Thursday, April 03, 2014

தமிழி - உரோமன் எழுத்துப்பெயர்ப்பு - 1

ஒருங்குறியிற் தமிழ் - தேவைகளும், தீர்வுகளும் (Tamil in Unicode - requirements and solutions) என்ற கருத்தரங்கு 2014 மார்ச்சு 5 இல் தமிழிணையக் கல்விக் கழகத்தில் நடந்தது. அப்போது சென்னையில் நான் இல்லாததால் என்னாற் கலந்துகொள்ள இயலவில்லை. அதுபற்றித் தமிழிணையக் கல்விக்கழக நெறியாளரிடம் முன்னரே தெரிவித்திருந்தேன். 

அக் கருத்தரங்கில்

தமிழ்ப் பின்னங்கள், குறியீடுகள் - பெயரிடலும் கீற்றுகளும் [Tamil Fractions and Symbols - Naming and Glyphs]
தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றம் [Tamil All Character Encoding (TACE-16)]
ஓரிந்தியா / ஓரெழுத்து முன்னீடு [One India/One Script Proposal]
தமிழக அரசின் நடவடிக்கைகளில் குறியேற்றச் செந்தரங்களையும் விசைப்பலகைச் செந்தரங்களையும் வலியுறுத்தல் [Enforcement of Encoding & Keyboard Standards in Government]
முகனக் கருவிகளிற் தமிழ் [Tamil in Modern Devices]

என்ற உட்தலைப்புக்களில் கணிவல்லுநரும் தமிழார்வலரும், தமிழறிஞரும், மொழியியலாளரும் உரையாடியிருக்கிறார். இத்தலைப்புக்களில் ஒரு சிலவற்றின் மீது என் தனிப் பார்வைகளை பல்வேறு மடற்குழுக்கள், மாநாடுகள், கருத்தரங்குகளிலும், என் வலைப்பதிவிலும் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறேன். இக்கட்டுரையில் மேலேயுள்ள முதல் உட்தலைப்பிற்கான பெரிய பின்னூட்டு அடியில் வருகிறது. மற்ற இரண்டாம், மூன்றாம், நாலாம், ஐந்தாம் உட்தலைப்புக்களுக்கான சுருக்கமான எதிர்வினைகளும் உடனேயே வருகின்றன. 

தமிழ் ஒருங்குறியின் அடிப்படைச் சிக்கலை பெரிதும் அறிந்த காரணத்தால், தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றத்திற்கு (TACE) ஆதரவாகவே எப்பொழுதும் நான் பேசிவந்திருக்கிறேன். என் வலைப்பதிவில் அதை யொட்டிய குறிப்புகள் பல கட்டுரைகளிற் கிடக்கின்றன. பல்வேறு தமிழ்க்கணிமைச் சிக்கல்களுக்கு அனைத்தெழுத்துக் குறியேற்றம் ஒரு வலுவான தீர்வாகும். விருப்பு வெறுப்பில்லாது, ஆழ்ந்த ஓர்மையிற் தமிழ்நலங் காணுமெவர்க்கும் இது புரியும். அனைத்தெழுத்துக் குறியேற்றத்தை விரிந்து புழங்கினால், தமிழாவணங்களைக் கணிமூலம் உருவாக்குவதில் வல்லாட்சி செய்யும் ஒருங்குறிச் சேர்த்தியமும் நம் கருத்தைக் கனிவோடு நோக்க வேண்டிய நிலை வந்துசேரும்.

(ஒருங்குறிச் சேர்த்தியம் என்பது, வெவ்வேறு மொழியாரின் நலம்பேணும் அமைப்பென்று நொதுமலார் கருதமுடியாது. அடிப்படையில் உரோமன் எழுத்துச் சார்ந்த மேலை நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர் வணிகம் பெருக்கி, மேலையெழுத்து அல்லாதவற்றைக் காலகாலத்திற்கும் திறன்-நேர்த்தியற்றதாக்கி, மொழிக்கணிமையில் அவை பின்னிற்கும்படி செய்யுமொரு பெருங்கணி வணிகக் கூட்டமைப்பாகவே அது இதுகாறுஞ் செயற்பட்டிருக்கிறது. ’உலகமயமாக்கல்’ எப்படியின்று புதியகுடியேற்றக் கொள்கையின் மறுபெயரோ, அதுபோல ஒருங்குறிச் சேர்த்தியம் உரோமன் எழுத்தை அடிப்படையாகக் கொண்ட மேலைமொழிகளின் வல்லாட்சி பேணும் அமைப்பேயாகும். ஒருங்குறிச் சேர்த்தியமும் உலகமயமாக்கலின் ஒரு கூறு தான்.) 

