Thursday, August 09, 2018

சங்கம் - 2

ஒரு சொல் தமிழெனில், ”சங்க இலக்கியத்தில் இதுவுண்டா?” எனக் கேட்கும் விந்தைப் பழக்கஞ் சிலரிடமுண்டு. அப்படிக் கேட்பது தவறில்லை. ஆனால் ”நாலு வேதங்களிற் குறிப்பிட்ட சொல்லுண்டா?” எனச் சங்கதம் நோக்கிக் கேட்டு நான் பார்த்ததில்லை. இருக்கு வேதந் தொடங்கி பொ.உ.400 வரை வந்த சங்கிதை (ஸம்ஹித); ஆரணம் (ஆரண்யக), பெருமானம் (ப்ராஹ்மண), உள்வநிற்றம் (உபநிஷத) என எல்லாவற்றையும் வேத இலக்கியம் என்றாக்கி, பொ.உ.1400 வரையுள்ள மகாபாரதம், இராமாயணம், காளிதாசம், புராணங்களையுஞ் சேர்த்துக் ”குறித்த சொல்” எங்கு வந்தாலும் அதைச் சங்கதம் என்பது மட்டும் எப்படிச் சரியாகும்? 

பெரும் ’பக்தி’யில் சங்கத இலக்கியக் காலத்தை இப்படி அகட்டுவது பற்றிக் கேள்வியே எழாது. சங்க இலக்கியங்களுக்கு மட்டும் மனத்தடை எழும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவிற்குச் சங்க இலக்கியப் பரப்பைக் குறைத்துக் காலத்தைப் பின் நகர்த்துவார்; கல்வெட்டு, பானைப் பொறிப்புக்களையும் உடன் அழைப்பார். ஒப்பிலக்கிய ஆய்வு பார்க்கலாம் எனில் அந்தப் பருப்பும் இவரிடம் வேகாது. சங்கதத்தில் இருந்தே தமிழ் copy எனக் காரணமின்றிச் சொல்லிச் சண்டித் தனமும் செய்வார். ஒரு கண்ணிற் சுண்ணாம்பு; இன்னொரு கண்ணில் விளக்கெண்ணெய் காட்டத் தயங்கவே மாட்டார். அவ்வளவு தான்.

(இத்தனைக்கும் தமிழிற் பானைப்பொறிப்பு பொ.உ.மு.490 இக்கும் முன்னால் தொடங்கியது; இதையுஞ் சிலர் பூசி மெழுகிச் செயினத்தைத் துணைக்குக் கூப்பிடுவர். (செயின நூல்கள் எழுத்தானது பொ.உ.மு. 200 க்கு அப்புறமே. பார்க்க: The Jaina sources of the History of Ancient India - Jyotiprasad Jain. Munshirm Manoharlal publishers. அதுவரை அவரும் மனப்பாடமே செய்து வந்தார்.) செயினத் துறவிகளால் தமிழகத்தில் எழுத்துப் பரவியது என்பது உரையாசிரியரால் நெடுநாள் தமிழ்நாட்டில் பரவிய தொன்மம். உருப்படிய்யான ஆதாரம் அதற்கு இல்லை. இத்தொன்மம் 20 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டியலுக்குஞ் சென்றது. அற்றுவிக (ஆசீவிக) இயலுமைகளை முற்ற ஒதுக்கி, எல்லாமே செயினம் என்பது ஒருவித முன்முடிவே. (பேரா.க.நெடுஞ்செழியனும், குணாவும் விடாது வினவ, கல்வெட்டாளர் சற்றே செவி மடுக்கிறார்.) என்னைக் கேட்டால், சங்க காலக் கல்வெட்டுக்களில் நமக்கு மீளாய்வு தேவை. (செயினத் தாக்கத்தை யாருங் குறைக்கவில்லை.) இது வரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தமிழியே முதலானது. பெருமிக் கல்வெட்டுக்கள் பிந்தையனவே. தமிழியும், பெருமியும் (Brahmi) ஒன்று எனச் சொல்ல முற்படுவதும் குழப்ப வாதமே. எல்லா நேரமும் வறட்டுத்தனம் பேசினால் எப்படி? சங்கதக் கல்வெட்டோ பொ.உ.150 இல் தான் எழுந்தது.)

