Tuesday, October 28, 2008

பொத்தகம் - 2

ஓலுதல் என்பது தமிழில் ஓசையிடுதலையே குறிக்கும். ”ஓவென்று ஓலம் இட்டான்” என்ற வாசகத்தை ஓர்ந்து பார்க்கலாமா? ஓலுதலின் வழி ஓலம் என்னும் பெயர்ச்சொல்லையும் பெறுகிறோம். காற்று வீசையில்  சரசர என்ற ஓசையை பனைமரத்தில் கேட்கிறோம் அல்லவா? அப்படி ஓலும் இலை, ஓலை எனப்பட்டது. பனையோலை, வேய்வதற்கும், கள்/பதநீரைக் கொள்வதற்கும் / பருகுவதற்கும் அல்லாமல், எழுத்தாணியால் அதன் பட்டையில் கீறுவதற்கும் அக்காலம் பயன்பட்டது. (பனைப்பயன்கள் மிகப் பல. ”வேண்டியது தரும்” என்றபொருளில் மிகைப்படுத்திக் கற்பகத்தரு எனப் பனையைச்  சொல்வார். (கருப்பகத்தரு, கற்பகத்தருவாகித் தொன்மப் போக்கில் வேறு பொருளை இன்று காட்டி நிற்கிறது. கற்பகத் தரு எனும் தொன்மம் பனையில் எழவே பெரிதும் வாய்ப்புக்கள் உண்டு.)

நாளாவட்டத்தில் நாவலந்தீவின் பெரும்பாலான இடங்களில் பனையோலைப் பட்டை, பெருவுதி (majority) எழுதுபொருளாகவும், பருத்தித் துணி, மரப்பட்டை, என்பன நுணவுதி (minority) எழுதுபொருளாயும் ஆயின. ஓலைமட்டை என்பது நிரவலாக (average) 20, 30 ஈர்க்குகளையும், ஈர்க்குகளிடை பட்டைகளையும் கொண்டது. ஓலைமட்டையில் இருந்து ஒவ்வோர் ஈர்க்கையும், அதன் இரு பக்கப் பட்டைகளிலிருந்து தனியே  நீளப் பிரித்து வருவதை ஓலை என்பார். [பேச்சுவழக்கில் ஓலைமட்டையையும் நாட்டுப் புறத்தார் ஓலையென்பார்.] ஓலைப்பட்டையை இரண்டாய் ஈல்ந்து (=பிரித்து) ஈல்க்கு>ஈர்க்கு எனப் படும்; இரண்டு என்ற சொல்லின் வேரும் ஈல் தான். [”ஈழத்தின்”  வேரும் ஈல் தான். முகனை நிலத்தில் (mainland) இருந்து அத்தீவு ஈல்க்கப் பட்டதால்,  ஈல்> ஈழ்> ஈழமானது. ஈழ விதப்புப்பெயரையும், பொதுப்பொருளாய் உருவான eeland>eisland>island எனும் இந்தையிரோப்பியத் திரிவையும் பேசின் வேறு எங்கோ போய்விடுவோம். எனவே அதுவிடுத்துப்  புலனத்துள் வருவோம்.]

ஓலைப் பட்டையைத் தாளென்றும், ஏடென்றும் சொல்வார். ஈர்க்கை எடுத்தும் எடுக்காமலும் பனையோலைப் பட்டையை எழுதப் பயன்படுத்தினார். [இளஞ் சிறாருக்கான பயன்பாட்டில் ஈர்க்கை எடுக்கமாட்டார். பெரியவருக்கான பயன்பாட்டில் ஈர்க்கை எடுத்துவிடுவார்.] பட்டையிலிருந்து வேறு ஈற்றில் உருவான சொல் பட்டமாகும். பட்டம்> பத்ரம் என்ற சொல் வளர்ச்சி நாவலந் தீவில் பனையிலிருந்து தொடங்கியது. பனை வளரா வடபுல இடங்களில் பிர்ச் - birch - மரப்பட்டைகள் பதப்படுத்திப் பயனுற்றன. birch > book என்ற இந்தை யிரோப்பிய சொல்தொடர்பை இங்கு எண்ணிப் பார்க்கலாம். நாவலந்தீவின் வடபால் மொழிகள், சங்கதம் ஆகியவற்றின் சொற்கள் book எனும் மேலைச் சொல்லுக்கு நெருங்கிவரவில்லை. வடபாற் சொற்களெலாம் பனையோலைப் பட்டையையே உணர்த்துகின்றன.

இன்னொரு செய்தியுமுண்டு. பனையோலைப் பட்டையின் எளிமையையும், அதே அளவு மற்றோர் எழுதுபொருளை உருவாக்குவதன் கடினத்தையும் உணர்ந்தால், நாவலந்தீவின் பனையோலைப் பகுதிகளிலேயே படிப்பறிவும், விதப்பாக எழுத்தறிவும், வளர்ந்திருப்பதைப் புரிந்து கொள்ளமுடியும். எழுத்தைப் பெரிதும் போற்றிய அற்றுவிகம் (ஆசீவகம்), செயினம், புத்தம் போன்ற சமய நெறிகள் நாவலந்தீவில் பனையோலையைப் பெரிதும் போற்றின. [காரணமில்லாது செயினமும், புத்தமும் மகதத்தில் வளரவில்லை. அற்றுவிகம் இன்னொரு பனையோலைப் பகுதியான தென்னாட்டில் எழுந்து இருக்குமோ என்றுகூட அண்மைக்கால ஆய்வுகள் சுட்டிக் காட்டும்.] பனை மரபு பழகாத வேத நெறி, தன் தொடக்க காலத்தில், இந்திய வடமேற்கில், எழுத்தைப் பெரிதாகவே கருதவில்லை; வேதம் முதலில் எழுந்தபோது அது  எழுதாக் கேள்வி தான். பனை வளராத பகுதியில் எழுதலின் அருகிய நிலை உங்களுக்குப் புரிகிறதா? [சங்கத மொழியில் முதன்முதலிற் செய்தி எழுதப் பட்டது கி.பி.150க்கு அருகில் சக அரசன் உருத்ரதாமன் காலத்திற் தான் என்பதை இங்கு நினைவிற் கொள்க. அதற்கு முன் வடக்கே பாகதத்தில் தான் கல்வெட்டுக்கள் எழுந்தன.]

முன்சொன்னது போல், ஓலைப்பட்டையின் இன்றொரு சொல்லான தாலப் பட்டையில், ஐ எனும் ஈற்றிற்கு மாறாக, அம் எனும் ஈறுகொண்டு வடபுலம் போய், தாலப்பட்டம் > தாலப்பத்தம் என்றாகும். பின்னால் தாலம் எனும் முன்னொட்டுச் சொல், பேசுகிறவர்களால் உள்ளார்ந்து உணரப் பட்டு, பேச்சு வழக்கில் அதைத்தவிர்த்து பத்தமெனத் தனித்தே சொல்லப் பட்டது. (அளவு கூடிக் குமிந்துகிடந்த பெருநீர் ”ஜலசமுத்ரம்” என்று தொடங்கிப் பின் ”ஜலம்” சொல்லப் படாமல் சமுத்ரம் மட்டுமே சங்கதத்தில் தனித்துக் குறித்ததை எண்ணிப் பாருங்கள்.) பத்தம், வட்டார வழக்கில் வெவ்வேறு பலுக்கலைப் பெற்றது. மற்ற பாகதக் கிளைகள் போலன்றிக் காந்தாரக் கிளைமொழியில் அது பத்ரமெனப் பலுக்குற்றது. காந்தாரக் கிளையின் பெருவளர்ச்சியான சங்கதத்திலும் அவ்வாறே சொல்லப் பட்டது.

[காந்தாரக் கிளைமொழி புழங்கும் இடத்தில் பிறந்தவனே பாணினி எனும் இலக்கணி. ககர/சகரப் போலியைப் புரிந்துகொண்டால் பாணினியின் அடிப்படைச் செய்யுள் மொழியான சந்தசிற்கும், காந்தாரத்திற்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் வேதம்-அது-இது என்று வழிபாட்டுப் பூசனைக் கருத்துக்களைக் கொண்டுவந்து நம்மை ஒடுக்கி விடுகிறவர் சங்கதத்தின் ஊற்றங்காலைச் சரியாக அறியவா விடுகிறார்? நம்மை மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்துவரும் ஆய்வாளரையும் குழப்பிவிட அவர் என்றுமே முனைப்பாக உள்ளார். தமிழையும் செந்தமிழையும் வெவ்வேறு மொழிகளாய் நாமெண்ணிக் குழம்புவதில்லை;  இவரோ, பாகதம் எனும் பொது மொழியையும், அதன் வட்டார மொழி வளர்ச்சியான சங்கதத்தையும் வெவ்வேறாக்கி, ”சங்கதமே முந்தியது, பாகதம் அதிலிருந்து சிதைந்து வந்தது” என்றுசொல்லி பேரனைத் தாத்தனாக்குவர்; நாம் ஒரு காலத்திலும் செந்தமிழிலிருந்து தமிழ்வந்ததென்று சொல்வதில்லை. அதோடு மட்டுமன்றி, பாகதத்தின் சமகால மொழியான தமிழின் பங்களிப்பையும் குறைத்து, ”சங்ககாலம் நந்தர் காலத்திற்குச் சற்று முன் (கி.மு.500) தொடங்கி கி.பி.2 ஆம் நூற்றாண்டு வரை இருந்தது” என்று எத்தனை முறை பல்வேறு சான்றுகளோடு சொன்னாலும், அதைப் புறந்தள்ளி, கிளிப்பிள்ளை போலத் தாம் சொன்னதையே மீளமீளச் சொல்லி அதற்கு அணைவாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்ககால ஆய்வாளர் கூற்றையே சான்றுகளாய் அடுக்கி (குறிப்பாக வையாபுரியாரின் கருத்தின் மேல் கோபுரம் கட்டி), கிறித்துவுக்கு அப்புறம் சங்க நூல்களைக் கொண்டுவந்து, தொல்காப்பியத்தைச் சங்க நூல்களுக்கு அப்புறமாய் 5 ஆம் நூற்றாண்டிற் கொண்டுவந்துச் சங்க நூல்களை மிகப் பின்னதாகக் கொண்டுபோவதே வழக்கமாய்ப் போன சில “தமிழ் அறிஞரின்” முயற்சிகள் இருக்குமட்டும் இக்குழப்படிகள் இருந்து கொண்டே இருக்கும்; என்செய்வது?]

பட்டம்> பத்தம்> பத்ரத்திற்கு மீண்டும் வருவோம். இந்திய வடமேற்குச் சொல்லான பத்ரத்தை மீண்டும் கடன்வாங்கித் தமிழில் பத்திரம் ஆக்குவார். பத்ரங்கள் பல கொண்டது பத்ரிகை. [தனித்தமிழில் இதைத் தால்>தாள்> தாளிகை என இக்காலத்திற் சொல்வோம். தாள்பற்றிய அதிக விளக்கத்தைக் கீழே பார்ப்போம்.] ஆகப் பட்டம்> பத்ரம்> பத்ரிகை என்ற வளர்ச்சியின் சூல்க்குமம் பனையோலைப் பட்டைக்குள் உள்ளது. [NCBH பதிப்பகம் "மரங்கள்” பற்றி வெளியிட்ட தொகுதியின் நாலாம் பாகத்தில் பனை பற்றிய கட்டுரையில் 1992 அளவில், இந்தியா எங்கணும் உள்ள பனை மரங்களில் கிட்டத்தட்ட 58% மரங்கள் தமிழ்நாட்டிலே விளைவதாகக் கூறியுள்ளார். ஆகக் காலங்காலமாய், இந்நாட்டில் பனை நிரம்ப வளர்வது நம்மூரில் தான். தமிழ்ப் பண்பாட்டைப் புரிந்துகொள்ளப் பனை முகன்மையானது. ஆனால், இக் காலத் தமிழர், பனை பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துக் கொள்கிறோம்?  எவ்வளவு கண்டுகொண்டோம்? சொல்லுங்கள்?:-) செடார், பைன் பற்றித் தெரியாத இரோப்பியன் எங்காவது இருப்பானா? அதேபொழுது, பனை பற்றித் தெரியாத தமிழர் மிகப் பலர் இருக்கிறார் அல்லவா?]

இதே போல ஏடென்பதும் ஓலைப் பட்டத்தையே குறிக்கும். பனை ஏடு, பனை யோலை, ஓலை ஏடு, ஏட்டோலை, தாலப்பட்டம் ஆகியவை எல்லாம் ஒரு பொருட் சொற்கள் தாம்.

ஓலைகளைக் குறிப்பிட்ட அளவிற்கு நறுக்கி, நீரில் ஊறவைத்து, தேவைப் பட்டால் சற்று வெதுவெதுப்பான நீரில் புடம் போட்டு, வளைவிலாது  நேர் ஆக்கி, பின் மஞ்சள் தடவி எழுத்தாணி கொண்டு கீறி (கீற்றுதல், scribe என்ற சொற்களைப் பற்றியெல்லாம் இங்கே எண்ணிப் பார்க்கலாம்], பின் கீற்றெழுத்துக்கள் சட்டென்று தெரியுமாப் போல் கரிப்பொடிக் கலவையும் பூசி அக்காலத்தில் ஓலைச் சுவடிகளை உருவாக்குவார். [50 ஆண்டுகளுக்கு முன்கூட ஓலையில் எழுதிப்படிக்கும் பழக்கம் நம்மூரில் இருந்தது. எம் போன்றவர் தம் சிற்றகவையில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அப்படித்தான் படித்தோம். அப் பட்டறிவில்தான் நான் இங்கு சொல்லுகிறேன்.]

ஓர் ஓலையாய் இருந்தால் அதைச் சுருட்டி ஓர் ஓலைக் கொட்டானுள் வைத்து விடலாம். (கொட்டான் சிறியது; பெட்டகம் அல்லது கடகம்/கடகாம் பெரியது. இச்சொற்கள் தென்பாண்டி வழக்கு.) அப்படிச் சுருட்டி வைப்பதை ஓலைச் சுருள் என்பார். மாறாக ஒன்றிற்கு மேற்பட்ட ஓலை நறுக்குகளானால், அவற்றைச் சேர்த்துவைக்க வாய்ப்பாக, ஒவ்வொரு ஓலை நறுக்கிலும் கிட்டத் தட்ட மூன்றில் ஒரு பங்கு நீளத்தில் பெரிய துளைபோட்டு, அதன் வழி ஒரு நூற்கயிற்றைச் செருகி, கயிற்றின் ஒருமுனையில் பெரிய முடிச்சையும் போட்டு இன்னொரு முனையோடு கயிற்றால் ஓலை நறுக்குகளைக் கட்டி வைப்பது ஓலைக்கட்டு. அதை ஏட்டுக் கட்டு என்றும் சொல்லுவதுண்டு. இன்னும் சிறப்பான பெயர் ஓலைச்சுவடி. இங்கே சுவடி என்பதற்குத் தொகுதி என்று பொருள். கல்வியில் முன்னேற, முன்னேற, ஓலைச் சுவடியில் ஓடுகள் கூடிக் கொண்டேயிருக்கும். [சுவள்> சுவடுதல் = சேர்தல், தொகுதல், சுவடி என்ற பெயர்ச்சொல் சுவடுதல் வினையிலிருந்து எழும். அதன் விதப்பான பொருளாய் இரட்டைத் தன்மை கொள்ளப்பட்டு சுவடி>சோடி எனத் திரியும். இக்காலத்தில் சோடி, இரட்டைக்கும், சுவடி, பன்மைத் தொகுதிக்கும் உரிய சொற்களாய் ஆளப்படும். சோடியை ஜோடியாய்ப் பலுக்கி மீண்டும்  மூலந் தொலைத்து அதையும் வடமொழி எனச்சிலர் மறுகுவது இன்னொரு சோகம்.]

கோரைப் புல்லான papyrus இலிருந்து எகிப்தில் paper உருவானதையும் இங்கே ஒருசேர எண்ணிப் பார்க்கலாம். அச்சொல் கோரைப்புல்லின் தோகையைக் குறித்த சொல். bublos என்பதும் ரகர/லகரத் திரிவில் papyrus இன் இன்னொரு ஒலிபெயர்ப்புத் தான். இதன் அடுத்த வளர்ச்சியாய், bublos>biblio>bible என்ற திரிவை எண்ணிப் பார்க்கலாம். சில புதல்களின் தோகை தமிழில் தாள் என்றே குறிக்கப் படும். நல்ல மணம் பொருந்திய மஞ்சள் நிறம் வாய்ந்த ஒரு தோகையை தாள்>தாளம்பூ>தாழம்பூ என்ற புதற் பெயரால் அறிகிறோம். தாழம்பூத் தோகையில் (முல்லைப்) பித்தியால் வண்ணக்குழம்பில் தோய்த்து எழுதுவதும் அக்காலத்திற் பழக்கத்தில் இருந்தது. ஆனால் இப்படி எழுதுவது வெகு எளிதில் அழிந்துவிடுவதாலும், நீர் தெறித்தால் நிலைக்காததாலும், நாட்பட நிற்கவேண்டிய ஆவணங்களை தாழம்பூத் தோகையில் எழுதார். பனையோலையில் கீறுவதையே விரும்பினார்.

அன்புடன்,
இராம.கி.

Monday, October 27, 2008

பொத்தகம் - 1

ஓரிரு மாதங்களுக்கு முன், விக்சனரிக்கான கூகுள் மடற்குழுவில், "பொத்தகம் என்ற சொல் தமிழீழத்தில் இப்பொழுது புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. முன்பு புத்தகம் என்பதே இருந்தது" என்ற செய்தியைச் சொல்லி, "பொத்தகம் சரியா? புத்தகம் சரியா?" என்று திரு.T.K.அருண் என்பார் கேட்டிருந்தார். அக்கேள்விக்கு யாரும் அப்போது மறுமொழிக்காது இருந்ததால், அது தொங்கி நின்றது. நானும் வேறு வேலைகளில் ஆழ்ந்து இருந்ததால், உடனே அதற்கு மறுமொழிக்க முடியவில்லை.

இப்போது, "பொத்தகம்" பற்றியும் தொடர்புச் செய்திகளையும் நான் அறிந்த வரையில்,  தனிப்பதிவாக இடுகிறேன்.

இக்காலத் தமிழ் அகரமுதலிகளில் பொத்தகம், புத்தகம் என இரண்டுமே சுட்டிக் காட்டப் படும். ஆனாலும் ”பொத்தகமே” முந்தையது; வேர்ப்பொருள் பொதிந்து வருவது; இணைச்சொற்கள் கொண்டது; நம் பனையோலை மரபோடும் ஒத்து வருவது. [பனை பற்றிய சிந்தனை இல்லாமல் பொத்தகம் அறியமுடியாது.] புத்தகம் என்பது பொத்தகத்தின் மரூஉ. ஒகரம் உகரமாவது தென்மாவட்டங்களில் பெரிதும் உள்ள பழக்கம். ”கொடுத்தானா?” என்பதைக் ”குடுத்தானா?” என்பது பெரும்பாலோருக்கு உள்ள பழக்கம். ”குடுத்தல்” என்ற இச்சொல்லாட்சி பேரரசுச் சோழர் கல்வெட்டுக்களிலும் புழங்கும். இது போன்றதொரு பலுக்கற் சிதைவிற் பொத்தகம் என்பது புத்தகம் என்று ஆகும்.

சங்கதம் தவிர்த்த வடபால் மொழிகளிலும் (potthaka - Pali, Putha - Prakrit, Puuthi - Kashmiri, pothu - Sindhi, Pottha - Punjabi, Pothi - Kaumuni, Nepali, Assamese, Pothaa - Bengali, Oriya, Maithili, Poothi - Bhojpuri, Potha - Awadhi, Pothuu - Gujarati, Pothi - Marathi,), ஏன் சிங்களத்திலும் கூடப் (Pota) என்றே அமைந்து, பொத்தகம் எனும் பலுக்கிற்கு நெருங்கி வரும். சங்கதத்தில் மட்டுமே பொத்தகம் புத்தகமாகிப் பின் மேலும் திரிந்து புஸ்தகமாகும். இக்கால வடபால் மொழிகளிற் சிலவும் “புஸ்தக்” எனும் சங்கதப் பலுக்கலை எடுத்தாள்கின்றன. இது புரியாது, நம்மில் பலரும் புஸ்தகமே தமிழிற் புகுந்து புத்தகம் ஆயிற்றென எண்ணிக் கொள்கிறோம். அதையே சிலர் சாதிக்கவும் செய்வார். உண்மை அதுவல்ல.

தமிழராகிய நாம், நம் மூலங்களை உணராமல் எவ்வளவு காலத்திற்கு இருப்போமோ, தெரியவில்லை. அளவுக்கு மீறிச் சங்கத ஆளுமைக்கு நம்மிற் பலரும் ஆட்பட்டுப் போனதால், "புஸ்தகம்" தெரிந்தவர்க்கு "பொத்தகம்" புதிதாகவே தோற்றுகிறது. காலத்தின் கோலங்கண்டு நொந்துகொள்வதைத் தவிர்த்து, வேறொன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை :-) எதைச் சொன்னாலும், ”அது எப்படிச் சங்கதம் வழிவந்ததை இவன் மறுக்கலாம்?” என்ற முட்டாள்தனமான பூசனைப் போக்கில், ”தமிழ்வெறியன்” என்று சாடுவதே நடக்கும் நிலையில் ’அளவிற்கும் அதிகமாகப் பிறசொற் பலுக்கல்களை நம்மொழி இடையே ஆள்வது’ பற்றி என்னைப் போன்றவர் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது,சொல்லுங்கள்?

(இன்னொரு திராவிடமொழி நிலை எனக்கு நினைவிற்கு வருகிறது. பலோச்சி மொழியை அளவிற்கு மீறிக் கலந்த திராவிடமொழியான பிராகுயி இன்று 10 % க்கும் குறைவாய்த் திராவிடச் சொற்கள் கொண்டுள்ள தாம். ”இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் இல்லாது போகக்கூடிய திராவிட மொழி அது” என அறிந்தவர் சொல்கிறார். கூடிய விரைவில் பிராகுவிக்கள் தம்மைப் பலோச்சி என்றே அடையாளப்படுத்திக் கொள்வாராம். இதேபோல, அளவுக்கு மீறிய ஆங்கிலக் கலப்பைப் பற்றி இத்தாலியர் கவலைப் படுகிறார் என்று பி.பி.சி. வலைத்தளத்தில் படித்தேன். இடைவிடாது ஆங்கிலம் பழகும் தமிழ் இளையர் கூட எதிர்காலத்திற் தம்மைத் தமிழரெனாது தமிங்கிலராய் அடையாளப் படுத்துவரோ, என்னவோ?)

பொத்தகம் புரிய வேண்டுமானால், நாம் பனையோலையில் இருந்து, (கூடவே பனை பற்றிய பல செய்திகளையும் அறிந்து கொண்டு) தொடங்க வேண்டும். பட்டம்>பத்ரம், தால்> தாள்> தாளி, தாலம், சுவடி, பனுவல், பொத்துதல், ப(ன்)னை, பாளை, போந்தை போன்ற சொற்களின்வழி, நம் புரிதலைக் கொண்டுசெல்ல வேண்டும். [இக் கட்டுரையில் பாவாணர் கருத்துக்கள் அடியூற்றாய் இருக்கச் சொல்லறிஞர் ப.அருளியின் ”தமிழ், சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியல் உரைகள்” என்ற நூலிலுள்ள “புத்தகம்” என்னும் கட்டுரையில் வரும் பல செய்திகளும், புலவர் இரா. இளங்குமரனின் “தமிழ் வளம்-சொல்” என்ற நூலில் வரும் “பல்” என்னும் கட்டுரைச் செய்திகளும், முனைவர் கு.அரசேந்திரனின் “தமிழறிவோம்-தொகுதி 2” இல் இருந்து “தாளி” என்ற கட்டுரைச் செய்திகளும் கூட நிறைந்து உடன் வருகின்றன. இந்தச் செய்திகளின் ஊடே என் தனிப்பட்ட இடைப்பரட்டும், முன்னவரில் இருந்து மாறிவரும் கருத்துக்களும் இருக்கின்றன.]