அனைத்தெழுத்துக் குறியேற்றம் பற்றி ஆணைபோட்ட தமிழக அரசு (இப்பொழுது அவ்வாணையை ஏறெடுத்துப் பாராதிருக்கும் தன் போக்கை மாற்றி) வருங்காலத்திற் தமிழ்மூலம் நடக்க வேண்டிய மின்னாளுமைத் தேவை கருதி விழித்துக்கொண்டால் நல்லது. இன்னும் எத்தனை பத்தாண்டுகளுக்கு முற்றூட்டாளருக்கு அடங்கி, புதுக்குடியேற்ற நாடாக நம் மாநிலத்தை இயக்கி, ஆங்கிலத்தைக் கட்டி மாரடிக்கப் போகிறோமோ? தெரியவில்லை.  (நிலா, நிலா, ஓடிவா, நில்லாமல் ஓடிவா, மலைமேலே ஏறிவா, மல்லிகைப்பூ கொண்டுவா - எனும்) 10 கோடித்தமிழரின் தாய்மொழியை அடியோடு அகற்றி (Ba,ba black sheep, have you any wool? Yes sir, yes sir, 3 bags full" எனும்) ஆங்கிலத்திற்கு மாற்றும் வரையிலா? தமிழரின் அடையாளம் தமிழ்மொழி இல்லையா?

ஓரிந்தியா / ஓரெழுத்து எனும் முன்னீடு இந்தியாவின் தேசியமொழிகளைக் குலைக்கும் முயற்சியாகும். உலகிற் 10 கோடிப்பேர் பேசும் தமிழ் மொழியை அழிக்க இதைக் காட்டிலும் ஒரு
முயற்சி தேவையில்லை. தமிழர் இதற்கு ஒருப்படவே கூடாது. இன்னோரெழுத்தை தமிழுக்குப் பரிந்துரைப்பது எப்படித் தவறோ, அதே போலத் தமிழெழுத்தை அடிப்படையாக்கி மற்ற தேசிய மொழிகளுக்குப் பரிந்துரைப்பதும் தவறு தான். மக்களாட்சி நாட்டில் அவரவர் எழுத்து அவரவருக்குயர்வே. அவற்றைப் போற்றி வளர்க்க வேண்டுமே தவிர, குலைத்தழிக்கக் கூடாது. இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் கூடிவாழும் கூட்டமைப்பு. இது ஒரே தேசிய இனம் வாழும் ஒற்றையாட்சி நாடல்ல.

அடுத்த புலனம் தமிழக அரசின் நடைமுறை பற்றியது சற்று விரிவாகவே பேசுகிறேன். தமிழக அரசே அரசாணை மூலம் ஏற்றுக்கொண்ட ஒருங்குறி, அனைத்தெழுத்துக் குறியேற்றம் (TACE) ஆகிய செந்தரங்களையும் Tamil 99 போன்ற விசைப்பலகைச் செந்தரங்களையும் புழங்காது ”வானவில்” போன்ற தனியார் குறியேற்றங்களையும், தந்தம் உகப்பில் வெவ்வேறு விசைப் பலகைகளையும் தொடர்ந்து அரசலுவங்களிற் புழங்குவது தமிழக அரசின் மின்னாளுகைக்கு உறுதுணையாகாது. அரசின் பல்வேறு அமைச்சுகளிலும், துறைகளிலும்   

அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
           ஆனந்தப் பூர்த்தியாகி
    அருளோடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
          அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
           தழைத்ததெது மனவாக்கினில்
    தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
          தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
         எங்கணும் பெருவழக்காய்
   யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
        என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
        கருத்திற் கிசைந்ததுவே
   கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
        கருதிஅஞ் சலிசெய்குவாம்.     1.

