Sunday, October 04, 2020

தமிழ்

 ”தமிழ் என்ற சொல் எப்படி எழுந்தது? அதன் பொருளென்ன?” என்பது இணையத்தில் பலமுறை கேட்கப்படும் கேள்வியாகும். ஆர்வத்தின் காரணமாய்ப் பலரும் இப்படிக் கேட்கிறார். முன் ஒரு முறை இதே உரையாட்டு முகநூலில் நடந்தது. அப்பொழுது விதப்பாய் நான் மறுமொழித்திருந்தேன். இவ்வுரையாட்டு எத்தளத்தில் நடந்தது என்று இப்போது சரியாக நினைவுக்கு வரவில்லை. ஆனாலும் இவ்வுரையாட்டை என் கணியில் சேமித்து வைத்தேன். இப்போது கணியில் சேமித்ததை ஒரு வடிவிற்குக் கொணர்ந்து இவ் இடுகையைத் தொகுக்கிறேன்.  முதலில் பெயர்விளக்கம், சொற்பிறப்பியலின் படி பார்ப்போம். இந்திய அரசின் Technology Development of Indian Languages (TDIL) என்னும் இந்திய அரசின் நிறுவனத்திற்காக, நம்மூர் தமிழிணையக் கல்விக் கழகத்தின் வழியாக, உருவாக்கிய  Script Grammer of Tamil பணியில் நானும் நண்பர் நாக. இளங்கோவனும் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தோம், அது ஓர் ஆங்கில ஆவ்ணம். அதில் நான் கொடுத்ததை இங்கு முன்வரிக்கிறேன். 

 Mollal (முல்லல்>மொல்லல்) and mozhithal (மொழிதல்) denote speech arising from movement of jaws, lips and tongue with air-blowing. Eg., அவனேன் வாய்க்குள் மொல்லுகிறான்? வாய்திறந்து சொல்லலாமே? Mellal (முல்லல்> மல்லல்> மெல்லல்) is grinding within a mouth through jaw movement. Mollu (மொல்லு) is a sound raised with self-beating of hands and legs in a fight. Molumolenal (மொலுமொலெனல்), molumoluththal (மொலு மொலுத்தல்) are un-interrupted speaking, shouting or murmuring. Morumoru (மொருமொரு) and moramora (மொரமொர) are frictional sounds. MolErenal (மொலேரெனல்) denotes fish-jumping out of water. Munungkal (முல்லல்*>முள்ளல்*> முணல்*> முணுங்கல்) is whisper. Moonam (முணுமுணு> முனுமுனு> மோனம்> மௌனம்) is silence. 

MizhaRRal (முழல்*>மிழல்>மிழற்றல்) is sweet talk. Mazhalai (மிழல்>மிழலை>மழலை) is baby talk. முல்>முழு> முழவு = drum. முல்>முழ>முழங்கு = Speak in a high tone, with emphasis. There are still more words to connect with sounds, speech. etc. Mozhi (முல்> மொல்>(மொள்)> மொழி) is language. Thamizh (தம்மொழி> தமிழி>தமிழ்) means their language, emphasizing ownership as in thanthai (தந்தை-father), thaay (தாய்-mother), thamaiyan (தமையன்–elder brother), thamakkai (தமக்கை–elder sister), thampin [தம்பி(ன்)–younger brother], thangai (தங்கை-younger sister) and thangkaL (தங்கள்–their). Semthamizh = reformed Tamil. 

Further, kaththal (கத்தல்) = oosai ezhupputhal (ஓசை எழுப்புதல்–raising sound). Kathaththal (கதத்தல்) / kathaiththal (கதைத்தல்) = speaking and story-telling. Kadham (கத்து> கத்தம்> கதம்) = speech. Paagadam (பா+கதம்) = பாகதம்>ப்ராக்ருதம்>Prakrit = wide speech. Sam (சம்) kadham (கதம்) > Sangadham (சங்கதம்) = mélange of regional dialects. Sem (செம்)+ kadham (கதம்)> செங்கதம்> செங்க்ருதம்>Sanskrit = reformed speech; maa (மா)+ gadhi (கதி) = மாகதி = great speech of Magdh.