செய்திகள், கருத்துக்கள், கணக்குகள், குறியீடுகள் ஆகியவற்றை மரம், கல், ஓடு போன்றவற்றில் எழுதிய தமிழன், ஒருகாலத்தில் ஓலையிலேயே பெரிதும் எழுதினான். துணைக்கண்டக் கடற்கரையை ஒட்டிய மாநிலங்களில் எல்லாம் பனை எனும் எழுதுபொருள் பெரிதும் பரவியிருந்தது. எங்கெலாம் முல்லை, மருதம், நெய்தல், பாலைத் திணைகள் விரவிக் கிடந்தனவோ, அங்கெலாம் பனை பெரும்பாலும் வளரும். [ஆனாலும் அண்மையில் இரு மாதங்களுக்கு முன், வடபுலம் போன போது ஒரு வியந்தையைக் கவனித்தேன். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், இருவுள் பாதை (Railway), பெருவழிச் சாலைகள் (Highways) ஆகியவற்றின் இருமருங்கிலும் பனைமரத்தைக் கண்டேன் இல்லை; எனக்கு அது வியப்பாகவே இருந்தது; ஒருவேளை அம்மாநிலங்களில் பனை அரிதாகவே இருக்கும் போலும். ஆனாலும் பீகாரில் பனை பெரிதும் இருந்தது. (வங்காளத்திலும் அவ்வாறே இருக்கிறதாம்.) இப் புதலியல் பட்டகை(fact)யைப் புதலியலார் - botanists - தான் உறுதி செய்யவேண்டும்.]

சரி, புலனத்திற்குள் வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, August 22, 2008

மெய் புதுவித்தல் (body refreshing)

அண்மையில் மெய்யைப் புதுவிக்கும் (body refreshing) துறையை ஒட்டிய massage, shower, spa என்ற சொற்களுக்கு இணையான பரிந்துரைகளை திரு. சத்திய நாராயணன் விக்சனரி மடற்குழுவில் கேட்டிருந்தார். அவற்றைத் தருவதற்கு முன்னால், ஒரு கவன ஈர்ப்பு.

பொதுவாக, மொழியாக்கத்தில் இணையான தமிழ்ச்சொல்லைத் தேடும் போது குறிப்பிட்ட கருத்தின் உள்ளே துலங்கும் வினைச்சொல்லை அடையாளங் கண்டு, அதன்பின் பெயர்ச் சொல்லிற்கு வடிவங் காணுவது ஓர் ஒழுங்கான முறையாகும். தமிழில் வேர்> வினை> பெயர்> மீண்டும் வினை> மீண்டும் பெயர்> இப்படியாகச் சிந்தனை விரிந்து கொண்டே போய் எழுகைச் சுற்றாய்ச் சொற்கள் (helical circuit) பிறக்கும். அதே பொழுது, இந்தச் சுற்றுக்கள் எல்லையற்றுப் போகாது; பெரும்பாலும், இரண்டு மூன்று சுற்றுக்களுக்கு அப்பால் உண்டாகும் சொல்லின் அசைநீளம் கூடிவிடுவதால் அவ்வப்பொழுது அசைகளின் எழுத்துத் திரிவும், எழுத்துக் குறைப்பும் நடக்கும். மறந்து விடாதீர்கள். தமிழ்ச் சொற்களின் மீநீளம் மூன்றசையே; மிகமிக அரிதாக நாலசை ஏற்படும். நிரவலான சொல்லின் நீளம் இரண்டிலிருந்து மூன்றசை தான்.

இனிக் கேட்டிருக்கும் சொற்களுக்கு வருவோம்.

massaging என்பது, சித்த மருத்துவம் (அதன் வழிப்பட்ட ஆயுர் வேதம்), வருமக் கலை, களரிப் பயிற்சி போன்றவற்றைக் கற்கும் போது சொல்லித் தரப்படும் ஒரு கலையாகும். இந்த அறிவு இன்றைக்கும் நம்மூரில் குமரி மாவட்டம், தென் திருவிதாங்கூர் போன்ற மண்டலங்களில் மீந்து இருக்கிறது. இதை மல்லுப் பிடித்து விடுதல் என்று பேச்சுவழக்கில் சொல்லுவார்கள். மற்ற மாவட்டங்களில் தசையைப் பிடித்துவிடுதல் என்றே சொல்லுகிறார்கள். தசை என்பது பொக்குள்>தொப்புள்>தொப்புழ் என்பதைப் போல சதையின் metathesis ஆகும்.

முல் எனும் பொருந்தற் கருத்து அடிவேரில் இருந்து, மல் என்னும் கிளைவேர் பிறக்கும். மல்தல் = பெருகுதல், திரள்தல், பொதுவாகத் திரண்ட சதையை மல் என்று குறித்தார்கள். இன்னும் விதப்பாக குறிப்பிட்டுச் சொல்லும் படி, பருத்துத் திரண்ட மார்புச் சதை, மல் என்று அழைக்கப் பட்டது. திரண்ட சதை கொண்டவன் மல்லன் என்று அறியப் பட்டான். மல்லன்>மள்ளன் என்றும் திரியும்.. மல்லம் = மற்போர், வலிமை., வளம். மல்லகச் சாலை = மல்வித்தைச் சாலை. மல்லரங்கம் = மற்போர்ச் சாலை. மல்லாத்தல் = முதுகு கீழாக, மார்பு மேலாக, ஆக்கிப் போடுதல். அதாவது மல்லை உயர்த்தி வைத்தல், மல்லுக் கட்டுதல். = மற்போர். மல்லுப் பிடித்தல் என்பது மல்லுக் கட்டுதலையும் குறிக்கும்.

மல்லில் இருந்தே மலிதல், மாழை (metal), மந்தை, மருவுதல், மருகன், மருவுகை (marriage), மருந்து, மார்பு, மரபு போன்ற பல்வேறு சொற்களும் எழுந்தன. [பாவாணரின் வேர்ச்சொற் கட்டுரைகளில் முல் என்னும் பொருந்தற் கருத்து வேரைப் படித்தால், கணக்கற்ற சொற்களின் தோற்றம் விளங்கும். இந்தக் கட்டுரைக்கு அடிப்படை பாவாணரே.)

முல்+து = முத்து. சிப்பியில் திரண்ட சுண்ணப் பொருள், முத்தம் = வாயிதழ், வாயிதழோடோ, கன்னத்தோடோ குவிந்த, திரண்டு, பொருந்தும் செயல்; முத்தித்தல், முத்துதல் என்பது முத்தச் செயலைக் குறிக்கும் வினைச்சொல்லாகும். முத்தை என்னும் இன்னொரு முடிப்பும் திரட்சியையே குறிக்கும். குறுமுத்தம் பழம் என்பது தென்பாண்டியில் உள்ள ஒரு பழம்; மற்ற மாவட்டத்தினர் இதை மிதுக்கம் பழம் என்பார்கள்.

மொலு>மொது; மொதுமொதுவெனல் என்பதும் திரட்சியைக் குறிக்கும். மொதுமொதுவென்று மக்கள் குவிந்தார்கள். மொத்துதல் = உரக்க அல்லது வலுக்க அடித்தல்.

மொத்தம் = பொருட்கள், எண்கள், கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுதி. மொத்தன் = தடித்தவன்.

மொத்திகை>மத்திகை = குதிரையை அடிக்கும் சாட்டை. ஒகரச்சொல் அகரச்சொல்லாய் மாறுவது தமிழில் உள்ள பழக்கம் தான். கொம்பு>கம்பு, ஒட்டு>அட்டு, தொண்டையார் பேட்டை>தண்டையார் பேட்டை போன்றவற்றைக் கூர்ந்து பாருங்கள்.

மொத்தளம்>மத்தளம் =இருபக்கமும் அடிக்கும் பெரிய மதங்கம் (= ம்ருதங்கம்) மத்தளம், மதங்கம் இரண்டும் தமிழே.

மொத்தையான பயிறு மொச்சைப் பயிறு (மொத்தை>மொச்சை),
மொத்தை>மோத்தை = செம்மறியாட்டுக் கடா,
மொத்து>மொந்து>மொந்தன் = பெரு வாழை.
மொந்தை = பருத்தது, சோற்றுருண்டை.

மொத்து>மத்து. கீழே குண்டும், மேலே தடியுமாய், தயிர் கடையப் பயன்படும் ஒரு கருவி. பருப்புக் கீரையைக் கடையவும் இது பயன்படும். இந்தக் கருவியின் அடி மொத்தையாய் இருப்பதால் இது மத்து என அழைக்கப் பட்டது.

இந்தப் பெயர்ச்சொல்லில் இருந்து மத்தித்தல் என்ற இன்னொரு வினை பிறக்கும். மத்தித்தல் = மத்தை வைத்துக் கடைதல். பொதுவாகக் கடைதல் என்பது ஒருமுறை கடிகைச் சுற்றில் (clockwise direction) திருகி, பின் நிறுத்தி, எதிர்க் கடிகைச்சுற்றில் திருகி, இப்படியாக மாறி மாறிச் சுற்றுதலாகும். இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவில் மத்தின் தண்டை வைத்து திருக்கை முறையில் (application of torque) தான் நாம் தயிர் கடைகிறோம். கூர்ம அவதாரத்தில் மந்தர மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைந்ததாக ஒரு தொன்மம் உண்டல்லவா? அதையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

மத்தித்தல் என்ற பிறவினைச்சொல் மத்தித்தல்>மதித்தல் என்ற படி, அதே கடைதல் பொருளை உணர்த்திச் சுருங்கும். இப்படி மத்திக்கப் பட்ட பொருள் குழையும் அல்லவா? எனவே பொருள் நீட்சி பெற்று மதிதல் என்ற தன்வினை உருவாகிக் குழைதல் என்னும் பொருளைச் சுட்டும். மதிதல்>மதியல் என்பதன் திரிவாய் மதியல்>மசியல் என்று ஆகிக் குழைந்த வியஞ்சனத்தைக் (= வேகவைத்த காய்கறியைக்) குறிக்கும். மசி, மசகு போன்ற சொற்கள் இதிலிருந்து இன்னும் விரியும்.

இனி massage என்பதற்கு வருவோம். தொடையின் சதையை, மத்துக் கடைவது போல, ஒருமுறை கடிகைச் சுற்றில் திருகி, இன்னொரு முறை எதிர்க்கடிகைச் சுற்றில் திருகுவதும், ஆகிச் சதையை நெகிழ்த்துவதே massage ஆகும். எனவே ஒப்புமை கருதி மத்தித்தல்>மத்திகை என்னும் சொல் massage என்பதற்கு இணையாகும். தமிழ் அகரமுதலிகளில், மத்தித்தல் என்ற வினைக்குக் கடைதல், அடித்தல், தேய்த்தல், மருந்து கலத்தல் என்ற பொருட்பாடுகளைக் காட்டுவார்கள். இந்தச் செயல்கள் அனைத்தும் massage - -இல் நடைபெறுகின்றன அல்லவா? மத்தாக ஆக்கிக் கடைந்தாற்போல், மாறுபட்ட திசைகளில் சதைத் திரளைப் பிடித்துத் திருகி நெகிழவைத்து, தேவைப்பட்டால் சதைத் திரட்சியைத் தேய்த்தும், அடித்தும், மேலும் மருத்துக்கலவை கொண்ட எண்ணெய்ப் பிழியைச் சூடுபறக்கத் தேய்த்து விட்டும் செய்வது தானே massaging?.

மத்தித்தல் = to massage
மத்திகை = massage (noun)
மத்திகையாளர் = person who carries out the massage

இனி shower என்ற சொல்லிற்கு வருவோம். தூறுதல் என்பது துளித் துளியாய் நீர் வீழும் நிலை. (துள்>தூறு; தெறித்தல், சிதறுதல், தூவுதல் போன்ற சொற்கள் எல்லாம் இதே பொருள் கொண்ட வினைச் சொற்கள் தாம்.) துளிகள் இணைந்து சாரி சாரியாய் (வரிசையாய்) அமைவது சாரல். சால் என்பதும் வரிசையே. சார்தல் = சேர்தல், திரளுதல், சாரிகள் இணைந்து ஒரு தொடர்க் கம்பியாய் வெள்ளப் பெருக்கு (volumetric flow) கூடி அமைவது பெய்தல்/பொழிதல் வினை. காற்றோடு சேர்ந்து மழை பெய்தல் என்பது அடித்து ஊற்றுதல் என்று சொல்லப் படும். மழை கொட்டுகிறது என்பதும் இதே பொருள் தான். வெள்ளமாய்க் கொட்டுகிறது என்று சொல்கிறோம் இல்லையா?

இத்தனை சொற்களில், நடுத்தரமாய்ச் சொல்லக் கூடிய வினைச்சொல் சாரல் என்பதே. ”குற்றாலத்தில் சாரல் தொடங்கிவிட்டது”; ”சாரல் அடிக்கிறது, சாளரத்தை மூடு” என்ற உரையாட்டுக்கள் எல்லாம், தூறலும் இல்லாமல், பெய்தலும் இல்லாமல, நடுநிலையான பெருக்கையே குறிக்கின்றன. என்னைக் கேட்டால், shower என்பதற்குச் சாரல் என்பதையே பரிந்துரைப்பேன்.

shower = சாரல் (அவன் நீர்ச் சாரலில் குளித்தான். அது மழைச் சாரலாய் இருந்தால் என்ன, வீட்டுக் குளியலறையில் உள்ள தூம்பு வழிச் சாரலாய் இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.

showerhead = சாரல் கொண்டை.

அடுத்தது spa. இது சுனைநீர் நிறைந்த குளம். உள்ளிருந்து சுனைநீர் ஊற்றெடுத்துப் பெருகும் இடம். இந்த நீர் வெதுவெதுப்பாகவும், மருந்து/மூலிகை கல்ந்ததாகவோ, மண்ணூறல் (mineral) கலந்ததாகவோ இருக்கலாம். இது போன்ற குளத்தை இலஞ்சி என்று பழந்தமிழில் கூறுவார்கள். அதையே பொருத்தமாய் இங்கு கூறலாம்.

spa = இலஞ்சி

அன்புடன்,
இராம.கி.

Sunday, June 29, 2008

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?

நேற்று மக்கள் தொலைக்காட்சியில் 'சிரிப்போ சிரிப்பு' என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். [நல்ல தமிழுக்காகவே இந்தத் தொலைக்காட்சி பலராலும் விரும்பிப் பார்க்கப் படுகிறது.] நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பல்வேறு காட்சியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார், ஏதோ ஒரு சென்னைத் தெருவின் முச்சந்தியில் நிகழ்ச்சி நடந்தது.

தொகுப்பாளினி துவங்கச் சொன்ன பின்னால், [காட்சியாளர் கவனத்தை தன் பேச்சினால் அவர் வேறு திசையிற் திருப்பினாலும் கூட,] இடைவிடாது, கூட நேரம் சிரிக்கிறவருக்கு அங்கேயே பரிசு. நிகழ்ச்சி மிகுந்த சுவையாரமாய் போய்க் கொண்டிருந்தது. கொஞ்சமும் அசராமல் நல்ல தமிழில் தொடர்ந்து பேசி, தொகுப்பாளினி திறமையாய் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். ஆண்கள், பெண்கள் எனப் பலராலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தொடர்ந்து சிரிக்க இயலாமல், விரைவில் ஓய்ந்து போனார்கள்.

இந்த வரிசையில் ஓர் இளைஞன், 20 அகவை இருக்கும் என்று நினைக்கிறேன். தொகுப்பாளினி நல்ல தமிழில் பேசிக் கொண்டிருக்க, தமிங்கிலத்திலேயே பேச முற்பட்டான். தொகுப்பாளினி 'ஆங்கிலத்தில் பேசாமல், தமிழிலேயே பேசுங்கள்' என்று அவனை நினைவுறுத்திச் சிரிக்கச் சொன்னார். அவன் தொடங்கும் போது, கடிகையில் நேரம் கணிக்கவும் முற்பட்டார். மற்றவர்கள் அளவிற்குச் சிரிக்க முடியாமல், இளைஞன் குறைந்த நேரத்திலேயே நிறுத்தி விட்டான். "என்ன இது உங்களால் 17 விநாடிகள் கூடச் சிரிக்க முடியவில்லை, என்னவாயிற்று உங்களுக்கு?" என்று தொகுப்பாளினி வினவியபோது, அந்த இளைஞன் கேட்கிறான்.

"17 விநாடின்னா என்ன?"

பின்னால் இருந்து அவன் தோழன்: "டேய், 17 செகண்டுடா"

நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த எனக்குச் சட்டென்று சம்மட்டியில் அடிப்பது போல் இருந்தது.

தமிழ் இளைஞர்கள், அதுவும் சென்னைக்காரர்கள், எந்த அளவிற்குத் தமிழை விட்டுப் விலகிப் போயிருக்கிறார்கள்? விநாடி என்ற சொல் கூடத் தெரியவில்லை எனில், அப்புறம் விநாழிகை எங்கே தெரியப் போகிறது? நுணுத்தம், மணி என்பதெல்லாம் புரியவா செய்யும்?

ஆக, நம் கண் முன்னே, இளம் தலைமுறையினரிடம் தமிழ் மொழி மெல்லச் செத்துக் கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையையே நாம் தொலைத்திருக்கிறோம். இந்த முட்டாள் தனத்தில் "செம்மொழி என்ற பீத்தல் வேறு, தமிழ்(ல்) வாழ்(ல்)க என்ற வெற்றுக் கூச்சல். கெட்டது குட்டிச்சுவர்."

ஒருபக்கம் கோவமும், இன்னொரு பக்கம் வருத்தமும், மொத்தத்தில் ஏமாற்றமும் ஒருங்கே வருகிறது. இதற்கா 1967-இல் பேராய ஆட்சியைத் தூக்கி எறிந்து கழக ஆட்சியைக் கொண்டுவந்தோம்.? கல்விக் கொள்கையிலும், நடைமுறையிலும், எங்கேயோ நம் குமுகாயம் உறுதியாய்த் தவறியிருக்கிறது. பணம், பணம் என்று எங்கும் சீரழிந்து, "உள்ளதும் போச்சுறா தொள்ளைக் காதா" என்று ஆயிற்றே!.

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?

அன்புடன்,
இராம.கி.

Saturday, June 28, 2008

பொருதும், கும்மாளமும் விளையாட்டும்

"தமிழில் sports & games என்பதை எப்படிப் பாகுபடுத்துவது?" என்று திரு. பாலா சுப்ரா 3/8/2004 அன்று அரையர் குழும்பில் (Rayar kaapi Klub) முன்பு கேட்டிருந்தார். அப்பொழுது அதற்கு ஆராயர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்.

"என்ன பாலா கலாய்க்கிறீர்களா?
ஸ்போர்ட்ஸ் = விளையாட்டு
கேம்ஸ் = ஆட்டம்
இதிலென்ன சந்தேகம்?"

ஆராயரின் அந்த மடலைப் படித்த பின்னால் தொடர வேண்டும் என்று முதலில் எண்ணியிருந்தேன். பின் மறந்து விட்டேன். ஒரு முறை முடியாது கிடக்கும் குறை மடல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது, முடித்து விடலாம் என்று தோன்றியது. எனவே இந்த மடலைப் பின்னால் அரையர் குழும்பிற்கு அனுப்பினேன். இப்பொழுது set என்பதற்கு ஒரு வலைப்பதிவர் தமிழ்ச் சொல்லைக் கேட்டதைப் படித்து விட்டு, பழையதைத் தேடி மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
----------------------------------------
ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில் கீழே உள்ளவாறு கொடுத்திருக்கிறது.

sport - c.1400, from Anglo-Fr. disport, from O.Fr. desport "pastime, recreation, pleasure," from desporter "to divert, amuse, please, play" (see disport). Meaning "game involving physical exercise" first recorded 1523. Sense of "stylish man" is from 1923. Verb meaning "to wear" is from 1778. Sportsmanship is from 1745.

sport என்பது சண்டை, போர் ஆகியவை செய்யாத காலங்களில் போர்ச் செயலுக்குப் பகரியாகவே (substitute) எழுந்தது. மற்போர் என்பதில் 2 பேர் பொருதுகிறார். வாட் போரிலும் இருவர் பொருதுவார். பொருதல் என்ற வினையே பின்னால் போர் எனும் பெயர்ச் சொல்லை உருவாக்கிற்று. sport என்பதும் ஒருவகைப் பொருதலே. (என்ன, இது வல்லடி - violence இல்லாத போர்) பொருது என்றாலும் தமிழில் அது பெயர்ச்சொல் தான். sport என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் பொருது என்பதாகும்.

sportsman = பொருதாளன். /பொருதர்
sportswoman = பொருதாளி 
sportsperson = பொருதாளர் / பொருதர்
sportsmanship = பொருதாண்மை / பொருதுமை
sportive = பொருதாக

விளையாட்டு என்ற சொல்லை sports க்கு இணையாக வைத்துக் கொண்டால் மேலே உள்ளது போல் தொடர்புள்ள சொற்களைச் சொல்வது இடரும். 

இனி, game என்பதற்கு கீழுள்ளதை ஆங்கில வழியில் அறிகிறோம்.

game (n.) - O.E. gamen "joy, fun, amusement," common Gmc. (cf. O.Fris. game, O.N. gaman, O.H.G. gaman "joy, glee"), regarded as identical with Goth. gaman "participation, communion," from P.Gmc. *ga- collective prefix + *mann "person," giving a sense of "people together." Meaning "contest played according to rules" is first attested c.1300. Sense of "wild animals caught for sport" is c.1290; hence fair game (1825), also gamey "having the flavor of game" (1863). Adjective sense of "brave, spirited" is 1725, from the noun, especially in game-cock "bird for fighting." Game plan is 1941, from U.S. football; game show first attested 1961.

கும்முதல் என்ற வினை தமிழில் குழுமுதல் பொருளில் வரும். கும் என்பது தமிழில் கூட்டப் பொருள் தரும் முன்னொட்டு. வடமொழியில் இது சம் ஆகும். கும்மித்தலும், கும்மியாட்டம் போன்றவையும் நம் களிப்பைத் தெரிவிக்கும் செயல்கள் தாம். கும்மாளம் என்பதும் கும்மிக் களிக்கும் செயல் தான். "ஆட்டமும் கும்மாளமுமாய்" என்று சொல்கிறோம் அல்லவா? ஆட்டம் என்பது ஒரு act. "இக் கும்மாளத்திற்கு நான் வரவில்லை; இவ் ஆட்டத்திற்கு நான் வரவில்லை" என்று சொல்வதையும் நினைவு கூருங்கள்.