என்று வியந்து அஞ்சலி செய்யும் நிலைக்கு “இதுவொரு கடவுளோ?” என்று மயங்கும் வகையில் “வானவில்” குறியேற்றத்தின் ஆட்சி கொடி கட்டிப் பறக்கிறது. தமிழக அரசின் அரசாணை அதனாலேயே பின்பற்றப்படாது ஏற்கனவே அரசாண்ட / இப்பொழுது அரசாளும் இருபெரும் திராவிடக் கட்சிகளும் தாம் ”வானவில்லை” வாழ வைக்கிறார். மற்றெந்த அரசியற் கட்சியருங் கூட மோனத்திற் பேசாதிருக்கிறார். அரசின் அதிகாரிகளும் ”பூனைக்கு யார் மணிகட்டுவது?” என்று ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்திருக்கிறார். ஆர்வலரும், அறிஞரும் அதிர்ந்து போய்க் கிடக்கிறார். கணித்தமிழ்ச் சங்கம், உத்தமம், கணித்தமிழ்ப் பேரவையென இருக்கும் வல்லுநர் குழுமங்களும் செய்ய வேண்டுவது புரியாது கைபிசைந்து நிற்கின்றன.

இதற்கு இடையில் அரசின் தட்டச்சர், கீழ்நிலை எழுத்தர் ஆகியோரிடையே. வானவிற் “கலாச்சாரம்” நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்கிறது. இதுவொரு பக்கம் களையாய்ப் படர, இன்னொரு பக்கமோ தமிழக அரசின் உயரிடங்களில் ஆங்கிலமே அலுவல் மொழியாகத் தொடர்கிறது. ஆங்கில ஆவணங்களையே தமிழக அரசு இன்றும் அடிப்படை ஆவணங்களாய்க் கொள்கிறது. இந்நாடு சுதந்திரம் பெற்றதெல்லாம் 67 ஆண்டுகளுக்குப் பின் வெறுங்கதை தான் போலும். நம் மனங்களைக் கட்டிப் போட்டு அடிமையாக்கிய ஆங்கிலன் கைகொட்டிச் சிரிக்கிறான். தமிழருக்காகத் தமிழரால் நடத்தப்பெறும் தமிழக அரசிற்குள் தமிழ்மொழி உப்பிற்குச் சப்பாணியாய் உழல்கிறது.

இதிற் சோகமான மெய்மை என்னவெனில், நடைமுறையில் வானவிற் புழக்கம் தமிழக அரசினுள் அழியாது, தமிழ்க்கணிமைக்குச் சற்றும் எதிர் காலம் இல்லை. வெறும் வாய்ப்பேச்சிற்கும், இணையத்தில் வெட்டி யரட்டைக்கு மட்டுமே தமிழ்க்கணிமை பயன்பட்டுவிடுமோ என்று தோன்றுகிறது. ஒருங்குறியும், அனைத்தெழுத்துக் குறியேற்றமும் தமிழக அரசினுள் பரவலாகப் புழங்கினாற்றானே, மின்னாளுகை, மின்கல்வி, மின்வாணிகம், மின்நூலகம் என பல்வேறு புலங்கள் பற்றிப் பேசமுடியும்? எல்லாவிடத்தும் வானவில்லே உறை கொண்டு கோலோச்சினால் அப்புறம் என்ன விளங்குஞ் சொல்லுங்கள்? நான் சொல்லுவது பலருக்கும் கசப்பாக இருக்கலாம். ஆனால் நஞ்சை நஞ்சென்று சொல்லாது வேறென்னென்று சொல்லமுடியும்? 

அரசிற்குள் தமிழ்மொழி அடிப்படை மொழியாகவன்றி அலங்கார அரசியல் மொழியாகவே இருக்கிறது. அதற்கு வானவில் போன்ற தனியார் குறியேற்றம் பெரிதும் உறுதுணையாகிறது. அரசு அலுவத்தில் தமிழிற் தொடர்பு ஆடுகிறவன் தமிழ்ப் பித்தந் தலைக்கேறியவனாகவே கருதப்படுகிறான். தமிழக அரசுத்துறைகளின் வலைத்தளங்களும் ஒருங்குறி அல்லது அனைத்தெழுத்துக் குறியேற்றத்திற்கு இன்னும் மாறவேயில்லை. மொத்தத்தில் அரசினுள் வானவில்லின் வல்லாட்சி கட்டாயம் போக வேண்டும். இதுபற்றி 4,5 ஆண்டுகளாய் எல்லா வாய்ப்புக்களிலும் சொல்லி வந்திருக்கிறேன். (இம் mandate பற்றி அரசாணை வந்தவுடனே பேசாது, இவ்வளவு நாள் அமைதிகாத்த தமிழிணையக் கல்விக்கழகம், இப்போதாவது பொதுவுரையாடலிற் பேசுகிறதே, அந்தளவிற்கு அது வரவேற்கத்தக்கது தான். ஏதோ கண்கெட்ட பின் “சூரிய நமஸ்காரம்” செய்கிறார் என்றெண்ணிக் கொள்வோம். ஆனால் இவ்விதயம் இவர்கள் மட்டும் பேசுவதல்ல.) தமிழார்வலர் எல்லோரும் பேரியக்கமாய் கூடிப் பேசி, தமிழின் இருப்பையே போக்கடிக்கும் நிலையை மாற்றவேண்டும்.

