Friday, March 30, 2007

சுடர்வழியே செய்தி

ஆர்வமுடன் எழுதும் பலரிடம் சுற்றிக் கொண்டிருந்த இந்தச் சுடர் என்னிடம் வந்து சேரும் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை.

விடுதலை வீரன் வீரபாண்டியக் கட்டமொம்மனுக்கு ஒரு வழக்கம் உண்டாம். செந்தூரில் முருகனுக்குப் பூசை நடந்தபின் தான், பாளையக்காரர் காலையில் உண்பாராம். அதற்குத் தோதாக, திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங் குறிச்சி வரை அடுத்தடுத்து, குறைந்த தொலைவில் மேடைகள் கட்டி, முரசு வைத்திருப்பாராம். வரிசையாக முரசு அடித்துப் பூசை முடிந்த செய்தியை, ஒரு சில நுணுத்தங்களிலேயே (minutes), பாஞ்சாலங் குறிச்சிக்குத் தெரியப் படுத்துவாராம். ஒலிவழி செய்தி அறிவித்தலைப் போல இங்கு ஒருவர் மாற்றி ஒருவர் சுடரேற்றி மற்றவருக்குத் தெரியப் படுத்துகிறார். யாருக்குச் செய்தி போகிறது? தமிழர் எனும் கூட்டத்திற்குத் தானே? எனவே, அப் பணியில் எல்லோரும் தாராளமாய்க் கலந்து கொள்ளலாம்.

நண்பர் சாகரனுக்கு என் நினைவு அஞ்சலிகள். (அவரின் மறைவுக்கு முன்னால் ஒரு தடவை, அவர் சென்னையில் இருந்து தொலைபேசியில் பேசியது இன்னும் நினைவில் நிற்கிறது. அடுத்தமுறை உறுதியாய்ச் சந்திப்போம் என்று அவர் சொன்னதும் நினைவிற்கு வருகிறது. துடிப்பான இளைஞர்; எவ்வளவோ சாதித்தவர்; தமிழுக்கு இன்னும் பணி செய்திருப்பார்; பெரிய இழப்பு.)

இனி அருள்செல்வன் கொடுத்த கேள்விகளுக்கு என் மறுமொழிகள்:

1. நீங்கள் சென்ற கோவில்களிலேயே தமிழரின் வரலாற்றில் ஒரு பெரும் தாக்கத்தத்தை ஏற்படுத்தியது என நீங்கள் கருதுவது எது? ஏன்?

கோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும். அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகிலுள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் நான் சொல்வேன். (எங்கள் பக்கத்துக் கோயில் என்பதற்காக அப்படிச் சொல்லவில்லை.)

காளையார் கோயில் என்பது, இன்று கோயிலுக்கும் ஊருக்குமான பெயர். சங்க காலத்தில், கானப் பேரெயில் என்றுதான் ஊருக்குப் பெயர் இருந்தது. (கானத்தில் இருக்கும் பெருங்கோட்டை கானப் பேர் எயில்.)

சோழ நாட்டிலிருந்து, ஈழம் செல்ல ஒரு பக்கம் ஆதி சேது எனும் கோடியக் கரை; இன்னொரு பக்கம் மதுரை வழியாய் இராமேச்சுரம். இரண்டாவது வழியில், கடலாழம் அன்றைக்கு மிகவும் குறைவு; கிட்டத்தட்ட ஓராள், இரண்டாள் உயரம் தான் பல இடங்களில் இருக்கும்; வெகு எளிதில் ஈழம் போய்விடலாம். மதுரையில் இருந்து இராமேச்சுரம் போக, காளையார் கோவில் கானத்தைக் கடக்க வேண்டும்.

கானப்பேரை ஆண்டுவந்த கோதை மார்பனை வீழ்த்தி கானப் பேரெயிலைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கடந்ததாக சங்க இலக்கியம் பேசும். (அப்படிக் கடந்து, குறுநில மன்னனை தோற்கடித்தால் தானே நெல்லையும், நாஞ்சிலும், குமரியும் பாண்டியனின் கட்டுக்குள் தொடர்ந்து இருக்கும்?) இன்றைக்கு நாம் காணும் சங்க இலக்கியங்களைத் தொகுத்தது, இந்தப் பாண்டியனின் பேரவையில் தான்.

கானப்பேரெயிலைச் சுற்றியிருக்கும் காட்டின் அடர்த்தி தமிழக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டிருக்கிறது. பேரரசுச் சோழர் (imperial chozas) காலத்தில், இந்தக் காடு இற்றைப் பரப்பை விடப் பரந்து பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரை இருந்திருக்க வேண்டும். (அதே போல திண்டுக்கல், அழகர்கோயில் வரை இன்னொரு காடு தொட்டுக் கொண்டிருக்கும்.) கானத்தின் வடகிழக்கு எல்லையாய் கான் நாடு காத்தான் என்னும் பெயர் கொண்ட எங்கள் பக்கத்து ஊர் தென்படுகிறது. "இராசராசனும், இராசேந்திரனும், இன்ன பலரும், தங்களின் பெரும்படையை கானபேரெயிலின் வழி நகர்த்தி ஈழம் போயிருக்க வேண்டும்" என்று ஆய்வாளர் ஊகிக்கிறார். இலங்கையில் இருந்து படையெடுத்து வந்த இலங்காபுரத் தண்டநாதன் கூட, எதிர்வரவாய், மதுரை நோக்கிக் காளையார் கோயில் வழி படையெடுத்துப் போயிருக்கிறான். [சிங்களத்தாருக்கும், நமக்கும் இடையுற்ற உறவாடல்கள், சண்டைகள், பெண் கொடுப்பு, பண்பாட்டுப் பரிமாறல்கள் போன்றவற்றை நம் வரலாறுகள் சொல்லித் தருவதில்லை. வடபுலத்தாரைக் காட்டிலும் சிங்களத்தாரும், கன்னடத்தாரும் நமக்கு முகன்மையானவர் என்பதே வரலாற்று உண்மை.]

காளையார் கோயிலின் மூலவரைக் காளீசர் என்றும், அம்மனைச் சொன்னவல்லி (சொர்ணவல்லி) என்றும் அழைக்கிறார். காளியப்பன், சொர்ணவல்லி என்ற பெயர்கள் சிவகங்கை வட்டாரத்தில் மிகுதியும் உண்டு. கோயிலின் உள்ளே, அருகருகே, மூன்று கருவறைகள் உண்டு. காளீசருக்கு ஒருபக்கம் சோமேசரும், இன்னொரு பக்கம் மதுரையை நினைவுறுத்துமாப் போல சுந்தரேசரும் இருக்கிறார். இவர்களுக்கு நாயகியாய்ச் சுந்தர நாயகியும், அங்கயற்கண்ணியும், உண்டு. ஆக மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரு பெருங்கோயிலாய் மாறியுள்ளது. சம்பந்தர், சுந்தரரும், அருணகிரிநாதரும் இங்கு பாடியிருக்கிறார். பதினோறாம் திருமுறையும் பாடுகிறது. திருவருட்பாவிலும் சொல்லப் பட்டிருக்கிறது. சிற்பக் கலை சிறந்து விளங்கும் இக்கோயில் பெருமாண்டமானது. பலரும் பார்க்க வேண்டிய கோயில். [அண்மையில் வலைப்பதிவில் திரு. இராமநாதன் இக் கோயில் பார்த்ததை ஒளிப்படங்களோடு பதிவு செய்திருந்தார்.] வரகுண பாண்டியன் (1251-1261) காளீசருக்குத் திருப்பணி செய்து ஒரு சிறு கோபுரத்தை இங்கு எழுப்பியுள்ளான்.

பாண்டியருக்குப் பின்னால், நாயக்கர் ஆட்சியும், நவாபு ஆட்சியும் வந்து, முடிவில் சிவகங்கைச் சீமை முழுதும், 1604 ல் சேதுபதிகளுக்குக் கீழ் வந்து சேர்ந்திருக்கிறது. சேதுபதிகள் மதுரை நாயக்கர்களுக்கும், பின்னால் ஆற்காடு நவாபுக்களுக்கும் கீழ், தொட்டும் தொடாமலும், அவ்வப்போது கப்பம் கட்டி, அடங்கி இருந்திருக்கிறார். கிழவன் சேதுபதி (1674-1710)க்கு அப்புறம் வந்த அவர் மகன் விசயரகுநாத சேதுபதி, தன் மகள் அகிலாண்டேசுவரியை நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணம் முடித்ததில் இருந்து, சிவகங்கைச் சீமை ஒரு தனித்த நிலை பெறுகிறது. திருமணத்திற்குப் பின்னால், சேதுநாட்டில் இருந்து மூன்றில் ஒரு பங்கைப் பிரித்துச் சிவகங்கைச் சீமையில் சேர்க்கப் பட்டது. சேதுநாட்டிற்கும் சிவகங்கைச் சீமைக்கும் எப்பொழுதும் வெதுப்பும், கனிவுமாய் அடுத்தடுத்து உண்டு. கொள்வினை - கொடுப்பிணை இருக்கும் சீமைகள் அல்லவா?

சசிவர்ணரின் மைந்தர் முத்துவடுக நாதருக்கு (இவர் பூதக்க நாச்சியார் என்ற இன்னொரு அரசிக்குப் பிறந்தவர்; சேதுபதியின் மகள் அகிலாண்டேசுவரிக்கு பிள்ளைகள் கிடையாது). மெய்க்காப்பாளராய் வந்து சேர்ந்தவர் மருதிருவர். [இவர் பிறந்த ஊர் அருப்புக் கோட்டைப் பக்கம். இவர்களின் தாயார் ஊர் சிவகங்கைப் பக்கம்.] முத்துவடுகரை ஆங்கிலேயரும், ஆற்காடு நவாபும் சூழ்ச்சி செய்து தொலைத்த பின்னால், அவர் மனைவி வேலுநாச்சியார் ஆட்சிக்கு வந்தார். முத்துவடுகர் ஆட்சியிலும், வேலுநாச்சியார் ஆட்சியிலும் மருதிருவர் பெரும்பொறுப்பு வகித்தார். பெரிய மருது தலைமை அமைச்சராயும், சின்ன மருது தளபதியாயும் சேவை செய்தார். முடிவில், தாயாதிச் சண்டையில் இருந்து மீள்வதற்கு இடையில், வேலுநாச்சியார் பெரிய மருது சேர்வையையே மணஞ்செய்தார். அதற்குப்பின் நடந்த எல்லாப் புரிசையிலும் (practice) பெரிய மருது மன்னராகவே கருதப் பட்டார்.

மேலும் இங்கு நுணுகி விவரிக்காமல், மருதிருவர் காலத்தில் காளையார் கோயிலுக்கும் தமிழக வரலாற்றிற்கும், நாவலந்தீவின் விடுதலைப் பெருங்கடனத்திற்கும் (ப்ரகடனம்) உள்ள தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வுகளைக் கூற விரும்புகிறேன்.

காளீசர் கோயிலை இன்றிருக்கும் அளவிற்கு பெரிதாக்கிக் கட்டியவர் மருதிருவரே. மருதிருவரின் கோயில் திருப்பணிகள் பரந்து பட்டவை; அவற்றில் காளையார் கோவில் பணியே மிக உயர்ந்தது. பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது. மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். மதுரை தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால் (அல்லது தொலை நோக்காடி - telescope - கொண்டு பார்த்தால்), தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியுமாம். பழைய பாண்டியர் கால வழக்கப் படி, மதுரையைப் போலவே பெருங்கோபுரம் எடுத்து கோயிலைக் கட்டியதால் தான், மருதிருவர் பாண்டியர் என்றே மக்களால் அழைக்கப் பட்டார். நாட்டுப் பாடல் ஒன்று,

கருமலையிலே கல்லெடுத்து
காளையார் கோவில் உண்டுபண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மருது வாரதைப் பாருங்கடி

என்று அவர்களின் பெருமை சொல்லும். (இந்தப் பாட்டு "சிவகங்கைச் சீமை" திரைப்படத்திலும் வரும். பார்க்க வேண்டிய படம். கண்ணதாசன் எடுத்த படம். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிலும் நல்ல வரலாற்றுப் படம்.)

கோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகிலுள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை - மானாமதுரை - முடிக்கரை - காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டுவரப் பட்டது. இதுபோன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை. இக்கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு. (காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் - தியாகம் - செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும்; இன்னொரு முறை பார்க்கலாம்.) 1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது. கோயிலுக்குத் தெற்கே உள்ள ஆனைமடு ஊருணி மிகவும் பெரியது. மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அளவிற்கு அது இருக்கும்.

மருதிருவருக்கு கிட்டத்தட்ட 2 ஆம் தலைநகராகவே காளையார் கோவில் இருந்தது. அவரின் படைகள் குவிக்கப் பட்டு, படைத் தளமும் அங்கு தான் இருந்தது. படைத்தளபதி சின்ன மருது, சிறுவயலில் அரண்மனையில் தங்கியது போக, பெரும்பாலான நேரம் காளையார் கோயிலிலேயே இருந்து, படைநடவடிக்கைகளை கவனித்திருக்கிறார். அத்தனை படைத் தளவாடங்களும் கானப்பேர்க் கோட்டைக்குள் தான் இருந்தன. படையும் சிறப்பான திறமைகள் பெற்று ஆங்கிலேயர் படைக்குச் சரிநிகர் சமானமாய்த்தான் இருந்தது. இந்தக் காட்டினுள் மருதிருவரும் அலையாத இடம் கிடையாது.

பின்னால், மருது பாண்டியருக்கும் ஆங்கிலேயருக்கும் (கூடவே ஆற்காடு நவாபுக்கும்) இடையே, வரிவிதிப்பு மீறல், தன்னாளுமை போன்றவற்றால் பெருத்த சண்டைகள் ஏற்பட்டன. அக் காலத்தில் சின்ன மருது ஒரு பெரிய தடவழி (strategy)க்காரர். படையுத்திகளில் வல்லவர். தன் நாட்டு விடுதலையை மட்டும் பாராமல், நாவலந்தீவின் விடுதலைக்கே முதன்மையாய், வெள்ளைக் காரரை வெளியேற்ற வேண்டி, ஓர் எதிர்ப்புப் போராளி முன்னணியையே, அவர் உருவாக்கினார். அதில் திப்பு சுல்தான், வட கேரளக் குறுநிலக் காரர்கள், கன்னட அரசர், மராட்டியத் தலைவர், பாஞ்சாலங் குறிச்சி முதற்கொண்டு பல்வேறு தமிழகப் பாளையக் காரர், போராளிக் கழகங்கள் என்று பல்வேறு உறுப்பினர் இருந்திருக்கிறார். தென்னிந்திய அளவில் இந்த முன்னணி விரிந்து பரந்திருந்தது. இவர்களின் கூட்டங்கள் பலகாலம் திண்டுக்கல், திருப்பாச்சிப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கூட்டணியின் தலைவரான சின்னமருதுவின் தடவழிக்கு இணங்கவே யாவரும் பணியாற்றியிருக்கிறார். சின்னப் பாண்டியரின் "ஜம்புத்வீபப் பிரகடனம்" - படிக்க வேண்டிய ஒன்று - 1801 ஜூன் 16 க்கு முன்னால் திருவரங்கம் கோயிலின் வெளிமதிலில் முதன்முதலாய் இது ஒட்டப் பெற்றது. (வேடிக்கையைப் பார்த்தீர்களா? இந்திய விடுதலையின் முதல் எழுச்சி வெளியீடு சீரங்கம் அரங்கன் கோயிற்சுவரில் ஒட்டப் பட்டுள்ளது. ) பின்னால், திருச்சிக்கோட்டையின் வெளிச்சுவரிலும் ஒட்டப் பட்டது.

இச் சீரங்க வெளியீட்டை அறிந்த ஆங்கிலேய அரசு, (அப்பொழுது சென்னையில் ஆங்கிலேய ஆட்சியாளர் இராபர்ட் கிளைவின் மகனான எட்வர்ட் கிளைவ்.)  6.7.1801 ல் எதிர்ப்பு முன்னணியை முளையிலேயே கிள்ள வேண்டும் என்ற நோக்கில், அரசாணை பிறப்பித்தது. ஆங்கிலேயர் படையினர், பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கி, ஒவ்வொருவராய் அழித்து, இடையில் மைசூரையும் 2 மாதங்களில் தொலைத்து, முடிவில் சிவகங்கைக்கு வந்தார். கிட்டத் தட்ட 1801 மார்ச்சில் இருந்து அக்டோ பர் வரை 8 மாதங்கள் சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டனர். ஆங்காங்கே சிறுசிறு வெற்றிகள் பெற்றாலும் முழு வெற்றியை ஆங்கிலேயரால் பெறவே முடியவில்லை. இத்தனைக்கும், அதுவரை இந்தியாவில் நடந்த எந்தப் போரிலும், இவ்வளவு ஐரோப்பியர் இறந்ததில்லையாம்; சிவகங்கைப் போரில் தான் அதிகம் பேர் இறந்திருக்கின்றனர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தீர்மானமாய் நிலைத்ததில் இந்தப் போர் முகன்மையானது. (This war was decisive in firmly establishing English rule in India).

"காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; முன்னணி உடையும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நாவலந்தீவில் நிலைக்கும்" என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி வளைத்தான். 40 மைல் சுற்றளவும், குறுக்கே 11-12 மைல் நீளமும் கொண்ட காட்டின் இடையே அப்பொழுது வயல்களோ, ஊர்களோ இல்லை. காட்டை ஒரு பக்கம் வெட்டத் தொடங்கினால், நிழல் குறைந்து ஆங்கிலேயர் அணி (அதனுள் இந்தியர் மட்டுமில்லை, மலாய்க்காரரும் இருந்தனர்.) வெய்யிலில் நகர முடியாமல் தடைப் பட்டது. காட்டிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. முடிவில், காட்டிக் கொடுத்தவர்களின் உதவியோடு, மருதுப்படை பயன்படுத்திய கமுக்க (secret) வழியை அறிந்து, அதன் வழியே படைநடத்தி, 30/9/1801 இரவு கழிந்து மறுநாள் புலரும் நேரத்தில், காளையார்கோவில் ஊர்வாயிலுக்கு அக்னியூ வந்து சேர்ந்தான்.

அதற்கிடையில் ஒற்றர் மூலம் "கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க" அக்னியூ திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு செயலைச் செய்தார். (பீரங்கி வைத்து பிளப்பது என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைக் குமுகத்தில் பலரும் ஆங்கிலேயர் காலத்தில் அறிந்த காரணத்தால், பின்னொரு காலத்தில் பாரதிதாசன் வேடிக்கையாகச் சொல்வார்: (இது பாரதிதாசன் சொன்னதில்லை. வேறொருவர் சொன்னார் என்று வழக்கு உண்டு). "சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?" ஒரு சிலர் கோவப் படாதீர்!! இங்கே கோபுரம் பிளக்கும் கதை தான் குறியிடப் படுகிறது ;-))

கில்ஜிகளின் காலத்தில், திருவரங்கக் கோயில் உலாத் திருமேனிகளுக்கு ஆபத்து வந்த போது, காளையார் கோயிலில் தான் அவை பாதுகாக்கப் பட்டன. (இது திருக்கோட்டியூர் வழியான தொடர்பு. இராமனுசர் காலத்தையும் அவருக்குப் பின் ஏற்பட்ட உறவுகளையும் இங்கு எண்ணிக் கொள்ளுங்கள். இன்றைக்கும் திருக்கோட்டியூர் சிவகங்கைச் சமத்தானக் கோயில் தான்.) இப்பொழுது காளையார் கோவிலுக்கே பாதகம் என்றால், என்ன செய்வது? 1783 - ல், திருவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தகர்ப்பதாய் அறிவித்து, நெல்லைப் பாளையக்காரர்கள் கப்பம் கட்ட ஒப்பிய பின்னரே, ஆங்கிலேயர் கோபுரத் தகர்ப்பைக் கைவிட்டனர். [இன்றைக்குத் தமிழ்நாடு அரசின் சின்னமாகப் போற்றுகிறோமே அந்தக் கோபுரம் தான் இது.] இதே போல சங்கரன் கோயில் கோபுரத்தையும் (பார்க்க வேண்டிய கோயில்) இடிப்பதாக அறிவித்த பின்னால், நெல்கட்டும் செவல் பூலித்தேவர், கோயில், கோபுரம் காப்பாற்றுவதற்காகச் சண்டையிடாமல் சரணடைந்தார். கோபுரத்திற்காக எதிரியிடம் சரண் அடைந்தோர் தமிழக வரலாற்றில் பலர். கோபுரங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகள் தமிழகத்தில் மிகுதி.

