Friday, January 10, 2020

பாசண்டச் சாத்தன் - 2

இற்றைக்கு 4000 - 6000 ஆண்டுகளுக்குமுன் தமிழ்ப் பழங்குடி வாழ்க்கையில் கொஞ்சங் கொஞ்சமாய் நம்மிடை  தொழிற்பிரிவுகள் ஏற்படத் தொடங்கின. ( உலகில் பலவிடங்களிலும் மாந்த வளர்ச்சியில் தொழிற் பிரிவுகள் எழுந்தன. இது ஏதோ துணைக்கண்டத்திற்கு மட்டும் நடந்த விதப்பல்ல. பொ.உ. 300 க்குப் பின், குமுகப்பிரிவுகளில் நடந்த அகமுறைத் திருமணங்களாலும், வடக்கிருந்து தெற்கே பரவிய ”குடி கலப்புத் தடுப்பாலும்” சாதிகளாய் இவை மாறிப் போனது பெருஞ்சோகம். நான் அதையிங்கு பேசவில்லை.)  அற்றைப் பிரிவுகளில் ஒன்றான வில்லியர் தொழில் கொஞ்சங் கொஞ்சமாய் விரிவுற்றது. மற்ற இனக்குழுக்களுடன் எப்போதுமே போர் செய்து குலையாமல், சில போது ஒன்று கூடி உறவு பேசி, தம் பொருள்/பண்டத்தை மாற்றாரின் பொருள்/பண்டத்திற்கு மாற்றி வரவும் இவ்வில்லியர் முற்பட்டார் கொஞ்சங் கொஞ்சமாய் இனக் குழுக்களிடை பொருதுகள் குறைந்து, பேச்சும், உறவுங் கூடின. இதனால் ஏற்பட்ட பண்டமாற்றில் சில குறிப்பிடத் தக்க வில்லியர் இன்னும் விதந்த திறம்பெற்றார்.

வில்லறிவு, இங்கு வில் + தை = விற்றை> வித்தை> விச்சை என ஆயிற்று. வில்லியர், வித்தையர்> விச்சையர் என்றும் சொல்லப்பட்டார். விச்சைய, விசய>வைசிய என்றும் சங்கதத்தில் வரும். வில்+ தல் விற்றலானது. வித்தையும் விற்றலும், (போர்த்திறன், பண்டமாற்று என்ற) இரு வேறு வில்லியர் செயல்களையும் தொடக்கத்தில் குறித்தன முடிவில் தகரம் பயின்ற சொல் போர்த்திறனையும், றகரம் பயின்ற சொல் பண்டமாற்றையும் குறித்தது. (இம் மெய்வேறுபாட்டை இன்றும் நாம் பயில்கிறோம்.) வில்லியருக்கு இன்னொரு பெயர் அவர் கையாண்ட, அம்பு/ வாளி/ வாணியால் ஏற்பட்டது. வில்லியர், வாணியர் என்றும் சொல்லப்பட்டார். பண்டமாற்று வேலைக்கு வாணியம்>வாணிகம் என்ற விதப்புப் பெயரெழுந்தது. [ஆங்கிலத்தில் இவரை trader என்பார்.]

விலை படியும்வரை, நிறையும்வரை, சாலும்வரை பரக்கப் பேசுவது சால்+தல் = சாற்றல்/ சாத்தலாயிற்று. சால்தல் என்பது, விற்போருக்கு சாத்தாரமாய் இருக்கவேண்டிய இயல்பு. சாத்தல் தொழில் செய்வோன் சாத்தன் எனப் பட்டான். பொ.உ.மு. 600 க்கு அருகில் இந்தியாவெங்கணும் பரவலாய் இச்சொல் புழங்கியிருக்கவேண்டும்.  ஏனெனில் செயின, புத்த  இலக்கியங்களில் இச்சொல் பரக்கப் பயில்கிறது. இன்றும் சாத்து>சேத் என்பது வடக்கே பெருவலம். இதன் திரிவான செட்டு>செட்டி நம்மிடை 2000 ஆண்டுகளுக்குமேல் புழங்கி வந்துள்ளது. அகரமுதலிகளில் ”சாலுக்கு” 2 வகைப் பொருள் சொல்வர். நிறைதல், பொருந்தல், முற்றல், மாட்சி பெறுதல் என்பது முதல்வகை. விளம்பரப்படுத்தல், விரித்துரைத்தல், சொல்லல், நிறைத்தல், அடித்தல், புகழ்தல், அமைத்தல் போன்றவை 2 ஆம் வகை. சாத்தருக்கு, வணிக அடையாளம் போல், இன்னும் வேறு அடையாளங்களும் ஏற்பட்டன.  அவற்றைப் பார்ப்போம்.

முதலில் வருவது சாத்தார மாந்தன் எனும் பொதுவடையாளம். (1930-50 களில் ”குப்பன் சுப்பன்” என்ற பெயர்கள் தமிழரிடை அதிகமானது போல்) 1000 ஆண்டுகள் முன் ”சாத்தன்”  என்ற சொல் அதிகமாய்ப் புழங்கியது. இதை நீலகேசியின் 683 - ஆம் பாடல் (ஆசீவக வாதச் சருக்கம்) தெளிவாகக் குறிக்கிறது.  Any Tom, Dick and Harry என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் ”சாத்தன் (here denotes common man)” என்ற பெயர் தமிழகத்திற் பொதுப் பெயராக ஒரு காலம் பயன்பட்டது போலும். சாத்தாரம்>சாத்தாரணம்>சாதாரணம் என்ற சொல்லும் ordinary பொருளைக் குறித்தது. அதே போல் (ஆசீவகம், செயினம், புத்தம் என்ற 3 நெறிகள் மக்களால் பின்பற்றப் பட்டதால்) சமணன் என்ற பெயர் சமணன்>சாமணன்> சாமனம்> சாமான்யன் என்றும் பரவியிருந்தது.

ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லல னாய்விடின் இச்
சாத்தனும் யானும் அவன் தன்னில் சால இசையுடைய
நாத்தனை யாட்டியோர் நன்மைகண் டாலும் நினக்குரைத்தும்
ஈத்தனம் உண்டு இருமைக்கும் ஏதம் இலம் பிறவோ?

சமணம் என்ற சொல் ஸ்ரமண என்ற சங்கதச் சொல்லில் எழுந்ததென்பது வல்வழக்கு. ”சங்கதத்தில் கொள்கை பரப்பக் கூடாது” என்று அழுத்திச் சொன்ன சமய நெறிகளின் பெயர்கள் சங்கத வழி ஏற்படுமா? சமணம் வடக்கே பெரிதும் பழகியது அவந்தி, வச்சிரம், மகதம், காசி-கோசலப் பகுதிகளாகும். இவற்றில் அற்றைப் பெருமொழிகள் மாகதி, அர்த்தமாகதி போன்றவை. இவையே பின்னால் பாகதம் பாலியாய் வளர்ச்சியுற்றன. (வேத மொழி வட தமிழில் ஊடுருவியே பல்வேறு வடபுல மொழிகள் உருவாகின. இந்த வடபுல மொழிகள் இன்றும் தமிழ் இலக்கணக் கூறுகளைக் காட்டுவதும், வேதமொழிச் சொற்கள் அங்கு பெரும்பாலும் பெயர்ச்சொற்களாய் அமைவதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. தமிழ்ப் பின்புலத்தில் வேதமொழிப் பெயர்கள் ஊடுறுவி இம்மொழிகள் ஏற்பட்டுள்ளன.)  பாகதம், பாலியில் சமண என்ற சொல்லேயுண்டு. எல்லாச் சமணத் துறவியரும் சம்மணம் கொட்டித் தானித்து (த்யானித்து) இருந்ததால் சமணப் பெயர் அவருக்கு இயல்பாய் எழுந்தது. 

சாத்தன் என்ற பெயர் சங்க காலத்தில் மிகவும் புழங்கியது. தமிழிப் பொறிப்புகளில் ஆதன், அந்துவன், குவிரன்,  கண்ணன், கீரன், கொற்றி, நெடுங்கிள்ளி, சாத்தன்  பெயர்கள் உண்டு.  அழிசி நற் சாத்தன், ஆடுதுறை மாசாத்தன், மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தன், உறையூர்க் கதுவாய்ச் சாத்தன், உறையூர் முதுகண்ணன் சாத்தன், ஒக்கூர் மாசாத்தன், கருவூர்க் கதப் பிள்ளைச் சாத்தன், கருவூர்ச் சேரமான் சாத்தன், கருவூர் பூதஞ் சாத்தன், சீத்தலைச் சாத்தன்  செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன், தொண்டி ஆமூர்ச் சாத்தன், பிரான் சாத்தன்,பெருஞ் சாத்தன், பெருந்தலைச் சாத்தன், பெருந் தோள் குறுஞ்சாத்தன், பேரி சாத்தன், மோசி சாத்தன் என்ற 18 புலவர் பெயர்கள் சங்க இலக்கியத்தில் பயிலும். இதே போல் அந்துவன் சாத்தன், ஒல்லையூர்க் கிழான் பெருஞ்சாத்தன் (வல்வேல் சாத்தன்), சோழநாட்டுப் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன், பாண்டியன் கீரஞ்சாத்தன் என்று பாடப்பட்டோர் பெயர்களும் வரும்.  தவிர, 

உண்ம் என இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்/
ஈண்டோர் இன் சாயலனே வேண்டார் - புறம் 178/5,6
வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை - புறம் 242/5
அறப்பெயர் சாத்தன் கிளையேம் பெரும - புறம் 395/21

என்ற 3 பயன்பாடுகள் சங்க இலக்கியத்திலுண்டு.  (மேலே பெரும்பெயர்ச் சாத்தனில் பெயரென ஊடுவருவது யாப்போசைக்காக வந்தது.. புரவலனின் பெயர் பெருஞ்சாத்தனே. அதேபோல்  அறப்பெயர்ச் சாத்தனும் அறச்சாத்தன் என்ற தலைவனையே குறித்தது. தரும சாஸ்தாவென இன்று சொல்வார். அதைப் புத்தனோடு தொடர்புறுத்துவது சற்று அதிகப்படி.  காரணத்தைக் கீழே காண்போம்.) சங்க இலக்கியம் போக, ”அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி” - வஞ்சி 30/130, ”அரட்டன் செட்டி-தன் ஆய்_இழை ஈன்ற ”- வஞ்சி 30/49, ”நன்றறி செட்டி நல் அடி வீழ்ந்து” - மணி 16/107, ”கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப” - மணி 25/184, ”தனிக்கல கம்பளச் செட்டி கைத்தரலும்” - மணி 29/6, ”ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்” - மணி 25/165, ”செட்டி தனபாலன் மனையாள் சினவு வாள் கண்” - சிந்தா:7 1791/1 என்ற வரிகளின் மூலம் செட்டி என்ற சொல்  காப்பியங்களில் வருவதை அறியலாம்.

அன்புடன்,
இராம.கி.

No comments:

Post a Comment