ஆட்டம் என்ற சொல் இக்காலத்தில் மிகவும் பொதுமைப் பொருள் பெற்று விட்டது. அதைக் குறுக்கி மீண்டும் விதப்பாக game என்பதற்குக் கொண்டு வருவதைக் காட்டிலும் (நானும் அவ்வாறு செய்துள்ளேன். இருந்தாலும் துல்லியம் பார்த்தால் அச்சொல்லை game ற்கு இணையாகச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.) கும்மாளத்தைச் சுருக்கிக் கும்மை என்றே game ற்கு இணையாகச் சொல்லலாம். சொல்வதற்கு ஒரு மாதிரியாய் இருந்தால் கும்மாளம் என்பதையே கூடப் புழங்கலாம். நாளாவட்டத்தில் பழகிவிடும். கும்மாளம் என்பது மகிழ்வுக்காக உள்ளது என்ற நல்ல உள்ளுணர்வும் கூட அதில் இருக்கும்.

gamesman = கும்மாளன். / கும்மைக்காரன்
gameswoman = கும்மாளி / கும்மைக்காரி
gamesperson = கும்மாளர் / கும்மைக்காரர்
gamesmanship = கும்மாளுமை /

அப்பொழுது விளையாட்டு என்பது என்ன? அது ஒரு field event. விளை என்பது தென்பாண்டி நாட்டில் விளைந்து முடிந்த வயற்காட்டில் உள்ள தட்டை நிலத்தை ஆகுபெயராய்க் குறிக்கும். 135-150 நாட்களுக்குப் பின் எந்த விளை நிலமும் தரிசாய்த் தானே கிடக்கும்? அங்கு தான் பொதுவாய் நாட்டுப்புற விளையாட்டுக்கள் நடைபெறும். விளையாட்டு இடம் விளைக்கு அருகில் உள்ள மேடாகவும் இருக்கலாம். குமரி, நெல்லை மாவட்டங்களில் களியக்கா விளை, திசையின் விளை என்றெல்லாம் ஊர்களின் பெயர் இருப்பதையும் எண்ணிப் பார்க்கலாம். விளை என்பது field என்பதைத்தான் குறிக்கிறது. விளையில் ஆடுவது விளையாட்டு - வேறு ஒன்றுமில்லை.

Sports consists of field events and games. பொருதுகள் என்பவை விளையாட்டுக்களையும், கும்மைகளையும் உள்ளடக்கியவை.
individual field event = தனியாள் விளையாட்டு.
team field event = தொகுவ விளையாட்டு (தொகுவம் = கூட்டம், குழு, தொகுதி; a group consists of many teams = ஒரு குழு பல தொகுவங்களைக் கொண்டது.)

களித்தல் = to enjoy; களிப்பு என்பது enjoyment. களியாடுதல் என்பது to involve in enjoyment.

அன்புடன்.
இராம.கி.

Friday, May 16, 2008

ஔ - 4

18, அடுத்தது ஒளபாசனம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல். ஒருகாலத்தில் இல்லறத்தில் ஈடுபட்டுள்ள எல்லாப் பெருமானரும் தங்கள் வீட்டில் வேள்வித் தீ வளர்த்தே ஆகவேண்டும்; அவர்கள் வீட்டு அடுப்பாங்கரையில் கங்கு கனன்று கொண்டே இருக்கும். இப்பொழுது, இதையெல்லாம் பின்பற்றுபவர்கள் அரிதிலும் அரிது.

வேள்வித் தீயைக் காப்பாற்றுதலை தீ ஓம்புதல் என்று தமிழில் சொல்லுவார்கள். ஓம்பாயனம் என்பது தமிழ்வினையைச் சங்கத ஈறு கொண்டு முடிக்கும் ஒரு பெயர்ச்சொல். காப்பற்றுதல் என்ற தொழிற்பெயரை உணர்த்தும். ஓம்பாயனம்>ஓம்பாசனம் ஆகி பெரும்பாலான தமிழர்கள் மெல்லின ஓசையை அவ்வப்போது பேச்சுவழக்கில் ஒலிக்காமற் போவது போல, ஓம்பாசனம்>ஓபாசனம் ஆகிப் பின் மேலும் திரிந்து ஔபாசனம் ஆகும். [தமிழ் ஓதியை வலிந்து மறுக்கும் ஹோத்ரிக்காரர்கள் இந்த ஓம்புதல் - ஔபாசனத்தை மறுக்கப் போகிறார்களா? தமிழ்வேரை இப்படி மறுத்துக் கொண்டே போனால், அப்புறம் வேள்வியை ஒட்டிய பல வடசொற்களின் சொற்பிறப்பையும் மறுக்க வேண்டும். தாத்தனைப் பேரனாக்கும் முயற்சியை என்று கைவிடுகிறார்களோ, அன்று தான் வடமொழிக் குழப்பத்திற்கு முடிவு காண முடியும்.]

19. அடுத்தது இரண்டு சொற்கள் ஒளரசன், ஒளரதன் - உரிமை மகன்; கணவனுக்குப் பிறந்த மகன். உள்ளே இருக்கும் தமிழ் வேர் உள் என்பது தான். இதற்கென்று உள்ளவன் உரியான், உரியன், உரிதன், உரயன், உரதன். உரிமைப் பொருள் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. உரயன்>உரசன்>ஔரசன், உரதன்>ஔரதன்.

20. அடுத்த சொல் ஒளரப்பிரகம். இங்கே ஒருவப் பெருகம் என்பது தன் உருமாற்றிக் காட்சியளிக்கிறது. 'ஒரு' என்பதைச் செம்மறியாடு என்று பிங்கல நிகண்டு குறிக்கும். பெருகம் என்பது மந்தையைக் குறிக்கிறது. ஒரு என்னும் சொல் ஒருவம் ஆகி பின் ஒருவப் பெருகம்>ஔரப்ரஹம் ஆகி ஆட்டுமந்தையைக் குறிக்கும்.

21. அடுத்தது ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன். ஊற்று நீரை, ஊற்று என்றாலே அந்தக் காலத் தமிழில் அமையும் என்று முன்னே உதம் பற்றிச் சொல்லும் போது பார்த்தோம். ஊறுவது ஊறுவம். இனி ஏதோவொன்றை அடையும் விதமாகத் தன்னை வதைத்துக் கொள்ளுபவன் (தனக்குத் தானே வதம் செய்து கொள்ளுபவன்) வதி. வடமொழி வாய்பாட்டில் வதி வ்ரதி ஆகும், வதம் வ்ரதம் ஆகும். நாம் மீண்டும் அதைக் கடன் வாங்கி விரதி, விரதம் என்று சொல்லிக் கொள்ளுவோம்; நம்முடைய தமிழ்ச்சொற்களான வதை, வதி, வதம் ஆகியவற்றை விட்டுவிடுவோம். [இந்த அடிமைத் தனம் என்று போகும்?] ஊறுவ வதி >ஊருவ வதி>ஊருவ வ்ரதி>ஔரவ வ்ரதி என்ற வளர்ச்சி, கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் புரிந்து போய்விடும்.

22. ஒளலியா - இசுலாமிய அடியார்கள். இதை விளக்க அரபு மொழிக்குப் போகவேண்டும். அதைச் செய்யாமல் தவிர்க்கிறேன். இசுலாமிய அடியார் என்றே சொல்லலாம்.

23. அடுத்தது ஔவியம். இந்தச் சொல்லைப் பற்றிய விளக்கமே, என்னை ஔ என்னும் பதிவுத் தொடரை எழுத வைத்தது.

ஔவியம் என்பது அவ்வியத்தின் போலி. இந்தப் பெயர்ச்சொல்லின் செயல்வினை (active voice) அவ்வுதல் என்றும், செயப்பாட்டு வினை (passive voice) அவ்வித்தல் என்றும் ஆகும். அதாவது, அவ்வியது அவ்வியம்>ஔவியம் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "திருக்குறள் மெய்ப்பொருளுரை"க் கூற்றுப்படி, சங்க இலக்கியத்தில் ஆவணப் படாத இந்த 'அவ்வியம்' திருக்குறள் 167, 169 பாக்களிற் தான் முதன்முதலில் ஆவணப் பட்டிருக்கிறது. பின்னால் "ஔவியம் பேசேல்" என ஆத்திச்சூடியிலும், "ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு" என்று கொன்றை வேந்தனிலும் சொல்லப் பட்டிருக்கிறது.

அவ்வியம் என்ற சொல்லாட்சி குறளில் இருக்க, ஆத்திச்சூடியிலும் கொன்றைவேந்தனிலும் ஔவியம் என்றே பயிலப் படுகிறது. எனவே, 12 ஆம் நூற்றாண்டிற்கு அருகாமையில் 'அவ்'விலிருந்து ஔகாரப் போலி ஏற்பட்டிருக்கலாம். [அவ்வையார் என ஐந்து பேர் வெவ்வேறு காலங்களில் இருந்ததாகத் தமிழறிஞர் சொல்லுவார்கள்.] சிலம்பின் அடைக்கலக் காதை 122 ஆம் அடிக்கான அடியார்க்கு நல்லார் உரையிலும் கூடச் செவ்வியள் என்பவள் "ஔவியம் இல்லாள்" என்று சொல்லப் பட்டிருக்கும். [அடியார்க்கு நல்லாரின் காலத்தையும் 12 ஆம் நூற்றாண்டிற்கு அண்மையாகவே சொல்லுவார்கள்.] பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலும் [18 ஆம் நூற்றாண்டு] ஔவியம் என்ற சொல்லாட்சி இருப்பதாகத் தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக் கழகப் பெருஞ்சொல்லகராதியில் குறிப்பிட்டிருக்கிறார்கள்; ஆனால் அதன் மூலத்தில் என்னால் இப்பொழுது கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னால் தேட வேண்டும்.

அவ்வியச் சொல் வரும் குறள் அதிகாரத்தின் தலைப்பு அழுக்காறாமை. அதன் பொருள் தெரிந்தால் தான், அவ்வுதலின் பொருளைத் தேடுவது எளிதாக அமையும்.

ஆறுதல் என்பது வழிப் படுதலைக் குறிக்கும். [குறிஞ்சி, முல்லை நிலங்களை பழங்காலத் தமிழ்மாந்தன் கடக்க, ஆறுகளே வழி காட்டின. அதனால் ஆறு என்பதற்கு வழி என்ற பொருளும் தமிழில் உண்டு. ]

அழுக்கு என்பதைப் பலரும் மாசோடு (dirt) தொடர்பு படுத்துவார்கள். மாசு என்பது ஒரு வழிநிலைப் பொருள்; முதல்நிலைப் பொருள் அல்ல. இந்தச் சொல்லின் பொருள் புரிய வேறுவகையில் அணுக வேண்டும்.

அழுத்துதல் என்றவொரு பிறவினையை இன்றைக்குப் பயில்கிறோமே, அதை எப்படிப் புரிந்து கொள்ளுகிறோம்? காட்டாக, A என்னும் பொதி (body) B - என்னும் பொதியை அழுத்துகிறது; இதை B -யின் நோக்கில், தன்வினையாய், எப்படிச் சொல்லலாம்? B, A - ஆல் அழுங்குகிறது. அழுங்குதல் என்பது தன் வினை; அழுத்துதல் என்பது பிறவினை. ஒரு பொதி அழுங்க, அழுங்க, அதன் மேல் அழுத்தம் கூடிக் கொண்டேயிருக்கிறது என்று பொருள். அழுங்குவதால் அது அழுக்கு; அழுத்துவதால் அழுத்து. [அழுங்குதல் வினை தற்பொழுது மிக அரிதாகவே பயன்படுகிறது.]

அழுத்துதல் என்பது to press என்றே இந்தக் காலத்தில் புரிந்து கொள்ளப் படுகிறது. அதைப் பொதுமைப் படுத்தி, அறிவியல் மற்றும் பொறியியலில் 'அணுக்களை நெருங்கவைத்தல்' என்னும் ஆழ்பொருளில் துறுத்தல் என்னும் வினை ஆளப்படும். இது ஆங்கிலத்தில் உள்ள to stress என்ற வினைச்சொல்லிற்கு இணையானது. துறுத்தலுக்கு மாறாய் தகைத்தல் என்றும் சிலர் ஆளுகிறார்கள். [தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலச் சொல் அகரமுதலியிலும் 'தகைத்தல்' இருக்கிறது. இருந்தாலும், to tighten என்பதற்கே தகைத்தல் சரியாகும் என்பதாலும், ஐகாரம் பயிலும் தகைப்பைக் காட்டிலும், உகரம் பயிலும் துறுத்து பலுக்க எளிதாய் இருக்கும் என்பதாலும் நான் அதையே பரிந்துரைக்கிறேன். துறுத்திற்கு மாறாய் தகைப்பு நிலைத்தாலும், எனக்கு உகப்பே.]

அழுத்தப் பட்ட பொதி அழுங்குவதைப் போலத் துறுத்தப் பட்ட பொதியும் துறுங்கும் (to get strained). மூன்று விதமான துறுத்தங்களை, மாகனவியல் - mechanics - குறிக்கும். அவை திணிசுத் துறுத்தம் - tensile stress, அமுக்கத் துறுத்தம் - compressive stress, கத்தரித் துறுத்தம் = shear stress என்றாகும். அதே போல, நீளவாட்டுத் துறுங்கு [longitudinal strain; இதை மாகனவியலில் கணக்கிடும் முறையில் ஒருசில வரையறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். to stretch என்பதைக் குறிக்கத் துயக்குதல் என்ற சொல் பயின்று, நீளுதல் பொருளைக் கொடுக்கும். ஒரு நீளத்தின் துயக்கத் திரிவை (change in the stetch) நீளத்தால் வகுத்தால் கிடைக்கும் எண், நீளவாட்டுத் துறுங்கு என்று சொல்லப் படும்.], பருமத் துறுங்கு (bulk strain = பருமத் திரிவு / பருமன்), கத்தரித் துறுங்கு [shear strain = குறுக்குச் செகுத்தத் திரிவு (change in cross section) / குறுக்குச் செகுத்தம்(cross section)] என்ற மூன்று விதமான துறுங்குகளையும் மாகனவியல் பேசும்.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் வரை (இதை இளகு எல்லை - elastic limit என்று சொல்லுவார்கள்) துறுத்தமும் (stress) துறுங்கும் (strain) நேர் வீதத்தில் (direct proportion) தம்மிடையே உறவு கொள்ளும் (இந்த நேர் வீதத்தை இளகுமை - elasticity, அல்லது இளகுக் குணகம் - elastic coefficient என்று சொல்லுவார்கள்). அழுக்கு ஆறுதல் என்பது to get strained. அழுக்காறு என்பது strained state.

அழுக்காற்றின் இயற்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றிலும் இருக்கும் மனச் சூழமைவு நமக்குள் ஓர் அழுத்தத்தை தொடர்ச்சியாய் ஏற்படுத்துகிறது. அதனால் நாம் அழுங்குகிறோம். நமக்குள் அழுக்காறு கூடுகிறது அல்லது குறைகிறது. அழுக்காறு என்பதை முற்றிலும் தவிர்த்தவர் இவ்வுலகில் யாருமில்லை; ஆனால் அதைக் கூட்டுவதும், குறைப்பதும், நம் கையில் இருக்கிறது. பொதுவாய்ப் பல உரைகாரரும், பல அகரமுதலியர்களும் அழுக்காற்றைப் பொறாமை என்றே சொல்லுகிறார்கள்.

அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

என்ற 35- ஆம் குறளில் வரும் அழுக்காறு பொறாமையைக் குறிக்கிறது என்று பரிமேலகர் கூடச் சொல்லுவார். இந்தக் கருத்தோடு நான் மாறுபடுகிறேன். என் கேள்வி: அழுக்காற்றைப் பொறாமை என்றால், அப்புறம் அழுக்காறாமை என்பது என்ன? அழுக்காறாமை என்ற ஓர் அதிகாரமே குறளில் இருக்கிறதே? இரண்டும் ஒரே பொருளைக் குறிக்க முடியுமா?

ஓர்ந்து பார்த்தால், அழுக்காறு என்பது நாம் தொடர்ச்சியாய் அழுங்கிக் கிடக்கும் நிலை. அழுக்கின் வழி. "ஏதோ ஒரு விசை நம் மனத்தை அழுத்துவதால் ஏற்படும் அழுக்கு, தொடர்ச்சியாய்க் குறையாது நம்மிடம் இருக்குமானால், நம்மை அது அறம் செய்யவிடாது" என்றே 35 ஆம் குறளுக்கு நான் பொருள் கொள்ளுகிறேன். [அப்படி அழுக்கைக் குறைக்க ஒரு வழி, நம் மனப் பரப்பை விரித்துக் கொள்வதாகும். இதை விரிவாகக் கீழே பார்ப்போம்.]

அழுக்காறு mentally strained state என்றானால், அழுக்கு ஆறாமை என்பது என்ன என்பது அடுத்த கேள்வி. நாம் காணும் திண்மப் பொதிகளின் (solid bodies) துறுத்தம்-துறுங்கின் நடவுகையில் (stress-strain behaviour) இந்த இளகு எல்லை என்பது முகன்மையானது. அதாவது, எல்லையற்ற வகையில் எந்தவொரு பொதியும், துறுத்தத்தை (அழுத்தத்தை) ஏற்று துறுங்கிக் (அழுங்கிக்) கொண்டே இருக்காது. ஏதோ ஒரு எல்லையில் அதன் பொறுக்கும் கொண்மை (bearing capacity) மீறி, அதாவது பொறாது, தானே் சிதைந்து போகும். அந்த அழுக்கு ஆறா எல்லையைத் தான் அழுக்கு ஆறாமை என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்; (அதாவது the state of being unable to withstand or bear the stress). இதை வேறுவிதமாய்த் தமிழிற் சொன்னால் பொறாமை.

பொறுமையின் எதிர்ச்சொல் பொறாமை. ஆக, பொறாமை / அழுக்காறாமை என்பது ஓர் இளகு எல்லையைக் குறிக்கிறது. அழுக்காறு = mental strain அழுக்காறாமை = limit to the mental strain. திருக்குறளில் பயிலும் இந்தக் கலைச் சொற்கள் மனவியற் (psychology) பொருளையே கொண்டாலும், ஒப்பான முறையில் மாகனவியலிலும் - mechanics தம் நடைமுறை கொள்ளுகின்றன.

இனி அவ்வியம் என்பதற்கும் கூடப் பொறாமை, அதாவது பொறுக்காத தன்மை என்றே பலரும் பொருட்பாடு காட்டுவார்கள் [காட்டாகப் பரிமேலழகர், பாவாணர்]. என் கேள்வி: அழுக்காறு, அழுக்காறாமை, அவ்வியம் என மூன்றிற்கும் ஒரே பொருள் சொல்லுவது எந்த விதத்தில் சரி?. மற்ற உரைகாரர்களுக்கு மாறாகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தன்னுடைய 'திருக்குறள் மெய்ப்பொருளுரையில்' அவ்வுதல் என்பதற்குச் சுருங்குதல், குறுகுதல் என்ற பொருளைச் சொல்லுவார். [திருக்குறள் உரைகளைப் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் 'திருக்குறள் மெய்ப்பொருளுரையைக்' கட்டாயம் படிக்க வேண்டும். அது மிகச் சிறந்தவொரு கருவூலம். இதுவரை 4 பகுதிகளே வந்திருக்கின்றன. மற்ற பகுதிகளை (ஒரு சில கையெழுத்துப் பதிப்பாகவே இருந்து) முடிக்காமலேயே பெருஞ்சித்திரனார் இயற்கை எய்திவிட்டார். அண்மையில் முனைவர் மு.இளங்கோவன் திண்ணையில் பல்வேறு திருக்குறள் உரைகள் பற்றிச் சொன்னபோது இதைப் பற்றியும் சொல்லியிருப்பார். இதற்கு எதிர்வினையாற்றிய ஜடாயு திருக்குறள் மெய்ப்பொருளுரையைப் படித்திருப்பாரா என்பது ஐயமாய் இருக்கிறது. "திராவிடமா, போட்டு அடி" என்ற வெற்று முனைப்பில் இவரைப் போன்றவர்கள் இருக்கும் போது, அப்புறம் என்ன சொல்வது?]

பொறாமையையும், அவ்வியத்தையும் ஒன்று போலவே சொல்லுவதில், பெருஞ்சித்திரனார் போலவே, எனக்கும் ஒப்புதல் இல்லை. ஏனெனில் 'அவ்வித்து அழுக்காறு உடையான்' என்று குறள் 167 -இல் சொல்லும் போது, அவ்வித்தல் என்பதை அழுக்காற்றிற்கு முந்திய செயலாகவே வள்ளுவர் கூறுகிறார். அவர் கூற்றுப் படி, அவ்வித்தலும் அழுக்காறலும் உடன் ஒக்கும் செயல்கள் அல்ல.

அப்படியானால் அவ்வித்தல் என்பது தான் என்ன? மீண்டும் ஒப்புமை கருதி, மாகனவியலுக்கே போவோம்.

இப்பொழுது நம் எடுத்துக் காட்டு அலசலை, வெறும் அமுக்கு விசையைக் கொண்டே பார்ப்போம் [மற்ற திணுசு, கத்தரி விசைகளைக் கொண்டும் பார்க்கலாம். இருப்பினும் அமுக்கு விசையைப் புரிந்து கொள்வது எளிது, எனவே இந்த எடுத்துக் காட்டைத் தருகிறேன்.]

ஒரு பொதியின் மேல் 10 அலகுள்ள ஒரு விசை அமுக்குகிறது. அந்த விசைக்கு நேர் கீழுள்ள குறுக்குச் செகுத்தப் பரப்பு (cross sectional area) 5 சதுர அணுங்குழை (square inch). இப்பொழுது பொதியின் உள்ளே உணரப் பெறும் அமுக்குத் துறுத்தம் = 10/5 = 2 அலகு/சதுர அணுங்குழை என்றாகும். இதற்கு மாறாக அதே அமுக்கு விசையில் குறுக்குச் செகுத்தம் இரண்டு மடங்கானால், அமுக்குத் துறுத்தம் = 10/10 = 1 அலகு/சதுர அணுங்குழை என்று ஆகும் அல்லவா? இதே போல குறுக்குச் செகுத்தம் குறையக் குறைய அமுக்குத் துறுத்தம் கூடும். [நினைவு வைத்துக் கொள்ளுங்கள் ஒரு பொதியின் மேல் தாக்குவது அமுக்கு விசை (compressive force); ஆனால் பொதியின் உள்ளே உணரப் படுவது அமுக்குத் துறுத்தம (compressive stress). பொதியின் குறுக்குச் செகுத்தத்தைப் பொறுத்தே அந்தத் துறுத்தம் அமையும்.]

இப்பொழுது மீண்டும் அவ்வுதல் என்ற சொல்லுக்கு வருவோம். இதற்குக் குறுகுதல், சுருங்குதல், தட்டையாதல் என்ற பொருட்பாடுகள் உண்டென்று முன்னரே அவல்/அவம் பற்றி இந்தத் தொடரிற் பேசிய போது பார்த்தோம். அந்த முறையில் அவ்விய நெஞ்சம் என்று குறள் 169 ல் சொல்லுவதைக் குறுகிய நெஞ்சம் என்றே பொருள் கொள்ள முடியும். பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் அப்படியே தான் பொருள் கொள்ளுவார்.

[அவ்வுதலின் ஆதிப் பொருள் வெறும் ஒலிக் குறிப்புத் தான். 'அந்த வடையை அவ்வெனக் கடித்தான்'. அவ்வெனப் பல்லாற் கடிக்கும் குறிப்பு, மீந்திருக்கும் வடை குறைந்திருப்பதையும் உணர்த்துகிறது அல்லவா? நாளாவட்டத்தில் ஒலிக்குறிப்பின் பொருட்பாடுகள் பலவாகின. அவற்றுள் முகன்மையானது குறைதல், சுருங்குதல், கெடுதல், பள்ளமாதல் போன்றவையாகும். அவ்வுதல் என்பதன் இன்னொரு வெளிப்பாடான அம்முதல் என்ற வினைச் சொல் அம்மி என்ற ஓர் அடுப்படிக் கருவியை நமக்குக் காட்டும். அம்முதலின் நீட்சி அமுக்குதல் = to press. இதே போலத் தொம்முதல்> தும்முதல்> துமுக்குதல்> துவுக்குதல்> துவைத்தல் என்பதும் அடித்து அமுக்குதலைக் குறிக்கும். தேங்காய்த் துவையல் (=துகையல்)என்று சொல்லுகிறோமே, அதுவும் ஒரு அவையல் தான். அவல் என்பதும் அவையலில் உருவான பண்டம் தான். முதலிற் பருமனாய் இருந்தது இப்பொழுது தட்டையாய், சின்னதாய், ஆயிற்று.]