அத்தனையையும் சீர்தூக்கிப் பார்த்த மருதிருவர், இரவோடு இரவாய் 78000 பேர் கொண்ட தங்கள் படையை, தளவாடங்களுடன், நகரை விட்டு நகர்த்தியிருக்கிறார். 1801 அக்டோபர் முதல் தேதி அக்னியூ ஊரில் நுழைந்தான்; ஓர் எதிர்ப்பும் இல்லை. முடிவில் ஒரு வெடி வெடிக்காமல், ஒரு துமுக்கு (rifle) வேட்டு இல்லாமல், ஒரு குண்டு இல்லாமல், ஆங்கிலேயர் கொடி காளிசர் கோபுரத்தின் உச்ச கலசத்தின் மேல் ஏறிப் பறக்க விடப்பட்டது; கவனம் கொள்ளுங்கள், கொடி பறந்தது கோட்டை வாசலில் அல்ல; கோபுர உயரத்தில். ஆக, காளீசர் கோபுரத்தையே ஆங்கிலேயர் பிடித்தார். அதில் தான் அவரின் முழுக்கவனமும் இருந்தது. [பின்னால் அக்னியூவின் கோபுரத் தகர்ப்பு ஆணை ஆங்கிலேய அரசிதழிலேயே வெளிவந்தது.]

ஆக ஒரு கோபுரத்திற்காக, அதைக் காப்பாற்றுவதற்காக, தமிழக விடுதலை, ஏன் இந்திய விடுதலை, 146 ஆண்டுகள் தள்ளிப் போனது. போரே இலாது போனதால், போராளிகளின் போராட்டமும் பின்னால் பிசுபிசுத்தது. இத்தனைக்கும் மருதுபாண்டியர் பெருத்த வலிமையுடன் இருந்தார் என்றுதான் வரலாறு சொல்லுகிறது. மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய பெரிய மருது, காளீசர் கோபுரத்தைக் காக்காமல் வேறென்ன செய்வார்? "இப்படி நடந்திருக்குமானால் - what if" என்ற கேள்வி வரலாற்றில் சிக்கலானது. ஆனாலும், சின்ன மருதுவின் "ஜம்புத்வீபப் பிரகடனம்" படித்தவருக்கும், அந்தக் காலப் போர்க் கூட்டணியைப் புரிந்து கொண்டவருக்கும், கிழக்கிந்தியக் கும்பனியின் பெரிய போர் முயற்சியை ஆழ்ந்து ஆய்ந்தவருக்கும் நான் சொல்வது புரியும். It is perplexing that we lost an opportunity of throwing out the English rule just for the sake of a Temple Tower.

இன்றையத் தமிழ் இளையர் புரிந்துகொள்ள வேண்டும். நான் சொன்னது கதையல்ல, உண்மை. காளையார்கோயில் போர், இந்திய விடுதலையின் ஒரு முகன்மைக் குறியீடு. (வேலூர்க் கோட்டைச் சிப்பாய்ப் புரட்சியெல்லாம் அதற்கு அப்புறம் வந்தது, 1857 ல் வடக்கே நடந்த சிப்பாய்ப் புரட்சியும் இன்னும் பல ஆண்டு கழித்து வந்தது.) இந்திய வரலாற்றில் மருது பாண்டியரின் பங்களிப்பு சரியான முறையில் மக்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை.

காளையார் கோயிலை வசப்படுத்திய அக்னியு, பத்தே நாட்களில், அக்டோபர் 11 அன்று, அக்காட்டைக் கொளுத்தினான்; சிவகங்கை, திண்டுக்கல் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான் அந்தச் சீமை; காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது. உடனிருந்த மெய்க்காப்பாளன் கருத்தான் காட்டிக் கொடுக்க, தொடையில் குண்டடி பட்டு, சின்னப் பாண்டியர் 4/10/1801 லேயே கைதானார். அடுத்த நாளில் கருத்தானின் கைகாட்டலில், அவருக்கு இருந்த பக்கவாதக் குறைவை சூழ்ச்சியால் ஏற்பட வைத்து, பெரிய பாண்டியரைக் கைது செய்தனர். (2 பாண்டியரும், நாட்டின்மேல் இருந்த காதலால், காளையார் கோவில் காட்டை விட்டு, அகலவே இல்லை; நினைத்திருந்தால் வட கேரளத்திற்கும், கன்னட தேசத்திற்கும் தப்பி, பின்னால் மீண்டு வந்து, அணி சேர்த்து, ஆங்கிலேயருக்கு எதிராய்த் திரும்பவும் படையெடுத்திருக்கலாம்; ஆனால் செய்யவில்லை. மக்களின் மேல் இருந்த பற்று, நாட்டை விட்டு நகர வைக்காமல், அவர் கண்ணை மறைத்தது.) இருவரும் திருப்புத்தூரில் அக்டோ பர் 24-ல் தூக்கில் இடப்பட்டனர். சிவகங்கை அரசகுலம் அந்த மூன்றே வாரத்தில் ஒருவரில்லாமல் முற்றிலுமாய்க் கருவறுக்கப் பட்டது.

மருதிருவர், சிவகங்கை பற்றிய நிறையச் செய்திகளை, வரலாற்றின் இந்தப் பகுதியை அறிய விரும்புவோர், பெரியவர் செயபாரதியின் அகத்தியர் மடலாடற் குழுவிற்குப் போனால், ஏராளமாய்ப் படிக்க முடியும். கூடவே மீ.மனோகரனின் "மருது பாண்டிய மன்னர்கள் 1780-1801" என்ற பொத்தகத்தையும் (அன்னம் வெளியீடு, 2, சிவன்கோயில் தெற்குத் தெரும் சிவகங்கை 623 560) படிப்பதற்கு நான் பரிந்துரை செய்வேன்.

2. திராவிட இயக்கத்தின் தமிழ்ப் பங்களிப்பை வரலாற்று நோக்கில் எப்படி கணிப்பீர்கள். ஒரு தமிழறிஞரின் பார்வையில் கேட்கிறேன். சிறுபத்திரிக்கை இயக்கத்தினரின் 'இலக்கிய' மதிப்பீடுகளைப் பற்றி இதில் கணக்கில் கொள்ளாமல் கணிக்கவும். (அல்லது) தமிழருக்குத் தம் மொழியின் மீது ஏன் இத்தனை வெறுப்பு? விளையாட்டாகக் கேட்க வில்லை. காண்பதைத் தான் கேட்கிறேன்.

நீங்கள் கேட்டிருக்கும் அடுத்த கேள்வியும் இக்கேள்வியும் தொடர்பு கொண்டவை. முற்றிலும் வெறுப்பு, பகைமை என்று பொதுப்படச் சொல்வதைக் காட்டிலும் அலட்சியம், வேண்டாவெறுப்பு, ஒருவித கீழ்நோக்குப் பார்வை, என்றே நான் சொல்வேன்.

கருப்பாய் இருக்கும் பெரும்பாலான தமிழ் ஆண்கள், கொஞ்சம் வெளிறிய நிறம் கொண்ட சிவப்புப் பெண்களையே மணம் செய்யத் தேடிக் கொண்டிருப்பதைப் போல் இதை உணரவேண்டும். பெருமிதம் குறைந்து போய், அடிமைத்தனம் ஊறிக் கிடக்கிற காரணத்தால், "ஆங்கிலம் உசத்தி. தமிழ் தாழ்த்தி" என்ற முட்டாள்ப் புரிதலால் இது அமைகிறது. இங்கு நான் சொல்லும் எடுத்துக் காட்டிற்கு மன்னியுங்கள். "எப்படி அமெரிக்க வெள்ளையரின் மேலாட்சியால், அமெரிக்கக் கருப்பர் தம் பெருமிதத்தை 400 ஆண்டுகளில் தொலைத்தாரோ அதுபோல, நாமும் பெருமிதம் தொலைத்தோம்." (எவ்வளவு வறுமையிலும், ஒரு கிழக்கு ஆப்பிரிக்கனின் பெருமிதம் குலையாது இருப்பான். கூர்ந்து கவனியுங்கள்.) இப்படி ஓர் அடிமைத்தனத்தை எளிதில் ஏற்படுத்த முடியும் என்று ஓர்ந்து தான், 1835ல் மக்காலே ஆங்கிலவழி படிப்பை இந்தியாவில் கொண்டு வந்தான். இதில் என்ன வியப்பென்றால், 1971 வரையிலும் மனத்தால் அடிமையாகும் புத்தி, அவ்வளவு காட்டுத்தீயாய், நம்மிடை பரவவில்லை. அதற்குப் பின், தமிழ், தமிழ் என்று வாய் ஓயாமல் பேசிய நம் அரசுத் தலைவரே, நமக்குக் கொள்ளி வைத்தார். அதைப் பேசுமுன், மக்காலேயின் பேச்சை அறிந்து கொள்வோம்.

Lord McCauley - A British writer, historian and Parliamentarian, responsible for making the choice of Modern English Education for Indians stated in his speech of Feb 2, 1835 at British Parliament.

"I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation".

மக்காலேயின் சீடரான கழக ஆட்சியினரே, தமிழைப் பாடமொழியாகக் கொள்ளும் போக்கை வெகு எளிதில் கொன்றார். அதைப் பேராயம் (congress) செய்யவில்லை. கழக ஆட்சியினர் மேலுள்ள என் கோவம் இதில் தான் தொடங்குகிறது.

20ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் என்பது மணிப்பவளமாய் விரைந்து கரைவதை நிறுத்த மறைமலை அடிகள் தலைமையில் ஓர் இயக்கமே தேவைப் பட்டது. தமிழ்நடையும், தமிழுணர்வும், பண்பாட்டுப் பெருமிதங்களும் ஒருவழியாய் மீண்டு வந்தன. அந்த உணர்வுகளின் கனிகளைத் திராவிட இயக்கங்கள் நன்றாகவே கைக்கொண்டு சுவைத்தன. 

1967ல் இந்த இயக்கத்தின் குறிக்கோள்களை இவர் அரசதிகாரம் கொண்டு ஓரளவாவது நிறைவேற்றுவார் என எண்ணியது, 2,3 ஆண்டுகளில் நீர்த்துப் போனது, காய்ந்த மாடு கழனியில் பாய்ந்த கதையாய், பணம், பதவி, சொத்து, சுற்றம் என இவர் சோரமாகிப் போனார்; ஊழலும், கையூட்டுமாய், பணம், பணம் என்று இவர் அலைந்து கொண்டிருப்பதைக் கண்டு பலர் மனங்கள் பெரிதும் வாடுகின்றன. இவரில் இருந்து 72-75 களில் பிரிந்து போன தாயாதிக்காரரும் இவருக்குச் சளைத்தவர் இல்லை. அண்ணன், தம்பி என இரண்டு பேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இதில் ஐயாவென்ன, அம்மாவென்ன? எல்லோரும் ஒன்று தான்.

திராவிடத்தின் மூலம் தமிழியம் என்றாலும், தமிழியத்திற்கு எதிராகவே, இவரின் செயல்கள் ஆகிப் போயின. "படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்" என்ற சொலவடை இவரைப் பொறுத்தவரை, முழு உண்மையானது. 

பகுத்தறிவு என்றார், மூடநம்பிக்கையை வளர்த்தார்; 
தமிழென்றார், தமிங்கிலம் வளர இவரே துணை நின்றார்; 
குமுகாயத்தின் அடிநிலை மக்கள் வளர்வார் என்றார், ஒரு சிலர் மட்டுமே உயர வழிவகுத்தார். 
தெற்கு தேயாது என்றார், அது தேய்ந்தே போனது. 

முடிவில் 35 ஆண்டுகளில் "மாநிலமாவது, ஒன்றாவது" என ஆக்கி வைத்தார். இப்போது வெறும் வாயிதழ்கள் மட்டுமே இவரிடம் அசைந்து கொண்டுள்ளன. இவரின் பங்காளிச் சண்டையில் மாநிலம் சீரழிந்தது தான் மிச்சம். திராவிடம் என்ற கருத்தீட்டை உள்ளார்ந்து இவர் மறந்து, அநேக நாட்களாயிற்று. 

இப்பொழுது, அனைத்திந்திய சோதியில் இரண்டறக் கலந்து, ஒன்றி, மெய்ம்மறந்து இருக்கிறார். இவரைப் பற்றிப் பேசினாலே நம் மனம் கசப்பது தான் மிச்சம். 1965 - 67 களில் இவருக்காக வேலைசெய்த என்னைப் போன்ற அகவையினர் பலரும் மனம் சலித்துப் போய்விட்டார். "இவரைக் கொண்டு வரவா இவ்வளவு பாடுபட்டோம்?" என்று எண்ணத் தோன்றுகிறது.)

எங்கு பார்த்தாலும் இன்று ஆங்கிலமே கோலோச்சுகிறது. மக்காலே பெரிதும் மகிழ்ச்சிப்பட்டுப் போயிருப்பான். அவன் செய்யாததை, இவர் செய்து விட்டார் அல்லவா? "தமிழ் சோறு போடுமா?" என்ற கேள்வியைப் பலரும் இன்று கேட்கிறார், "சோறு போடாத மொழி எனக்கெதற்கு?" என்ற எண்ணமும் மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாய் ஊடுறுவுகிறது. ("தமிழெனும் கேள்வி" என்ற என் பழைய கட்டுரையைத் திரும்பப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.) 

தமிழ் இல்லாத தமிழனுக்கு, முகவரி உண்டோ? அவன் இந்திக் கூடத்தில், ஆங்கிலத்தில், கரைந்தல்லவா விடுவான்? அது தானே கயானாவில் நடந்தது? பிஜியில் நடந்தது? மொரிசியசில் நடந்தது? முடிவில் சோகத்தோடு சொல்ல வேண்டியுள்ளது, இந்தியாவிலும் அது நடக்கலாம். தமிழராகிய நாம் விழித்துக் கொண்டால் ஒழிய இது மாறாது. இல்லையெனில் எல்லாம் போயே போயிந்தி.

"தமிழ் என்பது பழமைபேசும் மொழியல்ல, வீட்டில் வேலைக்காரரோடும், வெளியே விளிம்புநிலை மாந்தரொடும் வேண்டாவெறுப்பாய், அலட்சியத்தோடு, கீழ்நிலை நோக்காய்ப் பார்த்துப் பேசும் மொழியல்ல" என்று நடுத்தர வருக்கத் தமிழர் என்று உணருவாரோ? 

இம் மனப்பான்மை மாறினால் தான் மேலே கூறிய அலட்சியம், வேண்டாவெறுப்பு, கீழ்த்தரப் பார்வை போன்றவை போகும். "காதலிக்க நேரமில்லை" என்ற படம் பார்த்திருக்கிறீரா? அதில் செல்லப்பாவின் (நாகேசு) உடன்பிறந்தார் சொல்வார்: "We don't see Tamil Pictures; we only see English Pictures" அது போல "We don't speak Tamil here; We speak only English" என்பதுதான் நகரங்களில் இன்றையப் பரவலான நிலை. 

சென்னையின் பல அலுவங்களில் (offices), அது அரசோ, தனியார் அலுவமோ என எது இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசினால் தான் இன்று உங்களுக்கு மரியாதை; தமிழில் பேசினால் "தள்ளி நில்லு, அப்புறம் வருகிறேன்" என்று தான் அதிகாரிகள் சொல்கிறார். வெள்ளைக்காரன் காலத்தில் Gymkhana Club -ல் Indians and dogs are not allowed என்று எழுதிப் போட்டிருக்குமாம். இன்றைக்கு சென்னையில் St.Michaels பள்ளியிலும், மதுரையில் ஏதோ ஒரு பள்ளியிலும், தமிழில் பேசின்வெளியே நில் தான். தமிழ் நாட்டில், தரும மிகு சென்னையில், தமிழ் பேசப் பலரும் வெட்கப்படுகிறார்.

ஓரோ பொழுது, நான் எண்ணுவது உண்டு. "தமிங்கிலரெனும் புதிய இனத்தார் (இதற்கு முந்திப் பிரிந்தவர் மலையாளத்தார்) தமிழரில் இருந்து பிரிந்து விட்டாரோ? அவர் வேறு, தமிழர் வேறென ஆகிவிட்டதோ?" என்று எண்ணுவேன். ஆனாலும், முயன்று பாடுபட்டால், தமிங்கிலத்தை ஒழிக்கலாம் என்ற எண்ணமும் உள்மனத்துள் ஓடிக்கொண்டுள்ளது.

பாருங்களேன், அண்மையில் ஒருவர் எழுதப் போக, தமிழ்மணத் திரட்டி யெங்கும் weird என்ற ஆங்கிலச்சொல் தான் ஓடிக்கொண்டுள்ளது. விந்தை என்ற சொல் இவரைப் பொறுத்து அழிந்தே போய்விட்டது இல்லையா? இப்படித் தான் ஒவ்வொரு சொல்லாய் தமிழர் மறந்து தொலைப்பார். (விந்தையின் விளக்கம், அது weird-ஓடு பொருந்துவது பற்றியெல்லாம் இங்கு எழுதுவது வீண் என்றே எனக்குத் தோன்றுகிறது. தமிழின் மேல் இவருக்கு ஆர்வமே இல்லையென்றால், அப்புறம் என்ன விளக்கம் சொல்லுவது, போங்கள்.) பயன்படுத்தாத ஏதொன்றும் மறந்துபோகும் அல்லவா?

அதே பொழுது, நெற்றியில் இப்படி அடித்துக் கொள்வதோடு நிற்காமல், இது மாற ஒரு வழி செய்ய வேண்டும் என்றும் உணர்கிறேன். நான் அறிந்தவரை, மடிக்குழைப்பள்ளிகளின் (matriculation schools) அதிகாரத்தைக் குறைப்பதில் தான் தமிழின் எதிர்காலமே உள்ளது. இதற்குத் தோதாய் தமிழக அரசின் கல்வித்துறையில் ஒரு புரட்சியே நடைபெற வேண்டும். அதற்கு வலுவான அரசியல் தலைமை வேண்டும்.

3. அறிவியல் தமிழ் என்று நிறையப் பேசுகிறோம். அரசு ஏன் எதுவுமே இப்போதெல்லாம் இதற்காக ச்செய்வதில்லை. ஒரு கலைக்களஞ்சியத்தை இற்றைப்படுத்த முயற்சியாவது இருக்கிறதா? இணையம் இதில் பங்களிப்பது என்பது எந்த அளவு நடைமுறையில் சாத்தியம்?

அறிவியல் தமிழ் என்பது இன்றைக்கு வெறுமே ஏட்டளவில் தான் உள்ளது. இப்பொழுது, நாம் சறுக்கிய நிலையில் உள்ளோம். முன்னே சொன்னது போல் மடிக்குழைப் பள்ளிகள் (matriculation schools) பெருகிப் போய், பள்ளியில் தமிழில் படிப்பதே அருகிய நிலையில், தமிழில் அறிவியல் பெருகும் என்றா நினைக்கிறீர்கள்? 

நம்மூரில் ஆங்கிலத்தில் பேச்சுத் திறமை வளர்த்துக் கொள்வதற்கும், ஆங்கிலத்தின் மூலமாய் எல்லாவற்றையும் பள்ளியில் படிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூடப் பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்; சண்டித்தனம் செய்கிறார். 

நாங்கள் (1964க்கு முன்னால்) பள்ளியில் படிக்கும் போது, மாநிலம் எங்கும், ஒரு 10 பள்ளிகள் மடிக்குழைப் பள்ளிகளாய் இருந்தாலே வியப்பு. இன்றைக்கோ, இரண்டாயிரத்து ஐந்நூற்றிற்கும் மேல் இருக்கின்றன. 

மாநிலத்தில் தமிழில் படிப்பவன் இன்று முட்டாளாய்த் தெரிகிறான். அவனுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாய் உள்ளது. "Tamil medium, get out; no job." முதலில் நம் பள்ளிகளில் தமிழ் நிலைத்தால் ஒழிய, அறிவியல் தமிழ் வளரவே வளராது. முதலில் பள்ளிகளில் நிலைத்து, பின் கல்லூரிக்குப் பரவி முடிவில் ஆய்வுக்குப் பழக வேண்டும். இதுவெல்லாம் நடக்கும் என 1971 வரை நாங்கள் நினைத்த முயற்சி, கழகத்தாரின் திருகுவேலையால் பின்னடைந்து, உருப் படாது போயிற்று. இப்பொழுது ஆங்கிலவழிப் படிப்பையே இரு கட்சியினரும் போட்டி போட்டு வளர்க்கிறார். தமிழுக்கு அதிகாரம் கொண்டு தர, இன்னொரு இயக்கம் தான் இனி வரவேண்டும்.

கலைக் களஞ்சியங்களைப் புதுப்பிக்கும் வேலை அங்கொன்றும், இங்கொன்றும் என நடைபெறுகிறது. அகரமுதலிகளிலும், தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் பெருஞ் சொல்லகராதி (4 தொகுதிகளோடு நின்று போயிற்று, மேற்கொண்டு காணோம்.), ப,அருளியின் முயற்சியால் வெளிவந்த அருங்கலைச்சொல் அகரமுதலி போன்றவை நல்ல முயற்சிகள். மணவை முஸ்தாபா தனித்து அறிவியல் அகரமுதலிகள் வெளியிட்டு வருகிறார். 

சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி இன்னும் திருத்தி வெளியிடப் படாமல் இருக்கிறது. தமிழ்வளர்ச்சித் துறை வெளியிடும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியில் நான்காம் மடலம் - மூன்றாம் பாகத்துடன் (தௌ வரை) 2004- ஆம் ஆண்டோடு நின்று போனது. அதற்கு அப்புறம் ஒன்றும் காணோம். எப்போது புது எழுச்சி வரும் என்று தெரியவில்லை. அந்த அகரமுதலியின் விரிவும் ஆழமும் கூடச் சிறுகச் சிறுகக் குறைந்து வருகிறது. பாவாணருக்குப் பின் கொஞ்சகாலம் இரா.மதிவாணன் பார்த்தார்; இப்பொழுது இருப்பவரால், கவனிப்பு குறைந்து போனது என்றே எனக்குத் தோற்றுகிறது.

இணையத்தால் முடியுமா, என்று கேட்டால் முடியும்; ஆனால் வெகு நாட்கள் ஆகும். இணையத்தில் செய்வதற்குக் கூட, அரசின் உதவியில்லாமல், பெருத்த முதலீடு இல்லாமல், ஒரு நிறுவன முயற்சியில்லாமல், வழியில்லை. என்னைக் கேட்டால், இதைச் செய்வதற்குச் சரியான மானகை நெறியாளர் (managing director) வேண்டும். வல்லுநர் பலரும் நம் நாட்டில் இருக்கிறார். ஆனால் நெறியாள்கை தான் சரியில்லை. நம்மூர்த் திட்டங்களின் பெருங்குறையே மானகைக் குறைவு தான்.

4. உங்களுக்குப் பிடித்த எம்ஜீஆர் படம் எது, ஏன்? . உங்களுக்குப் பிடித்த ஹாலிவுட் படம் எது, ஏன்?

ம.கோ.இரா. படங்கள் பலவும் பார்த்திருக்கிறேன். அது என்னமோ தெரிய வில்லை, சிவாசியின் படங்களைக் காட்டிலும், இவர் படங்களை இன்றும் கூட அலுக்காமல் பார்க்கலாம். ஏனென்றால், ம.கோ.இரா. வின் படங்களில் அமையும் கதைப் போக்கில் பலக்கிய தன்மை (complexity) இராமல், நீரோட்டமாக, பழைய கால சங்கரதாசு சுவாமிகள் நாடகப் போக்கோடு, இருக்கும். கிட்டத்தட்ட கூத்துப் பார்க்கும் உணர்வு தான். இன்றைக்கும் கோவலன் - கண்ணகி, கீசக வதம், பவளக்கொடி, ஆகியவற்றை நாட்டுப் புறத்தில் பார்க்கிறாரே, அதுபோலத் தான் இவர் படமும். 

ம.கோ.இரா. படத்திற்குள், மாறுவேடம் போட்டுச் சிறு சிறு காட்சிகள் வரும் பாருங்கள் அதில் ஒரு நளினமும், குறும்புத் தனமும் நிறைந்திருக்கும். ம.கோ. இரா, மிளிர்வது அதுபோன்ற காட்சிகளில் தான். (காட்டு படகோட்டி படத்தில் வளையல்காரராய்ச் சிறிதுநேரம் வருவார், நினைவிருக்கிறதா?) அவர் படங்களைப் பார்த்ததில் பெரிதும் பிடித்தது, குலேபகாவலி, நாடோடி மன்னன், தாய் சொல்லைத் தட்டாதே, அரசிளங்குமரி, எங்க வீட்டுப் பிள்ளை, படகோட்டி, அன்பே வா - இன்னும் நிறையச் சொல்லலாம்.

ஹாலிவுட் படங்கள், அண்மையில் சில ஆண்டுகளாய்ப் பார்ப்பது பெரிதும் குறைந்துவிட்டது. ஒருகாலத்தில் பித்துக் கொண்டு, கிட்டத்தட்ட எல்லாவகைப் படங்களையும் பார்த்தேன். (Alien போன்ற அருவருப்பு எழுப்பும் சில படங்களைத் தவிர்த்திருக்கிறேன்.) பல தடவை பார்த்த படம் Sound of Music. ஏன் என்றால் அதில்வரும் பாட்டுகள்; படம் எடுத்த விதம், பேச்சு நடை இன்னும் பல. 

Star trek series தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலுமாய் விடாது பார்த்துக் கொண்டிருந்தேன். (star wars -ஐக் காட்டிலும் star trek - ஏ எனக்குப் பிடித்தது.) என் star trek பித்தைப் பார்த்து என் மனையாள் சொல்ல முடியாமல் தவிப்பாள். அதுவும் Spock - யைக் கண்டால் அவளுக்கு ஆகவே ஆகாது. "என்ன இருக்கிறது என இதைப் பார்த்துக் கொண்டுள்ளீர்கள்?" என்பாள். 

Steven Spielberg படங்களையும் பெரும்பாலும் பார்த்துவிடுவேன். Eddy Murphy, Robin Williams படங்களும் பார்க்க விழைவேன் தான். Come September, Guess who is coming to the dinner?, My fair lady, Towering Inferno, Mrs.Doubtfire, Brave Heart, Titanic என்று வெவ்வேறு காலப் படங்கள் இப்போது சட்டென நினைவுக்கு வருகின்றன. 

Shogun TV series என்னைக் கவர்ந்த ஒரு தொகுதி. அண்மையில் பெரும்பாலும் தொலைக்காட்சியிலேயே ஆங்கிலப் படங்களைப் பார்த்துக் கொண்டுள்ளேன்.

5. உங்கள் சிறுவயது, நடுவயது, தற்போதைய பொழுதுபோக்குகளைப் பற்றிக் கொஞ்சம் கூறவும்.

சிறுவயதுப் பொழுதுபோக்கு: பல்வேறு வினைப் பொருட்களைச் செய்வது, கரிக்குச்சி (pencil) வரைபடங்கள், அஞ்சல் தலை சேகரிப்பு.

நடுவயதுப் பொழுதுபோக்கு: வரைகலை, ஓவியம் (குறிப்பாய்ப் பெருஞ்சுவர்களில் வரைவது), கவிதை, நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பு, பேச்சு, நாடகம் (கதை, உரையாடல், நெறியாக்கம்), மலையேறல், வளைதடியாட்டம் (hockey), தமிழிசை (கூடவே தமிழில் வரும் கருநாடக இசைப் பாடல்கள்), ஊர் சுற்றல்,

தற்போதையப் பொழுதுபோக்கு: இணையத் துழாவல், பொத்தகப் படிப்பு (தமிழ், ஆங்கிலம், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது வேற்றுமொழி அகரமுதலிகளை அருகில் வைத்துப் புரட்டிக் கொண்டே இருப்பது), எழுதுகை (கவிதை, கட்டுரை மட்டுமே. கதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்.), ஊர்சுற்றல் (108 பெருமாள் கோயில்களை நேரம் கிடைக்கும் போது பார்த்துவிட வேண்டும் என்று முயன்று, கிட்டத் தட்ட 70க்கு அருகில் வந்துவிட்டேன்.), காலை நடை

அடுத்து சுடரை ஏற்றி வைக்க நான் அழைப்பது நாக. இளங்கோவன்.

ஐந்து கேள்விகள்:

1. நண்பர் சாகரனை அருகில் இருந்து பார்த்தவர்களில் நீங்கள் ஒருவர். அவருடன் நடந்த சுவையான நிகழ்வை நினைவு கூருங்களேன்.

2. திராவிட அரசியல் நீர்த்துப் போய்விட்டது என்று நான் சொல்வதை முற்றிலும் மறுக்காமல், அதேபொழுது ஏற்றுக் கொள்ளாமலும் நீங்கள் இருப்பீர்கள். இனிமேலும், திராவிடக் கட்சிகளின் அரசியல் நம்மூரில் எடுபடுமென எண்ணுகிறீர்களா?

3. இயற்கை பற்றிய பாக்கள் உங்களிடம் இருந்து சிறப்பாக வந்திருக்கின்றன. மரபில் ஒன்றும், புதுசில் ஒன்றுமாய் காட்சி வரையுங்களேன்.

4. "உள்ளுரும நுட்பியற் குமிழி (information technology bubble) வெடிக்கப் போகிறது, மிகுந்த நாட்கள் இந்தியா இதில் தாக்குப் பிடிக்க முடியாது" என்று பலரும் சொல்லுகிறார்கள். இந்தத் துறையில் மிகுந்த பட்டறிவு கொண்ட உங்களின் கணிப்பு என்ன?

5. சிலம்பு மடல் எழுதிய போது, கண்ணகி கோயிலைத் தேடி ஒரு தடவை போனீர்கள். அது போல, வேறு ஒரு வரலாற்றுத் தேடலை, தமிழ்த் தேடலை, எங்களுக்குச் சொல்லுங்களேன்.

அன்புடன்,
இராம.கி.

Sunday, March 25, 2007

இந்திய மட்டைப் பந்தும், எதிர்காலமும்

தோனி வெளியேற்றப் பட்டவுடனேயே, "மேற்கொண்டு பார்ப்பது வீண், இனி இவர்கள் உருப்பட மாட்டார்கள்" என்றெண்ணி எரிச்சலுடன், தொலைக்காட்சியை அணைத்துப் படுக்கப் போய்விட்டேன். மறுநாள் காலையில் சரியான தூக்கம் இல்லாமல், கொஞ்சம் தலைவலியோடு தான் எழுந்தேன். நேற்று முழுக்க ஒரே சோர்வு. மாலை வர, வரத்தான் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படுவது இயற்கைதான் என்று அமைந்தேன்.

"சட்டியில் இருந்தால் அல்லவா, அகப்பையில் வருவதற்கு?"
"ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றால் எப்படி?"

கொஞ்சம் கொஞ்சமாய் நுட்பியல் தாக்கங்களால் (impacts of technology) உலகெங்கும் ஆட்டங்கள் மாறிக் கொண்டிருக்கும் போது, அந்த மாற்றங்களை உணர்ந்து கொள்ளாமல், மாற்றங்களுக்கேற்பத் தங்களை அணியமாக்கிக் கொள்ளாமல், இன்னும் பழைய முறையிலேயே ஆடிக் கொண்டிருந்தால், இது போன்ற ஏமாற்றங்கள் நமக்கு ஏற்படத் தானே செய்யும்?

வளைதடிப் பந்தாட்டத்திலும் (hockey) இப்படித்தான் நடந்தது. செயற்கைப் புல்விரிப்புக்களும் (artificial turf), வலிய அடிப்புக்களுமாய் (shots), ஆடுகின்ற ஆட்டமே மாறியபின், பழைய துணைக்கண்ட அணுகு முறையிலேயே, வளைதடிக்கு அருகில் பந்தை வைத்துக்கொண்டு, எதிராளியின் வளைதடியில் பந்தைச் சிக்க விடாமல், இரண்டு மூன்று பேர் தங்களுக்குள்ளேயே சிறுசிறு கடவுகளில் (passes) பந்தை அங்கும் இங்கும் திருப்பி அலைத்து, நளினமாய் நகர்த்திக் கொண்டு, எதிராளியின் கவளை (goal) வரை போய் சட்டென்று பந்தைத் திணித்து வரும் உத்திகளெல்லாம் மறைந்து போய் எத்தனை மாமாங்கம் ஆயிற்று? இன்னும் அதே பழைய முறையிலேயே இந்தியா ஆடிக் கொண்டிருந்தால் எப்படி? வளைதடிப் பந்தில் இந்தியா தோற்றுக் கொண்டுதான் இருக்கும்; ஒரு நாளும் அது மேலே வராது. இது போக பந்தாட்டக் குழும்பில் (hockey club)இருக்கும் வட்டார அரசியல், பணங்களைச் செலவழிக்கத் தயங்கும் போக்கு; ஊழல் இன்ன பிற.

அதே போன்ற நிலை வேறு உருவத்தில் மட்டைப் பந்திலும் (cricket) ஆகிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

இப்பொழுதெல்லாம், பெரும்பாலான சிறந்த அனைத்து நாட்டு அணியினர் மட்டைப் பந்தைப் போடும் வேகம் கூடிக் கொண்டே போகிறது. மணிக்கு 140-142 கி.மீ.க்கு மேலும், பலர் பந்து வீசுகிறார்கள். அதோடு, அந்தப் பந்துகளின் தொடக்க முடுக்கமும் (initial acceleration) கூடுதலாய் இருக்கிறது. பந்தை விரல்களில் இருந்து வெளியே விடும் இலவகமும் சிறக்கிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பந்து பாதித் தொலைவைத் தாண்டிவிடுகிறது; மட்டையால் பந்தைத் தடுத்து திருப்பிவிட வேண்டுமானால், பரவளைவில் (parabola) வரும் ஒவ்வொரு பந்தின் நகர்ச்சியையும், வேகத்தையும், முடுக்கத்தையும் நிதானிக்கத் தெரியும் திறன் மட்டையாளருக்கு (batsman) இருக்கவேண்டும். இந்தத் திறனில் கண், கையோட்டம் ஆகியவற்றை ஒருங்குவிக்கும் (co-ordinating)போக்கும் அமையவேண்டும்.

அதிட்டமில்லா வகையில், நம் மட்டையாளர்கள் இத்திறனில் கொஞ்சம் கூட வளர்ச்சி பெறவில்லை. நம் மட்டையாளர்கள் மட்டுமல்ல, ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல, நம் பந்து வீச்சாளர்களும் 135-138 கி.மீ / மணிக்கு மேல் தாண்டி பந்து வீச மாட்டேம் என்கிறார்கள்; ஆகப் பிழை என்பது மட்டையாளர்கள், வீச்சாளர்கள் என இருவரிடமும் தான் இருக்கிறது. ஒருவர் மட்டும் காரணம் இல்லை. நம்மிடம் மொத்தமாய் உள்ள வலுவின்மை இது. வேகப் பந்துத் தடுமாற்றம்.

வலுக்குறைந்த நம் வீச்சாளர்களின் பந்துவீச்சிற்கே பழக்கப்பட்டு அடித்துவரும் மட்டையாளர்களும் 140 கி.மீ./மணிக்கு மேல் பந்தின் வேகம் இருந்தால், அதோடு முடுக்கமும் கூடுதலாய் இருந்தால், அதைத் தடுத்து அடிக்கவே தடுமாறுகிறார்கள். இதில் தெண்டுல்கரில் இருந்து எல்லோரும் அப்படித்தான் ஆகிறார்கள். (அன்றைக்கு தில்லார வெர்னாண்டோ, மலிங்கா போட்ட பந்து வீச்சுகளில் எல்லோருமே தடுமாறினார்கள்.) இதே நிலைமைதான், பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளைக் கண்டு இந்திய அணியினரிடம் அமைகிறது. வெளிநாட்டுப் பந்து வீச்சாளருக்கு மேல், நம் வீச்சாளர் அமைந்தால் அல்லவா, அந்தப் பயிற்சியின் விளைவால், வெளிநாட்டுக் காரரை எதிர்கொள்ளும் திறம் நம் மட்டையாளருக்கு வந்து சேரும்?

இது போலப் பட்டிகைகளும் (pitches) வேகப் பந்திற்கு வாகாக அமையும் வகையில் நம் நாட்டில் மாற்றப் படவேண்டும். அதற்குத் தேவையான மண்எந்திரவியல் (soil mechanics) ஆய்வும் இங்கு நடைபெற வேண்டும். எந்தப் பட்டிகை எவ்வளவு குதிப்புக் (bounce) கொடுக்கும்? எவ்வளவு பரவலாய்க் கொடுக்கும்? எப்படிக் குதிப்பை வேண்டுவது போல் மாற்றலாம்? - இந்தக் கேள்விகளுக்கு விடை நமக்குத் தெரிய வேண்டும். நல்ல பட்டிகைகளை உருவாக்கும் கலைத்திறன் கொண்டவர்களை நம் வாரியம் பாராட்டிப் பேணவேண்டும். கொஞ்சம் கூடக் குதிப்பு இல்லாத வறட்டையான (flat) பட்டிகைகளை உருவாக்கி நம் ஆட்டக்காரர்களை நாமே கெடுக்கிறோம். இந்த வகையில் இந்திய வாரியம் மாநில வாரியங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அவரவர் தங்கள் குழுக்கள் வெற்றிபெற வேண்டும் என்று எல்லா இடத்திலும் சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள். நம் ஆட்டக் காரர்களின் எதிர்காலத்தை நம் மாநில வாரியங்களே கெடுக்கின்றன.

உள்ளூர் ஆட்டங்களில் வேகப் பந்தைப் போடுவதற்கும், எதிர்கொள்ளுவதற்குமான திறனை வளர்த்துக் கொள்ள நம் நாட்டில் பயிற்சிக் களங்களை ஏற்படுத்தாது இன்னொரு பெரியகுறை. சென்னையில் இருக்கும் MRF பயிற்சிக் களம் என்பது ஒரு புறனடையாகத் (exception) தான் இருக்கிறது. இது மட்டும் போறாது. இது போல 10, 12 களங்களாவது நாடெங்கிணும் வேண்டும். MRF பயிற்சிக் களத்திலிருந்து வெளிவருகிறவர்களும், தங்கள் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து, நாளாவட்டத்தில் கோட்டையும் (line), நீளத்தையும் (length) சரி செய்யும் போக்கில், தங்களின் வேகத்தில் கோட்டை விடுகிறார்கள். (காட்டாக: முனாவ் பட்டேல், இர்பான் பத்தான்).

இன்னொரு குறை: நம்முடைய மரபு சார்ந்த சுழற்பந்திலும் (spin bowling) திறன் குறைந்து போனது; புதிய உத்திகள் உருவாவதில்லை. முத்தையா முரளிதரன் தூஸ்ரா பந்தைப் போடப் பழகி, தூண்டில் போடுவது போல் சுழித்து எறிகிறார். நம்மாட்களோ அதில் வகையாக மாட்டிக் கொள்ளுகிறார்கள். அது போலப் பந்து போட, நம் பக்கத்தில் ஆட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் (அர்பஜன் இந்தப் பந்தில் அவ்வளவு தெளிவு இல்லை). சுழற்பந்து போடுவதில் புதுப்புது வேற்றங்களை (variations) நாம் உருவாக்க மாட்டேம் என்கிறோம்.

அதே போல, உள்வட்டத்தில் இருக்கும் களத்தர்கள் (fieldsman) பந்தைப் பிடித்து நேரே குத்திகளை (stumps) விழுத்துமாப் போல பந்தைத் தூக்கி எறியாமல், குத்திகளுக்கு அருகில் உள்ள களத்தருக்கு எறிந்தே, பழக்கப் பட்டிருக்கிறார்கள். நேரே பந்தெறிந்து குத்தியைத் தகர்க்கும் கலையில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். அது போக, கள வேலைகளில், ஒரு மேலோட்டத் தனம், ஈடுபாடு இல்லாமை, ஆகியவை தென்படுகின்றன; இவை களையப் படவேண்டும்.

பொதுவாக, இப்பொழுதெல்லாம் ஆட்டம் என்பது பணமயமாய் ஆகிப் போய் விட்டதால், உள்ளூர் ஆட்டங்களில் பலரின் கவனமும் குறைந்து போயிற்று; இவ்வளவு பணம் சம்பாரிக்கும் மட்டைப்பந்து வாரியத்தின் முயற்சியில் உள்ளூர்ப் போட்டிகளின் ஆழம் கூட்டப் படவேண்டும். (ஒருபக்கம் ரஞ்சி, இன்னொரு பக்கம் மற்றைய ஆட்டங்கள் என்று நேரம் வீணாகப் போகாமல், நாடு தழுவிய அளவில் ஒருநாள் ஆட்டத்திற்கு ஒரு போட்டி, ஐந்து நாள் ஆட்டத்திற்கு இன்னொரு போட்டி என்று இரண்டு மட்டும் இருந்தால் போதும். இவை எல்லாம் ஒரு ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப் படவேண்டும்.)

உள்ளூர் ஆட்டங்களில் நுட்பியல் பெரிதும் கூடிவர ஏற்பாடு செய்ய வேண்டும். நுட்பியல் இல்லாமல் மட்டைப் பந்து இல்லை என்று இப்பொழுது ஆகிவிட்டது. உள்ளூர் ஆட்டங்களில் பந்து வீச்சின் வேகத்தோடு, முடுக்கம் போன்றவையும் கணிக்கப் பட வேண்டும்; பல்வேறு நுட்பியல் கருவிகள் கொண்டு ஒவ்வோர் இயக்கமும் பதிவு செய்யப் படவேண்டும்; உள்ளூர் ஆட்டங்கள் விழியப் படங்களாய்ப் (video movies) பதிவு செய்யப் படவேண்டும். தொலைக்காட்சிகளில் உள்ளூர் ஆட்டங்களைக் காட்ட வழிசெய்ய வேண்டும். வல்லுநர்கள் உள்ளூர் ஆட்டங்களைத் தீவிரமாக அலசி "யார் மேல் நிலையில் உள்ளார்? யாருக்கு என்ன பயிற்சி கொடுத்தால் இன்னும் மேல்நிலைக்குக் கொண்டு வரலாம்?" என்று பார்க்க வேண்டும். சமலேற்ற அலசல்கள் (simulated analyses) நடக்க வேண்டும்.

