Sunday, June 16, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 8

முன்சொன்னதுபோல் யாங்க்சி ஆற்றங்கரையிலோ, யுன்னானிலோ, தென் கிழக்காசியாவிலோ நெல்விளைச்சல் தொடங்கியிருக்கலாம். ஆனால் அது பெரும்பாலும் புன்செய் விளைச்சலாய் இருக்கவே வாய்ப்புண்டு. ஏனெனில் நன்செய் விளைச்சலுக்கு, தேவையான அளவிலும் காலத்திலும் வயலில் நீர்தேங்க வேண்டும். பயிர் அழுகவுங் கூடாது. [”வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும். நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோலுயரும் கோலுயரக் கோனுயர்வான்” என்று பெருஞ்சோழர் கால ஔவை கூறுவாள்.] 

இந்த தேவையான அளவிலும், காலத்திலும் சாதிக்கும் படியான நீர்ப்பாசன நுட்பியல் என்பது ஒரு குமுகத்தில் உருவாக நெடுநாட்கள் ஆகும். தவிர, பென்னம்பெரு நுட்பியல்கள் எல்லாம் பெரும்பாலும் இயற்கையைப் படியெடுத்தே உருவாயின. 

புன்செய் நெல் விளைச்சலைக் கண்ட எந்த நாட்டின் வயல்களுக்கு நீரானது தானே 6 மாதம் உட்புகுந்து, ஊடுறுவி, சிச்சிறிதாய் நீர்மட்டம் உயர்ந்து, சில காலம் தேங்கிப் பின் சிச்சிறிதாய் வடிந்தது? அப்படியொரு நாடு உலகில் என்றேனும் எங்கேனும் இருந்ததா?- எனில் இருந்தது என்றே மறுமொழி சொல்லமுடியும். அந்நாடு இன்றுமுண்டு. ஆனால் நம்மில் பலரும் அதை மதிக்காது இருக்கிறோம். (நம்மின் படியெடுப்பு அப்படி.) இதற்கு விடைகாண முயல்வோம்.

[இங்கேயோர் இடைவிலகல். மேற்கூறிய நீர்ப்பாசனம் பொ.உ.மு. 2500 ஆண்டுகளில் (அவ்வளவு முந்தையான காலத்தில்) தமிழகத்தில் நடந்ததற்கு இது வரை சான்றெதுவுங் கிட்டவில்லை. இன்னுஞ் சொன்னால், ஆகப் பழம் நெல் நமக்குப் பொருந்தலிலும், கொடுமணத்திலும், இப்போது சிவகளையிலும் கிடைத்தது. பொருந்தலின், காலம் பொ.உ.மு.490 என்றே முனைவர் கா.இராசனின் ஆய்வு உணர்த்தியது. கொடுமணத்தின் காலம் ஏறத்தாழ அதே தான். சிவகளையின் காலம் பொ.உ.மு 900 க்கு அருகில். 

தவிர, இந்த இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டது இயல்நெல் அல்ல. பன்முறை பயிரிட்டு. செழுமையுற்ற நெல்மணியாகும். தமிழகத்தில் நெல்விளைவிப்பு பொ.உ.மு. 900க்கு முன் நடந்து இருக்கலாம். ஆனால் அதன் காலமென்ன? நமக்குத் தெரியாது. புன்செய்ப் பயிரோடு, நீர்ப் பாசன நுட்பியல் சேர்ந்த பின்னரே நன்செய் விளைப்பு தமிழகத்தில் ஏற்பட்டது. 

இதன்காலம் பற்றியும் எதிர்காலத்தில் ஆயவேண்டும். வெறும் வாய்ப்பந்தல் பற்றாது. இன்றைக்குக் கிட்டியிருக்கும் தமிழகப் பழம்நெல் வகைகளை ஈனியல் வழி ஆய்ந்து இதற்குத் தீர்வு காணலாம். அப்படி யெல்லாம் ஆயாது, வெறுமே தமிழ் ஆர்வலர் “எட்டுத்தொகை, பத்துப்பாட்டு” சொல்வதில் பொருள் இல்லை.]   

இனித் தென்கிழக்காசியாவிற்கு வருவோம். தென்கிழக்காசியாவில் வெண்கலங் கண்ட தமிழன், அதைக் கொணர்ந்து ஏற்கனவே தான் நடத்திவந்த முல்லை நிலப் பயிர்ச்செயலுக்குப் பயனுறுத்தியிருக்கலாம். ”காடுகொன்று நாடாக்கி குளங்தொட்டு வளம்பெருக்க” (பட்டினப்பாலை 283-4), மரக் கொழுவால் கொற்றுவதை விட வெண்கலக் கொழுவால் கொற்றுவது எளிது. அகண்ட வயற்பரப்புகளை வெண்கலப் பயன்பாட்டால் அதிகம் உருவாக்கலாம். 