இன்னொரு சிக்கலும் உண்டு. சங்கதக் காப்பிய மரபுகளையும், பரத நாட்டிய சாற்றத்தையும் முன்னோடியாக்கி, அதன் வழி தமிழ்த்திணைகள் எழுந்ததாய்ச் சொல்லி, 9 ஆம் நூற்றாண்டில் பிற்றைப்பாண்டியர் ஆணையில் 5/6 plagiarist புலவர் room போட்டு ஓர்ந்து, “மாமூலனார், கபிலர், பரணர்” என்று கற்பனையில் புலவர் பெயர் உருவாக்கி, பெருத்த ஏமாற்றுத் திட்டமொடு சங்கத நூல்களைப் படியெடுத்துச் சங்க நூல்களைப் படைத்ததாய் நெதர்லாந்துப் பேராசிரியர் எர்மன் தீக்கன் ஆதாரமில்லாது ‘ஞானங்’ கூறுவார். உடன் தமிழருந் தண்டனிட்டு “சாஷ்டாங்கமாய்க்” கீழே விழுவார். 

இதற்கு உறுதுணையாய், சங்கத ஆடி விழும்பமே (mirror பிம்பம்) தமிழ் என நம்மூர் இரா.நாகசாமியுங் கூறுவார். அவருக்குஞ் சிலர் “ததாஸ்து” போடுவார். இவற்றை மறுத்துச் சொன்னால், சற்றும் வாதச் சமம் அற்று (assymmetrical), ”தமிழ் ஓதிகளா? தாழ்வு மனத்தர், வெறியர்” எனும் உளத் தாக்கலும் அவ்வப்போது நடக்கும். ”யார் வெறியர்?” என்பதில் அறிவு தடுமாற வைத்து விட்டால், அதிகார வருக்கம் ஆர்ப்பாட்டம் இடலாமே? சங்கதம்-தமிழ் அறிவுய்திகள் (Intelligentia) இடையே வாதாடுவது என்பது (அதன் பகுதி ’சங்கச்’சொல் பற்றிய வாதம்) இப்போதெல்லாம் சென்னையில் நடக்கும் நீர்க்குழாய்ச் சண்டைபோல் ஆகிவிட்டது. 

இன்னொரு வேடிக்கை தெரியுமோ? சங்க இலக்கியங்கள், தமிழுக்காக முன்னோர் படைத்த அகரமுதலிகள் அல்ல. அற்றைத் தமிழில் 100 சொற்கள் எனில் அத்தனையும் சங்க இலக்கியத்துள் வருமா, என்ன? (சங்க இலக்கியங்கள் பலவற்றைப் பலவாறாய் அழித்தோமே?) அவை சொல்லா நிகழ்வுகள், நடைமுறைகள், சொல்லாட்சிகள் உண்டு. (காட்டாகச் சங்கிற்கு இணையான பிற சொற்களே சங்க இலக்கியத்தில் பெரிதும் பயின்றன. தொடக்க இலக்கியங்களில் ’சங்கு’ குறைந்தே வரும். ஆனாற் பேச்சு வழக்கிலோ சங்கே இன்று உள்ளது. மற்ற “இலக்கியச்சொற்களை” பேச்சு வழக்கில் நாம் பழகவே இல்லை. விந்தை அல்லவா?) பல சொற்கள் பிற்கால இலக்கியங்களிற் பதிவாகலாம். 

(பெயர், வினை, இடை, உரி என) எவற்றை பெய்ய வேண்டுமோ அவற்றைக் கொண்ட சங்கப்பாடல்களில் உள்ளடக்கம் பெரிதே தவிர, அவற்றின் சொற்றொகுப்பு அவ்வளவு பெரிதல்ல. தாமறிந்த சொற்களைக் கொணர்ந்து கொட்டுவதும் சங்கப் புலவரின் குறிக்கோள் அல்ல. பாடல் தொகுத்தோரும் அவற்றை நாடித் தொகுக்கவில்லை. (சங்க இலக்கியத்தில் ஒரு சொல் வந்துள்ளதா?- என்ற கேள்விக்கு விடை தரும் முகமாய், பேரா. பாண்டிய ராஜாவின் sangam concordance போல இன்று தான் சிலர் சொவ்வறை/software மூலஞ் செய்கிறார்.)