அவ்வுதலுக்கும், குறுகுதலுக்கும் உள்ள தொடர்பு நுணுகி அறிய வேண்டியதாகும். A -இன் ஆக்கம் B -இன் கண்ணுக்கெதிரே நடந்து கொண்டு இருக்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க, மற்றவர்கள் சொல்லச் சொல்ல, பட்டு அறிய அறிய, B யின் மன அழுத்தம் கூடிக் கொண்டே போகிறது. வெளியே தன்னைச் சுற்றிக் காணும் ஒரே விசையானது, தன் நெஞ்சம் குறுகக் குறுக அதிக மன அழுத்தமாய் உணரப் படும்.

இனி, நெஞ்சம் குறுகுதல் என்றால் என்ன? ஒருவர் பரந்த மனம் உள்ளவர், இந்னொருவர் குறுகிய நெஞ்சர் என்னும் போது என்ன பொருள் கொள்ளுகிறோம்?

உலகில் நடக்கின்ற போக்குகள், தான் சரியென்று நினைக்கின்ற போக்கிற்கு மாறி நடந்தாலும், அவற்றைப் பெரும்போக்காக எண்ணி முனிவு கொள்ளாமல் "தனக்கு உரிமை இருப்பது போல் மற்றோருக்கும் உரிமை உண்டு" என்று ஏற்றுக் கொண்டு, பொறுத்துப் போகிறவரை பரந்த மனம் உள்ளவர் என்கிறோம் இல்லையா? "தான் சொன்னபடி தான் நடக்க வேண்டும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்று அடம்பிடிக்கிறவரை, "தான் சொல்லும் படியே மற்றவர் நடக்க வேண்டும்" என்று எண்ணுபவரை, குறுகிய நெஞ்சர் என்று சொல்லுகிறோம் இல்லையா? இப்படி உருவும் இல்லாத, பருவும் இல்லாத மனக் கொண்மையைத் தான் நெஞ்சப் பரப்பு என்று பேச்சு வழக்கில் சொல்லுகிறோம். இந்த நெஞ்சப் பரப்பு விரிய விரிய அழுக்காறு என்பது குறையும்; இந்த நெஞ்சப் பரப்புக் குறையக் குறைய அழுக்காறு கூடும். அழுக்காறு குறையக் குறைய அழுக்காறாமை (அழுக்காற்றின் இளகு எல்லை) இன்னும் கொஞ்சம் தள்ளிய அழுக்கில் ஏற்படும்.

இந்தப் புரிதலோடு, 167 ஆம் குறளைப் பார்த்தால்,

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்

என்பதன் பொருள் புரியும். "மனம் குறுகி அழுக்காறு உள்ளவனை, தன் மூத்தாளுக்குக் காட்டிவிட்டு திருமகள் விலகி விடுவாள்" என்ற பொருள் வரும். திருமகள் / மூத்தாள் என்ற தொன்மத்தை வள்ளுவர் ஏன் சொல்லுகிறார் என்ற கருத்தை நான் விளக்குவதைக் காட்டிலும் பெருஞ்சித்திரனார் விளக்குவதே சரியாய் அமையும். எனவே அதைத் தவிர்க்கிறேன். அவர் நூலில் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து 139 ஆம் குறளில்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

குறுகிய நெஞ்சத்தவனின் ஆக்கமும் செவ்வையானின் கேடும் பலராலும் நினைக்கப் படும். இங்கே விளக்கம் சொல்ல வேண்டியது அவ்வியத்தின் எதிர்ச்சொல்லான செவ்வியம் என்பது பற்றியே.

சென்னை அடையாற்றில் இருந்து கோட்டூர் புரத்திற்கு ஒரு செவ்வையான வழி இருக்கிறது. [இங்கே செவ்வையான வழி என்பது நேர்கோட்டு வழி என்று பொருளல்ல; proper / perfect road; எல்லோரும் பயன்படுத்தும், சரியாக இழைக்கப் பட்ட, தடைகள் ஏதுமில்லா, .......... வழி என்று பொருள்.] அதை விடுத்து குறுக்கு வழியில் தூய பாட்ரிக் பள்ளி, கோட்டூர் வழியாகத் தான் ஒரு பெரிய வண்டியில் போவேன் என்றால் மாட்டிக் கொள்ள வேண்டியது தான். செவ்வை>செவ்வியம் என்பதற்கு எதிர்ப்பொருள் கொண்டது அவ்வியம். இதனால் தான் அடியார்க்கு நல்லார் அடைக்கலக் காதையின் 122 ஆம் அடிக்கான உரையில் செவ்வியள் என்பவள் "ஔவியம் இல்லாதவள்" என்று சொல்லுகிறார். வள்ளுவரும் அவ்வியத்தானின் ஆக்கத்தையும் செவ்வியனின் கேட்டையும் ஒருங்கு சேர வைத்து அவற்றைக் குமுகாயம் என்றைக்கும் மறக்காது நினைக்கும் என்று சொல்கிறார்.

24. அடுத்த சொல் ஒளவை. இதற்குத் தவப்பெண், தாய், ஆரியாங்கனை, ஒளவையார் என்னும் புலவர் என்று பொருள் சொல்லுவார்கள். அம்மை என்னும் சொல் மகர, வகரப் போலியில் அவ்வை என்று சொல்லப் படும். செம்மை>செவ்வை என்று ஆவது போல இதைப் புரிந்து கொள்ளலாம். கோடா, தோடா, கன்னடம், குடகு, தெலுங்கு, கடபா, கோண்டி, சங்கதம், பாகதம், மராத்தி, கொங்கணி போன்ற மொழிகளிலும், இன்னும் பல்வேறு வடகிழக்கு மொழிகளிலும் அவ்வ என்ற சொல் அம்மையைக் குறிக்கும். தமிழிலும் பல காட்டுக்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. நண்ணிலக் கடலை (mediteranian sea) ஒட்டிய நாடுகளின் தொன்மக் கதையான ஆதாம் ஏவாள் என்பதும் கூட ஆதன் / அவ்வை என்னும் தமிழ் ஆளன்/ அம்மையை நினைவு படுத்தும்.

தாயைக் குறித்த சொல் தவப் பெண்ணைக் குறித்தலும், பின்னால் நீட்சியில் பெருமானர் வீட்டுப் பெரும்பெண்களைக் (ஆரியாங்கனை = ஆரியாங்க அன்னை) குறித்ததும் இயற்கையே.

அவ்வைக்குத் தாய் என்ற பொருள் போக உயரம் குறைந்தவள் என்ற பொருளும் உண்டு. அவ்வுதல் என்ற வினையை மேலே பார்த்தோம் அல்லவா? அவ்வன் = குள்ளன். அவ்வை = குள்ளச்சி. பொதுவாக நம் நாட்டுப் புறங்களில் பெயர் தெரியாத ஒருவரை, அவர் உயரம், நிறம், தோற்றம், அல்லது தொழிலை வைத்தே அடையாளம் சொல்லுவார்கள். நெட்டையன், கூளைச்சி, கருப்பன், வெள்ளையன், முறுக்கன், மீசைக்காரன் இப்படித்தான் ஒருவருக்கொருவர் முன்றாமவரைச் சொல்லுவது உண்டு. சங்க காலப் புலவரான அவ்வையார் ஒருவேளை குள்ளமான தோற்றம் உடையவராய் இருந்திருக்கலாம்.

அவர் பாடல்களைப் படிக்கும் போது அவர் அகவை கூடியவர் என்று சொல்ல முடியாது இருக்கிறது. ஆனால் அவர் அரசர்களுக்கு, குறிப்பாக அதியமான் நெடுமான் அஞ்சிக்கும், அவன் மகனுக்கும் நெருக்கமானவராய் இருந்திருக்கிறார். அரசனுக்குச் சரிக்குச் சரியாக உண்பதும், கள் மாந்துவதும் கூட நடந்திருக்கிறது. தன் அறிவுக் கூர்மையாலும், தமிழ்த் திறத்தாலும் இவர் இந்நிலையை அடைந்திருக்கலாம். இருந்தாலும் அவர் இயற்பெயரை எங்கும் அறிந்தோம் இல்லை. இவ்வளவு திறமுள்ளவர் குள்ளமாய் இருந்தது ஓர் அடையாளமாய் இருந்திருக்கலாம். இதற்கு மேல் ஒன்றும் சொல்ல நம்மிடம் தரவுகள் இல்லை. வெறுமே பெண் என்பதற்கு அவ்வை என்று அழைப்பார்களா என்பது என் கேள்வி. அதியமானுடன் அவர் செய்த கேளிக்கைகளை மீண்டும் படியுங்கள். அவ்வை என்ற சொல் ஔவையானது பிற்காலத்தில் ஏற்பட்ட போலி என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் சங்க காலத்தில் ஔ என்னும் எழுத்து பெரிதும் பயிலப் படவில்லை. கவ்வை = அலர், பவ்வம் = கடல், கவ்வுளி = பல்லி, நவ்வி = பெண்மான் போன்ற சொற்கள் எல்லாம் இது போலக் கௌவை, பௌவம், கௌளி, நௌவி என்று போலியாகி இருக்கின்றன [பெற்றோரைப் பற்றி - சொல்லாய்வறிஞர் ப.அருளி, தமிழ்ப் பல்கலைக்கழகம்]

25. கடைசிச் சொல் ஒளவைநோன்பு. இதுவும் அவ்வை நோன்பு என்பதன் போலியே. இது பெண்கள் மட்டுமே செயகின்ற ஒரு நோன்பு. இதைச் செவ்வாய் நோன்பு என்றும சில பகுதிகளிற் சொல்லுவார்கள். தமிழ்நாட்டு வட்டாரங்களில் விதம் விதமாய் இந்த நோன்பு் கொண்டாடப் படும். இந்த நோன்பிற்குள் எந்த ஆண்களையும் கலந்து கொள்ள விடமாட்டார்கள். இந்த நோன்பின் விவரிப்பைப் பெண்களாக வெளியே சொன்னால் தான் உண்டு. எனக்கும் ஆழமாய் இந்த நோன்பின் விவரம் தெரியாது; மிக மேலோட்டமான செய்திகளே தெரியும். எஅம்முடைய போகூழ், இது போன்ற செய்திகள் ஆவணப் படாமலே மறைந்து கொண்டிருக்கின்றன. என்ன செய்வது, வருத்தப்படத்தான் முடியும்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, May 14, 2008

ஔ - 3

10. அடுத்த சொல் ஒளடணம். "மிளகாய் சுள்ளென்று எரிக்கிறது என்று சொல்லுகிறோம், இல்லையா?" மிளகாய் போர்த்துகீசியரால் நம்மூருக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னால், நம்மூர் உணவுகளில் பெரிதும் மிளகே பயன்பட்டது. மிளகும் நம் நாவில் எரிக்கிற சுவையைக் காட்டும். எரிதல் என்பது சுவையோடு சூட்டையும் உணர்த்தும் சொல். "நாக்கு எரிகிறது, நாக்கு சுடுகிறது" என்ற இரண்டையும் இடம் மாற்றிச் சொல்வது பலமொழிகளில் உண்டு.

உருத்தல் என்னும் வினை எரிதல், சுடுதல் ஆகிய பொருள்களைக் கொடுக்கும். உருத்தலில் கிளைத்த உருமம் எனும் பெயர்ச்சொல் சூடு மிகுந்த பகலுச்சியைக் குறிக்கும். (தென்பாண்டி நாட்டில் புழக்கத்தில் இருக்கும் சொல்.) இதே வழியில் உருநம் என்பது சூடு. உருநத்தைப் பேச்சுவழக்கில் உண்ணம் என்று சொல்லுகிறோம். (கருநன் கண்ணன் என்று ஆனது போல). பெருமானர் பலுக்கலில் உண்ணம் வடபுலத் திரிவு கூடி உஷ்ணமாய் மாறும். இனி மீநிலைத் திரிவில் உஷ்ணம்>உஷணம்>ஔஷணம் என்றாகி, மிளகு, மிளகுச் சாறு போன்றவற்றைக் குறிக்கும். மீண்டும் அதைக் கடன் வாங்கி வழக்கம் போல் ஷகரத்தை டகரகமாக்கி, ஔடணம் என்று தமிழில் சொல்லுவார்கள். இப்படியெல்லாம் மாற்றாமல், தமிழ்வினையில் இருந்து உருவான உருநம்/ உண்ணம் என்பதையே பழகலாம்.

11. அடுத்த சொல் ஔடும்பரம்/ஔதும்பரம் என்பது; இது செம்பு/தாம்பரம்>தாமிரம் என்ற மாழையால் ஆன பொருளைக் குறிக்கும்.

தும்பரம் என்பது தாம்பரத்தின் இன்னொரு வெளிப்பாடு. தும்>தும்பு>துப்பு என்பது சிவப்பு, பவளம் ஆகியவற்றைக் குறிக்கும். துப்பு>துப்பம் என்பது செந்நிற அரத்தத்தைக் குறிக்கும். தும்பு>தோம்பு>(தாம்பு)>தாம்பரம் என்பதும் சிவப்பு, செம்பு ஆகியவற்றைக் குறிக்கும். சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் என்ற ஊர் சிவந்த நிலம். சிவந்த சேற்று நிறத்தில் நீரை அடித்துக் கொண்டு வரும் தென்பொருநையாறு தாம்பரப் பெருநை>தாம்பர பருணி>தாம்ப்ரபர்ணி என்று வடமொழிப் பலுக்கில் சொல்லப் படும். இது தமிழ்ச்சொல் வடபலுக்கில் மாறிய கதை. தாம்பரம்>தாம்பரை>தாமரை = சிவந்த மலர். ஒளிரும் தும்பரம் [ஒளிவிடும் செம்பு] ஒள்+தும்பரம் ஆகி, ஒட்டும்பரம்>ஔடும்பரம்>ஔதும்பரம் என்று ஆவது வடமொழித் திரிவின் இயல்பு.

12. அடுத்தது ஔத்திரி. மந்திரங்களை ஓதுபவர் ஓதி. இறைப் பாக்களை இறைத் திருமேனியின் முன்னே அழுத்தந் திருத்தமாய்ப் பாடி வழுத்துபவர் ஓதுவார். வடசொல் திரிவில் ஓதி என்பது ஹோத்ரி என்றாகும். மீண்டும் தமிழில் ஓத்திரி>ஔத்திரி என்று அது திரும்பி வழங்கும்.

(ஓதியின் தமிழ்மை பற்றி முன்பொரு முறை நான் எழுதியதை மறுத்து, ஒரு சில வடமொழி அன்பர்களும், அவர்களுக்கு அணைவாய் ஒரு கல்வெட்டு அறிஞரும், "ஆகா, எப்படி நீ சொல்லப் போயிற்று? உனக்கு வடமொழி தெரியுமா? வேதத்திலேயே சொல்லியிருக்கிறது. அதை மறுக்கிறாயோ?" என்றெல்லாம் மறுவினை செய்ததை முந்தைய இடுகைகளில் பார்த்துக் கொள்ளுங்கள். வடமொழியின் விதப்பான தன்மையை ஒருநாளும் நான் மறுத்தவன் இல்லை; அந்த மொழியும், ஆக்கங்களும் படிக்க வேண்டியவையே. ஆனால், இத்தனை நாள் மூடிமறைத்த தமிழின் முன்மையை ஊடே எடுத்துக் காட்டி, இழந்ததை மீட்கக் கூடாதா, என்ன?)

13. ஔதகம் = நீரோடு தொடர்புடையது. உலகில் பேரளவில் காலங் காலமாய் குடிநீர் கிடைத்தது மூன்று வகையில் என்பார்கள். அவை ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்றாகும். ஆற்றில் நீளுகின்ற காரணத்தால் அந்தப் பொருள் நீல்>நீர்>நீத்தம் என்று ஆயிற்று. அதே போல ஊறும் நீர் ஊற்று>ஊத்தம்>ஊத்தம்>ஓதம் என்று ஆயிற்று. [மிகுந்த மழையால், தரையில் ஊற்றுக்கள் காணப்படின், தரைமுழுதும் ஓதம் பரவிவிட்டது என்று நாட்டுப்புறங்களில் சொல்லுவார்கள்.] மழைநீருக்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு. அதைப் போல நீரின் பல்வேறு சொற்களுக்கும் சொற்பிறப்புக் காணலாம். ஊத்தம் > ஓதம் போன்ற சொற்கள் வடபுலத் திரிவில் உதகம் என்று ஆகும். மேலை மொழிகளில் இருக்கும் water போன்ற சொற்களும் இந்த ஊத்தம்/ஓதத்தோடு தொடர்பு கொண்டவையே.

14. அடுத்தது ஒளதசியம். - பால், பழம், அமிழ்து; கீரம் என்று பல்வேறு சொற்களை அடையாளம் காடுவார்கள். அடிப்படைப் பொருள் பால் என்பதே.

உதசம் என்பது மாட்டின் முலைமடி. முன்னால் முல்லிப் பருத்து வந்து, முனையாய் நிற்பது முலை. மு என்னும் ஓரெழுத்து முன்னிற்பதைக் குறிப்பது போலவே, உ/ஊ என்னும் சுட்டும் தமிழில் முன்னிலையைக் குறிக்கும். அது, இது என்பது போல உது என்பது முன்னிலையில் இருக்கும் பொருளைக் குறிக்கும். (அண்மைக்கும் சேய்மைக்கும் நடுவில் இருப்பது முன்னிலை.) தமிழ்நாட்டுத் தமிழரிடம் முன்னிலைக் குறிப்பு பெரிதும் குறைந்து போனாலும், ஈழத்தாரிடம் இன்னும் மறையாது இருக்கிறது. இது போக, உதுத்தல் என்னும் வினை பருத்தற் செயலைக் குறிக்கும்.(உதுத்தலில் இன்னொரு நீட்சியான ஊதலும் பருத்த நிலையைக் குறிக்கும். "பாரு, ஊதிப் பருத்திருக்கிறான்.") உதசம் என்ற சொல் மாட்டின் பருத்த முலையைக் குறிப்பது வடமொழிப் பயன்பாடு. உதசத்தின் வழி கிடைக்கும் மாட்டின் முலைப்பால் உதஸ்யம் என்று வடமொழியில் ஆகும். அதைத் திரித்துக் கடன் வாங்கி ஔதசியம் என்று தமிழில் எழுதுகிறார்கள். பேசாமல் பால் என்றே சொல்லி விடலாம்.

15. அடுத்தது இரண்டு சொற்கள் ஒன்று, ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம், இரண்டாவது. ஒளதாரியம் = உதாரம், மிகுகொடை, உதாரகுணம், பெருந்தன்மை.

இந்த இரு சொற்களுமே உயர்ச்சிப் பொருளில் எழுந்த இருபிறப்பிகள். உ/ஊ/ஒ/ஓ என்ற ஓரெழுத்தொரு மொழிகள் தமிழில் உயர்ச்சியைக் குறிக்கும். இவற்றில் பிறந்த சொற்களை எந்த அகரமுதலியின் வழியாயும் அறியலாம். அப்படி எழுந்த சொல் தான் உத்தம் = உயர்ந்தது. உத்தத்தின் நீட்சியாய் நாவலந்தீவின் நில அமைப்பைக் கருதி, அது வடக்கையும் குறிக்கும், உத்தம்>உதம்>ஓதம் என்ற வளர்ச்சியில் அம்பாரி, உயர்ந்த பீடம் போன்றவற்றைக் குறிக்கும். அதே போல உயர்ந்த குணம் உத்தாரம் எனப்படும். பின்னால் உத்தாரம்>உதாரம்>ஔதாரம்>ஔதார்யம் என்ற வளர்ச்சியில் மிகுந்த கொடை, பெருந்தன்மை போன்றவற்றைக் குறிக்கும்.

16. அடுத்தது ஒளபசாரிகம். உவம் என்ற முன்னொட்டைப் பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். ஒன்றின் உள்ளாக, இன்னொன்று அமையும் நிலை உவ நிலை. வகர, பகரப் போலியில் அது உப என்று வடமொழியில் ஆகும். சார்ந்தது எல்லாம் 'ஒன்றைப்போல் இன்னொன்று' என்னும் தன்மையை உணர்த்தும். தமிழ் ஈற்றில் சாரி, சார்வு, சார்பு, சாரம் என்று அமைவது போல் சாரிகம் என்று முடிவது வடமொழி முறை. அடிப்படைவேர் அப்படியே தமிழாகத் தான் (சார்) இருக்கிறது, ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது உப சாரிகம். மீண்டும் தமிழ் வேர்/தண்டு; வடபுலத்துப் புறனை.

உவசாரிகம்>உபசாரிகம்>ஔபசாரிகம்

17. ஔபத்யம் = புணர்ச்சி. பாலியல், கலவி, புணர்ச்சி பற்றிய பல்வேறு சொற்களைத் தமிழில் நேரடியாக ஓர் அவையில் சொல்ல முடியாத வழக்கத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம்; வளர்க்கப் பட்டிருக்கிறோம்; கூச்சப் படுகிறோம். இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் இந்தச் சொற்களை இளம் அகவையிற் தெரிந்து கொண்டு விடுகிறோம். ஓ----வில் தொடங்கும் புணர்ச்சி வினைச்சொல் நம்மில் பலருக்கும் தெரிந்ததே. அந்தச் சொல்லின் இடக்கர் அடக்கலாய் ஒவ்வுதல் = பொருந்துதல், புணருதல் என்ற சொல்லைக் காட்ட முடியும். இதன் பெயர்ச்சொல் ஒவ்வதம்>ஓவதம். இதில் வகரம் பகரமாகி, பின் ஔபத்தியம் என்று ஆகித் தமிழ்மூலம் மறைந்து கிடக்கிறது. ஓ----ல் வினையின் வழியாக ஓ----தம் என்ற சொல் நேரடியாகப் புணர்ச்சியைக் குறிக்கும்.

[பாலியற் சொற்கள் இல்லாது எந்த மொழியும் கிடையாது. இதைச் சொல்ல வடமொழிக்குப் போக வேண்டிய தேவையில்லை. இருந்தாலும் பலரும் செய்கிறார்கள். நேரடியாகத் தமிழில் சொல்லக் கூச்சப் பட்டு, சுற்றி வளைத்து வடமொழியைப் பயன்படுத்துவது பலநேரம் நடக்கிறது.

காட்டாக, "ஆதி வராகன்" என்ற என் பேராசிரியர் சொல்லுவார்" "என்ன பெயர்றா இது? முதற் பன்றின்னு ஒரு பெயரைப் போய் எனக்குப் பெரியவுங்க வச்சுட்டாங்க." நாங்கள் சிரிப்போம். இருந்தாலும் உள்ளே இருக்கும் சூழ்க்குமம் பார்த்தீர்களோ? யாராவது முதற்பன்றி என்று தமிழில் பெயர் வைத்துக் கொள்ளுவார்களோ? அதை வடமொழி இருபிறப்பியில் மாற்றி "ஆதிவராகன்" என்று சொல்லும் போது பலரும் ஏற்கிறார்களே, அது ஏன்? பொதுவாய் இது ஓர் உளவியற் சிக்கல்.]

அன்புடன்,
இராம.கி.

Tuesday, May 13, 2008

ஔ - 2

8. அடுத்த சொல் ஔஷதம்>ஔடதம். இதையும் பார்த்த மாத்திரத்தில் பலரும் வடசொல் என்றே நினைத்துக் கொள்ளுகிறார்கள். இதுவும் ஓர் இருபிறப்பியே.

