலிருந்து மலேசியா செல்லப் பறனைக்கு ஆகும் செலவை எக்கச் சக்கமாய் குறைத்ததால், திருச்சி (6 மாதங்களுக்கு முன்பு பயணச்சீட்டு வாங்கியிருந்தால் ஏர் ஏசியாவில் கோலாலம்பூர் போகவர ரூ 4500 தானாம்). கொச்சி (திருச்சியைப் போலவே பயணச்சீட்டுச் செலவு) சென்னை (2 மாதங்களுக்கு முன்பு பயணச்சீட்டு வாங்கியிருந்தால் கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்சுபிரசில் போகவர ரூ 10500 தான்) எனப் பல்வேறு ஊர்களில் இருந்து 400, 500 பேர் பறனையில் தைப்பூசம் பார்ப்பதற்கென்றே பினாங்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

முன்னே சொன்னது போல் பழைய இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைச் சீமைகளில் இருப்போர் பலருக்கும் மலேசியா எனும் நாடு பல வகையில் உணர்வொட்டிய உறவு கொண்டதால், வரும் ஆண்டுகளில் இத் தொகை இன்னும் பெருகும் என்றே தோன்றுகிறது. முன்னோர் போய்வர இருந்த ஊரைப் பார்த்துவிட வேண்டும் என்று பிறங்கடையார் (பரம்பரையார்) முயலும் இவ்வகைப் பயணங்கள், பயணச்சீட்டுச் செலவைக் கூட்டாத வரையில் மென்மேலும் தொடரலாம். தமிழ்நாட்டிலிருந்து தில்லிக்கு இருள்வாய்த் தொடரிப் (Railway Train) பயணம் போய் வருவது மாறி இந்தப் பறனைப் பயணங்கள் இப்போதெல்லாம் எளிதாக ஆகிப் போயின. இனிக் கூட்டம் கூடிக் கொண்டு தான் போகும். நம்நாட்டிலிருந்து போனவர் போக திருவிழாவைக் குறிப்பாக அலகுக் காவடிகளைப் பார்த்து வியந்து போக வந்து சேரும் வெளிநாட்டினர் கூட்டம், உள்ளூர்க்காரர் கூட்டம் எனப் பல்கிப் பெருகுவது இயற்கை தான்.

[தமிழ்நாட்டிலும் முன்பு பழனி போன்ற அறுபடைவீடுகளுக்குக் காவடி எடுத்துப் போவாரில் அலகுக் காவடிகள் இருந்தன. பின்னால் இந்திய உச்ச நீதிமன்றம் ஏதோ ஒரு வழக்கிற் போட்ட தடையால் அலகுக் காவடிகள் இந்தியாவில் தடை செய்யப் பட்டிருக்கின்றன. ஏன் இந்தத் தடை என எனக்கு விளங்கவில்லை. இப்போது மயிற்பீலிக் காவடியும், மேலுக்குச் சோடித்த காவடிகள் மட்டுமே பழனியில் அனுமதிக்கப் படுகின்றன. தென்கிழக்கு ஆசியாவிற் பார்க்கும் வித விதமான காவடிகள், பெங்களூர் இரமணியம்மாள் பாட்டில் பட்டியலிடப்படும் காவடிகள், நம்மூரில் இப்போதெல்லாம் கிடையா. இத் தடை மலேசியா, சிங்கை, இந்தோனேசியா, தாய்லந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற தமிழர் தைப்பூச விழா கொண்டாடும் நாடுகளிலில்லை.]

உள்ளூர்க்காரருக்கு 3 தைப்பூச விழாவிடங்கள் உள்ளன. மலேசியாவின் நடுவில் இருப்போரெல்லாம் கோலாலம்பூர் பத்து மலைக்கும் [அந்தக் கொண்டாட்டம் இன்னும் மாணப் பெரியது. நுல்லியன் (million) கணக்கில் மக்கள் கூடுவார்.] தெற்கில் இருப்பவர் ஜோகூர், சிங்கையிலும், வடக்கில் இருப்பவர் பினாங்கிலும் கூடுவது வழக்கமாய்ப் போனது. இத் திருவிழாவில் தமிழர் மட்டுமன்றி சீனர், மலாய்க்காரர் எனப் பலரும் கலந்து கொள்கிறார். தமிழர் 60 % எனில், சீனர் 30 % உம், மலாய்க்காரர் 10 % உம் இருப்பார்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னெலாம் மாநிலத்தின் மலாய் ஆளுநரே பூசத் திருவிழாவில் கலந்து கொள்வாராம். இப்போது இல்லை. இம் மாநிலமும், அருகிலுள்ள உள்ள கெடா மாநிலமும், இவற்றை ஒட்டி வடகோடியில் இருக்கும் பெர்லிசு மாநிலமும் இப்போது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களாகிப் போனதால், மலாய்க்காரரிடமும், நடுவரசு ஆள்வோரிடமும், சற்று தயக்கம் இருக்கிறது. பினாங்கு மாநிலத்தின் முதல்வர் ஒரு சீனக்காரர்; துணை முதல்வர் இராமசாமி ஓர் எழுச்சிமிக்க தமிழர்.

“அதெப்படி தைப்பூசப் பண்டிகையில் இசுலாம்காரர் கலந்து கொள்ளலாம்?” என மத குருமார் கேட்டது தான் இப்போது ஆளுநர் கலந்து கொள்ளாததற்குக் காரணமாம். ஆனால், அதையெல்லாம் தூக்கியெறிந்து, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, (கூடவே நலிந்து கிடக்கும் மலேசிய இந்தியக் காங்கிரசைத் தூக்கி நிறுத்துமாப் போலத் தமிழர் வாக்குகளை மனத்தில் வைத்து,) மலேசியத் தலைமையமைச்சர் நஜீப் இவ்வாண்டு கோலாலம்பூர் பத்துமலைத் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார். 

இத்தனைக்கும் ”மலேசியக் கிறித்துவர் தாங்கள் தொழும்போது, அல்லா என இறைவனை அழைக்கக்கூடாது, முசுலீம்கள் மட்டுமே அப்படி அழைக்கலாம்” என்ற எக்கியக் (extreme) கொள்கை கொண்ட ஒருசில முசுலீம் குழுக்கள் மற்றோரோடு முரண்பட்டு, உயர்நீதி மன்றத் தீர்ப்பிற்கும் மாறாய் போராட்டத்தில் ஈடுபட்டு, சில கிறித்துவத் தேவாலயங்களைத் தகர்த்திருக்கும் பரபரப்பிற்கு நடுவில் தைப்பூசத்தில் நஜீப் கலந்து கொண்டுள்ளார். [அதற்கு ஒருவாரம் முன்னால், தில்லிக்கும், சென்னைக்கும் நஜீப் வருகை தந்து, கலைஞரை கோபாலபுரத்தில் பார்த்து, வரவேற்பில் மகிழ்ந்தது வேறு கதை.]

பொதுவாய் மலாய்க்காரர் தைப்பூசத்திற் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததுமாய் எண்ணிக்கைகள் ஏறி இறங்கி வந்துள்ளன. இவ்வாண்டு பல மலாய்க்காரர் தேர்போன இடங்களில் அர்ச்சனை செய்ததை நான் பின்னால் பார்த்தேன். சீனர்களோ சொல்லவே வேண்டாம்.....ஒரே பற்றி (பக்தி) மயம். அதற்கு அப்புறம் வருவோம்.

பின் 9.00 - 9.30 மணியளவில் முண்டியடித்து கிட்டங்கிக்குள் நுழைந்து சாப்பாட்டுப் பந்தியில் அமர்ந்து இரவு உணவை உண்டு முடித்தோம். சும்மா சொல்லக் கூடாது எளிமையாய் இருந்தாலும், சுவையான நம்மூர்ச் சாப்பாடு. அடுத்த நாள் காலை 6 மணிக்கெலாம் தேரில் ஊருலவரை கொண்டுவந்து வைப்பதற்கு முன்னால் வந்து சேர்ந்துகொள்வதாய்த் தெரிந்தவரிடம் சொல்லிக் கொண்டு விடுதிக்குத் திரும்பினோம்.

அன்புடன்,
இராம.கி.

பாக்குத் தீவில் சிதறுகாய்த் திருவிழா - 1

பொதுவாகக் கூட்டம் நிறைந்த இடங்களுக்குத் திருவிழாக் காலங்களில் பெருங்கோயில்களுக்குள் உள்நுழைந்து நெரிசற் படுவதை நான் தவிர்ப்பேன். [இப்படித் தவிர்ப்பதால், திருவிழாக்களை ஒட்டிய குறிப்பிடத்தக்க பட்டறிவுகளைப் பெறாமலே போகக் கூடும், அது ஓர் இழப்பு, என்பது வேறு கதை.] அதற்கு மாறாய், அருகிருக்கும் சிறு கோயில்களுக்குப் போய்வந்து விடுவேன். இம்முறை ”அதெல்லாம் கிடையாது; தைப்பூசத்திற்கு பினாங்கு போகத் தான் வேண்டும்” என்று மனையாள் விருப்பம் தெரிவிக்க, ”இவ்வளவு காலம் நான் இழுத்த இழுப்புக்கு நெகிழ்ந்து கொடுத்தவளுக்கு நன்றிக்கடனாய் நான் நெகிழ்ந்து கொடுக்காவிட்டால் எப்படி?” யென்று நானும் ஒப்பிக் கொண்டு கோலாலம்பூர், சிங்கை, பினாங்கு என்று சுற்றக் கிளம்பினோம். இப்படி நீண்ட தொலைவில் வெளியூர்ப் பயணம் போவது எப்போதாவது அருகி நடப்பது தான்.

28 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் சிங்கையில் இருந்து ஒரு பேருந்திற் புறப்பட்டு அன்றுமாலை 6.45 மணியளவில் பினாங்கிலுள்ள தங்கும் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தோம். விக்டோரியாத் தெரு. விக்டோரியா இண் (Victorio Inn). இதற்கு முன்பு 4முறை இத்தீவைப் பார்த்திருந்தாலும், தீவின் பெருநகரான சியார்ச்சு டவுனை (ஒருகாலத்தில் Tanjong என்றழைக்கப்பட்ட சிற்றூர் இன்று George Town ஆகப் பெருநகராய் நிற்கிறது.) தைப்பூச விழாக் கோலத்தில், தேர்போகும் வழியில் எங்கு பார்த்தாலும்,

தண்ணீர்ப் பந்தல்,
கொடையாளர் விளம்பரங்கள்,
திருவிழாப் பதாகைகள்,
அலங்காரத் தோரணங்கள்,
விடுமுறையோடு சேர்ந்த கடையடைப்பு,
ஒழுங்கை, தெரு, வீதி, சாலையெங்கும் பரபரப்பு,
வழிப்போக்கரின் கவனமற்ற ஒயில்நடை,
பத்தில் இருவர், மூவராவது குவியறையோடு (camera) அங்குமிங்கும் அலைகிறார். பளிச், பளிச், “இங்கே பாருங்க, கொஞ்சம் சிரிங்க......”
சாலையின் நடுவத்திலும் (median), இரு பக்க அஞ்சடியிலும் இன்னாருடையது எனும் அடையாளக் குறிப்போடு கிடக்கும் தேங்காய்க் குமியல்கள், (அஞ்சடி என்பது மலேசியாவில் platform நடைமேடையைக் குறிக்க உருவான கலைச்சொல். மற்ற ஊர்த் தமிழாக்கங்களில் நான் பார்த்ததில்லை)

- என்ற விந்தைத் தோற்றத்தில் நான் பார்த்ததில்லை. மூச்சை முட்டவைக்கும் முன்னேற்பாடுகள். அம்மம்மா!

அத் தீவை காலப்போக்கில் விதம் விதமாய்ப் பாக்குத் தீவு (Pulau Pinang), பிரின்சு ஆவ் வேல்சு தீவு (Prince of Wales Island), முத்தாரத் தீவு (pulau Muthiara, Orient Island of Pearls) - என்று பல பெயரிட்டுப் பொருளோடு அழைத்திருக்கிறார்.

பாக்குத் தீவு என்பது புதலியற் (botany) கரணியத்தால் முதலில் ஏற்பட்ட பெயர். தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக மலேசியா, பிலிப்பைன்சில் தோன்றி, மற்ற நாடுகளுக்குப் பாக்குமரம் பரவியிருக்கக் கூடும் என்றே புதலியலார் ஊகிக்கிறார். இத்தீவின் கடற்கரையைச் சுற்றிப் பாக்குமரம் பெரிதாய் வளர்ந்தது போலும். தீவிற்குள் நுழைந்த பலருக்கும், பாக்கு மரங்கள் சட்டென்று காட்சியளித்திருக்கக் கூடும். பாக்கு பற்றிய குறிப்பு சிலம்பிலேயே வருகிறது. அம்மரம் நம்மூருக்கு எப்போது வந்து சேர்ந்தது என வரலாறு சொல்லமுடியாது. பாக்குத் தீவு எனும் பொருளில் மாலத்தீவில் Fua Mulaku என்ற பெயரிலும், இந்திய அசாம் மாநிலத்தின் தலைநகராய் Guwahati - யும் அமைந்திருப்பதாகச் சொல்வார்.

அடுத்த பெயர் ஏற்பட்ட கதை வரலாற்றுச் சுவையாரமானது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் வழி புறப்பட்டுப் போன, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பணியைச் சேர்ந்த விரான்சிசு லைட் (Francis Light) என்பவர், கடார அரசரை (= கெடா சுல்தானை) ஏமாற்றி, அவர்மகளை மணந்து, இத்தீவைச் சீதனமாய்ப் பெற்று, பின்னால் படைகள், உடன்படிக்கை, பொய்யுறுதி, --- இத்தாதிகள் மூலம் தீவிற்கு அப்பால் முகனை (main) நிலத்தில் இருந்து மேலும் இரு மடங்கு நிலம்பெற்று, மொத்தத்தில் நாமெல்லாம் நன்கு படித்த ”இராபர்ட் கிளைவ் வேலைகளைச்” செய்து, இத் தீவிற்கு மேன்மை தாங்கிய பிரிட்டிசு இளவரசரின் பட்டப் பெயரைச் சூட்டியிருக்கிறார். படிக்கப் படிக்க நம்மூர்ப் பாளையக்காரர் ஏமாந்த கதை அப்படியே மனத்திரையில் ஓடுகிறது. எப்படி ஒரே கதையை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வெள்ளையர் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலகட்டங்களில், நடத்தி நிலம் கவர்ந்தார் என்பது நம் ஆழ்ந்த வியப்பிற்கும் ஆய்விற்கும் உரியது.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னையில் இருந்து வெள்ளையர் நாட்டாமை நடைபெற்றிருக்கிறது. அந்தமானுக்கு முன்னால், இத் தீவுதான் இந்திய விடுதலைப் போராளிகளைச் சிறைவைத்த இடமாகும். எம் சிவகங்கை மருதுபாண்டியரின் கொடிவழியைப் பூண்டோடு ஒழித்துப் பின் எஞ்சியிருந்தோரைக் கொண்டுபோய்ச் சேர்த்த இடமும் பினாங்குத் தீவு தான். மலேசியாவின் பெருந்தலைவர் (அன்றும் இன்றும்) பலரும் எழுந்ததும் இந்தத் தீவு, அருகிலுள்ள நெற்களஞ்சியமான கடார மாநிலமும் தான்.

தஞ்சாவூர்க்காரர் மாதிரி கடாரத்தாரை நினைத்துக் கொள்ளுங்கள். கடாரம், பினாங்கு இரண்டிலும் பழைய இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைச் சீமைகளின் மிச்ச சொச்சங்கள், தொட்டுத் தொடர்புகள், பேச்சுவழக்குகள், மரபுப் பண்பாடுகள், மூன்று நான்கு தலைமுறைக்கு அப்புறமும் பெரிதும் வழங்குகின்றன. 

“வாங்கண்ணே, எப்ப வந்தீக? பசியாறிட்டிகளா?.....”

மூன்றாவது பெயர், கும்பணியின் ஆட்சிக்குள் பினாங் மாநிலம் பெருகி வளர்ந்த பிறகு, அதன் துறைமுகம், மலாக்கா நீரிணையின் (Malacca starits) கிடுக்கான (critical) இடத்தில் இருந்துகொண்டு, ஊடுவரும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திச் சுங்கம் பெற்றிருக்கிறது. அப்படிப் பெற்ற செல்வத்தையும், பெருகிவளர்ந்த வணிகத்தையும் குறிக்கும் முகமாய் ஏற்பட்ட பெயர் தான். முத்தாரத் தீவு எனும் நல்ல தமிழ்ப்பெயர். மலாய் மொழியில் pulau Muthiara என்று அப்படியே எழுத்துப் பெயர்ந்திருக்கிறார். ஆங்கிலத்திலோ Orient Island of Pearls என்று மொழிபெயர்ந்திருக்கிறார். அப் பெயருக்குள் இருக்கும் தமிழ்ப் பங்களிப்பு இன்றைக்கு யாருக்குத் தெரிகிறது சொல்லுங்கள்? 

பினாங்குத் தீவில் இன்றைக்கு 10 விழுக்காடாய் இருக்கும் தமிழர் அத் தீவின் வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 180, 190 ஆண்டுகள் உயிர் கொடுத்திருக்கிறார்.
நீரிணையின் தொடக்கத்தில் பினாங்கும், நீரிணையின் கடைசியில் சிங்கையும் இருந்து ஊடேபோன முழுப் போக்குவரத்தையும் கட்டுப் படுத்திய காலம் இன்று மாறிவிட்டது. 

பினாங்கின் ஒளி கிள்ளானுக்குப் (Port Klang) போய்விட்டது. [S.S.Rajulaa, S.S.State of Madras, M.V.Chidambaram என்பவை எல்லாம் எம் மக்களிடையேமக்கிப் போன பழங்கதைகள்......

சென்னையில் இருந்து பினாங்கிற்குச் சென்ற வாரம் ஏர் ஆசியா நேரடிப் பறனைப் போக்குவரத்தைத் தொடங்கியிருக்கிறதாம். இது ஒரு புதுக்கதை எழுப்புகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.] 

பினாங்குத் தீவின் துறைமுகச் செல்வாக்கு இன்று குறைந்தாலும் சிங்கைத் துறைமுகத்தின் செல்வாக்கு சற்றும் குறையவில்லை. சிங்கையின் தொடக்க காலத்திலும் தமிழர் பங்களிப்பு மிகப் பெரிதே.

அன்புடன்,
இராம.கி.

