"Management-ஐ முகாமைத்துவமென ஈழத்தில் சொல்வோம். இதன் வேர்ச்சொல் விளக்கமென்ன? ”வளவில்” உங்கள் பதிவுகள் படித்ததிலிருந்து முகன்மை {தலைமை} + அமைத்துவம் {நிருவாகம்} என்பன வேர்ச்சொற்களாய்க் கொள்கிறேன். சரியா ? " என்று திரு. இலங்கநாதன் குகநாதன் கேட்டிருந்தார். ”அது சரியல்ல” என்று அவருக்குச் சொல்வேன். இதுபோன்ற கேள்வி இன்னும் பலருக்கு இருக்கலாம். நம்மிடை உலவும் தவறான மொழிபெயர்ப்புகளில் இதுவும் ஒன்று.
”முகாமைத்துவம்” என்ற சொல் ஈழத்திலும், ”மேலாண்மை” என்பது தமிழ்நாட்டிலும் பயில்வதை நானறிவேன். இருவேறு பின்புலங்களை நிறைவு செய்வதாய் தமிழ் விக்கிப்பீடியாவும் ”அல்லது” என்று போட்டுத் இவற்றைப் பயிலும். இச்சொற்களை ஏற்காத நானோ இணையத்தில் வேறொரு சொல் பரிந்துரைத்தேன். நான் பரிந்துரைத்ததைத் தமிழ் விக்கிப்பீடியா ஏற்றதும் இல்லை. நானே கூட அங்குபோய் அதற்காக வாதாடியதும் இல்லை. ஆனாலும் முகாமை, மேலாண்மை ஆகிய சொற்களின் போதாமையைப் பொது வெளியில் எங்கோ சொல்லத்தான் வேண்டும். இங்கே நண்பர் கேட்டதை இதற்கென வாய்ப்பாய்ப் பயன்படுத்தி விளக்கமுற்படுகிறேன்.
”முல்” வேரில் பிறந்த ”முகுதல்” என்பது ”தோன்றல், முன்வரல், முன்னிருத்தல்” என்று பொருள் கொள்ளும். முல்> முல்கு> முகு> முகம்; முல்கு>முகு> முக்கு; முல்கு> முகு> முக்கு> மூக்கு; முல்கு>முகு> முகர்> முகரை; முல்கு> முகு> முகுஞ்சி> மூஞ்சி; முல்கு> முகு> முகன்> முகனை> மோனை, முல்கு> முகு> முகப்பு; முல்கு> முகு> முகவர், முல்கு> முகு> முகம்+வரி = முகவரி, இப்படிப் பல சொற்கள் ”முல்லில்” இருந்து கிளைக்கும். இதே போக்கில் முகலும் தன்மை ”முகன்மை ” ஆகி, தவறான பலுக்கலில் முகாமையாகும். அருகண்மை> அருகாமை போன்ற தவறான திரிவு இதுவாகும், பேச்சுவழக்கில் எப்படியோ ஒட்டிக்கொண்டது. முல்> மு(ல்)ந்து> முந்து> முது> முதல் என்ற திரிவும் முன்வந்த பொருளைக் குறிக்கும். ”முதன்மை/ தலைமை” என்பன முகாமையைக் குறிக்கலாம். இப்போது, தமிழ்ப்பொருளில் இருந்து இணை ஆங்கிலச் சொல்லைத் தேடினால் என்னவாகும்?
முகாமைக்கு ஈடாய், Being first, headship, superiority, pre-eminence, precedence என்ற பொருட்பாடுகளை அகரமுதலிகள் தரும். இவை. management ஓடு ஒத்துவருமா? - என எண்ணிப் பாருங்கள். முகாமையாளர் = first person எனில், எல்லா managerஉம் first person ஆவாரா? அவருக்கு மேல் சிலரும், அவருக்குக் கீழ் வேறுசிலரும் இருப்பாரே? எப்படி first person என்பது சரிவரும்? முகாமைத்துவம் என்பது முகாமைத் தத்துவத்தின் சுருக்கம். வடசொல்லான தத்துவத்தின் பொருள் கொள்கை (policy) அல்லது மெய்யியல் (philosophy) என்பதாகும். முகாமைத்துவம் என்பது policy/philosophy relating to being the first person என்றாகும். இதுவும் management உம் ஒன்றா? ஒரு காட்டுத் தருகிறேன். பாருங்கள். இலங்கை அதிபர் கோத்தபாயா இராசபட்சேயும், ஒரு சாத்தார manager உம் ஒன்றா? எங்கோ பொருளில் இடிப்பது புரியவில்லையா? நாம் ஏன் ஒப்புக்குச் சப்பாணியைத் தேடுகிறோம்?