வெறுமே மேட்டுக் குடியினர் (இதை நான் விவரித்தால் பலருக்கும் பிடிக்காமல் போகலாம்.) ஆடும் குழும்பு (club) ஆட்டங்களில் மட்டுமே கவனம் கொள்ளாமல், நாட்டுப் புறங்களில் நடக்கும் ஆட்டங்களை வாரியம் தூண்டிவிட வேண்டும். வேகப் பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில் இருந்து வரவே வாய்ப்பு உண்டு. உள்ளூர் ஆட்டங்களில் ஓர் அணிக்கு இரண்டு வேகப் பந்து வீச்சளாராவது இருக்க வேண்டும் என்ற கட்டாயம் வேண்டும். அந்தப் பந்து வீச்சாளர்களின் வேகமும், குறைந்த ஓட்டங்களில் மட்டையாளர்களை வெளியேற்றக் கூடிய திறனும், அதிகரிக்கும்படி, போட்டிகள், பரிசுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை உண்டாக்க வேண்டும்.

அதே போல சுழற்பந்து வீச்சிலும் நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சிகளைத் (organized efforts) தொடங்க வேண்டும்.

தவிர இந்தியப் பல்கலைக் கழகங்களில், குறைந்தது ஐந்தாறு இடங்களிலாவது உயிர்எந்திரவியல் (biomechanics) தொடர்பான ஆய்வுகளின் மூலம் இந்திய மட்டைப்பந்து ஆட்டத்தை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இந்த ஆய்வுகளுக்கு மட்டைப்பந்து வாரியம் பணம் செலவழிக்க வேண்டும். இது போன்ற ஆய்வுகள் ஆத்திரேலியப் பல்கலைக் கழகங்களில் நடக்கின்றன. இப்பொழுது தென்னாப்பிரிக்காவிலும் நடக்கிறது. அதே போல பொருதுகள மருத்துவமும் (sports medicine) ஆத்திரேலியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் பெரிதும் கிடைக்கிறது. நம் ஆட்டக்காரர்களும் கூட ஏதாவது சிக்கல் என்றால் அங்கு தானே ஓடுகிறார்கள்? நம்மூரிலேயே பொருதுகள மருத்துவமும், அதையொட்டிய வளர்ச்சி, ஆய்வுப் பணி போன்றவை நடைபெற்றால், நாமல்லவா வளர்ச்சி பெறுவோம்?

இன்னொன்றும் நடைபெறலாம். இனியும் இந்தியா என்று ஒரே அணியை மட்டும் வைத்துக் கொண்டு இருப்பது சரியில்லை. இன்றைய நிலையில் 100 கோடி மக்களில் 15 பேர் என்பது பல்வேறு வகை அரசியல் நடப்பதற்கே வழி வகுக்கிறது. இந்தியா - வடக்கு, இந்தியா - கிழக்கு, இந்தியா - மேற்கு, இந்தியா - தெற்கு என்று நான்கு அணிகளை உருவாக்கி அவற்றை அனைத்து நாட்டுப் போட்டிகளில் நம் வாரியம் பங்கு பெற வைக்கலாம். இதனால் பல நல்ல விளைவுகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, இப்பொழுது இருக்கும் வட்டார அரசியல் குறைய வாய்ப்புண்டு. தவிர, மட்டைப் பந்தாட்டத்தில் நடக்கும் அரசியல், சூதாட்டம், பணக்குவிப்பு போன்றவை குறைய, இது போன்ற பரவலாக்கங்களே உதவி புரியும்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, March 20, 2007

அதிட்டம்

சொல் ஒரு சொல் பதிவில் இட்ட இந்தப் பின்னூட்டம், இங்கு தனிப் பதிவாகச் சேமிக்கப் படுகிறது.
-----------------------------------

அதிட்டம் பற்றிய இடுகையைப் படித்தேன். இங்கு பலரும் கூறிய நல்லூழ், ஆகூழ், புண்ணியம், பாக்கியம், (இன்னும் பலர் சொல்லாத நற்பேறு) போன்ற மாற்றுச் சொற்களைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. அதிட்டத்தோடு மட்டுமே தற்போதைக்கு நின்று கொள்கிறேன்.

அதற்கு முன்னால் ஊழ் பற்றிய கருத்துமுரணை மாற்று முகத்தான், ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். ஊழ் என்பது determinacy. அது முன்னால் ஏற்பட்ட நிலை. given, a priori, condition. This word does not talk about the right and wrongness of the actions performed. ஊழ் என்பது வெறுமே இயற்கையை மாந்தன் அவதானிப்பதிலேயே புரிந்துவிடும். இலக்கியப் பதிவுகளின் படி பார்த்தால், ஊழ் எனும் கோட்பாட்டை ஆழ்ந்து முதலில் உரைத்தவன் தமிழன் தான் என்று தோன்றுகிறது.. ஊழைப் பற்றிய ஒரு சிறப்பான பாடல் நாமெல்லோரும் அறிந்த கணியன் பூங்குன்றனாரின் 192- ஆம் புறநானூற்றுப் பாடல் ஆகும்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

இதைப் பற்றி பெரிய விளக்கமாய் எழுதலாம் என்றாலும், சுருக்கமாய் இங்கு சொல்லுகிறேன். இது போன்ற மெய்யியற் பாட்டுக்கள் சங்க இலக்கியத்தில் ஓரளவு இருக்கின்றன; தமிழரின் அடிப்படைப் புரிதலையும் உணர்த்துகின்றன. இதில் வியப்பு என்னவென்றால், நம்மில் பலரும் இந்தப் புரிதலை இன்றும் கொண்டிருக்கிறோம். தமிழருக்கு இது இயல்பாய் வருவதொன்று.

"எல்லா ஊரும் எங்கள் ஊர்தான்; எல்லோரும் எங்கள் உறவுகள் தான்; தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை; துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான். செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை. வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் இல்லை. மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் இல்லை;

வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் யாற்று நீரில் சிக்கி, அதன் தடத்திலே போகும் புனையைப் போல, அரிய உயிரியக்கம் ஆனது முன்னால் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், பெரியவர்களைக் கண்டு வியத்தலும் இல்லை; சிறியவர்களை இகழ்தல் அதனிலும் இல்லை." [

இங்கே காட்சி என்பது ஞானம் என்பதற்கான மாற்றுச் சொல்; இதைத் தரிசனம் என்றும் வடமொழி நூல்கள் கூறும். (தரிசனம் என்பது கூடத் தெரியனம் தான். தெரியனம்> தரிசனம்; தீவம் காட்டியதில் சாமித் தெரியனம் நன்றாய்க் கிடைத்ததா? - தீவம் காட்டியதில் சாமி நல்லாத் தெரிஞ்சுதா?) தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள இருதடப் போக்கை அறியாமல், அதை ஏற்காமல், எல்லாவற்றையும் மேலிருந்து பள்ளம் - வடமொழியில் இருந்து தமிழ் - என்ற ஒரு திசைப் போக்கையே சொல்லிக் கொண்டிராமல், வெறுமே வேதம், வேதம் என்று பாராயணம் பண்ணிக் கொண்டிராமல், பார்த்தால் ஒழிய, இந்திய மெய்யியலை நாம் ஒழுங்காகப் புரிந்து கொள்ள முடியாது. - இராம.கி.]

எல்லோரும் இந்தப் புறநானூற்றுப் பாடலின் முதல் வரியை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு "தமிழன் பார்த்தாயா, எப்படிச் சொன்னான், ஆத்தி, உசத்தி" என்று அமைந்து விடுகிறோம். அது சரியில்லை; முழுப் பாடலையும் நாம் ஆழ்ந்து படிப்பதில்லை. (உஷா கொஞ்சம் விதிவிலக்குப் போலிருக்கிறது; பாட்டின் இறுதியில் வரும் இரு வரிகளை தன் நுனிப்புல் வலைப்பதிவில் மேற்கோளிட்டுக் காட்டுகிறார்.)

மேலே உள்ள பாட்டில் "முறைவழிப் படும்" என்று சொல்கிறது பாருங்கள், அதில் வரும் முறை என்பதில் தான் நியதி, ஊழ் ஆகிய செய்திகள் அடங்கியிருக்கின்றன. இந்திய மெய்யியலில், முறை, நியதி, ஊழ் எனும் சொற்கள் பெரிதும் பேசப்பட்டிருக்கின்றன. "காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம்" என்ற திரைப்பாட்டு உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? அந்தப் பாட்டிலும் ஊழ் பேசப் படுகிறது.

"காட்டாறு ஓடுற ஓட்டத்தில், நாம் என்ன செய்யமுடியும்? முயற்சி செய்யலாம்; ஆனால் ஓரளவுக்குத் தான். அதனால், உன்னை நிரம்பவும் பெரிதாக நினைத்துக் கொள்ளாதே! இயற்கைக்கு முன்னால் நீ ஒரு சுண்டைக் காய்" என்று ஆற்றுப் படுத்துவதாய் இந்த ஊழ்க் கோட்பாடு நமக்குச் சொல்லுகிறது. If you go by dielectical materialism, "a priori order - ஊழ்" indicates the struggle of human beings against the nature.

ஊழுக்கு மாறான ஊழ்வினை என்பது வேறு ஒன்றைச் சொல்லுகிறது. "இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்கு வைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த பிறவிக்கு "இருப்பு இவ்வளவு" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்வது ஊழ்வினை. இதிலும் வெவ்வேறு சமயங்களும், நம்பா மதங்களும் மாறுபடும். 

சொல்க்கம் (சொர்க்கம்), நிரயம் (நரகம்) போன்ற கருத்துக்களும் கூட இந்த ஊழ்வினையோடு தொடர்பு கொண்டவை. ஊழ்வினை பற்றி எழுத வேண்டுமானால், உலகாய்தம், ஆசீவகம், செயினம், புத்தம், மீமாஞ்சை, ஆதிசங்கரரின் மாயாவாத வேதநெறியான அல்லிருமை (அல்+துவைதம் = அத்துவைதம்), சிவனெறிக் கொண்முடிவு (சைவ சித்தாந்தம்), போன்ற மெய்யியல் கருத்தீடுகளுக்குள் போக வேண்டும்; அது ஒரு நீண்ட கட்டுரையே ஆகிவிடும். எனவே தவிர்க்கிறேன்.

முற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது. அப்படிச் சொல்லுபவர் மீள்பார்வை செய்வது நல்லது. வள்ளுவர் ஊழ் பற்றிப் பேசுகிறாரே ஒழிய, ஊழ்வினை பற்றிப் பேசுவதே இல்லை. நம்முடைய கருத்தை அவர்மேல் ஏற்றக் கூடாது. ஆனால் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்று சிலப்பதிகாரம் பேசும். "எந்தப் பொருளில், என்ன விளக்கத்தில் சிலம்பு பேசுகிறது?" என்பது இன்னொரு பெரிய ஆய்வு.

சுருக்கமாய்ச் சொன்னால், தமிழரில் பலரும், ஊழுக்கும் ஊழ்வினைக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிக் கொள்கிறார்.

இனி அதிட்டத்திற்குள் போவோமா?

தமிழில் அடுதல் என்பது சார்தல், சேர்தல் என்ற பொருளைத் தரும் வினைச் சொல். அள் என்னும் வேர். நெருங்குதல் என்ற பொருளுடையது. அட்டுதல் என்பது பிணைத்தல், ஒட்டுதல் என்ற பொருளில் பிறவினையைக் காட்டும். இதே போல அடுத்தல் என்பதும் பிறவினைச் சொல் தான். அடுத்தது = next என்ற பொருளில் சொல்லுகிறோமே, அதைக் கவனியுங்கள். ஒன்றன் பின் ஒன்றாய் அடுத்து இருப்பது அடுக்கு என்றாகும்.

நம் உடம்பை அட்டி, அரத்தம் உறிஞ்சும் புழு அட்டைப் புழு ஆகும். பொத்தகத்தின் இரு மருங்கும் அட்டித்து (ஒட்டி) இருக்கும் கனத்த தாள் அட்டை. அடுத்து என்ற சொல் மென்மேல் என்ற பொருளையும் கொண்டுவந்து தரும். (தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொண்டுவிற்கப் போன தமிழர் எல்லோரும்) கடைகளில் (அது எதுவாய் இருந்தாலும்) நமக்கு உதவியாய் இருப்பவரை (assistant) அடுத்தாள் என்று சொல்வார். அடுத்தேறு என்ற சொல் மிகை என்ற பொருளில் திருவாய்மொழி ஈடு, முப்பத்தாறாயிரப்படி 3,8,9 -இல் "அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து" என்று பயிலப் பட்டிருக்கிறது.

அடுத்தலின் திரிவான அடர்த்தல் என்ற சொல் செறிதல் பொருளில் ஆளப் பட்டிருக்கிறது. நாங்கள் எல்லாம் பள்ளியில் படித்தபோது, அடர்த்தி என்ற சொல் என்ற சொல் density என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தப் பட்டது. (இன்றைக்கு திண்ணிமை என்றே நான் புழங்குகிறேன். திணித்தது திண்மம் - denser substance is solid. At the same time solidity is more than density. திண்மத்தனம் என்பது திண்ணிமையைக் காட்டிலும் பெரியது.) (செறிவு என்பதைக் concentration என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்துகிறோம்.) மேலே சொன்ன தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொண்டுவிற்கப் போன தமிழர் கடைகளில் அடத்தி என்ற சொல் wholesaler என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தப் பட்டது. அடத்தியிடம் பொருளை வாங்கிச் சில்லரை வணிகர்கள் வாய்பகரம் (=வியாபாரம் = trade) செய்கிறார்.

சேர்ப்பு என்ற பொருள் நாளா வட்டத்தில் பெரியது என்ற பொருளையும் கொடுக்கும். அட்டக் கரி, அட்டக் கருப்பு என்ற சொற்கள், அடர்ந்த கருப்பு நிறம் என்ற பொருளில் நாட்டுப்புறங்களில் பயன்படுத்துவதை ஓர்ந்து பாருங்கள். "பெருந்தொல்லை" என்ற பொருளில் பயன்படும் அட்டகாசம் என்ற சொல்லையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம். மொத்தமாகத் தெரிவு செய்த வரியை (total tax) அடந்தேற்றம் என்று (அடந்து தெரிந்தது) சொல்லும் பழக்கமும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. இன்றைக்கு மொத்தவரி என்றே சொல்லி விடுகிறோம்.

"வந்து சேர்ந்தது" என்பதை அடைதல் என்று சொல்லுகிறோம். அடைதலின் பிறவினையாய் அடைச்சுதல் - சேர்ப்பித்தல் என்பதும் சொல்லாட்சி கொண்டிருக்கிறது. வேறு பெயரில் அழைக்காமல், கடலை அடையும் ஒரு குறு ஆற்றை அடையாறு என்றே இங்கு சென்னையில் அழைக்கிறோம். அடைத்தல் என்பது நியமித்தல், விதித்தல் என்ற பொருளும் கொள்ளும். அடைமானம் என்ற சொல் வாங்கிய கடனுக்கு மாறாக நியமித்தது, விதித்தது என்றே பொருள் கொள்ளும். பல பருப்புக்களையும் அரிசியையும் சேர்த்து அரைத்து மாவாக்கிச் சுடும் பண்டத்திற்கு அடை என்றே பெயர் உண்டு. (சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிதும் விரும்பப் படும் காலை உணவு. "எங்கோ ஒரு ஒழுக்கு (leak) ஏற்படுகிறது, அந்த ஒழுக்கை அடைக்கிறோம். அது அடைப்பு என்று ஆகிறது". மூடுதல், பொருத்துதல் என்ற பொருளும் வந்து சேர்கிறது.

அடைதலின் இன்னொரு திரிவாய் அடைசுதல் என்ற சொல் நெருங்குதல், அளவுக்கு அதிகமாகச் சேர்தல், பொருந்துதல் என்ற பொருட்பாடுகளில் ஆளப்பட்டிருக்கிறது. "என்ன இது, வீடெல்லாம் ஒரே அடைசலாய்க் கிடக்கிறது?" என்பது சிவகங்கை வழக்கு. நாட்டியத்தில் காட்டும் வெவ்வேறு கைப்பொருத்துகளை, அடைவு என்றே சொல்லுகிறோம். சிலபோது இது அடவு என்றும் எழுதப் படுகிறது. அடவுகள் தெரியாமல் நாட்டியம் கற்க முடியாது. இப்படி, வெவ்வேறு பொருத்தங்கள், விதவிதமாய் அமைவதால் (arrangement) அடவு என்ற சொல்லையே இன்று design என்ற சொல்லிற்கு இணையாய்ப் பொறியியலில் பயன்படுத்துகிறோம்." மேலை மொழியிலும் arrangement என்ற கருத்துத் தான் design என்ற சொல் எழக் காரணமாய் இருந்தது. இளமைக் காலத்தில், நான் ஒரு அடவுப் பொறிஞனாய் இருந்தேன் - I was a design engineer in my younger days".

முன்னே சொன்னது போல் டகரவொலி தகரமாய்த் திரிவது தமிழில் உள்ள பழக்கம்; குறிப்பாக வடபுலத்தில் இது இன்னும் விரிவான பழக்கம். இரண்டு துண்டை ஒன்றாய்ப் பொருத்தித் தைத்தலை அத்துதல் என்று வின்சுலோ அகரமுதலி குறிக்கும். "அத்தும் பொல்லமும் தைத்தல் துன்னம்" என்று பிங்கலம் 2302 குறிக்கும். அத்து என்ற சாரியை கூட சேர்ந்த என்ற பொருளைத் தமிழில் குறிக்கும். "காமத்துப் பகை" (குறுந்: 257) "அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்" (சில. 4, 3) போன்ற சொல்லாட்சிகள் தமிழில் கணக்கற்று உண்டு. "வானம் என்பதைச் சேர்ந்த அணி நிலா" என்ற கருத்தை ஆழ்ந்து புரிந்து கொண்டால் அத்து என்பது எவ்வளவு தூரம் தமிழ் வழக்கைச் சேர்ந்தது என்பது புரியும். "அந்தத் தோட்டத்து மாம்பழம்" என்னும் போது, தோட்டமும் மாம்பழமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவை என்பது புலப்படும். ஆங்கிலத்தில் and என்று சொல்லுவதும் add என்று சொல்லுவதும் ஒரே பொருள் தான். மற்ற மேலை மொழிகளிலும் இது போன்ற சொல்லிணையைக் காண முடியும். இங்கும் தமிழில் அதே பொருள் அடுத்தல் / அத்து என்பதில் வருவதை எண்ணிப் பாருங்கள்.

இனி இரு பிறப்பியாய் அத்தியந்தம் என்ற சொல் "முற்று முழுமையாக, மிகவும்" என்ற பொருட்பாடுகளைக் காட்டும். அத்தித்தல்>அதித்தல் என்பது சிறத்தல், மிகுதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். அதிகம் என்ற பெயர்ச்சொல் மிகுதி என்ற பொருளைச் சுட்டும். காளமேகப் புலவரின் வேடிக்கையான பாட்டு அதிகம் என்ற சொல்லை ஆளும் விதத்தைப் படியுங்கள்.

கண்ணபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்
உன்னிலுமோ யான் அதிகம் ஒன்றுகேள் - முன்னமே
உன்பிறப்போ பத்தாம் உயர்சிவனுக்கு ஒன்றுமிலை
என்பிறப்பெண் ணத்தொலையா தே.

அதி என்ற முன்னொட்டு மிகுதி, அப்பால், மேல், மேன்மை என்பவற்றை உணர்த்தி வடமொழியில் பயிலும். நான் அறிந்தவரை பாணினியின் தாது பாடத்தில் அதி என்பதற்கு எந்த வேர்ச்சொல்லையும் காட்டவில்லை. மோனியர் வில்லியம்சே கூட, இதை முன்னொட்டு என்று சொல்லி, அதன் ஊற்றுகை (origin) ஏதென்று சொல்லுவதில்லை. (ஆனாலும் அதிர்ஷ்டம் என்ற வடமொழித் தோற்றம் கொண்ட சொல்லை வடமொழிச் சொல் என்றே பலரும் எழுதி வருகிறார். எனக்குப் புரியவில்லை. நான் எதைக் கவனிக்க மறந்தேன் என்று அறிந்தவர் கூறினால் திருத்திக் கொள்வேன். (பல சொற்களை இது போல வெறும் நம்பிக்கையில் வடமொழி என்று சொல்லும் பழக்கம் நம்மிடம் அதிகமாகவே இருக்கிறது. அதிர்ஷ்டம் என்ற தோற்றத்தைக் கண்டு மருண்டு போனால் எப்படி? உண்மையில் அதிட்டியது அதிட்டு> அதிட்டம். இருட்டியது இருட்டைப் போல் என்று புரிந்து கொள்ளுங்கள். அதிட்டம் என்பது வடமொழியிற் போகும் போது, அதிஷ்டம்>அதிர்ஷ்டம் என்று பலுக்கப்படும் காரணத்தால் அது வடமொழியாகி விடாது.) குறளுக்கு உரை சொன்ன பரிமேலழகர் "அதி என்பது மிகுதிப் பொருளதோர் வடமொழி இடைச்சொல்" என்று சொன்னதால் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டுமா, என்ன?