முன்னே சொன்னது போல், தமிழில் உய்தல் என்பது உயிர் வாழ்தலைக் குறிக்கும். உய்த்தல்/உய்வித்தல் என்பது உயிர் ஊட்டுதலைக் குறிக்கும். அந்த வகையில் உய்த்தம் = உயிர் கொடுக்கும் மருந்து ஆகும். இனி உய்த்தம்>உயத்தம்>உஷத்தம்>உஷதம்>ஔஷதம் என்ற திரிவில் மருந்து என்பதை வடமொழியிற் குறிக்கும். நாம் மீண்டும் இதைக் கடன் வாங்கி, (விஷயத்தை விடயம் ஆக்கியது போல) ஔஷதத்தை ஔடதம் என்போம். [அண்மைக் காலமாய், வலைப்பதிவுகளில் பலரும் விடயத்தைத் தவிர்த்து, விதத்தல் என்னும் தமிழ்வினையில் உருவான விதயத்தைப் புழங்குவது போல,] ஔடதத்திற்கு மாறாக, மருந்திற்கு இன்னொரு சொல்லாய் உய்த்தம் என்ற (நல்ல தமிழ்ச்) சொல்லைப் பயிலலாம். [மருந்து என்பது மரத்தில் இருந்து விதப்பாய்ப் பெற்ற பொருளை முதலிற் குறித்து பின்னால் பொதுமைப் பொருளைக் குறித்தது.]

உண்மையில் ஒவ்வோர் இருபிறப்பிச் சொல்லுக்குள்ளும் ஆழ்ந்து பார்த்தால், அழகு தமிழ்ச் சொற்களை அடையாளம் கண்டு, மீட்க முடியும்.

9. அடுத்த சொல்லான ஔடவம் என்பது இசைநூலில் வரும் ஒளடவ ராகத்தைக் குறிக்கும். இதைப் பற்றிய விளக்கம் நீண்டது. இருந்தாலும் இசை நுணுக்கம் கருதிப் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.

ஆர் ஓங்கலிலும் (=ஏறு வரிசையிலும்; ஓங்கல் = உயர்ச்சி, வரிசை. ஓங்கல்>ஓகல்>ஓகணம் என்பது வடமொழித் திரிவில் உருவான சொல்.), அவல் ஓங்கலிலும் (இறங்கு வரிசையிலும்) 5 சுரங்கள் மட்டுமே ஒலிக்கும் பண்ணை, தமிழர் இசையில் திறம் என்று அழைத்தனர். இந்தக் காலத்தில் அதை ஔடவ ராகம் என்று கர்நாடக இசையார் அழைக்கிறார்கள். காட்டாக 'முல்லைத் தீம்பாணி' என்று இளங்கோவடிகளாலும், 'சாதாரி' என்று அடியார்க்கு நல்லாராலும் அழைக்கப்பட்ட திறப்பண் இன்று மோகனம் (ச ரி2 க2 ப த2) என்று அழைக்கப் படுகிறது. இதே போல செந்துருத்தி என்று அன்று அழைக்கப் பட்ட ஐஞ்சுரப் பண் மத்யமாவதி ( ச ரி2 ம1 ப நி1) என்று இன்று அழைக்கப் படுகிறது.

தமிழிசையில் 12 அரைத் தானங்கள் உண்டு. [குரல், மென் துத்தம், வன் துத்தம், மென் கைக்கிளை, வன் கைக்கிளை, மெல் உழை, வல் உழை, இளி, மெல் விளரி, வல் விளரி, மென் தாரம், வன் தாரம்]. இதில் குரலையும் (ச), இளியையும் (ப) நிலையாய் வைத்துக் கொண்டு மற்ற 10 அரைச்சுரங்களில் இருந்து ஏதோ ஐந்து அரைச்சுரங்களை உகந்தெடுத்து வரிசையாய் அமைத்த பண்களைப் பெரும்பண்கள் என்று தமிழிசையில் குறிப்பார்கள். (இப்படி 7 சுரத் தானங்களை வைத்து அமைப்பதில் மொத்தம் 2^5 = 32 பெரும்பண்கள் ஏற்படும்.) இந்தப் பெரும்பண்ணை 'முற்றும் பூரித்த பண்' எனும் பொருளில் சம்பூர்ண ராகமாய்க் கர்நாடக இசையில் மொழிபெயர்ப்பர். [200/300 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒவ்வொரு தமிழிசைக் கருத்தும், சொல்லும், சங்கதம் வழி பெயர்க்கப் பட்டு, மூலம் சீரழிய, 'இசை என்பதே தமிழர்க்கு இல்லையோ?' எனும்படி ஆக்கி, கண்ணிற்கு முன்னேயே, ஒரு கண்கட்டு வித்தை ஆடப் பட்டது. ஓர் ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்த அடிகளும் அதை மாற்றித் தமிழிசையைத் தேட வைத்தார்கள்.]

இனி, ஏழு சுரங்களுக்கு மாறாக ஆறு சுரங்களே ஏறு வரிசையிலும், இறங்கு வரிசையிலும் அமைப்பது பண்ணியல் எனப் பட்டது. வடமொழியில் இதைச் சாடவம் என்றார்கள். இது சாட் + அவம் = ஏழின் குறை = அதாவது ஆறு. சாட் (= சாத்) என்பது போன்ற இந்தையிரோப்பியச் சொற்கள் எல்லாம் ஐந்து -இரண்டு என்று சேர்த்துச் சொல்லுமாப் போல செய்துவம் என்பதன் திரிவாகவே அமைந்திருக்கின்றன.

செய் என்பது கையைக் குறிக்கும் சொல். தெலுங்கில் அது இன்னமும் உண்டு. நாம் வினையைச் செய் என்று வைத்துக் கொண்டு கையைப் பெயர்ச்சொல்லாய் வைத்திருக்கிறோம். செய்/கை என்பது ஐந்தைக் குறிக்கும். ஐந்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லாய்க் கையை மட்டுமே நகர்ப்புறத் தமிழர்கள் அறிந்து கொள்ளுகிறோம். இன்னும் அதிகமாய்ச் சில சொற்கள் உண்டு.

காட்டாக, கைத்த(ல)ம் என்ற தமிழ்ச்சொல் வடமொழியில் ஹஸ்தம் என்று போய் அதை மீண்டும் திரும்பக் கடன் வாங்கி அத்தம் என்று சொல்லுவார் உண்டு. அதற்கும் ஐந்து என்ற பொருட்பாடு உண்டு. இனிச் சந்தையில், வாழையிலை வாங்கும் போது "அடுக்கு 5 ரூவாய், 10 ரூவாய்" என்று எங்கள் பக்கம் சொல்லுவார்கள். இப்படி ஓர் அடுக்கு என்று சொல்லும் போது, அதில் ஐந்து இலை இருக்கிறது என்று பொருள். இதே போல, காரைக்குடி, கும்பகோணம் பக்கம் ஓர் அடுக்குச் சட்டி என்று சொன்னால், ஒன்றிற்குள் ஒன்றாய் ஐந்து சட்டிகளைக் கொண்ட அடுக்கைக் குறிக்கும். இன்னும் சில தமிழ்நாட்டுப் பகுதிகளில் பூட்டு என்ற சொல் ஐந்து உருப்படிகளைக் குறிக்கும். பூட்டியது என்பது கையை இணைப்பது; பொருள் நீட்சியில் பூட்டு எனும் பெயர்ச்சொல் கையைக்/ஐந்தைக் குறிக்கும். இதே போல, மாட்டுச் சந்தையில் ஆளப்படும் "வீச்சு" என்ற சொல்லும் ஐந்தைக் குறிக்கும். பச்சை, கடுவாய், வீச்சு போன்ற சொற்கள் வெவ்வேறு உருவாய்த் தாள்களைக் குறிக்கும்.

கை, அத்தம், அடுக்கு, பூட்டு, வீச்சு என்பன எண்ணுதி (quantity) வகையில் குறிக்க, ஒரு பிடி என்ற சொல் முகத்தல் அளவையில் ஒரு கைப்பிடி அளவை முதலிற் குறித்து, பின்னால் பொருள் நீட்சியில் ஐந்து என்ற எண்ணையும் குறிக்கும். (ஒரு பிடி = ஒரு கை; எனவே ஐந்து). இந்தப் பிடியின் இன்னொரு தோற்றமான பிண்டி என்ற சொல் பரத நாட்டியத்தில் ஒரு கையாற் செய்யப்படும் பாவனைகளைக் குறிக்கும். பிண்டிக் கைப்பாவனைகளில் (பிண்டி ஹஸ்தங்கள்) கட்டைவிரல் ஒரு தொகுதியாகவும், மற்ற விரல்கள் இன்னொரு தொகுதியாகவும் வேலை செய்யும். பிண்டியில் விரல்கள் ஒன்றை ஒன்று வித விதமாய்த் தொடும், அல்லது பற்றும், அல்லது பிடிக்கும். இதே போல் இரண்டு கைகள் சேர்ந்து செய்யும் பாவனைகளைப் பிணையல் என்று சிலம்பு சொல்லும்.]

ஐந்தின் பல்வேறு சொற்களைப் பார்த்த நாம், இனித் துவம் என்ற சொல்லுக்கு வருவோம். ஈர்தல்/இரள்தல் என்ற வினை வெட்டுதல் என்ற பொருளைக் கொடுக்கும். இந்த வினையில் பிறந்த பெயர்ச்சொல் ஈர்/இரண்டு என்பதாகும். அதே போல வெட்டுதற் பொருளில் இருக்கும் இன்னொரு தமிழ் வினை துமித்தல். இதில் பிறந்த பெயர்ச்சொல் துமம் என்றழைக்கப் படும். துமம் என்பது மகர, வகரப் போலியில் துவம் என்றாகி, வடபுலத்திற் போய் இரண்டைக் குறித்து நிற்கும். (துமம் / tomy என்ற சொல் மேலை மொழிகளில் வெட்டுதல், ஈர்தல், இரண்டு ஆகிய பொருட்பாடுகளைக் குறிக்கும். a- tom = துமிக்க முடியாதது. அணு என்ற சொல் நெருங்கியது, சுருங்கியது, செறிவானது என்ற பொருளைத் தமிழில் குறிக்க, அல் துமம் = a tom என்பது துமிக்க முடியாதது என்று கிரேக்க மொழியில் குறிக்கும். துமித்தலில் விளைந்த சொற்களைக் கூறினால் இங்கு பெருகும். துமம், துவம், two போன்றவைக்குப் பின் இருக்கும் தமிழ் மூலம் நாம் ஆழ்ந்து உணர வேண்டிய ஒன்று.)

செய்யும் துவமும் சேர்ந்து செய்துவம்>செவ்துவ்>செவ்த்>சாத் என்று வடபுலத்தில் ஏழை உணர்த்தி நிலைகொள்ளும். இதே சொல் செவ்த்>செப்த்>sept என்று மற்ற மேலை மொழிகளிலும் நிலை கொள்ளும். எண்களின் சொற்பிறப்பை இன்னொரு முறையில் விரிவாகப் பார்ப்போம்.

இனி, குறையைக் குறிக்கும் அவம் என்ற சொல் பற்றி மேலே ஔ = நிலம் என்னும் பொருட்பாட்டைக் குறிக்கும் போது பார்த்தோம். சாட் அவம் = சாடவம் = ஏழின் குறை = எனவே, ஆறு.

அடுத்தது ஔடவம். மோனியர் வில்லியம்சு அகரமுதலி ஒடவம்>ஔடவம் என்றே சொற்பிறப்பைக் காட்டினாலும் ஒடவம் எப்படி வந்ததென்று குறிக்கவில்லை. இது ஐஞ்சுரப் பண்ணைக் குறிக்கும் சொல். ஔடவத்திற்கும் ஐந்திற்கும் அப்படி என்ன தொடர்பு?

தமிழில் தொள்ளாயிரம் என்பது ஆயிரத்தில் குறைந்தது. அதாவது அதற்கு முந்திய அலகில் ஒன்று (அதாவது நூறு என்னும் அலகில் ஒன்று) குறைந்தது. இதே போல தொள் நூறு என்பது நூற்றிற்கு முந்திய அலகில் ஒன்று (அதாவது, பத்து என்னும் அலகில் ஒன்று) குறைந்தது. இங்கே கவனிக்க வேண்டிய வினை தொள்ளுதல் = குறைதல். அதே போல ஒல்லுதல்/ஒல்குதல் என்பதும் குறைதலைக் குறிக்கும். [ஒல்லியாகிப் போனான் - பருமனிற் குறைந்து போனான்.] ஒல்கிய பத்து ஒன்பது. பொதுவாய் தொள்ளியது/ஒல்கியது என்னும் போது முந்திய அலகில் ஒன்று குறைந்தது என்றே பொருள். [ஆயிரத்திற்கு முந்திய அலகு நூறு. நூற்றிற்கு முந்திய அலகு பத்து. பத்திற்கு முந்திய அலகு ஒன்று.] தொள்ளாயிரம், தொண்ணூறு, ஒன்பது போன்றவற்றின் வெளிப்பாட்டை இப்படியே புரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணுப் பெயர் வரிசையைச் சொல்லும் போது ஒரு பெரிய அலகில் இருந்து இரண்டு குறு அலகுகளைக் குறைக்கும் பழக்கம் தமிழில் இல்லை; ஆனால் தெலுங்கிலும் அதற்கு வடக்கிலும் உண்டு. காட்டாகத் தெலுங்கில், தொம்மிதி = பத்தில் ஒன்று குறைச்சல் = ஒன்பது. எனிமிதி = பத்தில் இரண்டு குறைச்சல் = எட்டு. இப்படி இரண்டு குறைத்தல் என்ற கருத்து வடமொழிப் பயன்பாட்டில் ஒல் துவம் > ஒள் துவம் >*ஒட்டுவம்>ஒடுவம்>ஒடவம் என்றாகும். [ஒல்லுதல் >ஒள்ளுதல் >ஒடுங்குதல் என்ற விரிவில் குறைதல் பொருள் தொடருவதை நோக்கலாம்.] ஒடவம் என்ற சொல் மேலும் திரிந்து ஔடவம் ஆவது வடமொழியில் உள்ள இயல்பான திரிவே. மொத்தத்தில் இரண்டின் குறைச்சல் என்ற பொருளோடு 'உள்ளே ஒரு தமிழ்வேர்; வெளியே வடமொழித் தோற்றம்' நம்மை மருட்டுகிறது. ஏழில் இருந்து இரண்டின் குறைச்சலாய், ஔடவம் பிறந்த கதை இது தான்.

கடைசியாக உள்ளது நந்நான்கு சுரங்களாய்ச் சேர்த்து அமைக்கும் சதுர்த்தம். இதைத் தமிழில் திறத்திறம் என்று சொல்லுவார்கள். சதுர்த்தம் என்ற எண்ணுப்பெயர் எழுந்த வகையை வேறொரு பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

ஔ - 1

வலைப்பதிவர் இராதாகிருஷ்ணன் முன்பு பிப்ரவரி 23, 2005 - ல் ஓர் இடுகை எழுதியிருந்தார். அதில்......
---------------------------------
"அம்மா இங்கே வா வா..." என்ற அகரவரிசை எழுத்துகள் வரும் பாடலைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்த போது பாடலில் இருந்த 'ஒள' வரி தடம் புரண்டு, "ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திச்சூடி வரியை வாய் உளறிவிட்டது. சமாளித்துக் கொண்டு ஒளவியம் என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்தேன்; அகராதிதான் கைகொடுத்தது. ஒள வரிசையில் வரும் வார்த்தைகள் கொஞ்சம்தான் எனினும் சில சுவையாக உள்ளன.

ஒள - அநந்தன் என்னும் பாம்பு; நிலம்; விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை இவற்றைக் காட்டும் ஓர் உபசருக்கம்; கடிதல்; ஒளவென்னேவல்.
ஒளகம் - இடைப்பாட்டு.
ஒளகாரம் - ஒள என்னும் எழுத்து.
ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஒளசரம் - கோடாங்கல்.
ஒளசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று. (அதென்ன உப புராணம்?)
ஒளசித்தியம் - தகுதி.
ஒளஷதம், ஒளடதம் - மருந்து.
ஒளடவம் - ஒளடவராகம்.
ஒளடனம் - மிளகு ரசம்.
ஒளதசியம் - பால், பழம், அமிழ்து; கீரம்.
ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம்.
ஒளதாரியம் - உதாரம்; மிகுகொடை; உதாரகுணம்; பெருந்தன்மை.
ஒளபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஒளபசானம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஒளரசன், ஒளரதன் - உரிமை மகன்; கணவனுக்குப் பிறந்த மகன்.
ஒளரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன்.
ஒளலியா - பக்தர்கள்.
ஒளவித்தல் - பொறாமைப்படுதல்.
ஒளவியம் - பொறாமை; தீவினை.
ஒளவை - தவப்பெண்; தாய்; ஆரியாங்கனை; ஒளவையார்.
ஒளவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஒளனம் - மிளகுரசம்; காயரசம்; மிளகுநீர்.

நன்றி: கழகத் தமிழ் அகராதி

இராதாகிருஷ்ணன்
-------------------------------

என்று எழுதி இருந்தார். பதிவர் குமரனும் ஔவியம் என்ற இதே சொல்லைப் பற்றி 2006ல் 'சொல் ஒரு சொல்' எனும் தம் பதிவில் ஓர் இடுகையைச் போட்டிருந்தார்.

அண்மையிற் திரு.குமரன் தன்னுடைய 'கூடல்' பதிவில் 'ஔவியம்' பற்றி முன்னாள் நடந்த உரையாடல்களைத் தொகுத்து, ஒரு மீள்பதிவு செய்த பின்னர், ஔகாரச் சொற்கள் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து போனேன்.

ஔகாரம் பற்றிய தெளிவு நம்மில் பலர்க்கும் இல்லாததால், சொன்மூலம் தெரியாது தடுமாறுகிறோம். ஔகாரத்தில் தொடங்குவதாய் அகரமுதலிகளிற் காட்டப் படும் சொற்கள் பலவும், உகர, ஒகரத் தமிழ்ச் சொற்களின் வடமொழி மரூஉவாகவோ, வளர்ச்சியாகவோ (அதாவது உள்ளுக்குள் தமிழ் வேரும், வெளிக்குள் வடமொழி உருவும், பலுக்குமாய், இரு பிறப்பிகளாகவோ), அல்லது "அவ்" வில் தொடங்கும் தமிழ்ச்சொற்களின் போலியாகவோ, அமைந்து கிடக்கின்றன.

இங்கே உயிரெழுத்தில் தொடங்கும் சில சொற்களுக்கு மட்டுமே சொற்பிறப்புக் காட்டுகிறேன். [உயிர்மெய் ஔகாரங்களை இதே போல அலசலாம் எனினும், பதிவின் நீளம் கருதி அவற்றைத் தவிர்க்கிறேன்.]

சொன்மூலம் தேடும் இந்த நேரத்தில், கி.பி.500/600க்கு முற்பட்ட கல்வெட்டுக்களில் பழந் தமிழியின் ஔகார எழுத்தைக் காணுவதில்லை என்பதையும் (இதே போன்ற நிலை ஐகாரத்திற்கும் உண்டு), "பிற்காலத்தில் தான் அது வளர்ச்சி பெற்றதோ?" என்ற ஐயம் தமிழறிஞரிடம் இருப்பதையும், தொல்காப்பியர் ஔகாரத்தை ஒப்பிய போதிலும், "அகர உகரம் ஔகாரம் ஆகும்" என்று அந்த ஈரொலியின் (diphthong) தோற்றத்தைச் சொன்னதையும்,

"அம்முன் இகரம் யகரம் என்றிவை
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அவ்வொடு
உவ்வும் வவ்வும் ஔவோர் அன்ன"

என்று நன்னூலார் (எழுத்தியல் 125) ஐகார, ஔகாரப் போலி பற்றிச் சொன்னதையும் இங்கு கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன். ஔகாரம் தவிர்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அந்தச் சொற்களின் மூலம் வேறெங்கோ இருக்கிறது என்ற பார்வையை மட்டுமே இங்கு வைக்கிறேன். [அண்மையில் அய் என்று எழுதி ஐகாரம் போக்குவது பற்றி நண்பர் நாக. இளங்கோவன் தன் பதிவில் சொல்லியிருக்கிறார். ஐகாரச் சொற்களிலும் பல சொற்களின் சொற்பிறப்பு வேறெங்கோ இகரத்திலும், எகரத்திலும் இருக்கிறது என்பதை இந்த இடத்தில் சொல்ல விழைகிறேன். இன்றைய நிலையில், ஐகார, ஔகாரச் சொற்கள் வடமொழித் தொடர்பால் தமிழில் கூடிக் காட்சியளிக்கின்றன என்று நன்கு உணரமுடியும். அதே நேரத்தில் ஐகார, ஔகாரங்களின் தமிழ்மையை நான் மறுக்கவில்லை; ஒதுக்கச் சொல்லவும் இல்லை.]

1. முதலில் ஔ எனும் ஓரெழுத்து ஒருமொழிக்கான பொருட்பாடுகளைப் பார்ப்போம்.

1a. அநந்தன் என்னும் பாம்பைக் குறிக்கும் பெயராக ஔ பயன்படுவதை அகரமுதலிகள் குறிக்கின்றன. இத்தகைய பொருட்பாடு பாம்பின் தோற்றத்தையும் ஔ -வின் இன்றைய உருவையும் ஒப்பிட்டு எழுந்திருக்கலாம். ஔகார எழுத்து கி.பி.500/600க்கு முன்னால் காணப்படாததாலும், அதன் இன்றைய உருவம் கி.பி.1400க்கு முன்னால் இல்லாததாலும், பாம்பு குறித்த பொருட்பாடு வெகுகாலம் கழித்தே, ஒரு 500/600 ஆண்டுகளுக்கு முன் தான் தமிழில் ஏற்பட்டிருக்க இயலும்.

1b. அடுத்தது நிலம் என்னும் பொருள். அவ்வையாரின் "நாடா கொன்றோ காடா கொன்றோ" என்ற புறநானூற்று 187 ஆம் பாடலின் இரண்டாம் வரியில் "அவலா கொன்றோ, மிசையாக கொன்றோ" என்ற ஒரு வரியில் அவல் என்பது பள்ளமான இடத்தையே குறிக்கிறது. பொதுவாய் அம், அல், அன் போன்ற ஈறுகளைத் தவிர்த்தே தமிழ்ச் சொற்கள் வடபுலப் பயன்பாட்டில் திரிகின்றன. தவிர 'அவைதல்' என்பது தமிழில் தட்டையாதலைக் குறிக்கும். குற்றப்பட்ட அரிசி - அவையப் பட்ட அரிசி - அவல் என்று சொல்லப் படுவதில்லையா? இது போக, அவ எனும் குறுஞ்சொல் ஒரு முன்னொட்டாகத் தமிழிலும் வடமொழியிலும் பயிலும்போது, தாழ்ந்த நிலையையும், குறையாகிப் போனதையும், கேடாகிப் போனதையும் குறிக்கும். இந்தச் சிந்தனையில் ஓர்ந்து பார்த்தால், நிலம் என்ற பொருட்பாடு அவைத்தலில் இருந்தே எழ முடியும்.

1c. மூன்றாவது பொருளாய், ஔவென்னும் ஓரெழுத்தொரு மொழியை, விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல் ஆகிய பொருட்பாடுகளைக் குறிக்கும் ஒரு வடமொழி முன்னொட்டு (உப சருக்கம்) என்று அகரமுதலிகள் குறிக்கும். ஓ என்னும் ஓரெழுத்தொரு மொழி தமிழில் முன்னொட்டாய் வராமல் இதே பொருட்பாடுகளைத் தனித்து நின்று உணர்த்தும். வடமொழியிலோ, அதே பொருட்பாடுகளில் ஔகாரமாய்த் திரிந்து முன்னொட்டாகப் பயன்படுகிறது.