Saturday, January 09, 2010

மாமூலனார் - 3

நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி
‘நிலம்புடை பெயர்வது அன்றுகொல், இன்று?” என
மன்னுயிர் மடிந்த மழைமாறு அமையத்து
இலை இல ஓங்கிய நிலையுயர் யாஅத்து
மேற்கவட்டு இருந்த பார்ப்பினங் கட்கு
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண்ணுமிழ் கழுகின் கானம் நீந்தி
‘சென்றார்’ என்பிலர் - தோழி! - வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர்த் தேஎத்த பல்மலை இறந்தே
- அகம் 31
- திணை : பாலை
- துறை: பிரிவிடை ஆற்றாளாயினள் என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தன் தோழிக்குச் சொல்லியது.
- துறைவிளக்கம்: வேந்து வினை காரணமாய்க் காவற் தொழிலுக்கெனத் தலைவன் பிரிந்து சென்றான், அந்தப் பிரிவாற்றாது தலைவி வருந்தினாள்;  “வினை வயின் ஆடவர் பிரிந்தபோது, இப்படி நீ அழலாமோ? - என்று எல்லாப் பெண்டிரும் என்னிடம் கூறுகிறாரே, :அவரும் அக்காட்டின் வழி சென்றார் - என்று கூறுவாரல்லரே?” எனத் தலைவி மேலும் வருந்திக் கூறியது.

தெளிவுரை” (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

நெருப்பாய்ச் சிவந்த வெய்யொளிர்ச் சூரியன்
புலங்கடை கருகி மடங்குமாறு சுடுகிறது;

“நிலம் இதோ, புடைத்துப் பிளக்கிறதா?”
என்று கேட்பதுபோல்,
நிலத்து உயிர்கள் நொய்ந்து மடிய ஏதுவாய்,
மழை பெய்யாக் காலம்;

குறும்ப நாட்டு வயவர்,
காட்டுப்பாதையில் எதிர்ந்தாரை வில்லிட்டு வீழ்த்த,
செவ்வலரி மாலை இட்டது போல்,
புண்ணுமிழ் குருதி பரவி,
தசையொழுங்கற்று, குறைப்பட்டுக்
கிடக்கும் யாக்கைகளின்
கண்களைக் கொத்தும் கழுகுகள், 

இலையருகி, ஓங்கி வளர்ந்த,
யா மரத்தின் உயரக் கிளைகளில்
தஞ்சமடைந்த குஞ்சுகளுக்கு
அவற்றை ஊட்டுகின்றன. 

ஆனாலும், தோழி!
விற்போரில் ஈடுபட்டு,
வலிய ஆடவர்
வென்றியொடு வாழும்,
இக்காட்டின் வழியே
அவரும் "தமிழ்மூவேந்தர் காக்கும்
மொழி பெயர் தேயத்தின்
பன்மலைகள் கடந்து,
சென்றார்” என்று உரைப்பார் அல்லரே, ஏன்?

பொதினியின் பாதையை அகம் - 1 இலும், துளுநாட்டுப் பாதையை அகம் 15- இலும் குறிப்பிட்ட மாமூலனார் இங்கே குறும்ப நாட்டு பாதையை 31 ஆம் பாடலில் விவரிக்கிறார். குறும்பர்நாடென்பது இன்றைய ஆந்திரம், கன்னடம் இவற்றின் இருமருங்கிலும் பரவிய இராயல சீமையாகும். சோழர், பாண்டியர் என்னும் இருநாட்டாரும், கொங்குநாட்டைக் கடந்து வெய்யிலூர் (இன்றைய வேலூர்) வழியே, இராயல சீமைக்குள் புகுந்து வடநாடு ஏகலாம். அன்றேல் தகடூர் (தர்மபுரி) வழியேயும் வடநாடு செல்லலாம்.

இராயல சீமை வழி போவது, இன்றுமட்டுமல்ல, அன்றும், இருப்பதற்குள், கடின வழியாகும். வேனிற் காலத்தில் வெம்மை கூடி பாலை படர்ந்த பெருவெளி/வழி இது. மழை என்பது எப்போதோ ஏற்படும் பைதிரம். குறும்பர் என்போர் ஆறலைக்கள்வராய் (வழிப்பறிக் கள்வராய்) இருந்தவர். குறும்பரை குருப என்று தெலுங்கிலும், கன்னடத்திலும் குறிப்பர். மலையாளத்தில் இவர் குறுமர் என்று அழைக்கப்படுவார். இன்றையக் கேரளத்தின் வயநாட்டிலும், தமிழ்நாட்டில் நீலகிரிப் பக்கமும் பழங்குடியினராய் இன்றும் இருக்கிறார். மலைப் பாதையில் இருந்து கீழிறங்கி இன்றைய இராயல சீமையில் இவரின் பெருஞ்சாரார் கம்பளம் பின்னும் இடையராய் மாறினார்.

இவர் பற்றி மிகுந்த விவரம் எட்கர் தர்சுடனின் (தமிழாக்கம் முனைவர். க. ரத்னம்) ”தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் - தொகுதி நான்கு”, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வெளியீட்டில் பார்க்கலாம். குறும்பர் சற்றே குட்டையானவர். குறும்பு என்பது அவ்வளவு வளமில்லாத, முள்ளும் செடியும், புதரும் விரவிய, சிறுகுன்றாகும். ”கல்லுடைக் குறும்பு” எனும் சொற்றொடர்  கவனிக்கலாம். இவருக்குச் சரியான வாழ்வு ஆதாரம் அன்று கிடையாது. பின்னால் ஆடுகளை மந்தையாக்கி, ஆட்டு மயிரில் இருந்து முரட்டுக் கம்பளம் செய்யும் நெசவு நிலைக்கு மாறிக் கொண்டனர். உரோமம் பறிப்பதற்காக வளர்க்கப்பட்ட குறும்பர்களின் ஆடு, குறும்பாடு என்றே அன்று சொல்லப் பட்டது.

வயவரென்போர் வீரர். இற்றை இராயலசீமைக்கு வடக்கே மாராட்டம் போயின்,  அன்றைக்கும் மொழிபெயர் தேயமே. மொழிபெயர் தேயம் எனில் எதோ வேற்று மொழி பேசும் இடம் என்று பொருளல்ல. மொழி பெயரும் தேயம் மொழிபெயர் தேயம். அதாவது அங்கே தமிழ் பெரிதும் பேசப்பட்டு இருக்கும்; ஆனால், கொஞ்சங் கொஞ்சமாய் நகர, நகர, மொழி பெயர்ந்து கொண்டிருக்கும். இங்கே வடக்கிற் பெயருகிறது. இற்றைக்கு 2000 ஆண்டுகள் முன் அங்கு தமிழ்மொழி பெயர்ந்து மாறிய மொழி பாகதமே. நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்), குறிப்பாக வசிட்டி மகன் என்னும் வசிட்டி புத்ர தம் நாணயத்தின் ஒரு பக்கம் தமிழிலும், இன்னொரு பக்கம் பாகதத்திலும் அச்சு அடித்திருந்ததை அவதானித்தால், மொழிபெயர் தேயத்தில் தமிழும், பாகதமும் அருகருகே வழங்கிய மெய்மை புலப்படும். முடிவில் இக்கலப்பு கூடிப்போய், கன்னடம், தெலுங்கு எனும் இரு தமிழிய மொழிகள் தோன்றின. [பட்டிப்புரோலு எனும் ஆந்திர இடத்தில் பாகதம், தமிழ் என்ற இரண்டுமே புழங்கியது பெருமி / தமிழிக் கல்வெட்டின் வழி தெரிகிறது

புலங்கடை என்பது வீட்டிற்கு வெளியே, புறத்தே இருக்கும் பெருவெளி இன்று புழக்கடை என்று தமிழ்நாட்டின் ஒருசாரார் இதைப் புழங்குகிறார். புலங் கடையும், புழக்கடையும் தொடர்புள்ள ஆனால் வெவ்வேறு சிந்தனையிற் தோன்றிய சொற்கள்.. மண்டிலம் என்ற சொல் இங்கு சூரியனைக் குறிக்கும்.

குறும்பநாட்டு வயவர் ஆறலைக் கள்வராய் ஆன காரணத்தால், பாதையின் ஊடே போகும் சாத்துக்களை (வணிகர் கூட்டம்; traders caravans) மறைந்திருந்து வில்லிட்டுக் கொன்று, சாத்துப் பொருள்களைக் கொண்டு செல்லும் கள்வர் போலவே இருந்திருக்கிறார். எனவே பாதைக்கு அருகில் இறந்தோர் யாக்கைகள் குலைந்து கிடப்பதும், அவற்றின் உறுப்புக்களைக் கொத்தி எடுத்துச் செல்லும் காவுண்ணிப் பறவைகள் (scavenging birds) அங்கு திரிவதும் இயல்பாய் நடப்பதே. கழுகு ஒரு காவுண்ணிப் பறவையாகும். யாக்கைகளில் இருந்து கண்ணைக் கவ்விக் கொண்டு போய் தம் இளம் பார்ப்புகளுக்கு [=குஞ்சுகள்; பொதுவாய் எந்த உயிரினமும் இளமையில் சற்று வெளிறிய நிறத்திலும், அகவை கூடும்போது அடர் நிறத்திலும் அமைவது இயற்கை. வெளிறிப் போனது = பால்போல ஆனது என்ற கருத்திலேயே பார்ப்பென்ற சொல் பறவைக் குஞ்சுகளைக் குறித்தது. ”வெளிறிய இனத்தார்”  பொருளில் தான் பெருமானருக்கு (brahmins) பார்ப்பனர் என்ற சொல்லும் ஏற்பட்டது.]

யாமரம் பற்றி சொல்லாய்வறிஞர் ப.அருளி அவருடைய “யா” என்னும் பொத்தகத்தில் [ப.அருளி, அறிவன் பதிப்பகம், காளிக்கோயில் தெரு, தமிழூர், புதுச்சேரி 605009, 1992] மிக விரிவாகச் சொல்லியிருக்கிறார். படிக்கவேண்டிய பொத்தகம் அது. யாமரம் அதிகமிருந்த காரணத்தால் இந்தொனேசியாவின் யாவகத் தீவிற்குப் பெயருண்டாயிற்று. (=ஸ்யாவகம்>சாவகம்>ஜாவகம்). இந்தத் தீவுகளின் பலவற்றிற்கும் தமிழ்த் தொடர்பான பெயர்களே உண்டு.

“தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேயத்தே” எனும் சொற்றொடர் நமக்கு ஓர் ஆழ்ந்த வரலாற்றுச் செய்தி உரைக்கிறது. கலிங்க அரசன் காரவேலன் தன் கல்வெட்டில் [இதன் காலம் கி.மு.165 என்றும், கி.மு 117க்கு அருகில் என்றும், இல்லையில்லை கி.மு.30-40க்கு அருகில் என்றும், முவ்வேறு கருத்துக்கள் உண்டு. நான் உறுதியாகக் கி.மு.30-40 என்னும் காலக் கணிப்பை மறுப்பேன். மற்ற 2 காலக் கணிப்புக்களையும் நான் இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். எனவே என் முன்னிகையை இப்பொழுது தவிர்க்கிறேன்.] தமிழ் மூவேந்தரின் முன்னணி [த்ராவிட சங்காத்தம்] 1300 ஆண்டுகள் இருந்தது ஆகவும், அதைத்  தான் முதலிற் குலைத்ததாகவும், கொங்குக் கருவூரைக் கைப்பற்றியதையும், கலிங்கத்துக் காரவேலன் கூறுவான்.

இக்கல்வெட்டை முதலிற் படித்த தொல்லாய்வர் ஜெய்ஸ்வாலும், பானர்ஜியும் 1300 எனும் ஆண்டுக்குறிப்பைச் சற்றும் நம்பாததால், 113 என்று மாற்றிப் படித்ததாக அவர் அறிக்கையில் குறிப்பார். அதேபொழுது அடிக்குறிப்பில் ”இது 1300 ஆண்டுகளாய் இருக்க வழியுண்டு” என்றுஞ் சொல்லியுள்ளார். பின் வந்த எல்லோரும் கிளிப் பிள்ளையாய் 113 ஆண்டுகளையே குறிக்கிறார். 1300 ஆண்டுகள் எனும் குறிப்பை வாய்ப்பாக மறந்துவிட்டார். தமிழர் வரலாற்றை மீளாய்வு செய்வோர் காரவேலைன் கல்வெட்டையும் மீளாய்வு செய்ய வேண்டும்.  மொழி பெயர் தேயம் என்பது தமிழும் பாகதமும் உடனுறை பகுதி என முன்னால் சொன்னோம். இதற்கு அருகில் விண்டுமலை (=விந்தியமலை) உள்ளது. அதுவே இங்கு ”மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” எனப்படுகிறது. நூற்றுவர் கன்னரின் அரசு விண்டு மலைத்தொடருக்கு இருபுறமும் இருந்தது. தென்பகுதியில் தமிழும் வடபகுதியில் பாகதமும் நிலவின. 

அப் பகுதியில் நூற்றுவர் கன்னர் தம் அதிகாரம் தூக்கி நிறுத்தும் வரையில் (அதாவது கி.மு.26 - கி.பி..250 வரையில்) சிறு சிறு அரசரே இருந்தனர். இன்றைக்கு உலகத்தின் காவற்காரர் அமெரிக்கா என்று சொல்வது போன்று, அன்றைக்கு ”மெய்யான தமிழகத்திற்கும்” வெளியே, ஆனால் தமிழ் பெரிதும் புழங்கிய நூற்றுவர் கன்னரின் மொழிபெயர் தேயத்தின் காவற்காரர் தமிழ் மூவேந்தரே. இதை மாமூலனார் இங்கு உறுதி செய்கிறார். வெறுமே, சேரன், சோழன், பாண்டியன் என்று அவர் தனித்துச் சொல்லாது, முவேந்தர் கூட்டணி இருந்ததை உறுதிசெய்கிறார் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். எனவே மாமூலனாரின் இப்பாட்டு காரவேலன் கல்வெட்டிற்கும் முந்தையது,

மூவேந்தர் கூட்டணி உடன்படிக்கையை நாம் இங்கு சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

1. தங்களுக்குள் என்ன சண்டை இருந்தாலும், மூவேந்தர் யார் மேலும் வெளியார் படையெடுத்தால், மூவரும் ஒருவருக்கொருவர் உதவியாய், தமிழகத்திற்கு வெளியே செயற்பட வேண்டும்; 
2. மூவருக்கும் இடைப்பட்ட எந்த வேளிரையும், இவர் அடக்கியாளலாம்; அதே பொழுது வெளியார் வேளிர் மேல் படையெடுத்தால், அதை ஒருங்கே எதிர்க்கவேண்டும்.
3. தமிழகத்தில் இருந்து போகும் சாத்துக்களையும், வரும் சாத்துக்களையும் காப்பாற்றும் வகையில், மூவேந்தரின் நிலைப் படைகள் (standing armies) மொழிபெயர் தேயத்தில் நிறுத்தப்பட வேண்டும். இந்தக் காக்கும் தொழிலில் முப்படைகளும் ஒன்றிற்கொன்று உதவ வேண்டும்.

மாமூலனாரின் பாடல்கள் பெரிதும் சேரநாட்டைச் சார்ந்து இருப்பதால், இப்பாட்டின் தலைவனும் ஒருவேளை சேர அரசனின் படைசேர்ந்தவனாய் இருக்கலாம். ”அவன் இப்பகுதிக்குக் காவல் காரணமாய்ச் சென்றானா என்று யாரும் சொல்லாது இருக்கிறாரே?” என்பதே இங்கு தலைவியின் பெருங்கவலையாய் அமைகிறது.

அன்புடன்,
இராம.கி.

Thursday, January 07, 2010

மாமூலனார் - 2

எம் வெங் காமம் இயைவது ஆயின்
மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
கொம்மை அம் பசுங்காய்க் குடுமி விளைத்த
பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன
வறுங்கை வம்பலர்த் தங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்தமாக் கட்டு ஆகுகது இல்ல -
தோழிமாரும் யானும் புலம்ப
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியல்நகர்ச்
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய, துகள்நிலம் பரக்க
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி
வன்கை என்கின் வயநிரை பரக்கும்
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஓராங்கு
குன்றவேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற - ஆறே!
- அகம் 15
- திணை: பாலை
- துறை: மகட் போக்கிய தாய் சொல்லியது.

தெளிவுரை: (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

எம்முடைய மிகுந்த விருப்பம் நடக்குமென்றாலும் கூட,
மனம் அமைதி கொள்ளவில்லையே? ஏன்?

முகப்படாம் சூடிய பெரும் யானைகளையும்,
சுடரும் கலன்களையும்,
கொண்ட நன்னனின் பாழியைப் போன்றே,
காவல் உடைய எம் பெருமனையின்
செறிந்த காப்பையும் துறந்து
அவனொடு போனாளே? அது ஏன்?

தோழிமாரையும் என்னையும் புலம்பவைத்து,
மென்தோளுடைய என் அன்னை (பெண்),
தன் இன் துணையோடு
ஒருங்குசெல்லும் கொள்கையில்,
சென்றவழி இதுவோ?

காலுக்கடியில் தரையிற் பூத்துக் கிடக்கும்
இலுப்பைப்பூவை எடுத்துத் துய்த்த வாயோடு,
திரண்ட சினையிற் தொங்கும்
நீண்ட கொன்றைப் பழக் குலையைக் கொழுதி,
நிலப்புழுதி கிளப்பி,
வன்கைக் கரடிக் கூட்டம்
இவர் போகும் வழியில்
பரவிச் செல்லுமே? அது பொறுப்பாளோ?

மெய்யெலாம் பெருங்கலன் பூண்டு சிவந்த கோசர்;
கொழுத்த பசுங்காயின் குடுமி முற்றிப் பழுத்த பாகல்;
அதை ஆர்ந்த மகிழ்ச்சியில்,
தம் வட்டக்கண் பீலியைத் தொகுத்துவிரிக்கும்
மயில்கள் நிறைந்த
சோலைவளத் துளுநாட்டைப் போன்றது
அவள் போகுமிடம் என்றாலும்,
பொருளில்லாரைப் புரக்கும் பண்பால்,
சேரிகள் செறிந்த தலைமூதூரை
நாம் அறிந்தனம் என்றாலும்,

கூட, எம் மனம் அமைதி கொள்ளவில்லையே, ஏன்?