அதிகத்திற்கு இன்னொரு வலுவான பொருள் உண்டு. "அதிகம்...... பொலிவின் பெயரெனப் புகன்றனர்" என்று திவாகரம் 1672 பயிலும். பொலிவு என்பது சற்று வெளிறிய மஞ்சள் ஓடிய, பொன் நிறம். பொலிவு - அதிகம் நிறைந்தவன் அதிகன்>அதியன். அதிகனின் மகன் அதிகமான்.

தமிழ் மூவேந்தர் மூவரும் அவர்களின் குடியினர் பூசிக் கொண்ட நிறங்களாலே அறியப் பெற்றிருக்கிறார்கள். (அவர்களின் இயற்கை நிறம் கருப்புத் தான்.) தமிழரின் நெடுநாளைய உறவினரான ஆத்திரேலியப் பழங்குடியினரும் அவர்கள் பூசிக் கொள்ளும் நிறங்களினால், அவர்கள் சூடிக் கொள்ளும் அடையாளங்களினால் அறியப் படுகிறார். 

சாம்பல் (=பாண்டு. பால் நிறம் பாண்டு.) பூசியவர் பாண்டியர் (தமிழரின் திருநீற்றுப் பழக்கம் இந்தக் குடியிடம் இருந்து வந்திருக்கலாம்.)

மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் பூசியவர் கோழியர் (=சோழியர்). குங்குமச் செந்தூரம் இன்றும் தமிழரிடம் விரவிக் கிடக்கிறது.

சார்ந்தது சார்ந்தனம்>சந்தனம். சார கந்தகம் என்பதும் சந்தனத்தையே குறிக்கும். சாரம் = சந்தனம்; சாரத்தில் சகரம் குறைந்த சொல்லான ஆரமும் சந்தனத்தையே குறிக்கும் சாரர்>சேரர் என்போர் சந்தனம் பூசிய இனக்குழுக்கள் ஆவர். இன்றைக்கும் மலையாளத்தில் சந்தனத்தின் முகன்மை புலப்படும்.

திருநீறு, குங்குமம், சந்தனம் எனப் பலவும் விலங்காண்டி நிலையில் வெவ்வேறு தமிழ் இனக்குழுவினர் அணிந்திருந்த இனவேறுபாட்டு அடையாளங்களே.

அதே நோக்கில் மஞ்சள் - பொன் - பொலிவு - நிறம் அணிந்திருந்த இனக்குழுவினர் அதிகர் என்ற இனக்குழுவாய் இருந்திருக்கலாம். மோரியர் காலத்திருந்தே மூவேந்தரோடு அதிகர் ஒருங்குவைத்து எண்ணப் பட்டதும் இங்கு ஓர்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. அதிகம் என்ற சொல்லின் தமிழ்மை நன்கு புலப்படும்.

அதிகாலை என்ற சொல் காலைக்கு முந்திய பருவத்தைக் குறிப்பதையும் எண்ணிப் பார்த்தால் அதித்தல் என்ற வினைச்சொல்லின் ஆழம் புரியும். அதித்த நிலையை உருவாக்குதலை அதிகரித்தல் என்று சொல்வதும் சேர்ந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும். அன்றாட நிலைக்கு மேற்பட்டு அதிகம் செய்தது அதிசெய்யம்>அதிசயம் என்றே ஆகி வியப்பு, சிறப்பு என்ற சொற்களைக் குறிப்பது அதி என்ற முன்னொட்டோ டு சேர்ந்தது தான்.

நான் புரிந்து கொண்டவரை அதிட்டம் என்பது பெரும்பாலும் தமிழாய் இருக்கவே வாய்ப்புண்டு. அதற்கான முகன்மையான குறிப்புக்கள் அத்து என்ற சாரியைப் பொருள், அடுத்தல் என்ற வினைச்சொல், அதிகன் என்ற குடியினரின் பெயர் ஆகியவை ஆகும்.

அன்புடன்,
இராம.கி.

(luck என்ற ஆங்கிலச் சொல்லைப் பற்றி இங்கு பேசுவதைத் தவிர்க்கிறேன். அதற்கும், அதை ஒட்டிய மேலைச் சொற்களுக்கும் ஊற்றுகை தெரியாதென்றே அகரமுதலிகள் குறிக்கின்றன. ஊழைப் பற்றிப் பேசும்போது அதைப் பார்க்கலாம்.)

Friday, March 02, 2007

அயிரை மேட்டில் ஓரிரவு

சந்த வசந்தம் மடற்குழுவில் அவ்வப்போது நான் எழுதி வந்த பாடல்கள் "காணவொரு காலம் வருமோ" என்ற தலைப்பில் ஒரு பதிகமாய்க் கிளைத்தன. கவிமாமணி இலந்தையார் "இதைத் தொகுத்து ஒரு மின் பொத்தகமாய்ப் போடலாம்" என்று சொன்னார். இங்கு வலைப்பதிவிலும் முன்பு போட்டிருந்தேன். நாளைக்கு மாசி மகம் பூரணை; கண்ணபுரத்தான் திருமலைராயன் பட்டினம் போய்ச் சேரும் நாள். "தீர்த்த வாரி" என்று அங்கு சொல்லுவார்கள். பதிகத்தின் இரண்டாம் பாட்டு, காரழகுத் திருமேனியின் அயிரை மேட்டு நிகழ்வை அப்படியே நினைவு கூர்கிறது. உங்கள் வாசிப்புக்கு.

அன்புடன்,
இராம.கி.

2. அயிரை மேட்டில் ஓரிரவு

வரையாத அழகோடு, வடிவான உருவோடு,
வலையரின் பத்து மினியாள்;
வளையாத வில்லையும், வகிடாத வாளையும்,
பழிக்கின்ற புருவ எழிலாள்;
புரையாத திருமகளின் தோற்றரவில் முன்ஒருநாள்
புலம்காட்டி நின்ற போது,
புல்லியே வதுவையுறப் போனதை இன்றளவும்
புவனத்தில் யாரும் அறிய,
நுரையோடு திரைஓங்கும் திருமலையின் பட்டினத்தில்
நுளையோரின் மருக னாக,
நுண்அயிரை மேட்டிலே இரவெலாம் களிப்பதை,
நோக்குநாள் எந்த நாளோ?
கரையோடு ஊர்உலவும் காரழகுத் திருமேனி
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!


இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம் உண்டு. இந்தத் தோற்றரவில் (அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. கண்ணபுரம் மாசித் திருவிழாவின் ஒரு நிகழ்வாய், பெருமாள் பத்மினி நாச்சியாரைக் கைப் பிடிக்கும் விழா நடக்கிறது. பெருமாளுக்குச் சரம் (கைலி) கட்டி மீனவனாய் மாற்றி, ஊருலவுத் திருமேனி (உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாபம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாய் இருப்பது வழக்கம். "எங்கள் மாப்பிள்ளை, எங்கள் மாப்பிள்ளை" என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது, சில காலம் முன்பு வரை இருந்திருக்கிறது.

பூதேவி சீதையாகவும் ஆண்டாளாகவும் பிறந்த தோற்றரவுகள் (அவதாரங்கள்) பலரும் அறிந்தது போல், சீதேவியின் தோற்றரவுகள் பலராலும் அறியப்படுவதில்லை. புரைதல் = ஒப்புதல், பொருந்துதல்; புரையாத திருமகள் = ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்; கரையோடு ஊருலவும் திருமேனி = கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.

Wednesday, February 28, 2007

ஓதி - 3

hotr என்ற வேதச் சொல்லிற்கு இணையாக zaotr என்ற சொல் இரானிய நடைமுறையில் அவஸ்தாவில் சொல்லப்படும். சாரத்துஸ்ரா கூட ஒரு zaotr தான் என்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். வட இந்திய ஒலிப்பிற்கும், இரானிய ஒலிப்பிற்கும் இடையே இந்த za என்னும் பலுக்க வேறுபாடு நெடுகவும் உண்டு. இங்கே சப்த சிந்து என்பது அங்கே ஹப்த ஹிந்து என்று ஆகும். சோமா என்பது ஹோமா என்று அங்கு ஆகும். சரஸ்வதி என்பது ஹரஹ்வதி என்று ஆகும். அதே பொழுது இந்த za மாற்றம் ஒருவழிப் பாதையல்ல. வேதத்தில் hotr என்பது அங்கே zaotr என்று ஆகிறது. இங்கே ஹ்ரண்ய என்பது அங்கே ஸ்ரண்ய என்று ஆகும். ஈரானில் இருந்த zaotr, அவஸ்தாவின் gatha மொழிகளை யாகத்தின் போது ஓதுவார். நாவலந்தீவில் இருந்த hotr, இருக்கு வேதத்தின் மொழிகளை ஓதுவார். இரண்டு வகை ஓதுதல்களும் தேவதையை அழைத்து, "அதைக் கொடு, இதைக் கொடு" என்று கேட்பவை தான். ஓதன் / ஓச்சன் என்பவன் தமிழ் மரபிலும் இருக்கிறான். காளிகோயில் பூசாரியைத் தமிழில் ஓச்சன்/உவச்சன் என்பதும், ஆசார்யன், priest, தெய்வத்தை ஏத்துபவன் என்பனை ஓசன் என்று று அகரமுதலிகளில் குறிப்பதையும், ஆச்சார்யனின் மனைவியை ஓசி என்று குறிப்பதையும் இங்கே நினைவு கொள்ளலாம்.

வேள்வி, பூசை என்ற இரண்டு வகையான ஓதுகளிலும் வெறும் அழைப்பு மட்டுமல்ல; கேட்பும் உண்டு. அழைப்பும், கேட்பும் சேர்ந்தது தான் வேத வழியும், ஆகம வழியும். மூட நம்பிக்கையை மறுத்துப் பார்த்தால், அவை ஏதோ வானத்தில் இருந்து இறங்கியவையல்ல. அதே பொழுது, இந்த அழைப்பும் கேட்பும் எல்லாப் பூசைகளுக்கும் பொதுவானது என்று ஓர்ந்து அறிய வேண்டும். கிறித்துவ, இசுலாம் என எல்லா சமய நெறிகளிலும் கூட அழைப்பும் கேட்பும் இருக்கின்றன.

யாகம் என்பது ஒருவழி; வேத நெறிக்கும் ஸோராஸ்த்திரத்திற்கும் அது பொதுவான வழி. நம்மூர் பூசை முறைகள் வேறு வழி. நெருப்பை வைக்காமல் நீரையும், பூவையும் வைத்துச் செய்யும் நம்மூர் வழிபாட்டிலும் பூசை செய்யும் குருக்கள் மந்திரங்களை ஓதுகிறார்; தேவாரம் போன்றவை ஓதுவாரால் ஓதப் படுகின்றன (recited). இறைவனை அழைத்து, "அதைக் கொடு, இதைக் கொடு" என்று நாம் கேட்கிறோம். ஓதுதல் பற்றிய திராவிட வேர்ச்சொல் பர்ரோ-எமெனோவில் 1052ம் சொல்லாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது.

1052 Ta. ōtu (ōti-) to read, recite, utter mantras, repeat prayers, speak, declare; ōtuvi (-pp-, -tt-) to teach the Vedas, instruct; ōtal reciting (as the Veda); ōti learning, learned person; ōttu reciting, uttering (as a mantra), the Veda. Ma. ōtuka to recite, read, say; ōtikka to teach; ōttu reading (chiefly of scriptures), using formulas. Ko. o·d- (o·dy-) to read, pronounce (charms), learn; o·t a charm. To. wi_.Q- (wi_.Qy-) to read; w&idieresisside;t incantation. Ka. ōdu to utter, read, recite, study, say; n. reading, etc.; ōdisu to cause to read, instruct in the śāstras; ōdike, ōduvike reading; ōtu, ōta reading, that has been read or studied, the Veda. Koḍ. o·d (o·di-) to read. Tu. ōduni to read; ōdāvuni to cause to read, teach how to read; ōdige, ōdu reading. DED 886.

மீண்டும் சொல்லுகிறேன்; எல்லாவித ஓதுதல்களும் முதலில் அழைப்பதும், பின்னால் வேண்டுதலும் தான். அந்தக் கருத்தில், அழைப்பைக் குறிக்கும் தமிழ் வேர்ச்சொற்களையும், சங்கத வேர்ச்சொற்களையும் பார்போம். ஆ, ஈ, ஏ, ஓ, கூ, கோ என்ற தமிழ் வேர்களைப் போலவே தாது பாடம் காட்டும் kal, kall, kas', kai, ku, ku_, kur, kuj, kun., khu, gr, gaj, gard, guj, ghu, ghu, ghur, ghus., ha_d, has, hikk என்ற சங்கத வேர்களும் அழைப்பை உணர்த்தும். இந்தக் காலச் சொற்பிறப்பியல், பகுப்பின் வழி பெற்ற இவ்வளவு வடிவுகளைச் சுட்டிக் காட்டாது. இவற்றில் மிகக் குறைந்த ஒரு சிலவற்றை மட்டுமே அடிவேராகக் காட்டி மற்றவற்றை அவற்றின் வழிவேராகக் காட்டும். [நான் ஒவ்வொரு வேர்வடிவிற்கும் இணையான தமிழ்ச்சொல்லைக் கூடிய வகையில் இனங் காட்ட முடியும். இதே போல சங்கதச் சொற்களையும் எடுத்துக் காட்ட முடியும்] இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த அடிவேர் ku என்பதாகவே வந்து சேரும்.

மேலே உள்ள பட்டியற் சொற்கள் எல்லாமே ஒலிப்பொருளைக் காட்டுவன. கல், கர்/குர் என்னும் பக்க வேர்களும் கூட அதே ஒலிப்பொருளை தரும். ஆங்கிலத்தில் வரும் ekhe, hoot [ME. houten, huten], hail, hem, hiccup, hip, howl, honk, horn என்ற ஓசைச் சொற்களையும், heulen, hupen என்ற செருமானிய ஓசைச் சொற்களையும் இங்கே ஓர்ந்து பார்க்கலாம். halloa>hello என்ற தொலைபேசி அழைப்புக் கூட இங்கே எண்ணிப் பார்க்க வேண்டியது தான். ஓகை (= ஆரவாரம்), ஓதம், ஓதை, ஓசை, ஓலம், ஒலி என்ற சொற்கள், ஓங்காரம் என்ற நெட்டோ சை, ஓ என்னும் குழந்தையின் அழுகை எல்லாமே ஒலிக்குறிப்புக்கள் தான். நான்கு கூப்பிட்டுத் தொலைவைக் காவதம் என்றும் ஓசனை என்றும் தமிழில் சொல்லுவதையும் எண்ணிப் பாருங்கள். ஓலிடுதல் என்பதும் கூட ஓசை செய்வது தான்.

இன்னும் சில விதப்பான ஓலச் சொற்களையும் இங்கு சுட்டிக் காட்ட முடியும். நாதசுரம் ஓலகம் என்றும், நாசுசுரம் இசைப்பவர் ஓலகத்தார் என்றும், ஆரவாரமிகுந்த அரச மண்டபம் ஓலக்க மண்டபம் என்றும், ஓலக்க மண்டபத்தில் சொல்வது ஓலக்க மொழி என்றும் சொல்லப்படும் பழைய பயன்பாடுகளை எண்ணிப் பார்த்தல் ஓல்தல் என்ற வினையின் ஆழம் புரியும். இன்னும் போய், தாலாட்டிப் பாடுவதைக் கூட ஓலாட்டுதல் என்ற யாழ்ப்பாண வழக்கும், லாலி என்னும் வடபுல வழக்கும், lullaby என்னும் மேலைநாட்டு வழக்கும் நம்மை மொழிகடந்த நிலையை உறுதியாக இணர்த்துகின்றன. ஓலத்தின் இன்னொரு பரிமானமாய் ஊளை (howl) என்ற சொல்லும் எழும். ஓசை செய்யும் பனை இலை பனை ஓலையானது.

ஓகாரம் என்பது மொழி கடந்தது என்று புரிந்தால் தான் நான் சொல்ல வருவது புரியும். இல்லையென்றால் hve_க்கு மேலே நகர முடியாது. ஓது என்பதன் நீட்சியாய் மறைமொழிகளை, உயர்ந்த நூற்பகுதிகளை, ஓத்து என்றே தமிழில் சொல்லுகிறோம். மலையாளத்திலும் இதே சொல் தான் உண்டு. நாள் தோறும் ஓதத் தக்கது ஓத்து ஆகும். அது மந்திரம், அறநூல், இலக்கண, இலக்கியம் என எதுவாகவும் இருக்கலாம். வேதமாய் மட்டுமே இருக்கத் தேவையில்லை. "அஞ்செழுத்தும் ஓத்து ஒழிந்து" என்று தேவாரம் 586, 4 பேசும். "ஒத்துடை அந்தணர்க்கு" என்று மணிமேகலை 13.25 பேசும். section or chapter பொருளில் "ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது ஓத்து என மொழிப" என்று தொல்.பொருள்.செய்யுளியல் 480 பேசும். நெறி,கொள்கை என்ற பொருளில் குறள் 134 பேசும்.

முன்னால் சொன்ன வேளகாரரை ஓதுதலின் அடிப்படையில் ஓதாளர் என்றும் பேச்சுவழக்கில் சொல்லுவார்கள். இந்த ஓதாளர்கள் ஆசான்களாவும் இருக்கிறார்கள். "உலகம் பாதி, ஓதாளர் பாதி" என்பது கொங்கு வழக்கு. (அதாவது படிப்பவர்கள் பாதி, படிப்புச் சொல்லிக் கொடுப்பவர் மீதி என்பது அதன் பொருள்.) ஓத்தின் சாலை என்பது நூல் கற்பிக்கும் இடத்தைக் குறிக்கும். "ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று" என்று சிலம்பு 22.28 பேசும். ஓத்துரைப்போர் என்பவர் நூல் ஓதுவோர் ஆவர்; அதாவது one who recites scripture; ஓத்துரைப்போன் என்பவன் ஆசான் என்று பிங்கலம் உரைக்கும்; ஓத்திரி என்பவனும் ஓதுவிப்பவன் என்றே அகரமுதலிகள் கூறும்.

ஓத்திர நெல் என்பது ஓதுவிக்கும் அல்லது ஓதும் தொழிலை தொடர்ந்து செய்பவருக்குத் தரப்படும் நெல். ["ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து" - பதிற்றுப் 7 ம் பத்தின் பதிகம்] ஐங்குறு நூற்றின் பாலைப்பகுதி ஆசிரியர் ஓதல் ஆந்தையார் ஆவார்; ஒதற் தொழில் செய்யும் ஆந்தையார்; இங்கே ஆந்தை என்பது ஒரு தமிழ்க் குடிப்பெயர். தலைவன் கல்வி கற்றற்குத் தலைவியைப் பிரியும் பிரிவு ஓதற்பிரிவு என்றே தமிழ் அகப்பொருள் இலக்கியத்தில் சொல்லப்படும்.