2. ஒளகம் என்ற சொல் இடைப்பாட்டையும், ஔகி என்பது இடைப்பாட்டுக் கூத்தியையும், குறிப்பதாக அகரமுதலிகளில் அறிகிறோம். இந்தச் சொல்லும் கூடப் பொருட்பாட்டு வகையில் ஓர் இருபிறப்பியே. இதனுள்ளே, வேராய் அடங்கி இருப்பது சுருங்கற் பொருளில் வரும் உல்குதல் ஆகும். உல்கு>உள்கு>உக்கு>உக்கம் என்பது தமிழில் இடையைக் குறிக்கும் ஒரு பெயர்ச்சொல். உக்கம்>உகம்>ஔகம் என்ற திரிவில், வடமொழிப் பலுக்கும் உருவமும் ஏற்பட்டு, இடைப்பாட்டு என்ற புதுப்பொருளைக் கொடுக்கிறது. இடை என்ற பொருள் தமிழில் இருக்க, இடைப்பாட்டு என்பது வடமொழியில் எழுந்த ஒரு புதுப் புடைப்பெயர்ச்சியாகும். [இப்படித்தான், ஒவ்வொரு மொழியும் வேற்று மொழிச் சொல்லைக் கடன்வாங்கிக் கையாளும் போது அதே பொருளோடோ , அல்லது சிறு நீட்சியில் புதுப்பொருள் பெற்றோ, திரிவு காட்டும்.]

இதே போல, உல்கு>ஒல்கு என்னும் போக்கில் அசைதல் என்ற கூத்துப் பொருளையும் கொடுத்து, ஒல்குபவள் ஒல்கி>ஒக்கி>ஔகி என்று ஆவாள். ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி என்ற பொருள் வந்த கதையும் இப்படித்தான்.

இவ்வளவு ஆழம் தமிழ்வேரினுள் இருந்தாலும், இடைக்கால மணிப்பவளப் போக்கில் ஆட்பட்ட அடியார்க்கு நல்லார், சிலம்பின் 14:156க்குக் கொடுத்த உரையில் "தலைப்பாட்டு ஆவது உகம்; இடைப்பாட்டாவது ஔகம்" என்றே உரைப்பார்.

3. அடுத்த சொல் ஒளசரம். இதைக் கோடாங்கல் என்று அகரமுதலிகள் குறிக்கின்றன. உயரம்>உசரம்>ஔசரம்; [கோடு என்பதும் மலையுச்சியைக் குறிக்கும்.] உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் கோடாங்கல். இதை உச்சக்கல் என்றும் நல்ல தமிழில் சொல்லலாம். [ஔசரம் ஒதுக்கலாமே?]

4. அடுத்த சொல் ஔசீரம். இது இலாமிச்சைவேர் (தென்பாண்டி நாட்டில் சொல்லும் பெயர்) அல்லது வெட்டிவேரைக் குறிக்கும். கோடைகாலத்தில் சாளரங்களுக்கு வெட்டிவேர்த் தட்டி கட்டி, அதில் நீரைத் தெளித்து, வெக்கை தணித்துக் கொள்கிறோம் இல்லையா? .அந்த வெட்டிவேரைப் பரப்பி இருக்கையாகவோ, ஆசனத் தட்டியாகவோ, படுக்கையாகவோ போட்டுக் கொள்வதும் உண்டு. தென்னிந்தியாவின் இயற்கைப் புல்லான வெட்டிவேரின் புதலியற் பெயர் Coeus Vettiveroides. இந்தக் கோரைப்புல்லைப் பிடுங்கிப் மேலே இருக்கும் தழையையும், கீழே இருக்கும் வேரையும் வெட்டிவிட்டு நடுவிலுள்ள துண்டை மீண்டும் நிலத்தில் நட்டுப் பயிரிடுவதால், இது வெட்டிவேர் எனப் பெயர் வழங்கப் பட்டது.

இதற்கு ஔசீரம் என்ற பெயர் ஏற்பட்டது கொஞ்சம் வியப்பானது. முறிதலைக் குறிக்கும் இன்னொரு தமிழ்வினை ஒசிதல் ஆகும். இதே சொல் பிறவினையாய் வரும் பொழுது, ஒசித்தல் = முறித்தல், வெட்டுதல் என்ற பொருளைக் கொடுக்கும். வெட்டிவேர் ஒசிவேர்>ஒசிவேரம்>ஒசீரம்>ஔசீரம் என்று இருபிறப்பி ஆகி, வடமொழியோ என நம்மை மருட்டுகிறது. பேசாமல் ஒசி வேர் என்றே நல்ல தமிழில் சொல்லிவிட்டுப் போகலாம். தமிழாவது பிழைக்கும்.

ஔசீரத்திற்கு இன்னொரு பொருளும் கவரி மயிரை வைத்து உண்டு. இமையமலைச்சாரலில் இருக்கும் மாந்தர் தம் குளிரைப் போக்கக் கம்பளிப் போர்வை செய்ய வேண்டி, யாக் எருமையின் மயிரை ஒசித்து (பிரித்து) எடுப்பார்கள்; அந்த மயிர் ஒசி + ஓரி = ஒசியோரி>ஒசீரி என்று சொல்லப்படும். ஓரி என்பது மயிர். ஒசீரிப் பொருளான அந்த மயிர் ஒசீரியம்>ஔசீரியம் என்ற திரிவில் வடநாட்டில் வழங்குகிறது. யாக் எருமை தான் கவரி மான் என்று தமிழில் சொல்லப் படுகிறது. மயிர் போக்கிய கவரி மான் உயிர் வாழாது என்பதால் அதன் உயிர் மயிரில் இருக்கிறதோ என்ற குறைப்புரிதல் அந்தக் காலக் குமுகாயத்தில் இருந்ததால் தான்,

"மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்"

என்ற திருக்குறள் எழுந்தது.

5. அடுத்த சொல் ஒளசனம். இதற்கு உப புராணம் என்ற பொருளுண்டு. 'பதினெட்டனுள் ஒன்று' என்பது அகரமுதலிகள் சொல்லுவது. பதினெட்டு உபபுராணங்களின் பெயரை நிகண்டுகளிற் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 'அதென்ன உபம், புராணம்?' என்று கேட்டால், "உள்ளே இருப்பது, உள்விக் கிடப்பது, சேர்ந்து கிடப்பது, உவம்" என்று சொல்ல வேண்டியிருக்கும். உள்வம்>உவ்வம்>உவம் என்ற திரிவோடு, வகர, பகரப் போலியில் உவம்>உபம் என்று ஆகும். இதே போல உள்ந்து கிடப்பது உடம்>உடன் என்று ஆகும். உடம்பு, உடன் போன்ற சொற்கள் தமிழென்றால், அப்புறம் உவம் என்பதும் தமிழ் தான்; ஆனாலும், பலர், உபம் என்ற பலுக்கலில் மயங்கி, அதை வட சொல் என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். இதே போலப் புராணம் என்ற சொல்லும் பழனம்>பழானம்>பராணம்>புராணம் என்ற திரிவே. புராணத்தின் முன்னைய தமிழ்ச்சொல் பழனமே. (தொன்மம் என்ற சொல்லும் பழனத்திற்கு மாற்றாய்ப் பயிலப்படுகிறது.) டிரங்குப் பெட்டி மாதிரி பழம்புராணம் ஓர் இரட்டைச் சொல். வெறுமே பழனமே அமையும். பெரும் பழனங்களுக்குத் துணை வரும் பழனங்கள் உவப் பழனங்கள் ஆகும்.

இனி, உவம்>உவயம்>உவசம் என்ற வளர்ச்சியில் உவச புராணம் என்ற சொல்லாட்சி எழும். பின் அதைத் தொகுத்து உவசனம் என்று வடமொழியர் ஆக்கிக் கொள்ளுவர். உள்ளே உவம் எனும் தமிழ் வேர்; வெளியே ஒரு வடமொழித் தோற்றம்.

6. அடுத்தது ஔசித்யம். உசிதம் என்ற இருபிறப்பியின் அடுத்த திரிவு ஔசித்யம். உ எனும் தமிழ்ச் சுட்டு உயர்ச்சிப் பொருளில் உயத்தம்>உசத்தம் என்ற திரிவில் தகுதி, மேன்மை என்ற பொருளைக் கொடுக்கும். உகரச் சுட்டு, உயர்ச்சிப் பொருளில், தமிழில் பல சொற்கள் உண்டு. உகரம் ஒகரமாய் மாறியும் அதே பொருளைக் கொடுக்கும். (உயத்தம் என்பதன் மீநிலை வளர்ச்சியான உயர்த்தம் என்ற சொல்லும் தமிழ் தானே? "அவர் ரொம்ப உசந்தவருங்க - ஒசந்தவருங்க".) உசத்தம் என்ற வழக்குச் சொல்லின் ஊடே ஓர் இகரவொலி சேர்ந்து, உசித்தம்>ஔசித்யம் என்று திரிந்து, தகுதி என்ற பொருளை வடமொழியிற் கொடுக்கும். ஒளசித்யம் - தகுதி. நல்ல தமிழில் இதை உயத்தம் என்றே சொல்லலாம். (இப்படியெல்லாம் பேசுதற்கு ஓர் உயத்தம் வேண்டாமா? இவரெல்லாம் இதைப் பேசுவதா? ) உசிதம் என்று கொச்சையாய்ச் சொல்ல வேண்டியது இல்லை.

7. அடுத்த சொல் ஔசீவனம். உவம் என்ற முன்னொட்டைப் பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். உய்யித்தல்/உய்வித்தல் என்னும் வினைச்சொல்லிற்கு வாழுதல் என்றே பொருள் உண்டு. அன்றாடப் பேச்சில் உயிர் என்பது உசிர் ஆவது போல உய்வித்தல் என்பது உசுவித்தல் என்றும் சொல்லப் பட்டும். "என்னடா, உசு உசுன்னு இழுத்துக்கிட்டே ஓடியார்றே. கொஞ்சம் நின்னு மூச்சு விட்டு அப்புறம் சொல்லு". உசுவித்தல்>சீவித்தல் என்ற திரிவில் வடபுலத்தில் மூசுதலைக் குறித்துப் பயன்படும். சீவிதம் சீவனம் போன்ற சொற்கள் உய்யித்தம்/ உய்வனம் போன்றவற்றைக் குறிக்கும் வடபுலத்துச் சொற்கள். உய்வனத்திற்கு உவமாய் இருப்பது உவ உய்வனம். வடமொழியில் இது உப ஜீவனம் ஆகும்; support, livelihood என்ற பொருட்பாடுகளை உணர்த்தும்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, April 24, 2008

பாவேந்தர் நவின்ற ஈழத்துக் கொள்கைகள்

பாவேந்தரை நினைவுகூர்வது தமிழ்நாட்டுத் தமிழரிடையே கூடச் சிறிது சிறிதாய்க் குறைந்து வருங் காலத்தில், ஈழத் தமிழர் (ஒருசிலரைத் தவிரப்) பெரும்பாலோரிடம் பாவேந்தர் தாக்கம் இல்லாது போவது வியப்பொன்றும் இல்லை. அவர்கள் பாரதி பற்றியாவது ஒருசில அறிந்திருக்கிறார்கள்; ஆனால் பாரதிதாசன் பற்றிய சிந்தனை அவரிடம் குறைந்தே இருக்கிறது. பாவேந்தர் ஏதோ தமிழ்நாட்டிற்கு மட்டுமே சொந்தமானவர் என்று எண்ணும் போக்கு, புலம்பெயர்ந்தவரிடம் பெரிதும் இருக்கிறது.

தமிழின மறுமலர்ச்சிக்கு பாரதிதாசன் என்றும் அடிப்படையானவர். அவர் கருத்துக்கள் ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டியவை. தெளிவான, சிந்தனை மிகுந்த, ஈழம் பற்றிய, அவரின் அரிய பாடல் இலங்கைத் 'தினகரன்' சிறப்பு மலரில் 11/7/1959 இல் வெளிவந்தது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்தப் பாடல் பாரதி தாசன் குயிற் சுவடி 10ல், (அக்டோ பர் 1964) பக்கம் 10 இல் தொகுக்கப் பட்டிருக்கிறது. நான் இதே பாடலைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையம் வெளியிட்ட "பாவேந்தர் பாரதிதாசனின் பழம் புதுப்பாடல்கள்" என்ற தொகுப்பில் (முனைவர் இரா. இளவரசு 2005 ஆம் ஆண்டுப் பதிப்பு) கண்டேன். இனித் தங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

வெல்க தமிழ், வெல்க தமிழர்!

இலங்கைத் தமிழர் துலங்க எண்ணினால்
அவர்கள் ஒற்றுமை அடைய வேண்டும்;
வேற்றுமை விளைக்கும் ஆற்றல் எவற்றையும்
கான்றே உமிழ்தல் வேண்டும்; கழிவடைச்
சாதி சமயம் என்னும் எவற்றையும்
மதித்தல் கூடாது, மறப்பது நன்று;
தமிழர் நலத்தைத் தாக்கும் கட்சிகள்
எவற்றினும் எவரும் சேர்தல் சரியன்று;
தமிழர் அனைவரும் கூடித் தக்கதோர்
கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்;
தாய்மொழி யான தமிழ்மொழி வாழ்ந்தால்
தமிழர் வாழ்வர்; தமிழ்மொழி வீழ்ந்தால்
தமிழர் வீழ்வர்; தமிழ்தமி ழர்க்குயிர்;
தமிழன் னைக்கொரு தாழ்வு நேர
விடுதலின் உயிரை விடுதல் தக்கது;
சிங்களர்க் குள்ள இலங்கையின் உரிமை
செந்தமி ழர்க்கும் உண்டு! திருமிகு
சட்ட மன்றிலும் பைந்தமி ழர்க்கு
நூற்றுக் கைம்பது விழுக்காடு நோக்கிப்
படிமை ஒதுக்கப் படுதல் வேண்டும்!
செந்தமிழ் மக்கள் சிறுபான்மை யோரெனச்
சிங்களர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்
தமிழர் உரிமையைத் தலைக விழ்க்க
எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்
எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்;
மானங் காப்பதில் தமிழ மக்கள்
சாதல் நேரினும் தாழக் கூடாது;
இவைகள் இலங்கைத் தமிழர் கொள்கைகள்!
யாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க!
வெல்க இலங்கைத் தமிழர்!
வெல்க தமிழே! மேவுக புகழே!

Wednesday, April 23, 2008

இருவேறு விடுதலை ஆசைகள்

கீழே வரும் இரு பாட்டுக்களும் தந்தை தன்மகற்குக் கூறியதாய் வரும் சந்தப் பாட்டுக்கள். ஒன்று திருத்தணிகை முருகன் மீது அருணகிரியார் பாடிய 258 ஆம் திருப்புகழ். "மகனே! பெருணவத்தின் பொருளை எனக்குச் சொல்" என்ற சிவன் கூற்றை நினைவுறுத்தி, பிறப்பிலிருந்து விடுபடும் தன் ஆசையைச் சொல்லி "உன்னைத் தொழுகாது இருப்பேனோ" என்று அருணகிரியார் கேள்விகளாய்க் கொட்டுவார். இது இறைப்பத்தியின் வழி எழும் விடுதலை ஆசை!

தனதன தான தனதன தான
தனதன தான தன தானா

எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலாயோ?
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் பவமாற!
உனைப்பல நாளும் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங்(கு) உளிமேவி,
உணர்த்திய போதந் தனைப்பிரி யாது(ஒ)ண்
பொலச்சர ணானுந் தொழுவேனோ?
வினைத்திற மோடு(அ)ன் று(எ)திர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் றவன்"நீயே
விளப்பென மேல்"என் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் புகல்வோனே!
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் முருகோனே!
தினைப்புனம் மேவும் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் பெருமாளே!

இன்னொரு சந்தப்பாட்டும் விடுதலை ஆசையையைத் தான் உணர்த்துகிறது. ஆனால் தமிழர் தரணியில் உயர்ந்து வாழுதற்கான விடுதலை ஆசை. இப்படி ஒரு பாடலைப் பாவேந்தர் மட்டுமே பாட முடியும். தனித்தமிழ் வண்ணம் என்றும் அவர் கவிதைகளில் ("பாரதிதாசன் பாடல்கள்" என்று முனைவர் தொ.பரமசிவன் தொகுத்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1993 பதிப்பில் 489-490 ஆம் பக்கங்களில் இருக்கும்) இந்தப் பாடல் குறிப்பிடப் படுகிறது.

"எளியவர்க்கு உதவியாய் இருப்பாயோ? பிறர்நலம் நாடுகிறாய் என்று கேட்டு நான் மகிழேனோ? எங்கும் தமிழ் என்றாக்க உழையாயோ? தமிழ்நாடு செறிந்து விளங்குகிறது என்று காட்ட என்னை அழையாயோ? 'தமிழ் நம் உயிர்' என்று எல்லோரும் உணர வழி செய்யாயோ? தமிழ்நாடு விடுதலை பெற ஆசை பெருகாதோ?" என்ற சிறிய வினாக்கள்; எளிய கருத்துக்கள்.

தமிழிசை, தமிழிசை என்று பலவிடத்தும் தாகம் கொள்கிறோம்; "பாட்டெங்கே இருக்கிறது?" என்று மறுமொழி எழுகிறது. தமிழிசைப் பாட்டுக்கள், வண்ணமாய்ச் சந்தமாய், வெள்ளமாய்க் கிடக்கிறது, அது பத்திப் பாட்டாக மட்டுமே இருக்க வேண்டுமா, என்ன? பாவேந்தர் பாட்டாக இருக்கவொண்ணாதோ? என்ன சொல்கிறீர்கள்? யாராவது இந்தப் பாட்டை மெட்டமைத்துப் பாடுவீர்களா?

அன்புடன்,
இராம.கி.

---------------------------

விடுதலை ஆசை
(தனித்தமிழ் வண்ணம்)

தனதன தான தனதன தான
தனதன தான தன தானா

கருவிழி ஓடி உலகொடு பேசி
எனதிடம் மீளும் அழகோனே
கழைநிகர் காதல் உழவினில் ஆன
கதிர்மணி யே,என் இளையோய் நீ
பெரியவ னாகி எளியவர் வாழ்வு
பெருகிடு மாறு புரியாயோ?
பிறர்நலம் நாடி ஒழுகிணை யாக
இருசெவி வீழ மகிழேனோ?
தெரிவன யாவும் உயர்தமி ழாக
வருவது கோரி உழையாயோ?
செறிதமிழ் நாடு திகழ்வது பாரீர்
எனஎனை நீயும் அழையாயோ?
ஒருதமி ழேநம் உயிரென யாரும்
உணவுறு மாறு புரியாயோ?
உயர்தமிழ் நாடு விடுதலை வாழ்வு
பெறஉன தாசை பெருகாதோ?

Tuesday, April 22, 2008

பாவேந்தர் பார்வையில் கல்வி, மதங்கள், மொழிகள்

கீழே வரும் பாட்டு 1962 இந்திய-சீனப் போரின் போது, 'கல்வி, மதங்கள், மொழிகள்' பற்றிய பார்வையாகப் பாவேந்தர் பாடியது. இந்திய இறையாண்மையை நிலைக்க வைப்பதில், இன்றைக்கும் கூட இந்தக் கருத்துக்கள் இன்றியமையாதவை. "இந்தியா ஒரு பல்தேசிய நாடு" என்ற கொள்கையைத் தெளிவாய் உணர்த்தும் தன் பாடலின் ஊடே, "ஆங்கிலத் தாக்கம் இனியும் இருக்கக் கூடாது" என்பதையும் பாவேந்தர் தெளிவுற உரைக்கிறார். "உள்ளதும் போச்சுரா, தொள்ளைக் காதா" என்றபடி, அறுபதுகளில் நாம் பெற்ற மொழியுணர்வை முழுதாகத் தொலைத்து, தவறான வழியில் கழகங்கள் பயணம் செய்ததால், மாநிலம் எங்கும் மடிக்குழைக் கல்வி பெருகி, ஆங்கிலத் தாக்கம் கூடி, தமிங்கிலம் பரவி, தமிழ் மொழி, பண்பாடு போன்றவை குலையும் இந்த நாளில், குறிப்பாகப் பாவேந்தர் நினைவேந்தல் வாரத்தில், இந்தப் பாவை மீண்டும் படித்து, பாவேந்தர் கருத்துக்களை ஓர்வது நல்லது.

அன்புடன்,
இராம.கி.

நாட்டியல் நாட்டுவோம்

("பாரதிதாசன் பாடல்கள்" என்று முனைவர் தொ.பரமசிவன் தொகுத்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1993 பதிப்பில் 490-494 ஆம் பக்கங்களில் இருக்கும் பாட்டு.)

"தென்பால் குமரி வடபால் இமயம்
கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்த
பெருநி லத்தின் பெயரென்ன, அத்தான்?"

"நாவலந் தீவென நவிலுவார், கண்ணே!
தீவின் நடுவில் நாவல் மரங்கள்
இருந்ததால் அப்பெயர் இட்டனர் முன்னோர்;
செவ்விதழ் மாணிக்கம் சிந்தும் செல்வியே!
எவ்வினத் தார்க்கும் இப்பெயர் இனிக்கும்;
நாவல் நறுங்கனி யாருக்குக் கசக்கும்?

கல்வி:

பழையநம் தீவில் மொழி,இனம் பலஉள;
மொழியி னின்று கல்வி முளைத்தது;
கல்விஇந் நாட்டில் கணக்கா யர்களைக்
கலைஞரைக் கவிஞரைத் தலைவரைப் புலவரை
விஞ்ஞா னிகளை விளைத்தது ஆயினும்,

கற்றவர், கல்லா ரிடத்தும் கல்வியைப்
பரப்ப முயல வில்லை; பாழிருள்
விட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர்;
'கற்ற வர்சிலர் கல்லா தவர்பலர்
என்னும் இழிவு நாட்டில் இருக்கலாம்'
என்பது கற்றவர் எண்ணம் போலும்!
எல்லா ரும்இந்த நாட்டில் கற்றவர்
எனும்நிலை இயற்றுதல் கற்றவர் பொறுப்பே!"

"என்ன அத்தான், நீங்கள் இப்படிக்
கற்றா ரையெல்லாம் கடிந்துகொள் கின்றீர்?"

"கற்றா ரைத் திட்ட வில்லை, கல்வி
அற்றார்க்கு இரக்கம் காட்டினேன், அன்பே!
கல்வி இருட்டிற்குக் கலங்கரை விளக்கு;
யாவர்க்கும் வாக்குரிமை இருக்குமிந் நாட்டில்
யாவர்க்குங் கல்வி இருக்க வேண்டும்;

'கண்ணிலார் எண்ணிலார்' என்பது கண்டும்
கண்ணுளார் கண்ணிலார் போல இருப்பதா?
கல்லா வறியர்க்குக் கைப்பொருள் கல்வியே!
இல்லை என்பது கல்வியில் லாமையே!
உடையவர் என்பவர் கல்வி உடையரே!