சொல்லாக்கத்தில் நம்மிடமுள்ள சிக்கலே மொழிபெயர்ப்புச் சொற்களில் துல்லியம் பாராததுதான். கிடைத்ததை வைத்து ஒப்பேற்றுவது நம்மில் பலருக்குமுள்ள வழக்கம். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு வந்தாலும், தமிழிலிருந்து ஆங்கிலம் போனாலும் (இதுபோல் தமிழ், இன்னொரு மொழி) பொருட்சிதைவு ஏற்படக் கூடாதென்பதை நாம் கவனிப்பதில்லை.. manage (v.) என்பதை 1560s, "to handle, train, or direct" (a horse), from the now-obsolete noun manage "the handling or training of a horse; horsemanship" (see manege, which is a modern revival of it), from Old French manège "horsemanship," from Italian maneggio, from maneggiare "to handle, touch," especially "to control a horse," which ultimately from Latin noun manus "hand" (from PIE root *man- (2) "hand") என்று வரையறுப்பார். குதிரையைக் கையாளும் திறமை இதில் குறிக்கப் பெற்றாலும், குதிரைக்கு முன், வேறு உடமித்த விலங்குகளை மாந்தர் கையாண்டிருக்க வேண்டுமே? - என்ற சிந்தனை எழுகிறது.
ஏனெனில், உலகில் ”உடமித்த விலங்குகள் (domesticated animals)” எனுங்கருத்து 15,000 ஆண்டுகள்முன் ஆசியாவிலும் வேறிடங்களிலும் நாய்களைப் (Canis familiaris; வீட்டு நாய்கள் ஓநாய்களால் (wolves;Canis lupus) உருவாயின) பழக்கியதில் தொடங்கியது, அடுத்து, 10,000 ஆண்டுகளுக்கு முன், நடுக் கிழக்கில் ஆடுகள் ( Ovis aries) பழக்கப் பட்டன. 8,000 ஆண்டுகளுக்கு முன், நடுக்கிழக்கிலும், சீனத்திலும் பன்றிகள் ( Sus scrofa) உடமிக்கப் பட்டன. அதே காலத்தில் திமிலில்லா மாடுகள் ( Bos taurus) நடுக்கிழக்கிலும், திமில் மாடுகள் (Zebu Cattle; Bos indicus) மேலும் 2000 ஆண்டுகள் கழித்து சிந்துசமவெளியிலும் பழக்கப் பட்டன. இதே 6,000 ஆண்டுகளின் முன், நடு ஆசியாவில். குதிரைகள் (Equus caballus) உடமிக்கப் பட்டன, முடிவில் 4500 ஆண்டுகளுக்கு முன், பெருவில் லாமாக்கள் ( Llamas; Lama glama) பழக்கப்பட்டன.
வரலாற்று வளர்ச்சியில் குதிரைக்கும் முன், மற்ற விலங்குகளைக் கையாள மாந்தனுக்குத் தெரிந்திருக்கும். manage இன் ஆங்கில வரையறுப்பில் man கையைக் குறிக்காது விலங்குப் பொதுச்சொல்லான மான் (man)ஐக் குறிக்குமோ என ஊகிக்கிறோம். (http://valavu.blogspot.com/2005/06/blog-post_26.html) சரி. கையாளுதல் என்பது விலங்குகளைச் செலுத்தல் தானே? அதற்கும் ஒரு சொல் வேண்டுமே? அது என்ன? தமிழில் அகைதல் (த,வி) என்பது, “செல்லுதல்; உகை> அகை; to go forth, proceed” என்ற பொருள் கொள்ளும்; அகை-த்தல் எனும் பிற வினைச்சொல், “1. செலுத்துதல் (சூடா) - to drive, cause to go, send forth 2. இழுத்தல் to draw towards” என்று பொருள்கொள்ளும்.. தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகர முதலியில் ag (ak) to drive. urge, conduct; Gk.agein, ago; L ag-ere, to drive; Icel ak-a (pt.t.aak), to drive; Skt. aj. to dive; (Skeat's Etymological Dictionary of English Language) என்று போட்டிருப்பர்.