முல்லை மருதமாய் மாறுவது வெண்கலக் கொழுக்களால் அதிகரிக்கும். விளைச்சலும் கூடும் இனக்குழு உறுப்பினர் கூடக்கூட உணவுத் தேவையும், போர்க் கருவிகள் தேவையும், உணவாக்கங்களும் தமிழரிடை மேலும் அதிகரித்திருக்கும். பொ. உ. மு. 2500 களில் தாய்லாந்துத் தக்கோலத்திற்கும் அப்பால், தகரத் தேவையை நிறைவு செய்யத் தமிழன் இன்னும் கிழக்கில் நகர்ந்தான். (முன்சொன்னது போல், தகரம் கிட்டிய இடம் யாருக்கும் தெரியாத படி மறைத்து தமிழ் வணிகர் தம்முள் கமுக்கமாய் வைத்திருக்கலாம். நடுக் கிழக்கு வணிகர் அப்படித்தான் செய்தார்.)

இந்த வெண்கலத் தேடலோடு மட்டும் தமிழர் நின்றாரா எனில் இல்லை. முத்து, வயிரம், அரத்தினம், பச்சை போன்ற ஒன்பான் மணிகளையும் தேடினார். தங்கம், செம்பு எனப் பலவற்றைத் தேடினார். இத்தேடலின் ஊடாய்த் தக்கோலத்திற்கு அப்புறம் நிலவழி நடந்து, சியாமிய வளைகுடாவையுங் கடந்து (அயுத்தயா, சுகோதை போன்ற) சியாமின் புது நகரப் பகுதிகளுக்கும் தமிழன் போயிருப்பார். 

இன்னுஞ் சொன்னால் தாம்பரலிங்கத்தின் கிழக்கிலும் கடற்பயணங்களைச் செய்திருக்கலாம். மறவாதீர்!. வெறும் 600 கி.மீ. கடல்வழி போனாலே கம்போடியா, வியத்நாம் சார்ந்த மீகாங் கழிமுகம் வந்து சேரும். அக்காலத்தில் கம்போடியரும் வியத்நாமியரும் சேர்ந்த பல்வேறு பழங் குடியார் அங்கிருந்தார். இன்றும் இவர் அருகருகே தாம் உள்ளார். இரு நாடுகளும் எப்போதும் எலியும் பூனையுமாகவே உள்ளன. இற்றை வியத்நாமின் ஓக்இயோ (Oc Eo. அன்று இது கம்போடியாப் பகுதி.) எனும் மீகாங் துறைக்கு இவ்வழியில் எளிதில் போகலாம்.

மேற்கே எகிப்தின் பெருனீசு போய், இன்னும் மேற்கே 300 கி.மீ. நிலம் வழி ”அசுவான்” போனால், வடக்கே ஏகும் நீலாறு வந்துவிடும். அதில் படகுப் பயணஞ் செய்தால் அலெக்சாந்திரியா போவது எளிது. அங்கிருந்து கிரேக்கம், உரோமம் போவது அப்படியொன்றுங் கடினமல்ல. 

இதே போல் தான் தாம்ப லிங்கத்தின் கிழக்கில் ஓக்இயோ போனால், அதற்கு அப்புறம் நிலவழி, ஆற்று வழியில் பயணஞ் செய்து கம்போடிய நாட்டிற்குள் போவது அப்படியொன்றுங் கடினமல்ல. தமிழருக்கும் கம்போடியாவிற்கும் நாட்பட்ட தொடர்பிருந்தது உண்மையே. (ஒருமுறை நீங்கள் அங்கு போய் வந்தால் உங்களுக்கே அது புலப்பட்டு விடும். அடுத்த பகுதியில் விவரிக்கிறேன்.) ஆக நம் குணக்கு, குடக்குப் பக்கங்களிலும் கடல், நிலம், ஆறு எனப் பயணஞ் செய்வதே நமக்குப் பழக்கமாய் இருந்துள்ளது.

ஆங்கிலப் பெயரான "Mekong" என்பது சயாமிலும், லாவோசிலுமுள்ள Mae Nam Khong என்ற பெயரின் சுருக்கமே என்பார். இம்மொழிகளில் நீர்ப்பெருக்கு, நீர்த் தாய் என்ற பொதுப்பொருளில் mae nam அமையும். Khong என்பது இயற்பெயர். எனவே Mae Nam Khong என்பதன் பொருள் "River Khong".என்பதாகும். அதே பொழுது Khong இற்கே ஆற்றுப்பொருள் சீனத்திலிருந்து வந்துசேரும். (Chinese 江 whose Old Chinese pronunciation has been reconstructed as /*kˤroŋ and which long served as the proper name of the Yangtze before becoming a generic word for major rivers.) இந்தியக் கங்கைக்கும் அதே பெயரா?- என்பதும் ஆராயற் பாலது. 