நாட்டின் மக்கள் நாட்டின் உறுப்பினர்;
உறுப்பினர் நிறுவனம் உடையவர் ஆவார்;
சிலர்ப டித்தவர், பலர்ப டியாதவர்,
என்ற வேற்றுமை ஏன்வர வேண்டும்?
ஆட்சி வேலை அதிகம் இருக்கையில்,
'நாட்டிற் கட்டாயக் கல்வி நாளைக்கு
ஆகட்டும்' என்பவர் 'மக்கள் இன்று
சாகட்டும்' என்று சாற்றுகின் றாரே!
எந்நாளு மேநான் எண்ணுவது இதுதான்;
'இந்த நாட்டில் யாவரும் படித்தவர்
என்னும் நன்னிலை ஏற்படுவ தெந்நாள்?' "

மதங்கள்:

"நாவலந் தீவில் மதங்கள் நனிபல!
கடவுளே வந்து மதம்பல கழறினார்;
கடவுளின் தூதரும் கழறினார் மதங்கள்;
கடவுளிற் கொஞ்சம், மனிதரிற் கொஞ்சம்,
கலந்த ஒருவரும் ஒருமதம் கழறினார்;
கடவுளை நேரிற் கண்டவர் சொன்னார்;
கேள்விப் பட்டவ ரும்கி ளத்தினார்;

ஒருவர் "கடவுள் ஒருவர்" என்பார்;
ஒருவர் "கடவுள் மூவர்" என்பார்;
ஒருவர் "கடவுள் இல்லை"யென் றுரைப்பார்;
நான்பெற்ற பேறு யார்பெற் றார்கள்?
ஒருமதம் தோன்றி அதன்கிளை ஒன்பதாய்த்
திருவருள் புரிந்த பெரியோ ரும்பலர்;
மதங்களைப் பலவாய் வகுக்க, அவற்றில்
விதம்பல சேர்த்த வித்தக ரும்பலர்;

நாவலந் தீவில் மதங்கள் அனைத்தும்
இருக்கலாம் - இன்னும் பெருக்கலாம் - எனினும்,
மதங்கள் வேறு, மக்கள் வேறு,
மதங்கள் மக்களின் மாற்றுச் சட்டைகள்;
இந்நில மக்கள் அவ்வெழிற் சட்டையின்
உட்புறத் துள்ள மனிதரைக் காண்க!
அந்த மனிதர் இந்தப் பெருநிலம்
ஈன்ற பிள்ளைகள் என்னும் எண்ணம்
அறிந்து பயன்நிலை உணர்ந்தால் ஒற்றுமை

நிலைபெறும்; கலகம் அறவே நிற்கும்;
பன்மதம் சேர்ந்த பல்கோடி மக்களும்
'நாங்கள் ஒன்றுபட்டோ ம்' என்று நவின்றால்
மதங்களின் தலைவர் விரைந்து வந்து
பிரிந்தி ருங்கள் என்றா பிதற்றுவர்?
அவர்கள் அருளுளம் கொண்டவர் அல்லரோ?

நாட்டியல் என்னும் நல்ல தங்கத்தேர்
நன்னிலை நண்ண வேண்டாமா,சொல்?
எல்லாரும் இந்நாட்டு மக்கள் என்றுணர்ந்தால்
செல்அரும் நிலைக்குச் செல்லல் இலேசு"

மொழிகள்:

"பல இனம் பலமொழி பற்றி ஒருசில:-
பழம்பெரு நிலத்தில் பலமொழி பல இனம்
இருப்பதால், இஃதொரு பல்கலைக் கழகம்!
ஆனால், தேனாய்ப் பேசும் திருவே,
ஓரினத் துக்குள்ள மொழியை
பலஇனத் துள்ளும் பரப்ப முயல்வதால்
நாட்டில் ஒற்றுமை நண்ணும் என்ற
கோட்பாடு சரியென்று கொள்வதற் கில்லை.

அவ்வவ் வினத்தின் அவ்வம் மொழிகளைச்
செம்மை செய்து செழுமை யாக்கி
இனத்து மக்கள் எவர்க்கும் பரப்பும்
ஒன்றினால் நாட்டில் ஒற்றுமை ஏற்படும்
என்பதென் எண்ணம், கன்னற் சாறே!

இனத்தைச் செய்தது மொழிதான், இனத்தின்
மனத்தைச் செய்தது மொழிதான், மனத்தை
மொழிப்பற் றினின்று பிரிப்பது முயற்கொம்பு

'அன்னை மொழியையும் படி, அதனொடு நான்
சொன்ன மொழியையும் படி' எனும் சொற்கள்
கசக்குமே அலாது மக்கட்கு இனிக்குமோ?
ஆங்கிலன் தனக்குள அடிமையை நோக்கி
'ஆங்கிலம் படித்தால் அலுவல் கொடுப்பேன்'
என்றான், நாட்டின் இலக்குமண சாமிகள்*
தமிழ்மறந் துஆங்கிலம் சார்ந்து தமிழைக்
காட்டிக் கொடுக்கவும் தலைப்பட் டார்கள்;
இந்த நிலத்தில் அடிமை இல்லை,
ஆதலால் துரைகளும் இல்லை அல்லவா?

கைக்குறிக் காரர் கணக்கிலர் வாழும்
இந்த நிலையில் அயல்மொழி ஏற்றல்
எவ்வாறு இயலும்? அமைதியென் னாகும்?
நானிங்கு நவின்ற திருத்தம் வைத்துப்
பாரடி நாவலந் தீவின் பரப்பை நீ!
பிரிந்த பகுதி பிணைந்தது பாரடி!
பிரிய நினைத்தவர் பிழையுணர் கின்றனர்
பெருநிலத் தில்ஒரே கொடிப றந்தது!

நாவலந் தீவினர் எல்லாரும் நல்லவர்
எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர்
இமையச் சாரலில் ஒருவன் இருமினான்;
குமரி வாழ்வான் மருந்துகொண் டோ டினான்;
'ஒருவர்க்கு வந்தது, அனைவர்க்கும்' என்ற
மனப்பாங்கு வளர்ந்தது வேண்டிய மட்டும்!

இமயம் மீட்கப் பட்டதி தோ,பார்
சீனன் செந்நீர் கண்ணீ ராக
எங்கோ ஓட்டம் பிடிக்கின் றானடி!
விளைச்சற் குவியல் விண்ணைமுட் டியது
தொழில்நலம் கண்டோ ம் தேவை
முழுமை எய்திற்று, வாழ்க!
அழகிய தாய்நிலம் அன்பில் துவைந்ததே!"

------------------------------------
* சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராய் இருந்த ஆ.இலட்சுமணசாமி முதலியார் ஆங்கிலப் பயிற்று மொழியே வேண்டும் என்றவர்.

Friday, April 11, 2008

திசைகள் - 4

இனித் தெற்கு என்னும் சொல்லுக்கு வருவோம்.

அவாசி, தக்கணம், யாமினியம், தெக்கு,
சிவேதை, தென், இவை தெற்கு எனலாகும்

என்பது பிங்கல நூற்பா 14 ஆகும். மாற்று வடிவங்களை ஒன்று சேர்த்து, அகர வரிசையாய்ப் பார்த்தால், அவாசி, சிவேதை, தக்கணம் (தெக்கு, தெற்கு, தென் என்பவையெல்லாம் இதனோடு சேர்ந்தவையே), யாமினியம் என 4 சொற்களே தெற்கைக் குறிக்க உண்டு.

முதலில் அவாசி இது முற்றிலும் வடசொல் தோற்றம் கொண்டது. ஆனாலும் கூர்ந்து பார்த்தால், உள்ளிருக்கும் தமிழ் அடையாளம் தெரியும்.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே

என்று புறநானூற்றில் வரும் 187 ஆவது பாடல் (அவ்வையார் அருமையாய் எழுதிய பாடல்) அமையும். இதுவும், இதற்கு முன்னும் பின்னும் பல பாடல்கள் அற்றுவிக (ஆசீவக)க் கருத்தால் அமைந்த பாடல்கள். சங்க இலக்கியத்தில் அற்றுவிகப் பாடல்கள் பலவும் இருக்கின்றன. அற்றுவிகத்திற்கும் பழந்தமிழ் மரபுக்கும் இடையே தொடர்புகள் இருக்கின்றன. அற்றுவிகம் ஒரு காலத்தில் தமிழரால் பெரிதும் ஓம்பப் பட்ட நெறி. அந்த அற்றுவிகத்தை தமிழகத்தில் இல்லையென்று ஆக்கி எல்லாவற்றையும் செயினத்திற்குள் போட்டு குழப்படி செய்வது இலக்கியம், கல்வெட்டியல் போன்ற ஆய்வுப் புலங்களில் தொலைய வேண்டும். அற்றுவிகப் பாடல்கள்பற்றி தனிப்பதிவு இடுவதாய்ச் சொல்லி யுள்ளேன். எனவே அதுபற்றி நீண்டெழுதாமல், அவல், மிசை என்ற புவிக் கிறுவச் சொற்களைப் பற்றி மட்டுமே சொல்ல முற்படுகிறேன்.

மிசை= மேடு போல, அவல் = பள்ளம். இதே பள்ளப் பொருளில் அவ்வையார் அதியமான் மகன் பொகுட்டெழினியையும் புறம் 102ல் பாடியிருப்பார். அதன் மூன்றாம் வரியில் கூட, "அவல் இழியினும் மிசை ஏறினும்" என்று வரும். மேலும், மலை படு கடாத்தின் 450 ஆம் வரியில் "மெல் அவல் இருந்த ஊர் தொறும்" என்றவாறு அவல் என்பது "விளை நிலம்" எனும் பொருளில் ஆளப் படும். ஒவ்வொரு விளை நிலமும் ஒரு பள்ளம் தானே? பள்ளிகள், பட்டிகள், பதிகளே பள்ளப் பட்ட போது விளைநிலத்தை ஒரே மட்டத்தில் ஆக்கும் போது (பாத்திகளாய் அமைத்து வரப்பு கட்டும் போது) பள்ளம் ஆகாமலா போகும்? இது போக வீரமாமுனிவரின் சதுரகராதி, அவல் எனும் சொல்லைக் குளம் எனும் பொருளிலும் குறிக்கும்.

அவ்வுதல், அல் எனும் வேர்ச்சொல்லின் வழி வந்தது அல்வுதல்> அவ்வுதல் ஆயிற்று, பின் அவலாயிற்று. அவல் = கீழிருத்தல். இதன் நீட்சியாய் அவலம் = கீழிருக்கும் தன்மை, எனவே வலியின்மை என்ற பொருட்பாடு வரும்.

இது போக, அல்லுதல் = இல்லாமற் போதல். "அவன் அல்லன், அவள் அல்லள், அது அல்ல" என்ற கூற்றுக்கள் இல்லாப் பொருளில் வெவ்வேறு திணை, பாலில் வந்தவையாகும். அவம் என்ற சொல்லுக்குக் கீழ்மை, கேடு என்ற பொருளும் உண்டு. காட்டு: அவக்குணம் = கீழ்மைக் குணம் "அவகுண விரகனை" என்று வடசொல்போலவே ஒரு திருப்புகழ்ப் பாட்டிற்பயிலும். அங்கு ”க்” எனும் புணர்ச்சி இடைநிலை ஊடே பயிலாததால் வடசொல்லாய்த் தோற்றம் அளிக்கிறது. அவக்காலம் = கீழ்மைக் காலம், எனவே துன்பக் காலம், அவக்குறி = கேடு காட்டுங் குறி; அவக்கேடு = பெருங்கேடு; அவ நம்பிக்கை = கெட்ட நம்பிக்கை. அவமதித்தல் = கேடாக மதித்தல்; அவமானம் = மதிப்புக் கேடு; இது போலப் பல கூட்டுச் சொற்கள் உண்டு. (அவம் என்ற தமிழ்ச்சொல் பல கூட்டுச்சொற்களில் முன்னொட்டாய்ப் பயிலுகிறது. அவையெலாம் வடசொல்லோ என்று நானும் மறுகிய காலம் உண்டு!)

குட்டை தட்டையாகும் என்பதால், அவலின் நீட்சியாய் அவரைக்காய்ப் பெயர் எழும். இவர் (climber) கொடியிலும், படர் (creeper) கொடியிலும், குத்துச் செடியிலும் (shrub) தட்டையாக ஆன காய், அவரைக்காய் (a type of beans) ஆகும்.

இது போக இன்னொரு அவல் உண்டு. அது அரிசியை இடித்து வரும் அவல். அல்முதல்>அம்முதல் வினை அமுக்கும் செயலைக் குறிக்கும். அம்மும் கருவி அம்மி. அமுக்குதல் எல்லோருக்கும் தெரியும். (அமுக்குதல் நீட்சியாய் அமற்றுதல் = நிறுத்துதல் என்ற வினையும் எழும்.) அம்முதல், ஒரு வகை இடித்தலே. அம்மலின் சுருக்கம் அமல். மகர, வகரப் போலியில் அமலின் திரிவு அவல். சாப்பாட்டு அவலின் சொற்பிறப்பு இப்படித்தான். "பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை" என்பது அகநானூறு 141 ஆம் பாட்டின் 18 ஆம் வரி. அவலிடிக்கும் உலக்கைபற்றிச் சொல்கிறது. உலக்கையால் குற்றுவதை அவைத்தல் என்பார். அவல் சாப்பிடாத தென்பாண்டிக்காரர் உண்டோ ? (இன்றைக்கு அவல் இடிப்பது பற்றியே நம் மக்கள் மறந்துவிட்டனர்.)

மொத்தத்தில் அவல் = கீழாக இருத்தல், தாழ்ந்து இருத்தல். அவற்சி = தாழ்ந்த நிலை. அவற்சியின் திரிவில் அவற்சி>அவசி>அவாசி என்றாவது தமிழில் இருந்து வடபுலம் போகும் இருபிறப்பிச் சொல்லாகும். அவாசி, கிழக்கை வடமொழியில் குறித்திருக்கிறது. நம்மூரில் அவல், பள்ளத்தையே குறித்திருக்கிறது.

இது போல் அவம்>அவந்தம் என்பது நருமதைக்குத் தெற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டிப் பார்க்கையில்,  கீழாய் இருக்கும் நிலம், தாழ்ந்து இருக்கும் நிலம் என்று பொருள் கொள்ளும்.  அவந்தியைப் பதிந்த தமிழ் அகராதிகள் அவந்தத்தைப் பதியாமலே நகரும். 

அவந்த நாடு என்ற தமிழ்ச்சொல்லை ஆந்தம் என்றும் (அக/அவ> ஆ) என்ற மெய்ம்மயக்கிலும்  சொலலலாம். ஆந்தம் என்பது தெற்கு நிலம் என்று பெயர் கொள்ளும். சங்கதத்தில் ஆந்தம் என்பது ஆந்த்ரமாகும். இந்நிலத்து மக்களை ஆந்த்ரர் என்பார். மீள அதைக் கடன் வாங்கித் தமிழில் ஆந்திரர் என்பார்.  பேசாமல் அவந்தர்> ஆந்தர் என்றே தமிழில் சொல்லலாம். [ஒரு காலத்தில் அவந்தரும், அவந்தியரும் ஒரே நாட்டு மக்களாய் இருந்திருக்கலாம்.]  

அடுத்தசொல் சிவேதை. இதன் முந்தைய வடசொல் வடிவம் ஸ்வேதை ஆகும். இன்னும் ஆழம்போனால், இதற்கும் முன்வடிவை ஸௌதையிற் காணலாம். பொதுவாக உகரத்தில் அல்லது ஒகரத்தில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள் வடக்கே இணையும் போது, ஔகார உருவத்திலேயே நிலைக்கின்றன. (தமிழில் ஔகாரச் சொற்கள் மிகமிகக் குறைவு. ஔகாரத் தோற்றம் காட்டும் மிகப்பலவும் வடசொற்களாகவே உள்ளன! அதைப்பற்றியே ஒரு பதிவு போடவேண்டும்.) காட்டாக, நம் குரவம் ( = தலைமைப் பண்பு. குரு>குரவம்; சிவ சமயக் குரவர் நால்வர்), அஙகே கௌரவமாகும். சொகம்>சுகம்> சௌக்யமாகும்; இதுபோல நாம் புத்தம் என்பதை, அவர் பௌத்தம் என்பார். இது புரியாமல், இக்கால இடதுசாரித் தமிழரில் சிலர் அதைப் பவுத்தம் என்றே பயிலுவார். [என்ன செய்வது, நிலப்பிரபு என்றே சொல்லிப் பழகியவரைப் பண்ணையார் என்றுசொல்லச் சொன்னால் எப்படி இவர் அறிவுய்தியாகக் (அய்யய்யோ! அறிவுஜீவியாகக்) காட்சியளிப்பது? :-)]

இந்த வடக்கு/தெற்கு மக்களின் பலுக்கல் வேறுபாட்டை புரிந்து கொண்டால், (ஸௌதை எனும் வடசொல்லுக்கு இணையான) சூதை என்ற தமிழ்ச் சொல்லையும், அதனுள் புதைந்துகிடக்கும் சூல்தல் வினையும் சட்டென்று இனங்காட்டும். சூல்தல் = தோண்டுதல்.

சுல்>சூல் என்ற வேரின் வழி சூல்தல் வினை பிறக்கும்; சூலும் வினையைச் செய்யும் கருவி சூலம். இதைக் கேட்டவுடன், பலருக்கும் இக்காலத்து இரும்புச் சூலமே நினைவிற்கு வரக்கூடும். இன்றைக்குப் பார்ப்பது பழைய கற்காலச் சூலத்தின் பண்பட்ட திருத்தம். அதற்கு மாறாக, பெருங்கற்கால நிலைக்குப் போய், கற்சூலத்தை நினைவு கொள்ளுங்கள்; ஒரு முக்கோணத்தின் இரண்டு சாய்வுப் பக்கங்களிலும் இரண்டு சிறிய முக்கோணங்களைப் பொருத்தி, 3 கூர் முனைகள் கொண்ட கற்கருவியை ஓர்ந்து பாருங்கள். இக்கல்லோடு ஒரு தண்டைப் பொருத்தினால் கிடைப்பது கல்லாலான சூலக்கருவி. இங்கே சொன்ன இருபக்க முக்கோணங்கள் இல்லாது ஒரே ஒரு கூர்முனை மட்டுமே இருந்தால் அது வேல். வேலும் சூலமும் தமிழர் வாழ்க்கையில் புகுந்தது இப்படியே. (தமிழர் வாழ்க்கையில் மட்டுமல்ல; உலகெங்கணும் பழங்குடி மக்கள் சூலம், வேலைப் பழகியுள்ளார். பின் எப்படி விலங்காண்டி நிலையில் பழங்குடி மக்கள் வேட்டையாடுவது? தம்மைக் காப்பாற்றிக் கொள்ளுவது?)

சென்னைக்கு அருகில் பூண்டி நீர்த்தேக்கத்தை ஒட்டி அத்திரப் பாக்கம் எனும் இடத்தில் இன்றைக்கு 20000, 25000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய சூலங்களும், வேல்களும் (தண்டுகள் இல்லாமல் தான்) கிடைத்துள்ளன. தென்னிந்தியாவிற் கிடைத்த பழ எச்சங்களில் மிக முந்தியதாய் இவற்றைக் கருதுகிறார். இன்றைக்கும் பூண்டிபோக வாய்ப்புக்கிடைத்தால், அங்குள்ள தொல்பொருள் காட்சி சாலை பார்த்து வாருங்கள். 70000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈனியல் சான்று பிரான்மலைக் கள்ளரான விருமாண்டி மூலம் உறுதிபெற்றது. அதேபோல, கற்சூலங்களும், கல்வேல்களும் நம் பழங்குடிகள் தெற்கே நெடுநாள் இருந்ததை உறுதி செய்யும்,.

சூல்ந்தது பள்ளமாகும். பள்ளமான இடம் சூத்தையாகும். மாம்பழத்தின் உள்ளே பள்ளமிருந்து தோல்மூடிக் கிடந்தால் சூத்தைப் பழம் என்கிறோம் அல்லவா? புட்டத்தின் (buttocks) ஓரிடத்தில் துளையுள்ளதால் அதைச் சூத்து என்கிறோம் அல்லவா? உள்ளீடில்லாது தட்டையாய்க் கிடப்பதைச் சூத்தை> சொத்தை என்கிறோம் அல்லவா? சொத்தை ஆள் சோதாள் ஆகிறான்; இன்றைய வழக்கில் ள் என்னும் ஈறுபோய், அவனைச் சோதா என்றே சொல்கிறோம். முடி இல்லாது வெறும் தலையாய், பள்ளம் தெரிவது சொட்டைத் தலை ஆகிறதல்லவா? "நொள்ளையும் சொள்ளையும்" என்ற பேச்சுவழக்கில் நொள்ளை என்பது நொகையான (negative ஆன) பேச்சு. சொள்ளை என்பது குறைப்பேச்சு. (சொத்தை, சொதுகையில் சொதுகரம்> சதுகரம்>சதுரமும் பிறக்கும். சதுரம் = குறைந்த கை = நாலு.)

இது போக, வறியவனாக, ஒன்றும் இல்லாதவனாக, உடலுழைப்பை மட்டுமே தந்து உணவுபெறுபவனாக இருப்பவன் சூத்தன்>சூதன் ஆகிறான். [வட மொழி ரகரம் நுழைந்து சூத்ரனாகும். மீண்டுமிதைச் சூத்திரன் ஆக்குவோம்.]

[சூதன்பற்றிப் பேசுமிடத்தில் விலங்காண்டிக் குமுகம் பற்றிய  இடைவிலகல் சொல்ல வேண்டியுள்ளது. ஒவ்வொரு படைக்கருவியைக் கைக்கொண்டிருந்த விலங்காண்டி நிலையினர், நாளாவட்டத்தில் குமுகத்தில் 4 வகையாய்ப் பின் நிலைத்தனர். விலங்காண்டி நிலையில் தலைவன், பெருமான் = பெரியவன் எனப்பட்டான்; கூட்டத்தை வழிநடத்தினான். {பெருமான்> ப்ரஹ்மண்> ப்ரம்மன்>ப்ரம்மண். பெருவுடையார் ப்ரஹ்தீசர் ஆவதில்லையா? அதைப் போல், இத்திரிவைப் புரிந்து கொள்ளவேண்டும்.]

அவனையும், மற்றவரையும். வாள், கத்தி ஆகிய படைக்கருவி கொண்டு காப்பாற்றியவன் கத்தியன்> க்ஷத்தியன்> க்ஷத்ரியன். [கணம்> க்ஷணம் திரிவை எண்ணிப்பார்க்கலாம்.] வில்கொண்டு புது இடங்களுக்குப் போய் விலங்கு, நில வளங்களைத் தெரிந்துவந்து பண்டப் பரிமாற்றைச் செய்த வில்லயன்> விற்றயன்> வித்தயன்> விச்சயன்> விசையன்> வைஸ்யன்; (வில்+தல் = விற்றல் என்று புணர்ச்சி விதியில் மாறும் இல்லையா? விற்றல் வித்தலென்று பேச்சுவழக்கில் திரியும். வித்தயன் விச்சயன் ஆவது அடுத்த நிலை.) கூட்டங் கூட்டமாய்ப் போய், விலங்குகளைக் கொன்று குடியினருக்கு ஊனளிக்கச் சூலங்கொண்டு காலாட்படையாய்த் திரிந்தவன் சூல்த்தன்>  சூத்தன்> ஸூத்ரன்.

பெருமார், கத்தியர், விசையர், சூதரெனத் தொழில்வழி வகைப்பட்ட விலங்காண்டிக் கூட்டம், இன்னொரு விலங்காண்டிக் கூட்டத்தோடு இடம், புலம், வளம் காப்பாற்றுவதற்காகப் போரிட வேண்டி வந்தது. நாளடைவில் முல்லைநில வாழ்க்கையிலும் இப்பிரிவுகள் விரிந்து கொண்டே போயின. சாதிப் பாகுபாடுகள் என்பன இதன் வளர்ச்சியே.  [ இன்றது பிறப்போடு சேர்ந்துகொண்டது தவறு. அது மாறவேண்டும் என்பது குமுக எதிர்பார்ப்பு. வருணம் பற்றி இங்கே சொல்லியதை முற்றுமுழுதான முடிவாகக் கொள்ள வேண்டாம். இது ஒரு பார்வை, அவ்வளவு தான். வருணத் தொடக்கம், விலங்காண்டிக் குமுகாயத்தில் முளையாகி, பின் முல்லை நாகரிகத்தில் மலர்ந்தது என்றே தோன்றுகிறது. அதன் உச்ச கட்டம் மருதமாகும்.]