[இதில் இன்னொரு வருத்தத்தையுஞ் சொல்லவேண்டும். தமிழ்க்கணிமையை ஒட்டிப் பொறிஞரும், தமிழறிஞரும் பெரும்பாலும் முரணிக்கொண்டு தனித்து நிற்கிறாரோவென்ற ஐயம் எனக்குக் கொஞ்ச நாளாய் ஏற்பட்டிருக்கிறது. எல்லாம் அவரவர்க்குக் கூடிப்போன அகப்பாடாகவே (ego) இருக்கிறது. இவரைக் கேட்டால் அவர் மேற் குற்றஞ் சொல்கிறார். அவரைக் கேட்டால் இவர் மேற் குற்றஞ் சொல்கிறார். இவர் கூட்டுங் கூட்டத்தை அவர் குறைசொல்வதும், அவர் கூட்டுங் கூட்டத்தை இவர் குறைசொல்வதும், மொத்தத்திற் தமிழ்க்கணிமைக்கு நல்லதல்லவென்று என்னைப் போன்றோர் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம். ஆனால் சங்கூதுவது கேட்காத செவியாளராய் இருந்தால் என்ன சொல்வது?]

தமிழகத்தில் விற்கும் எல்லா முகன மின்னணுக் கருவிகளிலும் (modern devices) தமிழ் வலுவாண்மை (Tamil enabled) கட்டாயம் இருக்கவேண்டும். அப்படி யில்லாக் கருவிகள் தமிழகத்தில் விற்கப்படக் கூடாது. மீறி விற்றால் அவற்றின் விற்பனை வரி கூட்டப்படவேண்டும். இப்படியொரு கட்டாயத்தை ஒரு மக்களாட்சி மாநிலம் உறுதியாகச் செய்யமுடியும். தமிழருக்கு நல்லது செய்வோமென்ற வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்து தமிழுக்கு முதன்மை கொடுக்காவிடில் எப்படி? இங்கு அரிதாரம் பூசி அலங்காரங் காட்டும் வேடிக்கை நாடகமா நடத்துகிறோம்? அதே போல சில்லறை/பெரு வணிகத்தில் பெறுதிச் சீட்டுகள் (receipts), விளக்க அறிக்கைகள் (reports), விற்பனைப் பொருள்களோடு வரும் விளக்கப் பொத்தகங்கள் (hand books), கையேடுகள் (hand-outs) போன்றவை தமிழிலேயே இருக்கவேண்டும். அன்றி, ஆங்கிலத்தில் மட்டுமே அவையிருந்தால், அதிக விற்பனை வரி போடுவதாய்த் தமிழக அரசு ஆணையிடவேண்டும்.

தமிழகப் பல்கலைக் கழகங்களில் பொறியியல், மருத்துவம், முதுநிலைப் படிப்பு (Masters' degree) போன்றவற்றின் இறுதியில் மாணவர் சமர்ப்பிக்கும் புறத்திட்டு அறிக்கைகளில் (project reports) 5 பக்கத் தமிழ்ச்சுருக்கந் தருவது கட்டாயமாக வேண்டும். தாம் படித்த படிப்பைத் தமிழில் விளக்கத் தெரியாதோர்க்குத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் பட்டமளிக்கக் கூடாது. இதை நெறிப்படுத்தாத பேராசிரியர் தமிழருக்குத் தேவையில்லை. தமிழ் நாட்டு வணிகம், கல்வி, ஆட்சி, நீதி ஆகிய பல்வேறு துறைகளில் “தமிழ் சோறு போடும்” என்ற நிலை இல்லாவிட்டால் தமிழ் இங்கு வாழவே வாழாது, தமிழரும் கண்டுபிடிப்பாளர் ஆகமாட்டார், தமிழர் பொருளாதாரமும் உயராதென எல்லாவிடத்தும் சொல்லிவந்திருக்கிறேன்.