-----------------
இந்தப் பாடல் சேர நாட்டின் வடக்கே துளுநாட்டிற்கு தன் துணையோடு உடன்போக்காய்ச் சென்ற மகளை எண்ணிக் கவல்ந்த தாய், தலைவியின் தோழிக்குச் சொன்னதாகும். சேர நாட்டின் காஞ்சிரங்கோட்டிற்கும் (இன்றையக் கேரளத்தின் காசரக் கோடு - kaasargode. காஞ்சிரம் = Strychnos nux vomica என்னும் நச்சுக் காய். கோடு = குன்று.) வடக்கே உள்ள தென்கன்னட, உடுப்பி மாவட்டங்களைத்தான் அன்றைக்குத் துளு நாடு என்றனர். கடல் மட்டத்தில் இருந்து குன்றுகளாய்த் துளும்பி, மேலெழும்பி வந்த நாடு துளும்ப நாடு>துளுவ நாடு என்றாயிற்று. கால காலத்திற்கும் மூவேந்தருக்கும் கீழ்வராது தனியே நிற்க முயன்ற ஒரு வேளிர் நாடு துளுவ நாடாகும். அதே பொழுது, பலகாலம் சேரர் இந்த நாட்டின் மீது படையெடுத்து, தம் அரசோடு சேர்க்க முயன்றனர். அதனாற் சேரநாட்டிற்குக் கீழேயும் இது வந்திருக்கிறது.

துளுவநாட்டின் எச்சம் வெள்ளைக்காரர் காலம் வரைக்கும் இருந்திருக்கிற்து. அண்மையில் வெளிவந்த ”பழசிராஜா” என்ற மலையாளத் திரைப்படம், கூட ”நன்னர்” வழி வந்த கோலாத்ரி அரச வழியினரின் விடுதலை வேட்கையை நம்முன்னே விவரித்தது. நன்னர் என்னும் பெயரில் நாலைந்து அரசர் இருந்திருப்பதைச் சங்கப் பாடல்கள் வழியே அறிகிறோம். எந்த நன்னன் இந்தப் பாடலிற் குறிப்பிடப்படுகிறான் என்பதைப் பின்னால் விளக்குவேன்.

இங்கே நுணுகி அறியப் படவேண்டிய சில செய்திகளை மட்டும் சொல்லுகிறேன். பாழி என்பது பெரும் நகரத்தைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். மேலை நாடுகளில் “polis" என்று சொல்லுவதற்கு இணையானது. தமிழில் பள்ளி என்றும் இது அமையும் (திருச்சிராப்பள்ளி), கன்னடத்தில் halli என்றும், வலி./வாலி என்று மராட்டியத்திலும், பல்லே என்று தெலுங்கிலும் அமையும். நாலு திராவிட மொழிகளிலும் பாழி/பள்ளியை ஒட்டி ஊர்ப்பெயர்கள் உண்டு. நன்னனின் பாழி என்னும் போது அது தலைநகரைக் குறிப்பிடுகிறது என்று சொன்னாலும், அதன் இயற்பெயர் நாம் அறியக் கூடுவதில்லை.

இந்தப் பாழி ஏழில் மலைகளுக்கு நடுவில் ஒரே ஒரு வாயில் கொண்டதாய் சிறந்த காவல் உடையதாய் இருந்திருக்க வேண்டும். தப்பிக்க முடியாத காவல் கொண்ட ஊரைத் தலைவியின் பெருமனைக்கு உவமையாய்க் கூறுவதால் இந்த உண்மை புலப்படுகிறது. ஏழில் மலை என்பது இன்றையத் திருப்பதி ஏழு மலையைப் போன்று, மேற்கே கடற்கரைக்குச் சற்று தொலைவில் ஏழு மலைகளுக்கு நடுவில் இருந்திருக்கலாம். அதை ஏலி மலை>எலி மலை என்று திரிந்து mushika vamsam என்று பின்னால் வந்த அரசகுடியினர் (கோலாத்ரி அரச வழியினர்) சொல்லப் பட்டிருக்கிறார்கள்.

துளுநாடு பொன்னிற்கும், செல்வத்திற்கும் பெயர் பெற்ற நாடு. நறவு என்பது அதன் பெருந் துறைமுகம். சேர நாட்டிலிருந்து வணிகம் கருதி வடநாடு போகத் துளுநாட்டு வழியும் ஒரு சிறந்த வழியாகும். முந்தைய பாட்டிற் சொன்ன பொதினிவழிப் பாதை போல இந்தக் காட்டுப் பாதை, பாலைக் காட்சிகள் மிகுந்த பாதையல்ல. மனத்தையள்ளும் சோலை வளம் மிகுந்த பாதை. தலைவன் போகும் ஊர் தலைவியின் தாய்க்குத் தெரிந்திருக்கிறது; ஆனால், நமக்குத் தெரிவிக்கப் படவில்லை.

சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் எப்படி இனக்குழு அடையாளங்களின் வழியாக அறியப் பட்டாரோ (சாரல்>சேரல்>சேரர் = தம் உடம்பெங்கும் சந்தனம் பூசியோர், இன்றும் கேரளத்தில் சந்தனம் பூசும் மரபு உண்டு. கொழு>கொழுவியர்>கோழியர்>சோழியர்>சோழர் = மஞ்சள்/குங்குமம் பூசியோர், தமிழரில் மஞ்சள்/குங்குமம் பூசும் பழக்கம் சோழநாட்டில் மிகுதி. பாண்டு>பாண்டில்>பாண்டியர் = சாம்பற் பூசியோர். இன்றைக்குத் திருநீறு என்பது சமயக் குறியீடாகத் தோன்றினாலும், நீறணியாதவன் எதிலும் சேர்த்தியில்லை என்றே தென்பாண்டிநாட்டார் சொல்லுவர்), அதே போலக் கோசர் என்னும் வேளிரும் இனக்குழு அடையாளம் வழியாகவே அறியப் பட்டிருக்க வேண்டும்.

கொழுவியர்>கொழுசியர்>கொழிசர்>கோசர். இவரும் முகத்தில் மஞ்சள் பூசித் தம் இனக்குழு அடையாளத்தைக் காட்டியிருக்கலாம். சோழருக்கும், இவருக்கும் வேறுபாடு காட்ட இன்னுமோர் தனித்த அடையாளம் அணிந்திருக்கலாம். கொழுந்து என்ற சொல் தமிழில் பொன்னிறத் தளிரைக் குறிக்கும். கொழுந்து மணல் என்பதும் ஒளிரும் மணலைக் குறிக்கும். கொழுது (gold) நிறத் தவசம் கொழுதுமை என்றே முதலிற் சொல்லப்பட்டுப் பின் கோதுமை ஆயிற்று. கோதுமை என்ற சொல்லிற்கு வடமொழியிற் சொற்பிறப்பு கிடையாது. மஞ்சள் நிறத்தைச் சிறப்பாய்க் குறிக்கும் இன்றையத் துளுநாட்டுப் பெருந் துறைமுகம் மங்கலூர் அதே போலக் கொல்லூர் (மூகாம்பிகை) என்ற சொல்லும் கோசரின் மஞ்சள் நிறத் தொடர்பை நமக்கு ஆழத் தெரிவிக்கிறது.

அய்யை>அஞ்ஞை>அன்னை என்ற திரிவில் தலைவி இங்கு குறிப்பிடப் படுகிறாள். ய்>ஞ்>ன் என்னுந் திரிவை பேரா. அருளி பெரிதும் சான்று காட்டி நிறுவியிருக்கிறார். மகளை அன்பின் பேரில் ”அம்மா” என்று அழைப்பது இன்றைக்கும் தமிழரிடம் உள்ள பழக்கம்.

இலுப்பைப்பூ சக்கரைச் சுவை கொண்ட ஒரு பொருள். “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை” என்பது பழமொழி. இலுப்பைப்பூவைச் சாப்பிட்டுத் தம் வயிற்றினுள்ளே நொதித்து (ferment) எழுந்த வெறியத்தின் (alcohol) விளைவால் உன்மத்தம் பிடித்து மரக்கிளைகளை முறித்துக் கரடிக் கூட்டம் எறியும் என்பது சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. கரடியின் வயிற்றிற்குள் சேரும் இலுப்பைப் பூ, அதன் இரப்பையில் நொதித்து, கரடியைக் கள்ளுண்டது போல் நடந்து கொள்ள வைக்குமாம் இலுப்பை பற்றிய பல செய்திகளை, என்னுடைய ”கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 5” என்னும் இடுகையில் (http://valavu.blogspot.com/2009/03/5_29.html) விவரித்துச் சொல்லியுள்ளேன்.

கொன்றைப் பழக் குலையைப் பற்றிய செய்தியும் சங்கநூல்களில் பெரிதும் வருவது. கொன்றையந் தீங்குழல் இந்தக் கொன்றைக்குழலில் தொடங்கியதோர் இசைக்கருவி. குடுமி மஞ்சளாகிப் பழுத்துக் கனிந்த பாகலைத் தின்ற மகிழ்ச்சியில் தோகைவிரித்து ஆடும் மயில் காட்சி எண்ணி உவகை கொள்ளத்தக்க விவரிப்பு. பாட்டில் வரும் தோகைக்கா என்ற ஊர்தான் தோகக்கா> ஜோகக் கா என்றாகி ஜோக் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள இடத்தைக் குறிக்கும் என்று ஔவை துரைசாமிப் பிள்ளை சொல்லுவார்.

இன்றைக்கும் துளுநாடு அழகான நாடு. பொதுவாகத் துளுவநாட்டார் சற்றே வெளுத்துச் சிவந்த மேனியர். துளுநாட்டுப் பெண்ணழகு இன்றும் விதந்து சொல்லப் படுவது. செம்மற் கோசர் என்ற சொற்றொடர் இங்கு அதை உணர்த்துகிறது.

நன்னன் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைப் பின்னால் ஒருங்கு சேர்த்துப் பார்ப்போம். இப்போதைக்குப் பாட்டையும், தெளிவுரையையும் மீண்டும் படித்து இன்புறுவோம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, January 06, 2010

மாமூலனார் - 1

சங்கப் பாடல்களில் மாமூலனார் பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. எந்தப் புறப்பாட்டையும் அவர் எழுதியதில்லை. அவர் எழுதியதெல்லாம் அகப்பாட்டே. அகநானூற்றில் 27 பாடலும், குறுந்தொகையில் ஒன்றும், நற்றிணையில் இரண்டும் ஆக முப்பது பாடல்கள் அவர் இயற்றியிருக்கிறார். நற்றிணையில் வரும் 75 ஆம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள் அனைத்துமே பாலைத்திணையைச் சேர்ந்தவையாகும் பிரிவின் நிமித்தம் எழுந்த இந்தப் பாடல்களில் போகும் வழிகள், மோதல்கள், சூடு, போராட்டங்கள், காட்டின் வன்மை, செல்வம் ஈட்டுவதில் உள்ள சரவல், இவை யெல்லாமே சொல்லப்படும். பாலைத்திணைப் பாடல்கள் வரலாற்றுக் குறிப்புக்களைக் கொட்டித்தர வாய்ப்புள்ளவை. அத்தகைய வரலாற்றுக் குறிப்புக்களை உள்நுழைத்துப் பாவியற்றுவதில் மாமூலனாருக்கு ஆழ்ந்த புலமை இருந்திருக்க வேண்டும்.

சிலம்பின் காலம் பற்றிக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நான் அதன் தொடர்ச்சியாய் மாமூலனார் பாடல்களை இப்பொழுது படித்து வருகிறேன். அதன் விளைவால், அந்தப் பாடல்களுக்குப் பொருளும், ஆங்காங்கே வரலாற்றுக் குறிப்புக்களும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இங்கே அகநானூற்று முதற்பாடலில் இருந்து தொடங்குகிறேன். தங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

’வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல்போல் பிரியலம்’ என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ? தோழி! சிறந்த
வேய்மருள் பணைத்தோள் நெகிழ, சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் - நிலம்பக
அழல்போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்
நிழல்தேய்ந்து உலறிய மரத்த; அறைகாய்பு
அறுநீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்
உகுநெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய
சுரம் புல்லென்று ஆற்ற; அலங்குசினை
நார் இல் முருங்கை நவிரல் வரன் பூச்
சூரல் அம் கடுவளி எடுப்ப, ஆரூற்று
உடைதிரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல்போல் தோன்றல - காடு இறந்தோரே?

- அகம் 1 . மாமூலனார்
- திணை: பாலை
- துறை: பிரிவிடை ஆற்றாமை, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

தெளிவுரை: (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)

நிலத்தைப் பிளப்பதாய்ச் சுட்டெரிக்கும் கதிர்;

பச்சை அழிந்து பரவிக் கிடக்கும் பெருவெளிகள்;

தம் நிழல்கள் தேய, உலர்ந்து போன மரங்கள்;

கற் குழிவுகள் நீரற்றுக்
காய்ந்த சுனையில் திணைநெல் விழுந்து
சட்டெனப் பொரியும் வெம்மை;

கொடையாளர் இன்மையால், செல்வம் கவருவோர்;

தொழில் துறந்து சோம்பியோர்
அண்டிப் பிழைக்கும் பொல்லாச் சுரம்;

உடைந்த நீரலை நுரைப்பின் பிதிர்வைப் போலக்
காற்றிற் குலையும் பூச்சூரலை
வாரித் தெறிக்கும்
நாரில்லா முருங்கைக் கிளைகள்;

கடலின் கரையாய்ப் பொலிவின்றித் தோற்றும்
வெட்டவெளிக் காடு

இத்தகைய வழியில்,

பக்கத்து நாட்டு பொற் செல்வத்தை
என்னிடம் கொணர்ந்து தருவார் போல,

மூங்கில் மருளும் என் பெருந்தோளை நெகிழவிட்டு
இவர் போனாரே,
ஏன் தோழி?

வண்டுகள் மொய்க்கும் கண்ணியையும்,
ஒண்கழலையும்,
அணிந்து வந்த குதிரை மழவரை,

முருகனின் பெயரால் போர்செய்து ஓட்டிய
வேளாவிக் குடியினரின் பொதினியில்,

கொம்பொடிந்த யானைகள் உலவும் இடத்தில்,

சிறு காரோடனின்
அரக்கொடு சேர்த்திய சாணைக்கல் போலப் பிரிய மாட்டேம் ,
என்று சொன்ன சொல்லை அவர் மறந்தாரோ?

மேலே, காரோடன் என்பவன்: வாளுக்குச் சாணை பிடிக்கிறவன். சாணைக்கல்லோடு, அரக்கைத் தேய்த்தால், நிலை மின்சாரம் (static electricity) கூடிப் பொறி தெறிக்கும். அரக்கில் நொகை மின்சாரமும் (negative charges), சாணைக்கல்லில் பொதி மின்சாரமும் (positive charges) கூடும். பின்னால் சாணைக்கல்லில் வாளின் தோலுறையை வைத்துத் தேய்த்து பொதிமின்சாரத்தை இறக்கவில்லையேல் மின்சாரம் கைக்கும் ஏறி பெரும் அதிர்வுத் தொல்லைக்கு ஆளாகலாம். ”நிலை மின்சாரம் விளைவிக்கும் சாணைக்கல்லையும், அரக்கையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அது போலப் பிரிய மாட்டேம் என்று சொன்னாரே, தோழி?” என்று தலைமகள் தோழிக்குச் சொல்கிறாள்.

நிலைமின்சாரத்தை வருவிக்கும் இரு பொருள்களை காதலருக்கு உவமை சொல்லிய அழகு, வேறு எங்கிலும் காணாததாகும். கூர்ந்த அறிவியல் அவதானிப்பு அன்றைக்கு இருந்திருப்பதும், அதை மாமூலனார் பதிவு செய்திருப்பதும், எண்ணி உவகை கொள்ளத் தக்கவை.

வரலாற்றுக் குறிப்பு.

பொதினி என்பது இன்றையப் பழனியைக் குறிப்பது. இங்கே ஆவியர் நாட்டை அது குறிக்கிறது. பொதினியின் அடிவாரத்தில் இருப்பது ஆவினன் குடியாகும். [நாம் எல்லோரும் ஆவிநன் குடியில் இருக்கும் பேருந்து நிலையத்திற்குத் தான் போய்ச்சேருகிறோம்.] வேளாவிக் கோமான் மகள் பதுமன் தேவியை முதல் மனைவியாக வானவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெற்றான். அவள் வழி சேரலாதனுக்கு இரு மக்கள். முதல்வன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். இன்னொருவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். சேரலாதனின் இன்னொரு மனைவி (ஞாயிற்றுச் சோழன் மகள் நற்சோணை) வழிப் பிறந்த செங்குட்டுவன் இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட மாற்றாந்தாய்ப் புதல்வன். இளங்கோ என்றவரின் வரலாற்றுக் குறிப்பு எங்குமே கிடைக்கவில்லை. [வரந்தரு காதை பெரும்பாலும் இடைச்செருகலாய் இருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். இதைப் பற்றி விரிவாகச் சிலம்பின் காலம் என்னும் என் கட்டுரையிற் பேசியிருக்கிறேன். இளங்கோ செங்குட்டுவனின் தம்பி என்ற செய்தியை உரையாசிரியர்கள் வழியே மட்டுமே அறிகிறோம்.]

ஆவியர் நாட்டுப் பொதினிக்கு அருகில் இருந்தது கொங்குநாடு. அதே இங்கு சேய்நாடு என்ற சொல்லாற் குறிப்பிடப் படுகிறது. கொங்குக் கரூருக்கு அருகில் உள்ள கொடுமணத்தில் செல்வங் கொள்ளத் தலைவன் போயிருக்கும் கதை இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது போலும். கொங்குநாடு, குறிப்பாகக் கொடுமணத்திற்கு அருகில் செல்வங் கொழித்தது இன்றையத் தொல்லியற் சான்றுகளால் உணரப்படுகிறது. இந்தக் குறிப்பைப் பின்னால் விரித்துச் சொல்லுவேன்.

அன்புடன்,
இராம.கி.

Friday, January 01, 2010

ஆலிச் சறுக்கும் (skiing), ஆலிக் கதழும் (skating)

அண்மையில் நண்பர் ஒருவர் தனிமடலில் skiing, skating பற்றிய சில சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் சொல்லுமாறு கேட்டிருந்தார். அது அவருக்கு மட்டுமன்றிப் பலருக்கும் பயனுறும் என்றெண்ணி என் வலைப்பதிவில் இடுகிறேன். முதலில் skiing, skating பற்றிய சொற்களுக்குள் சட்டென்று போகாமல், இவ்வாட்டங்கள் பழகும் குளிர்ச்சொற்கள் சிலவற்றை முதலிற் பார்ப்பது நல்லது. http://valavu.blogspot.com/2009/09/blog-post.html என்ற என் முந்தைய இடுகையில் குளிர்ச்சொற்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன்.

