Wednesday, April 01, 2020

டுபாக்கூர் = இரட்டுறவு

ஒருமுறை டுபாக்கூர் என்ற சொல்லைக் கொடுத்து அது உருதுச்சொல் என்றும், ஆங்கிலவழி இந்துஸ்தானிச் சொல் என்றும் விதம் விதமாய்ச் சொன்னார். இதுபோற் சொற்கள் பலவற்றையும் ஏன் உருதுவுக்குக் கொண்டு போகவேண்டுமென்று எனக்குப் புரிவதில்லை. அடியிலுள்ள இத்தளத்திற்குப் போய்ப்பார்த்தால் https://en.wikipedia.org/wiki/Madras_Bashai. துபாக்கூர்> டுபாக்கூர் என்ற கொச்சைச் சொல்லின் தொடக்கம் புரியும். Dūbaakoor (டுபாக்கூர்) : Fraudster. From the English word dubash which, itself, is a derivative of the Hindusthani word "Do bhasha", usually, used to refer to interpreters and middlemen who worked for the British East India Company. As in the early 19th century, dubashes such as Avadhanum Paupiah were notorious for their corrupt practices, the term "dubash" gradually got to mean "fraud" இதற்கான தமிழ் விக்கிப்பீடியாப் பக்கத்தில், “ராண்டார் கை (June 15, 2003). "Inspiration from Madras". தி இந்து” என எழுத்துச் சான்றும் கொடுத்திருப்பார். .

ஊடே வரும் தமிழ் இங்கு காணாமல் போயிருக்கிறது. நான் இங்கு எழுதுவது அந்தத் தமிழ்ப்பங்கை எடுத்துக் காட்டுவதற்குத் தான். ஆங்கிலேயர் இங்கு இருந்த நாட்களில் துபாசிகள் செய்த குளறுபடிகள் ஏராளம். நம் நாட்டை அடிமைப் படுத்தியதற்கும் பின்னால் நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்ததிற்கும் துபாசிகளே பெரிதும் காரணராய் இருந்தார். ஒரு பக்கம் ஒரு மொழி பேசி, இன்னொரு பக்கம் இன்னொரு மொழியிற் பேசி இரு வேறு இடங்களிலும் இரண்டு பட இயங்கியுள்ளார். நாளாவட்டத்தில் இவரின் இரண்டகம் பலருக்கும் விளங்கியது .எனவே ஒரே மொழி பேசினும், இரண்டு பட அருத்தம் கொள்ள வைப்பது  ஏமாற்றாய்ப் புரிந்து கொள்ளப் பட்டது.

பேச்சு என்ற சொல் தமிழிற் பெய்தலில் தான் உருவானது. பெய்>பேய்>பேயு> பேசு>பேச்சு என்றானது. (சொற்பொழிவு என்று கூறுகிறோமே அந்தப் பொழிவும் ஒருவகைப் பெய்தல் தான். பேச்சுவழக்கில் பேசுகிறான் என்பது ”ரொம்பத் தான் பெய்கிறான்” என்றும் சொல்லப்படும். இதே பேச்சுத்தான் சங்கதம், பாகதத்தில் பாஷாவாகவும், செருமானிய மொழிகளில் (English - speech german - sprache dutch - spraak) என்றும் பல்வேறு விதங்களாய்த் திரிந்தன.