ஓதுதல், ஓதி என்ற சொற்கள் பார்ப்பார்க்கு மட்டுமே உரியவை அல்ல. ஓதல் என்பதற்கு உரத்துப் படித்தல், கல்வி பயிலுதல் என்றே தொல்.பொருள்.25 வழி பெறப்படும். ஓசையூட்டிப் பலமுறை சொல்லுதலையே (reciting) ஓதுதல் என்று பொருள் சொல்லுகிறார்கள். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் - குறள் 834

ஓதுவித்த தக்கணையா - திவ்ய. பெரியாழ் 4.8.1. ஓதி என்பதற்கும் அறிவு, கல்வி, one who recites the veda and sastras என்றும் பொருள்கள் உண்டு. மலையாளத்தில் ஓதல் என்றும், கன்னடத்தில் ஓது என்றும் குடகில் ஓத் என்றும், கோத. ஓத் என்றும், துடவத்தில் வீத் என்றும், துளுவில் ஓதுனி (படி) என்றும், தெலுங்கில் சதுவு என்றும், இது திரிவுறும். இருக்கு சொல்லிக் கொடுப்பவன் ஓதி என்றே மலையாளத்தில் சொல்லப் படுவான். ஊது என்ற அடிச் சொல்தான் ஓது என்ற சொல்லிற்கு முந்து எழுந்திருக்க முடியும் என்று பாவாணர் தன் வேர்ச்சொற்கட்டுரைகளில் சொல்லுவார். ஊதல் = ஆரவாரம்

இன்னொரு விதமாயும் இந்த ஓதித்தலைப் புரிந்து கொள்ளலாம். தமிழில் பள்ளி என்பது கன்னடத்தில் ஹள்ளியாகும்; பால் என்பது ஹாலு ஆகும். இது போல பகரம் கெட்டு ஹகரம் சேர்வதும், சிலபோது ஹகரமும் போய் உயிரொலி மட்டுமே தங்குவதும் பல்வேறு சொற்களில் உண்டு. போதித்தல் என்பது ஓதித்தலுக்கு இணையான தமிழ்ச்சொல். போதி என்ற சொல் ஹோதி>ஓதி என்று கன்னடத்தில் ஏற்பட முற்றிலும் வாய்ப்பு உண்டு. பள்ளிக்கூடமே கூட ஓதும் பள்ளி என்று சொல்லப்படுவதும் உண்டு. மந்திர நீர் தெளித்தலை ஓதியிறைத்தல் என்றும், மந்திரித்துத் தேங்காய் உடைத்தலை ஓதியுடைத்தல் என்றும் சொல்லுவார்கள்.

உங்களுடைய பின்னூட்டில் ஆவாகனம் என்ற சொல்லைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது நெருப்பில் மட்டுமல்ல, நீரிலும் தெய்வம் வந்து வந்து இறக்கும் முறைதான். எனவே வேள்வியில் அழைப்பதை மட்டும் வைத்து சொற்பிறப்பு சொல்ல முடியாது. நாம் நினைக்கும் தெய்வத்தை (அதை ஆவி வடிவில் உருக்கொண்டு) ஒரு பொருளில் அல்லது படிமத்தில் எழுந்தருளும் படி மந்திரம் ஓதித் தெய்வத்தை அழைத்தலுக்கு ஆவி ஆகித்தல்> ஆவு ஆகித்தல் = ஆவாகித்தல் என்றே நான் பொருள் கொள்ளுகிறேன். அந்தப் படிமம், அல்லது பொருள் அதற்குப் பின்னால் தெய்வம் எனவே புரிந்து கொள்ளப்படுகிறது. நீங்கள் ஒப்புக் கொள்ளாது போகலாம். அது அது அவர்களுக்கு என்று நான் விடுக்கிறேன்.

அவி என்ற சொல்லையும் நான் தமிழ் வழியே தான் புரிந்து கொள்ளுகிறேன். அவிதல் என்பற்கு வெந்து போதல், எரிதல் என்ற பொருள் தமிழிலும் உண்டு. அள்>அழு>அகு என்ற வளர்ச்சி எரிதல் பற்றிய சொல்லிற்கு ஏற்படும். அழல்>அழனம், அழனி என்ற சொல்லை எண்ணிப் பார்த்தால் விளங்கும். ஹவனம் என்ற சொல்லிற்கு வேள்வி என்ற பொருளை நீங்கள் குறித்திருந்தீர்கள். அதையும் மேலே சொன்ன அழல் வழியாக, அழனம்>அகனம்>அவனம் என்ற முறையில் தான் நான் புரிந்து கொள்ளுவேன். அழனம் என்பது நெருப்பு, வெம்மை என்ற சொற்களைக் குறிக்கும். அவிப்பு என்பது எரிப்பு என்று பொருள் கொள்ளும். ஹகரம் வடக்கில் சேருவது இயற்கையே. அவனம் வேள்வியைக் குறித்ததில் வியப்பில்லை.

இதை நிறுவுதற்கும் பல்வேறு தொடர்புடைய சொற்களை நான் கூறலாம். அகுதல் என்பது மேலே சொன்னது போல் நெருப்பு இன்னொரு பொருளை அழிப்பதைக் குறிப்பது. அகி>அவி என்று இகரம் சேரும் வினைச்சொல், இன்னொரு பொருள் நெருப்பால் மாறுவதைக் குறிப்பது. இந்த வினைச்சொல் மாற்ற ஒழுங்கு அப்படியே தமிழ் மரபு மாறாமல் இருக்கிறது. (கற்றல், கற்பித்தல் என்ற வினைச்சொல் தொகுதியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.) அவிதல் என்பது நெய்க்கு மட்டுமல்லாமல், உணவிற்கும் அமைவதைத் தமிழில் பார்க்கலாம். அதாவது அவி என்ற பயன்பாடு தமிழில் பரந்த பொருளைக் கொடுக்கிறது. அவியல், அவிசல், அவிகாயம், அவம் போன்ற சொற்கள் எல்லாம் பரந்த பொருள் கொடுக்கின்றன. வேள்வியில் அவிந்து போகும் பொருளுக்கும் அவி என்று ஆளப்பட்டது வியப்பில்லை என்றே நினைக்கிறென். "அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்" என்ற கூற்றும் இதை அரண் செய்கிறது. நீங்கள் சுட்டிய "ஹவ்யவாஹன் - அவியை சுமப்பவன், அக்னி" என்பது இருபிறப்பியாய் இருக்கிறது.

இனி வேது பிடித்தல் என்று ஆவி, புகை பிடித்தலை சுட்டினீணர்கள். வெய்தல்>வேதல், எரிதல் என்பது நல்ல தமிழே. "ஹுதம் - வேள்வியில் எரிந்து பொசுங்கியது, ஹுதசேஷம் - வேள்வியில் எரிந்ததன் மிச்சம், ஹுதாசனன் - எரித்துப் பொசுக்கியதை உண்பவன், அக்னி" என்ற மூன்று சொல்லாட்சிகளுக்குமே ஹுது என்பதே அடிப்படை அதன் பொருள் எரிதல் என்பதாய் இருக்க முடியுமே ஒழிய அழைத்தல் (hve_) என்பது இருக்க முடியாது. பொகைந்தது (=புகைந்தது), பொசுங்கியது, பொதுங்கியது என்ற வினைச்சொற்கள் எரிதலைத் தொடர்ந்து எழும் வினையைக் குறிக்கும் சொற்கள். பு(=பொ)>ஹு>உ என்ற பலுக்கத் திரிவை உன்னிப் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும். ஊது என்பதும் புகையைக் குறிக்கும் சொல் தான்.

அடுத்து ஹவ என்ற வினைச்சொல்லிற்கு வேட்டல் என்ற பொருளைச் சுட்டி இருந்தீர்கள். தமிழிலும் அவ்வுதலுக்கு வேட்டல் என்ற பொருள் உண்டு. வவ்வுதல் என்பது வாயால் பற்றுதலையும் (இன்றைக்கு மாறிக் கையால் என்ற பொருள் கொள்ளப்படுகிறது), கவ்வுதல் என்பது கையாற் பற்றுதலையும் (இன்றைக்கு மாறி வாயால் என்ற பொருள் கொள்ளப்படுகிறது) அவ்வுதல் என்பது மனத்தால் பற்றுதலையும் குறிக்கும் தமிழ் வினைச் சொற்கள். மனத்தால் பற்றுதல் என்பது வேட்டல், விரும்புதல் தான். அவ்வுதல் என்ற வினைச்சொல் இன்று பேச்சு வழக்கில் பயிலவில்லை என்றாலும், அவா என்ற பெயர்ச்சொல்லும், அந்தப் பெயரில் இருந்து இன்னொரு வினையாய் கிளைத்த அவாவுதல் என்ற வினையும் இன்று பயில்கின்றன. உங்கள் ஹவாமஹேக்கான இணை புரிகிறதா?

முடிவில் "ஹும் என்கிற துர்கா தேவியின் ஹுங்கார பீஜாட்சரமும் இதோடு தொடர்புடையது." என்று சொல்லியிருந்தீர்கள். ஓங்காரத்திற்கு முந்தையதாய் ஊங்காரம் தமிழில் சொல்லப்படுவதுதான். ஊங்காரம் என்பது கோவத்தின் அறிகுறி, ஓங்காரம் என்பது உயர்ச்சி, மற்றும் காப்பாற்ற வேண்டுதலின் அறிகுறி.

நீங்கள் காட்டிய எல்லாச் சொற்களையும் அழைத்தல் வினை வேரில் இருந்தே இனம் காட்டியிருந்தீர்கள். நான் அப்படி எண்ணுவதில்லை. இவை வெவ்வேறு வேர்களில், அதே பொழுது யாகம் செய்யும் போது ஏற்படும் வினைகளில் இருந்து, எழுந்தவை என்று எண்ணுகிறேன். அவற்றை நான் புரிந்தவாறு மேலே இனம் காட்டியிருக்கிறேன்.

நான் கூறியவற்றை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு. மீறி இதையும் ஒரு "crackpot theory" என்று நீங்கள் சொல்லலாம். எனக்குக் கவலையில்லை. சொற்பிறப்பியலில் இதுதான் சரி என்று முடிந்த முடிவாக யாரும் சொல்லுவதில்லை. சொற்பிறப்புக் காணுவதை ஒரு தொடர்ச்சியாகவே பலரும் பார்க்கிறார்கள். இன்றைக்குச் சரியென்று தோன்றுபவை நாளைக்குப் புதுத் தரவும், ஏரணச் சிக்கலின் மறுபார்வையும், புதிய நடைமுறைகளைக் கொண்டு தரும். நான் மோனியர் வில்லியம்சு தருவதை இறுதியானது என்று கொள்ளுவதில்லை; அதே போலத் தமிழில் பாவாணர் சொல்லுவதையே கூட முடிவானது என்று சொல்லுவதில்லை. நான் சொல்லுவதையும் மறுத்து இன்னொருவர் இனிச் சொல்லக் கூடும். அது சரியாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளுவேன்.

எந்த மொழியும் வழிபாட்டுக்குரியது என்று என்னால் ஏற்க முடியாது. சங்கதமும் அதற்கு விலக்கல்ல. என் ஆய்வு தொடர்ந்து கொண்டிருக்கும். உங்கள் வருகைக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, February 27, 2007

ஓதி - 2

hotri என்பதற்கு வேராக, hu (to sacrifice, to eat, to please; deri. huta, hutva_, ho_tum) என்ற தாது பாடத்தின் மூன்றாம் வகை வேர்ச்சொல்லைத் தான் மோனியர் வில்லிம்சு காட்டும். [hve_ (to vie with, to challenge, to call, to ask, to invoke; der. hu_ta, hve_ya, hva_tum, a_hu_ya) என்ற முதல் வகை வேர்ச்சொல்லை மற்ற மேற்கோள்கள் தான் அடையாளம் காட்டும்; மோனியர் வில்லிம்சு காட்டுவதில்லை. நீங்கள் சொன்ன ho என்பது தாது பாடத்தில் இந்தப் பொருள்களில் கிடையாது; இருந்தாலும் அது hve_ என்பதோடு தொடர்பு கொண்டது; எனவே அதுவும் எனது கருத்தில் உள்வாங்கக் கூடியது தான். நான் மேலே கொடுக்கும் வேர்ப்பொருள்கள் பட்டோ ஜி தீக்ஷிதரின் சித்தாந்த கௌமிதியில் இருந்து எடுத்தவை.]

முன்னே சொன்னது போல், தாது பாடம் வேர்ப் பொருளைக் காட்டுவதற்கு மேலே நகராது. இவற்றை எல்லாம் நீட்டி முழக்கி தெள்ளிகை இடுகையில் நான் எழுதியிருக்கலாம் தான். ஆனால், ஹோத்ரி என்பது அந்த இடுகையில் என் முகன்மைச் செய்தியல்ல, அதனால் ஒரு குறுவிளக்கம் மட்டுமே சொல்லி நகர்ந்து விட்டேன்.

அடிப்படையில் hotri என்ற சொல்லிற்கு மேலே சொன்ன ஆகுதி இடுவது (to sacrifice; அல்லது to pour), அழைப்பது (to call) என்று இரண்டாகவும் பொருள் கொள்ளுவார்கள். [ஆனாலும், சொற்பிறப்பிலார்களிடம் இதுவா, அதுவா என்ற வேறுபாடு இன்னும் போகவில்லை.] இவற்றில் எது முதற்பொருள், எது வழிப்பொருள் என்பதை அறிய இன்னும் ஆழம் போகவேண்டும். வேண்டுமானால் கூகுள் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். [காட்டாக "telephone" என்பதில் முதற்பொருள் தொலைவில் இருந்து வரும் ஒலி/பேச்சு என்பதே. வழிப்பொருள் அந்தப் பேச்சுக்கருவிக்கு உள்ள பெயர்.] எது விதப்பான பொருளோ, அதையே முதற் பொருளாகக் கொள்ளுவது மொழியியலில் உள்ள பழக்கம். அந்த வழக்கில், to call என்ற பொருள் முதற் பொருளாயும், to sacrifice/to pour என்பது வழிப்பொருளாயும் அமைய பெருத்த வாய்ப்புண்டு. [இந்தச் சிந்தனை மோனியர் வில்லிம்சிற்கு மாறுபட்டது. மோனியர் வில்லிம்சை விவிலியம் போல் கருதுபவர்க்கு அது முரணாகத் தெரியலாம்.]

இது ஏன் என்பதை உணர, to sacrifice / to pour என்பதை முதலிற் பார்க்க வேண்டும். தீ அணையாது இருக்க நெய் போன்ற ஆகுதிப் பொருட்களை ஓம குண்டத்துள்ளே ஊற்றுவது, சொரிவது, கொட்டுவது, போடுவது, எறிவது, வீசுவது என்றே அந்த வேர்ச்சொல்லுக்குப் பலரும் பொருள் கொள்ளுவார்கள். தமிழில் உகு-த்தல் வினையில் இருந்து ஊ-ற்றல் என்னும் வினை எழும். (நீர் உகுத்தல்; நெய் உகுத்தல்) உகுத்தலின் பகுதியான உகு>ஊ என்பது hu என்ற வடமொழி வேரொடு, தொடர்புடைய ஒரு ஒலியிணை தான். அது வடமொழிக்கு மட்டுமே விதப்பாக உள்ள வேரல்ல. தமிழிலும் உள்ள வேர் தான். இயன்மை என்பது இங்கே இரண்டு மொழிகளுக்கும் பொதுவாய் இருக்கிறது. உகு என்னும் வேர் பர்ரோ எமனோவின் திராவிட சொற்பிறப்பியல் அகரமுதலியில் 562 ஆம் சொல்லாகக் குறிப்பிடப்படும். அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

562 Ta. uku (ukuv-, ukk-) to be shed as feathers or hair, be spilled, gush forth, fall down, die, set; (-pp-, -tt-) to let fall, spill, scatter, cast, shed as leaves or feathers, shed (fear), pour out; ukuvu spilling. Ma. ūkka to spill, shed. Ko. u·c- (u·c-) to be spilt; spill (tr.), pour (water, grain), pour off (water from grain). To. u·c- (u·&cangle;-) to throw away (dirty water); ux- (uk-) to leak, dribble; uf- (ufQ-) to fall down (of flowers or fruit); (uft-) to shake off (water from head, dust, mud), empty (bag of grain), throw (spear), shout (words of song, nöw). Ka. ugu (okk-) to become loose, burst forth, flow, run, trickle; be shed or spilt; let loose, etc.; vomit; ugisu to spill, shed, etc.; ogu, ogisu = ugu, ugisu. Tu. guppuni to pour, shed, spill; (B-K.) ugipu id. Kor. (T.) ogi to pour. Te. ūcu to fall off as hair from sickness; guppu to throw, fling, sprinkle (as something contained in the closed hand), discharge (as an arrow). Pa. uy-, (S) uv- (hair) falls out. Malt. ogoṛe to tumble down, be rolled down; ogoṛtre to roll down. DED(S, N) 480, and from DED 1443.

"hu, உகு என்னும் வேர்ச்சொற்களில் எது முதல்? சங்கதமா? தமிழா?" என்ற குடிமிப் பிடிச் சண்டைக்குள் நான் இறங்குவதில்லை. என்னுடைய முயற்சிகளெல்லாம், ஒரே பொருளில் ஒரே மாதிரி ஒலியமைப்புக் கொண்ட, வரலாற்றில் ஒரே பொழுது இருந்த, இருவேறு மொழி வேர்களின் இணை கண்டால் அவற்றைப் படிப்போருக்கு அடையாளம் காட்டுவது என்றே இது நாள் வரை அமைந்திருக்கின்றன. அப்படிக் காட்டுவது ஒரு ஆய்வுப் பணி என்றே நான் எண்ணி வருகிறேன். நெடுநாட்களாக, நாவலந்தீவின் மரபுகளைச் சங்கதம் வாயிலாகவே காட்டி உயர்ச்சிகொள்ளும் போக்கு இருந்து வந்திருக்கிறது. அப்படி இருக்கத் தேவையில்லை. இன்னொரு செம்மொழியான தமிழிலும் தோற்றங்கள் இருக்கலாம் என்ற சிந்தனையே பலருக்கு மருட்டுவதாய் இருக்கிறது. என்னை, இதற்காகவே சாடுகிறவர்கள் சாடி விட்டுப் போகட்டும். கவலையில்லை. உங்களுடைய "crackpot theory" என்ற வாக்கும் இன்னொரு சாடல், அவ்வளவு தான்.

"இரானியப் பழக்கங்களும், வேதப் பழக்கங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, அதே நேரத்தில் மற்ற இந்தையிரோப்பியர்களோடு பொதுமை இல்லாத பழக்கங்களில் ஒன்றாக, இந்த வேள்விப் பழக்கம் இருக்கிறது" என்று இந்தையிரோப்பியத்தின் அறுதப் பழங்காலத்தை ஆய்வு செய்கிறவர்கள் சொல்லுகிறார்கள். இந்தப் பழக்கங்களில் "எலாமோ-திராவிடத் தாக்கம்" இருக்குமோ என்றும் பலர் அய்யுற்றுக் கொண்டிருக்கிறார்கள். "இந்தப் பழக்கம் ஏன் நாவலந்தீவு சார்ந்த, அதே பொழுது அருகில் உள்ள பகுதிகளையும் சார்ந்தாற் போல், இருக்கக் கூடாது?" என்ற கேள்வியும் பலருக்கு எழுகிறது. தமிழ், மற்றும் தமிழிய மொழிகளின் அன்றைய அகற்சி இன்றையத் தமிழ் நிலப் பரப்போடு மட்டுமே ஒடுங்கியது இல்லை; அவை 3500 ஆண்டுகளுக்கு முன்னால் வடபுலத்தும் கூடப் பரவியிருந்திருக்கலாம் என்ற சிந்தனையும் வலுப்பட்டு வருகிறது. வேள்வி பற்றிய பல அடிப்படைத் தமிழ்ச் சொற்களும், அவற்றின் மற்ற துறைப் பயன்பாடுகளும் இந்த அய்யப் பாட்டைக் கூட்டிக் கொண்டு போகின்றன. ஆனால் சங்கதம் பற்றிய மூட நம்பிக்கையும், "நான் உயர்ச்சியா, நீ உயர்ச்சியா" என்ற விவரங்கெட்ட வறட்டுத்தனமும், பல சங்கத ஆய்வாளர்களை நாவலந்தீவின் இன்னொரு பகுதியான தமிழ்ப் பக்கத்தையும், இது போல முண்டா மொழிப் பக்கத்தையும் (இதைக் காணாது இருப்பதில் தமிழாய்வாளர்களும் சேர்த்தி தான்.) காண விடாது ஒதுக்கி வைக்கவே சொல்லுகின்றன. "ஸ்ர்வம் ஸ்வ்யம்" என்ற சிந்தனை அவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது.

ஊற்றுவது, சொரிவது, கொட்டுவது, போடுவது, எறிவது, வீசுவது என்ற சொற்களெல்லாம் ஓம குண்டத்தில் போடாத (நீர்மம், மற்றும் திண்மப்) பொருள்களுக்கும் பயன்படும் ஒரு வினை தான். அதே பொழுது, இந்த வினைச்சொற்கள் ஓமகுண்டத்திற்கே மட்டுமே உரியவை என்ற விதுமையாகச் சொல்லமுடியாது. வடமொழியிலும் கூட இப்படித் தான். அதனால் தான் வேள்வியைப் பற்றிச் சொல்லும் போது to pour என்பதைக் காட்டிலும், to call என்பதைச் சொல்லும் வேரில் இன்னும் பொருள் ஆழம் இருக்குமோ என்று அய்யுறுகிறோம்.