வெறுமே வெப்பஞ்சார்ந்த தமிழக, ஈழச் சூழலாக மட்டும் அமையாது, உலகம் முழுதும் தமிழர் இன்று பரவிய காரணத்தால், உலகமே அவர்புலமாக மாறிய நிலையில், தமிழரின் பழஞ்சொற்களின் ஆழம் பார்த்து உணர்ந்து, வேர்களை அடையாளங் கண்டு, அவற்றின் பொருட்பாடுகளைப் புதுக்கித் துல்லியம் காணவேண்டிய காலம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுப் பழக்கம் வைத்துப் பனி. குளிர், நளி, அளி, தண் என்ற முன்னொட்டுகளைச் சேர்த்து குளிர்நிகழ்வுகளையும், ஆட்டங்களையும், கேளிக்கைகளையும், இன்ன பிறவற்றையும் குறிப்பதில் ஒப்பேற்றிவிடலாம் என்று நம்மிற் பலரும் எண்ணிக் கொள்கிறோம். அது பெருந்தவறு. இப் புதுப்புலனத்திலும் சொல் துல்லியம் காட்ட வேண்டியது முகனத் தேவையாகும். தமிழ்மொழி இதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மையதே.

இவ்வகையில், ice, snow என்ற 2 விதயங்களுக்குமே ’பனியை’ப் பயன்படுத்தி, வேண்டுமெனில் பனியோடு துகள்சேர்த்து snow விற்கு ஈடாகப் பயன்படுத்தும் அண்மைக் கால வழக்கம் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். முந்நாள் தமிழர் ice ஐ உணராதவரில்லை. வானத்திலிருந்து சில பொழுதுகளில் ஆலங்கட்டி மழை பொழிவதை நம் நூல்கள் நுவன்றுள்ளன. ஆலி, ice-யைக் குறிக்கச் சங்கநூலில் பயனுற்ற சொல்தான். {வானத்திலிருந்து பெய்யும் பனிக் கட்டியை ஆலம், ஆலங்கட்டி போன்றவை உணர்த்தின.] இன்றோ dew, ice
போன்றவற்றிற்கு வேறுபாடு காட்டத்தெரியாது எல்லாவற்றிற்கும் பனியை வைத்து சுற்றிக் கிளித்தட்டு ஆடிக் கொண்டுள்ளோம்.

மார்கழி இரவில் பனி பெய்கிறதெனில் வெளியே dew பெருகிக் கிடக்கிறது என்றே பொருள். snow பெய்கிறதென்று பொருளில்லை. ஆனாலும் ஒருசிலர் வலிந்து அப்படிப் பொருள் கொள்ள முயலுகிறார். snow, ice, freeze, frost, frigid எனப்பல சொற்களுக்கும் முன் இடுகையில் உரிய இணைச்சொற்களைப் பரிந்துரைத்துள்ளேன்.

snow = சிந்து
ice = ஆலி
freeze = உறைதல்
frost = உறைபனி
frigid = உறைந்த

வேண்டிய உகப்பில் இவற்றைப் பயன்படுத்துவது நல்லது. அதேபொழுது, பனி, குளிர், நளிர், அளி, தண் போன்றவற்றை ஒதுக்க வேண்டியதில்லை. அவற்றைப் பல இடங்களில் துணைச் சொற்களாய்ப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்துவது குளிரின் புரிதலுக்கு வழிவகுக்கும்.

இவ்வடிப்படையில் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட 2  பொதுச்சொற்களை விளங்கிக் கொள்வோம். ஒன்று skiing, மற்றொன்று skating. முதலிலுள்ளது வெவ்வேறு மட்டங்களிலுள்ள நிலங்களில் மேலிருந்து கீழுக்குச் சறுக்குவது. சறுக்குவது என்பது பொதுவினை. அது ஆலியிலும் இருக்கலாம்; சிந்திலும் (snow) இருக்கலாம்; வழவழப்பான சாய்பரப்பிலும் ஏற்படலாம். எல்லாச் சறுக்கலிலும் நின்றுகொண்டே செய்கிறோமென்று பொருளில்லை. உடம்பை விதவிதமாய் நிறுத்தி, அன்றி இருத்திச் சறுக்கலாம். சறுக்கலோடு தொடர்பு உடைய இன்னொரு வினை சரிதல் (slide) ஆகும்.

1885 (there is an isolated instance from 1755), from Norw. ski, related to O.N. skið "snowshoe," lit. "stick of wood," cognate with O.E. scid "stick of wood," obs. Eng. shide; O.H.G. skit, Ger. Scheit "log," from P.Gmc. *skid-"to divide, split," from PIE base *skei- "to cut, split" (see shed (v.)). The verb is 1893, from the noun. ski-jumper is from 1894; ski bum fஅirst attested 1960.

ஆலியிற் சறுக்கல் என்பது இரோப்பாவில் எழுந்த பழக்கம். பின் உலகின் பல்வேறு இடங்களுக்கும் அது பரவியது. ஆண்டாண்டு தோறும் அங்கு சிந்து பெய்வதும், [இந்தியத் துணைக்கண்டத்திலும் சிந்து பெய்து அதன் வழி பெருகிய ஆறு சிந்தாறு (பனியாறு) என்றே நம் வடதமிழ் முன்னவரால் குறிப்பிடப்பட்டது.) பெய்த சிந்து நாட்பட ஆலியாய் மாறுவதும், அதில் விதவிதமாய்ச் சறுக்கிக் கேளித்திருப்பதும் இரோப்பியருக்குப் பழக்கமான காரணத்தால், ஆலிச்சறுக்கு என்றசொல் அவரிடையே எழுந்தது.,

அதேபொழுது skating என்பது செம்புல நிலத்தில் (i.e. level ground; and not red earth ground. பெயர்பெற்ற குறுந்தொகைப் பாடல் ஒன்றில் செம்புலப் பெயல்நீர் என்பதற்குப் பலரும் சமநிலத்தில் பெய்தநீர் என்று பொருள் கொள்ளாமல், ”சிவப்பு நிலத்தில் பெய்த நீர்” என்று உரைகாரர் காலத்திலிருந்து தவறாகப் பொருள்கொள்வது இவ்விடத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. திண்ணை வலையிதழில் இதுபற்றி கட்டுரை எழுதியிருந்தேன்.), சிந்து பெய்து அதை மட்டப்படுத்திப் பின் உறைந்து ஆலியாயிறுகிக் கட்டியாயான புலத்தில் குறுக்கும் நெடுக்குமாய்க் காற்புதையத்தில் (boots) கூர்ந்த கத்தியைப் பொறுத்தி அந்த ஆலித்தளத்தைக் கீறி சர்சர்.... என விரைந்து அங்மிங்கும் கதிக்கின்ற (கடிகின்ற), கதவுகின்ற (கடவுகின்ற), கதழுகின்ற செயலுக்கு skating என்று பெயர். இங்கு நடப்பது சறுக்கல்ல, கத்தியாற் கீறி விரையும் இயக்கம். இதைச் செய்ய ஒரு தனித்திறமை வேண்டும். விரைவோடு, உடல் கீழே விழுந்து விடாது கட்டுக்குள் நிறுத்தி வைக்கும் இலவகமும் வேண்டும்.

"ice skate or roller skate," 1662, skeates "ice skates" (the custom was brought to England after the Restoration by exiled followers of Charles II had taken refuge in Holland), from Du. schaats (singular, mistaken in Eng. as plural), from M.Du. schaetse, from O.N.Fr. escache "a stilt, trestle," from O.Fr. eschace "stilt" (Fr. échasse), from Frank. *skakkja "stilt" (cf. Fris. skatja "stilt"), perhaps lit. "thing that shakes or moves fast" and related to root of O.E. sceacan "to vibrate" (see shake). Or perhaps the Du. word is connected to M.L.G. schenke, O.E. scvelocity anca "leg" (see shank). Sense alteration in Du. from "stilt" to "skate" is not clearly traced. The verb is attested from 1696; U.S. slang sense of "to get away with something" is attested from 1945.

”கதழ்வும் துனைவும் விரைவின் பொருள” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம், உரியியல், 798ஆம் நூற்பா. கதித்தல் என்பதும் விரைதலே. 1960 களில் ஒருசில பொறியியற் கல்லூரிகளில், குறிப்பாகக் கோவையிலும், சென்னையிலும் பொறியியற் கல்லூரிகளில் கதி என்ற சொல் velocity இக்கு இணையாகப் புழங்கத் தொடங்கியது. [வேகம், திசைகுறிக்காத அளவை (scalar) speed யைக் குறித்தது.]. கதழ்வு எனும் பெயர்ச்சொல்லும், கதழுதல் எனும் வினைச்சொல்லும் புதுக்கப் படலாம்.

இனி நண்பர் கொடுத்த ஆங்கிலச் சொல்வரிசைக்கு என் பரிந்துரைகள்:

1 Alpine skiing = ஆல்பைன் ஆலிச்சறுக்கு
2 Biathlon (Cross-country skiing & rifle shooting) = இரட்டைப் பந்தயம்
(குறுக்குவெளி ஆலிச்சறுக்கும், துவக்குச் சுடுதலும்)
3 Bobsleigh = குறுஞ்சரினை (பறக்கின்ற ஊர்தியை பறனையென நண்பர் அட்லாண்டா சந்திரசேகரன் ஆக்கியது போல், சரிதலை ஒட்டிச் சரினை
என்ற சொல் பரிந்துரைக்கிறேன்.)
4 Cross-country skiing = குறுக்குவெளி ஆலிச்சறுக்கு
5 Curling = சிந்துச்சுருளல்
6 Figure skating = ஒயிலாட்டக் கதழ்
7 Freestyle skiing = பரிஒயில் ஆலிச்சறுக்கு
8 Luge = தட்டுச் சறுக்கு
9 Nordic combined (ski jumping & cross country skiing) = வடபுலக் கூட்டுப்
பந்தயம் (ஆலிச்சறுக்குத் தாவலும், குறுக்குவெளி ஆலிச்சறுக்கும்)
10 Short track speed skating = குறுந்தட விரை கதழ்.
11 skating = கதழ்வு
12 Skeleton = பற்றுத்தட்டுச்சறுக்கு
13 Ski jumping = ஆலிச்சறுக்குத் தாவல்
14 Skiing = ஆலிச்சறுக்கு
15 Snowboarding = பலகையாற் சிந்துச்சறுக்கு.
16 speed skating = விரை கதழ்

அன்புடன்,
இராம.கி.

Tuesday, December 01, 2009

ஈழத்திற்கான உருப்படியான போராட்டம்

கீழே உள்ள சுட்டியில் குறிப்பிடப்படும் போராட்டத்தைப் பற்றிப் படியுங்கள். இது ஓர் உருப்படியான போராட்டம். சிங்களனின் தலையில் சம்மட்டியாய் இறங்கக் கூடிய போராட்டம்.

http://www.tamilwin.com/view.php?22SWnf200jj0U2eeGG773bb99EM4dd22h3cccppY3d44QQH3b02VLI3e

இதைப் பல்வேறு மடற்குழுக்களிலும், வலைப்பதிவுகளிலும் நம்மைப் போன்ற தமிழர்கள் எடுத்துக் காட்டி, உலகில் உள்ள வெவ்வேறு நாடுகளிலும் இதைப் போன்ற போராட்டத்தை நடக்க வைத்து (அதற்கு முன் அங்கு இலங்கைப் பொருள்கள் எப்படி விற்கப் படுகின்றன, எங்கு விற்கப் படுகின்றன, நடைமுறை எது என்று ஆழ ஆய்வு செய்ய வேண்டும்.) இலங்கையின் பொருளியலில் பாதிப்பு ஏற்படுத்தினால் தான் சிங்கள அரசின் போக்கு சற்றாவது மாறும்.

என்னருமைத் தமிழர்களே! இந்தப் பரப்புரையில் எல்லோரும் ஈடுபடுவோம். வெறுமே அழுது புலம்பி நமக்குள்ளே உணர்ச்சி வயப்பட்டுக் கொண்டு இருக்காமல், இந்தப் பரப்புரையைச் செய்வோம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, November 27, 2009

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

இந்த நாளில் தமிழர் எல்லோரும் நினைவு கொள்ளுவோம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, November 11, 2009

தமிங்கிலம் - எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?

நண்பர் சிங்கைப் பழனி தமிழுலகம் மடற்குழுவில் ஒரு மடல் அனுப்பியிருந்தார். அவருக்கான மறுமொழி இது. இங்கும் அதைப் பதிந்து வைக்கிறேன்.

----------------------

அன்பிற்குரிய பழனி,

ஆனந்த விகடனில் அண்மையில் (11/11/09) அன்று வெளியான

"ஹாய் வாசகர்களே! 64-65ம் பக்கங்களில் "ஜோக் ஆர்மி" ஓவியத்தில் எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் மொபைலில் AVJ என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதை எண்களில் மட்டும் டைப் செய்யுங்கள். தொடர்ந்து அந்த ஜோக்கைப் பற்றி ஒரு வரி நச் கமென்ட் சேர்த்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். சரியான விடை ப்ளஸ் பளிச் கமென்டுடன் வந்து விழும் 10 எஸ்எம்எஸ் களை அனுப்பியவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு. 8.1.109அன்று இரவு 8 மணிக்குள் உங்கள் எஸ்எம்எஸ்கள் டெலிவர் ஆகும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இப்போ 64-65ம் பக்கங்களில் ஜோக் ஆர்மிக்கு ணிவகுப்போமா? ஜோக்குகளில் எண்ணிக்கை குறித்து ஓவியரின் தீர்ப்பே இறுதியானது! எஸ்எம்எஸ் கட்டணங்களுக்கு உட்பட்டது! கடந்த வார ஜோக் பார்க் போட்டி முடிவுகள் 11ம் பக்கத்தில்! ஆல் நியூ விகடனைப் பற்றிய கருத்துக்களை உங்கள் குரலிலேயே பதிவு செய்ய 044-42890004 எதிர்முனையில் பதில் குரலை எதிர்பாராமல் தாங்கள் கூற விரும்புவதை நீங்களாகவே பதிவு செய்து விடுங்கள்!”

என்று தமிங்கிலம் பழகிய ஓர் உள்ளடக்கம் பற்றித் தட்டச்சி அனுப்பி, “இப்படித் தமிழை கொலை செய்கிறார்களே? செம்மொழி மாநாடெல்லாம் கொண்டாடும் காலத்தில் இப்படியா?” என்று அங்கலாய்த்தோடு இல்லாமல், “ஆட்சியில் இருப்பவர்கள் இதனைப் பற்றிச் சிந்தித்து ஆவன செய்யலாம் அல்லவா?” என்றும் கேட்டிருந்தீர்கள்.

நண்பரே! நோயைக் கண்டுகொள்ளாது, நோய்க் குறிகளையே நொந்து கொண்டிருந்தால் எப்படி? இதன் தொடக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சிமொழி, பயிற்று மொழி, கல்விக் கொள்கை நீர்த்துப் போனதில் இருக்கிறது. கொஞ்சம் அந்தக் காலத்திற்குப் போய்த் தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கை வரலாற்றைப் பார்த்தால் தான் விளங்கும்.

1963-64 க்கு முன் நாங்கள் எல்லோரும் தமிழ்நாட்டிற் பள்ளியிற் படிக்கும் போது, 100க்குத் 98/99பேர் தமிழிலேயே படித்தோம். அன்று இருந்த மடிக்குழைப் பள்ளிகளின் (matriculation schools) எண்ணிக்கை 13/14 - க்கும் குறைவே. அதோடு அவை சென்னை நகரில் மட்டுமே இருந்தன. தமிழ்நாடெங்கணும் பரவவில்லை. கூடவே ஓரிரு ஆங்கிலோ - இந்தியன் பள்ளிகளும், நாலைந்து நடுவண் வாரியப் (central board) பள்ளிகளும் இருந்தன. மிச்சம் இருந்த பள்ளிகள் எல்லாம் தமிழ்வழியே பாடம் கற்பிக்கும் மாநில வாரியப் (state board) பள்ளிகளாகவே இருந்தன.

அன்றைக்கு இருந்த நிலையில் ”பள்ளிப் படிப்பு தமிழ் வழியா?” என்ற கேள்வியே எழவில்லை; ”கல்லூரிகளில் தமிழ் வழி சொல்லிக் கொடுப்பது எப்படி?” என்றுதான் அரசினரும், ஆர்வலரும், மற்றோரும் முனைந்து கொண்டிருந்தார்கள். கல்லூரிகளுக்கான பாடங்களைத் தமிழ்வழி சொல்லித்தரும் பொத்தகங்களும் விரைவாக எழுதப் பட்டு வந்தன. அன்றையப் பேராயக் கட்சி அரசு இந்தக் கொள்கையில் உறுதியாகப் பாடுபட்டு வந்தது. எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதை ஏற்றே இருந்தது.

இந்தக் கொள்கைக்கு உலைவந்தது இன்றைக்குப் பெருத்துக் கிடக்கும் திராவிடக் கட்சிகளால் தான். ஒருபக்கம் “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்று வெற்று முழக்கம் செய்துகொண்டே இன்னொரு பக்கம் தமிழுக்கு உலை வைப்பதற்கு இவர்களே காரணமானார்கள். [இதில் பேராயக் கட்சியைக் குறை சொல்லமுடியாது.] வரலாற்றை ஒழுங்காய்ப் பார்ப்போம்.

1965 இல் நடுவண் அரசில் முட்டாள் தனமான போக்கால், இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அந்தப் போராட்டத்தை வன்மையாகத் தடுத்து நிறுத்த அன்றைய முதல்வர் பக்தவத்சலம் அடிதடி, துப்பாக்கிச் சூடு, என்று கையாளப் போக, அதன் விளைவால் பல உயிர்களும் போராட்டத்தாற் குலைந்து தொலைந்து போக, மக்களுக்கு பேராயக் கட்சி மேல் ஒருவித வெறுப்பு வந்துற்றது. [அதைக் காட்டிலும் பெரும் தவற்றை இன்றையப் பேராயக் கட்சி ஈழத்து இனப்படுகொலையில் செய்திருக்கிறது ஆனாலும் தமிழக மக்கள் பேராயக் கட்சி மேல் அவ்வளவு வெறுப்பைக் காட்டக் காணோம் என்றால், நிலை எப்படி மாறியிருக்கிறது, எந்த அளவு கண்கட்டப் பட்டிருக்கிறது என்று பாருங்கள். எப்படியோ அது வேறு கதை.]