இப்போதையக் கட்டுரை கருத்தரங்கிற் பேசப்பட்ட முதற் புலனம் பற்றியது. இதுவொரு சிறு புலனந் தான். இருந்தாலுஞ் சொல்லவேண்டியிருக்கிறது.

(ஓர் இடைவிலகல். ’ஒருங்குறி’யினுள் இன்னொரு குகரத்தை உள்நுழைத்து ஒருங்குகுறியென்று சிலர் இப்போதெல்லாஞ் சொல்லத் தலைப்படுகிறார். ஆழ ஆய்ந்தால் இன்னொரு குகரம் இடைபுகத் தேவையில்லை. ஒருங்குறியின் சொற்பிறப்பு பற்றி ’வளவு’ வலைப்பதிவில் எழுதியுள்ளேன். தமிழிலக்கணப்படி ’ஒருங்குறி’ என்பது சரியான சொல்லாக்கங் தான். மொழியின் சொற்பிறப்பு மொழிச் சட்டாம்பிள்ளைகளின் கையிலில்லை.)

அன்புடன்,
இராம.கி.

2 comments:

  1. இரண்டையும் ஒப்பிடும் போது, TACE-16 முறையில் எழுத்துக்கள் தெளிவாகத் தெரியும். Unicode முறையில் கணினிப் பகுப்பாய்வுகள்(ஏரணம் எளிது) சிறப்பாக முடியும்.

    ReplyDelete
  2. //மொழியின் சொற்பிறப்பு மொழிச் சட்டாம்பிள்ளைகளின் கையிலில்லை//

    தமிழின் கணிமை வளர்ச்சிக்கு இது (தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றம் ) அவசியம் என்று தெரிந்த பின்னரும், அதற்குரிய முன்னெடுப்புகளை வேகப்படுத்தாமல், கிணற்றில் போட கல் போல் கண்டுகொள்ளாமல் அரசு கல்லாகிபோனதிற்குக் காரணம் ஒன்றே ஒன்று தான். தமிழ் மொழி வளர்ச்சியில் துளியும் இவர்களுக்கு அக்கறை இல்லை என்பதே. நாம் கணிமை வளர்ச்சியில் நாம் - மதிப்பில் தரைமட்டத்திற்குக் கிழே உள்ளோம். எப்போது 0 மட்டத்தை அடைந்து, பிறகு மற்றவர்களைப் போல் + மட்டத்திற்குள் நுழைவது என்று தெரியவில்லை. ஐயா சொன்னதுபோல், நம்மிடம் உள்ள இந்தப் பொறாமை குணம் நம் மொழியின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துக்கொண்டிருக்கிறது. யார் செய்த பாவமோ தெரியவில்லை தமிழில் தட்டச்சு செய்யகூடா நம்மை அடிமையாக்கிய ஆங்கிலேயன் மொழியை வைத்து செய்யவேண்டிய அவநிலையில் உள்ளோம்.

    நம்மவர்கள் மனது மற்றும் செயல் அளவில் ஆங்கிலேயனுக்கு அடிமையாகிவிட்டனர். 'ஆங்கிலம் இல்லாமல் ஒன்றும் முடியாது, நாம் அதன் தாக்கத்தை எதிர்த்து வெற்றிகொள்ளமுடியாது, ஆனது ஆகட்டும், இருக்கும் வரைக்கும் நிம்மதியா இருந்துவிட்டு போவோம், எதற்குத் தேவையில்லாமல் கத்தி உடம்பை கெடுத்துக்கணும்' என்ற கையாலாகாத தனம் தமிழர்கள் மத்தியில் புரையோடிய புண்களாக உள்ளது.

    உண்மையில் தமிழின் மீது அக்கறை இருந்தால் அரசுகள் ஐயா கூறியது போல், சட்டங்கள் மூலமே இதுபோன்றவை சாத்தியமாகும். குதிரைக்கு எப்படிக் கடிவாளமும் முக்கியமோ அதுபோல் கண்போன போக்கில் போகும் தமிழனை ஒருவழிபடுத்த சட்டங்கள் மிக மிக அவசியம்.

    //ஓரிந்தியா / ஓரெழுத்து எனும் முன்னீடு இந்தியாவின் தேசியமொழிகளைக் குலைக்கும் முயற்சியாகும்.//

    நிச்சயம் ஐயா, இது மத்திய அரசின் மொழி திணிப்பு இயக்கத்தின் இன்னொரு முகம். இதற்கு இடம் கொடுத்தால், ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாகிவிடும்.

    ReplyDelete