இதேபோல வெட்டுப்பொருள் கொண்ட நம்மூர்த் ”துமி” சங்கதம், பாகதத்தில் ”துவி, தோ” என்றும் செருமானிய மொழிகளில் தூ, zwei, துவே என்றும் திரியும். துமியின் திரிவு பற்றித் (தமிழுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்குமான உறவு பற்றி நீண்ட ஆய்வை நிகழ்த்திய) சென்னைக் கிறித்தவக் கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்ற பேரா. அரசேந்திரன் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார்.  தவிர, University of Pennsylvania University ஐச் சேர்ந்த Stephan Hilyer Levitt என்பாரும், தமிழுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்குமான உறவைப் பெரிதாக எண்ணுகிறார். இப்பொழுது தான் மேலை ஆய்வுலகம் கொஞ்சங் கொஞ்சமாய்த் தமிழை நுணுகக் கவனிக்கத் தொடங்கியுள்ளது. அருத்தம் புரியாது தமிழைக் கேலி செய்வதும் தவறு. வெறுமே folk etymology சொல்லிக்கொண்டிருப்பதும் தவறு. பதர்களுக்கு நடுவே மணிகளைப் பொறுக்கித் திரட்டினாற் பயன் கிடைக்கும்.

இரண்டு பேச்சுப் பேசுவோர் ஏமாற்றுக்காரர் என்ற வரலாற்றுப் பொருள் துபாசு வேலைக்கு ஏற்பட்டதால், இரு பேச்சுக்காரர் என்ற பொருளில் துபெய்க் காரார்>துபேக்கர்>துபாக்கர்> துபாக்கூர் என்று கொஞ்சங் கொஞ்சமாய் உயிர் தரிப்பதில் திரிந்திருக்கிறது. து>டு என்றானது ஒருவிதமான கேலி. இன்று தமிழ்த் தேசியரைக் கேலிசெய்ய முற்படும் பலரும் தமிழர்கள் என்று சொல்லமாட்டார் . டுமிலன்ஸ் என்பார். இங்கு என்ன உளப்பாங்கு வேலை செய்கிறதோ அதுதான் அக்காலத்திலும் வேலைசெய்து துபாக்கூரை, டுபாக்கூர் ஆக்கியது. ஆழ்ந்த வெறுப்பு இப்படியெல்லாம் ஒரு சொல்லைத் திரிக்க வைக்கும். சரி, நல்ல தமிழில் இதற்குச் சொல்லுண்டோ? - என்றாலுண்டு. கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.

இதைத் தமிழில் இரட்டுற மொழிதல் என்றுஞ் சொல்வர். இரு பொருள்படக் கூறுமோர் உத்தி என்று நன்னூல் 14 ஆம் நூற்பா கூறும். இதேபோல இரட்டுறக் காண்டல் என்பது ஐயக் காட்சி என்று பொருள்படும். “திரியக் காண்டலும், இரட்டுறக் காண்டலும் தெளியக் காண்டலும் எனக் காட்சி மூவகைப்படும்” என்பது மெய்கண்ட சாத்திரம் சிவஞான போத பாடியம் .9, பக் 190, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை 1936. இரட்டுறல் - இருபொருள் படக் கூறுதல் மாறனலங்காரம் மதுரைத்தமிழ்ச்சங்க வெளியீடு 1929. இரட்டுறுதல் = இரு பொருள் படுதல், ஐயுறுதல் (இரட்டுற வெண்ணலிர் (சேதுபு.ராணம். பலதீ. 14), மாறுபடுதல் “தானத்து மணியுந் தானும் இரட்டுறத் தோன்றினானே’ (சீவக சிந்தாமணி 387).

இரட்டுறவு என்பது இதன் பெயர்ச் சொல். குறைந்தது 1300 வருசத்துச் சொல். வஞ்சகம் என்பதை இரண்டகம் என்றும் சொல்கிறோம் இல்லையா? எனவே துபாக்கூர் வேலை = இரட்டுறவு வேலை. துபாக்கூரின் இன்னொரு பயன்பாடு: துபாய்க்கிறான்>டபாய்க்கிறான் = இரட்டுறவாகிறான்.. தமிழின் இழப்பைக் கொஞ்சங் கொஞ்சமாய்த் தேடிக் கண்டுபிடிப்போம்.

தமிழ்பற்றிய முன்முடிவுகளைத் தூக்கிவைத்துத் திறந்த மனத்தோடு பார்த்தால் எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும்.

அன்புடன்,
இராம.கி.

No comments:

Post a Comment