அதன் விளைவாக, அடுத்து வந்த 1967 தேர்தலில் பேராயம் முற்றிலும் தோற்றுப் போனது. தி.மு.க. அரசு மேலெழுந்தது. தமிழரில் மிகுதியானவருக்கு அப்போது மிகுந்த மகிழ்ச்சி. ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்களும் குதுகலங்களும் விரவிக் கிடந்த காலம் அது. இந்தத் தேனிலவு 3,4 ஆண்டுகளுக்கு நீடித்தது. கொஞ்சங் கொஞ்சமாக அரசு தரும் ஊழல் வாய்ப்புக்களைப் பார்த்த கழகத்தாரின் கொள்கைகள் நீர்த்துப் போகத் தொடங்கின. ”திராவிடமா? வீசை என்ன விலை? ” என்று கேட்கத் தொடங்கினர். பேராயக் கட்சி அரசில் நூறும், ஆயிரமாக இருந்த ஊழல்கள் கழக அரசில் ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரமாகப் பெருகத் தொடங்கின.

பின்னால் அண்ணா மறைந்தார், கலைஞர் முதல்வரானார், கலைஞருக்கும் ம.கோ.இரா.விற்கும் இடையே இருந்த முரண்பாடு/சண்டை பெரிதாக முற்றியது; அ.தி.மு.க. எழுந்தது. அடுத்த தேர்தலில் தி.மு.க. தோற்றது. அ.தி.மு.க. அரசு ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பங்காளிச் சண்டை என்பது எல்லாத் தளங்களிலும் பெரிதும் முற்றியது. தமிழகம் சீரழிந்தது இந்தப் பங்காளிச் சண்டை, போட்டிகளால் தான்.

கொள்கைகள் சரமாரியாகத் தூக்கிவாரி வீசப் பட்டன. எப்படிச் சம்பாரிப்பது, யார் சம்பாரிப்பது என்ற கேள்வியே இவர்களுக்கிடையில் பெரிதாகிப் போனது. அங்கொன்றும் இங்கொன்றுமாய், ஆசிரியர் மாற்றங்களால் கல்வித் துறையில் சம்பாரித்துக் கொண்டிருந்தவர்கள், புதியதொரு ஊழலுக்கு அணியமானார்கள். ஏனெனில் ஒரு பெரிய தேவை ஒன்று அன்று பூதகரமாய்த் தோன்றத் தொடங்கியது.

கண்டமேனிக்கு நடந்த ஆசிரியர் மாற்றங்களால், அரசுப் பள்ளிகளில் ஒழுங்கான ஆசிரியர்கள் எங்கும் நிலைக்கவில்லை. எங்குமே ஒரு நிலையாமை நின்று நிலவியது. கல்வித் தரம் சிறிது சிறிதாய்க் குறையத் தொடங்கியது. ”தம் பிள்ளைகளின் கல்வி கெட்டுப் போகிறதே?” என்று தவித்த பெற்றோர்கள், இந்த நிலையாமைச் சரிசெய்ய வழி தெரியாமல், நகரங்களில் இருந்த குறிப்பிட்ட ஒரு சில கிறித்துவப் பள்ளிகளை நாடி ஓடி, அவற்றில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முயன்றார்கள். (குறிப்பாகச் சேசுசபைப் பள்ளிகள், பேர்பெற்ற மறுப்பாளர் (protestant) நெறியைச் சேர்ந்த தென்னிந்தியத் திருச்சபை பள்ளிகள்.) அன்றைக்கு அந்தப் பள்ளிகளுக்கெல்லாம் நல்ல பெயர் இருந்தது.

விழுந்தடித்துக் கொண்டு பிள்ளைகளைச் சேர்த்த காரணத்தால், அந்தப் பள்ளிகளில் இடம் கிடைப்பது பலருக்கும் குதிரைக் கொம்பாய் இருந்தது. இந்தப் பள்ளிகளும் தாம் எவ்வளவு பிள்ளைகளைச் சேர்க்கமுடியும், சொல்லுங்கள்? அன்றைக்கு இருந்த கிறித்து சபை நிர்வாகங்கள் கல்வியின் மூலம் பணம் சம்பாரிக்க வேண்டும் என்று எண்ணியவர்கள் அல்லர். தொண்டே பெரிதென்று இருந்த காலம் அது.

இந்தப் பொழுதில் தான் பல்வேறு கிறித்துவப் பள்ளிகளில் இருந்த “தமிழல்லாத பாடங்களுக்கு ஆசிரியராய் இருந்தவர்கள்”, தாங்கள் ஓய்வு பெற்ற போது, ”நாம் ஏன் புதுப் பள்ளிகளைத் தொடங்கக் கூடாது? இந்தத் தேவையை நிறைவு செய்யக் கூடாது? ” என்று எண்ணத் தொடங்கினார்கள். வெறுமே வாடகைக்கு ஓர் இடத்தை எடுத்துக் கொண்டு, அரசில் தமக்குத் தெரிந்த கல்வியதிகாரிகள் மூலம் அனுமதி பெற்றுக் கொண்டு, இதே கிறித்துவப் பள்ளிகளில் இருந்த 4,5 ஆசிரியர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுப்பதாய்ச் சொல்லி அவர்களை அங்கிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து, ஒரு தோற்றத்தை உருவாக்கி ”பேர்பெற்ற கிறித்துவப் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தது போலும் தாங்களும் சொல்லிக் கொடுப்போம்” என்று முழங்கி அன்றைக்கு இருந்த தேவையைத் (demand) தங்கள் பக்கம் மடை மாற்றினார்கள். கூடவே கட்டணங்களையும் உயர்த்தினார்கள். விரைவில் கல்வி ஒரு பொதினமாகிப் (business) ஆகிப் போனது.

பிள்ளைகளின் எதிர்காலம் என்ற கானல் நீரை நாடி ஓடும் நடுத்தர வருக்கம் அந்தக் கட்டணங்களைக் கட்ட அணியமாகியது. ”வேறெங்கோ தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்வோம். நம் பிள்ளைகள் நல்ல படிப்புப் பெறுவது முகன்மை” என்ற உணர்வு தான் அவர்களை உந்தியது. கல்விக்கு ஆகும் செலவு மளமளவென்று உயரத் தொடங்கியது. அதுவரை மாதம் ரூ 10, 15 என்று பள்ளிக் கட்டணம் கட்டிய பெற்றோர் ரூ 100, 150 க்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை. [பிற்காலங்களில் இதே செலவு ஆயிரம், பத்தாயிரம் உருவாக்கள் ஆகின. இப்பொழுதும் வெறும் முணுமுணுப்புத்தான். முதுகெலும்பு ஒடிய வேலை செய்து பள்ளிக்கூடம் நடத்துபவர்களுக்கு இவர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.]

தேவையை மீட்கும் முகமாகத் திடீர் என்று அளிப்புகள் (supply) வெள்ளமாய்ப் பெருகி முற்படும் நிலையில் பள்ளிகள் நடத்த அரசிடம் அனுமதி கேட்டு நிற்கும் வரிசையும் சட்டெனப் பெருத்துப் போனது. ”என்னய்யா இது கல்வித் துறையில் இப்படிக் கூட்டம் பெருகி வரிசை நீண்டு நிற்கிறதே?” என்று அரசியல் வாதிகள் வியப்பாகப் பார்க்கத் தொடங்கினார்கள். அதிகாரிகள் அவர்களோடு குசுகுசுத்தார்கள்; எள்ளென்றால் எண்ணெய் ஆவது தான் நம் அரசியல்வாதிகளுக்கு இயல்பாயிற்றே? “ஆகா, பணம் தேற்ற இப்படியொரு வழியா? இது காமதேனு அல்லவா?” என்று கூட்டுக் களவாணித்தனம் போட வாய்ப்புண்டாயிற்று.

13/14 என்ற பள்ளிகளின் எண்ணிக்கை நூறாயிற்று; இருநூறாயிற்று; கூடிக் கொண்டே வந்தது. சென்னையிலிருந்து, பெருநகரங்களுக்கும், அப்புறம் சிறு நகரங்களுக்கும், முடிவில் நாட்டுப் புறத்திற்கும் ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகின. அரசுகள் எப்படி மாறினாலும், கல்வித் துறையில் நடந்த கொள்ளை மட்டும் தொடர்ந்து கொண்டே வந்தது. இரண்டு கழகத்தாரும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அடுத்தடுத்த ஆட்சிக் காலங்களில் தாங்கள் கேட்கும் ஊழற்பணத்தைக் கூட்டிக் கொண்டே போய், இன்று கோடிகளிற் புரண்டு, 4200 மடிக்குழைப் பள்ளிகள் வரை ஆகியிருக்கிறது. இரு கட்சிகளும், மற்ற துணுக்குக் கட்சிகளும் தங்களுக்குள் என்ன சண்டை போட்டாலும், கல்வித் துறைக் கொள்ளையை மட்டும் கண்டுகொள்ளாமல் சமக்காளத்திற்கு அடியிற் போட்டபடியே நடந்து கொள்கிறார்கள். எல்லா அரசியல்வாதிகளும் கப்சுப் கறார் தான். இன்று தனியார் பள்ளிகளை, கல்லூரிகளை நடத்துபவரில் பெரும்பாலோர் அரசியல்வாதிகளேயாவர். பொன்முட்டை இடுகின்ற வாத்தின் கழுத்தை இவர்கள் யாராவது நெறிப்பார்களோ?

இன்று மொத்தப் பள்ளிகளில் கிட்டத்த 50% க்கும் மேல் [சரியான விழுக்காடு எனக்குத் தெரியவில்லை. தேடவேண்டும்.] மடிக்குழைப் பள்ளிகள் தாம் இருக்கின்றன. ”எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்” என்பதே தமிழகக் கல்விக் கொள்கையின் தாரக மந்திரமாயிற்று. இதன் விளைவால், தமிழே அறியாத தற்குறிப் பட்டாளமாய் நம் இளையர் கூட்டம் உருவாகியிருக்கிறது. இந்தச் சுழலுக்குள் சிக்காத பெற்றோர் யாருமே இல்லை. இந்த விழுக்காடு இன்னும் 10 ஆண்டுகளில் 80/90% என்று ஆகிவிடும். மொத்தத்தில் தமிழே அறியாத, ஆங்கிலமும் ஒழுங்காய்ப் பேசத் தெரியாத, தமிங்கிலம் மட்டுமே தட்டுத் தடுமாறி அறிந்த, தலைமுறை ஒன்று உருவாகி நிற்கிறது. “தமிழ் சோறு போடுமா?” என்று இன்றைய இளைஞர்கள் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள். “சோறுபோடும்” என்று சொல்லுவதற்கு நம்மிடம் வக்கில்லை. எதிர்காலம் குலைந்து போனது.

அந்தக் காலக் கல்விக் கொள்கையைத் தூக்கிக் கடாசி எறிந்து இப்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதே நிலை இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் இப்பொழுது உருவாகி வருகிறது. [அங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் கையரிக்காதா, என்ன?]

இந்தக் கல்விக் கொள்கையின் சீரழிவால் தமிழர் மறைந்து வருகிறார்; தமிங்கிலர் உருவாகிறார். அப்புறம் அவர்கள் படிக்கும் இதழ்நடை தமிங்கிலமாகத் தானே இருக்கும்? இதிலென்ன வியப்பு? எய்தவன் எங்கோ இருக்க, அம்பை நோவதேன்?

அரசியற் போராட்டத்தால் சாதிக்க வேண்டியதை, கெஞ்சி வேண்டுகோள் விடுத்துச் சாதிக்க முடியாது ஐயா! நாம் எல்லோரும் வாய்மூடிக் கிடப்பது இன்னும் எத்தனை நாளைக்கு?

கயவாளிகளை அரசாள வைத்த பின்னால், “செம்மொழி மாநாடு” என்று சொல்லிக் கொண்டு, தமிழுக்குப் பாடை கட்டத்தான் நம்மால் முடியும். தமிழே இல்லாது போன பின்பு, செம்மொழி என்று கூக்குரலிட்டுப் பாடை கட்டவும், சங்கூதவும், எரியூட்டவும் தானே வேலை மீந்து இருக்கிறது?

இந்த மடலை என் வலைப்பதிவிலும், தமிழ்மன்றம் மடற்குழுவிலும் வைக்கிறேன். அங்கும் படிப்பவர்கள் கருத்தால் ஒன்றுபடட்டும்.

வருத்தத்துடன்,
இராம.கி.

Thursday, October 15, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 10

பெருங்கோலை வரையறுப்பது வரை ஒன்றுபடும் தென்புல, வடபுல வாய்ப்பாடுக்கள் 1 கூப்பீட்டிற்குச் சமன்கொள்வதில் (500 கோல்களென, 500 பெருங்கோல்களென)த் தம்முள் மாறுபடுகின்றன. அதே பொழுது, காதம், யோசனை ஆகியவற்றை வரையறுப்பதில் மாறாதிருக்கின்றன. இவை போக, 1 கூப்பீட்டை 500 சிறுகோல்களுக்குச் சமனாக்கும் பட்டுமையை (possibility), குமரி - பஃறுளித் தொலைவை ஆய்ந்த போது, எடுத்துரைத்தேன். ”முதிய வாய்ப்பாடு” என்று சொல்லக் கூடிய இந்தப் பட்டுமையோடு, தென்புல, வடபுல வாய்ப்பாடுகளைச் சேர்த்து ”இந்திய வாய்ப்பாடுகள்” என்று சொல்லலாம். இந்த வாய்ப்பாடுகள் யாரோ ஒரு தேவனால், அன்றிக் கடவுளால், கொடுக்கப் பட்டவையல்ல. மாறாக, நீண்ட நாகரிகத்தில், ”செய்து பார்த்துத் தவறும் (trial and error)” முறையில் உருவாக்கப் பட்டவையாகும். இப்படி மூன்று வாய்ப்பாடுகள் இருந்தது கூட, நம் நாகரிகத்தின் பெரும்நீட்சியை உறுதிப் படுத்தும்.

அதே பொழுது, மேலையர் வாய்ப்பாடும், இந்திய வாய்ப்பாடுகளும், ஓராள் உயரத்தில் வேறுபடுகின்றன. மேலையருக்கு இது 6 அடி; இந்தியருக்கோ 5 1/2 அடி. புகழ்பெற்ற இந்தியக் கணிதர் ஆர்யபட்டா, இந்திய வாய்ப்பாடுகளில் இருந்தும் வேறுபட்டு, ஓராள் உயரத்தை 5 அடியாக்கி, நரன் என்று சொல்லி, [நரலுகிறவன் (= ஓசையிடுகிறவன்) நரன்.] விரற்கிடை, முழம், கோல், யோசனை என்னும் அளவைகளைத் தன் நூலான ஆர்யபட்டியத்தில் குறிப்பார். [சென்ற பகுதியில் தென்புல, வடபுல, மேலையர் வாய்ப்பாடுகளைப் பட்டியலிட்ட போது, நான் ஆர்யபட்டாவின் வாய்ப்பாட்டைக் குறிப்பிடவில்லை. அதைத் தெரிந்து கொள்வதால், இந்தியப் பழங்கணிதம், தொல்வானியல் (archeoastronomy) போன்றவற்றின் சில புதிரிகளைச் (problems) அலசுவது எளிதாகும்.]

ஓராள் உயரத்தில் வேறுபடும் ஆர்யபட்டாவின் வாய்ப்பாடு, வெளிப்பார்வைக்கு வடபுல வாய்ப்பாடு போலவே தோற்றமளிக்கிறது. இந்த வாய்ப்பாட்டாற் பெற்ற யோசனைத் தொலைவைக் கொண்டு ஆர்யபட்டா கணித்த புவியின் சுற்றளவும், இற்றை அறிவியல் கணித்த சுற்றளவும் வெறும் 0.52% வேறுபாட்டில் ஒன்றையொன்று நெருங்கி நிற்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். ஆர்யபட்டியத்தின் காலம் கி.பி.499 என்றே பலரும் சொல்கிறார்கள். இந்தப் பொழுதில் தான் தமிழகம் சேர்த்த இந்தியாவெங்கணும் வடபுல வாய்ப்பாடே பெரிதும் வழக்கில் ஊன்றியது. குறிப்பாகப் பல்லவர் ஆட்சி நம்மூரில் இதை வழக்கிற்குக் கொண்டுவந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் தென்புல வாய்ப்பாடு நம்மூர்ப் புழக்கத்திற் குறைந்து போயிற்று.

ஆர்யபட்டாவின் குறுந்தொலை வாய்ப்பாடு

1 விரற்கிடை = 10/16 அங்குலம்
24 விரற்கிடை = 1 முழம் = 1.1/4 அடி
4 முழம் = 1 கோல் (நரன்) = 5 அடி

ஆர்யபட்டாவின் நெடுந்தொலை வாய்ப்பாடு :

8000 கோல் = 1 யோசனை = 40000 அடி = 7.5757568 மைல் = 12.191665 கி.மீ

ஆர்யபட்டாவின் நூல், கடிகை (Gitika = ghatika = time, 13 நூற்பாக்கள் கொண்டது), கணிதம் (Ganika = Mathematics, 33 நூற்பாக்கள்) காலவினை (Kala-kriya = Movements measured through time, 25 நூற்பாக்கள்), கோளம் (Gola = Sphere, 50 நூற்பாக்கள்) என்னும் 4 பாடங்களைக் கொண்டது. [தமிழ்க் கடிகைக்கும், சங்கதக் கிடிகைக்கும் உள்ள பொருட் தொடர்பை அறிந்து கொள்வது நல்லது. நாளி>நாளிகை>நாழிகை என்பதைப் போலவே கிண்டி என்னுஞ் சொல்லும் தமிழில் துளைப்பொருள் நீட்சியில் கிண்டி> கெண்டி> கண்டி> கண்டிகை> கடிகை என்று அமைந்து, நீர்க்கடிகையையும், நேரத்தையும் உணர்த்தும். சங்கதத்தில் மூக்கொலி தவிர்த்து இது கிடிகை என்றும், கடிகை என்றும், அமையும். கெண்டி என்ற சொல் water containing vessel with a spout என்ற பொருளில் அமைவதை அகரமுதலிகளில் அறியலாம்.]

ஆர்யபட்டா தன்நூலின் முதற்பாடத்தில், ”புவிவிட்டம் 1050 யோசனை” என்று சொல்லி, மூன்றாவதான கணித பாடத்திற் சுற்றளவைக் கண்டுபிடிக்கக் 3.1416 எனும் கெழுவையும் (coefficient) கொடுத்திருப்பார். இந்தக் காலத்தில் இதைப் ”பை” என்று குறியிட்டு, மீதுர எண்ணாய்ச் (transcendental number) சொல்லுவோம். [இயலெண் (natural number), உள்ளக எண் (real number), வகுபடும் எண் (rational number), வகுபடா எண் (irrational number), அமைகண எண் (imaginary number), பலக்கெண் (complex number), போன்று, மீதுர எண்ணும் (transcendental number) ஒரு வகையாகும்.]