www. etymonline, com எனும் தளத்தில், *ag- Proto- Indo-European root meaning "to drive, draw out or forth, move" என்பதற்கு, It forms all or part of: act; action; active; actor; actual; actuary; actuate; agency; agenda; agent; agile; agitation; agony; ambagious; ambassador; ambiguous; anagogical; antagonize; apagoge; assay; Auriga; auto-da-fe; axiom; cache; castigate; coagulate; cogent; cogitation; counteract; demagogue; embassy; epact; essay; exact; exacta; examine; exigency; exiguous; fumigation; glucagon; hypnagogic; interact; intransigent; isagoge; litigate; litigation; mitigate; mystagogue; navigate; objurgate; pedagogue; plutogogue; prodigal; protagonist; purge; react; redact; retroactive; squat; strategy; synagogue; transact; transaction; variegate.
It is the hypothetical source of/evidence for its existence is provided by: Greek agein "to lead, guide, drive, carry off," agon "assembly, contest in the games," agogos "leader," axios "worth, worthy, weighing as much;" Sanskrit ajati "drives," ajirah "moving, active;" Latin actus "a doing; a driving, impulse, a setting in motion; a part in a play;" agere "to set in motion, drive, drive forward," hence "to do, perform," agilis "nimble, quick;" Old Norse aka "to drive;" Middle Irish ag "battle."
என்று விளக்கம் சொல்வர். எனவே man-age ஐ, ”மான் அகை-த்தல்> மானகை-த்தல்” என்று துல்லியமாய்ச் சொல்லலாம். மானகை (management) என்ற பெயர்ச் சொல்லும் உருவாகும். விலங்குகளைக் கையாள்வதில் தொடங்கி, அடுத்து உடன் மாந்தரைக் கையாண்டு, பின் எல்லா வளங்களையும் ஊற்றுகளையும் (resources) கையாளும் பொருளுக்கு இச்சொல் நீட்சி பெற்றதால்,
மானகர் (புதுக்கம்/விளைப்பு) = Manager (production),
மானகர் (பொறியியல்) = Manager (engineering),
மானகர் (அடவு) = Manager (design),
மானகர் (மாறகைப்பு) = Manager (marketing),
மானகர் (அமைப்பு) = Manager (administration),
மானகர் (நிதி) = Manager (finance),
மானகர் (அளவை) = Manager (legal),
முதல் மானகர் = Chief Manager,
கண மானகர் = General Manager
என்று நாம் விதவிதமாய் விரித்துச் சொல்லலாம். மானகை என்ற சொல்லை நான் பரிந்துரைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் புழக்கம் கூடவில்லை. மேலாண்மையும். முகாமையுமே இதுநாள் வரை பொருள் சரியாய்த் தெரியாமல், புழங்கப் படுகின்றன. ”மேலாண்மை”யிலும் நான் குறையுணர்வேன். அதன் ஆங்கில மொழிபெர்ப்பு over-rule. 40 ஆண்டு காலம் பல்வேறு படிநிலைகளில், manager ஆக வேலை பார்த்த எனக்கு, மேற்பார்வையர் / கண்காணி (supervisor) மேஸ்திரி ( master) அதிகாரி ( ruler) என்ற ”மேலாண்மை” நேரடிப் பொருள்களில் உடன்பாடில்லை. [நெறியாளரான director என்பதை இயக்குநர் (operator) என்று சிலர் தவறாய் மொழிபெயர்த்தை ஒக்கும்.] அந்தந்தச் சொல்லின் துல்லியத்தை நாம் தவறான மொழிபெயர்ப்புகளால் இழக்கலாமா? தவிர ஆண்மை என்ற சொல் ஆளர் என்றிலாது அமைகையில், ஆணாதிக்கக் குறைப்பொரூளையே ஒருபால். குறிக்கிறது. இக்காலத்தில் பெண்களும் மானகர் ஆகலாமே? இணைச்சொற்கள் ஒத்த பொரூளைத் தரவேண்டாமோ? ”இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்பது சொற்களுக்கும் பொருந்தும். அப்புறம் அவரவர் உகப்பு,
அன்புடன்,
இராம.கி.
அரொமை ஐயா
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDelete