Saturday, November 03, 2018

தூங்கெயில் - 6

தவிர, முகன வாயிலை ஒட்டி ஞாயில் எனும் பகுதி உண்டு. அது மீச் சிறியதாயும் ஆகலாம். ஆயினும் அது ஒரு command centre. ஞாயிலும் வாயிலும் வெவ்வேறானவை. ஞா-என்பது காணிக்கும் நிலை (overseeing). கண்ணையும், காட்சியறிவையுங் குறிக்கும் ஓரெழுத்தொருமொழி. ஞாயிலில் இருந்தே நாயகன் கோட்டையைக் கவனிப்பான். யா எனும் காட்சிவேரில் யாயன்>  ஞாயன்> நாயன்> நாயகன் எனச் சொல் வளரும். நாயன்= தலைவன். சிவநெறி நாயன்மார் இறைவன் தொண்டர். மக்களுக்குத் தலைவர். நாய்ச்சியார்> நாச்சியார் தலைவியார். தென்பாண்டியில் நாச்சியார் புழக்கம் மிகுதி. [விண்ணவத்திலும் ஆள்வார்> ஆழ்வார் மக்கள் தலைவரே. இன்னொரு பக்கம் இறைத் தொண்டர். ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் என்ற பெயரை எண்ணிப் பாருங்கள். இதன் சொல்லியங்கியல் (word dialectics) தெரியாதார் ”ஆழ்வாரைப்” புரியார். ”திருவரங்கக் கோயிலொழுகு” படித்தால் ஒரு வேளை இது புரியலாம். பெருமாளும் பெருந்தலைவனே. ஆண்டான், ஆண்டாள், முதலி என்பார் விண்ணவத்தில் தலைமையர்.] நாவிகன்> நாயிகன் = கப்பல் செலுத்துகிறவன். (கண்ணகியின் தாதை பெருங்கப்பல்களால் நாடு விட்டு நாடு ஏகும் தொழிலைச் செய்பவன். Shipping owner. வணிகனல்லன்.) நாயிகனும், நாயகனும் வேறானவர். 

கோட்டை மூலையிலோ, முகன வாயிலுக்கு அருகிலோ, கோட்டை உயரத்தில் இருந்து எதிரி இடராளிகளை காணும்படி உக்கடம் (watch tower) எனும் கட்டுமானம் உண்டு. [இற்றைக் கோவை நகராட்சி அலுவத்துக்கு அருகில் உக்கட நிறுத்தம் இருக்கிறதே? அது அந்நாளைய watch tower இருந்தவிடம். ஒருபக்கம் கொற்று என்பதற்கு aggression என்ற பொருள் உண்டென்றால், இன்னொரு பக்கம் கோட்டையையுங் குறிக்கும். அகராதியிற் பதியாத கோட்டைப் பொருளைச் சங்கதப் புழக்கம் பார்த்தே நான் சொல்கிறேன். துருக்குகளே கோட்டைகளை அடையாளங் காட்டியதால் அம் விகுதி சேர்த்துத் துருக்கங்களென (towers) தமிழில் அகட்டுவதும் உண்டு. சங்கதத்திற் கடனாய்ப் போகையில் துருக்கும் துருக்கமும் துர்க்கென்று நின்றே இரண்டையுஞ் சேர்த்துச் சுட்டும்.

துருக்கு> துர்க்கின் ஐ (இறைவி) துர்க்கையாவாள். (இற்றை இந்துப் பார்வையில் இவள் உமையென்றும் அறியப் படுவாள்.) அ+ ஐ = அவ்வை= அம்மா, தலைவி [பெண்வழிக் குமுகாயத்திலே தான் பழங்குடிகள் முதலில் வாழ்ந்தார். ஆண்= ஆள்பவன்; பெள்>பெண்= பெள்ளப் படுபவள்= பேணப் படுபவள்; பெள்+தல்= பெட்டல்> பெட்டை; பெண்> பேண் என்ற சொல்வளர்ச்சிகள் பிற்காலத்தில் பெண் ஆணுக்கு அடிமையுற்றதை நினைவுறுத்தும். பெருமித்த பொதுவுடைமைக் (primitive communism) காலத்தில் பெண்ணே குமுகத் தலைவி ஆவாள். ஐ என்ற ஈறு பல பெண் வழிப் பெயர்களில் இன்றும் நிலைப்பதே இத் தலைமைக் காலத்தை நமக்கு உணர்த்தும். அய்யை> அய்ஞை> அஞ்ஞை> அன்னை, அக்கை, தங்கை, நங்கை எனப் பல சொற்களை இதோடு சேர்த்து எண்ணிப் பார்க்கலாம்.] துர்க்கைக்கு ஈடான கொற்றவையும் கூட்டுச் சொல்லே. கொற்று+அவ்வை = கொற்றவ்வை> கொற்றவை. கொற்றத்தின் கோட்டைப் பொருள் இப்போது புரிகிறதா? சங்க இலக்கியத்திற் கொற்றம் வரும் இடங்களை மீளாய்ந்தால் அப்படிக் கொள்வது தவறென்று தோன்றாது.