முகநூலில், இதைப் படித்த ஒரு நண்பர், “அருமை. மொல்>(மொள்)> மொழி மற்றும் என்றானதாக பாடம் கற்கும்போது ல/ளகரம் ழகரமாயிற்று என்று சொன்னீர்கள் மிகவும் மகிழ்ச்சி. தமிழ் என்ற சொல்லிலும் அதுவே நடந்தது என்று நினைத்தே தங்களிடம் வினவினேன். இருப்பினும் மொள்>மொழ் என்று முதற்படி திரிந்து, பின் மொள்>மொளி>மொழி என்றுதிரிந்ததாக நினைக்கிறேன். என் ஐயம் சரியா? 2)தம் மொழி>தமிழி>தமிழ் என்று பாடம் படித்தேன். அதில் தம்+மொழி என்று பிரிக்கின்றீர்கள் இது இடுகுறிப்பெயராக யாரோ பெயர் வைத்தது போல் தோன்று கிறது.மூத்த தமிழுக்கு இடுகுறிற்றாக தம்முடையயொழி தம்மொழி என்றில்லாது;தமிழுக்கான வேறு அடிச்சொல் உண்டா? என ஆராய்ந்து பார்க்கலாமா?” என்று கேட்டார். அவருக்கு விடை சொல்லும் முகமாய், கீழ்க்கண்டவாறு சொன்னேன். 

”ஒரு தமிழர் இன்னொரு தமிழரோடு பேசும்போது தான் தமிழில் பேசுவதாய்ச் சொல்லமாட்டார். வெறுமே பேசுவதாய்த் தான் சொல்வார். மாற்று மொழிக் காரரிடம் பேசும் போதுதான், தன்னை வேற்று மொழிக்காரன் என்று உணர்த்த வேண்டும். தமிழன் தன் நாட்டைவீட்டு வெளியே போன இடத்தில், இன்னொரு தமிழரைப் பார்த்தாரென வையுங்கள். இருவரும் பேசிக் கொள்கிறார். இதை மூன்றாமவர்,(வேற்று மொழிக் காரர்) பார்க்கிறார். அப்போது அந்த வேற்று மொழிக் காரர், “நீங்கள் என்ன மொழியில் பேசிக் கொண்டீர்கள்?” என்று அவருடைய மொழியில் கேட்கிறார். அப்போது, நீங்கள், “எங்கள் மொழியில் பேசிக்கொண்டோம்” என்று கூறுவீர்கள். அவ்வளவு தான் தமிழின் பொருள். தம் மொழி>தம்மொழி> தம்மிழி>தமிழி>தமிழ். நம்மொழிக்கு இடத்தை வைத்து ஒரு விதப்புப்பெயர் கிடையாது. ஐயா. அதனால் தான் இதைப் பழம் மொழி என்று சொல்லமுடிகிறது, It had generic name used in a specific way. 

அப்படித்தான் பாகதம், சங்கதம் போன்ற சொற்களும் கூட எழுந்தன. இவை யெல்லாமே மொழியால் ஆட்களுக்கு ஏற்பட்ட பெயர்கள். தமிழால் தமிழர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆங்கிலம் அப்படியில்லை. செருமனியில் ஆங்கில் என்ற இடத்தில் வாழ்ந்தோர் ஆங்கிலர் எனப்பட்டார். அவர் இங்கிலாந்தில் குடியேறினார். ஆங்கிலர் பேசியது ஆங்கிலம் என்று ஆகியது. அதேபோல் பாளி என்பது பள்ளியில் (புத்தப் பள்ளியில்) பேசிய பேச்சு. ஆங்கிலம்போல் இடத்தால் மொழிக்கு ஏற்பட்ட பெயர். தவிரப் பலுத்தது பாலியாயிற்று. மாகதி = நிறையப் பேர் பேசிய பேச்சு. அருத்த மாகதி = பாதி மாகதி. நம்மூர் மொழிகள் இப்படி ஓர் இயல்பான பெயரையே கொண்டிருந்தன. இதில் இனிமை, காதல், அது இது என்று கற்பனைப் பொருள்கள் கூறுவதில் பலனேயில்லை. பல தமிழாசிரியர் இப்படிக் கருத்துமுதல் வாதத்தில் பொருள்சொல்வர். அதில் உண்மையில்லை. ஆழ ஓர்ந்துபார்த்தால் எல்லாருக்கும் அவரவர் மொழி இனிமை தான். அவரவர் மொழியின் மேல் காதல் தான்” என்று நான் மறுமொழித்தேன்..

இதற்கு அப்புறமும் ஐயம் தீராது, “நன்றி ஐயா. அப்படியாயின் "எங்கள் மொழி" எம்மொழி தானே ஆகும் "தம்மொழி"எப்படி ஆகும் ஐயா?” என்று நண்பர் கேட்டார்.

”தமிழர் தம் நாட்டில் இப்படி நடந்துகொள்வார்” என்பது படர்க்கைப் பேச்சு. ”தமிழர் தம்மொழியில் பேசிக் கொண்டார்” என்பதும் படர்க்கைப் பேச்சு. எங்களுக்குள் என்பது உளப்பாடு இல்லாத தன்மைப் பன்மை. (exclusive first person plural) நங்களுக்கு என்பது உளப்பாட்டுப் பன்மை. (inclusive plural comprising the first and second persons) எல்லா உறவுப் பெயர்களும் (தகப்பன், தாய், தமக்கை, தங்கை, தம்பின் என எல்லாமே) படர்க்கையில் உருவானவை தான். அவையெல்லாம் உருவாக எந்த மொழிப்பார்வை காரணமோ, அதே பார்வை தான் ”தம்மொழி” என்று உருவானதற்கும் காரணமாகும்.. ”அவர் எம்மொழி பேசினார்” என்று ஒரு மகதன் பேசமுடியுமா? அப்போது தமிழர் மாகதி பேசினார் என்று ஆகிவிடுமே? ”தமிழர் தம்மொழி பேசினார்” என்று ஒரு மகதர் சொல்வது தான் சரி. 

வேறொரு செய்தியும் உண்டு. மாகதி என்பது அடிப்படையில், 2800 ஆண்டுகளுக்கு முன்னர், தொடக்கத்தில் இருந்தது, வட திராவிடம் தான். (புத்தர் தமிழ் கற்றார் என்பது புத்தநூல்களில் உண்டென்பர். அந்த வரலாற்றுக் குறிப்பைத் தேடவேண்டும்.) வேதமொழி இந்தியாவினுள்ளே வந்து வட திராவிடத்தோடு கலக்கக் கலக்க வட திராவிடம் இந்தை யிரோப்பியன் தோற்றங் கொள்ளத் தொடங்கியது. இன்றைக்கும் ”நான் அவனுக்குப் பொத்தகம் கொடுத்தேன்” என்பது தான் கரிபோலியின் (இந்தியின்) அடிப்படை வாசக அமைப்பு. இன்னும் திராவிடக் கட்டுமானத்தை அது தொலைக்க வில்லை. இந்திய மொழிகள் பலவற்றிலும் உள்ள மொழி அடிப்படைக் கட்டுமானம் தமிழ் போன்றே உள்ளது. எப்படித் தமிழ்க் கட்டுமானத்தில் சங்கதம் வந்து உட்கார்ந்து மலையாளத்தை உருவாக்கியதோ, அப்படியே வேதமொழி வந்து உட்கார்ந்து, வடதிராவிடத்தை மாற்றியது. இது இன்று நேற்று நடப்பதில்லை. 3000 ஆண்டுகளாய் நடப்பது” என்று மேலும் சொன்னேன்.