பல மொழிகளிலும் அழைப்பு என்பது பெரும்பாலும் கூவுதலே. ஆ, ஈ, ஏ, ஓ, கூ, கோ என்ற ஓரெழுத்துச் சுட்டுக்கள் தான் அழைத்தலுக்கு வாகாய், பல மொழிகளில் அமைகின்றன. இவை மொழி கடந்த ஒலிக்குறிப்புக்கள். நாளாவட்டத்தில், இது போன்ற ஒரு ஒலிக்குறிப்பைச் சத்தம் போட்டுச் சொல்லி பின்னால் பெயர்களையும் சேர்த்து நாம் அழைக்கிறோம். கூப்பிடுவதில் தேவதைகளுக்கு ஒருவிதம், மாந்தருக்கு இன்னொரு விதம் என்று யாரும் பார்ப்பதில்லை. எல்லாமே ஒன்றுதான். இங்கே மீண்டும் தமிழ்க் காட்டைத் தருகிறேன். [அய்யய்யோ, இவன் அப்பத்தாவைப் பற்றியே பேசுகிறான். எத்தனை வெள்ளைக்காரரை, எத்தனை சங்கத அறிஞரை இவன் அடையாளம் காட்டுகிறான், சமஸ்கிருதமாய நமக என்று சொல்லுகிறான்? - என்ற ஒரு சிலரின் புலம்பலுக்குச் சிரிப்புத் தான் என் விடை :-).] மற்ற மொழிகளில் இருந்தும் காட்டுக்களைச் சொல்ல முடியும். ஆனால் தேட விழைபவர்கள் தாங்களே தேடிப் பார்க்கட்டுமே? :-)

"அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே, அன்பினில் விளைந்த ஆரமுதே" என்ற ஏகார, ஆகாரமும், "பித்தா, பிறைசூடி, பெம்மானே, அருளாளா" என்ற ஆகார, ஈகார, ஏகாரங்களும், "ஓ, கண்ணா, இங்கே வா" என்ற ஓகாரமும் (ஓவென வையகத்து ஓசைபோய் உயர்ந்ததே - சீவக. 1843), "யோவ், ஓவ்," என்ற கூப்பாடுகளும், கூவுதலும், கோவென்ற அழுகையும் என எல்லாமே அழைப்புக்கள் தான். இந்த மொழிகளுக்கு மீறிய, மாந்தப் பொதுச் சுட்டொலிகளில் இருந்துதான், hve_ போன்ற வேர்ச்சொல்லும் கூட எழும். ஏ என்ற ஒலியோடு ஹகரம் சேர்த்து ஹே என்றும் வடபுலத்தில் கூப்பிடுவார்கள். he_ என்பதற்கும் hve_ என்பதற்கும், hey என்ற பதற்கும் கூடப் பலுக்கலில் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. (மறுபடியும் ஒரு மொழியில் இருந்து இன்னொன்று என உணர்வு பூர்வமாய்ப் புரிந்து கொள்ளாதீர்கள்.) அதே போல ஓ என்பதை ஹோ என்று வடபுலத்தில் கூப்பிடுவார்கள். கூ என்பது கூட பலுக்கத் திரிவில் கோ என்றும் ஹோ என்றும் மாறும்.

வேதம், குறிப்பாக இருக்கு வேதம், யாகங்களின் போது பல் வேறாகத் தேவதைகளை அழைக்கிறது. எல்லா யாகங்களுக்குமே "இதைப் பண்ணிக் கொடு, அதைச் செய்து கொடு" என்ற வேண்டுதல்கள் தான் அடிப்படை. வேள்தல்>வேட்டல் என்ற தமிழ் வினைச்சொல்லையும் கூட இங்கே நினைவு கொள்ளுங்கள்.
வேட்டலின் தமிழ்வேரை பர்ரோ, எமெனோவின் 5544 வது சொல்லாகப் பார்க்கலாம்.

5544 Ta. vēḷ (vētp-, vēṭṭ-) to offer sacrifices, marry; n. marriage; vēḷvi sacrifice, marriage; vēḷvu sacrifice; presents of food from the bridegroom's to the bride's house and vice versa at a wedding; vēṭṭal marriage; vēṭṭāṉ, vēṭṭōṉ husband; vēṭṭāḷ wife; viḷai (-pp-, -tt-) to perform as worship. Ma. vēḷvi, vēr̤vi sacrifice; vēḷkka to marry as brahmans before the holy fire; vēḷi, vēḷvi marriage, bride, wife; vēḷppikka fathers to marry children. Ka. bēḷ to offer into fire or with fire as ghee, animals, etc.; bēḷuve oblation with fire, burnt-offering; bēḷamba destruction of human life in fire. Tu. belcaḍe a devil-dancer, one possessed with Kāḷī. Te. vēlucu to put or throw in a sacrificial fire, offer up a burnt sacrifice; vēl(u)pu god or goddess, deity, divinity, a celestial, demi-god, immortal; vēlpuḍu worship; vēlimi oblation; (inscr.) vēḷpu god. DED(S, N) 4561.

வேள்தலின் ஒரு நடைமுறை, படிமம் இல்லாத வகையில் நெருப்பில் ஆகுதி செய்யும் முறை. வேள்தலின் இன்னொரு நடைமுறை பூவும், நீரும் தெளித்து, படிமத்தின் முன், படையல் செய்யும் வழிமுறை. இதுவும் ஒரு வேள்வி தான்; ஆனால் நெருப்பு இல்லாத வேள்வி; பூசை என்ற பெயரால் இதைச் சொல்லுகிறோம்.

சிவகங்கை வட்டார அய்யனார் கோயில்களில் பூசை செய்பவரை, வேள காரர் என்று தான் சொல்லுவார்கள். இன்னொரு இடத்தில் "வேளாப் பார்ப்பான்" என்று வேள்வி செய்யாத பெருமானரைச் சங்க இலக்கியம் பேசும். ஆகக் குறிக்கோள் ஒன்றுதான்; நடைமுறைகள் தான் வெவ்வேறு. [அய்யனார் கோயில் வழக்குகளை இன்னோர் இடத்தில் பார்க்கலாம். இப்பொழுது பெருமானர் வேள்வியைச் சற்றே கூர்ந்து பார்ப்போம். இந்த வகையில் நம்பூதிகள் சிறப்பானவர்கள். வணக்கத்திற்குரிய ஓதிகள் என்ற பொருளில் அமைந்த நம் ஓதிகள் என்ற அவர்கள் பெயரும் கூட நான் சொல்ல வரும் கருத்தை உறுதி செய்யும். அவர்களுடைய வலைத்தளங்களுக்குப் போனால், வேள்விகள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சிறப்பாக விவரிக்கப் பட்டிருக்கும்.]

பெருமானர் வேள்வியின் தொடக்கம், அதை ஏற்பாடு செய்பவன் வீடு, அல்லது அவனுடைய குருவின் வீட்டில் இருக்கும் அடுப்பில் இருந்து தொடங்குகிறது. அந்த அடுப்பில் இருந்து தான், நெருப்பை யாகத்தில் ஏற்றுகிறார்கள். யாகம் தொடங்கும் போது யாகத்தை ஏற்பாடு செய்பவனும், அவன் மனைவியும், யாகம் செய்யும் 16 ஓதிகளும் அழனியைத் துதிக்கும் இருக்கு வேதத்தின் முதற் சொலவத்தைச் (slogan) சொன்னவாறே யாகக் குண்டத்தைச் சுற்றி வருகிறார்கள்.

[ஒவ்வொரு பெருமானனும் தங்கள் வீட்டில் அணையாத நெருப்பை ஓம்புதற்குக் கடமைப் பட்டவர்கள். ஒவ்வொரு பெருமானனும், அவன் மனைவியும் தங்கள் வீட்டில் ஒரு நாளுக்கு இருமுறையாவது அழனியைத் தூண்டி, அழனியை அழைத்து, மந்திரம் ஓதி, வழிபாடு செய்யவேண்டும். அந்தச் சடங்கிற்கும் அழனியோதல் - agnihotra என்ற பெயர் தான் உண்டு. இன்று மிக மிக அருகியே பெருமானர் பலரும், தங்கள் வீட்டில் நெருப்பை ஓம்பும் கடமையைச் செய்கிறார்கள்.] ஓமம் என்ற சொல் அணையாது காப்பாற்றப்படும் தீயைத் தான் குறிக்கிறது. ஓமுதல், ஓம்புதல் என்ற சொற்கள் இன்றும் கூடக் காப்பாற்றுதல், வளர்த்தல் என்ற பொருளைத் தமிழில் கொடுப்பதை உணரலாம். குடிபுறம் காத்து ஓம்பி - குறள் 549; ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் - பொருநர் ஆற்றுப்படை. 186 கற்றாங்கு எரியோம்பி தேவா. 1.1). ஓமல் என்ற சொல் புகையெழுதலையும், புகையைப் போலவே எழுந்து ஊர் முழுக்கச் சுற்றிவரும் ஊர்ப்பேச்சையும் குறிக்கும். இந்தப் பொருட்பாடுகளும் ஓமம் என்ற சொல்லின் தமிழ்மையை உணர்த்தும். எரிதலை உணர்த்துவது போல நாவில் எரிதல் உணர்வைக் கொண்டுவரும் ஒருவிதமான காரமான மருந்துச்செடியும் கூட ஓமம் (Bishop's weed) என்றே தமிழில் சொல்லப்படும். ஓமநீரம் = ஓமச்சாறு; இன்னொரு பொருளாய், ஓமநீரம் என்பது வேள்வித் தீயில் நெய் முதலியன பெய்கையைக் குறிக்கும். offering an oblation to the gods by pouring ghee etc. into the consecreted fire.

யாகம் செய்யும் 16 ஓதிகளில், hotri என்பவர் யாகத்தின் போது இருக்கு வேத மொழிகளை ஓதுகிறவர். பல அகரமுதலிகளும் hotr என்பதற்கு reciting priest என்றே சொன்னாலும், அவர் இருக்கு வேதம் ஓதுகிறவர் என்பதே முகன்மையான செய்தி. recitation என்பது தமிழில் ஓதுதலே. யாகத்தின் போது செய்யும் ஆகுதிகளை குண்டத்தில் கொட்டுவதோடு, இருக்கு வேதத்தின் முதல் எட்டு மண்டலங்களில் இருந்து இந்த ஹோத்ரி ஓதுகிறார். (ஒன்பதாவது மண்டலம் சோமச் சாறு பற்றியது. அதைப் பேசினால் நான் சொல்ல வந்தது விலகிப் போகும்.] இந்த hotr போக, இன்னும் மூன்று பெரிய ஓதிகள் யாகத்திற்கு என உண்டு. யசுர் வேதச் செய்திகளைக் கூறி யாகத்தின் மானகையைக் (management) கவனிக்கும் Adhvaryu, சாம வேதத்தைப் படிக்கும் Udgatr (அல்லது chanting priest - பதனை என்ற பஜனையைச் செய்பவர்; பதங்களைத் தொடுப்பது பதனை.), இவர்களுக்கு மேலிருந்து மொத்த யாகத்தையும் கவனிக்கும் பெருமானன் அல்லது அதர்வன் ஆகிய மூன்று பேரும் இந்த மூன்று ஓதிகள் ஆவர்.

அன்புடன்,
இராம.கி.

ஓதி - 1

என்னுடைய தெள்ளிகை - 2 இடுகைக்கு கல்வெட்டு ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் பின்னூட்டியிருந்தார். அதன் மறுமொழி இங்கு தனிப்பதிவாகிறது: [சட்டென்று இதை எழுத முடியவில்லை. என்னுடைய அலுவலுக்கு நடுவில், இரவு விழித்திருந்து, கொஞ்சம் சரிபார்த்து, மூன்று நான்கு வரைவுகளுக்குப் பின்னால், இதைப் பதிவிட வேண்டியதாயிற்று. அதற்குள் சில விடலைக் காவிக் குஞ்சுகளுக்குப் பொறுக்க வில்லை போலும்; வழக்கம் போல, சேற்றை அள்ளித் தெளிக்கத் தொடங்கிவிட்டன. மருமகள் என்ன சொல்லப் போகிறாள் என்று மாமியார் காத்திருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்; ஆனாலும் இப்படியா? இவர்களின் லொள்ளு அளவுக்கு மீறுகிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு விடை சொல்ல மட்டுமே, நான் வலைப்பதிவு வைத்திருக்கிறேனா, என்ன? ;-)]
--------------------------
அன்பிற்குரிய திரு. எஸ். இராமச்சந்திரன்,

"நீங்கள் சமஸ்கிருதத்தில் என்ன படித்திருக்கிறீர்கள்? உங்களுக்கு சமஸ்கிருதத்தில் புலமை அவ்வளவாக இல்லை. நீங்கள் அந்த மொழியை ஓரளவு நன்றாகக் கற்றுக் கொண்டால் இத்தகைய முயற்சிகளில் பிழைகள் வருவதைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் கொஞ்சம் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் கூட உங்கள் முயற்சிகளை எள்ளி நகையாட வாய்ப்புள்ளது." என்று எழுதியிருந்தீர்கள்.

உங்களைப்போல் நானும் சங்கதப் பண்டிதன் அல்லன்; பேசத் தெரியாது. ஆனால் சங்கதச் சொல்லறிவு ஓரளவு பெற்றவன். என்னுடைய பிழைகளை, அறிந்தவர் சொன்னால், திருத்திக் கொண்டு தான் வருகிறேன். தோளில் கைபோட்டும், வாயால் பேச வைத்தும், "சங்கதம் தேர்ந்தவனா?" என்று நோடிப் பார்க்கின்ற காலமெல்லாம் மலையேறி விட்டது, அய்யா! என் சங்கத மொழி அறிவை, எந்த அளவு, எங்கிருந்து, எப்படிப் பெற்றேன் என்பதைத் தேர்வெழுதிச் சான்றிதழ் காட்டி நிறுவத் தேவையில்லை.

இப்படித்தான் நண்பர் ஒருவர் "எந்த peer journal-ல் நீ கட்டுரை வெளியிட்டிருக்கிறாய்? தமிழில், இந்தியவியலில் என்ன பொத்தகம் போட்டிருக்கிறாய்?" என்று கேட்பார். நீங்கள் கேட்பதும் அது போலவே இருக்கிறது. துறைக்கு உள்ளே வெளியாள் புகாமல், வரம்பிட்டு, வேலியிட்டுப் புலத்தைக் காக்கும் இந்தியப் பல்கலைச் சட்டாம் பிள்ளைகளுக்கும், புதிய சாதிப் போக்கிற்கும் (பழையதில்லை, உருவகத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்), நான் எங்கே விடை சொல்ல முடியும்? :-)

மும் மூன்று புள்ளிகளாய், 3 அடுக்கில் 9 புள்ளிகளை வைத்து, கையெடுக்காமல், 4 நேர்கோடுகளால் சேர்க்கச் சொல்லி மானகை (management) வகுப்புக்களில் ஒரு புதிர் போடுவார்கள்; அதற்கு விடை காணும் போது தான், "மரபுச் சிந்தனை என்பது நம்மை அறியாமலேயே கட்டிப் போடுவதையும், அந்த மரபு வேலியை உடைத்தால் தான் புதுப் பரிமானங்கள் புரியும், புது இயன்மைகள் (possibilities) தெரியும்", என்பதையும் அறிந்தேன். மொழியாய்வும் கூட அப்படித்தான். கிளிப்பிள்ளை போல், எல்லாவற்றிற்கும் "பாணினி சொன்னான், தாது பாடம் சொன்னது" என்பதும், "தொல்காப்பியன் சொன்னான், நச்சினார்க்கினியன் உரை செய்தான்", என்பதும் நெடுந்தொலைவு நம்மை எடுத்துச் செல்லாது என்பது என் புரிதல்.

தெள்ளிகை பற்றிய என் இடுகை இன்னும் முடியாதது. [இடையில், தனித்தமிழ் பற்றி ஒரு தொடர் இடுகை இட வேண்டிய கட்டாயத்தில், எடுத்த வேலை பாதியானது.] அதில் ஹோத்ரிக்கும் ஓதலுக்கும் இணை சொன்னது ஆழ்ந்து ஓர்ந்து சொன்னது தான். இணை என்றதைக் கூர்ந்து கவனியுங்கள்; "இதிலிருந்து அதா, அதிலிருந்து இதா" என்று நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்ல இன்னும் ஆய வேண்டும். (இந்தப் பதிவுலக அரசியலில் "தமிழ் தான் எல்லா மொழிகளுக்கும் அப்பத்தா" என்று நான் சொன்னதாய் ஒருசில பெயரிலார்கள் (வித விதமாய்க் கற்பனைப் பெயர்களில் வருபவர்களும்) வரிப்பிளந்து அருத்தம் பண்ணி எழுதியதைப் படித்துச் சிரித்தேன். பாவம், விளங்காதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய காவி நிகழ்ப்புகளைத் தொடர்ந்து நடத்துவார்கள். :-))

"crackpot theory" என்ற தங்கள் சொற்றொடரைப் படித்தும் கூடச் சிரித்துக் கொண்டேன். எவ்வளவு எளிதில் இதுபோன்ற வாக்கியங்கள் வந்து விடுகின்றன? குறைந்தது, மோனியர்-வில்லியம்சையும், பாணினியையும், தாதுபாடத்தையும், பர்ரோ-எமெனோவையும் கூடப் பாராமலா, இது போன்ற கருதுகோளை முன் வைப்பேன் என்று நினைக்கிறீர்கள்? தங்களைப் போன்ற ஓர் ஆய்வாளருக்கு இது கூடவா தெரியாது? இந்தக் காலத்தில் தான் கூகுள் சொடுக்கியைத் தட்டினால் கணக்கு வழக்கற்று, செய்திகளைக் கொட்டுகிறதே? அப்புறமும் தமிழ் ஆய்வாளர்கள் கிட்டப் பார்வையுடன் இருப்பார்களோ? இதில் என்ன வருத்தம் என்றால், எங்களைப் போன்ற ஆய்வர்களை இன்னமும் 1950, 60 நிலையிலேயே நீங்கள் வைத்துப் பார்க்கிறீர்கள், பாருங்கள், வியப்புத் தான்.

பொதுவாக, சங்கதச் சொற்களைப் பகுத்து, ஒட்டுருபுகளை வெட்டி, இனியும் பக முடியாது என்ற அளவில், அடிப் பகுதிகளைத் தேடினால், அது தாது பாடத்தின் 2200 வேர்களில் தான் வந்து நிற்கும் என்பது சங்கதம் படிக்கும் ஒவ்வொரு மொழியியல் மாணவனுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும்.

சந்த மொழிக்குப் பாணினியின் பங்களிப்பு பெரிது தான்; சந்தமும் சங்கதமும் நெருங்கியவையே. என்ன ஒரு சிக்கல்? பாணினி சொல்லும் முறை இந்த 2200-ஓடு நின்று விடும்; மேற்கொண்டு நகராது. அது அவன் குறையில்லை. இந்தப் பகுப்பாய்வின் விளிம்பு அதுதான். "இந்த 2200ம் திடீரென்று பிறந்தனவா? ஓர் இயல்மொழிக்குள் அப்படிப் பிறக்க முடியாதே? அவற்றின் பொருட்பாடுகள் எப்படி வந்தன? அவற்றுள் உள்ள பொருட்பாட்டு வளர்ச்சி என்ன? முதல் வேர்கள் எவை? வழி வேர்கள் எவை?" போன்ற கேள்விகளுக்கு பாணினியில் விடை கிடைக்காது. தாது பாடத்தோடு நின்று போவதால் சொல் வளர்ச்சி அறிய முடியாது.அங்கே பலுக்கத் திரிவுகள் கணக்கெடுக்கப் படுவதில்லை. (தொல்காப்பியத்திலும் கூட இது செய்யப்படுவதில்லை. பாணினியும், தொல்காப்பியமும் அவ்வம் மொழிகளின் இலக்கணங்கள்.) ஒப்பீட்டு மொழியியல், குறிப்பாக, வரலாற்று மொழியியல், இந்தத் திரிவுகளைக் கணக்கெடுத்துக் கொள்ளும்.

"ஒரு இயல் பேச்சு மொழியில், இந்த 2200 வேர்களும் ஒன்றிற்கொன்று தொடாதவையா? அன்றி வட்டாரப் பலுக்க விதப்பில் (regional pronunciation specificities; தமிழில் மகரத்திற்கு வகரம் போலி என்கிறோமே அது போல, வங்கத்தில் வகர ஒலிப்பைப் பகர ஒலிப்பாக்கிச் சொற்களை மாற்றிப் பலுக்குகிறார்களே அதுபோல) ஒருசில ஒப்புமைகள் இராதா?" என்று ஆழமாய்ப் போய், ஆகக் குறைந்த அடிவேர்களைத் தேடும் ஆய்வை, இந்தக் காலத்தில் ஒரு சிலர் செய்ய முற்படுகிறார்கள்.