ஒரு சொல்லின் சங்க இலக்கியப் புழக்கத்தை ஏரணத்தோடு தமிழ்க் கிடுக்கியரிடம் (critics) நிறுவுவதிலுஞ் சிக்கலுண்டு. பொது இயலுமைகளைப் (possibilities) பார்க்க மாட்டார். குறிப்பிட்ட வட்டாரப்புழக்கம் பிடித்துக் கொண்டு, மற்றவற்றை ஒதுக்குவார். பேச்சையும், எழுத்தையும் பொருத்திக் காணார். ஒரு பொருள் குறிக்க 4 சொற்களிருந்தால் மரபு கருதி ஒரு சொல் பாடல்களில் திரும்புவதை “stock phrases" என்று கேலி செய்து ’மற்றவை கடன், குறிப்பாய்ப் பாகதம்’ என்பார். (சங்கதப் பேச்சு சிலரிடம் அருகிவிட்டது.) 

தமிழிலிருந்து பாகதம் ஏன் கடன் வாங்கக் கூடாது?- என்பதற்கு இவரிடம் விடைகிடையாது. வினைச்சொல் இருப்பின் அதன்வழி உருவான பெயர்ச் சொல்லை ஏற்கார். பெயர்ச் சொல்லிருப்பின் உள்ளிருக்கும் ஊற்று வினைச் சொல்லை ஏற்கார். இடை, உரிச்சொற்களுக்கும் இவரிடஞ் சிக்கலுண்டு. விகுதி -பெயர்த் தொடர்பு சொன்னால் அதை ஏற்க மறுப்பார். ஆண்பாற் பெயர் இருந்தால் பெண்பாற் பெயரில்லை என்பார். மொத்தத்தில் ”வேண்டாத மருமகள் கைபட்டாற் குற்றம், கால்பட்டாற் குற்றம்” என்றே நடக்கும்.

நான் விளையாட்டிற்குச் சொல்லவில்லை. ஒரு சமயம் ctamil மடற் குழுவில் பேரா. செல்வக்குமார் ”அச்சி” என்ற சொல் தமிழில் அம்மாவைக் குறிக்கும் என்றார். நானும் அதை ஏற்று ”தமிழ்மன்றம்” மடற்குழுவில் ”அத்தன்/அச்சன் இருந்தால் அத்தி/அச்சியென்று பெண்பாற் சொல் இருக்குமே?” என்றேன். ”ctamil" குழுவிலோ சிலர் ‘கிடையாது’ என்று சாதித்தார். அதே பொழுது புருஷவெனுஞ் சங்கத ஆண்பாற் சொல்லிற்கு புருஷியென்ற பெண்பாற் சொல்லைப் பொதுவானது என இவரே ”மின்தமிழ்” மடற்குழுவிற் கற்பித்துச் சொன்னார். (சங்கதம் நன்கு தெரிந்த இன்னொருத்தர் ”புருஷி” என்ற சொல் சங்கத இலக்கியத்துள் இல்லையென்றார்.) எங்கே ஒருவனுக்கு ஒருவளென்று தமிழில் சொல்லிப் பாருங்களேன்? புருஷியைப் பரிந்துரைத்தவரே ஏற்க மாட்டார். ’ஒருத்தி மட்டுமே’ என்று அடம் பிடிப்பார். தமிழ் இவருக்குத் தெரிந்ததல்லவா? அப்படியானால் ’ஒருத்தன்’ என்பது என்னாவது? மொத்தத்தில் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால். இப்படித் தான் தமிழ்-சங்கத முன்னுரிமை வாதங்களும் நடக்கின்றன.  . 

2000 ஆண்டுகளுக்கு முன் பெரிதான பாகதமும் தமிழும் பல கலைச் சொற்களைச் சங்கதத்திற்கு அளித்துள்ளன. சொற்பிறப்பியல் பலருக்கும் தெரியாக் காரணத்தால், பல சங்கதச் சொற்களின் அடியில் தமிழ்வேர் இருப்பதை அறியமாட்டார். அவை வடபூச்சுப் பெற்ற இருபிறப்பிகள் என்பதுந் தெரிவதில்லை. (காட்டாகத் தமிழ் உணவும், சங்கத அன்னமும் தமிழ் வேரால் தொடர்புற்றவை.) தெரியாததை ஏற்க உறுதி வேண்டும். 

அறிவியற் புலமை பெற்றதாலேயே அறிவியற் சொல்லின் வேர் எங்கெனச் சொல்ல முடியுமோ? அகழாய்வு போலமையும் சொற்பிறப்பியல் ஒரு தனித் துறை. பலகாலம் ஆழ்ந்தவரையும் கூட வழுக்கி விடும். புதுப் பழஞ்செய்திகள் தெரிகையில் இதுவரை கட்டிய கோட்டை சீட்டுக் கட்டாகும். 