நண்பர் இன்னும் தன் ஐயத்தை விட்டுவிடவில்லை. ”ஐயா, மகதர் " தமிழர் தம்மொழி பேசினர்"என்று மகதமொழியில் தானே சொல்லமுடியும்? அதே போல் ஏனைய மொழியினரும் அவரவர் மொழியில் தான் "தமிழர் தம்மொழி பேசினர்" என்று அவரவர் மொழியில்தான் கூறமுடியும். ஆனால் தமிழ் என்று தமிழ்மொழியில் அவர்கள் பெயர்வைக்க முடியாது. தமிழ் என்ற சொல் தமிழ் மொழிச்சொல்லே.ஆகவே தமிழரல்லாதார் அப்பெயரை வைக்க முடியாது அல்லவா? எல்லா மொழி பேசுனரும் அவரவருக்கு அததது "தம்மொழியே" இருப்பினும் தம்மொழி என்ற பொருளிலா அம்மொழிப்பெயரே வழங்குகிறது?? மற்றைய தங்கள் கருத்துபற்றி வேறொரு வாய்ப்பில் கேட்டுத்தெளிகிறேன்” என்று உரையாட்டை முடித்துக் கொண்டார். 

இது சற்று நெருடலான புரிதல். இதே கேள்வியை  தந்தை, தாய், தமையன், தமக்கை, தம்பி(ன்), தங்கை, தங்கள்  என்ற சொற்களுக்கும் தொடுக்க முடியும். ஆனாலும் நாம் தொடுப்பதில்லை. ஏன்? தன்/தம் என்னும் பகரப்பெயர் (pronoun) சேர்த்துக்கொண்டு அதற்குமுன் என், உன், அவன்/அவள்/அவர் என இன்னொரு பகரப்பெயரை நாம் ஏன் சேர்க்கிறோம்?  வேறு ஒரு கேள்வியும் பார்ப்போம். அவர் படிக்கிறார் என்றாலே பன்மை வந்துவிடுமே? பின் ஏன் பேச்சுவழக்கில் இரட்டைப் பன்மையிட்டு, “அவர்கள் படிக்கிறார்கள்” என்கிறோம்? நம்பூதிரி மனைவியை, மற்றோர், “தம்பிராட்டி (=தம்பெருமாட்டி)” என ஏனழைக்கிறார்? நம்பூதிரியை ஏன் “அத்தேகம்” என்கிறார்?  சிவநெறி ஆதீனமடங்களில், தலைவரை ஏன் “தம்பிரான்/தம்பெருமான்” என்றழைக்கிறார்? சமயக் குரவரான சுந்தரைத் :தம்பிரான் தோழர்” என்று ஏன் அழைக்கிறார்? தம்மவன் (=சுற்றத்தான்), தம்முன் (=அண்ணன்), தமப்பன் (=தகப்பன்), தமர் (உற்றார்) என்ற சொற்கள் ஏன் அப்படியுள்ளன?  இதுபோல் விளக்க முடியாத பல சொற்கள் ஏராளமாய்த் தமிழிலும் மலையாளத்திலும் உண்டு. படர்க்கையில்  ஏன் உறவுப் பெயர்கள் தொடங்குகின்றன? - என்பது அப்படி ஒரு கேள்வி, அதற்கு விடை கண்டால் தமிழில் வரும் தம் என்பதற்கும் விடை காணலாம்.  

   

2 comments:

ந.குணபாலன் said...

இம்மளவு காலமாக இந்த தமிழ் என்ற பேர் ஏன், எப்படி வந்தது என்ற கேள்விக்குரிய வதில் கிடைக்காமல் இருந்தது.
அழகான விளக்கம். அருமையான சிந்தனை. தாய், தகப்பன், தமக்கை, தமையன், தங்கை, தம்பி என்ற நெருக்கமான உறவுகளுடன்
தம்மொழி> தமிழி>தமிழ் என்ற உறவு. என்னத்தைச் சொல்ல? ஆகா! சொல்லி வேலையில்லை! மனம்நிறைந்த நன்றிகளும், பாராட்டுக்களும் உங்களுக்கே!

தண்டமிழ்தாசன் பா சுதாகர் said...

நானும்
இதையே முன்னர்
ஆராய்ந்து எழுதியுள்ளேன்

தம்மொழி
தமொழி
தமிழி
தமிழ்

என் ஆயிற்று என ஆராய்ந்தேன்.
என் ஆராய்வோடு ஒபபுமையாயிருப்பதில் இவ்வாய்வு எனக்கும் இனிது.