Tuesday, August 21, 2007

நுணலும் அடவும்

இரவெல்லாம் ஓயாது எகத்தாள மழைப்பொழிவு;
மழைகுறையத் தூறலிடை, மடுவெங்கும் நீரொதுங்க,
எங்கேயோ தோட்டத்தில், ஏறிவரும் நுணலோசை;
நள்ளிரவில் துயில்விலக்கி, நான்விழிக்கும் கவனிப்பு;

o0o

குக்கூகுக் குக்கூகுக் கூடிவரும் குழுத்தாளம்;
எப்படித்தான் மழைப்பொழிவு இங்கதிகம் ஆகிவிட்டால்,
குக்குவக்கும் தவளையெலாம் குரலெடுக்கச் செய்திடுமோ?
சுரந்துவர உள்ளோடும் சூழ்க்குமத்தை யாரறிவார்?

o0o

நுவலுகின்ற நுணப்பாலே, நுணலென்று சொன்னார்கள்;
திவலைகொளும் நீர்ப்பரப்பின் திரையோங்கித் தனைக்காக்கும்
தவளையதின் குரலெடுப்பு தவழரவிற் கெதிரொலிப்பா?
எத்தனைநாள் ஆடுபுலி ஆட்டமிங்கே நடந்திருக்கும்?

o0o

நடைபழகக் காலையிலே நகருகின்ற சாலையெலாம்,
சீருந்தும், இருவளையும், சிதைத்தொழித்த நுணற்தேய்ப்பு;
நீர்தவிர்த்து, நிலம்நாடி, நேர்ந்ததுதான் எதற்காக?
தன்னேர்ச்சி தமக்கென்றே தெரியாத தடுமாற்றோ?

o0o

என்னதொரு அடவு இது, என்முன்னே எழும்காட்சி?

அன்புடன்,
இராம.கி.

சீருந்து = car
இருவளை = two wheeler
அடவு = design
தன்னேர்ச்சி = accident

4 comments:

  1. ஐயா,

    ஆங்கிலத்தில் உள்ளது போன்று பண்டைய காலத்தில் தமிழிலும் comma (,) அல்லது அது போன்ற குறிகள் பயன்படுத்தப்பட்டனவா? 'உம்' என்ற விகுதி மட்டும் போதுமானதா?

    நன்றி,
    பாலாஜி.

    ReplyDelete
  2. யாரையா தை எழுதியது?
    மிக அழகான காட்டி!
    நுணல் வழக்கொழியும் சொல்

    ReplyDelete
  3. ஐயா, நீங்கள் சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் அளவைகளை பற்றி ஒர் கட்டுரை ஏழுதியிருந்தீர்கள். அதில் நீங்கள் ஏழு வகை அளவை முறைகளை குறிப்பிட்டு அவற்றில் சிலவற்றின் பொருள் தெளிவில்லை என்றும் ஏழுதியிருந்தீர்கள். நான் இன்று "தமிழ் எண்கணித வரலாறு" எனும் பொத்தகத்தை வசித்ததில் அதில் இப்படி கூறப்பட்டுள்ளது.

    1. எண்ணல் - Counting
    2. நிறுத்தல் - Weights
    3. முகத்தல் - Liquids
    4. பெய்தல் - Grain Measure
    5. நீட்டல் - Linear Measure
    6. தெறித்தல் - Time Measure
    7. சார்த்தல் - This was a system peculiar to the Tamils were in sounds, colours, shape et., are compared with certain more popular objects.

    பொத்தக விபரம்:

    பெயர்: தமிழ் எண்கணித வரலாறு
    ஆசிரியர்: முனைவர் வே. வினோபா
    வெளியீடு: அகரம், 01 நிர்மலா நகர், தஞ்சாவூர் 613007
    விலை: 110

    ReplyDelete
  4. ஐயா, "Conservative" என்னும் ஆங்கில சொல்லுக்கு தமிழ் என்ன? உங்களுக்கு வேலைப்பழு அதிகம் தான், என்றாலும் தயவு கூர்ந்து விடை தர வேண்டும்.

    ReplyDelete