[துரந்தல் = கடந்து செல்லுதல்; மீதுரந்தல் = எல்லை கடந்து செல்லுதல். இயற்கணிதத்தில் (algebra) X^4+aX^3+bX^2+cX+d போன்றதொரு பலன வெளிப்பாட்டின் (polynomial expression)மதிப்பைக் கொடுத்து, உள்ளடங்கிய X வேறியின் (variable) விழுமத்தைக் (value) கண்டுபிடிக்கச் சொல்வார்கள். நாமும், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படை முறைகளோடு, வருக்க மூலத்தையும் (root extraction) பயன்படுத்தி, X - ஐ வெளிப்படுத்துவோம். அப்படியும் வெளிப்படுத்த இயலாதது, ”மீதுர எண்” என்று கணிதத்திற் சொல்லப்பெறும்.

A transcendental number is one that cannot be calculated by addition, subtraction, multiplication, division and square root extraction. It is also a number that cannot be expressed algebraically. transcend: c.1340, from L. transcendere "climb over or beyond, surmount," from trans- "beyond" + scandere "to climb" (see scan (v.)].

கொடுத்திருக்கும் விட்டத்தைக் கொண்டு, 3.1416 என்னும் கெழுவாற் பெருக்கி, 3298.68 யோசனை (= 24989.997 மைல் = 40216.402 கி.மீ) என்னும் புவிச் சுற்றளவைக் காணலாம். [3298.68 யோசனை = 39,968.0582 கி.மீ என்று பலரும் இக்கால ஆவணங்களிற் சொல்லுகிறார்கள். ஆனால் இவ்வொக்குமை எப்படிக் கிடைத்தது என்று எங்கு தேடியும் எனக்குப் புரியவில்லை. ஆர்யபட்டாவின் படி, 1 நரன் = ஓராள் உயரம் = 5 அடி என்று ஒக்குமை கொண்டால், 8000 நரனுக்கு 1 யோசனை என்ற அளவில் புவிச் சுற்றளவு 40216.402 கி.மீ. என்றே ஆகிறது.] இற்றை வானியலார், புவியை முழுக்கோளமாய்க் கொள்ளாது, துருவங்களிற் தட்டையான கோளமாகவே கொள்ளுவார்கள். எனவே, புவியின் நடுவண் சுற்றும் [அல்லது நடுவரைச் சுற்று = equatorial circumference = 24,901.55 miles = 40,075.16 kilometers], துருவச் சுற்றும் [polar circumference= 24,859.82 miles = 40,008 km] ஆர்யபட்டாவின் மதிப்பீட்டோடு வேறுபடும். அதே பொழுது, அந்த வேறுபாடு 0.52% க்கும் பெரிதில்லை என்பது வியப்பான செய்தி தான்.

புவியின் நிலமெலாம் வடக்கிலும், புவியின் கடலெலாம் தெற்கிலும் இருப்பதாய் முற்காலத்தில் ஒரு கருதுகோள் (hypothesis) உண்டு. அதன்படி, நிலத்தின் நடுவாய் வடதுருவமும், கடலின் நடுவாய்த் தென் துருவமும் கொள்ளப்பட்டன. வடதுருவம் ”மேல்>மேலு>மேரு” என்றும் சொல்லப்பட்டது. ஆர்யபட்டியம் - கோள பாடத்தின் 14 ஆம் நூற்பாவில், ”From the center of land and ocean (the poles), at a distance of one-quarter of the Earth’s circumference, lies Lanka; and from Lanka, at a distance one-quarter thereof, exactly Northwards likes Ujjaini” என்ற ஒரு செய்தி கூறப்பட்டிருக்கும். அதாவது துருவங்களில் இருந்து, காற் சுற்றளவில் இலங்கையும், இதன் வடக்கே, காற்சுற்றளவின் கால்மடங்கில், அதாவது புவிச் சுற்றின் 1/16 மடங்குத் தொலைவில், உச்சயினியும் இருக்கிறதாம். [உச்சயினி என்ற சொல்விளக்கத்தைப் பின்னாற் பார்ப்போம்.] உச்சயினி, உஞ்சயினி, உஞ்சேணை, உஞ்சேணை மாகாளம், உஞ்சை, அவந்தி நகர் என்றும் சொல்லப்படும் இந்நகரம் இன்றைக்கு 23.182778 N, 75.777222 E என்ற இலக்கில் இருக்கிறது. அதே பொழுது, இலங்கை ஒரு நாடா? நகரமா? அன்றி வேறு ஏதேனும் ஒன்றா? - என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

ஏனெனில், புவிச்சுற்றளவில் கால்மடங்கெனச் சொல்லும் போது, நாம் துருவங்களில் இருந்து புவியின் நடுவரைக் கோட்டிற்கே வந்து விடுகிறோம். இன்றைய இலங்கை மாத்துறைக்கருகில் (Matara) தேவினுவரை (Dondra or Devinuwara = city of god) 5 பாகை. 50’ அஃகத்திலும், 80 பா. 40 E எனும் நெடுவரையிலும் (longitude) இருக்கிறது. இதற்கும் தெற்கே கடலேயுள்ளது. எனவே ஆர்யபட்டாவின் ”இலங்கை” என்பது ஒரு நகரோவோ, நாடோகவோ இருக்க வழியில்லை. பின் அது என்ன?

இல்ந்தது>ஈல்ந்தது என்னும் வினைச்சொல் ஈலம்>ஈழம் (=பிரிந்த நிலம்) என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். இந்திய முகனை (main) நிலத்தில் இருந்து பிரிந்தது ஈழம் என்னும் தீவாகும். இல்>இலங்கு>இலங்கை என்பதும் பிரிந்த நிலத்தையே குறிக்கும். ஈழமும், இலங்கையும் ஒருபொருட் தமிழ்ச்சொற்களே. எப்படி இல்தல்>ஈல்தல்>ஈர்தல் என்ற வினைச்சொற்களும், இல்>இரு>இரண்டு என்னும் பெயர்ச்சொல்லும் இல்லெனும் வேரில் பிறந்த இருசொற்களோ, அதேபோல ஈழமும், இலங்கையும் இல்தல்>ஈல்தல் என்னும் வினையில் பிறந்த மேலும் இரு சொற்களாகும். மேலை மொழிகளில் isle, ille, island, eil என்றெல்லாம் எழுதப்பட்டு, இல்>ஈல்>ஈலன் என்றே பலுக்கப்பட்டு, தீவு என்னும் பொதுமைப் பொருள் காட்டும் மேலைச் சொற்களும், ஈழம், இலங்கை என்னும் தமிழ்ச்சொற்களும் எதோவொரு காலத்தில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதாவது நம்முடைய விதப்புச் சொல், மேலை மொழிகளில் பொதுமைச் சொல்லாய் இருக்கிறது.

பிரித்தல் பொருளில் எழும் இல்தல்>ஈல்தல்>ஈள்தல்>ஈழ்தல் என்னும் வினைச்சொல்லை, நிலத்தை ஈழ்வதற்குப் பயனாக்குவது போல, இரு துருவங்களை இணைக்கும் நெடுவரைக்கோட்டைப் பிரிப்பதற்கும் பயனாக்க முடியும். அதாவது நெடுவரைக் கோட்டையும் நாம் “ஈழ முடியும்”. இப்படிக் ஈழ்ந்து கிடைத்த ஈழப் புள்ளிகளை ஒன்றுசேர்த்தால் உலகின் நெடுவரைக்கோடுகளை இரண்டாய்ப் பிரிக்கும் ஓர் நடுவரை வட்டம் கிடைக்கும். அதாவது புவிக்கோளம் வடக்கு அரைக்கோளம், தெற்கு அரைக்கோளம் என இரண்டாய்ப் பிரிக்கப்படும். எனவே பிரிக்கும் கோடு என்னும் பொருளில் தான், நடுவரை வட்டமானது, ஈலும் கோடு> ஈலக்கோடு> ஈளக்கோடு> ஈழக்கோடு (= இலங்கைக்கோடு) என்று இயல்பாய் அழைக்கப்பட்டது. இதே பொருளிற்தான் ஆர்யபட்டா ”இலங்கை” என்ற கலைச்சொல்லால் நடுவரை வட்டத்தை அழைக்கிறார்.

[மறந்து விடாதீர்கள். வேர்ச்சொல் விளைப்பில் ஒன்றுபோல் தோற்றினாலும், இலங்கைத் தீவும், ஆர்யபட்டாவின் இலங்கைக் கோடும் பருப்பொருளில் வெவ்வேறானவை. இலங்கைத் தீவு முகனை நிலத்தில் இருந்து முற்றிலும் பிரிந்தது கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் முன்னால் என்னும் போது, ஈழம், இலங்கை என்ற தமிழ்ச்சொற்களின் அகவை குறைந்தது 5000 ஆண்டுகளாவது இருக்கவேண்டும் என்று தெரிகிறது. ஆக, அவர்களின் நாட்டிற்குப் பெயர் கொடுத்ததே தமிழ்ச்சொல்லாற் தான். ஆனாலும் ஈழத்தில், இலங்கையில், தமிழர் முதற்குடிகள் இல்லையாம்? என்னவொரு கொடுமை, வரலாற்றுத் திரிப்பு, பாருங்கள்? கேட்பதற்குத் தான் நம் தமிழினத்தில் ஆளில்லை. இருந்த ஒரே ”தம்பி”யும் கொலைகாரர்கள் சுற்றி வளைத்ததில் கூண்டோடு அழிந்து போனான். நாமோ செய்வதறியாது தவித்து நிற்கிறோம்.]

இந்த அவலச் சிந்தனை ஒருபுறம் இருக்க, "புவியின் விட்டத்தை 1050 யோசனை என்று ஆர்யபட்டா எப்படிக் கண்டுபிடித்தார்?" என்ற கேள்விக்கு வருவோம். இதற்கான விடை, நானறிந்த வரை எந்த இந்திய ஆவணங்களிலும் நேரடியாய்க் கிடையாது. இந்தியக் கணிதர் பெரும்பாலும் தாம் கண்டுபிடித்த முடிபுகளை விவரித்தாரே ஒழிய, எப்படிப் பெற்றார் என்று எழுதியது இல்லை. இந்தியக் கணிதத்தின் குறை என்று கூட இதைச் சொல்ல முடியும். [20ஆம் நூற்றாண்டின் கணித மேதையான சீனிவாச இராமானுசம் கூட அவர் கண்ட வியக்கத்தக்க முடிபுகளை எப்படிப் பெற்றார் என்று எழுதி வைத்ததில்லை. அவருக்குப் பின்னால் இன்றுவரை பல்வேறு கணிதரும் “எப்படி?” என்று துழாவிக் கொண்டே இருக்கிறார்கள்.] ஆனாலும், அந்தக் காலக் கருவி, நுட்பம், கணித அறிவு ஆகியவற்றைக் கொண்டு, ஆர்யபட்டாவின் சிந்தனை ஊற்றுக்காலை நாம் ஓரளவு ஊகிக்க முடியும். இதற்குத் தேவையானவை இரண்டு குச்சிகள், ஒரு முள், சற்று நீண்ட கயிறு, மரங்கள் இல்லா வெட்ட வெளி, வடிவியலறிவு ஆகியவை தான். தமிழர் வானியல் இப்படி எளிய கருவிகளோடும் கூர்ந்த கவனிப்புக்களோடுமே கிளர்ந்தெழுந்திருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 06, 2009

குளிர்ச் சொற்கள்

மாந்தவாழ்வில் பல சூடுகளை (hotnesses) நாம் பட்டறிகிறோம். உறைபனிப் புள்ளிக்கு அருகில் வருவது சிலிர் (chill). [உறைதல் = to freeze. ஒரு பொதி (body) நீர்மமாய் உள்ள வரை ஒரு ஏனத்திலோ, பள்ளத்திலோ, அங்குமிங்கும் அசையமுடியும். ஆனால், குறிப்பிட்ட சூட்டிற்கு இறங்கி வரும்போது அசையாது போவதால் இப்புள்ளி உறைதலாயிற்று. உறு>உறை என்று இச்சொல் வளரும். உறுகுதலும், உறைதலும் ஒரேபொருள் தரும் இருவேறு சொற்கள். frost என்பது ”உறைபனி” என்றும் frigid என்பது ”உறைந்த” என்றும் சொல்லப்பெறும்.] அதற்கும் மேலே குளிர் (cold); அதற்கும் மேலே வெதுமை (warm); இன்னும் மேலே இளஞ்சூடு (mild hot); அதற்கும் மேலே கடுஞ்சூடு (very hot); இன்னும் போனால் கொதிசூடு (boiling). இப்படி ஒவ்வொரு சூட்டையும் வெவ்வேறு சொற்களால், தமிழில் உணர்த்த முடிகிறது. அதே பொழுது, வெவ்வேறு குளிர்நிலைகளைத் துல்லியமாய் விவரிப்பதில் இற்றைத் தமிழில் தடுமாறுகிறோம். நொகை (negative) 50 பாகை செல்சியசிலிருந்து பொதிவு (positive) 50 பாகை செல்சியசு வரையுள்ள வெதணத்தை (climate) தாமாகவோ, அன்றிக் கருவி சார்ந்தோ, மாந்தர் எதிர்கொள்ளும் இக்காலத்தில், தமிழன் மட்டும் புறனடையா, என்ன? உலகின் பல்வேறு வெதணங்களை விவரிக்கு முகமாய், ஊதுமக் கோள வெம்மைக்கும் (atmospheric temperature) கீழுள்ள சூடுகளைக் கீழே பார்ப்போம்.

முதலில் வருவது குளிரெனும் சொல்.

குல் எனும் வேரிலிருந்து குல்>குள்>குள்ளுதல் = குறுகிப் போதல் என்பது விரியும். குறுகியவன் குள்ளன் தானே? எத்தனையோ வினைகளால் நாம் குறுகிப் போகிறோம். அதில் முதன்மையானது நீருக்குள் நின்றவாறே உடல் குறுக்கித் தலையை உள்ளிழுத்துக் கொள்வதாகும். இதையே குள்ளித்தல்> குளித்தல் என்கிறோம். இன்னொரு விதமாய் நீருக்குள் ஆழ்தல் = நீராழல்> நீராடல் என்றும் சொல்லுகிறோம். நெட்டநின்று மேனியில் நீரை ஊற்றிக் கொள்வதும், நீர்த்தாரைக்குக் (water shower) கீழ் மேனிபடிவதும், விசையோடு தூம்பு (tube) நீரை மேனியிற் சிந்திக் கொள்வதும், தொட்டிக்குள் படுத்து நீரில் தோய்வதும், எனக் குளித்தல் பலவிதங்களாய் இன்றாயினும் தமிழரைப் பொறுத்தவரை, அதன் அடிப்படை குள்ளுதலே. நீண்டுகிடக்கும் ஒரு பொருள், முழுக்கவும் குள்ளினால், அது சுருளும் (circles), உருளும், (rolls) கோளமாய்த் (globe) திரளும். குறிப்பிட்ட பருமை (volume) கொண்ட பொதி (body), நுணவப் பரப்போடு (minimum surface) வெளியை நிறைக்க, உருண்டை (round) வடிவமே கொள்ளும் என்பது வடிவியற் (geometry) பாடம். குளிகை, குளியம் (globules) என்ற சொற்கள் உருண்டைகளைக் குறிக்கும். குள்வது குவ்வுதலாகி, அதுவும் நீண்டு குவளுதலாகும். குவள்>குவளம்>கோளம் = உருண்டை.

அடுத்து, சூழமை வெம்மை (environmental temperature) சட்டெனக் குறைந்தாலும், நாம் குள்ளிப்போகிறோம் அல்லவா? நம்மை இப்படிக் குள்ளவைப்பது குள்ளி> குளி>குளிர் என்றாகும். குளிர் கூடக்கூட மெய் ஒடுங்குகிறோம் (குறுமைக் கருத்தைக் கூர்ந்து கவனியுங்கள்); நடுங்குகிறோம். குள்ளுதல் = to become cold O.E. cald (Anglian), ceald (W.Saxon), from P.Gmc. *kaldaz, possibly pp. adj. of *kal-/*kol-, from PIE base *gel-/*gol- "cold." நம் குளிருக்கும் அவரின் cold - ற்கும் உள்ள இணை வியக்கத்தக்கது. குளிருக்கு மாற்றாய்,

நளிர் (நள்>நளி>நளிர்; நள்ளுதல் = நடுங்குதல்),
பனி (பல்>பன்>பன்னி>பனி. இதை விரிவாய்க் கீழே பார்ப்போம்.),
அளி (அள்>அள்ளு>அள்ளி>அளி; அள்ளுதல் = செறிதல், to become compact, சுருங்குதல், சிறுகுதல்),
தண் (துள்>தள்>தண் = நெருக்கப் படுதல், நெருக்கலின் தொடர்ச்சியாய் அமைவது.),
மழை (ஊதுமக்கோளத்தின் மேன்மட்ட மேகங்கள் குளிர்ந்து, ஈரப்பதம் (moisture) செறிந்து (concentrated), கனிந்து (condense), மழை பொழிய, ஊதுமக் கோளத்தின் கீழ்மட்டச் சூடும் குறைவதால், குளிர்ச்சிப் பொருள் இங்கு சொல்லப்பட்டது,)
சாந்தம் (கீழே சிந்து எனும் சொல்லை விளக்கும்போது வருகிறது.)

என்ற சொற்களை அகரமுதலிகள் எடுத்துக் காட்டும். குளிர், நம்மைச் சூழ்ந்த சூட்டிற்கும் கீழுள்ளதைக் குறிக்கும் பொதுமைச் சொல்லாகும்.