கம் என்பது தமிழில் நீரைக்குறிக்கும். கெமேர் மொழியில் mé ஐ, அம்மை என்றும், kôngk/kôngkea என்பதை நீருக்கு மாற்றாகவுங் பொருள் கொள்வர். எனவே Mékôngk இன் பொருள் நீர்த்தாய் ('mother of water') என்றாகும். தமிழில் காவிரித் தாய் என்கிறோமே? அதுபோலத் தான்.

மீகாங் ஆறு கூர்ந்து அறியப்படவேண்டிய ஒன்று. இமயமலையில் தோன்றும் இந்த ஆறு, திபெத், யுன்னான், லாவோசு, தாய்லந்து, கம்போடியா வழி தென் வியத்நாமிற்கு வந்து, முடிவில் கடலை அடைகிறது. இவ்வாற்றில் 2 வகையில் நீரோட்டப் பெருக்குண்டு. முதல்வழி இமயப் பனிக்கட்டிகள் உருகிப் பெருக்கு எடுப்பது. இரண்டாவது மே தொடங்கி அகுதோபர் வரை ஏற்படும் பருவ மழையால் பெருகி வருவது. 

இதுபோகக் கம்போடிய வடமேற்கு மலைத் தொடரில் பெய்யும் மழைநீர், சிற்றாறுகளாகி ”புத்தாற்றுப் பேரேரிக்கு”  (தோன்லே சாப் dtoo-un-lay saap என்று கெமேர் மொழியில் சொல்லப்படும். கம்போடியா வளத்திற்கு மிக ஆதாரமான ஏரி) வந்து சேரும். குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏரி நிறைந்து மிகுத்துப்பெருகும் நீர் ”புத்தாற்றில்” வழியும். (ஆற்றின் பெயர் புத்தாறு. ஏரியின் பெயர் புத்தாற்றுப் பேரேரி) 

இப்படி வழியும் புத்தாறு பென்னம்புன (Phnompenh) நகருக்கருகில் மீகாங்கோடு கலந்து, பசாக் (Bassac), மீகாங் (Mekong) எனும் கிளையாறுகளாய்ப் பிரிந்தோடும். இரு உள்ளேகும் ஆறுகளும், இரு வெளியேறும் ஆறுகளும் என நாலு முகங்கள் கொண்டதால், பென்னம்புன நகர் சதுமுகம் எனப்பட்டது. (சதுரம் தமிழ் தான். என் கட்டுரைகளில் தேடுக.)

இதன் புவியியல் அமைப்பு சற்று விதப்பானது. வெளியேறும் ஆறுகளின் கொண்மையை விட உள்ளேகும் மீகாங்கின் கொண்மை மழைக்காலத்தில் மிகுதி. எனவே மழைக்காலத்தில் புத்தாறு திசைமாறி வெளியேகும் ஆறாகும். அதாவது வழமை ஓட்டத்திற்கு எதிர்த் திசையில் அதிகநீர் ஓடி புத்தாற்று ஏரியின் நீர்ப்பிடிப்பு மெல்ல மெல்லக் கூடும். நாட்டின் நடுவே சியம்ரீப், பட்டம்பாங், புர்சாட், கம்போங்தாம், கம்போங்சின்னங், கம்பூங்சாம், கம்போங் சுபியூ, பென்னம்புனம் வரை வெள்ளம் அகன்று பரவும். 

இன்றுங் கூட இப்பகுதி ஏழைக் கம்போடிய வீடுகள் 12,16,24 மரக்கால்களில் 6 அடி உயரத்திற்கும் மேல் மரத்தால் தரைத்தளமும் நிலத்திலிருந்து அதற்குப் போக ஏணிப் படிக்கட்டும் கொண்டிருக்கும். தமிழக நாட்டுப்புறத்தார் போலவே ஆண்களின் உடல்மேற் பகுதியில் மீக்குறை ஆடைகளே இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் வெள்ளப் பெருக்கில் கால்நடைகளை வீட்டுத் தளத்தில் ஏற்றி விடுவார். பெரும்பாலும் அந்த நாடு முழுதும் தண்ணீரில் மிதக்கும். (செல்வர் வீடுகள் மட்டும் நிலம் தொட்டு அதே பொழுது 6 அடி உயர மண்மேட்டில் தரைத்தளம் கொண்டு காட்சியளிக்கும். படியில்லாதும், படகு கட்டத் தோதாய் வீட்டு வாசலில் தூண்கள் இல்லாதும் உள்ள செல்வர் வீடுகள் அங்கு அரிது.