அதோடு இந்த 2200 -யையும் மற்ற இந்தையிரோப்பியன் மொழிகளின் வேர்களோடும் இணைத்துப் பார்த்து, "அந்தக் குடும்ப முழுமையிலும் எவ்வளவு பொதுமை (genericity) இருக்கிறது? முது-இந்தையிரோப்பிய வேர்கள் எவ்வெவை? இந்தோ இரானியன் குடும்பத்திற்குள் எவ்வளவு பொதுமை இருக்கிறது? நாவலந்தீவினுள்ளேயே வெளிப்பட்ட விதுமைகள் (specificities) எத்தனை? திராவிடத்தில் இருந்து கடன் வாங்கப்பட்ட வேர்ச் சொற்கள் எத்தனை? முண்டா மொழிக் குடும்பத்தில் இருந்து உருவானவை எத்தனை?" - என்ற கேள்விகளும் இப்பொழுது ஆய்வு செய்யப் படுகின்றன.

இது போன்ற கேள்விகளில் நான் ஆர்வம் உள்ளவன். என் ஆர்வம் சங்கதத்தை நடுவண் வைத்துப் பார்ப்பதல்ல; தமிழை அருகே பொருத்தி வைத்துப் பார்ப்பது. நான் ஒரு நோஸ்ட்ராட்டிக் (Nostratic) சார்புப் பேர்வழி. தமிழியக் குடும்பம், இந்தையிரோப்பியத்திற்குச் சற்று விலகிய, ஆனால் அதோடு தொடர்புள்ள குடும்பம் என்றே எண்ணுபவன். இதெல்லாம் தெரியாத அல்லது புரியாத சங்கத வழிபாட்டு வலைப்பதிவர்களும், சட்டாம் பிள்ளைகளும், சில விடலைப் பிள்ளைகளும், "சங்கதத்தை குறைத்துச் சொன்னேன்" என்று வறட்டுத் தனமாக, முட்டாள் தனமாகப் புரிந்து கொள்ளும் அடிப்படைவாதிகளும், குதித்துக் கொண்டு வருகிறார்கள். என்னவென்று தெரியாமல், இந்த அரசியலுக்குள், நீங்களும் உள்புகுந்து நிற்கிறீர்கள்.

சரி, நான் சொன்ன சொல்லிணைக்கு அடுத்த பகுதியில் விளக்கம் கொடுக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, February 21, 2007

தனித் தமிழ் - 5

இந்தத் தொடர்வரிசைக் கட்டுரைகளில் இப்போதைக்கு இதுதான் கடைசிக் கட்டுரை.

"தனித் தமிழ் என்ற பெயரில் இடையில் வழங்கிய சலிப்பூட்டும் போலி நடையில் எழுதிய காழ்ப்புணர்ச்சி உமிழும் சமாசாரங்களைக் காலமே கபளீகரம் செய்துவிட்டது. அதிலிருந்து எழும் தூசியைத் தட்டிக் கொண்டிருக்கும் ஒருவரது எழுத்து நடை பற்றி "காலத்துக்கு ஒவ்வாதது" என்று நான் செய்த சாதாரண விமரிசனம் பற்றி "ஐயகோ, ஐயாவை அவமதித்து விட்டார்கள்" என்று தமிழ்த் தாலிபான்கள் கூட்டம் ஒன்று கூப்பாடு போட்டுக் கத்திக் கொண்டிருக்கிறது என்பதாகக் கேள்வி. Come on, get a life, guys!" என்று மேலும் சொல்லுகிறார் திரு.ஜடாயு.

திரு.ஜடாயுவுக்குத் தன்னுடைய நடையே, ”எப்படி எழுந்தது? எந்த இயக்கத்தின் தாக்கம்?” என்று அறியாமலேயே அவருள்ளே இருந்திருக்கிறது என்றுகூடத் தெரியவில்லை. 19ம் நூற்றாண்டு, அல்லது 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்த தமிழ்நடையைக் கொஞ்சம் அவர் ஆய்ந்து பார்த்திருந்தால், ”எது சலிப்பூட்டும் நடை? எது கபளீகரம் செய்யப்பட்டது?” என்று அவருக்குப் புரிந்திருக்கும். பட்டகைகளைப் (facts) பார்க்காமலேயே வெறும் கருத்தியலில் கற்பனை வாதத்தை அள்ளித் தெளிப்பவருக்கு, தமிழ் நடை காலகாலமாய் எப்படியெல்லாம் மாறியது, எங்கு போனது, எப்படித் திரும்பி வந்தது, எத்தனைமுறை சீரழிந்து பின் உருப்பட்டது என்ற வரலாறெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. பூனை தன் கண்னை மூடிக் கொண்டால் உலகமே இருண்டுவிட்டதென்று எண்ணுமாம். அதுபோல் கருத்து முதல் வாதமாய் எதையோ நினைத்துக் கொண்டு காவிக் கண்ணாடி போட்டுப் பார்த்தால், உலகமே காவியாய்த் தான் தெரியும். அதனால் தான் தாலிபான்கள், மிசனரிகள் என்ற பார்வை அவருக்கு வந்துசேருகிறது. இவர் நினைத்ததெல்லாம் நடந்திருந்தால், அப்புறம் வரலாற்று உண்மைகள் என்பவை என்ன ஆவது?

கீழே 97 ஆண்டுகளுக்கு முந்திய ஒருவரின் நடையைக் குறித்திருக்கிறேன்.
-------------------
தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகரமுதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ்பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.

ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப் பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகைக் குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்லவேண்டும். 'ஸ்லேட்', 'பென்ஸில்' என்று சொல்லக் கூடாது
..............
மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை, இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 'அவயவி' சரியான வார்த்தை இல்லை, 'அங்கத்தான்' கட்டி வராது, 'சபிகன்' சரியான பதந்தான். ஆனால் பொதுமக்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன். 'உறுப்பாளி' ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை, என்ன செய்வேன், கடைசியாக 'மெம்பர்' என்று எழுதிவிட்டேன். இன்னும் ஆர அமர யோசித்துப் பார்த்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்.
..............
தமிழ்நாட்டில் முழுதும் தமிழ்நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நம் பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது.
-------------------------------

மேலே வருவது 1920ல் "தேசியக் கல்வி" என்ற கட்டுரையின் நிறைவில் பாட்டுக்கொரு புலவன் என்று நாமெல்லாம் பெருமைகொள்ளும் பாரதி எழுதிய பகுதி. அன்றைய உரைநடை அப்படித்தான் இருந்தது. நல்ல தமிழில் பாவெழுதிய பாரதி தன் உரைநடையை அன்றைய மணிப்பவள நடையில் தான் எழுதினான். (பலருக்கும் இம்முரண்பாடு வியப்பாய்த்தான் இருக்கிறது.) இம் மணிப்பவள நடையையா இப்பொழுது திரு.ஜடாயு எழுதுகிறார்? குறைந்தது வ்யவஹாரங்கள், தமிழ்பாஷை, ப்ரசுரம், ஸ்தாபிதம், மெம்பர், ஆச்சர்யம், அவயவி, அங்கத்தான், சபிகன், பதம், பண்டிதர், புண்ணியம், இங்கிலீஷ், விநோதம், பத்திராதிபர் போன்றவற்றை மாற்றியிருக்க மாட்டாரா, என்ன? மேலே இருப்பதைக் காட்டிலும் திரு. ஜடாயுவின் நடையில் வடமொழிச் சொற்கள் குறைந்து வரவில்லையா? அவ்வப்போது கவனக் குறைவால் ஜடாயு தமிங்கிலம் பழகினாலும், அவருடைய நடை உறுதியாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைக் காட்டிலும் தமிழ் கூடியதாகத் தான் இருக்கிறது. காலவோட்டத்தில் திரு. ஜடாயுவும் கூட நீந்தியிருக்கிறார். அப்புறம் என்ன தனித்தமிழ் பற்றிய முட்டாள் தனமான சில்லடிப்பு?

இன்னும் ஓர் எடுத்துக்காட்டைப் பாரதியிலிருந்தே கீழே தருகிறேன். 'தமிழில் சாஸ்த்ர பரிபாஷை' என்ற தலைப்பில் அவர் எழுதுகிறார்.

------------------------------
ஐரோப்பாவில் வழங்கும் லௌகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டும் என்று மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். முன்னதாகவே பாண்டிதர்கள் செய்துவைக்க வேண்டிய அடிப்படைக் காரியம் ஒன்றுண்டு. கூடியவரை சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால் பிறகு மொழிபெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமம் இராது. ஸங்கடமிராது. பரிபாஷை, ஸங்கேதம், குழூவுக்குறி என்ற மூன்று சொல்லும் ஒரே பொருளைப் பல வகையிலே குறிப்பன. அதாவது ஒரு கூட்டத்தார் அல்லது ஒரு சாஸ்த்ரக்காரர், விசேஷார்த்தம் தோன்றும்படி உடன்பட்டு வழங்கும் பொதுவழக்கமில்லாத சொல். இங்ஙனம் பரிபாஷையை நிச்சயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சேலத்தில் வக்கீல் ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலசார்யரும் ஸ்ரீ வெங்கட சுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிக்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் பத்திரிக்கையின் பெயர் 'தமிழ் சாஸ்த்ர-பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிக்கை'.

மேற்கண்ட பெயருடன் ஒரு சங்கம் சேலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்தச் சங்கத்தின் கார்யஸ்தர் அந்த ஊர்க் காலேஜின் ப்ரகிருதி சாஸ்த்ர பண்டிதராகிய ஸ்ரீராமநாதய்யர்.

'தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப்பத்திரிக்கை' என்ற சேலத்துப் பத்திரிக்கையின் முதலாவது சஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலே தமிழில் எழுதாமல் தமிழுக்கு வேண்டிய இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படி நேரிட்டதகு ஸ்ரீ ராஜகோபாலாசார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு நியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் கூடிய சீக்கிரத்தில் தமிழ்ப்பகுதியொன்று அந்தப் பத்திரிக்கையில் சேருமென்று தெரிகிறது. அனேகமாக இரண்டாம் ஸஞ்சிகையிலேயே தமிழ்ப்பகுதி சேருமென்று கேள்விப்படுகிறேன். அங்ஙனம் தமிழ் சேர்ந்து நடக்கும் சாஸ்த்ரப் பத்திரிக்கையினால் தமிழ்நாட்டாருக்கு மிகப்பெரிய பயன் விளையும் என்பதில் சந்தேகமில்லை

ஸ்ரீகாசியிலே, 'நாகரி ப்ரசாரிணி சபையார்' ஐரோப்பிய ஸங்கேதங்களையெல்லாம் எளிய ஸமஸ்க்ருத பதங்களில் போட்டு மிகப்பெரியதோர் அகராதி உண்டாக்கி வருகிறார்கள். அந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை, தேச பாஷைகள் எல்லாவற்றிலும் ஏக காலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லா பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரிபாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதால் நமது தேசபாஷைகளில் ஸங்கேத ஒற்றுமை யேற்படும். அதனால் சாஸ்த்ரப் பயிர் தேசமுழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்.
---------------------------------------

இது போன்ற நடையிலா திரு ஜடாயு இப்பொழுது எழுதிவருகிறார்? ப்ரகிருதி சாஸ்த்ரம் என்றால் என்னவென்று சொல்ல முடியுமா? சொன்னால் அசந்து விடுவீர்கள். [பாரதியாரின் கருத்திற்குள் இங்கு நான் போகவில்லை. அது வேறிடத்தில் பேசவேண்டியது, அலச வேண்டியது.] 97 ஆண்டுகளுக்கு முன் இருந்த இதுபோன்ற நடையைப் பெரிதும் மாற்றி நல்ல தமிழ்நடைக்குக் கொண்டு வந்து சேர்த்தது மறைமலை அடிகளின் முயற்சியால் தான். இந்த உண்மையைப் பதிவு செய்யாத தமிழறிஞர்களே தமிழ்நாட்டில் இல்லை; அடிகளாரின் கருத்தியலில் உடன்படாதவர்கள் கூட அவருடைய ஆக்கத்தையும், தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தையும் பதிவுசெய்தே இருக்கிறார். யாரும் மறுத்தவரில்லை. தனித்தமிழ் இயக்கம் மட்டும் இருந்திராவிட்டால், இருபதாம் நூற்றாண்டில் இன்னுமொரு மலையாளம் இங்கு கட்டாயம் பிறந்திருக்கும். "மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற வாக்குக் கூட ஒருவேளை உண்மையாகியிருக்கலாம்.

தன்நடை ஏதென்று தனக்கே தெரியாமல் ஜடாயு சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? தனித்தமிழ் என்பது ஒருவர் போய்ச் சேர முற்படும் ஒரு குறியீடு, அடையாளம், இலக்கு. அதைப் பலராலும் அடைய முடியாமற் போகலாம். ஆனாலும் வடக்கிற்கு ஒரு துருவம் இருப்பது போல, தெற்கிற்கு ஒரு துருவம் இருப்பது போல, திசைகளை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் குறியீடு தனித்தமிழ். இன்றைக்கு 50 விழுக்காடு பிறமொழிச் சொல் பயின்று, மறுபாதி 50க்கு தமிழை வைத்துக் கொண்டிருப்பவர், நாளைக்கு அதை 51 தமிழ், 49 பிறமொழிச்சொல் என்று ஆக்கிக்கொண்டு, தொடர்ச்சியாய் தன் தமிழ்த் தொகுதியைக் கூட்டிவந்தால் தான், தமிழ் நிலைக்கும், தமிழினம் நிலைக்கும் என்று சொல்லலாம். அதைவிடுத்து 50:50 -யையே எந்நாளும் வைத்துக் கொள்வேன்; இல்லெனில் தமிழில் இன்னும் சுருங்குவேனெனில் அது என்ன முட்டாள் தனம்?

நீரில் உப்பைச் சேர்க்கச் சேர்க்க வாயில் வைக்கவா முடியும்? மண்ணூறல் எடுவித்த (demineralized) நீரை அல்லவா நாம் குடிக்கத் தேடுகிறோம்? அப்புறம் மொழியில் மட்டும் என்ன முட்டாள் தனமாய் உப்பு நீரைத் தேடிக் குடிப்பது? யார் அழிவை நோக்கிச் செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்? "come on guys, get some life" என்று யாரைப் பார்த்து யார் சொல்ல வேண்டும்?  பரத்தில் (மேடையில்) ஆடத் தெரியாதவள் தெருக்கோணல் என்றாளாம்.

"நேனோ டெக்னாலஜியில் உள்ள nano எங்கிருந்து வருகிறது தெரியுமா?  [நுண் என்பதில் வருகிறது. இராம.கி) monolithic rocks என்ற பாறை வகையின் பொருள் தெரியுமா? (ஒரே கல் பாறைகள் - இராம.கி.) அந்தச் சொற்கள் எங்கிருந்து வந்தன தெரியுமா? அணு (தமிழே - இராம.கி), அண்டம் (தமிழே. இராம.கி), பிரபஞ்சம் (பெருவயந்தம்>பெருவஞ்சம்>prabanjam - இராம.கி) , கந்தகம் (தமிழே - இராம.கி) என்ற சொற்களெல்லாம் எம்மொழியைச் சேர்ந்தவை? தமிழ்நாட்டை விட்டு வெளியே இந்தியாவின் பல மாநிலங்களிலும் போய்ப் பார்த்ததுண்டா? அந்த மொழிகளில் உள்ள கலைச்சொற்கள் பற்றி கொஞ்சம் சிந்தித்தது உண்டா? அவற்றில் 95% சொற்கள் சம்ஸ்கிருத மொழிச் சொற்கள் தான். " என்றெல்லாம் கேள்வி கேட்டு அடுக்குகிறார் திரு. ஜடாயு. அதற்கு எல்லாம் விடை சொல்லலாம் தான். (அவர் சங்கதம் என்று சொல்வதில் 60/70 விழுக்காட்டிற்கு மேல் தமிழ்வேர்கள் தாம் உள்ளன.) ஆனால் அந்த விடையிறுப்பு அவ்வளவு முகன்மையானது இல்லை.

"இந்த 95% சங்கதச் சொற்கலப்பு எல்லாம் தமிழில் கிடையவே கிடையாது; கூடிய மட்டும் கலைச்சொற்களைத் தமிழ்வேரில் இருந்தே நாங்கள் உருவாக்கிக் கொள்கிறோம்" என்றுமட்டுமே சொல்லி இப்போது அமைய விரும்புகிறேன். தமிழர் தமிழிலேயே சொற்களை உருவாக்கிப் புழங்கிக் கொள்வதுதான் திரு.ஜடாயு போன்றவர்களைக் குதிக்க வைக்கிறது. "அது எப்படி சங்கதத்தின் தேவையில்லாமல் ஒரு மொழி இயங்கலாம்? அதை எப்படி விட்டுவைப்பது?" என்ற எதிருணர்ச்சி தான் இவர்களைப் பேச வைக்கிறது; வேறொன்றுமில்லை.

அடுத்து "சம்ஸ்கிருதம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் சாதனம். பாரதியும், காந்தியும், விவேகானந்தரும், அரவிந்தரும் கூட இப்படித் தான் பேசினார்கள். இந்திய தேசியத்தின் சிற்பிகள் இவர்கள்" என்று பேசுகிறார். மறுபடியும் பூசனியைச் சோற்றிற்குள் முழுக்கும் வேலை செய்ய முற்படுகிறார். எல்லாவற்றிற்கும் விடை சொல்லி எனக்குச் சலித்துப் போகிறது. காந்தியார் சங்கதத்தை நாட்டின் பொதுமொழியாக்கச் சொல்லவே இல்லை; அவர் இந்துசுத்தானியையே தேச ஒற்றுமைக்காக வலியுறுத்தினார்.

முடிவில் "உலகம் முழுவதும் பல அறிஞர்கள் இந்த மொழியைத் தேடிப் பிடித்துப் பயின்று வருகையில், இப்படி உங்களை சம்ஸ்கிருதம் பற்றி ஏளனம் செய்ய வைப்பது தமிழ் நாட்டு திராவிட அரசியல் தாக்கம் தான். இல்லை இந்த வெறிபிடித்த மொழிச் சூழலில் நான் சம்ஸ்கிருத எதிர்ப்பாளர் தான் என்ற பிம்பத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியமா?" என்று நண்பர் பத்ரியைப் பார்த்துக் கேட்கிறார். திரு. பத்ரி இன்னும் இதற்கு விடை சொல்லவில்லை. நாம் சொல்லும் விடை இதுதான்:

விவரம் தெரிந்த யாருமே சங்கதம் என்ற மொழியை ஏளனம் செய்யவில்லை. குமுகாயக் காரணங்களால் சங்கதத்தின் மேலாண்மையை மறுக்கிறார்; அவ்வளவு தான். சங்கதத்தின் நூல்களையும் அவற்றுள் பொதிந்துள்ள பட்டறிவுகளையும் தேடிப் படிக்கிறவர் இன்றும் இருக்கிறார். ஒருபக்கம் பார்த்தால் அது தேவையானதும் கூட. அதேபொழுது, சங்கதப் பதாகையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தமிழுக்குள் நஞ்சு ஏற்றிக் கொண்டிருக்கிற திருகு வேலையைக் கண்டிக்கிறார்.

வெறி பிடித்த மொழிச்சூழல் என்ற சொல்லாடலைக் கேட்டு எங்களுக்குச் சலித்துப் போயிற்று. "இன்னாபா, இப்ப, என்னா பண்ணோனுன்றே?" என்று சென்னைத் தமிழில் எதிர்த்துக் கேட்கத் தோன்றுகிறது. உங்களுக்குத் தெரிந்ததைச் செய்து கொள்ளுங்கள்.

----------------------------
இதுவரை இட்ட இத் தொடர் இடுகைகளில் உள்நின்று இருப்பது புலவர் இரா. இளங்குமரனின் கருத்துக்கள். அவருக்கு நான் கடன்பட்டவன்.

இதுவரை இத் தனித்தமிழ்க் கட்டுரை வரிசையில் ஓர் எக்கில் வலதுசாரிக் கருத்துக்களை எதிர்கொண்டாலும், இன்னோர் எக்கில் இடதுசாரிக் காரர் ஒருவரின் பதிவையும் பின்னாளில் மறுமொழி சொல்லவேண்டும். செய்வேன்.

தமிழை மறுப்பதில் இடது சாரியினர் கொஞ்சமும் சளைத்தவரில்லை. அவருக்கு மார்க்சு முகன்மை. அதேபொழுது, ”தமிழ் என்பது” அவரிட்ட சட்டத்துள் மட்டுமே இயங்கவேண்டும் என்பார். சங்க நூல்களையே தூக்கிக் கடாசுவார். அல்லது அவற்றின் காலத்தைக் குறைத்துப் பேசுவார். ”பூர்சுவா” தான் சரியென்பார், “பூரியர்” எனில் மறுப்பார். ”அறிவுய்தியை” மறுத்து, “அறிவுஜீவி” என்பார். அவருக்கும் தனித்தமிழை ஏற்பதில் தடங்கல்கள் உண்டு. ஆனாலும் இடதுசாரிகள் நெடுங்காலம் நம் தோழராய் இருந்தவர். எனவே கொஞ்சம் அணைத்துக் கொள்கிறேன்.  உடனே பேசிவிடவில்லை.

அன்புடன்,
இராம.கி.