அண்மையில் “தமிழிற் கையாளும் பிரபஞ்சம், சக்தி, அக்கினி, உஷ்ணம், பூமி, சூரியன், சந்திரன், வாயு, விஞ்ஞானம் போன்ற சொற்களின் வேர் வடமொழி” என ஒரு பெரியவர் அடம் பிடித்தார். ஆழ்ந்து பார்த்தால், பெருவியஞ்சம்> பிரபஞ்சம், சத்தி>சக்தி, அழனி>அக்னி, உருநம்> உஷ்ணம், பும்மி>பொம்மிக் கிடப்பது பூமி (புடவி போன்ற சொல்), சுள்>சுர்> சூரன்>சூர்யன் = சுள்ளென எரிப்பவன், சாந்து>சந்து>சந்தன்>சந்த்ரன் = குளிர்ச்சி யானவன், வாயில் வருங் காற்று வாயு, ஞாதலில் வருவது ஞானம்” என்று புலப்படும். ”தமிழ் விஞ்ஞானம் கையாளும் இச்சொற்கள் தமிழ்வேர் கொண்டவை” என்பதும் அந்தப் பெரியவருக்குப் புரிந்திருக்கும். ஆனால் சங்கதத்தின் மேலுள்ள பற்று அவர் போன்றவரைச் சிந்திக்க விடாது செய்கிறது. . 

இதேபோற் 
பூருவ நுண்ணாய்ந்தை (நுண்ணாய்ந்தை> நூணாய்ஞ்சை> mimaamca i= investigation), 
உத்தர நுண்ணாய்ந்தை, 
சார்ங்கம் (>சார்ங்க்யம்> சாங்க்யம்>caankyam=எண்ணியம்), ஓகம்(>யோகம்>yoogam), 
யாயம்> ஞாயம்(> ஞ்யாயம்>ந்யாயம்>nyaayam), 
விதத்திகம் (>விதேத்திகம்> விதேஷிகம்> விஷேஷிகம்>visheeshikam), 

என்ற 6 தெரியனங்களைச் (தெரியன> தெரிசன> தர்சன> dharsana) சங்கதம் பெரிது என்போர் விதந்து பேசுவார். கொஞ்சம் பொறுமையும், நீண்டநேரமும், பரந்த மனப்பான்மையும் இருந்தால் இவற்றின் அடியிலுள்ள தமிழ்ப் புலங்களை விளக்க முடியும். அதற்கு மாறாய், எல்லாஞ் சங்கதம் என மூடுமனங் கொண்டால் அப்புறம் என் செய்வது? ”சரி, எல்லாமே பின் தமிழா?”- என்று கேட்டால் "அதுவுமில்லை. (இப்படி நான் சொல்வதால் தனித்தமிழார் கவலுறுவார்.) இரண்டிற்கும் கொடுக்கல் வாங்கலுண்டு. சற்று ஆழக் கவனியுங்கள்” என்பேன். 2 செம்மொழிகளில் சங்கதமே மேடு, தமிழ் பள்ளமெனும் ஓரப்பார்வை சரியில்லை. இரண்டிற்கும் இடையே ஒரு சம நிலம் வேண்டும். 

”தமிழ்ச் சொற்பிறப்பை பலரும் பல விதங் காட்டுகிறாரே? இவற்றில் நெல்லெது? பதரெது? ஏரண முறை எது?” என நண்பர் நா.கண்ணன் ஒரு முறை கேட்டார். எளிதில் மறுக்கக் கூடிய உலகு தழுவிய உன்னிப்புச் சொற்பிறப்பு (folk etymology), ’கதா காலாட்சேபப் பௌராணிகர்’ போல் சொற்களைப் பொருளிலா ஒற்றசைகளாய்ப் பிரித்துப் பொருள் சொல்லல் ஆகியனவற்றைக் கண்டு அரண்டு விட்டார் போலும். நெல்லின் இறுகிய பால்பிடிப்பைக் கண்டு கொள்ள வெறுஞ் சொல்லொலிப்புப் பற்றாது, மரபு, வரலாறு, இலக்கியம், இலக்கணம், ஏரணமெனப் பல்வேறு கோணங்கலில் ஒரு சொல்லை அலச வேண்டும். ஆழப் பார்த்தால், சொற்பிறப்பாய்விற்கு செயினத்திற் சொல்வது போல் ’அநேகாந்தப்’ பன்முனைப் பார்வை கட்டாயந் தேவை. இவ்வளவு நீண்ட பின்புலப் புரிதலோடு ’சங்கத்திற்கு’ வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments:

Post a Comment