கொற்றவன் = கோட்டைக்குத் தலைவன், அரசன்,
கொற்றக்குடை = கோட்டைத் தலைவனின் குடை
கொற்றத் தேவி/ கொற்றவ்வை/ கொற்றவை/ கொற்றவி = கோட்டைத் தலைவி
கொற்றம் = கோட்டை, ஆட்சிப் பகுதி (domain), வெற்றி, வீரம், வன்மை, அரசியல்
கொற்றமுரசு = கோட்டையின் தலையாய முரசு
கொற்றவஞ்சி = தலைவனின் கோட்டை, வலியால் நிலைபெற்றதைச் சொல்லி அவன் புகழைப் பாடும் புறத்துறை. வல்+ந்+சி= வஞ்சி 
கொற்றவள்ளை = மாற்றார் கோட்டையை வகுந்து சிதற்றியதைக் கூறி தன் தலைவனின் புகழைப் பாடும் புறத்துறை; வள்ளுதல் = வகுத்தல், வெட்டுதல்; வாளால் வள்ளுகிறார்; வள்ளுரம் = வகுக்கப்பட்ட மாட்டிறைச்சி;. அப்படி ஒன்றும் மாட்டிறைச்சி நம்மூரில் ஒதுக்கப் படவில்லை. மாட்டிற்கு ”மதப்” பொருள் தமிழ்வழக்கிற் கிடையாது. செல்வப்பொருள் மட்டுமே நெடுநாள் நிலைத்தது. 
கொற்றவாயில் = கோட்டையின் வாயில்
கொற்றவுழிஞை = மாற்றார் கோட்டையைக் கைக்கொள்ளும் பொருட்டு நம் தலைவன் படையெடுத்ததைச் சொல்லும் துறை.
கொற்றவைநிலை = கோட்டையின் இறைவிக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை. எல்லா அம்மன் கோயில்களிலும் இறைவிக்குப் பலியிடும் பழக்கம் ஆனது வெகுகாலம் இருந்தது. காலவோட்டத்தில் கொல்லாச் சிந்தனை நம்மிடை விரவி, இப்பழக்கம் மறைந்து வருகிறது. இதற்கு மாறாகவே பூசணிக்குள் மஞ்சள்/குங்குமம் விரவிப் பலிபீடத்தில் உடைக்கிறார். சுண்ணமும் மஞ்சளும் சேர்ந்தால் அரத்த நிறங் காட்டும். அம்மன் கோயில்களில் குங்குமம் வாங்கி நெற்றியில் இடுவதும், அரத்தப் போலியைச் சுட்டிக் காட்டும். இதற்கெல்லாம் சங்கதத்தில் பொருள் தேடின், கிட்டாது. நம் மரபுகளில் தேட வேண்டும். நாம் தாம் நம் மரபுகளை இழித்துக் கொண்டு இருக்கிறோமே?
கொற்றன்> கொத்தன் = கொற்றைக் கட்டுபவன்; முதலாங் கட்டு, சமையற் கட்டு, பின்னங் கட்டு, வளைவுக் கட்டு, மூன்றாங் கட்டு என எண்ணிக்கைப் படியும், பயன்பாட்டின் படியும் கட்டிடப் பெயர்கள் நம்மூரில் விரியும். கொற்றை மட்டுமின்றி எல்லாவற்றையுங் கட்டுவதால், ”கட்டுவோன்” எனும் பொதுப் பொருளே கொற்றனுக்கு நாளாவட்டத்தில் வந்துசேர்ந்தது. கொத்து = ஒரு தொகுதி என்ற சொல் வேறுபட்டது.