அடுத்து, சில் எனும் வேர் குல்லைப் போன்றது. சில்>சில்லி என்பது சிறு துண்டைக் குறிக்கும். சில்லி, சல்லியாய்த் திரிந்து சிறுநாணயத்தைக் குறிக்கும். அக்காலத்தில் 192 சல்லி = 1 உருபாய் ஆகும். ”கண்ணாடிக் குவளையைத் தரையில் போட்டு உடைத்தான்; சுக்கு நூறாய் சில் சில்லாய் ஆகிப்போனது” எனும் வாக்கில், சுக்கு என்பது சுல்>சுல்க்கு>சுக்கு என்றும், சில் என்பது சுல்லின் திரிவாயும் உருவானவை. சுல்>சுரு> சுருங்கு என்ற வளர்ச்சி shrinkage = குறைதல் என்பதை உணர்த்தும். உடல் குறுகுவதை ”உடல் சிறுகும்” என்றும் சொல்லலாம் தானே? குல்>குரு> குறு என்பதைப் போலவே சில்>சிரு>சிறு என்பதும் விரியும். குல்> குன்னி = சிறியது என்பதைப் போலவே சில்>சின்னி என்பதும் பொருள் தரும். சின்>சின்னவன் என்பதும் சிறுமை உணர்த்தும். ஒரு பெருங்கல்லை சில் சில்லாய் உடைத்து உருவம் வடிப்பது சில்லை>சிலை ஆகும்.

குளிரின் விதப்பாய் வருவது சிலிர். இதைச் சில்லீடு என்றுஞ் சொல்லலாம். “அவன் உடம்பு சிலிர்த்திருக்கிறது/ சில்லிட்டிருக்கிறது. சன்னி கண்டதோ? மருத்துவரைக் கூப்பிடுங்கள்” என்கிறோம் இல்லையா? [சில், சன்னியைச்  சிலர் ஜில், ஜன்னி என்றுபலுக்கி அவை சங்கதமோ என்று மயங்குவர்.] சில்லெனும் சொல் குளிரை உணர்த்தியதை அன்றாட வாழ்க்கையிலிருந்தே அறியலாம். வட்டமாய் ஆலித்து, வட்டிலுக்கும் குவளைக்கும் மாற்றி மாற்றி, நீர்ப்பரப்பை அதிகரித்து, வெப்ப வாயிகத்தின் (heat convection) மூலம் சூட்டைக் குறைத்து, தேநீர் அருந்துகிறோமே? ”ஒரு நீர்ப்பொதியை அடுத்தடுத்துத் துளிக்க (making it into droplets) அதன் பரப்பு கூடிப் பொதிச்சூடு குறையும்” எனும் இச் சூழ்க்குமத்தைப் பாமரரும் தம் பட்டறிவாற் புரிந்திருப்பர்.

[துல்>துள்+ந்+து = துண்டு.
துல்>துள்>துளி. துளித்தல் = துண்டித்தல்.
துல்>துள்>துள்வுதல்>துவ்வுதல்>தூவு = dew: O.E. deaw, from P.Gmc. *dawwaz, from PIE base *dheu-.
துல்>துள்>துள்வு>துவ்வு>தூவு>தூவல்,
துல்>துள்>துள்வு>துவ்வு>துவல்>துவலை>திவலை;
துல்>துல்குதல்>துகுதல்>துகள்;
துல்>துரு>துறு>தூறு; மழை தூறுகிறது. தூவு, துளி, தூறு என்ற சொற்கள் அடுத்தடுத்து பெரிய அளவின. மழை தூவித் துளித்துப் பின் தூறும்; அப்புறம் பெய்ந்து, பொழிந்து பின் கொட்டும்.
துல்>துன்>துன்னல்;
துல்>துள்>துளி>தெளி,
துல்>துரு>துறு>தெறு>தெறி. பல்துளி>பஃறுளி என்பது பழந்தமிழகத்தின் தெற்கே இருந்த ஆறு.]

”நீர்ப்பரப்பு கூடக்கூட நீர்ச்சூடு குறையும்” என்பதால் சிறுத்தலை, சூட்டுக் குறைவோடு பொருத்துவார்கள். சில்>சிலிர்>சிலிர்தல். பிறவினையில் இது சிலிர்த்தல் ஆகும். [இப் பிறவினைச் சொல்லால் நடுக்கம், திகைப்பு போன்ற உணர்வுகளைக் குறிப்பர். அவையும் குளிர்ச்சிப் பொருளின் நீட்சி உணர்வுகளே.] சில்-இடுதல் சில்லீடு (chill) எனும் பெயர்ச்சொல் உருவாக்கும். chill: O.E.ciele, cele "cold," from P.Gmc. *kal- "to be cold," from PIE base *gel- "cold."

சில்லிட்ட நீரையே ஆண்டின் பல மாதங்கள் வடபுலத்தார் பயனுறுத்துவதால் சில்>சல்>சலம்>ஜலம் என்று திரிவில் நீர்ப்பொருளைச் சங்கதம் சுட்டும். [சலசல என்ற ஒலிப்பொருளில் ”சலம்” பிறந்ததாய்ச் சொல்வது இன்னொரு விளக்கம்.] ஜலத்திலிருந்து ஜலீலம் என்ற சங்கத நீட்சி ஏற்படும். மேலை நாடுகளில் சிலபோது நீரும் பனிக்கல்லும் சேர்ந்து காற்றோடு பெய்யும் மழை வருவதுண்டு. இதை sleet என்பார். சில்லின் நீட்சியாய் பனிக்கல்லைச் சில்லுக்கல் எனலாம். [sleet ஐ சில்லுக்கல் மழை என்று தமிழில் எளிதாய்ச் சொல்லலாம். கல்லை ஒதுக்கிச் சிலிதை என்றுஞ் சொல்லலாம்.]

சில்லின் நெருங்கியதிரிவில் சல்>சல்நம்>சன்னம் ஆகி thin - சிறுமை காட்டுவது போல, மெய் சில்லிட்ட நிலையை சல்நி>சன்னி எனும் சொல் அடையாளம் காட்டும். சில்>சின்னி என்பதும் அதே நிலை காட்ட முடியும். ஒரு நீர்ப்பொதி சில்லுறும் போது, சிலும்பும் (சில்>சிலு> சிலும்பு), சில்கும், சீகும், சீகுறும். (சீகரம் இப்படி எழும்.) சிதறும் (சில்தல்>சிதல்> சிதர்> சிதரு>சிதறு. சிதர், சிதரம் = மழைத்துளி ). பின் சில்ந்தியும் போகும் (>சிந்தும். சிந்தல்= சொரிதல்). சிந்திய பொருளின் சூடும் குறையும்.

சிந்து என்பது துளி, நீர், ஆறு, கடல் என்பதோடு வெள்ளை நிறத்தையும் குறித்தது இங்கு கவனிக்கத் தக்கதாகும். பனியும் வெள்ளை தானே? சுல் என்னும் வேர் வெள்ளையைக் குறிக்கும். சுல்>சுல்லு>சுள்ளி என்பது வெள்ளியைக் குறிக்கும். சுல்லு>சுல்லம்>சுல்வம் என்பது சங்கதத்தில் வெள்ளியைக் குறிக்கும் (ஆங்கில silver). வெள்ளை நிறத்து ஆண் விந்து சுல்>சுல்க்கு> சுக்கு>சுக்கிலம் எனப்படும். வெள்ளை நிறத்து வெள்ளிக் கோள் சுல்>சுல்க்கு>சுக்கு>சுக்ர என்ற திரிவில் சங்கதப் பெயர் கொள்ளும். சுல்>சுவ்>சுவேது எனும் வடமொழி வளர்ச்சியும் வெள்ளை குறிக்கும். சுவேதாம்பரர், வெள்ளையாடைச் செயினரைக் குறிக்கும் சொல். இன்றைக்கு கேரளத்தின் பெரிய ஆறான பெரியாறு சுள்ளியம் பேராறு என்றே சங்க இலக்கியத்தில் பேசப்படும். நீரக அயனிச் செறிவு (hydrogen ion concentration) கூடிப்போய் களரி அரங்கில் (alkali range) வருமாகில் ஆறு பால் நிறம் காட்டும். பால் நிறம் வெள்ளி நிறம் தானே?

வெள்ளைப் புள்ளிகளையுடைய ஆடு, மாடுகளைச் சிந்துவகை என்று குறித்துள்ளார். வெள்ளை நிற இருவாட்சி (Tuscan jasmine) சிந்து என்று சொல்லப் படும். செல், சி(ந்)தல், சிதலை என்ற சொற்கள் வெண்ணிறக் கறையானைக் (termite) குறிக்கும். சிந்தின் சகரத்தைப் போக்கி இந்தெனும் பழக்கம் நமக்கு  உண்டு. சிந்து எனும் சொல் இகர/அகரப் போலியில் சந்து என்றும் திரியும். சந்த்ர என்றும் வடவர் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஒலி வேறுபாடுகளோடு

இந்துகமலம், சந்த்ர காம்பியம், சித அம்புஜம் = வெண்டாமரை,
இந்த்ர புஷ்பம் = வெண்தோன்றி,
இந்த்ரபம் = வெட்பாலை

என்னும் சில சித்த மருத்துவப் பெயர்களைப் பார்த்தால், ”இந்து, சிந்து, சந்து, சந்த்ர” என்ற சொற்களுக்கும் வெண்மைக்கும் ஒரு தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

சிந்தாற்றின் உயர்பகுதிகளில் கரைகளை ஒட்டிய பாறைகளில் படிவமாய்க் கிடைக்கும் உப்பு சிந்துப்பு எனப்பெறும். [சகரம் தவிர்த்து இந்துப்பு என்றும் இதைச் சொல்வர்.] வடக்கே இந்தி மொழியில் ”சந்தா நமக், சிந்தா நமக்” என்றும் இதைச் சொல்வார். நம் சித்த மருத்துவ அகராதிகளில் ”சந்திர லவணம், சிந்து, சிந்துசாரம்” என்றும் இது சொல்லப்படுகிறது.

இந்த உப்பின் கதையைச் சற்று விரிவாய்ப் பார்ப்போம். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், கோண்டுவானாவில் இருந்து பிரிந்த தென்னிந்தியா வடகிழக்கே நகர்ந்து ஆசியாவை முட்டியது என்பார். இரண்டிற்கும் இடைப் பட்ட டெதிசுக் கடல் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து ஆவியாகிப் போனதாம். இதனால், பழங்கடலின் உப்பு செறிந்து, படிகமாகிப் பல மாத்திரிகள் (meters) உயரத்திற்குப் பள்ளங்களை நிறைத்து, பாறையானதாம். மேலும் மேலும் ஆசியாவோடு மோதியதால், உப்புப் பாறைகளுக்கும் மேல் வண்டலும் மண்ணும் படிந்து, கூடவே நில மடிப்பு விழுந்து, உயர்ந்து, குன்றுகள், மலைகள் ஏற்பட்டனவாம். இம்மலைகளின் தொடரே இயய மலைத் தொடராகும். காலம் செல்லச்செல்ல, இமயமலை மேல் பனிப் பாறைகள் உருவாகி, வெப்பம் கூடும் காலத்தில், பனியுருகி மேற்கே வழிந்து வளைந்து, சிந்தாறு ஏற்பட்டுத் தென்மேற்கில் ஓடியதாம். அப்பொழுது, அது வண்டல்களை வாரிக் கொள்வதோடு அன்றி, பனிப்பாறைகள் ஆற்றின் இருபுறத்தும் மூடிநிற்க வழி ஏற்படுத்திப் போனது. பனிப்பாறைகளின் கீழே பனியுருகி நிலப்பாறைகளின் புரைகள் (pores) வழி ஊடுறுவிக் கசிந்து, அங்கிருந்த உப்பைக் கரைத்து கீழ்ப்புரைகள் வழியாய் வெளிப்பட்டு, சில இடங்களில் தொடர்துளிகளாய் ஆண்டு முழுக்கச் சொரிந்திருக்கிறது. செறிந்த உப்புக் கரைசலில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் நீர் ஆவியாகும் போது நிலப் பாறையோரங்களில் புரைகளுக்கு அடுத்து சரஞ்சரமாய் உப்பு மீண்டும் படிகமாகித் தொங்கிக் காட்சியளித்தது.

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நடந்துவரும் இப் புவிச்செயல்கள் 50000  ஆண்டுக்கணக்கிலும், அதற்குப் பின்னும் படர்ந்த இந்திய முதன்மாந்தருக்கு புரியவா செய்யும்? அவர் பார்த்ததெல்லாம் பனிப் பாறைகளும், அவற்றிற்குச் சற்று கீழே சரமாய்த் தொங்கும் உப்புப் படிவங்களும் தானே? கடற்கரை இலாக் குறிஞ்சிநிலத்தாருக்கு, கடலுப்பின் பகரியாய்ச் சிந்துப்பு பயனுற்றது. அம்மாந்தரின் பார்வையில், சிந்துப்பு என்பது பாறைகளில் பனிபடர்ந்து சொரிவதால் இயல்பாய் விளையும் உப்பு. (Rock salt is formed naturally on mountains and rocks, being solidified from falling dew. It is an impure chloride of sodium.) உலகின் விந்தை விளைவுகளில் சிந்துப்பும் ஒன்று. இற்றைப் பாக்கித்தானில் உப்பு அரங்குப் (salt range) பகுதிகளில், ஆற்றிற்கும் உப்பிற்கும் உள்ள பொதுக் கரணியத்தால் இப்பெயர் ஏற்பட்டது. அப் பொதுக்கரணியம் என்ன?

சிந்து எனும்சொல் துளி, நீர், ஆறு, கடல், வெள்ளை மட்டும் குறிக்காது, மிகுந்து சில்லிட்ட நீர் அல்லது பனித்துகள் என்பதையும் குறித்திருக்கும் என்று கீழ்வரும் பல கரணியங்களால் ஊகிக்கிறோம். அக் கரணியங்களில் முதலானது, ”ந்நு, ந்து” என்ற பலுக்கற் திரிவுகள் இருந்தாலும் தமிழிய மொழிகளில் இணைச்சொற்களாகி ஒரே பொருளைச் சுட்டி அமைவதாகும்.. காட்டு: வந்நு/வந்து, பந்நு/பந்து. (நகர ஈறு னகரம் ஆவதையும் இங்கு சேர்த்து எண்ணலாம்.) சில்>சின்>சின்னு என்ற வளர்ச்சி ஏற்படுமானால் சின்னு/சிந்து என்ற திரிவும் தமிழில் அமையக் கூடாதா, என்ன?

snu என்னும் சங்கத வேர்ச்சொல்லிற்கு dripping, trickling, sprinkling என்ற பொருட் பாடுகளைச் சொல்வார். சில்>சின் எனும் தமிழ்வேரில் கிளைத்த சின்னம், சீந்தல் என்ற தமிழ்ச்சொற்கள் மழைத்தூறலைக் (drizzling) குறித்ததாய் அகராதி நிகண்டு பதிவுசெய்யும். கோவை, நீலமலை மாவட்டங்களைச் சீத நாடென்று சொல்லிக் கொடுந்தமிழ் 12 நாடுகளில் ஒன்றாய்க் காட்டுவார். சீந்து, சீந்தல், சீதம் ஆகிய தமிழ்ச் சொற்களின் முந்திய வடிவாய்ச் சிந்து என்ற சொல்லே அமைய முடியும். அதற்குப் பனிப்பொருள் (cold, chill) இருந்திருக்க பெரிதும் வாய்ப்புண்டு. தூவப்பட்ட (sprinkle) பனித்துகள், உருகி நீரானால், அது சொட்டும் (drips), துளித்து விழும் (trickles) தானே?

snu என்ற சங்கதச் சொல்லை ஒட்டிய மேலைச் சொற்கள் பலவும் உள்ளன. snow: O.E. snaw "snow," from P.Gmc. *snaiwaz (cf. O.S., O.H.G. sneo, O.Fris., M.L.G. sne, M.Du. snee,Du. sneeuw, Ger. Schnee, O.N. snjor, Goth. snaiws "snow"), from PIE *sniegwh -/*snoigwho- (cf. Gk. nipha, L. nix (gen. nivis), O.Ir. snechta, Welsh nyf, Lith. sniegas, O.Prus. snaygis, O.C.S. snegu, Rus. snieg', Slovak sneh "snow") என்று அவை அமைந்திருக்கின்றன. 

ஓர் ஆண்டில் ஆறேழு மாதங்கள் பனிநீரைத் தங்கள் மேனிமேற் சொரிந்து கொண்ட வடபுலத்தார் snu என்ற சொல்லோடு தொடர்புறுத்திக் குளித்தலை ”ஸ்நாயதி” என்று சொல்லி ஈரப்படுதல் என்று பொருள் கொண்டார்கள். வடக்கே குள்ளக் குளிக்க முடியாது; ஓரளவு ஈரப்படுத்திக் கொள்ளவே முடியும். [The cognate in Skt., snihyati, came to mean "he gets wet."] சுடுநீரால் தான் அவர்கள் ஆண்டின் பல மாதங்கள் குளிக்க முடியும்.

சிந்திற்கும் பனிக்கும் தொடர்பில்லையெனில், சிந்தாறு என்று கூட்டுச்சொல் ஏற்பட வாய்ப்பேயில்லை. [சிந்து எனுஞ் சொல்லை ஈச்சமரத்தோடு தொடர்பு காட்டி திரு. நா. கணேசன் பொருள் சொல்வார். அதையேற்க எனக்குப் பெருந் தயக்கம் உண்டு. இன்னும் சிலர் சிந்தின் சங்கத வேராக ஸித் = செல்லைக் காட்டுவர். அந்த வேர் சிந்தின் விதப்பான பொருளாகாது பொதுமையான பொருளாய் உள்ளது. எப்பொழுதும், ஆற்றின் பெயர்கள் பொதுமையில் இல்லாது விதப்பாகவே இருப்பதையே நாம் காண்கிறோம். காட்டு: பொன்னி, கன்ன பெருநை, தாம்ப பெருநை, வெள்கை>வைகை]

சிந்தாற்றின் சிறப்பே, மக்கள் புழங்கும் உயர்பகுதிகளில், வடந்தைப் பருவத்தில் (வாடை, வடந்தல்> vadanther> vidanther> winther> winter) ஆற்றின் கரையோரங்கள் பெரிதும் பனி பொழிந்து பாறைகளாவது தான். பனிப்பாறை படர்ந்து கிடக்கும் சிந்தாற்றின் மேற்பகுதிகளை மிகப் பழங் காலத்தில் மாந்தர்களால் அணுக முடிந்திருக்க வேண்டும். அற்றை நிலையில், மீள மீள வெம்மை கூடும்போது பனிப்பாறை உருகி, நீராய் மாறிப் போவதையும் பின் வெம்மை குறையும்போது, நீர் உறைந்து பனிப்பாறை ஆவதையும் அவர் பட்டறிந்திருக்க வேண்டும். சிந்தியதும், உருகியதும் நீர்த்துகளே என்ற புரிதல் அவர்க்குப் பட்டறிவால் ஏற்பட்டிருக்கும். இச் சிந்தனைகளின் வழி ஓர்ந்துபார்த்தால், சிந்தாற்றின் பொருள் பனியாறு என்பதாய் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருவோம். [கூடவே silver river - வெள்ளாறு என்ற புரிதலும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடியும். தென்னகத்திலும் நாலு வெள்ளாறுகள் வேறு காரணம் பற்றியுள்ளன. சிந்து என்பது வெள்ளைப் பனி. இவை வெறுமே வெள்ளாறுகள்.]