இனி நில அமைப்புக்களுக்கு மீண்டும் வருவோம். இந்தியத் துணைக் கண்டத்தில் சொத்தையான, தட்டையான பகுதியாய், மலை, நில அமைப்பு மிகக் குறைந்து, சற்றே சாய்ந்த சமவெளியாய், செம்புலமாய் (= சமவெளி; செம்புலப் பெயல்நீரைச் செம்மண்நீரெனச் சொல்லிக் குறுந்தொகையின் பொருளை அறியாமற் கிடப்பது இன்னொரு உரைகாரர் சோகம்!), இருக்கும் பள்ளத் திசை சூதத் திசை. அது வடமொழியில் ஸௌத திசை என்று ஆகியது; மேலை மொழிகளிலும் South என்பது பலவாறாகப் பலுக்கப் படுகிறது.

அடுத்தது தக்கணம். இதற்குப் பெருவிளக்கம் வேண்டாம். தள்கு>தக்கு> தக்கணம் என்ற வளர்ச்சி எளிதில் புரியக் கூடியதே / தல்>தள்ளில் இருந்து பிறந்த உறுப்புச்சொல் ’தாள்’. "உடல் உறுப்புச் சொற்கள்" என்ற தலைப்பில் முனைவர் கு. அரசேந்திரன், 2006ல் ஒரு பொத்தகம் வெளியிட்டிருக்கிறார். (காவிரிப் பதிப்பகம், 6, பெருஞ்சித்திரனார் தெரு, சிட்லப்பாக்கம், சென்னை 64). இதில் கால், அடி, தாள், கழல், பாதம் ஆகியவற்றின் சொற்பொருள் வரலாறுகளைச் சொல்லுவார். தாளின் தொடர்பான நிலை தாள்வு>தாழ்வு.

தள்கு என்னும் சொல், தொக்கிய நிலையில், தக்கு என்று ஆகும். பின் அணம் எனும் சொல்லாக்க ஈறு சேர்ந்து தக்கணம் என்று ஆகும். பிறகு கட்டி என்னும் சொல் கெட்டி யாவது போல, பரு>பெரு ஆனது போல, தக்கு என்பது தெக்கு என்று தமிழர் பலுக்கலில் ஆகி, மேலும் இலக்கண மீத்திருத்தம் பெற்றுத் தெற்கு என்று நிலைபெற்றுப் போனது. தெற்கு என்பதைத் தெல்+கு என்று பின்னால் புரிந்து (தல்>தெல்), பின் தெல்+ந்+திசை என்பது தென்திசை ஆனது. தென் என்பது தெல்லின் இன்னோர் உருவமாய்க் கொள்ளப்பட்டது.

தென்னை என்ற சொல் இதே கருத்தில் தோன்றியதல்ல. அது ஆசியத் தென்கிழக்கில் இருந்து தமிழ் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மரம் என்று புதலியலார் (botanists) கூறுவார். நம்மூரைச் சேந்த பனை போலவே இதிலும் கள் இறக்க முடியும் என்றறிந்த தமிழன், இதன் சுவை இன்னும் அதிகம் என்பதால் கள் மரம் என்ற பெயரையே இதற்கு இட்டிருக்கிறான். (பனங் கள் சற்று கடுக்கும்; தென்னங் கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பெலாம் வெறியக் காடி - acetic acid பண்ணும் வேலை.) தெல் = கள் என்பதால், தெல்ங்கு மரம் தெங்குமரமானது; தெல்நை, தென்னையானது. தெங்கங்காய் நாளடைவில் தேங்காய் ஆகச் சுருங்கிற்று. தெல் என்பதே இச் சொற்களுக்கு அடிப்படை ஆகும். தெல்லின் நீட்சியாய், அதிலுள்ள வெறியத்தைக் (ethanol) போக்கும் வகையில் அரை நொதிப்பிலுள்ள நீர்மத்தில் சுண்ணாம்பை இட்டு அதன் நீர்ம அயனிச் செறிவை (hydrogen ion concentration) மாற்றி அமில அரங்கில் (acidic range) இருந்து, களரி அரங்கிற்கு (alkali range) கொணர்ந்து உருவான பதநீரை, தென்பாண்டிநாட்டிற் தெளிவென்று சொல்லியும் விற்பார். இதைத் தயக்கம் இல்லாமல், நாட்டுப்புற ஆண்கள், பெண்கள் எல்லோருமே குடிப்பார்; இதைத் தவறென யாரும் அங்குசொல்வதில்லை. (பதநீரை பனையிலும் இறக்கலாம், தென்னையிலும் இறக்கலாம்.) பதநீரில் வெறியச் செறிவு 2-4% இருக்கும். பொதுவாக கள்ளில் 7% க்கு மேல் இருக்கும்.

ஞாவகம் வைத்துக் கொள்ளுங்கள் தென் எனும் திசை குறிக்கும் சொல்லும், தென் எனும் மரங்குறிக்கும் சொல்லும் வெவ்வேறு சொற்பிறப்பில் எழுந்தவை. ”கள் மரம் என்ற பொருள் குறிப்பதாலேயே, தென்னை என்ற பெயராலேயே, அம்மரம் நம்மிடம் இயல்பாய் எழுந்ததல்ல; இறக்குமதி ஆன மரம்” என்ற கருத்து சட்டென்று புரிந்துபோகும். பனை நம்மூருடையது; தென்னை வெளியிருந்து நம் நாட்டில் இறங்கியது.

அடுத்தது யாமனியம். அதாவது யாமன் திசை அல்லது யமன் திசை.

யா என்ற ஓரெழுத்தொரு மொழி பற்றி ஒரு பொத்தகமே போட்டிருக்கிறார் தஞ்சைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சொல்லாய்வறிஞர் ப.அருளி. அதில் கருமைக் கருத்து மூலவேராகிய யாவில் இருந்து யா>யாம்> யாமன்>யமன் வளர்ச்சியில், "கரிய இருள் நேரத்தில், யாமப் பொழுதில், உயிரைக் கவர்ந்து செல்பவன் என்றபொருளில் ’யாமன்’ ஏற்பட்டது" என்பார். யாமன் = இருளன் என்ற புரிதல் தமிழரிடையே உண்டு. யாமன் திசை என்பது இருள்நிறைந்த திசை. மனையடி சாற்றத்தின் படி, தென் திசையை யமன் திசை என்றும் தமிழர் கருதிக் கொண்டார். இதைப் புரிந்துகொள்ள, புவியின் தன்னுருட்டையும், வலயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னால் ”காலங்கள்” தொடரில் புவியின் தன்னுருட்டையும், புவியின் வலயம் பற்றியும் நான் பேசியிருந்தேன். புவியின் தன்னுருட்டுக் காரணமாய், ஒவ்வொரு நாளும் சூரியன் கிழக்கே எழுவது போலவும், பின் மேற்கே மறைவது போலவும் தோற்றுகிறது. அதேபோல, புவியின் நடுக் கோட்டுத் தளமும் (equator), புவியின் வலயத் தளமும் (plane of revolution) 23.5 பாகையில் வெட்டிக் கொள்வதால், ஒவ்வொரு வலயச் சுற்றிலும் (=ஒவ்வோர் ஆண்டிலும்), சூரியன் தெற்கே சுறவ (=மகர) இலகை(=ரேகை)க்குப் போய், மீண்டும் வடக்கே கடக இலகைக்கு வருவதாய்த் தோற்றமளிக்கும். இதைத் தக்கண அயனம், உத்தர அயனமென்று சோதியர் சொல்வார். இன்னொரு வகையில், சூரியன் பனிமுடங்கல் (winter solstice) வரை தெற்கே போவதாயும், பின் கோடை முடங்கலுக்கு (summer solstice) வடக்கே வருவதாயும் காட்சி அளிக்கும்.

இப்படிச் சூரியன் தெற்கே போவதாகக் காட்சியளிக்கும் போது பகற்பொழுது சுருங்கி, இரவுப் பொழுது அதிகமாகும். தெற்கு என்பதை இருட்திசையாகத் தமிழர் கொண்டது, இக்காரணம் பற்றியே. இதே காரணமாய், மனையடி சாற்றத்தில் (நான் மனையடி சாற்றத்தைப் பரிந்துரைக்கிறேன் என்று யாரும் எண்ணாதீர். இச்சாற்றம் தென்னாட்டவர் பங்களிப்பே. அவர் தொன்மங்கள் இதில் அடங்கியுள்ளன. சாற்றத்தையும், அதிலுள்ள கருதுகோள்களையும் விவரித்தால் நான் சொல்வது புரியும்.) ஒரு வீட்டின் வாசல் கிழக்கேயோ, அல்லது வடக்கேயோ பார்த்து இருக்க வேண்டும் என்பார். ஏனென்றால், தன்னுருட்டின்படி கிழக்கு, ஒளிவரும் திசை. மேற்கு இருள் திசை. அதே போல, புவி வலய இயக்கத்தின் படி வடக்கு ஒளிவரும் திசை, தெற்கு இருள் திசை.

பெரும்பாலான முதியவரின் இயல் இறப்பு இருளில் நடப்பதாகத் தமிழரின்  பட்டறிவு சொல்லியதால், தம் முன்னோர் தென்திசையை (யாமன் திசையை) அடைவதாகவே புரிந்து கொண்டார். அதனால் மறைந்த முன்னோரைத் தென்புலத்தார் (=தென்திசையார் = மறைந்தவர்) என்று சொன்னார்.

தென் திசை யாமனத் திசை என்று ஆனது இப்படித்தான். யாமனம் என்பது இருபிறப்பி முறையில் யாமன்யம்>யாமினியம் என்று திரியும். இன்னும் சுருக்கமாய் யாமத் திசை என்பது, யாம்யத் திசை என்றும் திரியும். இதை நல்ல தமிழில் யாமத் திசை, யாமனத் திசை என்றே சொல்லிப் பயிலலாம்.

அடுத்த பகுதியில் மேற்கையும், வடக்கையும் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 09, 2008

Tyre, Brake and acceleration

திரு. புருனோ கேட்டிருந்த சொற்களுக்கு என் பரிந்துரை:

ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலிகளில் படித்தால், இந்தப் பெயர்கள் எல்லாம் மாட்டுவண்டியில் இருந்தே புலம்பெயர்ந்து இருக்கின்றன. மாட்டு வண்டி நம்மூரிலும் இருக்கிறது. இந்த உறுப்புகளுக்கு ஆன பெயர்கள் கிட்டத் தட்ட இதே பொருட்பாடுகளில் தான் நம்மிடம் இருக்கின்றன. முதலில் இங்கு கேட்டிருப்பது tyre

1485, "iron rim of a carriage wheel," probably from tire "equipment, dress, covering" (c.1300), an aphetic form of attire. The notion is of the tire as the dressing of the wheel. The original spelling was tyre, which had shifted to tire in 17c.-18c., but since early 19c. tyre has been revived in Great Britain and become standard there. Rubber ones, for bicycles (later automobiles) are from 1870s.

நம்மூரிலும் மாட்டுவண்டிச் சக்கரத்திற்கு இரும்புப் பட்டை போடுகிறார். பட்டை என்பது சக்கரத்திற்கு ஒரு covering தானே? இருப்புப் பட்டை என்பது மரம் போன்ற பொருள் தேயாமல் இருப்பதற்காகப் போடப் பட்டது. பின்னால் மிதிவண்டி மேலைநாடுகளில் உருவானபோது, மாட்டு வண்டியில் இருந்தது போன்று மரச்சக்கரமும், இருப்புப் பட்டையும், மர ஆரங்களுமாய்த்  தான் தொடங்கியது. இந்தச் சக்கரங்கள் கனமாயும், அவற்றின் ஆற்றிலாமை (inertia) பெருத்திருந்ததால், என்னதான் முயன்றும் மிதித்து அழுத்துவதற்குச் சரவலாய் அமைந்தது.

இன்னொரு கண்டுபிடிப்பாளர், இரும்பு வளையத்தை வைத்து, அதன் மேல், அப்பொழுது, தென்னமெரிக்காவில் இருந்து பரவிய முழு உரப்பையால் (full rubber) ஆன உருளை (cylinder) செய்து அதை வளையத்தின் (wheel) வெளியே பொருத்தி, வலையத்திற்கு உரங்கொடுக்க இரும்பு ஆரங்களைப் (spokes - same as radii) பொருத்தி, மிதிவண்டிச் சக்கரங்களை உருவாக்கினார்.  அது சரி. உரப்பை, அது என்ன?

rub (v.) early 14c., transitive and intransitive, of uncertain origin, perhaps related to East Frisian rubben "to scratch, rub," and Low German rubbeling "rough, uneven," or similar words in Scandinavian (compare Danish rubbe "to rub, scrub," Norwegian rubba), of uncertain origin. Related: Rubbed; rubbing.

rubber (n.)
"thing that rubs" (a brush, cloth, etc.), 1530s, agent noun from rub (v.). The meaning "elastic substance from tropical plants" (short for India rubber) first recorded 1788, introduced to Europe 1744 by Charles Marie de la Condamine, so called because it originally was used as an eraser.

உர, உரப்பு, உரப்புத் தூள், உரசல், உராய்வு, உரைதல், உரிஞ்சல் என்று இத்தனை சொற்களைக் கொண்ட தமிழருக்கு, rub எங்கிருந்து போயிருக்கும் என ஊகிக்கத் தெரியவில்லையா? வியப்புத் தான். ஏதேதோ மாற்றுச் சொற்களைப் பலரும் தேடிக்கொண்டிருக்கிறார். அந்த அளவு அடிப்படைத் தமிழ்ச்சொற்களை விட்டு வெளியே வந்துவிட்டோம். இராம.கி. அடையாளங் காட்டினால் இராம.கி.யை குற்றஞ் சொல்வது மட்டும் பலராலும் முடிகிறது.

rubber  பொருளை இயற்கையில் கண்டெடுத்த போது, உராய்ந்து கரிக் கறையை அழிக்கவே அது முதலில் பயன்பட்டது. எனவே rubber material (அழிக்கும், உராய்க்கும் பொருள்) என்று  கூட்டுச் சொல்லாய்த் தான் முதலில் அழைத்தார். பின், அதிகப்புழக்கத்தில் பொருளென்ற பின்சொல் சொல்லப் படாது போனது.  தமிழில் மிக எளிதில் rubber ஐ ”உரப்பை” என்று சொல்லி விடலாம். (ஒருகாலத்தில் இழுவை என்றும் சொன்னேன்.) ஏதும் குறை வராது. இலுப்பை மரம் போல் உரப்பை மரம் (rubber tree) என்ற சொல்லாட்சியை ஏற்றுக் கொள்ளலாம். மனம் தான் வேண்டும். தேய்வை, இழுவை, மீள்வை என்பவை இதற்குச் சரிவராது.

உரப்பையால் ஆன உருளைக்குப் பின்னால், "இவ்வளவு உரப்பையைப் பயன்படுத்த வேண்டுமா?" என்ற துணிப்பில், உரப்பைத் தூம்பை [tube; தூம்பு என்ற சொல்லைக் கண்டு மருளவேண்டாம். அது நல்ல தமிழ்ச்சொல். சிவகங்கைப் பக்கம், முற்றங்களில் சேகரமாகும் மழைநீரை, வீட்டிற்கு வெளியில் கொண்டுசேர்க்க (இது திண்ணை, வெளிப்பத்தி) ஆகியவற்றின் அடியில் போகும்) வைக்கும் குழாய்க்கு தூப்பாய் என்றே பெயர். தூம்பு/தூப்பு என்பவை எங்கள் பக்கத்துப் பாமரரும் அறிந்த நல்ல தமிழ்ச் சொற்கள்; தயங்க வேண்டாம். தூம்பு விளக்கு = tube light சொல்லிப் பழகுங்கள்.] உருவாக்கி அதனுள் காற்றை ஏற்றி, பின் வட்டத்தூம்பின் மேல் இரும்புப் பட்டைக்கு மாறாக ஒரு கடு உரப்பைப் (hard rubber) பட்டையை மூடிவைத்து உருவாக்கியதே இக்கால மிதிவண்டிச் சக்கரம். பின்னால் சகடை (car) உருவான போது, மிதிவண்டிச் சக்கர நுட்பமே இதற்கும் கொள்ளப் பட்டது.

இன்றும் அந்த கடு உரப்பையால் ஆன சக்கரப் பட்டை இருக்கிறது. இது தான் அடிப்படையில் tyre. ஆனால் சொல்லச் சுருக்கமாய் இருக்கவேண்டும் என்று கருதி பாவாணரே 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால் உருளி என்ற சொல்லைப் பயிலுவார். இது அவர் பரிந்துரைத்ததா, மற்றவர் பரிந்துரைத்ததா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் நூல் வழி அறிந்தேன்; பொருளும் குலையாது, சொல்ல எளிதாகவும் இருக்கிறது. (ஞாவகம் வைத்துக் கொள்ளுங்கள் உருளை = cylinder; உருளி = சக்கரப் பட்டை. இரண்டும் சற்று வெவ்வேறானவை.) [குயவன் சக்கரத்திற்குத் திருகு சக்கரம், திரில் என்று கூடப் பெயர்கள் தமிழில் இருக்கின்றன. tire சொல்லின் பிறப்பு எங்கோ ஒரு விட்ட குறை, தொட்ட குறை......]

வெளியே உரப்பையுருளி, உள்ளே உரப்பைத் தூம்பு; அப்புறம் ஆரங்கள். இன்னும் சில உறுப்புக்கள் உண்டு. இவை எல்லாம் சேர்ந்தது இந்தக் கால உந்து சக்கரம்.

அடுத்தது brake.

c.1440, from O.Du. braeke "flax brake," from breken "to break." The word was applied to many crushing implements, and the ring through the nose of a draught ox. It was infl. in sense by O.Fr. brac, a form of bras "an arm," thus "a lever or handle," which was being used in Eng. from 1380, and applied to "a bridle or curb" from 1430. One or the other or both took up the main modern meaning of "stopping device for a wheel," first attested 1772.

மாட்டுவண்டியில் மாட்டிற்கு மூக்கணாங் கயிறு போடுகிறார் அல்லவா? மாட்டுவண்டி போய்க் கொண்டே இருக்கும் போது, அந்த முக்கணாங்கயிறை ஒரு இழுப்பு இழுத்தால், அது மாட்டின் மூக்கில் உராய்ந்து வலி ஏற்படுத்தி, மாட்டிற்கு உணர்த்தி, அதை மேற்கொண்டு நகராது நிற்கச் செய்து விடும். அந்தக் கால brake நுட்பம் இது தான். (சிரிக்காதீர்கள்!) அதே நுட்பம் தான் இன்றும் பயன்படுகிறது. உருவங்களும், கருவிகளும், ஏந்துகளும் தான் மாறியிருக்கின்றன. என்ன, இந்தக் கால brake -இல் மாடு இருக்காது, மாறாக மாகன உறுப்புக்கள் (machine parts) இருக்கும். இங்கும் ஒரு (இரும்புக்) கயிறு, ஒரு இழுப்பு, அதனால் ஏற்படும் உராய்வு, பின் நிற்பு.

மேலே flax brake கயிற்றையே குறிப்பிடுகிறது. (இதைப் பழுதை என்றும் நம்மூரில் சொல்வார்; பழுதைக்கும், பாம்புக்கும் சேர்த்துச் சொல்லப்படும் சொலவடையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.) இன்றைக்குக் கயிறு என்ற சொல்லையே நாம் பயன்படுத்தினாலும், புரி என்ற சொல் கயிற்றுக்கு அந்நாளில் உண்டு. அது மாட்டுக்குப் போடும் மூக்கணாங் கயிற்றுக்கே கூட உண்டு. புரி(கை)யைக் கட்டியிழுத்தல் என்று பெயர். (இது போக கலங்களைக் கவிழாமல் வைக்க, புரிமனை அல்லது திரிமனை அல்லது கலவடை என்ற பொருளுண்டு. புரியாலான வட்ட உருளையின் மேல் கலத்தை வைக்கலாம். புரிக்கு மாறாகத் திரி என்ற சொல்லும் ஆளப்படும். கல வட்டை கலவடை ஆயிற்று.)

brake போடு என்று சொல்லாமல், புரிகையை இழு, அமுக்கு என்றும் சொல்லலாம். இன்னொரு break/broke/broken என்ற வினை தமிழில் பேர்தல் என்று சொல்லப்படும். மேலும் நகரவிடாமல், எதிர்த்தடை கொடுப்பது பொருவியது என்றும் சொல்லப்படும். பொரு என்னும் சொல் புர்.....என்னும் உராய்வு ஓசையை வைத்து எழுந்த சொல். பொரி என்ற சொல்லும் இந்த புர்...... எனும் ஓசைக் குறிப்பில் எழுந்தது தான். புரிகை, பேர்தல், பொரு ஆகிய மூன்றும் ஒலியில் ஒன்று போல் தோற்றம் அளித்தாலும், வேறுபாடு ஆனவை; அவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

அடுத்தது accelerator. முடுக்கம் (acceleration) என்ற சொல் 50 ஆண்டுகளாகவே பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. அவன் முடுகிச் செல்கிறான். He goes accelerated. அந்த முடுக்கத்தை அளிப்பது முடுக்கி = accelerator. [velocity = கதி; speed = விரைவு, வேகம், torque = திருக்கம்..... மாகனவியல் (mechanics) சொற்களை எல்லாம் இங்கு வந்து கொட்டிவிடலாம். ஆத நகர்வுச் (automotive) சொற்களைப் பட்டியலிட்டால் தேவையானவற்றை எடுத்துரைக்கலாம்.

நண்பர்களே! தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. அவற்றை ஆள நமக்கு விருப்பம் வேண்டும். மேலைச் சொற்கள் எப்படி எழும்பின என்று பார்க்க வேண்டும். (இராம.கி இதையே பார்க்கிறார் என்று குறைப்படுவதற்கு என்னிடம் மறுமொழி இல்லை. ஏதொன்றையும் செய்வதற்கு முன், தொடக்கம் எப்படி இருந்தது என்று அறியாமல் போக என் மனம் இடம் கொடுப்பதில்லை.) அதே போன்ற நிலை நம்மிடமும் ஒரு காலத்தில் இருந்ததா? அவர்களின் நாகரிக வளர்ச்சிக்கும் நம் நாகரிக வளர்ச்சிக்கும் இடையே இருக்கும் இடைவெளி என்ன? இந்த இடைவெளியைச் சரி செய்ய நாம் விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் புதுப் படிவாக்கத்திற்கு (application) சொற்களை உருவாக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். 

[அவர்கள் மாட்டுவண்டி - மிதிவண்டி - சகடு என்று முன்னேறினார். நாம் காலச் சூழ்நிலையால் மாட்டுவண்டியோடு நின்றுவிட்டோ ம். பிறகு இப்பொழுது மிதி வண்டி, சகடு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இவ்வுறுப்புகளுக்குப் பெயர் தேடும் போது நம் மாட்டுவண்டியையும் அதன் உறுப்புக்களையும் கொஞ்சம் அலசி அங்கிருந்து தொடங்க முடியுமானால் நல்லது. (சில நேரம் முடியாமற் போகலாம்).]

அப்படிச் செய்வதன் மூலம் சொற்களை நம் வயப்படுத்தலாம். land lord என்பதை நிலப்பிரபு என்று சொல்லுவதைக் காட்டிலும் பண்ணையார் என்று சொல்லுவது நல்லதில்லையா?

வரட்டுங்களா?

அன்புடன்,
இராம.கி.