கொற்றத்திற்குக் கோட்டை முதற்பொருளாகி, ஊர், நாடு, அரசு, ஆட்சி என்பன வழிப்பொருள்களாய் விரியும். புழக்கங் கூடிப் பொருள் விரிவதும் சுருங்குவதும், மொழி வளர்ச்சியில் இயற்கை. (பிறகேன் அகராதிகளிற் கொற்றத்திற்குக் கோட்டைப் பொருள் தவிர்த்தார்? எனக்குப் புரியவில்லை.) குல் எனும் வளைவு வேரில், குல்> கொல்> கொல்+து= கொற்று> கொற்றம் எழும். அதேபோல் குல்> குள்> கொள்> கொட்பு, கொட்டு, கொடு, கொட்டில், கொட்டாரம், கோடு, கோட்டம், கோட்டை என்பவையும் வளைபொருளிற் கிளைத்தவையே. வடக்கே பலவூர்கள் கொற்றிற்கு இணையாக garh ஆகிக் கோட்டைப் பொருள் சுட்டும். katta, kot என முடியுஞ் சொற்களும் (kalikatta, Rajkot போன்றவை) கோட்டைக்கு இணை காட்டும். பல இந்திய ஊர்களின் ஈறுகள் தமிழ்த் தோற்றங் காட்டும். [ஊர்ப்பெயர்களைப் பார்த்தால் இந்தியாவின் வடக்கு-தெற்குத் தொடர்பு பெரிதும் புலப்படும். தமிழினால் அன்றி இந்தியாவின் முழுப் பண்பாட்டு வரலாற்றை எழுத முடியாது. ஆனாலும் தமிழை மட்டந் தட்டுவது நடந்து கொண்டே இருக்கிறது.] 

[இன்னொரு இடைவிலகல். பேச்சிற்கும் எழுத்திற்கும் இடையே தமிழில் எப்போதும் ஊடாட்டம் உண்டு. பேச்சு வழக்கில் இன்றும் பல றகரச் சொற்களை நாம் தகரமாய்ப் பலுக்குவோம். (ஆற்றுக்கு> ஆத்துக்கு) டகர, தகர எழுத்துக்களை ஒன்றின்கீழ் இன்னொன்றாய்ப் பிணைத்தே தமிழியில் றகர எழுத்து உருவானது. இதே போல் தந்நகரப் பழவெழுத்திலிருந்தே ஒரு கொக்கி வளைந்து றன்னகரம் உருவானது. றகரமும், னகரமும் வெகுநாட் கழித்து உருவானதால் தான் மெய்யெழுத்தின் முடிவில் அவை வந்துசேர்ந்தன. இது புரியாது, பெருமியிலிருந்து வரி வடிவத்தைத் தமிழி பெற்றதால் தமிழெழுத்துக்களைப் பின்னால் சேர்த்தார் என்பது தலைகீழ் வாதம் தொல்லியலின் வழி ஆய்ந்தால் தமிழி-->பெருமி என்பதே சரியான கொடிவழி ஆகும். அப்படிப் பார்க்கும் பொழுது இந்திய வரலாறும் ஒழுங்காய்ப் புரியும். பேரனைத் தாத்தனென்று சொல்லி நெடுங்காலம் கழித்தவர்க்கு (இதில் மேலை ஆய்வாளருஞ் சேர்த்தி.) இனிமேலாவது புரிந்தாற் சரி.]

கோட்டைப் பாதுகாப்பு என நாம்சொல்வது மெய்யில் மாற்றார் வலுக்காட்டிற்கு (offence) எதிரான, வலுவெதிர்ப்பு (defence) முனைப்புக்களே. கீழே உழிஞை, நொச்சி, வஞ்சி, காஞ்சி என்ற திணைகள் பற்றியும் விரிவாகப் பேசுவேன். இங்கோர் இடைவிலகல். defence, safety, security, police என்பவற்றிற்குச் "சர்வ நிவாரணியாகப்" பாதுகாப்பு என்ற சொல்லையே பயன்படுத்துகிறோம். இது நம்மைப் பெருந்தொலைவு கொண்டு போகாது. மாறாக, வலுவெதிர்ப்பு (defence), சேமம் (safety), பாதுகாப்பு (security), காவல் (police) என்று தனித்தனிச் சொற்களைப் பயின்றால் தெளிவு கிடைக்கும். வலுவெதிர்ப்பைச் சுருக்கமாய் அரண் என்றுஞ் சொல்லலாம். armyக்கு அரணமென்றும் பரிந்துரைத்தேன். வலுவெதிர்ப்பு முனைப்புக்களில் ஒன்றே எயில்மாடமாகும். கி.மு.462-446 இல், மகத அரசன் அசாதசத்துவிற்குப் பின்வந்த, உதயபட்டனின் பாடலிபுத்தக் கோட்டையில் 54 வாயில்கள், 570 எயில்மாடங்கள் இருந்தனவாம். அவ்வூர் ஏறத்தாழ 14.5கி.மீ. நீளம், 2.5கி.மீ. அகலங் கொண்டதெனில் ஊர் நடுவே எவ்வளவு பெரிய கோட்டை இருந்திருக்கும் ?! - என்று சற்று எண்ணிப் பாருங்கள். எயில்மாடங்கள் எவ்வளவு கருவானவை (crucial) என்று புரியும்

அன்புடன்,
இராம.கி.

No comments:

Post a Comment