[இதே நிலை சதுப்பு நிலத்தில் வீடு கட்டிய புகாரிலும் இருந்திருக்கலாம்  என ஊகிக்கலாம். செயமோகன் தன் ”கொற்றவை” நூலில் இதை விரித்துக் காட்டி இருப்பார். ஏனெனில் பொ.உ. 6-7 ஆம் நூற்றாண்டுகளில் புகாரிலிருந்து வெளியேறிப் பாண்டிநாட்டுக்குப் போந்த நகரத்தார் தமக்குத் தெரிந்த ஒரே ஒரு அடவில் (design) செட்டிநாட்டுப் பக்கம் இன்றும் வீடுகள் கட்டியுள்ளதைக் காணலாம். வீதியில் இருந்து பார்த்தால் கொடிக் கம்பும், வாசல் வளைவும், வீதியொட்டிய வெளிக் கதவும். கதவின் வெளிப்பக்கம் உட்கார 2 மாடங்களும், படகு கட்டத் தோதாய் 2 தூண்களும், படகுகள் அணையத் தோதாய்ப் படித்துறையும் கண்டாலே செட்டிநாட்டு நகரத்தார் வீடுகளின் முன்தோற்றம் வேடிக்கையாய்த் தோற்றும். நெய்தல்நிலத்தில் இருக்கவேண்டிய ஓர் அடவு (design) முரண்தொடையாய்ப் பாலை நிலத்தில் உள்ளது. 

கூர்ந்துநோக்கின் தென்கிழக்கு ஆசியச் செல்வர் வீடுகள் போன்றே பாலை நிலச் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட நகரத்தார் வீடுகள் அமையும். எது மூலம்? எது போல்மம்? - என அறிய முடியாத படி காலங் கடந்து நிற்கும்.] 
 
இம்முரண்தொடையை விடுத்து மீண்டும் தோன்லே சாப் ஏரிக்குப் போவோம். ஏரியின் கொள்ளளவு மழைக்காலத்தில் பெருமாண்டதாகும். 6 மாத காலம் இது நடக்கும். கம்போடிய நெல்விளைச்சலுக்கு இதுவே பெரு நன்மை கொடுத்தது. புத்தாற்றின் இரு கரையிலும் இயல்பாய் வளர்ந்த நெற்பயிர்கள் நீர்மட்டம் உயர அதை விட உயருங் கட்டாயம் ஏற்பட்டது. உயரமான சம்பா நெல் கதிர்கள் பெருத்து வளர்ந்தன. (வியத்நாம் நாட்டிற்கே சம்பா என்று தான் பெயர்.) சம்பா நாட்டில் விளைந்த நெல் சம்பாவானதோ? வியப்பாகிறது. நூற்றுக் கணக்கான சம்பா வகைகளை இன்று தமிழ்நாட்டில் அடையாளங் காட்டுகிறோமே? எல்லாச் சம்பாக்களும் பெரும்பாலும் ஏராளமாய் நீரைக் குடிக்கும் 150 நாள் பயிர்கள். நீர் நிறைய நிறைய, அதைக்காட்டிலும் உயரம் வளர முற்படும் நெட்டைப் பயிர்கள். ஆனாலும் நீர்மட்டம் கூட்டிச் சரியான படி நீரை வடிக்கவேண்டும். ஒரு தப்புச் செய்தால் பயிர் அழுகிவிடும். நீர்ப்பாசனம் என்பது அவ்வளவு நுணுகிப் பின்பற்ற வேண்டியது.

இத்தகைய நீர்ப்பாசனம் கம்போடியாவில் மிக இயல்பாய் ஏற்பட்டது. உலகிலேயே வேறெங்கும் இது போல் இயற்கை அமையுமா என்பது கேள்விக் குறி. மீகாங் ஆற்றுக் கழிமுகத்திலிருந்து படகில் மேற்குநோக்கி சியம்ரீப் வரை சென்ற தமிழ் வணிகர் கட்டாயம் புத்தாற்றின் விதப்பைப் புரிந்துகொண்டு இருப்பார். இயற்கைக் கால்வாய்கள் மூலம் நீர் பிரிந்து செல்வதையும் கண்டிருப்பார். நெல் வித்துகளைத் தமிழகம் கொணர்ந்த போது சரியான தருணத்தில் நீர் பாய்ச்ச வேண்டிய தேவையையும் கால்வாய் வெட்டையும் மனக்கற்பனையில் செய்து பார்த்திருப்பார். உலகில் மாந்தர் கண்டுபிடித்த ஒவ்வொரு நுட்பியலும் ஏதோவொரு இயல்நிகழ்வை புதுவிடத்தில், புதுக் காலத்தில் புதுப்போக்கில் செய்து பார்த்தது தானே?

அன்புடன்,
இராம.கி.

2 comments:

  1. அருமையான தொடர்!! மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  2. "கம்" என்பது நீரைக் குறிக்கும் என்றால் கம்கை என்பதே கங்கை ஆனதோ ?

    ReplyDelete