சிந்தாறு = பனியாறு என்ற அதே அணுகலைக் கொள்ள முடியாத அளவிற்கு, காடுகள் மிகுந்து, மலைப்பாதைகள் அமையாது, கங்கை, தொழுனையின் (யமுனை) மேற்பகுதிகள் இருந்திருக்கலாம். வடபுலத்து மாந்தர், தம் நாகரிக வளர்ச்சியில் சிந்தாற்றங்கரையில் இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்த பின் தான், கங்கை, தொழுனைக் கரைக்கு மெதுவாய்ப் பெயர்ந்திருக்கிறார். எனவே பனியைச் சிந்தாற்றோடு மட்டுமே தொடர்புறுத்தியிருக்கலாம். கங்கை, தொழுனையின் நீர் மலையின் கீழ்மட்டங்களில் மட்டுமே அணுகக் கூடியதாய் இருந்ததால், பனியைக் காணாது வெறுமே சில்லிட்ட நீராய் மட்டுமே வடபுல மாந்தர் இவ்வாறுகளை உணர்ந்திருக்கலாம்.

முன்சொன்னது போல், சிந்து எனும் சொல் இகர/அகரப் போலியில் சந்து என்றும் திரியும். சந்து, சாந்தென்றும் நீளும். சந்தின் நீட்சியாய்ச் சந்தன் என்ற பெயர் குளிரும் இரவிற்குரிய, பால்வண்ணம் காட்டும், நிலவின் பெயராய் வடபுலத்திலமையும். சந்த>சந்த்ர என்று சங்கதத்தில்  இன்னுந் திரியும். சிந்து, சகரம் தவிர்த்து இந்தாகி மீண்டும் நிலவைக் குறிக்கும். நிலவைக் குறித்த சொல் இன்னுந் திரிந்து இந்த>இந்த்ர என்றாகி வெள்ளை நிறத் தேவர் தலைவனைக் குறிக்கும். அத்தலைவன் ஏறும் விலங்கையும் வெள்ளை யானை என்று தொன்மஞ் சொல்வார். அவன் பார்வைக் குளிர்ச்சிப் பார்வை என்றும் அவர் தொன்மங்கள் கூறும்.

னும் அடுத்த சொல்வளர்ச்சி நிலைகள் ஆகுகுளிர்வது, நிலவிற்கு இயல்பானதால், தண்ணவன், நிலவைக் குறிக்கும். [தண் எனும் வேர் பற்றி இக்கட்டுரையில் அலசவில்லை.] இதுபோல ஒரு குறிப்பிட மரக்கட்டைகளை அரைத்துப் பெற்ற கலவை குளிர்ச்சி தருவதால், நிறம் வெள்ளையன்றி வேறாயிருந்தும், சந்து சந்தனம் என்ற சொற்களைப் பெறும். பின் அக்குளிர்ச்சி உடலைச் சார்வதால் சார்ந்து>சாந்து>சாந்தம் என்று பெயரும் வேறுவகையிற் கொள்ளும். சாரம்>ஆரம், சாரல்>ஆரல் நீட்சிகள் இன்ம்.

சிந்து, சந்து, சீதம் போன்ற பல்வேறு சொற்களை விரிவாகப் பார்த்த நாம் இனிப் பனி என்று பலரும் பயன்படுத்தும் சொல்லைப் பார்ப்போம்.

”ஒரு நீர்ப்பொதியை துளிக்கத் துளிக்க அதன் பரப்பு கூடிப் பொதிச்சூடு குறையும்” என்ற வாக்கிலேயே பனி என்ற சொல்லுக்கான உட்பொருளும் அடங்கியுள்ளது. ஒரு நீர்ப் பொதி 100 ml இருக்கிறது என்று வையுங்கள். அதை நூறு 1 ml பொதிகளாய் மாற்றினால், பரப்புக் கூடுமா, இல்லையா? இன்னும் பகுத்து, ஆயிரம் 0.1 ml பொதிகளாய் ஆக்கினால் பரப்பு மேலும் கூடும். மேலும் பகுத்து பத்தாயிரம் 0.01 ml பொதிகளாய் ஆக்கினால், நீர்ப்பொதியின் பரப்பு எக்கச்சக்கமாய் கூடிப்போகும். இப்படிப் பகுப்பதின் விளைவால் பொதியின் சூடு, சுற்றுச்சூழலுக்குப் பரவிக் குளிர்ந்துகொண்டே வரும். பொதிகள் பலவாகப்பலவாக, ஒவ்வொரு பொதியும் தன்னளவில் சிறிதாகிப் போகும். பொதிப் பன்மையோடு, தனிப்பொதியின் சிறுமை அமைவதில் இயங்கியற் (dialectics) தொடர்பு சேர்ந்தே வரும். இதனால், சிறுமைக்குச் சொன்ன குளிர்த் தன்மை, பொதிகளின் பன்மைக்கும் பொருந்தி வரும். இந்த அடிப்படைக் கருத்தோடு பன்மையைச் சற்று ஆழ்ந்து பார்ப்போம்.

கல்>கால், கல்>கள்>காள் என்ற சொற்கள் கருமையைக் குறித்தது போல் பல்>பால், பல்>பள் என்ற சொற்கள் முதலில் வெண்மையையே ல் குறித்தன. வாயிலிருக்கும் பல்லிற்கு வெண்மையே முதற்பொருளாய்ச் சொல்லப்பட்டது. அதேபொழுது, பல் ஒன்றல்ல, ஒன்றிற்கு மேற்பட்டது. அதனால் ”ஒருமைக்கு மீறியது” என்ற வழிநிலைப் பொருள் அடுத்து ஏற்பட்டு இருக்க வேண்டும். பல்குதல் வளர்ச்சியும் பல்லில் தொடங்கியதே. ”பல” போன்ற சொற்கள் பல் எனும் பருப்பொருளில் ஏற்பட்டன என்று புலவர் இளங்குமரன் ”தமிழ் வளம் -சொல்” என்ற தன் பொத்தகத்தில் விளக்குவார். [வெளியீடு. திருவள்ளுவர் தவச்சாலை, திருவளர்குடி (அல்லூர்), திருச்சி மாவட்டம் 620101] பல்லில் பிறந்த பல்வேறு சொற்களை அதில்  விளக்குவார். படிக்கவேண்டிய கட்டுரை. பலாப் பழத்தில் பல சுளைகள் இருப்பதால் தான் பலா என்ற சொல் ஏற்பட்டது. பலாச்சுளைகள் போலப் பருத்திக்காய் வெடிக்கையில் பருத்திச் சுளைகள் பல இருக்கும். பல்>பன்>பன்னு> பன்னல் என்ற பெயர் இப் பன்மைக்காரணம் பற்றியே பருத்திப் பஞ்சிற்கு ஏற்பட்டது. இதேபோல நீர்த்துகள் பலவாறாய்ச் சிதறிக் கிடப்பதால் பல்> பன்>பன்னி>பனி என்ற சொல் ஏற்பட்டது.

பனி என்ற சொல் நீரின் திண்மத் துகளை மட்டுமல்லாது, நீரின் நீர்மத் துகளையும் குறித்தது. இல்லாவிட்டால் மார்கழி மாதம் நம்மூரில் காலை வேளையில் ”பனி பெய்கிறது” என்று எப்படிச் சொல்வோம்? பனி என்பது நீர்மமா, திண்மமா என்பதில் இரண்டுங்கெட்டான் நிலையை இச்சொல் வழி பார்க்கிறோம். நொய், பொடி, புழுதி, நுறுங்கு என்ற சொற்கள் தெளிவாய்த் திண்மத் துகள்களைத் தமிழில் காட்ட, பனியின் வரையறை நம் புழக்கத்தில் துல்லியமாய் இல்லை தான். அதேபொழுது பனித்துகள் என்றால் திண்மம் என்று தெளிவாய்ச் சொல்லிவிட முடியும். பனியின் நீர்ம நீட்சியாய், வடவர் பனி>பானி>பாணி, பனி>பானி>பானீயம் போன்ற சொற்களைப் பயில்வர். [இதேமுறையில் தான் சிந்திற்கு நீர்ப்பொருள் ஏற்பட்டுள்ளது. அப்படியானால், சிந்தின் முதற்பொருள் பனி போல் தான் இருந்திருக்க வேண்டும் என்ற புரிதலையும் பனி>பாணி வளர்ச்சியில் தலைகீழாய்ப் புரிந்து கொள்ளலாம்.] பனியின் இன்னொரு நீர்ம நீட்சியாய் பனித்தல் என்ற வினை தமிழில் விடா மழையைக் குறிக்கும். பனியின் மீகுறை வெம்மையை உணர்த்துமாப் போல பனிப்பு என்ற சொல் தமிழில் நடுக்கத்தை உணர்த்தும்.

வெள்ளை நிறத்தை உணர்த்துமாப் போல பல்>பல>பலதேவன் என்ற பெயர் கண்ணனின் அண்ணனைக் குறிக்கும். பல்>பால்>வால் என்னும் திரிவில் வாலியோன் பெயரும் அவனையே குறிக்கும். வால்>வல்> வெல்>வெள் என்ற திரிவும் வெள்ளையே குறிக்கும். பால் நிறம் கொண்டே, பல்>பால்ப்பு>பார்ப்பு>பார்ப்பனர் என்ற சொல் எழுந்ததாய் இரா. மதிவாணன் உறுதி செய்வார். வெள்ளை நிறத்துக் கலைமகள் வெள்ளை மெய்யாள், வால்>வானி>வாணி என்று பெயர் பெறுவாள்.

பால்>பாள்>பாள்+ந்+து = பாண்டு என்றசொல் வெள் நீற்றைக் குறிக்கும். வெள்நீற்றை இனக்குழு அடையாளமாய்ப் பூசியவர் பாண்டியர் எனப் பட்டனர். பாண்டியர் பற்றிய பல செய்திகளும் வெள்ளையைத் தொடர்பு உறுத்தியே வருகின்றன. [வெள்நீறைப் பூசும் பழக்கம் ஆத்திரேலியப் பழங்குடியினருக்கும் உண்டு. பாண்டியர் பழங்குடியினர் என்ற தமிழர் தொன்மமும் ஆத்திரேலியப் பழங்குடியினர் தமிழகம் வழியாகப் போய் இருக்கலாம் என்ற இற்றை ஈனியற் கண்டுபிடிப்பும் இப்பழங்குடிப் பழக்கங்களை ஆழவும் ஆய்வுசெய்யத் தூண்டுகின்றன.] இதேபோலச் சாரல் = சந்தனத்தை இனக்குழு அடையாளமாய்ப் பூசியவர் சாரலர்>சேரலர் எனப்பட்டனர். மஞ்சட் தூளை [அது காடியரங்கில் (acid range) இருந்தால் மஞ்சளாயும், களரியரங்கில் (alkali range) இருந்தால் குங்கும நிறத்திலும் இருக்கும்] பூசியவர் கொல்>கோழு>கோழியர்>சோழியர் எனப் பட்டனர். பழைய முப்பெரும் தமிழ் இனக்குழுக்களும் இன்று தமக்குள் ஒன்றாய்க் கலந்து போய், தமிழர், மலையாளிகள் என இரு பெரும் தேசிய இனங்களாய் மாறிப் போயினர். இரு தேசிய இனங்களிடையே நீறு பூசுதலும், சந்தனம் பூசுதலும், மஞ்சள்/குங்குமம் பூசுதலும் இனக்குழு மிச்சங்களாய்த் தங்கிப்போய், அதேபோது சமய வழக்கங்களாய்க் காட்சியளிக்கின்றன. இப் பழக்கங்கள் சிச்சிறிதாய் இந்தியாவின் மற்ற தேசிய இனங்களுக்கும் சமய வழி பரவியது ஒரு பெரும் வியப்புத்தான்.

ஆலி பற்றி ”நாரணன்” என்ற என் முந்தையப் பதிவில் பேசியிருந்தேன். தேவையானவற்றை இங்கு முழுமைகருதி வெட்டியொட்டுகிறேன். [முழு விவரம் வேண்டுவோர் அதைப் படியுங்கள்.] வெப்ப நாடான நம்மூரில் காலங் கெட்டு திடீரென்று, வானத் தலைகீழ் மாற்றத்தால் ஆலங்கட்டி மழை பொழிவதைப் பார்த்திருக்கிறீர்களா? அது என்ன ஆலங்கட்டி? வேறு ஒன்றுமில்லை நீர்க்கட்டி/பனிக்கட்டி இதை hailstone என்று ஆங்கிலத்திற் சொல்லுவார்கள். [க.து. ஆலிகல், ம. ஆலிப்பழம், குட.ஆலிகய், பட ஆனிகல்லு. க. ஆலி, ஆணி, ஆரி, பட. ஆனிகல்லு; கோத. அரகசு; தெ.குரு.மால், குட ஆலி; து ஆலிகல்லு, குவி,மே ஆஜி, பர் ஏதிர், ஏயிர் - ஆகத் தமிழிய மொழிகளிற் பரவலாய் உள்ல சொல்.] சிறு சிறு கற்களைப்போல வானத்தில் இருந்து நீர்க்கட்டி மழை கொட்டுகிறது. விழுந்த வேகத்தில் தரைச்சூட்டில் ஆல் [ஆலம், ஆலங்கட்டி, ஆலி] உருகிக் கரைந்து போகிறது. [ஆலித் தண்மழை - ஐங்குறுநூறு 437; ஆலஞ்சேர் கழனி தேவா.2.81.7 என்ற காட்டுக்களை இங்கு ஓர்ந்து பாருங்கள்.] ஆகப் ice/பனிக்கட்டியைத் தெரியக் குளிர்நாட்டில் வாழத் தேவையில்லை. வெப்ப நாடாயினும் தெரிந்து வைத்து, இலக்கியத்திலும் நாம் பதிந்திருக்கிறோம். ஆல், ஆலம், ஆலி என்ற சொற்கள் குளிர்நீரையும், பனிக்கட்டியையும் குறித்தவை தான்.

ஆலம் என்பதன் திரிவாய் ஆயம்/அயம் என்பதும் தமிழில் நீரைக் குறிக்கும். [அயம் திகழ் சிலம்பு - ஐங்குறுநூறு 264.2] O.E. is "ice," from P.Gmc. *isa- (cf. O.N. iss, O.Fris. is, Du. ijs, Ger. Eis), with no certain cognates beyond Gmc. ஆலி என்பது ice-யைக் குறிக்கச் சங்கநூலில் பயன்பட்ட சொல். இன்றோ எல்லாவற்றிற்கும் பனி என்பதையே வைத்து dew, ice இவற்றிற்கு வேறுபாடு காட்டத் தெரியாமற் சுற்றிவந்து கிளித்தட்டு ஆடிக் கொண்டிருக்கிறோம். ஆலிக்குழைவு = ice cream. என்று சொல்லக் கூடாதா? பனிக்காற்றும் ஆலிமழையும் வெவ்வேறானவை. ஆலி என்னும் சொல் இந்தக் கால அறிவியற் சிந்தனையைத் தமிழில் துல்லியமாய் விளக்கப் பயன்படும் சொல்.

துல்லியம் கருதி, மேலே விவரித்த பல்வேறு குளிர்ச் சொற்களைக் கொண்டு இற்றைத் தேவைக்குத் தக்கக் கீழ்க்கண்டவாறு நாம் பட்டியலிடலாம்.

winter = வடந்தை, வடந்தல், வாடைக் காலம்
chill = சிலிர்
snow = சிந்து
ice = ஆலி
freeze = உறைதல்
O.E. freosan "turn to ice" (class II strong verb; past tense freas, pp. froren), from P.Gmc. *freusanan (cf. O.N. frjosa, O.H.G. friosan, Ger. frieren "to freeze," Goth. frius "frost"), from P.Gmc. *freus-, equivalent to PIE base *preus- "to freeze," also "to burn" (cf. Skt. prusva, L. pruina "hoarfrost," Welsh rhew "frost," Skt. prustah "burnt," Albanian prus "burning coals," L. pruna "a live coal").
frost = உறைபனி
frigid = உறைந்த
c.1420 (implied in frigidity), from L. frigidus "cold, chill, cool," from stem of frigere "be cold;" related to frigus "cold, coldness, frost." Frigidaire as the proprietary name of a brand of refrigerators dates from 1926.
refrigerators: உறுகி(ப்பெட்டி):
arctic = வட துருவம். வடதுருவத்தில் மேல் நோக்கிப் பார்த்தால் கரடி உடுக்கூட்டம் தெரிந்தது என்று மேலையோர் பெயரிட்டிருக்கிறார்கள். நாம் துருவ விண்மீன் தெரிகிறது என்று பெயரிட்டிருக்கிறோம்.
c.1391, artik, from O.Fr. artique, from M.L. articus, from L. arcticus, from Gk. arktikos "of the north," lit. "of the (constellation) Bear," from arktos "bear," the Bear being a northerly constellation. From the usual I.E. base for "bear" (cf. Avestan aresho, Arm. arj, Alb. ari, L. ursus, Welsh arth); see bear (n.) for why the name changed in Gmc. The -c- was restored 1556.
blizzard = பனிப்புயல்
1859, origin obscure (perhaps somehow connected with blaze (1)), it came into general use in the hard winter 1880-81, though it was used with a sense of "violent blow" in Amer.Eng., 1829; and blizz "violent rainstorm" is attested from 1770.
sleet = சிலிதை
c.1300, slete, either from an unrecorded O.E. word or via M.H.G. sloz, M.L.G. sloten (pl.) "hail," from P.Gmc. *slautjan- (cf. dial. Norw. slutr, Dan. slud, Swed. sloud "sleet"), from root *slaut-. The verb is attested from c.1325.
hail = ஆலங்கட்டி
glacier = ஆலியோடை
1744, from Fr. glacier, from Savoy dialect glaciere "moving mass of ice," from O.Fr. glace "ice," from L. glacies (see glacial).

பனி, குளிர், நளிர், அளி, தண் போன்ற சொற்களை நாம் ஒதுக்க வேண்டியதில்லை. அவற்றைப் பல இடங்களில் நாம் பொதுமைச் சொற்களாய்ப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்துவது குளிரின் புரிதலுக்கு வழிவகுக்கும்.

அன்புடன்,
இராம.கி.